Thursday, June 30, 2022

சாணக்கியன் 11

விஷ்ணுகுப்தரும் சந்திரகுப்தனும் குதிரைகள் பூட்டிய பயண வண்டியில் பயணித்தது ஒரு நீண்டநதிக் கரையோடு முடிவுக்கு வந்தது. ஒரு படகில் நதியைக் கடந்த பின்  மறுபடியும் நடந்தும், மாட்டு வண்டிகளிலும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.

 

விஷ்ணுகுப்தர் ஒவ்வொரு நாள் இரவும் அவன் என்னவெல்லாம் புதிதாகத் தெரிந்து கொண்டான் என்பதைக் கேட்பார். அவனுக்குச் சில நாட்களில் புதிதாகச் சொல்ல ஒன்றுமே இருக்காது. அப்படி அவன் புதிதாகக் கற்றதாக எதுவும் சொல்ல முடியாத நாளில்நீ இன்று உனக்குக் கிடைத்த நாளை வீணடித்து விட்டாய்என்று சொல்வார்.

 

அவர் சொல்லிக் கொடுத்ததை மட்டும் அவன் நினைவுபடுத்திச் சொன்னாலும்நீயாக என்ன கற்றாய்?” என்று கேட்பார். சந்திரகுப்தன் அவருக்குச் சொல்வதற்கென்றே ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் விழிப்புணர்வோடு கவனித்து வைத்திருந்து அவர் கேட்கையில் எதாவது சொல்வான். அவன் என்ன சொன்னாலும் அதை அவர் பாராட்டுவார். அது எத்தனை சிறிய விஷயமாக இருந்தாலும் அதை அவர் பாராட்டத் தவறியதில்லை. அவன் கற்றதில் குறைபாடு இருந்தாலும் பாராட்டி விட்டுத் தான் அந்தக் குறையைச் சுட்டிக்காட்டுவார். அவன் கற்ற விஷயம் மிக முக்கியமானதாக இருப்பதாக அவர் நினைக்கும் பட்சத்தில் அதையும் சொல்வார். ஆக ஒவ்வொரு நாளும் அந்த நாளின் முடிவிற்குள் எதாவது கண்டிப்பாகக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்து, போகப் போக அது அவனுடைய பழக்கமாகவே மாறி விட்டது.

 

அவனால் வேறு எதையும் கற்றுக் கொள்ள முடியாவிட்டால் வேறு மொழிகள் பேசும் சகபயணிகளிடமிருந்து புதிய முக்கியமான சொற்கள் சிலவற்றையாவது கற்றுக் கொண்டு அவரிடம் அவன் சொல்வான். அதையும் அவர் பாராட்டுவார். அவரைப் பொருத்த வரை புதிதாக எதுவும் கற்றுக் கொள்ளாத நாட்கள் வீணான நாட்கள். சிறியதாக இருந்தாலும் கூட ஏதாவது ஒன்றைக்  கற்றுக் கொண்ட நாட்களே வாழ்ந்த நாட்கள்.

 

பெரும்பாலும் அவர் அவர்களுடன் பயணிக்கும் ஆட்களைக் கவனிக்கச் சொல்வார். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கவனித்துச் சொல்லச் சொல்வார். அவன் சொல்லும் பதிலைக் கேட்டு விட்டு ஏன் அப்படி நினைக்கிறான் என்பதையும் சொல்லச் சொல்வார். சந்திரகுப்தன் அவரையும் அப்படிக் கேட்பதுண்டு. அப்போது அவர் சொல்லும் பதில் மிக நுணுக்கமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும்.  அதிலிருந்து கவனிக்கும் கலையையும் அவன் விரிவாகவே கற்றுக் கொண்டான். ஒரு முறை கூட அவர்நான் தான் உன்னைக் கேட்பேன். நீ என்னைக் கேட்கக்கூடாதுஎன்று கண்டித்ததில்லை.

 

அவர்களுடன் பயணிப்பவர்களில் சில சமயங்களில் ஒற்றர்களும் இருப்பதுண்டு.  ஒரு நாள் விஷ்ணுகுப்தர் ஒற்றர்கள் பற்றி அவனிடம் விரிவாகப் பேசினார். ”ஒரு நாட்டுக்கு ஒற்றர்கள் மிக அத்தியாவசியம். மன்னன் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவனுக்கு  அவனுடைய எதிரிகள் நடவடிக்கைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். எதிரிகள் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் அவன் நாட்டு மக்களே என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தால் தான் அவன் தன் தவறுகளைச் சரி செய்து கொள்ள முடியும். மக்களின் தவறுகளைக் கண்டுபிடித்து, தண்டனைகள் வழங்கி அவர்கள் போக்கை மாற்ற முடியும். ஏனென்றால் கண்டுகொள்ளப்படாத குற்றங்கள் நாட்டில் அதிகரிக்கவே செய்யும்…” 

 

ஒற்றர்கள் பெரும்பாலும் துறவிகள், ஆன்மிக யாத்திரை செல்லும் பயணிகள், அல்லது வணிகர்கள் வேடத்தில் தான் இருப்பார்கள் என்றும் அவர்கள் வேவு பார்க்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்தால் தான் அவர்கள் ஒற்றர்கள் என்று கண்டுபிடிக்க முடியும் என்றும் விஷ்ணுகுப்தர் சொன்னார்.

 

திடீரென்று உடன் பயணிக்கிறவர்களில் யாராவது ஒற்றர்கள் இருக்கிறார்களா  என்று அவர் சந்திரகுப்தனைக் கண்டுபிடிக்கச் சொல்வார். ஆரம்பத்திலேயே கூட சந்திரகுப்தன் ஒற்றர்களைச் சரியாகக் கண்டுபிடித்து விடுவான். ஒரு முறை சந்திரகுப்தன் ஒற்றனல்லாத ஒரு ஆளை ஒற்றன் என்று சொல்லி விட்டான்.

 

விஷ்ணுகுப்தர் கேட்டார். “எப்படிச் சொல்கிறாய்?”

 

அந்த ஆள் எல்லோரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். மற்றவர்கள் பேசும் போது காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டு அவர்கள் பேசுவதையே கேட்கிறார்.”

 

விஷ்ணுகுப்தர் சிரித்துக் கொண்டே சொன்னார். “சந்திரகுப்தா. சாதாரண மனிதர்களில் சிலருக்கும் அடுத்தவர்கள் விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் அபார அக்கறை உண்டு.  உருப்படியாகத் தங்கள் வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இல்லாத அவர்கள் கவனத்தை அடுத்தவர் வாழ்க்கைக்குத் திருப்பி அவர்கள் வாழ்க்கையையும், அந்தரங்கங்களையும் அறிவதில் சுவாரசியம் காட்டித் தெரிந்து கொண்டு அற்ப திருப்தி அடைவதுண்டு. நீ சொன்ன ஆள் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்...”

 

சந்திரகுப்தன் கேட்டான். “அப்படியானால் ஒற்றர்களுக்கும் இந்த மாதிரி மனிதர்களுக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி ஆச்சாரியரே?”

 

முகபாவனையிலும் நடவடிக்கைகளிலும் சூட்சும வித்தியாசங்கள் இருக்கின்றன. சரியாகக் கவனித்தால் உண்மையான ஒற்றர்களைக் கண்டுபிடித்து விட முடியும். ஒற்றனுக்கு அது தொழில். அவன் வேவு பார்க்கும் போது அவன் அறியும் விஷயங்கள் அவன் முகபாவனையை மாற்றி விடாது. ஆனால் மற்றவன் ஒற்றன் அளவுக்குத் தன் முகபாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மாட்டான். கேட்கும் விஷயங்களுக்கேற்ப அவன் முகபாவனை மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல் ஒற்றனுக்கு அது தொழிலானதால் அவன் நகர்வுகளில் ஒரு ஒழுங்கு முறையும், நளினமும் இருக்கும். அந்த அளவு சூட்சுமமான நகர்வுகள் சுவாரசியத்திற்காக அடுத்தவர்களைக் கவனிப்பவனிடம் இருக்காது.  ஒற்றன் அதிகமாகக் கவனிக்கும் தகவல்கள் முக்கிய மனிதர்களுடையதாகவும், அரசியலைப் பாதிக்கக் கூடியவை குறித்தும் இருக்கும். அவர்களுக்குச் சாதாரண மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் ஆர்வம் இருக்காது. ஆனால் மற்றவன் அவனுக்கு நேர்மாறாக இருப்பான்….”

 

சந்திரகுப்தன் விஷ்ணுகுப்தரைப் பிரமிப்புடன் பார்த்தான். ஆச்சாரியரின் அறிவுக்கெட்டாத விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா?

 

அந்த விளக்கத்திற்குப் பின் சந்திரகுப்தன் ஒரு ஒற்றனைக் கண்டுபிடிக்கத் தவறியதே இல்லை. எத்தனை ஜாக்கிரதையான ஒற்றனாக இருந்த போதும் அவனைத் தனித்தறிகிற கூரிய பார்வை அவனுக்கு வந்துவிட்டிருந்தது.

 

ஒரு நாள் விஷ்ணுகுப்தர் சொன்னார். “இனி பத்து நாட்களுக்குள் நாம் தட்சசீலம் சென்றடைந்து விடுவோம் சந்திரகுப்தா. அதன் பின் உன் கல்வி, முறைப்படி ஆரம்பித்து விடும்

 

சந்திரகுப்தன் உற்சாகமானான். வல்லபன் சொன்னது போல் அவன் அதிர்ஷ்டசாலி தான். ஆச்சாரியரிடமிருந்து கிடைத்த முறைப்படி அல்லாத கல்வியே அவன் அறிவையும், புரிதலையும் எத்தனையோ விசாலப்படுத்தி இருந்தது. பாடலிபுத்திரத்திலிருந்து கிளம்பிய சந்திரகுப்தனுக்கும் இப்போதிருக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் இப்போதே இருக்கிறது. முறைப்படியான கல்வியும் கிடைத்தால் அவன் எத்தனையோ உயரங்களுக்குப் போக முடியும்

 

அவன் அவரிடம் கேட்டான். “ஆச்சாரியரே. தட்சசீலத்தில் என்னவெல்லாம் கற்றுத் தருவார்கள்?” 

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “அங்கு வேதங்கள்,  தத்துவம், ஆயுர்வேதம், இலக்கணம், கணிதம், பூகோளம், வானவியல், வில்வித்தை, ஜோதிடம், பொருளாதாரம், அரசியல் ஆகியவை சொல்லித்தரப்படுகின்றன சந்திரகுப்தா. ஒருவன் எதையெல்லாம் கற்க விரும்புகிறானோ, அதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்ல நான் அங்கு ஆசிரியனான பின் இந்தப் பாடங்களில் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கும் ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருக்கிறேன். எந்தப் பாடத்திலும் நேற்றைய கல்வியோடு நிறுத்திக் கொள்வது வருங்கால மாணவ சமுதாயத்திற்குச் செய்யும் துரோகம் என்று நான் நினைக்கிறேன். நாம் நம் பங்குக்கு ஏதாவது புதிய அறிவார்ந்த சேர்க்கையைச் சேர்க்க வேண்டும். சிலரையாவது அதைச் செய்ய ஊக்குவித்தால் தான் கல்வி வளர்ச்சிப் பாதையில் இருக்கும்

 

இத்தனை நாட்கள் அவருடன் பழகியதில் இந்த விஷயத்தையும் சந்திரகுப்தன் கவனித்திருக்கிறான். எதையுமே அவர் எதிர்காலத்திற்கும் சேர்த்து யோசிக்காமல் இருந்ததில்லை. அவன் எதிர்காலத்தில் சாதிக்கிறானோ இல்லையோ அவரைப் போன்ற ஒரு தொலைநோக்குள்ள மனிதரைச் சந்திக்க முடிந்ததே பெரும் பாக்கியமென்று தோன்றியது.

 

சந்திரகுப்தன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.

 

(தொடரும்)

என்.கணேசன் 


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.




Monday, June 27, 2022

யாரோ ஒருவன்? 91


ரேந்திரன் தாமோதரை போனில் அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிவித்த போது தாமோதர் திகைத்தான். அவன் சொன்ன விஷயம் தாமோதருக்குப் புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அதிகரிக்குமோ என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. ஆனால் நரேந்திரன் நாகராஜை நூறு சதவீதம் நம்பியதால் தாமோதர் வேறு வழியில்லாமல் உடனடியாகக் கிளம்பினான்.

அந்த ஃபேக்டரியை அவன் பைக்கில் நெருங்கும் போது சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒருவன் பைக்கில் அமர்ந்தபடி அவனைப் பார்த்து லேசாகக் கைதூக்கினான்ஃபேக்டரி தாண்டியும் நூறு மீட்டர் தொலைவில் இன்னொரு ஆளும் பைக்குடன் நின்று கொண்டிருந்தான். அந்த இரண்டு ஆட்களும் ரா ஒற்றர்கள். சந்தேகத்திற்குரிய ஆட்கள் யாராவது அவர்களைக் கடந்து வந்தால் அவர்கள் வேலை தாமோதரை செல்போனில் எச்சரிப்பது. அப்படி செல்போன் அடித்தால் அவன் ஃபேக்டரி பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போகக்கூடாது. மாறாக நேராக அப்படியே கடந்து போய் விட வேண்டும். உள்ளே சென்ற பிறகும் வெளியே சந்தேகத்திற்குரிய மனிதர்களின் நடமாட்டம் இருக்குமானால் அவர்கள் தாமோதரிடம் போன் செய்து தகவலைத் தெரிவிப்பார்கள். அவர்கள் அந்த ஆபத்து நீங்கி விட்டது, யாரும் இப்போது கண்காணிக்கவில்லை என்று தெரிவித்தால் மட்டுமே அவன் வெளியே வர வேண்டும்...
                        
ஃபேக்டரி முன்னால் பைக்கை ஓரமாக நிறுத்தி அவசர அவசரமாக பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்த தாமோதர் மறுபடி வேகமாக கதவைச் சாத்தித் தாளிட்டான். பின் உள்ளே நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு உள்ளே எந்த மாற்றமும் இருப்பது போல் தோன்றவில்லை. கட்டிடத்தின் பின் பகுதி அறைகளில் தான் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் இருக்கின்றனர்...

தாமோதர் இரண்டு அறைகளையும் எட்டிப் பார்த்தான். சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும் அவரவர் அறைகளில் சங்கிலியில் கட்டுண்ட நிலையிலேயே மயங்கி விழுந்திருந்தார்கள். தாமோதர் முதலில் மதன்லாலை நெருங்குவது ஆபத்து என்று நினைத்து சஞ்சய் ஷர்மாவை நெருங்கினான். சஞ்சய் ஷர்மாவிடம் எந்த அசைவுமில்லைஅருகில் சென்று நின்ற தாமோதர் காலால் அவனை அசைத்துப் பார்த்தான். எந்த விதமான பாதிப்புமில்லாமல் சஞ்சய் ஷர்மா பிணம் போல் கிடந்தான்தாமோதர் அவனை ஆராய்ந்தான். சஞ்சய் ஷர்மா கால்களில் பாம்புகள் தீண்டிய அடையாளம் தெரிந்தது. அவன் மூக்கின் அருகில் தாமோதர் விரல் வைத்துப் பார்த்தான். மூச்சு இருந்ததால் உயிர் போய் விடவில்லை என்பது தெரிந்ததுமெல்ல இரும்புச்சங்கிலியைக் கழற்றி எடுத்துக் கொண்ட தாமோதர் இரண்டு நிமிடங்கள் எச்சரிக்கையுடன் நின்று பார்த்தான். இப்போதும் சஞ்சய் ஷர்மாவிடம் எந்த அசைவும் தெரியவில்லை.

திருப்தி அடைந்த தாமோதர் பக்கத்து அறைக்குச் சென்று மதன்லாலை சற்று பலமாகவே உதைத்தான். ஆனாலும் மிக லேசான முனகல் சத்தம் மட்டுமே மதன்லாலிடமிருந்து வந்தது. பின் மெல்ல அவனைக் கட்டியிருந்த சங்கிலியையும் தாமோதர் கழற்றி எடுத்துக் கொண்டான். மதன்லாலிடம் மட்டும் தாமோதருக்கு இரண்டு மடங்கு எச்சரிக்கை இருந்தது. ஆனால் அவன் பயப்பட்டது போல மதன்லால் திடீரென்று எழுந்து அவன் மேல் பாயவில்லை. அவனும் சஞ்சய் ஷர்மா போலவே அசைவற்றுப் படுத்திருந்தான்அவன் கையிலும் பாம்புக் கடிகள் தெரிந்தன. தாமோதர் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு வேகமாகக் கிளம்பினான்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்த போது அவனுக்குப் பிரமிப்பும், திகைப்புமே மேலோங்கி இருந்தன. இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை. நடப்பது நரேந்திரனுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கக்கூடும் என்ற பயம் மட்டும் அவனுக்கு இன்னமும் இருந்தது.

வெளிக்கதவை நெருங்கிய போது ஒரு போன்கால் வந்தது. “நான் சொல்லும் வரை வெளியே வர வேண்டாம். ஒரு கார் மிக நிதானமாகப் போகிறது. அதில் இருக்கும் ஆட்கள் ஃபேக்டரியைப் பார்த்தபடியே போகிறார்கள்....”

ஓடும் காரிலிருந்து பார்க்கும் போது ஃபேக்டரியின் பெரிய கேட்டில் பூட்டு இல்லாமல் இருப்பதை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை.... ஆனாலும் தாமோதர் இதயம் படபடக்க அப்படியே நின்றான். இரண்டு நிமிடங்கள் கழித்து மறுபடி அந்த ஆள் அழைத்துச் சொன்னான். “இனி வரலாம்... பிரச்னை இல்லை....”

தாமோதர் அவசரமாக வெளியே வந்து பூட்டைப் பூட்டினான். அடுத்த இரண்டு நிமிடங்களின் முடிவில் மூவருமே அந்த நெடுஞ்சாலையில் இருக்கவில்லை. ஃபேக்டரி எப்போதும் போல வெளிப்புறத்துக்குக் காட்சியளித்தது.


ணியின் வீட்டை நோக்கி காரில் போய்க் கொண்டிருக்கையிலும் கல்யாண் மனதில் நாகராஜின் வீட்டுக்கு நரேந்திரன் வந்து சென்றதே நெருடலாகத் தங்கியிருந்தது. அந்த ரா அதிகாரி நாகராஜ் அழைத்து வந்திருப்பானா இல்லை அவனாகவே வந்திருப்பானா? எது விஷயமாக வந்திருப்பான்? என்ற யோசனைகளுடனே அவன் மணியின் வீட்டை அடைந்தான்.

கதவைத் திறந்த மணி வேறு புதிய ஆள் போல் தெரிந்தான். அத்தனை மாற்றம் அந்த முகத்தில் இருந்தது. அதிர்ச்சியும் பீதியும் சோர்வும் கலந்து தெரிந்தது.  ’வந்தது போலீஸ்  என்று நினைத்துக் கொண்டானா ஏன் இப்படிப் பயந்து போய்விட்டான்என்று நினைத்த கல்யாண்என்ன ஆச்சு?” என்று அக்கறை காட்டிக் கேட்டான்.

முதல்ல உள்ளே வாங்கஎன்று சொல்லி கல்யாண் உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்டுக் கொண்ட மணி கல்யாணை அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்து விட்டு எதிரில் சோர்வுடன் அமர்ந்தான்.

எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. எங்க யார் வாழ்க்கைலயும்  இதுவரைக்கும் இந்த மாதிரி ஆனதில்லை. உண்மைல உங்க பக்கத்து வீட்டுக்காரன் யாரு சார்?”

கல்யாண் இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது. என்ன பிரச்சினையில் இவர்கள் சிக்கிக் கொண்டார்கள்? அவன் மெல்லச் சொன்னான். “புதுசா குடி வந்திருக்கான். அவனைப் பத்தி எங்களுக்கும் அதிகம் தெரியாது. பார்த்தாகுட் மார்னிங், குட் ஈவ்னிங்சொல்லிக்குவோம். அதைத் தவிர அதிக பழக்கம் இல்லை. ஏன் கேட்கிறீங்க?”

மணி பெருமூச்சு விட்டு விட்டுச் சொல்ல ஆரம்பித்தான். “நேத்து ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே வந்துட்டோம். போலீஸ்காரனுக யாராவது வந்தா எங்களை எச்சரிக்க ரெண்டு பேரை வீதியில தூரத்துல ரெண்டு பக்கமும் நிறுத்திட்டோம். வீட்டுக்கு முன்னாடியும் ஒருத்தனைக் காவலுக்கு நிறுத்திட்டு உங்க பக்கத்து வீட்டுக் கேட்டை நெருங்கினது தான் தெரியும். பின்னே எதுவும் எங்களுக்கு ஞாபகம் இல்லை....”

கல்யாண் கலவரமடைந்து கேட்டான். “என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு?”

மணி சொன்னான். “அது தான் தெரியலை. எங்களுக்கு ஞாபகம் வந்தப்பவும் நாங்க அந்த வீட்டு கேட் முன்னாடியே நின்னுட்டிருந்தோம். மணி மூனே முக்கால் ஆகி இருந்துச்சு... எங்க யாருக்குமே என்ன நடந்துச்சுன்னு தெரியல. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு போயிடுச்சு. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு வந்துச்சு. இடைப்பட்ட ஒன்னே முக்கால் நேரமும் என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. எவ்வளவோ யோசிச்சும் நினைவுக்கு வரல.”

கல்யாண் ஏமாற்றத்தையும், இனம் புரியாத பயத்தையும் உணர்ந்தவனாகக் கேட்டான்.  ”ஒன்னே முக்கால் மணி நேரமும் அந்த கேட் முன்னாடியே நின்னுகிட்டா இருந்தீங்க?”

மணி சொன்னான். “அது தான் தெரியலை.... ஆனா நாங்க எங்க வேலையை ஆரம்பிச்சு முடிச்சிருந்தா எப்படி களைப்பை உணர்வோமோ அந்தக் களைப்பு எங்க எல்லாருக்குமே இருந்துச்சு. எங்க இதயத்துடிப்பு கூட கூடுதலா இருந்துச்சு....”

கல்யாண் பலவீனமான குரலில் கேட்டான். “என் பக்கத்து வீட்டுக்காரனை நீங்க பார்த்தீங்களா?”

யாரையுமே பார்க்கலை. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் அமைதியா தான் இருந்துச்சு....”

நீங்க ரெண்டு பக்கமும் தள்ளி நிறுத்தியிருந்த ஆள்கள் எதாவது வித்தியாசமா பார்த்தாங்களா? இல்லை அவங்களுக்கும் நினைவு போயிடுச்சாஎன்று கல்யாண் சந்தேகத்துடன் கேட்டான்.

அவங்களுக்கு நினைவு போயிடல. அவங்க போலீஸ்காரனுகளோ, பிரச்சினைக்குரிய ஆள்களோ வர்றாங்களான்னு பார்த்துகிட்டு நின்னுட்டு இருந்தாங்க. அப்படி யாரும் வரலைன்னு சொல்றாங்க. எங்க பக்கத்துலயும் ஏதாவது வித்தியாசமா நடந்த மாதிரி தெரியலைன்னு சொல்றாங்க

கல்யாணுக்கு நாகராஜ் எதோ சித்து வித்தை செய்தி அவர்களை மதிமயங்கச் செய்திருப்பான் என்று தோன்றியது. அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் மணி அவன் கொடுத்த முன்தொகை மூன்று லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான். “அந்த ஆளு லேசு பட்டவனா தெரியல சார். நீங்க ஐம்பது அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிருக்கிற ரத்தினங்க தொலைஞ்சதுக்காக கவலைப்படாதீங்க. இத்தனை செஞ்சவன் உங்க உயிரை விட்டு வெச்சிருக்கானேன்னு சந்தோஷப்படுங்க. வேற எதுவுமே புரியலைன்னாலும் நாங்க அப்படித்தான் சந்தோஷப்படறோம்....”

கல்யாண் அந்த வார்த்தைகளில் இருக்கிற உண்மை உறைக்க பேரதிர்ச்சி அடைந்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.



Thursday, June 23, 2022

சாணக்கியன் 10

 

வர்களுடைய பயணவழியிலிருந்த ஒரு கிராமத்தில் தட்சசீலத்தின் பழைய மாணவன் ஒருவனை ஒரு மாலை நேரத்தில் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. ஒரு சிற்றரசின் மந்திரி குமாரனாகிய அவன் ஒரு நட்பு நாட்டின் இளவரசியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் போகும் வழியில் சில வீரர்களோடு அங்கு தங்கியிருந்தான்.

 

விஷ்ணுகுப்தரைப் பார்த்தவுடன்வணக்கம் ஆச்சாரியரே! என்னவொரு ஆச்சரியம்...” என்று சொல்லி அவர் காலில் விழுந்து ஆசிகள் பெற்றுக் கொண்டான்.

 

அவருக்கும் பயண வழியில் அவனைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. “வல்லபா. நானும் உன்னைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை...”

 

யாரிந்த சிறுவன் ஆச்சாரியரே?” என்று வல்லபன் கேட்கஎன் புதிய மாணவன் வல்லபாஎன்று விஷ்ணுகுப்தர் புன்னகையுடன் பதிலளித்தார்.  அவர் தன் பழைய மாணவனை சந்திரகுப்தனுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

 

நள்ளிரவு வரை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க சந்திரகுப்தன் அருகில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சந்திரகுப்தன் அது வரை விஷ்ணுகுப்தரைஅந்தணரேஎன்று அழைப்பதையே வழக்கமாக வைத்திருந்தான்.  வல்லபன் அவரை ஆச்சாரியரே என்று அழைப்பதைக் கேட்ட பிறகு தான், அவன் அழைக்கும் விதம் தவறென்பதை சந்திரகுப்தன் புரிந்து கொண்டான். வல்லபன் அவரிடம் காட்டிய மரியாதையின் அளவைப் பார்த்த பிறகு தான் அவன் தரும் மரியாதையும் போதாதென்பது அவனுக்குப் புரிந்தது.

 

வல்லபனின் சிற்றரசைப் பற்றியும் அக்கம்பக்கத்து பிரதேசங்களைப் பற்றியும் விஷ்ணுகுப்தர் விசாரித்துத் தற்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொண்டார். சந்திரகுப்தன் அவர் கேட்கும் கேள்விகளை மிக உன்னிப்பாகக் கவனித்தான். அவர் எதையெல்லாம் கேட்கிறார், கிடைக்கும் பதில்களில் எதைத் தொடர்ந்து மேலும் கேட்கிறார் எதையெல்லாம் அதிகம் கேட்காமல் விட்டு விடுகிறார் என்பதையெல்லாம் சந்திரகுப்தன் உற்றுக் கவனித்தான். அவர்கள் உறங்கச் செல்லும் வரை அவன் உறங்கவில்லை.

 

மறுநாள் கிளம்பிச் செல்வதற்கு முன் வல்லபன் விஷ்ணுகுப்தரும் சந்திரகுப்தனும் நெடுந்தூரம் வரை குதிரைகள் பூட்டிய பயணவண்டியில் செல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்து கொடுத்து விட்டுத் தான் போனான். இடையில் ஒரு நதி குறுக்கிட்டதால் தான் அவன் அதுவரையோடு மட்டும் ஏற்பாடு செய்ய முடிந்தது.  விஷ்ணுகுப்தர் மறுத்தும் அவன் அவர் மறுப்பை ஏற்கவில்லை. ”அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருக்கா விட்டால் நானே உங்களுடன் வந்திருப்பேன் ஆச்சாரியரே

 

தன் ஆச்சாரியரிடம் எல்லையில்லாத அன்புடனும், நன்றியுடனும் வல்லபன் இருந்ததை சந்திரகுப்தன் கவனித்தான். அதோடு  விஷ்ணுகுப்தரிடம் அவன் பேசியதை வைத்துப் பார்க்கையில் விஷ்ணுகுப்தருக்கு வல்லபனைப் போன்ற நிறைய மாணவர்கள் பல பகுதிகளில் இருப்பதும் தெரிய வந்தது. போகிற போது வல்லபன் சந்திரகுப்தனிடம் தனியாக அழைத்துச் சொன்னான். “நீ மிகுந்த அதிர்ஷ்டசாலி சந்திரகுப்தா. நாங்கள் எல்லாம் பலராகச் சேர்ந்து தான் அவரிடம் கற்றோம். தட்சசீலம் சென்றடையும் வரை நீ அவரிடம் தனியாகப் படிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய்.  ஆச்சாரியர் ஞானப் பொக்கிஷம். அவரிடம் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவும் கற்றுக் கொள்....”

 

அதை வல்லபன் சந்திரகுப்தனிடம் சொல்ல வேண்டியிருக்கவில்லை.  அவன் பயணத்தை ஆரம்பித்த சிலநாட்களிலேயே தன் அதிர்ஷ்டத்தை உணர்ந்து விட்டான். அறிந்து கொள்ள இத்தனை இருக்கிறதா என்ற பிரமிப்பும், விஷ்ணுகுப்தர் அறியாதது எதுவும் கிடையாதா என்ற கூடுதல் பிரமிப்பும் அவனுக்குள் அடிக்கடி எழுந்து கொண்டே இருந்தது. 

 

ஒவ்வொரு இடம் செல்கையிலும் அவர் அவனுக்கு அந்த இடம் சார்ந்த விஷயங்களைச் சொன்னார். அந்த இடத்தின் வரலாறு, வித்தியாசமான பழக்க வழக்கங்கள் என அவருக்குச் சொல்ல ஏதோ ஒன்று இருந்தது. அவருக்குத் தெரிந்தது எதுவுமே மேற்போக்கானதாக இருக்கவில்லை. அவர் சொன்னதில் அவன் எதாவது கேள்விகள் கேட்டால் தெளிவாகப் பதில் சொல்லுமளவு அவருக்குக் கூடுதல் விஷயங்கள் தெரிந்திருந்தன.

 

வல்லபன் குதிரைகள் பூட்டிய பயண வண்டியை அவர்களுக்காக ஏற்பாடு செய்தது அவர்களின் பயணத்தை வேகப்படுத்தியது. சந்திரகுப்தனும் வல்லபனைப் போலவே அவரை ஆச்சாரியரே என்று அழைக்க ஆரம்பித்தான். அவரிடமிருந்து அவன் நிறைய கற்றான்.

 

அவர் ஆரம்பத்திலேயே அவனிடம் ஒரு நாள் சொல்லியிருந்தார். “சந்திரகுப்தா! கற்க வேண்டியதை எப்போதும் சரியாகவும் முழுமையாகவும் நீ கற்க வேண்டும். அப்படிக் கற்றால் தான் உன் கல்வி உனக்குப் பயன்படுவதாக இருக்கும். அரைகுறையாய் கற்பது, உனக்கு எல்லாம்  தெரிந்திருக்கிறது என்ற தவறான கர்வத்தை ஏற்படுத்தி விடும். உன் கல்வியில் உள்ள குறைபாட்டால் நீ கற்ற கல்வி உனக்கு முக்கியமான நேரத்தில் சரிவரப் பயன்படாமல் போய்விடலாம்...”

 

இன்னொரு நாள் சொன்னார். “முழு கவனத்தோடு கற்றால் எதையும் சீக்கிரமாகவே கற்றுக் கொண்டு விடலாம்.  அப்படிக் கற்பது தான் தலைவனாக விரும்புவனுக்கு முக்கியத் தேவை. யாருக்குமே, கற்றிருப்பதை விட கற்க வேண்டியது என்றுமே அதிகமாகத் தான் இருக்கிறது.  வாழ்க்கையோ மிகவும் குறுகியது. முக்கியமானதைக் கற்று முடிக்கவே காலம் நமக்குப் போதாது. அதனால் காலத்தை என்றும் வீணடிப்பது ஒருவன் தன் எதிர்காலச் சிறப்புகளைக் குறைத்துக் கொள்வது போன்றது...”

 

அவர் சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பொருள் பொதிந்து இருப்பதைக் கண்டு அவன் வியப்பான். வீணான வார்த்தைகள் என்பதே அவரிடம் கிடையாது. வல்லபன் ஆச்சாரியரை ஞானப் பொக்கிஷம் என்று அழைத்ததில் மிகைப்படுத்தலே இல்லை என்று சந்திரகுப்தனுக்குத் தோன்றியது.

 

போகுமிடங்களின் வரலாறுகளையும் மனிதர்களையும் பற்றிச் சொல்லும் போது “நீ அரசனாகும் லட்சியம் கொண்டவன். உனக்கு இது பற்றி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு தான் ஆரம்பிப்பார்.

 

ஒரு நாள் சந்திரகுப்தனுக்கு அவனை விட அவர் எல்லா விதங்களிலும் அரசனாக அதிகத் தகுதி படைத்தவரென்று தோன்றியது. அதை அவன் வெளிப்படையாகவே அவரிடம் தெரிவித்தான். அவர் சிறு புன்னகையுடன் சொன்னார். “உன்னிடம் இருக்கும் மிக முக்கியமான ஒன்று என்னிடம் இல்லை. அது எனக்கு ஒரு குறைபாடு தான்.”

 

சந்திரகுப்தன் திகைத்தான். அவனுக்குத் தெரிந்த வரையில் அவனிடமிருந்து அவரிடமில்லாத சிறப்பு அம்சம் எதுவுமில்லை... “அது என்ன ஆச்சாரியரே?” என்று அவன் குழப்பத்தோடு கேட்டான்.

 

“உன்னிடம் நீ அரசனாக வேண்டும் என்ற பெருங்கனவு ஒன்றிருக்கிறது. அது என்னிடமில்லை. “ என்று விஷ்ணுகுப்தர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

 

“அப்படியானால் உங்களிடம் இருக்கும் பெருங்கனவு என்ன ஆச்சாரியரே?” என்று ஆவலுடன் சந்திரகுப்தன் கேட்டான்.

 

இது அவன் ஏற்கெனவே அவரிடம் கேட்டிருந்திருக்க வேண்டிய கேள்வி. ஏனென்றால் அவர் முன்பே ஒருமுறை சொல்லி இருக்கிறார். “ஒருவனிடம் நெருப்பாக ஒரு கனவு அவனுக்குள்ளே அணையாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு கனவு இருந்தால் எவனும் வீணாய் போக மாட்டான். அவன் வீணாய்ப் போகாமல் அவன் கனவு அவனைப் பார்த்துக் கொள்ளும்.” மற்றவர்களுக்குச் சொல்கின்ற இவரும் ஒரு பெருங்கனவு இல்லாமல் இருக்க மாட்டார்.

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “சிறு சிறு இராஜ்ஜியங்களாக, சிற்றரசுகளாகப் பிரிந்து கிடக்கும் என் பாரதம் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்ட பாரதமே என் கனவு சந்திரகுப்தா. மொழிகளால், ஜாதிகளால், வர்ணங்களால், குலங்களால், பிரதேசங்களால் நாம் வேறுபட்டாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் சந்திரகுப்தா. இப்போது இந்த வித்தியாசங்களால் பிரிந்து அந்த வித்தியாசத்தையே தங்கள் தனிப்பட்ட அடையாளமாகவும், பெருமையாகவும் எண்ணி குறுகிய கண்ணோட்டத்திலேயே அவரவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி இல்லாமல் ஒன்றுபடுத்தும் இந்தப் புண்ணிய பூமியின் கலாச்சாரத்தை ஏற்று ஒன்றுபட்ட பாரதமாக முன் வந்தால் இந்த தேசத்தின் சுபிட்சமும், உயர்வும் என்றும் குறையாது. அந்த நிலையில் என் பாரத தேசத்தை நான் பார்க்க வேண்டுமென்பதே என் பெருங்கனவு சந்திரகுப்தா”

 

சொன்ன போது அவர் கண்களில் பேரொளி தெரிந்தது. முகத்தில் மென்மை தெரிந்தது. அவன் தன்னை அரசனாக உயர்த்திக் கொள்ள ஆசைப்பட்டது போல அவர் விஷ்ணுகுப்தர் என்ற தனிப்பட்ட மனிதனுக்கென்ற ஆசை எதையும் வைத்துக் கொண்டிருக்காததை எண்ணி அவன் பிரமித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.