Thursday, August 29, 2019

இல்லுமினாட்டி 11



ல்லுமினாட்டியின் உளவுத்துறை விஸ்வம் குறித்துச் சேர்த்திருக்கும் தகவல்களில் அதிகம் இருந்தது அவன் இந்தியாவின் ரகசிய ஆன்மீக இயக்கத்தில் சேர்ந்த பிறகானவையே. அதற்கு முந்தைய அவனுடைய நாடோடி வாழ்க்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்தனவே தவிர மற்றபடி அவன் ஒரு மறைவு வாழ்க்கையைத் தான் முன்பு வாழ்ந்திருந்தான். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கவனித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படும் இல்லுமினாட்டியின் குறிப்புகளில் கூட அவன் எங்கேயும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றுக் கொண்டதாகவோ, அது குறித்தப் பயிற்சிகளில் ஆர்வம் காட்டி இருந்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் தகவல் இல்லாததாலேயே அவன் கற்றிருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் தன் ஒவ்வொரு சக்தியைப் பெற்றதையும் ரகசியமாய் தான் செய்திருந்தான். ஒன்றிரண்டு வெளிப்பட்டிருக்கின்றனவே ஒழிய மற்றதை ரகசியமாகவே தக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றிய பழைய ரகசியங்களை அவன் காப்பாற்றிக் கொள்வதில் வெற்றி கண்டதற்குக் காரணம் அவன் தனியனாகவே ஒவ்வொரு பயிற்சிகளில் ஈடுபட்டதும், வேலை முடிந்த பின் பழையவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளாததும் தான் என்று தோன்றியது. அவன் வாழ்க்கையில் எல்லாம் தனித் தனி அத்தியாயங்கள். ஒன்றுக்கொன்று எந்த விதத்திலும் தொடர்பு இல்லை…

எர்னெஸ்டோ இப்போதைய நிகழ்வுகளை க்ரிஷுக்கோ, மற்ற இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கோ தெரிவிப்பதற்கு முன் என்ன நடந்திருக்கலாம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கலாம் என்பது பற்றி தோராயமாகவாவது ஒரு அபிப்பிராயத்திற்கு வருவது முக்கியம் என்று நினைத்தார். அதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஜான் ஸ்மித்திடமே தரப்பட்டது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற ஜான் ஸ்மித் உடனே திபெத்தியத் தலைநகரான லாசாவுக்குக் கிளம்பினார்.


ஜான் ஸ்மித் லாசாவுக்குச் சென்று சந்தித்த அந்த ஆவிகள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் ஆராய்ச்சியாளர் சுமார் ஐம்பத்தைந்து வயதை எட்டியவர். ஆனால் அவர் தோற்றம் எழுபதை எட்டியது போல இருந்தது. அவர் வீடு முழுவதும் பல விசித்திரமான சின்னங்களாலும், பழங்காலப் பொருள்களாலும் நிறைந்திருந்தன. ஏதோ ஒரு விசித்திர உலகில் வாழும் பழங்கால மனிதர் போல அவர் தோன்றினார். வாழ்க்கை முழுவதும் ஆவிகள் அமானுஷ்ய சக்திகளின் ஆராய்ச்சியிலேயே கழித்திருந்த அவர் தன் ஆராய்ச்சிகளைக் குறித்து எழுதியிருந்த நூலொன்று சர்வதேசப் புகழ் பெற்றிருந்தது. எகிப்தியரான அவர் தன் நாற்பது வயது வரை தன் ஆராய்ச்சிகளைத் தாய்நாட்டிலேயே செய்து வந்தவர். பின் லாசாவுக்குக் குடி பெயர்ந்தவர். திபெத்தில் வெளிநாட்டவர் குடியேறுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. அவர் விண்ணப்பித்து மூன்று வருடங்கள் காத்திருந்த பின்பு, அரசியலில் சிறிதும் ஆர்வமில்லாத அந்த ஆராய்ச்சியாளரால் பிரச்சினை எதுவும் வராது என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் சீனா அவரை அங்கு  குடியேற அனுமதித்திருந்தது.

அவரைச் சந்திக்க அனுமதி கேட்ட போது ஜான் ஸ்மித் அவரைச் சந்திக்கவென்றே லாசா வருவதாகச் சொல்லவில்லை. நேபாளிற்கு ஒரு வேலையாகச் செல்வதாகவும், அது முடிந்த பின் தனதொரு ஆராய்ச்சி குறித்து அவரிடம் விவாதிக்க விரும்புவதாகவும் சொல்லித் தான் அனுமதி வாங்கி இருந்தார்.

அந்த ஆராய்ச்சியாளர் அவரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார். உலகப்புகழ் பெற்ற மூளை விஞ்ஞானியைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி என்று சொன்னார். சம்பிரதாயப் பரஸ்பர விசாரிப்புகளின் முடிவில் ஜான் ஸ்மித்திடம் அவர் கேட்டார். “நீங்கள் எந்த ஆராய்ச்சி பற்றி விவாதிக்க விருப்பப்படுகிறீர்கள்?”

ஜான் ஸ்மித் கவனமாகச் சொன்னார். “ஆவிகள், அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்படும் நபர்களின் மூளைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆவிகள், அமானுஷ்ய சக்திகள் எல்லாம் உங்கள் சப்ஜெக்ட் ஆனதால் உங்களிடம் பேசினால் அது உதவியாக இருக்கும் என்று தோன்றியது….”

ஆராய்ச்சியாளர் தலையசைத்தார். ஜான் ஸ்மித் மெல்லக் கேட்டார். “முதலாவதாக ஆவிகள் இருப்பதும், அந்த ஆவிகள் இன்னொருவர் உடலில் நுழைய முடிவதும் உண்மை தானா? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் சில நேரங்களில் மனிதனுடைய அதீத மனநிலைகளே கூட ஆவிகளால் ஆட்கொள்ளப்படுவது போன்ற பிரமையை ஒருவருக்கு ஏற்படுத்தி விட முடியுமல்லவா?”

“உங்கள் சந்தேகம் நியாயமானது தான். ஆனால் ஆவிகளும், மனிதன் சாதாரணமாக உணர முடியாத சூட்சும சக்திகளும் இருப்பது நீங்களும் நானும் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை”

ஜான் ஸ்மித் முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டினார். அந்த ஆராய்ச்சியாளர் தொடர்ந்தார். “இதைப் பழங்காலத்திலேயே எகிப்தியர்களும், இந்தியர்களும், திபெத்தியர்களும் உணர்ந்திருந்தார்கள். நீங்கள் எப்படி மூளை விஞ்ஞானியோ அப்படியே ஆவிகள், அமானுஷ்ய சக்திகள் விஷயங்களில் இந்த மூன்று நாடுகளின் யோகிகள் விஞ்ஞானிகளாக இருந்தார்கள்…..”


ஜான் ஸ்மித் சொன்னார். “அந்த யோகிகள் தங்கள் உடலை விட்டு வெளியேற முடிந்தவர்கள் என்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை”

“அதுவும் உண்மையே. எகிப்திலும், இமாலயத்திலும் பல நூறு வருடங்களாக வாழும் யோகிகள் சிலர் இருக்கிறார்கள். சிலர் ஆயிரம் ஆண்டுகளைக்கூடக் கடந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அது கேட்பவர்களுக்கு அதீதக் கற்பனை போல் தோன்றலாம். ஆனால் அது உண்மை தான். சில எகிப்திய யோகிகள் உடல் சமாதிகளில் இருந்தாலும் ஆவியாக அவர்கள் உலகமெங்கும் செல்லக் கூடியவர்களாக இருப்பதாகச் சொல்கிறார்கள்….”

பேச்சு தான் எதிர்பார்க்கும் திசை நோக்கித் திரும்ப ஆரம்பித்ததில் ஜான் ஸ்மித் திருப்தி அடைந்தாலும் உடனடியாக கேட்க வந்த கேள்விகளுக்குக் குதிக்க விரும்பாமல் “உண்மையாகவா?” என்று கேட்டு வைத்தார்.

“ஆமாம். நான் சிறுவனாக இருந்த போது என் தாத்தா அப்படி ஒரு எகிப்திய யோகியைப் பற்றிச் சொல்லி அவர் சமாதியையும் எனக்குக் காட்டி இருக்கிறார். மறுநாள் அதை மறுபடியும் பார்க்க ஆசைப்பட்டு நான் போன போது அந்தச் சமாதி அங்கே இல்லை…. ஆச்சரியப்பட்டு தாத்தாவிடம் போய் சொன்னேன். அவர் ஆச்சரியப்படவில்லை. யோகிகள் மந்திரங்களால் எதையும் மறைக்க வல்லவர்கள் என்றும் விருப்பமில்லா விட்டால் தாங்கள் எந்த விதத்திலும் சாதாரண மக்களின் கவனத்திற்கு வர விரும்ப மாட்டார்கள் என்றும் சொன்னார். ஆனாலும் அவர் வந்தால் கண்டுபிடித்துக் காட்டுவாரோ என்ற ஆசையில் அவரை அழைத்துக் கொண்டு மறுபடியும் அங்கே போனேன். அவரும் நானும் சுற்றிச் சுற்றி அதே இடத்திற்கு பல தடவை வந்து பார்த்தும் அந்தச் சமாதி தெரியவில்லை. இந்த ஆவிகள், அமானுஷ்ய சக்திகள் விஷயத்தில் நான் ஆர்வம் காட்ட ஆரம்பித்ததே அந்த நிகழ்ச்சிக்குப் பின் தான்…..”

ஜான் ஸ்மித் கேட்டார். “அந்த யோகி அந்தச் சமாதியை ஏன் மறைத்து வைக்க  வேண்டும்?”

“அவர் திரும்பவும் அந்த உடலுக்குத் திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் வரை அவருடைய உடல் எந்தச் சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள். மனிதர்களின் ஆர்வம் சமாதியின் மேல்பகுதியோடு நின்று விடாமல் தோண்டும் அளவுக்கும் போகலாம் என்ற எச்சரிக்கை உணர்வு தான் அதற்குக் காரணம்”

“அவர்கள் எப்படி அந்த உடலுக்குத் திரும்புவார்கள்?”

“அதற்குச் சில மந்திரங்கள், சடங்குகள் இருக்கின்றன. அவர்கள் உடலோடு இருக்கும் யோகிகளை மானசீகமாகத் தொடர்பு கொண்டு அந்தச் சடங்குகள் செய்ய வைத்து அந்த உடலுக்குத் திரும்புவார்கள். அந்த சடங்குகளுக்கு முன் தான் அந்த சமாதியிலிருந்து அந்த உடல் வெளியே எடுக்கப்படும்”

“அந்த யோகிகள் உடலை விட்டுப் போவதும், பல காலம் கழித்துத் திரும்பவும் வருவதும் எதற்காக?”

“யோகிகளுக்கு சில காரியங்களுக்கு மனித உடல் வேண்டியிருக்கிறது. பல காரியங்களுக்கு மனித உடல் தேவையில்லை. சில விஷயங்களுக்கு உடல் சிறை தான். ஒரு தொந்தரவு தான். அவர்கள் உலகமெல்லாம் சுற்றிச் சில வேலைகளை ஆவி நிலையிலேயே செய்து முடித்து விட்டுத் திரும்பும் போது அந்த உடல் அவர்களுக்கு வேண்டும்”

“ஒருவேளை அவர்கள் திரும்பி வரும் போது அந்த உடம்பு இல்லா விட்டால்?”

“அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. அதைத் தான் அவர்கள் பத்திரப்படுத்தி ரகசியமாய் மறைத்து வைக்கிறார்களே”

“ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். ஒருவேளை அவர்கள் திரும்பி வரும் போது அந்த உடல் அழிந்திருந்தால் வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்வார்களா?”

ஜான் ஸ்மித்தின் இந்தக் கேள்விக்கு ஆராய்ச்சியாளரால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அவர் யோசிக்க ஆரம்பித்தார். இதற்குப் பதில் வந்தால் தான் அடுத்த முக்கியமான கேள்விகளைக் கேட்க முடியும் என்பதால் ஜான் ஸ்மித் பொறுமையிழந்து அவரைப் பார்த்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, August 28, 2019

நம் பிரார்த்தனை பலிக்குமா?

பிரார்த்தனை செய்வதால் எதாவது பலன் இருக்கிறதா? இல்லை நம் மனத் திருப்திக்காக நாம் பிரார்த்தனை செய்கிறோமா? எத்தனையோ முறை பிரார்த்தனை செய்தாலும் பலன் இருப்பதில்லையே. என்ன காரணம்? அது போன்ற சமயங்களில் தொடர்ந்து பிரார்த்தித்து என்ன பயன்? வாருங்கள் அலசுவோம்....


என்.கணேசன்           



Monday, August 26, 2019

சத்ரபதி 87


லி ஆதில்ஷா பீஜாப்பூர் வந்து சேர்ந்த போது அவனுக்கு லாக்கம் சாவந்த் சிவாஜியிடம் சரணாகதி அடைந்த செய்தியும், சிவாஜியின் எல்லா நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டு சமாதானம் செய்து கொண்ட செய்தியும் வந்து சேர்ந்தது. லாக்கம் சாவந்த் எங்கே இருக்க வேண்டும் என்பதை சிவாஜி தீர்மானித்திருந்தான். அங்கேயே லாக்கம் சாவந்த் தங்கினான். அவன் படை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று சிவாஜி சொல்லி இருந்தானோ அந்த அளவை லாக்கம் சாவந்த் தாண்டவில்லை. அவன் கோட்டைகளை வலிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று சிவாஜி உத்தரவிட்டிருந்தான். அதையும் லாக்கம் சாவந்த் ஏற்றுக் கொண்டிருந்தான். சிவாஜி அவன் சத்தியத்தை மட்டும் நம்பவில்லை.  அவன் சத்தியத்தை மீற முடியாத அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டே சமாதானத்தை ஏற்றுக் கொண்டான்.

லாக்கம் சாவந்த் மறைவாக இருந்த காலத்தில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த போர்ச்சுகீசியர்கள் அவன் சிவாஜியை எதிர்த்துப் படையெடுத்துச் செல்வதற்கும் தேவையான பீரங்கிகளையும், மற்ற ஆயுதங்களையும் கொடுத்து உதவியிருந்தார்கள். சிவாஜி எதிரிகளை மட்டுமல்லாமல் எதிரிகளுக்கு உதவுபவர்களையும் விட்டு வைப்பதில்லை என்பதால் கோவாவில் கோலோச்சி வந்த போர்ச்சுகீசியர்கள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களையும் அடிபணிய வைத்த செய்தி வந்து சேர்ந்தது. போர்ச்சுகீசியர்கள் ஏராளமான ஆயுதங்களையும், பணத்தையும் கொடுத்து சிவாஜியுடன் சமாதானம் செய்து கொண்டார்கள் என்று அலி ஆதில்ஷா கேள்விப்பட்டான். இப்போது கொங்கன் பகுதி முழுவதும் சிவாஜியின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

சிவாஜி பதுங்கும் போது இருக்கும் சுவடு தெரியாமல் அமைதியாக இருந்தாலும் பாயும் போது வேகமாகப் பாய முடிந்தவன். சோர்வேயில்லாமல் செயல்பட முடிந்தவன். அப்படிச் செயல்படும் போது ஒவ்வொரு அடியும் வேகமாகச் சிந்தித்து வைக்கக்கூடியவன். போர்ச்சுகீசியர்களையும் அடக்கி வைத்த பின்னர் அவன் அலி ஆதில்ஷா முன்பு அவனிடம் இருந்து கைப்பற்றிய கோட்டைகளைத் திரும்பக் கைப்பற்ற ஆரம்பித்தான். ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் கோட்டைகள் சிவாஜி வசமாயின.

அந்தச் செய்தியும் வந்து சேர்ந்த போது அலி ஆதில்ஷாவின் தாய் பதறினாள். ”மகனே ஏதாவது செய்” என்று வேண்டினாள். அலி ஆதில்ஷா எதுவும் செய்ய முடியாமல் திணறினான். நாலா புறமும் பிரச்சினைகள் வெடிக்கையில், அனைத்துமே தலைவலியாக இருக்கையில், எதைச் சரி செய்வது, எப்படிச் சரி செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. 

அவன் தாய் வெறுப்பனைத்தையும் தேக்கிச் சொன்னாள். “மகனே சிவாஜியை இப்படியே விட்டு விடக்கூடாது. அவன் நம் ஊழியனின் மகன். அவன் நம்மை மிஞ்சி விட நாம் அனுமதிக்கக்கூடாது”

அலி ஆதில்ஷா விரக்தியான தொனியில் தாயிடம் சொன்னான். “அன்னையே! உங்கள் விருப்பமே என் விருப்பமும். உங்களை விட ஆயிரம் மடங்கு நான் அதைத் தீவிரமாக உணர்கிறேன். ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு வழி எதுவும் புலப்படவில்லை.  மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள் என எல்லா இடங்களிலும் அவன் சாமர்த்தியமாகச் சமாளிக்கிறான். நம் பலம் அதிகரிக்கும் போது பதுங்குகிறான். நம் பலம் குறையும் போதும், கவனம் வேறு பக்கம் திரும்பும் போதும் அவன் நம்மைத் தாக்குகிறான். அவனைச் சமாளிக்கும் முயற்சியில் நம் படையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே ஒழிய முடிவான பலன் எதுவும் கிடைக்கவில்லை. கர்னாடகப் பிரச்சினை பெரிதாகி விட்டிராமல் இருந்தால் இந்த முறை மும்முனைத் தாக்குதலில் சிவாஜியை முழுவதுமாக வெற்றி கொண்டிருக்க முடியும். ஆனால் சூழ்நிலையும் அவனுக்குச் சாதகமாகவே இருக்கிறது. என்ன செய்வது!”

அவன் தாய் ஔரங்கசீப் அவள் மகனை அடிபணிய வைத்த போது கூட இவ்வளவு அவமானத்தை உணர்ந்ததில்லை. அவர்களிடம் ஊழியம் புரியும் ஒருவர் மகன் முன் இப்படித் தோற்று நிற்கிறோமே என்ற அவமான உணர்வில் குறுகிப் போனாள்.

அவள் சொன்னாள். “ஏதாவது செய்தே ஆக வேண்டுமல்லவா மகனே!”

சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு அலி ஆதில்ஷா களைப்புடன் சொன்னான். “ஆம் தாயே! அவனிடம் பகைமை பாராட்டுவதை விட சமாதானம் செய்து கொள்வதே உத்தமம் என்று எனக்குத் தோன்றுகிறது.  இனி நானும் செய்ய வேண்டியது அதைத்தான்.”

அவள் திகைப்புடன் சொன்னாள். “அது தோல்வியை ஒப்புக் கொள்வது போல அல்லவா மகனே!”

அலி ஆதில்ஷா சொன்னான். “அது பார்க்கின்ற கோணத்தைப் பொருத்தது தாயே. மலையா தலையா என்ற போட்டி வருமேயானால் மலை மீது மோதி ஜெயிக்க மூளையுள்ள தலை முயற்சிக்கக்கூடாது. முடியாததை முடியாதது என்று உணர்ந்து பின் வாங்குவது தோல்வியல்ல,  புத்திசாலித்தனமே அல்லவா? நான் நிம்மதியாக உறங்கி பல காலம் ஆகி விட்டது தாயே. இனியும் அவனுடன் தொடர்ந்து மோதும் சக்தி எனக்கில்லை…..”

அவன் தாய் மகனை வேதனையுடன் பார்த்தாள். அதிர்ஷ்டம் சிவாஜியைப் போன்ற சிலரைத் தொடர்ந்து துரத்துகிறது; அவள் மகன் போன்ற சிலரைத் திரும்பியும் பார்ப்பதில்லை. அவள் மகன் அரியணை ஏறியதிலிருந்து எத்தனை எத்தனை பிரச்சினைகள்…. மகனுக்காக அந்தத் தாயின் மனம் உருகியது.

அவள் கேட்டாள். “சமாதானப் பேச்சுக்கு யாரை அனுப்பப் போகிறாய் மகனே. அவனைப் போன்ற சூழ்ச்சி நிறைந்தவன் பேச்சு வார்த்தையில் ஒன்றை ஒப்புக் கொண்டாலும் சொன்ன வாக்கில் நிலைத்து நிற்பான் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?”

அலி ஆதில்ஷா சொன்னான். “அவனிடம் பேச அவன் தந்தையையே அனுப்புவதாக இருக்கிறேன் தாயே. தந்தையிடம் கொடுத்த வாக்கை அவன் நிச்சயம் மீற மாட்டான்….”

அவள் மௌனமாகத் தலையசைத்தாள். பின் ஆறாத மனதுடன் ஆதங்கத்துடன் கேட்டாள். “அவனை அடக்க முடிந்தவர்கள் யாருமே இல்லையா?”

அலி ஆதில்ஷா பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான். “இந்துஸ்தானத்தின் தென்பகுதியில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை தாயே. முகலாயப் பேரரசர் ஒருவரால் தான் இன்றைய சூழ்நிலையில் சிவாஜியை அடக்கி வைக்க முடியும்”

“நீ அரியணை ஏறியவுடனேயே இங்கு வரை பெரும்படையோடு வந்து பிரச்சினை செய்த அந்த ஆள் ஏன் சிவாஜி விஷயத்தில் மட்டும் இன்னும் எதுவும் செய்யாமல் இருக்கிறார்? அவனுடைய அதிர்ஷ்டம் அங்கேயும் வேலை செய்திருக்கிறது பாரேன்” என்று ராஜமாதா அங்கலாய்த்தாள்.


ரங்கசீப்பை எட்டிய தென் திசைச் செய்திகள் அவனுக்கு ஒரு பேராபத்தின் அறிகுறியைத் தெரிவித்தன. பீஜாப்பூரின் ராஜமாதாவைப் போல் அவன் அதிர்ஷ்டத்தை நம்பியவன் அல்ல. சிவாஜியின் அதிர்ஷ்டம் அவனை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கிறது என்று அவன் நினைக்கவில்லை. முன்பே அவன் கவனித்திருந்தது போல சிவாஜி சின்னச் சின்ன விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டே கச்சிதமாக இயங்கி இருக்கிறான் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

சிவாஜி என்ற தனிமனிதன் ஒரு இயக்கமானதும், மாபெரும் சக்தியாக உருவாகியதும், பீஜாப்பூர் சுல்தானைப் பணிய வைத்ததும் அவன் மூளையில் இறுதி எச்சரிக்கை மணியை அடித்தன. சிவாஜி என்னும் அலை இப்போது பேரலையாக மாறியிருக்கிறது. இந்த அலையை அணை கட்டி நிறுத்தா விட்டால் பெரும் வெள்ளமாக வடக்கு நோக்கியும் வரக்கூடும். எல்லாப் பிரச்சினைகளையும் ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளே எழாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் அதுவே. அதனால் சிவாஜியை இப்போதே ஒழித்துக்கட்டா விட்டால் நாளைய பெருந்தலைவலியாக உருவாக முடிந்தவன் அவன் என்று உணர்ந்த ஔரங்கசீப் அவன் தாய்மாமன் செயிஷ்டகானை உடனடியாகக் கூப்பிட்டனுப்பினான்.

முகலாய அரசின் தக்காணப் பீடபூமியின் கவர்னராக முன்பிருந்த ஔரங்கசீப் அரியணை ஏறிய பின் அந்தப் பதவிக்கு தாய்மாமன் செயிஷ்டகானை நியமித்திருந்தான். செயிஷ்டகான் தற்போது தலைநகர் வந்திருப்பதால் சிவாஜியை அடக்கும் பணியை அவனிடம் ஒப்படைக்க ஔரங்கசீப் தீர்மானித்து விட்டான்.

செயிஷ்டகான் வந்தவுடன் தாய்மாமனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அமரச் சொன்ன ஔரங்கசீப் சிவாஜியைப் பற்றியும் அவன் இது வரை செய்திருக்கும் காரியங்களைப் பற்றியும் விரிவாகச் சொன்னான். செயிஷ்டகான் அதையெல்லாம் கேட்டு விட்டு “சிவாஜியை இந்த அளவு வளர அனுமதித்த அலி ஆதில்ஷா பலவீனமானவன் மட்டுமல்ல முட்டாளும் கூட” என்று சொன்னான்.

ஔரங்கசீப் வரண்ட குரலில் சொன்னான். “சிவாஜியை வளர அனுமதித்தது அலி ஆதில்ஷா மட்டுமல்ல. ஓரளவு நாமும் கூடத்தான். அதனால் அந்த பலவீனத்திலும், முட்டாள்தனத்திலும் நமக்கும் ஒரு சிறுபங்கு இருக்கிறது மாமா. அந்த பலவீனத்தையும், முட்டாள்தனத்தையும் இனியும் நாம் நீட்டிக்கக்கூடாது. அவனை ஒழித்துக் கட்ட வேண்டும்.”

ஷெயிஷ்டகான் சொன்னான். “எழுபதாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையைத் திறமையானதொரு படைத்தலைவன் தலைமையில் அனுப்பி வைக்கலாம். இது வரை அந்த அளவு பெரும்படையை அவன் சந்தித்ததில்லை. நம் படை நிச்சயம் அவனை ஒழித்துக்கட்டித் திரும்பி வரும்”

ஔரங்கசீப் சொன்னான். “அதெல்லாம் அவனைச் சமாளிக்கப் போதும் என்று நினைக்கவில்லை மாமா. மூன்று லட்சம் வீரர்கள் கொண்ட பெரும்படையோடு நீங்களே போக வேண்டும். அவன் வீழ்ந்தான் என்ற செய்தியோடு என்னை வந்து சந்திக்க வேண்டும்”



(தொடரும்)
என்.கணேசன்

Thursday, August 22, 2019

இல்லுமினாட்டி 10


க்ரிஷ் அடுத்ததாகப் பேசினான். அவன் பேசும் போது அவன் குரு மாஸ்டர் தலைவராக இருந்த ரகசிய ஆன்மீக இயக்கத்திலும் உலகத்தின் அழிவு காலம் பற்றிய குறிப்பு இக்காலத்தையே குறிப்பிட்டுச் சொல்லி இருந்ததாகவும் அழிவிலிருந்து காப்பாற்ற அந்த இயக்கத்தின் முந்தைய தலைவர்கள் ஒரு வரைபடத்தை விட்டுப் போயிருந்ததாகவும் சொல்லி ஆரம்பித்தான். அந்த வரைபடத்தில் ஒரு பனிமலை, மேலே திரிசூலம், அதற்கும் மேலே ஒரு பறவையின் படம் இருந்ததாகவும், அதை அந்த இயக்கத்தில் இருந்த விஸ்வம் திருடிச் சென்று தான் இமயத்தில் அந்தத் திரிசூலத்திற்குக் கீழே இருந்த குகையைக் கண்டுபிடித்திருக்கிறான் என்பதையும் சுட்டிக் காட்டினான். அந்தக் குகையில் தான் இல்லுமினாட்டியின் தவசி அகஸ்டின் தவம் செய்து கொண்டிருந்ததாகவும் அவரிடமிருந்து தான் விஸ்வம் அந்த  இல்லுமினாட்டி சின்னத்தை வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தான். அகஸ்டின் தவசி அவர்களது இயக்கத்தில் சேர்ந்து தான் யோகக்கலையைக் கற்றிருந்தார், பின் தான் தவம் செய்ய இமயம் சென்றார் என்றும் சொல்லி அந்த வகையில் இல்லுமினாட்டிக்கும் அந்த இந்திய ரகசிய ஆன்மீக இயக்கத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையையும் சுட்டிக் காட்டினான். 

விஸ்வம் கையில் இருந்த போது அவ்வப்போது ஒளிர்ந்த இல்லுமினாட்டி சின்னத்தை விஸ்வம் அந்தப் பேச்சு மேடையிலேயே விட்டு வந்திருந்தான். கண்கள் கட்டப்பட்டிருந்த க்ரிஷ் அந்தச் சின்னத்தைத் தொட்டுக் கையில் எடுக்க அவன் கையில் இருக்கையில் இல்லுமினாட்டி சின்னம் தொடர்ந்து ஒளிர ஆரம்பித்தது.

விஸ்வம் இருந்த இயக்கத்தில் விசுவாசமாக இருக்கவில்லை என்பதையும், அந்தச் சின்னத்தைக் கொடுத்து விட்டு இறந்த அகஸ்டின் தவசியின் உடலைக் கூட மரியாதையோடு புதைக்க முற்படவில்லை என்பதையும் க்ரிஷ் தன் பேச்சில் சுட்டிக் காட்டினான். விஸ்வத்திற்குப் பிறகு அந்தக் குகையைக் கண்டுபிடித்துப் போன மாஸ்டர் தான் அகஸ்டின் உடலை மரியாதையோடு புதைத்து விட்டு வந்தார் என்பதையும், விஸ்வம் எடுத்து வந்த இல்லுமினாட்டி சின்னம் அந்தக் குகையில் இருந்த சிவன் சிலையின் நெற்றிக்கண்ணாக இருந்ததென்றும், அவன் எடுத்துக் கொண்டு வந்த பின் அதே போன்ற ஒரு சின்னத்தை ஒரு பறவை கொண்டு வந்து தவசி அகஸ்டின் சமாதியில் கொண்டு வந்து வைத்தது என்றும், அதை மாஸ்டர் அந்தச் சிவன் நெற்றியில் பொருத்த அது சரியாகப் பொருந்தியது என்பதையும் சொன்னான். அப்போது ஏற்பட்ட ஆன்மீகப் பேரானந்த அனுபவத்தால் மாஸ்டர் அகஸ்டின் தவம் செய்த இடத்தில் உலக நன்மைக்காக இப்போது தவம் செய்து வருகிறார் என்றும் சொன்னான்.

அப்படிப்பட்ட மாஸ்டரின் ஆன்மிக இயக்கத்தின் பணத்தைக் கையாடல் செய்து விஸ்வம் தீவிரவாத இயக்கங்களுக்கும், இல்லுமினாட்டிக்கும் அனுப்பி இருப்பதைக் குற்றம் சாட்டிய க்ரிஷ், அகஸ்டின் உடலைப் புதைக்கும் மரியாதை கூடச் செய்யாமல் விஸ்வம் அலட்சியப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி இப்படிப்பட்டவன் இல்லுமினாட்டியையும் ஒரு காலத்தில் ஏமாற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வியை எழுப்பினான். தீவிரவாத இயக்கங்களை எக்காலத்திலும் திருப்திப்படுத்த முடியாது என்றும் அவை சம்பந்தப்பட்டவர்களை அழித்தே தீரும் என்றும் சொல்லி விஸ்வம் தீவிரவாத இயக்கங்களுடன் நட்பில் இருப்பது முட்டாள்தனம் என்றும் குறிப்பாகத் தெரிவித்தான்.

இந்த உலகம் நல்ல முறையில் மாற வேண்டும், உயர வேண்டும், அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் ஏலியன் அக்கறையோடு தன்னிடம் சொன்னதை க்ரிஷ் அந்த மேடையில் சொன்னான்

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான்.

தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின் தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப் படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன் மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான். அடுத்தபடியாக உடனடிக் கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும், உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான். அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம் அதிகரிக்கிறது…..

அவன் சொன்ன போது அவன் சொன்னது சத்தியம் என்று ஆமோதிப்பது போல அந்தச் சின்னம் வைரம் போல் ஜொலிக்க ஆரம்பித்தது. இருட்டில் இருந்த அரங்கம் அந்த ஜொலிப்பில் பௌர்ணமி நிலவொளியில் வெட்டவெளியில் இருப்பது போல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. எல்லோர் முகத்திலும் பிரமிப்பு தெரிய ஆரம்பித்தது. அந்தச் சின்னத்தின் ஜொலிப்பில் க்ரிஷும் தேஜஸுடன் தெரிந்தான். ஒவ்வொருவரின் அந்தராத்மாவுடனும் பேசுவது போல் க்ரிஷ் உலகம் காப்பாற்ற வேண்டுமானால், உலகத்தோடு சேர்ந்து இல்லுமினாட்டியும் காப்பாற்ற வேண்டுமானால் இல்லுமினாட்டி இந்த ஆபத்தான காலக்கட்டத்தில் தன் பொறுப்பை உணர்ந்து நன்மைக்கு மாற வேண்டும் என்று நினைவுபடுத்தினான். கடைசியில் சொன்னான்.

”எண்ணங்களிலும் நோக்கங்களிலும் இருக்கிறது எல்லாச் சூட்சுமமும். யோகிகள் தங்கள் ஞான அலைகளை பரவச் செய்து பலன் பெறத் தகுதியான அலைவரிசைகளில் இருப்பவர்களை உயர வைப்பது போல, ஆளுமை உள்ள மனிதர்களும் தங்கள் எண்ணங்களாலும், செய்கைகளாலும் எத்தனையோ நுட்பமான மாற்றங்களை உருவாக்கி விட முடியும். அந்த வகையில் தலைவர்கள் முடிந்த வரை உதாரண புருஷர்களாய் இருக்க வேண்டும். நன்மைக்கு மதிப்பும் மரியாதையும் தர வேண்டும். நன்மை போற்றப்படுகிறது, அதுவே கௌரவம், அதற்கே மதிப்பு என்ற நம்பிக்கையான சூழலை நாம் உருவாக்கினால் ஒழிய  பெரும்பான்மையான மனிதர்களை நாம் நன்மையின் போக்கிற்கு மாற்றி விட முடியாது.”

“அப்படி மனிதர்களை மாற்றி அவர்களை மேலுக்கு உயர்த்தி அவர்களுக்குத் தலைமை தாங்குவது  தான் உண்மையில் தலைமைக்குப் பெருமை. முட்டாள்களையும், தற்குறிகளையும், கேடிகளையும், போக்கிரிகளையும், கொள்ளையர்களையும், தீவிரவாதிகளையும் சமாளித்து அதிலும் சுய சம்பாத்தியம் பார்ப்பதைத் தலைமை என்று பெருமையாகச் சொல்ல முடியுமா? இல்லுமினாட்டி எந்த மாதிரியான மனிதர்களுக்குத் தலைமை தாங்க நினைக்கிறது? எந்த விதமான தலைமையை அது பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்…. அறிவும் ஞானமும் படைத்த நீங்கள் யோசித்துப் பாருங்கள்.  நல்ல மனிதர்களைப் போற்றுங்கள். திறமைக்கு ஆதரவு கொடுங்கள். எது எல்லாம் உயர உதவுமோ அதை எல்லாம் சிலாகியுங்கள். உண்மைக்கு உரிய கவுரவம் கொடுங்கள். இந்த இடைப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக நன்மையின் பக்கம் திரும்புவார்கள். உயர ஆரம்பிப்பார்கள்…. இதுவே உலகம் காப்பாற்றப்படும் வழி. அதைவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று இன்றைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்வதைப் போல எல்லா இடங்களில் இருந்தும் சுருட்டிக் கொண்டே போனால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இப்படி ஒருவன் சேர்த்ததை அவனுக்கு மேல் வலிமையானவன் பிடுங்கி, அவன் பிடுங்கியதை அதற்கு மேல் வலிமையானவன் பிடுங்கி வலிமை என்றாலே ஏமாற்றிப் பிடுங்குவது என்றாகி கடைசியில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தான் சாக வேண்டும்…. அழிப்பதற்கு எந்தத் தனித்திறமையும் தேவையில்லை. பலவீனமானவர்களை ஏமாற்றியும், பயமுறுத்தியும் கொள்ளையடிப்பது பெருமையும் அல்ல.”

இல்லுமினாட்டி சின்னம் தொடர்ந்து ஒளிர்ந்ததும், கண்களைக் கட்டி இருந்த போதும் க்ரிஷ் ஜொலித்ததும், அவன் பேச்சில் இருந்த ஆத்மார்த்தமும், சத்தியமும் எல்லாமே சேர்ந்து அவனையே ஆரகிள் சொன்ன ‘உயர்சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட’வனாக அடையாளம் காட்டுவதாய் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். எர்னெஸ்டோ க்ரிஷை இல்லுமினாட்டியில் சேர அப்போதே அழைப்பு விடுத்தார்.

அவன் தயங்கிய போது எர்னெஸ்டோ சொன்னார். “இளைஞனே நீ இன்று சொன்ன வார்த்தைகளை இல்லுமினாட்டி என்றும் நினைவு வைத்திருக்கும். இந்தக் கணத்தில் எங்கள் இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் உன் மூலம் சொன்னதாக நாங்கள் உணரும் இந்த உயர்ந்த உணர்வுகள் நாளைக் காலை எத்தனை பேருக்கு எத்தனை சதவீதம் தங்கும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. இன்னும் சில நாட்கள் போன பின் கண்டிப்பாக இதே உணர்வுகளை இதே அளவிலும் இதே உறுதியிலும் உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று கூற முடியாது. மனித இயல்பை நீண்ட காலம் கவனித்து வந்ததால் தான் இதை வருத்தத்துடன் கூறுகிறேன். இந்த உயர்ந்த உணர்வுகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னைப் போன்றவன் எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும்.”

”இல்லுமினாட்டி என்ற இந்த இயக்கம் உலக நிகழ்வுகளின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக இருக்கிறது. அதில் சேர வாய்ப்பு கிடைத்த போதும் நீ சேரத் தயங்கினால் அறிவுரை சொல்ல மட்டுமே நீ, அதைக் களத்தில் இறங்கி செய்து காட்டக் கிடைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாய் என்றாகி விடாதா? உன் ஏலியன் நண்பனுக்கும், உன் மனசாட்சிக்கும் நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

கடைசியில் க்ரிஷ் மனம் மாறி இல்லுமினாட்டியில் இணைந்தான். ஆனால் அந்தக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாய் விஸ்வம் உடல்கருகி இறந்திருந்தான். என்ன ஆனது எப்படி ஆனது என்று அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. க்ரிஷையே எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்ததால் அவன் கருகி விழுந்திருந்ததைப் பிறகு தான் கவனித்திருந்தார்கள். விஸ்வத்தின் பிணம் ம்யூனிக் மின்மயானத்தில் எரிக்கப்பட்டது.

எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு இல்லுமினாட்டி திரும்பியதாக அவர் நினைத்திருக்கும் போது ஜான் ஸ்மித், விஸ்வம் இறந்த அதே நேரத்தில் உயிர் பிழைத்த டேனியல் என்ற போதை மனிதனைப் பற்றிச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார். அமானுஷ்ய சக்திகள் பெற்றிராத, யோகசக்திகள் கற்றிராத அவனுடைய மூளையில் அது சம்பந்தமான பகுதிகள் திடீரென்று செயலாக்கம் பெற்றிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். கூடு விட்டுக் கூடு பாய்வதைப் பற்றி பழங்கதைகளில் படித்திருக்கும் எர்னெஸ்டோ இக்காலத்தில் உண்மையில் அதெல்லாம் சாத்தியம் என்று நம்புபவர் அல்ல. ஆனால் நடந்திருப்பதை வேறெப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவருக்கு விளங்கவில்லை. என்ன நடக்கிறது? போதை மனிதன் பிழைக்கையில் கிதார் இசையை இசைக்க விட்டதும், அவனை அதிகாலை நேரத்தில் காரில் அழைத்துச் சென்றதும் யார்?

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, August 21, 2019

அறிய வேண்டியதும், அடைய வேண்டியதும்!


கீதை காட்டும் பாதை – 60 


பகவத்கீதையை மேலோட்டமாகப் படிக்கிறவர்களுக்குப் பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ணர் தானே எல்லாம் என்று சுயபுராணம் பாடுவது போலத் தோன்றலாம். ஆனால் ஆழமாகப் படித்து உட்பொருள் அறிந்து சிந்திப்பவனுக்கு நம்மைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்ற மகத்தான ஞானம் புலப்பட்டு, இனி செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவு பிறக்கும்.

ஸ்ரீகிருஷ்ணர் புருஷோத்தம யோகத்தில் அடுத்ததாகச் சொல்லியிருக்கும் சில சுலோகங்களைப் பார்ப்போம்:

அகில உலகையும் விளங்கச் செய்யும் சூரியனில் உள்ள ஒளியும், சந்திரனிலும் அக்னியிலும் உள்ள ஒளியும் என்னுடைய தேஜஸே என்று அறிவாயாக!

நான் பூமியினுள் புகுந்து என்னுடைய பலத்தினால் எல்லா உயிரினங்களையும் தாங்குகிறேன்.

நானே எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து தான் நினைவும், அறிவும், சந்தேகங்களிலிருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களிலும் அறிய வேண்டிய பொருள் நானே. வேதாந்தத்தை உருவாக்கியவனும், உட்பொருளை அறிந்தவனும் நானே!

உலகில் ஒளி தந்து நாம் அனைத்தையும் காண வழிவகுப்பது சூரியன், சந்திரன் மற்றும் அக்னி தான். இன்று மின்விளக்குகள் இருக்கின்றன என்றாலும் அந்த மின்சாரமும் அக்னியின் ஒரு அம்சமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் ஒளிஎன்னுடைய தேஜஸேஎன்று பகவான் சொல்கிறார். அந்த வகையில் யோசித்தால், பகவானுடைய தேஜஸ் இல்லையென்றால் எல்லையற்ற இருளில் நாம் முடங்கி விடுவோம்.

அடுத்ததாக என்னுடைய பலத்தினால் எல்லா உயிரினங்களையும் தாங்குகிறேன் என்றும் எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருக்கிறேன் என்றும் பகவான் கூறுகிறார். உனக்குள்ளே இருப்பவனும், உன்னைத் தாங்குபவனும் அந்தப் பரம்பொருள் என்றால் மனிதனே நீ ஏன் துக்கப்பட வேண்டும், நீயேன் சக்தியற்றவனாய் உன்னை நினைத்துக் கொண்டு புலம்ப வேண்டும்? எல்லாம் நானே என்று அறிவிக்கும் இறைவன் உனக்குள்ளும் நானே என்றும் சேர்ந்து சொல்லும் போது எல்லாம் நீயேஎன்பதும் உண்மையே அல்லவா? உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் உன் வாழ்க்கையை நீ பிரம்மாண்டமாக ஆக்கிக் கொள்ளாமல் தடுப்பது உன் அறியாமையே அல்லவா?

நாம் முன்பே சொன்னது போல, நாம் தரித்திருக்கும் சிறு வேடமே நம் அடையாளம், அதுவே நிஜம் என்று அறியாமையால் தேவையில்லாமல் அல்லவா நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம். அண்டவெளியில் எல்லாம் வெற்றிடம் நிரம்பியிருக்க ஒரு மண்பானை தனக்குள் இருக்கும் சிறு இடத்தை தன் இடமாகச் சொல்லிக் கொள்கிறது. அந்தச் சிறிய உள் இடம் பானை உருவாவதற்கு முன்னும், பானை உடைந்த பின்னும்  இருக்கக்கூடிய எல்லையில்லாத வெற்றிடமே அல்லவா?

வேதங்களை உருவாக்கியவனும், வேதங்களின் உட்பொருளும் அந்தப் பரம்பொருளே என்று சொல்லி அந்தப் பரம்பொருளின் எல்லையற்ற சக்திகளை விளக்கி விவரிக்கும் போதெல்லாம் அந்தப் பரம்பொருள் உனக்குள்ளிருந்து கொண்டு, உன்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் சக்தியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வை நீ சேர்ந்து பெற வேண்டாமா? அந்த வகையில் இறைவன் உன்னைப் பற்றியே அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார். ”எல்லாம் நீயே” “உன்னையே நீ அறிவாய்என்ற வேத வாக்குகளை எல்லாம் நீ இப்படி அல்லவா புரிந்து தெளிந்து புத்துணர்ச்சி பெற வேண்டும்?

புருஷோத்தம யோகத்தின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

பரதகுலத் தோன்றலே, எவனொருவன் புருஷோத்தமனான என்னை நான் சொல்லிய முறையில் மோகமின்றி நன்றாக அறிவானோ அவன் எல்லா விதங்களிலும் என்னையே தொழுகிறான்.

குற்றமற்றவனே, இதுவரை மிகவும் ரகசியமான இந்த சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன். இதை அறிந்து கொண்ட மனிதன் ஞானியாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும் ஆகிறான்.

உன்னையே அறிவாய் என்று சொன்னால் மனிதன் இந்த உடல், அதனுடன் சேர்ந்த அற்பசக்திகள் வைத்து அறியாமையுடன் தான் தன்னைக் கணித்துக் கூனிக் குறுகுவான். இறைவனை அறியும் பிரம்மாண்டத்தை விவரித்து இந்தப் பிரம்மாண்டமே உனக்குள் இருக்கிறது, உன்னைத் தாங்குகிறது என்று இந்த விதமாகச் சொன்னால் அணு அண்டமாக விரியும்.

அந்தப் பரம்பொருளை எல்லா விதங்களிலும் தொழச் சொல்வது உனக்குள் இருக்கும் இறைவனைத் தொழச் சொல்வது தான். எல்லா விதங்களிலும் அதையே ஆராதித்து, அதையே தொழுது கௌரவிப்பது மனிதன் தன் உயர்வுகளையும், தெய்வத்தன்மையையும் மேலோங்க வைத்து கௌரவிப்பது தான். அந்த ஒரு ஆத்மஞானம் தான் நாம் அறிய வேண்டிய மகாரகசியம். அந்த இறைத்தன்மையை விடாது பிடித்துக் கொண்டு, அது மேலோங்க வாழ்ந்தால் முடிவில் நாமும் அதுவாகி அமைதியடைவோம்.

சமுத்திரத்தில் இருக்கும் குமிழி உடைந்து சமுத்திரமாவது போல, மண்பாண்டம் உடைந்து எல்லையில்லா வெட்ட வெளியாவது போல நாமும் அந்த இறைநிலை அடைவது தான் நாம் அடைய வேண்டிய நிலை.

இத்துடன் பகவத்கீதையின் பதினைந்தாவது அத்தியாயமான புருஷோத்தம யோகம் முடிவடைந்தது.

பாதை நீளும்

என்.கணேசன்