Thursday, April 28, 2022

சாணக்கியன் 2

 

விஷ்ணுகுப்தர் ஒரு கணம் அசைவற்று நின்று தன் உள்ளுணர்வைக் கூர்மையாக்கி தன்னைப் பின் தொடரும் மனிதனை யூகிக்க முயன்றார். இது போன்ற நேரங்களில் அவர் தன் கண்களை விட அதிகம் நம்புவது அவருடைய உள்ளுணர்வையே. ஆபத்துகளைச் சிறிய வயதிலிருந்தே சந்தித்துப் பழகிய அவருக்கு இந்த விஷயத்தில் உள்ளுணர்வு மிக உயர்ந்த நுட்ப நிலையை இயல்பாய் அடைந்திருந்தது. பின் தொடர்பவன் ஆபத்தான மனிதன் போலத் தோன்றவில்லை. அன்பின் அலைவரிசையையே அவரது உள்ளுணர்வு சுட்டிக் காட்டியது. தட்சசீலத்தில் படித்த அவருடைய மாணவர்களில் ஒருவராகவோ, உடன் பணியாற்றிய ஆசிரியர்களில் ஒருவராகவோ கூட இருக்கக்கூடும். நாளைய அறிஞர்கள் சிறப்புக் கூட்டத்தில் பங்கு கொள்ள இங்கே வந்திருக்கலாம். வந்த இடத்தில் அவரைப் பார்த்து விட்டு அவர் தானா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள பின் தொடர்வதாக இருக்கலாம். விஷ்ணு குப்தர் திடீரென்று வேகமாகப் பின்னால் திரும்பிப் பார்க்க, அவரைப் பின் தொடர்ந்து வந்த மனிதர் அதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியுடன் இரண்டடி பின்னால் நகர்ந்தார்.

 

விஷ்ணுகுப்தர் அந்த மனிதரைக் கூர்ந்து பார்த்தார். அவர் அப்படிப் பார்த்தவுடன் அந்த மனிதர் தான் எண்ணிய மனிதர் இவரல்ல என்று உணர்ந்தவர் போல் வேகமாக அவரைக் கடந்து செல்ல முயன்றார். அவரை இடைமறித்து நின்று விஷ்ணுகுப்தர் கடுமையான குரலில் சொன்னார். “நீர் என்னைப் பின் தொடர்ந்து வந்தது போல் இருந்தது.  அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?”

 

மன்னிக்க வேண்டும் சுவாமி. அந்த அரசமரத்தடியில் எதோ ஒரு யோசனையுடன் தாங்கள் நின்றதைப் பார்த்த போது ஏனோ என் பிள்ளைப் பருவ நண்பன் விஷ்ணு என்று எனக்குத் தோன்றியதால் அதை உறுதிப்படுத்திக் கொள்ள பின் தொடர்ந்தேன்.” என்று அந்த மனிதர் தவறு செய்து விட்ட தொனியில் சொன்னார்.

 

விஷ்ணுகுப்தர் முகத்தில் புன்னகை அரும்பியது. “அரசமரத்தடியில் உன் நண்பனைத் தவிர வேறு யாரும் நிற்க மாட்டார்களா கோபாலா?” என்று அவர் கிண்டலாகக் கேட்ட போது கோபாலன் ஒரு கணம் திகைத்து மறுகணம் ஆனந்தமாக நண்பனை அணைத்துக் கொண்டார். “விஷ்ணு.... விஷ்ணு....” என்று சொல்லியபடியே கண்கலங்கிய நண்பனை விஷ்ணுகுப்தரும் ஆரத் தழுவிக் கொண்டார்.

 

கோபாலன் அவருடைய பிள்ளைப்பருவ நண்பன். அவரிடம் கடைசி வரை அன்பு செலுத்திய குடும்பம் கோபாலனின் குடும்பம் தான். பாடலிபுத்திரத்தில் இருந்து போவதற்கு முன் அவருக்குக் கடைசியாக அன்னமிட்டவளும் கோபாலனின் தாயார் தான்.

 

கோபாலன் அவரை வற்புறுத்தி தனது வீட்டுக்கு அழைத்துப் போனார். நண்பர்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள். கோபாலனுக்கு நண்பனை இத்தனை வருடங்கள் கழித்துச் சந்திக்க முடிந்ததில் பேரானந்தம். மகிழ்ச்சி பொங்க அவர் தான் அதிகம் பேசினார். இப்போது பாடலிபுத்திரத்தின் பாடசாலையில் ஆசிரியராக இருப்பதாகத் தெரிவித்தார். தட்சசீலத்தின் பிரபலமான ஆசிரியராகப் பலரும் அவ்வப்போது சொன்ன விஷ்ணுகுப்தர், தன்னுடைய நண்பன் விஷ்ணுகுப்தனாகத் தானிருக்க வேண்டும் என்று முன்பே யூகித்திருந்ததைப் பெருமை பொங்கச் சொன்னார். கோபாலனின் மனைவி அவளுடைய இளைய சகோதரன் திருமணத்திற்கு குழந்தைகளுடன் வெளியூருக்குச் சென்றிருப்பதாகவும் நாளை அதிகாலை அவரும் கிளம்பவிருப்பதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வேறு யாரும் இருக்காததால் நண்பர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடிந்தது.    

 

கோபாலன் கண்கலங்கச் சொன்னார். “அந்த அரசமரத்தைக் கடந்து போகும் போதெல்லாம் உன் நினைவு எனக்கு வராமல் போனதில்லை விஷ்ணு. நீ இன்று நின்று அந்த மரத்தைத் தொட்டுப் பார்த்தது போல நானும் பல முறை தொட்டுப் பார்த்திருக்கிறேன். நாம் சுற்றி ஓடியாடி விளையாடி ஒளிந்து கொண்ட மரமல்லவா அது.... ”

 

விஷ்ணுகுப்தர் தன் நண்பனைப் போல் உணர்ச்சிவசப்படவில்லை, கண்கலங்கவில்லை. ஆனாலும் அன்பு நண்பனை இத்தனை காலம் கழித்து சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களுடைய நெருக்கமான பழைய இரண்டு நண்பர்களை கோபாலனிடம் விசாரித்தார். ஒருவன் பத்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், இன்னொருவன் காசி நகருக்கு இருபது வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்து விட்டதாகவும் கோபாலன் சொன்னார்.

 

சிறிது நேரம் இளமைப்பருவ நிகழ்வுகளை நினைவுகூர்ந்துப் பேசிய பிறகு கோபாலன் சொன்னார். “நம்முடைய ஆசிரியருக்கு நீ பாடலிபுத்திரத்திலிருந்து செல்ல அவரும் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றவுணர்ச்சி அவர் வாழ்ந்த நாள் வரை இருந்து கொண்டே இருந்தது விஷ்ணு. உன்னைப் போல் ஒரு சிறந்த மாணவனை அவர் பார்த்ததில்லை என்று எப்போதுமே சொல்லுவார்..... அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் அவரைப் பார்க்க நான் போயிருந்த போது, என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திக்க நேர்ந்தால் அவர் மனதார மன்னிப்பு கேட்டதாகச் சொல்லச் சொன்னார்....” சொல்லும் போதே கோபாலனுக்குக் கண்கலங்கியது.

 

விஷ்ணுகுப்தர் வறண்ட குரலில் சொன்னார். “தனநந்தன் ஆட்சி செய்யும் இடத்திலிருந்து செல்ல முடிந்ததை நான் பாக்கியமாகவே கருதுகிறேன் நண்பனே. அதனால் அவர் மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை... பலவீனங்கள் இல்லாத மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்!”

 

கோபாலன் நண்பனை நெகிழ்ச்சியுடன் பார்த்தார். அந்தப் பக்குவம் அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. சிறுவயதிலும் வயதுக்கு மீறிய பக்குவம் விஷ்ணுவிடம் இருந்தது. பேரறிவும், பக்குவமும் ஏற்கெனவே பெற்றிருந்த விஷ்ணு இப்போது அசாத்திய அமைதியையும், கூடப் பெற்றிருப்பதையும் கண்கூடாகவே அவரால் பார்க்க முடிந்தது.

 

விஷ்ணுகுப்தர் கேட்டார். “தனநந்தன் எப்படி இருக்கிறான் கோபாலா?. அவனிடம் ஏதாவது மாற்றமிருக்கிறதா?”

 

கோபாலன் சொன்னார். “காலம் எத்தனை கடந்தாலும் காகம் தன் கரிய நிறத்தை இழப்பதில்லை விஷ்ணு. தனநந்தன் எந்த மாற்றமுமில்லாமல் கஜானாவை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறான். அவன் வரி விதிக்காத பொருள்கள் மகதத்தில் இல்லை. வரிச்சுமையால் மக்களை நசுக்கி வருகிறான். அவனுடைய மந்திரிகளைத் தவிர அவனைப் பாராட்டுவோர் மகதத்தில் யாருமில்லை. உன் தந்தை போல் சத்தமாகக் கருத்து தெரிவிப்பவர்கள் யாருமில்லை என்றாலும் மகத மக்கள் எல்லோரும் அவர்களைப் பிடித்திருக்கும் பீடையாகவே அவனை நினைக்கிறார்கள்...”

 

விஷ்ணுகுப்தர் கேட்டார். “மகா கஞ்சனும், இம்மியளவு ஞான ஆர்வமும் இல்லாத தனநந்தன் பிறகெப்படி வருடா வருடம் அறிஞர் கூட்டத்தைக் கூட்டி கைநிறையப் பரிசுகள் வழங்குகிறான் கோபாலா? இப்படி பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல அறிஞர்களும் மாணவர்களும் தேடிவரும் இடமாக எப்படி அவன் அரசவை மாறியது?”

 

கோபாலன் சொன்னார். “பிரதம மந்திரி ராக்ஷசரும், மந்திரி வரருசியும் பண்டிதர்கள். அவர்களுடைய ஆர்வத்தாலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தனநந்தனை தான் நினைக்கிற வழியில் போக வைக்கிற நாசுக்கான திறமை ராக்ஷசருக்கு உண்டு. அவருக்காக தான் தனநந்தன் வேண்டாவெறுப்பாக அந்த நிகழ்ச்சியைச் சகித்துக் கொள்கிறான். அவரும் தனக்கு வேண்டிய விஷயங்களில் வேண்டியபடி தனநந்தனை ஆட்டுவிக்கிறாரே தவிர மக்களுக்கு வரி விதிக்கும் விஷயத்தில் தனநந்தனைக் கட்டுப்படுத்துவதில்லை..... ”

 

விஷ்ணுகுப்தரும் மகதத்தின் பிரதம மந்திரி ராக்‌ஷசரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். அறிவாளி, பண்டிதர், கடுமையானவர், அதிகம் சிரிக்காதவர், மகத நாட்டிடமும், தனநந்தனிடமும் பேரன்பு கொண்டவர், மிகச்சிறந்த நிர்வாகி, சிறந்த ஒற்றர்களை தன்வசம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் பலரும் சொல்லி இருக்கிறார்கள்...  

 

கோபாலன் நண்பனிடம் சந்தேகத்துடன் கேட்டார். “நீயும் நாளை நடக்கவிருக்கும் அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்குத் தான் வந்திருக்கிறாயா நண்பா?”

 

“தனநந்தனிடம் பரிசுகள் வாங்குவதை உன் நண்பன் விரும்புவான் என்று உனக்குத் தோன்றுகிறதா கோபாலா?”

 

“அறிஞர்களின் விவாதங்களைக் கேட்க நீ வந்திருக்கவும் வாய்ப்பில்லை. சொல்லப் போனால் நீ அறியாத விஷயஞானம் உள்ளவர்கள் அங்கிருக்கவும் வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் பின் ஏன் இத்தனை தொலைவு வரை வந்திருக்கிறாய் விஷ்ணு? பயண காலமே உனக்கு மாதக்கணக்கில் ஆகியிருக்குமே? நீ இங்கு வந்திருக்கும் உத்தேசம் தான் என்ன?”

 

(தொடரும்)

என்.கணேசன்




இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


Monday, April 25, 2022

யாரோ ஒருவன்? 82



நாகராஜ் மாதவனின் பெற்றோரைச் சந்தித்ததையும், பணம் அனுப்பியிருப்பதையும்  மறுப்பானா என்பது நரேந்திரனுக்குத் தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் இந்தத் தகவலை அவன் பெற்றிருப்பது நாகராஜை திகைப்படையவோ, அதிருப்தியடையவோ வைக்கும் என்று நரேந்திரன் எதிர்பார்த்தான். இது போன்ற சமயங்களில் சில உயர்மட்ட ஆட்கள் கோபத்தையாவது வெளிப்படுத்துவதை அவன் பார்த்திருக்கிறான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம் என்று கூடச் சிலர் அதிருப்தியுடன் சொல்வதுண்டு.

ஆனால் நாகராஜ் அலட்டிக் கொள்ளாமல் இருந்து அவனை அசத்தினான். நாகராஜ் ஒரு இரகசியத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வது போலச் சொன்னான்.  ”உண்மையில் மாதவன் என் நண்பன்லாம் கிடையாது. இறந்து போன ஆத்மாக்கள் என்னை எப்போதாவது தொடர்பு கொள்வதுண்டு... ஏதாவது தகவல்கள் சொல்றதுமுண்டு. அப்படி தான் ஒரு நாள் என்னை மாதவனோட ஆத்மா என்னைத் தொடர்பு கொண்டு பேசுச்சு. அவனோட பெற்றோரோட சேமிப்பெல்லாம் குறைஞ்சுகிட்டே வருதுன்னும், அவங்க ரொம்ப நல்லவங்கன்னும், எத்தனையோ தர்ம காரியங்கள் செய்யற நான் அவங்களுக்கும் பணம் தந்து உதவணும்னும் கேட்டுகிச்சு. அவங்க கிட்ட சும்மா பணம் தந்தா அவங்க ஏத்துக்க மாட்டாங்கங்கறதால சின்ன ஒரு கதை ஜோடிச்சு அவங்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பி வெச்சேன். அவ்வளவு தான்....”

நரேந்திரன் அவனை வினோதமாகப் பார்த்தான். ஆனால் அவன் அப்படிப் பார்த்தது நாகராஜை எந்த விதத்திலும் சங்கடப்படுத்தவில்லை. நரேந்திரன் மெல்லக் கேட்டான். “ஆனா நீங்க மாதவனோட சூட்கேஸ்ல எதையோ தேடிப் பார்த்தீங்கன்னும் அவன் வீட்ல சொன்னாங்களே...”

ஆமா மாதவன் ஆத்மா ஒரு பொருள் அவனோட பழைய உடைமைகள்ல இருக்கான்னு பார்க்கச் சொல்லியிருந்துச்சு. ஒருவேளை இருந்தா என்ன பண்ணனும்னும் சொல்லியிருந்துச்சு. அதனால தான் எதையோ சொல்லி அந்த சூட்கேஸையும் பார்க்க வேண்டியதா போச்சு. ஆனா அவன் சொன்ன பொருள் அந்த சூட்கேஸ்ல இருக்கலை.... அதனால எனக்கு அந்த வேலை செய்ய வேண்டியிருக்கல...”

அது என்ன பொருள்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

அப்படி ஒரு பொருள் இருந்து அதை நான் எடுத்திருந்தா உங்க கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பேன். அது இல்லாததால உங்க கிட்ட சொல்லறதுல அறமும் இல்லை, அர்த்தமுமில்லை...” நாகராஜ் அமைதியாகச் சொன்னாலும் கறாராகவே சொன்னான்.

எனக்கு இந்தக் கேஸுக்கு உபகாரமா இருக்கும்கிறதால தான் கேட்டேன்.”

இல்லை... உங்களுக்கு அந்தத் தகவல் எந்த விதத்திலும் பயன்படப்போறதில்லை. அதனால உங்களுக்கு அந்த வருத்தம் வேண்டாம்...”

நீங்க கோயமுத்தூர் வந்து மாதவனோட ஒரு நண்பன் வீட்டுக்குப் பக்கத்துல தங்கியிருக்கிறதும் மாதவனோட ஆத்மா சொல்லித்தானா?”

இங்கே நான் வந்து தங்கினது என் தனிப்பட்ட ஒரு வேலைக்காக. “

நரேந்திரன் பதில் வராது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பதில் தப்பில்லையே என்று எண்ணியவனாக அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்க பூர்விகம் பத்தி சொல்ல முடியுமா?”

சொல்ல முடியாது... “ எந்த விதமான தயக்கமும் இல்லாமல் நாகராஜ் சொன்னாலும் அவன் குரலில் கோபமோ, அகங்காரமோ தெரியவில்லை. ஒரு சாதாரண கேள்விக்குச் சொல்கிற சாதாரணமான பதில் போலத்தான் சொன்னான்.

மன்னிக்கணும்.... இந்த வழக்குக்கு எதாவது பயன்படுமோன்னு தான் கேட்டேன்.”

அது பயன்படாதுன்னு தான் நான் சொல்லலை. உங்களுக்கு உதவக்கூடிய ஒரு முக்கியமான தகவலைச் சொல்லட்டுமா?”

நரேந்திரன் திகைத்தான். “சொல்லுங்களேன்....”

உங்க எதிரி இந்தியாவுக்குள்ளே நுழைஞ்சிட்டான்...”

நரேந்திரன் திகைப்பு அதிகரித்தது. “எந்த எதிரி?”

உங்கப்பா மகேந்திரனைக் கொன்னவன்

அவன் தந்தை பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறான், அவர் இறந்த விதத்தையும் தெரிந்து வைத்திருக்கிறான்... அப்படியானால் அவன் தந்தையைக் கொன்றவன் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறான் என்ற தகவலும் சரியாகத்தானிருக்க வேண்டும்...

உங்களுக்கு எப்படித் தெரியும்?” நரேந்திரன் கேட்டான்.

ஒரு ஆள் என் முன்னால உட்கார்ந்திருக்கறப்ப அவங்க சம்பந்தப்பட்ட எத்தனையோ விஷயங்கள் எனக்குத் தெரியும்... அதுல சிலது அந்த ஆளுக்குப் பிரயோஜனப்படற தகவலா இருக்கும். சிலது பிரயோஜனம் இல்லாத தகவலா இருக்கும்....”

நரேந்திரன் அவனை பிரமிப்புடன் பார்த்தான். அவனுக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. “அப்படின்னா இன்னும் ஏதாவது தெரியற விஷயத்தைச் சொல்லுங்களேன்....”

இப்ப உங்கம்மா டெல்லில விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிட்டிருக்காங்க. மத்தியானம் ஒன்னும் சாப்பிடலை...”

நரேந்திரனுக்கு அது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் தாய் டெல்லியில் இருப்பதைச் சரியாக நாகராஜ் சொல்லியது ஆச்சரியமாக இருந்தது. “அப்படின்னா மாதவன் உண்மையா எப்படி இறந்தான்னு சொன்னீங்கன்னா எனக்கு உதவியாயிருக்கும்

நாகராஜ் புன்னகைத்தான். “எல்லாத்தையும் நானே சொன்னா உங்க திறமைக்கு வேலையிருக்காது. நீங்களே கண்டுபிடிங்க

சொல்லி விட்டு நாகராஜ் எழுந்து விட்டான். வேறுவழியில்லாமல் நரேந்திரனும் எழுந்திருக்க வேண்டியிருந்தது. “நன்றி

நாகராஜ் தலையசைத்தான். நரேந்திரன் கிளம்பினான். நரேந்திரன் வாசலைத் தாண்டும் போது நாகராஜ் எச்சரித்தான். “உங்களை ஆபத்து சூழ்ந்திருக்கு. எச்சரிக்கையாயிருங்க

அவன் குரலில் ஒருவித மென்மை தெரிந்தது. நரேந்திரன் தலை தாழ்த்தி வணங்கிச் சொன்னான். “சரிங்க. ரொம்ப நன்றி

அவன் வெளியே வந்து விட்டான். வெளியே காரில் ஏறுவதற்கு முன் தாயிற்குப் போன் செய்தான். “அம்மா என்ன பண்ணிகிட்டிருக்கீங்க...”

சுமித்ரா சொன்னாள். “விஷ்ணு சஹஸ்ரமநாமம் சொல்லிட்டிருந்தேன். ஏன் கேட்கறே நரேன்

சும்மா தான். சரி மத்தியானம் என்ன சாப்பிட்டே?’

அவள் அவனுடைய வித்தியாசமான கேள்விகளில் குழப்பமடைந்தது தெரிந்தது. ”இன்னிக்கு ஏகாதசி.... அதனால உபவாசம்.... அதனால தான் விஷ்ணு சஹஸ்ரநாமமும் சொல்லிட்டிருந்தேன். ஆமா ஏன் இந்த நேரத்துல போன் பண்ணி இதையெல்லாம் கேட்டுகிட்டிருக்கே

சும்மா தான். ராத்திரி பேசறேன்ம்மாஎன்று சொல்லி விட்டு கார் ஏறிய நரேந்திரன் பிரமிப்புடன் இருந்ததால் அவன் வெளியே காரின் அருகே நின்று கொண்டு போன் பேசிய போது வேலாயுதம் அவனை மொபைலில் புகைப்படம் எடுத்ததை கவனித்திருக்கவில்லை.


வேலாயுதத்துக்குத் தன் மொபைல் போனில் நரேந்திரனைப் படம் பிடிக்க முடிந்தது பரமதிருப்தியாக இருந்ததுஅவன் நாகராஜின் வீட்டுக்கு வந்த போது அக்கம்பக்கம் பார்க்கிறவனாக இருந்தான். அவர் உற்றுப் பார்த்ததைக் கவனித்து நின்று அவரைக் கூர்ந்து ஆராய்ந்தது அவருக்குச் சிறு படபடப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அரை மணி நேரம் பக்கத்து வீட்டில் இருந்து விட்டு வெளியே வந்தவன் போன் பேசியதில் முழுக்கவனமாக இருந்ததால் அவன் அறியாமல் அவனைக் கவனிக்கவும், படமெடுக்கவும் அவருக்கு முடிந்தது.

நாகராஜிடம் அருள்வாக்கு கேட்க வருபவனாக இருந்திருந்தால் அவன் முற்பகல் நேரத்தில் தான் வந்திருக்க வேண்டும். அன்று ஏற்கெனவே பதினோரு மணி வாக்கில் ஒரு சீக்கியர் வந்து போயிருந்தார். அவர் வந்த போதும், போகும் போதும் தெரிந்த பயபக்தி  நான்கு மணிக்கு வந்த இளைஞனிடம் இல்லை. இவன் என்ன வேலையாக வந்தானோ தெரியவில்லை...

அன்று இரவு மகன் வந்தவுடன் நரேந்திரனின் புகைப்படத்தை அவர் காண்பித்தார். “இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு இவன் வந்திருந்தான். என்ன விஷயமான்னு தெரியலை. ஆனால் நான் அவனைப் பார்க்கிறதைப் பார்த்து அவனும் நின்னு என்னைப் பார்த்தான். கொஞ்சம் வில்லங்கமான ஆள் போலத் தெரியுது...”

கல்யாண் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்துப் போனான். “அப்பா இவன் தான் மாதவன் சாவு விஷயமா  எங்களை விசாரிக்க வந்த ரா அதிகாரி.... இவன் ஏன் நாகராஜைப் பார்க்க வந்தான்?”

அந்தத் தகவல் வேலாயுதத்தையும் அதிர வைத்தது. ”என்னடா சொல்றே? அப்ப அவன் கேட்ட நாகராஜ் இந்த நாகராஜ் தானா?”

தெரியலை....” என்று கல்யாண் பலவீனமாகச் சொன்னான்.      

  

(தொடரும்)
என்.கணேசன்     

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




Thursday, April 21, 2022

சாணக்கியன் 1

 

கி.மு.336 ல் ஒரு நாள் மதியம் ...

 

பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மகத நாட்டின் தலைநகரான பாடலிபுத்திரத்திற்குள் வந்து கொண்டிருக்கும் அறிஞர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் தன் குதிரை மேல் அமர்ந்தபடி நகரக் காவல் அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் நாளை நடக்கவிருக்கும் அறிஞர்களின் சிறப்புக் கூட்ட நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள். ஆண்டு தோறும் பாடலிபுத்திரத்தின் அரசவையில் நடக்கும் அறிஞர்களின் சிறப்புக் கூட்ட நிகழ்ச்சியில் தங்கள் புலமைகளை வெளிப்படுத்தி பரிசுகளும், கௌரவமும் பெற வருபவர்கள் அதிகம். தர்க்கம், தத்துவம், தர்மம் என்று பல பிரிவுகளில் அரசவையில் அறிஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பங்கு பெறுபவர்கள் மட்டுமல்லாமல் அதைக் கேட்டு மகிழவும், தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் வருகின்றவர்கள் எண்ணிக்கையும் கூட  எப்போதும் அதிகமாகவே இருக்கும். 

 

நேற்றிலிருந்தே வர ஆரம்பித்து விட்ட இவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமிருக்கும் என்று நகரக் காவல் அதிகாரி மனம் கணக்கிட்டது. திடீரென்று அவன் கண்கள் ஒரு அந்தணர் மேல் நிலைத்தது. தோற்றத்தில் அவர் மற்றவர்களைக் காட்டிலும் பெரிதாக வித்தியாசப்படா விட்டாலும் தோரணையில் அவர் நிறையவே வித்தியாசமாய்த் தெரிந்தார்.  அவன் பார்வையைக் கூர்மைப்படுத்தினான். வித்தியாசப்படுத்தியது அவரிடம் தெரிந்த நிதானமும், அமைதியும் தான் என்று தோன்றியது. பிரளயமே வந்தாலும் இந்த மனிதர் அந்த நிதானத்தையும், அமைதியையும் இழக்க மாட்டார் என்று அவனுக்குத் தோன்றியது ஏன் என்று அவனுக்கே விளங்கவில்லை.  அவரை அவன் இதற்கு முன் பாடலிபுத்திரத்தில் பார்த்த நினைவில்லை. நகருக்கு அவர் புதியவர் போலிருக்கிறது. நாளைய நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வந்திருக்கிறாரா, பார்வையாளராக வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை….  

 

நகரக் காவல் அதிகாரியின் சிந்தனைகளில் இடம் பிடித்த அந்த அந்தணர் பங்கேற்பவராகவும் வரவில்லை, பார்வையாளராகவும் வரவில்லை என்பதை அவன் அறிய மாட்டான். நாளை நடக்கவிருக்கும் அந்தச் சிறப்புக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றிலும் அவரால் தனித்தனியாக மற்றவர்களுக்குப் பாடம் நடத்த முடியும். அது குறித்து மற்ற அறிஞர்கள் கருத்தையெல்லாம் பட்டியல் போடுவது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றிலும் அவற்றுக்கும் மேலான அவருடைய தனிப்பட்ட கருத்துகளையும் ஆணித்தரமாக அவரால் சொல்ல முடியும். நாற்பது வயதையே அவர் எட்டியிருந்தாலும் அவரிடம் போட்டி போட்டு வெல்லுமளவு திறமை வாய்ந்த எந்த மூதறிஞரும் கூட பாரதத்தில் இல்லை. தட்சசீலத்தின் புகழ்பெற்ற அந்த ஆசிரியரைத் தோற்றத்தால் அடையாளம் கண்டறிய முடியாத அறிஞர்களும் கூடஆச்சாரியர் விஷ்ணு குப்தர்என்ற பெயரை  அறியாதவர்களாக இருக்க மாட்டார்கள்.   

 

அந்த நகரக் காவல் அதிகாரி அறியாத இன்னொரு உண்மை இருக்கிறது. ஆச்சாரியர் என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் விஷ்ணு குப்தர்  பாடலிபுத்திரத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர். சிறுவனாக இருந்த போது இந்த நகரத் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தவர்.  இந்த நகரில் வாழ்ந்த நாட்களின் எத்தனையோ நினைவுகள் இப்போதும் அவர் உள்ளத்தில் பசுமையாக இருக்கின்றனஅவற்றில் நல்ல நினைவுகள் குறைவு, வேதனையான நினைவுகள் அதிகம்... நகரக் காவல் அதிகாரி பார்த்த அந்த அமைதிக்குப் பின்னால் எரிமலைகளே அதிகம் உண்டு. ஆனால் அவன் காரணம் தெரியாமல் யூகித்தது போல் எதுவும் அவர் கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டதோ வெடித்ததோ கிடையாது.

பயணியர்களுக்கான சத்திரத்தில் தன் உடைமைகளை வைத்து விட்டு அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய விஷ்ணுகுப்தர் நாளைய நிகழ்ச்சிக்காக அங்கே வந்து தங்கியிருக்கும் சிலரைப் பார்த்தார். நல்ல வேளையாக அவர்கள் யாரும் அவரைத் தெரிந்தவர்கள் அல்ல. அவர்களில் சிலர் தங்கள் சுகதுக்கங்களை ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் தாங்கள் தேர்ச்சி பெற்ற விஷயங்களைப் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நாளைய பங்கேற்புக்கு இன்று அவர்கள் இந்த வகையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. கண்களை மூடிக் கொண்டு அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு மறுபடியும் அவர் வெளியே கிளம்பினார்.

 

பாடலிபுத்திரம் நிறைய மாறியிருந்தது. அவர் விட்டுப் போன போதிருந்த பாடலிபுத்திரம் அல்ல இது. வீடுகள், வீதிகள், மனிதர்கள், கடைவீதியில் விற்றுக் கொண்டிருந்த பொருட்கள் என எல்லாவற்றிலும் சிறிய சிறிய மாற்றங்களை அவர் பார்க்க முடிந்தது. நடந்து கொண்டே வந்தவர் ஓரிடத்தில் இருந்த பெரிய அரசமரத்தைப் பார்த்தவுடன் அப்படியே நின்றார். இந்த அரசமரம் மாறவில்லை... அவர் சிறுவனாக இருந்த போது இந்த அரசமரத்தைச் சுற்றி நிறைய விளையாடியிருக்கிறார். அவரும் அவர் நண்பர்களும் ஒளிந்து கொள்ளும் இடமாக இந்த மரம் இருந்திருக்கிறது. அவர் தந்தை சாணக் சொற்பொழிவாற்றும் இடமாக இந்த மரம் இருந்திருக்கிறது. 

 

தந்தையின் நினைவு வந்தவுடன் அவர் மனம் கனத்தது. சாணக் சிறந்த வேத விற்பன்னர். பேச ஆரம்பித்தால் மடை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகளும், சுலோகங்களும் அவர் வாயிலிருந்து வரும். உண்மை என்று நினைப்பதை எந்த அச்சமும், தயக்கமும் இல்லாமல் அவர் சொல்வார். நகர மக்கள் வசீகரப்பட்டவர்களாக அவர் சொல்வதைக் கேட்டபடி நின்று கொண்டும், அமர்ந்து கொண்டுமிருப்பார்கள்.... அவர் தந்தையை கடைசியாக அவர் பார்த்ததும் இந்த மரத்தடியில் தான். இங்கிருந்து தான் அவர் தந்தையை வீரர்கள் கைது செய்து கொண்டு போனார்கள். ஒரு மனிதனுக்கு விஷய ஞானமும், தைரியமும் மட்டுமே போதுமானதல்ல என்று விஷ்ணு என்ற சிறுவன் பாடம் கற்றது இந்த மரத்தடியில் தான்.

 

உண்மைகளை உரக்கச் சொன்ன அந்த அறிஞர் என்ன ஆனார் என்பதைப் பற்றி அதற்குப் பின் நகர மக்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  விஷ்ணுவும், அவன் தாயும் மட்டுமே கவலைப்பட்டார்கள். விஷயம் தெரிந்தவர்களாகத் தெரிந்தவர்களிடம் இருவரும் துக்கத்துடன் விசாரித்தார்கள். அவர்களும் தெரியாதென்று கையை விரித்தவுடன் சில நாட்களில் விஷ்ணுவின் தாய் துக்கத்தினாலும், பட்டினியாலும் இறந்து போனாள்.    விஷ்ணு தனியனானான்...

 

இளமைக் காலத்தை நினைவுபடுத்திய அந்த அரசமரத்தை விஷ்ணு குப்தர் மெல்லத் தொட்டார். எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாக நின்றிருந்த அந்த மரத்தடியில் இப்போதும் யாராவது சொற்பொழிவாற்றுகிறார்களா, அப்படி சொற்பொழிவாற்றினால் கேட்க யாராவது கூடுவார்களா என்று யோசித்தபடியே விஷ்ணு குப்தர் அங்கிருந்து நகர்ந்தார்.

 

அவர் மனம் கடந்த கால நினைவுகளத் தொடர்ந்தது. தாயையும் இழந்த பின் விஷ்ணுவை இந்தப் பாடலிபுத்திரம் ஆதரிக்கவில்லை. “பவதி பிக்ஷாம் தேஹிஎன்று பிக்ஷை கேட்டு வீடு வீடாகச் சென்ற நாட்களில் அவனுக்கு பிக்ஷை கிடைக்கவில்லை. சிலர் மௌனமாகக் கதவைச் சாத்தினார்கள். சிலர் ராஜத்துரோகியின் மகனுக்குப் பிக்ஷை போட்டால் அதுவும் ராஜத் துரோகமாக நினைக்கப்படும் அபாயம் இருப்பதாக அவன் காதுபடப் பேசினார்கள். விஷ்ணு பட்டினி கிடந்த நாட்கள் அதிகம்.

 

அந்த அரசமரத்தைப் போலவே மாறாமல் இன்றும் இருப்பவன் இந்த மகத தேசத்து அரசன் தனநந்தன். அவனுடைய அநியாய வரிகள், அராஜகப்போக்கு, அகங்காரம், குடிமக்களின் நன்மை குறித்த அலட்சியம் இதெல்லாம் குறித்து தான் சாணக் அக்காலத்தில் போர்க்குரல் எழுப்பியிருந்தார். யாருடைய நலத்தில் அக்கறை கொண்டு அவர் குரல் எழுப்பினாரோ அந்த மக்கள் அவர் என்ன ஆனார் என்று கவலைப்படவில்லை; அவர் மகன் மீது கருணை காட்டவில்லை. அவனுக்குக் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியரும் ஒரு நாள் அவனுக்குக் கற்றுத் தருவதில் தயக்கம் காட்டவே இனி அங்கு வாழ்வதில் அர்த்தமில்லை என்றுணர்ந்து அன்றே விஷ்ணு பாடலிபுத்திரத்திலிருந்து ஓடிப்போனான். நீண்ட பயணத்திற்குப் பின் அவன் அடைந்த தட்சசீலம் அவனுக்கு அடைக்கலம் தந்தது. பிரசித்தி பெற்ற அங்குள்ள கல்விக்கூடம் அவனுக்குக் கல்வியைத் தந்தது. அவனுடைய பேரறிவை மெச்சி பின்பு அவனை அங்கு ஆசிரியனுமாக்கிக் கொண்டது....

 

விஷ்ணுகுப்தர் தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தார். திரும்பி அவர் பார்க்கா விட்டாலும் கூட அவர் எங்காவது நின்றால் பின் தொடரும் நபரும் நிற்பதையும், அவர் நடக்க ஆரம்பித்தால் நடப்பதையும் அவரால் உணர முடிந்தது.  யாரது?

 

(தொடரும்)

என்.கணேசன் 



இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்