மலைகேது விரைந்து சென்று தன் சேனையுடன் சேர்ந்து கொண்ட பின் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். படைகளைச் சந்திக்கும் வரை அது முடியும் என்ற முழு நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் கடைசி வரை நம்பிக்கை தந்து அவனுடன் இருந்தவன் சுசித்தார்த்தக் மட்டுமே. அதனால் சுசித்தார்த்தக் மீது அவனுக்குப் பரமதிருப்தி இருந்தது. உயிர் காப்பாற்றி படைகளோடு சேர்க்கிற வரை உறுதுணையாக இருந்தவன் என்பதால் அவன் சுசித்தார்த்தக்குக்கு ஒரு தங்கச் சங்கிலியும், ஒரு முத்து மாலையையும் வழங்கி கௌரவித்தான்.
பின் ஆழ்ந்து சிந்தித்து
என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று யோசித்து முடிவெடுத்து விட்டு அவன் காஷ்மீர
குலு நேபாள மன்னர்களைச் சந்திக்கப் போனான்.
அந்த மூன்று மன்னர்களும் சற்று முன்
தான் பர்வதராஜன் மர்மமான முறையில் இறந்து போனதைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு
அந்த மரணத்தின் பின்னணி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால் கிடைக்கின்ற முதல் தகவலை
உண்மை என்று முழுமையாக நம்பும் மனநிலையில் இருந்தார்கள்.
அவர்களிடம் அவன் பேசிய விதம் அவன் பர்வதராஜனின்
மகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. “என் தந்தையின் ஆத்மார்த்தமான
நண்பர்களே. அவர் தனக்காக யோசித்ததை விட உங்கள் மூவருக்காக யோசித்தது
அதிகம். என்னிடம் அடிக்கடி “மகனே வெற்றி
அடைந்ததில் நமக்குச் சரியான பங்கு கிடைக்கிறதோ இல்லையோ, என் நண்பர்களுக்குச்
சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனக்கு அதிமுக்கியம்” என்று சொல்வார். வெற்றிக்குப் பிறகு
பங்கீடு குறித்து ஆச்சாரியரிடம் அடிக்கடி பேசியும் வந்தார். ஆனால் ஆச்சாரியர்
அவரிடம் பிடிகொடுத்துப் பேசவில்லை. அது அவருக்கு பெருத்த
ஏமாற்றத்தைத் தந்தது. அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட வருத்தத்துடன்
சொன்னார். “மகனே. வெற்றி இப்படி ஆச்சாரியரை மாற்றி விடும் என்று நான் கற்பனையிலும்
நினைத்துப் பார்க்கவில்லை. ஆச்சாரியர் இப்போது ‘வெற்றியில்
நாமிருவரும் பங்கு பிரித்துக் கொள்வோம். உங்கள் நண்பர்களுக்கு
நாம் ஏன் பங்கு தர வேண்டும்’ என்கிற வகையில் பேசுகிறார். நான் அதை
ஏற்க ஆணித்தரமாக மறுத்து விட்டேன்.
’எங்களுக்கு இல்லா விட்டாலும் பரவாயில்லை ஆச்சாரியரே. என்னை நம்பி
வந்திருக்கும் என் நண்பர்களுக்குரிய பங்கைக் கொடுத்து விடுங்கள். அது அவர்களுக்கு
மறுக்கப்பட்டால் இறந்தாலும் இந்தக் கட்டை வேகாது’ என்று சொல்லியிருக்கிறேன்
என்றார்....” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி விட்டு மலைகேது வராத கண்ணீரைத்
துடைத்துக் கொண்டான்.
காஷ்மீர மன்னன் கவலையுடன் கேட்டான். “பின் என்ன
நடந்தது?”
மலைகேது அவன் தந்தை இருந்திருந்தால்
எப்படிப் பேசுவாரோ அப்படியே கற்பனையில் ஜோடித்துப் பேசினான். “தந்தை சொன்னதற்கு
ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் ”முதலில் வெற்றியைக் கொண்டாடுவோம். பிறகு இந்தப்
பங்கீட்டைப் பற்றிப் பேசுவோம்” என்று சொல்லி விட்டார்கள். அப்பாவியான
என் தந்தை அதை நம்பிவிட்டார். அவர்கள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு
ஏற்பாடு செய்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற என் தந்தை
உயிரோடு திரும்பவில்லை. என்னையும் அந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தார்கள். நல்ல வேளையாக
உடல்நலக் குறைவு காரணமாக நான் செல்லவில்லை. அதனால்
தான் உயிர் தப்பினேன் என்று சொல்ல வேண்டும்....”
நேபாள மன்னன் கேட்டான். “அவர் எப்படி
இறந்தார்?”
“விஷத்தால்
இறந்ததாய் எனக்குச் செய்தி கிடைத்தது. அவர் குடித்த மதுவில்
அவர்கள் விஷத்தைக் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.”
”ஆச்சாரியர்
என்ன சொல்கிறார்?” என்று குலு மன்னன் கேட்டான்.
மலைகேது சொன்னான். “யார் கேட்டார்கள்? கேட்க நான்
அங்கேயே இருந்திருந்தால் அவர் எதாவது கதை திரித்துச் சொல்லியிருப்பார். பின்
என்னை என்ன செய்வார் என்று யாருக்குத் தெரியும். நான் உடனே அங்கிருந்து
தப்பித்து வந்து என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன். இப்போது என்னை ஆட்டிப் படைக்கும் எண்ணமெல்லாம் என் தந்தையின்
மரணத்திற்கு அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பதல்ல. அவர் கடைசி
வரை உங்களுக்குப் பெற்றுத் தர நினைத்ததை உங்களுக்குப் பெற்றுத் தந்து விட வேண்டும்
என்ற எண்ணம் தான்.”
அவர்கள் மூவரும் அவனை வியப்புடனும், மிகுந்த
மரியாதையுடனும் பார்த்தார்கள்.
மலைகேது அந்த மூன்று மன்னர்களின் இரக்கத்தையும், நன்மதிப்பையும்
சம்பாதிப்பதில் வெற்றி கண்டாலும் அவன் அவர்களை சாணக்கியருக்கும், சந்திரகுப்தனுக்கும்
எதிராகத் திருப்புவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. பர்வதராஜனின்
மரணம் அநியாயமானது என்று அவர்கள் ஒத்துக் கொண்டாலும் அதற்காகவோ, தங்கள்
பங்குக்காகவோ இணைந்து சந்திரகுப்தனுக்கு எதிராக போராட அவர்கள் தயங்கினார்கள்.
நேபாள மன்னன் வெளிப்படையாகவே சொன்னான். “மலைகேது
உன் உத்தேசம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களை எதிர்ப்பது
நம்மால் முடிகிற காரியமா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பெரிதாகப்
படை என்று ஒன்று இல்லாத போதே யவன சத்ரப் பிலிப்பைக் கொன்றவர்கள் அவர்கள். வாஹிக்
பிரதேசத்தை வென்ற பிறகு யவன சத்ரப் யூடெமஸைக் கொன்றார்கள். மேலும்
பலத்தைப் பெருக்கிக் கொண்டு உன் தந்தையையும் கொன்று விட்டார்கள். இப்போது
இணையற்ற பலத்தோடு இருக்கும் அவர்களை எதிர்த்து வெல்வதை விடு, நாம் உயிரோடு
இருப்பதாவது முடிகிற காரியமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.”
அவன் சொன்னதை காஷ்மீர குலு மன்னர்கள்
மெல்லத் தலையசைத்து ஆமோதித்தது மலைகேதுவை எரிச்சலடையச் செய்தது. அவன் இக்குறுகிய
காலத்தில் அவன் தந்தையின் தந்திரத்தையும் பேச்சையும் திறம்படக் கற்றுத் தேர்ந்திருந்ததால்
விடாமுயற்சியோடு சொன்னான். “நம் பயமும், தயக்கமும் தான்
சாணக்கியரின் பலமாக இருக்கிறது. நாம் இத்தனை தூரம் போராடி நம் வீரர்களையும், ஆயுதங்களையும், குதிரைகளையும், யானைகளையும்
இழந்தது ஒரு பலனுமில்லாமல் திரும்பப் போவதற்கா? இதையும்
யோசித்துப் பாருங்கள்”
காஷ்மீர மன்னன் சொன்னான். “உண்மை தான். ஆனால் எங்களையெல்லாம்
விட அறிவும், அனுபவமும், வலிமையும் வாய்ந்த
உன் தந்தையே அவர்களை எதிர்த்து பெற்ற பலன் உயிரை இழந்தது தான் என்கிற போது நாம் நம்
வலிமையை பெருக்கிக் கொள்ளாமல் அவர்களை எதிர்ப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை
மலைகேது”
குலு மன்னனும் சொன்னான். “காஷ்மீர
மன்னன் சொல்வது சரி தான். நாம் முன்யோசனை இல்லாமல், நம்மை மேலும்
பலப்படுத்திக் கொள்ளாமல் எந்த முயற்சியில் ஈடுபடுவதும் நல்லதல்ல...
அதனால் பொறு. நாம் யோசிப்போம்.”
மலைகேதுக்கு அதற்கு மேல் வற்புறுத்த
முடியவில்லை. ஒரேயடியாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவர்கள் தொடர்ந்து பாடலிபுத்திரம்
செல்லாமல் அங்கேயே தங்கி யோசிக்கத் தீர்மானித்ததே ஆரம்ப வெற்றியாக மலைகேதுவுக்குத்
தோன்றியது. “நல்லது
யோசியுங்கள். ஆனால் உங்களுக்காக என் தந்தை செய்திருக்கும் தியாகம் வீணாகக்
கூடாது என்பதையும் மறந்து விடாதீர்கள்” என்று சொன்னான்.
அவனுக்கு மறுநாளே ராக்ஷசரின்
கடிதம் ஒரு தூதன் மூலம் வந்து சேர்ந்தது.
”ஹிமவாதகூட இளவரசருக்கு வணக்கம்.
நாம் இதற்கு முன் சந்திக்கும் வாய்ப்பு இருந்திரா விட்டாலும்
தங்கள் தந்தையைக் கண்டு பேசும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். நடந்ததை எல்லாம் மறந்து
அவருடன் நட்பு பாராட்டும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்திருந்தது. நமது பொது எதிரியை எப்படி வீழ்த்துவது என்று சேர்ந்து ஆலோசித்து ஒரு முடிவையும்
நாங்கள் எட்டியிருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு
முன் நம் பொது எதிரி சதி செய்து உங்கள் தந்தையைக் கொன்று விட்டது எனக்கு பேரதிர்ச்சியையும்,
பெருந்துக்கத்தையும் தந்தது. ஆனால் தாங்கள் தங்கள்
தந்தையின் மரணத்தில் எச்சரிக்கையடைந்து பாடலிபுத்திரத்திலிருந்து தப்பித்துச் சென்றது எனக்கு மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது.
தாங்கள் இங்கேயே தங்கியிருந்தால் உங்கள் உயிருக்கும் ஆபத்து சம்பவித்திருக்கும்
என்பது உறுதி.
தங்கள் தந்தை இறந்த போதிலும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பணி
நாம் செய்வதற்காகக் காத்திருக்கிறது.
அந்தப் பணியை நாம் செய்தால் ஒழிய அவர் ஆத்மா சாந்தியடையாது. அதைச் செய்யாமல் நீங்களும் தலைநிமிர்ந்து வாழ முடியாது. உங்களுடன் போருக்கு வந்த நட்பு மன்னர்களும் நிம்மதியாக இருக்க முடியாது.
ஏனென்றால் நம் பொது எதிரி உங்கள் தந்தையைக் கொன்றதோடு திருப்தியடையப்
போவதில்லை. அடுத்ததாக எதிரி வீழ்த்த நினைத்திருக்கும் பட்டியலில்
உங்கள் அனைவர் பெயர்களும் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஏனென்றால்
வெற்றியில் பங்கு கேட்க வரும் யாரையும் எதிரியாக நினைக்கும் போக்கு எதிரியிடம் வெளிப்பட்டு
வருகிறது. அதனால் தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பழி தீர்க்க
மட்டுமல்லாமல் எதிரியின் எதிர்காலத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள
நாம் ஒன்றிணைந்து போராடுவதே இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. இந்த உண்மை நிலையைத் தாங்கள் உணர்வது மட்டுமல்லாமல் தங்கள் நட்பு மன்னர்களுக்கும்
புரிய வைத்து ஒருங்கிணையுங்கள். எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல்
உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எதிரியை வீழ்த்துவது
ஒன்றே நான் எதிர்பார்க்கும் ஒரே பலன்.
தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் தந்தையின் கடைசி நண்பன்”
(தொடரும்)
என்.கணேசன்







