Thursday, March 30, 2017

இருவேறு உலகம் – 23

செந்தில்நாதன் பொதுப்பணித் துறையை விசாரித்தார். அவர்கள் அந்த மலைக்குப் போகும் பாதையைச் சரி செய்யும் திட்டம் ஒன்றும் தங்கள் கைவசம் இல்லை என்றும் தாங்கள் அங்கே சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற தடுப்புகள் வைக்கவில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அது போன்ற தடுப்புகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன என்றும் அது நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை யாரும் கண்காணிப்பதில்லை என்றும் சொன்னார்கள். அதனால் அவற்றை இரவு நேரத்தில் எங்கிருந்தாவது அப்புறப்படுத்திக் கொண்டு வந்து அந்தச்சாலையில் வைத்து விட்டு, மறுபடி காலையில் எடுத்த பழைய இடத்திலேயே வைத்து விட்டிருந்தால் அது யார் கவனத்திற்கும் வந்திருக்காது... மறு நாள் காலையில் அந்தப் பக்கம் போனவர்கள் யாரும் அந்தத் தடுப்புகளைப் பார்க்கவில்லை.... 

க்ரிஷைக் கடத்தவோ, கொல்லவோ யாராவது திட்டம் இட்டிருந்தால் அந்த நேரத்தில் வேறெந்த வாகனமும் அந்தப் பாதையில் வழிமாறிக்கூடப் போய் விட வேண்டாம் என்று ஜாக்கிரதை உணர்வுடன் அந்தத் தடுப்புகளை அங்கே வைத்திருந்திருக்கலாம். வேலை முடிந்தவுடன் அப்புறப்படுத்தி இருக்கலாம்... அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. கடத்திப் பணம் பறிப்பது உத்தேசமாக இருந்தால் கடத்தல்காரர்கள் இன்னேரம் கமலக்கண்ணனைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கொலை தான் உத்தேசம் என்றால் பிணம் இன்னேரம் கிடைத்திருக்க வேண்டும். இரண்டுமில்லாத குழப்ப நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை செந்தில்நாதன் யோசித்துக் கொண்டிருந்தார்.

நேற்று இரவு காரில் வந்தவர்கள் திரும்பவும் இன்று வந்தாலும் வரலாம் என்று தோன்றியதால் மலையடிவாரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களை நிறுத்தியிருந்தார் அவர்.   அதை அறிந்தால் அவர்கள் வர மாட்டார்கள் என்ற போதும் நேற்றிரவு அவர்கள் வந்த உத்தேசம் இனியும் நிறைவேற வேண்டாம் என்று அவர் நினைத்தார். அந்த உத்தேசம் என்னவாக இருக்கும் என்று எத்தனையோ விதங்களில் யோசித்துப் பார்த்தார். எதையுமே யூகிக்க முடியவில்லை. இது வரை தன் சர்வீஸில் எத்தனையோ கேஸ்களை அவர் கையாண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கேஸ் போல எந்தக் கேஸும் பிடிகொடுக்காத கேஸாக இருக்கவில்லை.


புதுடெல்லி மனிதனுக்கு இது வரை தகவல்களைக் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்குக் கூப்பிட்டுச் சொல்லும் வேலை மட்டுமே இருந்தது. அவன் அந்த வினோத ஆராய்ச்சியில் கிடைக்கும் எல்லா ரகசியத் தகவல்களையும் சொல்வான். மறுநாளே அவனுடைய மனைவியின் ரகசிய அக்கவுண்டில் பணம் போய்ச் சேர்ந்து விடும். முதல் முறையாக இந்த தடவை அந்தச் செல்போன் எண்ணிற்கு அவன் பேச முயற்சித்த போது போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர் முனை போனை எடுத்துப் பேசவில்லை.  அவன் பல முறை முயற்சி செய்த பிறகு அந்த எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்தது. நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் சர்ச்சிற்கு, நாளை மதியம் ஒரு மணிக்கு நேரில் வர உத்தரவாகியிருந்தது. 

தகவலைப் படித்தவுடன் முதலில் கோபம் வந்தது. நேரில் எல்லாம் வந்து சொல்ல மாட்டேன். விருப்பப்பட்டால் போனில் சொல்வதைக் கேட்டுக் கொள். இல்லாவிட்டால் ஆளைவிடுஎன்று கறாராகச் சொல்ல அவனுக்கு ஒரு கணம் ஆசை இருந்தது.

ஆனால் கிடைக்கின்ற  பணம் சிறிய தொகை அல்ல. அவன் மாதம் முழுவதும் வேலை பார்த்துச் சம்பாதிக்கும் தொகையை, தெரிவிக்கும் ஒவ்வொரு தகவலுக்கும் பெற்று வருகிறான். சில தகவல்கள் அவனுக்கே தலைகால் புரியாது. அதற்குப் பெரிய முக்கியத்துவம் இருப்பது போலவும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் சொல்வதெல்லாம் அப்படி ராணுவ ரகசியமும் கிடையாது. அப்படி இருக்கையில் பெரிய தொகையை விடவும் அவனுக்கு மனமில்லை. அதனால் கோபம் தணிந்து நாளை மதியம் ஒரு மணிக்குள் அந்த சர்ச்சிற்குப் போய்ச் சேர உத்தேசித்தான். அப்படியே பணம் தரும் அந்த ஆளைப் பார்த்தது போலவும் ஆயிற்று.....


மாஸ்டருக்கு அந்தப் பெண் விஞ்ஞானி போன் செய்தாள்.சார், எங்க டெக்னிகல் இஞ்சீனியர்ஸ் ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க. சாடிலைட்ல எந்த டெக்னிக்கல் ப்ரச்னயும் இல்லையாம். என்ன இருந்துச்சோ அதை தான் படம் எடுத்து அனுப்பிச்சிருக்கு. கருப்பா அந்த ஏரியா படம் வந்துருக்குன்னா, அந்த இடத்துல அப்படி ஏதாவது இருந்துருக்கணும்னு சொல்றாங்க.....

மாஸ்டர் கேட்டார். “சரி உங்க டிபார்ட்மெண்ட்ல என்ன முடிவு பண்ணினீங்க?

“அந்தக் கருப்புப் பறவை மேல தான் இப்போ முழு ஆராய்ச்சியும் திரும்பப் போகுது

மாஸ்டர் புன்னகைத்தார். விஞ்ஞானம் வளர வளர சந்தேகங்களும் வளர்ந்து கொண்டே போகின்றன. நிரூபிக்கப்பட்டால் தான் நம்புவேன் என்கிறது விஞ்ஞானம். உள்ளுணர்வை நம்பு, உட்கருவைப் புரிந்து கொள் மீதி எல்லாம் தானே நிரூபணமாகும் என்கிறது மெய்ஞானம். மெய்ஞானம் கண்டதை விஞ்ஞானம் எப்போதுமே தாமதமாகத் தான் கண்டுபிடிக்கும்....

அந்த மலைக்குப் போய் க்ரிஷ் இருந்த இடத்தையும் மலையுச்சியின் அமைப்பையும் நேரிலேயே ஒரு முறை பார்க்க வேண்டும் என்றெண்ணி நேற்றிரவு போனது அந்தப் போலீஸ் அதிகாரி அங்கிருந்ததால் முடியாமல் போயிற்று. நல்லவேளையாக அந்தப் போலீஸ் அதிகாரி அடிவாரத்தில் இருக்கவில்லை. இருந்திருந்தால் சந்திப்பைத் தவிர்ப்பது முடியாமல் போயிருக்கும்....

தாடிக்கார இளைஞன் வந்து அவர் முன் வந்து நின்றான். “ஐயா நீங்க அவங்கள சந்திக்க வேண்டிய ஏற்பாடு எதாவது நான் செய்யட்டுமா?

பொறு. அவங்க நிலைமை இன்னும் கொஞ்சம் மோசமாகும். அப்ப    சொல்றேன்என்றார் மாஸ்டர். தூண்டில் போட  இன்னும் சமயம் வரவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அந்தக் காலம் வராமல் இயங்குவது வீண்.

அவன் தலையசைத்து விட்டுச் சொன்னான். “இப்ப மாணிக்கமும், அவர் மகன் மணீஷும் க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்பியிருக்கறதா தகவல் வந்துருக்கு....



க்ரிஷ் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் மணீஷ் மனம் பலவிதமான உணர்ச்சிகளால் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தது. க்ரிஷ் பிணம் கிடைக்காததும், வாடகைக் கொலையாளி இறந்ததும், வாடகைக் கொலையாளியின் போனில் இருந்து அழைப்புகள் வந்து திகில் மூட்டிக் கொண்டிருந்ததும் முன்பே அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இப்போது ஹரிணி அவன் வீட்டுக்குப் போய் வந்திருப்பது கூடுதல் வேதனையாக இருந்தது. போய் விட்டு வந்தவள் அவனுக்குப் போன் செய்தாள்.

“க்ரிஷோட அம்மா என்னைப் பாத்தவுடனயே அழுதுட்டாங்கடா. அதப் பாத்து எனக்கும் அழுகைய கட்டுப்படுத்த கஷ்டமா இருந்துச்சு.... அவங்க கிட்ட சொல்லியிருக்கேன்.... உங்க பையன் சூப்பர் மேனா திரும்பி வருவான்னு.... அவங்களைத் தைரியப்படுத்த சொல்லிட்டேன்.... அவங்க வீட்டுல இருந்து வர்றப்ப நான் சொன்னபடியே அவன் நல்லபடியா வந்துரட்டும் கடவுளேன்னு கடவுளை வேண்டிகிட்டே வந்தேன். டேய் ப்ளீஸ் நீயும் கடவுள வேண்டிக்கோடா

அவள் வார்த்தைகள் அவனை வெட்டிப் போட்டன. கஷ்டப்பட்டு “கண்டிப்பாஎன்றான்.

“ஆமா நீ ஏன் இது வரைக்கும் அவன் வீட்டுக்குப் போகல.... உன்னை அவங்கம்மா கேட்டாங்க

எனக்கு அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு புரியல. அதனால நான் அப்பா வந்தவுடனே போலாம்னு காத்திருந்தேன் ஹரிணி. இப்ப கிளம்பிகிட்டிருக்கோம்

அவளிடம் பேசி முடித்தவுடன் அவன் முகத்தில் தெரிந்த துக்கத்தைப் பார்த்து மாணிக்கம் மனமுருகினார். ‘திட்டப்படியே க்ரிஷ் செத்து அவன் பிணம்  இத்தனை பிரச்னை இல்லாம இருந்திருக்கும். பிணம் எப்போது கிடைக்குமோ?

க்ரிஷ் வீட்டுக்குப் போகும் வழி நெடுக தந்தையும் மகனும் மௌனமாகவே இருந்தார்கள். அங்கு அவர்கள் போன போது க்ரிஷ் வீடே மயான அமைதியில் மூழ்கியிருந்தது. எப்போதுமே கலகலவென்று இருக்கும் வீடு அது. இப்போது அங்கும் நிம்மதியில்லை, இங்கும் நிம்மதியில்லை, நிலவரம் என்ன என்று தெரியவில்லை என்று மனம் நொந்தார் மாணிக்கம்.

கமலக்கண்ணன் தன் நண்பர் மாணிக்கத்தைப் பார்த்தவுடன் கண்கலங்கினார். பத்மாவதி மணீஷைப் பார்த்தவுடன் கண்கலங்கினாள். உதய்க்கும் மணீஷைப் பார்த்தவுடன் தம்பியின் நினைவு அதிகமாவதைத் தவிர்க்க முடியவில்லை. மணீஷின் முகத்தில் தெரிந்த வேதனை க்ரிஷின் மேல் இருந்த அன்பினால் வந்தது என்று அவன் நினைத்துக் கொண்டான். மணீஷைத் தட்டிக் கொடுத்தான்.

மாணிக்கம் கமலக்கண்ணனிடம் எல்லாவற்றையும் பொறுமையாக முகத்தில் வருத்தம் காட்டிக் கேட்டுக் கொண்டார். கடைசியில் சொன்னார். “கவலைப்படாதே கண்ணன். செந்தில்நாதன் திமிர் பிடிச்ச ஆளாயிருந்தாலும் திறமையானவர். யாராவது கடத்தியிருந்தாலும் கண்டுபிடிச்சு மீட்டுக்  கொடுத்துடுவார்  

கமலக்கண்ணன் கண்கள் ஈரமாகச் சொன்னார். “வேண்டாத தெய்வமில்லை. என் பையன் தர்மம் காப்பாத்தும்னான். நாங்களாவது முன்னபின்ன இருந்திருக்கோம். அவன் சரியாவே இருந்தவன். அவனை அந்த தர்மம் காப்பாத்தும்னு நம்பறேன்....

உனக்கு யார் மேலயாவது சந்தேகமிருக்கா கண்ணன்?என்று மாணிக்கம் கேட்டார்.

அப்படி சந்தேகம் யார் மேலயும் வரலையே மாணிக்கம்...

பத்மாவதி கண்களைத் துடைத்துக் கொண்டே மாணிக்கத்திடம் சொன்னாள். “அண்ணா அந்த மலைப்பகுதில பேய் நடமாட்டம் இருக்கறதா பேசிகிட்டாங்க ஞாபகம் இருக்கா? எனக்கென்னவோ அது மேல தான் சந்தேகம்?

உதய் மெல்ல தந்தையைக் கேட்டான். “ஏம்ப்பா பேய் மேல நடவடிக்கை எடுக்க முடியுமா?

கமலக்கண்ணனுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. இவன் மட்டும் இல்லை என்றால் இந்த வீடே சுடுகாடு போல் ஆயிருக்கும்!

பத்மாவதி தன்னையும் மீறி புன்னகை செய்து விட்டு மகன் மேல் கோபப்பட்டாள். “இவனுக்கு ஜோக் அடிக்க நேரம் காலமே கிடையாது. நானே என் பிள்ளையைக் காணோம்னு தவிச்சுகிட்டிருக்கேன்...

உதய் தாய் அருகே போய் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான். “சும்மா அழுதுகிட்டே இருந்தா உன் முகத்த பார்க்க சகிக்கல. ஹரிணி சொன்ன மாதிரி உன் பையன் சூப்பர் மேனாட்டம் வருவான் பாரு”.

திடீர்னு நல்ல செய்தி வரும் ஆண்ட்டி, கவலைப்படாதீங்கஎன்று தன் பங்குக்கு மணீஷும் சொல்லி வைத்தான். அப்படிச் சொன்னதாக அவனும் ஹரிணியிடம் சொல்லலாம்....

அவன் சொல்லி முடித்த போது உதய் செல்போனில் ஏதோ தகவல் வந்த மணிச்சத்தம் கேட்டது. சுரத்தே இல்லாமல் செல்போனை எடுத்து, வந்த தகவலைப் படித்த உதய் முகத்தில் திகைப்பும் பிரமிப்பும் கலந்து தெரிந்தது.

கமலக்கண்ணன் மனம் நடுங்கக் கேட்டார். “என்னடா?

“தம்பி அனுப்பியிருக்கான். நலமா இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன். அப்பா அம்மா கிட்ட கவலைப்பட வேண்டாம்னு சொல்லுன்னு அனுப்பி இருக்கான்.

மாணிக்கம் சந்தேகத்தோடு கேட்டார். “அவன் தான் அனுப்பிச்சிருக்கான்னு எப்படித் தெரியும்?

“அவன் மொபைல்ல இருந்து தான் மெசேஜ் வந்திருக்கு

(தொடரும்)      

என்.கணேசன்   

Wednesday, March 29, 2017

முந்தைய சிந்தனைகள்- 11

வாசக அன்பர்களுக்கு யுகாதி நல்வாழ்த்துக்கள்! எல்லா நலன்களும் பெற்று நிறைவான வாழ்வு அமைய இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

சில சிந்தனை அட்டைகள்!









என்.கணேசன்

Monday, March 27, 2017

எதிர்ப்பில் உருமாறிய வூடூ

அமானுஷ்ய ஆன்மிகம்- 2

கிலியை ஏற்படுத்தும் படியாக விசித்திரமான சடங்குகள் செய்து அமானுஷ்ய சக்திகளை வரவழைத்து அந்த சக்திகளின் உதவியுடன் தொடர் போராட்டங்கள் நடத்தி ஹைத்தி விடுதலை அடைந்தது, மேலை நாடுகளின் அதிகார வர்க்கத்தையும், அவர்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மதகுருமார்களையும் ஆபத்தை உணர வைத்தது. எந்த விதத்திலும் தங்கள் அறிவுக்கோ, அதிகாரத்திற்கோ இணையாக உயர முடியாதவர்கள் அந்த அடிமைகள் என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் இந்த அளவுக்கு வளர வூடூவும், அதன் சடங்குகளும் தான் காரணம் என்று உறுதியாகத் தோன்ற ஆரம்பித்தது.

அதற்கு வலுவான காரணம் அந்த அடிமைகளின் மூதாதையர்கள் எகிப்தில் பிரமிடுகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட அடிமைகள் என்பதாக இருந்தது. பழங்காலத்தில் எகிப்தின் பிரமிடுகள் தங்களுக்குள் எத்தனையோ, ரகசியங்களையும், சாபங்களையும் அடக்கி வைத்திருந்ததாக உலகத்தின் மற்றபகுதி மக்களும் நம்பினார்கள். பெரும்பாலான சமாதிகளில் அந்த சமாதிகளை மாசுபடுத்தவோ, தோண்டவோ முனைபவர்களுக்கு உடனடி மரணம், கடுமையான வியாதிகள், தாங்கொணாத துன்பங்கள் வழங்கப்படும் என்கிற வகையில் சாபங்கள் எழுத்து வடிவிலேயே செதுக்கப்பட்டிருந்தன.  அப்படித் துணிந்து யாராவது ஏதாவது செய்வதும், அவர்கள் பல துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க நேர்வதும் குறித்து கதைகள் அக்காலத்திலேயே நிறைய உலா வந்த வண்ணம் இருந்தன.

(பிற்காலத்தில், சரியாகச் சொல்வதென்றால் 1922ல், எகிப்தில் டுட்டன்காமுன் என்ற சக்கரவர்த்தியின் சமாதியைத் தோண்டி எடுத்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கண்டுபிடிக்க முடியாத வியாதியோ, எதிர்பாராத விபத்தோ, அகால கோர மரணமோ அடைய ஆரம்பித்தது வரலாற்றுச் செய்தி. ஒவ்வொரு மரணச்செய்தியுடனும் பத்திரிக்கைகள் டுட்டன்காமுன் சாபத்தை நினைவுபடுத்திய வண்ணம் இருந்தன. இந்த அளவு ஆதாரபூர்வமாக இல்லா விட்டாலும் முந்தைய காலத்தில் உண்மைகளும், கட்டுக்கதைகளுமாகக் கலந்து  பயமுறுத்தும் விதமாக நிறையவே பரவி வந்தன)

அப்படிப்பட்ட பிரமிடுகளின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த அடிமைகள் கட்டும் போது என்ன எல்லாம் கண்டார்களோ, எதை எல்லாம் அறிந்தார்களோ, தீயசக்திகளுடன் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டார்களோ என்ற பலத்த சந்தேகம் மேலை நாட்டு அதிகார வர்க்கத்திற்கு வந்தது. அறிந்ததை அந்த அடிமைகள் ஒழுங்குபடுத்தி அமைத்து தங்கள் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும், அதனாலேயே ஹைத்தி சுதந்திரம் சாத்தியமாகி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் சில இடங்களில் இருந்து அந்த அடிமைகளை நாடு கடத்தியே விட்டார்கள். சில இடங்களில் அடிமட்ட வேலைகள் செய்ய அந்த அடிமைகளை விட்டால் வேறு கதி இல்லை என்பதால் அந்த அடிமைகளின் சடங்குகளை முடக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள்.

உலகின் பல பகுதிகளிலும் குடியேறியிருந்த கருப்பின மக்களின் வூடூ வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.  ஹைத்தியிலேயே கூட ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதால் பிற்காலத்தில் வூடூவிற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 1896, 1913 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் ஹைத்தியில் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும், மற்ற சில பகுதிகளிலும் வூடூ சம்பந்தப்பட்ட பொருள்களோ, சின்னங்களோ, சிலைகளோ வைத்திருப்பவர்களுக்கு கசையடி, சிறைத்தண்டனை, தூக்குத்தண்டனை வரை தரப்பட்டது. சில இடங்களில் வூடூவைப் பின்பற்றுபவர்களை சூனியக்காரர்கள் என்ற முத்திரை குத்தி உயிரோடு எரிக்கவும் செய்தார்கள். இந்த வகைகளில் ஹைத்தியில் ஆரம்பங்களில் நடந்தது போன்ற வூடூ நிகழ்வுகள் முறைப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள். வூடூவைப் பின்பற்றிய கருப்பின மக்களில் பலர் பல இடங்களில் தாங்களாகவே அந்தந்த இடங்களை விட்டு தப்பி ஓடினார்கள்.

அவர்கள் சென்றடைந்த இடங்களிலும் நிலைமை பெரிய விதத்தில் வேறுபட்டு இருக்கவில்லை. இப்படி எல்லாம் ஆதிக்க வர்க்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் வூடூவைப் பின்பற்றும் மக்களை அதிகமாக பாதித்தன. அவர்களின் நம்பிக்கைகளின்படி வெளிப்படையாக வழிபடும் சுதந்திரத்தை இழந்து விட்ட அவர்கள் மனதளவில் மாறிவிடத் தயாராக இருக்கவில்லை. எல்லாம் இழந்த போதும் தங்கள் கடவுள்களையும், நம்பிக்கைகளையும் மிக உறுதியாக அவர்கள் தங்கள் மன ஆழத்தில் பற்றிக் கொண்டிருந்தார்கள். நடனங்கள், மத்தள சத்தங்கள், மிகப்பெரிய வரைமண்டலங்கள் வரைதல் ஆகியவற்றுடன் செய்யும் அவர்களுடைய மிக நீண்ட சடங்குகள் அதிகார வர்க்கத்தின் கவனத்தைக் கவரும் என்பதால் மிக ரகசியமாக சத்தமில்லாத வகையில் வழிபாடுகளை அவர்கள் நடத்தி வாழ்ந்தார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இந்த வழிபாட்டுப் பிரச்னையில் இருந்து மீள வழி என்ன என்று தீவிரமாக யோசித்தார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாயிரம் வருடங்கள் முன்பே பிறந்திருந்த அவர்கள் மதத்தை வூடூ மக்கள் கைவிட்டு விடத் தயாராக இருக்கவில்லை.  மோசஸ் கூட அவர்களுடைய அமானுஷ்யக் கலைகளை அவர்களுடைய பழங்கால குரு ரா-கு-எல் பெத்ரோ (அல்லது ஜேத்ரோ) Ra-Gu-El Pethro (Jethro) விடமிருந்து கற்றுக் கொண்டு சென்றதாக அவர்கள் நம்பினார்கள். அப்படிக் கற்றுக் கொண்டு போன மோசஸ் மூலமாகக் கூட அவர்களுடைய கோட்பாடுகள் சில கிறிஸ்துவத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று நம்பினார்கள். 

யோசித்துப் பார்க்கையில் ஆட்சியாளர்களின் மதமாக இருந்த கிறிஸ்துவத்திற்கும், வூடூ மதத்திற்கும் பொதுவான முக்கிய அம்சங்கள் சில இருந்தன. கிறிஸ்துவத்தைப் போலவே வூடூ மக்களும் இறைவன் ஒருவனே என்பதை நம்பினார்கள். கிறிஸ்துவத்தில்  பரம பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலை வழிபாடு இருப்பது போலவே வூடூவிலும் சர்வ வல்லமை உள்ள இறைவன், தேவதைகள், இறந்து போன முன்னோர்கள் என்ற மூன்று நிலை வழிபாடு இருந்தது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தங்கள் வழிபாட்டையே கிறிஸ்துவ வழிபாடு போல வூடூ மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.

வெளிப்படையாக அவர்கள் வணங்கியது வேறு, உட்புறமாக அவர்கள் பாவித்துக் கொண்டது வேறு என்கிற விதத்தில் வழிபாடுகள் நடக்க ஆரம்பித்தன. சில கிறிஸ்துவ  புனிதத்துறவிகளை தங்கள் தேவதைகளில் சிலராக வரித்துக் கொண்டார்கள். அப்படி வரித்துக் கொண்டவர்களை வெளிப்படையாகவே வழிபட்டார்கள்.  புனிதர் பேட்ரிக் (St. Patrick) துறவியை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். புனிதர் பேட்ரிக் அயர்லாந்தில் இருந்து பாம்புகளை ஒழித்தவர். வூடூ மக்கள் பாம்புகளை வணங்குபவர்கள். பண்டைய இந்தியர்களைப் போலவே பாம்புகளிடம் விசேஷ சக்திகள் இருப்பதாக நம்புபவர்கள் அவர்கள்.

அவர்கள் புனிதர் பேட்ரிக் சிலையை தங்கள் பாம்புக் கடவுளான தன்பல்லாவாக வணங்க ஆரம்பித்தார்கள். அப்படி வணங்கும் போது தங்கள் கையில் பாம்பு பொம்மைகளையோ, சின்னங்களையோ, விஷமற்ற சிறு பாம்புகளையோ கூட வைத்துக் கொண்டு புனிதர் பேட்ரிக் சிலையை வணங்க ஆரம்பித்தனர். அப்படி வணங்கும் போது கிறிஸ்துவ முறைப்படி மெழுகுத் திரிகள் கொளுத்தியே வணங்கினார்கள். பாம்பு பொம்மைகளையோ, சின்னங்களையோ வைத்துக் கொண்டு வணங்கும் வழக்கம் கிறிஸ்துவத்தில் இல்லா விட்டாலும் கூட அவர்களுடைய பாரம்பரிய முறைப்படி வணங்குவது புனிதர் பேட்ரிக்கை என்பதும், மெழுகுத்திரி கொளுத்தி வணங்குவது கிறிஸ்துவ முறைப்படி தான் என்பதும் ஆட்சியாளர்களையும், மதகுருமார்களையும் அதை பொறுத்துக் கொள்ள வைத்தது. அதே நேரத்தில் தங்கள் தேவதையை சிறிய அளவிலாவது தங்கள் முறையில் வணங்கிய திருப்தி வூடுவைப் பின்பற்றும் மக்கள் அடைந்தார்கள்.

இப்படி கிறிஸ்துவத்தில் சிலவற்றையும் தங்கள் நம்பிக்கைகள் சிலவற்றையும் இணைத்துக் கொண்டு வூடூ மக்கள் தாங்கள் சேர்ந்த இடங்களில் ஓரளவு அமைதியாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள். அதனால் மற்றவர்களுக்கு அவர்கள் மீதிருந்த ஆரம்ப கால சந்தேகக் கண்ணோட்டம் விலக ஆரம்பித்தது. காலப்போக்கில் வூடூ மக்களும் மற்ற வெள்ளை இன மக்களும் ஓரளவு நட்பு பாராட்டியே வாழ ஆரம்பித்தனர். சில வெள்ளை இன மக்களின் வியாதிகளை வூடூ முறைப்படி அதைப் பின்பற்றி வந்த சில கருப்பின மக்கள் குணப்படுத்திக் காட்டும் அளவு நிலைமை முன்னேறியது. வெள்ளை இன மக்களும் வூடூ சாத்தான் வழிபாட்டுச் சமாச்சாரம் அல்ல, இதில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்று நம்ப ஆரம்பித்தார்கள். அதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவும் ஆரம்பித்தார்கள்.

இருதரப்பினரும் எத்தனையோ மாற்றங்களை அடைந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வூடூ வழிபாட்டு நிகழ்வுகளில் கிறிஸ்துவப் பாதிரிகள் கலந்து கொள்வதும், கிறிஸ்துவ வழிபாடுகளில் வூடூ குருக்கள் கலந்து கொள்வதும் சகஜமாக ஆரம்பித்தன. வூடூவையும் அதன் அடிப்படை நன்மைகளையும்  புகழ்ந்து போப் இரண்டாம் ஜான் பால் அவர்களே பேசினார் என்பது வூடூவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.  அது மட்டுமல்லாமல் 1993 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் ஒரூ வூடூ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

1996 ஆம் ஆண்டு பெனின் நாடு வூடூவைத் தங்கள் நாட்டு மதமாக அறிவித்தது. 2003ல் ஹைத்தி தங்கள் தேச மதமாக வூடூவை அதிகார பூர்வமாக அறிவித்தது.  

அடக்குமுறையில் இருந்து இப்படி மீண்டு வந்த வூடூவின் இரகசிய வழிபாட்டு முறைகளை இனி அடுத்த வாரம் பார்ப்போமா?

-என்.கணேசன்
நன்றி-தினத்தந்தி 14.3.2017


Thursday, March 23, 2017

இருவேறு உலகம் – 22


ந்த மலையிலிருந்து இறங்கிய செந்தில்நாதன் ஜீப்பில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து மெயின் ரோடு வந்து சேர்ந்தார். மெயின் ரோடு வரும் வரை எந்த வாகனமும் எதிர் வரவில்லை. நள்ளிரவாகி இருந்ததால் மெயின் ரோட்டிலும் பெரிதாகப் போக்குவரத்து இல்லை. ஆள்நடமாட்டம் சுத்தமாக இல்லை. சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு வாகனம் மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது.

மெயின்ரோடு சந்திப்பில் ஜீப்பை நிறுத்தி செந்தில்நாதன் அந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்து அனுப்பினார். அவர் ஒவ்வொருவரையும் கேட்டார். “வழியில் மிகவேகமாகப் போய்க்கொண்டிருந்த கருப்புக் கார் ஏதாவது பார்த்தீர்களா?   

ஒவ்வொருவரும் இல்லை என்றார்கள். அந்தக் கருப்புக் காரில் வந்தவர்கள் அவர் பின் தொடரவில்லை என்பது உறுதியானவுடன் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாதபடி நிதானமாகப் பயணிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்தது. சிறிது யோசித்து விட்டுக் கூடுதலாகச் சில கேள்விகளும் கேட்க ஆரம்பித்தார். “இந்த வழியாகத் தினமும்  இதே நேரம் போவீர்களா?  ஆம் என்றால் அடுத்ததாக “கடந்த இரண்டு நாட்களாக இந்த இடத்தில் வித்தியாசமாக எதையாவது பார்த்தீர்களா?  என்று கேட்க ஆரம்பித்தார்.

வெகு சிலரே தினமும் அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் செல்பவராக இருந்தார்கள். அவர்களில் யாரும் வித்தியாசமாக எதையும் பார்த்திருக்கவில்லை. சைக்கிளில் வந்த கிழவர் ஒருவர் மட்டும் சொன்னார்.  “முந்தாநாள் ராத்திரி அந்த மலைக்குப் போகற ரோட்டுக்குக் குறுக்கே ரோடு ரிப்பேர் வேலை நடக்கறதா ரெண்டு தடுப்பு வெச்சிருந்தாங்க. நானும் அப்படியே இந்த மெயின் ரோட்டுக்கும் ரிப்பேர் வேலை செஞ்சாங்கன்னா புண்ணியமாப் போகும்னு நினைச்சேன். மறுநாள் வர்றப்ப அந்த தடுப்பைக் காணோம்.... ரிப்பேர் வேலையும் நடந்த மாதிரி தெரியலை.

செந்தில்நாதனுக்கு உள்ளே ஒரு பொறி தட்டியது. முதலில் அவரைப் பற்றி விசாரித்தார். கிழவர் நான்கு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஒரு தொழிற்சாலையில் இரண்டாம் ஷிஃப்ட் வேலை செய்யும் தொழிலாளி. தினமும் இந்த வழியாகத் தான் அவர் வீடு திரும்புபவர். ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் சைக்கிளில் போவது மிகவும் கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார்.

“அப்ப எத்தனை மணி இருக்கும்.

“இதே நேரம் தான் சார்

“ஆளுக யாராவது இருந்தாங்களா?

“இல்லையே சார்

“ஏதாவது வண்டிக?

”இல்லை சார் தடுப்புகளை மட்டும் தான் பார்த்தேன்....

அவரை அனுப்பிய செந்தில்நாதன அடுத்து வருபவர்கள் தினமும் இந்த நேரத்தில் இந்தப் பகுதியில் பயணிப்பவர்களாக இருந்தபட்சத்தில் கிழவர் சொன்ன ரோடு ரிப்பேர் தடுப்புகளைப் இங்கு பார்த்திருக்கிறீர்களா என்றும் கேட்க ஆரம்பித்தார். சிலர் நினைவில்லை என்று சொன்னார்கள். பைக்கில் வந்த ஒரு இளைஞன் மட்டும் சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற தடுப்புகளை மலைக்குப் போகும் பாதையின் துவக்கத்தில் பார்த்ததைக் கையைக் காட்டிச் சொன்னான். கிழவரும் அங்கே தான் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். ரிப்பேர் வேலையே நடக்காத தெருவுக்கு முன் அந்தத் தடுப்புகளை அந்த நேரத்தில் வைத்து விட்டுப் பின் விலக்கிக் கொண்டவர்கள் யார்? அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?

செந்தில்நாதன் யோசிக்க ஆரம்பித்தார்.


ரிணிக்கு க்ரிஷ் வீட்டார்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. க்ரிஷின் அம்மா அவளிடம் அன்பாகப் பேசக்கூடியவர். க்ரிஷின் அப்பா புன்னகையோடு சரி என்றாலும் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி என்பது அவர் முகபாவனையிலேயே தெரியும். க்ரிஷின் அண்ணா கலகலப்பான ரகம். எத்தனையோ நாட்கள் அவர்கள் வீட்டில் அவள் சாப்பிட்டிருக்கிறாள். க்ரிஷ் மேல் இருந்த கோபத்தில் அவர்கள் வீட்டுக்குத் திடீரென்று போவதை அவள் நிறுத்தி விட்டாள். அவர்களிடம் போனில் கூட அவள் பேசியதில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் போயேயாக வேண்டும், அது தான் அடிப்படை நாகரிகம் என்று அவளுக்குத் தோன்றியது. போனாள்.

பத்மாவதி அவளைப் பார்த்ததும் ஓவென்று கதறி அழுது விட்டாள். ஹரிணிக்கு அதைப் பார்க்கையில் கண்கள் ஈரமானாலும் அவர் முன்னால் உடைந்து போய் அவர் துக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடாது என்று தோன்றியது. தன் துக்கத்தை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டவள் பத்மாவதியைச் சமாதானப்படுத்தினாள். “அழாதீங்கம்மா. அப்படி, இப்படின்னு எதாவது ஒரு கதை சொல்லிகிட்டு திடீர்னு வந்து நிப்பான் பாருங்க.

பத்மாவதி அவள் உறுதியாகச் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முயற்சித்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு ‘அப்படியா சொல்கிறாய்?என்பது போலப் பார்த்தாள். ஹரிணிக்கு அந்தத் தாயின் வெகுளித்தனம் மனதை என்னவோ செய்தது.

பத்மாவதி சொன்னாள். “பைக்கும் அங்கேயே இருந்துச்சு. போன் சுவிட்ச்டு ஆஃப் ஆயிடுச்சு. நாள் ரெண்டாயிடுச்சு. அதான் பயமாயிருக்கு....

ஹரிணி பலவந்தமாய் குரலில் கலகலப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னாள். “அதெல்லாம் சாதாரண மனுஷங்க விஷயத்துல தான் பயப்படணும். உங்க பையன் சூப்பர் மேன்....

பத்மாவதி மெல்லப் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டிருந்த உதய் மனதிற்குள் ஹரிணிக்கு நன்றி சொன்னான். பொய்யே ஆனாலும் அந்த நேரத்திற்குக் கிடைக்கும் தைரியம் இதமானது தானே?

“நீ என்ன சாப்டறே?பத்மாவதி கேட்டாள்.

“க்ரிஷ் வரட்டும். விருந்தே சாப்ட வர்றேன்என்று ஹரிணி அதே உறுதியான நம்பிக்கையுடன் சொன்னாள்.

பத்மாவதி கேட்டாள். “ஆமா நீயேன் இவ்வளவு நாளா வரல?

அவளுடைய நேரடியான கேள்விக்கு உடனடியாக என்ன சொல்வது என்று யோசித்துவிட்டு ஹரிணி சொன்னாள். “வர்றப்ப எல்லாம் அவன் பிசியாவே இருக்கான். அதனால அவனை ஏன் தொந்திரவு செய்யணும்னு வரல

என்ன தான் அவள் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாலும் அவள் முகத்தில் கணநேரம் வந்து போன வலியை உதய் கவனித்தான். தம்பி மேல் கோபம் வந்தது.

பத்மாவதி சொன்னாள். “அவன் கிட்ட நான் சொல்லியிருக்கேன். ஒருநாள் அத்தனை புஸ்தகத்தயும் பழைய பேப்பர்காரனுக்குப் போடறேன் பாத்துட்டே இருன்னு....  மனுஷங்களுக்கு மேலயா புஸ்தகமும் ஆராய்ச்சியும்....

பத்மாவதி சிலமுறை அப்படி மிரட்டியிருப்பதாக க்ரிஷே ஹரிணியிடம் சொல்லி இருக்கிறான்... ஆனால் இப்போது அதை அவள் சொல்வது ஹரிணிக்காகத் தான் என்பது ஹரிணிக்குப் புரிந்தது. “ஸ்வீட் ஆண்ட்டிஎன்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

பத்மாவதியின் செல்போன் இசைத்தது. அதை எடுத்துப் பார்த்தவள், “என் அக்கா பேசறா... டேய் உதய் ஹரிணி கிட்ட பேசிட்டிருடா வந்துடறேன்...என்றவள் செல்போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போனாள்.

ஹரிணி மெல்ல உதயிடம் கேட்டாள். “அவன் செல்போன்ல இருந்து எதாவது கால்ஸ் போயிருக்கான்னு செக் பண்ணீங்களா

அன்னைக்கு சாயங்காலம் ஸ்விட்ச்ட் ஆஃப் ஆன செல் அப்புறமா ஆனே ஆகலன்னு சொல்றாங்க....என்றான் உதய்.

இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். உதய்க்கு அவள் முகத்தில் சற்று முன் தெரிந்த வலி மனதை உறுத்தியது. தம்பி அலட்சியப்படுத்தியிருக்கிறான், அது வலித்திருக்கிறது, அதனால் தான் அவள் வரவில்லை என்பதில் இப்போது சிறிதும் சந்தேகமேயில்லை. வீட்டுக்குள்ளே நுழைந்தவுடன் பத்மாவதியைப் போல் அவளும் அழப்போகிற மனநிலையில் தான் இருந்தாள் என்பதையும் அவன் கவனித்திருந்தான். அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட விதமும், கம்பீரமாக தன் உணர்வுகளைக் கையாண்ட விதமும் அந்தப் பெண் மீது அன்பை அதிகப்படுத்தியது.

தம்பி வருவானோ இல்லையோ ஒரு உண்மை அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் போகக்கூடாது என்று நினைத்தான். அதை அறியும் உரிமை அவளுக்கு நிச்சயம் உண்டு....

உதய் மெல்ல எழுந்தான். “ஒரு நிமிஷம் வாம்மா

கேள்விக்குறியோடு அவளும் எழுந்தாள்.  உதய் அவளை க்ரிஷ் அறைக்கு அழைத்துப் போனான். தம்பியின் கம்ப்யூட்டரைத் திறந்து பட்டனை அழுத்தி விட்டு மௌனமாக நின்றான்.

சில வினாடிகளில் கம்ப்யூட்டர் திரையில் தன் புகைப்படம் வந்து தன்னைப் பார்த்துப் புன்னகைத்ததைப் பார்த்த ஹரிணி தன் அத்தனை கட்டுப்பாட்டையும் இழந்தாள். க்ரிஷின் நாற்காலியில் அமர்ந்து அவன் மேசையில் தலைவைத்து குமுறி அவள் அழ ஆரம்பித்ததைப் பார்க்கையில் அவன் கண்களும் கலங்கின. இவ்வளவு நேசிக்கும் ஒரு பெண் கிடைக்க தம்பி நிறையவே புண்ணியம் செய்திருக்கிறான் என்று தோன்றியது.

இரண்டே நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு மெல்ல எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள். “தேங்க்ஸ்ண்ணா

அவன் மெல்லத் தலையசைத்தான்.

மனதில் என்ன இருக்கிறது என்று காட்டாமல், சொல்லாமல், அன்னியனைப் போல நடந்து கொண்டு இத்தனை நாள் என்னைப் பாடாய் படுத்தி விட்டானேஎன்று அவளுக்கு க்ரிஷ் மீது ஆத்திரமாய் வந்தது. உதயிடம் கேட்டாள்.  “நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?

“இல்லை, சொல்லும்மா

“அந்த ராஸ்கல் திரும்பி வந்தான்னா அவனை ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டு தான் மத்ததெல்லாம்....துக்கத்துடனும் ஆத்திரத்துடனும் அவள் சொன்னாள்.

தம்பி வந்தது போலவே ஒரு கணம் அந்தக் காட்சியைக் கற்பனை செய்த உதய் புன்னகைத்தான்.  தம்பி இருந்திருந்தால் சொல்லியிருப்பான். “எதுவானாலும் கதவை முதல்ல சாத்திட்டு செய்ங்க




புதுடெல்லி உயரதிகாரி புனேயில் இருந்து இஸ்ரோ டைரக்டர் சொன்ன தகவலை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். கடத்தல், கொலை என்று ஆராய்ச்சி ஆபத்தான பாதையில் நகர்ந்து போவதை அந்த டைரக்டர் எடுத்துச் சொன்னதோடு நிற்காமல் அவனுக்கு மெயிலிலும் நிகழ்வுகளை விளக்கி இருந்தார். நாளைக்குப் பிரச்னை என்று வந்தால் நான் முன்கூட்டியே தெரிவித்து விட்டேன்என்று வாய் வழியாகவும், எழுத்து மூலமாகவும் தெரிவித்து, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு விட்டார் அந்த டைரக்டர். நியாயமாக அந்த உயரதிகாரி மத்திய மந்திரிக்கும், உளவுத் துறைக்கும் இந்தத் தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த உயரதிகாரி நியாயமானவன் அல்ல. மிக ரகசியமான இந்த ஆராய்ச்சி பற்றி டிபார்ட்மெண்டில் ஓரிருவருக்கு மட்டுமே தெரியும். அவர்களும் தங்களுக்குள்ளே கூட இது பற்றி பொது இடங்களில் பேசியதில்லை. ஆனால் இந்த ஆராய்ச்சி குறித்த சகல விவரங்களையும் ஆரம்பத்திலிருந்தே நல்ல விலைக்கு வெளியே ஒரு ரகசிய மனிதருக்கு விற்றுக் கொண்டிருந்த அந்த உயரதிகாரி இந்தத் தகவலுக்கு  என்ன விலை கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான்...



(தொடரும்)
என்.கணேசன்

Monday, March 20, 2017

வூடூ உருவான வரலாறு!


அமானுஷ்ய ஆன்மிகம்-1

பாரதத்தில் யோகக்கலை தோன்றி பிரகாசித்தது போல் உலகின் பல பகுதிகளிலும் பல அமானுஷ்யக்கலைகள் தோன்றி இருக்கின்றன. சராசரி மனிதர்களின் அறிவுக்கு அவை பிடிபடாதவை. இறைசக்தியை நோக்கிப் பயணித்த பாதையில் தங்களுக்கும் மேலே இருக்கின்ற அமானுஷ்ய சக்திகளை அறிந்து, புரிந்து, அவற்றில் தேர்ச்சி பெற்று, அவற்றைப் பயன்படுத்திக் கொண்ட பல தலைமுறை அறிவுஜீவிகளின் தொடர் முயற்சியால் உருவான கலைகள் அவை. நம் யோகாவைப் போலவே அவற்றையும் உருவாக்கியவர்கள் பெயர்களை நாம் அறியோம். ஆனால் அந்த அமானுஷ்யக்கலைகளை அவர்களது வழித்தோன்றல்கள் பயன்படுத்தி பலனடைந்தார்கள் என்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. அந்த அமானுஷ்யக் கலைகளை எத்தனை பேர் முழுமையாக அறிந்து கொண்டார்கள், எத்தனை பேர் முறையாகப் பயன்படுத்தினார்கள் என்பது மட்டும் கேள்விக்குறியே! அந்த அமானுஷ்யக்கலைகளின் ஆரம்பத் தூய்மை எவ்வளவு காலம் தொடர்ந்திருந்தது, அவற்றின் தற்காலத் தூய்மையின் அளவு என்ன என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் முகம் தெரியாத அந்தப் பழங்கால அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்புகளின் அசல் அம்சங்களின் மிச்சங்கள் இன்னும் கொஞ்சமாவது மிஞ்சி இருக்கவே வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இருக்கா விட்டால் அந்த அமானுஷ்யக்கலைகள் இன்று பயன்படாதவையாக, செயல் இழந்து போனதாகவே இருக்க முடியும். இந்தத் தொடரில் அப்படிப்பட்ட அமானுஷ்யக் கலைகளையும் அவற்றில் விற்பன்னர்களாக விளங்கிய அமானுஷ்ய மனிதர்களையும் நாம் பார்ப்போம்.

முதலில் நாம் அலசிப்பார்க்கவிருப்பது வூடூ. வூடூ என்றாலே பலருக்கு மனதில் நினைவிருப்பது ஆங்கிலத் திரைப்படங்களிலும், நாவல்களிலும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளாக இருக்கலாம். ஒரு பொம்மையை ஊசிகளால் குத்தி மற்றவர்களுக்கு செய்வினை செய்யும் காட்சி பல ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வூடூ அப்படிப்பட்ட செய்வினைகளின் கலை மட்டுமல்ல. செய்வினைகள் வூடூவின் ஒரு மிகச்சிறிய பகுதி தான். வூடூ அந்தச் சிறிய பகுதியை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட, சுவாரசியமான ஒரு அமானுஷ்யக்கலை.

வூடூ என்றால் என்ன பொருள் என்பதற்கு ஏராளமான விளக்கங்கள் இருந்த போதும் மிகவும் பொருத்தமாக நமக்குத் தோன்றுவது வூடூ ஆரம்பமான காலத்தில், ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வழக்கில் இருந்த ஃபான் (Fon) என்னும் ஆப்பிரிக்க மொழியில் இருந்து கிடைத்திருக்கும் பொருள் தான். வோடன் என்ற சொல்லுக்கு அம்மொழியில் “தெய்வீகம்என்று பொருள். அந்த வோடன் என்ற சொல்லே மருவி “வோடூ மற்றும் “வூடூஎன்று வந்ததாகக் கூறுகிறார்கள். அந்த மொழி வூடூ பழைய விதத்திலேயே வூடூ பின்பற்றப்படும் பகுதியான பெனின் (Benin) என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.  வோடன் என்றும் வோடூ என்றும் கூட வூடூவைச் சிலர் அழைக்கிறார்கள்.

வூடூ பற்றி புற உலகு அறிந்து கொண்டது சுமார் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் என்றாலும் உண்மையில் அதன் பிறப்பிடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பிரமிடுகள் தேசமான எகிப்தில் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்ட எகிப்திய மன்னர்கள் பல்லாயிரக்கணக்கான கருப்பு அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அந்த அடிமைகள் பிரமிடுகளைக் கட்டும் போது கண்டவற்றையும், கேட்டவற்றையும், அனுபவப்பட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டார்கள். அவை அனைத்தும் பிரமிடுகளைப் போலவே பிரம்மாண்டமானவை. அவை இறைவனின் செய்திகள், மகாசக்திகளின் குறியீடுகள் என்று அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அவையே வூடூவின் கரு அல்லது விதை என்று நாம் கருதலாம். அவர்கள் பிற்காலத்தில் நைல் நதியைக் கடந்து மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அறிந்தவற்றை முறைப்படுத்தி பின்பற்ற ஆரம்பித்தனர். அதுவே வூடூவாக உருவெடுத்தது. தங்கள் சக்திக்கு மீறிய தெய்வீக சக்திகளாகவே வூடூவை அவர்கள் எண்ணியும் பயன்படுத்தியும் வந்ததால் வூடூ, வோடன் (தெய்வீகம்)  என்ற சொல்லில் இருந்து வந்ததாகவே இருக்க வேண்டும்.

ஆப்பிரிக்க நாடுகளில் இடம் பெயர்ந்த அந்த கருப்பின மக்களில் கணிசமான எண்ணிக்கை பிற்காலத்தில் ஹைத்தி (Haiti) என்றழைக்கப்பட்ட  செயிண்ட் டொமினிக் (St. Domingue) என்ற பிரெஞ்சு காலனியில் குடிபுகுந்தனர். அந்த மக்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வூடூவைப் பயன்படுத்தினார்கள். உலகில் இப்படி சுதந்திரம் பெற அமானுஷ்ய சக்திகளின் உதவி பெறப்பட்டதாக கருதப்படும் உதாரணம் இது ஒன்றே ஆகத் தான் இருக்க வேண்டும்.  அந்த சுவாரசியத் தகவல் வரலாற்று யாத்திரிகர் ஆன மெடரிக் லூயி மோரோ (Médéric Louis Moreau) என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெடரிக் லூயி மோரோ அந்தக் காலக்கட்டத்தில் செயிண்ட் டொமினிக் (இன்றைய ஹைத்தி)க்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வாழ்ந்து வந்த கருப்பின மக்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிரான ஆயத்தங்களில்  ஈடுபட்டிருந்ததைக் கண்டார். அவற்றில் முக்கியமான சடங்கு ஒன்று 1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதியன்று இரவு நடைபெற்றது. அந்தச் சடங்கு டட்டி புக்மேன் (Dutty Boukman) என்ற வூடூ பாதிரியின்   தலைமையில் நடைபெற்றது. அதில் பெட்ரோ நடனம் என்ற ஒரு விசித்திர நடனம் நடத்தப்பட்டது. அந்த நடனத்தில் பங்கு கொண்டவர்கள் பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஆடினார்கள். அவர்களில் பலரும் தங்கள் வசமில்லை என்பது பார்த்துக் கொண்டிருந்த மெட்ரிக லூயி மோராவுக்குத் தெரிந்தது. சிலர் ஜன்னி வந்தது போல் ஆடினார்கள். சிலர் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டது  போல்  ஆடினார்கள். சிலர் அந்த ஆட்ட முடிவில் மயங்கியும் விழுந்தார்கள். அது மட்டுமல்லாமல் தங்களிடமிருந்த மத்தளங்களில் வித்தியாசமான ஒலிகளை எழுப்பினார்கள். கைகளை தாள லயத்தோடு தட்டினார்கள். கடைசியில் ஒரு காட்டுப் பன்றியைத் தங்கள் கடவுள்களுக்குப் பலி கொடுத்தார்கள்.

அந்த சடங்கு பற்றி மெடரிக் லூயி மோரோ விசாரித்த போது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்கள் செய்த ரகசியச்சடங்கு என்று அவருக்கு ரகசியமாகச் சொல்லப்பட்டது. அன்று அமானுஷ்ய சக்திகள் உதவியுடன் விடுதலைப் புரட்சிக்கான வித்திட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னது தனக்கு வேடிக்கையாக இருந்தது மெடரிக் லூயி மோரோ பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாகவே அந்த மக்கள் விசித்திரமான ஒலிகளை எழுப்பி மத்தளங்கள் தட்டி நடனம் ஆடும் வழக்கம் கொண்டிருந்ததால் ஆட்சியாளர்கள் அவர்களுடைய இது போன்ற சடங்குகளைப் பொருட்படுத்தவில்லை. சின்னச் சின்ன ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் பிரெஞ்சு இராணுவத்தால் அவ்வப்போது அடக்கப்பட்டாலும் 1803 ஆம் இறுதியில் டெஸ்ஸலைன்ஸ் (Dessalines) என்ற மாவீரனின் தலைமையில் வெடித்த புரட்சியில் புரட்சியாளர்கள் வென்றார்கள். 1804 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அவர்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றார்கள். டெஸ்ஸலைன்ஸ் தங்கள் நாட்டிற்கு ஹைத்தி என்று புதிய பெயரிட்டு அதன் சக்கரவர்த்தியானார்.

1791 ஆம் ஆண்டு முதல் கடைசியாக சுதந்திரம் பெற்றது வரை தங்கள் முக்கியப் போராட்டங்களுக்கு தங்கள் தேவதைகளின் ஆலோசனைகளைப் பெற்றதாக அந்தக் கருப்பின மக்கள் தெரிவித்தார்கள். 1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியின் முக்கியத்துவத்தை இன்று வரை ஹைத்திய மக்கள் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வருடம் தோறும் அந்த பெட்ரோ நடனம் அந்த நினைவில் கோலாகலமாக விழாவாக நடத்தப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் அந்த நினைவு விழா ஒன்றில் ஆல்ஃப்ரட் மெட்ராக்ஸ் (Alfred Metreaux) என்ற ஸ்விஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கலந்து கொண்டு அப்போது பாடப்படும் ஒரு பழங்காலப் பாட்டின் பொருளையும் குறிப்பிட்டுள்ளார்.

“ஓ டெஸ்ஸலைன் சக்கரவர்த்தியே
நீங்கள் மாவீரர்.
அவர்கள் நம்மை என்ன செய்தார்கள் என நினைக்கிறீர்கள்?
இந்த நாடு முன்பே நம் கைகளில் வந்து விட்டிருக்கிறது

வருடா வருடம் அந்த நிகழ்ச்சியின் போது டெஸ்ஸலைன்ஸ் சக்கரவர்த்தியின் ஆவியும் வந்து கலந்து கொள்வதாக ஹைத்தி மக்கள் நம்புகிறார்கள். அந்த சுதந்திரம் வூடூ அமானுஷ்ய சக்திகளின் உதவியால் பெறப்பட்டதாகவும் அந்த சக்திகள் சர்வ வல்லமை பெற்றவையாகவும் அக்காலத்தில் நம்பிக்கை பரவ ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்திடையே லேசான பயத்தைக் கிளப்பி விட்டது.

அவர்கள் என்ன செய்தார்கள், வூடூ என்ன ஆனது என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா? 

- என்.கணேசன்
நன்றி - தினத்தந்தி 7.3.2017


வூடு, அகோரி, ஷாமன் ஆகியவற்றை விளக்கும் “அமானுஷ்ய ஆன்மிகம் ”நூல் பிப்ரவரி 2018ல் வெளியாகியுள்ளது. விலை ரூ.100/-

நூல் தங்கள் பகுதியில் எங்கே கிடைக்கும் என்றறிய தினத்தந்தி பதிப்பகத்தை 044-25303336, 044-25303000 எண்களிலோ, mgrthanthipub.dt.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.