Thursday, October 31, 2013

பரம(ன்) ரகசியம் – 68



னந்தவல்லி விஷாலி மட்டும் வீட்டிற்குள் நுழைவதை ஜன்னல் வழியாகப் பார்த்தாள். விஷாலியின் முகம் மிகவும் வாடி இருந்ததையும், விஷாலியை விட்டு விட்டு உள்ளே வராமல் வேறெங்கோ ஈஸ்வர் மறுபடி போய் விட்டதையும் கவனித்த அவளுக்கு ஈஸ்வர் அவ்வளவு சுலபமாக விஷாலியிடம் இருந்த கோபத்தை முடித்துக் கொள்ள மாட்டான் என்பது புரிந்தது. இந்தப் பெண் எதோ தப்பு செய்து அவனுக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும், அவன் ஈகோவை நிறையவே பாதித்திருக்க வேண்டும் என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மீனாட்சி விஷாலியை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கையில் மகன் அறையில் அமர்ந்து கொண்டிருந்த ஆனந்தவல்லி மகனிடம் சொன்னாள்.

இந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. புத்திசாலியான பொண்ணு. ஆனா சில விஷயங்கள்ல சாமர்த்தியம் பத்தாது. ஈஸ்வர் மாதிரி ஆளை எல்லாம் கொஞ்சம் நாசுக்கா தான் கையாளணும். இதுக்கு அது தெரியலை...என்று மகனிடம் சொன்னாள்.

பரமேஸ்வரன் தாயைக் கடிந்து கொண்டார். “ஆமா, உன் சாமர்த்தியம் யாருக்கும் வராது. நீயா இருந்தா என்ன செய்திருப்பே?

ஈஸ்வர் ஒரு செண்டிமெண்ட் ஆசாமி. ஒரு காலத்துல உன் கிட்ட எவ்வளவு கோபமா இருந்தான். உனக்கு மாரடைப்பு வந்து உன் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சப்ப அவனோட அத்தனை கோபமும் காத்துல போச்சு. இன்னைக்கு உன் மேல எவ்வளவு பாசமா இருக்கான். அந்தப் பொண்ணு அவன் உதாசீனப்படுத்தறத தாங்காமல் தற்கொலை செய்யப் போறாள்னு வச்சுக்கோ. உன் பேரன் பாகாய் உருகிடுவான்....
பரமேஸ்வரன் அதிர்ந்து போனார். என்ன கொடுமையான ஐடியா எல்லாம் சொல்றே....

“தற்கொலை செஞ்சுக்கச் சொல்லலைடா. அப்படி நடிக்க தான் சொல்றேன். பின் உன் பேரன் மாதிரி செண்டிமெண்ட் ஆள்களை எப்படித் தான் வழிக்குக் கொண்டு வர்றது.

பரமேஸ்வரன் படபடத்தார். உன் வயசுக்கு இது எல்லாம் நல்லா இருக்கா? தயவு செஞ்சு இதை எல்லாம் அந்தப் பொண்ணு கிட்ட சொல்லிடாதே. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போகுது....

“உன் கிட்ட சும்மா சொன்னேண்டா. அவ கிட்ட எல்லாம் சொல்லுவேனா?என்ற ஆனந்தவல்லி யோசித்தாள். ஆனால் அவளுக்கு விஷாலி அந்த மாதிரி ஏதாவது நாடகம் போட்டு ஈஸ்வரை மடக்கினால் தேவலை என்று இப்போதும் தோன்றியது. அம்மாவின் எண்ணப் போக்கு போகும் விதம் பரமேஸ்வரனுக்கு விபரீதமாகத் தெரிந்தது. அம்மா யோசிப்பதை பலத்த சந்தேகத்தோடு பார்த்தார். இனி என்ன பயங்கரமான கற்பனை எல்லாம் வருமோ!

ஆனந்தவல்லி அவரிடம் சொன்னாள். “உன் மருமகளோட போன் நம்பர் குடுடா

பரமேஸ்வரன் இன்னும் பயந்தார். “எதுக்கு?

ஊம்... அமெரிக்கால இப்ப க்ளைமேட் எப்படி இருக்குன்னு கேக்க. போன் நம்பர் கேட்டா தர வேண்டியது தானடா... நீ தர்றியா இல்லை உன் மகள் கிட்ட போய் கேட்கட்டுமா?

பரமேஸ்வரன் தயக்கத்துடன் தந்தார். ஆனந்தவல்லி கண்களை சுருக்கிக் கொண்டு அந்த எண்களைத் தானே அழுத்த ஆரம்பித்தாள்.

ஹலோ நான் ஆனந்தவல்லி பேசறேம்மா... எப்படிம்மா இருக்கே?

பரமேஸ்வரன் போன் செய்ததை விட ஆனந்தவல்லி போன் செய்து பேசுவது கனகதுர்காவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம் அவள் கணவர் தன் பாட்டியைப் பற்றி நிறையவே அவளிடம் சொல்லி இருக்கிறார்....

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க பாட்டி?

முன்ன மாதிரி இப்பவெல்லாம் உடம்புக்கு முடியறதில்லம்மா. இனி எத்தனை நாள்னு தெரியல.... கண்ணை மூடறதுக்குள்ள உன்னை ஒரு தடவை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அதான் போன் செஞ்சேன்... நீ எப்பம்மா வர்றே?

“கிறிஸ்துமஸ் லீவுல வர்றேன் பாட்டி

“அது வரைக்கும் நான் இருப்பேன்கிற நம்பிக்கை எனக்கு இல்லம்மா துர்கா.. நீ உடனடியா ஏன் கிளம்பி வரக் கூடாது?

கனகதுர்கா திகைத்தாள். உடனடியாவா?

“திடீர்னு கிளம்பினா விமான செலவெல்லாம் அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன். எத்தனை செலவானாலும் பரவாயில்லை. நான் அந்த செலவை ஏத்துக்கறேன்... நீ ஒரு தடவை வந்துட்டு போயேன்ம்மா

கனகதுர்காவிற்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனந்தவல்லி அடுத்த அஸ்திரம் விட்டாள். “ஏம்மா உன் மகன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான். அது தெரியுமாம்மா?

கனகதுர்கா ஆச்சரியத்துடன் கேட்டாள். “அப்படியா யார் பாட்டி?

“இப்ப நம்ம வீட்டுல தான் இருக்கா அந்தப் பொண்ணு.... நான் சொன்னேன்னு உன் பையன் கிட்ட தயவு செஞ்சு சொல்லிடாதே. கோவிச்சுக்குவான்.... என்னவோ மூச்சடைக்குதும்மா.... வச்சுடறேன்.

ஆனந்தவல்லி இணைப்பைத் துண்டித்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

பரமேஸ்வரன் சந்தேகத்துடன் கேட்டார். “உனக்கு என்னாச்சு...? உடம்பு சரியில்லையா

“எனக்கு என்ன, நல்லாத் தான் இருக்கேன்”  ஆனந்தவல்லி கண்களைத் திறந்து சாதாரணமாகச் சொன்னாள்.

பரமேஸ்வரன் கோபத்துடன் கேட்டார். “பின்ன எதுக்கு இப்படி டிராமா போடறே. மூச்சு முட்டுதுங்கறே. நாளை எண்ணறேங்கறே. இதை எல்லாம் சொல்லி பாவம் அவளை ஏன் இங்கே இப்பவே வரவழைக்கப் பார்க்கறே

ஆனந்தவல்லி சொன்னாள். “பின்ன என்ன பண்றது. சாதாரணமா வரச் சொன்னா அவ வர மாட்டேன்கிறா

“இப்பவே அவ வந்து என்ன உனக்கு ஆகணும்?

“உன் பேரனுக்கு சீக்கிரமே ஒரு கல்யாணம் ஆகணும்... அவன் குழந்தையைப் பார்த்துக் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு நான் சாகணும்... இதை எல்லாம் அவன் போக்கிலயே விட்டா சீக்கிரம் நடக்காது. அவனுக்கு எப்ப அந்தப் பொண்ணு மேல கோபம் தணியறது. எப்ப மத்ததெல்லாம் நடக்கிறது. அவன் அம்மா வந்தால் எல்லாத்தையும் கொஞ்சம் வேகப்படுத்திடலாம். அவன் நம்ம கிட்ட எல்லாம் நடிக்கலாம். அவன் அம்மா கிட்ட நடிக்க மாட்டான். எனக்குத் தெரியும்... அவ சொன்னா அவன் கேட்பான்... துர்காவுக்கும் விஷாலியைப் பிடிக்காமல் போகாது.  முடிஞ்சா கல்யாணத்தை முடிச்சுட்டே இங்கே இருந்து அவங்க போகட்டும். என்ன சொல்றே?

பரமேஸ்வரன் வாயடைத்துப் போய் தாயைப் பார்த்தார்.

குருஜி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வெடுக்க முயன்று கொண்டு இருந்தார்.  முடியவில்லை. இது வரை எல்லாமே அவர் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே சாதகமாக நடந்து கொண்டு இருக்கிறது. சிவலிங்கம் அவர் கட்டுப்பாட்டில். கணபதி அவர் கட்டுப்பாட்டில். உலகில் மிகத் திறமையான ஆழ்மன ஆராய்ச்சியாளர் அவருடன் இருக்கிறார். மிகத் திறமையான ஆழ்மன சக்தியாளர்கள் ஆராய்ச்சிக்கு உதவ வந்துள்ளார்கள். ஆராய்ச்சிகளைத் தடுக்க முடிந்த அக்னி நேத்திர சித்தர் நெருங்க முடியாதபடி ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. ஆனாலும் கூட அவரால் திருப்தியுடன் இருக்க முடியவில்லை.

தியான மண்டபத்தில் அந்த மூவரும் விசேஷ மானஸ லிங்கத்துடன் தனியாக இருக்கிறார்கள். கணபதியை அவன் அறையிலேயே இருக்கும்படி சொல்லியாகி விட்டது. அவர்களது ஆரம்பக் கணிப்புக்கு அவன் ஒரு இடைஞ்சல் தான். இன்று தியான மண்டபத்தில் கருவிகளைக் கூடக் கண்காணிக்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் என்று முன்பே ஜான்சன் சொல்லி இருந்தார். முழுமையாக விசேஷ மானஸ லிங்கத்தில் மூவர் கவனமும் இருக்கட்டும் என்று அவர் நினைத்தார். அவர்கள் அபூர்வ சக்திகள் மூலம் விசேஷ மானஸ லிங்கத்தின் சக்திகள் பற்றி கணிக்கும் கணிப்பு என்ன என்று அறிய அவரைப் போலவே குருஜியும் ஆவலாக இருந்தார்.  

அவர்கள் கருத்தை அறியும் வரை சும்மா இருக்க முடியாமல் குருஜி முன்பு கிடைத்த ஓலைச்சுவடிகளின் வார்த்தைகளைத் தெளிவுபடுத்தி அந்த தமிழாராய்ச்சி வல்லுனர் எழுதி இருந்ததை எடுத்துப் படித்தார். முதலாம் ராஜாதிராஜ சோழன் மற்றும் இரண்டாம் ராஜேந்திரச் சோழன் சம்பந்தப்பட்ட கதைகளை அந்த ஓலைச்சுவடிகளில் தெளிவாகப் புரிந்து கொண்ட அந்த தமிழாராய்ச்சி வல்லுனர் சிவலிங்கத்தின் தன்மை, அதனைப் பாதுகாப்பவர்கள் யார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் தென்னரசுவிடம் சொல்லி இருந்தது இப்போதும் குருஜியின் உதடுகளில் சிறு புன்னகையை வரவழைத்தது.

வார்த்தைகள் தெளிவாய் கிடைச்சாலும் பொருள் தெளிவாய் விளங்கலைஎன்று தமிழாராய்ச்சி வல்லுனர் சொல்லி இருந்தார். தத்துவ ஞானத்தில் கரை கண்டவர்களே அதன் பொருளை விளங்கிக் கொள்ள முடியும்.  குருஜிக்கு அந்த வார்த்தைகளின் பொருள் விளங்க சில முறைகள் படிக்க வேண்டி இருந்தது. படித்ததை மனதில் ஊறப்போட வேண்டி இருந்தது. பிறகு புரிந்தது.

ஓலைச்சுவடிகளை வைத்திருந்த ஜோதிடர் சுப்பிரமணியனின் தம்பி சொல்லும் வரை சிவலிங்கத்தைப் பாதுகாக்கும் மூன்று நபர்களைக் கொண்ட ரகசியக்குழு பற்றி குருஜி அறிந்திருக்கவில்லை. சிவலிங்கத்தைப் பூஜை செய்வது யார் என்று தீர்மானிக்கும் விஷயம் ஓலைச்சுவடிகளில் இல்லை என்று தமிழாராய்ச்சி வல்லுனர் சொன்ன போதும் பாதுகாக்கும் பொறுப்பு என்ற பொருளில் இருந்த சில சுவாரசியத் தகவல்களை ஓலைச்சுவடிகள் தான் அவருக்கு அதைப் பின்பு தெரியப்படுத்தின.எல்லையில்லாத சக்திகளின் ஊற்றாக அந்த சிவலிங்கம் இருப்பதையும் அந்த சிவலிங்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆரம்பத்தில் மூன்று சித்தர்களிடம் இருக்கும் என்பதையும், அந்த மூவர் பக்தி மார்க்கம், அறிவு மார்க்கம், ஞான மார்க்கம் என்று மூன்று மார்க்கங்களில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதையும் ஓலைச்சுவடிகள் கூறின. பின் காலப் போக்கில் இரண்டு சித்தர்கள், ஒரு சித்தரல்லாதவர் வசம் சிவலிங்கம் செல்லும். பின் ஒரு சித்தர், இரண்டு சித்தரல்லாதவர் வசம் செல்லும். கடைசியில் சித்தரல்லாத மனிதர்களிடம் சிவலிங்கம் செல்லும். ஆனால் அந்த மூன்று மார்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவே மனிதர்களும் இருப்பார்கள். ஆனால் அப்படி முழுவதுமாக சித்தரல்லாத மனிதர்கள் வசம் சிவலிங்கம் செல்லும் காலம் மனித இனத்தின் மிகவும் மோசமான காலம், கலி முற்றிய காலம் என்று ஓலைச்சுவடிகள் சொல்லி இருந்தன. அந்தக் காலத்தைப் பற்றிய நிறைய மோசமான விவரங்கள் அவற்றில் இருந்தன.

சித்தர்கள் முழுவதுமாக அந்த சிவலிங்கத்தின் மீதிருக்கும் தங்கள் ஆதிக்கத்தை இழக்கும் அந்தக்  கடைசி மாற்றம் நேர்வழியில் நடக்க வாய்ப்பில்லை என்றும் குழப்பம் இருக்கும் என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவித்தன. உண்மை தான் என்று குருஜி நினைத்தார். ‘ஈஸ்வரை நியமித்த பசுபதி நேரடியாக சிவலிங்கத்தை அவனிடம் ஒப்படைக்கவும் இல்லை, அவனை சந்திக்கவும் இல்லை. கணபதியை நியமித்தவரும் அவனை நேரில் சந்திக்கவில்லை. அவர் யார் என்றே இன்னும் கணபதி அறிந்திருக்கவில்லை. மூன்றாவது நபர் நியமனமாகவே இல்லை. அதற்கு முன் நான் இந்த சிவலிங்கத்தை என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டேன்....

என்னை சித்தர்களோ மனிதர்களோ யாரும் நியமிக்கவில்லை. விதி தான் என்னை நியமித்து இருக்கிறது. சித்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்து சிவலிங்கம் விடுபடும் போது தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும் என்று புனித கங்கையில் நின்று கொண்டு அந்த அகோரி சாது சொன்னது சரி தான். எனக்குத் தெரிய வந்ததும் விதியின் தீர்மானம் தான்....

நினைக்கும் போதே குருஜிக்குப் பெருமிதமாக இருந்தது. கணபதி வீட்டுக்குச் சென்று அரக்கு வைத்து மூடிய உறையில் வைத்து அந்த ஜோதிடர் தந்து விட்டுப் போன கடிதத்தைப் படித்த போது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை தான். அவனை அவர் தேர்ந்தெடுத்ததாக நினைத்துக் கொண்டு இருந்த போது முன்பே வேறொரு நபரால் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்ததை அவரால் சகிக்க முடியவில்லை. விதியின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறோமோ என்று கூட சந்தேகம் அவரை அரித்தது. ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது எல்லாம் சரியாகத் தான் முடிந்திருக்கிறது என்று தோன்றியது.


சித்தர்கள் சக்தி கற்பனைக்கு அடங்காதது தான். ஆனால் அக்னி நேத்ர சித்தர் ஏதோ ஒரு காரணத்திற்காக மூன்றாவது ஆளைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் செய்து விட்டார். நல்ல முகூர்த்தத்திற்காகக் காத்திருந்தாரா சரியான மனிதனிற்காக அவர் காத்திருந்தாரா என்று தெரியவில்லை. அதுவே அவருக்கு வினையாகி விட்டது. அதுவே சிவலிங்கத்தின் புதிய விதியாகி விட்டது. நான் அவரை முந்திக்கொண்டு விட்டேன். வேகமாக செயல்பட்டு விட்டேன்... கணபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தைக் காற்றில் பறக்க வைத்து தீயில் எரித்தது, சிவலிங்கத்திற்கு இமயமலைப்பக்கம் பூக்கும் பூக்களைக் கொண்டு வந்து அலங்கரித்தது போன்ற சித்து வித்தைகளில் காட்டிய தன் சக்தியை மூன்றாவது பாதுகாவலனைக் கண்டுபிடிக்க அவர் பயன்படுத்த முடியாமல் போனது விதியே. விதியின் சக்திக்கு முன் சித்தர் சக்தியும் எம்மாத்திரம்?
   

ஓலைச்சுவடிகளின் விளக்கங்களை மறுபடியும் ஒருமுறை குருஜி புரட்டினார். ஓலைச்சுவடிகளின் கடைசியில் இருந்த செய்யுள் போன்ற இரு வரிகளை எழுதியிருக்கும் விதம் மற்ற வரிகளை எழுதிய விதத்தில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு ஏதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கலாம் என்றும் தமிழாராய்ச்சி வல்லுனர் சொல்லி இருந்தார்.

அந்த வரிகளை மீண்டும் குருஜி படித்தார்.

தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம்
மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்

 ‘தூய உள்ளமும், அறிவும் சேர்ந்து தூங்காமல் தேடினால் மெய்ஞானம் பெற முடியும். உள்ளம், அறிவு, ஞானம் மூன்றும் சேர்ந்து காத்தால் பூவுலகம் அழியாமல் மிஞ்சும். இல்லையேல் சிவஞானம் என்ற இறைஞானம் கூட அழிக்கும் விஷமாக மாறி விடும் என்று பொருள் சொல்லலாம். இங்கே தூங்காமல் என்பதற்கு சோம்பல் இல்லாமல், தளராமல் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். அது தான் பொருத்தமாக இருக்கும்.

நல்ல தத்துவார்த்தமான விஷயம் என்பதால் வித்தியாசப்படுத்தி எழுதி இருக்கிறார்களா இல்லை வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்குமா என்று குருஜி பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் தத்துவம் விட்டால் வேறு ஒரே ஒரு அர்த்தம் தவிர மற்ற அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஒரு அர்த்தமும் மகா அபத்தமாகத் தோன்றியது.  

இன்னும் நியமிக்கப்படாத ஞானவழி ஆளை அறிவு, பக்தி மார்க்க ஆட்கள் சேர்ந்து தேடினால் கண்டுபிடிக்கலாம் என்ற அர்த்தமும் கொள்ளலாம். அந்த மூன்று பேரும் சேர்ந்தால் உலகத்தைக் காப்பாற்றலாம், இல்லா விட்டால் சிவலிங்கம் உலக அழிவிற்கான விஷமாகி விடும் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படி இருந்தால் அது நகைப்பிற்குரிய விஷயம் தான்.... இது வரை நியமன முறையில் நடந்த ஞானவழி ஆள் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நபராக ஆள் என்றாகி விடும்.

குருஜி எண்ணப் போக்கு இப்படியாக இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.... அறிவு வழி நியமனமான ஈஸ்வரும், மனம்-பக்தி வழி நியமனமான கணபதியும் இனி சேர வாய்ப்பே இல்லை.... அதனால் அவர்கள் ஞானவழி ஆளைக் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை.... ஞான வழி ஆள் என்று வேறு ஒருவன் எங்கோ இருந்தால் கூட அவர்களுடன் சேரவும் வாய்ப்பே இல்லை... உண்மையான ஞானம் நான் தான்... சித்தர்கள் கட்டுப்பாட்டிலிருந்து விசேஷ மானஸ லிங்கம் எப்போது விலகியதோ அப்போதே சித்தர்கள் கடைபிடித்த நியமன வழிமுறையும் மாறி விட்டது. இனி ஞானம் தான் மற்ற இரண்டு வழி மனிதர்களைத் தீர்மானம் செய்யும். நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்..... கணபதியை நான் தீர்மானித்து இருந்தேன். ஆச்சர்யமாக அவர்களும் அவனையே நியமித்து இருக்கிறார்கள்.... ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த ஈஸ்வருக்குப் பதிலாக நான் ஜான்சனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உதயன் சொன்னது போல இந்த மண்ணின் மைந்தனாக ஜான்சன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அறிவைப் பொருத்த வரை அது அவசியமும் இல்லை. ஞானத்திற்கு மட்டும் தான் இந்த மண்ணின் மகான்கள் பேர் போனவர்கள்.... அறிவு உலகமெல்லாம் பரவிக் கிடக்கிறது.... கணபதியை நான் இனி மெல்ல மாற்றுவேன். ஜான்சனை வழி நடத்துவேன்.... இனி என்ன நடக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன்... இனியொரு விதி செய்வேன்....


அவர் எண்ண ஓட்டத்தை கர்ணகடூரமான ஒரு அலறல் நிறுத்தியது. யார் இப்படி அலறுகிறார்கள் என்று அவர் திகைத்தார். யாரோ தலை தெறிக்க ஓடி வரும் சத்தம் கேட்டது....

(தொடரும்)


-          என்.கணேசன்



Monday, October 28, 2013

காயத்ரி மந்திரத்தின் மகிமை!

அறிவார்ந்த ஆன்மிகம் - 24

கவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். “மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்”.  அந்த அளவு சிறப்பு வாய்ந்தது காயத்ரி மந்திரம். இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று சொல்லப்படுகிறது. அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரம் இது.  

காயத்திரி மந்திரம் 24  அட்சர சக்திகள் கொண்டது. அவைகள் ஒலி வடிவானவை. காயத்ரி மந்திரத்தைப் பற்றி முழுவதுமாக அறியும் முன் ஒலியின் சக்தி பற்றியும், மந்திரங்களின் சக்தி பற்றியும் நாம் அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஒலிக்கு நிறைய ஆற்றல் உண்டு. அதுவும் தகுந்த இசையோடு உச்சரிக்கும் போது அதன் சக்தி அளப்பரியதாக மாறி விடுகிறது. இதை ஜெர்மானிய இசை வல்லுனரும், இயற்பியல் விஞ்ஞானியுமான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (Ernst Florence Friedrich Chladni)  (1756-1827) என்பவர். 1787 ஆம் ஆண்டு இவர் தனது கண்டுபிடிப்புகளை இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' (Discoveries in the Theory of Sound)' என்ற நூலாக எழுதி வெளியிட்டார். 

க்ளாட்னி தான் ஒலியியல் (acoustics)  என்ற புதிய இயலை வகுத்தார். உலகில் உள்ள  ‘இயற்பியல் பொருளை'  ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் பல சோதனைகள் மூலம் உலகிற்கு நிரூபித்தார்!  நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலினை நிறுத்தி  அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இசை பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!  இவற்றை அவர் தொகுத்தார். அந்த தட்டுகளும் க்ளாட்னி ப்ளேட்ஸ் என்று உலகப் புகழ் பெற்றன.

இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர்.

ஆனால் இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது முனிவர்கள் முன்பே மிகவும் முன்னேறி இருந்தனர். அவர்கள் அதன் சூட்சும ஆற்றலை அறிந்திருந்தனர்.  ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நுணுக்கமாக அறிந்திருந்தனர்.  அதனால் அர்த்தமுள்ள வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர்.

அப்படி அவர்கள் குரு சிஷ்ய பாரம்பரியம் மூலம் கற்பிக்கக் காரணம் தவறானவர்கள் கையில் இந்த மந்திரங்கள் சேரக் கூடாது என்பதும், மந்திரங்களை பிரயோகிக்க தகுந்த மன, உடல் தூய்மை தேவை என்பதும் தான்.

அவர்கள் மந்திரங்கள் பலிக்க  உச்சரிப்பு,  நியமம், கட்டுப்பாடு,  உபகரணம், நம்பிக்கை ஆகியவை அடிப்படைத் தேவைகள் என்று நம்பினார்கள். அவர்கள் நேரடிப் பார்வையில் கற்பிக்கப்படும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.



ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டு,  ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவை என்று பண்டைய அறிஞர்கள் அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்ல ஆன்ம ஞானத்திற்கே வழி வகுக்க வல்லவை மந்திரங்கள் என்றும் புரிந்து கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட மந்திரங்களுக்கே தலையாய காயத்ரி மந்திரம் இது தான்
ஓம்
பூர் புவ ஸ்வஹ
தத் ஸ்விதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்” 

இந்த மந்திரத்தைச் சொல்லும் போது இங்கு கொடுத்துள்ள படியே ஓம் முதற்கொண்டு ஒவ்வொரு அடி இறுதியிலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.

பூ உலகம்மத்திய உலகம்மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்தப் பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை  உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும் என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.  

இந்த மந்திரத்தில் தனிப்பட்ட தெய்வ வழிபாடு இல்லை. சிலர் சூரியனை வேண்டி சொல்லப்பட்டது என்று பொருள் கொண்டாலும் ஞான சூரியனாகிய பரம்பொருளிடம் வேண்டுவதாகவே இது உள்ளது என்பது பெரும்பாலான ஆன்மிக அறிஞர்களின் கருத்து. 

இந்தப் பிரார்த்தனை மந்திரத்தில் எவ்வளவு உயர்ந்த நோக்கம் பாருங்கள்.  உண்மையை உணரும் வகையில் என் அறிவு விரிவடையட்டும் என விழைவது எவ்வளவு அறிவுபூர்வமான பிரார்த்தனை. எல்லாப் பிரச்சினைகளும் அறிவின் குறைபாட்டால் அல்லவா வருகின்றன? உயர் அறிவு வந்து விட்டால் மனிதனுக்கு என்ன தான் பிரச்சினை? அந்த உயர் அறிவைப் பெற்ற பின் மனிதனால் முடியாதது தான் என்ன?  

காயத்ரி மந்திரச் சிறப்புப் பற்றி புனித நூல்களும், மகான்களும், பேரறிஞர்கள் இப்படிப் புகழ்ந்து கூறுகிறார்கள்.

இவ்வுலகத்திலும், பரவுலகத்திலும் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தவத்தை வளர்க்க காயத்திரியை விட மேலான மந்திரம் இல்லைஎன்கிறது  தேவிபாகவதம்.

 மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருபவன் வாயுபோல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை அடைவான் எனக் கூறுகின்றது மனுஸ்மிருதி. 

நான்கு வேதங்களையும் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு சமமாக காயத்ரியை மட்டும் மறுதட்டில் வைத்தால் எடை சரியாகவிருக்கும். காயத்ரி வேதங்களின் தாய். சகலபாவங்களையும் போக்குபவள். காயத்ரியைப் போல பவித்திரமான மந்திரம் மண்ணுலகிலும் இல்லை, விண்ணுலகிலும் இல்லை. காயத்ரிக்கு மேலான ஜபம் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லைஎன்கிறார் யக்ஞவல்கியர்.

ஸ்ரீ ராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்களும், மகாத்மா காந்தி போன்ற தலைவர்களும் காயத்ரி மந்திரத்தை மிகவும் பாராட்டிப் பேசி இருக்கிறார்கள். 

காயத்ரி மந்திரமானது உலகத்துக்கே பொதுவான ஒன்றாகும். அது எந்த ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. இம்மந்திரம் அனைவருக்கும் பொதுவான பரம்பொருளை தியானிக்கச் சொல்லும் அருமையான மந்திரமாகும்.  எனவே இம்மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம். சந்தியா காலங்களில்,  அதாவது காலை மாலை நேரங்களில், காயத்ரி மந்திரம் சொல்வது மிகவும் நல்லது. 

இந்த காயத்ரி மந்திர ஜபத்தை சிரத்தையுடனும், அர்த்தம் நினைவில் வைத்தும் தொடர்ந்து சொல்லி வந்தால் மனதில் நிதானமும், அமைதியும் ஏற்பட ஆரம்பிக்கும். நமது வாழ்க்கையில் சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவாக முடிவெடுக்க முடியும். மாணவர்கள் பாடங்களை பயிலும் முன் இந்த மந்திரத்தை ஜபித்துவிட்டு தொடங்கினால் நிச்சயம் ஆழ்மனதில் நன்றாக பதியும்.

இந்த மகா மந்திரத்தைப் பயன்படுத்தி முன்னேறுவோமாக!

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 20.08.2013




Thursday, October 24, 2013

பரம(ன்) ரகசியம் – 67




து கனவா என்கிற சந்தேகம் தான் ஈஸ்வருக்கு முதலில் வந்தது. கண்களை மூடிக் கொண்டிருக்கையில் அப்படியே அசந்து தூங்கி விட்டு கனவில் தான் அந்தச் சித்தரைப் பார்க்கிறோமோ என்ற சந்தேகம் வந்தது. கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டான்.

ஜவுளிக்கடையில் பார்த்த அதே சித்தர், அதே லேசான புன்னகை. நெருப்பாய் ஜொலித்த கண்கள் ஜொலிப்பு நீங்கி இயல்பானதாக மாறிய போதும் அந்தக் கண்களின் தீட்சண்யம் குறையவில்லை. ஈஸ்வர் பேச வாய் திறந்தான். சீக்கிரத்தில் வார்த்தைகள் வரவில்லை. வரும் என்று நம்பிக்கை வந்த போதோ என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவர் திடீரென்று இன்றும் காணாமல் மறைந்து போய் விடுவார் என்று தோன்றியது.

ஆனால் அவர் மறைந்து போகவில்லை. புன்முறுவலோடு சொன்னார். இன்னைக்கு திடீர்னு மறைஞ்சுட மாட்டேன். எனக்கு உன் கிட்ட பேச வேண்டி இருக்கு

அவர் கண்களைப் போலவே குரலுக்கும் கவர்ந்திழுக்கும் தன்மை இருந்தது. பேச்சு மட்டும் சாதாரண மனிதர்கள் பேசும் பேச்சு வழக்காக இருந்தது. அவன் திகைப்பில் ஆழ்ந்திருக்கும் போதே அவர் அவன் எதிரில் அமர்ந்தார்.

ஈஸ்வர் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினான். எனக்கும் உங்க கிட்ட கேட்க நிறைய இருக்கு... அன்னைக்கு எங்களைத் தொட்டுட்டு போனீங்க. ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. எனக்கு மட்டும் அல்ல... கணபதிக்கும் தான். ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு புரிஞ்சாலும் என்ன காரணம்னு தெரியலை.... அன்னைக்கு நீங்க வந்ததுக்கும் காரணம் தெரியல, பேசாம போனதுக்கும் காரணம் தெரியல....

அக்னிநேத்திர சித்தர் சொன்னார். “சில விசேஷ முகூர்த்த நேரங்கள் இருக்கு. அது அபூர்வமாய் தான் வரும். அப்படி வரும் போது தவற விட்டுட்டா அடுத்த முகூர்த்த நேரத்துக்கு மாசக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். அன்னைக்கு கிடைச்ச முகூர்த்தம் அப்படிப்பட்ட முகூர்த்தம். அந்த முகூர்த்த நேரத்தில் நீங்க ரெண்டு பேரும் கிடைச்சதை நான் பயன்படுத்திக்க வேண்டி இருந்தது...

ஈஸ்வருக்குக் குழப்பமாக இருந்தது. என்ன சொல்ல வருகிறார்?

அவன் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும்படியாக அவர் சொன்னார். “உன் விதியும், கணபதியின் விதியும் விசேஷ மானஸ லிங்கத்தோட பல காலம் முன்னாலேயே இணைக்கப்பட்டது ஈஸ்வர். நீ எதிர்பார்க்காத நேரத்தில் எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் உனக்கு காட்சி தந்ததும் காரணம் இல்லாமல் இல்லை...

ஈஸ்வர் அவரையே கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான். “எனக்கென்னவோ அது தானாய் காட்சி தந்த மாதிரி தெரியல. யாரோ அந்தக் காட்சியை எனக்கு அனுப்பின மாதிரி தோணிச்சு”.  அவனுக்கு சந்தேகம் அவர் மேல் தான்.

ஆனால் அவர் அவன் சந்தேகத்தைத் தீர்க்கவில்லை. மாறாக அவனையே அவர் காரணம் காட்டினார். ஏதாவது ஒரு விதத்தில் நீ ஈர்க்காமல் எதுவுமே உன் வாழ்க்கையில் வருவதில்லை ஈஸ்வர்

ஈஸ்வர் உடனடியாக எதையும் சொல்லாமல் யோசித்தான். சின்ன வயதில் இருந்தே அவன் அப்பா மூலம் அவனுடைய பேராவலைத் தூண்டியவர்கள் பரமேஸ்வரனும், விசேஷ மானஸ லிங்கமும் தான். சங்கர் மகனிடம் சொன்ன ஒளிரும் லிங்கம் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உண்டு பண்ணியது உண்மை தான். சங்கருக்கும் கூட அதன் மீது அதிக ஈடுபாடு இருந்தது என்றாலும் ஆழமாய் அதன் காரணமான அம்சங்களை அவர் ஆராய முற்பட்டதில்லை. ஆனால் ஆழ்மனம் மற்றும் அபூர்வ சக்திகளின் ஆராய்ச்சியாளனான ஈஸ்வர் பல ஆராய்ச்சிகளின் இடையேயும் அந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறான்.  ஆனால் அடிக்கடி எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் காட்சி அளிக்க ஆரம்பித்தது பசுபதியின் மரணத்திற்குப் பின் தான். அதற்கு முன் அந்த அனுபவம் இல்லை....

ஈஸ்வர் கேட்டான். “எங்கள் விதி எப்படி விசேஷ மானஸ லிங்கத்தோடு இணைக்கப்பட்டதுன்னு சொல்றீங்க?

அக்னி நேத்ர சித்தர் சொல்ல ஆரம்பித்தார். “ஈஸ்வர் உனக்கு ஓரளவு விசேஷ மானஸ லிங்கத்தின் கதை தெரிந்திருக்கும். பலநூறு வருஷங்களுக்கு முன்னாலேயே சித்தர்கள் எதிர்காலத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள். கலி முத்திப் போய் பேராசை, பெருங்காமம், வெறுப்பு, யுத்தம்னு உலகம் சீரழிஞ்சுடும், மனிதம் மறக்கப்பட்டுடும், இயற்கை அழிவுகள் பெருமளவு வந்துடும்ங்கறதை எல்லாம் தெரிஞ்ச அவங்க அந்த எதிர்காலத்துல மனித சமுதாயத்தைக் காப்பாத்தறதுக்கு ஒரு மிகப்பெரிய சக்தி உறுதுணையாய் வேணும்னு நினைச்சாங்க. விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கி தங்கள் சக்திகளை எல்லாம் சேர்த்து அதில் மையப்படுத்தினாங்க. தூய்மையே பிரதானமான சூழ்நிலையை உருவாக்கி அதை வணங்கி வந்தாங்க. ஆரம்பத்துல சித்தர்களால மட்டும் தான் விசேஷ மானஸ லிங்கம் பூஜை செய்யப்பட்டுச்சு.

சமுதாயத்துல இருந்து ஒதுங்கி துறவு வாழ்க்கை வாழ்கிற சித்தர்களே, சமுதாயத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட விசேஷ மானஸ லிங்கத்தை காலம் காலமாய் பூஜை செய்து வர்றது சரியல்ல, கலி முத்தின அந்தக் கடைசி காலத்துக்கு முன்னால் சிறிது சிறிதாய் அந்தப் பொறுப்பை சமுதாயத்தில் அங்கம் வகிக்கிற பொது மனிதர்களுக்கு ஒப்படைச்சுடணும்னு முதல்லயே சித்தர்கள் தீர்மானிச்சிருந்தாங்க. காப்பாத்தற பொறுப்பு ஒரு சாரார் கிட்டயும், தான்தோன்றித்தனமாய் நடந்துக்கற சுதந்திரம் மீதி சாரார் கிட்டயும் இருக்கிற வரைக்கும் இந்த சமுதாயம் உருப்படாதுன்னு தீர்க்கதரிசனத்தால அவங்க உணர்ந்திருந்தாங்க. அதனால மிக முக்கியமான குறிப்பிட்ட ஒரு காலத்தில மனம், அறிவு, ஞானம் இந்த மூன்றிலயுமே பரிசுத்தமாய், உயர்வாய் இருக்கிற மூன்று மனிதர்கள் கிட்ட விசேஷ மானஸ லிங்கத்தை சேர்க்கறதுன்னு நிச்சயமாகி இருந்துச்சு

அந்தக் குறிப்பிட்ட காலம் வந்துடுச்சு ஈஸ்வர். கலிமுத்தின எல்லா அறிகுறிகளும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. ஒரு காலத்துல உயர்வாய் நினைச்சு இருந்த விஷயங்கள் இன்னைக்கு செல்லாக்காசாயிடுச்சு. கேவலமாய் நினைச்சுகிட்டிருந்த விஷயங்கள் இன்னைக்கு உயர்வாயிடுச்சு. மனிதம் செத்துகிட்டிருக்கு.... அலட்சியம், அறியாமை அதிகமாயிடுச்சு... மனிதன் தன்னையே அழிச்சுகிட்டு சந்தோஷத்தைத் தேடிகிட்டிருக்கான். தன் உன்னதமான விஷயங்களை எல்லாம் தாரை வார்த்துட்டு நிம்மதி இல்லாமல் இருக்கறதுக்கு காரணம் தேடிகிட்டிருக்கான். ஒருத்தரை ஒருத்தன் அழிச்சுட்டு என்னென்னவோ சாதிக்கப் பார்க்கிறான்... என்னென்னவோ செஞ்சும் நிம்மதியும் சந்தோஷமும் அவனுக்கு அகப்படாமயே இருக்கு... இயற்கையின் அழிவுகளும் ஆரம்பமாயிடுச்சு. இன்னும் நிறைய அழிவுகள் வரும்... இந்த நிலையில் தான் விசேஷ மானஸ லிங்கத்தோட பாதுகாப்புக்கான பொறுப்பு உன் கிட்டயும், கணபதி கிட்டயும் வந்து சேர்ந்திருக்கு....

ஈஸ்வருக்கு முதலில் தன் காதுகளின் மீதும் கேட்கும் திறன் மீதும் சந்தேகம் வந்தது. ஒரு மாத லீவில் இந்தியா வந்திருக்கும் அவனுக்கும், வெகுளியான கணபதிக்கும் விசேஷ மானஸ லிங்கத்தின் பாதுகாப்புப் பொறுப்பா? சித்தரை அவன் திகைப்போடு பார்த்தான். அவர் முகத்தைப் பார்த்த போது அவர் விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பது தெரிந்தது. அவன் வாய் விட்டுச் சிரித்தான்.

அக்னி நேத்திர சித்தர் சிரிக்கவில்லை. அவன் சிரித்ததற்காகக் கோபப்படவுமில்லை. புன்முறுவல் மாறாமல் அவனையே பார்த்தார்.

ஈஸ்வர் சொன்னான். “சித்தரே. தமிழில் குருவி தலையில் பனங்காய்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுவே பெரிய பாரம்ங்கற அர்த்தத்துல சொல்வாங்க. ஆனால் நீங்க பனைமரமே வைக்கிறீங்களே. இது நியாயமா? இது நடக்கிற காரியமா?

சித்தர் அமைதியாகச் சொன்னார். “எனக்குத் தெரிஞ்சு சுமக்க முடியாத பாரத்தை இறைவன் தர்றதில்லை

ஈஸ்வர் திகைப்போடு கேட்டான். “ஏன் நாங்க?

“மனம்-பக்தி மார்க்கத்துல கணபதி. புத்தி-அறிவு மார்க்கத்துல நீசித்தர் தெரிவித்தார்.

ஈஸ்வருக்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் உரையாடல் யதார்த்தத்திற்கு ஒத்து வராத ஒன்றாகத் தோன்றியது. இப்போதும் கூட இது நிஜம் போலத் தோன்றும் கனவாகவே இருக்க வேண்டும் என்று நம்பினான். நிஜம் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள மெள்ள அந்த சித்தரைத் தொட்டான். மறுபடி அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
கனவல்ல நிஜம் தான். அவரது சக்தி வாய்ந்த அலைகளுக்கு அவன் உடல் இன்னும் பழக்கப்படவில்லை. ‘இவ்வளவு சக்திகளை வச்சுகிட்டு இவர் மாதிரி ஆள்கள் ஒதுங்கிட்டு சாதாரண ஆள்கள் கிட்ட இவ்வளவு பெரிய பொறுப்பை எல்லாம் தரலாமா?””

பெருமூச்சு விட்ட ஈஸ்வர் தனக்கு எழுந்த முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான். ஞான மார்க்கம்னு மூணாவது சொன்னீங்களே. அதுக்கு யாரைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க?

“அதுக்கு மட்டும் நாங்க யாரையும் தேர்ந்தெடுக்கலை. நீங்க ரெண்டு பேரும் சரியா இருந்தால் ஞான மார்க்கத்து ஆளை நீங்களே கண்டு பிடிக்கலாம்

ஈஸ்வர் சிரித்தே விட்டான். பின் சொன்னான். “சித்தரே. முதல்ல எங்களை மாதிரி ஆள்களால விசேஷ மானஸ லிங்கத்தைப் பாதுகாக்க முடியும்னோ, இந்த உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்த முடியும்னு நான் நம்பலை. ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி முடியற விஷயமா இருந்தாக்கூட இதில் எங்களுக்கு அனுகூலமான அம்சங்கள் எதுவுமே இல்லை. நீங்களே யோசிச்சு பாருங்க. அந்த விசேஷ மானஸ லிங்கமே எங்க கிட்ட இல்லை. என் பெரிய தாத்தாவைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை ஒரு கும்பல் தூக்கிட்டுப் போனப்ப அதை சுலபமா  பெரிய தாத்தாவோ, நீங்களோ தடுத்திருக்கலாம். நீங்க எதுவுமே செய்யல. நீங்களா அதைக் கைல எடுத்துக் கொடுத்து அனுப்பின மாதிரி சிவலிங்கத்தை அனுப்பிச்சுட்டீங்க. இப்ப அந்த சிவலிங்கம் எங்கே இருக்குன்னு கூடத் தெரியலை. கணபதியோ எடுத்துட்டுப் போன கும்பலோட கட்டுப்பாட்டுல இருக்கான். அந்த குருஜியைப் பெரிய தர்மாத்மான்னு நினைச்சுகிட்டிருக்கான். இப்ப நான் ஒருத்தன் தான் வெளியே  இங்க இருக்கேன். மூணாவது ஆளை நாங்களே கண்டுபிடிக்கணும்னு வேற சொல்றீங்க. கணபதி எங்க இருக்கான்னே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிற என் கிட்டே மூணாவது ஆளையும் கண்டுபிடிக்கச் சொல்றீங்க. ரொம்பவே தமாஷா இருக்கு. சிவலிங்கம் இல்லை, கணபதி இல்லை, ஞான மார்க்கத்து ஆள் யாருன்னே தெரியாது, நான் ஒருத்தன் இருக்கேன், ஆனா எனக்கு எந்த விசேஷ சக்தியும் இல்லை... இதுல எதாவது ஒரு சாதகமான நிலைமையாவது இருக்கா. நீங்களே சொல்லுங்க

சித்தர் அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் ஆணித்தரமான அவன் வாதத்தைக் கேட்ட பிறகும் அவர் அசராமல் சொன்னார்.  “விசேஷ மானஸ லிங்கம் இன்னும் உங்க மூணு பேர்ல ஒருத்தனான கணபதி கிட்ட தான் இருக்கு. இப்பவும் அவன் தான் பூஜை செய்யறான். இன்னும் அதை நெருங்கற சக்தி அந்த கும்பலுக்குக் கிடைச்சுடலை.  இன்னொரு ஆளான நீ யார் கட்டுப்பாட்டுலயும் இல்லை. சுதந்திரமாய் தான் இருக்கே....

ஆனா கணபதி ஒரு இடத்துலயும் நான் ஒரு இடத்துலயும் அல்லவா இருக்கோம். அவன் கிட்டயே இப்ப எனக்கு தொடர்பு இல்லை....

“ஒரு ஆள் கிட்ட தொடர்பு வச்சிக்க அந்த ஆள் பக்கத்திலயே இருக்கணும்னு உன்னை மாதிரி ஆராய்ச்சியாளன் சொல்றது தான் தமாஷா இருக்கு. உன் தொழிலே அந்த ஆராய்ச்சிகள்லே தான் இருக்கு....

ஈஸ்வருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரிந்தது. அடுத்தவர்களை வைத்து ஆராய்ச்சி செய்த அவனுக்கு தானே அதைச் செய்து காட்ட முடியாதா என்று கேட்கிறார்.

ஈஸ்வர் சொன்னான். “அந்த மூணாவது ஆளையும் நாங்களே கண்டுபிடிக்கணும்னு வேற சொல்றீங்க. ஏன் அந்த ஆளை நீங்களே சொல்லிடக் கூடாது...

சித்தர் சொன்னர். “ஈஸ்வர். ஞானம் எப்பவுமே கடைசியா தான் வரும். மனசும், அறிவும் சரியாய் வேலை செஞ்சா தான் வரும், மனசும், அறிவும் சேர்ந்து அழைச்சா தான் வரும். அதனால அதை வரவழைக்கறது உங்க கைல தான் இருக்கு....

ஈஸ்வருக்கு அவர் சொல்கிற தத்துவம் புரிந்தது. ஆனால் இப்போதும் இதெல்லாம் நடக்கிற காரியமாய் அவனுக்குப் படவில்லை. அவன் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் சாதாரண மனிதன். இவரைப் போன்ற சித்தர் அல்ல... கணபதி அவனை விடவும் சாதாரண மனிதன்... அவனை யாரும் எப்படியும் பயன்படுத்தி விடலாம்....

அவன் மனதில் ஓடும் எண்ணத்தைப் புரிந்து கொண்ட சித்தர் சொன்னார். “ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகள்ல உனக்கு ஈடுபாடு வந்ததும், அதற்கான சூழ்நிலைகளை அமைச்சுக் கொடுத்ததும் விதி. உன்னையும் நல்ல பெற்றோருக்குப் பிறக்க வச்சு நல்ல பாதையிலயே வளர வச்சதும் விதி. இந்த ஒரு காலத்துக்காக நல்ல அறிவோட விதி உன்னைத் தயார்ப்படுத்தி தான் வச்சிருக்கு.... அதே மாதிரி கணபதியால தெரிஞ்சு தப்பு செய்யவே முடியாது ஈஸ்வர். அவன் இயல்புலயே அது இல்லை. அந்த அளவு பரிச்சுத்த மனசோட அவனையும் விதி தயார்ப்படுத்தி வச்சிருக்கு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தேடினா மட்டும் தான் ஞானம் அகப்படும்.... ஞானம் வந்த பிறகு நீங்க மூணு பேரும் சேர்ந்தா இந்த உலகத்துல முடியாதது என்கிறதே கிடையாது...

ஈஸ்வர் தன்னம்பிக்கைக்குப் பெயர் போனவன். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான விஷயங்கள் எல்லாம் அவனால் முடியும் என்று தோன்றவில்லை....

“சித்தரே. அந்தக் குருஜிக்கு ஆள் பலம், பணபலம், அதிகார பலம் எல்லாமே இருக்கு. அதோட சிவலிங்கமும் இப்ப சேர்ந்துருக்கு.... நாங்க வெறும் நல்லவங்களா மட்டும் இருக்கோம்..

சித்தர் சொன்னார். “நல்லவங்களோட பிரச்னையே அவங்க தைரியம் இல்லாதவங்களாவும் தன்னம்பிக்கை இல்லாதவங்களாவும் இருந்துடறது தான். அதுவே கெட்டவங்களுக்கு பலமா மாறிடுது....

அவர் சொல்வது உண்மை தான். ஆனால்... ஆனால்... ஈஸ்வர் கேட்டான். “சித்தரே அந்த சிவலிங்கம் சக்தி வாய்ந்தது தானே. அதுவே என்ன செய்யணுமோ அதைச் செய்யாதா? கடவுளுக்கு மனுஷங்களோட உதவி தேவையா என்ன?

சித்தர் சொன்னார். “கடவுளா பார்த்தா அது கடவுள். கல்லாய் பார்த்தா வெறும் கல் தான். சக்தியா பார்த்தா சக்தி தான். ஆனா எப்படி பார்க்கிறவங்க அதை எப்படி உபயோகிக்கிறாங்களோ அப்படியே அவங்களுக்கு உபயோகமாகும்

ஈஸ்வருக்குத் தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. அவன் அறிவுகூர்மைக்கு இது எல்லாம் பிடிபடாத விஷயங்கள் அல்ல என்றாலும்  தற்போதைய வில்லங்கமான சூழ்நிலை அவனுக்குக் குழப்பத்தைத் தான் தந்தது.

ஒரு வேளை என்னால் எதுவும் செய்ய முடியலைன்னா என்ன ஆகும்...

கெட்டவங்க யுத்தம் இல்லாமல் ஜெயிச்சிடுவாங்க அவ்வளவு தான். அவங்க கிட்டயும் அறிவு நிறையவே இருக்கு. அவங்க செய்யறது எல்லாம் தான் சரின்னு கணபதியை நம்ப வைக்க அவங்களுக்கு சுலபமா முடியும். கணபதி அவங்க பக்கம் போனா மத்ததெல்லாம் அவங்களுக்கு சுலபம். தப்பான மனசு, தப்பான அறிவு, தப்பான ஞானம் இது மூணும் போதாதா உலகத்தை அழிக்கிறதுக்கு?

அப்ப கடவுள்?

“கடவுளுக்கு காப்பாத்தற வேலை மட்டுமா இருக்கு. அழிக்கிற வேலையும் அவரோடது தானே. அவர் அந்த வேலையைச் செய்வார்....

ஈஸ்வருக்கு பகீரென்றது. “என்ன இப்படிச் சொல்றீங்க சித்தரே?

நல்ல மனசும், நல்ல அறிவும் இருக்கறவங்களே காப்பாத்தப்படணும்னு உறுதியா முயற்சிகள் எடுக்கலைன்னா அவங்க இருக்கிற சமுதாயம், உலகம் காப்பாத்தக்கூட தகுதி இல்லாததாயிடுது.... கடவுளுக்கு கவனிக்க இந்த உலகம் மட்டும் இல்லை, கோடான கோடி உலகங்கள் இருக்கு.... தகுதி இருக்கற உலகங்களை அவர் காப்பாத்திட்டுப் போறார்...

ஈஸ்வருக்கு சித்தர் பேசியது கடூரமாக இருந்தது. ஆனால் அர்த்தம் இல்லாததாகத் தோன்றவில்லை....

எனக்கு இதுல என்ன செய்யணும், எப்படி செய்யணும்னு ஒன்னுமே புரியலை சித்தரே. ஏதோ ஆராய்ச்சிகள் செய்துகிட்டிருந்தேனே ஒழிய இந்த அளவு பெரிய வேலைக்கான அனுபவம் எல்லாம் எனக்கு இல்லை....ஈஸ்வர் பரிதாபமாகச் சொன்னான்.

சித்தர் கனிவாகச் சொன்னார். “வாழ்க்கைப் பயணம் வரைபடத்தோட தரப்படறதில்லை ஈஸ்வர். பல நேரங்கள்ல பாதைகளை நாமளே தான் தேடிக் கண்டுபிடிச்சுப் போக வேண்டி இருக்கு. போகப் போக வழி கிடைக்கும்...

சித்தர் எழுந்தார். அவர் கிளம்புகிறார் என்று ஈஸ்வருக்குப் புரிந்தது. அவரிடம் அவனுக்குக் கேட்க நிறைய இருந்தன. அதில் எதை முதலில் கேட்பது என்று பரபரப்புடன் அவன் யோசிப்பதற்குள் அவர் கை அவன் தலை உச்சியை லேசாகத் தொட்டது. உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அவனுக்குச் சிலிர்த்தது. அவர் இரண்டடி நடந்தது தெரிந்தது. அவன் ஏதோ கேட்க வாயைத் திறக்கும் முன் அவர்  மறைந்து போனார். ஈஸ்வர் சிலையாக அமர்ந்திருந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்



Monday, October 21, 2013

மூன்றும் உண்மைகளே!

அறிவார்ந்த ஆன்மிகம்-23

த்வைதம் உபதேசித்த ஆதிசங்கரரும், த்வைதம் உபதேசித்த மத்வரும், விசிஷ்டாத்வைதம் உபதேசித்த ராமானுஜரும் மகா ஞானிகள். வேதங்களில் கரை கண்டவர்கள். பகவத்கீதைக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் உரை எழுதியவர்கள். ஆனால் அவர்கள் உபதேசங்களோ ஒன்றிற்கு ஒன்று மாறாக இருந்தன. இந்த மூவரும் காட்டிய மூன்று வழிகளில் எது சரியான வழி?

இவை மூன்றும் உண்மைகளேஇந்த தத்துவ சித்தாந்தங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக நமக்குத் தோன்றலாம். இப்படி முரண்பாடுகளாகத் தோன்றுவது ஒரு மாபெரும் உண்மையைப் பார்க்கின்ற கோணங்கள் வேறு வேறாக இருப்பதால் ஏற்படக்கூடிய நிலைகள் என்றே நாம் சொல்ல வேண்டும்.

நம் தினசரி வாழ்க்கையிலேயே இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். மனிதனுடைய தினசரி வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் உண்மையாக இருக்கின்றன. மனிதன் விழித்திருக்கையில் பல வேலைகளைச் செய்கிறான். அப்போது அவன் வேறு, மற்றவர்கள் வேறு, இந்த உலகம் வேறாக இருக்கிறது. அது த்வைத நிலை. உறங்கும் போது கனவு காண்கிறான். கனவில் தென்படும் மனிதர்களும் உலகமும் வேறு வேறாகத் தோன்றினாலும் உண்மையில் அவை தனியாக இல்லை. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. அது விசிஷ்டாத்வைத நிலை.  பிறகு கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் வருகிறது. அதில் அவனைத் தவிர எதுவுமில்லை. உலகம் இல்லை, மற்றவர்கள் இல்லை. அது அத்வைத நிலையாகும்.

மனித வாழ்க்கையிலும் அவன் அடையும் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப இந்த மூன்று வேதாந்த உண்மைகளும் சரியாக இருக்கின்றன. ஆரம்ப நிலையில் மனிதன் எல்லாவற்றையும் வேறு வேறாகவே காண்கிறான். தன்னையும் அவனால் மிக உயர்வாக நினைக்க முடிவதில்லை. “நீ பிரம்மம், சக்தி உடையவன் என்று மற்றவர்கள் போதித்து அவன் நம்ப ஆரம்பித்தாலும் கூட பிரச்சினை என்று ஒன்று வரும் போது அவன் பிரம்மமாக பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. கேட்டதும், படித்ததும் காற்றாய் பறந்து விட அவன் நிலைகுலைகிறான், பரிதவிக்கிறான்.  அந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அதிலிருந்து விடுபட அவனுக்கு உதவி தேவைப்படுகிறது. இறைவன் தேவைப்படுகிறான். அவனைப் பக்தியுடன் வேண்டுவது சிக்கலான சமயங்களில் அவனுக்கு மிகவும் அவசியமாகிறது. இது த்வைத நிலை.

இந்த த்வைத நிலையில், அவன் சாதாரண மனிதனாக இருக்கையில், அவனைக் காப்பாற்றுவது பக்தியே. அவன் ஒரு போதும் பிரம்மம் அல்ல. அவன் ஜீவாத்மா. வாழ்க்கையை நடத்தவும், மேல் நிலைக்கு உயரவும் பரமாத்மாவின் திருவருள் அவனுக்குத் தேவைப்படுகிறது. பக்தியுடன் அவன் இறைவனின் உயர்வை எண்ணுகிறான், பேசுகிறான், அந்த நினைவுடனேயே நடந்து கொள்கிறான்.

இந்த த்வைத நிலையில் முறையாகவும், ஆத்மார்த்தமாகவும் நடந்து கொள்பவனுக்கு விசிஷ்டாத்வைத நிலை சித்திக்கின்றது. எதைப் பற்றி அதிகம் நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகின்றோம் என்பது உயர்ந்த மனோதத்துவ விதி. இறைவனின் திருக்குணங்களை அதிகம் நினைக்கையில், அதைப் பாடியும் சொல்லியும் மகிழ்கையில் நம்மை அறியாமல் இறைவனது தன்மைகளிலும் சக்திகளிலும் மனிதன் சிறிதளவாவது பெற்று விடுகின்றான்.

இந்த விசிஷ்டாத்வைத நிலையில் மனிதன் தெய்வீக குணங்களை ஓரளவு அடைகிறான். அறியாமை திரை விலகப் பெற்று தனக்குள் இருக்கும் இறைவனை அவ்வப்போதாவது உணர ஆரம்பிக்கிறான். அவனுடைய அந்தராத்மா சாதாரணங்களில் திருப்தி கொள்ளாமல் உயர் நிலைகளில் அதிக ஆர்வம் கொள்ள ஆரம்பிக்கின்றது. இப்போது பிரச்சினைகளை சந்திக்கையில் பழையது போல் அல்லாமல் ஓரளவு கட்டுப்பாடுடனும், நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அவற்றை அணுக ஆரம்பிக்கின்றான். அவன் பக்தியின் வலிமை கூடுகிறது.  இறைவனிடம் சரணாகதி அடைந்து அந்த நம்பிக்கையில் நிம்மதியாக அவனால் இருக்க முடிகிறது.

இந்த விசிஷ்டாத்வைத நிலை அடுத்த நிலையான அத்வைத நிலைக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. தன்னில் அவ்வப்போது இறைநிலையை உணர ஆரம்பிப்பது சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே போகிறது. நதி நீர் கடலில் சங்கமித்து கடலாகவே மாறி விடுவது போல ஒரு முடிவு நிலையில் அவன் பரமாத்மாவில் ஒன்றி விடுகிறான். அதற்குப் பிறகு என்ன நேர்ந்தாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. செய்ய வேண்டியவற்றை பற்றில்லாமல் செய்து விளைவுகளை ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது. வெகுசிலரே அந்த முழுமை நிலையை அடைய முடியும் என்றாலும் அதுவே நம் வேதாந்தங்கள் பெருமைப்படுத்தும் உன்னத கடைநிலை.

விவேகானந்தர் கூறுகிறார். “ஆன்மா எல்லா சக்திகளும் நிறைந்தது. ஆன்மாவின் இயல்பை அறியும்போது சிறிதும் வலிமையற்றவர்களுக்கும், மிகவும் இழிவானவர்களுக்கும்,  மிகவும் துன்பப்படும் பாவிகளுக்கும் கூட நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை இழக்காதீர்கள் என்றே நம் சாஸ்திரங்களும் முழங்குகின்றன. நீ என்ன செய்தாலும் நீதான் உன் இயல்பைக் மாற்ற உன்னால் முடியாது. இயற்கையே இயற்கையே அழிக்க முடியாது. உங்கள் இயல்பு தூய்மையானது. அது லட்சக்கணக்கான  யுகங்களாக மறைக்கப்பட்டு இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது வென்று மேலே வந்தேதீரும். எனவே அத்வைதம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையைக்கொண்டு வருகிறது. நம்பிக்கையை இழக்காதீர்கள்.

இந்த மூன்று மார்க்கங்களையும் பற்றிப் படித்துக் குழப்பமடைந்த ஒரு பக்தர் ரமண மகரிஷியைப் பார்க்கச் சென்றார். போகும் போது ரமண மகரிஷிக்குத் தர ஒரு பெரிய மாம்பழம் கொண்டு போயிருந்தார். அதைத் தந்துவிட்டு ரமண மகரிஷியை அவர் வணங்கினார்.  

அந்த மாம்பழத்தை வாங்கிய ரமண மகரிஷி அதையே பிரசாதமாய் அந்தப் பக்தரிடம் தந்து விட்டார். அவர் திருப்பிக் கொடுத்து விட்டாரே என்று ஒருபுறம் பக்தருக்கு வருத்தம். மறுபுறம் அவர் கையால் பிரசாதமாக அது கிடைத்ததே என்று மகிழ்ச்சி.

 “பகவான்,  நீங்கள் பக்தர்களிடம் த்வைதம், அத்வைதம் என்றெல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் அதிகம் படிப்பறில்லாதவன். எனக்கு இந்த வேத, வேதாந்தம் எல்லாம் புரியாது. ஒன்றுமே படிக்காத, தெரிந்து கொள்ளும் சக்தி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் ஞானம், மோட்சம் எல்லாம் கிடைக்குமா? நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று வருத்தத்துடன் அவர் ரமண மகரிஷியைக் கேட்டார்.

உடனே பகவான், “இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்?  த்வைதம்என்றால் என்ன? ’ இரண்டுஎன்று அர்த்தம். நீ இருக்கிறாய். இதோ இந்த மாம்பழம் இருக்கிறது. நீ வேறு, இந்தப் பழம் வேறு இல்லையா? அதுதான் த்வைதம்’. இதோ இந்தப் பழத்தை நீ சிறிது வாயில் போட்டுக் கொண்டு விட்டாய் என்று வைத்துக் கொள். இப்போது பழம் உன்னுள் இருக்கிறது. நீயும் பழமும் ஒன்றாக இருக்கிறீர்கள். ஆனாலும் முழுவதுமாக ஒன்றில்லை. அதுதான் விசிஷ்டாத்வைதம்’. இந்தப் பழம் உன் வயிற்றுக்குள் போய் நன்றாக ஜீரணமாகி விட்டது என்று வைத்துக் கொள். இப்போது உனக்குள் பழம் இரண்டற ஒன்றாகக் கலந்து விட்டது. நீயும் பழமும் ஒன்றாகி விட்டீர்கள். இதுதான் அத்வைதம். இந்த மாதிரி தத்துவத்தையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல்,  இறை பக்தியோடு உன் கடமைகளையும் ஒழுங்காகச் செய்து வா. உனக்கு ஞானமும் மோட்சமும் கிடைக்கும்என்று ஆசிர்வதித்தார் ரமண மகரிஷி.

அந்தப் பக்தருக்கு எப்படிப் புரியுமோ அப்படி அவர் கொண்டு வந்த மாம்பழத்தை வைத்தே மூன்று வேதாந்த மார்க்கங்களையும் ரமண மகரிஷி அருமையாக விளக்கி இருக்கிறார்.  இப்போது இந்த மூன்று வழிகளின் அடிப்படை அம்சங்களும் வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். இந்த மார்க்கங்கள் நம் அறிவுக்குப் பிடிபடுகிறதோ இல்லையோ, ரமண மகரிஷி சொன்னது போல நாம் இறை பக்தியோடு நம் கடமைகளையும் ஒழுங்காகச் செய்து வருவது மிக முக்கியம்.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 13-8-2013