Thursday, November 30, 2017

இருவேறு உலகம் - 59


தீத சக்திகளைப் பொருத்த வரை வினாடிகள் கூட மிக முக்கியமானவை. ஓரிரு வினாடிகள் அசந்திருந்தால் கூட தங்கள் வழியில் குறுக்கிட்ட சில சக்திகளை அறிய ஒருவர் தவற விட்டு விட முடியும். அப்படித்தான் மாஸ்டர் தன் மீது ஆக்கிரமிப்பு ஏற்படுத்த இருந்த சக்தியைத் தவற விட்டிருந்தார். திரும்பவும் அந்த அலைகளைத் தேடிப்பார்த்தார். ஆனால் அகப்படவில்லை. அவருக்கு அந்த அலைகள் யாருடையவை என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. எதிரியின் அலைகள் தான் அவை. க்ரிஷ் மீது கவனம் முழுவதுமாகச் செலுத்திய நேரமாகப் பார்த்து குறுக்கிட்டிருக்கிறான்….. ’ஒருவேளை க்ரிஷ் மனதை அறிய முடியாமல் போனதில் எப்படி அதிர்ச்சி அடைகிறேன் என்று தெரிந்து கொள்ளத்தான் வேவு பார்த்தானோ?’ எண்ணிய போதே ஒரு கணம் சினம் எட்டிப்பார்த்தது. ஆனால் எதிரி மேல் ஏற்பட்ட கோபத்தை அவன் பிரதிநிதியாய் வந்துள்ள க்ரிஷ் வரை நீட்ட முடியவில்லை. அவனது பரவசப் புன்னகையைப் பார்த்து அவர் முகம் உடனே மென்மையானது.

உதயும், க்ரிஷும் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார்கள். அவர் ஆசி வழங்கினார்.

உதய் புன்னகையுடன் அறிமுகப்படுத்தினான். “சுவாமி இவன் தான் என் செல்லத் தம்பி க்ரிஷ். நீங்க சொன்ன மாதிரியே நல்லபடியா வந்து சேர்ந்துட்டான்.… எங்கே போனான் என்ன ஆச்சுன்னு இவனுக்கு எந்த ஞாபகமும் இல்லைங்கறான்….. ஆனா இடைல இவனுக்கு கொஞ்சம் நினைவு வந்தப்ப யாரோ காட்டுவாசிகள் இவன் வாய்ல மூலிகைச்சாறு விடறது தெரிஞ்சிருக்கு. அவ்வளவு தான் பிறகு எதுவும் ஞாபகமில்லைங்கறான். அழுத்தக்காரன் உண்மைய தான் சொல்றானான்னும் தெரியல. நீங்க தான் உங்க சக்திய வச்சு கண்டுபிடிச்சுச் சொல்லணும்”

மாஸ்டரும் புன்னகையோடு சொன்னார். “ஆள் இல்லாதப்ப அந்த ரூம்ல இருந்து கண்டுபிடிச்ச நிறைய கண்டுபிடிச்ச எனக்கு ஆள் நேர்லயே இருக்கறப்ப கூட இப்ப எதையும் கண்டுபிடிக்க முடியல. உன் தம்பி அந்த அளவு சக்திமானா தான் திரும்பி வந்திருக்கான்..”

உதய் பதில் எதுவும் சொல்லும் முன் அவன் செல்போன் இசைத்தது. அவனுடைய நெருங்கிய அரசியல் நண்பன் ஒருவனுடைய அழைப்பாக இருந்ததால் “நீங்க பேசிட்டு இருங்க சுவாமி…. வந்துடறேன்…..” என்று வெளியே போய் அவனிடம் போனில் பேச ஆரம்பித்தான்.

மாஸ்டர் க்ரிஷை உட்காரச் சொல்லித் தானும் எதிரில் அமர்ந்தார். இருவருக்கும் உடனடியாக எதையும் பேச முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தங்கள் எண்ண ஓட்டங்களில் இருந்தார்கள்.

தன்னுடைய யோக சக்திகள் அவனை ஊடுருவ முடியாதது மாஸ்டருக்கு இன்னும் மன ஆழத்தில் அதிர்ச்சியாகவே இருந்தது. எதிரி இவனுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறான், இவனுடைய உத்தேசம் இப்போது என்னவாக இருக்கிறது, குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக இங்கு வந்தானா இல்லை தானாகவே வந்திருக்கிறானா, இவனது அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தன.

க்ரிஷ் அவர் சக்திகள் பற்றி வீட்டார் மூலமாகக் கேள்விப்பட்டதுக்கு ஏற்ற மாதிரியே அவர் தேஜஸ் இருந்ததையும் கவனித்த போது நிகோலா டெஸ்லா சொன்ன சக்தி அலைகள், அலைவரிசைகள் போன்ற விஷயங்களில் இவர் தேர்ச்சி பெற்றவர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்தது. அவனுடைய எதிரி இதில் நிபுணன் என்று வேற்றுக்கிரகவாசியே சொல்லியிருக்கிறான். வார்த்தைகளில் எள்ளளவும் தாராளம் காட்டாத வேற்றுக்கிரகவாசியே அப்படிச் சொல்லியிருக்கிறான் என்றால் எதிரி ஒரு சூப்பர்மேனாகவே இருக்க வேண்டும். இந்த நிலையில் அவன் இதில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இதெல்லாம் புத்தகங்களைப் படித்துத் தேர்ச்சி பெறுகிற கலை அல்ல. தகுதி வாய்ந்த ஒரு நல்ல குருவால் கற்றுக் கொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற வேண்டிய கலை…..

அவனை எதிரியின் ஆளாகவே நினைக்கிற இவர் எதிரியாகவே இயங்கினால் எதிரிகள் எண்ணிக்கை இரண்டாகி விடும். இப்போது இந்தக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரைக் கூடச் சமாளிக்கிற நிலைமையில் அவன் இல்லை. கை மணல் விரல் இடுக்கின் வழியாகக் குறைந்து கொண்டே போவது போல காலம் குறைந்து கொண்டிருக்கையில் அவன் உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும்….

உடனே தீர்மானத்திற்கு வந்த க்ரிஷ் அவரை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான். மாஸ்டர் அதை எதிர்பார்க்கவில்லை.

“இப்போது தானேப்பா காலைத் தொட்டுக் கும்பிட்டாய். என்ன திடீர்னு ரெண்டாவது தடவையா ஒரு மரியாதை” ஆச்சரியத்தோடு சந்தேகமும் சேர மாஸ்டர் கேட்டார்.

மண்டி போட்டு அமர்ந்த க்ரிஷ் அவர் பாதங்களில் இருந்து கைகளை விலக்கிக் கொள்ளாமல் நிமிர்ந்து பார்த்தபடி புன்னகையுடன் சொன்னான். “முதல் தடவை கும்பிட்டது பெரியவங்களைப் பார்த்தவுடன் சின்னவங்க ஆசி வாங்கற சம்பிரதாயம். இப்ப கும்பிடறது ஒரு குருவைத் தேடி வந்திருக்கற சிஷ்யன்  செய்யற வேண்டுதல் நமஸ்காரம்….. எனக்கு சில விஷயங்களைக் கத்துக்கணும். சொல்லிக்குடுப்பீங்களா மாஸ்டர்?”

மாஸ்டருக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அவர் கனவிலும் இப்படியொரு வேண்டுகோளை எதிர்பார்த்திருக்கவில்லை. திகைப்புடன் அவனையே கூர்ந்து பார்த்தார். அந்த முகத்தில், அந்தக் கோரிக்கையில், அந்தப் புன்னகையில் சின்னதாய் ஒரு களங்கத்தைக் கூட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பலவிதமான உணர்வுகள் மனதில் எழ, தன்னைச் சுதாரித்துக் கொண்டு மாஸ்டர் சொன்னார். “உனக்கு ஏற்கெனவே சக்தி வாய்ந்த ஒரு குரு கிடைச்சிருக்கற மாதிரி தெரியுது. ஒரே நேரத்துல ரெண்டு குருக்களிடம் நீ கத்துக்க முடியாது க்ரிஷ்”

அவர் யாரை அனுமானித்துச் சொல்கிறார் என்பது க்ரிஷுக்குப் புரிந்தது. அவன் சொன்னான். “கிடைச்சது குரு அல்ல நண்பன். அவன் போயும் விட்டான்…..”

’அவன்’ போய் விட்டான் என்று க்ரிஷ்  சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன் அவரை ஆக்கிரமித்த சக்தி அவனுடையது என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. ஆனால் க்ரிஷ் முகத்தில் இப்போதும் பொய் தெரியவில்லை. ஒருவேளை இவனிடம் போய் விடுவதாய் அவன் சொல்லி, அதை இவன் நம்புகிறானோ?

“உனக்கு என்ன கத்துக்கணும்?”

“மன அலைகள், அலைவரிசைகள், பிரபஞ்ச விதிகள், எதையும் உருவாக்கவும், அழிக்கவும் செய்யும் பிரபஞ்ச சக்தியின் ரகசியங்கள்…..”

மாஸ்டர் வாய் விட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கசப்பிருந்தது. “உன் மனசைப் படிக்க முடியாமல் தோற்று நிற்கிற என்கிட்டயே நீ இந்த விஷயங்களைக் கத்துக்க ஆசைப்படறது ஆச்சரியமாய் இருக்கு க்ரிஷ். எப்பவுமே வெற்றி பெற்றவன் கிட்ட கத்துக்கோ. தோத்தவன் கிட்ட கத்துக்க முயற்சி பண்ணாதே”

“பல சமயங்கள்ல வெற்றி, தோல்விங்கறதே வெறும் அபிப்பிராயங்கள் தானே மாஸ்டர்…..”

அவனுடைய வார்த்தைகளில் இருந்த உண்மை ஒரு கணம் அவரை அசைத்தது. ஆனாலும் உறுதியாக அவர் சொன்னார். “எனக்கு யார் மனசுல நுழைய முடியலையோ அந்த மனுஷனுக்கு என்னால கத்துக்குடுக்கவும் முடியாது க்ரிஷ்…”

“எனக்குப் பாதுகாப்புன்னு சொல்லி என் நண்பன் ஏதோ சக்தி வளையம் போட்டுட்டு போயிட்டான்….. அதை எடுத்து வீசற சக்தி எனக்கில்லை மாஸ்டர். உங்களால முடிஞ்சா நீங்க அதைச் செய்யுங்க. அதை நான் தடுக்க மாட்டேன்…. ஆனா நான் சொன்ன விஷயங்கள்ல நான் நிறைய கத்துக்கறது அவசியம். அவசரம் கூட. போலி குருமார்கள் நிறைஞ்ச இந்த உலகத்துல உண்மையான குருவை நான் எங்கேன்னு தேடுவேன். அந்த அளவு காலமும் என் கிட்ட இல்லை. உங்க சிஷ்யனாகிற தகுதி எனக்கு இல்லைன்னு நீங்க நினைச்சா சொல்லுங்க. அதுக்கு மேல வற்புறுத்த மாட்டேன்…..”

அவன் கைகள் இன்னமும் அவர் பாதங்களில் இருந்து விலகவில்லை. அவர் வாழ்க்கையில் முதல் முறையாகப் பெரியதோர் தர்மசங்கடத்தை உணர்ந்தார். அவனுக்குத் தகுதி இல்லை என்று அவர் எப்படிச் சொல்வார். எந்த ஒரு குருவுக்கும் இப்படியொரு சிஷ்யன் கிடைப்பது வரப்பிரசாதமே அல்லவா? அவனுடைய ஆசிரியர்கள் அவனைப் பற்றிச் சொன்னதை எல்லாம் அவரும் படித்திருக்கிறாரே. ஒவ்வொரு ஆசிரியனும் பெருமைப்பட்ட மாணவன் அல்லவா அவன்? மனதிற்குள் அவனிடம் புலம்பினார். “க்ரிஷ், எதிரி உன்னைச் சந்திக்கறதுக்கு முன்னாடி நான் உன்னைச் சந்திச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…..”

பெரியதொரு மனப்போராட்டத்தில் இருந்த மாஸ்டரையும், மண்டியிட்ட நிலையிலேயே அவர் பாதங்களில் இருந்து கைகளை எடுக்காமல் இருந்த க்ரிஷையும் சுரேஷ் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மாஸ்டருடைய உதவியாளன் மட்டுமல்ல. அந்த ஆன்மிக ரகசிய இயக்கத்தின் உறுப்பினரும் கூட. மாஸ்டர் சில நாட்களாகவே க்ரிஷ் பற்றிய சிந்தனைகளிலேயே இருந்ததை அவர் பேச்சில் இருந்து அவனால் உணர முடிந்தது. க்ரிஷை சந்திக்கும் பரபரப்பு காலையில் இருந்தே அவரைத் தொற்றிக் கொண்டதையும் அவன் கவனித்தான். அவரை யாரும் இந்த அளவு பாதித்து அவன் கண்டதில்லை. அவருடைய குருவைக் கொன்ற எதிரியின் ஆள்  க்ரிஷ் என்பதால், க்ரிஷ் மூலமாகவாவது எதிரியை அவர் அடையாளம் காண முடியும் என்பதால், அவருடைய எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு இயல்பு தான் என்று நினைத்தான். அதனாலேயே அதே பரபரப்பு அவனையும் தொற்றி இருந்தது.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி க்ரிஷ் இப்போது அவருக்கு எதிரியை அடையாளம் காட்டவில்லை. தன் மனதையும் காட்டவில்லை. மாறாக அவரிடமே கற்றுத்தரவும் வேண்டுகின்றான். என்னவொரு துணிச்சல்! மாஸ்டர் என்ன செய்வார்? அவர் அவன் வலையில் வீழ்ந்து விடுவாரா?

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, November 29, 2017

முந்தைய சிந்தனைகள் - 25

நான் எழுதியதிலிருந்து சில சிந்தனைத் துளிகள்......



 









என்.கணேசன்

Monday, November 27, 2017

வரலாற்றுப் பக்கங்களில் ஷாமனிஸ நிகழ்வுகள்!

அமானுஷ்ய ஆன்மிகம்- 22

ஷாமனிஸம் என்கிற மிக மிகப்பழமையான ஆன்மிக வழிமுறைகள் பற்றிய நிகழ்வுகள் வரலாற்றுப் பக்கங்களில் விவரமாகவும், சுவாரசியமாகவும் பதிவாக்கப்பட்டிருப்பது அக்கால ஷாமனிஸம் சடங்குகள் குறித்த நேரடி அனுபவங்களாக இருக்கின்றன.   சம்பந்தப்பட்ட வரலாற்றாசிரியர்கள் வெளியாட்களாகவே இருந்ததால் அவற்றில் விருப்பு, வெறுப்புக் கலவைகள் இருக்கவில்லை. அவற்றைப் படிப்பதன் மூலம் ஷாமனிஸத்தின் வித்தியாசமான பன்முகத் தன்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.

எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்த மிகப் பழமையான சம்பவம் நார்வே நாட்டின் வரலாறான Historia Norwegiae என்ற லத்தின் மொழி நூலில், பெயர் அறியாத ஒரு துறவியால், 1220 ஆம் ஆண்டு வாக்கில்எழுதப்பட்டிருக்கிறதுஇந்த பழங்கால நூலில் நார்வேயின் கிழக்குப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் வரலாற்றோடு பிணைந்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் ஒரு பெண்ணை யாரோ மறைமுகமாக ஏதோ மாந்திரீக வழியில் தாக்க அவர் மயக்கம் அடைந்து விட அவரைச் சுயநினைவுக்குத் திரும்பக் கொண்டு வரும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. கடைசியில் அவளைக் காப்பாற்ற இரண்டு ஷாமன்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் வந்த பிறகு ஒரு திறந்த வெளியில் அந்தப் பெண் வெள்ளை நிறத் துணி விரிப்பில் கிடத்தப்படுகிறாள். இரண்டு ஷாமன்களும் மத்தளம் அடித்து, ஆடியும், பாடியும் மந்திரங்கள் ஜெபித்தபடி  அவளைச் சுற்றி வருகிறார்கள். கடைசியில் இருவரும் ஒருவித மயக்க நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் தான் ஷாமன்கள் அமானுஷ்ய விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த மயக்க நிலையிலேயே ஒரு ஷாமன் இறந்து விடுகிறார். இன்னொரு ஷாமன் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தும் வழியை அறிந்து அவளைக் காப்பாற்றி விடுகிறார். சுயநினைவுக்குத் திரும்பிய அவருக்கு எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் ஆன்மாவை அந்த ஷாமன் காப்பற்றி விட்டதாக சுற்றி இருந்த மக்களால் கருதப்பட்டது என்று அந்த வரலாற்றாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.  அந்த ஷாமன் அந்தக் காப்பாற்றும் முயற்சியில் சுறாமீன் உட்பட பல மிருகங்களாக உணர்வு நிலையில் மாறி விட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாராம்.

அடுத்த வரலாற்று நிகழ்வு க்ரீன் லாந்து நாட்டின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் Eiriks saga chronicles என்ற 1265 ஆம் ஆண்டுப் படைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. நாட்டில் மழையே இல்லாமல் பஞ்சம் தலைவிரித்தாட, இனி மழை பெய்யும் என்ற நம்பிக்கைக்கே வழியில்லாத அறிகுறிகளும் தோன்ற, முக்கியஸ்தர்கள் சேர்ந்து அதுபற்றி விவாதிக்கிறார்கள். முடிவில் ஒரு பெண் ஷாமனை வரவழைக்கிறார்கள். அந்தப் பெண் ஷாமன் கருப்பு அங்கியும், கருப்பு ஆட்டின் தோலும், வெள்ளைப் பூனையின் தோலும் சேர்ந்து தைத்த தொப்பியும் அணிந்து கொண்டு வருகிறார். அந்த ஷாமனின் ஆலோசனைப்படி அங்கிருந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடியபடியே அவரைச் சுற்றி வருகிறார்கள். முடிவில் அந்த ஷாமன் தியான நிலையை அடைந்து விடுகிறார். அது வரை அந்த மக்களுக்கு அருள்பாலிக்காத ஆவிகள் இப்போது மனமிரங்கி உதவ வந்திருப்பதாகச் சொல்கிறார். மேலும் தொடர்ந்து அந்த ஆவிகள் சொல்லும் ஆலோசனைகளைச் சொல்கிறார். கடைசியில் அந்த மக்கள் கேட்கும் மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். அந்த ஷாமன் கேட்டுச் சொன்ன ஆலோசனைகள்படி சடங்குகள் செய்து சுமாரான மழை பெய்து பஞ்சம் நீங்கினாலும் பிற்காலத்தில் ஷாமனிஸ முறைகள் சூனியமாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டன என்கின்றன அந்த வரலாற்றுக் குறிப்புகள்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் மங்கோலியப் பேரரசுக்கு கியோவன்னி டா பியன் டெல் கார்பைன் (Giovanni da Pian del Carpine) என்ற இத்தாலியப் பாதிரியை போப் நான்காம் இன்னசண்ட் அனுப்பி வைத்தார். மதத்தைப் பரப்பவும், நல்லிணக்கத்தோடு இருக்கவும் அனுப்பிய அந்தப் பயணம் வெற்றியில் முடியவில்லை என்றாலும் அக்காலத்தில் மங்கோலியாவின் நிகழ்வுகளை அந்தப் பாதிரியார் மிக விரிவாக எழுதியிருக்கிறார். செங்கிஸ்கானின் ஒரு பேரனான குயுக் என்பவனின் முடிசூட்டு விழாவை நேரடியாகக் காணும் வாய்ப்பும் அரசகுடும்பம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், ஆகியவற்றை நேரடியாகக் கண்டு பதிவு செய்யும் வாய்ப்பும் அந்தப் பாதிரியாருக்கு கிடைத்திருக்கிறது.

அங்கு ஷாமனிஸ முறைகளே அதிகம் பயன்படுத்துவதைக் குறிப்பிடும் அவர் இவ்வாறு கூறுகிறார். “அங்கு எல்லாமே அருள்வாக்குக் கேட்டே நடத்தப்படுகின்றன. சடங்குகளின் முடிவில் என்ன சொல்லப்படுகிறதோ அதையே அவர்கள் தெய்வ வாக்காக நம்புகிறார்கள். அதன்படியே எல்லாம் செய்கிறார்கள். அரசன் முதல் பாமரன் வரை அதை வணங்குகிறார்கள், மதிக்கிறார்கள். அதற்குப் பயப்படுகிறார்கள். சாப்பிடுவதற்கு முன்பு கூட முதலில் அதற்கு எடுத்து வைத்து விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்.”

அதற்கு அடுத்தபடியாக வெனிஸ் நாட்டின் வர்த்தகரான மார்க்கோ போலோ சீனாவுக்குச் சென்று எழுதிய வரலாற்றுக் குறிப்புகளிலும் ஷாமனிஸ முறைகள் பற்றிய வர்ணனைகள் விரிவாக இருக்கின்றன. செங்கிஸ்கானின் இன்னொரு பேரனான குப்ளாய் கான் ஆட்சியின் போது சீனாவுக்குச் சென்ற மார்க்கோ போலோ அங்கு கடுமையாக நோய்வாய்ப்படும் மக்களைக் குணமாக்கும் விதம் பற்றிய வேடிக்கையை இப்படிச் சொல்கிறார்.

கடுமையான நோயால் பாதிக்கப்படுபவர்களை குணமாக்க மேஜிக் நிபுணர்கள் போன்ற ஆட்கள் சிலர் வருகிறார்கள். அவர்கள் நோயின் தன்மைகளை நோயாளிகளிடமிருந்தும், அவர்களுடைய உறவினர்களிடமிருந்தும் விரிவாகப் பெறுகிறார்கள்.   பின் அவர்கள் அங்கேயே ஆடிப்பாடி சுற்றி சுற்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மயங்கி விழும் வரை இந்த ஆட்டம் நடக்கிறது. மயங்கி விழும் நபர் வாயில் நுரை தள்ளி விழுந்து பின் அசைவில்லாமல் பிணம் போலவே கிடக்கும் போது மற்றவர்கள் சூழ்ந்து அமர்ந்து கொண்டு ஏன் அந்த நோயாளிக்கு நோய் வந்திருக்கிறது, அதிலிருந்து தப்பிக்க நோயாளி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் கேட்கிறார்கள். ஏதோவொரு சக்தி அந்த நபர் உடலில் புகுந்து கொண்டு தங்களுக்குச் சொல்லும் என்று நம்புகிறார்கள். அப்படியே அந்த நபரும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு அந்த நோயாளியிடமும், உறவினர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அப்படிச் செய்யும் சடங்குகள் மேல் சக்திகளுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் அமைந்தால் பிழைத்துக் கொள்வார் என்றும், அப்படித் திருப்தி அளிக்கத் தவறினால் இந்த சமயத்தில், இந்த விதத்தில் நோயாளி இறப்பார் என்பதைச் சொல்லி விட்டுப் போகிறார்கள்


லியானல் வேஃபர் (Lionel Wafer) என்ற ஆங்கிலேய மருத்துவர் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தப் பயண அனுபவங்களை
A New Voyage and Description of the Isthmus of America என்ற நூலில் 1699 ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். அதில் இப்போதைய பனாமா நாட்டுப் பகுதியின் அக்கால குணா மக்களைச் சந்தித்த போது ஏற்பட்ட ஷாமனிஸ அனுபவத்தை வியப்போடு விவரித்திருக்கிறார்.

நாங்கள் எங்களது அடுத்த பயணத்திற்காக புதிய கப்பல் அந்தப் பகுதிக்கு எப்போது வரும் என்று அந்த மக்களிடம் கேட்டோம். அவர்களுக்குத் தெரியாது என்றும் விசாரித்துச் சொல்கிறோம் என்றும் சொன்னார்கள். அவர்கள் யாரை விசாரிப்பார்கள், எப்படி விசாரிப்பார்கள் என்று தெரியாமல் விழித்தோம். அவர்கள் ஆளனுப்பி ஒருவனை வரவழைத்துக் கேட்டார்கள். அவன் தன் ஆட்கள் சிலரையும் வரவழைத்தான். பிறகு அவனும் அவர்களும் சேர்ந்து மத்தளங்கள் அடித்தும், கூழாங்கற்களை உரசியும் சில மிருகங்கள் குரலில் ஊளையிட்டும், சில பறவைகள் குரலில் கிரீச்சிட்டும் ஏதோ சடங்குகள் செய்தார்கள். கடைசியில் மயான அமைதி நிலவ அனைத்தையும் நிறுத்தினார்கள். சிறிது நேரம் அமைதியாகவே இருந்தார்கள். பிறகு அறிந்து கொண்டதாகச் சொன்னவர்கள் அன்னியர்களான எங்களை வெளியே அனுப்பி விட்டு அங்குள்ள மக்களிடம் தகவல்கள் சொல்லி விட்டுப் போனார்கள். பின் நாங்கள் அந்த மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர்கள் சொன்ன நேரத்தில் சொன்ன விவரங்களின்படியே ஒரு கப்பல் வந்து சேர்ந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்

உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த துறவி, வரலாற்றூப் புதிவர், பாதிரியார், வணிகர், மருத்துவர் ஆகியோர் நேரடியாகக் கண்டு சொன்ன இந்த ஆச்சரிய சம்பவங்கள் ஷாமனிஸம் குறித்த ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன அல்லவா?

ஷாமனிஸம் குறித்த மேலும் அமானுஷ்ய சுவாரசியங்களை இனி ஆழமாகப் பார்ப்போம்.

(அமானுஷ்யம் தொடரும்)
என்.கணேசன்
 நன்றி – தினத்தந்தி – 4.8.2017