Thursday, February 29, 2024

சாணக்கியன் 98

 

சாணக்கியர் ஜீவசித்தியிடம் வந்து பேசுவதற்குச் சில காலம் முன்பிருந்தே அவனைப் பற்றி நிறைய விவரங்கள் சேர்த்திருந்தார். அவற்றை வைத்து அவனுடைய குணாதிசயங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தார். ஒரு சிலையைச் செதுக்கும் முன் அந்தச் சிலை செய்ய அந்தக் கல் தகுந்தது தானா என்று ஆராய்ந்து பார்த்த பின்பே சிலை செய்ய ஆரம்பிக்கும் சிற்பி போல அவனை ஆராய்ந்திருந்தார். அவன் மிகவும் திறமையானவன், நாணயமானவன், குடும்பத்தினரிடம் பாசமானவன் என்பது அவருக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவன் அவசர முடிவுகள் எடுப்பவன் அல்ல என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவனுடைய குணாதிசயங்களும், உத்தியோகமும் அவருடைய இலக்குக்கு மிகவும் உதவக்கூடியதாக இருந்தபடியால் தான் அவர் அவனிடம் பேச வந்திருந்தார்.   அவன் குடும்பத்தினர் வெளியூர் சென்று அவன் தனியாக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவனைச் சந்தித்துப் பேசுவது வசதியாக இருந்தது.  

 

அறிவாளிகளுக்குச் சந்தேகமும் அதிகமாக இருப்பது இயற்கை. அவர்கள் எந்தத் தீர்மானமும் எடுப்பதற்கு முன்பே அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு விடுவார்கள். ஒரு விஷயத்தை நம்பிய பிறகும், ஒரு காரியத்தில் இறங்கிய பிறகும் அவர்களுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்து கொண்டிருக்காது. முட்டாள் பிறகு யோசிக்க ஆரம்பிப்பதை அறிவாளி முதலிலேயே யோசித்து தெளிந்து விடுவான். அந்த வகையில் தனநந்தன் மீது கடுங்கோபமும் வெறுப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தாலும் மகதத்தை தனநந்தனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறதுஎன்று சாணக்கியர் சொன்னது நடக்கக்கூடிய எதிர்பார்ப்பாக அவனுக்குத் தோன்றவில்லை.  

 

அவன் சொன்னான். “நீங்கள் என்னிடம் வந்து இந்த உண்மையைத் தெரிவித்ததற்கு நன்றி அந்தணரே. ஆனால் உண்மையைத் தெரிந்து கொண்டும் மன்னனை எதிர்த்து என்னால் என்ன செய்ய முடியும்? குற்றவாளி வேறு யாராவது இருப்பின் மன்னனிடம் சென்று முறையிடலாம். மன்னனே குற்றவாளியானால் எங்கு சென்று முறையிடுவது? தாங்கள் மகதத்தை மன்னனிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதற்கான வலிமை இல்லாத நாம் இருவர் என்ன செய்து விட முடியும்?”

 

இது போன்ற காரியங்கள் தனிமனிதர்களால் சாத்தியமல்ல என்று நீ நினைக்கிறாய் ஜீவசித்தி. தனிமனிதர்கள் தனித்தனியாக முயற்சித்தால் கண்டிப்பாக அது சாத்தியமல்ல தான். ஆனால் நிறைய தனிமனிதர்கள் கூட்டாகச் சேர்ந்தால் அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் முடிந்ததைச் செய்தால் போதும். ஒரே நோக்கமுள்ள அனைவரும் அப்படிச் செய்வார்களேயானால் அவர்கள் உத்தேசிக்கும் காரியம் கண்டிப்பாக எளிதில் முடியும். வரலாறு அப்படித்தான் படைக்கப்படுகிறது. இந்த இலக்கோடு நிறைய பேர் இருக்கிறோம். நீயும் எங்களுடன் சேர்ந்து கொள்கிறாயா?”

 

ஜீவசித்தி எச்சரிக்கையுடன் சொன்னான். “இப்போது வீட்டில் நான் தனியாக இருந்தாலும் எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது அந்தணரே. அவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியம்.. தந்தை இழந்து பல கஷ்டங்கள் அனுபவித்த நான், மன்னருக்கு எதிராகப் போராடி இறந்து, அந்தக் கஷ்டங்களை என் பிள்ளைகளும் அனுபவிப்பதை விரும்பவில்லை.  என் தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி என் இரத்தத்தைக் கொதிக்க வைத்தாலும் என் குடும்பத்திற்காக நான் அவசர முடிவுகள் எடுக்க முடியாதவனாகவும், யோசிக்க வேண்டியவனாகவும் இருக்கிறேன்

 

ஜீவசித்தி! நான் உன்னைப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அழைக்கவில்லை. அதற்கு வேண்டுமான ஆட்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நீ இங்கேயே இருந்து எங்களுக்கு சில தகவல் உதவிகளும், வெளியே தெரியாதபடியான உதவிகளும் செய்தால் போதும். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” 

 

ஜீவசித்தி யோசித்தான். சாணக்கியர் அவன் என்ன யோசிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு சொன்னார். “இரகசியம் காப்பதில் வல்லவர்கள் நாங்கள். நாங்களும் சிக்கிக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு உதவியவர்களையும் சிக்க விட மாட்டோம்

 

நாங்கள் என்றும் நிறைய பேர் என்றும் பன்மையில் சொல்கிறீர்கள் அந்தணரே. உங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொண்டால் முடிவெடுக்க எனக்குச் சுலபமாக இருக்கும்

 

சாணக்கியர் ஜீவசித்தியைச் சந்திக்கச் சென்றது அலெக்ஸாண்டர் பாரதத்திலிருந்து சென்ற பின்பு யவனர்களுக்கு எதிராக சாணக்கியர் படைகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலம். தாக்குதலுக்கான திட்டங்கள் தயாராகிக் கொண்டிருந்தனவே ஒழிய இன்னமும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கவில்லை. அது நூறு சதவீதம் வெற்றியில் முடியும் என்று நம்பியிருந்த சாணக்கியர் அதற்கு முன் அடுத்த இலக்குக்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய வேண்டி தான் ஜீவசித்தியைக் காண வந்திருந்தார்.

 

அவர் தங்களைப் பற்றி அவனிடம் சுருக்கமாகச் சொன்னார். ஜீவசித்தி அவர் சொன்னதைக் கேட்டு பிரமித்தான். தனநந்தனிடம் தைரியமாகச் சபதமிட்டுப் போன இந்த அந்தணர் வெற்று மனிதரல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. அவர் பேச்சிலும், சிந்தனைகளிலும் உணர்ச்சிப் பிரவாகங்கள் இருக்கவில்லை. மாறாகத் தெளிவும், நிதானமும், ஆழமான புரிதலும் இருந்தன. அவரிடம் வெறும் பழிவாங்கும் உணர்வை விட அதிகமாக ஒருங்கிணைந்த பாரதத்தை யவனர்கள் போன்ற அன்னியர்களிடமிருந்தும், தனநந்தன் போன்ற கொடுங்கோலர்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வு வெளிப்பட்டது.  ஜீவசித்தி அது வரை மகதம் தான் தன் தாயகம் என்று நினைத்திருந்தான். அதையும் தாண்டிய தேசபக்தியை அவர் உணர்வு பூர்வமாகப் பேசினார்.  அவர் மீது அவனுக்கு பெரும் மரியாதையும்,  முழு நம்பிக்கையும் பிறந்தன.   

 

அவன் அவரிடம் உறுதியாகச் சொன்னான். “அந்தணரே, உங்களுடன் இணைவதில் நான் பெருமைப் படுகிறேன். என்னால் என்ன ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்

 

அவர் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு என்ன விதமான உதவிகள், தகவல்கள் இப்போதைக்குத் தங்களுக்குத் தேவைப்படுகின்றன என்று அவனுக்கு விளக்கினார். அத்தனையும் செய்வதாய் அவன் வாக்களித்தான்.

 

பின் அவன் தன் மனதில் விடை கிடைக்காத அந்தக் கேள்வியைக் கேட்டான். “அந்தப் பெட்டிகளில் என்ன இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் அந்தணரே?”

 

சாணக்கியர் சொன்னார். ”பொன்னும், செல்வமும் இருக்கக்கூடும். புதைக்க தனநந்தனுக்குப் பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் புதைத்த ஆட்கள் அதை நினைவில் வைத்திருப்பது எதிர்காலத்தில் ஆபத்தை விளைவிக்கலாம் என்று பயந்து அவர்களைக் கொன்றிருக்கலாம் என்பது என் அனுமானம்

 

ஜீவசித்தி கேட்டான் அதை கங்கைக் கரையில் புதைத்து வைக்கும் அவசியம் தனநந்தனுக்கு என்ன இருக்கிறது? கஜானாவில் இடமில்லையா? அப்படியே கஜானாவுக்கு வெளியே எங்காவது புதைத்து வைக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தாலும் அதை அந்தப்புரத்திலோ, அரண்மனைக்குள் எங்காவது இரகசிய இடத்திலோ கூடப் புதைத்து வைத்திருக்கலாமே

 

சாணக்கியர் சொன்னார்.  எனக்கும் அந்தச் சந்தேகம் வராமல் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால்  தனநந்தன் அங்கே புதைத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பதை தனநந்தன் மட்டுமே அறிவான். ஆனால் நடந்த சம்பவத்தை என் கண்களால் நான் பார்த்திருப்பதால் அந்தச் சம்பவம் நடந்திருப்பது மட்டும் உறுதி. அது மட்டுமல்ல தனநந்தனின் அந்தச் சாரதி ஆறே மாதங்களில் இன்னொரு விபத்தில் குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்து போனான் என்பது பல வருடங்கள் கழித்து எனக்குத் தெரிய வந்தது. ஆக இப்போது அந்தப் புதையலைப் பற்றி அறிந்தவன் தான் மட்டுமே என்ற நம்பிக்கையில் தனநந்தன் இருக்கிறான். விஷ்ணுகுப்தன் என்ற சிறுவனும் அதை அறிந்திருக்கிறான் என்ற சந்தேகம் அவனுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக அவன் என்னையும் கொல்ல முயற்சி செய்திருப்பான்.”

 

ஜீவசித்தியை தனநந்தனின் சாரதியும் இன்னொரு விபத்தில் இறந்து போனான் என்கிற செய்தி அதிர வைத்தது.  தனநந்தன் யோக்கியன் அல்ல என்பதை அவன் முன்பிருந்தே அறிவான். ஆனால் அவன் மனசாட்சி சிறிதும் இல்லாத இவ்வளவு பெரிய அயோக்கியனாய் இருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

 

ஜீவசித்தி கேட்டான். “இப்போதும் கங்கைக் கரையில் அந்தப் புதையல் இருக்கிறதா?”

 

அப்படித்தான் தோன்றுகிறது. தனநந்தனைப் பொருத்த வரை அவனைத் தவிர வேறு யாருக்குமே அந்தப் புதையல் பற்றித் தெரியாது. அதனால் அதை இடம் மாற்றும் அவசியம் அவனுக்கு இல்லை. எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. அந்தக் குழியில் கூடுதலாக வேறு பெட்டிகளும் தனநந்தன் பிற்காலத்தில் வைத்திருக்கலாம். அந்தச் சமயத்தில் வேறு விபத்துகளும் நடந்திருக்கலாம். விபத்துகள் எப்படி நடந்தன என்று எல்லோரும் குழம்புவார்களே ஒழிய யாரும் தனநந்தனைச் சந்தேகிக்க மாட்டார்கள்.”

 

அது எந்த இடம் அந்தணரே?”

 

சாணக்கியர் புன்னகையுடன் சொன்னார். “உன்னால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார். கண்டுபிடித்தாலும் யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தித் தெரியப்படுத்தி விடாமல் மனதிற்குள்ளேயே வைத்திரு. நான் நாம் செயல்பட வேண்டிய நேரம் வரும் போது தெரிவிக்கிறேன்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

 இன்னும் பத்து நாட்களில் வெளிவரவிருக்கிறது புதிய நாவல்!




 

Monday, February 26, 2024

யோகி 38


 ஷ்ரவனுடைய திகைப்பைப் பார்த்து திருப்தியடைந்த சிவசங்கரன் இகழ்ச்சியுடன் சொன்னார். ”நீ உட்கார்ந்திட்டிருக்கற நாற்காலில உட்கார்ந்து என் கிட்ட சந்தேகங்கள் கேட்டுட்டு இருந்தவன்ப்பா ப்ரேம் ஆனந்த். இங்கே அடிக்கடி வருவான். கும்பிடு போட்டு உட்கார்ந்துக்குவான். பல ஞானிகளோட பேர் கூட நான் சொல்லி தான் அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்டவன் நாலு வருஷம் முன்னாடி ஒரு பொது நிகழ்ச்சில பார்த்தப்ப என்னைத் தெரியாதவன் மாதிரி கடந்து போனான். காரணம் பழைய ப்ரேம் ஆனந்தோட சம்பந்தப்பட்டவன் நான். அந்தப் பழைய ப்ரேம் ஆனந்தாய் அவனை அடையாளம் காட்டற யாரையும் அவன் தனக்குத் தெரிஞ்ச ஆளாய் காட்டிக்கறதில்லைன்னு பிறகு தான் தெரிஞ்சுது. ரொம்ப அமைதியான ஆள் மாதிரியும், எதனாலயும் பாதிக்கப்படாத ஆள் மாதிரியும் தன்னைக் காட்டிக்கற அவன் அமைதியைக் குலைக்கணும்னா நீ பெருசா ஒன்னும் செய்துட வேண்டியதில்லை. அவனை ப்ரேம் ஆனந்த்னு கூப்பிட்டுப் பாரு போதும். அவனோட ஈகோ இப்ப எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சுன்னா, இப்ப எல்லாம் யோகிங்கற வார்த்தையைச் சேர்க்காம வெறும் பிரம்மானந்தான்னு கூப்பிட்டாலே கூட அவன் பொறுத்துக்கறது இல்லையாம்...”

 

ஷ்ரவன் புன்னகைத்தான். ஸ்ரீகாந்த் யோகி என்ற அடைமொழியைத் தவிர்த்து பிரம்மானந்தா என்று சொன்ன போது யோகாலயத்து துறவிகள் கூட அதை ரசிக்கவில்லை. அவனுக்குப் பதில் சொல்லும் போது அவர்கள் யோகி பிரம்மானந்தா என்று அழுத்திச் சொன்னது நினைவுக்கு வந்தது.

 

சிவசங்கரன் தொடர்ந்து ப்ரேம் ஆனந்தின் சில்லறைத்தனத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார். பலரிடமிருந்து கற்றதையும், அறிந்ததையும் கூட சொந்த ஞானோதயம் போல் சொல்வது தான் ப்ரேம் ஆனந்தின் வழக்கம் என்றும் சொன்னார். எல்லாம் ஷ்ரவன் அறிந்தது தான் என்றாலும் புதிதாய் அறிய நேர்ந்தது போல் அவன் திகைப்பைக் காட்டிச் சொன்னான். “மெய்ஞானமடைஞ்ச ஒருத்தர் இப்படி நடந்துக்கறது ஆச்சரியமாய் தான் இருக்கு

 

இதுல ஒரு ஆச்சரியமும் இல்லை. அவன் எப்படி நடந்துக்கறாங்கறது வெளிப்படையாய் தெரியற உண்மை. அப்படி நடந்துக்கறவன் மெய்ஞானம் அடைஞ்சவனாய் இருக்க முடியுமான்னு தான் நீ உன்னைக் கேட்டுக்கணும். உண்மையைப் புரிஞ்சுக்கணும். அறுவடையப் பார்த்தா விதைச்சது என்னன்னு தெரிஞ்சுடாதா என்ன? ஆனா நம்ம சமூகத்துல இருக்கிற மரமண்டைகளுக்கு இந்த எளிமையான புரிதல் கூட கிடையாது. அவனவன் பேசற பேச்சைக் கேட்டும், போடற டிராமாவையும் பார்த்தும் மயங்கிடுவாங்க. அரசியல்னாலும் சரி, ஆன்மீகம்னாலும் சரி ஏமாறுறதுக்குன்னே தயாராயிருப்பாங்க…”

 

உண்மை தான் என்பது போல் ஷ்ரவன் தலையாட்டினான்.

 

சிவசங்கரன் சற்று அமைதியடைந்து சொன்னார். “தம்பி. ப்ரேம் ஆனந்தைச் சொல்லி தப்பில்லை. இந்த முட்டாள் ஜனங்களை ஏமாத்திப் பிழைக்கிறது பெரிய ஜெகஜால வித்தையில்லைங்கறதுனால அவனும்யோகிஆகிப் பிழைக்கிறான். உண்மையான யோகிக்கு பணமோ, புகழோ, அங்கீகாரமோ தேவையில்லை. சொல்லப் போனா வெளிய இருந்து வர்ற எதுவுமே அவனுக்குத் தேவையில்லை. அவன் உள்ளுக்குள்ளே அடைஞ்சிருக்கற நிலையே போதும். அவன் அமைதியாய், நிறைவாய் வாழ்ந்துட்டுப் போயிடுவான். அவனை நீ யோகின்னு கூப்பிட்டாலும், பைத்தியம்னு கூப்பிட்டாலும், ரெண்டுமே அவனைப் பாதிக்காது.”

 

ஷ்ரவன் கேட்டான். “அந்த மாதிரி ஒரு யோகியை உங்கள் வாழ்க்கைல நேர்ல பார்த்திருக்கீங்களா சார்?” 

 

அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் பார்த்தது மட்டுமில்ல, ப்ரேம் ஆனந்துக்கும் அந்த நிஜ யோகியை நான் அடையாளம் காட்டியிருக்கேன்

 

இங்கு வந்த பின் அவன் அறிந்து கொண்ட சுவாரசியமான முதல் புதிய தகவல் இது என்பதால் ஷ்ரவன் உற்சாகமடைந்தான். அவன் ஆர்வத்துடன் கேட்டான். “யார் சார் அவர்? அவரை எங்கே எப்போ பார்த்தீங்க?”

 

சிவசங்கரன் முகம் மென்மையாகியது. அவர் கண்கள் மின்ன, சொன்னார். “அது ரொம்ப காலத்துக்கு முன்னாடிப்பா. பிரம்மானந்தா ப்ரேம் ஆனந்தா இருந்த காலக்கட்டம் அது. அந்த யோகியோட பெயர் கூட எனக்குச் சரியா இப்ப ஞாபகம் இல்லை. அவர் பிரபலமான ஆள் கிடையாது. யோகின்னு மட்டுமல்ல, அவரை ஒரு ஆன்மீகவாதியாய் கூட யாரும் நினைச்ச மாதிரி தெரியல. ஒரு மடத்துலயோ, ஆசிரமத்துலயோ கூட அவர் இருக்கல. ஒரு தோட்டக்காரரா அவர் இருந்தார். அவருக்குக் கிட்டத்தட்ட என் வயசு இருக்கும். பக்கத்து வீட்டுக்குத் தோட்ட வேலைக்கு சுமார் ஒரு வருஷம் வந்துகிட்டிருந்தார்வாரத்துல ஒரு நாள் தான் வருவார். ஒரு மணி நேரம் பக்கத்து வீட்டுத் தோட்டத்துல வேலை பண்ணிட்டுப் போவார்ஒரு தோட்டக்காரரை நான் யோகியாய் உணர்ந்த அந்த நாளை என்னால் என்னைக்குமே மறக்க முடியாது....”

 

சிவசங்கரன் அந்த நாளுக்கே போய் விட்டது போலவும், அவர் அந்த ஜன்னல் வழியாக பழைய காட்சியை இப்போதும் பார்ப்பது போலவும் ஷ்ரவனுக்குத் தோன்றியது. இப்போது அந்த ஜன்னல் வழியே தெரிந்தது ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம் தான். ஆனால் அவர் பார்த்துக் கொண்டிருப்பது பழைய நினைவில் தெரிந்த காட்சியை என்பதை ஷ்ரவன் உணர்ந்தான்.

 

அவர் குரல் கரகரக்கச் சொன்னார். “ஒரு சாயங்கால நேரம்.... நான் டீ குடிச்சுகிட்டே எதோ ஒரு யோசனையாய் இந்த ஜன்னல் பக்கம் வந்தப்ப தான் பக்கத்து வீட்டுத் தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருந்த அவரைப் பார்த்தேன். என் பார்வை அவர் மேல காந்தமாய் ஒட்டிகிச்சு. ரொம்பவும் அமைதியாய் தெரிஞ்ச அவர் மேல இருந்து என் பார்வையை விலக்கிக்க முடியல. அமைதி. சாந்தம், அன்பு, நிறைவு- இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அடையாளமாய் அவர் எனக்குத் தெரிஞ்சார். அவர் அந்தத் தோட்டத்து செடிகள் கிட்ட பேசிகிட்டு இருந்த மாதிரி எனக்கு ஏன் தோணுச்சுன்னு தெரியல. காரணம் அவர் உதடுகள் அசையல. ஆனாலும் அவர் அன்பாய் பேசிகிட்டிருக்கிற மாதிரியும், அந்தச் செடிகளும் ஆனந்தமா அவர் கிட்ட பேசிகிட்டிருக்கிற மாதிரியும் எனக்குத் தோணுச்சு. ஏதோ ஒரு சக்தி வளையம் அவரைச் சுத்தி இருக்கற மாதிரியும் உணர்ந்தேன். பார்க்கப் பார்க்க எனக்குள்ளேயும் அமைதி, சாந்தம், அன்பு எல்லாம் நிறையற மாதிரி தோணுச்சு. ஒரு பரிபூரண நிலை அது. இதுக்கு மேல வேறொன்னும் வேண்டாம்னும் தோணுச்சு....”

 

சிவசங்கரன் ஒரு கணம் நிறுத்தி மறுபடி அந்தப் பரிபூரண நிலையை அப்படியே உணர முயன்றது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது. சில வினாடிகள் மௌனமாக இருந்து விட்டு அவர் தொடர்ந்தார். ஷ்ரவன் நாம எத்தனையோ ஆசைப்படறோம். அதை அடையறப்ப சந்தோஷப்படறோம். அது இயற்கை. ஆனா அந்த சாயங்கால நேரத்துல என்னோட தனிப்பட்ட எந்த ஆசையும் நிறைவேறல. எதுவும் எனக்குச் சாதகமாய் நடந்துடல. ஆனாலும் நிறைவை உணர்ந்து இதுக்கு மேல வேறொன்னும் வேண்டாம்னு நினைக்கிற ஒரு நிலை அந்த மனிதரைப் பார்க்கற எனக்கே கிடைச்சதுன்னா, அந்த மனிதரோட உள் நிலை எப்படி இருக்கும், யோசிச்சுப் பார். அப்பவே எனக்கு அவர் ஒரு உன்னதமான யோகின்னு புரிஞ்சு போச்சு. அவரைப் பார்த்துட்டு நின்னுகிட்டிருந்தேன். அந்த நாள் ஒரே ஒரு தடவை அவர் பார்வை என் மேல் விழுந்துச்சு. கனிவுங்கற வார்த்தைக்கு முழு அர்த்தமாய் அவர் பார்வை இருந்துச்சு. அதுக்கும் மேல என்னோடு எந்த தொடர்பும் ஏற்படுத்திக்கற உத்தேசம் அவர் கிட்ட இருக்கல. அவர் போகிற வரைக்கும் அவரைப் பார்த்துட்டே நின்னுட்டிருந்தேன். அவர் போய் ஒரு மணி நேரம் வரைக்குமே கூட எனக்கு அந்த நிறையுணர்வு இருந்துச்சு.” 

 

அதுக்கப்பறம் அவர் வர்ற நாளுக்காக நான் ஒவ்வொரு வாரமும் காத்துகிட்டிருப்பேன். அவர் அங்கே வேலை பார்க்கற அந்த ஒரு மணி நேரமும் நான் இந்த ஜன்னல் வழியா அவரையே பார்த்துட்டு நின்னுட்டிருப்பேன்மனசு தானாய் லேசாகும். அவரோட அமைதியும், சாந்தமும் என்னையும் தொத்திக்கும். அந்த அனுபவத்தை வார்த்தையால விவரிக்க முடியாதுப்பா…. அந்த ஆள் என் அளவு படிச்சவராயிருக்க வாய்ப்பு இல்லை. எனக்குத் தெரிஞ்ச தத்துவ ஞானங்களோட பெயர்கள் கூட அவருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைஆனால் அவர் மாதிரி என் வாழ்க்கைல ஒரே  ஒரு மணி நேரம் இருக்க முடிஞ்சுதுன்னா அது என் பெரும் பாக்கியமாய் இருக்கும்னு நான் பல தடவை நினைச்சிருக்கேன்…”

 

நீங்க அவர் கிட்ட எப்பவாவது பேசியிருக்கீங்களா சார்?”


(தொடரும்)


என்.கணேசன்




Thursday, February 22, 2024

சாணக்கியன் 97

 

சாணக்கியர் “அந்தக் கொலை நடந்த சம்பவத்தை நான் சொல்வதற்கு முன் அந்த இடத்திற்கு நான் எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு என் முழு பின்னணியையும் நீ தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்...” என்று சொல்லி விட்டு, ஜீவசித்தியிடம் தன் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைப் பிராயத்தைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார். அவர் தந்தை சாணக் வேத உபநிடதங்களில் விற்பன்னராக இருந்ததுடன் அரச தர்மம், மக்கள் நலன் குறித்த அக்கறை கொண்டவராகவும் இருந்ததையும் சொன்னார். தனநந்தன் மக்கள் நலனில் அக்கறை சிறிதும் இல்லாமல் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்ததை அப்போதைய பிரதம அமைச்சரான ஷக்தார் கடுமையாகக் கண்டித்ததையும்,  ஷக்தாரின் நண்பரான சாணக் அவருடன் சேர்ந்து கொண்டு தனநந்தனை எதிர்த்ததையும் இருவரும் சிறைப்பட்டதையம் சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.

 

“அன்றைய அமைச்சர்கள் தனநந்தனின் கைப்பாவையாக இருந்தார்கள், ஷக்தாரைப் போல் நேர்மைக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருக்கவில்லை என்றாலும் பிரதம அமைச்சரைக் கைது செய்ததை விரும்பவில்லை. அவர்கள் மன்னனிடம் வேண்டிக் கொண்டு ஷக்தாரை விடுவித்தார்கள். ஆனால் என் தந்தையை விடுவிக்க மன்னனிடம் செல்வாக்குள்ள யாரும் முயற்சிக்கவில்லை. அவர் சிறையிலேயே இறந்திருக்கலாம் என்று தந்தைக்கு மிக நெருங்கியவர்கள் சந்தேகப்பட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட பிறகு நானும் என் தாயும் உடைந்து போனோம். ராஜதுரோகியின் மகனுக்கு பிக்‌ஷை போட்டால் தனநந்தன் பிக்‌ஷை போட்டவர்களையும் தண்டிக்கக்கூடும் என்று பயந்து எனக்கு மக்கள் பிக்‌ஷையும் போடவில்லை. எந்த மக்கள் நலனுக்காக என் தந்தை போராடினாரோ அதே மக்கள் அவர் குடும்பத்தைப் பட்டினி போட்டார்கள். சிறுவன் நான் எப்படியோ உயிரைத் தக்க வைத்துக் கொண்டேன். ஆனால் என் தாய் பட்டினியாலும், துக்கத்தாலும் இறந்து போனாள். அவள் அஸ்தியைக் கங்கையில் கரைத்த பின் பாடலிபுத்திரத்தில் இருக்க முடியவில்லை. என் தந்தையின் நண்பர்களும், என் நண்பர்களும் எனக்கு உணவு கொடுத்து ஆதரிக்க முன் வந்தாலும் அடுத்தவர்கள் தயவில் நான் அதிக நாள் வாழ விரும்பவில்லை. பாடலிபுத்திரத்தை விட்டுப் போய் விட முடிவெடுத்தேன். என் தாயின் இறுதிக் கிரியைகளின் கடைசி நாளன்று கங்கையில் தர்ப்பணம் விட வேண்டும் என்று போயிருந்தேன். அன்று பௌர்ணமி. உன் தந்தை இறந்த நாள்....”

 

ஜீவசித்தி சாணக்கியரின் துன்பக்கதை கேட்டு மனவருத்தப்பட்டாலும் அவன் தந்தையின் மரணம் குறித்த முழுவிவரம் அறிய துடித்துக் கொண்டிருந்தான். அதனால் அவர் சொல்லப் போவதை மிகவும் கவனமாகக் கேட்க ஆரம்பித்தான்.

 

“கங்கைக்குப் போய் தர்ப்பணம் விட்ட பின்பும் ஏனோ உடனே திரும்பி வர மனம் வரவில்லை. அங்கேயே இருந்து மாலை சந்தியாவந்தனமும் முடிந்தும் அங்கேயே இருந்தேன். இரவாகியது. கங்கையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் ஏதோ ஒருவகை நிம்மதி கிடைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றியதால் நள்ளிரவு வரையும் அங்கேயே இருந்தேன். பின் இனி திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்த போது தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது. உடனே என் உள்ளுணர்வு ஏதோ ஒரு ஆபத்தை எனக்கு உணர்த்துவது போலிருந்தது. உடனே சற்றுத் தள்ளியிருந்த பெரிய மரம் ஒன்றின் பின் நான் ஒளிந்து கொண்டேன். முதலில் வெள்ளைக் குதிரை பூட்டிய ஒரு ரதத்தைத் தானே ஓட்டி வந்து கொண்டிருந்த தனநந்தன் தெரிந்தான். அவன் பின்னாலேயே கருப்புக் குதிரை பூட்டிய ஒரு பயண வண்டியும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதைத் தனநந்தனின் சாரதி ஓட்டி வந்து கொண்டிருந்தான். அதில் தான் உன் தந்தையும் மற்ற இரண்டு பணியாளர்களும் இருந்தார்கள்”

 

ஜீவசித்தியின் இதயத்துடிப்பு வேகமெடுத்தது. அவன் சாணக்கியர் வார்த்தைகளில் முழு கவனத்தையும் குவித்தான். சாணக்கியர் அந்த சம்பவ காலத்திற்கும், இடத்திற்கும் போய் விட்டது போல் தெரிந்தது.  அவர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே விவரிப்பது போல் அவனுக்குத் தோன்றியது...

 

“ரதத்திலிருந்து இறங்கிய தனநந்தன் முதலில் சுற்றும் முற்றும் பார்த்தான். வேறு ஆட்கள் யாராவது அக்கம் பக்கம் தெரிகிறார்களா என்று அவன் பார்ப்பது போல் இருந்தது. ஒரு பெரிய மரத்தின் பின்னால் நான் மறைந்து நின்றிருந்ததால் அவன் என்னைப் பார்த்திருக்க வழியில்லை. தனநந்தனின் சாரதி பயண வண்டியின் பின்புறக் கதவின் பூட்டைத் திறப்பது தெரிந்தது. அதிலிருந்து உன் தந்தை உட்பட மூன்று பணியாளர்கள் இறங்கினார்கள். தனநந்தன் பணியாளர்களுக்கு ஒரு இடத்தைக் காட்டுவதைப் பார்த்தேன். பின் உன் தந்தையும், மற்ற இரு பணியாளர்களும் சேர்ந்து வேகமாக அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.  எதற்குக் குழி தோண்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் தோண்டியது அகலமும், ஆழமும் கொண்ட பெரிய குழி என்பது அவர்கள் எடுத்துக் கொண்ட காலத்திலிருந்து என்னால் யூகிக்க முடிந்தது. தோண்டி முடித்த பின் ரதத்திலிருந்து பெரிய பெரிய பெட்டிகள் மூன்றைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தக் குழியில் வைத்தார்கள். ஒவ்வொன்றையும் திடகாத்திரமாக அவர்கள் மூன்று பேருமாகச் சேர்ந்து  தூக்கவே சிரமப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பெட்டியும் பெரியதாக மட்டுமல்லாமல் மிகவும் கனமாகவும் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.”

 

ஜீவசித்தி மர்மம் தாங்க முடியாமல் கேட்டான். “அந்தப் பெட்டிகளில் என்ன இருந்தது?”

 

சாணக்கியர் சொன்னார். “தொலைவில் இருந்ததால் எனக்கும் அந்தப் பெட்டிகளில் இருப்பதென்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  மூன்று பெட்டிகளையும் வைத்த பின் பழையபடி அந்தக் குழியை அவர்கள் மூடினார்கள். அங்கு குழி தோண்டியிருக்கிறார்கள் என்பதை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அந்த ஈரமண்ணை வேறு இடங்களில் பரப்பி அங்கிருந்த மண்ணை இங்கு பரப்பி வித்தியாசம் தெரியாமலிருக்கும்படி செய்தார்கள். பின் பழையபடி பணியாளர்கள் பயண வண்டியில் ஏறிக் கொள்ள அதன் பின்கதவை தனநந்தனின் சாரதி பூட்டிக் கொண்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தனநந்தன் தன் ரதத்தை ஓட்டிக் கொண்டு போகப் பின்னாலேயே தனநந்தனின் சாரதி அந்தப் பயண வண்டியை ஓட்டிக் கொண்டு போனான்.

 

அவர்கள் போன பிறகும் நான் சிறிது நேரம் அங்கேயே ஒளிந்து கொண்டு இருந்தேன். அவர்கள் திடீரென்று திரும்பி வந்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்தது. பிறகு மெள்ள நானும் நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மூன்று நாழிகை காலம் நடந்திருப்பேன். தூரத்தில் ஏதோ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஓடிப் போனேன். சற்று நெருங்கியவுடன் தான் அது சற்று முன் நான் பார்த்திருந்த பயண வண்டி என்பது தெரிந்தது. உடனே தனநந்தனும் அவன் சாரதியும் அருகில் எங்காவது இருக்கலாம் என்ற பயம்  எனக்கு வந்தது. மறுபடி ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் இருக்கவில்லை. தனநந்தனின் ரதமும் காணோம்.    எரிந்து கொண்டிருந்த அந்த வண்டியிலிருந்து சின்னதாய் முனகல் சத்தங்கள் வந்து கொண்டிருந்தன. முதலில் அவர்கள் உச்சக் குரலில் கத்தியிருக்கலாம். ஆனால் நான் போன போது அவர்கள் இறக்க ஆரம்பித்திருந்தார்கள். பிராணன் மிஞ்சியிருந்ததில் வந்த அந்த முனகல் சத்தம் ஈனசுரத்திலேயே இருந்தது. நான் மெல்ல அருகில் போய்ப் பார்த்த போது அந்த சத்தமும் அடங்கி விட்டிருந்தது.”

 

ஜீவசித்தி கண்கலங்கினான். அவனுக்குத் தந்தையைப் பார்த்த நினைவில்லை. அவர் இல்லாத துயரத்தை வாழ்க்கையின் பல சமயங்களில் அவன் ஆழமாக உணர்ந்திருக்கிறான். ஆனால் அந்த நாள் வரை விதி வசமாய் ஒரு விபத்து ஏற்பட்டு அவர் இறந்திருக்கிறார், அவன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று அவன் தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஆனால் உயிரை எடுத்தது விதியோ, விபத்தோ அல்ல, தனநந்தன் என்பது புரிந்த போது துக்கத்தோடு அவன் தாங்க முடியாத ஆத்திரத்தையும் உணர்ந்தான்.

 

சாணக்கியர் குரல் கரகரக்கச் சொன்னார். “மூன்று நாட்கள் கழித்து நான் பாடலிபுத்திரத்திலிருந்து வெளியேறி விட்டேன். வெளியேறும் போது இனி திரும்பி வரப் போவதில்லை என்று வைராக்கியத்துடன் இருந்தேன். ஆனால் நான் பிறந்த மண் என்னைத் திரும்பத் திரும்ப வரவழைக்கிறது. முதலிரு முறை  என்னை தனநந்தனைச் சந்திக்க வைத்தது. மூன்றாவது முறையாக வரவழைத்து உன்னைச் சந்திக்க வைத்திருக்கிறது. ஆழமாகக் காரணத்தை யோசிக்கையில் பாடலிபுத்திரம் நம்மிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறது என்று தோன்றுகிறது ஜீவசித்தி”

 

ஜீவசித்தி கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டான். “என்ன எதிர்பார்க்கிறது அந்தணரே?”

 

சாணக்கியர் சொன்னார். “மகதத்தை தனநந்தனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது”

 

(தொடரும்)

என்.கணேசன்                    

Monday, February 19, 2024

யோகி 37


நீண்ட காலம் கழித்து இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது அருணாச்சலத்தின் மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர் பரசுராமனிடம் கேட்டார். “சரி எப்படி சைத்ராவோட ஆவியை வரவழைச்சுக் கேட்பாய்?”

 

அதுக்கெல்லாம் ஒரு இடம், முகூர்த்த காலம், செயல்முறைன்னு இருக்கு. அந்த இடத்துல, அந்த முகூர்த்த காலத்துல, அந்த முறைப்படி தான் செய்யணும்.  நான் முதல்ல சரியான முகூர்த்த காலத்துல உன் நண்பர் சேதுவைப் போய்ப்பார்க்கறேன். புதன் கிழமை நான் துபாய் போறேன். அப்படியே கனடா, அமெரிக்கா போக வேண்டியிருக்கு. திரும்பி வர மூனு மாசமாகும். அதனால இந்தியால இருந்து கிளம்பறதுக்கு முன்னால் என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்...”

 

அருணாச்சலம் திருப்தியடைந்தார். அவர் ஷ்ரவனிடம் இந்த வழக்கின் ரகசிய விசாரணையை ஒப்படைத்திருப்பதைச் சொன்னார். “அந்தப் பையன் இதுவரைக்கும் பல சிக்கலான வேலைகளை எல்லாம் வெற்றிகரமாய் முடிச்சிருக்கான். இதுலயும் கண்டுபிடிச்சுடுவான்னாலும், நீ கண்டுபிடிச்சு சொல்ற விஷயங்கள் அவன் வேலையைச் சுலபமாக்கும்னு நம்பறேன்.”

 

ன்ஸ்பெக்டர் செல்வத்திற்கு தூத்துக்குடிக்கு பணி இடமாற்றம் செய்த ஆணை அன்று திடீரென்று வந்தது பேரிடியாக இருந்தது. அவர் போக வேண்டியிருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தூத்துக்குடியில் பிரச்சினைக்குப் பிரசித்தமானது. அங்கு போனால், சம்பளத்தைத் தவிர வேறு வருமானத்துக்கு வாய்ப்பே இல்லை. அது மட்டுமல்ல, அங்கே தினமும் ரௌடிகளையும், சண்டைகளையும், கலவரத்தையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ’தண்டனைப் பணியிட மாற்றமாக அனைவரும் சொல்லும் அந்த ஸ்டேஷனுக்கு என்னை ஏன் மாற்றுகிறார்கள்?’ என்று பதறியவராக, செல்வம் உடனே தன் மேலதிகாரியைத் தொடர்பு கொண்டார். 

செல்வத்தின் மேலதிகாரி சொன்னார். “உனக்கு மட்டும் இல்லைய்யா, உன்னையும் சேர்த்து மொத்தம் 27 பேரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க.”

 

சார் நான் பிள்ளைகுட்டிக்காரன். பசங்க எல்லாம் ஸ்கூல் லெவல்ல தான் இருக்காங்க. அந்த ஸ்டேஷன் பத்தி உங்களுக்குத் தெரியாததில்லை...”

 

செல்வம். இங்கே வேலை பாக்கறவங்க எல்லாரும் பிள்ளைகுட்டிக்காரன்க தான். சாமியாரையெல்லாம் போலீஸ்ல வேலைக்கு வெச்சுக்கறதில்லை. அந்த ஸ்டேஷன்ல இருக்கறவனும் மனுஷன் தானேய்யா? அவனுக்கும் ஒரு விடிவுகாலம் வேணுமில்லையாய்யா?. அவன் மூணு வருஷமாய் புலம்பிகிட்டு இருந்தான். இப்ப தான் அவனுக்கு விடிஞ்சிருக்கு. நீ போய் ஒன்னு ரெண்டு வருஷம் வேலை பாரு. அப்புறமா பார்ப்போம்...” என்று சொல்லி விட்டார்.

 

செல்வம் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். மேலதிகாரி சொன்னது போல் தூத்துக்குடியிலிருக்கும் அந்த ஸ்டேஷனுக்குப் போக அவருக்கு மனமில்லை. சிறிது பணம் செலவானாலும் இந்த பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்யத் துடித்தார். அவரது போலீஸ் நண்பர் ஒருவர் இது போன்ற வேலைகள் செய்து தருவதில் கெட்டிக்காரர். அவரை அழைத்துப் பேசினார்.

 

செல்வம், நான் விசாரிச்சுட்டேன். இந்த 27 ட்ரான்ஸ்பரும் நெறைய புகார்கள் இருக்கற ஆள்களுக்குத் தான் செஞ்சிருக்காங்க. அதுவும் டிஜிபி ஆபிஸ்ல இருந்து வந்த லிஸ்ட்டுன்னு சொல்றாங்க. வழக்கமான ட்ரான்ஸ்ஃபரா இருந்திருந்தா நாம ஏதாவது செஞ்சிருக்கலாம். இப்ப நிலைமை என்னன்னா டிஜிபி ஆபிஸ்லயோ, முதலமைச்சர் ஆபிஸ்லயோ செல்வாக்கு இருந்தா மட்டும் தான், இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை ரத்து செய்ய முடியும்.” என்று அந்த நண்பரும் கையை விரித்து விட்டார்.

 

செல்வத்திற்குக் கோபம் வந்தது. ‘இந்த 27 பேரைத் தவிர மத்த அத்தனை போலீஸ்காரன்களும் உத்தமன்களா? வாய்ப்பு கிடைச்சவன் தப்பு செய்யறான். தப்பு செய்யாதவனுக்கு வாய்ப்பு கிடைக்கலன்னு அர்த்தம்.... புகார் நெறய இருக்காம்... பேனாவும், பேப்பரும் கிடைச்சா எவன் வேணும்னாலும், எவன் மேல வேணும்னாலும் புகார் எழுதி அனுப்பலாம். அதையெல்லாம் பெருசா எடுத்துகிட்டு....’

 

பேராசிரியர் சிவசங்கரனுக்கு ஷ்ரவன் போன் செய்து அவரைச் சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்ட போது, அவர்என்ன விஷயமாய் என்னை சந்திக்க விரும்புகிறீர்கள்?” என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டார். தான் தத்துவ விஷயங்களில் ஆர்வமுள்ளவன் என்றும், சில சந்தேகங்களை அவரிடம் நேரடியாகக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள விரும்புவதாகவும் அவன் சொன்ன போது மனிதர் எந்த பந்தாவும் இல்லாமல் உடனடியாக அன்று மாலை ஐந்து மணிக்குச் சந்திக்க அனுமதி கொடுத்தார்.

 

ஷ்ரவன் மாலை ஐந்து மணிக்கு வேளச்சேரியில் இருக்கும் சிவசங்கரன் வீட்டுக்குப் போன போது அவர் லுங்கியும் டி ஷர்ட்டும் அணிந்திருந்தார். தலைமுடி முழுமையாக நரைத்திருந்தாலும், உடற்கட்டில் இளமையாகத் தான் தெரிந்தார். பல காலம் பழகியவர் போல அவனை வரவேற்று அமரச் சொன்னார்.

 

ஷ்ரவன் அமர்ந்தபடி சொன்னான். “நீங்க உங்களைச் சந்திக்க உடனடியாய் அனுமதி தந்ததுல ரொம்ப சந்தோஷம் சார். நான் உங்கள் புத்தகங்கள் எதையும் படிச்சதில்லை. ஆனால் உங்களைப் பத்தி என் நண்பன் ஒருத்தன் ரொம்ப உயர்வாய் சொன்னதிலிருந்து உங்களைப் பார்த்துப் பேசணும்னு ஆசை…”

 

உங்க நண்பன் பெயர்?”

 

ஸ்ரீகாந்த். திருச்சிக்காரன்…”

 

உடனே சிவசங்கரன் நினைவு கூர்ந்தார். “துபாய்ல கொஞ்ச காலம் இருந்த ஆள். ஷேர் மார்க்கெட்டிங்ல நல்ல ஞானமுள்ள ஆள்அந்த ஸ்ரீகாந்த் தானே?”

 

ஷ்ரவன் சொன்னான். “அவனே தான் சார்…”

 

நல்ல பையன்…. அவன் ஆலோசனைப்படி ரெண்டு கம்பெனி ஷேர்ஸ் வாங்கினேன். ரெண்டுலயுமே நல்ல லாபம் கிடைச்சுது…. நீங்களும் திருச்சியா? உங்க ரெண்டு பேருக்கும் எப்படி பரிச்சயம்?”

 

ஷ்ரவன் யோகாலயத்தையும், பிரம்மானந்தாவையும் எப்படியாவது பேச்சில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்ததால் அவனுக்கு இந்தக் கேள்வி மிக உபயோகமாயிருந்தது.  யோகாலயத்துல ஒருவார தியான வகுப்புக்கு போயிருந்தப்ப தான் நான் ஸ்ரீகாந்தை சந்திச்சேன். சீக்கிரமே நல்ல நண்பர்களாயிட்டோம். அப்ப தான் உங்களைப் பத்தியும் ஸ்ரீகாந்த் உயர்வாய் சொன்னான்….”

 

சிவசங்கரன் கேட்டார். “யோகாலயத்துல தியானப் பயிற்சி எல்லாம் எப்படி இருந்துச்சு?”

 

நல்லா இருந்துச்சு சார். ஆனா யோகி பிரம்மானந்தாவை சந்திக்க முடியல. அவர் எந்த வகுப்பும் எடுக்கல…”

 

சிவசங்கரன் இடிச்சிரிப்பு சிரித்தார். “என்னப்பா நீ விவரம் தெரியாதவனாய் இருக்கியே. யோகி பிரம்மானந்தா உனக்கு பாடம் சொல்லித் தர வந்தா உனக்கு வாத்தியார் ஆயிடுவார். யோகி பிரம்மானந்தா, வாத்தியார் பிரம்மானந்தா ஆகலாமோ? நீ யார்? சமூகத்துல உன் அந்தஸ்து என்ன? உன் சொத்து மதிப்பு எவ்வளவு? உன்னைச் சந்திக்கறதால அவருக்கு என்ன பெருமை? இதை எல்லாம் நீ யோசிச்சிருக்கியா?’

 

ஷ்ரவன் புன்னகையுடன்இல்லை சார்என்றான்.  

 

யோகி பிரம்மானந்தாவைப் பார்க்கணும்ன நீ சினிமா நடிகனாவோ, அமைச்சராகவோ, அம்பானி, அதானி குடும்பத்து ஆளாகவோ இருக்கணும். இல்லாட்டி வெளிநாட்டுப் பிரபலங்களுக்கு நெருக்கமானவனாக இருந்து அவர்களோட நட்பை அந்த ஆளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடிஞ்சவனாய் இருக்கணும். அப்படி இருந்தா, உனக்கு உடனடியா யோகி பிரம்மானந்தாவை சந்திக்க அனுமதி கிடைக்கும்.  இல்லைன்னா நீ டிவில அல்லது ஏதாவது மீட்டிங்ல தூர இருந்து அந்த ஆளைப் பார்த்து திருப்தி அடைஞ்சுக்கணும். நீயும் ஸ்ரீகாந்தும் யோகா க்ளாஸ்க்கு போனீங்களே. அந்த யோகா சிஸ்டம் எல்லாம் யார் வடிவமைச்சுக் கொடுத்ததுன்னு தெரியுமா?”

 

யோகி பிரம்மானந்தா உருவாக்கின முறையாய் தான் அங்கே சொன்னாங்க

 

சிவசங்கரன் எகத்தாளமாய் சிரித்தார். “நல்ல வேளை பரமசிவன் கைலாசத்துல இருந்து யோகாலயத்துக்கு இறங்கி, பிரம்மானந்தாவுக்கு நேரடியாய் சொல்லிக் கொடுத்ததாய் சொல்லலை. உண்மை என்னன்னா பிரம்மானந்தா ப்ரேம் ஆனந்தா இருந்தப்ப திருவனந்தபுரத்துக்கார பத்மநாப நம்பூதிரி சொல்லிக் கொடுத்தது எல்லாம். இந்த ஆளு கத்துகிட்ட ஒவ்வொன்னுக்கும் பேரை மட்டும் மாடர்னா மாத்தி வெச்சுகிட்டான். குருவாய் இருந்த பத்மநாப நம்பூதிரியைப் பத்தி ஒரு வார்த்தை கூட இந்த ஆள் எப்பவுமே வெளிப்படையாய் சொன்னதில்லை. காரணம் நம்ம யோகிக்கே குருவாய் இருந்தவர்னு எவனாவது கிறுக்கன் இவனை விட பத்மநாப நம்பூதிரியை உயர்வாய் நினைக்க ஆரம்பிச்சுட்டான்னா என்ன பண்றதுன்னு தான். அதனால சித்தர் கோரக்கர், பதஞ்சலி மகரிஷி - இந்த ரெண்டு பேரை மட்டும் தான் தன்னை விட உயர்வாய் சொல்வான் சில்லறைப் பயல்

 

பிரம்மானந்தருக்கு சிவசங்கரன் பேச்சில் மரியாதை குறைந்து வருவது  ஷ்ரவனுக்கு வேடிக்கையாக இருந்தது. யோகியிலிருந்து சில்லறைப் பயல் வரை இறக்கியாகி விட்டது.  ஷ்ரவன் பிரம்மானந்தா பற்றி முன்பே எதுவும் தெரியாதவன் போலவும், இப்போது தான் இந்தத் தகவல்கள் அறிந்து திகைப்பது போலவும் காட்டிக் கொண்டான். 


 (தொடரும்)

என்.கணேசன்