Monday, September 30, 2019

சத்ரபதி 92


சிவாஜி தன்னைச் சரியாகத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு முன் முகலாயர்களின் பகையைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாமல் தான் இத்தனை காலம் அவர்களிடம் எந்தப் பிரச்னையும் செய்யாமல் ஒதுங்கியே இருந்தான். ஒரே காலத்தில் இரண்டு பக்கங்களில் பிரச்னை வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. தற்போது தெற்கில் கர்நாடகத்திலும் வடக்கில் சிவாஜியிடமுமாக ஒரே நேரத்தில் இரண்டு  பக்கங்களிலுமே அலி ஆதில்ஷாவுக்குப் பிரச்னை இருந்ததால் தான் அவனை சிவாஜியால் தோற்கடிக்க முடிந்தது. அதே நிலைமையில் தானும் சிக்க விரும்பாமல் தான் சிவாஜி பீஜாப்பூர் அரசை சமாளித்து வரும் இந்த நேரத்தில் முகலாயர்களிடம் ஒதுங்கியே இருந்தான். ஆனால் சிவாஜியின் அடுத்த இலக்கு தாங்களாக இருக்கலாம் என்று ஔரங்கசீப் ஊகித்து விட்டது போல் இருந்தது அவன் செயிஷ்டகானை அத்தனை பெரிய படையுடன் அனுப்பி விட்டிருந்த செய்தி.

சிவாஜி உடனடியாக நண்பர்களையும், ஆலோசகர்களையும், படைத்தலைவர்களையும் அழைத்து கலந்தாலோசித்தான்.

“செயிஷ்டகான் படை நம் எப்பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது சிவாஜி” தானாஜி மலுசரே கேட்டான்.

“பூனாவை நோக்கித் தான் வந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களில் அவர்கள் பூனாவை நெருங்கி விடக்கூடும்.” என்று சொன்ன சிவாஜியிடம் அடுத்த ஆணையை அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

சிவாஜி சொன்னான். “ராஜ்கட் கோட்டைக்கு இடம் பெயர்வோம்”

இது போன்றதொரு நிலைமை எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்று முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த சிவாஜி சகாயாத்ரி மலைத்தொடரில் இருக்கும் ராஜ்கட் கோட்டையை முன்பே மிகவும் வலிமைப் படுத்தி இருந்தான். அங்கு இடம் பெயர்வது சுலபமானது மட்டுமல்ல, தேவைப்படும் போது விரைவாக பூனாவுக்குத் திரும்பி வருவதும் சாத்தியமே.


செயிஷ்டகான் அகமது நகரிலிருந்து பூனாவை நோக்கித் தன் படையுடன் வந்து கொண்டிருந்த போது அதிருப்தியான மனநிலையிலேயே இருந்தான். சிவாஜியை வென்று வருவது அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே தன் தகுதிக்குக் குறைவான வேலையாகவே தோன்றி வந்தது. ஷாஜஹான் காலத்திலிருந்தே   பல போர்கள் கண்டவன் அவன். சிறந்த போர்த்தளபதி மட்டுமல்ல சிறந்த நிர்வாகியுமாகக் கருதப்படுபவன் அவன். முந்தைய முகலாயச் சக்கரவர்த்தியின் மனைவியின் தம்பி அவன். இன்றைய சக்கரவர்த்தியின் தாய் மாமன் அவன். இன்று முகலாய சாம்ராஜ்ஜியத்தில் ஔரங்கசீப்புக்கு அடுத்தபடியாக பலராலும் மதிக்கப்படுபவன். இப்படிப் பல பெருமைகள் கொண்ட அவனை, சுண்டைக்காயான சிவாஜியை வெல்ல ஔரங்கசீப் அனுப்புவது கௌரவக்குறைவான நியமனமாகவே அவனுக்குத் தோன்றியது.

தக்காணப் பீடபூமியின் முகலாய கவர்னராக அவன் இருந்த போதும் அவனே சிவாஜியை வெல்லச் செல்ல வேண்டியதில்லை என்றும், அவனிடம் திறமை வாய்ந்த சில படைத்தளபதிகள் இருக்கிறார்கள் என்றும் சூசகமாக செயிஷ்டகான் ஔரங்கசீப்பிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவர்களால் எல்லாம் அது முடியாத காரியம் என்று ஔரங்கசீப் எடுத்த எடுப்பிலேயே மறுத்த போது, மருமகன் அனாவசியமாக சிவாஜியை உயர்த்திப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் அதை ஔரங்கசீப்பிடம் நாசுக்காகச் சொல்லியும் பார்த்தான்.

ஔரங்கசீப் அமைதியாகச் சொன்னான். “இலக்கு மிகத் தெளிவாக ஒருவனுக்கு இருக்குமானால், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவன் தயாராகவும் இருப்பானானால் அவனைக் குறைத்து மதிப்பிடுவது அவன் எதிரி செய்யக்கூடிய மகத்தான முட்டாள்தனமாக இருக்கும் மாமா”

செயிஷ்டகானுக்கு ஔரங்கசீப்பின் கூர்மையான அறிவு குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்களைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தவன் ஔரங்கசீப். குழப்பமான சூழ்நிலைகளிலும் ஆழமாய் உள் சென்று தெளிவான முடிவுகளை எடுக்க வல்லவன் அவன். ஆனால் பேரறிவுக்கு இணையாக சந்தேகப் புத்தியும் அவனிடம் நிறையவே இருந்தது. ஒவ்வொருவரும் அவனுக்கு எதிராகச் செயல்பட்டு விடுவார்களோ என்ற சந்தேகக் கண்ணோடு தான் பார்ப்பான். அதனாலேயே பெரும்பாலான சமயங்களில் அதிஜாக்கிரதையாகவே அனைவரிடமும் இருப்பான். அந்த அதிஜாக்கிரதை உணர்வு சற்று அதிகமாக மேலோங்கியதால் தான் இப்போது ஔரங்கசீப் சிவாஜியை வலிமையான எதிரியாக நினைக்கிறானோ என்று செயிஷ்டகானுக்குத் தோன்றினாலும் அதை வெளியே சொல்லும் தைரியம் அவனுக்கு வரவில்லை.

ஔரங்கசீப்பை எதிர்த்துப் பேசும் தைரியம் அவனுடைய மூத்த சகோதரி ஜஹானாரா பேகத்தைத் தவிர மற்றவர்களுக்கு இருக்கவில்லை. அவள் ஒருத்தி தான் மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாக அவனிடம் நேரடியாகவே சொல்லக்கூடியவள். அவள் சொல்வது பிடிக்கா விட்டாலும் அவள் அவனை வளர்த்தவள் என்ற காரணத்தினாலும், அவள் இயல்பிலேயே நியாய உணர்வு மிக்கவள், நல்லவள் என்ற காரணத்தினாலும் ஔரங்கசீப் அவளைப் பொறுத்துக் கொண்டானே ஒழிய மற்றவர்கள் யாராக இருந்தாலும் எதிர்த்துப் பேசுபவர்களை எதிரியாகக் கருதும் மனப்போக்கு அவனிடம் இருந்தது. அதனாலேயே பயந்து மருமகனிடம் அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் செயிஷ்டகான் தக்காணப் பீடபூமிக்குக் கிளம்பி விட்டிருந்தான்.   

பெரும்படையை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வது எளிமையான காரியம் அல்ல. தனி மனிதர்கள் செல்வது போல விரைந்து சென்று விட முடியாது. மெல்லச் செல்லும் படை எப்போது பூனா சென்று சேருமோ என்ற சலிப்புணர்வு மேலோங்க செயிஷ்டகான் தன் படைத்தலைவனிடம் கேட்டான். “எப்போது பூனா சென்று சேர்வோம்?”

“இரண்டு நாட்கள் ஆகும் பிரபு” என்றான் அவனது படைத்தலைவன்.

சிவாஜியை அவன் சுண்டைக்காய் என்று துச்சமாக நினைத்தாலும் படைத்தலைவன் கருத்து என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் மேலிட செயிஷ்டகான் படைத்தலைவனிடம் கேட்டான்.  “சிவாஜி இந்த முறை நம்மிடம் சிக்க வேண்டும் என்று சக்கரவர்த்தி எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்ப்பை நம்மால் எளிதில் நிறைவேற்ற முடியுமா?”      

படைத்தலைவன் சொன்னான். “அவனுடைய கோட்டைகளையும் இடங்களையும் நம் படைவலிமையால் கைப்பற்றுவது எளிது தான் பிரபு. ஆனால் அவனையே பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவன் மலை எலி போன்றவன் பிரபு. மலையே தீப்பிடித்து எரிந்தாலும் மலையில் வாசம் செய்யும் எலி அந்தத் தீக்கிரையாகி விடுவதில்லை. அது மிக ஆழமான, பாதுகாப்பான பொந்துகளுக்குள் பதுங்கிக் கொண்டு விடும். தீ அணைந்து வெப்பம் தணிந்த பின் தான் அது வெளியே வரும். அவனும் ஆள் அகப்பட மாட்டான் பிரபு. சகாயாத்ரி மலைத்தொடர் அவனுக்குச் சொந்த வீட்டை காட்டிலும் நெருக்கமானது. அவன் விளையாடி வளர்ந்த இடம் அது. யாரும் அறியாத இடங்களில் எளிதாக அவனால் பதுங்கிக் கொள்ள முடியும்”

செயிஷ்டகான் அந்தப் பதிலில் ஏமாற்றமடைந்தான். ஔரங்கசீப் கோட்டைகளையும், இடங்களையும் கைப்பற்றுவதற்கு முக்கியத்துவம் தரவில்லை. சிவாஜியைப் பிடிப்பதற்குத் தான் முக்கியத்துவம் தந்துள்ளான். நினைத்த அளவு வேகமாக வேலையை முடித்துக் கொண்டு திரும்ப முடியாது போலிருக்கிறதே என்று எண்ணி செயிஷ்டகான் பெருமூச்சு விட்டான்.


சிவாஜி தன் குடும்பத்தோடும், படையோடும்  பூனாவை விட்டுக் கிளம்பி விட்டான்.  செல்வதற்கு முன் பூனாவின் நிர்வாக அதிகாரிகளையும், குடிமக்களில் முக்கியஸ்தர்களையும் அழைத்துச் சொன்னான்.

“முகலாயப் படைகள் இங்கே வருகிற போது நீங்கள் யாரும் அவர்களை எதிர்க்க வேண்டாம். இப்போதைக்கு  அவர்கள் சொல்கிற படியே நடந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டும் மதித்துமே நடந்து கொள்ளுங்கள். இது நமக்குத் தற்காலிக அசௌகரியமே. அவர்கள் இங்கு நிரந்தரமாகத் தங்கி விட நான் அனுமதிக்க மாட்டேன். இது நம் பூமி. என்றும் இது நம்முடையதாகவே இருக்கும்….”

அவன் மிக அமைதியாகவும், உறுதியாகவும் சொன்ன விதம் அவர்கள் மனதில் ஆழமான நம்பிக்கையை விதைத்தது. அவர்களைப் பொருத்த வரை அவன் வாக்கு தெய்வத்தின் வாக்கைப் போல நிச்சயமானது. அவன் சொன்னதைத் தவிர வேறு விதமாக நடக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வழி அனுப்பி வைத்தார்கள்.

சிவாஜியின் குடும்பமும் படையும் பூனாவிலிருந்து சகாயாத்ரி மலைத் தொடரில் ராஜ்கட் கோட்டையை நோக்கி வேகமாகக் கிளம்பியது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் சிவாஜியின் மனைவி சாய்பாய் மயக்கம் அடைந்து விழுந்தாள். வைத்தியர் விரைந்து வந்து அவளுக்கு முதலுதவி சிகிச்சை செய்து மயக்கம் தெளிய வைத்தார். மயக்கம் தெளிந்து கண் விழித்த போதும் சாய்பாய் பலவீனமாகவே காணப்பட்டாள்.

பயணத்தை நிறுத்தி, இளைப்பாற்றி, முழுமையான சிகிச்சை செய்த பின் பயணம் தொடர அவர்களிடம் காலமில்லை.  தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் கூடுதல் ஆபத்தை விளைவிக்கலாம்….


எல்லோரும் செய்வதறியாமல் திகைத்துக் கலங்கி நிற்கையில் சிவாஜி அதிகம் யோசிக்காமல் மனைவியைத் தூக்கி தன் மேல் சாய வைத்தபடி இருத்திக் கொண்டு குதிரையை வேகமாகச் செலுத்தினான்.  சற்று முன் செயலிழந்து திகைத்து நின்றவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு தெளிவு பெற்று அவனை வேகமாகப் பின் தொடர்ந்தார்கள். 

(தொடரும்)
என்.கணேசன்


Friday, September 27, 2019

ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் எட்டாம் பதிப்பு வெளியீடு!



அன்பு வாசகர்களுக்கு

வணக்கம். ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் எட்டாம் பதிப்பு இன்று வெளியாகியுள்ளது.  புத்தக விற்பனை நலிந்து வரும் சூழ்நிலையிலும் கூட இந்த நூல் எட்டு பதிப்புகள் கண்டிருப்பதற்குத் தங்கள் பேராதரவே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த மகத்தான வெற்றிக்குக் காரணமாக இருக்கும் என் வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல் வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது blackholemedia@gmail.com தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
என்.கணேசன்

Thursday, September 26, 2019

இல்லுமினாட்டி 15



க்ரிஷின் ரகசிய அலைபேசி நள்ளிரவு இரண்டு மணிக்கு அலறியது. அந்த ரகசிய அலைபேசி இல்லுமினாட்டி நபர்கள் மட்டுமே அழைக்கக்கூடியது என்பதால் க்ரிஷ் திகைப்புடன் கண்விழித்து அழைத்தது யார் என்று பார்த்தான். எர்னெஸ்டோ!

அவன் திகைப்பு அதிகரித்தது. இல்லுமினாட்டியின் ஆட்கள் மிக முக்கியமாகவும், அவசரமாகவும் இருந்தால் ஒழிய கூப்பிட மாட்டார்கள் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் அப்படி அழைத்தால் உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக அந்த ரகசிய அலைபேசியை எடுத்துப் பேச வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்கள். அவன் ம்யூனிக்கில் இருந்து வந்து மூன்று நாட்கள் கூட முழுமையாய் முடிந்து விடவில்லை. அதற்குள் இல்லுமினாட்டியின் தலைவரே அழைக்கிறார் என்றால்  அதிமுக்கிய அவசரத்தகவல் ஏதோ தான் இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே க்ரிஷ் பேசினான். “ஹலோ”

எர்னெஸ்டோவின் குரல் அமைதியாகவும், விளையாட்டாகவும் ஒலித்தது. “க்ரிஷ் உன் நண்பன் செத்த பிறகு கூட அசத்தி இருக்கிறான்”

க்ரிஷ் குழப்பத்துடன் கேட்டான். “எப்படி?”

எர்னெஸ்டோ நடந்ததை எல்லாம் தெரிவித்தார். க்ரிஷ் நம்ப முடியாமல் தடுமாறினான். பின் மெல்லக் கேட்டான். “சார் நடந்திருப்பதற்கும் அவனுக்கும் சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம் அல்லவா? அந்தப் போதை மனிதன் டேனியல் பிழைத்துக் கொண்டது விஸ்வத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு மருத்துவ அதிசயமாகக் கூட இருக்கலாம் தானே”

“இருக்கலாம். அந்த டேனியல் விஸ்வம் இறந்த அதே நேரத்தில் இறக்க ஆரம்பித்து உயிர் பிழைக்காமல் இருந்திருந்தால். அந்தக் கிதாரை யார் வாசித்தது என்று நமக்குத் தெரிந்திருந்தால். அந்த ட்யூன் வூடு சடங்கில் ஆவியை ஒரு உடம்பில் ஏற்றுவதாக இல்லாமல் இருந்தால். டேனியல் தன் வாழ்க்கையில் எப்போதுமே பயன்படுத்தாத மூளையின் சக்தி மையங்களில் அசாதாரண செயல்பாடுகள் இல்லாமல் இருந்தால். உயிர்பிழைத்த டேனியல் ரகசியமாக அதிகாலையில் ஆஸ்பத்திரியை விட்டுத் தப்பித்துச் செல்லாமல் இருந்திருந்தால். அந்த அதிகாலை நேரத்தில் அவனை அழைத்துப் போனது யார் என்பதில் எந்த ரகசியமும் இல்லாமல் இருந்தால்…”

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. அவர் சொல்வது அனைத்தும் உண்மை. இதில் விஸ்வத்தின் முத்திரை தெளிவாகவே தெரிகிறது. அவன் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையையும் விட்டு வைக்கவில்லை போலிருக்கிறது.

எர்னெஸ்டோ கேட்டார். “உனக்கு அவன் கூட்டாளி யாராக இருக்கும் என்ற யூகம் ஏதாவது இருக்கிறதா?”

க்ரிஷ் யோசனையுடன் சொன்னான். “அவன் நிறைய பேரை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனுக்குக் கூட்டாளிகள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை”

அவன் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்த ஆள் யாராவது தெரியுமா?” எல்லாவற்றையும் முன்பே அறிந்திருந்த போதும் எர்னென்ஸோ கேட்டார். 


“மனோகர் என்று ஒருவனைத் தெரியும்…” என்று ஆரம்பித்த க்ரிஷ் தன் காதலி ஹரிணியை மனோகர் கடத்திக் கொண்டு போனதையும், எப்படியோ சாமர்த்தியமாக போலீஸ் அதிகாரி செந்தில்நாதன் அவளை மீட்டு அவனைக் கைது செய்ததையும் விவரித்தான். இப்போது அவன் சிறையில் இருப்பதையும் தெரிவித்தான். ”ஆனால் அவனுக்கும் முதலாளியின் தனிப்பட்ட விஷயங்களோ, கூட்டாளிகள் யாராவது இருந்திருந்தால் அதைப்பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”

எர்னெஸ்டோ சொன்னார். “ஆனால் அந்த வேலையாளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகவல் நினைவு வரலாம். அந்தத் தகவல் மூலம் நாம் இன்னொரு தகவலைக் கண்டுபிடிக்கலாம். இப்படிச் சங்கிலித் தொடராகப் போய் நாம் நமக்கு வேண்டிய தகவலைக் கண்டுபிடிக்கலாம்.”

அவர் கூறியது உண்மை என்றே க்ரிஷுக்கும் பட்டது. “நாளைக் காலையிலேயே அவனை விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன் தலைவரே”

எர்னெஸ்டோ சொன்னார். ”ஒருவேளை நாம் பயப்படுவது போல் விஸ்வம் டேனியல் உடம்பில் சேர்ந்திருந்தால் பழைய சக்திகள் அவனுக்கு எத்தனை எந்த அளவில் இருக்கும் என்பது தெரியாது. ஆனால் காலப்போக்கில் முழுவதுமாக இல்லா விட்டாலும் அவன் ஓரளவு அந்தச் சக்திகளைப் பெற்று விடலாம் என்பது திபெத்திய யோகியின் அபிப்பிராயம். அப்படி அவன் தயாரானால் முதலில் தொடர்பு கொள்ளும் நபர் மனோகராக இருக்கலாம். அல்லது நீயாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது க்ரிஷ்… நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே கூப்பிட்டுச் சொல்”

க்ரிஷ் கேட்டான். “ஒருவேளை விஸ்வம் டேனியலின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறதா?”

எர்னெஸ்டோ அமைதியாகச் சொன்னார். “டேனியலின் பாஸ்போர்ட், க்ரெடிட் கார்ட், அவன் பயன்படுத்தினால் முதலில் அது நம் கவனத்துக்கு வர ஏற்பாடு செய்திருக்கிறோம்…. அதை அவனும் எதிர்பார்த்திருப்பான். ஆனால் அவன் வேறு ஏதாவது போலி ஐ.டி, பாஸ்போர்ட்டில் உலாவ வாய்ப்பிருக்கிறது. அதை நாமும் எதிர்பார்த்தே இருப்பது புத்திசாலித்தனம்.”

அவர் பேச்சை முடித்துக் கொண்டார். அத்துடன் க்ரிஷின் தூக்கமும் முடிந்து போனது. அவன் இல்லுமினாட்டி கூட்டத்தில் பேச இந்தியாவிலிருந்து கிளம்பிய போது அவன் அண்ணன் உதய்க்கும், காதலி ஹரிணிக்கும் மட்டும் தான் சுருக்கமாக உண்மையைச் சொல்லி இருந்தான். ஆனால் அவன் ம்யூனிக்கில் இல்லுமினாட்டியில் இணைந்ததை அவர்களிடம் கூடச் சொல்லவில்லை. அவர்களைப் பொருத்த வரை அவன் கண்களைக் கட்டிக் கொண்டு இல்லுமினாட்டி கூட்டத்தில் பேசினான். பேச்சின் முடிவில் மர்மமான முறையில் விஸ்வம் இறந்திருந்தான். கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அவனைத் திரும்பவும் ஓட்டல் அறையில் கொண்டு வந்து விட்டார்கள். அவன் மறுநாளே அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்து விட்டான். இல்லுமினாட்டியில் இணைந்திருப்பது குடும்பத்தினருக்குக் கூடத் தெரிந்திருக்கக்கூடாது என்பது இல்லுமினாட்டியின் விதிமுறை என்பதற்காக மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தால் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காகவும் கூட அதை அவன் மறைத்திருந்தான்.

இப்போது விஸ்வத்தின் இந்தப் புதிய அவதாரம் பற்றி அனாமதேயமாக அங்கிருந்து தகவல் வந்ததாக உதயிடமும், ஹரிணியிடமுமாவது அவன் தெரிவிக்க வேண்டும். ஆபத்து இன்னும் முடிந்து விடவில்லை என்று எச்சரிக்க வேண்டும். அதை நினைத்த போதே மனம் சலிப்பை உணர்ந்தது. இனி விஸ்வம் என்ன செய்யப்போகிறான், அதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பும் கூடவே எழுந்தது. அதிகாலை வரை பல்வேறு அனுமானங்களில் அவன் மனம் அலைபாய்ந்தது.

அதிகாலையிலேயே அவன் போலீஸ் அதிகாரி செந்தில்நாதனுக்குப் போன் செய்தான். புதிய தகவல்கள் கிடைத்திருக்காததால் அவர் க்ரிஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். “விஸ்வம் செத்துட்டான்னு கேள்விப்பட்டேன். ஒரு பெரிய பீடை நம்மள விட்டது. வாழ்த்துக்கள்”.

”பீடை அவ்வளவு சீக்கிரம் விடற மாதிரி தெரியல சார். செத்த பிறகும் இன்னொரு உடம்புல புகுந்திருக்கிறதா ராத்திரி தகவல் கிடைச்சிருக்கு.”

செந்தில்நாதன் திகைத்தார். விஸ்வத்தைத் தவிர வேறு யாரைப் பற்றி இப்படி ஒரு செய்தி கிடைத்திருந்தாலும் செந்தில்நாதன் சிரித்து அந்தத் தகவலைக் கடந்து போயிருப்பார். ஆனால் விஸ்வத்தின் சக்திகள் பற்றியத் தகவல்கள் பல சேகரித்திருந்த அவருக்கு இதுவும் அவனால் முடியக்கூடிய காரியமே என்று தோன்றியது.

க்ரிஷ் சொன்னான். “அப்படி இன்னொரு உடம்புல அவன் நுழைய வேற யாரோ உதவியிருக்கிறதா தெரியுது. இப்போ அவன் புகுந்திருக்கிறதா அவங்க சந்தேகப்படறது ஒரு பலவீனமான உடம்பில். அதில் அவன் பழைய சக்திகளைப் பயன்படுத்தறதுல சில சிக்கல்கள் இருக்கலாம்கிறாங்க. ஆனா கொஞ்ச நாள்ல அவன் ஓரளவு சுதாரிச்சுடுவான்னும் சொல்றாங்க. அப்படி அவன் சுதாரிக்கிறதுக்கு முன்னாடி அவன் இன்னொரு உடம்புல நுழைய உதவியிருக்கிற கூட்டாளி அல்லது கூட்டாளிகள் பத்தி தெரிஞ்சுக்க முடியுமான்னு கேட்கறாங்க”

செந்தில்நாதன் சொன்னார். “அவன் தனியா தான் எல்லாத்தையும் கத்துகிட்டிருக்கான். எந்தச் சக்தி பெறவும் இன்னொரு கூட்டாளியோட அவன் போனதா இது வரைக்கும் நமக்குத் தகவல் இல்லை….”

க்ரிஷ் சொன்னான். “உண்மை தான். ஆனா யாரோ இப்ப அவன் கூடு விட்டு கூட பாய உதவியிருக்கிறாங்க. அதனால குறைந்த பட்சம் ஒரு கூட்டாளியாவது இருக்கறது நிச்சயம். ஜெயில்ல இருக்கற மனோகருக்கு அந்தக் கூட்டாளி பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கா?”

“அவனுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை…”

“விஸ்வத்தைப் பத்தி அவனுக்குத் தெரிஞ்சிருக்கிற தகவல்கள் ஏதாவது அந்தக் கூட்டாளியை நமக்கு அடையாளம் காட்டலாம் தானே?”

”அதுக்கும் வாய்ப்பு குறைவு தான். ஆனா முயற்சி செய்து பார்க்கலாம்”

“ஒருவேளை விஸ்வம் தன் வேலைகளை ஆரம்பிச்சுட்டா கண்டிப்பா அவன் தன் வேலைக்காரன் மனோகரைத் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பிருக்கு. அதனால இப்போதைக்கு மனோகர் நமக்கு முக்கியமான துருப்புச்சீட்டு. அவனைக் கவனமாவும் ஜாக்கிரதையாவும் பயன்படுத்தணும். பாதுகாக்கணும்…”

“சரி க்ரிஷ்…. நான் இன்னிக்கு காலைலயே போய் அவனைப் பார்த்து விசாரிக்கிறேன். அவனைக் கண்காணிக்கவும் ஆட்களை ஏற்பாடு செய்றேன்”

க்ரிஷ் கடைசியாக மெல்லச் சொன்னான். “சார் நீங்களும் ஜாக்கிரதையா இருங்க”

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, September 25, 2019

உங்கள் விதியைத் தெரிந்து கொள்ள எளிய வழி!


ல்லோருக்குமே அவர்கள் விதியையும், எதிர்காலத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. சிலர் அதே யோசனையில் தீவிரமாக இருப்பதும் உண்டு. யாராவது நல்ல ஜோதிடர் இருக்கிறார் என்றால், அவர் சொன்னது நூறு சதம் யாருக்காவது பலித்திருக்கிறது என்றால் நம் ஜாதகத்தையும் அந்த ஜோதிடரிடம் எடுத்துச் சென்று காட்டலாமே என்று தோன்றாதவர்கள் மிகவும் குறைவு. எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ளும் போது விதியில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆர்வம் மேலிடுவது இயற்கை.

உண்மையில் விதியை அறிய ஜோதிடத்தை ஒருவர் நாடிப் போக வேண்டியதில்லை. நம் எண்ணப் போக்கிலேயே நாம் என்னவாகப் போகிறோம், எப்படி இருக்கப் போகிறோம் என்பது தெரிந்து விடும். சொல்லப் போனால் எந்த ஜோதிட சாஸ்திரத்தையும் மிஞ்சி மிகத் துல்லியமாக அது சொல்லி விடும். அதைத் தான் பகவத் கீதையின் பதினாறாவது அத்தியாயமான தெய்வாசுர சம்பத் விபாக யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஆரம்பத்திலேயே தெரிவிக்கிறார்.

பயமின்மை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக நிற்றல், தானம், வெளியிலுள்ள புலன்களை அடக்குதல், வேள்வி, வேதம் ஓதுதல், தவம், நேர்மை;

அஹிம்சை, சத்தியம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், கோள் சொல்லாமல் இருத்தல், பிராணிகள் மீது கருணை, பேராசையின்மை, மென்மை, வெட்கம், வீணான செயல்களைச் செய்யாமல் இருத்தல்

தேஜஸ், பொறுமை, தைரியம், உடல் தூய்மை, வஞ்சகமின்மை, தற்பெருமையில்லாமை, இவையெல்லாம் தெய்வீக மனப்பான்மையுடன் பிறந்தவர்களின் இலக்கணங்களாகும்.

டாம்பீகம், கர்வம், தற்புகழ்ச்சி, கோபம், கடுஞ்சொல், ஞானமின்மை ஆகியவை அசுர மனப்பான்மையுடன் பிறந்தவனின் பிறவிக் குணங்கள் ஆகும்.

தெய்வீகக் குணங்கள் மோட்சத்தை அடைய உதவும். அசுர மனப்பான்மை சம்சார பந்தத்தை அளிக்கும். பாண்டவா, வருத்தப்படாதே. நீ தெய்வீகக் குணங்களுடன் பிறந்திருக்கிறாய்.

தெய்வீகக் குணங்களில் முதல் குணமாக பயமின்மையை பகவான் கூறுவதைக் கவனிக்க வேண்டும். பயத்தைப் போல் நம்மைக் கட்டிப் போட்டுப் பின்னுக்குத் தள்ளக்கூடியது வேறொன்றுமில்லை. பெரும்பாலான நேரங்களில் பயம் அஞ்ஞானத்தின் விளைவாகவே இருக்கிறது. அது நம் திறமைகளை மழுங்கடிக்கிறது. முயற்சிகளை முடக்கி விடுகிறது. மற்ற எத்தனையோ நல்ல தன்மைகள் இருந்த போதும் கோழைத்தனத்தால் பிரகாசிக்க முடியாமல் போனோர் ஏராளம்.

மனத்தூய்மையும், ஞான வழியில் நிற்பதும் தவறான பாதையில் சென்று பின் கஷ்டப்படும்படியான சூழ்நிலையை முன்கூட்டியே தடுக்கின்றது. புலன் அடக்கமும் நம் சக்திகளை விரயமாக்காமல் உயர்ந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தும்படியாக நம்மை ஊக்குவிக்கிறது.

அடுத்தது வேள்வி இந்தக் காலத்தில் செய்ய முடிந்த விஷயம் தானா என்ற கேள்வி எழுகிறது. வேள்வி என்பது ஒரு தினசரி காரியமாக இருந்த காலக்கட்டத்தில் கூறப்பட்டது பகவத் கீதை. இன்று முறையாகச் செய்பவர்களும் இல்லை, செய்யும் சூழலும் இல்லை என்பதால் இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதே போல் வேதம் ஓதுதல். அக்காலத்தில் வேதம் ஓதுதல் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. படிப்பது புரியும், வாழ்வின் மேலான உண்மைகளை உணர்த்தி வழி காட்டும் என்கிற நிலை இருந்தது. இன்று அந்த நிலை எல்லோருக்கும் இல்லை என்பதால் உயர்ந்த ஞானத்தை உணர்த்தும் நூல்கள் படித்தல் என்றுகூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இங்கே குறிப்பிட்ட தவமும் பழைய காலத்திற்குப் பொருந்துவது என்று நினைக்க வேண்டாம். மன ஒருமைப்பாட்டுடன் எந்த உயர்ந்த செயலைச் செய்தாலும் அது தவம் தான். அந்தத் தவநிலை கைகூடாததால் தான் நாம் அடிக்கடி சறுக்குகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து விட்டுச் சும்மா இருக்கும் கலை நமக்கு வசமாவதில்லை. சில சமயங்களில் அப்படி இருந்தால் கூடப் பல சமயங்களில் தேவையில்லாததையும் செய்து நம் சக்தியை வீணடிக்கிறோம்.  அதனால் தவம் என்ற சொல் மலையுச்சியில் தனிமையில் முனிவர்கள் செய்யும் சமாச்சாரம் என்ற நினைவை ஒழித்து நம் வழியில் நாமும் தவ வாழ்க்கை வாழ முடியும் என்ற புரிதலுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்ய வேண்டியதைச் சிறப்பாகச் செய்யும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதே போல் அஹிம்சையும் பல முறை வற்புறுத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு ஹிம்சையும் அதற்கான விளைவுகளை அதற்குரிய காலத்தில் கொண்டு வருவதால் தேவையில்லாத விரும்பத்தகாத விளைவுகளை வரவழைத்துக் கொள்ளாமல் இருக்கவாவது அஹிம்சையை நாம் பின்பற்ற வேண்டும்.

இங்கே வெட்கம் என்பது தவறான செய்கைகள் செய்வதில் இருக்க வேண்டிய கூச்சத்தையும், நாணத்தையும் சொல்கிறது. அதே போல் வீணான செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது மிக முக்கியமானது. தேவையில்லாமல் கைகால்களை ஆட்டுவது, அர்த்தமில்லாமல் பேசுவது, பயனில்லாத விஷயங்களைச் சிந்திப்பது எல்லாம் அந்த வகையில் சேர்ந்தவை. அவை பெரிய குற்றங்கள் அல்ல என்றாலும் அவை நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கான சக்தியிலிருந்து பெருமளவு திருடிக் கொள்கிறது என்பதால் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

மற்றவை எல்லாம் முன்பு விவரித்த விஷயங்களே. இந்த நல்ல தன்மைகளை தெய்வீகத் தன்மைகளாக பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இந்தத் தெய்வீகத் தன்மைகளால் வாழ்க்கை சுபிட்சம் அடையும், நிறைய சாதனைகள் செய்ய முடியும், முன்னேற முடியும் என்பது நிதர்சனம். இந்தத் தன்மைகளுக்கு எதிரான தன்மைகளையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அவற்றில் முதலில் வருவது டாம்பீகம். உண்மையில் சொல்லிக் கொள்ளச் சிறப்பாக எதுவுமில்லாத மனிதர்களே டாம்பீகத்தில் ஈடுபடுகிறார்கள். உள்ளே இருக்கும் குறைப்பாட்டை மறைக்க அவர்களுக்கு டாம்பீகம் தேவைப்படுகிறது. அதே போல் கர்வமும் அவனவன் மட்டுமே உண்மை என்று நம்பும் கற்பனை உயர்வு நவிற்சியே. அந்த இல்லாத உயர்வுகளை அடுத்தவர்கள் பார்ப்பதில்லை. அழிவு வரும் வரை முட்டாள்கள் தங்கும் மனோ நிலையாகத் தான் டாம்பீகமும், கர்வமும் கருதப்படுகிறது. கோபம், கடுஞ்சொல், ஞானமின்மைக்கு முன்பே நிறைய விளக்கங்கள் கொடுத்து இருக்கிறோம். ஒட்டு மொத்தத்தில் அழிவை ஏற்படுத்துகிற அசுர குணங்கள் இவை.

இவை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து முடிவுக்கு வரச் சொல்லப்பட்டு இருக்கின்றன. அர்ஜுனனுக்குத் தெய்வீகக் குணங்களுடன் பிறந்திருப்பதாக ஸ்ரீகிருஷ்ணரே சர்ட்டிபிகேட் தந்து விட்டார்.  நாம் எப்படி இருக்கிறோம் என்று இந்தப் பட்டியலை வைத்து சிந்திப்போம். நம் விதி அதன்படியே அமையப்போகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்!

பாதை நீளும்...

என்.கணேசன்

Monday, September 23, 2019

சத்ரபதி 91



ஷாஹாஜி மெல்லச் சொன்னார். “நான் நாளையே கிளம்புவதாக இருக்கிறேன் ஜீஜா”

ஜீஜாபாயும் சிவாஜியைப் போலவே சொன்னாள். “போய்த் தான் ஆக வேண்டுமா. இங்கேயே இருந்து விடலாமல்லவா. தாய் மண்ணில் வயோதிகத்தைக் கழிப்பது எல்லோருக்குமே இதமானதல்லவா?”

ஷாஹாஜி சிவாஜியிடம் சொன்ன காரணத்தையே மீண்டும் ஜீஜாபாயிடமும் சொன்னார். இருவருக்கிடையே சிறிய கனத்த மௌனம் நுழைந்தது. எத்தனையோ சொல்லவும், கேட்கவும் இருந்தும் எதையும் சொல்ல முடியாமல், கேட்கத் துணியாமல் ஏற்படும் கனமான மௌனம் அது.

ஜீஜாபாய் அந்த மௌனத்தை உடைத்தாள். “நீங்கள் மிகவும் களைத்துக் காணப்படுகிறீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சரியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.”

ஷாஹாஜி தலையசைத்தார். பின் விரக்தியுடன் சொன்னார். “இந்தக் களைப்பு வாழ்வதில் வந்தக் களைப்பு ஜீஜா. சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் வாழ்வதில் அலுப்பை உணர்கிறேன். வெங்கோஜி சிறியவனாக இல்லாமல் வளர்ந்து ஒரு நிலையை எட்டியிருந்தால் நான் என்றோ இந்த வாழ்க்கையை முடித்திருப்பேனோ என்னவோ?”

மூத்த மகனின் நினைவு ஜீஜாபாயையும் கண்கலங்க வைத்தது. ஆனால் அவள் பக்குவத்துடன் சொன்னாள். “நேசிக்கும் ஒவ்வொரு மனிதருடனும் நாம் இறந்து விடுவோமானால் அனைவருக்குமே அற்பாயுளாகத் தான் இருக்க முடியும். அவரவர் காலம் வராமல் இந்த உலகில் இருந்து யாருமே போக முடிவதில்லை. இறைவன் நிர்ணயித்திருக்கும் ஆயுளை நீட்டிக்கவோ, குறைக்கவோ நமக்கு வழியில்லாத போது இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பதல்லவா சரி”

ஷாஹாஜி அவள் வார்த்தைகளில் இருந்த ஞானத்தை யோசித்துப் பார்த்தார். சிவாஜி அடைந்திருக்கும் பக்குவம் இவளிடமே அவனுக்கு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. சாம்பாஜியின் மரணம் அவரைப் போலவே தாயான அவளுக்கும் சகிக்க முடியாததாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அளவுக்கு அவள் உடைந்து விடவில்லை…..

ஷாஹாஜி குரல் உடையச் சொன்னார். “சாம்பாஜியின் மரணத்தை இறைவன் நிர்ணயித்தானோ, அப்சல்கான் நிர்ணயித்தானோ, அவனை அங்கு படையுடன் அனுப்பிய போது நானே நிர்ணயித்து விட்டேனோ எனக்குப் புரியவில்லை ஜீஜா. ஆனால் அவனை அனுப்புவதற்குப் பதிலாக நானே அங்கே போயிருக்கலாமோ என்ற அந்தக் குற்றவுணர்ச்சி மட்டும் என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. உன்னிடமிருந்து பிரித்த குழந்தையைத் திருப்பி எந்தக் காலத்திலும் உன்னிடம் சேர்க்க முடியாமல் போயிற்றே என்று நான் வருந்தாத நாளில்லை”

ஜீஜாபாய் கண்களில் நீர் திரையிட கணவரை வேதனையுடன் பார்த்தாள். “யார் யாருடன் எத்தனை நாட்கள் நம்மால் இருக்க முடியும் என்பது என்றுமே நம் கையில் இருந்ததில்லை. இறைவனின் தீர்மானத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அதனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவதற்குப் பதிலாக அவர்களுடன் இருந்த நல்ல நினைவுகளை மனதில் பத்திரப்படுத்திக் கொண்டு அந்த நினைவுகளில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நான் பழகிக் கொண்டிருக்கிறேன். அதை மட்டும் பழகிக் கொண்டிருக்கா விட்டால் என்றோ நான் உடைந்து உருக்குலைந்து போயிருப்பேன். நீங்களும் அதைப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுலபமாகும்…..”

ஷாஹாஜிக்கு அவளுடைய வார்த்தைகள் மிக அழகான பாடமாகத் தோன்றிய அதே சமயம் எத்தனையோ பழைய நினைவுகளையும் அடிமனதிலிருந்து மேலே எழுப்பி விட்டன. அவரும் அவளும் நேசித்த நாட்கள், இருவருமாகச் சேர்ந்து சாம்பாஜியைக் கொஞ்சிய நாட்கள்……. எல்லாம் இப்போது நினைவுகளாக மட்டுமே….. ஷாஹாஜி கண்கள் கலங்க அவள் கையைப் பிடித்துக் கொண்டார். “ஜீஜா……”

அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. அவர் அவளைத் தொட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருந்தன…. சிறிது நேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தார்கள். பின் அவர் அவள் கையை விட்டார். “நான் கிளம்புகிறேன் ஜீஜா”

அவள் கண்ணீருடன் தலையசைத்தாள். அவர் அவள் அறையிலிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறினார்.

மறுநாள் காலையில் சிவாஜி அவரை ராஜ உபசாரத்துடன் அனுப்பி வைத்தான். ஏராளமான பரிசுப் பொருள்களை அவருக்கும், துகாபாய்க்கும், வெங்கோஜிக்கும் தந்தான். தந்தை மகன் பிரிந்த காட்சி காண்போரை மனம் உருக்குவதாக இருந்தது. ஷாஹாஜி மகனை எல்லையில்லாத பாசத்துடன் தழுவிக் கொண்டு விடைபெற்றார். இனியொரு முறை அவனைச் சந்திக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அன்பானவர்களிடமிருந்து விடைபெறுகையில், கடைசி சந்திப்பு என்று உணரும் போது ஏற்படும் உணர்ச்சிகளின் பிரவாகம் யாருக்கும் விவரிக்க முடிந்ததல்ல.

ஷாஹாஜி பிரிவதற்கு முன் காலில் விழுந்து வணங்கி எழுந்த மகனுக்கு ஆசிகள் வழங்கி விட்டுச் சொன்னார். “சிவாஜி. உன் கனவு பலிக்கட்டும். நம் குலம் உன்னால் பெருமை பெறட்டும். உலகம் உள்ள வரை உன் புகழ் நிலைத்திருக்கட்டும். குழப்பமான சமயங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் உன் தாயிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்து கொள். அவளைக் கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள். என் காலத்திற்குப் பிறகு துகாபாயும், வெங்கோஜியும் உன்னிடம் உதவி கேட்டு வருவார்களேயானால் மறுத்து விடாதே….”

சிவாஜி கண்ணீரோடு தலையசைத்தான். அவனுக்கும் இது இருவருக்குமிடையேயான கடைசி சந்திப்பு என்று உள்ளுணர்வு சொன்னது. தந்தை அவன் கண்களுக்கு மிகவும் சோர்வாகத் தெரிந்தார். தனியாக தம்பி வெங்கோஜியிடம் சிவாஜி “தந்தையை நன்றாகப் பார்த்துக் கொள் தம்பி” என்று அவன் சொன்ன  போது வெங்கோஜி “அது என் கடமை அண்ணா. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று சொன்னான்.

அவர்கள் கிளம்பினார்கள். பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை அவனும் ஜீஜாபாயும் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்கள்…..


பீஜாப்பூர் நகருக்குள் ஷாஹாஜி நுழையும் போதே அரசருக்குரிய மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அரண்மனையை நெருங்கிய போதோ சுல்தான் அலி ஆதில்ஷாவே வெளியே நின்று அவரை வரவேற்றான். இணையான அரசர்கள், அல்லது தங்களை விடப் பெரிய அரசர்கள் வரும் போது மட்டுமே ஒரு அரசன் வாசல் வரை வந்து நின்று வரவேற்பு தருவது வழக்கம். அந்த வரவேற்பில் ஷாஹாஜி நெகிழ்ந்து போனார்.

“தங்கள் பயணம் எப்படி இருந்தது ஷாஹாஜி அவர்களே” அலி ஆதில்ஷா அவரை உள்ளே அழைத்துச் சென்றபடி கேட்டான்.

”சிறப்பாக இருந்தது அரசே. உங்கள் ஊழியனுக்கு என்ன குறை இருக்க முடியும்?” என்று ஷாஹாஜி சொன்னார்.

உபசார வார்த்தைகளே ஆனாலும் அலி ஆதில்ஷாவுக்கு அவர் வார்த்தைகள் இதமாக இருந்தன.  உங்கள் ஊழியன் என்று சொன்னது சிவாஜியின் தந்தை அல்லவா! அரண்மனையின் வரவேற்பறையில் அவரை அமர வைத்த பின் அலி ஆதில்ஷா ஆவலோடு கேட்டான்.

“சிவாஜி என்ன சொல்கிறான் ஷாஹாஜி அவர்களே?”

ஷாஹாஜி அலி ஆதில்ஷாவிடம் சுருக்கமாகச் சொன்னார். “தங்கள் நட்பை என் மகன் ஏற்றுக் கொண்டான் அரசே”

அலி ஆதில்ஷா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். மனதில் இருந்த மலை கீழிறங்கியது போலிருந்தது.

ஷாஹாஜி சொன்னார். “தாங்களாக அவனுக்கு எதிராக இயங்காத வரை, அவனுடைய எதிரிகளுக்கு உதவாத வரை அவன் தங்களுடன் சமாதானமாகவே இருப்பான் அரசே”

அலி ஆதில்ஷா சொன்னான். “நான் அமைதியையே விரும்புகிறேன் ஷாஹாஜி அவர்களே! அவனுக்கு எதிராக நான் செயல்படுவதாக இல்லை.”

ஷாஹாஜி சிவாஜி தனக்குத் தந்திருந்த பரிசுகளில் பாதிக்கும் மேல் அலி ஆதில்ஷாவுக்கு அளித்து விட்டு, “இது நட்புக்கரம் நீட்டிய தங்களுக்கு சிவாஜி அனுப்பிய பரிசுப் பொருள்கள் அரசே! தயவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.”

அலி ஆதில்ஷா வியப்புடன் அந்தப் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொண்டான். சிவாஜி அனுப்பியதாக ஷாஹாஜி தந்த பரிசுப் பொருள்கள் முழுவதுமாகச் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற மன உறுத்தலை அவன் மனதில் பெருமளவு தணித்தது. அலி ஆதில்ஷாவின் நட்பு முக்கியம் என்று கருதி மதித்து சிவாஜி பரிசுப் பொருட்கள் அனுப்பி இருப்பதாகத் தோன்றியது. கௌரவம் முழுவதுமாகப் பறிபோய் விடவில்லை என்று அடுத்தவர்களுக்குக் காட்டவாவது இந்தப் பரிசுப் பொருள்கள் பயன்படும் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் முகத்தில் தெரிந்த சிறு மலர்ச்சியைக் கவனித்த ஷாஹாஜி மனம் லேசானது. இவனும் அவர் மகன் போன்றவனே. சக்திக்கு மீறிய பிரச்னைகளைச் சந்தித்து ஓய்ந்து உடைந்து போயிருக்கும் இவன் மனதில்  இந்த மலர்ச்சி ஏற்படுத்த முடிந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. பரிசுப் பொருள்களில் மனம் திளைக்கும் காலத்தை என்றோ கடந்து விட்டிருந்த ஷாஹாஜி இந்தச் சின்னப் பொய்த் தகவலால் இந்த நட்பு நீடித்தால் நல்லது என்று நினைத்தார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஷாஹாஜி விடைபெற்ற போது அலி ஆதில்ஷா நிறைந்த மனத்துடன் சொன்னான். “மிக்க நன்றி ஷாஹாஜி அவர்களே!

அந்த நாள் இரவில் நீண்ட காலத்திற்குப் பிறகு அலி ஆதில்ஷா நிம்மதியாக உறங்கினான். 

ஆனால் அன்றிரவு சிவாஜி உறக்கத்தைத் தொலைத்திருந்தான். காரணம் ஷெயிஷ்டகான் தலைமையில் மூன்று லட்சம் வீரர்கள் கொண்ட முகலாயப் பெரும்படை வந்து கொண்டிருக்கும் செய்தி ஒற்றர்கள் மூலம் அவனுக்குச் சிறிது நேரம் முன்பு தான் கிடைத்திருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்