Thursday, October 31, 2024

சாணக்கியன் 133

 

ர்வதராஜன் சொன்னான். “தாங்கள் கூறுவது வியப்பை அளிக்கிறது ஆச்சாரியரே. யாருடைய உதவியுமில்லாமல் வாஹிக் பிரதேசத்தைக் கைப்பற்றினீர்கள். என் சிற்றப்பனான புருஷோத்தமனைக் கொன்றவனைப் பழிவாங்க அவன் மகன் மலயகேதுவுக்கு உதவி செய்து யவனர்களை வீழ்த்துமளவுக்கு வலிமை பெற்றிருக்கிறீர்கள். இப்படி கேகய நாட்டுக்கே உதவி செய்யும் வலிமை பெற்ற உங்களுக்கு இந்தச் சிறியவனின் உதவி தேவைப்படுகிறது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் எதுவானாலும் சரி தங்களுக்கு ஏதாவது வகையில் உதவ முடிந்தால் அதை என் பாக்கியமாக நான் கருதுவேன். என்ன உதவி வேண்டும் என்று விளக்கமாகச் சொல்லுங்கள் ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் சந்திரகுப்தனைப் பார்க்க, அவன் சொன்னான். “நாங்கள் போரிட்டு மகதத்தை வெல்ல விரும்புகிறோம். அதற்கு எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது

 

பர்வதராஜன் ஆழ்ந்து ஆலோசித்தபடி சந்திரகுப்தனைக் கூர்ந்து பார்த்தான். அவன் அறிவு அதுகுறித்த எல்லாக் கணக்குகளையும் வேகமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தது.  பின் அவன் கேட்டான். “உங்கள் படைவலிமையே போதாதா?”

 

மகதத்தின் படைவலிமைக்கு எதிராகப் போதாது. மேலும், இருக்கும் படைகளை முழுவதுமாக வாஹிக் பிரதேசத்திலிருந்து விலக்கிக் கொண்டு போவதும் உசிதமாகத் தோன்றவில்லை. அதன் பாதுகாப்புக்கு ஒரு கணிசமான பகுதியை விட்டு விட்டே போக வேண்டியிருக்கிறது

 

இப்படிக் கேட்கிறேன் என்று என்னைத் தவறாக நீ எண்ணிவிடக்கூடாது சந்திரகுப்தா. என் சிற்றறிவுக்கு எட்டாததால் தான் கேட்கிறேன். உங்களுக்கு  அப்படி கூடுதல் படைகள் வேண்டுமானாலும் காந்தாரத்திடமும், கேகயத்திடமும் நீங்கள் உதவி கேட்கலாமே? ஆம்பி குமாரன் ஆச்சாரியரின் முந்தைய மாணவன். கேகயம் உங்களுக்கு ஏற்கெனவே நன்றிக் கடன் பட்டிருக்கிறது. இரண்டு தேசங்களின் படைகளும் வந்தால் அது தாராளமாக உங்களுக்கு மகதத்தை எதிர்க்கப் போதுமே

 

சந்திரகுப்தனும், சாணக்கியரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பர்வதராஜனின்சிற்றறிவுக்கு எவ்வளவு வேகமாக எல்லா சாத்தியக்கூறுகளும் எட்டுகின்றன என்று சந்திரகுப்தன் வியந்தான். இதை யோசிக்க அதிக நேரம் பர்வதராஜனுக்குத் தேவைப்படவில்லை...

 

சந்திரகுப்தன் சொன்னான். “அவர்களிடம் கேட்டால் கண்டிப்பாக உதவி கிடைக்கும். ஆனால் யவனர்கள் தங்கள் முந்தைய தோல்விக்குப் பதிலடி தரும் விதமாக எந்த நேரமும் படையெடுத்து வரலாம். அப்போது அவர்களைக் காத்துக் கொள்ள அவர்களுடைய படைவலிமை கண்டிப்பாக முழுவதுமாக அவர்களுக்கிருக்க வேண்டும். எங்களுக்கு உதவுவது அவர்களுக்கு ஆபத்தாகி விடும்

 

பர்வதராஜன் மெல்லத் தலையசைத்தான். அவர்களுடைய அத்தியாவசியம் அவனுக்கு இப்போது விளங்கியது. தனநந்தன் மீது அவனுக்கும் கோபம் இருந்தது. தனநந்தனின் மகள் துர்தரா மிக அழகானவள் என்று கேள்விப்பட்டு அவன் தன் மகன் மலைகேதுவுக்காகப் பெண் கேட்டு சென்ற மாதம் தூதனுப்பியிருந்தான். அந்தச் சம்பந்தம் முடிந்தால் தனநந்தனின் மருமகனாக மலைகேதுவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அவன் ஆசைப்பட்டிருந்தான். ஆனால் தனநந்தன்விருப்பமில்லைஎன்று அலட்சிய பதிலை அனுப்பியிருந்தான். அதை நாகரிகமாக இனிமையான சொற்களால் பூசி இதமாகச் சொல்லும் சிரமத்தைக் கூட தனநந்தன் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அதனால் அவனுக்குப் பதிலடி தர இது மிக நல்ல சந்தர்ப்பம்.

 

ஆனால் அதை அவர்களுக்குத் தெரிவிக்க பர்வதராஜன் விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க அவர்களுடைய காரியமாகவே தெரிந்தால் மட்டுமே அவர்களிடம் பேரம் பேச வசதியாக இருக்கும்.

 

தங்களுக்கு உதவினால் நான் அடையும் பலன் என்னவாக இருக்கும்?” என்று பர்வதராஜன் மெல்லக் கேட்டான்.

 

ரம்பத்தில்எதுவானாலும் சரி தங்களுக்கு ஏதாவது வகையில் உதவ முடிந்தால் அதை என் பாக்கியமாக நான் கருதுவேன்என்று சொன்ன பர்வதராஜன் கூச்சம் எதுவுமில்லாமல்தங்களுக்கு உதவினால் நான் அடையும் பலன் என்னவாக இருக்கும்என்று பின்பு கேட்டது சந்திரகுப்தனைத் திகைக்க வைத்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் கேட்டான். “நீங்கள் என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்?”

 

பர்வதராஜன் சொன்னான். “பொதுவாக இரண்டு பேர் சேர்ந்து ஒரு செயலைச் செய்து அந்தச் செயல் வெற்றி பெற்றால் கிடைக்கும் பலனைப் பாதி பாதியாகப் பிரித்துக் கொள்வதல்லவா நியாயம்?”

 

சந்திரகுப்தன் இனி இவனிடம் பேசி ஒரு சுமுகமான முடிவை எட்டுவது தன்னால் முடியாத செயல் என்று உணர்ந்தவனாய் சாணக்கியரைப் பார்த்தான்.

 

சாணக்கியர் பர்வதராஜனின் சொன்னார். “உண்மையில் மகதத்தை தனநந்தனிடம் இருந்து விடுவிப்பதில் கிடைக்கக்கூடிய முதன்மையான பலன் புண்ணியமே. அவனிடம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் குடிமக்களின் பாரத்தைக் குறைப்பதில் கிடைக்கும் புண்ணியத்தை யாருக்கு எவ்வளவு என்று பிரிக்கும் சக்தியும் பொறுப்பும் எல்லாம்வல்ல இறைவனையே சாரும். அதைச் சரிபாதியாகப் பிரித்து இறைவன் உனக்குத் தந்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையுமில்லைநம்மால் அளக்க முடிந்ததை எப்படிப் பிரிப்பது என்று தீர்மானிப்பதற்கு நாம் நிறைய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது...”

 

புண்ணியக் கணக்கில் கிடைக்கும் பங்கைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத பர்வதராஜன் அந்த அந்தணரின் பேச்சுத் திறமையில் ஏமாந்து விடக்கூடாது என்று எண்ணியவனாய் மெல்லச் சொன்னான். “கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அடியேனுக்கு விளக்கினால் நான் புரிந்து கொள்வேன் ஆச்சாரியரே”   

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “பர்வதராஜனே. மகதத்தை வெல்லும் இந்த மாபெரும் பணியில் இப்போது உத்தேசித்திருக்கும் போர், கடைசியாக நாங்கள் வீசப்போகும் அஸ்திரம் தான். அதற்குப் பலம் போதுமானதாக இருக்க வேண்டும் என்று தான் உன்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறோம். ஆனால் இதற்கு முன்னதாக மகதத்தைப் பலவீனப்படுத்தும் வேலைகளை நாங்கள் மிக இரகசியமாகக் கடந்த ஒரு வருடமாகவே செய்து கொண்டு வந்திருக்கிறோம். மகதத்தை நாம் வெல்வதற்கு அதுவும் பெருமளவு உதவப் போகிறது. அதனால் கணக்கு என்று பார்த்தால் அதையும் கூடப் பார்ப்பது முக்கியம்....”

 

பர்வதராஜன் இடைமறித்துச் சொன்னான். “ஆச்சாரியரே. பெரிய விஷயத்தைத் தீர்மானிக்கும் போதும் மிகச் சிறிய விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வது குழப்பத்திற்குக் காரணமாகுமேயொழிய அது தீர்வுக்கு வழியாகி விடாது. மகதத்தைப் பலவீனப்படுத்தும் வேலையைச் செய்திருப்பதாகப் பழைய கணக்கைச் சொல்கிறீர்கள். ஒரு விவாதத்திற்காக அதை ஏற்று எடுத்துக் கொண்டால் கூட, நீங்கள் திட்டமிட்டுச் செய்திருக்கக்கூடிய அந்த வேலைகளை விட அதிகமாக தனநந்தனே முட்டாள்தனமாக அரியணையில் அமர்ந்த நாளிலிருந்து நிறையவே செய்து வந்திருக்கிறான். அதற்காக வெற்றியில் கிடைப்பதில் அவனுக்கும் ஒரு பங்கு தருவீர்களா? அதனால் அந்தப் பழைய கணக்குகளை விடுங்கள். இப்போதைய கணக்கைப் பாருங்கள். இப்போது நாமிருவரும் இதில் ஈடுபடப் போகிறோம். வென்றால் வென்றதில் சரிபாதி பிரித்துக் கொள்ளலாம்

 

சாணக்கியர் உள்ளூர எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டார். ஒன்றிணைந்த பாரதம் என்ற கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு பர்வதராஜனின் இந்தப் பிரிவினைப் பேச்சு சிறிதும் பிடிக்கவில்லை. அவர் சொன்னார். “பர்வதராஜனே உன் படைபலம் மட்டும் மகதத்தைத் தோற்கடிக்க எங்களுக்குப் போதாது.  எல்லாவற்றையும் கணக்கு போட முடிந்த பேரறிவாளியான நீ அதை உணரத் தவறியது எனக்கு வியப்பை அளிக்கிறது. ஆரம்ப உதவியைத் தான் உன்னிடம் கேட்டிருக்கிறோமே ஒழிய எங்களுடன் உன் படைபலம் மட்டுமல்லாமல் குலு, காஷ்மீரம், நேபாளம் ஆகிய தேசங்களின் படைபலமும் சேர்ந்தால் தான் மகதத்தை வெல்ல முடியும் என்று தோன்றுவதால் அடுத்தபடியாக அவர்களிடமும் போக உத்தேசித்திருக்கிறோம். அதனால் அவர்களிடம் பேசுவதற்கு முன்பு உனக்கு நாங்கள் எந்த வாக்குறுதியும் தர முடியாதவர்களாக இருக்கிறோம்.”

 

பர்வதராஜனின் முகம் களையிழந்தது. சாணக்கியர் சொன்னது போல் தன்னுடைய படை பலம் மட்டும் அவர்கள் உதவிக்குப் போதாது என்பதை அவன் உணராமல் இல்லை. தந்திரம் மிக்க சாணக்கியர் ஏதோ ஒரு திட்டம் வைத்திருக்கிறார் போலிருக்கிறது, அதற்கு அவர்களுக்கு அவன் உதவி மட்டும் போதும் போலிருக்கிறது என்று எண்ணியிருந்தான். அந்த அந்தணரின் கணக்குகள் பொய்க்க வழியில்லை என்ற முழு நம்பிக்கை அவனுக்கிருந்ததால் அவர் திட்டம் எதுவானாலும் வெற்றி நிச்சயம், அதில் முடிந்த அளவு லாபமடைய வேண்டும் என்று அவன் கணக்குப் போட்டிருந்தான். ஆனால் அவர் திட்டத்தையே முழுமையாக அறியாமல் பாதி பங்கை கேட்டதற்கு அவன் வருத்தப்படவில்லை. மாறாக அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

 

இந்த நான்கு தேசங்களில் அதிக பலம் வாய்ந்தது அவன் தேசம் தான் என்பதால் தான் முதலில் இங்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது இப்போது புரிந்தது. அத்துடன், ஒருவேளை அவன் மறுத்து விட்டால் மற்றவர்கள் உதவினாலும் இவர்களுக்குப் படைவலிமை போதாமல் குறைவாகவே இருக்கும் என்பதும் புரிந்ததால் அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பர்வதராஜன் மௌனத்தை நீட்டித்தான். இது போன்ற நேரங்களில் காரியமாக வேண்டும் என்ற அவசரத்தில் இருப்பவர்கள் கூடுதல் சலுகைகளோடு இறங்கி வருவார்கள் என்பது அவன் அனுபவமாக இருந்தது. அதனால் அவன் மிகவும் தந்திரமாக தீவிர யோசனையில் இருப்பவன் போல் தொடர்ந்து நடித்தான். 

 

(தொடரும்)

என்.கணேசன்  





Wednesday, October 30, 2024

யோகி 74

(தீபாவளி நல்வாழ்த்துக்கள்) 


தேவானந்தகிரிக்கு அர்த்தஜாம பூஜைக்காக மண்டலமும், யந்திரங்களும் வரைவதற்கு மட்டுமே ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. மனிதர் மிகவும் பொறுமையாக அவற்றை வரைந்தார். அவர் வேலை செய்கையில் அதிகம் பேசாதவராகத் தான் இருந்தார். அவர் வரையும் யந்திரங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரம்மானந்தாவுக்கு அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அர்த்தம் விளங்கவில்லை.  அதைக் குறித்துக் கேட்ட கேள்விகள் கேட்டால், இதையெல்லாம் குறித்து ஒரு காலத்தில் கற்றுக் கொண்டது பற்றிச் சொன்னது பொய்யென்று ஆகிவிடும் என்பதால் அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரியின் பிரயோகம் ஒவ்வொன்றிலிருந்தும் தற்காத்துக் கொள்ளும் சின்னங்கள், யந்திரங்களை தேவானந்தகிரி வரைந்திருக்கலாம் என்பது அவருடைய அனுமானமாக இருந்தது. இடையிடையே தலையை மட்டும் லேசாக அசைத்தார். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அவர் தலையை ஆட்டுவது போல் இருக்கும் என்று அவர் எண்ணினார்.

 

ஆனால் தேவானந்தகிரி அவர் பக்கமே திரும்பவில்லை.  அவரை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது, பொழுது போகாத சுகுமாரன் மட்டுமே. சுகுமாரனுக்கு பிரம்மானந்தா எல்லாவற்றையும் உட்கிரகித்துக் கொண்டு தலையை அசைப்பது போல் தோன்றியதால் பிரமிப்பாக இருந்தது. பிரம்மானந்தாவை ஞானக்கடல் என்று பலரும் பாராட்டுவது அர்த்தமில்லாமல் அல்ல என்று தோன்றியது.

 

தேவானந்தகிரி வரைந்து விட்டு நிமிர்ந்த போது அவரிடம் சுகுமாரன் தன் சந்தேகத்தை கேட்டார். “நீங்க மண்டை ஓடு, ஓநாய் எல்லாம் பார்த்துச் சொல்றதுக்கு முன்னாடி மயான காளியையும் சொன்னீங்க. யாரோ சொன்னாங்கன்னு நானும் அந்தக் காளி ஃபோட்டோவை வாங்கி வீட்டுல வெச்சிருக்கேன். அதனால தான் அது உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமா? இல்லை, வேறெதாவது காரணமா?”

 

தேவானந்தகிரி சொன்னார். “இந்த செய்வினை பூஜை செய்தவர் மயான காளி உபாசகராயிருக்கும். அவர் அதை வெச்சு தான் பூஜையைச் செய்திருக்கார். அதனால தான் அது தெரிஞ்சுது. நீங்க உங்க வீட்டுல வெச்சிருக்கறதால அல்ல.”

 

சுகுமாரன் மனம் நொந்தார். ’சே! எதிரி பூஜை செய்யற சாமி ஃபோட்டோவை தான் வீட்டுக்குக் கொண்டு வந்து வெச்சிருக்கோமா? அதனால தான் அது எதிரிக்குச் சாதகமாகவே வேலை செஞ்சிருக்கா?’

 

சுகுமாரன் மெல்லக் கேட்டார். “அப்படின்னா அந்த மயான காளி படத்தை நான் வீசிடலாமா? அதனால் எதாவது பிரச்சனை வருமா?”

 

தேவானந்தகிரி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினார். ‘கணக்கு பார்த்தே கடவுளையும் மனிதன் வணங்குகிறான். மனிதனுக்கு எதாவது விதத்தில் பிரயோஜனப்படா விட்டால், கடவுளுக்கே கூட மனிதனின் மனதிலும், வீட்டிலும் இடமில்லை.’

 

அவர் சொன்னார். “உக்ர தெய்வங்களின் சிலைகளையும், படங்களையும் வழிபட்டுகிட்டு இருந்து பிறகு திடீர்னு சும்மா வீசிடக்கூடாது. அதனாலேயும் பிரச்சினைகள் வரலாம். அது வீட்டுல வேண்டாட்டி, கடைசியாய் கும்பிட்டு, குளம், ஆறு மாதிரியான நீர்நிலைகள்ல போட்டுடலாம்.”

 

சுகுமாரன் தலையசைத்தார்.

 

அர்த்தஜாம பூஜை சரியாக பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்தது. தேவானந்தகிரி பாண்டியனையும், சுகுமாரனையும் மரப்பலகைகளில் அமரச் சொன்ன போது சுகுமாரன் நினைவு வந்தவராகச் சொன்னார். “என்னோட டாமிக்கும் நீங்க தாயத்து கட்டணும் சாமி. அவன் கண்ணுக்கும் எல்லாமே தெரியுது. அவன் குரைக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேங்கறான்.”

 

சரியென்று தேவானந்தகிரி தலையசைத்தார். சுகுமாரன் கேட்டார். “அவன் கார்ல தான் இருக்கான். அவனையும் கூட்டிகிட்டு வரட்டுமா?”

 

தேவானந்தகிரி அவசரமாகச் சொன்னார். “பைரவர் அங்கேயே இருக்கட்டும். பூஜை முடிஞ்சவுடனே நானே அங்கே போய் அது கழுத்துல கட்டறேன்.”

 

புரியாமல் விழித்த சுகுமாரனிடம் பிரம்மானந்தா சொன்னார். “அவர் பைரவர்னு சொன்னது உங்க டாமியைத் தான்

 

பூஜை இரண்டு மணி நேரம் நீடித்தது. பூஜை முடிந்தவுடன் இருவர் கையிலும் தாயத்துக் கயிறு கட்டிய தேவானந்தகிரி சொன்னார். ”இந்தத் தாயத்து சரியாய் 48 நாள் உங்களை ரட்சிக்கும். ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் இதைக் கழட்டிடக் கூடாது. கழட்டினாலோ, அறுந்தாலோ அந்த சக்தி விலகிடும். திரும்ப இந்தப் பூஜை செஞ்சு மாட்டினா தான் பழையபடி ரட்சிக்கும். அதனால ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்.”

 

தீவிர நாத்திகராக இருந்து திருநீறு, குங்குமம், மந்திரித்த கயிறு, தாயத்து ஆகியவற்றுடன் இருந்த ஆட்களைக் கேலியும், கிண்டலும் செய்து வந்த தானே இந்த தாயத்தை அணிவது சுகுமாரனுக்குக் கொடுமையாகத் தோன்றியது. ’இதுவரை மற்றவர்களைச் செய்திருந்த கேலியும், கிண்டலும் வட்டியும் முதலுமாக அல்லவா திரும்பி வரும்? வாய் திறந்து சொல்லத் தயங்குபவர்களும் பார்வையாலேயே சிரிப்பார்களே….!’

 

பாண்டியனும் தாயத்து கட்டிக் கொள்வதில் மனக்கசப்பை உணர்ந்தார். அவருக்கு அடுத்தவர்கள் கேலியும், பார்வையும் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் ஒரு தாயத்தின் தயவில் தான் உறங்கவே முடியும் என்ற நிலை வந்திருப்பது, யார் சிரிக்கா விட்டாலும், அவருக்கே பெரும் அவமானமாக இருந்தது. 48 நாட்கள் இதை நம்பி வாழ்வது சகிக்க முடியாததாய் இருந்தது.  ஆனால் வேறு வழியில்லை. சகித்துத் தானாக வேண்டும்

 

சுகுமாரனின் காரிலிருந்த டாமி கழுத்தில் தாயத்தைக் கட்டின போது தேவானந்தகிரி சொன்னார். “இது கழுத்துல இருந்தும் தாயத்து அறுந்துடாம பார்த்துக்கோங்க. இல்லாட்டி இது பார்த்துட்டு குரைச்சுகிட்டே இருக்கும்.”

 

அவர் சொன்ன பிறகு தான் ஒரு உண்மை அவர்களுக்கு உறைத்தது. அவர்களுடைய இருப்பிடங்களில் அந்தப் பிரயோக சக்திகள் வந்து உலவிக் கொண்டு தான் இருக்கும். வந்தது அவர்கள் கண்ணில் படாமலிருக்கவும், பாதிக்காமல் இருக்கவும் தான் இந்தத் தாயத்து.  தேவானந்தகிரிஇந்தப் பிரயோகத்தில் தற்காத்துக்கறது ஒன்னு தான் நமக்கு ஒரே வழி.” என்று சொன்னதன் முழு அர்த்தம் இப்போது தான் அவர்களுக்கு விளங்குகிறது

 

எதிரியின் பிரயோக சக்திகள் இங்கு ஊடுருவி விட்டன, அவற்றைத் தடுக்க முடியவில்லை என்பதை நினைக்கவே பாண்டியனுக்குக் கசந்தது. அவர் கேட்டார். “அப்படின்னா இதைத் துரத்தவோ, அழிக்கவோ வழியேயில்லையா?”

 

தேவானந்தகிரி சொன்னார். “இல்லை. இந்த ஒரு மண்டல காலத்தில் நீங்க எதிரியைக் கண்டுபிடிச்சுட்டா பிறகு நாம ஏதாவது செய்யலாம். அதனால அதைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க.”

 

தலையசைத்த பாண்டியன் கேட்டார். “எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற வயிற்று வலிப் பிரச்னை இந்த தாயத்தால சரியாயிடுமா?”

 

தேவானந்தகிரி சொன்னார். “புதுசா எந்த பாதிப்பும் வராம தடுக்கும். ஆனா ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பை அது ஒன்னும் செய்யாது. அதை நீங்க மருந்தால தான் சரி செஞ்சுக்க வேண்டி வரும்.”

 

மருத்துவர்களோ பல நாள் பத்திய உணவையும், மருந்தையும் சாப்பிட்டு தான் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த வேண்டியிருக்கும் என்று சொன்னது சுகுமாரனுக்கும், பாண்டியனுக்கும் நினைவு வந்தது.

 

தேவானந்தகிரி வேலை முடிந்த பின் அங்கே அதிகம் தங்க விரும்பாமல், பணம் பெற்றுக் கொண்டு, பிரம்மானந்தாவை வணங்கி விட்டுக்  கிளம்பி விட்டார். 

 

அவர் சென்ற பிறகு, சுகுமாரனுக்கு உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தாயத்து வேலை செய்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கவும் அவருக்கு ஆவலாக இருந்தது. ”நான் கொஞ்சம் தூங்கிக்கறேன் யோகிஜிஎன்று சொல்லி பக்கத்து அறையில் உறங்கச் சென்று விட்டார்.

 

பிரம்மானந்தாவும், பாண்டியனும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பக்கத்து அறையிலிருந்து சுகுமாரனின் குறட்டை கேட்க ஆரம்பித்ததிலிருந்து தேவானந்தகிரியின் தாயத்து சரியாக வேலை செய்கிறது என்பது தெரிந்து விட்டது. 

 

பாண்டியன் சொன்னார். “உடனடிப் பிரச்சினை தீர்ந்துடுச்சு. ஆனால் எதிரி இருக்கற வரைக்கும் நிலைமை, தலைக்கு மேல் கத்தி மாதிரி தான் இருக்கும் போலருக்கு யோகிஜி.”

 

பிரம்மானந்தா சொன்னார். “எனக்கும் அப்படித் தான் தோணுது பாண்டியன். எதிரியைக் கண்டுபிடிச்சு அழிக்கறது தான் இதுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாய் இருக்க முடியும்.”


(தொடரும்)

என்.கணேசன்




Monday, October 28, 2024

யோகி 73

  

தேவானந்தகிரி சொன்னார். “சாதாரணமான பிரயோகங்கள் செய்திருந்தால் இந்தப் பிரயோகத்தைத் திருப்பி ஏவி விட்டிருக்க முடியும்…. இது சக்தி வாய்ந்த உக்ர பிரயோகம். இதுல நமக்கு தற்காத்துக்கறது ஒன்னு தான் வழி. திருப்பித் தாக்க வழியில்லை.”

 

திருப்பித் தாக்க வழியில்லை என்பதில் ஏமாற்றமடைந்த பாண்டியன், பாதி உற்சாகமிழந்து அடுத்த முக்கியக் கேள்வியைக் கேட்டார். “எப்படித் தற்காத்துக்கறது?”

 

தேவானந்தகிரி சொன்னார். இதற்கு பெரிய பரிகார பூஜை செஞ்சு உங்க ரெண்டு பேருக்கும் தாயத்து கட்டி விடறேன். இந்த உக்ர பிரயோகத்தோட ஆயுள்காலம் ஒரு மண்டல காலம். இந்த தாயத்து கண்டிப்பாய் ஒரு மண்டல காலத்துக்கு உங்களைப் பாதுகாக்கும்.”

 

சுகுமாரன் கேட்டார். “ஒரு மண்டல காலம்னா?”

 

“48 நாட்கள்.”

 

பாண்டியன் தேவானந்தகிரியைக் கேட்டார். “நீங்க செய்யற தற்காப்புல என்ன பயனிருக்கும்?” 

 

இப்ப செய்யற தற்காப்பு உங்க கண்ணுக்குத் தெரியற காட்சிகள்ல இருந்து உங்களைக் காக்கும். உங்களால தூங்க முடியும்.  மண்டை ஓடு, ஓநாய் மாதிரியான காட்சிகளையும், உணர்வுகளையும் தடுக்கும். இன்னைக்கு ராத்திரிக்குள்ளே அதைச் செய்யாட்டி இந்த டாக்டருக்குப் பைத்தியம் பிடிச்சுடும். நாளைக்கு ராத்திரிக்குள்ளே செய்யாட்டி உங்களுக்கும் பைத்தியம் பிடிச்சுடும். அது தான் நிலைமை

 

சுகுமாரனும், பாண்டியனும் அதிர்ச்சியுடன் தேவானந்தகிரியைப் பார்த்தார்கள். சுகுமாரனுக்குப் பின் நினைவு வந்தது. அவருக்கு ஒரு நாள் முன்பாகவே பிரயோகம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நேற்றிரவோடு மூன்று நாட்கள் முடிந்து விட்டன. இன்றிரவு நான்காவது நாள். பாண்டியனுக்கு ஒரு நாள் கழித்து தான் தாக்கம் வந்திருக்கிறது. அதனால் தான் ஒரு நாள் தாமதமாகப் பாதிப்போ?

 

தேவானந்தகிரி சற்று தயங்கி விட்டு பிரம்மானந்தாவிடம் சொன்னார். “நான் இங்கே வர்றதுக்கு தயாரானப்ப எனக்கு கிடைச்ச சில சகுனங்கள் இந்தப் பரிகார பூஜை செய்யறதுல எனக்கே ஆபத்திருக்கறதாய் சொன்னதால, நான் என் தற்காப்புக்கே மந்திர ஜபம் செய்துட்டு வர வேண்டியதாய் போச்சு.”

 

பிரம்மானந்தா திகைத்தார். சுகுமாரன் நடுங்கினார். பாண்டியனுக்கு இரத்தம் கொதித்தது. அவர் கேட்டார். “எதிரி யார்னும், ஏன் இப்படி செஞ்சிருக்கான்னும் தெரிஞ்சுக்க என்ன வழி?”

 

தேவானந்தகிரி சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “காரணமில்லாமல் எதுவும் நடக்காது. நல்லா யோசிச்சால் உங்களுக்கு எதிரியை அடையாளம் தெரிய வரலாம். இந்தப் ப்ரஷ்ன பூஜையில இவ்வளவு தான் தெரியுது.”

 

ஏதாவது ஒரு தவறு, ஒரு குற்றம் மட்டும் செய்திருந்தால் அதை வைத்து எதிரியை அடையாளம் கண்டுபிடிப்பது, அவர் சொல்வது போல், கஷ்டமல்ல. எத்தனையோ செயல்கள், எத்தனையோ பாதிக்கப்பட்டவர்கள் என்று இருக்கையில் எப்படித் தான் கண்டுபிடிப்பது?

 

தற்காப்பு பூஜையை எப்ப ஆரம்பிக்கலாம்.” பிரம்மானந்தா கேட்டார்.

 

அர்த்த ஜாமத்தில் தான் அதை ஆரம்பிக்கணும்.”

 

அர்த்தஜாமத்திற்கு இன்னமும் இரண்டரை மணி நேரம் இருக்கிறது. அது வரை சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு தேவானந்தகிரி போய் விட்டார்.

 

மூவரும் எதிரி யாராக இருக்கும் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.

 

பாண்டியன் சொன்னார். ”சைத்ராவோட குடும்பத்துல யாரும் இளைஞர்கள் இல்லை. அவளோட நட்பு வட்டத்துலயும் இவர் சொல்ற மாதிரி நண்பர்கள் இருக்கறதாய் தெரியலை...”

 

பிரம்மானந்தா கேட்டார். “அவளைக் காதலிச்ச பையன்...?”

 

அவன் அவளை எப்பவோ மறந்துட்டவன்... அவனால தான் அவ இந்தப்பக்கமே வந்தாள்.”

 

அவ தாத்தாவோட நண்பர்கள் ரெண்டு பேர் இருந்தாங்களே. அவங்க வீட்டுப் பசங்க யாராவது இருக்குமோ?”

 

இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அப்படி ரொம்ப நெருக்கமாய் இருந்திருந்தா முதல்லயே தெரிஞ்சிருக்கும். அந்தக் கிழவர் கூட எப்பவும் இருந்தவங்க மத்த ரெண்டு கிழவர்கள் தான். இந்த மந்திரவாதி சொல்ற பையன், அந்த மூனு கிழவங்கள்ல யாருக்காவது தெரிஞ்சவனாய் இருக்க வாய்ப்பிருக்கு,. அவங்க அவன் கிட்ட  உதவி கேட்டிருக்கலாம். இல்லாட்டி அவன் வேற புது ஆளாய் இருக்கலாம்...”

 

ஆனால் சம்பந்தமில்லாத புதிய ஆள் இவ்வளவு தீவிரமாக எதிராகச் செயல்படக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று யோசித்த போது அவர்களுக்கு விடை கிடைக்கவில்லை. சைத்ராவுக்குச் சம்பந்தமில்லாத புதிய ஆள் என்றால் அவளுடைய உருவத்தை ஏன் தெரிய வைக்க வேண்டும்? அவர்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இருக்குமோ? குழப்பமாக இருந்தது.

 

சுகுமாரன் சொன்னார். “அந்தப் பையன் எதோ நிஜ யோகியைத் தேடிகிட்டு இருக்கறதாய் மந்திரவாதி சொன்னார். எந்த யோகியையாய் இருக்கும்?”

 

பிரம்மானந்தாவுக்குத் திடீரென்றுஅந்தயோகியின் நினைவு வந்தது. ’அந்த யோகியையாக இருக்குமோ? சேச்சே.... இருக்காது.... அவர் இன்னமும் உயிரோடு இருக்கறது கூடச் சந்தேகம் தான்.  உயிரோடு இருந்தாலும் கூட அவரை யோகின்னு தெரியறவங்களோ, தெரிஞ்சுகிட்டு தேடறவங்களோ இருக்க வாய்ப்பேயில்லை

 

அவரையே பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரன் கேட்டார். “யாராவது ஞாபகத்துக்கு வர்றாங்களா?”

 

பிரம்மானந்தா உடனடியாகச் சொன்னார். ”இல்லை.”

 

ஆனால் அவருடன் பல காலமாக இருக்கும் பாண்டியனுக்கு அவருடைய முகபாவனையைப் பார்த்தே, அவர் உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறார் என்பது தெரிந்து விட்டது.

 

சுகுமாரன் பிரம்மானந்தாவை விடுவதாய் இல்லை. “உங்க சக்தியை வெச்சு எதாவது கண்டுபிடிச்சு சொல்ல முடியாதா யோகிஜி?” என்று சுகுமாரன் கேட்ட போது சிரிக்காமல் இருக்க பாண்டியன் கடுமையாய் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.

 

பிரம்மானந்தா சொன்னார். “என் சொந்தக் காரியத்துக்காகவும், எனக்கு ரொம்ப நெருங்கியவங்களுக்காகவும் எந்த சக்தியையும் பயன்படுத்தறதில்லைன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன்.”

 

நல்ல வேளையாக, யாருக்கு வாக்கு கொடுத்திருக்கிறீர்கள் என்று சுகுமாரன் கேட்கவில்லை. அடுத்ததாக அவர் கேட்டார். “இந்த செய்வினையில ஏன் வயிறு புண்ணாகுதுன்னு எனக்குப் புரியல யோகிஜி

 

பிரம்மானந்தா சொன்னார். “மணிப்புரா சக்ரான்னு சொல்லப்படற வயிற்றுப் பகுதி உள்ளுணர்வு, தைரியம் சம்பந்தப்பட்டது. அதைப் பாதிக்கணும்கிறது எதிரியோட உத்தேசமாய்த் தெரியுது”. இதைத் தான் தேவானந்தகிரியும் சொல்லி இருந்தது சுகுமாரனுக்கு நினைவு வந்தது.

 

சுகுமாரன் சொன்னார். “எனக்கும் அது சரியாய் தான் தெரியுது. இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கற வரைக்கும் எனக்கு பயம்னா என்னன்னே தெரியாது. எதையும் சமாளிக்கற துணிச்சல் எனக்கு இருந்துச்சு. ஆனா இப்பவோ எல்லாமே பயமாய் இருக்கு…. நான் பாத்ரூம் போய்ட்டு வர்றேன்….”

 

அவர் சென்ற பின் பாண்டியன் தாழ்ந்த குரலில் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு வந்த மொட்டைக்கடிதம் பற்றியும், இடமாற்ற உத்தரவு பற்றியும் பிரம்மானந்தாவிடம் சொன்னார்.

 

நெற்றியைச் சுருக்கியபடி பிரம்மானந்தா கேட்டார். “அந்த ஆளுக்கு மட்டும் ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்துச்சா?”

 

இல்லை. விசாரிச்சேன்.  அந்த ஆளோட சேர்ந்து வேற 26 பேருக்கும் வந்திருக்காம். எல்லார் மேலயும் நிறைய புகார்கள் இருக்காம். சி எம் வர்றதுக்காக காத்திருந்து அவர் வந்தப்பறம் செஞ்சுருக்காங்க போலத் தெரியுது.”

 

இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாததில் பிரம்மானந்தா திருப்தியடைந்தார்.

 

பாண்டியன் சொன்னார். “ஆனா அந்த மொட்டைக் கடிதம் தான் சந்தேகப்பட வைக்குது. செல்வத்துக்கு சந்தேகம், சைத்ரா வீட்டுக்கு மொட்டைக்கடிதம் அனுப்பின ஆளே இதைச் செய்திருக்கணும்னு தான்.

 

முட்டாள். ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்ததும், மொட்டைக்கடிதம் வந்ததும் ஒரே நாள்ன்னா, இங்கே இருக்கிற ஆள் அதை எப்படி முன்கூட்டியே தெரிஞ்சு அனுப்பியிருக்க முடியும்?”

 

அதைத் தான் நானும் சொன்னேன். ஆனால் இது எல்லாமே ஒரே சமயத்துல நடந்திகிட்டிருக்கறதை, தற்செயல்னு நினைச்சு ஒதுக்க என்னாலேயும் முடியல யோகிஜி.”

 

யோசித்த போது பிரம்மானந்தாவுக்கும் எல்லாவற்றையும் தற்செயல் என்று ஒதுக்க முடியவில்லை.  பிரம்மானந்தா சொன்னார். “எதுக்கும் சைத்ராவோட தாத்தா மேலே நாம ஒரு கண் வெச்சிருக்கறது நல்லதுன்னு தோணுது.

 

பாண்டியன் சொன்னார். “அதையே தான் நானும் நினைச்சு, அதற்கான ஏற்பாடும் செஞ்சுட்டேன் யோகிஜி.”

 

சுகுமாரன் வந்து விட அவர்கள் இருவரும் மேற்கொண்டு அதைப் பற்றிப் பேசவில்லை.  சுகுமாரனுக்கு இது போன்ற தகவல்கள் தெரிய வேண்டியதில்லை என்று இருவருமே நினைத்தார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்


(தீபாவளி போனஸாக அடுத்த அத்தியாயம் 30.10.24 அன்று இரவில் வெளியாகும். - என்.கணேசன்)