தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, October 31, 2021
Saturday, October 30, 2021
Thursday, October 28, 2021
இல்லுமினாட்டி 126
உதய் க்ரிஷ் முன்பு விஸ்வத்தின் திட்டத்தைச் சொன்னவுடனேயே
தகவலைத் தந்தைக்குத் தெரிவித்திருந்தான். க்ரிஷ் ஆரம்பத்திலேயே
உதய்க்கு ஓரளவு நிஜத்தைத் தான் சொல்லியிருந்தான். அதுவும்
சிறிது திரித்துத் தான் சொல்லியிருந்தான். அதிலும்
பாதியைத் தான் கமலக்கண்ணனிடம் உதய் சொன்னான். க்ரிஷுக்கு
சக்தி வாய்ந்த மர்ம எதிரி யாரோ இருக்கிறான் என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்ததே
ஒழிய மற்றதெல்லாம் அவருக்கு குழப்பமாக இருந்தது. இளைய மகனின்
வெளிநாட்டுப் போக்குவரத்துகளில் ஆபத்து நிறைந்திருக்கிறது என்று ஆரம்பத்திலிருந்தே
உள்ளுணர்வில் அவர் உணர்ந்து வந்தார். சம்பந்தப்பட்டிருப்பது
க்ரிஷ் ஆனதால் கண்டிப்பாக அது தவறான விதங்களில் இருக்க வழியில்லை என்று தெரியும். இப்போது
நடத்த வேண்டி இருக்கும் நாடகத்தை உதய் சொன்ன போது அவர் சொன்னார். “இப்படி
நாம பயந்து இருக்க அவசியம் என்னடா இருக்கு. நம்ம செல்வாக்கால
எதாவது செய்ய முடியாதா?”
உதய் சொன்னான். “அப்படிச்
செய்ய முடியற மாதிரியிருந்தால் நானே செய்திருப்பேனே. இது சர்வதேச
அளவுல இருக்கற விஷயம்ப்பா....”
”அவனுக்கு
ஆபத்து எதுவும் இல்லையே” கமலக்கண்ணன் கவலையோடு கேட்டார்.
“இல்லப்பா. அந்த எதிரியைப்
பிடிக்கறதுக்குத் தான் இந்த நாடகம் தேவைப்படுது. எல்லாம்
சரியாய் போச்சுன்னா சீக்கிரமே அந்த எதிரியை அழிச்சுடலாம்னு அவன் சொல்கிறான்...”
பாதி புரிவது போலவும், பாதி புரியாதது
போலவும் இருந்தாலும் அவர் அதற்கு மேல் துருவிக் கேட்காமல் சரியென்று சொல்லி விட்டு “உங்கம்மாவை
ஒழுங்கா நடிக்க வைக்க முடியுமாடா?” என்று கேட்டார்.
“கிழவி ஏடாகூடமாய்
எதுவும் செய்யாமல் இருக்க நான் ஹரிணியையும் சிந்துவையும் நம்பியிருக்கேன். சொல்றது
எவ்வளவு தூரம் புரியும்னு தெரியல”
“எனக்கே
சரியாய் புரியல. அவளுக்கு எங்கே புரியப் போகுது....” என்று சொல்லி
விட்டு அவர் நகர்ந்தார். பத்மாவதியிடம் சாவகாசமாக இரண்டு நாள் பொறுத்துச் சொல்லலாம்
என்று நினைத்திருந்த உதயிடம் க்ரிஷ் போன் செய்து அன்றே நாடகத்தை ஆரம்பிக்க வேண்டும்
என்று சொன்னான். ஹரிணிக்கு க்ரிஷே போன் செய்து சொல்லியிருந்ததால் பத்மாவதிக்கும்
சிந்துவுக்கும் சொல்லும் பொறுப்பு உதய்க்கு வந்தது.
உதய் சிந்துவை உடனடியாக வரவழைத்தான். அவளிடம்
க்ரிஷ் சொன்னதை அப்படியே சொன்னான். க்ரிஷ் சிந்துவைக்
காட்டிக் கொடுக்காமல் அதே நேரத்தில் உண்மையை வேறு விதமாகச் சொல்லி ஏற்பாடு செய்திருக்கும்
விதம் புரிந்து க்ரிஷுக்கு சிந்து மனதார நன்றி சொன்னாள். அவள் அவனுக்கு
நிறையவே கடன்பட்டிருக்கிறாள். அவள் விஷயத்தில் அவசரப்படாமல் பொறுமையைக் கடைப்பிடித்து எப்படியோ
அழிந்து போகவிருந்த அவள் வாழ்க்கையை அவன் மீட்டுக் கொடுத்திருக்கிறான்.
உதய் அடுத்ததாக தாயை உட்கார வைத்து
க்ரிஷுக்கு சக்திவாய்ந்த மர்ம எதிரி ஒருவன் இருக்கிறான், அவனால்
ஆபத்து இருக்கிறது என்று ஆரம்பித்தான். பத்மாவதிக்கு அந்த
ஆரம்பத்தையே நம்ப முடியவில்லை. “அவனுக்கு அன்பைத் தவிர எதுவுமே தெரியாதேடா. அவனுக்கு
ஒரு எதிரியா. என்னடா சொல்றே?” என்று திகைப்புடன்
கேட்டாள்.
உதய் பெருமூச்சு விட்டுச் சொன்னான். “அவனை அந்த
எதிரி தப்பாய் புரிஞ்சுகிட்டான். அதனால தான் எதிரியாய் நினைக்கிறான்.”
“ஆட்சி உங்கப்பா
கைல இருக்கு. நீ ஒரு எம்.பி. இப்படி
இருக்கறப்ப அதைச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையாடா. அந்த அறிவுகெட்ட
எதிரியை நாலு தட்டு தட்டி அடக்கி வைக்க வேண்டாமாடா. இதுவும்
கூட உனக்குச் சொல்லியா தரணும்...”
சிந்து புன்னகைக்க உதய் அவளிடம் சிரித்துக்
கொண்டே சொன்னான். “கிழவி அரசியலுக்கு வந்திருந்தா நாடே ரணகளமாயிருக்கும். இது வயித்துல
க்ரிஷ் எப்படி பிறந்தான்னு தான் ஆச்சரியமாயிருக்கு”
”அப்புறம்
என்னடா. யார் வம்புக்கும் போகாமல் பாவம் ஆராய்ச்சி, படிப்பு, தியானம்னு
இருக்கறவனை எதிரியாய் ஒருத்தன் நினைச்சா ஒன்னா அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேர்க்கணும். இல்லாட்டி
தட்டி அடக்கி வைக்கணும்... அதைச் செய்யாமல் அவனால் க்ரிஷுக்கு ஆபத்துன்னு சொன்னா கோபம்
வராதாடா”
“சரி. நான் சொல்றதை
முதல்ல கேளு. அப்பறமா வசனம் பேசு. அந்த எதிரி
ரகசியமா ஒளிஞ்சு திட்டம் போட்டுகிட்டிருக்கான். க்ரிஷ்
இப்ப ஒரு இடத்துல பாதுகாப்பா இருக்கறதுனால அவனை அந்த எதிரிக்குப் பழி வாங்க முடியலை. அதனால அவன்
பாசம் வெச்சிருக்கிற என்னைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கான். அது க்ரிஷுக்குத்
தெரிஞ்சு போச்சு. அந்த திட்டம் வெற்றி அடைஞ்சுதுன்னு தெரிஞ்சா தான் ஒளிஞ்சுகிட்டிருக்கற
எதிரி வெளியே வருவான்னு க்ரிஷ் நினைக்கிறான். அவன் வெளிய
வந்தா தான் அவனைப் பிடிக்க முடியும்னு நிலைமை இருக்கு. அதனால நாம
ஒரு நாடகம் போடப்போகிறோம்.” என்று சொன்ன உதய் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் யார்
யார் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினான்.
பத்மாவதிக்கு ஆரோக்கியமாய் இருக்கும்
மகனை நடிப்புக்காகக்கூட உயிருக்கு அபாயமான நிலையில் இருப்பதாய் சொல்வது சரியென்று தோன்றவில்லை. “அந்த மாதிரி
பொய்யாய் கூடச் சொல்லக்கூடாதுடா. அதே மாதிரி உண்மையாகவே நடந்தாலும் நடந்துடும்.” என்று பயப்பட்டாள்.
உதய் சிந்துவைப் பார்த்து “நீ தான்
சொல்லேன்” என்ற பார்வை பார்த்தான்.
சிந்து பத்மாவதியிடம் சொன்னாள். “அத்தை நீங்க
இப்படி யோசித்துப் பாருங்க. இப்ப இவர் ஜாதகத்தில் ஏதோ கண்டம் வரும் நேரம் இருக்கு. இவர் ஆஸ்பத்திரியில்
சில நாள் இருக்க வேண்டியிருக்குன்னு வெச்சுக்குவோம். இந்த மாதிரி
நாடகம் போடறதுலயே அந்தக் கண்டம் கழிஞ்சுடலாம் இல்லையா”
பத்மாவதிக்கு கணவரிடம் ஜோதிடர் சொல்லி
இருந்ததும் நினைவுக்கு வர அவள் உடனே சம்மதித்தாள். ”நீ சொல்றதும்
சரி தாம்மா. அந்தக் கண்டம் அதோட போகட்டும். செய்யுங்க...”
“நீயும்
சோகமா இருக்கற மாதிரி நடிக்கணும். வாயைத் திறந்து பத்திரிக்கைக்காரன் கிட்டயோ, டிவி காரன்
கிட்டயோ பேசக்கூடாது. அமைதியா இருக்கணும். சரி தானா. ஏன்னா இது
சம்பந்தமா வர்ற செய்தியை எல்லாம் அந்த எதிரி கவனிச்சுகிட்டேயிருப்பானாம். உன் மூலமா
இதெல்லாம் நாடகம்னு அவன் தெரிஞ்சுக்கக் கூடாது. சரியா...”
பத்மாவதி யோசித்து விட்டுச் சொன்னாள். “சரிடா. என் சின்ன
வயசுல எங்கம்மா நிறைய கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாளையெல்லாம்
நினைச்சு நான் சோகமாய் இருக்கேன்.”
வங்கி லாக்கரில் இருந்த இரகசிய ஆவணத்தை கர்னீலியஸ் வெளியே எடுத்து பரபரப்புடன் புரட்டினார். அந்த முக்கியப் பக்கம் வந்தவுடன் படிக்க ஆரம்பித்தார்.
“முன்கூட்டிக்
கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை
கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு
சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும் புதிய முயற்சி
அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள்
அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல்
கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம்
போய்ச் சேர்க்கும்.. உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம்
இரு தளம் கொண்டது...
அங்கே மறுபிறவி மனிதனுக்குக் கவிதை வழி காட்டும். பெருவிழியில்
பெரும் சக்தி பெறுவான். நட்பு அறிவுறுத்தும். முடிவை விதி
அங்கே அவ்விருவர் மூலம் முடிவு செய்யும். அப்போது எழுதப்படும் விதி அவனுக்கும்
உமக்கும், இவ்வுலகுக்குமாய்ச் சேர்த்து எழுதியதாய் அமையும்...
”
கர்னீலியஸ் வரும் போது டைரியைக் கொண்டு
வந்திருந்தார். அதில் இதற்கு முன் பயிற்சியின் மூலம் கண்டுபிடித்து எழுதியிருந்த
வார்த்தைகளைச் சரி பார்த்தார். ‘நீங்கள் தொழுத இடம் போய்ச் சேர்க்கும்” என்பதற்குப்
பதிலாக “சேரும்” என்று நினைவுபடுத்திய சிறு தவறைத் தவிர எழுதியதில் வேறு பிழை
இல்லை. இரு தளம் கொண்டது என்ற வாக்கியத்திற்கு அடுத்து வரும் மீதி வார்த்தைகளையும் டைரியில் அவர் எழுதிக் கொண்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
Wednesday, October 27, 2021
Monday, October 25, 2021
யாரோ ஒருவன்? 55
தீபக் வீட்டை அடைந்த போது சரத் வாக்கிங் போயிருந்தான். நாகராஜின்
விவரங்கள் கல்யாண் மூலம் சரத்திற்கு முன்பே கிடைத்திருந்தன என்பதால் தீபக் மூலம் புதிய
தகவல் எதையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. தீபக் இரண்டு
நாட்களாக அந்தக் கனவின் பிடியிலிருந்து தப்பித்தும் இருந்ததால் நிம்மதியடைந்திருந்த
சரத் தீபக்கின் வரவுக்குக் காத்திருக்காமல் பழைய வழக்கப்படி தன் நேரத்திற்கு
வாக்கிங் கிளம்பியிருந்தான்.
தீபக் வந்த போது ரஞ்சனி சமையலறையில்
இருந்தாள். அவளிடம் அவன் ஆர்வத்துடன் சொன்னான். “அம்மா ஒரு
ஆத்மா என் கனவுல வந்ததைச் சொன்னேனில்லையா. அதுபத்தி
கூடுதல் ஒரு தகவல் கிடைச்சிருக்கு.”
ரஞ்சனி சொன்னாள். “அந்தக்
கனவு தான் இப்ப ரெண்டு நாளா வர்றதில்லைன்னு சொன்னியே. அப்புறம்
ஏன் திரும்பவும் ஆராய்ச்சி பண்றே. விட்டுட வேண்டியது தானே?”
“நீயும்
நாகராஜ் அங்கிள் மாதிரியே பேசறே. அதெப்படிம்மா ஒரு கொலை நடந்திருக்குன்னு ஒரு ஆத்மா வந்து
என் கிட்ட சொன்னதுக்கப்புறம் நான் கண்டுக்காம இருக்க முடியும். அது எத்தனையோ
பேர் கனவுல வராம என் கனவுல மட்டும் வந்து சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்குமில்லையா? அதுவும்
நாகராஜ் அங்கிள் உனக்கு நெருங்கின ஆளோட ஆத்மாவா இருக்கலாம், அது உன்
கூட தொடர்புகொள்ளப் பார்க்குதுன்னு வேற சொல்லி இருந்தாரே”
ரஞ்சனிக்கு முன்பே அந்தப் பாம்பு மனிதனைப்
பற்றிக் கேள்விப்பட்டிருந்தது எல்லாம் இனம் புரியாத பயத்தை உண்டுபண்ணியிருந்ததால் மகன்
இப்போது என்ன சொல்லப் போகிறானோ என்கிற படபடப்பு
மனதில் எழுந்தது. ”சரி என்ன தகவல்? அதைச் சொல்லு” என்றாள்.
“அந்த ஆத்மா
ஒரு கவிதைப் பிரியன் போல இருக்கு. அதனால தான் கவிதைகள் பிடிச்சிருக்கிற ஆளான என் கனவில் வந்து
அதைச் சொல்லி இருக்கு. நெருங்கினவன்னு நாகராஜ் அங்கிள் சொன்ன நெருக்கம் இந்த கவிதை
ஆர்வத்துனால வந்த நெருக்கமாய் இருக்கலாம். என்ன சொல்றே?”
”அதெப்படி
கவிதைப் பிரியன்னு அந்த ஆள் கண்டுபிடிச்சாராம்....”
“அம்மா அவர்
எதையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லைம்மா. நடந்திருக்கறது
எல்லாம் அவருக்கு கண் முன்னால அப்படியே தெரியற மாதிரி இருக்கும்மா. அவர் சொன்னார். “யாரோ ஒரு
பெண் அந்த ஆத்மாவிடம் கவிதை சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவன் அதை
ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான்...”னு”
ரஞ்சனி கையில் பிடித்திருந்த பாத்திரத்தை
அதிர்ச்சியில் நழுவ விட்டாள். அவள் அடிவயிற்றை ஏதோ ஒன்று கவ்வியது போல் உணர்ந்தாள். அவள் இதயத்துடிப்புகள்
வேகமெடுத்தன.
“என்னாச்சும்மா?”
ரஞ்சனி கஷ்டப்பட்டு சமாளித்தாள். “ஒன்னுமாகல. கைதவறிடுச்சு. அவ்வளவு
தான். நீ சீக்கிரம் போய் குளி. காலேஜ்
இருக்குங்கறது ஞாபகம் இருக்கட்டும்”
தீபக் குளிக்கப் போன பிறகு அவன் சொன்ன
வார்த்தைகளை திரும்பவும் மனதில் ஒலிக்க விட்டாள். அவள் மனதில்
முன்னொரு காலம் நிகழ்காலமாக வந்து ஒளிபரப்பாகியது. நாகராஜ்
சொன்ன நெருங்கிய ஆத்மா அந்த ஆத்மாவாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்த பிறகு அவளால் இயல்பாக
இருக்க முடியவில்லை. அந்த சந்தேகம் வேறுபல சந்தேகங்களைக் கிளப்பியது. அவளுக்குள்
ஒரு புயல் உருவாக ஆரம்பித்தது.
“இவரு உங்களப்
பாக்காம போகமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார்.” என்று பியூன்
சொல்லி விசிட்டிங் கார்டையும் நீட்டினான்.
நரேந்திரன் விசிட்டிங் கார்டை வாங்கிப்
பார்த்தான். ’ஜனார்தன் த்ரிவேதி’. “சரி அனுப்பு” என்றான்.
அடுத்த நிமிடம் வேகமாய் உள்ளே வந்த
ஜனார்தன் த்ரிவேதி நரேந்திரனுக்கு வணக்கம் கூடச் சொல்லாமல் அவனுக்கு முன்னால் இருந்த
நாற்காலியில் அமர்ந்து காட்டமாகக் கேட்டார். “என்ன நடக்குது
இங்கே?”
நரேந்திரன் குழப்பத்தை முகத்தில் காட்டி
அவரே விளக்கட்டும் என்று காத்திருந்தான். ஜனார்தன் த்ரிவேதி
அவன் காத்த அமைதியில் தன் அமைதியை
இழந்தார். “நீ யாரையெல்லாம் விசாரிக்கப் போகிறாயோ அவர்கள் எல்லாம் காணாமல்
போகிறார்கள்” என்று ஒருமையிலேயே சொன்னார்.
நரேந்திரன் அமைதியாகக் கேட்டான். “யாரெல்லாம்
காணாமல் போனார்கள்?”
“என் மருமகன், மதன்லால்...”
நரேந்திரன் உடனடியாகப் பதில் சொல்லாமல்
தன்னுடைய லாப்டாப்பைத் திறந்து எதையோ பார்க்க ஆரம்பித்தான். ஜனார்தன்
த்ரிவேதி அவனை எரிக்கிற மாதிரி பார்த்ததை அவன் லட்சியம் செய்யவில்லை. அவன் மூன்று
நிமிடங்கள் கழித்து நிதானமாகச் சொன்னான். “கடந்த பத்து நாட்களாய்
நான் சில வழக்குகள் சம்பந்தமாய் விசாரித்த ஆட்கள் 28. அத்தனை
பேரும் காணாமல் போகவில்லை...”
அதைத் தெரிவித்துவிட்டு ‘இதற்கென்ன
சொல்கிறாய்?’ என்பது போல அவன் பார்த்த விதம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதிகாரமாகவே
அவர் கேட்டார். “சரி அவர்களில் இந்த இரண்டு பேர் மட்டும் ஏன் காணாமல் போனார்கள்?”
“அதை நீங்கள்
தான் சொல்ல வேண்டும்.” என்று நரேந்திரன் அமைதியாகச் சொன்னான்.
ஜனார்தன் த்ரிவேதி கோபத்துடன் கேட்டார். “நான் ஏன்
சொல்ல வேண்டும்?”
“நீங்கள்
தான் இரண்டு பேருக்கும் மிக நெருக்கமான நபர். அவர்களைப்
பற்றி இங்கே வந்து கேள்வி கேட்குமளவு அவர்களுக்கு வேண்டியவர். நான் சென்று
விசாரித்த பிறகு அவர்கள் காணாமல் போயிருப்பது இயல்பாய் இல்லையே. அவர்கள்
இப்படித் தலைமறைவாக என்ன காரணம்?”
”நான் உன்னைக்
கேட்டால் நீ என்னைக் கேட்கிறாய். என்னவொரு அடாவடித்தனம்”
நரேந்திரன் முகத்திலும் குரலிலும் கடுமை
தெரிந்தது ”எது அடாவடித்தனம்? ஒருநாள்
காலையில் உங்கள் மருமகனிடம் கேள்விகள் கேட்கப் போயிருந்தேன். கேட்ட கேள்வி
எதற்குமே அவர் சரியாய் பதில் சொல்லவில்லை. மறுபடி
நான் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாதபடி வசதியாக அந்த ஆள் தலைமறைவாகி விட்டார். மதன்லாலிடம்
கேள்விகள் கேட்கப்போனேன். அவரும் அப்படித்தான். சரியாகப்
பதில் சொல்லவில்லை. சிலநாட்கள் கழித்து மறுபடியும் அவரை விசாரிக்க வேண்டும் என்று
சொல்லி அவருக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அது கிடைத்தபிறகு
அவரும் தலைமறைவானார். அவரைக் கடத்திக் கொண்டு போனதாகவும் எத்தனையோ லட்சம் பணயத்தொகை
கேட்டதாகவும் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களால்
நம்ப முடிகிறதா? போலீஸ்காரனையே யாராவது கடத்துவார்களா? சிம்லாவில்
அந்த ஆளை விடப் பெரிய பணக்காரர்களே
இல்லையா? எனக்குப் பதில் சொல்ல வேண்டிய ஆள்கள் வசதியாகத் தலைமறைவாகி
விட்டார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. யாரோ செல்வாக்கான
ஆள் தான் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பலத்த சந்தேகம். அந்தச்
செல்வாக்கான ஆள் யாரென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் வந்து அடாவடித்தனம்
பற்றிப் பேசுகிறீர்கள். உங்கள் மருமகன் பற்றி அக்கறையுடன் விசாரிப்பதையாவது உறவுமுறை
வைத்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மதன்லால்
பற்றியும் சேர்த்து இத்தனை தொலைவில் இருக்கும் நீங்கள் கவலைப்படுவது இயல்பாக எனக்குத்
தெரியவில்லையே”
குரலை உயர்த்தாமல், அமைதியிழக்காமல்
அவரைக் கூர்ந்து பார்த்தபடியே அவன் பேசியது அவரைத் திகைக்க வைத்தது. அவருக்கு
எழுந்த சந்தேகங்களை அவன் தன் சந்தேகங்களாகச் சொல்லி, கடைசியில்
அவரையே சந்தேகப்படுவதை ஆணித்தரமாகச் சொன்னது அவருக்கு ஆத்திரம் வரவழைத்தது. ஆனால் அதற்கு என்ன பதிலளிப்பது என்று அவருக்குக் குழப்பமாக
இருந்தது. அவர் மிக நுணுக்கமான கருவியை மறைவாக தன் ஆடைக்குள் வைத்து
அஜீம் அகமதின் ஆலோசனைப்படி அவர்கள் பேச்சைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். அதனால்
இந்தப் பேச்சில் நரேந்திரன் கையோங்குவதை அவரால் சகிக்க முடியவில்லை. இவன் திரும்பவும்
கேள்வி கேட்பதாகச் சொன்னபின் தான் மதன்லால் காணாமல் போனதாகவேறு சொல்கிறான். அது உண்மையாக இருந்தால்
பிரச்சினை வேண்டாம் என்று மதன்லாலே தலைமறைவாயிருக்கலாம். விஷயம்
அப்படியாக இருந்தால் இங்கே வந்து இவனிடம் பேசிக் கொண்டு இருப்பதே அபத்தமாகிவிடும்...
அவர் தன் குழப்பங்களை வெளியே காட்டிக்
கொள்ளாமல் கோபமாகவே கேட்டார். “முடிவாக என்ன சொல்கிறாய்?”
“உங்களுக்கு
மிகவும் வேண்டப்பட்ட அவர்கள் இருவரையும் சட்டப்படி விசாரித்து என் கடமையைச் செய்ய ஒரு
பொறுப்புள்ள அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும் என்று சொல்கிறேன்”
கோபத்தோடு எழுந்த அவர் மேற்கொண்டு எதுவும்
பேசாமல் வெளியேறினார்.
(தொடரும்)
என்.கணேசன்
Sunday, October 24, 2021
Saturday, October 23, 2021
Thursday, October 21, 2021
இல்லுமினாட்டி 125
”அதைப் படித்து
முடித்த பின் அவர் இல்லுமினாட்டியிடம் சொல்லப் போவார். அவர்கள்
நம்மைக் கண்டுபிடிக்கவோ, வேறு முடிவுகள் எடுக்கவோ அவர் தெரிவிக்கும் தகவல்கள் உதவுவதாக
இருக்கலாம். அது நமக்குப் பாதகமாக இருக்கலாம். அதனால்
தான் அந்த மனிதர் அந்த சிக்னல் தாண்டாமல் பார்த்துக் கொண்டேன்.”
“அவர் கண்டுபிடிப்பது
நமக்கு மட்டும் தான் தெரியும் என்ற சூழ்நிலை இப்போது இருப்பதால்
இனி நீ அவரைத் தடுக்க வேண்டாம். கண்டுபிடிப்பதைக் கண்டுபிடித்த பின் அவரை
முடிக்க வேண்டியிருக்கிறது.
நம்மிடம் காலம் அதிகமில்லை…”
ஜிப்ஸி தலையசைத்தான்.
அன்று விஸ்வம் தியானத்தில்
ஆழ்ந்த போது மனம் இசைய மறுத்தது.
வாங் வே ‘உங்கள் பக்கத்தில் இருந்தும் தகவல் கசிந்திருக்கலாம்’
என்று சொன்னது அவன் மனதில் நெருடலாகவே இருந்தது. அவன் திட்டங்களைப் பற்றி
அதிகம் ஜிப்ஸியிடம் கூட பேசியதில்லை. அப்படி இருக்கையில் எர்னெஸ்டோவின்
வாஷிங்டன் பயணம் குறித்து அவன் அறிந்தான் என்று இல்லுமினாட்டி சந்தேகப்படக் காரணமே
இல்லை. விஸ்வம் நடந்ததை
வரிசைப்படி யோசித்துப் பார்த்தான். எர்னெஸ்டோவின் வாஷிங்டன் பயணம்
பற்றித் தெரிந்தவுடன் அவன் திட்டமிட்டது அந்த நேரத்தில் க்ரிஷ் இங்கேயோ, வாஷிங்டனிலோ இருக்கக்கூடாது என்பதைத் தான். அந்தச் சமயத்தில் க்ரிஷ்
இந்தியாவில் இருப்பது தான் பாதுகாப்பானது என்று
நினைத்து அவன் சிந்துவைத் தொடர்பு கொண்டான். சிந்துவிடம் கூட அவன் சொன்னது ’செவ்வாய் இரவு அந்த விஷத்தை
உதய் அல்லது பத்மாவதி உணவில் கலந்து விடு’ என்று மட்டும் தான்.
அவளும் சரியென்றாள்.
அவளிடம் விஷத்தைச் சேர்த்தாகியும் விட்டது. அதை
எப்படியோ க்ரிஷ் அறிந்து விட்டிருந்தால்….? என்ற கேள்வி அவன்
மனதில் எழுந்து தங்கியது. க்ரிஷும் சில சக்திகளை வசப்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அப்படி
அவன் சிந்துவின் மனதில் இருப்பதை அறிந்திருப்பானோ? அப்படி அறிந்திருந்தால்
அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியிடம் அல்லவா சொல்லியிருப்பான். இல்லுமினாட்டி அவளைக் கண்டிப்பாகச் சிறைப்படுத்தியிருக்குமே… அதெல்லாம் ஆகவில்லை என்பதே அவன் கண்டுபிடித்திருக்க வழியில்லை என்றெல்லவா சுட்டிக்
காட்டுகிறது. ஆனாலும் ஏனோ அவன் மனதில் அந்த சந்தேகம் தங்கியே
இருந்தது.
வாங் வே கர்னீலியஸுக்குப் போன் செய்தார். கர்னீலியஸ் வருத்தத்துடன்
சொன்னார். “என்னவோ தெரியவில்லை. மனம் என்
பயிற்சிக்கு இசைய மறுக்கிறது. நாளாக நாளாக எனக்கு இன்னும் கண்டுபிடித்தாகவில்லையே
என்ற பதற்றமும் கூடி
விடுகிறது. அதுவே ஒரு தடையாகவும் இருக்கலாம்…”
வாங் வே சொன்னார். “அது பரவாயில்லை.
கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச்
சொல்லத் தான் போன் செய்தேன். தலைவர் க்ரிஷ் மூலம் தெரிந்த இந்திய
மாந்திரிகர் ஒருவரை வைத்து அந்த சிக்னலில் விஸ்வம் செய்து வைத்திருக்கும் மாந்திரீக
முடிச்சை எடுத்து விட்டிருக்கிறார். அது இருந்ததால் தான் உங்களால்
போக முடியவில்லை என்று அந்த மாந்திரிகரும் சொல்லி இருக்கிறார். இனி நீங்கள் போகப் பிரச்னை இருக்காது.
நீங்கள் வங்கிக்குப் போய் ஆவணத்தை எடுத்துப் படித்து விட்டே வரலாம்…. ஆனால் தலைவர் உடனே
போய்ப் படித்து விட்டுச் சொல்லச் சொல்லியிருக்கிறார்.”
கர்னீலியஸ் நிம்மதியடைந்தார். அதிகாரத்தில் இருந்தால்
எப்படிச் சில வேலைகள் சுலபமாக முடிந்து விடுகிறது. இத்தனை நாள்
சிரமப்பட்ட வேலையை எவ்வளவு சுலபமாக எர்னெஸ்டோ தீர்த்திருக்கிறார் என்று மனதில் சிலாகித்தவராகச்
சொன்னார். “நல்லது… நான் இப்போதே போகிறேன்…
அந்தச் சுவடியையே கொண்டு வரட்டுமா? வியாழன் காலையில் நடக்கும் கூட்டத்தில் தலைவர் கையிலேயே
தரலாமே”
வாங் வே சொன்னார். “இப்போதைக்கு அது வேண்டாம்,
தகவல் மட்டும் தெரிந்தால் போதும் என்றார். அப்புறமாக
ஒரு நாள் உங்கள் வங்கி லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு போய் நம் ஆவணக்காப்பகத்தில்
நேரடியாக வைக்கலாம் என்று அவர் நினைக்கிறார். அதனால் நீங்கள் படித்து வந்து சொன்னால் போதும்….”
“நல்லது… இப்போதே கிளம்புகிறேன்…” என்று கர்னீலியஸ் சொன்னார்.
அவருக்கு வாங் வே போன் செய்து சொன்னது மன உளைச்சலைக் குறைத்தது. சில நாட்களாகவே
அவர் கடுமையான முயற்சிகள் எடுத்து வந்தாலும் அந்த இரகசிய ஆவணத்தின் அந்த முக்கியப்
பக்கத்தின் தொடர்ச்சி என்ன என்பதை நினைவுபடுத்திக் கொள்வதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
என்ன தான் செய்வது என்று புரியாமல் அவர் தவித்துக்
கொண்டிருக்கையில் தான் வாங் வே போன் செய்தார். கர்னீலியஸ் கடிகாரத்தைப் பார்த்தார்.
வங்கி நேரம் முடிய இன்னும் வேண்டுமளவு நேரம் இருக்கிறது. அதனால் பிரச்னை இல்லை. அவர்
அவசரமாய் கிளம்பினார்.
என்ன
தான் வாங் வே தைரியமளித்திருந்தாலும் அவருடைய கார் அந்தக் குறிப்பிட்ட சிக்னலை நெருங்க
நெருங்க அவர் மனம் படபடக்க ஆரம்பித்தது. விஸ்வத்தின் சக்திகளை மாந்திரீகத்தால் கட்டுப்படுத்த
முடியுமா என்று அவர் மனம் சந்தேகப்பட்டது. சென்ற முறை போல் கார் ஸ்தம்பித்து விடாமல்
இருக்க வேண்டுமே என்ற கவலையும் எழுந்தது. நல்ல வேளையாகக் கண்காணிக்கப்படும் உணர்வு
வரவில்லை. அதிலேயே மனம் பாதி தைரியம் பெற்றது. சிக்னலில் கார் நிற்கும் போதும் எந்தப்
பிரச்சினையும் இல்லை. பச்சை விளக்கெரிந்து ஆரம்பித்து கார் நகர ஆரம்பித்த போது அவர்
ஒரு குழந்தை போல சந்தோஷப்பட்டார்.
விஸ்வத்திற்கு சிந்து மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் அவள் மனதில்
இருப்பதை க்ரிஷ் தெரிந்து கொண்டிருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் மட்டும் லேசாக இருந்து
கொண்டே இருந்தது. அப்படி அறிந்து கொண்டிருந்தால் அவன் செவ்வாய்க்கிழமை அவளைக் கையும் களவுமாய் பிடித்து
விடுவதற்காகக் காத்திருக்கலாம். அல்லது அதற்கு யாரையாவது ஏற்பாடு செய்துமிருக்கலாம்.
இந்த சிந்தனைகள் அவனைச் சுட்டன. தன் சந்தேகம் சரி தானா என்று சோதிக்க அவனால் செவ்வாய்க்கிழமை
இரவு வரை பொறுக்க முடியும் என்று தோன்றவில்லை. உடனே அதிரடியாய் ஒரு முடிவுக்கு வந்து
சிந்துவுக்குப் போன் செய்தான்.
வெளிநாட்டு
அழைப்பு என்று பார்த்தவுடனேயே சிந்துவுக்கு இதயத் துடிப்பின் வேகம் கூடியது. இப்போது
என்ன சொல்லப் போகிறானோ என்று பயந்தபடியே பேசினாள். “ஹலோ”
“சிந்து.
நம் திட்டத்தில் சின்ன மாறுதல். அவர்கள் இருவரில் ஒருவருக்கு விஷத்தை இன்றே கொடுத்து
விடு. செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்க வேண்டாம்...”
சிந்து
மனப்போராட்டத்துடன் “சரி” என்றாள்.
“உனக்கு
சமீப காலத்தில் எப்போதாவது யாரோ உன் மனதை ஆக்கிரமிக்கிற மாதிரி அல்லது உன் எண்ணங்களைப்
படிக்கிற மாதிரி தோன்றியிருக்கிறதா?” என்று விஸ்வம் கேட்டான்.
சிந்து
சொன்னாள். “இல்லையே”
“நல்லது.
நினைவிருக்கட்டும். இன்று இரவே செய். மிகவும் கவனமாக இரு... அவர்களுக்கு உன் மேல் சந்தேகம்
வந்து விடக்கூடாது. உதயானாலும் சரி, பத்மாவதியானாலும் சரி, மயங்கி விழுந்த தகவல் கிடைத்தவுடன்
ஓடோடி நீயும் போ. ஆஸ்பத்திரியில் சோகமாக அவர்கள் கூடவே இரு. இறந்த பின்னும் ஓரிரண்டு
நாட்கள் அவர்களோடு இரு. பின் போய் விடலாம்....”
ஏன்
திட்டத்தை முன்கூட்டியே நிறைவேற்ற விஸ்வம் முடிவு செய்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை.
இதனால்
என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதும் தெரியவில்லை. உடனே சிந்து க்ரிஷுக்குப் போன்
செய்து விஷயத்தைச் சொன்னாள்.
க்ரிஷும்
ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “சரி சிந்து நீ இன்றைக்கு இரவு எங்கள்
வீட்டுக்குப் போ. உதய் கிட்ட ஏற்கெனவே விஷயத்தைச் சொல்லியிருக்கேன். அதை இன்னைக்கே
செய்யணும்னு சொல்லிடறேன். அவன் உன் கிட்ட மெல்ல சொல்லுவான். புதுசா கேட்கற மாதிரி கேட்டுக்கோ.
எங்கம்மாவுக்கு நடிக்க சுத்தமா வராது. அவங்க மட்டும் சொதப்பிடாமல் நீயும் ஹரிணியும்
தான் பார்த்துக்கணும்...”
அவன்
சாதாரணமாக எடுத்துக் கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்ற மனநிலையில் இருந்தது போல்
சிந்துவுக்கு இருக்க முடியவில்லை. விஸ்வத்துக்குச் சந்தேகம் வந்தால் ஆபத்து என்ற யதார்த்தம்
அவளை யதார்த்தமாய் இருக்க விடவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்