Monday, September 29, 2014

சகாப்தத்தில் என் பேட்டி!


காஃபி வித் எனர்ஜிட்டிக் எழுத்தாளர்:

சகாப்தம் இணைய தளத்தின் நித்யா கார்த்திகன் அவர்களுக்கு நான் தந்திருந்த பேட்டி:


உலகை மாற்றிய புரட்சியாளர்களில் பலர் அடிப்படையில் சிறந்த எழுத்தாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்கள் வாசிப்பவர்களின் மனதில் உத்வேகத்தையும் எழுச்சியையும் உண்டாக்கி உலகை பரிமாண வளர்ச்சியடைய செய்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க பல சிந்தனையாளர்கள் தனி மனிதனின் ஆளுமைக்கும் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும் வகையில் தங்களுடைய படைப்புகளை உருவாக்குகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய எழுத்து வாசிப்பவர்கள் மனதில் அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும் விதைத்து ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு எழுத்துலகில் கால் பதித்து வேகமாக வளர்ந்துவரும் எனர்ஜிட்டிக் எழுத்தாளர் இவர்.

ஆன்மீகம், ஆழ்மன சக்தி, தன்னம்பிக்கை, சுய முனேற்றம், இலக்கியம், ஜோதிடம், சமூகம் என பல துறைகளையும் ஆராய்ந்து  நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். மர்மங்களும் முடிச்சுகளும் நிறைந்த விறுவிறுப்பான நெடுங்கதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர். சாதாரண நிகழ்வுகளில் மறைந்திருக்கும் பெரிய உண்மையை, எளிய மொழியிலும் சுருக்கென்று மனதை தைக்கும் விதமாகவும் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் படைப்பதில் வல்லவர்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவருடைய தாய்மொழி துளு என்ற போதும் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் மீது பற்று கொண்டவர்... திரு என்.கணேசன் அவர்கள்... 


தற்போது இவர் எழுதிக்கொண்டிருக்கும் “மகாசக்தி மனிதர்கள் தொடர் ஒவ்வொரு வெள்ளியும் தினத்தந்தி ஆன்மிகம் பகுதியில் வெளிவருகிறது. இதில் அபூர்வ சக்திகள் கொண்ட யோகிகள், மனிதர்கள் பற்றி எழுதுகிறார். அது மட்டுமல்ல, இவருடைய வலைத்தளத்தில் “புத்தம் சரணம் கச்சாமி என்ற தொடர்கதையையும் எழுதிக்கொண்டிருக்கிறார்.  மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் இந்த நாவலின் தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா...? தலைப்பு மட்டும் அல்ல கதையுமே அந்த வகையைச் சேர்ந்ததுதான். இது பற்றி அவரிடம் பேசும் பொழுது,

"புத்தரின் மறு அவதாரமாக நம்பப்படும் மைத்ரேய புத்தர் தான் இந்த கதையின் மைய கதாபாத்திரம். இந்துக்களுக்கு கல்கி அவதாரம் போல பௌத்தர்களுக்கு மைத்ரேய புத்தர். இது பற்றி பழைய பௌத்த ஏடுகளில் குறிப்புகள் உள்ளன. மனிதர்களிடையே தர்மம் குறைந்து நன்மைகள் அழிய ஆரம்பிக்கும் போது புத்தரின் மறு அவதாரம் நிகழும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படி ஒரு அவதாரம் நிகழ்ந்துவிட்டது என்று லாமாக்கள் அந்தக் குறிப்புகளை வைத்து அறிந்து அதை ரகசியமாய் வைத்திருக்க, அந்தக் கதாபாத்திரத்தைக் கொல்ல சீன உளவுத்துறை கடுமையாக ஏற்பாடுகள் செய்கிறது. இப்படி ஒரு களத்தில் ஆரம்பிக்கிற நாவல் இது. பௌத்தர்களின் திரிரத்னம் என்று சொல்லப்படும் வழிபாட்டில் முக்கியமான இந்த("புத்தம் சரணம் கச்சாமி") முதல் வரி இந்த நாவலுக்குப் பொருத்தமான பெயராகப் பட்டது. புத்தரை சரணடைகிறேன் என்பது இதன் பொருள்" என்று மேலும் நமக்கு விளக்கமளிக்கிறார்.

திரு கணேசன் அவர்கள் எதையுமே போகிற போக்கில் அல்லாமல் கூர்ந்தாராய்ந்து எழுதக் கூடியவர் என்பதை மற்றும் ஒருமுறை நிரூபிக்கிறது 'ஆழ்மனதின் அற்புத சக்திகள்'. தினமலர், தினத்தந்தி, தினமணி, துக்ளக் போன்ற பத்திரிக்கைகளில் பேசப்பட்ட நூல். ஒரே ஆண்டில் நான்கு பதிப்புகள் கண்டு வாசகர்களிடம் அமோக வரவேற்படைந்த நூல்.


இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் பிரம்மிப்பூட்டும் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தியானம், யோகா, ஆல்ஃபா அலைகள், வியாதிகளை குணப்படுத்தும் ஆழ்மன சக்தி, தீய பழக்கங்களிலிருந்து விடுபட ஆழ்மன பயிற்சி, உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா, மரணவிளிம்பு அனுபவங்கள், மரணத்திற்குப் பின் என்ன? என்று பல விஷயங்களை ஆராய்ந்து ஆதாரங்களை அடுக்கியிருக்கிறார். இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது நம்பமுடியாத ஆச்சர்யங்களை வாசகர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களாகக் கூட சில இடங்களில் உணரக்கூடும்.

இந்த இடத்தில் என்னுடைய அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். 'இதயத்தில் ஒரு யுத்தம்' கதை எழுதிக் கொண்டிருக்கும் போது எவ்வளவு நேரம் சிந்தித்தும் என் கற்பனையில் சிக்காத சில நல்ல காட்சிகள், உறக்கத்தில் கோர்வை மாறாமல் திரையில் காண்பது போல் என் கனவில் வந்திருக்கின்றன. அவற்றை நான் அந்த கதையில் பயன்படுத்தியும் இருக்கிறேன். இதை பற்றி என்னுடன் நெருக்கமாக இருந்த தோழிகளிடம் கூறியபோது "ரொம்ப நேரம் ஒரே விஷயத்தை பற்றி யோசிச்சிட்டு இருந்தா இப்படி தான் கனவு வரும்..." என்று விளக்கம் கூறினார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன். ஆனாலும் ஒரு சிறு உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. 

'அது எப்படி...  என் கதைக்கு என்ன மாதிரிக் காட்சி இருந்தால் நன்றாக  இருக்கும் என்று நான் நினைத்தேனோ...! என்ன மாதிரிக் காட்சியை கற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனேனோ...  அந்த காட்சி அப்படியே அச்சு பிசகாமல்... தொடர்ச்சி மாறாமல் என் கனவில் வரும்?' - இந்த கேள்விக்கான பதில் சில வருடங்களுக்கு பிறகு திரு என்.கணேசன் அவர்கள் மூலம் எனக்குக் கிடைத்தது.


"மிக அபூர்வமான நேரங்களில் ஆழ்மனம் நம் தேடல்களுக்கு பதில் சொல்ல கனவுகளை ஏற்படுத்துவதுண்டு" - இந்த வாசகத்தை படித்த போது ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

இந்த புள்ளியில் தான் ஆழ்மனத்தின் சக்தியை என் மனம் நம்பத் துவங்கியது. ஆனாலும் சில சந்தேகங்கள் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான விளக்கங்களை அவரிடம் கேட்டேன்.

நம்முடைய மனதின் நினைவுகளுக்கு சக்தி இருக்கிறது என்றால் நம்மைப் பற்றய பிறருடைய நினைவுகளுக்கும் சக்தி இருக்குமா? கண்படுதல், திருஷ்டி, சகுனம் இவைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா

"கண்படுதல், திருஷ்டி, சகுனம் இவை எல்லாம் முற்றிலும் அர்த்தமில்லாதவை என்று சொல்ல முடியாது. ஆனால் அவை எல்லாம் பாதிக்கும் அளவு நாம் பலவீனமாக இருந்தால் மட்டுமே நம்மை பாதிக்கும். ஆழ்மனசக்தியால் நாம் நம்மை பலப்படுத்திக் கொண்டால் அவை எல்லாம் பாதிக்க முடியாது"

ஆழ்மனதின் அற்புத சக்திகள் புத்தகத்தில் மரணவிளிம்பிற்கு செல்லாமலேயே ஆன்மா உடலை பிரிந்து மீண்டும் உடலை அடைய முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மா உடலை பிரிந்துவிட்டாலே அது மரணம் தானே?

"உடலை விட்டு ஆன்மா மிகக்குறுகிய காலத்திற்கு பிரிந்து மீண்டும் உடலை அடைவது பற்றி ஆதாரங்களுடன் ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் எழுதியிருந்தேன். OBE என்று சொல்லப்படும் Out of Body Experience பற்றி ஏராளமாக மருத்துவ நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவை எல்லாமே கிட்டத்தட்ட குறுகிய கால (சில நிமிட) அனுபவங்களாக இருக்கின்றன.

நீங்கள் கேட்டது போல உடலை ஆன்மா பிரிந்தாலே மரணம் என்றாலும் இந்த நிஜ சம்பவங்களில் மரணம் முழுமையாக நிகழ்ந்து விடவில்லை. திரும்பவும் உடலுக்கு ஆன்மாவை இழுக்கக்கூடிய ஏதோ ஒன்று உடலில் தங்கி இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது".

ஆழ்மன சக்தியின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும் என்றால் மரணத்தை மட்டும் ஏன் தவிர்க்க முடியவில்லை?

"உருவான எல்லாவற்றிற்குமே ஏதோ ஒரு நாள் அழிவு உண்டு. அது இயற்கையின் விதி. ஆழ்மனசக்தியால் இயற்கையின் எந்த மகத்தான விதிகளையும் மாற்றி விட முடியாது. ஆனால் இயற்கையின் சூட்சுமங்களைக் கண்டறிந்து அதைத் தனக்கு சாதகமாக ஆழ்மனசக்தி மூலம் ஒருவன் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியம், அபூர்வ சக்திகள் ஆகியவை இயற்கையின் விதிகளை அனுசரித்தே, அவற்றிற்கு உட்பட்டே சாத்தியமாகிறதே தவிர எதிர்த்து இயங்கி சாத்தியமாவதில்லை" 

எதிர்மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது என்று படித்திருக்கிறேன். ஆனால் நம்மை மீறி சில நேரங்களில் எழும் எதிர்மறை எண்ணங்களை பிடிவாதமாக தவிர்க்க வேண்டியது அவசியமா? அதை எப்படி செய்வது?

"எதிர்மறை எண்ணங்களை வெல்வது அதை எதிர்த்துப் போராடியல்ல. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டே போய் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமே இல்லாமல் போகும்படி வைத்துக் கொள்வது. நம்மை மீறி எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் போது பிடிவாதமாக தவிர்க்க முடியாது. போராடப் போராட அவை வலிமை தான் பெறும். அவை தோன்றும் ஆரம்ப கணங்களிலேயே அதற்கு எதிரான எண்ணங்களிலும், செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தால் அவை போய் விடும். முறையான ஆழமான சிந்தனைகளாலும் கூட எதிர்மறை எண்ணங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும்" - கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் பதில் கிடைத்தது.

பொங்கிவரும் கடலாய் வாசகர்களை தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும் எந்த ஒரு புத்தகத்தையும் அதன் ஆசிரியர் அர்ப்பணிப்போடு தான் படைத்திருக்க வேண்டும். இந்த புத்தகமும் அந்த வகையைச் சேர்ந்தது தான் என்பது என் எண்ணம். அதை திரு கணேசன் அவர்கள் அடுத்து கூறுய வார்த்தைகள் உறுதிப்படுத்தின.

"இந்த புத்தகத்தின் கடைசி பத்து பன்னிரண்டு அத்தியாயங்களை நான் தியான மனநிலையில் இருந்து கொண்டே எழுதியிருக்கிறேன். அந்த நிலை அமையும் வரை எழுதாமல் காத்திருந்திருக்கிறேன். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். முடிக்கையில் ஒரு ஆத்ம திருப்தியை உணர்ந்திருக்கிறேன்". - எழுத்து என்பது சிலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு அது ஒரு தவம். இவர் எந்த வகையை சேர்ந்தவர் என்று நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இவ்வளவு அர்பணிப்போடும்  ஈடுபாட்டோடும் எழுதும் இவருக்கு எழுத்தில் ஆர்வம் எப்போது எதனால் வந்திருக்கக் கூடும்? அதிலும் குறிப்பாக ஆன்மீக தேடலை சார்ந்தே இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக தோன்றுகிறதே!

"சிறு வயதில் இருந்தே நிறைய படிப்பவன் நான். சில எழுத்துக்களைப் படிக்கையில் இதை விட அழகாக நம்மால் எழுத முடியும் என்று தோன்றியதுண்டு. அந்த எண்ணமே எழுத வைத்தது என்று நான் நினைக்கிறேன். சிறு வயதில் இருந்தே ஆன்மீக நாட்டம் எனக்கு அதிகம். அதனால் அதிகமாக நான் எழுதுவதில் ஆன்மீகம் கலந்து விடும்"

ஆன்மீகம் என்றால் என்ன? அது கடவுள் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் தானா? அல்லது வேறு ஏதேனும் கூட அதில் உள்ளதா?

"ஆன்மீகத்தை சில வார்த்தைகளில் விளக்கி முடிப்பது கஷ்டம். எத்தனை சொன்னாலும் அதில் விட்டுப் போனது ஏதாவது கண்டிப்பாக இருக்கும். பொதுவாக நம்மிடம் உள்ள இறைநிலையை உணர்வதும் அதை அடைவதும் ஆன்மீகம். அல்லது நமக்கும் இறைசக்திக்கும் உள்ள தொடர்பை உணர்வது ஆன்மீகம். அதற்காக நாம் செய்யும் அனைத்துமே ஆன்மீகம்"

ஆன்மீகத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பு உள்ளதா

நிறைய உண்டு. நான் அறிந்த பெரும்பாலான தன்னம்பிக்கையாளர்கள் ஆன்மிகவாதிகளே. அவர்களது தன்னம்பிக்கை இறைவன் என்னுடன் இருக்கிறான், அவன் என்னைக் காப்பான் என்கிற நம்பிக்கையால் ஆழப்படுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபடாத, அதில் நம்பிக்கை இல்லாத ஆட்களுடைய தன்னம்பிக்கை பிரச்னைகள் ஓரளவு வரும் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கிறது. அதற்கு மேல் நிலைமை மோசமாகும் போது அறிவு இது நம் சக்திக்கு மிஞ்சியதுஎன்று எடுத்துரைக்க ஆரம்பிக்கிறது. தன்னம்பிக்கை தளர்கிறது. ஆனால் உண்மையான ஆன்மிகவாதிகளுக்கு இறைவனுக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்பதால் என் இறைவன் அருள் இருக்கும் வரை எதுவும் என்னால் சமாளிக்க முடியாதது அல்லஎன்கிற உணர்வு திடமாக இருக்கும். அதுவே அவர்களது தன்னம்பிக்கையை அசைக்க முடியாததாக மாற்றி விடுகிறது.

 இவருடைய கதைகளில் எனக்கு பிடித்த அம்சம், முக்கிய கதாபாத்திரகள் மிகவும் தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அடிப்படையில் அவர் மனதில் உள்ள தன்னம்பிக்கையா? அல்லது வாசகர்களுக்கு முடிந்த அளவு தன்னம்பிக்கையை தன்னுடைய எழுத்தின் மூலம் ஊட்ட வேண்டும் என்கிற எண்ணமா? - என்னுடைய இந்த கேள்விக்கு "இரண்டும் தான்" என்று பளிச்சென்று பதில் சொன்னவர் "பல நூறு கட்டுரைகளில் தெரிவிப்பதை விட உயிருள்ள கதாபாத்திரங்கள் மூலம் தெரிவிக்க முடிந்தவை ஏராளம். அந்த தாக்கமும் வீரியம் உள்ளதாக இருக்கும்" என்று விளக்கமளித்ததோடு மனிதரில் எத்தனை நிறங்கள் சிவகாமியே தன்னுடைய மனதிற்கு நெருக்கமான கதாப்பாத்திரம் என்றும் கூறுகிறார்..

பிறருக்கு தன்னம்பிக்கை என்னும் ஊட்டச்சத்தை எழுத்தின் மூலம் கொடுக்கும் இவர் 'அடுத்து என்ன செய்வது?' என்று புரியாமல் நிலைதடுமாறி நின்ற தருணம் ஏதேனும் இருக்குமா? அப்படி இருந்தால் அந்த சூழ்நிலையை எப்படி கடந்து வந்திருப்பார்

"அப்படி சில தருணங்கள் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இறைவனையே நான் பலமாகப் பிடித்திருந்தேன். அந்த நேரங்களில் என்ன செய்வது சரி என்று உள்மனம் சொல்கிறதோ அதைச் செய்து பொறுமையாக காத்திருந்திருக்கிறேன். சூழ்நிலையை மிகச்சுலபமாக கடந்தது மட்டுமல்லாமல் அந்த தருணங்களுக்குப் பின் முன்பிருந்ததை விட ஒருபடி உயர்ந்தும் இருக்கிறேன்" 

தன்னம்பிக்கையை பற்றி பேசும் பொழுது அமானுஷ்யனைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. ஆசிரியர் வெகுவாய் திட்டமிட்டு ரசித்து உருவாக்கிய கதாப்பாத்திரம் அமானுஷ்யன் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை என்றால் அந்த கதாபாத்திரம் அவர்  மனதில் எந்த புள்ளியில் உதித்திருக்கும்?

"அமானுஷ்யன் நான் மிக ரசித்து உருவாக்கிய கதாபாத்திரம் என்பது உண்மை. பழைய ஆங்கிலத் திரைப்படங்களான கராத்தே கிட் போன்ற படங்கள் எனக்கு மிகப்பிடிக்கும். வர்மக்கலை மீதும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதெல்லாமாக சேர்ந்து தான் அமானுஷ்யன் கதாபாத்திரம் உருவாகக் காரணமானது"

வலைதள வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற அமானுஷ்யன் கதை முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகே புத்தகமாக வெளிவந்துள்ளது. எதனால் இந்த தாமதம்?

"வாசகர்களிடையே அமானுஷ்யன் பெற்ற வரவேற்பு நீங்கள் கூறியபடி அமோகமானது தான். எழுதி முடித்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும் அந்த கதாபாத்திரத்தை தங்கள் அபிமான கதாபாத்திரமாகச் சொன்ன வாசகர்கள் பலர். அத்தனை பெரிய நாவலை பதிக்க பதிப்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். அதன் நீளத்தைக் குறைத்தால் வெளியிடலாம் என்று சொல்லப்பட்ட போது நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.  அப்படிச் செய்வது நாவலின் உயிரோட்டத்தைப் பாதிக்கும் என்று நினைத்தேன். திரும்பத் திரும்ப படித்ததாக வாசகர்கள் சொன்ன நாவலை குறைத்து சிதைக்க என் மனம் ஒப்பவில்லை. தற்போதைய என் அனைத்து நூல்களையும் வெளியிட்ட ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிஷர்ஸ் பரம(ன்) இரகசியம் நாவலின் வெற்றியைத் தொடர்ந்து அமானுஷ்யனையும் பதிக்க முன்வந்தார்கள். 600க்கும் மேற்பட்ட பக்கங்களில் அமானுஷ்யன் வெளியாகியது"

இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் இவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று எடுத்துரைக்கின்றன என்றால், இவர் நல்ல எழுத்தாளர் மட்டும் அல்ல... நல்ல ப்ளாகரும் கூட எனதை இவருடைய வலைத்தளம் நிரூபிக்கிறது. கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று அனைத்தும் வகை பிரிக்கப்பட்டு அடுக்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் பற்றிய செய்திக் குறிப்பும் அவருடைய புத்தகங்கள் பற்றிய விபரங்களும்  வாசகர்களின் பார்வைக்கு சுலபமாகக் கிடைக்கின்றன.

"மதங்களில் சிறைப் பட்டுவிடாத ஆன்மீகம்" இது அவருடைய வலைதளத்தில் நான் படித்த வாசகம். மதங்களில் மனிதன் ஏன் சிறைப்படக் கூடாது? மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தோன்றுகிறதே! மதத்தை துறந்துவிட்டு ஆன்மீகத்தை மட்டும் பற்றிக்கொள்வது என்பது சாத்தியமா? - இதை பற்றி கேட்ட போது

"இறைவன் அல்லது இறைநிலை இலக்கு என்றால் மதங்கள் வழிகள் மட்டுமே. பல நேரங்களில் இலக்கான இறைவனை விட அதிகமான முக்கியத்துவத்தை பாதைகளான மதங்கள் பெற்று விடுவதுண்டு. அப்போது இலக்கான இறைவனை அடைய முடியாமல் மனிதன் அப்பாதையிலேயே சிறைப்பட்டு விடுகிறான். அதைத் தான் நான் அப்படிக் குறிப்பிட்டுள்ளேன். எத்தனை அழகான பாதையானாலும் கடக்க வேண்டியது தான். இலக்கே பிரதானம்.

எந்த மதத்தையும் சாராமல் இருந்தும் ஆன்மீகமாக ஒருவரால் இருக்க முடியும். ஆனால் சாதாரண மனிதர்களால் அது சாத்தியப்படாது. ஞானம் பெற்ற மனிதர்களால் மட்டுமே அது சாத்தியம்" என்று பதிலளித்தார்.

'ஆறாத மனக்காயங்களை ஆற்றுவது எப்படி?' - இந்த கட்டுரையை படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இவரிடம் இந்த கேள்வியை கேட்க தோன்றியது. தாங்க முடியாத இழப்பு அல்லது துக்கத்திலிருந்து குறுகிய காலத்தில் எப்படி மீள்வது

"சில இழப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது பாதிப்பது இயல்பே. அப்படி பாதிக்கப்படாமல் இருப்பது மனதளவில் விலகி இருக்கின்ற விஷயங்களில் மட்டுமே சாத்தியம். ஆனால் பாதிக்கப்பட்டாலும் அந்த துக்கங்களிலேயே தங்கி விடுவது அறிவோ, பக்குவமோ அல்ல. எதிலுமே மிக அதிகமான பற்றுதல் என்றுமே துக்க காரணி தான். அதனால் முதலில் மிதமாக இருத்தல் முதல் படி. புத்தரின் போதனைகளில் மிக முக்கியமான அம்சம் இது தான். Middle Way என்று அவர் சொல்வது இதைத் தான். நல்ல பொழுதுபோக்குகள், நல்ல நட்புகள், நல்ல புத்தகங்கள் ஆகியவை எல்லாம் நம்மை சீக்கிரம் துக்கத்தில் இருந்து மீள வைக்கும் வலிமை படைத்தவை"

உடல்நலம் மனநலம் இரண்டிலுமே நண்பர்களின் பங்கு அதிகமாக இருப்பதாக டாக்கர் பெலர்லி ஃபெர் கூறியருப்பதை, 'ஆராய்ந்து பழகுங்கள்' கட்டுரையில் படித்தேன். அதை பற்றி விளக்கம் கேட்ட போது,

"எந்த மாதிரி மனிதர்களுடன் அதிகம் பழகுகிறோமோ அவர்களது குணாதிசயங்கள் நம்மையும் அறியாமல் சிலவாவது நம்மை ஒட்டிக் கொண்டு விடும். அதனாலேயே ஆராய்ந்து பழகுவது மிக முக்கியமாகிறது. அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்று சொல்லும் பழமொழி மிக அர்த்தபூர்வமானது.  ஆயந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும் என்று வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். அதே போல அவர் வார்த்தைகளிலேயே இடுக்கண் களைவதும் நட்பு தான்" என்று கூறுகிறார்.

நிறைவான வாழ்க்கையை தீர்மானிப்பது எது? பூர்த்தி செய்யப்பட்ட ஆசைகளா? ஆசையை துறந்துவிட்ட வெற்று மனமா

"ஆசைகள் அனைத்தும் பூர்த்தியான மனிதன் இது வரையில் பிறக்கவில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. ஏதோ சில ஆசைகளாவது கைகூடாமல் போவது தான் யதார்த்த வாழ்க்கை. ஆசையைத் துறக்க வேண்டும் என்பதே ஒரு ஆசை தான். அதனால் ஆசைகளில் இருந்து தப்பிக்கவும் வழியில்லை. பூர்த்தி செய்து திருப்தி அடைவதும் சாத்தியமில்லை.

மிக முக்கியம் என்று ஒருவன் நினைக்கும் விஷயங்களில் ஓரளவு திருப்தி எட்டும் வரையாவது சாதித்திருப்பதும், உண்மையாக நேசிக்கும் சிலரையாவது சம்பாதித்திருப்பதும், மனசாட்சி உறுத்தாத அளவுக்கு எதையும் செய்யாமலிருப்பதும் தான் நிறைவான வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்று நினைக்கிறேன்" 
தெளிவான வார்த்தைகளில் நம்முடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கும் திரு கணேசன் அவர்கள் ஜாதகத் துறையிலும் பரிட்சயம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தை பற்றிய சில பொதுவான சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும். அதை பற்றியும் கேட்டு தெரிந்துக்கொள்ள நினைத்தேன்...

ஜாதகம் என்றால் என்ன? எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும்?

"இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் எழுத எனக்கு சிறிய புத்தகமே எழுத வேண்டி வந்தது. அதை சுருக்கமாகச் சொல்வதென்றால் ஜாதகம் என்பது நம் பூர்வஜென்ம கணக்கு. சம்பாதித்திருக்கும் பாவ புண்ணியங்களை  இந்த இந்த கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கிரகநிலைகள் தெரிவிக்கின்றன. அந்தக் காலங்கள் பற்றி முன்பே தெரிந்து கொள்வது நம் செயல்களை அதற்கேற்றாற்போல வகுத்துக் கொள்ள உதவும். மேலும் விரிவான தெளிவான விளக்கங்கள் அந்த சிறிய நூலில் கிடைக்கும்"

பிறந்த நேரத்தைக் கொண்டுதான் ஜாதகம் கணிக்கப் படுகிறதா? அப்படியென்றால் ஆபரேஷன் செய்து பிரசவிக்கப்படும் குழந்தைகளின் ஜாதகம் பலிக்குமா பலிக்காதா?

"பிறந்த நேரத்தைக் கொண்டு தான் ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஆபரேஷன் செய்து பிரசவிக்கப்படும் குழந்தைகளின் ஜாதகத்திலும் மாற்ற முடியாத பல விஷயங்கள் உள்ளன. கிரகங்களில் சந்திரன் மட்டுமே இரண்டரை நாளில் ஒரு ராசி விட்டு மறு ராசிக்கு மாறுகிறது. மற்ற கிரகங்கள் பெரும்பாலும் ஒரு மாதம், ஒரு வருடம், இரண்டரை வருடங்கள் என்று ஒரு ராசி விட்டு அடுத்த ராசிக்கு மாறுபவை. இவையெல்லாம் மாற்ற முடியாத மிக முக்கிய கிரகநிலைகள். பிறந்த நட்சத்திரம், லக்னம் இவையெல்லாம் மாற்ற முடிந்த நேர காலத்தில் வருபவை. இது கூட விதி நிச்சயித்திருந்த நேரத்தின் படியே உங்கள் உத்தேசமும் இருந்தால் தான் உங்களால் மாற்ற முடியும். இல்லா விட்டால் மருத்துவர் தாமதம், தவிர்க்க முடியாத மற்ற ஏதோ ஒரு காரணம் வைத்து தள்ளிப் போய் விதிப்படியான நேரத்தில் தான் குழந்தை பிறக்கும்"

ஜென்ம பலன்கள் உண்மையா? மறுபிறவி உள்ளதா?

"ஜென்ம பலன்கள் உண்மை. இப்பிறவியின் கர்மவினைகளுக்கேற்ப மறுபிறவி அமையும்"

கடவுள், பிறப்பு இறப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

"கொஞ்சமாய் சொல்லி விளங்க வைக்கும் விஷயங்கள் அல்ல இவை. அப்படி சொல்ல முயற்சி செய்தாலும் ஒவ்வொரு விளக்கத்திலும் நூறு கேள்விகள் எழும். முடிவில் தெளிவை விட குழப்பமே மிஞ்சும்.  
உதாரணத்திற்கு பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் உள்ள அனைத்தையும் ஒரு ஒழுங்குமுறையோடு இயக்கிக் கொண்டிருக்கும் மகாசக்தி கடவுள் என்று சொல்லலாம். அந்த கடவுள் ஏன் பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும். ஏன் அதை வழி நடத்த வேண்டும், அவரால் சும்மா இருக்க முடியாதா, அவரைப் படைத்தது யார் என்பது போன்ற கேள்விகள் எழும். உள்ளுணர்வினால் நம்மால் உணர முடியும் போது கேள்விகள் அற்றுப் போகும். ஆனால் உள்ளுணர்வின் மூலமாகவே அடுத்தவருக்கு உணர்த்த முடியாமல்  நாம் வார்த்தைகளையே பயன்படுத்தியாக வேண்டி இருப்பதால் இந்தப் பிரச்னை எழுகிறது"

ஜாதகக்காரர்கள் பரிந்துரைப்படி கோவிலில் செய்யப்படும் பரிகாரங்கள் நேர்த்திக்கடன்களை ஏன் செய்ய வேண்டும்

"சில கோயில்களுக்கு சில விசேஷ சக்திகள் இருக்கின்றன. அங்கு சென்று பக்தியுடன் தொழுவதால் அந்த சக்திகளால் சில நன்மைகள் ஏற்பட்டு நம் பிரச்னைகளின் தீவிரம் குறையலாம். ஆனால் விதிப்படி அனுபவிக்க வேண்டியிருப்பவற்றில் இருந்து ஒருவர் முழுவதுமாக தப்பித்து விட முடியாது"

ஏவிவிடுதல்... பில்லி... சூனியம் எல்லாம் உண்மையா?

"இவை முழுப் பொய்கள் அல்ல. இவற்றில் உண்மையின் அம்சங்கள் உண்டு. ஆனால் இவை பலவீனமாக இருப்பவர்களையே பாதிக்க முடிந்தவை. நோய்க்கிருமிகள் மிக  ஆரோக்கியமாக இருப்பவரை ஆக்கிரமித்து நோயில் ஆழ்த்தி விட முடியாது. நோய்க்கிருமிகளை தோற்கடிக்கக்கூடிய எதிர்ப்பு சக்திகள் நிறைய உள்ளவரைத் தாக்கினாலும் அவை தோற்று அழிந்து விடும். எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பலவீனமானவரை ஜெயித்து நோயில் தள்ளிவிடும். அது போலத் தான் நீங்கள் சொல்லி இருக்கும் மூன்றும். ஆன்மீகம் மற்றும் மனோபலத்துடன் இருப்பவர்களை எதுவும் செய்ய முடியாது. பயம், மன பலவீனம் உடையவர்களை தாக்கி கஷ்டப்படுத்தும்.

ஆனால் மிகப்பெரிய நிரந்தர பாதிப்பு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றை செய்பவர்களுக்குத் தான் நேரும். அப்படிச் செய்யும் நபர்கள் முடிவில் தாங்கள் ஏற்படுத்திய துன்பங்களுக்கு ஆயிரம் மடங்கு துன்பங்கள் அனுபவித்து அழிந்து போவார்கள்"

வெகு நேரம் திரு நாராயண கணேசன் அவர்களுடைய படைப்புகளையும் அதை சார்ந்த சந்தேகங்களையும் கேட்டு தெளிவடைந்த எனக்கு தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

"தொழிலில் நான் வங்கி ஊழியன், எழுத்தாளன். நிறைய படிப்பவன். சாமானிய ஜனங்களுக்கும் நல்ல விஷயங்கள் போய்ச் சேர வேண்டும் என்ற பேராவல் கொண்டவன். என் எழுத்தினால் புகழும், செல்வமும், விருதுகளும் கிடைப்பதை விட படிப்பவர்களுக்கு பயன்பாடு அதிகம் கிடைப்பதே உண்மையான வெற்றி என்று ஆத்மார்த்தமாக நம்புகிறவன். அன்பும், அமைதியும், திருப்தியும் உடையவன். எதிர்மறை உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால் சில விஷயங்களில் கொஞ்சம் சோம்பேறி, சில விஷயங்களில் அடிப்படையான சாதாரண விஷயங்கள் கூட அறியாதவன்...

என் மனைவி அன்பானவர், சுறுசுறுப்பானவர். எங்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் இன்ஜீனியரிங் முதலாமாண்டு படிக்கிறார். இரண்டாம் மகள் ப்ளஸ் ஒன் படிக்கிறார். இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மூத்த மகள் ஓவியம் அழகாக வரைவார். இரண்டாம் மகளுக்கு இசையில் நல்ல ஆர்வம்.

எனக்கு ஒரு சகோதரன், இரு சகோதரிகள். நாங்கள் நான்கு பேரும் திருமணமாகி குழந்தைகள் ஆன பின்னும், (ஒரு சகோதரி பேரன் எடுத்து விட்டாள்), இன்றும் மிக அன்பாகவும் நெருக்கத்தோடும் இருக்கிறோம்".

ஆன்மீகம் சார்ந்த இவருடைய எழுத்துக்களை இவருடைய குடும்பத்தார் எப்படி பார்க்கிறார்கள்?

"அவர்கள் பாராட்டுவதும் இல்லை. சிறுமைப்படுத்துவதுமில்லை. குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதே அவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி என்று நான் நினைக்கிறேன்"

இவர் எப்பவுமே சீரியசான மனிதர் தானோ! விளையாட்டு மற்றும் சிறு கேளிக்கைகளுக்கு இவர் வாழ்வில் இடம் இருக்கிறதா இல்லையா?

"என் எழுத்தின் அளவு நான் ஆள் சீரியஸ் இல்லை. வீட்டில் கேலியும் கிண்டலும் நானும் செய்வேன். வீட்டிலும் செய்வார்கள். அதையும் ரசிப்பேன். வீட்டில் வேண்டும் என்றே அவ்வப்போது அவர்கள் வம்புக்குப் போய் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் செய்வேன். இது போன்ற விஷயங்கள் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?

ஏப்ரல் மாதம் என் குடும்பமும், தம்பி குடும்பமும் சேர்ந்து காஷ்மீர் போய் வந்தோம். சென்ற வருடம் சகோதர சகோதரியர் குடும்பங்களும் சேர்ந்து கர்னாடகாவில் கோயில் தலங்களுக்குப் போய் விட்டு வந்தோம். ஆனால் தினசரி வாழ்க்கையில் கொஞ்சம் பிசி தான். வங்கி வேலையும், எழுத்து வேலையும், மற்ற வேலைகளும் சேர்ந்து கொள்வதால் பொழுதுபோக்குக்கு நேரம் குறைவு"

இப்படி நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இவருடைய இலக்கு தான் என்ன?

"ஆன்மீகத்திலும், எழுத்திலும் சிகரங்களை எட்ட வேண்டும் என்பது என் இலக்கு. அந்தப் பயணத்தில் முன்னேற்றம் தொடர்ந்து இருந்தாலும் அவ்வப்போது சில சறுக்கல்களும் உண்டு. அதிலிருந்து கற்றுக் கொண்டு திரும்பத் திரும்ப மீண்டு பயணத்தைத் தொடர்கிறேன். இலக்கை அடைகிறேனோ இல்லையோ ஆரம்பித்த இடத்தில் இருந்து நிறைய தூரம் வந்திருக்கிறேன் என்பதே என் இப்போதைய ஆறுதல்!"

இலக்கை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் இவர் நிச்சயமாக கூடிய விரைவில் சிகரத்தை எட்டுவார் என்னும் நம்  நம்பிக்கை நிஜமாக கடவுள் துணை நிற்கட்டும்.  


நன்றி: சகாப்தம்
http://www.sahaptham.com/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

Thursday, September 25, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 13


ந்த இரண்டு பேரும் இன்னும் உட்காரவில்லை என்பதை ஆசான் கவனித்தார். அவர்கள் சுவரில் இருக்கும் ஓவியங்களை ரசிப்பவர்கள் போல் பின்னால் அங்குமிங்கும் நகர முடிந்த வரை சென்று அங்கு அமர்ந்திருந்த பிக்குகளைக் கூர்ந்து கவனித்தார்கள். ஆசான் தன் முதுகில் அவர்கள் பார்வையை உணர்ந்தார். நிறைய  பேர் அந்த இடத்தை அடைத்துக் கொண்டு தியானத்தில் அமர்ந்திரா விட்டால் அந்த இருவரும் ஏதாவது சாக்கில் முன்னால் அமர்ந்திருக்கும் ஆசான் அருகே வரை வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தியானம் முடிந்த போது அத்தனை பேரும் எழுந்தார்கள். ஆசானும் எழுந்தார். ஆனால் பழைய ஆசானாக அல்ல. கூன் விழுந்த வயதான பிக்கு போல் வளைந்து எழுந்தார். மடாலயத்தில் தியானமண்டபத்திற்குப் பின்புறம் இருக்கும் புத்தபிக்குகளின் தங்குமிடத்திற்கு பிக்குகளுடன் சேர்ந்து முதலில் போய் சேர்ந்தார். பார்வையாளர்களுக்கு அங்கு அனுமதி இல்லாததால் அந்த இரண்டு பேரால் அங்கு வரை தொடர முடியவில்லை.

அவர்கள் இருவரும் மற்ற பார்வையாளர்களுடன் சேர்ந்து டெர்கார் மடாலயத்தில் மற்ற பகுதிகளை வேடிக்கை பார்ப்பது போல் அங்கெங்காவது ஆசான் தென்படுகிறாரா என்று பார்த்தார்கள். ஆசான் அகப்படவில்லை.

வெளியே வந்த பின் இருவரில் ஒருவன் சொன்னான். “முன் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த பிக்கு ஆசான் போலவே தான் தெரிந்தார். ஆனால் ஆசானுக்கு கூன் கிடையாது....

இரண்டாமவன் சொன்னான். “ஆசான் நடிப்பதில் கூட கெட்டிக்காரர். அது ஆசானாக கூட இருக்கலாம். நம்மை ஏமாற்றக் கூட அப்படி நடித்திருக்கலாம்.

“நாம் வந்திருப்பது அவருக்கு எப்படித் தெரியும். நாம் மற்ற ஆட்களோடு சேர்ந்து தானே உள்ளே வந்தோம்....

“அந்த ஆள் லேசாகத் திரும்பியது போல் இருந்தது...

“ஆனால் அந்த ஆளுக்கு நாம் யார் என்று தெரிய வாய்ப்பே இல்லையே?

ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருவரும் வெளியே போய் டெர்கார் மடாலயத்தைக் கண்காணிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள்.

ஆசான் ரகசியமாய் அவர்களை ஒரு ஜன்னல் வழியே பார்த்தார். உளவாளிகள் என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அவர்களை அவர் அதற்கு முன்பு பார்த்ததில்லை. இருட்ட ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் டெர்கார் மடாலயத்தைப் பார்க்கக்கூடிய இடங்களிலேயே இருந்தார்கள்....

வாங் சாவொ லடாக்கில் உள்ள திக்‌ஸே புத்த மடாலயம், டேஹ்ராடூனில் உள்ள மைண்ட்ரோலிங் புத்தமடாலயம், புத்தகயாவில் உள்ள மூன்று புத்தமடாலயங்கள் என ஐந்து இடங்களிலும் கண்காணிப்பில் இருக்கும் தன் ஆட்களிடம் போன் செய்து நிலவரத்தைக் கேட்டறிந்தான். டேஹ்ராடூனில் கிட்டத்தட்ட ஆசானைப் போல் தோற்றமுள்ள ஒரு பிக்குவைப் பார்த்ததாகச் செய்தி வந்தது.  டெர்கார் மடாலயத்திலும் கிட்டத்தட்ட ஆசானைப் போல் தோற்றமுள்ள, ஆனால் கூன் விழுந்த ஒரு பிக்குவைப் பார்த்ததாகச் செய்தி வந்தது.  இரண்டு இடங்களுக்கும் கூடுதல் ஆட்களை வாங் சாவொ அனுப்பி வைத்தான். இரண்டில் ஒரு இடத்தில் இருப்பது ஆசானாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

அதைத் தெரிவித்து விட்டு “கிழவர் சகலகலா வித்தகர். ஜாக்கிரதையாக இருங்கள். அவர் அங்கே இருந்து, அவரைப் பார்க்க வரும் ஆள் தான் இப்போது நமக்கு மிக முக்கியம். அவனை எல்லாக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்து அனுப்புவது மிக முக்கியம்....என்று வலியுறுத்திச் சொன்னான்.

ள்ளிரவில் ஆசானின் தனி அலைபேசிக்கு தலாய் லாமா அனுப்பிய குறுந்தகவல் வந்து சேர்ந்தது. “சில விவரங்களைக் கேட்டறிந்த பிறகு தான் ஒத்துக் கொள்வதா வேண்டாமா என்று அவன் முடிவு செய்வானாம். அதற்காக தங்களிடம் அவன் என்னேரமும் வரக்கூடும்.”  உறங்காமல் விழித்திருந்த ஆசானுக்கு இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா என விளங்கவில்லை.

ரகசியமாக ஜன்னல் வழியே ஆசான்  வெளியே பார்த்தார். அந்த நள்ளிரவிலும்  எதிரணி ஆட்கள் கூடுதலாகவே பல வேடங்களில் மடாலயத்தைச் சுற்றி இருந்தார்கள். அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அங்கிருந்து ஓடிப்போவது அவருக்குப் பெரிய விஷயமல்ல. ஆனால் அமானுஷ்யன் வந்தால் அவனைச் சந்தித்துப் பேசாமல் அங்கிருந்து போக முடியாமல் தவித்தார். அவன் அவர்கள் பார்வையில் படுவதை அவர் விரும்பவில்லை. என்ன செய்வது என்று யோசித்தார். அன்றிரவு அவரால் உறங்க முடியவில்லை.  இந்த உளவாளிகளுக்குத் தெரியாமல் அமானுஷ்யனைச் சந்திக்க முடியுமா, அப்படி முடிந்தால் அமானுஷ்யன் என்ன விவரங்கள் கேட்பான், கேட்டு விட்டு என்ன முடிவெடுப்பான் என்கிற வகையில் சிந்தனைகள் ஓடின....

க்‌ஷய் புத்தகயாவிற்கு அதிகாலை நேரம் போய் சேர்ந்தான். அவன் விமானநிலையத்தில் இருந்து நேராக டெர்கார் மடாலயத்துக்குச் செல்லவில்லை. புத்தகயாவில் ஜப்பானியக் கோயிலுக்கு அருகே இருந்த ஹோட்டல் புத்தா இண்டர்நேஷனல் என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து குளித்து உடை மாற்றிக் கொண்டு காலை டிபன் சாப்பிட்டு விட்டு தான் டெர்கார் புத்தமடாலயத்திற்கு கால்நடையாகச் சென்றான்.

புத்தகயாவிற்கு இதற்கு முன் இரண்டு முறை அவன் வந்திருக்கிறான். புத்தபிரான் ஞானம் பெற்ற அந்த திருத்தலத்தில் இன்னும் அந்த அவரது ஞான அலைகள் காற்றில் பரவிக்கிடப்பதாய் அவன் நம்பினான். அங்கு வந்த முந்தைய இருமுறையைப் போலவே இப்போதும் அந்த அலைகளைத் தனக்குள் வாங்கிக் கொள்வதாக நினைத்தான். அது கற்பனையோ, நிஜமோ, மனம் அமைதியில் திளைக்க ஆரம்பித்தது. மனதின் அமைதிக்கு எதிர்மாறாக இருந்தது வெளிப்புற சூழ்நிலை. புழுதியும், ஜன நெரிசலும், சத்தமுமாக இருந்தது அந்தச் சிறுநகரம்.

டெர்கார் புத்தமடாலயத்திற்கருகே நெருங்கிய போது தான் அந்த உளவாளிகளை அவன் கவனித்தான். அந்த உளவாளிகள் மடாலயத்திற்கு உள்ளே செல்லும் ஆட்களை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பல் உள்ளே நுழைந்த போது ஒரு ஆள் ரகசியமாக அந்தக் கும்பலைப் புகைப்படம் எடுத்ததையும் அக்‌ஷய் பார்த்தான். அப்படியே பின் வாங்கி அவர்களை தொலைவில் இருந்து கண்காணித்தான். உள்ளே போகும் யாத்திரீகர்களில் அவர்கள் அதிகம் கவனித்தது இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் தான். அந்த அளவு அவர்கள் பெண்களையும், முதியவர்களையும் கண்காணிக்கவில்லை.

நிலவரத்தின் தன்மையை மனதில் பதிய வைத்துக் கொண்டு மறுபடி ஓட்டலில் தனதறைக்குத் திரும்பியவன் தன் சூட்கேஸில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் சில மாறுவேஷப் பொருள்களை எடுத்தான். அடுத்த கால் மணி நேரத்தில் அவன் அறையை விட்டு ஒரு வயதான கிழவர் தோற்றத்தில் வெளியே வந்தான். தோற்றம் மட்டுமல்லாமல் நடையும், தோரணையும், தடுமாற்றமும் கூட ஒரு முதியவருடையதாக இருந்தது.  

வெளியே வந்த முதியவர் ஓட்டலில் இருந்து ஒரு ஆட்டோரிக்‌ஷா பிடித்துக் கொண்டு டெர்கார் மடாலயத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் கீழே இறங்க அந்த ஆட்டோரிக்‌ஷா டிரைவரின் உதவி தேவைப்பட்டது. எப்போதும் யாத்திரிகர்களிடம் அதிக தொகையை வசூலிக்கும் அந்த டிரைவருக்கு அந்த முடியாத முதியவரிடம் அதிக தொகை வசூலிக்க மனம் வராமல் நியாயமான பணத்தை வாங்கினான். உள்ளே வரை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வரட்டுமா என்று அவன் கேட்டதற்கு நன்றி சொல்லி மறுத்து விட்டு மிக நிதானமாக நடந்து டெர்கார் மடாலயத்திற்குள் நுழைந்த கிழவரைப் பார்த்துக் கொண்டே நின்ற போதும் உளவாளிகளுக்கு சந்தேகம் எழவில்லை.  

புத்தமடாலயத்தின் படிகளில் ஏறும் போதும் தடுக்கி விழப் போன அவர் சுவரைப் பிடித்துக் கொண்டு ஒரு நிமிடம் நின்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார். தங்கள் பார்வையிலேயே மிக அதிக நேரம் இருந்த அந்த முதியவரைப் பார்த்து உளவாளி ஒருவன் தன் சகாவிடம் சொன்னான். “இந்த நிலைமையில் உடல் இருக்கையில் கிழத்துக்கு யாத்திரை தேவையா?

உள்ளேயும் இரு உளவாளிகள் இருந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக உள்ளே வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்து விட்டு அடுத்த இருவர் வந்த பிறகு வெளியேறுவது என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். ஆசான் போல தெரிந்து கூனல் விழுந்த பிக்கு இன்று காலை முதல் கண்களில் படவில்லை. அந்த கூனல் பிக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளேயே படுத்துக் கிடக்கலாம். அது ஆசானாக இருந்தால் கண்டிப்பாக அவரைத் தேடிவரும் ஆளைப் பார்க்க வெளியே வந்து தானாக வேண்டும். அல்லது அந்த வெளியாள் உள்ளே போய் தான் ஆக வேண்டும். அந்த சந்திப்புக் காட்சியைத் தவறவிட அவர்கள் விரும்பவில்லை.

உள்ளே நுழைந்த முதியவர் புத்தர் சிலையைப் பார்த்து கைகூப்பி ஒரு நிமிடம் அமைதியாக நின்றார். இப்போது தியானம் செய்பவர்கள் அதிகம் இருக்கவில்லை. சிலர் மட்டும் தியான முயற்சியில் இருந்தார்கள். மற்றவர்கள் அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டும், சுவரில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்துக் கொண்டும் இருந்தார்கள்.

புத்தர் சிலையை வணங்கி நின்ற முதியவர் அங்குள்ளவர்களை சுற்றும் முற்றும் பார்த்தார். ஆசானை இதற்கு முன்னால் பார்த்தது இல்லை என்றாலும் அவர் அங்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தலாய் லாமாவின் குருவாக இருக்க முடிந்த வயதான பிக்கு அந்த தியான மண்டபத்தில் யாருமில்லை. புத்தர் சிலை அருகே அமர்ந்திருந்த குரு ஸ்தானத்தில் தெரிந்த பிக்குவும், அங்கிருந்த மற்ற பிக்குகளும் ஏதோ அசௌகரியத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. உளவாளிகளின் வரவு தான் காரணமாக இருக்க வேண்டும். ஆசான் உள்ளே ஒளிந்திருக்கலாம், அல்லது உளவாளிகளைப் பார்த்த பின் இடம் மாறியும் இருக்கலாம்.

முதியவர் பின் சுவரைப் பிடித்துக் கொண்டே நடந்து புத்தர் சிலை அருகே அமர்ந்திருந்த குரு பிக்குவைச் சென்றடைந்தார். அப்போது அந்த பிக்குவை ஒரு யாத்திரிகர் வணங்கி ஆசி வாங்கிக் கொண்டிருந்தார். இன்னொருவர் தானும் வணங்கக் காத்திருந்தார். அவருக்கும் பின்னால் போய் நின்ற முதியவர் இப்போதும் சுவரில் இருந்து கையை எடுக்கவில்லை. அவருக்கு மூச்சிறைத்தது. அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டார்.

அவருக்கு முன்னால் இருந்த ஆளும் போய் வணங்கி ஆசிபெற்று நகர்ந்த பின்பு, முதியவர் கஷ்டப்பட்டு முன்னேறினார்.

(தொடரும்)   

-          என்.கணேசன்



Wednesday, September 24, 2014

இன்று தினத்தந்தியில் “அறிவார்ந்த ஆன்மிகம்” மதிப்புரை


இன்று (24-09-2014) தினத்தந்தியில் என் “அறிவார்ந்த ஆன்மிகம்” நூலின் மதிப்புரை வந்துள்ளது.

நன்றி தினத்தந்தி-24-09-2014

Monday, September 22, 2014

மகாவீரரின் மகத்தான போதனைகள்!


அறிவார்ந்த ஆன்மிகம்-48

இந்தியாவில் பக்தி மார்க்கம் செழிக்க ஆரம்பித்த ஏழாம் நூற்றாண்டு வரை ஜைன மதம் என்னும் சமண சமயம் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. சமண சமயம் தீர்த்தங்கரர் என்று அழைக்கப்பட்ட 24 சமய வழிகாட்டிளால் உருவாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தது. தீர்த்தங்கரர் என்றால் வழிகாட்டிகள், பாலங்கள் என்று சொல்லலாம். அதாவது  ஜீவனை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாலங்கள், அல்லது வழிகாட்டிகள் தீர்த்தங்கரர்கள். அந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் என்ற மகாஞானி.

அரச குடும்பத்தில் பிறந்த அவரது இயற்பெயர் வர்த்தமானர். அவர் தனது முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக பன்னிரண்டு ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார். அந்த நாட்களில் தன்னுடைய புலன்களை எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தவ வாழ்க்கை வாழ்ந்தார். மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் என எல்லா உயிரினங்களுக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் அருளுடன் வாழ்ந்து வந்தார். புலன்களை முழுமையாக அடக்குவதும், எல்லா சூழ்நிலைகளிலும் தன் அருள் தன்மையை இழந்து விடாமல் இருப்பதும் ஆன்மிகத்தில் மிகப்பெரிய வீரத்தன்மையே அல்லவா? அதனாலேயே அவர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். அவரை ஜீனர்என்றும் அழைப்பதுண்டு. ஜீனர் என்றால் ஜெயித்தவர்என்று பொருள். அதாவது ஆசை, துன்பம் ஆகியவற்றை வெற்றி கண்டவர் என்ற பொருளில் அப்படி அழைக்கப்பட்டார். இந்த வகையில் மேற்கொண்ட ஆழமான தேடலின் முடிவில் கைவல்யம் என்ற மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தார்.  

மகாவீரர் தனது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தான் அறிந்த ஆன்மீக விடுதலையின் மேலான உண்மைகளைப் பரப்பிகினார். வெறும் கால்களில் நடந்து மிக மோசமான சீதோஷ்ண நிலைகளிலும் சலிக்காமல் பயணம் செய்து போதனைகள் செய்தார். சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய போதனைகளைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் மேலும் பரவியது. மக்களுக்கு ஞான வழி காட்டிய மகாவீரர் தனது 72வது வயதில் நிர்வாணம் எய்தினார்.

மகாவீரரின் போதனைகள் அவரது உடனடி சீடர்களால் அகம் சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் கடைசியில் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. இன்று நமக்குக் கிடைத்திருப்பவை எல்லாம் அப்படி மிஞ்சியவையே.

மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது தீய செயல்களின் விளைவாக  கர்மா  எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிகமான,  உண்மை போல தோன்றுகின்ற இன்பங்களிலும், பொருள்களை சேர்ப்பதிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்குத் தவறான எண்ணங்கள் ஏற்படுகின்றன, பாவச் செயல்களில் ஈடுபாடு கூடுகிறது. இதனால் அவன் கர்மாவின் சுமை கூடி அவன் துன்பப்படுகின்றான்.  

இந்தத் துன்பங்களில் இருந்து விடுபட  மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தர்சனம்),  சரியான அறிவு (சம்யக்-ஞானம்),  மற்றும் சரியான நடத்தை(சம்யக்-சரித்திரம்') ஆகிய மூன்றும் தேவை என்பதை வலியுறுத்தினார். இவை திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டன.

சரியான நம்பிக்கை இல்லாவிட்டால் சரியான அறிவு வாய்க்காது. சரியான அறிவு இல்லா விட்டாலோ நன்னடத்தை சாத்தியப்படாது. சரியான ஞானம் இருந்து நன்னடத்தை சாத்தியப்பட ஒரு மனிதன் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:

அகிம்சை அல்லது வன்முறை தவிர்த்தல்:  எந்தவொரு உயிரினத்திற்கும் எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.

சத்தியம் அல்லது வாய்மை:  தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதல்.

அஸ்தேயம் அல்லது திருடாமை:  தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாத்தையும் தனக்கு எடுத்துக் கொள்ளாதிருத்தல்.

பிரம்மச்சரியம் அல்லது பாலுறவு துறத்தல்:  பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல் என்ற இந்த உறுதிமொழி துறவிகளுக்கு முக்கியமாய் சொல்லப்பட்டது என்றாலும் மற்றவர்களுக்கும் முறையான அளவான பாலுறவு வலியுறுத்தப்படுகிறது.

அபரிகிருகம் அல்லது பற்றற்றிருத்தல்: மனிதர்களிடத்தும், பொருள்களிடத்தும், மற்ற உடைகளிடத்தும் பற்றில்லாமல் இருத்தல்.

மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். பெண்களை ஆத்மஞானத்திற்கு எதிராக நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் மகாவீரர் இப்படி சம அந்தஸ்து தந்தது அக்காலத்தில் புரட்சிகரமாக இருந்தது. மேலும் அவரை சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றினர். அவர் போதனைகளில் எளிமையும் தெளிவும் இருந்ததால் அடித்தள மக்கள் கூட அவரால் ஈர்க்கப்பட்டனர்.

மகாவீரர் மனிதன் தன் கர்மபலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார். நம் இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு. நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களைந்து விடுதலை பெறவேண்டும் என்று கூறினார்.  தனிப்பட்ட கடவுள், சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றை அவர் மறுத்தார்.

மகாவீரர் கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கல், மண், உலோகம் போன்றவற்றிற்கும் உயிர் உண்டு என்று கருதினார். தண்ணீரைக் காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். எனவே தண்ணீரைக் காய்ச்சக் கூடாது. சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறந்து விடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும்போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்து விடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  அந்த அளவு பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிப்பதை அவர் மறுத்தார்.

அதே போல ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டே சென்று திருப்தி அடைவது மனிதனால் முடியாத காரியம் என்று அவர் உறுதியாகக் கூறினார். மனிதனுக்கு தங்கமும், வெள்ளியும் கைலாச மலையளவு கிடைத்தாலும் அவன் போதும் என்று திருப்தியடைய மாட்டான். மேலும் மேலும் தேடி அலைந்து துன்பப்படுவான்என்று அவர் கூறுகிறார்.

அவருடைய போதனைகள் மனிதனின் வாழ்வை ஒட்டி இருப்பது அவரது தனித்தன்மை. பெரிய சித்தாந்தங்கள் பேசி சர்ச்சைகளை எழுப்பி குழப்பாமல் இப்படி வாழ்ந்தால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம், ஞானம் பெறலாம் என்ற வழிகாட்டுதலாக அவருடைய போதனைகள் அமைந்தன. பிறப்பினாலும் சமூக அமைப்பினாலும் வரும் வேற்றுமைகளை அவர் பொருட்படுத்தவில்லை. யாரும் முறையான சரியான வாழ்க்கை முறையில் ஞானம் பெற்று தேறலாம் என்ற நம்பிக்கையை அவருடைய போதனைகள் ஊட்டின.

இந்தியா முழுவதும் பரவிய அவருடைய போதனைகள் தமிழகத்திலோ இலக்கியங்களில் இடம் பெறும் அளவுக்கு வேறூன்றின. அவர் கூறிய அறநெறிகளும், சிந்தனைகளும் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற நீதி நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான காப்பியங்களிலும் இடம் பெற்று இருக்கின்றன.

பேராசையும், சுயநலமும் அதிகமாகி, பிறர் நலத்தில் அலட்சியம் பெருகி அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மகாவீரரின் போதனைகளை அனைவரும் ஓரளவாவது பின்பற்ற முடிந்தால் நாம் வாழும் உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்.

-          என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 11-02-2014

Thursday, September 18, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 12



லாய் லாமாவின் கடிதம் படித்த பிறகு அக்‌ஷய் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி எழுந்தது. அவர் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று அவன் இன்னும் முடிவு செய்திராத போது அவர் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நாங்கள் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்என்று எழுதியது அவன் மனதை என்னவோ செய்தது. ஒருவேளை அவன் மறுத்து விட்டால்....?

அவர் அந்தக் கடிதத்தில் உடனடியாக என்பதை அடிக்கோடிட்டு அவசரத்தின் தன்மையைச் சுட்டிக் காட்டியதால் போகிறதா வேண்டாமா என்பதை உடனடியாக முடிவெடுத்து தெரிவிக்க வேண்டியது தான் தர்மம் என்று தோன்றியது. அதனால் உடனே புத்தகயாவுக்குப் போகத் தயாரானான்.

ஆனந்த் சோம்நாத் தந்திருந்த ஒரு அலைபேசி எண்ணை அவனிடம் தந்து சொன்னான். “இனி இந்த விஷயமாக என்ன தேவை இருந்தாலும் இந்த எண்ணை நீ தொடர்பு கொண்டால் போதும், அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். செலவு பற்றியோ, போன் செய்கிற நேரம் பற்றியோ நீ யோசிக்க வேண்டியதில்லை. பேசும் போது அவன் பேரை நீ கேட்க வேண்டாம். உன் பேரையும் சொல்ல வேண்டியதில்லை. உன் குரலை வைத்தே இந்த எண்ணில் இருப்பவன் உன்னை அடையாளம் கண்டு கொள்வான்....

அக்‌ஷய் ஆனந்தை சிறிது யோசனையுடன் பார்த்து விட்டு தன் அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தான். மூன்றாவது சுற்றில் அந்த அலைபேசி எடுக்கப்பட்டது. ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. அக்‌ஷய் சொன்னான். “எனக்கு கோயமுத்தூரில் இருந்து உடனடியாக விமானத்தில் புத்தகயா போக டிக்கட் ஏற்பாடு செய்ய வேண்டும்...

“சரிஎன்று ஒரு ஆண் குரல் சொல்லி இணைப்பைத் துண்டித்தது. 

அடுத்த பன்னிரண்டாவது நிமிடம் அந்த எண் அழைத்தது. “சார் கோயமுத்தூரில் இருந்து புத்தகாயாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் முதலில் மும்பைக்கும் அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் உங்கள் புத்தகயாவுக்கும் டிக்கெட் செய்திருக்கிறோம். மும்பை விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பும். கோவை விமான நிலையத்தில் உங்களுக்காக டிக்கெட்டோடு “புத்தகயா சுற்றுலாஎன்ற பெயர் பலகை கையில் வைத்துக் கொண்டு நம் ஆள் காத்திருப்பார். நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்திய உளவுத்துறை ஆட்களின் உடனடி செயல்பாட்டை நினைத்து அக்‌ஷய் வியந்தான்.     

லீ க்யாங் முன்னால் இந்தியாவில் விமான நிலையங்களுக்கு அருகில் இருக்கிற புத்த மடாலயங்களின் பட்டியல் இருந்தது. வாங் சாவொ அனுப்பி இருந்தான். அந்தப் பட்டியலில் பதினோரு புத்த மடாலயங்கள் இருந்தன. எல்லாம் விமான நிலையத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மடாலயங்கள். அவற்றை கூர்ந்து பார்த்து விட்டு மூன்று பெயர்களுக்கு அடிக்கோடிட்டான் லீ க்யாங்.

முதலாவது திக்‌ஸே புத்த மடாலயம், லடாக். (அங்கு மைத்ரேய புத்தர் ஆலயம் இருப்பதையும் வாங் சாவொ சுட்டிக் காட்டியிருந்தான்).
இரண்டாவது மைண்ட்ரோலிங் புத்தமடாலயம், டேஹ்ராடூன்.
மூன்றாவது புத்தகயா. அங்கு திபெத் சம்பந்தப்பட்ட புத்தமடாலயங்களே மூன்று இருந்தன. டெர்கார், செச்சென் டென்யி, கர்மா தார்ஜே மடாலயங்கள்.

சிறிது யோசித்து விட்டு திக்ஸே புத்தமடாலயத்திற்கு அருகே கேள்விக்குறி ஒன்றைப் போட்டு விட்டு லீ க்யாங் வாங் சாவொவிற்கு போன் செய்து பேசினான்.

“வாங் சாவொ, தலாய் லாமாவின் அந்த ஆள் இந்திய ராணுவத்தில்  இருப்பவனாக இருந்தாலோ, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவனாக இருந்தாலோ தான் லடாக்கில் இருக்கும் திக்ஸே புத்தமடாலயத்திற்கு சுலபமாக வர முடியும். அதுவும் சீதோஷ்ண நிலை மோசமாக இருந்தால் அங்கே வர விமான போக்குவரத்தும் கஷ்டம் தான். நம் எல்லையில் வேறு அது இருக்கிறது. அதனால் திக்ஸே மடாலயத்தில் மைத்ரேய புத்தர் ஆலயம் இருந்தால் கூட அங்கு ஆசான் இருப்பது கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் நம் ஆட்களை அங்கே கண்காணிக்க அனுப்பலாம். முக்கியமாய் டேஹ்ராடூன் மற்றும் புத்தகயா இரண்டு இடங்களில் எங்காவது தான் ஆசான் இருக்கலாம். அங்கே நம் ஆட்களை அதிகமாக அனுப்பி கண்காணிக்க ஏற்பாடு செய்.  அந்த ஆள் என்று யாரை சந்தேகப்பட்டாலும் உடனடியாகப் புகைப்படம் எடுக்கச் சொல். தவறான ஆட்களாக இருந்தாலும் தப்பில்லை. நிஜமான ஆள் நம் ஆட்கள் பார்வையில் இருந்து தப்பி விடக்கூடாது.

னந்த் கிளம்புவதற்கு முன்பும் தன் தம்பியை ஒருமுறை எச்சரித்து விட்டுப் போனான். நீ இப்போது தனிமனிதன் அல்ல. உன்னை நம்பி ஒரு அன்பான குடும்பம் இருக்கிறது. அதனால் உன் உயிரைப் பணயம் வைத்து நீ யாருக்கும் எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்த தேசத்திற்கு நீ ஏற்கெனவே பெரிய சேவை செய்திருக்கிறாய். அடுத்த தேசத்திற்கும் செய்ய வேண்டியது உன் கடமை என்று நினைக்காதே. வருண் சொன்னது போல் அவர்களது மூடநம்பிக்கையாகக் கூட இந்த மைத்ரேயர் புத்தர் விவகாரம் இருக்கலாம். நன்றாக யோசித்து முடிவெடு...

அண்ணன் சொன்னதற்கு அக்‌ஷய் தலையாட்டினான். அவன் தலையாட்டல் ஆனந்துக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவன் தம்பியை சற்று கண்டிப்பான பார்வை பார்த்தான்.

அக்‌ஷய் அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தான். தம்பியின் புன்னகையின் வசீகரம் காலம் பல கழிந்தாலும் குறையவில்லை என்று ஆனந்துக்குத் தோன்றியது.

அக்‌ஷய் அண்ணனிடம் சொன்னான். “நான் வருணிடம் வெறுமனே வாக்குத் தரவில்லை அண்ணா. யாரோ தவறாக நம்புகிறார்கள் என்பதற்காக நான் எதற்கு ஆபத்தான வேலையில் இறங்க வேண்டும். நான் நூறு சதவீதம் நம்பாமல் கண்டிப்பாக இதில் ஈடுபடப்போவதில்லை. நீ கவலைப்படாதே

ஆனந்துக்கு நிம்மதியாக இருந்தது. அவன் போக வேண்டிய விமானம் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இருந்ததால் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அக்‌ஷய் கிளம்ப சஹானா அவனது துணிமணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.  

அவளையே பார்த்துக் கொண்டு நின்ற அக்‌ஷய்க்கு அவள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவன் பயணத்திற்கு ஆயத்தம் செய்வதைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது. இந்த பதிமூன்று கால தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு முறை கூட அவள் முகம் சிணுங்கியோ, அவனிடம் மனஸ்தாபம் செய்தோ அவன் பார்த்ததில்லை. அவனை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அன்பை மட்டுமே தர முடிந்த அவளைப் போன்ற ஒரு மனைவியை அடைய அவன் கண்டிப்பாக முந்தைய பிறவிகளில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அவள் செய்யும் பயண ஆயத்தத்தை நிறுத்தி அன்பாக அவளை இறுக்க அணைத்தபடி அவன் கேட்டான். “சஹானா நீ எதுவும் சொல்ல மாட்டாயா?

அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு சஹானா ஆத்மார்த்தமாகச் சொன்னாள். “நீங்கள் என்ன செய்தாலும் யோசிக்காமல் செய்ய மாட்டீர்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது?

அவன் கண்கள் ஈரமாயின. பேச்சிழந்து போனான்....

ஒரு மணி நேரத்தில் அக்‌ஷய் விமான நிலையத்திற்குக் கிளம்பினான்.  

சான் மனம் தியானத்தில் லயிக்கவில்லை. மனம் அமானுஷ்யன் என்ற அந்த மனிதன் வருவானா மாட்டானா என்ற கேள்வியிலேயே திரும்பத் திரும்ப நிலைத்தது. டெர்கார் மடாலயத்தில் தியான மண்டபத்தில் இருந்த பெரிய புத்தர் சிலையைப் பார்த்து மனதிற்குள் கேட்டார். உங்கள் சித்தம் என்ன போதிசத்துவரே?”. போதிசத்துவர் புன்னகையுடன் மௌனம் சாதித்தார்.

தீபங்களின் மங்கலான வெளிச்சத்தில் புதிய நிழல்கள் தெரிந்தன. வெளியே இருந்து பார்வையாளர்கள் சிலர் புதிதாக நுழைந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அது புதிதல்ல. புத்தகயாவிற்கு வரும் யாத்திரீகர்கள் முக்கியமாய் போதிமரம் இருக்கும் மகாபுத்தர் ஆலயத்திற்கு கண்டிப்பாக செல்பவர்களாக இருந்தாலும், அவர்களில் சிலர் புத்தகயாவில் இருக்கும் மற்ற புத்த மடாலயங்களுக்கும் செல்வது வழக்கம் தான். ஆனால் ஆசானின் அனுபவ உள்ளுணர்வு வந்தவர்களில் தவறான நபர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

மெல்ல அவர் தன் பார்வையைத் திருப்பினார். தியான மண்டபத்தின் நுழைவாயிலில் வந்திருந்த ஆறு ஆட்களில் நான்கு பேர் அங்கு புத்தபிக்குகள் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு அவர்களும் அப்படியே உட்கார்ந்து கொண்டார்கள். இரண்டு பேர் மட்டும் அந்த தியான மண்டபத்தை கூர்மையாகப் பார்வையிட்டார்கள். அவர்கள் இருவரும் உண்மையான யாத்திரீகர்கள் போல அங்கிருந்த பிரதான புத்தர் சிலையைப் பக்தியுடனோ, ஆர்வத்துடனோ பார்ப்பதற்குப் பதிலாக அமர்ந்திருந்த புத்தபிக்குகளை உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அமர்ந்திருந்தவர்களில் யாரையோ தேடுவது போல.....

இது போன்ற ஏராளமான ஆட்களை தன் வாழ்க்கையில் ஆசான் சந்தித்திருக்கிறார். அவர்களில் பலரை விளையாட்டாக அலைக்கழித்திருக்கிறார். பலரை அலட்சியப் படுத்தியிருக்கிறார். பலரிடம் பேச்சுக் கொடுத்து குழப்பி இருக்கிறார். வாழ்நாளில் பெரும்பகுதியை அவர்கள் ஊடுருவலின் மத்தியில் கழித்துள்ளதால் அவர்கள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் அவர்களின் திடீர் வரவை, அமானுஷ்யனை எதிர்பார்த்துக் கொண்டு அவர் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவர்களை இங்கே அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களை இங்கே வரவழைத்திருப்பது என்னவாக இருக்கும் என்று அவர் ஆழமாய் யோசித்துப் பார்த்தார். யோசனையின் முடிவாக இப்படி இருக்கலாம் என்ற அனுமானத்தில் கிடைத்த பதில்கள் எல்லாமே தற்போதைய சூழ்நிலைக்கு சாதகமாக இருக்கவில்லை.     

ஆசான் ஆபத்தை உணர்ந்தார்.  

(தொடரும்)

என்.கணேசன்

  (அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)