Thursday, August 30, 2018

இருவேறு உலகம் – 98


ங்கரமணி மாணிக்கத்திடம் சொன்னார். “சைத்தானைப் பத்தி எத்தனையோ கேள்விப்பட்டிருக்கோம், படிச்சிருக்கோம், ஆனா மொத்த உருவமா அவனை நேர்ல பார்ப்போம்னு நான் இது வரைக்கும் கற்பனைல கூட நினைச்சுப் பார்த்ததில்ல….”

மாமன் யாரைப் பற்றிச் சொல்கிறார் என்று விளங்காமல் மாணிக்கம் கேள்விக்குறியுடன் பார்த்தார். 

“…. வசூல்ல பாதி தர்றோம்னு சொன்னது வாஸ்தவம். அதுக்குன்னு வசூல் ஆன அடுத்த நாளே வந்து நிற்பானா ஒருத்தன். இவன் வந்து நிக்கறான். இவனுக்கு எப்படி மூக்குல வியர்க்குதுன்னு தெரியல. அது மட்டுமல்லாம ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்ல வந்து சேர்ற கணக்கும் இந்த சைத்தானுக்குத் தெரிஞ்சிருக்கு. பொதுப்பணித் துறைல வந்த போனவாரப் பணத்துல இருபது கோடிய குறைச்சு சொல்லிப் பார்த்தேன். அதை அப்பவே கண்டுபிடிச்சுட்டான். இனிமே தப்பா கணக்குச் சொன்னா, குறைச்சு சொல்ற காசுல ரெண்டு மடங்கு அபராதமா தரணுமாம்…. எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அவன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கான்?”

மாணிக்கத்துக்கு மாமனை மாற்றவே முடியாது என்று சலிப்பு ஏற்பட்டது. ராஜதுரையை சாகடித்து மாணிக்கத்தை முதலமைச்சராக்கிய அந்த ஆளுக்கு மாணிக்கத்தைச் சாகடிக்க எத்தனை நிமிடம் வேண்டும்? அதை அவன் மறைமுகமாகச் சொல்லியும் காட்டி விட்டான். இப்படி ஒரு சக்தி வாய்ந்த மனிதன் பிடியில் சிக்கி இருக்கையில் அவன் சொல்கிறபடி நடந்து கொள்வது தான் புத்திசாலித்தனமும், பிழைக்கிற வழியும். இப்படி நிலைமை இருக்கையில் அவனிடம் சரியான தொகையைத் தராமல் சில கோடிகளை சுருட்டும் இந்தச் சில்லறை புத்தி இவருக்கு எதற்கு?

மாணிக்கம் பொறுமையாகச் சொன்னார். “மாமா, கடவுள் கிட்ட கூட விளையாடலாம். அவன் கருணை காட்ட வாய்ப்பிருக்கு. சைத்தான் கிட்ட விளையாடக்கூடாது. அது நிச்சயமான ஆபத்து. ஹரிணியைக் கடத்தின இடம் மாஸ்டருக்குக் கூடக் கண்டுபிடிக்க முடியலையாம். நமக்குத் தெரிஞ்சு மாஸ்டர் தான் சக்தி வாய்ந்த ஆசாமி. அவரே கண்டுபிடிக்க முடியாத இடத்துல அவளைக் கடத்தி வச்சிருக்கற ஆசாமி எவ்வளவு சக்தி வாய்ந்த ஆசாமியாய் இருக்கணும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. தயவு செஞ்சு அந்த ஆள் கிட்ட பிரச்ன பண்ணாம இருங்க….”

சங்கரமணி சரியென்று தலையசைத்தார். பின் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நம்ம கிட்ட வர்ற சைத்தான் வெறும் வேலைக்காரன் தான் போல இருக்கு. உண்மையான முதலாளி சைத்தான் எப்படி இருப்பான்னு தெரியல…. அவன் நம்ம கிட்ட வந்ததில்ல…..”

மாணிக்கம் தீர்மானமாகச் சொன்னார். “அவன் வர வேண்டாம். வர்றது நமக்கு ஆபத்து. நீங்க வரவழைச்சுடாதீங்க”


க்ரிஷ் போன பிறகு அவன் சொன்ன “எதிரி கைப்பாவையா பயன்படுத்தறது உங்களையாக்கூட இருக்கலாம் இல்லையா?” என்ற வாக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். அவர் இப்போது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. யார் சொல்படியும் அவர் நடக்கவுமில்லை. அதனால் எதிரியின் கைப்பாவையாக அவர் இருக்க வழியே இல்லை. அதே போல் க்ரிஷும் சுதந்திரமாகத் தான் இருக்கிறான். வேற்றுக்கிரகவாசி இப்போதும் அவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது போல் தெரியவில்லை. க்ரிஷ் உயிரை இரண்டு முறை காப்பாற்றியும் இருக்கிறான். எதிரியின் கைப்பாவை அவனும் அல்ல, அவனும் அல்ல, அவரும் அல்ல என்றால் பின் யார்?.... இருவரில் ஒருவர் தான் என்றால் அது யார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொள்வது இந்த நேரத்தில் மிக முக்கியம் என்று அவருக்குத் தோன்றியது. என்ன யோசித்தும் விடை கிடைக்காமல் போகவே ஒரு முடிவுக்கு வந்தவராக தங்கள் ஆன்மிக இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான கிருஷ்ணவேணியைச் சந்திக்க செங்கல்பட்டுக்குக் கிளம்பினார்.

கிருஷ்ணவேணி தான் க்ரிஷை அவர் சீடராக ஏற்றுக் கொண்டது சரியே என்று அவர்களது கூட்டத்தில் வாதம் செய்தவர். கூர்மையான அறிவும், அப்பழுக்கில்லாத நேர்மையும் கொண்டவர். பல அரசியல்வாதிகளுக்கும், தேச விரோத சக்திகளுக்கும் எதிராகத் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியவர். அவர் அனுசரித்துப் போயிருந்தால் உச்சநீதிமன்றம் வரை நீதிபதியாகப் போயிருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் அவரது விலைபோகாத தன்மை இன்றும் அவரை அறிந்தவர்களிடத்தில் ஒரு தனி மரியாதையை தக்க வைத்திருக்கிறது.

மாஸ்டரைச் சந்தித்ததில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கிருஷ்ணவேணி முகத்தில் தெரிந்தது. இன்முகத்தோடு வரவேற்றவர் “என்ன மாஸ்டர் திடீர்னு? கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே?”

மாஸ்டர் சொன்னார். “உங்க கிட்ட ஒரு ஆலோசனை கேட்க இருந்தது. அதனால நானே உங்களை வந்து சந்திக்கிறது தான் முறை.”

சிறு உபசரிப்புக்குப் பின் மாஸ்டர் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி எதிரியின் கைப்பாவையாக அவரும் இருக்கலாம் என்று சொன்னதையும், அதற்கான எந்த அறிகுறியும் இப்போதும் தட்டுப்படாத போதும் அவன் சொன்னதை அலட்சியப்படுத்த விரும்பாததையும் சொன்னார். கிருஷ்ணவேணி அவர் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு விட்டு   யோசித்தார். அவருக்குத் தெரிந்த வரை மாஸ்டரை யாரும் கைப்பாவையாகப் பயன்படுத்த முடியாது. தவறான எந்தக் காரியத்தையும் யாரும் செய்ய வைக்க முடியாது. அவர் உறுதியான மனிதர் தான். அதில் சந்தேகம் இல்லை….. மாஸ்டர் சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு சக்தி வாய்ந்த ஆன்மிக இயக்கத்தின் தலைவர். அதன் சக்தி அதிகார மையத்தில் பல இடங்களில் பல விதங்களில் வேரூன்றீ இருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு அபிமானிகள் ஏராளமான பணத்தை அனுப்பி வருவதால் இயக்கத்தின் பண இருப்பும் சொத்துக்களும் கூட பல நூறு கோடிகளில் இருக்கும்……

கிருஷ்ணவேணியின் சிந்தனை இந்த இடத்தில் ஒரு கணம் நின்றது. “மாஸ்டர் நம் இயக்கத்தின் பணப்புழக்கம் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது…..”

“ஆமாம். விஸ்வம் தான் அதை எல்லாம் பார்த்துக் கொள்கிறார். கணக்கில் அவர் கம்ப்யூட்டரையும் மிஞ்சுகிற ஆள். அதில் தவறு வர வாய்ப்பே இல்லை”

“அந்தக் கணக்கை எல்லாம் நீங்களும் அவ்வப்போது சரிபார்க்கிறீர்கள் அல்லவா?” கிருஷ்ணவேணி கேட்டார்.

மாஸ்டர் முகபாவனையில் இருந்து அவர் அப்படிச் செய்வதில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. அடுத்ததாக கிருஷ்ணவேணி கேட்டார். “பேங்க் அக்கவுண்ட்ஸை எல்லாம் ஆபரேட் செய்யும் அதிகாரம் யாருக்கு  இருக்கிறது, ஆன்மிகப் பேரவையின் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது…”

“எனக்குத் தான். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி நான் விஸ்வத்துக்குத் தந்திருக்கிறேன்.”

“ஆனால் நீங்கள் அவ்வப்போது கணக்கை சரிபார்ப்பதில்லை…?” கிருஷ்ணவேணியின் குரலில் ஆச்சரியம் தெரிந்தது.

“ஆரம்பத்துல மூணு மாசத்துக்கு ஒரு தடவ அங்கே போறப்ப செக் பண்ணிட்டு இருந்தேன். எல்லாம் சின்னத்தப்பு கூட இல்லாம கச்சிதமா இருந்தது. விஸ்வம் கணக்கை தினசரி எழுதி சரிபார்த்து விட்டு, கம்ப்யூட்டரில் ஒரு ஃபோல்டரில் தினசரி அப்டேட் பண்ணி விட்டுத் தான் தூங்கவே போவார். அதை ஒரு மாதா மாதம் ப்ரிண்ட் அவுட் எடுத்து  ஃபைல் செய்து விடுவார். எப்போது வேண்டுமானாலும் நான் அதைச் செக் செய்துக்கலாம்னு சொல்வார். நான் பார்க்கறதில்லைன்னாலும் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்க கம்ப்யூட்டரில் ஃபோல்டர் இருக்கும் இடம், அலமாரியில் ஃபைல் வைக்கும் இடம் எல்லாம் எனக்குக் காட்டி இருக்கிறார்…..”

”ஆனால் அப்படி நீங்கள் சமீப காலத்தில் செக் செய்து பார்க்கலை”

“இல்லை. ஆரம்பத்துல பார்த்ததோட சரி. குரு இருக்கறப்ப அவரும் எனக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்திருந்தார். கணக்கும் நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் ஒரு தடவை கூட செக் செய்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை….”

“குருஜிக்கு உங்களை சின்ன வயசுல இருந்தே தெரியும். நூறு சதவீதம் தெரியும். குருஜிக்கு உங்களைத் தெரிஞ்ச அளவு உங்களுக்கு விஸ்வத்தைத் தெரியுமா மாஸ்டர்?”

மாஸ்டர் யோசித்தார். விஸ்வம் அவர்கள் இயக்கத்திற்கு வந்து சுமார் பத்து வருடங்கள் இருக்கலாம். விஸ்வம் கணக்கில் புலி. அதை அவரால் நூறு சதவீதம் சொல்ல முடியும். ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு இருந்தாலும் அபூர்வ சக்திகளில் தேர்ச்சி பெற பலமுறை வற்புறுத்தியும் அது தனக்கு ஒத்து வராது என்று பின்வாங்கிய மனிதர் விஸ்வம். அதை ஒத்துக் கொள்வதில் அவருக்குச் சின்னத் தயக்கம் கூட இருந்ததில்லை. மற்றபடி அதிகம் பேசாதவர். கூச்ச சுபாவக்காரர்.  அவருடைய கடந்த காலம் பற்றி எதுவும் தெரியாது…

மாஸ்டர் சொன்னார். “இல்லை…”

“எதற்கும் ஒரு தடவை நீங்கள் நேரில் போய் கணக்குகளை செக் பண்றது நல்லது மாஸ்டர்”

(தொடரும்)
என்.கணேசன்

Monday, August 27, 2018

சத்ரபதி – 35



சுபா பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிவாஜி வெறும் 300 வீரர்களுடன் தான் சென்றிருந்தான். சென்றது இரவு நேரமானதாலும், அவனுக்கு விசுவாசமான வீரர்கள் சுபா பகுதிப் படையில் ஏற்கெனவே நிறைய பேர் இருந்ததாலும் அதற்கு மேல் படை பலம் அவனுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. பாஜி மொஹிடேயை வெளியேற்றி விட்டு அங்கு ஒரு நாள் தங்கி சுபா பகுதி நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்து பின் நிர்வாகத்தை நம்பிக்கைக்குரிய ஆளிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

“இனி எங்கே சிவாஜி?” அவன் நண்பன் யேசாஜி கங்க் கேட்டான்.

“சாகன் கோட்டைக்கு” என்றான் சிவாஜி. சாகன் பகுதி நிர்வாகி ஃபிரங்கோஜி நர்சாலாவும் கணக்குகளையும், செலுத்த வேண்டிய தொகையையும் தர மறுத்திருந்தான். பாஜி மொஹிடே அளவுக்கு அவன் அகங்காரம் பேசவில்லை என்றாலும் ஷாஹாஜியைக் கேட்டு விட்டுத் தருவதாக நாசுக்காகத் தெரிவித்திருந்தான். அவனையும் சிவாஜி கவனிக்க வேண்டி இருந்தது.

“அங்கு 300 பேர் போதுமா?” யேசாஜி கங்க் சந்தேகத்துடன் கேட்டான். சாகன் கோட்டை சற்று வலிமையானது மட்டுமல்ல, ஃபிரங்கோஜி நர்சாலா மாவீரனும் கூட.. அதனால் பெரும்படை தேவைப்படும் என்பது யேசாஜியின் கணக்காக இருந்தது. அல்லது அங்கும் இரவு வேளையில் போய் ரகசியமாய் தாக்க வேண்டும் என்று நினைத்தான்.

“அங்கே போக என்னுடன் இருபத்தைந்து பேர் போதும். மீதமுள்ளவர்களை அழைத்துக் கொண்டு நீ நம் இடத்திற்குத் திரும்பு” என்றான் சிவாஜி.

யேசாஜி கங்கிற்குத் தன் நண்பன் சொன்னது திகைப்பை ஏற்படுத்தியது. இங்கே என்ன வித்தை வைத்திருக்கிறானோ என்று சந்தேகத்துடன் பார்த்த போது சிவாஜி சொன்னான். “பாஜி மொஹிடேயைப் படைத்த போது கடவுள் அவனுக்கு மூளையை வைக்க மறந்து விட்டார். அதனால் தான் நமக்கு முன்னூறு பேர் தேவைப்பட்டது. ஃபிரங்கோஜி நர்சாலா அறிவுள்ளவன். அறிவுள்ளவர்களிடம் நாம் அனாவசியமாய் பலம் பிரயோகிக்கத் தேவையில்லை. பேச்சு வார்த்தையே போதும்”


சிவாஜி வந்து சேர்வதற்கு முன்பே பாஜி மொஹிடேவை வெளியேற்றிய செய்தி ஃபிரங்கோஜி நர்சாலாவுக்கு வந்து சேர்ந்தது. சிவாஜி அடுத்ததாக இங்கே தான் வருவான் என்று ஃபிரங்கோஜி கணக்குப் போட்டான். ஆனால் எப்போது வருவான் எப்படி வருவான் என்ன திட்டம் போட்டிருக்கிறான் என்பதெல்லாம் சிவாஜியைப் பொருத்த வரை அவனுக்கு யூகிக்க முடியாத விஷயங்களாக இருந்தன. அதனால் அவசர அவசரமாக படைகளைக் கூட்டினான்.

அவனுக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் முன்னூறு வீரர்கள் தான் சுபா போயிருக்கிறார்கள். கண்டிப்பாக அந்த முன்னூறு வீரர்களோடு மட்டும் இங்கே சிவாஜி வர வாய்ப்பில்லை என்று தோன்றியது. பெரும் படையையே சிவாஜி இங்கு அழைத்து வரக்கூடும். என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்றெல்லாம் அவன் அவசரமாக ஆலோசகர்களிடம் ஆலோசித்துக் கொண்டிருந்த போது காவலாளி சிவாஜி தொலைவில் வந்து கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னான்.

“எத்தனை பெரிய படை?” ஃபிரங்கோஜி நர்சாலா கேட்டான்.

“படையை அழைத்து வரவில்லை தலைவரே. சிவாஜியுடன் சுமார் இருபது இருபத்தைந்து குதிரை வீரர்களே வந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று காவலாளி சொன்ன போது ஃபிரங்கோஜி திகைத்தான். பின்னால் பெரும் படை வந்து கொண்டிருக்குமோ என்று எண்ணியபடி அவன் கோட்டையின் மேல்தளத்துக்கு விரைந்தான்.

காவலாளி சொன்னதில் தவறில்லை. இருபத்தைந்து பேர் தான் சிவாஜியுடன் இருக்கிறார்கள். அப்படியானால் அவன் போருக்கு வரவில்லை. ஃபிரங்கோஜி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவனது ஆலோசகர்களிடம் கேட்டான். “அப்படியானால் செலுத்த வேண்டிய தொகையைக் கேட்டுத்தான் அவன் வருகிறான். என்ன செய்வது?”

ஆலோசகர்களில் மூத்தவர் சொன்னார். “தலைவரே. அவன் இப்பகுதியின் மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகிறான். பீஜாப்பூர் சுல்தான் உட்பட அவன் யாரையும் லட்சியம் செய்யாதவனாகவும், பயமில்லாதவனாகவும்  இருக்கிறான். படைபலத்தையும், பண பலத்தையும் பெருக்கிக் கொண்டே வருகிறான். வீரமானவன் மட்டுமல்ல, தந்திரமானவனும் கூட. அவனைப் பகைத்துக் கொண்டு நீங்கள் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது. அனுசரித்துப் போவதே நல்லதென எனக்குத் தோன்றுகிறது…..”

ஃபிரங்கோஜி நர்சாலா யோசித்தான். அவர் சொல்வது சரியாகவே தோன்றியது. அவர் சொல்வது போலவே அவன் வளர்ச்சி அபாரமானது. இந்த இளைய வயதிலேயே இத்தனை சாதித்தவன் இனியும் வளர்வான். அவன் தலைமையை ஏற்றால் அவனுடன் சேர்ந்து நாமும் வளரலாம்……. இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவசர அவசரமாகத் திரட்டியிருந்த படையைக் கலைத்து தங்கள் பழைய நிலைகளுக்குப் போய் விட உத்தரவிட்டான். சாகன் கோட்டை இயல்பு நிலைக்குத் திரும்பியது. வாயிலுக்குச் சென்று சிவாஜியை ஃபிரங்கோஜி நர்சாலா வரவேற்றான். “வருக இளவலே!”

சிவாஜி மிக நெருங்கிய நண்பனிடம் வந்தது போல் அவனை அணைத்து அன்பு பாராட்டி, தன் வீரர்களை வெளியிலேயே நிறுத்து விட்டு, தான் மட்டும் உள்ளே போனான். சிறிது நேர உபசார வார்த்தைகளுக்குப் பின் ஃபிரங்கோஜி சொன்னான். “தாதாஜியின் மறைவு என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது சிவாஜி. அந்த நேரத்தில் வர முடியாததற்கு வருந்துகிறேன். தவறாக நினைக்க வேண்டாம்….”

“பரவாயில்லை ஃபிரங்கோஜி. இறக்கும் முன் அவரிடம் வந்த கணக்குகளை எல்லாம் சரிபார்த்து விட்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்த பின்னரே அவர் கண்மூடினார். அந்தக் கடமையுணர்வு அவரிடம் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அவரிடம் வராத இரண்டு கணக்குகள் பாஜி மொஹிடேயுடையதும், உங்களுடையதும் தான். அதை நான் சரிபார்த்து தெரிவித்தால் தான் அவருடைய ஆன்மா சாந்தியடையும். அதனால் தான் உடனே கிளம்பினேன். பாஜி மொஜிடேயின் கணக்கை நான் சரிபார்த்து விட்டேன்…..” சிவாஜி அமைதியாகச் சொல்லி நிறுத்தினான்.  

அவன் பார்வை ஃபிரங்கோஜி நர்சாலாவை ஊடுருவியது. தாதாஜி கொண்டதேவ் இருக்கையில் ஃபிரங்கோஜி சிவாஜியை நேரடியாகக் கையாளும் சந்தர்ப்பம் வந்ததில்லை. முதன் முதலில் அந்த சந்தர்ப்பம் வந்த இந்தக் கணத்தில் அவன் ஆளப்பிறந்த தலைவன் என்பதை ஃபிரங்கோஜி அருகிலேயே பார்த்து முடிவெடுக்க முடிந்தது. சிறிதும் அச்சமில்லாமல் தனியாக உள்ளே வந்த விதமும் சரி, தனியொருவனாக அமரிந்து கொண்டே பாஜி மொஹிடே கணக்கை முடித்து விட்டேன் என்று சொல்லி உன் கணக்கை என்ன செய்ய என்ற ரீதியில் அமைதியாகப் பார்த்ததும் சரி சாதாரணப்பட்ட ஒருவனுக்கு முடிந்ததல்ல….. ஃபிரங்கோஜி நர்சாலா ஒரு மாவீரன். அவன் வீரத்தைப் போற்றுபவன். நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன். எதிரே அமர்ந்திருக்கும் இந்த இளைஞன் மாபெரும் சக்தியைத் தன்னுள் அடக்கியவனாய் தோன்றினான். இவன் பின் போனால் நிறைய முன்னேறலாம் என்று சற்று முன் எண்ணியது இப்போது மேலும் உறுதிப்பட்டது.

அவன் சொன்னான். “என்னை மன்னித்து விடு சிவாஜி. உன் வீரனிடம் நான் மறுத்தது நாளை உன் தந்தை என்னைக் குற்றப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தினால் தானேயொழிய வேறு காரணம் இல்லை….”

“எனக்குப் புரிந்தது நண்பரே. நீங்கள் தாதாஜி மறைவின் போது வந்திருந்தால் நாம் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். தவறு என் மீதும் உள்ளது. நான் வீரனை அனுப்பி இதைக் கேட்டிருக்கக்கூடாது. நேராக முன்பே வந்து பேசியிருக்க வேண்டியது தான் முறை….. என் தந்தை பீஜாப்பூரில் இருந்தும் தெற்கே தொலைவில் போய் விட்டார். கர்னாடகத்தில் உள்ள பகுதிகளை அவர் கைவசம் வைத்திருப்பதால் இங்கே இனி அவர் வர வாய்ப்பில்லை. அதனால் இனி இங்கே ஆளப் போகிறவன் நான் தான்…. தாதாஜியும் ஆசி வழங்கியிருக்கிறார். உங்களைப் போன்ற நண்பர்களும் என்னுடன் இணைந்தால் நான் தனியொரு ராஜ்ஜியத்தை உருவாக்கி விட முடியும் என்று நம்புகிறேன்…..”

சிவாஜி அதைச் சொல்கையிலேயே உருவாக்கிக் காட்டுவேன் என்ற வகை உறுதி அவனிடம் தெரிந்தது. பாஜி மொஹிடேயை எதிரி பட்டியலில் சேர்த்தது போல தன்னையும் சிவாஜி எதிரிப் பட்டியலில் சேர்க்காமல் நண்பரே என்று அழைத்தது ஃபிரங்கோஜிக்கு இதமாக இருந்தது. இத்தனைக்கும் இரண்டு பேரும் ஒரே தவறைச் செய்தவர்கள்….. அப்படி இருக்கையில் இவன் எனக்குத் தவறைச் சரிசெய்து கொள்ள ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ஃபிரங்கோஜி முழு மனதுடன் சொன்னான். ”உன்னோடு இணைந்து கொள்வதை நானும் பெருமையாகக் கருதுகிறேன் சிவாஜி. இரண்டு நாட்களில் கணக்குடனும், தொகையுடனும்  வருகிறேன்”

சிவாஜி எழுந்து நின்றான். “உங்கள் முடிவு நிச்சயமாய் உங்கள் பலத்தைப் பெருக்கும் நண்பரே. அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எதிர்காலத்தில் நாம் சேர்ந்து செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. தயாராக இருங்கள்…..”

ஃபிரங்கோஜி நர்சாலா சிவாஜியின் வார்த்தைகளால் உற்சாகமடைந்தான். இவனிடம் ஏதோ மந்திரசக்தி இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. இவனுடன் இருக்கையில் நம்பிக்கை தானாக உருவாகிறது. புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறான்…. இவனுடன் இணைந்து செயல்பட்டால் சாகன் கோட்டையோடு நின்று விடாமல் கண்டிப்பாக நம் பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்……

சிவாஜி அவனிடமும் கனவுகளைப் பற்ற வைத்தான்…..

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, August 23, 2018

இருவேறு உலகம் – 97

மாஸ்டரின் திகைப்பும் குழப்பமும் அவர் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. ”நீ என்ன சொல்றே க்ரிஷ்?”

க்ரிஷ் சொன்னான். “நீங்களும் ரொம்பவே நல்லவர். உங்க மனசுலயும் இது வரை எந்தக் களங்கத்தையும் நான் பார்த்ததில்லை….. உங்க அறிவும் சாதாரணமானதல்ல. இது வரைக்கும் நீங்க அடைஞ்சிருக்கிற சக்திகளே அதுக்கும் உங்க மன உறுதிக்கும் உதாரணமா சொல்லலாம். அதனால அந்த அமானுஷ்ய சக்தி படைச்ச எதிரி கைப்பாவையா பயன்படுத்தறது உங்களையாக்கூட இருக்கலாம் இல்லையா?”

ஆனா என்னை அது பயன்படுத்தலையே!”

எப்படித் தெரியும்? இல்லாட்டி பயன்படுத்தப் போறது இனிமேயா கூட இருக்கலாம்…..

அந்தக் கோணத்திலேயே இது வரை சிந்தித்திருக்காத மாஸ்டருக்கு என்ன சொல்வது என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் எந்தவொரு புதிய கோணத்தையும், அது எந்த அளவு முட்டாள்தனமான ஒன்றாக இருந்தால் கூட, சிந்தித்தே பார்க்காமல் தவறு என்று ஒதுக்கி வைப்பது ஞானமல்ல என்று உள்ளுணர்வு சொன்னது. அதனால் அவன் சொன்னதை உடனடியாக மறுக்காமல்எனக்கு அப்படித் தோணலை, ஆனாலும் நீ சொன்னதை நிதானமா பிறகு யோசிச்சு சொல்றேன்என்று புன்னகையுடன் சொன்னார்.
            
க்ரிஷ் அவருடைய பக்குவமான அணுகுமுறையை மனதிற்குள் சிலாகித்தான். சிறிதே நேரத்தில் மறுபடி அவன் மனதில் ஹரிணியே நிறைந்தாள். எங்கிருக்கிறாள்…. என்ன செய்கிறாள்…… என்ன நினைக்கிறாள்….. என்றெல்லாம் யோசிக்க யோசிக்க மறுபடி மனம் கனமாக ஆரம்பித்தது.

அவன் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த மாஸ்டர் மென்மையாகச் சொன்னார். ”பிரச்னைன்னு ஒன்னு இருந்தா தீர்வும் கண்டிப்பா இருந்து தானாகணும்…. ஆரம்பத்துல தீர்வு சரியா புலப்படாம இருக்கலாம். ஆனா நிதானமா யோசிக்க யோசிக்க நமக்கு அது அகப்படாம போகாது. க்ரிஷ்ங்கற தனிமனிதனாய் இருந்து பார்க்கறத நிறுத்து. பிரபஞ்ச சக்தியோட அங்கமா எல்லாத்தையும் சந்திக்கப் பார். அந்த அலைவரிசையில் யோசி. அந்த அலைவரிசைகள்ல சிக்காத ரகசியம் இல்லை. விலகாத புதிர் இல்லை……”

அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் தான் விதி இப்படியொரு இடியை அவன் தலையில் போட்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதே பெரிய காரியமாக இருக்கையில், அப்படி மீண்டு மீண்டும் பயிற்சிகளில் ஈடுபடுவது முடியுமா? பயிற்சிகளிலும் அவன் இப்போது ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறான். முழுவதும் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற காலம் எத்தனை ஆகும்? அந்த அளவு அவகாசம் நமக்கிருக்கிறதா என்று க்ரிஷ் மனம் யோசித்தது.

அவன் அவரிடம் கேட்டான். “மாஸ்டர் உங்க கணக்குப்படி இந்த ரகசியக் கலையில் நான் நிபுணன் ஆக எத்தனை காலம் ஆகும்?’

சில வினாடிகளில் இருந்து பல யுகங்கள் வரைக்கும் தேவைப்படலாம்.” பட்டென்று வந்தது பதில். அந்தப் பதிலில் க்ரிஷ் திகைத்துப் போனான். என்ன பதிலிது!

அவர் புன்னகையுடன் சொன்னார். “சரியா சொல்லப் போனா நாம எதையுமே புதுசா கத்துக்கறதில்லை க்ரிஷ். மறந்ததை நினைவுபடுத்திக்கறோம் அவ்வளவு தான். ஆத்மாவுக்குப் புதுசா கத்துக்க என்ன இருக்கு? எத்தனையோ உண்மைகளை மறந்திருக்கோம். எத்தனையோ பொய்களை உண்மைகளாய் மனசில் ஆழமா பதிவு பண்ணியிருக்கோம். அதனால பிரபஞ்ச சக்தியின் அலைவரிசையில் இருந்து நாமளாகவே ரொம்ப தூரம் விலகியிருக்கோம். இந்தப் பயிற்சிகள் எல்லாம் தப்பா கத்துகிட்ட அஞ்ஞானத்தை இழக்கறதுக்குத் தான். நீ எவ்வளவு ஆத்மார்த்தமா ஆசப்படறியோ அவ்வளவு வேகமா உன்னால முன்னேறிட முடியும். ஏன்னா போன பிறவியிலயே நீ இந்த விஷயத்துல ரொம்பவே முன்னேறியிருக்கணும். அதனால தான் கூர்மையான அறிவு, இந்த நல்ல மனசு எல்லாம் உனக்கு வாய்ச்சிருக்கு. பிரச்சினைகளைத் தர்ற விதி அதை சமாளிக்கற வழியையும் தராமப் போயிடறதில்ல. நம்பிக்கையோட இரு. சக்திகளை கவலையில் விரயம் பண்ணாம தீர்வுகள் பக்கம் திருப்பு. நல்லதே நடக்கும்

க்ரிஷ் அவர் சொன்னதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டு மனதில் மறு ஒலிபரப்பு செய்து கேட்டான்.  அவன் மனம் ஓரளவு தைரியம் பெற்றது. அவரை சாஸ்டாங்கமாய் விழுந்து வணங்கி விடைபெற்றான். மாஸ்டர் மானசீகமாய் தன் சிஷ்யனை ஆசிர்வதித்தார்.


ரிணி காணாமல் போனதை மாணிக்கம் குடும்பத்தினர் மூவரும் மூன்று விதமாக எடுத்துக் கொண்டார்கள். சங்கரமணி சந்தோஷப்பட்டார். அவர் பேரனைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு இது சரியான தண்டனை என்று நினைத்தார். மாணிக்கம் விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருந்தார். மனோகர் சொன்னது போல அவள் ஒன்றும் அவர் மருமகள் அல்ல. அதே நேரத்தில் போலீஸ் துறையின் விசாரணையை அவராக தாமதப்படுத்தவோ, துரிதப்படுத்தவோ முனையவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று விட்டு விட்டார். மணீஷுக்கு ஹரிணி காணாமல் போனதை ஏனோ சகிக்க முடியவில்லை. க்ரிஷுக்கு மனவருத்தம், துக்கம் ஏற்படும் என்பது அவனுக்குச் சந்தோஷமே. ஆனால் ஹரிணிக்கு நேரும் ஆபத்து மூலமாக அது நிகழ்வது அவனுக்குச் சம்மதம் இல்லை. அவள் அவனைக் காதலிக்கா விட்டாலும் கூட அவளைக் காதலிப்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. அவளுக்கு ஆபத்து வருவது அவனுக்கு சகிக்கவில்லை. க்ரிஷின் எதிரி தான் அவளைக் கடத்தி இருக்கவேண்டும் என்பது தெளிவாகவே தெரிந்தது. அந்தப் பகை எந்த வகையில் வந்தது என்று தெரியவில்லை. சங்கரமணி நாளுக்கு ஒரு யூகத்தைச் சொன்னார் என்றாலும் அவற்றில் எது சரியாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்க முடியவில்லை…..

நீண்ட யோசனைக்குப் பிறகு க்ரிஷுக்குப் போன் செய்தான். “க்ரிஷ் ஹரிணி பத்தி எதாவது தகவல் கிடைச்சுதா?”

அவன் போன் வந்த போது க்ரிஷ் மாஸ்டர் வீட்டிலிருந்து தன் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். ”இல்லையே மணீஷ்”

“யாராவது போன் செஞ்சாங்களா?”

“இல்லையே”

“மாஸ்டரால எதாவது கண்டுபிடிக்க முடிஞ்சுதா?”

“இல்லை”

மணீஷுக்கு மாஸ்டராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது. அவன் மெல்லச் சொன்னான். “கடத்தினவன் ஒருவேளை போன் செய்தா, அவன் என்ன சொன்னாலும் ஒத்துக்கோ. நமக்கு ஹரிணி தான் முக்கியம்”

க்ரிஷ் அவன் குரலில் உண்மையான அக்கறையை உணர்ந்தான். நடிப்பே வாழ்க்கையாக இருப்பவனும் கூட நடிக்காத இடம் ஒன்றிருக்கிறது…. “அவன் என்ன சொல்றான்னு முதல்ல பார்க்கலாம்” என்று க்ரிஷ் சொன்னான்.

மணீஷ் பெருமூச்சுடன் போனை வைத்தான். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மணீஷை அவள் காதலிக்கவில்லை. கடத்தியவன் என்ன சொல்கிறான் என்று தெரிந்த பின் தான் முடிவு செய்வேன் என்று அவள் ஆபத்தில் இருக்கும் கட்டத்தில் கூடச் சொல்லும் க்ரிஷை அவள் காதலிக்கிறாள். பெண்கள் மனதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை…..


த்மாவதி இளைய மகனின் அறையை எட்டிப் பார்த்தாள். அவன் இன்னும் மாஸ்டர் வீட்டிலிருந்து வரவில்லை. அவள் மூத்த மகன் அறைக்கு வேகமாகப் போனாள். 

உதய் தாயைக் கேள்விக்குறியோடு பார்த்தான். “என்ன விஷயம்?”

“ஹரிணியைக் கடத்தினவன் போன் செஞ்சானாடா?”

”இல்லைம்மா”

“ஒருவேளை போன் செஞ்சா அவன் எத்தனை கோடி கேட்டாலும் குடுத்துடு. கணக்குப் பாக்காதே……”

“எவ்வளவு கோடி கேட்டாலுமா?” உதய் அம்மாவைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டான். அவளுக்கு கணவனும், மூத்த மகனும் அரசியலில் எத்தனை சம்பாதிக்கிறார்கள், அதை எப்படி சேமிக்கிறார்கள், எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. அவள் அதைக் கேட்டுக் கொள்வதும் கிடையாது. ஆனால் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் அனுமானம் போலிருக்கிறது.

உதய் சிரிக்காமல் சொன்னான். “கோடியெல்லாம் யார் கிட்ட இருக்கு”

”ஏண்டா. எனக்கு படிப்பறிவு கிடையாது. ஒத்துக்கறேன். உலக நடப்புமாடா தெரியாது. தம்பி சந்தோஷத்துக்கு இல்லாத காசு என்னத்துக்குடா”

“எதுக்கும் தம்பியக் கேட்டுட்டு செய்யலாம்…”

“கிழிஞ்சுது போ. அவன் வேதாந்தம் பேசுவான். காதலிக்கிற பொண்ணுன்னும் பார்க்க மாட்டான். நாம தாண்டா அவனுக்குத் தெரியாம காதும் காதும் வச்ச மாதிரி இதைச் செய்யணும்.”

“இரு இரு….. நீ அன்னைக்கு ஒரு மஞ்சள்துணிய மூணா கிழிச்சு அதுல நூத்தியொரு ரூபாய் வச்சு இனிமே எல்லாம் கடவுள் பார்த்துக்குவார்னு தானே சொன்னே. இப்ப என்ன நம்பிக்கை போயிடுச்சா”

“கடவுள் எதையும் நேர்ல வந்து செய்ய மாட்டார்டா, மனுஷன் செய்ய வழியமைச்சுக் கொடுப்பார். அதை மனுஷன் பயன்படுத்திக்கணும். கடவுள் உங்களுக்குக் கோடி கோடியா தரலயாடா”

“கிழவி…. எங்களுக்கு உன்னைத் தவிர வேறு எதிரியே வேண்டாம்…. ” என்று உதய் சிரித்தான்.

ஆனால் பணம் கேட்டுக் கூட கடத்தியவன் போன் செய்யவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்