Thursday, June 29, 2023

சாணக்கியன் 63

 

ந்திரகுப்தனும் சின்ஹரனும் மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவனிடம் நீண்ட நேரம் பேசினார்கள். அவர்கள் பேசப் பேச அவன் நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போதும் எல்லாம் முடிந்து விடவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் வலுப்பெற ஆரம்பித்தது. யவனர்களை எதிர்த்து வெல்வது சுலபமல்ல என்ற போதும் முடியாதது அல்ல என்று தோன்ற ஆரம்பித்தது. மாளவத்தில் ரகசியமாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து தருவதாக அவன் உற்சாகத்துடன் வாக்களித்தான்.

 

சந்திரகுப்தன் சொன்னான். “குடியரசு நாட்டின் தலைவராக இருந்த உங்களுக்குத் தெரியாததல்ல என்றாலும் கூட நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். முக்கியஸ்தர்கள் மட்டுமல்லாமல் குடிமக்கள் அனைவரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆச்சாரியர் நினைக்கிறார். அவர்களைச் சேர்த்துக் கொண்டால் ஒழிய நாம் வெல்வது மிகவும் கஷ்டம் என்று அவர் நம்புகிறார்…”

 

அவர் தீர்க்கதரிசி. அவர் சொல்கின்றபடியே செய்வோம். மாளவத்தைப் பொறுத்த வரை எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அநேகமாக நாம் தாக்குதலை எப்போது எப்படி ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறீர்கள்?”

 

சின்ஹரன் சொன்னான். “ஏக காலத்தில் பல இடங்களில் தாக்குதலும் கலவரங்களும் நடத்த ஆரம்பித்தால் தான் யவனர்கள் எங்கே என்ன செய்வது என்று புரியாமல் குழம்புவார்கள். அது தான் நமக்கு சாதகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் நம்மை வலுப்படுத்திக் கொண்ட பிறகு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். ஷூத்ரகம் நாட்டின் தற்போதைய நிலவரம் என்ன?”

 

ஷூத்ரகம் நாட்டின் நிலவரத்தை மாளவ முன்னாள் நகரத்தலைவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் கூடக் கேட்டதற்குக் காரணம் ஆச்சாரியர் அடிக்கடி சொல்லியிருந்த அறிவுரை தான். ’முக்கியமான விஷயங்கள் குறித்து எல்லாம் தெரியும் என்று தோன்றினாலும் கூட அறிந்த மற்றவர்களிடம் கூடத் தகவல்கள் கேட்பது நல்லது. அவர்கள் சொல்லும் தகவல்களில் ஒன்றிரண்டாவது நமக்குப் புதியதாக இருக்கலாம். அவை முக்கியமானவையாக இருக்கலாம். கேட்காமல் இருந்திருந்தால் அதைத் தெரிந்து கொள்ளாமலேயே அது சம்பந்தமாக நாம் தவறாக முடிவெடுக்கும் அபாயம் இருக்கிறது….’  

 

மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் சொன்னான். “ஷூத்ரகமும் கிட்டத்தட்ட எங்கள் நிலைமையிலேயே இருக்கிறது. எங்கள் அளவு உயிர் இழப்புகளும், பொருள் இழப்புகளும் சந்திக்கா விட்டாலும் அவர்கள் கௌரவமும் பறிபோய் இருக்கிறது என்பது தான் நிலைமை. அவர்களும் ஆரம்பத்தில் போராடத் தயாராகத் தான் இருந்தார்கள், எங்கள் தோல்விக்குப் பின் தான் அவர்கள் வேறு வழியில்லாமல் சரண் அடைந்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருந்ததால் அவர்களுக்கு அலெக்ஸாண்டர் எந்தத் தனிச் சலுகையும் தராமல் எங்களைப் போலவே தான் வைத்திருக்கிறான்….”

 

சந்திரகுப்தன் கேட்டான். “அங்கே நம் சிந்தனைகள் இருக்கக்கூடிய முக்கிய ஆட்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள்.   யாரைப் போய்ப் பார்த்தால் நல்லது.” மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் சொன்ன பெயர்கள் மூன்றில் இரண்டு பெயர்கள் அவனிடம் ஏற்கெனவே இருந்தன. மூன்றாவது பெயரையும் அவன் மனதில் குறித்துக் கொண்டான்.


நல்லது. அவர்களையும் சென்று சந்திக்கிறோம். நீங்கள் மக்கள் மனநிலையைத் தயார்ப்படுத்துவதற்கு எத்தனை காலம் தேவைப்படும்?” சின்ஹரன் கேட்டான்.

 

என்னை யவன ஒற்றர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதால் நான் மிகவும் ரகசியமாகவும் கவனமாகவும் தான் செயல்பட வேண்டும். நான் அவர்கள் சந்தேகப்படாத ஓரிரு ஆட்கள் மூலமாகவே எல்லாவற்றையும் செய்வது தான் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களாவது வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.”

 

நல்லது. அப்படியே செய்யுங்கள்

 

இங்கே எங்களது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன... அதனால் நமக்கு ஆயுதங்கள் தேவை...”

 

அது குறித்த கவலை வேண்டாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் கிளம்புகிறோம். கவனமாகச் செயல்படுங்கள்...”

 

ஆச்சாரியருக்கும் உங்களுக்கும்  நன்றி வீரர்களே. இன்றிலிருந்து நாங்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு நல்ல அர்த்தத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். இரண்டாவது முறை பிறந்தது போல் நான் உணர்கிறேன்.” அவன் மானசீகமாக உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்.

 

சந்திரகுப்தனும், சின்ஹரனும் அங்கிருந்து திருப்தியுடன் கிளம்பினார்கள்.  

 

லெக்ஸாண்டரைச் சந்தித்துப் பேசிய பிலிப் உடனடியாக தட்சசீலம் திரும்பவில்லை. வழியில் யவனர்கள் வென்ற பல பகுதிகளுக்கு விஜயம் செய்து விட்டு மெள்ளத் தான் திரும்பி வந்தான். ஆனால் அவன் அங்கே வருவதற்குள்  அலெக்ஸாண்டர் அவனை யவனர் வென்ற பாரதப் பகுதிகளுக்கெல்லாம் சத்ரப் (கவர்னர்) ஆக நியமித்து விட்டுச் சென்றிருக்கிறான் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அதனால் அவன், தான் நிர்வகிக்க வேண்டியிருக்கும் பகுதிகளுக்கு எல்லாம் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தி விட்டு வரப் போகிறான் என்பதும் ஆம்பி குமாரனுக்குத் தெரிய வந்தது.

 

ஆம்பி குமாரனுக்கு பிலிப்புக்கு வந்த அதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்தப் பொறுப்புக்கு அலெக்ஸாண்டர் தன்னை நியமித்து விட்டுப் போவான் என்று முட்டாள்தனமாக நம்பியது ஆம்பி குமாரனுக்கு நினைவுக்கு வந்து கசந்தது. தட்சசீலம் திரும்பி வந்த பிலிப்பை ஆம்பி குமாரன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தான். அவனுடைய வாழ்த்தில் பிலிப் பெரிதாகப் புளங்காகிதம் அடைந்து விடவில்லை என்பது அவனுடைய தோரணையில் தெரிந்தது. அலெக்ஸாண்டர் கூட இந்த அளவு கர்வத்துடன் நடந்து கொள்ளவில்லை என்பதை ஆம்பி குமாரன் நினைவு கூர்ந்தான்.  நீண்ட பயணத்திலிருந்து திரும்பியதால் களைப்பாக இருக்கிறது என்று தெரிவித்து விட்டு நாளை பேசுவோம் என்று சுருக்கமாகச் சொல்லித் தன் மாளிகைக்கு ஓய்வெடுக்கப் போன  பிலிப் பின் அன்றே கட்டிடக் கலைஞர்களை அழைத்துப் பேசியது ஆம்பி குமாரனுக்குத் தெரிய வந்தது. சத்ரப் ஆன அவனைச் சந்திக்க பல பகுதிகளில் இருந்தும் அரசர்கள், அமைச்சர்கள், யவன அதிகாரிகள் முதலானோர் இனி அடிக்கடி அந்த மாளிகைக்கு வருவார்கள் என்றும் அதற்கேற்றபடி வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் சொல்லி ஆணை இட்டதாகவும் தகவல் ஆம்பி குமாரனுக்குக் கிடைத்தது. அதுபற்றி ஆம்பி குமாரனிடம் முன்னதாக ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட பிலிப்புக்கு இருக்கவில்லை என்பது ஆம்பி குமாரனுக்கு வருத்தத்தைத் தந்தாலும் அதை வாய் விட்டு யாரிடமும் தெரிவிப்பது அவனுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவு தான் என்று பறையறிவிப்பது போல் ஆகி விடும் என்று மௌனமாக இருந்தான்.

 

மறுநாளும் ஆம்பி குமாரனைச் சந்திக்க பிலிப் வரவில்லை. மாறாக பிலிப்பின் காவலன் ஆம்பி குமாரனிடம் வந்து சத்ரப் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். ஆம்பி குமாரன் உள்ளே மனம் புழுங்கினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பிலிப்பின் மாளிகைக்குப் போனான். அமர்ந்திருந்த பிலிப் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தாலும் பழைய மரியாதை அதில் தென்படாததை ஆம்பி குமாரன் கவனிக்கவே செய்தான். அலெக்ஸாண்டர் சக்கரவர்த்தியாகவே இருந்தாலும் கூட இப்படி அவனிடம் நடந்து கொள்ளவில்லை.

 

வணக்கம் தெரிவித்த ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரின் நலம் குறித்து விசாரித்தபடி இருக்கையில் அமர்ந்தான். மொழிபெயர்ப்பாளன் உதவியோடு அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

 

பிலிப் சொன்னான். “சக்கரவர்த்தி பரிபூரண நலம். இங்கே நிலவரம் எப்படி இருக்கிறது ஆம்பி குமாரரே?”

 

“எல்லாம் சிறப்பாக இருக்கின்றது ... பிலிப்” என்றான் ஆம்பி குமாரன். அலெக்ஸாண்டரையே நண்பா என்று ஒருமையில் அழைத்தவனுக்கு பிலிப்பை சத்ரப் என்று அழைக்க மனம் வரவில்லை. பெயர் சொல்லி அழைப்பது ஆம்பி குமாரனுக்கும், அலெக்ஸாண்டருக்கும் இடையே இருந்த நட்பை  பிலிப்புக்கு நினைவுபடுத்தியது போல இருக்கும் என்று அவன் நம்பினான்.

 

சில காலமாக சத்ரப் என்று மரியாதையுடன் பலராலும் அழைக்கப்பட்டு வந்த பிலிப் தன்னை ஆம்பி குமாரன் பெயரிட்டு அழைத்ததை ரசிக்கவில்லை என்றாலும் அவனும் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை வாய்விட்டுச் சொல்லத் தயங்கினான். முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அவன் ஆம்பி குமாரனிடம் கேட்டான். “இங்கே நம் ஆயுதக் கிடங்கில் ஆயுதங்கள் நிறையவே திருட்டுப் போயிருக்கின்றன என்று கேள்விப்பட்டேனே. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டீர்களா?”

 

“விசாரணை நடந்து வருகிறது பிலிப். கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.”

 

“இது போன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்கா விட்டால் அது குற்றவாளிகளுக்கு மேலும் தைரியம் கொடுப்பது போலவும், அவர்களை ஊக்குவிப்பது போலவும் ஆகி விடுமல்லவா ஆம்பி குமாரரே?”

 

‘இவனெல்லாம் என்னைக் கேள்வி கேட்கும்படி ஆகி விட்டதே என்று மனம் நொந்த  ஆம்பி குமாரன் சொன்னான். “அதை நானும் உணர்ந்திருக்கிறேன் பிலிப். அதனால் தான் கண்காணிப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறேன்.”

 

”சக்கரவர்த்தி எப்போதும் சொல்வார். என்ன செய்திருக்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள், என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பதைச் சொல்லுங்கள் என்று. குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாகி விட்டதா இல்லையா என்பது தான் இப்போதைய கேள்வி”


(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 26, 2023

யோகி 2

 


சேதுமாதவனுக்கு மகன் வந்து சேரும் வரை இருப்பு கொள்ளவில்லை. மனம் பல விதமாய் யோசித்து, பயந்து, பதறியது. எத்தனை தான் ஆன்மீக நூல்களையும், தத்துவ நூல்களையும் படித்திருந்தாலும், படித்து மனம் பக்குவப்பட்டு விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்தில் ஒருவருக்கு ஆபத்து என்று வரும் போது, மனம் பதறுவதை அவரால் தடுக்க முடியவில்லை.

 

அவருடைய குடும்பம் ஆரம்பத்திலிருந்தே மிகச்சிறியது. மத்திய அரசாங்க வேலையிலிருந்த அவர், பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளை. அவருக்கும் கிருஷ்ணமூர்த்தி ஒரே பிள்ளை. மகன் டாக்டராகும் வரை வாழ்ந்த சேதுமாதவனின் மனைவி, அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன் இறந்து விட்டாள். கிருஷ்ணமூர்த்தியின் மனைவியும், மகள் சைத்ராவைப் பெற்றுக் கொடுத்து, பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து இறந்து விட்டாள். ஆகவே நான்கு ஆட்களாக அவர் குடும்பம் இருந்ததே கூட, குறைவான காலம் தான். அதிக காலத்தில் மூன்று பேர் தான் அவருடைய குடும்பத்தில் இருந்தார்கள். அந்த மூவரிலும் ஒருவருக்கு ஆபத்து என்றால் மற்ற இருவரும் கவலையும், பயமும் கொள்வது இயல்பு தானே? சேதுமாதவனுக்கு மகனை நினைக்கையில் கூடுதல் வருத்தமாக இருந்தது...

 

கிருஷ்ணமூர்த்தி தன் மகள் சைத்ரா மீது உயிரையே வைத்திருந்தார். அவரது மனைவியின் மரணத்திற்குப் பின், மகள் மீது அவர் வைத்திருந்த பாசம் இரட்டிப்பாகியது. தாயில்லாத குறையை மகள் எக்காலத்திலும் உணர்ந்து விடக்கூடாது என்பதில் அவர் ஆரம்பத்திலிருந்தே அதீத அக்கறை எடுத்துக் கொண்டார். அவருக்கு, தன்னைப் போலவே மகள் சைத்ராவும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சைத்ரா டாக்டராக விருப்பமில்லை என்று சொன்ன போது கூடுதலாக ஒரு வார்த்தை கூட அவர் கட்டாயப்படுத்தி பேசவில்லை. அவளுடைய சந்தோஷமே முக்கியம் என்ற நிலையிலேயே அவர் அப்போதும் இருந்தார். மகள் அவள் விருப்பப்படி படிக்க அவர் அனுமதித்தார். 

 

கல்வியில் மிகவும் சூட்டிகையாக இருந்த சைத்ரா, கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து இன்ஜீனியரானாள்.  கேம்பஸ் இண்டர்வ்யூவில் மிக நல்ல கம்பெனி ஒன்றில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமான போது, அவளுடன் வேலை பார்த்து வந்த இளைஞன் மீது அவளுக்குக் காதல் ஏற்பட்டது. அவன் வேறு ஜாதி. பொருளாதாரத்திலும் அவர்களை விடத் தாழ்ந்த நிலையில் தான் அந்த இளைஞன் இருந்தான்.  ஆனாலும் மகள் ஆசைப்பட்ட பின் கிருஷ்ணமூர்த்தி மறுப்பு சொல்லவில்லை. அவளுடைய காதல் திருமணத்திற்கும் அவர் சம்மதித்தார். 

 

அந்த இளைஞனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுடைய திருமணத்திற்குப் பின் தான் திருமணம் செய்து கொள்வது என்பதில் அந்த இளைஞன் உறுதியாக இருந்தான்.  சைத்ராவும் அது வரை காத்திருப்பதாகச் சொன்னாள்.  ஆனால் சில மாதங்கள் கழித்து புதிதாய் ஒரு பெண் அந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். அவள் பார்க்க சைத்ராவை விட அழகாய் இருந்தாள். பொருளாதாரத்திலும் கூட அந்தப் பெண்ணின் குடும்பம் மேலாக இருந்தது. அந்த இளைஞன் அந்தப் புதிய பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தான். அது சைத்ராவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவள் உலகம் இருண்டு போனது. அதன் பின் அங்கிருக்க முடியாமல் சைத்ரா அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்து விட்டாள். 

 

ஆனால் சைத்ராவால், ஏமாற்றப்பட்டதைச் சகிக்க முடியவில்லை. இதயத்தின் ஆழத்தில் காயப்பட்ட அவள் அந்த நினைவுகளின் ரணத்திலிருந்து மீள முடியாமல் நிறையவே கஷ்டப்பட்டாள். விரக்தி, துக்கம், மன அழுத்தம் முதலானவை சேர்ந்து அவள் உலகம் சூனியமானது.  நடைப்பிணம் போல் வாழ்ந்த சைத்ராவை அந்த சூனிய உலகிலிருந்து மீட்க சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். தொடர்ந்து கவுன்சலிங் செய்ததன் விளைவாக சைத்ரா ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டாள்.

 

கவுன்சலிங் செய்த மனோதத்துவ நிபுணர் யோகாவும், தியானமும் அவளுடைய மன அமைதிக்குப் பேருதவியாக இருக்கும் என்றார். யோகா, தியானம் இரண்டையும் கற்றுத் தருவதில் யோகாலயம் நல்ல பெயரை எடுத்திருந்தது. அதனால் கிருஷ்ணமூர்த்தி மகளை அங்கே அனுப்பி வைத்தார். 

 

ஆரம்பத்தில் ஒருவார வகுப்புக்குப் போய் வந்த சைத்ரா ஒரு புதிய மனுஷியாய் தன்னை உணர ஆரம்பித்திருப்பதாய் சொன்னாள். அவர்கள் சொல்லித் தந்த பயிற்சிகளை எல்லாம் அவள் மிகவும் சிரத்தையுடன் செய்தாள். பழைய சந்தோஷத்துடன் அவள் இல்லாவிட்டாலும், அவள் அமைதியடைய ஆரம்பித்திருப்பதை சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும் உணர்ந்தார்கள்.

 

அதன் பின் சைத்ரா சேதுமாதவனிடமிருந்த ஆன்மீக புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள். அவள் அவருடன் ஆன்மீக விஷயங்களை மணிக்கணக்கில் பேசினாள். அவற்றில் அவருக்கிருந்த ஆழம் அவளை ஆச்சரியப்படுத்தியது.

 

கிருஷ்ணமூர்த்திக்கு ஆன்மீகத்தில் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. ஆனால் அவர் தந்தையிடமிருந்து மற்ற உயர்ந்த விஷயங்களைக் கற்றுக் கொண்டிருந்தார். நிறைய தான தர்மங்கள் செய்வதிலும், ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்வதிலுமே அவர் அதிக ஆர்வம் காட்டினார்.  மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நம்பிக்கை அவரிடம் ஆணித்தரமாய் இருந்தது. அதை சேதுமாதவனும் ஆதரித்தார். ஆனாலும்  மகன் ஆன்மீகத்தில் காட்டாத ஆர்வத்தை, பேத்தி காட்டியது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏதாவது ஒரு வழியில் அவள் மன அமைதி அடைந்து, ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டால் போதும் என்று அவர் எண்ணினார்.

 

ஆனால் விதியின் தீர்மானம் வேறாக இருந்தது. சைத்ரா அடுத்த மாதம் அடுத்த நிலை வகுப்புக்கு யோகாலயத்துக்கு இரண்டு வாரங்கள் போய் வந்தாள். போய் வந்தவள் சன்னியாசம் வாங்கி யோகாலயத்திலேயே துறவியாக மீதி வாழ்க்கையை வாழ விரும்புவதாகச் சொன்னாள். அதைக் கேட்ட போது சேதுமாதவன் பேரதிர்ச்சி அடைந்தார். கிருஷ்ணமூர்த்தியோ உடைந்தே போனார். அவர்கள் உலகம் இருண்டு போனது.

 

கிருஷ்ணமூர்த்தி மகள் மனதை மாற்ற நிறைய முயற்சிகள் செய்தார். எதுவும் பலனளிக்கவில்லை. முடிவில் அவர் கண்கலங்கிச் சொன்னார்.  உன்னை விட்டால் எங்களுக்கு வேற யாருமில்லை சைத்ரா

 

சைத்ராவும் அதை உணர்ந்தே இருந்ததால் அவர் அப்படிச் சொன்னவுடன் கண்கலங்கினாள். ஆனாலும் அவள் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. “என்னை மன்னிச்சுடுங்கப்பா. எனக்கு துறவுல தான் நிம்மதி கிடைக்கும்னு தோணுது..”

 

சேதுமாதவன் சொன்னார். “சைத்ரா, காதல்ல காயப்பட்டிருக்கிற உன் மனசுக்கு, தியானம், யோகா எல்லாம் ஒரு மருந்தாயிருக்குங்கறதுல எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனா மருந்தே உணவாயிட முடியாதும்மா. சின்ன வயசுல இருந்தே உனக்கு துறவுல நாட்டம் இருந்திருந்தால் நான் நிச்சயம் நான் உன்னைத் தடுத்திருக்க மாட்டேன். ஒரு ஆள் ஏமாத்துனதுக்கு உலக வாழ்க்கைல இருந்தே நீ ஒதுங்கிக்கறது சரியான முடிவாய் எனக்குப் படலை

 

சைத்ரா தன் தந்தையை எந்த அளவுக்கு நேசித்தாளோ, அந்த அளவுக்குத் தன் தாத்தாவை மதித்தாள். ஆழமானவர், அமைதியானவர், நேர்மையானவர், மிக நல்ல மனிதர், உண்மையான ஆன்மீகவாதி, என்ற சொற்களுக்கெல்லாம் அடையாளமாக வாழும் மனிதராகத் தான் அவரைப் பார்த்தாள். அவர் சொன்னதில் அவள் தவறு காணவில்லை. ஆனால்இப்போதைக்கு எனக்கு இந்த முடிவு தான் சரியானதா படுது. ஒருவேளை தவறுன்னு பிறகு எனக்குப் புரிஞ்சுதுன்னா, கண்டிப்பா நான் திரும்பி வர்றேன் தாத்தா.” என்று சொல்லி, தான் எடுத்த முடிவில் அவள் உறுதியாய் இருந்தாள். அவள் உறுதியாய் இருப்பதைக் கண்டு, வேறு வழியில்லாமல், அவள் துறவியாவதற்கும் அவர்கள் அனுமதியளித்தார்கள்.

 

சில அமைப்புகளில் செய்வது போல துறவறம் பூணுபவர்களை மொட்டை அடிக்கும் வழக்கம் யோகாலயத்தில் இருக்கவில்லை. பூ, பொட்டு முதலான அலங்காரங்களைத் தவிர்ப்பதும், காவியுடை, அணிவதும் மட்டுமே  அங்கு அவசியங்களாக இருந்தன. எனவே சைத்ரா என்றாவது குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பினால் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்து விடலாம்...

 

அப்படி ஒரு நாள் சைத்ரா திரும்பிவரக்கூடும் என்ற இந்த எதிர்பார்ப்பில் தான் கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் இருந்தார்கள். அப்படி இருக்கையில் தான், அவள் துறவியாகப் போய் மூன்று மாதங்கள் கழித்து, இந்த மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது...

 

எத்தனையோ துக்கங்களையும், இழப்புகளையும் சந்தித்து சமீப காலமாகத் தான், சேதுமாதவனும், கிருஷ்ணமூர்த்தியும், நடந்ததை எல்லாம் ஏற்றுக் கொண்டு அமைதியடையப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதன் அபூர்வமாய் எப்போதாவது உணரும் அமைதிக்கும் கூட அற்பாயுசு தானோ?....


(தொடரும்)

என்.கணேசன்


தற்போது விற்பனையில்




716 பக்க நாவலை வாங்கிப் படிக்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் அழைக்கவும்.

Thursday, June 22, 2023

சாணக்கியன் 62

 

ந்திரகுப்தனும் சின்ஹரனும் மாளவத்தை அடைந்த போது அங்கே ஒருவித மயான அமைதி நிலவியது. தெருக்களில் நடமாடிய மனிதர்கள் முகங்களில் இறுக்கம் தெரிந்தது. ஆங்காங்கே காவலுக்கு நின்றிருந்த யவன வீரர்கள் மட்டுமே தங்களுக்குள்ளே கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகம் அவர்களுடன் காவலுக்கு இருந்த  மற்ற வீரர்களிடம் தெரியவில்லை. பல வெளிப்பகுதிகளின் வீரர்களான அவர்கள் கட்டாயத்துக்கு நின்றிருப்பவர்களைப் போலத் தெரிந்தார்கள்.  மாளவத்தினுள் சந்திரகுப்தனும், சின்ஹரனும் உள்ளே நுழைந்த போது அவர்களுடைய அடையாள ஆவணங்கள் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன. சந்திரகுப்தன் தட்ச சீல கல்விக்கூடத்தின் மாணவனாகவும், சின்ஹரன் அந்தக் கல்விக்கூடத்தின் வாட்பயிற்சி ஆசிரியராகவும் அந்த அடையாள ஆவணங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.

 

நகர வாயிலில் இருந்த பரிசோதனைக் காவலர்கள் மாளவத்திற்கு அவர்கள் வந்த உத்தேசம் என்ன என்று கேட்ட போது புதிய மாணவர்களின் சேர்க்கை தட்சசீலக் கல்விக்கூடத்தில் சில மாதங்களில் துவங்கப் போகின்றது என்றும்  என்றும், அதுகுறித்த அறிவிப்பையும், சேர்க்கைக்கான விதிமுறைகளையும் ஒவ்வொரு பெருநகர முக்கியஸ்தர்களையும் கண்டு தெரிவித்து விட்டுச் செல்ல வந்திருப்பதாகவும் சொன்னார்கள். அதன் பிறகு அவர்களை நகருக்குள் அனுமதித்த காவலர்கள் பின் அவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவில்லை. ஆனாலும் அலட்சியமாக இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்திருந்த சந்திரகுப்தனும், சின்ஹரனும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டார்கள்.

 

மாளவத்தின் முன்னாள் நகரத்தலைவன் இப்போது அந்தப் பொறுப்பை இழந்திருந்தான். அவனும் மாளவத்தின் மற்ற நிர்வாக உறுப்பினர்களும் அலக்ஸாண்டரிடம் போர் புரியாமல் முன்பே சரணடைந்திருந்தால் இப்போதும் நிர்வாகத்தின் பொறுப்புகளில் இருந்திருக்கலாம். சரணடையாமல் போரிட்டுத் தோற்ற பின் சரண் அடைந்ததால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இப்போது சாதாரணப் பிரஜைகளாக மாறியிருந்தார்கள். அந்த முன்னாள் நகரத் தலைவன் வீட்டை சந்திரகுப்தனும் சின்ஹரனும் சென்றடைந்தார்கள்.

 

மாளவ முன்னாள் நகரத் தலைவன் அவர்களை சந்தேகத்துடன் பார்த்தான். சந்திரகுப்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்என்று சொன்னான்.

 

ஆச்சாரியர் பெயரைக் கேட்டவுடன் மாளவத்தின் முன்னாள் நகரத்தலைவன் அவர்களை மிகுந்த மரியாதையுடன் உபசரித்து இருக்கைகளில் அமர வைத்தான். ஆச்சாரியர் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கு வந்திருந்தார். பாரதம் என்ற புண்ணிய பூமியை அலெக்ஸாண்டர் என்ற யவனச் சக்கரவர்த்தி ஆக்கிரமிக்க எண்ணியிருப்பதாகவும், அவனுக்கு உதவ சில அரசர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொன்ன அவர் அலெக்ஸாண்டரை எதிர்த்து நிற்க மற்ற எல்லோரும் சேர்ந்து நின்று போரிட வேண்டும் என்று அவரிடம் உணர்வுபூர்வமாக வேண்டிக் கொண்டிருந்தார். மாளவத்தின் படை பலத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த நகரத் தலைவன்  அலெக்ஸாண்டர் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று திடமாக நம்பியிருந்தான். அதனால் அவர் பேச்சுக்கு அவன் அதிக முக்கியத்துவம் தரவில்லை. அவர்களது அண்டை நாடும், எதிரி நாடுமான ஷுத்ரகத்தோடு சேர்ந்து எதையும் செய்வதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. ஷூத்ரக  நாட்டுப் பிரதிநிதிகள் அவனிடம் வந்து கோரிக்கை வைத்தால் அது வேறு விஷயம். அவனாகச் சென்று அவர்களிடம் நட்புக்கரம் நீட்டுவது மாளவத்தின் பலவீனமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று நினைத்தவன் ஆச்சாரியரிடம் அப்படியே சொன்னான்.

 

ஆச்சாரியர் கிட்டத்தட்ட இதே விதமான மனப்போக்கைப் பெரும்பாலான இடங்களில் கண்டிருந்ததால் மனம் நொந்து அதிலிருக்கும் தவறை நீண்ட நேரம் விளக்கினார். ”அண்டை நாட்டுக்காரன் உங்கள் சகோதரன். பரதக் கண்டத்தின் பகுதிகளில் வசிப்பவர்கள் எல்லோரும் நம் சகோதரர்களே. சகோதரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி வாய்ந்த எதிரியை எதிர்த்தால் மட்டுமே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளாலும், வித்தியாசங்களாலும் நாம் பிரிந்து நின்றால் எதிரிக்கு நம்மை வெல்வது மிகச் சுலபம். தனித்தனியாக நம்மை வீழ்த்த முடிந்த எதிரி பிறகு நம்மை எப்படி நடத்துவான் என்பது நமக்குத் தெரியாது. அது நமக்கு மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும்…”

 

இப்படி ஆச்சாரியர் எத்தனையோ சொல்லிக் கொண்டே போனார். மாளவத்தை அலெக்ஸாண்டர் வெற்றி கொண்டால் அல்லவா அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று மாளவ நகரத் தலைவன் நினைத்துக் கொண்டான். அவனைப் பொருத்த வரை ஆசிரியர்கள் யதார்த்த அரசியலை அறியாதவர்கள். எதையும் ஏடுகளில் எழுதுவதும் சொல்லித் தருவதும் வேறு, யதார்த்தம் வேறு. இந்த அபிப்பிராயத்தினால் அவன் அவர் கருத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதேசமயம் அவர் பற்றி அவன் முன்பே உயர்வாகக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை மிகவும் மரியாதையாகவே நடத்திய அவன், சூழல் வரும் போது யோசிப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.

 

ஆனால் அவர் சொன்ன சூழல் வந்த போது தான் அவர் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்பது அவனுக்குப் புரிய வந்தது. மிகவும் தீவிரமாகப் போரிட்டும் சமாளிக்க முடியாமல் மாளவம் தோற்றது மட்டுமல்லாமல் யவனர்களின் வெறியாட்டத்தில்  பெண்கள், குழந்தைகள், முதியோர் எல்லாரும் கூடப் பலியான போது அவன் அடைந்த மன உளைச்சல் சாதாரணமானதல்ல. அவனுடைய மனைவி, மகளைக் கூட அவன் பலி கொடுக்க வேண்டி வந்தது. காயப்பட்ட அலெக்ஸாண்டர் இறந்து விடவில்லை என்பது உறுதியாகிற வரை யவன வீரர்களின் வெறியாட்டம் அடங்கவில்லை. சரணடைய வேண்டி வந்த போது அவன் உணர்ந்த வேதனை, துக்கம் காலப் போக்கிலும் குறையவில்லை. மாளவத்துக்கு நேர்ந்த கதியைக் கண்டு பயந்து போன ஷூத்ரகம் உடனே சரணடைந்து தங்கள் வீரர்கள், மக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டது.    

 

ஆச்சாரியர் அனுப்பி வைத்த ஆட்களைக் காணும் போது மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவனுக்கு நடந்ததெல்லாம் நினைவில் வந்து காயங்கள் புதிப்பிக்கப்பட்டன. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் அங்கு வந்த காரணத்தை மிகுந்த மரியாதையுடன் கேட்டான்.

 

சந்திரகுப்தன் தாழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தான். ”நடந்த நிகழ்வுக்கும், தங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு துக்கங்களுக்கும் ஆச்சாரியர் தன் மனமார்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்திருக்கிறார். நடந்து முடிந்ததை மாற்றும் சக்தி நம் யாருக்கும் இல்லையென்றாலும் இனி நடக்கவிருப்பதைத் தீர்மானிக்கும் சக்தியை நாம் இழந்து விடவில்லை என்பதால் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் தங்களைக் கேட்டுக் கொள்கிறார்.”

 

மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் மிகுந்த வருத்தத்துடன் சொன்னான். ”எல்லாம் முடிந்த பின் இனி செய்ய முடிந்தது என்ன இருக்கிறது இளைஞனே. உயிருக்கு உடலே பாரமாகப் போய் விட்ட நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை நம்பி வாழும் ஒருசிலருக்காகவாவது நாங்கள் உயிரோடிருப்பது அவசியமாக இருப்பதால் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட முடியவில்லை. இல்லா விட்டால் அதையும் செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்போம்….”

 

சின்ஹரன் சொன்னான். “இனி செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் நிறையவே இருக்கின்றது நகரத் தலைவரே. நாம் சேர்ந்து முயன்றால் அன்னியர் ஆதிக்கத்தில் இருந்து நம்மால் கண்டிப்பாக விடுபட முடியும். அந்தச் செய்தியைச் சொல்லத் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.”

 

மாளவத்தின் முன்னால் நகரத் தலைவன் முகத்தில் வேதனையும், வருத்தமும் தெரிந்தன. அவன் சோகமாகச் சொன்னான். “ஒரு காலத்தில் இதே செய்தியை ஆச்சாரியர் நேரில் வந்து சொன்ன போது அதை அலட்சியப்படுத்தியதற்கான பலனை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அதற்காக இப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.  எங்கள் ஆயுதங்கள் கூடப் பறிக்கப்பட்டு விட்டன. எங்கள் ரதங்களும், குதிரைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. சிறையில் எங்களை யவனர்கள் அடைக்காததற்குக் காரணம் அத்தனை பெரிய சிறைச்சாலை இங்கு இல்லை என்பது தான். நன்றாக ஆட்சியில் இருந்த காலத்திலேயே எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது உயிர் தவிர அனைத்தையும் இழந்து முடமாக நிற்கின்ற நிலையில் எங்களால் செய்ய முடிந்ததாய் எதையும் என்னால் காண முடியவில்லை….”

 

சந்திரகுப்தன் சொன்னான்.  மனவுறுதி ஒன்றை இழக்காத வரை ஒருவரால் செய்ய முடியாதது எதுவுமில்லை தலைவரே. நீங்கள் பட்ட அவமானத்திற்கும், வேதனைக்கும் பதிலடி தராமல் இனி என்றுமே நீங்கள் நிம்மதி காண முடியாதல்லவா? நீங்கள் தனியாக எதையும் செய்ய வேண்டியது இல்லை.  யவனர்களைத் துரத்த நீங்கள் எங்களுடன் துணிந்து நின்றால் போதும். வழியை நாங்கள் காட்டுகிறோம். என்ன சொல்கிறீர்கள்?”

 

மாளவத்தின் முன்னாள் நகரத் தலைவன் நம்ப முடியாமல் திகைப்புடன் அவர்களிருவரையும் பார்த்தான். இதுவும் சாத்தியமா என்று அவன் பிரமித்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த உறுதியைப் பார்த்த பிறகு மெல்ல நம்பிக்கை அவன் இதயத்திலும் துளிர்க்க ஆரம்பித்தது. அவன் உணர்ச்சி வசப்பட்டவனாகச் சொன்னான். “என் கடைசி மூச்சு உள்ள வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயார் வீரனே. தோல்வியாளனாக இறக்காமல் வெற்றிக்கான முயற்சியில் இறந்து போவதையும் கூட நான் உயர்வாக நினைக்கிறேன். நான் தயார். என்னைப் போல் இங்கே பலர் இருக்கிறார்கள். அவர்களும் தயார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாங்கள் என்ன செய்ய வேண்டும். அதைச் சொல்லுங்கள்.”

 

(தொடரும்)

என்.கணேசன் 



 

Monday, June 19, 2023

யோகி 1




இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதுமாக என் சொந்தக் கற்பனையே என்றும், எந்த நிஜ மனிதர்களையும், உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிடுவன அல்ல என்றும் உறுதியாகக் கூறுகிறேன்.

                                                      என்.கணேசன்

 


சேதுமாதவனிடம் தபால்காரர் தந்து விட்டுப் போன தபால் உறையில் அனுப்பியவரின் முகவரி இருக்கவில்லை. தபால் அவர் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு வந்திருந்தது. முகவரி கோணல் மாணல் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த உறைக்குள் ஏதோ சிறிய துண்டுச்சீட்டு தான் இருக்கும் போலிருந்தது. கிருஷ்ணமூர்த்தி யாருக்காவது  நன்கொடை அனுப்பி, அதைப் பெற்றுக் கொண்டவர்கள் அனுப்பிய ரசீதாக இருக்கலாம்...

 

அந்தத் தபால் உறையை மகன் அறையில் மேசை மீது வைத்து விட்டுத் திரும்பவும் ஹாலுக்கு வந்த சேதுமாதவன் சோபாவில் அமர்ந்து, பகவத்கீதையைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருடைய மனம் ஏனோ கீதையில் மறுபடி லயிக்க மறுத்தது. காரணம் புரியாத கலக்கம் அவர் மனதில் மெல்ல எழ ஆரம்பித்தது.

 

இது போன்ற உணர்வு சேதுமாதவனுக்குப் புதிதல்ல. அபூர்வமாய் அவர் அடிமனதில் இதற்கு முன்பும் இதேபோல் உணர்ந்திருக்கிறார். அப்படி உணர ஆரம்பித்த ஒருசில நாட்களில் ஏதாவது ஒரு துக்ககரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கிறதுமுதல் முறை அப்படி உணர ஆரம்பித்து ஒரு வாரத்தில் அவர் மனைவி மாரடைப்பில் காலமானாள். இரண்டாவது முறை அப்படி உணர ஆரம்பித்து ஒரு மாத காலத்தில் அவருடைய மருமகள் ஒரு விபத்தில் காலமானாள்.

 

இந்தக் கசப்பான முன் அனுபவங்களினால், அவரால் தொடர்ந்து கீதையின் ஞான யோகத்தில் லயிக்க முடியவில்லை. பகவத்கீதையை மூடி வைத்து விட்டு அவர் கடிகாரத்தைப் பார்த்தார்மணி ஒன்று. ‘கிருஷ்ணா க்ளினிக்கில் இருந்து வந்திருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் இன்னும் ஏனோ வரவில்லை…’

 

தொலைக்காட்சி ரிமோட்டை எடுத்து அழுத்தி, அவர் செய்திகள் பார்க்க ஆரம்பித்தார். செய்தியாளர் சீனாவில் ஆரம்பித்திருக்கும் கொரோனா என்னும் அபாயகரமான வைரஸ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சீனாவைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிருக்கும் அந்த வைரஸ், அங்கிருந்து கேரளாவுக்கு வந்திருக்கும் பயணிகள் மூலம் இந்தியாவுக்கும் வந்திருக்கிறது என்று செய்தியாளர் பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார்...

 

போர்ட்டிகோவில் கிருஷ்ணமூர்த்தியின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சேதுமாதவனின் மனம் சற்று நிம்மதி அடைந்தது

 

தொலைக்காட்சியில் அடுத்ததாக, தமிழக முதலமைச்சர் அருணாச்சலம் சிக்கலான இருதய அறுவைச் சிகிச்சை ஒன்றுக்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போகும் செய்தி வந்தது. முதல்வர் தளர்ச்சியுடன் விமானம் ஏறும் காட்சியையும் காட்டினார்கள். அதைப் பார்க்கையில் சேதுமாதவனுக்கு வருத்தமாக இருந்தது.

 

அவர் பின்னாலிருந்து கிருஷ்ணமூர்த்தியின் குரல் கேட்டது. ”உங்க ஃப்ரண்டு, ட்ரீட்மெண்டுக்காக அமெரிக்கா போயிட்டாரா?”

 

ம்.... ஆமா.... அவனுக்கும் என் வயசு தான். எழுபத்தியஞ்சு முடியப் போகுதுன்னு நினைக்கிறேன். சுறுசுறுப்பா நல்லா தான் இருந்தான். திடீர்னு சுகவீனம்னு மூனு நாள் முன்னாடி ந்யூஸ்ல சொன்னாங்க. இப்ப இந்த ந்யூஸ்

 

நீங்க அவரைக் கடைசியா நேர்ல எப்ப சந்திச்சீங்க?”

 

சேதுமாதவன் சிறு குற்றவுணர்ச்சியுடன் சொன்னார். “அவனைப் பார்த்தே ஐம்பது வருஷமாச்சு.... அவன் கல்யாணத்துல பார்த்தது. அப்ப அவன் எம்.எல்.ஏ கூட இல்லை. ஆனா அப்பவே கட்சில தீவிரமா இருந்தான்...”

 

அதுக்கப்பறம் நீங்க ஏன் அவரைப் போய் பார்க்கலை.” கிருஷ்ணமூர்த்தி ஆச்சரியத்துடன் கேட்டார். இது அவர் பல காலமாக, கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வி.

 

என் உத்தியோகம் கௌஹாத்தி, பாட்னா, டெல்லி, நாக்பூர், மங்களூர், ஹைதராபாத்னு பல இடங்கள்ல இருந்துச்சு. ரிடையர் ஆனப்பறம் தான சென்னைக்குத் திரும்பி வந்தேன்...”

 

சென்னைக்கு நீங்க வந்தே பதினஞ்சு வருஷமாச்சு. வேணும்னா நீங்க போய் அவரைப் பார்த்திருக்கலாம்...”

 

அந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரியில் பட்டப்படிப்பு வரை உடன் படித்தவர்கள் என்பதற்காக அதிகார உச்சத்திற்குப் போய் விட்ட நண்பனை, சந்திப்பு என்ற பெயரில் தொந்தரவு செய்வதற்கு சேதுமாதவனுக்கு சங்கோஜமாக இருந்தது. சிறுவயதிலிருந்தே அவர்கள் நெருக்கமாகத் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளி மலைக்கும் மடுவுக்குமிடையே உள்ள இடைவெளி. எம்.எல்., எதிர்க்கட்சித் தலைவர், பின் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சர் என அருணாச்சலம் சமூகத்தில் உயர்ந்து கொண்டே போயிருக்கிறார். அவருக்கு எத்தனையோ வேலைகள், சிக்கல்கள், பொறுப்புகள், தலைவலிகள், பயணங்கள் இருக்கும் போது பழைய நட்பின் பெயரில் சென்று பார்த்து இடைஞ்சலாக இருக்கும் என்று சேதுமாதவன் அப்போதெல்லாம் எண்ணியிருந்தார்.

 

அருணாச்சலம் விரும்பியிருந்தால் முதல்வரான அவருக்கும் சேதுமாதவன் விலாசத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமல்லஅவரும் தொடர்பு கொண்டிருக்க முடியும். அவரும் தொடர்பு கொள்ள முயற்சிக்காததால் சேதுமாதவனும் நண்பனைச் சந்திப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை..... இப்போது அடிமனதில் ஏற்படும் கலக்கம் அருணாச்சலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்தாக இருக்குமோ என்று சேதுமாதவனுக்குச் சந்தேகம் மெல்ல எழுந்தது. தொலைக்காட்சியை அணைத்து விட்டு அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

 

தனதறைக்கு உடைமாற்றச் சென்ற கிருஷ்ணமூர்த்தி மேசையில் இருந்த தபால் உறையை எடுத்துப் பார்த்தார்அனுப்பியவர் முகவரி இல்லாமல் சாதாரணத் தபாலில் வந்திருக்கும் அந்த உறையில் முக்கியமானது எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது. உள்ளே எதாவது விளம்பரச் சீட்டு இருக்கலாம் என்று தோன்றவே, அவர் அதைத் திறந்து பார்க்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்த அவர் அதை டீப்பாயில் வைத்து விட்டு, தந்தை அருகே அமர்ந்து, தன் கைபேசியில் தகவல்களைப் பார்ப்பதில் மூழ்கிப் போனார்.

 

வயசு 52 ஆனாலும் இவனும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க மாதிரி ஓய்வு நேரத்திலெல்லாம் செல்போனே கதின்னு இருக்கான். க்ளினிக்ல நோயாளிகளைப் பார்த்து களைச்சுப் போய் வர்றவனுக்கு ஒரு மாற்றம் தேவை தான். ஆனா அதுக்கு இசை, புஸ்தகம்னு எத்தனையோ நல்ல பொழுதுபோக்குகள் இருக்குஎன்று சேதுமாதவன் எண்ணினார்.

.

நீண்ட நேரமாக அந்தத் தபால் பிரிக்கப்படாமலேயே இருந்தது. சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த சேதுமாதவன், பின் மகனைக் கடிந்து கொண்டார். “அந்த செல்போனைக் கீழே வெச்சுட்டு அந்த தபால் என்னன்னு தான் பாரேன்.”

 

தந்தையைப் பார்த்து புன்னகைத்தபடி கிருஷ்ணமூர்த்தி அந்தத் தபாலை எடுத்துப் பிரித்தார். உள்ளே ஒரு சிறிய துண்டுச் சீட்டு தான் இருந்தது. பள்ளிப்பிள்ளைகளின் நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்த ஒரு தாளில் பாதி போலத் தெரிந்தது அதில் எழுதியிருந்ததைப் படித்த கிருஷ்ணமூர்த்தியின் முகம் வெளிறியது.

 

அந்தத் தாள் அவர் கையிலிருந்து நழுவித் தரையில் விழ, கிருஷ்ணமூர்த்தி எதோ பிரமை பிடித்தவர் போல அமர்ந்திருந்தார். சேதுமாதவன் திகைப்புடன் மகனைப் பார்த்தபடி எழுந்தார். “என்ன கிருஷ்ணா?”

 

கிருஷ்ணமூர்த்தி பதில் எதுவும் சொல்லாமல் போகவே, சேதுமாதவன் கீழே விழுந்திருந்த அந்தத் தாளை எடுத்துப் படித்தார்.

 

உங்கள் மகள் உயிருக்கு யோகாலயத்தில் பேராபத்து இருக்கிறது. எப்படியாவது அவளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.” என்று கோணல் மாணலான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கையெழுத்தை வைத்துக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக யாரோ இடது கையால் எழுதி அனுப்பி இருப்பது போல் தான் சேதுமாதவனுக்குத் தோன்றியது. அவருடைய உள்ளுணர்வு உணர்த்திய ஆபத்து இது தானோ?

 

அவர் குழப்பத்துடனும் கலக்கத்துடனும் மகனைப் பார்த்தார். கிருஷ்ணமூர்த்தி வறண்ட குரலில் சொன்னார். “யாரோ விளையாடறாங்கன்னு நினைக்கிறேன்ஆனால், அவர் சொன்னதை அவருக்கே நம்ப முடியவில்லை என்பதும் சேதுமாதவனுக்குப் புரிந்தது. ’மகளுக்கு எதாவது ஆபத்து என்றால் இவன் தாங்கவே மாட்டான்.’

 

யோகாலயம் அவர்கள் வீட்டிலிருந்து சுமார் இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஆசிரமம். அங்கு சில மாதங்களுக்கு முன் தான் கிருஷ்ணமூர்த்தியின் மகள் துறவியாகச் சேர்ந்திருக்கிறாள். சேதுமாதவனின் உள்ளுணர்வு இந்த முறையும் பொய்க்கவில்லை என்றால் அங்கு அவளுக்கு ஆபத்து இருப்பதாகச் சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை

 

சேதுமாதவன் தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாகச் சொன்னார். “அப்படி விளையாட்டாவே அது இருக்கட்டும். நீ ஒரு தடவை போய் அவளைப் பார்த்து, பேசிட்டு வந்துடேன்.”

 

கிருஷ்ணமூர்த்தி மெல்லத் தலையாட்டினார். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்த அவர் உடனே கிளம்ப முடிவு செய்தார்.

 

சேதுமாதவன் சொன்னார். “கொஞ்சமாவது சாப்பிட்டுட்டே போயேன் கிருஷ்ணா

 

வேண்டாம்ப்பா. போய்ட்டு வந்து சாப்டுக்கறேன்என்ற கிருஷ்ணமூர்த்தி மீண்டும் உடைமாற்றி, கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

 

சேதுமாதவன் கேட்டார். “நானும் வரட்டுமா, கிருஷ்ணா?”

 

வேண்டாம்ப்பா. நானே போய்ப் பார்த்து பேசிட்டு வந்துடறேன். நிஜமாவே பிரச்சனைன்னா அவளை கூட்டிகிட்டே வந்துடறேன்

 

நிதானமா போ. வேகமாய் போகாதேஎன்று சேதுமாதவன் சொன்னார்.

 

கிருஷ்ணமூர்த்தி தலையசைத்து விட்டு வேகமாய் வெளியேறினார்.


(தொடரும்)
என்.கணேசன்

தற்போது விற்பனையில்