Monday, November 30, 2020

யாரோ ஒருவன்? 8


ஞ்சய் ஷர்மாவுக்கு அந்தப் பெயர் ஞாபகம் இல்லைஅவன் அந்த உத்தியோகத்தில் இருந்த போது யாரும் அந்தப் பெயரில் அவனுடன் வேலை பார்த்ததில்லை. உத்தியோகத்தில் இருந்த போது என்ன இருந்தாலும் ஒரு கவுரவம் அவனுக்கு இருந்தது. அந்தப் பாழாய் போன ரா தலைவன் ராவிலிருந்து மட்டுமல்ல ஐபிஸ் பதவியிலிருந்தே ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரே பிடிவாதமாக இருந்து ராஜினாமா செய்ய வைக்காமல் இருந்திருந்தால் அவனும் இப்படி எங்கேயும் கவுரமாய் போய் வந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் இப்படி எல்லாம் ஆகும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மாமனை மீறி எதுவும் நடக்காது என்று தைரியமாக இருந்தான்.  ஆனால் மாமன் என்ன முயற்சித்தும் ரா தலைவரை எதிர்த்துக் கொள்ள அப்போதைய பிரதமர் விரும்பவில்லை.  ”விசாரணை, தண்டனை எல்லாம் இல்லாமல் உங்கள் மருமகனைக் கவுரமாக வெளியே அனுப்புவதே பெரிய விஷயம்என்று சொல்லி விட்டார். அப்போது அதோடு திருப்தி அடைய வேண்டியதாகி விட்டது.

மாமன் அவருடைய பினாமி கம்பெனி நிர்வாகத்தை அவனுக்குக் கொடுத்து அவனை சமாதானப்படுத்தினார். அவர் கட்சி ஆளுங்கட்சியாக இருந்து கம்பெனி இலாபத்தில் போய்க் கொண்டிருந்த வரை அவனுக்கு அந்தக் கம்பெனி நிர்வாகம் ஓரளவு திருப்தியாகத் தான் இருந்தது. மற்றவழிகளிலும் வருமானம் வந்து கொண்டிருந்ததால் புகார் சொல்ல ஒன்றுமிருக்கவில்லை. ஆனால் அவர் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்த பின் எல்லாமே இறங்குமுகமாகத் தானிருக்கிறது.  

மாமனிடம் ராஜ்யசபாவில் ஒரு எம்.பி பதவியாவது வாங்கிக் கொடுங்கள் என்று பல முறை சஞ்சய் கேட்டிருக்கிறான். பழுத்த அரசியல்வாதியான அவர் எல்லோரிடமும் சொல்லும்பார்க்கலாம்என்ற ஒரு சொல்லையே அவனிடமும் ஒவ்வொரு தடவையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்இதை எல்லாம் எண்ணிப் பெருமூச்சு விட்டபடி சஞ்சய் பியூனிடம் சொன்னான். “வரச் சொல்



அடுத்த நிமிடம் நரேந்திரன் என்ற இளைஞன் கம்பீரமாய் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்தவுடன் முன்பே எங்கேயோ பார்த்திருப்பது போல் சஞ்சய்க்குத் தோன்றியது. ஆனால் எங்கே என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை.

நரேந்திரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கைகுலுக்கினான். அவன்ராவில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னவுடன் சஞ்சய் பெருமிதத்துடன் சொன்னான். “நானும் ஒரு காலத்தில் அங்கே இருந்தேன். வேலை கொஞ்ச காலத்தில் அலுத்து விட்டதுராஜினாமா செய்து விட்டேன்….”

நரேந்திரன் சொன்னான். “தெரியும். நீங்கள் விசாரித்த அஜீம் அகமது வழக்கு பற்றிப் பேசத்தான் வந்திருக்கிறேன்…”

சஞ்சயின் முகம் கருத்தது. அவன் இறுகிய முகத்துடன் சொன்னான். “அந்த வழக்கை அப்போதே முடித்து விட்டார்களே. அது மட்டுமல்ல நான் அங்கே இருந்த போது விசாரித்த எதைப்பற்றியும் வெளியே சொல்ல முடியாதே. நீங்கள் புதியதாகச் சேர்ந்திருப்பதால் விதிமுறைகள் உங்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.”

விதிமுறைகள் தெரியும். அந்த வழக்கைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்திருக்கிறோம்…. அதற்கான ஆணையும் விசாரிக்க அனுமதியும் எனக்குத் தந்திருக்கிறார்கள்என்று சொல்லி அதிகாரபூர்வக் கடிதத்தை சஞ்சயிடம் நரேந்திரன் நீட்டினான்.

அதை அதிர்ச்சியுடன் வாங்கிப் படித்த பின் சஞ்சய் முகம் சுளித்தான். “சுத்த முட்டாள்தனம். அஜீம் அகமது இங்கிருந்தால் பிடிக்கச் சொல்லி ஆரம்பித்த வேலை அது. அவன் எப்போதோ இங்கிருந்து தப்பித்துப் போய் விட்டான். இந்தியாவிலேயே அவன் இல்லை என்கிற போது இருபத்தி இரண்டு வருஷம் கழித்து அந்த வழக்கை மறுபடி திறந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்?”

அஜீம் அகமது இந்தியாவில் தான் இல்லை. ஆனால் உயிரோடு எங்கேயோ இருக்கிறான் அல்லவா? அது மட்டுமல்ல என் அப்பா மகேந்திரன் சம்பந்தமான கேள்விகள் எதற்கும் ரா இதுவரைக்கும் பதில்களைக் கண்டுபிடிக்கவில்லை…”

சஞ்சய்க்கு இப்போது மெள்ள விளங்கியது. மகேந்திரனின் மகன் இவன். அந்த ஆளின் சாயல் இவனிடம் நிறையவே இருப்பதால் தான் எங்கேயோ பார்த்த மாதிரி அவனுக்குத் தோன்றியிருக்கிறதுபலவந்தமாக சஞ்சய் தன் முகத்தில் சந்தோஷப் புன்னகையை வரவழைத்தான்.  “மகேந்திரன் சார் மகனா நீ?”

ஆனால் முகத்தின் புன்னகை அவன் இதயத்தை எட்டவில்லை. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு ஃபைலைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்றால் அது பிரதமரின் அனுமதியுடன் தான் நடந்திருக்க வேண்டும். அது நல்லதல்ல. குறிப்பாக இந்த வழக்கு விசாரிக்கப்படுவது யாருக்கும் நல்லதல்ல. இந்த நரேந்திரனுக்கே கூட அது ஆபத்து தான். அது இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை.


வீட்டு உரிமையாளரிடம் நாகராஜ் அட்வான்ஸ் தந்தவுடன் அவரிடமிருந்து கமிஷன் தொகை 12500 ரூபாயும், நாகராஜிடமிருந்து 12500 ரூபாயும் வாங்கிக் கொண்ட பின் அரை நாளில் 25000 சம்பாதித்ததில் அந்த வீட்டு புரோக்கர் பெரும் திருப்தி அடைந்தான். இரண்டு மாதம் குடும்ப செலவை இதை வைத்துச் சமாளித்து விடலாம். இது போல் மாதம் ஒரு கிராக்கி கிடைத்தால் கூடப் போதும். அவன் ராஜாவைப் போல் வாழ்க்கையை ஓட்டலாம்...

திரும்பி வருகையில் நாகராஜிடம் அவன் கேட்டான். “சார் உங்களுக்கு வீடு கூட்டித் துடைக்க, துணி துவைக்க, ஆள் வேண்டியிருந்தா சொல்லுங்க. நம்ம கிட்ட கை சுத்தமான நல்ல ஆளுக இருக்காங்க

அது தேவையில்லை... நாங்களே பார்த்துக்குவோம்” என்று நாகராஜ் சொன்னது புரோக்கரைத் திகைக்க வைத்தது. இத்தனை பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார். அதுவே ஆச்சரியம் தான். அதைச் சுத்தம் செய்ய வேலையாள் வேண்டாம் என்று சொல்கிறாரே? ஆள் கஞ்சனா என்றால் இல்லை. கமிஷன் தொகையை ஒரு பேச்சு பேசாமல், நோட்டுகளை எண்ணிச் சரியாக உடனே கொடுத்து விட்டார். வீட்டுச் சொந்தக்காரர் கூடத் தன் பங்கைத் தரும் போது  ”பத்தாயிரம் தந்தால் போதாதா?” என்று அல்பத்தனமாய் கேட்டார். அநியாய வாடகை கேட்டு அதற்கும் ஆள் பிடித்துக் கொடுத்த பிறகு அப்படிக் கேட்ட ஆள் மாதிரியெல்லாம் இந்த சார் கேட்கவில்லை. அதனால் பணம் செலவு செய்ய யோசிக்கிற ஆள் இல்லை இவர். வேறெதோ காரணம் இருக்கும்

காரிலிருந்து இறங்கிக் கொண்ட போது புரோக்கர் நாகராஜிடம் சொன்னான். “சார் எதாவது உதவி வேணும்னா தயங்காமல் எனக்குப் போன் பண்ணுங்க. நம்ம கிட்ட எல்லாத்துக்கும் ஆளுங்க இருக்காங்க

சரியென்று தலையசைத்து விட்டு நாகராஜ் காரைக் கிளப்பினான். எதிர்பார்த்த இடத்திலேயே வாடகைக்கு வீடு கிடைத்து விட்டது. நாளைக்கே அங்கு குடிபோய் விடுவது என்று தீர்மானித்தான். ஐந்து நட்சத்திர ஓட்டல் என்றாலும் அவனுக்கு இப்போதைய சூழ்நிலையில் அசவுகரியமாகத்தான் இருந்தது. அவனுக்கு வேண்டிய வசதிகள் அங்கே இருக்கவில்லை. இன்னும் சில நாட்கள் அவனுக்கு மிக முக்கியமான நாட்கள். இந்த நாட்களில் அவன் நிச்சயமாக ஓட்டல் அறைகளில் வசிக்க முடியாது. அவனுக்கு குறிப்பிட்ட வசதிகளுடன் விசாலமான தனி வீடு ஒன்று கண்டிப்பாக வேண்டும். அந்தத் தனி வீடும் அவன் எதிர்பார்த்தபடி ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு அடுத்த வீடாகக் கிடைத்திருப்பது அவன் அதிர்ஷ்டமே.

நாளைக்கு அங்கு போபிறகு ஒரு முக்கியமான நிகழ்வுக்காக அவன் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அது நடந்து முடிந்து விட்டால் பிறகு தான் அடுத்த வேலையை அவன் ஆரம்பிக்க வேண்டும். அது தான் மிக முக்கிய வேலை. அந்த வேலை சத்தியமங்கலத்து வேலை போல சுலபமானதோ இனிமையானதோ அல்ல. அதில் சம்பந்தப்படவிருக்கும் முக்கிய ஆட்கள் பரந்தாமன், அலமேலு போல் நல்லவர்களும் அல்ல...


   
(தொடரும்)
என்.கணேசன்    

Sunday, November 29, 2020

குற்றமே காணும் வியாதி!

குற்றமே காணும் வியாதி உங்களிடம் இருக்க வேண்டாமே! முல்லா கதை மூலம் உணர்த்தப்படும் உண்மை!

Saturday, November 28, 2020

எது உன் தர்மம்?

கீதை காட்டும் பாதை 2

தர்மம் என்பதென்ன? அதைக் கடைப்பிடிப்பதில் ஏன் சிக்கல்? குழப்பம், விரக்தியுடனான சிந்தனைகள், அந்தர்யாமியான இறைவனிடம் சரணாகதி!

Friday, November 27, 2020

முந்தைய சிந்தனைகள் 64

 என் நூல்களில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












என்.கணேசன்

Thursday, November 26, 2020

இல்லுமினாட்டி 78



ர்னீலியஸ் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. வங்கிக்குச்  செல்ல முயன்ற போது அனுமதிக்காதஅவன்இப்போது அவர் முயற்சியை அறிந்து நேரிலேயே வந்து விட்டானோ என்ற எண்ணம் தான் ஆரம்பத்தில் அவருக்கு வந்தது. ஆனால் அந்த சிக்னலில் ஏற்பட ஆரம்பித்த உணர்வு இப்போதும் அவருக்கு ஏற்படவில்லை என்பதும் நினைவுக்கு வந்து போனது. உடனே சில மூச்சுக்களை ஆழமாக விட்டு மனதை ஓரளவு நிதானத்திற்குக் கொண்டு வந்தார். பின் அமைதியாகச் சென்று கதவைத் திறந்தார். வாசலில் பக்கத்து வீட்டுச் சிறுவன் நின்றிருந்தான். அவன் கையிலிருந்த ட்ரேயில் நிறைய சாக்லேட்கள் இருந்தன. “இன்று எனக்கு ஹேப்பி பர்த்டேஎன்று சந்தோஷமாகச் சொன்னபடி அவன் அவரிடம் ட்ரேயை நீட்டினான்.

கர்னீலியஸ் அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து விட்டு ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொண்டார். அந்தச் சிறுவனுக்குப் பரிசு தர என்ன இருக்கிறது என்று திரும்பி அலமாரியைப் பார்த்து அதிலொரு கப்பல் பொம்மை ஒன்றை எடுத்து வந்து அவனிடம் தந்தார்.

சிறுவன் புன்னகைத்து அழகாக இருக்கிறது என்று சொல்லி வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து விட்டுப் போனான். கதவைத் தாளிட்டு விட்டுத் திரும்பி வந்தவருக்கு இனி  இன்றைக்கு விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் என்று தோன்றவில்லை. அமைதியாகச் சிறிது நேரம் யோசித்து விட்டு அவருடைய டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் இன்று அவர் படித்த வாசகங்களை நினைவுபடுத்தி எழுத ஆரம்பித்தார். இப்போது நினைவில் இருப்பது பிறகோ, இன்னொரு நாளோ பயிற்சியில்லாமல் நினைவுபடுத்த முடியும் என்பது நிச்சயமில்லை.  

முன்கூட்டிக் கணக்கிட்டு, காலம் நிர்ணயித்து ஓருடல் விட்டு மறு உடல் போவது யாம் அறிந்ததே, பல முறை கண்டதே! ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும். நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்....”

இத்தனை நினைவில் கொண்டு வர முடிந்தது அவருக்கு சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி செய்து முயற்சித்தால் மீதியையும் அவர் கண்டிப்பாக  நினைவுக்குக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை இப்போது முழுமையாக இருக்கிறது. இப்போது எழுதியதில் கடைசி வரி அவரைக் குழப்பியது. “நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்...” அது எந்த இடம்?


செந்தில்நாதன் க்ரிஷிடம் மனோகர் விஷயத்தில் கோட்டை விட்டு விட்டதற்கு மானசீகமாய் மன்னிப்பு கேட்டார். “அவன் வீட்டுக்கு எதிரேயே வர்க் ஷாப்பில் அவன் ஆள் இருந்ததால் நம் ஆட்களை அவன் வீட்டருகேயே நிறுத்தினால் அவன் கண்டுபிடித்து உஷாராகி விடுவான் என்று தான் பக்கத்துத் தெருக்களில் இருக்க வைத்தேன். சொன்னால் சில நிமிஷங்களில் அவர்கள் அந்த வீட்டுக்குப் போய் சேர்ந்து விடும் தூரம் தான். ஆனால் விஸ்வத்தின் ஆள் மனோகரைக் கொன்று விட்டு நம் ஆட்கள் போய்ச் சேர்வதற்கு முன் தப்பித்து விட்டான்.... நம் இத்தனை நாள் முயற்சியும் வீணாய் போயிற்றே என்று வருத்தமாக இருக்கிறது...”

க்ரிஷ் அவரைத் தேற்றும் தொனியில் மென்மையாகச் சொன்னான். “எல்லா முயற்சியும் வீண் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறோம். சில விஷயங்களை இனியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது..”

செந்தில்நாதன்எப்படி?’ என்பது போல க்ரிஷைப் பார்த்தார். க்ரிஷ் சொன்னான். “விஸ்வம் தன் பழைய சக்தியுடன் யாரையும் கவனிக்க முடிகிறது என்பதை இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். மனோகரை உணர்வு அலைகளால் அவனால் உணர முடிந்தது மாத்திரமல்ல, அவனுக்குள் நாம் வைத்திருக்கும்சிப்பைக் கூட உடனடியாக உணர முடிந்திருக்கிறது. அதனால் தான் மனோகரை அவன் கொன்றிருக்கிறான். அதை வைத்து எந்த அளவு சக்தியை அவனால் இப்போதும் பிரயோகிக்க முடிகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவம் நடந்திருக்கா விட்டால் கண்டிப்பாக அவனுடைய இந்த முன்னேற்றத்தை நாம் தெரிந்திருக்க முடியாது.”

அவன் அப்படிச் சொன்ன போதும் அவர் மனம் ஆறவில்லை.  மனோகர் தன்னுடைய அக்கவுண்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் பணம் அனுப்பி வைத்த பின் வங்கிகளைத் தொடர்பு கொண்டு மனோகரின் அக்கவுண்டுக்கு வந்து போன தொகைகளை ஆராய்ந்தும் அவர்களுக்கு அவற்றின் மூலமாக விஸ்வம் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. பல நாட்டுப் பரிவர்த்தனைகள் நடந்திருந்தன என்றாலும் அவற்றின் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவே அவருக்கு வருத்தத்தைத் தந்திருந்தது. இப்போது மனோகர் மூலமாகவும் அவனைப் பிடிக்க முடியவில்லையே என்று மனம் நொந்தார்.


அவருக்கு இப்போதும் க்ரிஷுக்கும், விஸ்வத்திற்கும் இடையே உள்ள பகை என்ன என்பது தெரியாது. சில நாள் காணாமல் போய் வந்த பின் தான் அப்படி ஒரு எதிரி தனக்கிருக்கிறான் என்றும் காணாமல் போன போது நடந்தவற்றை அவரிடம் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்றும் க்ரிஷ் அவரிடம் சொன்னான். அப்போது அவனும் அந்த எதிரியைப் பார்த்ததில்லை என்றும் அவன் பெயர் உட்பட அவனைப் பற்றிய எந்த விவரமும் அவனிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரிந்து அது மேலும் குழப்பியது. ஆனால் அதே அளவில் தான் அவன் தன் குடும்பத்தாரிடமும் சொல்லி இருக்கிறான் என்பது உதயிடம் பின்பு ஒரு முறை பேசும் போது தெரிந்தது.

க்ரிஷ் வேண்டுகோளின்படி தான் அவர் பின் அபூர்வ சக்திகள் கொண்ட ஒரு மனிதனின் பழங்கதைகளைத் தெரிந்து கொள்ள வடக்கு நோக்கிப் பயணம் செய்தார். மாஸ்டர் அபூர்வ சக்திகளைச் சொல்லித் தரக்கூடிய குருக்கள் சிலர் இருக்கும் இடங்களைச் சொல்லியிருந்தார். அங்கெல்லாம் செந்தில்நாதன் போனார். போன இடங்களில் கிடைத்த தகவல்களை வைத்து அடுத்த இடங்களுக்குப் போனார். விஸ்வம் எப்படி சில சக்திகளை அடைந்தான் என்று சொல்லிக் கொடுத்த சில குருக்கள் சொன்னார்கள். ஒவ்வொருவரும் மறக்காமல் சொன்ன ஒரு விஷயம், அவர்களை அந்தச் சக்தியில் மிஞ்சி விட்டுத் தான் விஸ்வம் அவர்களை விட்டுப் போயிருக்கிறான் என்பது தான்.

ஒரு முறை விட்டுப் போன பின் அவன் எந்தப் பழைய குருவையும் தொடர்பு கொண்டதில்லைகற்றுக் கொண்ட வித்தையில் குறை வைத்ததில்லை. அவனைப் பற்றி மேலும் அதிகம் தெரிந்து கொள்வதற்கு முன், ஹரிணி கடத்தப்பட்டதால் அவர் திரும்பி வர நேர்ந்தது. ஆனாலும் அவன் மீது உருவாகி இருந்த பிரமிப்பு அதன் பின் அவருக்கு என்றும் குறையவில்லை. வாழ்நாளில் ஒரு முறையாவது அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று செந்தில்நாதன் ஆசைப்பட்டார்.

அதன் பின் மாஸ்டர் மூலமாக அவன் பெயர் விஸ்வம் என்பது தெரிந்தது. சில காலத்திற்கு முன் வெளிநாடு சென்று திரும்பி வந்த போது க்ரிஷ் விஸ்வம் இறந்து விட்டதைச் சொன்னான். அத்தனை சக்தி படைத்த விஸ்வம் திடீரென்று இறந்து விட முடியும் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கேற்றாற் போல் சில நாட்களில் க்ரிஷ் சொன்னான். “விஸ்வம் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறான்.வேறு யாரைப் பற்றி அவன் சொல்லி இருந்தாலும் அவர் அதை நம்பி இருக்க மாட்டார். ஆனால் விஸ்வத்தைப் பொருத்த வரை அவனால் முடியாதது என்று ஒன்றிருக்க முடியாது என்று எண்ணி வந்த செந்தில்நாதன் உடனடியாக நம்பினார்.

செந்தில்நாதன் க்ரிஷிடம் சொன்னார். “விஸ்வத்துக்குத் தன் சக்திகளையும் பயன்படுத்த முடிகிறது. ஆட்களையும் அனுப்பி யாரையும் கொல்லவும் முடிகிறது என்பது ஆபத்தான நிலைமை க்ரிஷ். நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பது நல்லது. உதய் காதலிக்கும் அந்தப் புதிய பெண் பற்றியும் முழுதாகத் தெரிந்து கொள்வது முக்கியம்...”

க்ரிஷ் தலையசைத்தான். திறமையான போலீஸ்காரரான அவர் சந்தேகம் கொண்டது அவனை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆபத்தானவளாக இருக்கலாம் என்று தெரிந்தே நடந்து கொண்டிருப்பதை இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அவனுடைய சொந்தப் புத்தியே அவனை ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும் கூட உதயின் காதலைக் கலைப்பதற்கு அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை...



(தொடரும்)
என்.கணேசன்