Monday, August 29, 2016

உலகப் பழமொழிகள் – 15



141. அறிவாளியானவன் முதிர்ந்து வரும் கதிரைப் போன்றவன். அவன் முதிர முதிர தன் தலையை அதிகம் தாழ்த்திக் கொள்வான்.


142. நாம் இல்லாமல் இந்த உலகம் இயங்க முடியும். அதை என்றும் மறந்து விடக்கூடாது.


143. பேசத் தெரியாத முட்டாளும், ஊசி இல்லாத திசை காட்டும் கருவியும் ஒன்று. அதனால் திகைப்பு அதிகமாகுமே ஒழிய திசை தெரியாது.


144. அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் பயன்படுத்துவதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவதாகும்.


145. நண்பன் துக்கத்தில் பங்கு கொண்டு பாதியாகக் குறைக்கிறான். மகிழ்ச்சியில் பங்கு கொண்டு இரட்டிப்பாக்குகிறான்.


146. பரபரப்பு மனதின் பலவீனத்திற்கும், சுறுசுறுப்பு மனதின் வலிமைக்கும் அறிகுறி.


147. பழிச்சொல்லை யாரும் அழைத்து வந்து இருக்க இடம் தராவிட்டால் அது தானாகவே வாடி மடிந்து விடும்.


148. அதிர்ஷ்டம் என்றும் சுறுசுறுப்பைப் பின் தொடர்ந்தே செல்கிறது.


149. முன்னதாகத் திட்டமிட்டு அவமரியாதை செய்தவனிடம் நஷ்ட ஈடு பெற வேண்டாம். ஆனால் அதைச் செய்தவனிடமிருந்து ஒதுங்கி விடு.


150. அறிவுடைமையின் முதல் படி நாம் அறியாமையில் இருக்கிறோம் என்று உணர்வதே.


தொகுப்பு: என்.கணேசன்




Friday, August 26, 2016

வாசகர்களுடன் சில இனிமையான தருணங்கள்!

கோவை கொடீசியாவில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் நேற்று (25.8.2016) ப்ளாக்ஹோல் மீடியாவின் அரங்கு எண் 187 க்கு வருகை புரிந்த அன்பு வாசகர்களுடனான சந்திப்பு மிக இனிமையானதாக இருந்தது.  அந்த இனிய தருணங்கள் நிரந்தர நினைவுகளாய் மனதில் தங்கி விட்டன.


அனைத்து வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

அந்த தருணங்களின் காமிராப் பதிவுகளில் சில-










Thursday, August 25, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 113


மைத்ரேயனிடம் உண்மையாகவே பிரத்தியேக சக்திகள் இருக்கிறதா சந்தேகப்பட்ட தங்கள் இயக்க உள்வட்ட ஆட்களைப் புன்னகையோடு பார்த்த மாரா சொன்னான். “மனிதனின் உள்ளே இருப்பது வெளியே வராமல் போகாது. மைத்ரேயன் என்ன தான் ரகசியமான, தன் உள்ளிருப்பை வெளிப்படுத்தாதவனாக இருந்தால் கூட சில விஷயங்கள் நமக்குத் தெரிந்திருக்கின்றன. அவனால்  மற்றவர் மனதில் இருப்பதைப் படிக்க முடிகிறது. வலிமையான மயக்க மருந்து கூட அவனை மயக்கமடையச் செய்யவில்லை. அவனாக இது வரை எதையும் எதிர்த்ததில்லை. தன்னைக் கடத்துவதைக்கூட அவன் தடுக்கவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டானா, இல்லை அங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று அவனே விரும்பி ஒத்துழைத்தானா என்பது நமக்குத் தெரியவில்லை....."

"பெரும் சக்தி வாய்ந்தவர்களாக நாம் நம்மைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அவன் நம்மை ஒரு பொருட்டாக என்றுமே நினைத்ததேயில்லை. நம் ஆட்கள் அருகே வரும் போது அவன் நம் ஆட்களை உணர்ந்திருக்கிறான். ஆனால் பொருட்படுத்தியதேயில்லை. சம்யே மடாலயத்தில் இருந்து அவன் அலைகளைப் பிடித்து நான் அவன் இருப்பிடத்தையே காணமுடிந்த போதும் அதிரவில்லை. நான் என் சக்திகளை வெளிப்படுத்திய போது சலிப்புடன் தான் முகத்தைத் திருப்பிக் கொண்டான். என் இத்தனை வருட வாழ்க்கையில் நான் நிஜமாகவே அவமானத்தை உணர்ந்த கணம் அது.... என் சக்திகள் அவனுக்கு சலிப்பைத் தர வேண்டுமென்றால், அது ஒரு பொருட்டே இல்லையென்றால், அவனிடம் அதை விடப் பெரியதாக, பிரம்மாண்டமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றல்லவா அர்த்தம். உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா, இல்லை அது நடிப்பா, இல்லை அடுத்தவரின் உயரத்தையே காண மறுக்கும் மனநிலையா என்று தான் கண்டுபிடிக்க அவன் மனதைப் படிக்க முயன்றேன். அங்கே எண்ணங்களே இல்லை. சூனியம் தான் தெரிந்தது....”

விஷயத்தோடு விஷயமாகச் சொல்லிக் கொண்டு போனானேயொழிய மாராவின் முகத்திலோ, குரலிலோ உணர்ச்சிகளின் தாக்கம் இருக்கவில்லை. அதை சிலாகித்து சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மாரா தொடர்ந்தான். “கற்க வேண்டும் என்று நினைப்பவைகளை அவன் கற்க முடிந்த வேகம் அபாரம். சில நாட்களிலேயே தமிழ் மொழியில் பேச நல்ல தேர்ச்சி பெற்று விட்டான். அவனுக்கு அந்த மொழி முதலிலேயே தெரியும் என்று அந்த மொழிக்காரனான தேவ் நினைக்கும் அளவு முன்னேறி இருக்கிறான். தியானத்தில் அவன் அடைந்திருக்கும் தேர்ச்சி அற்புதமானது. அவன் தியானத்தில் இருக்கும் போது அவன் அருகே இருப்பவர்களும் அதை உணர்கிறார்கள். ஒரு கடத்தல்காரன் அப்படி ஒரு அனுபவம் மறுபடி வாய்க்க பத்து லட்சம் தருகிறேன் என்கிறான், அருகில் இருந்த ஒரு குடிகார ஒற்றன் விசித்து விசித்து அழுகிறான் என்பதெல்லாம் சில உதாரணங்கள்.... அவனிடம் சிறிது நேரம் பழகிய பின் எதிரிகள் கூட அவனை நேசிக்க அல்லது மதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கப்பலில் அத்தனை பேரும் அவனை வழியனுப்பி வைத்த காட்சி ஒரு உதாரணம். தன் பிரதான எதிரியாக அவனை நினைக்கும் லீ க்யாங்கே கூட நேரில் அவனைச் சந்தித்த போது அவ்வளவு கடுமையைக் காட்டவில்லை என்று நமக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன.... இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லி விட முடியாது....”

சுவீடனில் இருந்து வந்திருந்த மனோதத்துவ நிபுணர் சொன்னார். “உண்மை. ஆனால் நீ அடைந்திருக்கும் அற்புத சக்திகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதெல்லாம் அற்ப சக்திகளே அல்லவா?”

மாரா சிரித்துக் கொண்டே சொன்னான். “அப்படித் தோன்றலாம். ஆனால் “எதிரியைக் குறைத்து மதிப்பிடுவது அவனிடம் தோற்றுப் போக நிச்சயமான வழி” என்கிற பழமொழி என்னைப் பயமுறுத்துகிறது.... அவன் இன்னும் வெளிக்காட்டாதவையும் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.... சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இந்த ரகசியச்சடங்குக்கும், கூட்டத்திற்கும் நான் ஏற்பாடு செய்யக் காரணம் இருக்கிறது....”

இரண்டு நாள் முன்னால் மாராவின் சிறிய சிலை சிறிது நேரம் ஒளிர்ந்ததையும், அது ஒரு அவசரத்தகவல் தெரிவிப்பதற்காக என்று தனக்குத் தோன்றியதையும் மாரா தெரிவித்தான். “அந்த மகாசக்தி சொல்லும் தகவலைக் கேட்கும் நாம் மைத்ரேயனை எப்படி கையாள்வது என்பதையும் அவரிடமே கேட்டு நடப்பது புத்திசாலித்தனம் என்று நினைத்தேன். மைத்ரேயன் அழிவு நம் இயக்கத்தின் தலையாய வெற்றியாக இருக்கும் என்பதால் இதில் உங்களையும் ஈடுபடுத்த நினைத்தேன்....”

சொல்லி விட்டு மாரா குகைக்கோயில் சிலை முன் வைத்திருந்த பழைய மரப்பட்டியை தங்கச்சாவி மூலம் திறந்து கருப்புத்துணி, தெய்வத்தின் சிறிய சிலை, பழங்கால ஓலைச்சுவடி, மிகத்தடிமனான நீளமான கயிறு ஆகியவற்றை வெளியே எடுத்தான்.

சீனாவில் இருந்து வந்த பத்திரிக்கையாளர் கேட்டார். “இந்த ரகசியச்சடங்கில் அதிகபட்சமாய் ஐந்து உறுப்பினர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்பது தானே நியதி. மீதி ஆட்கள் என்ன செய்வது?”

மாரா புன்னகைத்தபடி சொன்னான். “பழங்காலத்தில் நம் இயக்கம் சிறியதாக இருந்த போது ஆரம்பித்த நியதி அது. பல மடங்கு வளர்ந்த பின்னும் அந்தப் பழங்கணக்கையே பின்பற்றுவது முட்டாள்தனம். இருபது பேர் இருந்தால் வர மாட்டேன் என்று நம் தெய்வம் முரண்டு பிடிக்காது....”

சின்ன சிரிப்பொலிகள் எழுந்தன. மாரா தன் முன்னால் இருந்த இருவரைப் பார்த்துத் தலையசைத்தான். அவன் கருப்புத் துணியை இடையில் கட்டிக் கொண்டு மாராவின் சிறிய சிலையுடன் ஒரு கல் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவர்கள் எழுந்து அவனைக் கல் இருக்கையோடு இறுக்கிக் கட்ட ஆரம்பித்தார்கள். இரண்டு சுற்றுகளோடு நிறுத்தியவர்களை மேலும் ஒரு சுற்று சேர்த்து கட்டச் சொன்னான். அப்படியே இறுக்கமாய் கட்டினார்கள்.

வந்திருந்தவர்களில் மூத்த திபெத்தியக் கிழவர் எழுந்து வந்து அந்த ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி அமர்ந்தார். அவர் தான் மைத்ரேயனை முதல் முதலில் அடையாளம் கண்டு மாராவிடம் சொன்னவர். அவர் மாராவிடம் கேட்டார் ”திரும்ப வரவழைக்க என்ன குறிச்சொல்?”

மாராவுக்கு சென்ற முறை அமானுஷ்யன் என்ற குறிச்சொல் வைத்து பாதியில் முடிந்த சடங்கு நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் சொன்னான். “அமேசான் காடுகள்”

எல்லா தீபங்களும் அணைக்கப்பட்டன. குகைக் கோயிலில் கும்மிருட்டு சூழ்ந்தது.

மாரா ஆழ்நிலை தியானத்திற்குச் செல்ல மற்றவர்கள் பிரார்த்தனைகளிலும் தியானத்திலும் ஈடுபட்டார்கள். பதிமூன்று நிமிடங்களில் மாரா கையிலிருந்த சிலை நீல நிறத்தில் ஒளிர ஆரம்பித்தது. மாராவும் ஒளிர ஆரம்பித்தான். சுற்றிலும் இருந்த இருட்டில் சிலையோடு மாரா ஒளிர ஆரம்பித்தது அமானுஷ்ய அழகோடு தெரிந்தது. மாரா மின்சாரத்தால் தாக்கப்பட்டது போல துடிக்க ஆரம்பித்தான். கல் இருக்கையே சிறிது ஆட்டம் கண்டது. அவன் தோற்றம் அடியோடு மாறி குகைக்கோயில் சிலையின் நகல் தோற்றமாகவே மாறிய பிறகு சிறிது சிறிதாக ஆட்டம் அடங்கியது.

மனித மாராவின் உடலில் குடியேறியிருந்த அவர்களின் கடவுள் மாரா அந்தச் சடங்குகளில் எப்போதும் கேட்கும் “என்னை எதற்காக வரவழைத்தீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக முதலில் அமானுஷ்ய கிரீச் குரலில் கத்தியது. “நாம் நினைத்த அளவு காலம் நம்மிடம் இல்லை. வேகம்... வேண்டும்... மூன்றே நாளில் அவனை அழிக்க வேண்டும்....”

இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. திபெத்தியக் கிழவர் திகைப்போடு கேட்டார். “தெய்வமே, இன்னும் பத்து மாத காலத்திற்கும் மேல் மைத்ரேயனுக்கு மோசமான காலம் என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது...”

“பத்மசாம்பவா.....” அந்தப் பெயரை வெறுப்புடன் உமிழ்ந்து விட்டு தொடர்ந்தது. “வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றி விட்டான்...... இனி மூன்றே நாள் தான் இருக்கிறது. மூன்றாவது நாளில் மைத்ரேயன் அதிபலவீனன்.... அன்று அவனை அழிக்கா விட்டால் பின் எப்போதும் அழிக்க முடியாது......”

செனட்டர் பெண்மணி கேட்டாள். “மைத்ரேயனை சாதாரணமாக அழித்து விட முடியுமா? அவனிடம் ஏதாவது விசேஷ சக்திகள் இருக்கின்றனவா?”

அவர்களுடைய கடவுளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. கேள்வி காதில் விழவில்லையோ என்று சந்தேகித்த செனட்டர் பெண்மணி மறுபடி கேட்க வாயைத் திறந்த போது “பாருங்கள்” என்று கிரீச் குரலில் கத்தியது. “பார்த்துக் கொள்ளுங்கள்”

திடீரென்று குகைக்கோயிலின் மாரா சிலைக்கு முன் வெட்டவெளியில் ஒரு காட்சி தெரிந்தது.

அந்தக் காட்சியில் கனவில் இருப்பது போல் அமானுஷ்யன் மகாபோதி மரம் முன்னால் நின்றிருந்தான். அவன் கையை விட்டு மைத்ரேயன் நகர்ந்து மகாபோதி மரத்தை நோக்கிப் போனான். மரம் பொன்னிறமாக மாறி பிரகாசித்தது. மைத்ரேயன் மரத்தை நெருங்கினான்.... எதையோ எடுப்பது போல் குனிந்தான்.... திடீரென்று எல்லாமே மங்கலாகித் தெளிவில்லாமல் போனது. மங்கலானது தெளிவான போது மைத்ரேயன் அமானுஷ்யனின் கையைப் பிடித்து நின்றிருந்தான். அமானுஷ்யன் அவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காட்சி மாறி அடுத்த காட்சி வந்தது. மைத்ரேயன் தியானத்தில் இருக்கிறான். பின் மெல்ல எழுந்து செல்கிறான்.... அமானுஷ்யன் படுத்துக் கொண்டிருக்கிறான். அவன் முதுகை ஒட்டியபடி ஒரு பெரிய பாம்பு இருக்கிறது. மைத்ரேயன் அந்தப் பாம்பின் தலையை வருடிக் கொடுக்கிறான். பாம்பு மெல்ல எழ ஆரம்பித்தது. சோம்பல் முறித்து பிரம்மாண்டமாய் படமெடுத்து மைத்ரேயனைப் பார்த்து தலை தாழ்த்தி வணங்கியது. பாம்பின் கண்கள் நெருப்பாய் மின்னின. அமானுஷ்யன் கண்கள் லேசாகத் திறக்கின்றன. மைத்ரேயனிடமிருந்து ஒரு ஒளி அமானுஷ்யனை ஊடுருவி அந்த நாகத்தை அடைந்தது. நாகம் தங்கமென ஜொலித்தது. மைத்ரேயன் திரும்பிப் போன பிறகு அமானுஷ்யன் முழுவதுமாகக் கண் விழித்து மெல்ல தன் முதுகில் இருந்த அந்தப் பாம்பைத் தொட்டுப் பார்க்கிறான்.... அவன் முகத்தில் குழப்பம்....

இரண்டு காட்சிகளையும் பார்த்து முடிக்கையில் இருபது பேர் முகத்திலும் திகைப்பு!

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Tuesday, August 23, 2016

வாசகர்களை சந்திக்கிறேன்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


வரும் வியாழன் 25.08.2016 அன்று என் பதிப்பாளரின் அழைப்பை ஏற்று கோவை கொடீசியாவில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவிற்கு வர உத்தேசித்திருக்கிறேன்.  ஈரோடு, சென்னை, மதுரை நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்த போதெல்லாம் அவர் அழைத்தும் வெளியூர்கள், நேரப்பற்றாக்குறை என்றெல்லாம் காரணம் சொல்லி தவிர்த்து வந்த எனக்கு சொந்த ஊரில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு விடுத்த அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை.


எழுத்தின் மூலமாக மட்டுமே உங்களை இது வரை தொடர்பு கொண்டிருந்த எனக்கு, உங்களைச் சந்திக்கவும் இறைவனாக அளித்த நல்லதொரு வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன். 25.08.2016 அன்று மாலை 4.30 மணி முதல் 7.45 மணி வரை அரங்கு எண் 187 ல் நான் இருப்பேன். புத்தகங்களில் கையெழுத்து வாங்க விரும்பும் வாசகர்களும், சந்தித்துப் பேச விரும்பும் வாசகர்களும் கண்டிப்பாக அன்று வருகை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் இரண்டாம் பாகத்தை எழுதும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். ஆழ்மன சக்திகள் குறித்து வாசகர்களுக்குள்ள சந்தேகங்களுக்கு விரிவான பதில் அளிக்கும் அத்தியாயம் ஒன்றையும் அதில் எழுத உத்தேசித்துள்ளேன். அதில் இடம் பெறத் தகுந்த சந்தேகங்களை வாசகர்கள் என்னிடம் நேரில் தெரிவிக்கலாம்.


வியாழன் அன்று மாலை புத்தகத் திருவிழாவுக்கு நான் வருவதால் அன்று காலையிலேயே புத்தம் சரணம் கச்சாமியின் 113 வது அத்தியாயம் பதிவிடப்படும்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, August 22, 2016

வள்ளலார் கூறும் பாவப் பட்டியல்!

பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது.  அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.


இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல் -

"நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ!'



- என்.கணேசன்


Friday, August 19, 2016

கோவை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 187


அன்பு வாசகர்களுக்கு ,

வணக்கம்.

கோயமுத்தூர் கொடீசியாவில் (ஹால் D) ஆகஸ்ட் 19 முதல் 28 வரை நடக்கும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 187 (ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ்) ல் என் அனைத்து நூல்களும் சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

கண்காட்சி நேரம்  காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

கோவையிலும் கோவைக்கு அருகாமையிலும் இருக்கும் வாசகர்கள் கண்டிப்பாக இந்தப் புத்தகத் திருவிழாவிற்கும், அரங்கு எண் 187 க்கும் வருகை தாருங்கள்,  தங்கள் நண்பர்களிடமும்,  நலம்  விரும்பிகளிடமும் சொல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்


Thursday, August 18, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 112

ந்த முறை போலி பாஸ்போர்ட்களை அவர்கள் உருவாக்கவில்லை. நேபாளத்திலிருந்து திபெத்துக்கு அடிக்கடி பயணிக்கும் இரு நிஜ வணிகப் பயணிகளின் பாஸ்போர்ட்களையேயே பயன்படுத்திக் கொண்டார்கள். உடல் வாகும், ஏகதேச தோற்றமும் அக்‌ஷய்க்கும், ஆசானுக்கும் பொருந்துகிற அந்த இரண்டு ஆட்களுக்கும் பாஸ்போர்ட்களைத் தந்து விட்டு அவரவர் வீட்டிலேயே இருந்து விடுவதற்கு, திபெத் சென்று அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் மும்மடங்கு பணம் தரப்பட்டது.

வீட்டில் இருந்து அக்‌ஷய் கிளம்பிய போது அதிகமாய் கலங்கியது சஹானா தான். இந்த முறை அவள் மகனுக்கும் கணவனுக்கும் பெரும் ஆபத்தை தன் அடிவயிற்றில் உணர்ந்தாள். கணவன் முன் கண்கலங்கி அவன் போகும் போது வருத்தத்தை உணர்ந்து விடக்கூடாது என்று எத்தனை தான் கட்டுப்படுத்தினாலும் துக்கம் பீறிட்டது. அக்‌ஷய் அவளை அணைத்து ஆறுதல் சொன்னான். ஆசான் குற்ற உணர்வு மேலிட சஹானாவிடம் ஆத்மார்த்தமாய் சொன்னார். “தாயே. உங்கள் கணவருக்கும், மகனுக்கும் ஒரு தீங்கும் வர வாய்ப்பில்லை. இவர்கள் இருவருடன் எங்கள் எத்தனையோ பேரின் பிரார்த்தனை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மைத்ரேயர் இருக்கிறார்.... வெற்றியோடும், உங்கள் மகனோடும் இவர் நலமாய் திரும்பி வருவார்....”

தலாய் லாமாவும் அலைபேசியில் அக்‌ஷயிடம் பேசினார். “உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டோம். உங்கள் குடும்பத்திற்கும் துக்கத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆனால் முடிவில் நற்செயலுக்கு தீங்கான விளைவுகள் ஏற்படாது என்பது மட்டும் நிச்சயம். வெற்றிவாகை சூடி வருவீர்கள் அன்பரே.... எங்கள் நாடும், சமூகமும் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்....”

மரகதம் முருகனை வேண்டிக் கொண்டு அக்‌ஷய் நெற்றியில் திருநீறிட்டு அனுப்பினாள். ஆசான் குழந்தைத்தனமாகத் தன் நெற்றியையும் அவளுக்குக் காட்ட, கூச்சத்துடன் அவர் நெற்றியிலும் திருநீறிட்டாள். வருண் உணர்ச்சி வசப்பட்டு தந்தையிடம் சொன்னான். ”தம்பியோடு சீக்கிரம் வந்துடுங்கப்பா...”

அக்‌ஷய் தலையசைத்தான். “சரி என்று வாய் விட்டு சொல்லுங்கள்ப்பா” என்று வருண் சொன்னான். தந்தை வாய் விட்டுச் சொன்னால் அதை நடத்திக் காட்டாமல் விட மாட்டார் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.

“சரி சீக்கிரமே கௌதமோடு வருகிறேன்....” என்று அக்‌ஷய் சொன்னபிறகு தான் அவன் திருப்தி அடைந்தான்.

அக்‌ஷயும், ஆசானும் கிளம்பினார்கள்.



க்‌ஷய்க்கு ஆடுகள் விற்ற கிழவர் வழக்கமாக அமரும் அதே கல் மீது அமர்ந்திருந்தார். அவருடைய ஆடுகள் சுற்றிலும் மேய்ந்து கொண்டிருந்தன. ஏதோ வாகனம் வரும் சத்தம் கேட்டது. முன்பு வந்து கொண்டிருந்த ரோந்து வாகனங்கள் கூட சில நாட்களாக வருவதில்லை என்பதால் ஆச்சரியத்துடன் சாலையையே பார்த்தார். தூரத்தில் ஒரு பஸ் வருவது தெரிந்தது. அந்த சொகுசு வண்டி சுற்றுலாப்பயணிகள் பயணிப்பது. அதில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பொதுவாக திபெத்தின் இந்தப் பகுதிக்கு வருவதில்லை.....

பஸ் தொலைவிலேயே நின்றது. அதிலிருந்து சில வெளிநாட்டுப்பயணிகள் இறங்கினார்கள். கிழவர் கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தார். அவர்கள் சைத்தான் மலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். கிழவர் திகைப்புடன் அவர்களை உற்றுப் பார்த்தார். இவர்கள் சுற்றுலாப்பயணிகள் அல்ல. இவர்கள் அவர்கள்..... அந்த மர்ம மனிதர்கள்.... ஒரு காலத்தில் துறவிகள், சாதுக்கள் கோலத்தில் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர்கொண்ட பார்வையோடு அந்த மலைக்கு வருபவர்கள்.... இப்போது நவநாகரிக உடைகளில் இருந்தாலும் அந்த நேர்கொண்ட பார்வை மாறவில்லை. இருட்டிக் கொண்டு வரும் இந்த நேரத்தில் சைத்தான் மலையில் நீலக்கரடிகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏறுவது அவர்களால் தான் முடியும்.... பஸ் டிரைவர் பஸ்ஸில் இருந்து இறங்கி சோம்பல் முறித்தான்....

திடீரென்று கருப்பாடை அணிந்த ஒரு அழகான இளைஞன் எங்கிருந்தோ ஓடி வந்தான். ஓடி வந்தான் என்பதை விட காற்றின் வேகத்தில் வந்தான் என்பதே பொருத்தமாக இருக்கும். அவன் கால்கள் நிலத்தை நீண்ட இடைவெளிகளில் தொட்டனவே ஒழிய நிலத்தில் பதியவில்லை. ஒரு கணம் வெகு தொலைவில் தெரிந்தான். மறுகணம் இங்கிருந்தான். அடுத்த கணம் மலையில் இருந்தான். சில கணங்களில் கண் பார்வையில் இருந்தே மறைந்தான். இவன் மனிதனே இல்லை என்று பிரமிப்புடன் கிழவர் நினைத்தார். மலையில் ஏறிக்கொண்டிருந்த அந்த பதினாறு பயணிகளும் ஒரு கணம் அந்தக்காட்சியைக் கண்டு சிலையாய் சமைந்து பின் புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தார்கள். பஸ் டிரைவர் அதிர்ச்சி தாளாமல் மயங்கி விழுந்தான்.

கிழவர் பிரமிப்பிலிருந்து நீங்குவதற்கு முன் மலையடிவாரத்தில் இருந்து வேறு ஒரு உருவமும் மேலே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். லேசாய் காற்றில் மிதந்து தெரிந்த அந்த உருவம் இறந்து போன அவர் மகன் உருவமாய் இருந்தது. அவர் மகன் ஆவியோ? அவன் இறந்து இத்தனை காலமாய் அவர் கனவில் கூட வந்ததில்லை. இப்போது ஏன்....? சில வினாடிகளில் அந்த உருவம் மறைந்து போனது... கிழவரின் மனதில் ஒரு இனம் புரியாத வலி, ரணம், பெருந்துக்கம்....

அந்தப் பதினாறு பேரும் பார்வையில் இருந்து மறைந்த பின்னும் கூட நீண்ட நேரம் அவர் அந்தக் கல்லிலேயே அமர்ந்திருந்தார்... பஸ் டிரைவர் மயக்கத்திலிருந்து மீண்டு தட்டுத்தடுமாறி எழுந்து அவர் அருகில் வந்து கேட்டான். “ஐயா சற்று முன் இங்கு நீங்கள் ஏதாவது வித்தியாசமாய் பார்த்தீர்களா?”

“இல்லையே”



சைத்தான் மலையின் அந்த ரகசிய குகைக் கோயிலில் மாராவின் முன்னால் இருபது பேர் இருந்தனர். வெளிநாடுகளிலிருந்து வந்த பதினாறு பேர் அல்லாத மற்ற நால்வரும் திபெத்திய மலைகளில் சாதகம் செய்பவர்கள். அத்தனை பேர் அமர்ந்து கொண்டிருந்த போதும் அவர்களிடமிருந்து சின்ன முணுமுணுப்போ, வேறு சத்தமோ கேட்கவில்லை. வெளியே வீசும் காற்றின் சத்தம் மட்டும் மெல்லக் கேட்டுக்கொண்டிருந்தது. குகைக்குள் இருந்த இருட்டைச் சில தீபங்கள் அரைகுறையாய் விரட்டிக் கொண்டிருந்தன. மாராவுக்குப் பின்னால் இருந்த அவர்கள் தெய்வச்சிலை அந்த அரைகுறை இருட்டில் பயங்கரமாய் அமானுஷ்யமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

மாரா மெல்ல பேச ஆரம்பித்தான். “மிகக்குறைவான கால இடைவெளியில் நான் அழைத்திருந்த போதும் உங்கள் குடும்பங்களையும், வேலைகளையும் விட்டு விட்டு நீங்கள் உடனே கிளம்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி.....”

அனைவரும் அவனையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எப்போதும் போலவே அவர்களை அவன் பிரமிக்க வைத்தான். திபெத்திய யோகிகள் போல மிக நீண்ட இடைவெளிகளில் கால்களை வைத்து நடப்பதும் மிதப்பதுமாய் கலந்து கடந்து வந்து அந்த ரகசியக் கோயிலில் அவன் நுழைந்த விதம் அவன் அடைந்து விட்டிருந்த சக்தியின் உயரத்தை அவர்களுக்குக் காட்டியது. அவர்கள் தெய்வமான மாராவின் அவதாரமான அவன் தன் பூரண சக்தியைப் பெற்று விட்டான்....

“இன்று உலக நாடுகளின் விதியையே நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகளின் தொழில்துறைகள் நம் வசம் இருக்கின்றன. அதனால் முக்கியமான அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் நம் முடிவுகளின்படி மாறிக் கொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த பத்திரிக்கைகளையும், தொலைக்காட்சிகளையும் நம் வசமாக்கி விட்டோம். நாம் சொல்வதை அவை வெளியிடுகின்றன. அவையே உண்மை என்று உலக மக்கள் நம்புகிற நிலைமை வந்து விட்டது. அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் நம் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மை அனுசரித்தே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். விளம்பரத்திற்கு ஆசைப்படாமல் சாதனைகள் மட்டுமே குறியாக நாம் இருந்ததால் நம்மை உலகிற்கு அடையாளம் காட்டிக் கொள்ளாமல் உலகையே நாம் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் எதையுமே நான் சாதனை என்று நினைக்கவில்லை....”

அவன் நிறுத்திய போது குகைக்கோயிலின் தீபங்கள் கூட அசையாமல் நின்றன. வெளியே காற்றின் வீச்சு பலமாய் இருந்த சத்தம் கேட்டது. அவன் தொடர்ந்தான். ”தனிமனிதர்களாகவும் நாம் சராசரி மனிதர்களை விட அறிவுகூர்மையிலும், மனோசக்தியிலும் எத்தனையோ மேலானவர்கள். சொல்லப் போனால் நாம் இது வரை பெற்ற வெற்றிகள் இந்த உயர்விலிருந்து அடைந்தவையே. ஆனால் நான் இதையும் சாதனையாக நினைக்கவில்லை.”

திடீரென்று அவன் குரலில் அமைதி போய் தீவிரம் தெரிய ஆரம்பித்தது. “நம் உண்மையான எதிரி மைத்ரேயனை தோற்கடித்து அழிப்பதைத் தவிர வேறெதையும் சாதனையாக என்னால் நினைக்க முடியாது.... இன்று நான் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி என்றாலும் இது வரை தொழிலை விட அதிகமாக நான் அவனுக்காகவே என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன். அவனை எதிர்க்கவே ஒவ்வொரு சக்தியாக என் வசப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன். அவனுக்காகவே காத்திருந்தேன். சில நாட்கள் முன் வரை இருப்பதே தெரியாமல் மறைந்து வாழ்ந்த மைத்ரேயன் ஒரு பாதுகாவலன் வந்தவுடன் வெளிப்பட்டான். அதன் பின் நடந்ததை நாம் எல்லோரும் அறிவோம். இந்தக் கூட்டத்தை நான் கூட்ட உங்களை நான் தொடர்பு கொண்ட போது என்னிடம் பலர் கேட்டிருக்கிறீர்கள். “நம் சக்திக்கு முன் அவன் எம்மாத்திரம்? அவனைத் தீர்த்துக்கட்டுவது நமக்குக் கஷ்டமான காரியமா?... அதற்கு ஏன் இந்த சிறப்புக்கூட்டம்? ஏன் இந்த ரகசியச்சடங்கு?”

இப்போதும் அவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பது மெல்லிய் ஒளியில் தெரிந்த அவர்களின் முகபாவனையிலேயே தெரிந்தது.

மாரா அமைதியாகச் சொன்னான். “சம்யே மடாலயத்தில் நம் ஆள் அவனைக் குறைத்து மதிப்பிட்டு என்னவாய் முடிந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். மைத்ரேயன் மிக எளிமையாகத் தெரிந்தாலும் உண்மையில் எளிமையானவன் அல்ல என்பதை நம் தெய்வமும் எனக்கு உணர்த்தி இருக்கிறது. இதே மலையில் சில தினங்களுக்கு முன் அவன் இருக்கிறான் என்று தெரிய வந்து அப்போதே அவனைத் தீர்த்துக்கட்ட நான் எண்ணிய போது தடுத்து ‘சம்யே மடாலயத்தில் நம் சக்தி நிலையை பலப்படுத்தும் வரை அவனை நெருங்காதே, உனக்கு இனியும் சந்தர்ப்பம் வரும்’ என்று சொன்னது. அப்படியே நடந்திருக்கிறது. இப்போது மைத்ரேயன் நம் கை எட்டும் தூரத்தில் தான் இருக்கிறான்..... சம்யே மடாலயத்தில் நம் சக்தியை மறுபடியும் நிலைநிறுத்திய பிறகு நானும் இந்த சில நாட்களில் கூடுதலான சில அபூர்வ சக்திகளை அடைந்து விட்டிருக்கிறேன். இந்த அளவு தயாராக இருந்தாலும் நமக்கு இன்னமும் பிடிபடாமல் இருப்பது அவனிடம் உள்ள பிரத்தியேக சக்திகள்....”

ஒரு குரல் அவனை இடைமறித்தது. “உண்மையிலேயே அப்படி அவனுக்கு பிரத்தியேக சக்திகள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அவனுக்கு எதற்குப் பாதுகாவலன்? அதுவுமல்லாமல் இது வரை அவன் பெரிதாக எந்த விசேஷ சக்தியையும் வெளிப்படுத்தியதாய்த் தெரியவில்லையே”

சொன்னது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. குடியரசுக்கட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த செனெட்டராக இருப்பவள்.

அந்த சந்தேகம் அவளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இருந்ததை மாரா கவனித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, August 15, 2016

இன்றைய சிந்தனை - 2

 தொலைந்த ஆட்டின் கதை:

ருமை நண்பர்களே, உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஏசு கிறிஸ்து சொன்ன தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை என் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100 ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால் என்ன செய்வீர்கள்? மீதமுள்ள 99 ஆடுகளையும் வயலிலேயே விட்டு விட்டு, தொலைந்த அந்த ஒன்றை தேடிச் செல்வீர்கள்தானே. அந்த ஆடு கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த ஆடு கிடைத்து விட்டால் அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை வாரி அணைத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வீடு திரும்புவீர்கள். பிறகு உங்களது நண்பர்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து என் ஆடு கிடைத்து விட்டது, இதை கொண்டாட எல்லோரும் என் வீட்டுக்கு விருந்து உண்ண வாருங்கள் என்று அழைப்பீர்கள்.

ஆடு மேய்ப்பவனுக்கு தொலைந்து போன ஆடு மிக முக்கியம். இந்த கதை நமது நாட்டில் உள்ள குடிமகனுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது.

உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீடு விளக்கில்லாமல் இருண்டிருக்கலாம். தயது செய்து அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள்.

ஒரு வகுப்பறையில் எராளமான சிறந்த மாணவர்கள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அன்புடன் கல்வியை ஆசிரியர்கள் சொல்லித்தர வேண்டியிருந்தது. இத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

எனது நாட்டில் உள்ள தலைவர்களே, நீங்கள் ஏராளமான மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் உடனடியாக உதவி தேவைப்படுவர்களை கண்டறிந்து அவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு நீங்கள் அழைத்து வர வேண்டும்.

பொது நிர்வாகத்தில் இருப்பவர்கள், கடைசி மனிதனின் தேவையறிந்து, அவனுக்கு அல்லது அவளுக்கு பிரியமுடன் பணி செய்ய வேண்டும்.

அதை போலவே நீதி மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும், பல்வேறு தடைகளைத் தாண்டிவந்து, உங்களை காண இயலாத கடைக்கோடி மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

மீன்வளத்துறையாகட்டும், வேளாண்மையாகட்டும், நுண்கலையாகட்டும் அல்லது கிராமப்புற மக்களின் சிறு சாதனையாகட்டும், தேசிய வளர்ச்சியில் கூட்டாளியாக இருக்கும் ஊடகத்துறை மக்களின் வெற்றியை கொண்டாட வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பரந்துபட்ட எதார்த்தத்தில் கிராமிய நிஜங்களின் சிறு உலகம் வசித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இதை உணர வேண்டும்.

இதைப் போல பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். அருமை குடிமக்களே நாம் எல்லோரும் இவ்வாறு செய்தால் இறைவன் நம்மோடு இருப்பார் என்பது நிச்சயம். நாடும் வளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும்.


-  அப்துல் கலாம் அவர்கள் 2006 குடியரசு தின விழாவில் பேசிய உரையிலிருந்து


Thursday, August 11, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 111


ற்றைக்கண் பிக்கு விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது அவர்கள் ஷோ என்ற திபெத்திய பகடை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். டோர்ஜேக்குப் பொழுது போகவில்லை என்றால் வீட்டுக்குள் விளையாட அந்தப் பகடை விளையாட்டையும், பாம்பு ஏணி விளையாட்டையும் லீ க்யாங் அனுமதித்திருந்தான். மைத்ரேயனுடன் வந்த சிறுவன் கௌதம் வெளியே சென்று விளையாட ஆசைப்பட்டாலும் வாசற்படியைத் தாண்ட காவல் வீரர்கள் அனுமதிக்காததால் வேறு வழி இல்லாமல் வீட்டுக்குள்ளேயே விளையாடும் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஷோ விளையாட்டை மைத்ரேயன் கௌதமுக்கு விளக்கி அவன் புரிந்து கொண்ட பிறகு மூவரும் விளையாட ஆரம்பித்தார்கள். டோர்ஜே முகத்தில் தெரிந்த சந்தோஷம் ஒற்றைக்கண் பிக்கு இது வரை பார்த்திராதது. அவனை தன் மகனைப் போலவே நேசிக்க ஆரம்பித்திருந்த பிக்குவுக்கு மனம் நிறைந்து போனது.

விளையாட்டின் போது அவரவர் குணாதிசயங்கள் வெளிப்படுவதை பிக்கு கவனித்தார். மைத்ரேயன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும் கூட அவன் எந்த உணர்வும் கட்டுப்பாட்டோடேயே வெளிப்பட்டது. கௌதம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான். அவ்வப்போது பலமாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். கலகலவென சிரித்தான். சில சமயங்களில் எழுந்து குதிக்கவும் செய்தான். டோர்ஜே கௌதமின் உற்சாகத்திலும், மைத்ரேயனின் அமைதியிலும் மாறி மாறி வியந்த மாதிரி இருந்தது. சில நேரங்களில் கௌதமின் உற்சாகத்தில் தானும் கலந்து கொண்டு டோர்ஜேயும் மெல்லக் கத்தினான். சமையல்காரன் வந்து எட்டிப் பார்த்தால் அவன் குரல் அப்படியே அமுங்கி விடும்.

ஆனால் கௌதம் எந்தக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்கவில்லை. திபெத்திய மொழி அறியா விட்டாலும் கூட மைத்ரேயனின் உதவி இல்லாமலேயே டோர்ஜேயுடன் சைகை மொழியில் சில ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்து புரிய வைத்தான். டோர்ஜேயும் சைகை கலந்து பேசிய போது அதை கவனமாகக் கேட்டு புரிந்து கொண்டான். டோர்ஜே மைத்ரேயனை விட கௌதமுக்கு மிக நெருக்கமாகி விட்டான்.....

சமையல்காரனின் அலைபேசி அடித்த சத்தம் ஒற்றைக்கண் பிக்குவுக்குக் கேட்டது. மெல்ல சென்று சமையலறைக்கு வெளியே நின்று அவன் என்ன பேசுகிறான் என்று கவனித்தார். சமையல்காரன் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்வான் என்று எதிர்பார்த்திருந்தாலும் கூட அப்போது ஒற்றைக்கண் பிக்குவுக்குப் பகீரென்றது...



லீ க்யாங்குக்கு மைத்ரேயன் சொல்வது அறிவு சார்ந்ததா இல்லை அடாவடித்தனமா என்பது புரியவில்லை. ” நன்றாக விளையாட முடிந்தால் தான் தியானமும் கைகூடும். அதனால் இது தியானத்தின் முதல்படியே... எதிலும் முழுமையாக ஈடுபட முடிந்தால் மட்டுமே ஒருவனால் தியானத்திலும் வெற்றியடைய முடியும். இந்த வயதில் உங்கள் மைத்ரேயனால் விளையாட்டு அல்லாத வேறொன்றில் முழுமையாக ஈடுபட முடியுமா?…”

இது வரை யாரும் விளையாட்டையும் தியானத்தையும் சேர்த்துச் சொல்லிப் படித்ததாய் அவனுக்கு நினைவில்லை. ’மைத்ரேயன் சொன்னபடி முழுமையாக ஈடுபட விளையாட்டு கற்றுத்தரும் என்றாலும் கூட விளையாட்டும், தியானமும் ஒன்றாகி விட முடியுமா?... விளையாட்டில் முழுமையாக ஈடுபட்ட எத்தனை பேர் தியானத்தில் முழுமையைக் கண்டிருக்கிறார்கள்?.... இந்த மைத்ரேயனை விரைவில் அப்புறப்படுத்தி விடுவது நல்லது, இல்லா விட்டால் தியானத்திற்குப் பதிலாக வேண்டாததை எல்லாம் டோர்ஜேக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்து விடுவான்...’

லீ க்யாங் சமையல்காரனிடம் சொன்னான். “இன்னும் சில நாட்கள் தான். அது வரை வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். வெளியே ஒரு அடி எடுத்து வைக்க மட்டும் விட்டு விட வேண்டாம். அந்த மைத்ரேயன் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திரு.... என்னவெல்லாம் செய்கிறான் என்பதை ஒன்று விடாமல் எனக்குச் சொல்....”

லீ க்யாங்குக்கு அடுத்ததாய் வாங் சாவொவிடம் இருந்து அழைப்பு வந்தது. “அந்த 16 பேரும் பல நாட்டுக்காரர்கள் என்றாலும் திபெத்திய பௌத்தம் என்ற முகநூல் குழுவின் உறுப்பினர்கள். அவர்கள் லாஸாவில் இருந்து ஒரு சுற்றுலா நிறுவனத்திலிருந்து ஒரு சிறிய பஸ்ஸில் திபெத்தைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பி இருக்கிறார்கள். நான் அந்த சுற்றுலா நிறுவனத்துக்குப் போய் பேசினேன். அவர்களோடு போன பஸ் டிரைவரின் அலைபேசி எண்ணை வாங்கி இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிய தொடர்பு கொள்ளப் பார்த்தேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் செய்தி மட்டும் வந்து கொண்டிருக்கிறது....”

அது அசாதாரண விஷயம் அல்ல. திபெத்திய பல மலைப்பகுதிகளில் பயணிக்கையில் அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவே முடியாது.

ஆனால் வாங் சாவொ தொடர்ந்து சொன்னான். “இதில் எனக்கு சந்தேகம் ஏற்படுத்துகிற விஷயம் என்ன என்றால் சுற்றுலா நிறுவனம் தந்த தகவல்படி அவர்கள் இன்னேரம் போயிருக்க வேண்டிய இரண்டு மூன்று இடங்களுக்கு நம் ஆட்களை அனுப்பிப் பார்த்தேன். அங்கெல்லாம் அப்படியொரு பஸ் வரவேயில்லை என்கிறார்கள்”

லீ க்யாங் இதில் ஏதோ ஒரு தில்லுமுல்லை உணர்ந்தான். ”தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இரு. அவர்கள் இருப்பிடம் தெரிந்தால் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்” என்று உத்தரவிட்டான்.

அந்த ஆட்கள் யாராக இருந்தாலும் மைத்ரேயனை நெருங்க மட்டும் கண்டிப்பாக முடியாது. அந்த அளவு பலத்த பாதுகாப்பு உள்ளது. எனவே அதில் அதிகமாய் கவனம் செலுத்த விரும்பாமல் லீ க்யாங் டோர்ஜேயை மைத்ரேயனாக அரங்கேற்ற என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு வெள்ளைத்தாளில் எழுத ஆரம்பித்தான். எழுதும் போது நோக்கமும் திட்டமும் தெளிவாக உருவெடுக்கின்றன.....

அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அலைபேசி அலறிய போது தான் அவன் கவனம் அதிலிருந்து மீண்டது. யார் என்று பார்த்தான். கோமாளி.

“சார் அந்த ப்ரோகிராமை செய்து விட்டேன். வரட்டுமா?” என்று கேட்டான். லீ க்யாங் வரச்சொன்னான். கோமாளி அரை மணி நேரத்தில் வந்தான். இரண்டு மணி இருபத்தி நான்கு நிமிடங்களில் அவனுடைய ப்ரோகிராம் ரகசியமாக உளவுத்துறை தளத்தில் பதிவேற்றப்பட்டது.

பின் மைத்ரேயன் என்ற அதிரகசியக் கோப்பு ஒன்றை லீ க்யாங் அந்த தளத்தில் உருவாக்கினான்.

கோமாளி சொன்னான். “இதை உங்கள் அதிகாரி யார் படித்தாலும் அந்தத் தகவல் பழையது போல் அந்தக் கோப்போடு சேர்ந்து விடும். ஒருவேளை முன்பு போல் பார்த்த தகவலை அழிக்க முயன்றால் அது அழிந்து போவது போலத்தான் அந்தக் கோப்பில் காட்டும். ஆனால் அடுத்த வினாடியே உளவுத்துறை தலைவருக்கும், உபதலைவரான உங்களுக்கும் அழித்த ஆள் பற்றிய தகவல் வந்து சேர்ந்து விடும்....”

தூண்டில் போடப்பட்டு விட்டது. அமானுஷ்யன் குறித்த ரகசியக்கோப்பைப் படித்து விட்டு தன் அடையாளத்தை அழித்து விட்டுப் போன அந்த ஆள் திரும்ப மைத்ரேயன் கோப்பிற்கு வரத்தான் போகிறான். அவன் முகமூடி கிழியத்தான் போகிறது..... எதிரிகள் அனைவரையும் தெரிந்து கொண்டு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்த திருப்தி அப்போதே அவன் மனதில் துளிர் விட ஆரம்பித்தது.



கௌதம் இரவு சாப்பிட்டு முடித்ததும் படுத்துறங்கி விட்டான். மைத்ரேயனும் டோர்ஜேயும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். கௌதம் இல்லாமல் மைத்ரேயனுடன் இருப்பதில் ஒரு அசௌகரியத்தை டோர்ஜே உணர்ந்தான். மௌனம் கனமாக இருந்ததால் அதைக் கலைக்க எண்ணி மைத்ரேயனிடம் கேட்டான். “நீ தாமரை சூத்திரம் படித்திருக்கிறாயா?”

மைத்ரேயன் தயங்காமல் சொன்னான். “இல்லை”

ஒற்றைக்கண் பிக்கு டோர்ஜேயிடம் தாமரை சூத்திரம் மிக முக்கியமான புத்தமத சூத்திரம் என்று சொல்லி இருந்தார். அதைப் படிக்காமல் புத்த மதத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் சொல்லி இருந்தார். அதனால் அவனுக்கு மைத்ரேயன் அந்த சூத்திரத்தைப் படித்திருக்காதது ஆச்சரியமாக இருந்தது.

டோர்ஜே கேட்டான். “தம்மபதம்?”

மைத்ரேயன் சொன்னான். “இல்லை”

டோர்ஜே திகைத்தான். புத்தரின் போதனைகளையே இவன் இது வரை படித்ததில்லையா? பெருமையுடன் அவன் மைத்ரேயனிடம் சொன்னான். “நான் படித்திருக்கிறேன்.... இந்த இரண்டும் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ படித்திருக்கிறேன்.....”

சற்று தூர அமர்ந்திருந்த ஒற்றைக்கண் பிக்கு அதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். தன் சீடனின் இந்தப் பெருமையை அதுவும் மைத்ரேயனிடமே சொன்னதை அவர் ரசிக்கவில்லை. தர்மசங்கடத்துடன் அவர் மைத்ரேயனின் முகத்தைப் பார்த்தார். மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “அப்படியா? நல்லது.” சொன்ன விதத்தில் கேலியும் இல்லை. ஆச்சரியமும் இல்லை.

அவனிடமிருந்து பிரமிப்பையோ அல்லது ஆச்சரியத்தையோ எதிர்பார்த்திருந்த டோர்ஜேக்கு ஏமாற்றமாய் இருந்தது. தியானத்தையும், பார்த்தே கற்றுக் கொள்ள வேண்டிய மற்றதையும் கற்றுத் தர இவனிடம் என்ன சரக்கு இருக்கிறது? தம்மபதம், தாமரை சூத்திரம் கூட இவன் படிக்கவில்லையே! லீ க்யாங்கும் ஆசிரியர் போல இவனிடம் ஏமாந்து விட்டானா?

மைத்ரேயன் பத்மாசனத்தில் அமர்ந்தான். தியானத்துக்குத் தயாராகிறது போல் தெரிந்தது. எனக்குச் சொல்லிக் கொடு என்று கேட்கிற மனநிலையில் டோர்ஜே இல்லை.... அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

மைத்ரேயன் சில வினாடிகளில் தியானநிலைக்குப் போய் விட்டான். அவன் முகத்தில் சாந்தமும் பேரமைதியும் தெரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் அந்த அமைதியை டோர்ஜேயும், ஒற்றைக்கண் பிக்குவும் உணர ஆரம்பித்தார்கள். சமையல்காரன் வேகமாக வாசற்கதவைச் சாத்தினான். டோர்ஜேயும், ஒற்றைக்கண் பிக்குவும் தூக்கிவாரிப்போட்டது போல் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் மைத்ரேயன் திரும்பியும் பார்க்கவில்லை. அவன் தியானம் தடைப்படவில்லை. சமையல்காரன் தானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான். அவனுக்கு மைத்ரேயன் உறங்கி விட்டானோ என்ற சந்தேகம் வந்தது. நேரம் போகப் போக அவனும் அந்த அமைதியை உணர்ந்தான்.

ஒற்றைக்கண் பிக்கு கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அந்தப் பேரமைதியில் தன்னையே அவர் சுயபரிசோதனை செய்து கொண்டது போலத் தெரிந்தது. சமையல்காரனோ விசித்து விசித்து அழுதான். ஏன் அழுகிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை.

டோர்ஜே அவர்களைத் திகைப்புடன் பார்த்து விட்டு மைத்ரேயனைப் பார்த்தான். இது தியானமா இல்லை மாயாஜாலமா? இவர்கள் ஏன் அழுகிறார்கள்?.......  சிறிது நேரத்தில் அந்த மாயாஜாலம் அவனையும் ஆக்கிரமித்தது போல் அவன் உணர்ந்தான். மனம் வார்த்தைகள் இல்லாத ஒரு அசாதாரண நிலையை எட்ட ஆரம்பித்தது.....

அந்த நேரத்தில் திடீரென்று தானாக தாமரை சூத்திரத்தின் ஒரு வாக்கியம் அவன் நினைவில் வந்து நின்றது.

”சந்தேகம் கொள்ளாதே! புனிதரும், தூயவருமான போதிசத்துவரை உன் மனதில் இருத்து. பெரும் துக்கத்திலும், துன்பத்திலும், மரணத்திலும், பிரளயத்திலும் அவரிடம் நீ தஞ்சமடையலாம்”

மைத்ரேயனையே அந்த சூத்திரம் அடையாளம் காட்டுவதாகத் தோன்ற, டோர்ஜே பெரும் சிலிர்ப்பையும், பிரமிப்பையும் அந்தக் கணம் உணர்ந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Thursday, August 4, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 110


 க்‌ஷயின் அண்ணா ஆனந்த் அலைபேசியில் தம்பியைத் தொடர்பு கொண்டான். மைத்ரேயனும், கௌதமும் கடத்தப்பட்ட தகவல் வெளியே கசியாமல் ரகசியமாகவே உளவுத்துறை பார்த்துக் கொண்டாலும் சிபிஐயில் இருக்கும் ஆனந்த் தாமதமாகவாவது தன் நண்பன் ஒருவன் மூலம் அறிந்தான். தம்பியாக அந்தத் தகவலைத் தனக்குத் தெரிவிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டான். 

“நீயும் கவலைப்படுவாய். தெரிந்து உன்னாலும் இப்போதைக்குச் செய்ய முடிந்தது எதுவுமில்லை....” அக்‌ஷய் சொன்னான்.

ஆனந்தால் அவன் சொன்னதை மறுக்க முடியவில்லை. ஆற்றாமையுடன் சொன்னான். “மைத்ரேயன் விவகாரத்தில் நீ ஈடுபடாமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது தானே....”

“என் மகன் கடத்தப்பட வேண்டும் என்பது விதியில் இருந்தால் சீனாக்காரனுக்குப் பதில் தலிபான் கடத்தியிருப்பான் அண்ணா...” பொறுமையாக அக்‌ஷய் சொன்ன போது தம்பியின் பெருந்தன்மையை எண்ணி ஆனந்த் மனம் நெகிழ்ந்தான். சேகர் உள்ளே புகுந்து குழப்பாமல் இருந்திருந்தால் வருண் கடத்தலின் போதே இது மைத்ரேயனுக்கான தூண்டில் என்பதை அக்‌ஷய் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்க மாட்டான் என்று ஆனந்த் நினைத்துக் கொண்டான்.

“இனி என்ன செய்யப் போகிறாய்?”

சற்று முன் தான் லீ க்யாங் லாஸாவில் இருந்து தனியாக தான் பீஜிங் திரும்பினான் என்று தகவல் இந்திய உளவுத்துறைக்கு வந்தது. அதனால் மைத்ரேயனும் கௌதமும் திபெத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் ஊகித்தார்கள்.

“நானும் ஆசானும் திபெத் போவதாக உள்ளோம்....இரண்டு நாளில் கிளம்பி விடுவோம்....” அக்‌ஷய் அண்ணனிடம் சொன்னான்.

“லீ க்யாங் அலட்சியமாக இருக்க மாட்டான். திபெத்தின் எல்லா நுழைவுகளிலும் கெடுபிடி அதிகமாகத் தான் இருக்கும்....”

“பார்ப்போம்....”

“கவனமாய் போய் வா. கௌதமோடு இந்தியா நுழைந்தவுடன் முதல் தகவல் சஹானாவுக்கு சொன்னால் அடுத்ததாய் எனக்குத் தான் சொல்ல வேண்டும். சரியா”

ஆனந்திடம் பேசி முடித்தவுடன் வருண் வந்தான். அவன் முகத்தில் இப்போது பழைய களை திரும்பி விட்டிருந்தது. தம்பி கடத்தப்பட்டது பேரிடியாக இருந்தாலும் “அவர்களுக்கு கௌதம் எதிரியல்ல. மைத்ரேயனுடன் சேர்ந்து கொண்டு போய் என் தலையீட்டைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அவ்வளவு தான். கௌதம் பிரச்னை இல்லாமல் வந்து சேர்ந்து விடுவான்” என்று வீட்டில் கிளிப்பிள்ளை மாதிரி அக்‌ஷய் சொல்லி இருந்ததும், அதற்கேற்ற மாதிரி கராச்சி துறைமுகத்தில் இருந்து புகைப்படம் வந்து சேர்ந்ததும் மற்றவர்களைப் போலவே வருணையும் சற்று நிம்மதியடைய வைத்திருந்தது. வந்தனாவும் அவள் குடும்பமும் இப்போது சுமுகமாகி விட்டதும் வருணைப் பழைய வருணாக மாற்றி விட்டிருந்தது. மகனைப் பழைய களையில் பார்க்க ஆரம்பித்ததில் அக்‌ஷய்க்கும் சந்தோஷமாக இருந்தது....

வருண் அக்‌ஷய் அருகில் உட்கார்ந்தான். அவனை ஏதோ சிந்தனை அழுத்துவது போல் தெரிய அக்‌ஷய் கேட்டான். “என்ன வருண்?”

“அவன்.... அவன்.... திரும்பவும் வருவானாப்பா?”

எவன் என்று அக்‌ஷய் கேட்கவில்லை. அவன் கேட்பது கௌதமை அல்ல என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். சேகரின் பெயரைக் கூடச் சொல்ல வருணுக்கு அருவருப்பாக இருக்கிறது..... மகன் தோளை இறுக்கியபடி அக்‌ஷய் சொன்னான். “வர மாட்டான்.... என்றைக்குமே வர மாட்டான்....”

வருணின் மனதில் இருந்த பாரம் இறங்கியது அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. வார்த்தைகள் இல்லாமல் தந்தையைக் கட்டிக் கொண்டான். “நன்றிப்பா.....”

சேகரை என்ன செய்தீர்கள் என்று வருணும் கேட்கவில்லை. என்ன செய்தேன் என்று அக்‌ஷயும் சொல்லவில்லை.



“இங்கேயும் ஒரு மைத்ரேயன் இருக்கிறானா? உங்கள் ஊரில் இந்தப் பெயர் அதிகமோ?” என்று கௌதம் படிகளேறிக் கொண்டே நண்பனைக் கேட்டான்.

”அப்படிக் கிடையாது. என் சொந்தப் பெயரே கூட அது இல்லை. சில பேர் என்னை மைத்ரேயன் என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதே போல் அந்தப் பையனும் வேறு பெயர் உடையவனாக இருப்பான். அவனை அந்த அதிகாரி போல் சிலர் மைத்ரேயன் என்று கூப்பிடுகிறார்கள்....” மைத்ரேயன் சொன்னான்.

கௌதமுக்கு குழம்பியது. ’ஏன் அப்படி வேறு பெயர் வைத்துக் கூப்பிட வேண்டும்?’

அவன் அந்த சந்தேகத்தைக் கேட்கும் முன் வாசற்கதவை அடைந்து விட்டார்கள். ஒற்றைக்கண் பிக்குவுக்கு மைத்ரேயன் நெருங்க நெருங்க இதயம் சம்மட்டியால் அடிப்பது போல் உணர்வது அதிகமாகிக் கொண்டு வந்தது. மைத்ரேயனின் பார்வை ஒரு கணம் அவரை ஊடுருவியது. அவருடைய அந்தராத்மாவையே அவன் பார்த்த மாதிரி இருந்தது. அவர் அவனை ஒழித்துக் கட்டும்படி நாசுக்காக லீ க்யாங்கிடம் சொன்னதைக் கூட அறிந்திருப்பானோ? அவன் உள்ளே நுழைந்தவுடன் அவரையும் அறியாமல் மண்டியிட்டு வணங்கினார். ஆனால் பேச வார்த்தைகள் எழவில்லை.

மைத்ரேயன் பதிலுக்கு தலை தாழ்த்தி வணங்கினான். டோர்ஜேக்கு தன் ஆசிரியர் அந்த மைத்ரேயன அப்படி வணங்கியது பிடிக்கவில்லை. அப்படியானால் அவரே அந்தச் சிறுவனை மைத்ரேயன் என்று ஒத்துக் கொண்டது போலத்தானே.... அவன் முகம் சிறுத்தது. சமையல்காரனும் ஒற்றைக்கண் பிக்குவின் வணக்கத்தை ரசிக்கவில்லை. அவன் வந்த இரண்டு சிறுவர்களையும் முறைத்தான். அங்கே ஒரு இறுக்கம் சூழ ஆரம்பித்தது.

ஆனால் உள்ளே நுழைந்தவுடன் மனம் மகிழ்ந்தவன் கௌதம் தான். தங்கள் வயதை ஒத்த பையன் உள்ளே இருப்பதைப் பார்த்தவுடன் அவன் ஆனந்தம் அடைந்தான். மைத்ரேயனிடம் சந்தோஷமாகச் சொன்னான். “ஓ இந்தப் பையனும் நம் வயது தான். மூன்று பேரும் நன்றாக விளையாடலாம்.....”

அவன் மைத்ரேயனிடம் தமிழில் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. சமையல்காரன் மைத்ரேயனிடம் கேட்டான். “அவன் என்ன சொல்கிறான்”

மைத்ரேயன் திபெத்திய மொழியில் மொழிபெயர்த்தான். கௌதம் அவன் சொல்லச் சொல்ல டோர்ஜேயை நெருங்கி கையை நீட்டி அவன் கையை குலுக்கி சந்தோஷமாக அறிமுகப்படுத்திக் கொண்டான். “நான் கௌதம்....”

மைத்ரேயன் மொழி பெயர்த்துச் சொன்ன விஷயமும், கௌதமின் நட்பான கை குலுக்கலும் டோர்ஜேயை திகைக்க வைத்து பின் நட்புடன் புன்னகை பூக்க வைத்தது. அவன் தன் வயதையொத்த பையன்களுடன் விளையாடிப் பல காலம் ஆகி விட்டது...

ஒற்றைக்கண் பிக்கு பெரும் திகைப்புடன் மைத்ரேயனைப் பார்த்துக் கொண்டே நின்றார். மூன்று பேரும் நன்றாக விளையாடலாம் என்று அந்தச் சிறுவன் சொன்னதை மைத்ரேயன் மொழிபெயர்த்த தொனியில் அதை வரவேற்கும் தோரணை அல்லவா இருக்கிறது. இவன் நிஜமாகவே மைத்ரேயன் தானா? டோர்ஜேயும் அந்த இன்னொரு சிறுவனும் இப்போதே நண்பர்களாகி விட்டது போல் இருந்தது. பக்கத்தில் சமையல்காரன் வேறு நிற்கிறான். அவன் என்ன நடக்கிறது என்பதை லீ க்யாங் காதில் உடனடியாகப் போட்டு வைப்பான். டோர்ஜேக்கு வேறு வினையே வேண்டாம்.....

அவர் மெல்ல மைத்ரேயனிடம் சொன்னார். “லீ க்யாங் அவர்கள் உங்களை எங்கள் மைத்ரேயருக்கு தியானம் சொல்லித் தரத்தான் இங்கே இருத்தி இருக்கிறார். நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டு காலத்தை வீணாக்குவதை அவர் அனுமதிக்க மாட்டார்.....”

டோர்ஜேக்கு அப்போது தான் சமையல்காரன் அங்கேயே நிற்பது நினைவுக்கு வந்தது. ஆசிரியரின் பேச்சுக்குப் பின்னால் உள்ள காரணத்தை விளங்கிக் கொண்ட அவன் மெல்லப் பின் வாங்கி ஒற்றைக்கண் பிக்கு அருகில் நின்று கொண்டான்.

மைத்ரேயன் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னான். “நன்றாக விளையாட முடிந்தால் தான் தியானமும் கைகூடும். அதனால் இது தியானத்தின் முதல்படியே....”

ஒற்றைக்கண் பிக்கு அதிர்ந்து போனார். இது வரை யாரும் இது போல் சொல்லிக் கேள்விப்பட்டதில்லை. சமையல்காரன் கண்களைக் குறுக்கிக் கொண்டு மைத்ரேயனைப் பார்த்தான்.

மைத்ரேயன் அமைதியாகத் தொடர்ந்தான். “எதிலும் முழுமையாக ஈடுபட முடிந்தால் மட்டுமே ஒருவனால் தியானத்திலும் வெற்றியடைய முடியும். இந்த வயதில் உங்கள் மைத்ரேயனால் விளையாட்டு அல்லாத வேறொன்றில் முழுமையாக ஈடுபட முடியுமா?"

ஒற்றைக் கண் பிக்குவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்கு ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. சமையல்காரன் சந்தேகக்கண்ணோடு அங்கு நடப்பதைக் கவனித்தான்.

மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் விளையாட்டும் வேண்டாம், தியானமும் வேண்டாம். விட்டு விடலாம். லீ க்யாங் அவர்கள் வந்தால் நீங்களே தெரிவித்து விடுங்கள்.... நாளைக்கு நான் சொல்லித்தர முன்வரவில்லை என்று என்னைச் சொல்லக்கூடாது....”

ஒற்றைக்கண் பிக்கு சமையல்காரனிடம் ”நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். சமையல்காரன் சரி, வேண்டாம் என்ற இரண்டிலுமே ஆபத்தை உணர்ந்தான். லீ க்யாங் என்ன சொல்வான் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. “நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள். எனக்கு வேலை இருக்கிறது” என்று சொல்லி விட்டு அவன் வேகமாக உள்ளே போய் விட்டான்.

சற்று முன் மைத்ரேயன் மேல் ஏற்பட்டிருந்த அசூயை டோர்ஜேக்கு குறைந்து போனது. எவ்வளவு சாமர்த்தியமாய் பேசி இந்த சமையல்காரனை உள்ளே துரத்தி விட்டான். வேவு பார்க்கும் நேரத்தில் ஆணியடித்தது போல் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நிற்கும் சமையல்காரனைத் துரத்துவது சாதாரண காரியம் அல்ல.

மெல்ல அவனும் சாமர்த்தியமாக சத்தமாகச் சொன்னான். “தியானம் பழக என்ன செய்வதானாலும் நான் செய்யத் தயார்.”

மைத்ரேயன் அவனைப் பார்த்துப் புன்னகைக்க டோர்ஜேயும் புன்னகைத்தான். ஒற்றைக்கண் பிக்குவுக்கு நடப்பது எதுவும் நல்லதாகத் தெரியவில்லை.



லீ க்யாங் திபெத்தின் எல்லா எல்லைகளிலும் சோதனைகளைப் பலப்படுத்தினான். முக்கியமாக விமானங்கள் மூலமாக வருபவர்களைத் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தக் கட்டளையிட்டிருந்தான். அமானுஷ்யன் எல்லா வேடங்களையும் எளிதாகப் போட்டு அந்த வேடங்களாகவே மாறிவிட முடிபவன் என்பதால் அவன் மகன் திபெத்தில் இருக்கக்கூடும் என்று தெரிய வந்தால் உடனடியாக ஒரு வேடம் போட்டு விமானம் வழியாகவே திபெத் போய் சேர வாய்ப்பு இருப்பதாக எண்ணினான். அதனால் அமானுஷ்யனாக இருக்கலாம் என்று சின்னதாய் சந்தேகம் வந்தாலும் அவனைப் படமும், வீடியோவும் எடுத்து அனுப்பி லீ க்யாங் அவனல்ல என்று திருப்தி அடைந்த பின்னரே விமானநிலையத்தைத் தாண்ட விடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். தினமும் வெளிநாடுகளில் இருந்து திபெத் நுழைபவர்கள் பற்றிய விவரம் புகைப்படங்களுடன் தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தான். அன்று வந்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட 16 வெளிநாட்டினர். வியாபாரிகள், பேராசிரியர்கள், புத்தமதத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்.... மூன்று விமானங்களில் ஏழு, ஐந்து, நான்கு என்ற எண்ணிக்கையில் வந்து சேர்ந்தவர்கள்.

மைத்ரேயன் விஷயத்தில் முடிவெடுக்க மாரா திபெத்தில் சைத்தான் மலையில் கூட்டிய கூட்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள் என்பதை அவன் அறிந்திராவிட்டாலும் மைத்ரேயன் திபெத்தில் இருக்கையில் எல்லாமே சந்தேகத்தை ஏற்படுத்கின்றன என்று எண்ணியவனாய் அந்த 16 பேர் திபெத்தில் எங்கு எப்படி போகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வாங் சாவொவிடம் உத்தரவிட்டான்.


(தொடரும்)

என்.கணேசன்


(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)


Monday, August 1, 2016

இன்றைய சிந்தனை - 1

"போராட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதங்களுள் ஒன்று என்று நான் திடமாகக் கூற முடியும். அந்தப் போராட்டம் நம்மைப் பிரயோஜனமான மனிதர்களாக, உறுதியும் பொறுமையும் நிறைந்தவர்களாக மாற்றி விடுகிறது. என்னுடைய திடமான நம்பிக்கை உலகில் கேடுகளே இல்லை என்ற எண்ணத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால்

1)உலகில் நல்லவையே பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன என்ற சந்தோஷமான நம்பிக்கையையும்,

2)நல்லவையே உலகில் நிலவும் பொருட்டு அவற்றுடன் ஒத்துழைக்க மனமார்ந்த முயற்சி அவசியம் என்ற கொள்கையையும்

ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரிடத்திலும் மிகச் சிறந்தவற்றையே காண்பதற்கு கடவுள் எனக்கு அளித்துள்ள சக்தியைப் பெருக்கிக் கொள்ள நான் முயற்சிக்கிறேன். அந்தச் சிறந்த அம்சங்களை என்னில் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் நான் முயலுகிறேன்.


-        -  குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று மிகப்பெரிய குறைபாடுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்தும் வெற்றி கண்ட ஹெலன் கெல்லர் கூறியது.