Sunday, January 31, 2021

எந்த செய்திகளில் எவ்வளவு தங்குகிறீர்கள்?

மோசமான செய்திகளை விரிவாகப் படிப்பதும், பார்ப்பதும், கேட்பதும், சொல்வதும் அவசியம் தானா? ஒரு அலசல்.

Saturday, January 30, 2021

கர்மமா, ஞானமா - எது சிறந்தது?

கீதை காட்டும் பாதை 11

மனிதன் செயலற்று இருக்க முடியுமா? செயலை எப்படிச் செய்வது சிறப்பு?

Thursday, January 28, 2021

இல்லுமினாட்டி 87



சிந்து தன் திட்டத்தைச் சமயம் பார்த்து நிறைவேற்றுவது என்று முடிவு செய்தாள். அது வரை க்ரிஷின் கழுகுப் பார்வையைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் பொறுக்க வேண்டி இருந்தது க்ரிஷ் பார்வையை மட்டுமல்ல, மற்ற மூவரையும் கூடத் தான். எல்லாமே அன்னியமாகவும், சித்திரவதையாகவும் இருந்தது. அதையெல்லாம் வெளிக்காட்டாமல் கலகலவென்று நடிக்க முடிந்தாலும் அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் நகர்வதாய் உணர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்த பின் பத்மாவதி பழைய ஆல்பங்களை எல்லாம் கொண்டு வந்து கொடுக்க ஹரிணியும், சிந்துவும் அந்த ஆல்பங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். க்ரிஷ், உதய் இருவரின் சிறு வயதுப் படங்கள் நிறைய இருந்தன. பத்மாவதி குழந்தைகளை விதவிதமாய் அலங்கரித்து படம் எடுத்திருந்தாள். க்ரிஷுக்கு நான்கைந்து வயது ஆகும் வரை அவனைப் பெண்ணாகக்கூட அலங்கரித்து எடுத்திருந்தாள். ஹரிணி அதை எல்லாம் ரசித்துச் சிரித்த போது இரண்டாவது குழந்தை ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக பத்மாவதி சொன்னாள். அப்படிப் பிறக்காமல் போனதால் க்ரிஷையே பெண்பிள்ளை மாதிரி அலங்கரித்துப் படம் எடுத்ததாகவும் ஐந்து வயதிற்கு மேல் அப்படி எடுக்க அவன் மறுத்து ஓடி விடுவான் என்றும் வருத்தத்துடன் சொன்னாள்.

உதய் சிரித்துக் கொண்டே சொன்னான். “விட்டிருந்தால் அவனுக்கு மீசை முளைக்கிற வரை கிழவி அந்த மாதிரியே அலங்காரம் பண்ணி படம் எடுக்கத் தயங்கியிருக்காது

பத்மாவதி மகனை முறைத்தாள். “போடா அப்படியெல்லாம் இல்லை.”

பல புகைப்படங்களில் இரண்டு மகன்களுடன் பத்மாவதி கம்பீரமாகத் தெரிந்தாள். இந்த இரண்டு பிள்ளைகளின் தாய் என்கிற பெருமிதம் எல்லாப் படங்களிலும் தெரிந்தது. பழையபடி தன் தாயின் நினைவு வருவதை சிந்துவால் தவிர்க்க முடியவில்லை. மனம் அலைபாய பார்வையை ஆல்பத்தில் இருந்து எடுத்து நிமிர்ந்த போதும் க்ரிஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இதை இப்போதே நிறுத்த வேண்டும் என்று தோன்றியது. சரியாக ஹரிணி, உதய் இருவரும் கூட இருக்கிறார்கள். பத்மாவதி இருப்பது கூட நல்லதற்குத் தான்.

சிந்து க்ரிஷைப் பார்த்துத் திடீரென்று கேட்டாள். “நீங்கள் ஏன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

ஹரிணி, உதய், பத்மாவதி மூவரும் உடனடியாக க்ரிஷைப் பார்த்தார்கள். க்ரிஷ் அப்போதும் பார்வையை அவள் மீதிருந்து எடுக்கவில்லை. அவன் அவள் நோக்கத்தைப் புரிந்து கொண்டது போலப் புன்னகையுடன் இப்போதும் பார்த்தான். அவன் அழுத்தம் சிந்துவைத் திகைக்க வைத்தது.

உதய் சிரித்துக் கொண்டே சொன்னான். “அவன் உன் கிட்ட எதையோ புரிஞ்சுக்க முயற்சி பண்றான்னு நினைக்கிறேன். எங்களையும் சில சமயம் அப்படியே தான் பார்ப்பான். என்னன்னு கேட்டால் பதில் சொல்ல மாட்டான்...”

ஹரிணி புன்னகையுடன் சொன்னாள். “எனக்கென்னவோ அவன் உன் கிட்ட ஏதோ ஆராய்ச்சி பண்ணற மாதிரி தெரியுது.  இந்த மாதிரி நேரங்கள்ல நீ என்ன நினைக்கிறாய்னு அவன் கண்டுபிடிச்சுடுவான். அதே மாதிரி உன் எண்ணங்களின் போக்கைக் கூட மாற்றி விடுவான்... அவன் கொஞ்ச காலமா இந்த மாதிரி ஆராய்ச்சிகள்ல தான் இறங்கியிருக்கான்...”

பத்மாவதி இளைய மகனைத் திட்டினாள். “எங்க கிட்ட வாய் விட்டுப் பேசறதுக்கு உனக்கு நேரமில்லை. வீட்டாளுக கிட்டயே ஆராய்ச்சி என்னடா வேண்டிக்கிடக்கு

உதய் சிந்துவைப் பார்த்துக் குறும்புப் புன்னகை பூத்தபடியே தம்பியிடம் சொன்னான். “டேய் ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிக்கறதை முழுசா என் கிட்ட சொல்லு. அவ என் அளவுக்கு எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறா

பேச்சு இப்படியெல்லாம் திசைமாறி தன் திட்டம் புஸ்வானமாகப் போகும் என்று சிந்து சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் எதிர்பார்த்த பொறாமை, சந்தேகம் இரண்டும் இங்கே யாரிடமும் ஏற்படாதது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. முக்கியமாய் உதய் சந்தேகப்பார்வை பார்க்க ஆரம்பிப்பான் என்று நினைத்தாள். அடுத்து ஓரளவாவது ஹரிணியும் க்ரிஷின் பார்வையைக் கவனிக்க ஆரம்பிப்பாள் என்று நினைத்தாள். அவள் அப்படி ஏதும் செய்யாதது மட்டுமல்ல சிந்துவின் மனதில் க்ரிஷ் ஆராய்ச்சி செய்கிறான் என்றும் அவளுடைய எண்ணப் போக்கையே மாற்றி விடுவான் என்றும் வேறு சொல்கிறாள். அது விளையாட்டாய் சொன்ன வார்த்தைகளாய்த் தெரியவில்லை.

சிந்து உள்ளே எழுந்த பீதியை மறைத்துக் கொண்டு க்ரிஷிடம் சொன்னாள். “அது என்ன ஆராய்ச்சி எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்

பத்மாவதி பயந்து போனாள். “நீ சும்மா இரும்மா. இந்த வீட்டுல ஒருத்தன் ஆராய்ச்சியையே தாங்க முடியல...”

உதய் தாயின் பயத்தைப் பார்த்துக் கலகலவென்று சிரிக்க க்ரிஷும் சேர்ந்து கொண்டான். மெள்ள பேச்சு திசை மாறியது. க்ரிஷ் சிந்துவைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு இயல்பாய் பேசினான். ஆனாலும் அவள் மனதினுள் அவன் பார்வை இன்னமும் பதிந்திருந்தது போல் அவளுக்கு ஒரு பிரமை இருந்தது...   

மாலை வரை பேசிக் கொண்டிருந்தார்கள். உதயும் சிந்துவும் சினிமாவுக்குப் போவது குறித்துப் பேச, க்ரிஷ் ஹரிணியிடம் கேட்டான். ”நாமளும் எங்கேயாவது போகலாமா?”

ஹரிணி ஒரு கணம் திகைத்து, ஆச்சரியப்பட்டுப் பின் முகமெல்லாம் மலர்ந்தாள். அப்போது தான் அவர்கள் இப்படி எங்கேயும் வெளியே போய்ப் பல காலம் ஆகிவிட்டது என்பது க்ரிஷுக்கு நினைவுக்கு வந்தது. சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் கிளம்ப அவர்கள் போவதையே மகிழ்ச்சியுடன் பத்மாவதி பார்த்துக் கொண்டிருந்து விட்டு சிந்துவிடம் சொன்னாள். ”நீ வந்த நேரம் இந்த வீட்டுல எல்லாம் நல்லபடியா நடக்குது. உங்களைப் பார்த்துட்டு தான் தானும் அவளை எங்கேயாவது கூட்டிகிட்டு போகணும்னு அவனுக்குத் தோனியிருக்கு. என்ன பிள்ளையோ? அறிவு மத்த விஷயத்துல எல்லாம் நிறையவே இருக்கு. ஆனா இதுல போதாது

சிந்துவைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு உதய் தாயிடம் கேட்டான். “இவனுக்கு யார் புத்தி வந்திருக்குன்னு தெரியலை. அப்பா எப்படிம்மா?”

பத்மாவதி சொன்னாள். “சேச்சே. அவர் இவன்மாதிரியெல்லாம் இருக்கலை. இவனே சீனியரா இருக்கறதால தான் இவன் சிந்தனை எல்லாம் அறிவு, ஆராய்ச்சின்னே இருக்கு..”

உதய் சிரித்துக் கொண்டே சிந்துவுக்கு விளக்கினான்.  ஜீனியஸ்ங்கிறதைத் தான் சீனியர்னு சொல்றாங்க

பத்மாவதி அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே ஆமா அது தான். அது தான். சாதாரண ஆளுக இல்ல, பெரிய பெரிய அறிவாளிகளே க்ரிஷை அப்படித் தான் சொல்வாங்க” பெருமையாகச் சொன்னாள்.

சிந்து உதயைப் பார்த்தாள். அவனும்ஆமாம். அப்படித்தான்என்பது போல் ஆமோதித்துத் தலையாட்டினான். இது போன்ற பிரிக்க முடியாத குடும்பத்தை சிந்து பார்த்ததில்லை. காதல்வயப்பட்ட வேகத்தில் கூட உதயைத் தம்பியிடம் இருந்து பிரிப்பது சுலபமல்ல என்பது புரிந்தது. இது ஆபத்து என்று அவள் உள்ளுணர்வு எச்சரித்தது. ஒருவேளை அவளைப் பற்றி அறிந்து கொண்டதை க்ரிஷ் இவனிடம் சொன்னால் இவன் தம்பியின் உத்தேசத்தைத் தப்பாய் எடுத்துக் கொள்ள மாட்டான்... மாறாக அவளைச் சந்தேகிக்கவும் வாய்ப்பு இருக்கிறது....   

அவர்கள் இருவரும் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்த போதும் அவளுடைய எண்ண ஓட்டம் அதுவாகவே இருந்தது.

உதய் அவளிடம் கரிசனத்துடன் கேட்டான். “ஏன் என்னவோ மாதிரி இருக்கிறாய்?”

ஒன்றுமில்லை என்று சொல்லப் போனவள் அதைத் தவிர்த்துச் சொன்னாள்என்னவோ தெரியவில்லை, பயமாக இருக்கிறது

உதய் திகைப்புடன் கேட்டான். “என்ன பயம்?”

அவள் கண்கலங்கச் சொன்னாள். “யார் பேச்சையாவது கேட்டு என்னை நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ, வெறுத்து விலகி விடுவீர்களோ என்று பயம்?”

உதய் பதறிப் போனான். “ஏய் அசடு. என்ன பைத்தியக்காரத்தனமான பயம்?”

சிந்து கண்களைத் துடைத்தபடியே சொன்னாள். “வாழ்க்கையில் நிறைய இழந்தவள் நான். சந்தோஷமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு என் பயம் புரியாது.”

உதய் அவள் துக்கத்தில் உருகிப் போனான். அவன் அவளுடைய கைகளை இறுக்கிப் பிடித்தபடி உறுதியாகச் சொன்னான். “யார் என்ன சொன்னாலும் சரி. நீ தான் என் மனைவி. நான் என்றுமே உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். இது சத்தியம்

சிந்து நிம்மதியடைந்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்