Monday, May 29, 2017

முந்தைய சிந்தனைகள்-15

சிந்திக்க சில விஷயங்கள்-












என்.கணேசன்

Thursday, May 25, 2017

இருவேறு உலகம் – 31


மாஸ்டரிடம் அழைத்துப் போக, கடைசியில் உதயைத் தான் மாணிக்கம் தேர்ந்தெடுத்தார். மணீஷ் க்ரிஷின் குடும்பத்திடம் மாஸ்டரை அறிமுகம் செய்து வைப்பதில் ஒரு அபாயத்தை உணர்ந்தான். மனதில் உள்ளதை அவர் படித்து அவர்கள் திட்டம் பற்றி அறிந்து கொண்டு விட்டிருப்பதால் அதை க்ரிஷ் குடும்பத்தாருக்கு அவர் தெரிவித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவன் மனதில் பலமாக எழுந்தது. அவன் தன் தந்தையிடம் சொன்னான். “அந்த மாஸ்டருக்கு நம்ம மனசுல இருக்கறது எல்லாமே தெரியுது. அப்படி இருக்கறப்ப உதய்க்கு அந்த ஆளை அறிமுகம் செய்து வைக்கிறதுல பின்னாடி பிரச்னை வந்துடாதா?

மாணிக்கத்துக்குத் தன் மகனின் எச்சரிக்கை புரிந்தது. மகனிடம் அமைதியாகச் சொன்னார். “அப்படி ஒருத்தர் ரகசியத்தை இன்னொருத்தரிடம்  சொல்ற  ஆளாய் அவர் நமக்குத் தெரியல. க்ரிஷ் செத்திருந்தா நாம பயப்படக் காரணம் இருக்கு. அவன் உயிரோட இருக்கறான்னு ஆனபிறகு நாம என்ன திட்டம் போட்டோம்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? அப்படி ஒரு வேளை   அவர் சொன்னால் கூட மகானாய் அடையாளம் காட்டின நமக்கு அவரை வில்லனாய் மாத்திட எவ்வளவு நேரம் வேணும்

மருமகனின் சாமர்த்தியமான வார்த்தைகளைக் கேட்டு சங்கரமணி பெருமிதத்துடன் தலையசைத்தார். எதையும் எதுவாகவும் சித்தரிக்க முடிந்த அரசியல் சாணக்கியம் படித்த ஒருவருக்கு முடியாதது தான் என்ன?

மணீஷ் நிம்மதி அடைந்தான். மாணிக்கம் உதயிடம் போனில் பேசினார்.  “உதய் நம்ம நண்பர் காண்ட்ராக்டர் நடராஜ் மூலமா ஒரு மகான் பத்திக் கேள்விப்பட்டு அவரை நாங்க நேர்லயே போய் பார்த்தோம்.... பேர் தெரியலை.... மாஸ்டர்னு கூப்டறாங்க.... மனசுல இருக்கறதை எல்லாம் சொல்லிடறார், ஞான திருஷ்டில எல்லாத்தையும் பார்த்துசொல்றார்னு சொல்றாங்க. டெஸ்ட் பண்ண மணீஷோட தாத்தா மனசுல நீர்மூழ்கிக் கப்பலை நினைச்சு அதையும் அவர் சில வினாடில சொல்லிட்டார்னா பார்த்துக்கோயேன். அவர் கிட்ட க்ரிஷ் பத்திக் கேட்டோம். உயிரோட இருக்கறதா அவரும் சொல்றார். ஆனா அதிகமாய் இன்னும் தெளிவாய் சொல்லணும்னா க்ரிஷோட ரூம்ல இருந்து முயற்சி பண்ணாத் தான் முடியும்னு சொல்றார்....

பெரும் குழப்பத்தில் அது வரை இருந்த உதய்க்கு இத்தகவல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவன் உற்சாகத்துடன் சொன்னான். “அவரைத் தாராளமாய் கூட்டிகிட்டு வாங்க  அங்கிள்......

“இதுல பிரச்னை என்னான்னா அவர் தட்சிணை வாங்கற ரகமோ, வேற எதாவது எதிர்பார்க்கிற ரகமோ அல்ல. யார் வீட்டுக்கும் போகிறதும் அபூர்வம்னு அவரோட அசிஸ்டெண்ட் சொல்றார். அப்படி இருக்கறப்ப உங்க வீட்டுக்கு நாங்க அவரைக் கூப்டறதை அவர் எப்படி எடுத்துக்குவார்ங்கறது தெரியல. உங்க வீட்டுல இருந்து யாராவது போய்க் கூப்பிட்டால் வந்தாலும் வருவார்ங்கற மாதிரி அவரோட அசிஸ்டெண்ட் சொன்னார்....

நான் இப்பவே போகட்டுமா அங்கிள்.... அட்ரஸ் சொல்லுங்க....

“அவர் கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு சொல்றேன் உதய். நானும் மணீஷுமே வந்து உன்னை அவர் கிட்ட கூட்டிகிட்டு போறோம்....

ஓகே அங்கிள். ரொம்ப தேங்க்ஸ்...உதய் ஆத்மார்த்தமாய் சொன்னான்.

பேசி முடித்த மருமகனிடம் சங்கரமணி கேட்டார். “என்ன சொல்றான்?

இப்பவே கிளம்பத் தயாராயிட்டான்....என்றார் மாணிக்கம்.

மணீஷுக்கு இந்த விஷயத்திலும் க்ரிஷ் மீது பொறாமையாக இருந்தது. எப்படிப்பட்ட அண்ணன்! எல்லா விஷயங்களிலும் எப்படி ஒருவனால் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடிகிறது!...


ரித்துவாரிலிருந்து மாஸ்டர் திரும்பி வருவதற்குள் சுரேஷுக்கு மூன்று முறை நடராஜன் போன் செய்து விட்டார்.

சுரேஷ், மாஸ்டர் வந்தாச்சா? எப்ப வர்றாருன்னு தெரியலையா, சரி நாளைக்குப் போன் செய்யறேன்”. 

சுரேஷ், க்ரிஷோட அண்ணனே வந்து கூப்பிடறேன்னு சொல்லிட்டான். நீயும் மாஸ்டருக்குக் கொஞ்சம் சொல்லுப்பா! மாஸ்டர் எப்ப வர்றார்? நாளைக்கா? சரி நாளைக்கு காலைல போன் பண்றேன்

சுரேஷ், மாஸ்டர் வந்தாச்சுல்லியா. நாங்க எப்ப வரட்டும்?


மாஸ்டரிடம் பேசி விட்டு சுரேஷ் “சாயங்காலம் ஏழு மணிக்கு வாங்க சார்என்று சொன்னான்.


மாலை 6.55க்கு மாணிக்கம், மணீஷ், உதய், நடராஜன் நால்வரும் மாஸ்டரைச் சந்திக்க வந்திருந்தார்கள். உதய் குடும்பத்தாருக்கு சங்கரமணியைச் சகித்துக் கொள்ளும் வழக்கம் இல்லாததால் சங்கரமணி அவர்களுடன் வரவில்லை. ஆனால் அவர் மனமெல்லாம் அவர்களுடன் தான் இருந்தது.

அவர்கள் வந்த போது மாஸ்டர் வரவேற்பறையில் சும்மா தான் அமர்ந்திருந்தார். நால்வரும் வணங்கி நின்ற போது கையுயர்த்தி ஆசி வழங்கிய அவர் கண்கள் மட்டும் உதயை ஊடுருவிப் பார்த்தன. மணீஷ் உணர்ந்தது போலவே உதயும் தன் ரகசியங்கள் அனைத்தும் அவரால் அறியப்படுவதாக உணர்ந்தான். ஞானதிருஷ்டி என்றெல்லாம் மாணிக்கம் சொல்லியிருந்தாலும் குறி சொல்வது, ஆருடம் சொல்வது வகையிலேயே இருக்கும் என்று நினைத்திருந்தானே ஒழிய அவன் இப்படியொரு சக்திப் பிரயோகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் மணீஷைப் போல பெரும்பயமோ, ஓடிப் போகும் எண்ணமோ அவனை ஆட்கொள்ளவில்லை. பிரமிப்பிலும் அந்த மனிதரின் வசீகரிப்பிலும் அவன் மெய்மறந்து நின்றான்.

நடராஜன் பயபக்தியுடன் உதயை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “சுவாமி இவர் தான் காணாமல் போன க்ரிஷோட அண்ணா. பேர் உதய்.

கோபக்காரன் ஆனாலும் நல்லவன், பாசமானவன் என்று அவனை அறிய முடிந்திருந்த மாஸ்டர் காந்தப் புன்னகை பூத்தார். உதய் அப்போதும் பேச்சிழந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“தம்பி பத்தின கூடுதல் விவரம் தெரிஞ்சா பரவாயில்லைன்னு உதய் நினைக்கிறான்....என்று சொன்ன மாணிக்கம் உதயை ‘தொடர்ந்து நீ ஏதாவது சொல் என்கிற மாதிரி பார்த்தார்.

தன் இயல்பு நிலைக்குத் திரும்பிய உதய் மாஸ்டரிடம் கவலையுடன் சொன்னான். “அவன் உயிரோட தான் இருக்கான்னு நீங்க சொன்னதா அங்கிள் சொன்னார். அவனும் எங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கான். ஆனா அவன் மொபைல்ல இருந்து எனக்கு வந்த அந்த மெசேஜ் தென்னமெரிக்கால இருந்து வந்திருக்கு. அவனா தென்னமெரிக்கா போயிருக்க வாய்ப்பே இல்லை....  அவன் பாஸ்போர்ட் எல்லாம் வீட்ல தான் இருக்கு.... அதனால ஒரே குழப்பமாய் இருக்கு.... அம்மா அப்பாவுக்கு தென்னமெரிக்கால இருந்து மெசேஜ் வந்திருக்குன்னு தெரியல. அதனால பையன் வந்துடுவான்னு நிம்மதியா இருக்காங்க. ஆனா எனக்கென்னவோ பயமாவும், கவலையாவும் இருக்கு

மற்றவர்களிடமாக இருந்தால் உதய் தன் பயத்தையும், கவலையையும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் தன் மனதை முழுவதுமாகப் பார்க்க முடிந்த ஒரு மனிதரிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பது தான் முறை என்று அவனுக்குத் தோன்றியது.

இஸ்ரோ போன்ற விஞ்ஞான அமைப்பும், தங்கள் இயக்கம் போன்ற மெய்ஞான அமைப்புமே இந்த விஷயத்தில் குழம்பிப் போயிருக்கையில் இந்த இளைஞனின் பயமும், கவலையும் அசாதாரணமானதல்ல என்று எண்ணிய போதிலும் அதைச் சொல்லாமல் மாஸ்டர் ‘புரிகிறதுஎன்பது போல் மெள்ள தலையசைத்தார்.

உதய் பணிவாக அவரை வேண்டினான். “நீங்க க்ரிஷ் ரூம்ல இருந்து தியானம் செஞ்சா அவன் எங்கே இருக்கான்கிற கூடுதல் விவரம் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்னு சொன்னதா அங்கிள் சொன்னார். நீங்க ஒருதடவ எங்க வீட்டுக்கு வந்து அப்படி கண்டுபிடிச்சு சொன்னா எங்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும்....

மாஸ்டர் அவனையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். “நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு வர்றேன்...

பந்தா இல்லாமல் உடனடியாக அவர் ஒப்புக் கொண்டது உதய்க்கு ஆச்சரியத்தையும், ஆறுதலையும் தந்தது. அதே மனநிலையில் மற்றவர்களும் இருந்தார்கள். மாணிக்கம் மனதில் நினைத்துக் கொண்டார். “இவரோட அசிஸ்டெண்ட் காட்டற பந்தா கூட இவர் காட்டலை....

“ரொம்ப நன்றி சுவாமிஎன்று உதய் கைகூப்பியபடி சொன்னான். மாணிக்கம், மணீஷ், நடராஜன் மூவருமே கூட நன்றி பாவனையில் கைகூப்பினார்கள்.

கை உயர்த்தி ஆசி வழங்கி விட்டு மாஸ்டர் எழுந்து தனதறைக்குக் கிளம்பினார். அவர்களும் விடைபெற்றுக் கிளம்பினார்கள். சில அடிகள் போன பிறகு மாஸ்டர் திரும்பி புன்னகையுடன் சொன்னார். “போறப்பவாவது முன்னாடி போற கார்க்காரனைக் கெட்ட வார்த்தைல திட்டாதே. தம்பிக்குத் தெரிஞ்சா திட்டுவான்

நான்கு பேரும் திகைப்புடன் அவரைப் பார்த்தார்கள். வரும் போது முன்னால் போன காரோட்டி தாறுமாறாய் கார் ஓட்டியதைப் பார்த்து ஆத்திரமடைந்து உதய் அந்தக் காரைக் கடக்கையில் அவனைப் பார்த்துக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு வந்திருந்தான்....

மாஸ்டர் புன்னகையுடனேயே தன்னறைக்குப் போய்விட்டார். திகைப்பு தீராமல் நால்வரும் வெளியே வந்தார்கள்.


ங்கர நம்பூதிரி தன் வீட்டு முன்னால் நின்ற விலையுயர்ந்த காரைப் பார்த்து பரபரப்படைந்தார். ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார்களா, இல்லை எதாவது விலாசம் விசாரிக்க வந்திருக்கிறார்களா? சென்ற வாரம் இப்படித்தான் ஒருத்தி ஸ்கூட்டியில் வந்து விலாசம் காட்டி எங்கே இருக்கிறது என்று கேட்டாள்....

கோட்டும் சூட்டுமாய் இறங்கிய மனோகர் வீட்டுக்கு வெளியே நின்று “சங்கர நம்பூதிரி, ஜோதிடர்என்று எழுதியிருந்ததைப் பார்த்து திருப்தி அடைந்து உள்ளே வந்தான். சங்கர நம்பூதிரிக்கு, இது போல் மாதம் பத்து பேர் வந்தால் போதும்,  பிழைப்பு நன்றாய் போகும் என்று தோன்றியது.

“நமஸ்காரம் என்று மனோகர் கைகூப்பினான்.

சங்கர நம்பூதிரியும் எழுந்து நின்று “நமஸ்காரம்என்று கைகூப்பினார்.

“ரெண்டு ஜாதகம் பார்க்கணும்....என்று இரண்டு கம்ப்யூட்டர் ஜாதகங்களை கையிலிருந்த தங்க நிற உறையிலிருந்து மனோகர் எடுத்தான்.

“உட்காருங்கோ”  என்ற சங்கர நம்பூதிரி அவனிடமிருந்து ஜாதகங்களை வாங்கினார்.

அவன் மெல்ல தயக்கத்துடன் சொன்னான்.  ஆனா இந்த ஜாதகங்களை உங்கப்பா சதாசிவ நம்பூதிரி தான் பார்க்கணும்னு என் முதலாளி உத்தரவு

சங்கர நம்பூதிரி ஓங்கி அறையப்பட்டது போல் உணர்ந்தார். தொழிலுக்கு வந்ததில் இருந்தே அனுபவித்து வந்த அவமானம் சரியாக எட்டு வருடங்களுக்கு முன் முடிந்து விட்டது என்று நினைத்திருந்தார். ஆனால் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.

“அப்பா ஜாதகம் பார்க்கறதை எட்டு வருஷத்துக்கு முன்னாடியே நிறுத்திட்டார்என்று சொன்னவர் அந்த ஜாதகங்களை திரும்ப நீட்டினார்.

                                                                                                                                                                    
(தொடரும்)


என்.கணேசன்

Monday, May 22, 2017

மரணத்தில் இருந்தும் காப்பாற்றும் வூடூ!


த்தனை தான் மோசமான உடல்நிலையில் ஒரு மனிதன் இருந்தால் கூட, நவீன மருத்துவத்தினால் கைவிடப்பட்ட நிலையில் இருந்தால் கூட, அவனைக் காப்பாற்ற வூடூ சடங்குகளில் பாண்டித்தியம் பெற்ற ஒருவருக்கு முடியும் என்று வூடூ மக்கள் உறுதியாக நம்பினார்கள். வூடூ ஆவிகளும், சக்திகளும் உதவி செய்தால் மெள்ள மெள்ள ஒருவனை மரணத்திலிருந்து இழுத்து தப்பித்து வைத்து விடமுடியும் என்று நினைத்தார்கள். வூடூ ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெரால்டு முர்ரே (Dr.Gerald Murray) வூடூ சடங்குகளில் ஆவிகளை வரவழைப்பதன் முக்கிய நோக்கம் நோய்களைத் தீர்ப்பதாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறது என்று தெரிவிக்கிறார்.

பழங்கால வூடூ மக்களுக்கு இயற்கையாகவே நோய் தீர்க்கும் மூலிகைச் செடிகள் குறித்த ஞானம் சிறப்பாக இருந்ததுடன் அவர்கள் வூடூ முறைப்படி நோய்கள் தீர்க்கும் வழிகளையும் அறிந்திருந்தனர். இந்த இரண்டையும் வைத்து தான் பல வெள்ளை நிற மக்களுக்கு உதவி செய்து அவர்கள் நட்பை வூடூ மக்கள் சம்பாதிக்கவும், பிற்காலத்தில் சமாதானமாக அவர்களுடன் சேர்ந்து வாழவும் முடிந்தது.    

கூடுதலாக, நோய்களில் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியான நோய்களையும் வூடூ முறைப்படி குணப்படுத்தினார்கள். 2010 ஆம் ஆண்டில் ஹைத்தியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 15 லட்சம் பேர் வீடிழந்தார்கள். அதில் கணிசமான பகுதியினர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் அமெரிக்காவில் ப்ரூக்ளின் (Brooklyn) பகுதியில் தங்கள் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சக மக்களின் நலனுக்காக தொடர்ந்து வூடூ சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றை நடத்தினார்கள்.  இரண்டு வாரங்கள் கழித்து ஹைத்தி சென்ற ரெஜின் ரோமைன் (Regine Romain) என்ற ப்ரூக்ளினைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அத்தனை அழிவிற்கு மத்தியிலும் எத்தனையோ அற்புதங்கள் ஹைத்தியில் நடந்திருக்கின்றன, பல பேர் நம்ப முடியாத சூழ்நிலையிலும் பிழைத்திருக்கிறார்கள் என்பதைப் படங்களுடன் பதிவு செய்திருக்கிறார். அதற்கெல்லாம் வூடூ சடங்குகள், வழிபாடுகள் தான் காரணம் என்று நம்புவதாகச் சொல்லி இருக்கிறார்.

வூடூ ரகசியங்கள் (Secrets of Voodoo) என்ற பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட  நூலில் மிலோ ரிகாட் (Milo Rigaud) என்ற ஆராய்ச்சியாளர் ஒரு மிக சுவாரசியமான குணப்படுத்தும் சம்பவத்தை விவரித்திருக்கிறார். நாம் அதைப் பார்ப்போமா?

முப்பது வயதுக்கும் கீழே உள்ள ஒரு பணக்காரக் குடியானவன் கட்டுமஸ்தான உடற்கட்டும் நல்ல ஆரோக்கியமும் கொண்டிருந்தான். திடீரென்று அவன் நோய்வாய்ப்பட்டான். அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை. மிகவும் பலவீனமாக ஆரம்பித்தான். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி, சாதாரண மருத்துவமும் அவனைக் குணப்படுத்த  முடியாமல் போகவே அவன் வீட்டார்கள் வூடூ சடங்குகள், குறி சொல்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்டார்கள். அவர் மூங்கில் மரப்பட்டையாலான தட்டைக்கூடையில் சில சீட்டுக்கள் போட்டுப் பார்த்து விட்டு இறந்தவர் ஆவி அந்த ஆளின் மேல் ஏவி விடப்பட்டிருக்கிறது என்றும் அவன் இப்போது மயான தேவதையான பேரன் சமேடியிடம் அனுப்பப்பட்டிருக்கிறான் என்றும் ஏதாவது விரைந்து செய்யா விட்டால் மரணம் நிச்சயம் என்றும் சொல்லி விட்டார்.

வீட்டார் உடனே அச்சமயத்தில் வூடூ சடங்குகளின் தலைவியாக கருதப்பட்ட மிராசியாவிடம் சென்று நோய்வாய்ப்பட்டிருந்த தங்கள் வீட்டு இளைஞனைக் காப்பாற்றித்தர முடியுமா என்று கேட்டனர். மிராசியாவும் மூங்கில் மரப்பட்டையாலான தட்டைக்கூடையில் நத்தையோடுகளைப் போட்டுக் குறி பார்த்து விட்டு, ஏவி விடப்பட்டிருப்பது ஒரு ஆவி அல்ல மூன்று ஆவிகள் என்று தெரிவித்தார். பேரன் சமேடி வரை சென்ற ஒருவனது உயிரைக் காப்பாற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதால் தன்னுடன் வூடூ சடங்குகளில் பங்கு கொள்ளும் இன்னொரு அனுபவஸ்தர் ஒருவரிடமும் கலந்தாலோசித்து விட்டு கடைசியில் ஒப்புக் கொண்டார்.  

அன்று இரவே நோய்வாய்ப்பட்ட இளைஞனை அவன் வீட்டார் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பதினைந்து நாட்களுக்கும் மேல் சாப்பிடாமல் மிகவும் பலவீனமாய் இருந்த அந்த இளைஞனால் நடக்கும் முடியவில்லை. பேசவும் முடியவில்லை. வூடூ சடங்கு நடக்கும் இடத்தில் வெளிப்புறம் இருந்த மரக்கம்பத்திற்கு அருகே ஒரு பாயைப் போட்டு அவனைப் படுக்க வைத்து விட்டு விலகிக் கொண்டார்கள்.

சடங்கு நடக்கும் இடத்தில் மையப்பகுதியில் அவர்கள் வணங்கும் தேவதைக்கான சின்னம் வரையப்பட்டிருந்தது. அதன் முன் ஒரு பாடை வைக்கப்பட்டிருந்தது. அது அந்த இளைஞனின் அளவின்படியே தயாரிக்கப்பட்டதாக இருந்தது. பாடையின் மேல் இரண்டு பழைய சிறிய பாய்களைப் போட்டு அதன் மேல் சாம்பலைப் பரப்பி அதில் சிலுவையை மிராசியா வரைந்தார்.

அதன் அருகே வைக்கப்பட்டிருந்த மேசையில் சோளம் மற்றும் வறுத்த வேர்க்கடலையால் செய்யப்பட்ட மூன்று உருண்டைகள் தயாரித்து வைத்தார்கள். ஒரு உருண்டையின் நடுவே சிறிய வெள்ளை மெழுகுவர்த்தியும், இரண்டாவது உருண்டைக்கு நடுவே சிறிய மஞ்சள் மெழுகுவர்த்தியும், மூன்றாவது உருண்டைக்கு நடுவே சிறிய கருப்பு மெழுகுவர்த்தியும் வைக்கப்பட்டன. அதனருகே இருபாட்டில்களில் வரவழைத்து வழிபடும் தேவதைக்கு விருப்பமான பானமும், சோமபானம் போன்ற பானமும் வைக்கப்பட்டன. மேசையின் அடியே கோமூத்திரமும், மற்ற சில பொருள்களும் சேர்ந்த கரைசல் வைக்கப்பட்டிருந்தது.

இத்தனை தயாரான பிறகு மிராசியா நோயாளியைத் தூக்கி வரச் சொன்னார். தூக்கி வருபவர்கள் தங்கள் உடைகளைக் கழற்றித் திருப்பிப் போட்டுக் கொண்ட பின்னர் அவனைத் தூக்கினார்கள். இப்போது அவன் உடலில் குடியேறி இருந்த ஆவிகளில் ஒன்று சந்தேகம் கொண்டு சத்தமாக அவன் வாயால் பேசியது. “நீங்கள் என்ன செய்தாலும் சரி நான் இந்த உடலை விட்டுப் போக மாட்டேன். என் பலம் கூடிக் கொண்டே தான் செல்லும்.”  உள்ளே மிராசியாவுடன் இருந்த இரு உதவியாளர்கள் “பார்க்கலாம் யார் பலசாலி என்றுஎனச் சொன்னார்கள். பின் அந்த ஆவிகள் புரியாதபடி ஏதோ முணுமுணுத்தபடி இருந்தன.

நோயாளியைப் பாடையில் கிடத்தினார்கள். இடுப்புத்துணியைத் தவிர மற்ற உடைகள் கழற்றப்பட்டன. தலைக்குக் கீழே ஒரு கல்லை வைத்தார்கள். உடனே ஆவிகளின் முணுமுணுப்பு நின்றது.  நோயாளி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பாதி கண்கள் மூடி பாதி விழித்திருக்க வெறித்த பார்வை மட்டுமே தெரிந்தது. பிணத்திற்குக் கட்டுவது போலவே தலையை முகவாய்ப்பட்டைக்குச் சேர்த்து வெள்ளைத் துணியால் கட்டினார்கள். கால்களின் இரு கட்டைவிரல்களும் அதே போல் சேர்த்துக் கட்டப்பட்டன. பெருக்கல் குறி போல சாம்பலால் நோயாளியின் உடலில் போட்டார்கள்.

மூன்று உருண்டைகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் பற்ற வைக்கப்பட்டு இரண்டு மெழுகுவர்த்திகள் இரண்டு தோள்களிலும் மூன்றாவது மெழுகுவர்த்தி காலுக்குக் கீழேயும் வைக்கப்பட்டன. பின் சில ஊதுபத்திகள், சில விதைகள் எரிக்கப்பட்டு புகை மண்டலம் அங்கு பரவ வைக்கப்பட்டது.

பின் மிராசியா பரமபிதா, யேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி, மற்றும் புனித ஞானிகளை வணங்கி விட்டு சடங்கை ஆரம்பிக்கிறார். சோளம், வேர்க்கடலை கலந்த கலவை உருண்டைகளையும், ரொட்டி, பச்சை வாழைப்பழம் சேர்த்த உணவையும் நோயாளியின் வயிறு, மார்பு, உள்ளங்கைகள், நெற்றி ஆகிய இடங்களில் வைக்கிறார். பின் சில மந்திரங்களை உச்சரித்தபடியே இரண்டு கோழிகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு சேவலைப் பிடித்துக் கொண்டு அவற்றை  நோயாளியின் உடலில் வைத்து அந்த உருண்டைகளையும், உணவையும் சாப்பிட வைக்கிறார். தீய சக்திகள் உடலை விட்டு விலகட்டும், நல்ல சக்திகள் உடலில் நுழையட்டும்என்று சொல்லிக் கொண்டே அவற்றை நோயாளியின் உடல் மேல் மேலும் கீழுமாக ஆட்டுகிறார்.

இந்த நேரத்தில் நோயாளி மிகுந்த பலத்துடன் எழ முயற்சிப்பதும் மிராசியா தடுத்து அவனை மறுபடி படுக்க வைப்பதும் நடக்கிறது. பின் மிராசியா கோழிகளை அங்கேயே நிலத்தில் விட்டு சேவலை வெளியே விட்டு விடுகிறார். பின் “இறைவனின் அனுமதியுடன் இவன் விடுதலையாக வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். பின் பாட்டில்களில் இருந்த திரவங்கள் நோயாளியின் உடம்பிலும் நான்கு பக்கங்களிலும் தெளிக்கப்படுகிறது. பின் மந்திரங்களை ஜெபித்தபடியே மேசையின் அடியில் வைத்திருந்த கோமூத்திரக் கரைசலை மிராசியா கையில் எடுத்து வேகமாக நோயாளியின் உடலில் விசிறியடித்து விட்டு போட்டிருக்கும் கட்டுகளைத் தளர்த்தி விட்டு ஆவிகளை உடலில் இருந்து போக  உறுதியான குரலில் கட்டளையிடுகிறார்.  பின் நோயாளியின் வாயைத் திறக்க வைத்து ஒரு வெள்ளைப்பூண்டு பருப்பை உள்ளே வைத்து நிறுத்துகிறார். பின் பேரன் சமேடியிடம் இவனுடைய உயிருக்குப் பதிலாக இந்த உயிர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று வேண்டியபடியே இரண்டு கோழிகளையும் ஒரு வாழைமரத்தின் முன்னே தோண்டிய குழியில் உயிரோடு புதைத்து விடுகிறார். வாழை மரத்தின் மூன்று பகுதிகளில் முக்கோண நிலையில் மூன்று விளக்குகள் வைக்கப்படுகின்றன.

சிறிது நேரத்தில் ஆவிகள் விலகி முழுமையான பலம் பெற்றவனாக எழுந்து அமர்ந்த நோயாளி குளிக்க வைக்கப்பட்டு தேநீர் குடித்து காய்கறிகளால் சமைக்கப்பட்ட உணவையும் சாப்பிட்டு பழைய நிலைக்குத் திரும்பியது தான் வியப்பிலும் வியப்பு.

ஆனால் இது போன்ற அற்புதங்கள் இறைவன் அனுமதி இருந்தால் மட்டுமே நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை வூடூ மக்களிடம் இருந்தது.

  
-          என்.கணேசன்
நன்றி – தினத்தந்தி 18.04.2017


Thursday, May 18, 2017

இருவேறு உலகம் – 30



நாகர்கோவிலில் இருந்து க்ரிஷின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை மனோகர் சொன்னதைக் கேட்ட பின் புதுடெல்லி உயரதிகாரியைச் சந்தித்த மர்ம மனிதன் வேறெந்த வேலையையும் பார்க்கவில்லை. கம்ப்யூட்டரில் உடனடியாகக் க்ரிஷின் ஜாதகம் கணித்து அதில் மூழ்கிப் போனவன் நேரம், காலம் மறந்து போனான். பல கணக்குகள் போட்டு கிரகங்களின் இருப்பு நிலை, சேர்க்கை நிலை, டிகிரிகள், பார்வைகள், நவாம்சம், பாவ நிலை என்று எல்லாவற்றையும் துல்லியமாகக் கணக்கிட்டு பலன்களை அறிந்து கொள்ளும் வரை அவன் ஓய்வு எடுக்கவில்லை.

அவனுடைய சக்திகள் எல்லையற்றவை என்றாலும் எதிர்காலம் என்பது அவனுக்கே கூட எட்டிய விஷயமல்ல. ஜோதிட சாஸ்திரத்தில் பெரும் வல்லமை கொண்ட அவன் எதிர்காலம் குறித்து அறிய அதன் உதவியை நாடினான். க்ரிஷின் விதியோடு அவன் விதியும் பிணைந்துள்ளதால் க்ரிஷின் விதி பற்றி அறிவதில் ஆர்வம் காட்டிய அவன் அறிய முடிந்த அனைத்தையும் அறிந்த பின்னும் முழுத்திருப்தியடையவில்லை.  

நீண்ட நேரம் யோசித்த பின் அந்த மர்ம மனிதன் மனோகருக்குப் போன் செய்து கேட்டான். “ஜோதிடத்தை மேலோட்டமாக அல்லாமல் ஆழமாய் தெரிந்திருக்கும் ஜோதிடர் யாராவது உனக்குத் தெரியுமா?

இதை வேறு யாராவது கேட்டிருந்தால் மனோகர் அந்த மர்ம மனிதன் பெயரையே சுலபமாகச் சொல்லி இருப்பான். ஏனென்றால் அந்த மர்ம மனிதனே மிகச்சிறந்த ஜோதிடன் என்பதை மனோகர் அறிவான். இந்த நேரத்தில் அந்த மர்ம மனிதன் தனக்கு இணையான அல்லது தன்னை மிஞ்சிய இன்னொரு ஜோதிடரைக் கேட்கிறான் என்பது புரிந்து சிறிது யோசித்து விட்டு மனோகர் சொன்னான்.

திருவனந்தபுரத்தில் சதாசிவ நம்பூதிரின்னு ஒருத்தர் இருக்கார். எண்பது வயசிருக்கும். அவர் ஜோதிடத்தில் மட்டுமல்ல, ஆருடத்திலும், பிரஸ்ணத்திலும் கூட டாப். ஆனா அவர் இப்ப பார்க்கறதில்லை


“ஏன்?

“அவர் மகன் சங்கர நம்பூதிரியும் ஜோதிடர். அவரை யாரும் பெருசா கண்டுக்கறதில்லை. எல்லாரும் அப்பா கிட்ட தான் போறாங்கன்னு மனக்குறை அவருக்கு உண்டு. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் ஊரை விட்டே போகக்கூட அவர் முடிவு செய்துட்டார். அது தெரிஞ்ச சதாசிவ நம்பூதிரி தொழில்ல இருந்து விலகிட்டார். இந்த ஏழெட்டு வருஷமா ஜாதகமோ, ஆருடமோ பார்க்கறதில்லை.


அந்தச் செய்தி அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அடுத்தவர் தீர்மானங்களை அவன் பொருட்படுத்துவதில்லை. தன் தீர்மானத்தை அவன் சொன்னான். “சதாசிவ நம்பூதிரி கிட்ட ரெண்டு ஜாதகம் காண்பிக்கணும். அவரோட கருத்தையும் கேட்கணும்.....


காண்பிக்க நினைத்த இரண்டு ஜாதகங்களில் ஒன்று க்ரிஷின் ஜாதகம் என்பதை மனோகர் யூகித்தான். ஆனால் இன்னொன்று யாருடையது என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது.



ந்த லூசு மாஸ்டர் ரிஷிகேசத்திலிருந்து வந்துட்டாரா இல்லையா என்று நடராஜன் உள்ளே நுழைந்தவுடனேயே சங்கரமணி கேட்டார்.

நடராஜன் உடனே ஒரு பதிலும் சொல்லாமல் மாணிக்கத்தையும், மணீஷையும் இந்த ஆளை எல்லாம் நீங்கள் எப்படித் தான் சமாளிக்கிறீர்களோ என்பது போல் ஒரு பார்வை பார்த்தபடி உட்கார்ந்தார். பின் சங்கரமணியிடம் சொன்னார். பெரிய ஐயா, அந்த மகானுக்கு நீங்க சொல்றதெல்லாம் ஞான திருஷ்டியில தெரியும். எதுக்கும் ஜாக்கிரதையாய் இருந்துக்குங்க, சொல்லிட்டேன்”.

சங்கரமணிக்கு கொஞ்சம் பயம் கலந்த ஆர்வம் வந்து போனது. தெரிந்தால் என்ன தான் செய்வார் அவர்?’. பின் எழுந்த சந்தேகத்தை மெல்லக் கேட்டார். தூரத்துல இருந்தாலும் அவருக்குத் தெரியுமா என்ன?

நீங்க எருக்கம்பூவையும் நாகலிங்கப்பூவையும் நினைச்சு அதை ஒரு ஜோசியக்காரன் சொல்லாமப் போனதை  அவர் பக்கத்துல இருந்து பார்த்தா சொன்னார்?

முதல்லயே நேரம் சரியில்லை. இனி அந்த ஆளையும் பகைச்சுட்டு நிலைமைய மோசமாக்க வேண்டாம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட சங்கரமணி நடராஜனிடம் சொன்னார். சரி உன்னோட மகானைப் பத்தி நான் ஒன்னும் சொல்லலை. அவர் ரிஷிகேசத்துல இருந்து வந்துட்டாரா?

அவர் நாளைக்குத் தான் வர்றாராம். க்ரிஷ் விஷயத்துல அதிகமா தெரிஞ்சுக்க அவன் வீட்டுக்குப் போனால் தான் முடியும்னு சொன்னாரே அங்கே கூப்பிட்டா அவர் வருவாரான்னு அவரோட அசிஸ்டெண்ட் கிட்ட கேட்டேன். அவர் வெளியிடங்களுக்கு அப்படி போக மாட்டாரேன்னு சொல்றான்...

அந்த தாடிக்காரனை தனியா கவனிச்சுகிட்டா அவன் ஏற்பாடு செய்ய மாட்டானா? சங்கரமணி தன் வழியில் சிந்தித்துக் கேட்டார்.

அவனும் அப்படிப்பட்ட ஆசாமியா தெரியல. ஆனா வற்புறுத்திக் கேட்ட பிறகு எதுக்கும் நீங்க க்ரிஷ் வீட்டு ஆள் யாரையாவது கூட்டிகிட்டு வந்து கேட்டுப் பாருங்கன்னு சொல்றான்....

சங்கரமணி மருமகனைப் பார்த்தார். மாணிக்கம்  யோசித்து விட்டு மெல்லச் சொன்னார். கண்ணனையோ உதயையோ கூட்டிகிட்டு போய் கேட்கலாம்....

அப்பவாவது ஆள் வருவாரா? வந்தாலும் முழுசுமா தெரிஞ்சு சொல்ற வரைக்குமாவது இருப்பாரா? சங்கரமணி சந்தேகத்தை எழுப்பினார்.

நடராஜன் சொன்னார். அது நம்ம அதிர்ஷ்டத்தைப் பொருத்தது



மாஸ்டர் ஹரித்வாரை அடைந்த போது  இரவாகி விட்டிருந்தது. குளிர் கடுமையாக இருந்ததால் வீதிகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லை.  அவர் ஜீப் ஹரித்வாரின் மிகப் பழமையான வீடு ஒன்றின் முன் நின்றது. ஜீப் நின்ற சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஒரு திடகாத்திரமான மனிதர் வெளியே வந்தார். பார்க்க சுமார் முப்பது வயது போல் தோன்றினாலும் உண்மையில் நாற்பத்தைந்து வயதைக் கடந்த அந்த மனிதர் ஒரு ஹத யோகி. அவர்கள் இயக்கத்தில் மாஸ்டருக்கு அடுத்த அதிகார நிலையில் இருப்பவர். பெயர் விஸ்வம். அவர் கணக்கில் புலி. பல இலக்க எண்களைத் துல்லியமாக மனதிலேயே பெருக்கவும், கூட்டவும், கழிக்கவும், வகுக்கவும் முடிந்தவர். இயக்கத்தின் நிதி அவர் பொறுப்பில் இருந்தது. எப்போது கணக்கு கேட்டாலும் அவர் கம்ப்யூட்டரையோ, லெட்ஜர்களையோ புரட்டிப் பார்த்து பதில் சொன்னதாக மாஸ்டருக்கு நினைவில்லை. சில வினாடிகள் யோசித்து விட்டுப் பதில் சொல்வார். மாஸ்டரும் குருவும் தான் அந்த ஆவணங்களைப் பார்த்து கணக்கைச் சரிபார்ப்பார்கள். அவர் சொன்னதற்கும், ஆவணங்களில் இருப்பதற்கும் ஒரு தடவையும் ஒரு பைசா கூட வித்தியாசம் இருந்ததில்லை.   

இத்தனை திறமை இருக்கிற மனிதர் முயன்றால் ஆழ்மன சக்திகளிலும் அற்புதங்கள் புரிய முடியும் என்பது மாஸ்டரின் அபிப்பிராயமாக இருந்தது. ஆனால் உடலையும், கணிதத்திறமையையும் வளர்த்திக் கொண்ட அளவுக்கு அந்தச் சக்திகளை வளர்த்துக் கொள்ள விஸ்வம் ஆர்வம் காட்டியதில்லை.   

மாஸ்டரைப் பார்த்ததும் விஸ்வம் வியப்பில் ஆழ்ந்தது தெரிந்தது. என்ன மாஸ்டர் திடீர் விஜயம்....?

வெளியே புன்னகையை மட்டும் பதிலாகத் தந்த மாஸ்டர் உள்ளே போன பிறகு சொன்னார். நம் குரு இறைவனடி சேர்ந்து விட்டார்.

தன் காதில் விழுந்த செய்தியை விஸ்வம் நம்பாதது போல் விஸ்வம் மாஸ்டரைப் பார்த்தார். பின் திகைப்புடன் சொன்னார். நான் போன வாரம் தானே அவரைப் பார்த்தேன். அப்போது அவர் நல்லா தானே இருந்தார்.

மனித வாழ்க்கையில் போன வாரம்கிறது மிக நீண்ட காலம். போன வினாடி கூட பழைய கதை தான்.... என்று வறண்ட குரலில் மாஸ்டர் சொன்னார்.

வீட்டின் உள்ளே நாற்காலிகள் எதுவும் இருக்கவில்லை. மரப்பலகைகளே இருந்தன. சுவரோரம் சாய்த்து வைத்திருந்த  மரப்பலகைகளில் இரண்டை எடுத்துப் போட்டு மாஸ்டர் ஒரு பலகையில் அமர்ந்த பிறகு தானும் ஒரு பலகையில் அமர்ந்தபடி விஸ்வம் பதற்றத்துடன் கேட்டார்.  ”என்ன ஆச்சு?

மாஸ்டர் சொன்னார். சிறிது நேரம் பேச வார்த்தைகள் வராமல் விஸ்வம் தவிப்பது தெரிந்தது. பின் மெல்ல வருத்தம் கலந்த குரலில் சொன்னார். சென்னைல இருந்து தெரிஞ்சுட்டு நீங்க வந்து அவரோட அந்திமக் கிரியை எல்லாம் முடிச்சிட்டு வந்திருக்கீங்க. முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் நானிருக்கேன். எனக்குத் தெரியவே இல்லை....

மாஸ்டர் பார்வையாலேயே விஸ்வத்திற்கு ஆறுதல் சொன்னார். விஸ்வம் மாஸ்டரிடம் கேட்டார். இதையெல்லாம் செய்தது யாருன்னு உங்க சக்தியால கண்டுபிடிக்க முடியலையா மாஸ்டர்?

எதிர் சக்தி பல மடங்கு அதிகமாய் இருக்கு விஸ்வம். அலைத் தடயங்களை அழிப்பதெல்லாம் சக்தியின் உச்சநிலை..... அந்த அளவு சக்தியை நாம் இன்னும் எட்டவில்லை...

உங்களால் முடியாதது எதுவுமில்லை என்று குரு சொல்வார்

மாஸ்டர் ஒன்றும் சொல்லவில்லை. குருவைப் பொருத்தவரை அவருடைய பிரிய சிஷ்யனால் முடியாதது எதுவுமில்லை..... அதை எல்லோரிடமும் எப்போதும் சொல்வார். அந்தப் பிரிய சிஷ்யனோ கையாலாகதவராய் இப்போது அமர்ந்திருக்கிறார். குருவின் சிதை அக்னி இப்போது அவரைச் சுட்டது.

இப்போதைய சந்தேகம் இஸ்ரோ மூலமாய் நமக்குத் தெரிய வந்த சக்தி மேல் தானா மாஸ்டர்...? விஸ்வம் கேட்டார்.

மாஸ்டர் தலையசைத்தார். ஆனா நிரூபணம் ஆகிற வரை உறுதியாய் சொல்லிட முடியாது.

குரு மாதிரி க்ரிஷும் இறந்துட்டானா மாஸ்டர்?

சாகலை

விஸ்வம் மாஸ்டரைப் பார்த்த பார்வையில் குழப்பம் தெரிந்தது. அவன் இப்ப எங்கே இருக்கான் மாஸ்டர்?

தென்னமெரிக்கா பக்கத்துல எங்கேயோ இருக்கான். அவனை இருட்டு சூழ்ந்துட்டிருக்கு. தெளிவாய் தெரியலை. ஆனா ஆபத்தான கட்டத்துல தான் இருக்கறதா தெரியுது....   

என்ன ஆகும் மாஸ்டர்?

இப்போதைக்கு அவன் சாக மாட்டான்னு தோணுது

எப்படிச் சொல்றீங்க மாஸ்டர்?

மாஸ்டர்  பழைய நினைவுகளில் ஆழ்ந்தவராகச் சொன்னார். போன வருஷம் ஜீவ சமாதியடைஞ்ச நம் பரஞ்சோதி முனிவர் சமாதியடையறதுக்கு முன்னால் தவநிலையில் உணர்ந்து நம்மை அப்போதே எச்சரித்திருந்தார். அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது. அவர் சொன்ன படியே நாம் அந்த அன்னிய சக்தியை உணர ஆரம்பித்திருக்கிறோம். க்ரிஷும் அவர் சொன்ன அடையாளத்திற்கு ஒத்துப் போகிறான்....

இனி நம்ம அடுத்த நடவடிக்கை என்ன மாஸ்டர்?

மாஸ்டர் ஒரே வார்த்தையில் சொன்னார். ஆபரேஷன் க்ரிஷ்!

(தொடரும்)
என்.கணேசன்



Monday, May 15, 2017

துஷ்ட சக்திகளும் வூடூவும்!


அமானுஷ்ய ஆன்மிகம்-6  

வூடூவில் பிற்காலத்தில் கருப்பு மேஜிக், வெள்ளை மேஜிக் என்ற பிரிவுகள் பேசப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் அப்படிப் பிரிவுகள் இருக்கவில்லை. பிற்காலத்தில் நன்மைகள் செய்யும் வூடு வெள்ளை மேஜிக் என்றும் அடுத்தவருக்குத் தீமைகள் ஏற்படுத்தச் செய்யும் வூடூ கருப்பு மேஜிக் என்றும் அழைக்கப்பட்டது. அதோடு சிவப்பு மேஜிக் என்ற பிரிவும் பேசப்பட்டது. வூடூ சடங்கின் மூலம் துஷ்டசக்திகள் ஒரு உடலில் வரவழைக்கப்பட்டால் எந்த மனிதனின் உடலில் துஷ்டசக்தி உள்ளே நுழைகின்றதோ அந்த மனிதனின் கண்கள் வூடூ சடங்கின் உச்சக்கட்டத்தில் சிவப்பாகி விடும்.  அதனால் அதை சிவப்பு மேஜிக் என்றழைத்தார்கள்.

ஆன்மிகம் கோலோச்சிய ஆரம்ப கால வூடூவில் துஷ்டசக்திகளை அடுத்தவர் மீது ஏவி விடுவது அபூர்வமாகவே நிகழ்த்தப்பட்டது என்றாலும் பிற்காலத்தில் அது அதிகமாகி பிரதான இடம் வகிக்க ஆரம்பித்தது. துஷ்டசக்திகளை அடுத்தவர் மீது ஏவி விடுவதன் விளைவுகளை ஆரம்பக் கட்டம், முதிர்ந்த கட்டம், அபாயக் கட்டம் மூன்று நிலைகளில் சொல்கிறார்கள்.

துஷ்டசக்தி ஏவி விடப்பட்டால் ஆரம்பக் கட்டத்தில் தூக்கமின்மை, கடும் களைப்பு, பயம், காரணமில்லாமல் எரிச்சல், கோபம், இரவில் தொண்டை வறண்டு போதல் ஆகியவை ஏற்படும் என்கிறார்கள்.    

முதிர்ந்த கட்டத்தில் இறந்த உடல்களையும், கோரமான மனிதர்கள் கொல்ல வருவதையும் கனவில் காணுதல், பாம்புகளையும், தேள்களையும், பெரிய சிலந்திகளையும் கனவில் காணுதல், கனவில் மிகுந்த உயரங்களில் இருந்து வீழ்வதாகக் காணுதல், பயத்தில் விழித்தல், விழித்த பின் மூச்சுத் திணறலை உணர்தல், வயிறு வீங்குதல், இடைவிடாத தலைவலி, உடல் கருத்தல், உடலில் அங்கங்கே சொறிதலையும் வலியையும் உணர்தல் போன்ற அறிகுறிகள் தெரியும் என்கிறார்கள்.

அபாயக்கட்டம் என்று சொல்லப்படும் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் கட்டத்தில் கேன்சர், கிட்னி பழுதாதல், மாரடைப்பு, அதீதமாய் மதுவுக்கு அடிமையாதல், தற்கொலைக்கு முயற்சி செய்தல், மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கு உட்படுதல் ஆகியவற்றைச் சொல்கிறார்கள்.

இந்த மூன்று நிலை அறிகுறிகளும் சாதாரணமாக எங்கும் காணப்படும் நிலைகள் தான் என்பதால் இயல்பாக ஒருவருக்கு வரும் இந்த பிரச்னைகள் கூட வூடூவினால் ஏவி விடப்பட்டதாகக் கருதப்படும் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். எனவே இயல்பான உடல்நலக்குறைவினால் ஏற்படும் நிலையா, இல்லை கருப்பு மேஜிக் என்று சொல்லப்படும் வூடூ துஷ்டசக்திகளின் ஏவலால் ஏற்படும் நிலையா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

இயற்கையாய் உடல் கோளாறுகளால் வந்த உபாதைகள் பொதுவாக மருத்துவர்களால் சரியாக கணிக்கப்பட்டு குணப்படுத்தவும் முடிந்தவையாக இருக்கும். ஆனால் துஷ்ட சக்திகளின் ஏவலினால் ஏற்படும் உபாதைகள் மருத்துவர்களால் சரியாகக் கணிக்கவோ, குணப்படுத்தவோ முடியாதவையாக இருக்கும். அப்படி குணப்படுத்தினாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். திரும்பவும் அந்தப் பிரச்னை தொடரும். மேலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் நெருங்குகையில் அந்த உபாதைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் துஷ்ட சக்திகளின் ஏவலினால் ஒருவர் கஷ்டப்படும் போது இறைவனைத் தியானிப்பதற்கும் பிரார்த்திப்பதற்கும் கூட மனம் இசையாது.  இறை தியானம் முழுமையாக இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் இருக்க முடியாது என்பதையும் வூடூ நம்புகிறது. 
  
ஏவி விடப்பட்ட துஷ்டசக்தி மிகவும் வலிமையானதாக இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட வித்தியாச அனுபவங்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
·         உறங்க ஆரம்பித்தவுடன் தீடீரென்று பயத்தில் உலுக்கி விட்டதைப் போல் அதிர்ந்து விழித்துக் கொள்வது.
·         கருப்பு அல்லது சாம்பல் புகையை கண்முன்னால் காண்பது.
·         உடல் நிறம் கருக்க ஆரம்பிப்பது.
·         உடலின் பல இடங்களில் பயங்கரமான வலியை உணர்வது.
·         நாக்கில் திடீர் வலியை உணர்வது அல்லது நாக்கில் புண் ஏற்பட்டு தூக்கத்தில் வலி தாங்காமல் விழித்துக் கொள்வது.
·         தீயில் கை வைத்தது போல் உள்ளங்கையில் எரிச்சலை உணர்வது.
·         உடலில் அங்கங்கே வீங்குவது.
·         உடலில் எறும்புகள் ஊர்வது போலவோ, உடல் பாகங்களில் லேசான அதிர்வுகளையோ உணர்வது.
·         வீட்டுக்குள் பலவித பூச்சிகளின் ஆதிக்கம் ஏற்படுவது. அவை பெருகிய வண்ணம் இருப்பது.
இது போன்ற அனுபவங்கள் தொடருமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு நவீன மருத்துவத்தில் எதையும் தீர்மானமாகக் கண்டுபிடிக்க முடியாது. நவீன மருந்துகளும் எந்த வகையிலும் உதவாது. கூடிய சீக்கிரமே படுத்த படுக்கையாகி மரணத்தையும் அந்த நபர் சந்திக்க நேரிடும்.

இப்படி மரணத்தையும் வரவழைக்கும் அளவு வலிமையான ஒருவர் மீது துஷ்டசக்தி பிரயோகத்தை வூடூவில் எப்படி ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்போம். யார் மேல் துஷ்டசக்தியைப் பிரயோகிக்க வேண்டுமோ அவர்களது உடை, முடி, நகம், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு  பொம்மையை உருவாக்குகிறார்கள். பழங்காலத்தில் வூடூ சடங்கு ஒன்றை நடத்தி அந்தப் பொம்மையின் இதயப்பகுதியில் மட்டும் ஒரு துளையை ஏற்படுத்தி விட்டு வைப்பார்கள். பின் ஏதாவது ஒரு விலங்கின் இதயத்தை துடிக்கும் நிலையிலேயே எடுத்து அந்த துளைக்குள் வைப்பார்கள். (ஆனால் நவீன காலத்தில் விலங்கின் இதயத்தை எடுத்து வைக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. அதற்கு இணையாக பாவனையுடன் கூடிய குறிமுறை பயன்படுத்தப்படுகிறது) பின் சம்பந்தப்பட்ட ஆளின் பிராணசக்தியை அந்தப் பொம்மையுடன் இணைக்கும் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.  முடிவில் அந்தப் பொம்மையில் அந்த ஆளின் பிராணசக்தியை வூடூ சடங்கை நடத்தும் மந்திரவாதியால் உணர முடிந்தால் அந்த சடங்கு வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள். பல சமயங்களில் ஒரு முறையில் அந்த மந்திரவாதி வெற்றி பெற முடிவதில்லை. தொடர்ந்து சில நாட்கள் அவர் முயற்சிக்க வேண்டி வரும்.

வெற்றிகரமாக அந்த பொம்மையில் அந்த ஆளின் சக்தியை இணைத்த பின் வூடூ மந்திரவாதி இரண்டு அல்லது மூன்று அங்குல ஊசிகளை எடுத்து அந்தப் பொம்மையில் முக்கியமான அக்குபஞ்சர் மையங்களில் குத்துகிறார். அந்த மையங்களின் வழியாக இயங்கும் உடலின் பாதுகாவல் சக்தி அவரது அச்செயலினால் தடைப்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் மந்திரவாதி அப்படி பொம்மையில் ஊசிகளைக் குத்தும் போது சம்பந்தப்பட்ட ஆள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நிஜமாகவே ஊசிகள் குத்தியது போல்  தன் உடலில் அந்தந்த இடங்களில் வலியை உணர்வார். அதன் பின் அந்த ஆள் சிறிது சிறிதாக மந்திரவாதியின் வசமாவார். பாதுகாப்பு அரண் வீழ்த்தப்படும் போது சம்பந்தப்பட்ட ஆள் பெரும்பாலும் தலை, நெற்றிப்பொட்டு, கைகளின் பெருவிரல்கள், அந்தரங்கப்பகுதிகள் ஆகியவற்றில் அதன் விளைவுகளை உணர்வார். அவர் ஏதாவது செய்து தன்னைக் காத்துக் கொண்டால் ஒழிய சிறிது சிறிதாக தன் சக்திகளை இழக்க நேரிடும். கடைசியில் ஏவல் செய்பவர்களின் நோக்கம் நிறைவேறி அவர் துன்பப்பட நேரிடும். ஒரு ஏவல் 28 நாட்களில் ஒருவரை இறக்க வைக்கவும் முடியும் என்கிறார்கள்.

சில சமயங்களில் வூடூ பொம்மைகளில் வெள்ளைப்பூண்டு, பூவிதழ்கள், வாசனைப் பொருள்கள், பணம் ஆகியவற்றையும் இணைப்பதுண்டு. அது சில துர்த்தேவதைகளை அந்த பொம்மைக்குள் இறங்க வைக்கச் செய்யும் உபாயமாகச் சொல்கிறார்கள்.

இறந்த பிரேதங்களின் சாம்பலை, குடிக்கும் பானங்களில் கலந்து கொடுத்து செய்வினை செய்வதும் வூடூவில் உண்டு. அதை அறியாமல் குடிக்கும் நபர் அந்த செய்வினையால் துன்பப்படுவதுண்டு. அவர்கள் சாப்பிடும் உணவில் அந்த சாம்பலைக் கலந்து தருவதும் உண்டு. இது விரைவில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள். எனவே விஷயமறிந்தோர் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் உணவையோ, பானங்களையோ ஏற்பதில்லை. அப்படியும் சாப்பிட்டே ஆக வேண்டிய நிலைமை இருந்தால் உணவளிப்பவர்களுடன் பகிர்ந்தே சாப்பிடும் அளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

வூடூவில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு துஷ்ட சக்திகளை ஏவி விட  வூடூ பொம்மைகள், பிரேத சாம்பல் ஆகியவை கூட தேவையில்லை. ஒருவர் பெயர், அவருடைய தாயாரின் பெயர், மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றை வைத்துக் கொண்டே துஷ்ட சக்திகளை ஏவி விட அவர்களால் முடியும்.

தங்களுக்குத் துன்பம் விளைவிப்பவனை பழிவாங்க வேண்டி மன்மன் ப்ரிகிட்டே என்ற (Manman Brigitte) தேவதையை வூடூவில் நாடுகிறார்கள். இந்த தேவதை மயான தேவதையான பேரன் சமேடியின் மனைவியாக சொல்லப்படுகிறது. இது ஒரு மனிதனைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்த வல்லதாக கருதப்படுகிறது.

மரண தேவதையின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த பிறகு ஒருவனைக் காப்பாற்றுவது வூடூவில் மிகவும் கடினமான செயலாகக் கருதப்படுகிறது. அப்படிக் காப்பாற்றும் பட்சத்திலும் அந்த உயிருக்கு ஈடாக இன்னொரு உயிரைப் பணயம் வைக்க வேண்டுமாம்.  இது போன்ற நிகழ்வுகளில் கோழிகள் மட்டுமல்லாமல் அந்த வாழை மரமும் இறந்து விடுமாம். வாழை மரமோ, அந்த ஆளோ இரண்டில் ஒன்று இறந்து விடுவது உறுதியாக நடக்குமாம். அவர்கள் வேண்டுதலை மரண தேவதை ஏற்கா விட்டால் ஆள் மரணித்து வாழைமரம் பிழைத்திருப்பதும் நடப்பதுண்டாம். இந்த இரண்டில் ஒன்று நடக்காமல், அங்கு வரைந்த மண்டலங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த ஆள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவதுமில்லை.

-          என்.கணேசன்

-          நன்றி – தினத்தந்தி 11-04-2017