Monday, July 29, 2024

யோகி 60


 பாண்டியன் குழம்பினார். ‘நாம் உள்ளே பார்த்த காட்சி இவனுக்கு வெளியே தெரிகிறதோ?’ அவர் அமைதியாகக் கேட்டார். “எங்கே?”

 

உங்க கார்ல

 

பாண்டியனின் அமைதி காணாமல் போனது. அவர் பதற்றத்துடன் வேகமாக வெளியே ஓடினார்.

 

ரசுராமன் மந்திரங்களை உச்சரித்தபடியே, இரண்டு மண்டலங்களிலும்  காவித்துணி சுற்றிய பொம்மைகள் மீது எரியும் கற்பூரங்களை வைத்த போது தான் சுகுமாரனின் தோட்டத்தில் அவர்களுக்கு காவித்துணியுடன் எரியும் சடலங்கள் தெரிய ஆரம்பித்தன. தன் ஞானதிருஷ்டியில் பரசுராமன் அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

 

பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்த கூர்க்கா வீட்டுக்கு உள்ளே சென்று விட்ட வேளையில் தான் ஷ்ரவன் அனுப்பிய இளைஞன் பைக்கில் வந்து பாண்டியனின் காரை நெருங்கினான். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு பையில் அவன் எடுத்து வந்திருந்த பொம்மையை எடுத்தான். அந்தப் பொம்மையைச் சுற்றியிருந்த துணி ஏற்கெனவே மண்ணெண்ணையால் நனைக்கப்பட்டு இருந்தது. சிகரெட் லைட்டரால் வேகமாக அந்தத் துணிக்குத் தீமூட்டி பொம்மையை, கார் ஜன்னல் வழியே முன் சீட்டில் போட்டு விட்டு வேகமாக பைக்கை முடுக்கி விட்டான்.

 

சுமார் இரண்டு நிமிடங்கள் கழிந்து தான் கூர்க்கா உள்ளேயிருந்து வெளியே வந்தான். வெளியே வந்தவன், பாண்டியனின் காரிலிருந்து புகை வருவதைப் பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்து தான், உடனே அதைத் தெரிவிக்க மறுபடியும் உள்ளே ஓடினான்.

 

பாண்டியனின் காரில் தீ என்று அவன் தெரிவித்த மறுகணமே பாண்டியன் பதறியபடி ஓடி வந்தார். அவரைத் தொடர்ந்து சுகுமாரனும் ஓடி வந்தார்.

 

பரசுராமன் அந்த நேரத்தில் அந்தந்த மண்டலத்தில் வைத்திருந்த மிளகாய்களையும், குறுமிளகையும் எடுத்து அந்தந்த மண்டலத்தில் எரிந்து கொண்டிருந்த பொம்மை மேல் போட்டார்.  ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அங்கு மிக மெலிதாக மட்டும் புகை எழுந்தது. அப்படி எழுந்த புகையிலும் எந்தக் காரமும் இல்லை. மாறாக அந்தக் காரத்தை அங்கு சுகுமாரனும், பாண்டியனும் உணர்ந்தார்கள்.

 

பாண்டியனும், சுகுமாரனும், அந்தக் காரம் காரிலிருந்து வரும் புகையில் வருவதாக நினைத்து இருமினார்கள். பாண்டியன் பதற்றத்துடனும், திகைப்புடனும் தன் காருக்குள் ஏதோ எரிவதைப் பார்த்தார். உடனடியாக அவர் கூர்க்காவைப் பார்த்துக் கத்தினார். “தண்ணீர் கொண்டு வா.”

 

தோட்டத்தில் தான் தண்ணீர்க் குழாயும், பக்கெட்டும் இருக்கின்றன என்பதால் கூர்க்கா தோட்டத்திற்கு ஓடினான். அவன் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் பாட்டில் அவன் அமரும் நாற்காலிக்கு அருகிலேயே கீழே வைக்கப்பட்டிருந்தது. அதைக் கவனித்த பாண்டியன் இருமலுக்கு இடையே, ‘முட்டாள்என்று முணுமுணுத்தபடி வேகமாய் வந்து, அதை எடுத்துக் கொண்டு போய், எரிந்து கொண்டிருக்கும் தீயில் கொட்டினார். தீ அணைந்தது என்றாலும் இருமல் குறையவில்லை.

 

தீ அணைந்த பின் எரிந்து கொண்டிருந்தது என்ன என்றறிய அதைக் கையில் எடுத்தார். அது ஒரு பொம்மை போல் தெரிந்தது. தீ அணைந்து பொம்மை கரிக்கட்டையாக ஆகி விட்டிருந்த போதும் அந்தப் பொம்மையில் இப்போதும் அனலின் வெப்பம் உச்சத்தில் தெரிய, பாண்டியன் அதைத் தூக்கி எறிந்தார். அவர் காரின் முன்சீட்டில் பெரிய கருகிய பள்ளம் தெரிந்தது. பாண்டியனுக்குக் கோபம் தாங்கவில்லை. ஆனால் யார் மீது கோபித்துக் கொள்வது என்று தெரியவில்லை. தண்ணீர் பக்கெட்டுடன் வேகமாக வந்த கூர்க்காவிடம் எரிந்து விழ முயன்றார். ஆனால் இருமல் எதையும் சொல்ல விடவில்லை. ஏற்கெனவே வயிற்றில் இருந்த எரிச்சல், இந்தக் காரப்புகையுடன் சேர்ந்து வயிற்றின் உள்ளே அமிலம் இறங்கியது போல் அவருக்கும், சுகுமாரனுக்கும் எரிந்தது.   அங்கே இருவராலும் நிற்க முடியவில்லை.

 

பாண்டியன் கூர்க்காவிடம்காரை நன்றாகப் பார்த்துக் கொள்என்று சைகையால் சொல்லி விட்டு சுகுமாரனின் வீட்டுக்குள் விரைந்தார். சுகுமாரனும் அங்கிருந்து தப்பித்தால் போதும்  என்று சலித்தவராய் அவரைப் பின் தொடர்ந்தார். டாமியும் அவர்களைப் பின் தொடர்ந்தது.    

 

கூர்க்கா அவர்களைத் திகைப்புடன் பார்த்தபடி நின்றான். ‘மந்திரவாதி தோட்டத்தில் எதோ எரிந்து கொண்டிருப்பதாய் சொல்கிறான். போய்ப் பார்த்தால் அங்கே எதுவும் எரியவில்லை. மந்திரவாதியின் காரிலேயே தான் தீ எரிந்து கொண்டிருக்கிறது.  அது மந்திரவாதிக்கே தெரியவில்லை. மந்திரவாதியையே திண்டாட வைப்பது ஆவியா, பேயா என்று தெரியவில்லை. சரியாகச் சொன்னால் அவனுக்கு அந்த இரண்டுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் இப்போதும் கூடத் தெரியாது. அது எதுவானாலும் சரி, அது தன் வேலைகளை ஆரம்பித்திருக்கும் இந்த வீட்டில் இனியும் பாதுகாப்பாய் வேலை செய்ய முடியுமா?’ அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

வீட்டுக்குள் சென்ற சுகுமாரனும், பாண்டியனும் தண்ணீர் குடித்து  ஓரளவு வயிற்றின் எரிச்சலைக் குறைத்தார்கள். ஆனாலும் இருவரும் நிதானத்திற்கு வரச் சிறிது நேரமாகியது. சுகுமாரன் பாண்டியன் கண்களை மூடி அமைதியாக யோசிப்பதைப் பார்த்து தான் அமைதியானார். அவர் மட்டுமே இருந்திருந்தால், நேற்று போல் இன்றும் வீட்டை விட்டு ஓடியிருப்பார்.

 

என்ன யோசிக்கிறீங்க?” என்று  சுகுமாரன் பாண்டியனைக் கேட்டார்.

 

உங்க இந்த கூர்க்கா எவ்வளவு காலமாய் உங்க கிட்டே வேலை பார்க்கிறான்?”

 

பாண்டியன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்று சுகுமாரனுக்கு விளங்கவில்லை. “அஞ்சு வர்ஷமாய் வேலை பார்க்கறான். ஏன் கேட்கறீங்க?”

 

ஆவி மட்டுமல்ல, உங்க கூர்க்கா கூட சந்தேகத்தைக் கிளப்பறான்…”

 

எப்படி?”

 

நேத்தும் காவித்துணி எரிஞ்சதை முதல்ல பார்த்தவன் அவன் தான். இன்னைக்கும் காருக்குள்ளே எதோ எரியுதுன்னு பார்த்து சொன்னவன் அவன் தான். அவனே ஏன் இந்தக் காரியத்தை செஞ்சிருக்கக்கூடாது? செஞ்சுட்டு தன்னை யோக்கியன் மாதிரி ஏன் காட்டியிருந்திருக்கக்கூடாது?  அவனுக்குச் செய்ய வாய்ப்பு அதிகம் தானே?”

 

அவன் அப்படி ஏன் செய்யணும்? அவனுக்கு இதுல என்ன லாபம்?” சுகுமாரன் திகைப்புடன் கேட்டார்.

 

அவனுக்கு ஏதாவது லாபம் இருந்தால்…? யாராவது அவனுக்குப் பணம் தந்து இப்படிச் செய்யச் சொல்லியிருந்தால்? அப்படியும் இல்லாட்டி யாராவது அப்படி செய்யறதைக் கண்டுக்காம இருக்க அவன் காசு வாங்கியிருக்கலாம்…”

 

சுகுமாரனுக்குத் தலைசுற்றியது. அவர் சொன்னார். “அப்படின்னா நமக்கு சைத்ரா தெரிஞ்சதையும், அவ பிணம் எரியற மாதிரி தெரிஞ்சதையும் எப்படி எடுத்துக்கறது? அதுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்க வழியில்லையே? அதுமட்டுமில்ல. எனக்கு அந்த காரப் புகையும் சுவாசிச்சு இப்ப வயிற்றுல புண்ணே ஆயிடுச்சு. நீங்களும் இருமினீங்க. ஆனா அவன் கொஞ்சம் கூட இருமலை. நடக்கறது எல்லாமே நமக்கு தான் எதிராயிருக்கு. ஆனால் இது அத்தனையும் அவன் செஞ்சிருக்க முடியாதே…”

 

பாண்டியனுக்கு அவர் சொல்வதை மறுக்க முடியவில்லை. அவருக்கும் வயிறு புண்ணாகி விட்டது போல் தான் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு ஆட்கள் யாரையாவது இதற்கு காரணமாகச் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அப்படியானால் தான் எதாவது நடவடிக்கை எடுத்து இனிமேல் எதுவும் ஆகாமல் தற்காத்துக் கொள்ள முடியும். திருப்பி எதாவது பதிலடி தர முடியும். அவர்களுக்கு எதிராக விளையாடுவது அமானுஷ்ய சக்திகளாக இருந்தால் என்ன செய்வது? பதிலடி தர சக்தியற்றவராக இருப்பதை மட்டும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  எதையாவது செய்தேயாக வேண்டும். இதில் உள்ள மனிதப் பின்னணியைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். மனிதப் பின்னணி இல்லாமல் இது நடக்கிறது என்பதை அவருடைய பகுத்தறிவு ஏற்றுக் கொள்ள மறுத்தது.

 

பாண்டியன் கேட்டார். “ஏன் உங்க வீட்டுல நீங்க சிசிடிவி காமிரா வைக்கல?”

 

சுகுமாரன் சொன்னார். “எத்தனையோ முக்கியமான ஆள்க இங்கே ரகசியமாய் வர்றாங்க. அதெல்லாம் ரிகார்டாக வேண்டாம்னு தான் வெச்சுக்கல. மத்தபடி காவலுக்கு பகல்லயும், ராத்திரியும் கூர்க்கா ரெண்டு பேர் இருக்காங்க. டாமியும் காவலுக்கு இருக்கான். அப்படி இருக்கறதால சிசிடிவி காமிராக்கு அவசியம் இல்லைன்னு விட்டுட்டேன்…”

 

பக்கத்து வீடுகள், எதிர் வீடுல?”

 

வலது பக்கத்து வீட்டுல இருக்கு. இந்தப் பக்கத்து வீட்டுலயும், எதிர் வீட்டுலயும் கிடையாது. வலது பக்கத்து வீட்டுலயும் தெருவைப் பாக்கற மாதிரி தான் காமிரா இருக்கு. ஏன்னா, அவங்க காமிரா மூலமாவும் நம்ம வீட்டுக்கு வர்ற ஆள்கள் தெரிய வேண்டாம்னு, அவங்க அதை வைக்கறப்பவே நான் கவனமாய் இருந்து தடுத்தேன்….”


 (தொடரும்)

என்.கணேசன்









Thursday, July 25, 2024

சாணக்கியன் 119


விஜயன் சாரங்கராவிடம் சொன்னான். “ஆச்சாரியர் இங்கே இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருக்கலாம்”

 

“எதைக் கேட்டிருக்கலாம்”

 

“நமக்கு உறக்கம் வராதது பற்றி. இத்தனை அதிகமான செல்வம் பார்த்து நமக்குப் பழக்கப்படாததால் இதை வைத்துக் கொண்டு நம்மால் உறங்க முடியவில்லையா? இந்த அளவு செல்வம் வைத்திருந்தால் யாருக்குமே உறக்கம் வராதா? என்று கேட்டிருக்கலாம்.”

 

சாரங்கராவ் புன்னகைத்தான். “தனநந்தன் எப்படி தினமும் தூங்குகிறானோ தெரியவில்லை. அதுவும் இத்தனை செல்வமும் அவனுக்குத் தொலை தூரத்தில் இருக்கையில் திருடப்பட்டு விடலாம் என்ற பயம் இல்லாமல் எப்படி நிம்மதியாக இருக்கிறானோ?”

 

“இந்தப் புதையல் குறித்துத் தெரிந்தவர்களை எல்லாம் கொன்று விட்டோம், இதைப் பற்றித் தெரிந்தவர்கள் யாருமில்லை என்ற நினைப்பில் நிம்மதியாக அவன் இருக்கிறான் என்று நினைக்கிறேன். முன்பாவது யாராவது ஏதோ ஒரு காரணத்தால் தோண்டித் தெரிந்து கொண்டால் என்ற பயம் இருந்திருக்கும். பிறகு அதன் மேல் ஒரு கட்டிடமும் கட்டி அந்தக் கட்டிடப் பணியாளர்களையும் கொன்று விட்ட பின் கவலையை விட்டிருப்பான். ஆச்சாரியர் சிறுவராக இருந்த போதே பார்த்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியவில்லை பாவம்.... ஆனால் ஆச்சாரியர் போன்ற அழுத்தமான ஆசாமியை நான் பார்த்ததில்லை. இத்தனை காலம் அதைப் பற்றி யாரிடமும் வாயைத் திறக்காமல் இருந்திருக்கிறார் என்றால் பாரேன். நீயோ நானோ அவர் நிலையில் இருந்திருந்தால் ”உன்னிடம் மட்டும் சொல்கிறேன்” என்று சொல்லியே ஒருசிலரிடமாவது சொல்லியிருப்போம்”

 

விஜயன் சொல்வது உண்மையென்றே சாரங்கராவுக்கும் தோன்றியது. ஆச்சாரியருக்கு இணையாக இன்னொரு மனிதனை அவர்கள் பார்க்கப் போவதேயில்லை. சாரங்கராவ் புன்னகையுடன் சொன்னான். “ஜீவசித்திக்கு தனநந்தன் இந்தப் புதையல் திருட்டுப் போனதை அறியும் சமயத்தில் அருகில் இருந்து அவன் அதிர்ச்சியையும், ஆர்ப்பாட்டத்தையும் பார்க்க ஆசையாம்.”

 

விஜயன் சொன்னான். “முதலில் நாம் இந்தப் புதையலோடு இங்கிருந்து தப்பித்துப் போவோம். பிறகு அந்த ஆசையெல்லாம் வைத்துக் கொள்வது நல்லது. எனக்கு உள்ளூர இப்போதும் நடுக்கமாகத் தான் இருக்கிறது. பாடலிபுத்திரத்தைக் கடப்பது மட்டும் பிரச்சினை அல்ல. இந்தச் செல்வத்தைக் கொண்டு போய் ஆச்சாரியரிடம் சேர்க்கும் வரை பிரச்சினை எந்த திசையில் இருந்தும் வரலாம்.”

 

சாரங்கராவ் சொன்னான். “நன்றாக கடவுளைப் பிரார்த்தித்துக் கொள். உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதல்லவா?”

 

விஜயன் தன் மனதை மறைக்காமல் சொன்னான். “கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. ஆனால் நாம் வேண்டிக் கொண்டால் அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்று நம்பி நிம்மதியாக இருக்க முடியவில்லை. தனந்தந்தனும் நிறைய கடவுள் நம்பிக்கை இருப்பவன் தான். அவனும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பான்.”

 

சாரங்கராவ் தைரியமளித்தான். “கடவுள் எப்போதும் தர்மத்தின் பக்கமும் , நல்லவர் பக்கமும் தான் இருப்பார். பயப்படாதே”

 

விஜயன் யோசனையுடன் சொன்னான். “ஆனால் அவர் தர்மத்தையும், நல்லவர்களையும் காப்பாற்ற கடைசி கணத்தில் தான் வருகிறார். அது வரை வேடிக்கை பார்க்கும் கெட்ட பழக்கம் அவரிடம் இருக்கிறது”

 

சாரங்கராவ் வாய் விட்டுச் சிரித்தான். விஜயன் சிரிக்காமல் தன் சிந்தனையைத் தொடர்ந்து சொன்னான். “சிரிக்காதே. நீயே நன்றாக யோசித்துப் பார். நம் ஆச்சாரியர் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்திருந்தாலும், எல்லாவற்றையும் ஆழமாய் அலசிப் பேசியிருந்தாலும் கடவுளைப் பற்றியோ, கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ அதிகம் பேசியதே இல்லை. பாரதம், கர்மம், தர்மம், தத்துவம் பற்றியெல்லாம் நிறைய சொல்லித் தந்திருக்கும் ஆச்சாரியர் கடவுள் பற்றி மட்டும் அதிகம் சொன்னது கிடையாதல்லவா? அது ஏன்?”

 

“உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் நானும் நாத்திகனாகி விடுவேன் என்று எனக்கே பயமாக இருக்கிறது. ஆச்சாரியர் சொல்வது போல உன் அறிவு வேண்டாத விஷயங்களில் ஆழமாக வேலை செய்கிறது.” என்று சொல்லியபடி சாரங்கராவ் வேகமாய் எழுந்தான்.

 

விஜயன் கேட்டான். “நான் ஏதாவது தவறுதலாகச் சொல்லி விட்டேனா?”

 

“விடிந்து விட்டது. புனித கங்கைக் கரையில் இருக்கிறோம். எழுந்து நீராடி, முடிந்தால் பிரார்த்தனை செய். பிரார்த்தனை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. பேசாதே” என்று கண்டிப்பான குரலில் சொல்லி விட்டு சாரங்கராவ் கங்கையில் குளிக்கப் போனான்.

 

விஜயன் சற்று தள்ளிப் படுத்திருந்த வீரனிடம் சொன்னான். “நான் என்ன சொல்லி விட்டேன் என்று இவன் கோபித்துக் கொண்டு போகிறான் என்று தெரியவில்லை”

 

அந்த வீரன் வேகமாக எழுந்து “என்னை விட்டு விடுங்கள் நண்பரே” என்று சிரித்துக் கொண்டே சொல்லியபடி கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

 

விஜயன் முணுமுணுத்தான். “உண்மை யாருக்கும் கேட்கப் பிடிப்பதில்லை. எனக்கோ உண்மையைப் பேசாமல் இருக்க முடிவதில்லை” பின் மெல்ல எழுந்து குளிக்கப் போனான்.

 

சாரங்கராவ் சந்தியாவந்தனம் செய்து விட்டு ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். அவன் கிருஷ்ண பக்தன். இங்கிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய் விடவேண்டும். வழியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் இந்தச் செல்வத்தை ஆச்சாரியரிடம் சேர்த்து விட வேண்டும் என்று மனமுருக அவன் பிரார்த்தித்தான்.  எல்லாம் முடிந்து விட்டுத் திரும்பிய போது விஜயன் அப்போது தான் குளித்து முடித்திருப்பது தெரிந்தது. சாரங்கராவ் அவன் கடவுளைப் பிரார்த்திக்கிறானா என்று ஓரக் கண்ணால் பார்த்தான்.

 

விஜயன் ஒரு கணம் இரு கைகளையும் உயர்த்திக் கூப்பினான். அவ்வளவு தான். பின் அவன் கரையேறினான். அந்தக் கும்பிடு கடவுளுக்கா, கங்கைக்கா, எதிரே உதித்துக் கொண்டிருக்கும் சூரியனுக்கா என்று தெரியவில்லை. ஆச்சாரியர் இருந்திருந்தால் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் அவருக்கு அதை யூகிக்க முடிந்திருக்கும்.

 

சிறிது நேரத்தில் கூடாரத்தைக் கழற்றி விட்டு சாரங்கராவ் தன் பயண வண்டியிலும், விஜயனும், வீரனும் புதையல் பெட்டிகளை ஏற்றியிருந்த தங்கள் வண்டியிலும் ஏறிப் பயணத்தை ஆரம்பித்தார்கள். முன்னால் விஜயன் வண்டி போக பின்னால் சாரங்கராவ் தன் வண்டியில் போனான். போகும் வழியில் பாடலிபுத்திரத்துக் காவலர்கள் எதிர்ப்பட்டார்கள். சில காவலர்கள் விஜயனைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். இரண்டே நாட்களில் விஜயன் பிரபலமாகி விட்டான் என்று சாரங்கராவ் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். விஜயனும் நீண்ட நாட்கள் பழகியவன் போல அந்த வீர்ர்களைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தான்.

 

பெரும்பாலும் ஒரு நகருக்குள் நுழையும் போது இருக்கும் சோதனைகள் அங்கிருந்து செல்லும் போது இருப்பதில்லை. நகருக்குள் நுழையும் போது அங்கு ஆபத்தை விளைவிக்க முடிந்த எதிரிகளா, அந்த உத்தேசத்தோடு ஆயுதங்கள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறார்களா என்று சந்தேகப்படும் ஆட்களை நகரக் காவலர்கள் சோதித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் வந்தவர்கள் திரும்பிச் செல்லும் போது அந்த வகைப் பயங்களுக்கு அவசியம் இருப்பதில்லை என்பதால் மிக அபூர்வமாக சந்தேகத்தை ஏதாவது வகையில் எழுப்பினால் ஒழிய சோதனைக்குட்படுத்துவதில்லை.

 

இருந்த போதிலும் பாடலிபுத்திரத்தின் நகரவாயிலை நெருங்கும் போது சாரங்கராவும், விஜயனும், வீரனும் தங்களுக்குள் பதற்றத்தை உணர ஆரம்பித்தார்கள். அதற்கேற்றாற்போல் சற்று தூரத்தில் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த  நகரக் காவல் அதிகாரி அவர்களை நோக்கி குதிரையில் முன்னால் வர ஆரம்பித்தான்.

 

சாரங்கராவின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போனது. கிருஷ்ணா… கிருஷ்ணா… என்று மனம் சொல்ல ஆரம்பித்தது. விஜயனும் உள்ளூர நடுங்கினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நட்புடனே புன்னகைத்தபடி சத்தமாகச் சொன்னான். “வணக்கம் ஐயா”

 

நகரக் காவல் அதிகாரி விஜயனின் வண்டியருகே வந்தவுடன் புன்னகையுடன் கேட்டான். “என்ன வணிகரே. பாடலிபுத்திரத்தில் உங்கள் வியாபாரம் நன்றாக நடந்ததா”

 

விஜயன் நிம்மதியடைந்தான். சந்தேகத்தோடு இந்த ஆள் வரவில்லை. விஜயன் சொன்னான். “சொல்லுமளவுக்கு சிறப்பாக வியாபாரம் நடக்கவில்லை ஐயா.     முதல் முயற்சி வெற்றிகரமாக முடியாத போது பின் அங்கு தொடர்பவையும் மந்தமாகவே நடக்கின்றன என்பது எனதனுபவம்.”

 

நகரக் காவல் அதிகாரி வாய்விட்டுச் சிரித்தான். இப்போதும் ராக்‌ஷசர் முன் எல்லாப் பெட்டிகளையும் திறந்து காட்டி மலிவு விலையில் அவனிடம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இந்த வணிகன் அவரிடம் விற்பனை செய்ய முயன்ற காட்சி அவன் கண்முன் விரிந்தது.   

 

விஜயன் சொன்னான். “சரி ஐயா. விடைபெறுகிறேன். அடுத்தது கலிங்கம் செல்லவிருக்கிறோம். அங்காவது வியாபாரம் சிறப்பாக நடக்கும் என்று நான் நம்புகிறேன். பார்ப்போம்”

 

நகரக் காவல் அதிகாரி புன்னகையுடன் தலையசைத்தான். இ

ரு வண்டிகளும் நகரவாயிலைக் கடக்க ஆரம்பித்தன.

 

(தொடரும்)

என்.கணேசன்



Wednesday, July 24, 2024

முந்தைய சிந்தனைகள் 106

 என் நூல்களில் இருந்து சில சிந்தனைத் துளி அட்டைகள்...











Monday, July 22, 2024

யோகி 59

பாண்டியன் சொன்னார். “உங்க நாய் குரைக்கறதை நிறுத்த முடியுமா? சத்தம் கேட்டே தலை வலிக்குது.”

 

சுகுமாரனுக்கும் தலை வலிப்பது போல் இருந்ததால் அவர் தனதறைக்குப் போய் ஜன்னல் வழியே டாமியை அழைத்துச் சொல்லலாம் என்று எண்ணிப் போனார். அவர் பின்னாலேயே பாண்டியனும் போனார். ஜன்னல் வழியாக வெளியே தோட்டத்தைப் பார்த்த போது சுகுமாரனின் ரத்தம் உறைந்தது. தோட்டத்தில் காவியுடை உடுத்திய ஒரு சடலம் எரிந்து கொண்டிருந்தது. இது என்ன புதிதாய்?

 

சுகுமாரன் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்து விட்டுத் திரும்பி பாண்டியனைப் பார்த்து அதைத் தெரிவிக்க நினைத்தார். ஆனால் அவர் நாக்கு நகர மறுத்தது. அவர் ஊமை போல கையை ஜன்னல் பக்கம் காட்டினார்.

 

ஆனால் பாண்டியனின் பார்வை அவர் மேல் இல்லை. அவர் பார்வை, சுகுமாரன் வாங்கி வந்திருந்த மயான காளியின் படத்தின் மீது இருந்தது. கடவுள் நம்பிக்கை கடுகளவும் இல்லாத பாண்டியன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். அப்படியே தப்பித் தவறி கடவுள் இருந்தாலும், அந்தக் கடவுளுக்கு மனிதர்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உதவ முடியும் என்றோ, தீர்ப்பு எழுத முடியும் என்றோ அவரால் நம்ப முடியவில்லை. கோடானு கோடி உயிரினங்கள் இருக்கையில் அதில் ஒன்றான மனித குலத்திலும் கோடானு கோடி எண்ணிக்கை இருக்க, அதில் ஒவ்வொரு மனிதனும் தன் குறுகிய வாழ்நாளில் கோடானு கோடி செயல்கள் செய்து கொண்டேயிருக்க, ஆண்டவனுக்கே கூட, அத்தனையையும் கவனிக்க முடியுமா? இல்லை, கணக்கு வைத்துக் கொள்ளத் தான் முடியுமா? அப்படிக் கணக்கு எழுதித் தீர்ப்பு எழுத முயற்சித்தால், அந்தக் கடவுளுக்கு வேறு எதாவது வேலை செய்ய முடியுமா? எழுத ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அந்தக் கடவுளுக்குப் பைத்தியம் பிடித்து விடாதா?

 

இந்த ஆள் ஏற்கெனவே இந்தக் காளியின் பக்தரா, இல்லை, அந்த ஆவி தெரிந்த பின் இந்தக் காளியின் பக்தன் ஆனாரா?’ என்று பாண்டியன் தனக்குள் கேட்டுக் கொண்டார். அந்தக் காளியின் தோற்றமே அதிபயங்கரமாய் இருப்பதாய் பாண்டியனுக்குப் பட்டது. அவர் பார்வையைத் திருப்பி, சுகுமாரனைப் பார்த்த போது அவர் ஜன்னல் பக்கம் கைகாட்டி ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார். ‘இந்த ஆளுக்கு என்ன ஆச்சு? ஏன் ஊமை மாதிரி சைகைல எதோ சொல்றார்?’ என்று எண்ணியபடி பாண்டியன் கேட்டார். “என்ன ஆச்சு? என்ன சொல்ல வர்றீங்க?”

 

சுகுமாரன் ஜன்னல் பக்கத்திலிருந்து விலகிநீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்என்று சைகை மூலம் சொன்னார்.

 

பாண்டியன் ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவர் கண்ணிலும் காவியுடை உடுத்திய சடலம் எரிந்து கொண்டிருப்பது பட்டது. அவரும் திகைத்தார்.

 

நேற்று வெறும் காவித் துணி எரிந்தது. இன்று காவித்துணியுடன் ஒரு சடலமும் எரிந்து கொண்டிருக்கிறது. அது எப்படி தோட்டத்திற்குள் வந்தது?’

 

பாண்டியன் ஒரு கணம் சிலையாக நின்று, மறுகணம் சுதாரித்துக் கொண்டு,  பொறுமையிழந்து சுகுமாரனிடம் சொன்னார். “முதல்ல உங்க நாய் வாயை மூடுங்க டாக்டர். இருக்கற பிரச்சன போதலையா? அது கத்தி என்ன ஆகப் போகுது?”

 

அதற்காகத் தான் வந்தேன். ஆனால் பேச்சு வர மாட்டேன்கிறதே என்ன செய்யஎன்று சொல்ல நினைத்தும் அதைச் சொல்ல முடியாமல் சுகுமாரன், அதையும் சைகை மூலம் சொல்ல முயற்சிக்க பாண்டியன் பொறுமை இழந்தார். ‘இனி இந்த ஆளை நம்பிப் பிரயோஜனம் இல்லைஎன்று கோபத்துடன் எண்ணியவராய் வேகமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

 

நல்ல வேளையாக இப்போது வெளியே ஆவி தெரியவில்லை. பாண்டியன் சற்று நிம்மதி அடைந்தார். ஆனால் கேட்டிற்கு வெளியே நின்றிருந்த கூர்க்கா ஒட்டகம் போல் தலையை நீட்டி உள்ளே என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் பாண்டியனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவருக்கு மட்டுமல்லாமல் அவரைப் பின் தொடர்ந்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே வந்த சுகுமாரனுக்கும் அவனைப் பார்த்துக் கோபம் தான் வந்தது.  நேற்று காவியுடை எரிந்த போதாவது ஓடிப் போய் அதை அணைக்க முயற்சி செய்த கூர்க்கா இப்போது வேடிக்கை பார்க்கிறானே?

 

பாண்டியன் கூர்க்காவிடம் கடுமையான குரலில் கேட்டார். “இங்கே என்ன வேடிக்கை? யார் இதைச் செஞ்சது?”

 

கூர்க்காவுக்கு அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. இந்த மந்திரவாதியும், அவர் பின்னால் நிற்கும் முதலாளியும் ஏன் இப்படி கோபப் பார்வை பார்க்கிறார்கள் என்பது புரியாமல் அவன் திகைப்புடன் கேட்டான். “யார் எதைச் செஞ்சாங்க ஐயா?”

 

பாண்டியன் தோட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை கை காட்டினார். அவன் அங்கே குரைத்துக் கொண்டிருக்கும் நாயை மட்டும் தான் பார்த்தான்.அது அப்ப இருந்தே குரைச்சுகிட்டு தான் இருக்குங்க ஐயா.”

 

பாண்டியனுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. ”தோட்டத்துல எரிஞ்சுகிட்டு இருக்கே அது எப்படின்னு கேட்டேன்?”

 

கூர்க்கா பதற்றத்துடன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான். ”எங்கே எரியுது?’’ அவன் தோட்டத்திற்கு ஓடிச் சென்று சுற்றும் முற்றும் பார்த்த போது அவன் கண்களுக்கு, அந்தச் சடலம் எரிவது தெரியவில்லை என்பது பாண்டியனுக்கும், சுகுமாரனுக்கும் புரிந்தது. ஆவி தெரிவது போல் இதுவும், அவர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் ஒரு காட்சி தானா?  

 

பாண்டியன் திகைப்புடன், சடலம் எரிவது போல் மிகத் தத்ரூபமாய்த் தெரிந்த அந்தக் காட்சியைக் கூர்ந்து பார்த்தார்.  சுகுமாரனுக்குச் சற்றுத் தாமதமாகத் தான் அந்த உண்மை புரிந்தது. மருத்துவ விஷயங்களிலும், மற்றபடி அவர் சமாளிக்கும் விவகாரங்களிலும் அனாயாசமாக வேலை செய்யும் மூளை, ஏனோ இது போன்ற விஷயங்களில் வேகமாக வேலை செய்ய மறுத்தது.

 

பாண்டியன் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாரேயொழிய, சைத்ராவின் உருவத்தைப் பார்த்துக் கல்லெறிந்த வேலையை இப்போது செய்யத் துணியவில்லை. டாமி முதலாளியைப் பார்த்ததும், குரைத்துக் கொண்டே ஓடி வர, சுகுமாரன் தட்டிக் கொடுத்து சைகையால் பேசமாலிரு என்றார். நல்ல வேளையாக டாமி குரைப்பதற்கு ஓய்வு கொடுத்து அமைதியாகியது.

 

கூர்க்கா திரும்ப வந்து மெல்லக் கேட்டான். “எங்கே எரியுதுன்னு சொன்னீங்க ஐயா?”

 

பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பைத்தியம் பிடிக்காமல் இங்கிருந்து போக முடியுமா என்ற யோசனையுடன்சரி போஎன்று அவரும் கூர்க்காவிடம் சைகை காட்டினார்.

 

அவரும் சைகை காட்டிப் பேசுவதைப் பார்த்த சுகுமாரனுக்கோ, பாண்டியனுக்கும் பேச்சு வரவில்லையோ என்ற சந்தேகம் வந்து விட்டது. அவர் சைகையில் கேட்டார். “என்ன உங்களுக்கும் பேச்சு வரமாட்டேன்கிறதா?”

 

பாண்டியனுக்கு, அவருக்குப் பதில் சொல்லுமளவு பொறுமை இருக்கவில்லை. ஒரு புறம் வில்லங்கமாய் தெரியும் விஷயம், இன்னொரு கோணத்தில் வேடிக்கையாகவும் இருக்கிறது. ஒன்றுமே சொல்லாமல் பெருமூச்சு விட்டபடி அவர் தோட்டத்தைப் பார்த்தார். இப்போது அங்கே எந்தக் காட்சியும் தெரியவில்லை. இது நல்ல அறிகுறியா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை. அடுத்தபடியாய் எங்கே என்ன புதிய பிரச்சினை உருவாகுமோ என்ற யோசனை அவருக்குள் எழுந்தது.

 

கூர்க்காவுக்கு அவர்கள் இருவர் செய்கைகளும் வினோதமாக இருந்தன. ஆனால் டாமி குரைப்பதை நிறுத்தியது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவன் வெளியே சென்று கேட்டைச் சாத்தினான்.  ஆனால் சாத்தியவன் அடுத்த கணமே பதறியபடி ஓடி வந்தான். “ஐயா தீ…. தீ….”

 

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, July 18, 2024

சாணக்கியன் 118

 

டிக்கட்டுகளில் இறங்கிச் செல்ல முடிந்த அளவு தோண்டி முடித்த பின் முதலில் சாரங்கராவ் தீப்பந்தத்துடன் இறங்கினான். உள்ளே பன்னிரண்டு மரப்பெட்டிகள் இருந்தன. பெட்டிகள் துணியால் மூடி கயிற்றால் கட்டப்பட்டிருந்தன.

 

சாரங்கராவ் அவர்களையும் அழைத்தான். “நீங்களும் வாருங்கள். இங்கேயும் நமக்கு வேலைகள் இருக்கின்றன

 

ஜீவசித்தியும், விஜயனும் படிகளில் இறங்கிச் சென்றார்கள். சாரங்கராவ் தன் இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியால் ஒரு மரப்பெட்டியின் கயிறை அறுத்தான். அவன் அந்தப் பெட்டியைச் சுற்றி வைத்திருந்த துணியை அகற்றி மரப்பெட்டியின் மேல்மூடியைத் திறந்த போது தீப்பந்த ஒளியில் பொற்காசுகள் மின்னின. 

 

விஜயன் பிரமிப்புடன் சொன்னான். “நான் இத்தனை பொற்காசுகளைச் சேர்ந்தாற் போல் பார்ப்பது இப்போது தான்.”

 

ஜீவசித்தியும், சாரங்கராவும் கூட அத்தனை பொற்காசுகளை இதுவரை தங்கள் கண்களால் பார்த்திருக்கவில்லை. மூவரும் ஒவ்வொரு கைப்பிடி பொற்காசுகளை எடுத்து தீப்பந்த ஒளியில் ஜொலிக்கும் வியப்பு குறையாமல் பார்த்தார்கள். பின் அந்தப் பெட்டியிலேயே அந்தப் பொற்காசுகளைப் போட்டு விட்டு மற்ற பெட்டிகளில் என்ன இருக்கின்றதென்று பார்த்தார்கள்.

 

பன்னிரண்டு மரப்பெட்டிகளில் ஐந்தில் தங்கக் காசுகளும், ஐந்தில் வெள்ளிக் காசுகளும், இரண்டில் ஆபரணங்களும் இருந்தன.

 

விஜயன் பிரமிப்புடன் சொன்னான். “தனநந்தன் தன் பெயருக்கேற்றபடி தாராளமாகவே சேர்த்து வைத்திருக்கிறான். இங்கேயே இத்தனை என்றால் அவன் கஜானாவில் எத்தனை இருக்கும்?”

 

சாரங்கராவ் சொன்னான். “அங்கும் அதிகமாகவே இருக்கும். எல்லாம் அநியாய வரிகள் விதித்து மக்களை வருத்தி அவன் சேர்த்திருக்கும் செல்வம். இவை அத்தனையிலும் மக்கள் கண்ணீரும் சேர்ந்தே இருக்கும்”

 

ஜீவசித்தி ஒன்றும் சொல்லவில்லை. அவன் உள்ளத்தில் ஆயிரம் குமுறல்கள் பொங்கி எழுந்தன. அந்தச் செல்வம் அவன் தந்தை போன்றோர் பலரின் உயிரையும் அல்லவா எடுத்திருக்கின்றது?

 

சாரங்கராவ் ஜீவசித்தியிடம் சொன்னான். “உங்களுடைய உதவியில்லாமல் இந்தப் புதையலை நாங்கள் அடைவது சாத்தியப்பட்டிருக்காது. அதனால் இதைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் உங்கள் விருப்பம் எவ்வளவோ அந்த அளவு தங்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி ஆச்சாரியர் சொல்லியிருக்கிறார் நண்பரே. நீங்கள் எடுத்தது போக மீதியை நாங்கள் கொண்டு போகிறோம்.”

 

ஜீவசித்தி சொன்னான். “இந்த சபிக்கப்பட்ட செல்வத்தில் என் தந்தையின் சாம்பலை நான் பார்க்கிறேன் நண்பா. இது ஆச்சாரியர் என்னிடம் சொன்னது போல மேலான நன்மைக்குப் பயன்படட்டும். எனக்கு அதுவே போதும்.”

 

சாரங்கராவ் ஜீவசித்தியின் பெருந்தன்மையால் மனம் நெகிழ்ந்தவனாக மிகுந்த மரியாதையுடனும் சொன்னான். “செல்வம் எப்பேர்ப்பட்டவரையும் சபலப்படுத்த வல்லது என்பார்கள். மிக உயர்வானவர்களாலேயே அது கிடைக்கும் போதும் மறுக்க முடியும். மகதம் தனநந்தனைப் போன்றவர்களை உருவாக்கி பொலிவிழந்த போதும் தங்களைப் போன்றோரைப் பெற்றெடுத்துப் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே”

 

ஜீவசித்தி சற்றே தலை தாழ்த்தி சொன்னான். “மகதம் ஆச்சாரியரைப் போன்ற மகத்தான மனிதரைப் பெற்றெடுத்து ஏற்கெனவே புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறது நண்பா. ஸ்ரீராமனுக்குப் பாலம் கட்ட அணில் செய்த சிறிய சேவை போல் நான் செய்திருக்கும் இந்த வேலையை உயர்த்திச் சொல்ல எதுவுமில்லை..... நாம் வேகமாக இவற்றைக் கொண்டு சென்று நம் பெட்டிகளில் நிரப்பி பெட்டிகளை இங்கேயே போட்டு விட வேண்டும். நமக்கு நேரம் அதிகம் இல்லை. விடியலுக்கு முன் நம் வேலையை முடித்துவிட வேண்டும்.”

 

அவன் சொன்னபடியே அவர்கள் வேகமாக இயங்கினார்கள். நால்வரும் மரப்பெட்டிகளை கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். நிலவொளியில் அப்படிக் கொண்டு செல்கின்ற போது ஒவ்வொரு கணமும் அவர்களுக்குப் பதற்றமாகவே இருந்தது. திடீரென்று யாராவது வந்து விடுவார்களோ என்ற பயத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு பெட்டியும் கனமாக இருந்ததால் ஒவ்வொருவரும் ஒரு பெட்டிக்கு மேல் சுமக்க முடியவில்லை. நால்வரும் மூன்று முறை வந்து கொண்டு போய் கூடாரத்தில் வைக்க வேண்டி இருந்தது.

 

கூடாரத்தில் இந்த மரப் பெட்டிகளிலிருந்து அவர்களது வணிகப் பெட்டிகளுக்கு பொற்காசுகளையும், வெள்ளிக்காசுகளையும், ஆபரணங்களையும் மாற்றினார்கள்.  அவர்களது பெட்டிகளில் அவற்றை முக்கால் பாகத்திற்கு மட்டுமே நிரப்பினார்கள். பின் மேற்பகுதியில் அவர்கள் கொண்டு வந்த வணிகப் பொருள்களை நிரப்பி வைக்கும் வேலையில் விஜயனும், அந்த வீரனும் ஈடுபட, ஜீவசித்தியும், சாரங்கராவும் காலி மரப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு யாகசாலைக்கு விரைந்தார்கள்.

 

அங்கே அந்த மரப்பெட்டிகளை கொண்டு வந்து அந்த பாதாள அறையில் போட்டு, தோண்டியதால் ஏற்பட்ட மண் குவியலையும் அதற்குள்ளேயே தள்ளி, யாகசாலையை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாதபடி பழைய தோற்றத்திலேயே இருக்கும்படி செய்வது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் சாரங்கராவ் மிகவும் நுட்பமாக அந்த வேலையைச் செய்தான். கடைசியில் வெளியிலிருந்து தெரியும் பெரிய யாக குண்டத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தை பழையபடி ஜோடிக்க அவனுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் லாவகமாக அதைச் செய்து முடித்து ஜீவசித்தியிடம் சொன்னான். “வெளியே இருந்து பாருங்கள் நண்பரே. ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் சொல்லுங்கள்”

 

ஜீவசித்தி சென்று வெளியேயிருந்து பார்க்கையில் எல்லாம் பழைய தோற்றத்தில் கச்சிதமாகவே இருந்தது. ”அபாரம் நண்பரே. பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்து பார்க்கிற வரை தெரியாது.”

 

அவர்கள் யாகசாலையைப் பூட்டி கொண்டு வெளியேறிய போது விடியலுக்குச் சிறிது நேரமே இருந்தது. ஜீவசித்தி சாரங்கராவிடம் சொன்னான். ”நான் விடிவதற்கு முன் வீடு போய் சேர்வது நல்லதென்று நினைக்கிறேன். விடைபெறுகிறேன் நண்பரே”

 

சாரங்கராவ் ஜீவசித்தியை நட்புடன் தழுவி விட்டு நெகிழ்ச்சியுடன் சொன்னான். “எங்களுக்கு மகத்தான உதவி செய்திருக்கிறீர்கள் நண்பரே. நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடித்து விட முடியா விட்டாலும் இப்போதைக்கு அதைத்தவிர எனக்குச் சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை”

 

ஜீவசித்தி சொன்னான். “ஒரு விதத்தில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நண்பா. என் தந்தையின் மரணத்திற்குக் காரணமாக இருந்த இந்த செல்வம் இங்கிருந்து போவது தான் நான் தனநந்தனுக்குத் தர முடிந்த தண்டனை. என்றாவது ஒரு நாள் அவன் இங்கு வந்து பார்க்கும் போது உடன் வந்திருந்து அவன் முகத்தைப் பார்க்கும் வாய்ப்புக்காக இனி நான் ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன். புதையல் பறி போன துக்கத்தில் அவன் துடிப்பதைப் பார்க்கும் போது என் தந்தையின் ஆத்மா சாந்தியடைந்த நம்பிக்கையும் சந்தோஷமும் நான் பெறுவேன். ஆச்சாரியர் சொன்னது போல் இந்தச் செல்வம் தனநந்தனின் வீழ்ச்சிக்கும் அவர் சொல்லும் பாரத ஒருங்கிணைப்புக்கும் பயன்படுமானால் அந்தப் பணியில் ஒரு சிறு அங்கமாக இருந்திருக்கிறோம் என்று நான் ஆத்மதிருப்தி அடைவேன். நீங்களும் பத்திரமாகச் செல்லுங்கள். எச்சரிக்கையுடனேயே இருங்கள். சென்று சேர்ந்த பின் எனக்குத் தகவல் அனுப்புங்கள். இனி நாம் மறுபடி எப்போது சந்திப்போம் நண்பா?”

 

“தெரியவில்லை நண்பரே. ஆனால் அதற்கு அதிக காலம் வேண்டி வராது என்று நினைக்கிறேன்.”

 

தலையசைத்து விட்டு குதிரையின் மீதேறிய ஜீவசித்தி உடனடியாக வீட்டின் பக்கம் செல்லாமல் நதியை நோக்கியே செல்ல சாரங்கராவ் அது ஏன் என்று புரியாமல் ஆச்சரியத்துடன் பார்த்தான். நதி விளிம்பில் நின்று கொண்டு ஜீவசித்தி யாகசாலையின் கள்ளச் சாவியைக் கையில் எடுத்து வேகமாக தூரத்திற்கு வீசினான். நீண்ட தூரம் சென்று அந்த சாவி நீரில் விழுந்து கங்கையின் ஆழத்திற்குச் சென்றது.

 

ஜீவசித்தி திரும்பி வேகமாக வீடு நோக்கிச் செல்ல சாரங்கராவ் தங்கள் கூடாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 

’இனி பாடலிபுத்திரத்தை விட்டு இந்தச் செல்வத்தோடு தப்பிக்கும் மிக முக்கியமான வேலை இருக்கிறது.’ என்று எண்ணியபடியே கூடாரத்தை அவன் அடைந்த போது விஜயனும், அந்த வீரனும் தங்கள் வேலையை அப்போது தான் முடித்திருந்தார்கள்.

 

விஜயன் சொன்னான். “சிறிது நேரமாவது தூங்குவோம். இனி நமக்கு நீண்ட பயணம் காத்திருக்கிறது”

 

மூவரும் உறங்க முயற்சித்தார்கள். ஆனால் தனநந்தனின் அளவற்ற செல்வத்தை அருகில் வைத்துக் கொண்டு அவர்களால் உறங்க முடியவில்லை. அதிக செல்வமும், ஆழ்ந்த உறக்கமும் சேர்ந்திருப்பது அரிதல்லவா?

 

(தொடரும்)

என்.கணேசன்