Monday, December 30, 2013

தேங்காய் உடைப்பது ஏன்?


அறிவார்ந்த ஆன்மிகம்-30

கோயில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களிலும், புதியதாக வாகனம், வீடு வாங்கும் சமயங்களிலும் கூட முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. தொன்றுதொட்டு செய்து வரும் ஒரு வழக்கத்தை நாமும் அப்படியே கடைபிடிக்கிறோம் என்பதே நம் நிலைப்பாடாக இருக்கிறது.  அறிந்து செய்யும் போதே எதுவும் அர்த்தமுள்ளதாகிறது என்பதால் தேங்காய் உடைப்பதன் பல்வேறு காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் தன்னிடம் உள்ள விலங்கியல்புகளை இறைவனுக்கு அர்ப்பணித்துப் புனிதமாவதன் நோக்கத்தைக் காட்டும் வகையில் விலங்குகளை பலியிடும் வழக்கம் இருந்தது. ஜீவகாருண்யத்தை மகான்கள் அறிவுறுத்த ஆரம்பித்த பின் காலப்போக்கில் மிருகபலி வழக்கம் மறைய ஆரம்பித்தது. அதற்குப் பதிலாக தேங்காய் உடைக்கப்படுகிறது. ஹோமம் செய்யும் போது ஹோமத்தீயில் தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.

தேங்காய் ஒரு மனிதனின் தலை போன்று காணப்படுகிறது. மனிதனின் ஆணவத்தை, கர்வத்தைத் தலைக்கனம் என்று சொல்கிறோம். அன்பு இதயத்தில் இருப்பதாகக் குறிப்பிடுவது போலவே கர்வம் தலையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறோம். நம் ஆணவத்தை அழித்துக் கொள்வதற்கு அடையாளமாக நாம் தேங்காய் உடைக்கிறோம்.  அந்த ஆணவம் அழியாத வரை மனிதன் என்றுமே இறை அருளுக்குப் பாத்திரமாக ஆவதில்லை.

தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம். அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம். அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன் பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும் ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக தேங்காய் இருக்கிறது.

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. இரண்டு கண்களுடன் பிறந்த மனிதன்  நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் இறைவழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளின் போது மா இலைகளுடன் கூடிய நீர் நிரம்பிய கலசத்தின் மேல் தேங்காய் வைக்கப்பட்டு அந்தக் கலசம் பூஜிக்கப்படுவதை பலரும் பார்த்திருப்போம். மகான்களைப் போன்ற பெரியோர்களை வரவேற்கவும் கூட இது போன்ற கலசம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு உயர்ந்த நிலையில் தேங்காயை நம் முன்னோர் வைத்திருக்கக் காரணம் தேங்காயை ஆன்ம ஞானத்திற்கு சம்பந்தப்பட்ட பொருளாய் அவர்கள் நினைத்திருந்தது தான்.

தேங்காய் முற்றுவதற்கு முன் இளநீராய் இருக்கும் போது இறைவனின் அபிஷேகத்திற்கு மிக உகந்ததாய் கருதப்படுகிறது. உப்பு நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் கொண்டாலும் தென்னை மரம் அதனை, சுவையான இனிப்பான இளநீராக மாற்றித் தருவதும் கூட பக்குவப்பட்ட ஞான மனநிலை பெற்றவரின் தன்மையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலகத்தில் தான் பெறுவது எத்தனை மோசமானவைகளாய் இருந்தாலும் அவற்றை அப்படியே உலகிற்குத் திருப்பித் தந்து விடாமல் தன் ஞானத் தன்மையினால் அதனை நன்மை தருவனவாக மாற்றி உலகிற்கு அளிக்கும் ஞானியின் செயலாய் இளநீரைச் சொல்லலாம்.  அதனாலேயே இளநீர் இறை அபிஷேகத்திற்கு விசேஷமான பொருளாக எண்ணப்படுகிறது. அதனாலேயே இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்பவருக்கு ஆன்மிகம் அல்லது ஞானப் பாதையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இளநீர் நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது. பல ஆயுர்வேத மருந்துக்கள் தயாரிக்கவும் இளநீர் பயன்படுகிறது. வேறுசில மருத்துவ முறைகளிலும் இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீரின் இந்த மருத்துவப் பயன்பாட்டினாலும், குளிர்ச்சியான தன்மையாலும், அம்மை வந்தவர்கள் மாரியம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்விப்பது தங்கள் அம்மை நோய் விரைவில் குணமடைய உகந்த வழிபாடு என்று நம்புகிறார்கள்.

இளநீராக இருக்கையில் இப்படி என்றால் அறவே நீரற்ற முற்றிய கொப்பரைத் தேங்காயோ பற்றற்ற நிலைக்கு அடையாளமாய் மாறுகிறது. கொப்பரைத் தேங்காயாக மாறும் போது மூன்று மேலான நிலைகளைத் தேங்காய் அடைவதாக அறிஞர்கள் சிலாகிக்கிறார்கள்.
முதலாவதாக, தேங்காய் தன்  அகப்பற்றான நீரை அகற்றி விடுகிறது.
இரண்டாவதாக, அந்த நீரின் உண்மையான சுவையையும், சத்தையும் தன்னுள் இணைத்துக் கொண்டு விடுகிறது.

மூன்றாவதாக,  புறப்பற்றான ஓட்டை விட்டு விலகி விடுகிறது.
அதனால் தான் அறிஞர்கள் கோப்பரைத் தேங்காயை ஞானத்தோடு உவமைப்படுத்திக் கூறுவார்கள். உலகத்தில் இருந்து பற்றுத் தொடர்பினை முறித்துக் கொள்ளும் மனநிலைக்கு அறிகுறியாகவே கொப்பரையும் அதன் ஓடும் கருதப்படுகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயை வேள்விகளின் போது பூரண ஆகுதி"யாகப் பயன்படுத்துகின்றனர். வேள்வி யாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் முதலில் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிறைவாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இவ்வாறு அதன் பற்றற்ற நிலையின் காரணமாக கொப்பரைத் தேங்காயே பூரண ஆகுதி" ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.

இறைவனிடம் பிரார்த்தனை செய்து தேங்காய் நைவேத்தியம் ஆக செய்யப்படுகிறது. தேங்காய் பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. பிள்ளையாரிடம் ஏதாவது பிரார்த்தனை செய்து அது நிறைவேற தேங்காயை நாலாபக்கமும் சிதறுமாறு தெருவில் உடைப்பதும் உண்டு. தேங்காயை உடைப்பது ஆணவத்தை உடைப்பதற்கொப்பானது என்பதைப் பார்த்தோம். சிதறு தேங்காய் உடைப்பதில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலையையும் காண முடியும். எப்படி என்றால் சிதறு தேங்காய் துண்டுகளை எத்தனையோ ஏழைகள் எடுத்துச் செல்வது மறைமுகமாக செய்யும் தர்மமாகிறது. (இந்த சிதறு தேங்காய் வழிபாட்டு முறை தமிழகத்திலேயே அதிகம் காண முடிகிறது).

இப்படி தேங்காய் இறைவடிவமாகவும், ஞான நிலைக்கான சின்னமாகவும் கருதப்படுவதால் தான் இறை  வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – அன்மிகம் – 1.10.2013

Thursday, December 26, 2013

பரம(ன்) ரகசியம் – 77



னகதுர்காவிற்கு விஷாலியை மிகவும் பிடித்திருந்தது. ஈஸ்வர் மதிக்கக் கூடிய நிறைய குணங்கள் அந்தப் பெண்ணிடம் இருப்பதை அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கனகதுர்கா கண்டு பிடித்தாள். ஏதோ ஒரு எல்லையில்லாத சோகத்தில் மூழ்கி இருந்ததைத் தவிர குறையாகச் சொல்லக் கூடிய எந்த அம்சமும் அந்தப் பெண்ணிடம் இல்லை. அந்தச் சோகம் கூட ஈஸ்வருக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் ஊடலால் இருக்கலாம்.

ஈஸ்வரிடம் நிறைய நேரம் பேச கனகதுர்காவுக்கு நேரம் கிடைத்திருக்கவில்லை. அவன் பார்த்தசாரதியைப் பார்க்கப் போனவன் இன்னும் வரவில்லை. அவனிடம் பேச நேரம் கிடைத்தால் கூட இதைப் பற்றி நாசுக்காகத் தான் பேச வேண்டும். ஆனந்தவல்லி சொல்வது போல அவசரப்பட முடியாது.  நாசுக்காகப் பேசினால் கூடக் கண்டுபிடித்துக் கொள்ளக் கூடிய புத்திசாலி அவன்.

தாயை அவன் அதிகம் நேசிப்பவன் என்றாலும் அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவன் அவளுக்குத் தந்து விட மாட்டான். அனாவசியமாக அவன் தனிப்பட்ட விஷயங்களில் அவள் மூக்கை நுழைப்பதை அவன் விரும்பவும் மாட்டான். ஆனால் அதையெல்லாம் ஆனந்தவல்லிக்கு அவளால் புரிய வைக்க முடியவில்லை. ஆனந்தவல்லிக்குப் புரியவில்லை என்பதை விட அவள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது. வேறு வழியில்லாமல் அவனிடம் பேசிப் பார்க்கிறேன் என்று கனகதுர்கா சொல்லி அப்போதைக்குத் தப்பித்தாள்.

விஷாலியைப் பற்றி மீனாட்சியிடமும் கனகதுர்கா விசாரித்தாள். மீனாட்சி விஷாலியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாள். அவள் புகழ்ந்தது மிகை அல்ல என்பது விஷாலியிடம் பேசும் போது கனகதுர்காவுக்கும் புரிந்தது. அவள் விஷாலியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஈஸ்வர் வந்தான்.

அவன் மிகவும் களைப்பாக இருந்தான். அவனை அத்தனை சோர்வாய் கனகதுர்கா பார்த்ததே இல்லை என்பதால் அவனைப் பார்த்தவுடன் கவலையுடன் கேட்டாள். “என்னடா என்னவோ மாதிரி இருக்கே

அவனுக்கு விஷாலி முன்னால் அம்மாவிடம் அதிகம் பேசப் பிடிக்கவில்லை. ஒன்னுமில்லைம்மாஎன்றவன் தனதறைக்குப் போய் விட்டான். விஷாலி முகத்தில் அவனைப் பார்த்தவுடன் தெரிந்த சோகம் அவனை என்னவோ செய்தது. அவள் இங்கு வந்ததில் இருந்தே இப்படி சோகமாய் இருந்தே கொல்கிறாள். இப்போது அவள் அவன் ஆரம்பத்தில் பார்த்த விஷாலியே அல்ல. அந்த விஷாலியின் உருவம் மட்டும் இப்போது இருக்கிறதே ஒழிய அந்த ஒளியும், உயிரோட்டமும் இல்லை. அவள் மீது இருந்த கோபத்தை அவனால் முழுமையாகத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. கையில் இறுகப் பிடித்திருந்த மணல் விரலிடுக்கில் சிறிது சிறிதாக வெளிப்பட்டுக் குறைந்து கொண்டே வருவது போல கோபமும் குறைந்து கொண்டே வந்தது. அதை அதிகப்படுத்திக் கொள்ள அவன் மறுபடி மறுபடி அன்று அவள் நிர்த்தாட்சணியமாய் பேசிய கடூர வார்த்தைகளை நினைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது

கனகதுர்கா விஷாலியைப் பார்த்து தலையசைத்து விட்டு மகனைப் பின் தொடர்ந்தாள். ஈஸ்வர் கண்களை மூடிக் கொண்டு படுக்கையில் சரிந்திருந்தான்.

மிக இறுக்கமான சூழ்நிலைகளில் சின்னச் சின்னக் கேள்விகளைக் கூட அவன் விரும்புவதில்லை என்பதால் மௌனமாக அவன் அருகே அமர்ந்து அவன் தலையைக் கோதி விட்டாள். அவனுக்கு அது மிகவும் பிடிக்கும்.....

ஈஸ்வரைத் தாயின் விரல்கள் அமைதிப்படுத்தின. கண்களைத் திறக்காமல் அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். விஷாலியைக் கஷ்டப்பட்டு ஒதுக்கி வைத்து விட்டு விசேஷ மானஸ லிங்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். உலகத்தின் தலைவிதி அவனிடம் இருக்கிறதோ இல்லையோ கணபதியின் தலைவிதி அவனிடம் இருக்கிறது. கள்ளங்கபடமில்லாத கணபதியின் சிரிப்பு நினைவுக்கு வந்தது..... அவன் கண்டிப்பாக இயங்கியே ஆக வேண்டும். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவான முடிவை அவனால் எடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் அப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றி அவன் முதல் முதலில் கேள்விப்பட்டது அவரிடம் இருந்து தான். அதைப் பற்றி அதிகம் அவனிடம் பேசியவரும் அவர் தான். மணிக்கணக்கில் ஒருகாலத்தில் அவர்கள் பேசி இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக அவன் அவருடைய எத்தனையோ கேள்விகளுக்கு விளக்கமாகப் பல அனுமானங்களைத் தந்துமிருக்கிறான்.  இந்த இக்கட்டான நிலையில் அவர் இருந்திருந்தால் அவரிடம் அவன் மனம் விட்டுப் பேசி இருக்கலாம். பேசும் போதே அவனுக்கு ஒரு தெளிவு பிறந்திருக்கும்.

இப்போது அவன் பார்த்தசாரதியிடம் அதைப் பற்றிப் பேசுகிறான் என்றாலும் அவருக்கு அதில் புரிய முடிந்தது குறைவு தான்.  அவருக்கு அவன் மீது உள்ள நம்பிக்கை தான் விசேஷ மானஸ லிங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட அதிகமாய் இருக்கிறது. அதனால் அவன் ஏதாவது சொன்னால் தலை ஆட்டுவாரே ஒழிய ஆக்கபூர்வமான வேறு கருத்துகள் அவரிடம் இருந்து வராது...

ஈஸ்வர் கண்களைத் திறந்து தாயைப் பார்த்துப் புன்னகைத்தான். அவள் கை விரல்களுக்கு பாசத்தோடு முத்தமிட்டு விட்டு களைப்பு நீங்கியவனாக எழுந்தான். “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மாஎன்றவன் தன் லாப்டாப்பைத் திறந்து அதில் அவன் சேமித்து வைத்திருந்த ஆழ்மனசக்தி ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களில் மூழ்க ஆரம்பித்து விட்டான். காலம், இடம், சூழல் அத்தனையும் மறந்து விட்டான்.

மகனையே பார்த்துக் கொண்டிருந்த கனகதுர்கா பின் வெளியே வந்து ஹாலில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். மூன்று மணி நேரம் கழித்து ஈஸ்வர் வெளியே வந்தான். ஒரு ஓரமாக அமர்ந்திருந்த விஷாலியை அலட்சியம் செய்தபடி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கடைசியில் சொன்னான்.

“நான் நாளைக்கு காலைல தோட்ட வீட்டுக்குப் போறேன்... சில நாள் அங்கேயே இருக்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்

மற்றவர்கள் திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார்கள் என்றால் இடி விழுந்தது போல உணர்ந்தவள் ஆனந்தவல்லி தான். அவளுடைய மூத்த மகன் அங்கு போனவன் பின்பு அவள் மகனாகத் திரும்பி வரவேயில்லை.... இப்போது இவன் போகிறேன் என்கிறான்.... அவள் உள்மனம் அபாயச்சங்கு ஊதியது.

“எதுக்குடா அங்கே தங்கப் போறே?பரமேஸ்வரன் திகைப்புடன் கேட்டார்.

“எனக்கு கொஞ்சம் அங்கே ஆராய்ச்சிகள் பண்ண வேண்டி இருக்கு தாத்தா... கணபதியையும் சிவலிங்கத்தையும் கண்டு பிடிக்கப் போகிற அவன் முயற்சிகள் ஒரு விதத்தில் ஆராய்ச்சிகள் தானே?

“என்ன ஆராய்ச்சி?


“எத்தனையோ வருஷங்களாய் அந்த இடத்துல அந்த சிவலிங்கத்துக்கு, பெரிய தாத்தா பூஜை செய்துகிட்டு இருந்திருக்கார். அங்கே நிறைய சக்தி அலைகள் இருக்கும் தாத்தா. அதை நானே உணர்ந்திருக்கேன். என் சப்ஜெக்டுக்கு இந்த ஆராய்ச்சிகள் உதவும் தாத்தா....”. ஈஸ்வர் சமாளித்தான்.

பரமேஸ்வரன் திருப்தி அடைந்தார். அங்கே வசதிகள் போதுமாடா. அண்ணன் ஒரு சன்னியாசி மாதிரி இருந்தவர்... எந்த வசதியும் தேவை இல்லைன்னு ஒதுக்கி வச்சவர்.... உனக்கு கஷ்டமா இருக்காதாடா?

“அது ஒன்னும் பிரச்சினை இல்லை தாத்தா....

அதற்குப் பின் மற்றவர்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் வேறு பேச்சுக்கு நகர்ந்தார்கள். ஆனந்தவல்லி மட்டும் சிலையாக அமர்ந்திருந்தாள். பின் ஈஸ்வரும் கனகதுர்காவும் தங்கள் அறைக்குப் போக மீனாட்சியும் விஷாலியும் கூட அங்கிருந்து நகர்ந்தார்கள்.

பேயறைந்தது போல் அமர்ந்திருந்த தாயிடம் பரமேஸ்வரன் கேட்டார். “என்னம்மா ஆச்சு உனக்கு?

“எனக்கு ஈஸ்வர் அந்த தோட்ட வீட்டுக்குப் போறது பிடிக்கலைடா. பயமாயிருக்கு

“பயமா? என்னத்துக்குப் பயம்?

“உங்கண்ணன் அங்கே போனவன் சன்னியாசியாவே மாறிட்டாண்டா. அங்கே அதிகம் தங்கி இருந்தவங்க எல்லாம் சிவனாண்டிகள் தான்... இவனும் இப்ப போறேன்கிறான்.... உங்கண்ணன் சாகறதுக்கு முன்னாடி இவனை நியமிச்ச மாதிரி சொல்லிட்டு வேற போயிருக்கிறான்..ஆனந்தவல்லி குரலடைக்கச் சொன்னாள்.

பரமேஸ்வரன் வாய் விட்டுச் சிரித்தார். “ஆராய்ச்சி பண்ணப் போகிறவனைப் போய் ஆண்டியாயிடுவானோன்னு பயப்படறியே. என்னாச்சும்மா உனக்கு?

ஆனந்தவல்லி மகனுக்குப் பதில் அளிக்கவில்லை. பரமேஸ்வரன் தனதறைக்குப் போன பின்பும் அப்படியே ஆழ்ந்த சிந்தனையுடன் அவள் அமர்ந்திருந்தாள். ஈஸ்வரை துறவியாகாமல் திரும்ப வரவழைக்கும் சக்தி விஷாலி ஒருத்திக்குத் தான் உண்டு... அவன் அங்கு போவதற்கு முன்னால் அவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசிப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டால் பின் அவன் கண்டிப்பாகத் திரும்பி வருவான், கவலைப்பட வேண்டியதில்லை என்று தோன்றியது. விஷாலி என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்தா விட்டால் பின் என்றென்றைக்கும் கொள்ளுப்பேரனை அந்த சிவலிங்கத்திடம் இழந்து விட வேண்டி இருக்கும்.... ஆனந்தவல்லி அதை அனுமதிக்க மாட்டாள்... இனி கனகதுர்காவையும் நம்பி பயனில்லை... அவளே எதாவது செய்தாக வேண்டும்....

ஒரு தீர்மானத்துடன் எழுந்த ஆனந்தவல்லி ஈஸ்வரின் அறைக்குப் போனாள். ஈஸ்வர் தாயிடம் ஏதோ பேசிக் கொண்டே மறுநாள் போகும் போது எடுத்துக் கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.

ஆனந்தவல்லி ஈஸ்வரிடம் சீரியஸாகக் கேட்டாள். “ஏண்டா, செத்துப் போகணும்னு போல இருக்குன்னு சொல்றவங்க அப்படியே தற்கொலை ஏதாவது செய்துக்குவாங்களா, இல்லை பேச்சுக்குச் சொல்றது தானா அது

“அது சொல்ற ஆளைப் பொருத்தது. ஏன் பாட்டி யார் சொன்னாங்க

ஆனந்தவல்லி அதற்குப் பதில் சொல்லவில்லை. “சும்மா ஒரு பேச்சுக்குக் கூட சொல்லியிருக்கலாம் இல்லைஎன்று கேட்டாள்.

“யார் சொன்னாங்கன்னு முதல்ல சொல்லுங்க

ஆனந்தவல்லி கூசாமல் பொய் சொன்னாள். “விஷாலி தான்... செல் போன்ல யார் கிட்டயோ பேசிகிட்டு இருந்தா.  செத்துப் போயிடணும் போல இருக்குன்னு அவ சொன்னது காதுல விழுந்துச்சு

ஈஸ்வர் கையில் இருந்த ப்ளாஸ்க் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது. அதிர்ச்சியின் எல்லைக்கே போன அவன் பலவீனமாய் கேட்டான். “என்ன சொல்றீங்க?

யாரோ ஃப்ரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தா போல இருக்கு. பாதி அழுகையோட அவ சொன்னது என் காதுல விழுந்துச்சு...

ஆனந்தவல்லி சொன்னதை அவர்கள் இருவரும் நம்பினார்கள். சில நாட்களாகவே விஷாலி சோகமாகத் தான் இருக்கிறாள்.... ஈஸ்வர் முகத்தில் தெரிந்த வலி அளக்க முடியாததாக இருந்தது. கனகதுர்கா மகனிடம் சொன்னாள். “போய் என்னன்னு விசாரிடா

ஆனந்தவல்லி அவசரமாய் சொன்னாள். “என் காதுல விழுந்த விஷயத்தை அவ கிட்ட சொல்லாதே... முதல்ல என்ன பிரச்சினைன்னு கேளு.... அப்புறம் புத்தி சொல்லு

ஈஸ்வர் அடுத்த நிமிடம் விஷாலியின் அறையில் இருந்தான். விஷாலி உறங்க ஆயத்தமாகி இருந்தாள். திடுதிடுப்பென்று அறைக்குள் ஈஸ்வர் வந்தது அவளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. கூடவே ஒரு சின்ன சந்தோஷத்தையும் அது ஏற்படுத்தியது. அவனாக அவளைத் தேடி வந்திருக்கிறான்....

அவள் இன்னமும்  எந்த முட்டாள்தனமும் செய்யாமல் நலமாக இருப்பது அவனுக்குப் பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தாலும் தன்னைச் சில நிமிடங்கள் பெரிதாகப் பயமுறுத்தி விட்ட அவள் மீது அவனுக்கு அளவு கடந்த கோபம் வந்தது. “உனக்கு என்ன பிரச்சினைகோபம் குறையாமல் கேட்டான்.

அவன் பன்மையில் பேசாமல் ஒருமையில் பேசியது, அது கோபத்தினால் ஆனாலும் கூட, அவளுக்கு இதமாக இருந்தது. அவன் திடீரென்று வந்து எந்தப் பிரச்சினையைக் கேட்கிறான் என்று அவள் புரியாமல் விழித்தாள்.

ஈஸ்வர் சொன்னான். “கொஞ்ச நாளாவே ரொம்ப சோகமாய் இருக்கியே. அதுக்கு காரணம் கேட்டேன்”.  அவன் குரலில் அனல் இருந்தது.

விஷாலிக்கு அவன் கோபத்திற்கும், இந்தக் கேள்வியை இப்போது ஏன் கேட்கிறான் என்பதற்கும் காரணம் புரியவில்லை. அக்கறையோடு அவன் கேட்ட போதும் அவன் முகத்தில் சினேகம் இல்லை. நான் ஒரு சைக்காலஜிஸ்ட். உடம்போட பிரச்சினையை டாக்டர் கிட்ட சொல்ற மாதிரி மனசோட பிரச்சினையை என் கிட்ட சொல்லலாம். முட்டாள்தனமாய் எதுவும் செய்துக்க வேண்டியதில்லை

முட்டாள்தனமாக எதைச் செய்ய வேண்டாம் என்கிறான் என்று விஷாலிக்குப் புரியவில்லை. ஆனால் சம்பந்தமில்லாத மனோதத்துவ மருத்துவர் போல அவன் கேட்டாலும் மீண்டுமொரு மன்னிப்பு கேட்க இது நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. குறைந்தபட்சம் காது கொடுத்துக் கேட்கும் தயவாவது காட்டி இருக்கிறானே என்று நினைத்தவளாக மனோதத்துவ மருத்துவரிடம் சொல்வது போலவே தலை குனிந்து கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

“நான்... ஒரு நல்லவரைத் தப்பா புரிஞ்சுகிட்டு என்னென்னவோ பேசிட்டேன்... தப்புன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவர் கிட்ட மன்னிப்பும் கேட்டேன்.... ஆனா அவர் மன்னிக்கலை.... அது ரொம்பவே உறுத்தலா இருக்கு

தப்பா புரிஞ்சுக்க என்ன காரணம்?அவளையே கூர்ந்து பார்த்தபடி ஈஸ்வர் கேட்டான்.

“சின்ன வயசுல இருந்தே பழகின நண்பன்....என்று ஆரம்பித்தவள் மகேஷ் சொன்னதை நம்பி தவறாகப் புரிந்து கொண்டேன்என்று சொல்ல வந்தவள் அப்படியே அந்த வார்த்தைகளை முழுங்கி விட்டாள். அந்த ஒரு பாதகத்தைச் செய்தது தவிர மகேஷ் அவளுக்கு எல்லா விதங்களிலும் நல்ல நண்பனாகத் தான் இருந்திருக்கிறான். அவனைக் காட்டிக் கொடுக்க அவள் மனம் விரும்பவில்லை.  “... சின்ன வயசுல இருந்தே பழகின நண்பனாய் இருந்திருந்தால் தேவையில்லாமல் சந்தேகம் வந்திருக்காது. அவர் புதியவரானதால நானா ஏதோ பைத்தியக்காரத்தனமா கற்பனை செய்துகிட்டு தப்பா பேசிட்டேன்....

ஆனால் அவள் சொல்ல வந்த விஷயத்தை அவன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டான். அவள் அவனிடம் போனில் பேசியதற்கு சிறிது முன்பு தான் மகேஷ் வீட்டில் இருந்து வெளியேறியதைப் பார்த்திருந்தது ஈஸ்வரின் நினைவுக்கு வந்தது. இந்த அதிகாலையில் எங்கே போகிறான் என்று யோசித்ததும் நினைவுக்கு வந்தது. மகேஷ் போய் இவளிடம் ஏதோ பொய்யைச் சொல்லி விட்டிருக்க வேண்டும்....

ஈஸ்வர் அமைதியாகக் கேட்டான். என்ன பைத்தியக்காரத்தனமான கற்பனை?

குரல் நடுங்க பலவீனமாய் விஷாலி சொன்னாள். “என்னைத் தரக்குறைவா நினைச்சு தான் அவர் என் கிட்ட பழகினதாய் நினைச்சுகிட்டேன்....

எந்த ஒரு கண்ணியமான பெண்ணானாலும் அந்த சந்தேகம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தாங்கி இருக்க முடியாது தான் என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் கேட்டான். “அப்படி நினைக்கிற மாதிரி அந்த ஆள் உன் கிட்ட நடந்துகிட்டிருக்காரா

“இல்லை.... ஆனா சந்தேகத்தோட பார்க்கறப்ப சாதாரணமானது கூட மோசமாகத் தோணுமில்லையா... அப்படி தான் நினைச்சு ஏமாந்துட்டேன்....அவள் குரல் கரகரத்தது.

ஈஸ்வருக்கு அவள் கைவிரல் ஸ்பரிசம் இப்போதும் நினைவிருந்தது. அதைக் கூட அவனது தவறான கண்ணோட்டச் செய்கையாய் அவள் நம்பி இருக்கலாம்....

“நினைச்சது தப்புன்னு எப்ப புரிஞ்சுது?

“அவரோட நண்பர் ஒருத்தர் கிட்ட பேசினப்ப புரிஞ்சுது

 பாலாஜி! ஈஸ்வர் மௌனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் நீர் நிறைய சொன்னாள். “அவர் என்னை மன்னிச்சு என் கிட்ட சாதாரணமா பேசிகிட்டிருந்தார்னா போதும்... அதுக்கு மேல நான் எதிர்பார்க்கலை.

அவன் கேட்டான். “அது மட்டும் போதுமா?

போதும். அதுக்கு மேல எதிர்பார்க்க எனக்கு.... எனக்கு.... அருகதை இல்லைங்கவிசும்பலோடு வார்த்தைகள் வெளி வந்த போது ஈஸ்வரால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை....

“விஷாலிஎன்று உருகியவன் அவளைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான். “விஷாலி....!

(தொடரும்)
என்.கணேசன்


Monday, December 23, 2013

தாமரையின் தனிச்சிறப்பு!


அறிவார்ந்த ஆன்மிகம் 29

தாமரை நம் நாட்டின் தேசிய மலர். இந்திய அரசு வழங்கும் உயர் விருதுகள் எல்லாம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பத்மம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் தாமரையை ஒன்றியே வருவதாக இருக்கும். செல்வத்தின் கடவுளான திருமகள் சிவப்புத் தாமரையில் அமர்ந்திருப்பதாகவும், கல்வியின் கடவுளான கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பதாகவும் நம் நாட்டில் சித்தரிக்கப் படுகிறார்கள். மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால் மகாவிஷ்ணுவிற்கு பத்மநாபன் என்ற பெயரும் உண்டு. கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால் கண்ணனுக்கு கமலக் கண்ணன் என்ற பெயரும் உண்டு.

தாமரை நம் நாட்டு தேசிய மலர் மட்டுமல்ல வியட்னாம், எகிப்து போன்ற நாடுகளுக்கும் அது தேசிய மலர் ஆகும்.  பண்டைய எகிப்தில் தாமரை நைல் நதிக்கரை ஓரத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும், அக்கால எகிப்தியர்கள் தாமரை மலரைப் புனிதமாகப் போற்றியதாகவும் சொல்லப்படுகிறது. நம் நாட்டு தெய்வங்களைப் போலவே பண்டைய எகிப்திய கடவுள்களும் தாமரை மலரைக் கையில் வைத்திருப்பதாக பழங்கால எகிப்திய சிற்பங்கள் கூறுகின்றன. ஆனால் எகிப்திய தாமரை நம் நாட்டு தாமரையை விட தோற்றத்தில் சற்று வேறுபட்டிருக்கிறது.

இனி தாமரை மலருக்கு ஆன்மிக ரீதியாகவும், மற்ற விதங்களிலும் உள்ள தனிச்சிறப்புகளைப் பார்ப்போம்.

தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின்  இருப்பிடம். இறைவனும் இந்த முக்குணங்களையும் கொண்டவன் தானே? அதனால் தான் இறைவனின் பல அம்சங்களும் தாமரை மலருடனேயே ஒப்பிடப்படுகின்றன. தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்றெல்லாம் சொல்கிறோம்.  தாமரை மலர் இறைவனைப் பூஜிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தாமரை மலரைத் தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.

நம் வேதங்களிலேயே தாமரை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சோம என்பது தாமரையை  குறிக்கும் என்பது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளரால் நிறுவப்பட்டிருக்கிறது.  வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய கண்டத்தில் மிக முக்கியமான,  மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பவுத்த பண்பாடுகள் வரை ஆராய்ச்சி செய்தார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத்  தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார். வேதங்களின் உருவகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டினார். சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டி உள்ளார்.

இப்படி பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர்  தரையில் சேற்றில்  இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

அதே போல தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இதழ்கள் தண்ணீரினால் நனைவதில்லை. இது ஞானிகளின் மனநிலைக்கு உதாரணமாக இருக்கிறது. எத்தனையோ துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவே ஞானியின் உலக வாழ்க்கை அமைந்தாலும் ஞானி அவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் மேலான இயல்பு மாறாமல் இருப்பதை தாமரை இலை - தண்ணீர் உதாரணம் மூலம் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தனியாக ஓரிடத்தில் இருப்பவன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அது ஒரு கஷ்டமான காரியம் அல்ல. துன்பங்களும், பிரச்சினைகளும், கவர்ந்திழுக்கும் விஷயங்களும் நிறைந்த உலகின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்தும் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் பேருயர்வு. அது தான் உன்னத நிலை. அந்த நிலைக்கு ஒருவன் உயர்ந்திருக்க ஏண்டும் என்று சதா நினைவூட்டிக் கொண்டிருப்பது தாமரையின் தனிப்பெரும் சிறப்பு.

பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா ஒரு சுலோகத்தில் தாமரை மலர் உதாரணத்தையே அர்ஜுனனிற்கு சொல்லி விளக்குகிறார். எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.

மனித உடலில் “சக்ராஎன்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.  மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகின்றது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி சக்தி மையங்களை உருவகப்படுத்தும் போது கூட தாமரை மலரைக் கொண்டே உருவகப்படுத்தும் அளவு தாமரை சிறப்புப் பெற்றிருக்கிறது.

இப்படி வேத காலத்தில் இருந்து ஆன்மிக மலராய் கருதப்படும் தாமரைக்கு  மருத்துவத் தன்மைகளும் இருக்கின்றன.  பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. கப, பித்தங்களை சீராக்கவும், பேதிக்கு மருந்தாகவும் தாமரை பயனாகிறது.  முக்கியமாய் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக தாமரை கருதப்படுகிறது.

பொதுவாக ஜுரங்களுக்கு மருந்தாகவும், தாகத்தை தணிப்பதாகவும், வயிற்றுப்பூச்சிகளை போக்கும் மருந்தாகவும், உடலில் உஷ்ணம், எரிச்சல் இவற்றை குறைக்க வல்லதாகவும் ஆயுர்வேதத்தில் தாமரை கருதப்படுகிறது. தாமரை விதைகள் தானியங்களை விட சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. தாமரையின் வேர்கிழங்கு (Rhizome) உடல் வளர்ச்சிக்கு சத்துணவாகும். இது உடலுக்கு டானிக்காக செயல்படும். கல்லீரல் நோய்கள், இருமல், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு, மூலத்தில் ரத்தம் வருவது போன்றவற்றுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. தாமரை பிராங்கைடீஸ் போன்ற நுரையீரல் நோய்களுக்கும் மருந்தாகும். செந்தாமரையை விட வெண் தாமரைக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்கின்றனர்.

இப்படி மகாலட்சுமியின் உறைவிடமாகவும், மெய்ஞான நிலையின் உதாரணமாகவும், மருத்துவ குணங்களின் தொகுப்பாகவும் இருக்கும் நம் நாட்டு தேசிய மலரான தாமரையின் மகத்துவத்தை அறிந்திருந்து, முறையாகப் பயன்படுத்தி நாம் முழுப்பலன் அடைவோமாக!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 24-9-2013

 

Thursday, December 19, 2013

பரம(ன்) ரகசியம் – 76



தென்னரசுக்கு சிவலிங்கத்தின் மேலே ஒரு வெட்ட வெளி தான் தெரிந்தது, அதன் பின்னால் இருந்த சுவர் உட்பட அறையே காணாமல் போய் அந்த வெட்ட வெளியில் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இடப்பாக உமையவளின் அசைவுகளில் பெண்மையின் நளினம் இருந்தது என்றால் வலப்பாக சிவனின் அசைவுகளில் ஆண்மையின் கம்பீரம் தெரிந்தது. ஒவ்வொரு அசைவிலும் இயற்கையின் சக்திகள் பின்புறம் தாண்டவமாடின. ஒரு அசைவில் அக்னி ஜொலித்தது. நிஜமாகவே அந்த இடம் தீப்பிடித்துக் கொண்டது போன்ற பிரமை தென்னரசுக்கு ஏற்பட்டது. அந்த வெப்பத்தை அவர் நன்றாகவே உணர்ந்தார். சிவனின் அடுத்த அசைவில் அக்னி போய் பிரம்மாண்டமான சமுத்திரப் பேரலை தென்னரசுவை மூழ்கடிப்பது போல முன்னேறி வந்தது. தென்னரசு தன்னையறியாமல் பின்னுக்கு நகர்ந்தார். ஆனால் அது வெறும் தோற்றம் மட்டும் தான். ஆனாலும் தென்னரசு நனைந்து போயிருந்தார்.

தென்னரசுவிற்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. ஆனால் சிவனின் அடுத்த முத்திரையில் சூறாவளிக் காற்று அடிக்க ஆரம்பித்தது. அந்தக் காற்றில் பறந்து விடுவோமோ என்று பயந்த தென்னரசு ஜன்னல் கம்பி ஒன்றைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். அந்தக் காற்றின் வேகம் அவரை ஜன்னலோடு ஒட்ட வைத்தது.  அந்தக் காற்றில் அவரும் அவரின் உடைகளும் உலர்ந்து போயின. தென்னரசுக்கு இந்த அனுபவம் மூளையைச் சிதறச் செய்வதாய் தோன்றியது. அத்தனையும் முடிந்தால் போதும் என்றிருந்தது.  

அப்போது தான் பசுபதி கண்களைப் பாதி மூடிய நிலையில் எதிரே இருந்த காட்சிகளைக் கண்டு அதில் லயித்துப் போயிருந்ததை தென்னரசு கவனித்தார். திடீரென்று சிவனின் தலையிலிருந்து பெரிய நீர்வீழ்ச்சியும், நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பிழம்பும், நாட்டிய அசைவிலிருந்து பெருங்காற்றும் ஏக காலத்தில் தோன்ற ஆரம்பித்தன. சிவனோடு சேர்ந்து அண்ட சராசரங்களும் ஓரு தாள லயத்துடன் நாட்டியம் ஆடுவது போன்ற ஒரு பிரமை தென்னரசுக்கு ஏற்பட்டது.

பசுபதி முழுவதுமாகக் கண்களை மூடிக் கொண்ட போது அத்தனையும் மறைந்து போய் எதிரே சிவலிங்கம் மட்டும் எதுவுமே நடந்திருக்கவில்லை என்பது போல இயல்பாகத் தெரிந்தது. தென்னரசு அடுத்த கணம் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அவர் நின்றது தெருக்கோடியில் தான். புத்தகங்களைக் கூட அவர் அந்தத் தோட்டத்திலேயே விட்டிருந்தார்.

அன்று காய்ச்சலில் படுத்தவர் அதில் இருந்து மீள ஒரு வாரம் தேவைப்பட்டது. அந்த ஒருவார காலத்தில் கனவில் எல்லாம் சிவ தாண்டவத்தை பல தடவை பார்த்தார். சங்கர் மறு நாளே அவரை வந்து பார்த்த போது ஏனோ தென்னரசுக்கு அதை நண்பனிடம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லாமல் இருந்ததற்கான காரணத்தை அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. தனக்கு மட்டுமே தெரிந்த அந்தக் காட்சி சங்கருக்கு அது வரை எப்போதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது. தெரிந்திருந்தால் சங்கர் கண்டிப்பாக அவரிடம் சொல்லி இருப்பார். தனக்கு மட்டுமே தெரிந்த அந்த பிரம்மாண்டக் காட்சியை நண்பனிடம் கூடப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. நண்பனுக்கு அதிகம் தெரியாமல் இருப்பதே நல்லது என்று தென்னரசு நினைத்தார். பெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் அது பற்றித் தன் நெருங்கிய நண்பனிடம் கூடச் சொல்லத் தயங்கும் மனநிலையாக அது இருந்தது.

தற்செயலாகத் தனக்குத் தெரிந்த காட்சியில் ஏதோ பெரிய ரகசியத்தின் சூட்சுமம் மறைந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. சங்கர் காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போன பிறகு அவருக்கு அந்த சிவலிங்கத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடைய இன்னொரு நண்பனான விஸ்வநாதனையே சங்கரின் தங்கை மீனாட்சி திருமணம் செய்து கொண்டதால் பரமேஸ்வரன் குடும்பத்தோடு இருந்த தொடர்பு விட்டுப் போகவில்லையே தவிர தோட்ட வீட்டுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

விஸ்வநாதன் மாமனாரின் கட்டாயத்திற்காகவும், மனைவியின் நச்சரிப்பிற்காகவும் எப்போதாவது நல்ல நாட்களில் தோட்ட வீட்டுக்குப் போய் பசுபதியையும் சிவலிங்கத்தையும் வணங்கி விட்டு வந்தாரே ஒழிய அவருக்கு மற்ற எந்த விதத்திலும் அங்கு போகத் தோன்றவில்லை. அதை அவர் வெளிப்படையாகவே தென்னரசுவிடம் சொல்லி இருக்கிறார்.

வருடங்கள் ஓடின. ஆனால் அந்த சிவலிங்கமும், அந்த சக்தி தாண்டவமும் தென்னரசால் மறக்கப்படவில்லை. அதைப் பற்றி யாரிடமும் அவர் பேசவுமில்லை. நீலகண்ட சாஸ்திரி எழுதிய ஆன்மிக பாரதம் புத்தகத்தை அவர் படிக்க நேரிட்ட போது விசேஷ மானஸ லிங்கம் பற்றித் தெரிந்தது. ஒளிரும் அந்த விசேஷ மானஸ லிங்கம் தான் தோட்ட வீட்டில் பசுபதி வணங்கிக் கொண்டிருக்கும் சிவலிங்கம் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.  ஆன்மிகத்திலும் அபூர்வ சக்திகளிலும் மிகத் தெளிவான ஞானம் இருந்த குருஜியிடம் போய் இதைச் சொல்லி விளக்கம் கேட்கத் தோன்றியது.

ஏழு முறை சென்று குருஜியைத் தரிசிக்க முடியாமல் திரும்பிய அவருக்கு எட்டாவது முறை தரிசனம் கிடைத்தது. குருஜியின் உதவியாளன் பத்து நிமிடத்திற்குள் பேசி முடித்து விட வேண்டும் என்று சொல்லித்தான் அவரை உள்ளே அனுப்பினான். அதனால் தென்னரசு நேரத்தை வீணாக்காமல் ஆன்மிக பாரதம் புத்தகத்தில் விசேஷ மானஸ லிங்கம் இருந்த பகுதியைச் சுட்டிக் காட்டி அந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்றும் அந்தப் புத்தகத்தில் இருக்கும் மற்ற தகவல்கள் எல்லாம் உண்மையா என்று அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் சொன்னார்.

குருஜி அவரை உடனடியாக நம்பி விடவில்லை. அதனால் அந்த சிவலிங்கம் ஒளிர்வதைத் தான் பார்த்து இருப்பதாகவும் அந்த சிவலிங்கத்தை ஒரு சித்தர் தான் தன் நண்பன் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தந்தார் என்றும் தென்னரசு தெரிவித்தார். குருஜி கண்களில் ஒரு மின்னல் வந்து போனது.

தன் உதவியாளனை அழைத்து மீதமுள்ள பார்வையாளர்களை திருப்பி அனுப்பச் சொல்லி விட்டு தன் முழு கவனத்தையும் தென்னரசுவிடம் திருப்பினார். அன்று குருஜி அந்த சிவலிங்கத்தைப் பற்றியும், பசுபதியைப் பற்றியும் நிறைய கேள்விகளைத் தென்னரசுவிடம் கேட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டார். குருஜியின் கூர்மையான அறிவிற்கு இன்னும் முக்கியமான தகவல் ஒன்றை தென்னரசு மறைப்பதாகத் தோன்றவே நேரடியாகக் கேட்டே விட்டார். ஏதோ ஒரு விஷயத்தை நீ இன்னும் மறைக்கிற மாதிரித் தெரியுதே   

தென்னரசு தயக்கத்துடன் சொன்னார். சொன்னால் நீங்க நம்புவீங்களோ இல்லையோ தெரியலை. அதான் சொல்லலை...

“பரவாயில்லை சொல்லு.

தென்னரசு தயக்கத்துடன் ஆரம்பித்தாலும் சொல்லும் போது அந்தக் காட்சியை மறுபடியும் காண்பது போல உணர்ந்தார். அவருடைய வார்த்தைகளில் இருந்த பயமும், பரவசமும், சொன்ன விஷயத்தின் தன்மையும் குருஜியை நம்ப வைத்தன. அந்தக் கணத்தில் ஒரு பலத்த கூட்டணி ஆரம்பமாகியது.

தென்னரசுவிடம் குருஜி தனக்கு முன்பே விசேஷ மானஸ லிங்கம் பற்றித் தெரியும் என்று காண்பித்துக் கொள்ளவில்லை. ஆனால் தென்னரசு சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அது தான் விசேஷ மானஸ லிங்கம் என்று நம்புவதில் தனக்குத் தயக்கம் இல்லை என்று சொன்னார்.

தென்னரசு தன் நெடுநாளைய சந்தேகத்தைக் கேட்டார். “குருஜி. நீங்க கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட உருவம் கிடையாதுன்னு சொல்றதை நான் பல சொற்பொழிவுகள்ல கேட்டிருக்கேன். ஆனால் நான் பார்த்தது சிவனின் அர்த்தநாரீஸ்வரன் உருவத்தை. சிவனோட நாட்டிய அசைவுகள்லயே ரெண்டு பக்கமும் இருந்த நுணுக்கமான வித்தியாசங்களைக் கூட நான் கவனிச்சேன். அப்படின்னா அந்த உருவம் நிஜம் தான்னு ஆகுது தானே?

குருஜி தாமதிக்காமல் பதில் அளித்தார். “நீ பார்த்தது பசுபதியோட காட்சியை. அந்த மானஸ லிங்கம் யார் எந்தப் பார்வையில பார்க்கிறாங்களோ அந்தக் காட்சியைக் காட்டக் கூடிய சக்தி படைச்சது. ஒரு கிறிஸ்துவருக்கு அதுல லயிக்க முடிஞ்சுதுன்னா அவர் யேசு கிறிஸ்துவைப் பார்த்திருப்பார். ஒரு முஸ்லீம் அதுல லயிக்க முடிஞ்சிருந்ததுன்னா அல்லாவோட சக்திகளை அதில் பார்த்திருப்பார். ஸ்கிரீன் ஒன்னு தான் எந்தப்படம் போடறாங்களோ அந்தப் படம் ஸ்கிரீன்ல தெரியுது இல்லையா. அந்த மாதிரி தான் இதுவும். ஒரே வித்தியாசம் என்னன்னா அது வெறும் காட்சியா மட்டும் தான் இருக்கும். இதுல அது நிஜமாகவே நடக்கும்....

குருஜி தென்னரசுவை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார். தென்னரசு இரண்டாவது முறை சென்ற போது ஜான்சனும் இருந்தார். விசேஷ மானஸ லிங்கத்தைத் தான் ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்றும், பசுபதியுடன் பேச வேண்டும் ஜான்சன் விரும்பினார். பரமேஸ்வரன் குடும்பம் மூலமாகப் போக தென்னரசுவிற்குத் தயக்கம் இருந்தது. அப்படிப் போவதில் பல கேள்விகள் எழும்...

நேரடியாகவே போனால் என்ன என்று தோன்றி அவர் ஜான்சனை அழைத்துக் கொண்டு போனார். ஆனால் பசுபதி அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார். ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பினார்கள்.

குருஜி அந்த விசேஷ மானஸ லிங்கம் நினைத்ததை எல்லாம் ஏற்படுத்தித் தர முடிந்த பிரம்மாண்டமான சக்திகளைக் கொண்டது என்று தீர்க்கமாக நம்பினார். அந்த அளவு நம்பிக்கை ஜான்சனுக்கு இருக்கவில்லை.. சித்தர்கள் சக்தி மீது அவருக்கு நம்பிக்கை இருந்த போதிலும் சித்தர்கள் தங்கள் சக்திகளை அந்த விசேஷ மானஸ லிங்கத்தில் சேகரித்து வைத்திருக்க முடியும் என்றும் அதை வசப்படுத்திக் கொள்ள முடிந்தவர்கள் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நம்ப அவர் அறிவியல் அறிவு தடுத்தது. தென்னரசு கண்ட காட்சி கூட அவர் சந்தேகத்தைத் தீர்த்து விடவில்லை. தென்னரசுவிற்கே கூட அரைகுறையாய் தான் நம்பிக்கை வருகிற மாதிரி இருந்தது. ஆனால் குருஜியின் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்தது.

தென்னரசுக்கோ நம்பிக்கை வருவதும் போவதுமாக இருந்தது. அவருக்கு ஈஸ்வர் குருஜியிடம் எழுப்பிய சந்தேகம் போல் விசேஷ மானஸ லிங்கம் சித்தர்களின் சித்தப்படியே நடக்கும் ப்ரோகிராமாக இருக்குமோ என்ற பயம் இருந்தது. அப்படி இருந்து விட்டால், என்ன தான் அதைக் கடத்தி வைத்துக் கொண்டாலும் அது பலன் தராது என்று அவர் பயந்தார். அவருடைய ஒரே தைரியம் குருஜியாகத் தான் இருந்தார். அத்தனை கூர்மையான அறிவுக்குத் தெரியாத, புரியாத சக்திகள் இருக்க முடியாது என்று அடிக்கடி தனக்குள்ளே தென்னரசு சொல்லிக் கொண்டார். இந்த முதல் மாதிரி ஆராய்ச்சியில் கிடைத்த சிறிய வெற்றி பெரிய வெற்றிக்கு அஸ்திவாரமாய் இப்போது தான் நம்பிக்கை பிறந்திருந்தது....

விதி அவருக்கு இது நாள் வரையில் சாதகமாக இருந்தது இல்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் அப்படியே தன் நிலைமையை ஒத்தவர்களோடு மட்டும் பழகி இருந்திருந்தால் அது அவரை வெட்கப்பட வைத்திருக்காது. ஆனால் சங்கரைப் போன்ற பணக்கார நண்பனுடன் பழக ஆரம்பித்த போது தான் ஏழ்மையில் இழப்பது எத்தனை என்பது அவருக்குப் புரிந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரின் மகன் என்ற கர்வம் சங்கருக்குச் சிறிதும் இருக்கவில்லை. சொல்லப்போனால் சங்கர் தன் பணக்கார அந்தஸ்து குறித்த பிரக்‌ஞையில் கூட இருக்கவில்லை. ஆனால் அந்த வீட்டில் மற்ற பெரியவர்களிடம் அது இருந்தது.

பரமேஸ்வரன் மகனின் நண்பன் என்ற ஒரே காரணத்தால் தென்னரசுவை மரியாதைக் குறைவாக நடத்தவில்லை என்ற போதும் தன் பணக்கார அந்தஸ்துக்கு தென்னரசு இணை அல்ல என்பதைப் பல முறை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளதை தென்னரசு உணர்ந்திருக்கிறார். ஆனந்தவல்லியோ வெளிப்படையாகவே தீண்டத்தகாத நபரைப் பார்ப்பது போலத் தான் தென்னரசுவைப் பார்த்தாள். அப்போதெல்லாம் ‘எனக்கும் பணம் நிறைய இருந்திருந்தால்!....என்ற ஏக்கம் தென்னரசுக்கு ஏற்படும்.

படித்து முடித்து கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைத்த பிறகு ஏழை, நடுத்தர வர்க்கமாக முடிந்ததே ஒழிய பணக்காரராக முடியவில்லை. சங்கரின் தங்கை மீனாட்சி அவரது இன்னொரு நண்பனைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த நண்பன் வீட்டோடு மாப்பிள்ளையாக செல்வந்தனாக மாறிய போது பொறாமையாக இருந்தது. சங்கரின் உயிர் நண்பனாக இருந்து சங்கருடனேயே எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தபடியால் மகனை நினைவுபடுத்திய தென்னரசுவை பரமேஸ்வரன் மருமகனாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்று தோன்றிய போது அதற்கும் அவர் விதியை நொந்து கொண்டார்.

விதி அவர் மனைவியையும் சீக்கிரமே பறித்துக் கொண்டது. தன் மகளையாவது பரமேஸ்வரன் தன் குழந்தைகளை வளர்த்தியது போல செல்வச் செழிப்பில் வளர்த்த ஆசைப்பட்டார். குழந்தைகள் நினைத்தவுடன் அதை வாங்கிக் கொடுக்க முடிந்த பரமேஸ்வரன் தான் அவருக்கு ஒரு உதாரணத் தந்தையாக இருந்தார். ஏனென்றால் அதை அவர் சங்கருடன் கூடவே இருந்து பல முறை பார்த்திருக்கிறார்.  ஆனால் அவருடைய நிலைமை, மகள் ஆசைப்படுவதில் ஒன்றிரண்டை வாங்கித் தருவதில் கூட சிரமத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது. இயல்பிலேயே நல்ல பெண்ணான விஷாலி நிலைமையை உணர்ந்து தந்தையிடம் கேட்பதையே தவிர்த்தாலும் அவருக்கு அதைப் புரிந்து கொள்ள முடிந்ததால் இதயத்தின் ஆழத்தில் வலித்தது.     

காலம் பல கழிந்து மகேஷ் விஷாலியைக் காதலிக்க ஆரம்பித்த போது மீண்டும் அவர் ஆசைகள் துளிர்த்தன. சங்கரும், சங்கரின் மகனும் என்றுமே இந்தியா வரப்போவதில்லை, சகல சொத்துக்கும் அதிபதியாக மாறப் போகிறவன் மகேஷ் தான் என்பதால் அவன் காதலை அவர் வரவேற்றார். விஷாலி அவனை நல்ல நண்பனாகத் தான் நினைத்தாள் என்றாலும் அவன் காதலைக் கண்டிப்பாக நிராகரிக்க மாட்டாள் என்று எடை போட்டிருந்தார். ஆனால் மகேஷ் பரமேஸ்வரனுக்குப் பயந்து தன் காதலை விஷாலியிடம் சொல்வதைக் கூடத் தள்ளிப் போட்ட போது மறுபடி ஏமாற்றமாக இருந்தது. ஆனந்தவல்லியே சாகவில்லை, அப்படி இருக்கையில் பரமேஸ்வரனும் பல காலம் வாழ்வார் என்றே தோன்றியது. அடுத்தவன் காசுக்காக இப்படிப் பிச்சைக்காரனாகக் காத்திருப்பதை விட நம்மிடமே பணம் வேண்டிய அளவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

விசேஷ மானஸ லிங்கம் ‘எல்லாம் தர முடிந்த கல்பதருஎன்று தெரிந்த போது முதல் முறையாக அவர் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிய ஆரம்பித்தது.

குறி சொல்லும் கிழவியின் வீட்டில் இருந்து திரும்பி வரும் போது பார்த்தசாரதி ஈஸ்வரிடம் சொன்னார். “அந்தக் கிழவி சொன்னதும் அந்த சித்தர் சொன்னதும் ஒத்துப் போகுது ஈஸ்வர். நீங்களே முயற்சி செய்து பாருங்க

ஈஸ்வர் தலையசைத்தான். முயற்சி செய்வதற்கு முன் தன்னை அமைதிப்படுத்திக் கொள்வதும் தன்னை சில விதங்களில் தயார்ப்படுத்திக் கொள்வதும் முக்கியம் என்பதை ஆராய்ச்சியாளனான அவன் உணர்ந்திருந்தான். அதற்கு அவனுக்கு சில மணி நேரங்கள் தேவைப்படும்...

“நான் நாளைக்குக் காலையில் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் சார்...

பார்த்தசாரதி சரியென்றார். “நானும் வரட்டுமா? இல்லை வேற யாரையாவது உங்கள் உதவிக்கு அனுப்பட்டுமா?

“உங்களுக்கு சிரமம் இல்லாட்டி நீங்களே வர்றது நல்லது சார்

“நானே வர்றேன். எனக்கு சிரமம் என்ன இருக்கு. இப்ப எனக்கு இந்த கேஸ்னாலன்னு இல்லை நிஜமாவே தனிப்பட்ட முறையிலயே சுவாரசியம் கிளம்பி இருக்கு....

அவன் நன்றியுடன் தலையசைத்தான். ஒரு நிமிடம் கழித்து அவராகவே சொன்னார். “நான் உறுதியா சொல்றேன் ஈஸ்வர். உங்களால கண்டிப்பா முடியும்... ஏன்னா நீங்க அந்தத் தோட்ட வீட்டுல ஒரு தடவை தியானத்துல உட்கார்ந்தீங்க ஞாபகம் இருக்கா, அப்ப எத்தனை சீக்கிரமாய் உங்களால தியானத்துக்குப் போக முடிஞ்சது... எனக்கு அப்ப அஜந்தா குகையில பார்த்த ஒரு புத்தர் ஞாபகம் வந்துச்சு. அந்த அளவு ஆழமா தியானத்துல நீங்க லயிச்சீங்க

ஈஸ்வருக்கு அந்த நேரத்தில் அந்த நம்பிக்கை வார்த்தைகள் நிறையவே தேவைப்பட்டன. மனதார சொன்னான். “தேங்க்ஸ் சார்

அன்றைய நாளை அவன் நினைத்துப் பார்த்தான். அன்று கிடைத்த தியான அனுபவம் அவனுக்கு அதற்கு முன் எப்போதும் கிடைத்திருக்கவில்லை. பின்பும் கிடைத்திருக்கவில்லை. அன்றைய அனுபவத்தின் முடிவிலும் கூட அவனுக்கு சிவலிங்கம் காட்சி அளித்திருந்தது. அந்த நேரத்தில் வேத கோஷம் கூடக் கேட்டுக் கொண்டிருந்தது....

திடீரென்று ஒரு உண்மை அவனுக்கு உறைத்தது. அன்றே சிவலிங்கம், தான் வேத பாடசாலையில் இருப்பதாகச் சொன்ன செய்தி தானோ அது, அதை அவன் தான் புரிந்து கொள்ளவில்லையோ?.... அவன் சம்பந்தப்பட்டவன் என்பதால் தான் விசேஷ மானஸ லிங்கம் அவனை நினைவுபடுத்திக் கொண்டே இருந்ததோ?

(தொடரும்)
என்.கணேசன்
  

Monday, December 16, 2013

மார்கழியில் ஆன்மிகமும், ஆரோக்கியமும்!


அறிவார்ந்த ஆன்மிகம் - 40


மார்கழி மாதம் ஆன்மிக மாதம். “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கிறார். மார்கழி மாதத்தில் நோன்பு இருக்கும் வழக்கம் சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதனை  பரிபாடல் முதலான சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.

மார்கழி மாதத்தில் பெண்கள் நோன்பு இருப்பதால் அந்த நோன்புக்கு மார்கழி நோன்பு என்ற பெயரும் கன்னிப்பெண்கள் பாவை, அதாவது பொம்மை (உருவம்) அமைத்து நோன்பு இருப்பதால் அதற்கு பாவை நோன்புஎன்ற பெயரும் உண்டு.   இந்த நோன்பில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று நல்ல கணவன் வேண்டும் என்பது, இரண்டு, உலகில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது. இப்படி சுயநல நோக்கமும், பொதுநல நோக்கமும் கொண்டு பாவை நோன்பு நோற்கப்படுகிறது. 

சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய    திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.  திருப்பாவை ''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்று தொடங்குகிறது. மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய  திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை  மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்''  என்று முடிகிறது. திருப்பாவையின் முப்பது பாடல்களையும், திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அந்த முப்பது பாடல்களையும் மார்கழி மாத முப்பது நாட்களிலும் பக்தி ரசம் பொங்க வைணவ, சைவ பக்தர்கள் பாடி மகிழ்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு ஆற்றங்கரைக்குச் சென்று நீராடி ஆற்று மணலில் பாவை செய்து அதற்குப் பூஜை செய்வதை அக்காலத்தில் கன்னிப்பெண்கள்  வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மனதில் ஒரு லட்சிய புருஷனை வரித்து அப்படிப்பட்டவனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அப்படியே கணவன் அமைவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.  அவ்வாறு இளம் பெண்கள் நீராடும் போது பாவையை நோக்கி ‘பாவாய்’ என அழைத்துப் பாடுவதே பாவைப் பாட்டாகும்.   நோன்பின் போது உண்ணும் உணவிலும், அணிகலன்கள் அணிவதிலும் நிறைய கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். ஆண்டாளே அறிவிக்கிறாள். '' பாலுண்ணோம் நெய்யுண்ணோம் கோல அணிகலெல்லாம் பூணோம்''. திருமணமான பெண்கள் கணவனின் நலனிற்காகவும், இருவரும் இடைபிரியாதிருக்கவும் வேண்டிக் கொள்வார்கள்.

மார்கழி மாதத்தில் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தை  "கர்போட்டம்" என்பார்கள். அடுத்த வருடம் வரும் மழைக் காலம்  அதற்கு முன்னாலேயே மார்கழி மாதத்தில் சூல் கொள்கிறது, அது மழைக்குக் கர்ப்பம் தரிக்கும் காலம் என்று அக்காலத்தில் நம்பினார்கள். அந்த சமயத்தில் வாயு மண்டலத்தில் தென்படும் மேகக்கூட்டங்களின் அமைப்புகாற்றின் தன்மைபனி, வைகறையில் காணப்படும் வானத்தின் நிறம் ஆகியவற்றைப் பொருத்து வரும் ஆண்டின் மழைக்காலம் அமையும் என்ற கணிப்பு அவர்களூக்கு இருந்தது.

இதை விளக்கும் பழந்தமிழ் பாடல் ஒன்று உண்டு.: 

தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்    
தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே       
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக    
காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே

மார்கழி மாதம் தனுசுராசியில் சூரியன் நகரும் பதிநான்கு நாள்களில் காணப்படும் தட்பவெப்ப நிலையைப் பொருத்து எதிர் வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மழைபொழிவு இருக்கும் என்பதே இப் பாடலின் கருத்து.

அதனால் தான் நன்றாக மழை பெய்ய வேண்டும் என்று மார்கழி நோன்பின் போதே, வேண்டிக் கொள்ளும் வழக்கம் அன்று இருந்தது. பாவை நோன்புக்கும் மழைக்கும்  உள்ள தொடர்பையும்  ஆண்டாளும் தன் பாடலில் வெளிப்படுத்தி உள்ளாள்.  'நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராட்டினால், தீங்கின்றி  நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்" என்று கூறியுள்ளாள். திருவெம்பாவை, திருப்பாவை இரண்டிலுமே ‘மழை பொழிய வேண்டும்’ என்னும் வேண்டுதல் உண்டு.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவது மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. சிறு பிள்ளைகள் கூட சோம்பல் இல்லாமல் வரவேண்டும் என்று உற்சாகப்படுத்த கோயில்களில் பொங்கல், சுண்டல் எல்லாம் தருவதுண்டு. மார்கழி மாத வழிபாட்டிற்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்பு என்பதற்கு அறிவியல் காரணமும் உண்டு.

மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. இந்த ஓசோன் படலம் தான் சூரியனிடம் இருந்து வருகின்ற Ultra Violet Rays என்று சொல்லப்படுகிற  கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி  உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. மார்கழி மாத அதிகாலைகளில் சூரியனின் உதயத்திற்கு முன்பாக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. ஓசோன் நிறைந்த  மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய் தீர்வுக்கும் கூட மிகவும் உதவியாக இருப்பதாக்க் கூறுகிறார்கள்.


இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலைக் குளிரில் வெறுமனே மக்களை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் பலர் கேட்க மாட்டார்கள் என்று அதில் பக்தியை சேர்த்து நம் முன்னோர் கட்டாயமாக்கி விட்டார்கள். ஓசோன் வாயு அதிகமாகக் கிடைக்கும் அந்த அதிகாலை நேரத்தை வழிபாட்டு நேரமாக்கி விட்டார்கள்.

அதிகாலையில் விழித்தெழுந்து வாசலில் நீர் தெளித்து சாணமிட்டு மொழுகி கோலமிட்டு, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுவது, கோவிலுக்குச் செல்வது, பஜனை செய்வது  போன்ற செயல்களில் உடல் ரீதியான  நல்ல மாற்றங்களும் நிகழ்கின்றன. அதோடு ஆன்மிக வளர்ச்சியும் ஏற்படுகிறது.

காலப் போக்கில் பாவை நோன்பு முறை காலாவதியாகி விட்டது. ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும் தான் மார்கழி வைகறையில் நம்மைத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வைக்கின்றன. மார்கழி மாதம் விடியற்காலையில் கோயில் செல்வது, பஜனைசெய்வது மட்டும் பலரால் இன்னும் பின்பற்றப்படுகிறது.  தற்போது ஐயப்ப பக்தர்களும் மார்கழி மாத வழிபாட்டில் பெருமளவு ஈடுபடுகின்றனர். இப்படி ஆன்மிகத்தையும், ஆரோக்கியத்தையும் வளர்க்கும் மார்கழி மாத வழிபாட்டில் நாமும் ஈடுபட்டு இரட்டைப் பலனை அடைவோமே!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 10-12-2013