Monday, August 31, 2020

சத்ரபதி 140


ன்றன்பின் ஒன்றாகச் சிவாஜியை வந்தடைந்த செய்திகள் எல்லாமே மோசமானதாகவும் அவனுக்குப் பாதகமானதாகவுமே இருந்தன. முதல் செய்தி மராட்டியர்கள் இரண்டு சிறு கோட்டைகளை பகதூர்கானிடம் இழந்து விட்டதாகத் தெரிவித்தது. இரண்டாவது செய்தி சித்திகள், முகலாயர் கப்பல்களின் உதவியும் கிடைத்ததால் கடலில் சில இடங்களில் மராட்டியரை வென்று துறைமுகங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிவித்தது.

சாலேர் கோட்டையின் முன்புறம் பகதூர்கானும், பின்புறம் தில்லர்கானும் படைகளுடன் முற்றுகை இட்டிருக்கும் செய்தி அடுத்ததாக வந்தது. சாலேர் கோட்டைக்கு உணவுப் பொருட்களை அனுப்ப சிவாஜி சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்த வேளையில் அந்தச் செய்தி வந்ததால் உணவுப் பொருட்களை அனுப்ப வழியில்லை. சாலேர் கோட்டை போன்ற வலிமையான கோட்டை உணவுப் பொருள்களின் இருப்பு சரிவர இருந்தால் ஆறு மாதங்கள் வரை வெளி உதவி இல்லாமலே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் உணவுப் பொருள் தீர்ந்து வரும் நிலையில் அந்தக் கோட்டை இருப்பதால் இனி நாள்கணக்கில் அது தாக்குப் பிடிப்பதே கூடக் கஷ்டம். இந்தச் செய்தி கிடைத்ததும் யோசித்து விட்டு பகதூர்கான் எதிர்பார்த்தது போலவே சிவாஜி மோரோபந்த் படையையும், ப்ரதாப்ராவ் படையையும் சாலேர் கோட்டையை நோக்கிச் செல்லும்படி உத்தரவிட்டு ஆளனுப்பினான்.

அடுத்த செய்தி சிவாஜிக்குப் பின்னிரவில் வந்து சேர்ந்தது. இக்லஸ்கான் தலைமையில் ஒரு படை கிளம்பி வந்து கொண்டிருப்பதாகவும், அந்தப் படை வரும் பாதை வழியாகத் தான் ப்ரதாப்ராவ் படையும், மோரோபந்த் படையும் சாலேர் செல்ல முடியும் என்றும் ஒரு ஒற்றன் வந்து தகவல் தெரிவித்தான். இப்போது பகதூர்கானின் திட்டம் சிவாஜிக்குப் புரிந்தது. பிரச்னை பூதாகரமாக எழுந்து நிற்க சிவாஜி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.

யேசாஜி கங்க் பதற்றத்துடன் சொன்னான். “சிவாஜி இந்த ஒற்றன் சொல்வதைப் பார்த்தால் சாலேர் கோட்டையின் கிழக்கிலிருந்து மோரோபந்தும், மேற்கில் இருந்து ப்ரதாப்ராவும் வந்து சேரும் இடத்தை நோக்கி அல்லவா இக்லஸ்கான் படை போய்க் கொண்டிருக்கிறது. இக்லஸ்கான் நம் இருபடைகளையும் வழிமறித்துப் போரிட்டு அவர்கள் சாலேர் கோட்டையை நோக்கி நகராமல் தடுத்து விடுவான் போல் இருக்கிறதே….”

சிவாஜி அமைதியாகச் சொன்னான். “சாலேர் கோட்டையை நோக்கி நம் படைகள் செல்வதை இக்லஸ்கான் தடுத்து நிறுத்துவது மட்டுமல்ல யேசாஜி நம் இரு படைகளையும் தனித்தனியாகப் போரிட்டு வென்றும் விடுவான். இது தான் பகதூர்கானின் திட்டமாக இருக்கிறது. சாலேர் கோட்டையை மட்டுமல்ல, நம் இரு படைகளையும் வென்று விடும் அருமையான திட்டத்தைத் தான் பகதூர்கான் அரங்கேற்றி இருக்கிறான்.…”

யேசாஜி கங்க் திகைப்புடன் சொன்னான். “என்ன சிவாஜி அருமையான திட்டம் என்று நீயே சொல்கிறாய். நாம் என்ன செய்யப் போகிறோம்?”

சிவாஜி அமைதி மாறாமல் சொன்னான். “அது தான் யோசிக்கிறேன்…..”

சிவாஜி யோசிக்க யோசிக்க யேசாஜி கங்க் பதற்றத்தைக் குறைக்க முடியாமல் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தான். நடக்க நடக்க அடிக்கடி சிவாஜியைப் பார்த்தான். அவன் பதற்றத்தைப் பார்த்து சிவாஜி வேடிக்கையாகச் சிரித்தான். யேசாஜி கங்க் கேட்டான். “உன்னால் எப்படி இந்த நிலையிலும் சிரிக்க முடிகிறது சிவாஜி? யோசித்துப் பார். சாலேர் கோட்டையை முற்றுகை இட்டிருப்பதால் நாம் அதற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் ஏற்கெனவே தவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதோ நம் இரு படைகளையும் கூட முகலாயர்கள் வென்று விடும் அபாயம் வேறு உருவாகி இருக்கிறது. திட்டத்தில் ஓட்டை இருந்தாலும் பரவாயில்லை. அதை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நீயே அது அருமையான திட்டம் என்று வேறு சொல்கிறாய். நான் பதற்றமடைந்தால் என்னைப் பார்த்துச் சிரிக்கவும் செய்கிறாய்….”

சிவாஜி நண்பனை இழுத்து அருகில் அமர வைத்து அமைதியாகச் சொன்னான். “யேசாஜி எதிரியின் திட்டம் என்ன என்று விளங்கினாலே, அது எத்தனை அருமையான திட்டமாக இருந்தாலும் நாம் பாதி ஜெயித்த மாதிரி தான். மேலும் எந்த அருமையான திட்டமும் அந்தத் திட்டப்படி நடக்க முடிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாம் அந்தத் திட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்த முடியும். அவர்கள் எண்ணியபடியே நடக்கவிடாமல் எத்தனையோ செய்ய முடியும். அப்படி இருக்கையில் நீ ஏன் பதறுகிறாய்? நான் அறிந்த வரையில் பதற்றத்தில் இது வரை எந்த நல்லதும் நடந்ததாய் இல்லை…”

பாதகமான தகவல்களே தொடர்ந்து வந்த போதும் அசராமல் அமைதியாகத் தத்துவம் பேச முடிந்த நண்பனை யேசாஜி திகைப்புடன் பார்த்தான். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவன் தான் உதாரணம் என்று தோன்றியது. தொடர்ந்து பிரச்னைகள் வந்த போதும் இந்த அசராத தன்மையும், அடுத்தது என்ன என்ற யோசிக்கும் அமைதியும் எத்தனை பேருக்கு வரும்.

சிவாஜி நண்பனிடம் தொடர்ந்து சொன்னான். “இப்படி யோசித்துப் பார் யேசாஜி. இரண்டு சிறிய கோட்டைகளை இழந்திருக்கிறோம். இரண்டுமே பெரிய முக்கியத்துவம் இல்லாத கோட்டைகள். யாரிடம் இருந்து பிடுங்கினோமோ அவர்களே நம்மிடமிருந்து திரும்பப் பிடுங்கிக் கொண்டு விட்டார்கள். இதில் நஷ்டம் எதுவும் இல்லை. சித்திகள் முகலாயர்கள் உதவியுடன் நம் கடல் ஆதிக்கத்தைத் தடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே நஷ்டம் தான். ஆனால் இதில் நம் ஆளுமைக்கு அவசர ஆபத்து எதுவும் இல்லை. இப்போது சாலேர் கோட்டைப் பிரச்னையும், இரு படைகளும் தோல்வியடையும் சாத்தியக்கூறும் மட்டும் தான் நம் முன் இருக்கின்றன. இது குறித்து நமக்கு முன்பே தகவல் தெரிந்து விட்டிருப்பதால், கஷ்டமாக இருந்தாலும், இது இரண்டும் நம்மால் சரி செய்ய முடிந்த பிரச்னைகள் தான்…”

யேசாஜி அவன் பிரச்னைகளைச் சொன்ன விதத்திலேயே சற்று பாரம் குறைந்தவனாய் கேட்டான். “சரி என்ன செய்யப் போகிறாய் சிவாஜி?”

சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் இரண்டு வீரர்கள் குதிரைகளில் ப்ரதாப்ராவ் குசாரையும், மோரோபந்த் பிங்க்ளேயையும் சந்திக்கப் பறந்தார்கள். அடுத்ததாக ஒரு பெரும்படையை சிவாஜி திரட்டிக் கொண்டு சிவாஜி சாலேர் கோட்டையை நோக்கிச் சென்றான். சிறிது நேரம் கழித்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிறிய மராட்டியக் குழு சென்றது.


கதூர்கானிடம் ஒற்றன் வந்து சொன்னான். “தலைவரே. சிவாஜி பெரும்படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு சாலேர் கோட்டையை நோக்கி கிளம்பியிருக்கிறார்….”

பகதூர்கானுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. சிவாஜி அருகில் இருக்கும் படைகளை இங்கு அனுப்புவான் என்று பகதூர்கான் எதிர்பார்த்தானே ஒழிய அவனே ஒரு பெரும்படையுடன் கிளம்பி இங்கே வருவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சிவாஜியைப் போன்ற புத்திசாலி செய்யக்கூடிய காரியமாகவும் அவன் அதை நினைத்திருக்கவில்லை. ஏனென்றால் நீண்ட தொலைவில் இருந்து வரும் சிவாஜிக்கு இங்கு ஆபத்துகள் அதிகம். இவ்வளவு தூரம் வந்து நேரடியாக முகலாயப்படை கூட மோதி அவன் வெல்லும் வாய்ப்புகள் குறைவு. அந்த அளவு ஆபத்துகளை எதிர்கொண்டு வெல்ல சாலேர் கோட்டை அவன் தலைநகரக் கோட்டை அல்ல. இழப்புகளே அதிகம், பெறுவதும் பெரியதாக எதுவுமில்லை என்ற நிலைமையில் எந்தப் புத்திசாலியும் வர மாட்டானே சிவாஜிக்குப் புத்தி பேதலித்து விட்டதா என்ன என்று பகதூர்கான் குழம்பினான்.

ராஜ்கட் கோட்டைக்கு அருகே ஏதாவது முகலாயப்படை இருக்குமானால் அதன் மீது படையெடுக்கக் கூட உத்தரவிட்டிருக்கலாம் என்று பகதூர்கான் நினைத்தான். ஆனால் கிட்டத்தட்ட முகலாயப் படை மொத்தமும் இந்தப் பக்கங்களில் அல்லவா இருக்கிறது!

பகதூர்கான் மெல்ல ஒற்றனிடம் கேட்டான். “அப்படியானால் மோரோபந்த் படையும் ப்ரதாவ்ராவ் படையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?”

ஒற்றன் சொன்னான். “அந்தப் படைகளும் நாம் எதிர்பார்த்தபடியே இங்கே தான் திருப்பிவிடப்பட்டிருக்கின்றன தலைவா.”

பகதூர்கானின் குழப்பம் அதிகரித்தது. ’அப்படியானால் சிவாஜியும் ஏன் கிளம்பி வருகிறான். ஒருவேளை அவனுடைய இரண்டு படைகளும் இக்லஸ்கானிடம் தோற்றுப் போகும் என்று பயம் வந்து விட்டதோ? அப்படித் தோற்றுப் போனால் கூட சிவாஜி போய் அவர்களுக்கு உதவும் வாய்ப்போ, இக்லஸ்கானை எதிர்க்கும் வாய்ப்போ இல்லையே. ஏன் என்றால் சிவாஜியால் கண்டிப்பாக சரியான நேரத்தில் அங்கு போய்ச் சேரும் வாய்ப்பு சிறிதும் இல்லையே….’

தலை வெடிப்பது போல் உணர்ந்த பகதூர்கான் தில்லர்கானை உடனடியாக அழைத்து வரத் தன் வீரன் ஒருவனிடம் கட்டளையிட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்

Sunday, August 30, 2020

கொரோனாவை விட கொடுமையான வியாதியஸ்தர்கள்

இந்த மனிதர்களை நெருங்காதீர்கள்! இவர்களிடமிருந்து விலகி இருங்கள்!




Saturday, August 29, 2020

ESP பயிற்சிகள்

( ஆழ்மனசக்தி இரகசியங்கள் 19)

பொருள்கள் மூலமாக தகவல்கள் அறியும் பயிற்சிகள் - ஜெரார்ட் க்ராய்செட் காட்டிய ஆழ்மனசக்தி




Thursday, August 27, 2020

இல்லுமினாட்டி 64



சிந்துவும் பேட்டி எடுக்க மறுபடி உதயின் அலுவலகத்திற்கு வந்த போது கண்ணியமாகவும் அழகாகவும் ஒப்பனை செய்து வந்திருந்தாள். அவளைப் பார்த்த உதய்க்குத் தன் பார்வையைத் திருப்பிக் கொள்வது எளிதாக இருக்கவில்லை. அவள் அவன் கூடுதலாய் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்ததைக் கவனித்து, அவனைப் பார்த்துச் சிறிது மெய்மறந்தது போலவும் பின் சுதாரித்துக் கொண்டது போலவும் காட்டிக் கொண்டாள். அவள் முகத்தில் சிறிதாய் வெட்கம் படர்ந்தது. அவனுக்கோ அவள் என்ன செய்தாலும் அது பேரழகாய்த் தெரிந்தது.

உதய் அவளிடம் சில தாள்களை நீட்டினான். அவற்றில் அவளுடைய கேள்விகளும் அவன் பதில்களும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருந்தன. அவளுடைய கேள்விகளுக்கான பதில் சில இடங்களில் இரத்தினச் சுருக்கமாகவும், தேவைப்பட்ட சில இடங்களில் விளக்கமாகவும் இருந்தன. அரசியல், அவன் தொகுதி, பாராளுமன்ற அனுபவங்கள், குடும்பம் என எல்லாவற்றிலும் அவன் பதில்களில் எந்தக் குறையும் இருக்கவில்லை. குடும்பம் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லி இருந்தான். அவன் தந்தையின் எளிமை, தாயின் பாசமும், வெகுளித்தனமும், தம்பியின் அறிவும் அடக்கமும் பற்றி எல்லாம் சொல்லி இது போன்ற ஒரு குடும்பம் தான் அவனுடைய பேரதிர்ஷ்டம் என்று நினைப்பதாகவும் சொல்லி இருந்தான்.

அவள் நிதானமாகப் படித்தாள். அவனைப் பார்ப்பதை விட அது சுலபமாக இருந்தது. அவனுக்கு அவள் படிப்பதைப் பார்ப்பதே இனிமையாக இருந்தது.

கேள்வி பதிலில்உங்கள் திருமணம் எப்போது?” என்று கேட்டிருந்ததற்கு அவன்கூடிய விரைவில்…” என்று இரண்டே சொற்களில் சொல்லி இருந்தான்.  

அவள் நிமிர்ந்து மெல்லக் கேட்டாள். “திருமணம் கூடிய விரைவில் என்று சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?”

அவன் புன்னகையுடன் சொன்னான். “ஒரு பெண்ணை சமீபத்தில் பார்த்தேன். பிடித்திருந்தது. ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை…”

அவள் மனதில் ஏற்கெனவே வேறு யாராவது இருந்தால்…?” என்று சிந்து குறும்பாகக் கேட்டாள்.

அவன் சிரித்தான். “மனமெல்லாம் உடைந்து போக மாட்டேன். அம்மாவிடம் சீக்கிரம் யாராவது ஒரு பெண்ணைப் பார். உனக்கு நன்றாகப் பிடித்திருந்து எனக்கு ஓரளவு பிடித்திருந்தால் கூட .கே என்று சொல்லி விடலாம் என்று இருக்கிறேன். ஏனென்றால் நான் காத்திருக்கிறேன் என்றாலும் என் அம்மா காத்திருக்கத் தயாரில்லை….”

அவள் அந்தப் பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கு அவள் மேல் இருந்த ஈர்ப்பு உண்மையாக இருந்தாலும் சினிமாத்தனமான சோகத்தில் ஈடுபடவெல்லாம் அவன் தயாராய் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ’என்ன இருந்தாலும் அரசியல்வாதியல்லவா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவளும் சிரித்தாள். “உங்கள் ப்ராக்டிகல் அப்ரோச் எனக்கு பிடித்திருக்கிறது. அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்டு விட வேண்டியது தானே.”

அவன் சின்னத் தயக்கத்துடன் சொன்னான். ”புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் பெண்ணிடம் திடீரென்று இந்த அளவு நெருக்கமான கேள்வியைக் கேட்பது சரி தானா என்றும் தோன்றுகிறது

சிந்து சொன்னாள். “நீங்கள் ஒன்றும் அந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்யவில்லையே. கட்டாயமும் படுத்தவில்லை. அதனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் தப்பேயில்லை

உதய் சின்ன வெட்கத்துடன், வேகமாய் அடிக்க ஆரம்பித்த இதயத்துடிப்புடனும் கேட்டான். “சரி உன் மனதில் என்ன இருக்கிறது சிந்து?”

அவளுக்குப் புரிய சிறிது நேரமானது போல் காட்டிக் கொண்டாள். பின் நம்ப முடியாத அதிர்ச்சி போல் காட்டிக் கொண்டாள். பின் திகைப்பு, தயக்கம், வெட்கம் என்ற உணர்ச்சிகளை வரிசையாகக் காட்டினாள். பின் வாயடைத்துப் போனது போல் மௌனமாக இருந்தாள்.

நான் தப்பாய் எதுவும் கேட்டு விடவில்லையேஎன்று உதய் கேட்டான்.

சிந்து ஒரு நிமிட அமைதிக்குப் பின் சொன்னாள். “நீங்கள் தப்பாய் கேட்கவில்லை. நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு தான்…..”

சரி என்ன சொல்கிறாய்? பதிலெதுவானாலும் பரவாயில்லை. நான் அதில் சங்கடப்பட மாட்டேன். உன் மனதில் வேறு யாராவது இருந்தாலும், உனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் கண்டிப்பாக நாகரிகமாக ஒதுங்கி விடுவேன்.”

சிந்து தயக்கத்துடன் சொன்னாள். “என் மனதில் யாரும் இல்லை. நான் ஒரு சாதாரண பெண். ஒரு முதலமைச்சரின் மகன், எம்.பி ஆன உங்களுக்கு அந்தஸ்திலும் மற்ற விஷயங்களிலும் எந்த விதத்திலும் நான் தகுதியானவளாகத் தெரியவில்லை
    
உதய் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தான். அவள் மனதில் வேறு யாரும் இல்லை…. சற்று முன் அவள் மனதில் யாராவது இருந்தால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னவன் இவளைத் தவிர இனி என் மனதில் இன்னொரு பெண்ணுக்கு இடமில்லை என்று அந்தக் கணத்தில் முடிவு செய்தான்.

சிந்து லேசாகக் கண்கலங்கத் தொடர்ந்தாள். “சாதாரணமானவளாகக் கூட என் நிலைமை இல்லை. ஒரு விதத்தில் நான் தனிமரம் மாதிரி தான். அன்பு செலுத்தவோ, அக்கறை கொள்ளவோ கூட எனக்கு யாரும் இல்லை. என் அப்பாவுக்கு நான் வேண்டாதவள். என் சித்திக்கு நான் பாரம். என் சகோதரிக்கு என் மேல் வெறுப்பு. என்ன வாழ்க்கை நான் வாழ்கிறேன், ஏன் வாழ்கிறேன், என்ன அர்த்தம் இருக்கிறது என்றெல்லாம் விளங்காத நிலைமையில் தான் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து, கடவுளிடம் எதாவது வழி காட்டு. என்று வேண்டிக் கொண்டு தான் மும்பையை விட்டுச் சென்னைக்கு வந்தேன்….”

கண்டிப்பாக அவள் பின்னணி பற்றி போலீசார் விசாரிப்பார்கள் என்று சிந்துவுக்குத் தெரியும். அப்படி விசாரிக்கையில் இத்தனை காலம் இருந்த மும்பையை விட்டு அவள் சென்னைக்கு ஏன் வந்தாள் என்ற நியாயமான கேள்விக்கு ஒரு பதிலைத் தயார் செய்து தரவேண்டி இருக்கும் என்பதை அவள் அறிவாள். அதனால் பேச்சோடு பேச்சாக அவள் இப்படி சென்னைக்கு வந்த காரணத்தை அவனிடம் சொல்லி வைத்தாள்.  

அவள் கண்கலங்கியதில் உதய் பதறிப் போனான். அவள் சொன்ன வார்த்தைகளில் அவன் உள்ளம் நெகிழ்ந்து போனான். இனிமேல் தனிமரம், யாருமில்லை என்றெல்லாம் சொல்ல வேண்டாம் என்று சொன்னான். அவனும், அவன் குடும்பமும் அவளுக்கு இருப்பதைச் சொன்னான். தன்னைப் பற்றிச் சொல்வதை விட அதிகமாகத் தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னான். அன்பானவர்கள் என்று சொன்னான். அவன் தாயைப் போல் ஒரு தாயை யாரும் எங்கேயும் பார்க்க முடியாது என்று சொன்னான்.

அவள் தயக்கத்துடன் கேட்டாள். “அவர்களுக்கு என்னைப் பிடிக்கா விட்டால்?”

அவன் உறுதியாகச் சொன்னான். “என் விருப்பம் தான் அவர்களுடைய விருப்பமுமாக இருக்கும். என் சந்தோஷம் தான் அவர்களுடைய சந்தோஷமுமாக இருக்கும்.”

அவன் தன் குடும்பத்தைப் பற்றி மேலும் சொல்லிக் கொண்டே போனான். சிந்துவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை கிடையாது. அவள் நினைவு தெரிந்த நாளிலிருந்து கடவுளை வணங்கியது கிடையாது. காரணம் கடவுள் இருப்பது அவளுக்கு நிச்சயமில்லை. இருந்தால் கூட இது வரை அவர் அவள் பக்கம் கடைக்கண் பார்வையைத் திருப்பின அறிகுறியும் தெரிந்ததில்லை. உதய் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கடவுள் இருந்தால் அவர் மிக பாரபட்சமானவர் என்றே தோன்றியது. குடும்பம், அன்பு விஷயத்தில் அவளுக்கு எந்த நல்லதையும் செய்யாத கடவுள் உதய்க்கு யோசித்து யோசித்து எல்லா நன்மைகளையும் செய்திருப்பது போல் தோன்றியது. அவன் சொன்னது எதுவும் அதிகபட்சமில்லை என்பதையும் அவள் அறிவாள். ஏற்கெனவே விஸ்வம் அனுப்பியிருந்த தகவல்களில் அவன் சொன்னது அத்தனையும் இருந்தன.

அவள் மனதில் ஓடிய எண்ணங்களை அவள் முகம் சிறிதும் காட்டவில்லை. அவள் முகத்தில் பிரமிப்பும், அன்பும், நன்றியும் மட்டுமே தெரிந்தன...

அவன் தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்ன போது கூடவே க்ரிஷின் காதலி ஹரிணியைப் பற்றியும் சொன்னான். அவளுடைய புத்திசாலித்தனம், தைரியம், பரந்த மனம் பற்றியும் சொன்னாள். அவன் தம்பி அவளைக் கவனிப்பதில் சில சமயம் அலட்சியம் காட்டினாலும் கூட அவனை விடாமல் காதலிப்பதைப் பற்றிச் சொன்னான். தனக்கு ஒரு சகோதரியாக அவள் மாறி விட்டதைப் பற்றிச் சொன்னான். தன் தாய் தினமும் ஒரு தடவையாவது அவளிடம் பேசாமல் இருப்பதில்லை என்று சொன்னான்...

அவள் முகத்தில் பிரமிப்பு காட்டிக் கேட்டுக் கொண்டே வந்தாள். தன்னுடைய திட்டத்தின் அடுத்த பகுதியில் இவ்வளவு சீக்கிரம் வெற்றியடைய முடியும் என்று அவள் நம்பியிருக்கவில்லை. விஸ்வம் இந்த வெற்றியைக் கேள்விப்பட்டால் மிகவும் சந்தோஷப்படுவான் என்பதில் அவளுக்குச் சந்தேகமேயில்லை. திருப்தியுடன் புன்னகைத்தாள்...

(தொடரும்)
என்.கணேசன்