Monday, July 29, 2013

வணங்கா விட்டாலும் இறைவன்!

அறிவார்ந்த ஆன்மிகம்-13

ப்போதோ படித்த ஒரு அரபுக் கதை சிறு மாற்றங்களுடன்...

முன்னொரு காலத்தில் ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ, உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும், இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.  புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார்.

பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது.

அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. சில நாட்களில் யாத்திரீகர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார். நாளாவட்டத்தில் அவருடைய கூடாரமே புனிதத்தன்மை அடைந்திருப்பதாக யாத்திரீகர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் பயணிக்கவில்லை. பாலைவனத்தில் சாதாரணமாகப் பயணிப்பதே சிரமம் தான். தட்பவெப்ப நிலை மோசமாகி விட்டாலோ பாலைவனைத்தில் பயணிப்பதே கொடுமையான அனுபவம் தான். எனவே தான் பயணிகள் யாரையும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.  

அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். பசியுடன் இருப்பது அவனைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தெரிந்தது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். “வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது

“இறைவனைத் தொழுவதா? நானா?என்றான் அவன்.

அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?

“நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை

பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன்.  அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை.

அவன் உறுதியாகச் சொன்னான். “இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை”.

அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான். பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அதே நேரம் பசியோடும், களைப்போடும் வந்த ஒருவன் அந்த கூடாரத்தில் இருந்து அப்படியே வெளியேறுவதும் அதுவே முதல் முறை என்பதால் அவருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார்.

இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. “என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே

பெரியவருக்கு சுருக்கென்றது. விழித்துக் கொண்டு நீண்ட நேரம் உறங்காமல் விழித்திருந்தார். கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வரும் போது இறைவனை வணங்கிப் பின்பற்றும் அவர் மட்டும் ஏன் வேறு மாதிரியாக இருக்க வேண்டும்?

மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். இறைவனைத் தொழுவது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று எண்ணியவராக அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்.

இந்தக் கதையில் கிடைத்த பாடம் மிகவும் யோசிக்கத் தக்கது.

வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி: ஆன்மிகம்: 04-06-2013


Thursday, July 25, 2013

பரம(ன்) ரகசியம் – 54



ரமேஸ்வரன் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டது போல சில வினாடிகள் துடித்ததைப் பார்த்துத் தான் ஒரு நர்ஸ் டியூட்டி டாக்டரைக் கூப்பிட ஓடினாள். அவர் வந்து பார்த்த போது பரமேஸ்வரன் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தார். டாக்டர் இதயத் துடிப்பை பரிசோதனை செய்தார். அது இயல்பாக இருந்தது. மூச்சும் சீராக இருந்தது.

இரண்டு நிமிடங்கள் கழித்து வந்த நர்ஸிற்கு சற்று முன் பார்த்தது இவரைத் தானா என்ற சந்தேகம் வந்தது. அரை மணி நேரம் கழித்து வந்த பெரிய டாக்டருக்கும் பரமேஸ்வரனின் அமைதியான உறக்க நிலை ஆச்சரியப்படுத்தியது. ஏதோ சரியில்லை!

மெல்ல பரமேஸ்வரனை அவர் உலுக்கினார். “சார்.... பரமேஸ்வரன் சார்

பரமேஸ்வரன் சில வினாடிகளுக்குப் பிறகு கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தார்.

“எப்படி இருக்கீங்க?

பரமேஸ்வரன் முழு விழிப்பு நிலைக்கு வரா விட்டாலும் பலவீனமான குரலில் சொன்னார். “நான்... குணமாயிட்டேன்....

டாக்டர் தன் சர்வீஸில் இப்படி ஒரு தகவலை எந்த நோயாளியிடம் இருந்தும் பெற்றதில்லை. பரவாயில்லை என்ற பதிலுக்குப் பதிலாக மயக்க நிலையில் குணமாயிட்டேன் என்ற வார்த்தையை பரமேஸ்வரன் பயன்படுத்தி இருக்கிறார் என்று பெரிய டாக்டர் நினைத்துக் கொண்டார்.

அப்படின்னா நாளைக்கு சர்ஜரியை செய்துடலாமா?என்று நகைச்சுவையாக அவர் பரமேஸ்வரனைக் கேட்டார்.

பரமேஸ்வரன் கஷ்டப்பட்டு சொன்னார். “வேண்டாம்.... குணமாயிட்டேன்

அடுத்து ஒரு வார்த்தை பேசும் சக்தி பரமேஸ்வரனிடம் இருக்கவில்லை. மறுபடி உறங்கி விட்டார்.

‘இந்த ஆளுக்குப் புத்தி பேதலித்து விட்டது போல் இருக்கிறதுஎன்று டாக்டர் நினைத்த போதும் பரமேஸ்வரனின் தற்போதைய மாற்றமும், அதன் காரணமும் கேள்விக்குறியாக இருந்தது.  எதற்கும் எல்லாவற்றையும் ஒரு தடவை மீண்டும் பரிசோதிப்பது நல்லது என்று அவருக்குத் தோன்றியது.

அடுத்த அரை மணி நேரம் நடந்த பரிசோதனைகள் அவரை திகைப்படைய வைத்தன. பரமேஸ்வரனின் இதயத்தில் அடைப்புகள் இருந்ததன் அறிகுறியே இல்லை.  அவர் சில மணி நேரங்களுக்கு முன் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை நர்ஸிடம் கொண்டு வரச் சொன்னார். அவற்றைக் கொண்டு வரப் போன நர்ஸ் சிறிது தாமதமாக வந்து குழப்பத்துடன் அந்த ரிப்போர்ட்டுகள் எதையும் காணவில்லை என்று சொன்னாள்.

என்ன ஆயிற்று எல்லோருக்கும், ஏன் இன்றைக்கு ஏதேதோ போல் நடந்து கொள்கிறார்கள் என்று டாக்டர் திகைத்தார். நன்றாகத் தேடும்மா

“தேடிட்டோம் சார். காணோம்

“அதெப்படிம்மா காணாமல் போகும்என்று டாக்டர் கேட்டார். அதைச் சொல்ல முடிந்தால் அதைக் கண்டு பிடித்தே விடுவோமே என்பது போல நர்ஸ் அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

சியூவில் நுழைந்த பெரிய டாக்டர் உடனடியாக வெளியே வந்து தாத்தாவின் கதை முடிந்து விட்டது என்று சொல்வார் என்று ஆவலாக எதிர்பார்த்த மகேஷ் பொறுமை இழந்து விட்டான். பெரிய டாக்டர் வெளியே வருவதற்குப் பதிலாக நர்ஸ்களும், டியூட்டி டாக்டரும் பரபரப்புடன் வெளியே வந்து போவதும், தாத்தாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைக் காணாமல் தேடிக் கொண்டிருந்ததும் அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

ஒரு நர்ஸ் ஈஸ்வரிடம் அந்த ரிப்போர்ட்டுகள் உங்களிடம் இருக்கிறதாஎன்று கேட்க ஈஸ்வர், “அதை நான் அப்போதே உங்களிடம் தந்து விட்டேனேஎன்று சொன்னதும் அவள் “ஆமா, ஆனா அது இப்ப காணோம்என்று சொல்லி விட்டுப் போனாள்.

“என் தாத்தாவுக்கு என்ன ஆச்சுஎன்று மகேஷ் டியூட்டி டாக்டரிடமும் கேட்டுப் பார்த்தான். டியூட்டி டாக்டர் என்ன சொல்வது என்று தெரியாமல் பெரிய டாக்டர் வந்து சொல்வார்என்று சொல்லி விட்டுப் போனார்.

தேவையில்லாமல் அந்த ரிப்போர்ட்டுகளை தேடுவதை விட்டு விட்டு அவர் செத்துட்டார்னு சொல்லித் தொலையுங்களேண்டாஎன்று மனதிற்குள் மகேஷ் கத்தினான்.

இந்த நேரத்தில் ஆனந்தவல்லியையும், மீனாட்சியையும் அழைத்துக் கொண்டு விஸ்வநாதன் வந்தார். என்னடா ஆச்சு?என்று அவர் மகனைக் கேட்டார்.

சரியா சொல்ல மாட்டேங்குறாங்கஎன்று எரிச்சலுடன் மகேஷ் சொன்னான்.

அவன் சொல்லி முடித்த போது பெரிய டாக்டர் குழப்பத்துடன் ஐசியூவில் இருந்து வெளியே வந்தார். தன் நடிப்புத் திறமையை அரங்கேற்றும் நேரம் வந்து விட்டதென்று நினைத்த மகேஷ் என் தாத்தா எப்படி இருக்கார் டாக்டர்என்று குரல் தழுதழுக்கக் கேட்டான். கேட்கும் போதே அவன் கண்கள் நிறைய ஆரம்பித்தன.

என்ன சொல்வது என்று தெரியாமல் அவர் அவனையே உள்ளே போய் பார்க்கச் சொல்லி கை காண்பித்து விட்டுச் சென்றார். ‘எல்லாம் முடிந்து விட்டது என்பது தான் அதன் அர்த்தம் என்று எடுத்துக் கொண்ட மகேஷ் ஆனந்தக் கண்ணீருடன் “தாத்தாஎன்று கதறிக் கொண்டே உள்ளே ஓடினான்.

அவன் அப்படிக் கதறி ஓடுவதைப் பார்த்த விஸ்வநாதன், மீனாட்சி, ஆனந்தவல்லி மூவரும் அவன் பின்னால் விரைந்தார்கள். ஈஸ்வர் கலக்கத்துடன் பெரிய டாக்டர் பின்னால் போனான். “என்ன ஆச்சு டாக்டர்?

உள்ளே சென்ற மகேஷ் பரமேஸ்வரன் மீது விழுந்து அழுது புலம்ப பரமேஸ்வரன் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தார். பேரன் துக்கத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்த அவர் பலவீனமான குரலில் சொன்னார். “எனக்கு ஒன்னும் ஆகலைடா அழாதே.....

அவர் கண்கள் திறந்து மெல்ல பேசியதில் இரண்டு இதயங்கள் மலர்ந்தன. இரண்டு இதயங்கள் நொறுங்கின. மீனாட்சிக்கு ஆனந்தக் கண்ணீரை அடக்கக் கஷ்டமாக இருந்தது. பரமேஸ்வரன் பேசியது ஆனந்தவல்லி வயிற்றில் பாலை வார்த்தது. அவள் மகனை அது வரை இல்லாத பாசத்துடன், கண்கள் ஈரமாக, பார்த்தாள்.  

மகேஷ் தன் காதில் விழுந்த சத்தம் பிரமையா என்று சந்தேகப்பட்டான். ஆனால் சந்தேகத்தை ஆனந்தவல்லியின் குரல் தீர்த்தது. டேய் உடம்புக்கு முடியாதவன் மேல அப்படி விழுந்து புரளாதேடா

மகேஷ் திகைப்புடன் நிமிர்ந்தான். பரமேஸ்வரன் பேரனை ஆறுதல் படுத்தும் விதத்தில் மெல்ல புன்னகைத்து விட்டுத் தன் தாயையும், மகளையும் பார்த்தார். மீனாட்சி ஓடி வந்து தன் தந்தையின் கை ஒன்றை பெருத்த நிம்மதியுடன் பிடித்துக் கொண்டாள். ஆனந்தவல்லி மகனின் காலடியில் உட்கார்ந்தாள். மகளையும், தாயையும் பார்த்து புன்னகைத்த பரமேஸ்வரன் விஸ்வநாதனைப் பார்த்து லேசாகத் தலையசைத்தார். அவர் கண்கள் வேறு யாரையோ தேடின.

மகனையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி கேட்டாள். “யாரைத் தேடறடா. ஈஸ்வரையா? அவன் வெளியே உட்கார்ந்திருக்கான். கூப்பிடவா?

பரமேஸ்வரன் ஆம் என்ற விதத்தில் மிக லேசாகத் தலையசைக்க ஆனந்தவல்லி மகேஷிடம் சொன்னாள். “ஏண்டா மரம் மாதிரி நிற்கறே. போய் ஈஸ்வரைக் கூப்பிடுடா!

மகேஷிற்கு கிழவியின் கழுத்தை நெறித்தால் என்ன என்று தோன்றியது. மெல்ல வெளியேறினான்.

டாக்டரிடம் பேசி முடித்திருந்த ஈஸ்வர் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கி இருந்தது. மகேஷ் வெளியே வந்ததைப் பார்த்துக் கேட்டான். “என்ன மகேஷ்?

“நீயே போய் பாருஎன்ற மகேஷ் பெருத்த ஏமாற்றத்துடன் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சுரத்தில்லாமல் சரிந்தான். அவனைத் தொடர்ந்து விஸ்வநாதனும் வெளியே வந்து மகன் அருகே உட்கார்ந்தார்.

ஈஸ்வர் தயக்கத்துடன் ஐசியூவிற்குள் போனான். பரமேஸ்வரன் பேரனை மிகுந்த சிநேகத்துடன் பார்த்தார். ஈஸ்வருக்கு மனம் நிம்மதியாயிற்று. அவர் அவனை பக்கத்தில் வருமாறு தலையசைத்தார்.

ஈஸ்வர் தயக்கத்துடனேயே அவர் அருகே சென்றான். அவர் அவனைக் குனியும் படி சைகையில் சொன்னார். ஏதோ சொல்லப் போகிறார் என்று குனிந்தான். தன் சகல பலத்தையும் திரட்டி சற்று மேல் எழும்பி பேரன் கன்னத்தில் பரமேஸ்வரன் முத்தமிட்டார். ஈஸ்வர் கண்கள் அவனை அறியாமல் கலங்கின.

மீனாட்சி சத்தமாக அழுதே விட்டாள். முதல் முறையாக ஒரு அதிசயம் நடந்திருக்கிறது! அவள் அண்ணன் மகனை அவள் தந்தை அங்கீகரித்து விட்டார். அவனும் அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டான். அது போதும் அவளுக்கு!

ஆனந்தவல்லி பேத்தி மீது எரிந்து விழுந்தாள். “சீரியல் நடிகை மாதிரி எப்பப் பாரு என்னடி அழுகை?

மகளை அவள் திட்டியதை பரமேஸ்வரன் ரசிக்கவில்லை. அம்மாவை அவர் முறைத்தார். ஆனந்தவல்லி அதை சட்டை செய்யாமல் கேட்டாள். “இப்ப உனக்கு எப்படிடா இருக்கு?

மெல்ல பரமேஸ்வரன் சொன்னார். “அண்ணா என்னை குணப்படுத்திட்டான்மா

அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. “களைப்பாய் இருக்கு... தூங்கறேன்”.  அவர் கண்கள் தானாக மூடின. மறுபடி அவர் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார்.

ஆனந்தவல்லி திகைப்புடன் மகனைப் பார்த்தாள். ஈஸ்வர் டாக்டர் தெரிவித்ததை அத்தையிடமும், பாட்டியிடமும் சொன்னான். பரமேஸ்வரன் இதயத்தில் இருந்த அடைப்புகளை இப்போது காணோம், அடைப்புகள் இருந்ததாய் தெரிவித்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளையும் காணோம் என்று கேள்விப்பட்டவுடன் ஆனந்தவல்லி பிரமிப்புடன் மெல்ல எழுந்தாள்.

“எனக்கு வீட்டுக்குப் போகணும். நீயும் வர்றியாடி

என்ன அவசரம். அப்பா கொஞ்சம் முழிச்ச பிறகு போலாமே

ஆனந்தவல்லி சம்மதிக்கவில்லை.

நீ வராட்டி பரவாயில்லை.. டிரைவர் என்னை வீட்டுல விட்டுட்டு வரட்டும். எனக்கு வீட்டுக்குப் போகணும்

சில நேரங்களில் பாட்டி சின்னக் குழந்தை போல பிடிவாதம் பிடிப்பதாக எண்ணிய மீனாட்சி ஈஸ்வரைப் பார்த்து தலையாட்ட ஈஸ்வர் ஆனந்தவல்லியை கார் வரை அழைத்துச் சென்றான். ஆனந்தவல்லி கனவில் நடப்பவள் போல் நடந்தாள். யாரையும் பார்க்கவும் இல்லை. யாரிடமும் பேசவும் இல்லை.

ஈஸ்வர் கவலையுடன் கேட்டான். “பாட்டி உங்களுக்கு உடம்புக்கு எதுவுமில்லையே

“நல்லா தாண்டா இருக்கேன்என்று கரகரத்த குரலில் சொன்ன ஆனந்தவல்லி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவளை டிரைவருடன் அனுப்ப மனமில்லாமல் ஈஸ்வர் தானே பாட்டியை காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். வீடு சேர்ந்தவுடன் தனதறைக்கு நேராகச் சென்ற ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனிடம் சொன்னாள். “இனி நீ போடா. தாத்தா கூட இரு. அவனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வா

ஈஸ்வர் நகர்ந்தவுடன் கதவை உடனடியாகச் சாத்திய ஆனந்தவல்லி வேகமாகச் சென்று தன் மூத்த மகனின் புகைப்படத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

மகன் புகைப்படத்தில் முத்தமிட்டு அந்தப் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்ட அவள் கண்கள் கடலாயின. “குழந்தே... குழந்தே.... உன்னைக்கூட அன்னைக்கு நீ காப்பாத்திக்கலை. ஆனா உன் தம்பியை இப்ப காப்பாத்திட்டியேடா.... போதும்டா,  இந்தக் குடும்பத்துல நீ எல்லா கடனையும் தீர்த்துட்டே. அம்மா அப்ப ரொம்பவே மோசமா பேசிட்டனாடா? மன்னிச்சுடுடா...! வெந்து நொந்த மனசு பைத்தியம் மாதிரி பேசிச்சுன்னு நினைச்சுக்கோடா....

மகன் புகைப்படத்தைப் பிடித்துக் கொண்டு அன்று அழுததைப் போல ஆனந்தவல்லி வாழ்க்கையில் அதற்கு முன்பும் அழுததில்லை, அதற்குப் பின்பும் அழுதது இல்லை. கோபம் கொள்கையில் சரமாரியாக வார்த்தைகள் வந்தது போல இப்போது ஏனோ அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனம் நிறைகையில் ஏனோ மௌனமே மொழியானது. கடைசியில் மகன் படத்தைக் கட்டிப்பிடித்தபடியே அவள் உறங்கிப் போனாள்.....!

அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் பரமேஸ்வரனும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தார். அவரைத் தனியறைக்கு மாற்றி இருந்தார்கள். அவர் பக்கத்தில் மீனாட்சி, விஸ்வநாதன், மகேஷ் மூவரும் இருந்தார்கள். அவர் கண் விழிக்கையில் அக்கறையுடன் பக்கத்திலேயே அவன் உட்கார்ந்திருந்தது தெரிய வேண்டும் என்பதற்காக மகேஷ் அங்கிருந்தான். அவனுக்கிருந்த சோகத்திற்கு அளவே இல்லை.

தாத்தா தான் பிழைச்சுகிட்டாரே. இன்னும் ஏண்டா சோகமாய் இருக்கே?என்று மீனாட்சி மகனைக் கேட்க விஸ்வநாதன் மனைவியின் வெகுளித் தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார்.

ஈஸ்வர் பெரிய டாக்டருடன் பேசிக் கொண்டிருந்தான். அவருக்கு இன்னமும் திகைப்பு அடங்கியபாடில்லை. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி மாயாஜாலம் போன்ற நிகழ்வுகளும் நடக்குமா என்ன? என்று தனக்குள் பல முறை கேட்டுக் கொண்ட அவர் பிறகு ஈஸ்வரிடம் அதை வாய் விட்டே கேட்டார்.

ஈஸ்வர் சொன்னான். “நமக்கு காரணம் புரியாமல் இருந்தாலோ, புரிந்தாலும் அது அறிவுக்கு எட்டாத பிரம்மாண்டமாக இருந்தாலோ நாம் அதை மாயாஜாலம் மாதிரின்னு நினைச்சுக்கறோம். இதெல்லாம் விஞ்ஞான விதிகளுக்கும் மேலான சில விதிகள் படி நடக்கிற விஷயங்கள். அந்த விதிகள் பரிச்சயமானவங்களுக்கு இதெல்லாம் அதிசய நிகழ்ச்சிகள் அல்ல

அந்த ஸ்கேன் ஃபோட்டோக்களும், ரிப்போர்ட்டுகளும் இருந்திருந்தால் இதை நாம் ஆதாரபூர்வமாகவே பதிவு செய்திருக்கலாம். ஆனால் அதெல்லாமும் காணாமல் போனது தான் என்னால் புரிஞ்சுக்க முடியல

இதெல்லாம் ஆதாரபூர்வமாகப் பதிவாக வேண்டாம்னு அந்த சக்திகள் நினைச்சு இருக்கலாம்....

“ஏன் அப்படி?

ஈஸ்வர் பதில் ஏதும் சொல்லவில்லை. இதற்குப் பதில் சொல்லி டாக்டருக்குப் புரிய வைப்பது கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் டாக்டரிடம் தாத்தாவை எப்போது டிஸ்சார்ஜ் செய்வீர்கள்? என்று கேட்டான்.

டாக்டர் நாளை காலை இன்னொரு முறை சில பரிசோதனைகள் செய்து  மறுபடி உறுதிப்படுத்திக் கொண்டு பரமேஸ்வரனை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொன்னார்.

ஈஸ்வர் போன பிறகு அவன் மீதும் டாக்டருக்கு சந்தேகம் வந்தது. கடைசியாக நர்ஸிடம் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை வாங்கிப் பார்த்தவன் அவன் தான். அவன் அந்த நர்ஸிடமே திருப்பிக் கொடுத்து விட்டதாகச் சொல்கிறான், அதை அந்த நர்ஸும் ஒப்புக் கொள்கிறாள். அவளுக்குத் தெரியாமல் மறுபடியும் அந்த ரிப்போர்ட்டுகளை அவனே எடுத்திருப்பானோ?

குடும்பமே ஏதோ ரகசியக் குடும்பம் போல அவருக்குத் தோன்றியது. ஒரு சிவலிங்கம் காணாமல் போனதையும் பரமேஸ்வரனின் அண்ணன் கொலை செய்யப்பட்டதையும் பத்திரிக்கைகளில் படித்த நினைவு வந்தது. அந்தக் கிழவர் பத்மாசனம் கலையாமலேயே கடைசி வரை இருந்தார் என்று பத்திரிக்கைகளில் எழுதி இருந்தார்கள்.... அந்தக் கிழவர் தான் தம்பியின் கனவில் வந்து காப்பாற்றி இருப்பதாக குடும்பத்தினர் பேசிக் கொள்வது அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் பரமேஸ்வரனின் இதய அடைப்புகள் நீங்கி இருப்பதென்னவோ உண்மை தான்....

ஆஸ்பத்திரியின் ரகசிய காமிரா மூலம் எடுத்த வீடியோக்களில் ஏதாவது கிடைக்கிறதா என்று டாக்டர் பார்க்க எண்ணினார். பரமேஸ்வரனுக்கு குணமானது எப்படி என்று அறிய அந்த வீடியோக்கள் உதவா விட்டாலும் அந்த ரிப்போர்ட்டுகள் காணாமல் போனது எப்படி என்று அறியவாவது அவை உதவும் என்று நினைத்தார்.

சிறிது நேரத்தில் அந்த வீடியோவையும் அவர் பார்த்தார். பார்க்கையில் முழுக் கவனமும் அந்த ரிப்போர்ட்டுகளின் மீதே இருந்தன. ரிப்போர்ட்டுகள் வழக்கமாக வைக்கப்படும் இடத்திலேயே இருப்பதையே பார்த்துக் கொண்டு வந்த அவர் திடீரென்று அடுத்த ஃப்ரேமில் அந்த ரிப்போர்ட்டுகள் காணாமல் போனதைப் பார்த்து திகைத்தார்.

மறுபடி ஒரு நிமிடம் பின்னுக்கு வந்து ஸ்லோ மோஷனில் வீடியோவை ஓட விட்டுப் பார்த்தார்.  ரிப்போர்ட்டுகள் இருந்த ஃப்ரேமிற்கும், இல்லாமல் போன ஃப்ரேமிற்கும் இடையே ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் மின்னல் ஒளி போல ஏதோ தோன்றி மறைந்த மாதிரி இருந்தது. அந்த ஒளியோடு சேர்ந்து அந்த ரிப்போர்ட்டுகளும் மாயமாக மறைந்திருந்தன.

டாக்டருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை....! அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது.

(தொடரும்)

-          என்.கணேசன்

Monday, July 22, 2013

போதிதர்மரும் போதனைகளும்




போதிதர்மர் என்ற பெயர் சமீபத்திய “ஏழாம் அறிவுதிரைப்படம் மூலம் பிரபலமான போதும், அதற்கு முன்பு வரை அவர் பெயரைச் சொன்னால் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது அவர் குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்பதும் ஜென் பௌத்தத்தின் சிருஷ்டிகர்த்தா என்பதும் தான்.  ஒரு தமிழன், காஞ்சிபுரத்து அரசகுமாரன், சீன தேசத்திற்குச் சென்று பௌத்த மதத்தின் ஆன்மாவையே உலகிற்கு அறிமுகப்படுத்தி வரலாற்றில் இடம் பெற்று இருப்பது நமக்கெல்லாம் ஒரு பெருமையே. அவரைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.

புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு புத்தமதத்தைத் தழுவிய போதிதர்மர் தன் குருவின் ஆணையை ஏற்று பௌத்தத்தை பரப்புவதற்கு கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி வருகிறார் என்பதையும், அவர்  பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு என்பதையும் கேள்விப்பட்டிருந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார். அப்போது மன்னர் போதிதர்மரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மர் சொன்ன பதிலும் அவர் போதனைகளின் முக்கிய அம்சம் என்று சொல்லலாம்.

மன்னர் லியாங் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மர் மிக அமைதியாகச் சொன்னார். உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.இந்த பதிலைக் கேட்ட மன்னருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

துறவிக்கு வேந்தன் துரும்பு என்கிற விதத்தில் போதிதர்மர் முகஸ்துதி செய்யாமல் அப்படிச் சொல்லக் காரணம்  அந்த மன்னர் புகழுக்காகத் தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டது தான். சுயநல எண்ணத்துடனும் புகழுக்காகவும் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

போதிதர்மர் மன்னர் லியாங் வூ-டியைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்குச் சென்றார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் மிகவும் பலவீனமாகவும் ஆரோக்கியம் அற்றும் இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் உடம்பை அலட்சியப்படுத்த வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து அவர்களிடம் மேலோங்கி இருப்பதை அவர் கண்டார்.

போதிதர்மர் எல்லா கோணங்களில் இருந்தும் ஞானத்தைக் காண முடிந்தவர். உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இல்லா விட்டால் பெரும்பாலான நேரங்களில் மனம் உடல் உபாதைகளிலேயே தங்கி விடும் என்பதை உணர்ந்தவர் அவர். அப்படியே இல்லா விட்டாலும் கூட ஆன்மிக மார்க்கத்தில் நிறைய தூரம் பயணிக்க வலுவான உடல் அவசியம், உடல் இல்லா விட்டால் எல்லாமே இல்லாமல் போய் விடும் என்பதால் அவர் உடலைப் பேணிப் பாதுகாப்பதும் ஒரு ஆன்மிகவாதிக்கு அவசியம் என்று நம்பியவர் அவர். எனவே உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளையும், தாக்க வரும் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் புத்த பிட்சுக்களுக்கு அவர் விளக்கமாகக் கற்றுத் தந்தார். அப்படிப் பிறந்தது தான் குங்க்ஃபூ என்னும் தற்காப்புக்கலை.

மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவர் உடலுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருப்பது போலத் தோன்றினாலும் அவர் அதை விட அதிகம் மனத்திற்கும், ஞானத்திற்கும் தந்திருந்தார் என்பதே உண்மை. ஒன்பது வருட காலம் அவர் ஒரு குகையில் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகவும் மேலான ஆன்மிக ரகசியங்களைத் தெளிவாக உணர்ந்த பின்னரே தியானத்தில் இருந்து எழுந்ததாகவும் பல சீன பௌத்த அறிஞர்களும் ஒருசேர குறிப்பிட்டிருப்பதே அதற்கு சான்று. 

போதிதர்மர் சென்ற காலத்தில் சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன என்றாலும் எந்திரத்தனமாகப் பின்பற்றப்பட்டன. ஒன்பதாண்டு கால தொடர் தியானத்திற்குப் பின் உணர்ந்த உண்மைகளையும், புத்தரின் போதனைகளையும், தாவோவையும் இணைத்து போதிதர்மர் ஆன்மிகத்திற்கு உயிர் சேர்த்தார்.  அவர் போதனைகள் ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ஜென்’ (zen) என்பதாக வடிவம் கொண்டது.

போதிதர்மா தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். அது இக்காலத்தில் நாம் பார்க்கும் கைத்தடி போல இருக்கவில்லை.  அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார்.  ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறதுஎன்றும், ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது, ‘மனவிசாரங்களில் இருந்து விடுதலை வேண்டும்என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவாராம்.

போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா கோமாவில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவர்கள் மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். 

இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை அவரை நன்கு அறிந்த ஒருவன் கண்டான். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அவனுக்கு வியப்பு மேலிடுகிறது. அவர் இமய மலையை நோக்கிச் செல்வதைக் கவனித்த அவன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் போதிதர்மர் இறந்து விட்டதாகச் சொல்ல அவனோ தான் பார்த்த காட்சி உண்மை என்பதில் உறுதியாக இருந்தான். அவர்கள் அவன் முன்பே அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய ஒரே ஒரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதற்குப் பின் போதிதர்மரைக் கண்டவர்கள் யாருமில்லை.

மனதிலிருந்து விடுதலை அடையப் போராட வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் யதார்த்த நிலையே ஞானம்என்பதுதான் போதிதர்மாவின் போதனைகளின் சாரம். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். அப்போது மட்டுமே காலம், இடம் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார் அவர்.

அவருடைய அறிவுரைகளில் இருந்து சில:

நல் ஆசிரியர்களைத்  தேடும் முட்டாள்கள் உணர்வதில்லை அவர்களது மனம் மிகச்சிறந்த ஆசிரியர்,  என்பதை!

மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது.  நீதான் அதைக் காண்பதில்லை

பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே

மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்

வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்

மொழியைக் கடந்து போ. எண்ணத்தைக் கடந்து போ

புத்த நிலை என்பது விழிப்புணர்வு நிலையே. அது மனம், உடல் இரண்டிலும் முழு விழிப்புணர்வைக் கொண்டதாய் இருப்பதால் தீமைகள் இரண்டிலுமே உருவாகாமல் தடுக்கிறது


-          என்.கணேசன்


-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 28-05-2013

Thursday, July 18, 2013

பரம(ன்) ரகசியம் – 53



கேஷ் வந்து சேரும் வரை விஸ்வநாதனுக்கு ஈஸ்வரை அருகில் இருந்து கொண்டு கூர்மையாகக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிக் கவனித்த போது அவரால் ஈஸ்வரை மெச்சாமல் இருக்க முடியவில்லை. குற்ற உணர்வால் அவன் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவன் முழுக் கட்டுப்பாட்டுடனும், ஆளுமைத் திறன் சிறிதும் குறையாமலும் இருந்தான்.

வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த டாக்டரிடம் மீண்டும் சென்று ஈஸ்வர் பரமேஸ்வரனின் உடல்நிலையின் முழு விவரங்களைக் கேட்டு வந்தான். அவரிடம் அந்த விவரங்களைச் சொன்னான். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் மற்ற ரிப்போர்ட்களையும் நான் பார்க்கணும்னு சொன்னேன், அவர் அனுப்பி வைக்கிறேன்னு சொன்னார்  

அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை ஒரு இளம் நர்ஸ் சிறிது நேரத்தில் கொண்டு வந்து ஈஸ்வரிடம் தந்தாள். அந்த நர்ஸ் ஈஸ்வரால் நிறையவே ஈர்க்கப் பட்டதாக விஸ்வநாதனுக்குத் தோன்றியது. பார்க்க அழகாகவும் இருந்த அந்த நர்ஸ் அடிக்கடி அவன் பார்வையில் படுகிற மாதிரி நடமாடியதையும், அவன் பார்த்த போது கவர்ச்சியாகப் புன்னகை செய்ததையும் விஸ்வநாதன் கவனிக்கவே செய்தார்.

அவள் அவனிடம் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைத் தந்து விட்டு மிக அருகில் நின்ற போது ஈஸ்வர் “தேங்க்ஸ் சிஸ்டர்என்று மரியாதையாகச் சொன்னான். அவன் குரலில் அந்த சிஸ்டருக்கு ஒரு அழுத்தம் இருந்தது. அவள் ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தாள். ஒருவித ஏமாற்றம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு வெல்கம்என்று இனிமையாகச் சொல்லி விட்டுப் போனாள்.

இதில் அவன் தன்னைப் பற்றி உயர்வாகவும் அவளைப் பற்றித் தாழ்வாகவும் நினைக்கவில்லை. அவன் இந்த ஈர்ப்பு இயல்பு என்பதாக எடுத்துக் கொண்டது போல விஸ்வநாதனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவள் அழகாக இருக்கிறாளே என்பதற்காக நிலைமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சிறிது நேர சீண்டல்களைக் கூடச் செய்யாமல், அவளைக் கையாண்ட விதத்தில் தன் கௌரவத்தை நிலை நிறுத்தி, அவளுடைய கௌரவத்தையும் காப்பாற்றி மரியாதையாக நடத்திய நுணுக்கமான விதத்தில் அவன் தனித்தன்மை தெரிந்தது. தாத்தாவின் உடல்நிலையால் ஏற்பட்டிருந்த இந்த கவலை சூழ்நிலையால் மட்டுமல்ல, மற்ற சாதாரண சூழ்நிலைகளிலும் அவன் இப்படியே தான் நடந்து கொண்டிருப்பான் என்று அவருக்குத் தோன்றியது.

அவன் அவரிடம் அந்த ரிப்போர்ட்டுகளைக் காட்டி மேலும் ஏதேதோ விளக்கினான். பரமேஸ்வரன் மிகுந்த அபாயக் கட்டத்தில் தான் இருக்கிறார் என்பதைத் தவிர விஸ்வநாதனுக்கு வேறு எதுவும் விளங்கவில்லை. அவன் திரும்பவும் அந்த நர்ஸிடம் அந்த ரிப்போர்ட்டுகளைத் தந்து விட்டு மறுபடி நன்றி சொல்லி விட்டு வந்தான். அவள் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள். இப்போது அவள் புன்னகையில் கவர்ச்சி போய் கண்ணியம் தெரிந்தது.

பரமேஸ்வரன் பிழைத்துக் கொண்டால் இவனை அலட்சியம் செய்ய முடியாது என்பது விஸ்வநாதனுக்குப் புரிந்தது. அவர் சங்கரை ஒதுக்கினார். சங்கரும் ஒதுங்கிக் கொண்டான். ஆனால் சங்கரின் மகன் ஒதுக்க முடிந்தவனும் அல்ல, ஒதுங்கக் கூடியவனும் அல்ல. புத்திசாலித்தனம், பக்குவம், ஆளுமைத் திறன் இவைகளில் எந்தக் காலத்திலும் மகேஷ் இவனுக்கு இணையாக முடியாது என்பதும் அவருக்குப் புரிந்தது. அந்த நிஜம் அவருக்கு வலித்தது.... கடவுள் பாரபட்சமானவர், சிலருக்கு எல்லாவற்றையும் தந்து விடுகிறார், சிலருக்கோ எதுவும் தருவதில்லை என்று தோன்றியது...

மகேஷ் வந்தான்... அவன் முகத்தில் களைப்பு தெரிந்தது. “எங்கே போயிட்ட நீ?விஸ்வநாதன் கேட்டார்.

“ப்ரண்ட்ஸ் கூட இருந்தேன்... தாத்தாவுக்கு என்ன ஆச்சு?முன்பே விஸ்வநாதன் சொல்லி இருந்தாலும் புதிதாகக் கேட்பவன் போலக் கேட்டான்.

ஹார்ட் அட்டேக் என்றார் விஸ்வநாதன். மகேஷ் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “தாத்தா.... தாத்தாஎன்று அவன் கதறினான். ஐ.சி.யூவிற்கு வெளியே அமர்ந்திருந்த வேறு சிலர் அவனை இரக்கத்தோடு பார்த்தார்கள். விஸ்வநாதன் அவனைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தினார். விஸ்வநாதனுக்கு உள்ளூர ஒரு பெருமை எழுந்தது. ‘இதில் அவர் மகனுக்கு ஈஸ்வர் இணையாக முடியாது’. இந்த ஒன்றிலாவது அவர் மகன் ஈஸ்வரை மிஞ்சுகிறானே!

அவனை அப்படியே வராந்தாவின் எதிர்பக்க ஆளில்லாத மூலைக்கு விஸ்வநாதன் அழைத்துக் கொண்டு போனார்.  அங்கு போனவுடன் மகேஷ் தந்தையிடம் கேட்டான். “அம்மா எங்கே?

வீட்டுக்குப் போயிருக்கா! கிழவி அங்கே தனியா இருக்கறதால துணைக்கு அங்கே போய் இருக்கச் சொல்லி ஈஸ்வர் அனுப்பிச்சிட்டான்

இவனால தான் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குங்கறதை அம்மாவும், கிழவியும் எப்படி எடுத்துகிட்டாங்க

“உங்கம்மாவுக்கு இவன் மேல இரக்கம் தான் இருக்கு. கிழவி என்ன நினைக்கிறாங்கறதை எப்பவுமே வெளிப்படுத்திக்கிறதில்லையே

“தாத்தா பிழைப்பாரா?

“ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைப் பார்த்தா அவர் பிழைக்கிறது கஷ்டம் தான்னு தோணுது. ஒரு வேளை அவருக்கு ஏதாவது ஆயிட்டா அப்புறமா கிழவியும் ரொம்ப நாள் இருக்க மாட்டா. அவளுக்கு சின்ன மகன்னா தான் உயிரு

கேட்கவே மகேஷுக்கு இனிமையாக இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... இல்லையில்லை.... ஈஸ்வரையும் சேர்த்தால் மூன்று மாங்காய். உன்னால் தான் இத்தனையும்னு குற்றம் சாட்டி அமெரிக்காவிற்கே துரத்தி விட இது நல்ல வாய்ப்புஎன்று மகேஷ் நினைத்தான்.

மகனின் எண்ண ஓட்டத்தை ஊகித்த விஸ்வநாதன் புன்னகைத்தார். நான் கிளம்பறேன் மகேஷ். நீ இங்கே இரு. ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிஎன்று சொல்லி விட்டுக் கிளம்பினார். மகேஷ் ஈஸ்வரிடம் பேசும் போது அவர் கூட இருந்தால் அவனைக் கட்டுப்படுத்த வேண்டி வரும்... அவர் மகேஷைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை....

விஸ்வநாதன் ஈஸ்வரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார். அவர் போன பின் மகேஷ் ஈஸ்வரிடம் சத்தமாகக் கேட்டான். “இப்ப உனக்குத் திருப்தியா?... இதுக்காக தானே நீ இத்தனை நாள் காத்துகிட்டிருந்தே.

அங்கிருந்தவர்கள் அவர்கள் பக்கம் திரும்ப ஈஸ்வர் “மெள்ள பேசுஎன்றான்.

“நான் எதுக்கு மெள்ள பேசணும்? அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்... ஆமா. சொல்லிட்டேன்மறுபடியும் சத்தமாய் மகேஷ் சொன்னான்.

“தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாதுஎன்று அமைதியாக ஈஸ்வர் சொன்னான்.

மகேஷிற்குத் தான் கேள்விப்பட்டது தவறோ என்ற சந்தேகம் எழுந்தது. “டாக்டர் வேற மாதிரி சொன்னதாயில்ல அப்பா சொன்னார்

தாத்தா பிழைக்கறதுக்கு முப்பது சதவீதம் சான்ஸ் இருக்கறதா டாக்டர் சொன்னார். நூறு சதவீதம் சான்ஸ் இல்லைன்னு சொன்னா தான் கவலைப்படணும். முப்பது சதவீதம் சான்ஸ் இருக்குன்னா நம்ம எல்லாரோட பிரார்த்தனையும் சேர்ந்து அவரை அந்த முப்பது சதவீதத்துக்கு அவரை இழுத்துகிட்டு வந்துடும்.”  ஈஸ்வர் அமைதியாகச் சொன்னான்.

ஓ பிள்ளையையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவியா நீ. அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துட்டு அவர் பிழைக்கணும்னு நீ பிரார்த்தனையும் செய்வியாமகேஷ் சொல்லி விட்டுத் தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். அடுத்த கணம் அவன் குமுறி குமுறி அழுதான்.

அங்கிருந்தவர்கள் மகேஷை இரக்கத்துடன் பார்த்தார்கள். ஓரக்கண்ணால் அதைப் பார்த்த மகேஷிற்குத் திருப்தியாக இருந்தது.

“மகேஷ், அவர் எனக்கும் தாத்தா தான். ஞாபகம் வச்சுக்கோஈஸ்வர் சொன்னான்.

ஈஸ்வர் சொன்ன வாசகமே மகேஷிற்குக் கசந்தது. அவன் பொறுக்க முடியாதவன் போலக் கத்தினான். “ஓ அப்படியா. இத்தனை நாள் நீ ஒரு தடவையாவது அவரை தாத்தான்னு கூப்பிட்டிருப்பியா? ஒரு நாள் அவர் கிட்ட நீ அன்பா பேசியிருப்பியா?....மகேஷ் மறுபடி கத்தினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு அவன் எண்ணம் புரிந்தது. அமைதியாய் தாழ்ந்த குரலில் உறுதியாய் சொன்னான். இத்தனை நாள் வரைக்கும் ஒரு மாசத்துல அமெரிக்கா திரும்பிப் போயிடணும்னு தான் நினைச்சிருந்தேன். இன்னொரு தடவை நீ கத்திப் பேசினேன்னா நான் நிரந்தரமா இங்கேயே தங்கிடுவேன். தாத்தாவுக்கு என்ன ஆனாலும் சரி .... எனக்கு வர வேண்டிய சொத்தை வாங்காமல் இங்கிருந்து நகர மாட்டேன்... எப்படி வசதி?  

மகேஷ் ஈஸ்வரையே திகிலுடன் பார்த்தான். அவன் விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பதை அவன் முகபாவனை சொன்னது. யோசித்துப் பார்த்த போது இனி வாயைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று மகேஷின் அறிவு எச்சரித்தது. “என்ன மாதிரி ஆளு நீஎன்று வெறுப்புடன் மெல்ல சொன்னவன் அதன் பிறகு மௌனமானான்.

ரமேஸ்வரன் மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தார். விழிப்புணர்விற்கு வரும் போதெல்லாம் இதயத்தில் பெரிய பாரத்தை அவர் உணர்ந்தார். ஐசியுவின் உள்ளே நர்ஸ்களின் நடமாட்ட சத்தமும் பேச்சுச் சத்தமும் கேட்டது. மயக்க நிலைக்குச் செல்லும் போதோ திரும்பத் திரும்ப ஈஸ்வர் அவரைத் தாத்தா என்றழைப்பது போல் கேட்டது. அத்துடன் அவன் சொன்னதும் திரும்பத் திரும்ப காதில் விழுந்தது. “நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தா. ப்ளீஸ் எனக்காக குணமாயிடுங்க தாத்தா”.

அந்த வார்த்தைகள் அவர் இதயத்தை அறுப்பது போல அவர் உணர்ந்தார். அவனுடைய கோபமான வார்த்தைகளை விட அதிகமாக இந்த வார்த்தைகள் அவரைக் காயப்படுத்தின. சொல்ல முடியாததொரு சோகம் அவரை ஆட்கொண்டது. கோபத்திலும் சரி துக்கத்திலும் சரி பேரன் பயன்படுத்தும் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. ஒருவனின் இதய ஆழம்  வரைக்கும் பயணிக்க வல்லவையாக இருக்கின்றன....

திடீரென்று திருநீறின் மணம் அவரை சூழ்ந்தது. அந்த மணம் அவருக்கு மிகவும் பரிச்சயமானது. தோட்ட வீட்டில் அண்ணனைப் பார்க்கச் செல்கிற போதெல்லாம் அந்த மணத்தை அவர் சுவாசித்திருக்கின்றார். மெல்ல அவர் கண்களைத் திறந்து பார்த்தார்.

பசுபதி ஒளிவெள்ளத்தின் நடுவே நிற்பது தெரிந்தது. இறந்து விட்டோமா என்ன, அண்ணனிடம் வந்து சேர்ந்திருக்கிறோமே என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அண்ணாஎன்றழைத்தார்.

பசுபதி தம்பியைப் பார்த்து புன்னகை செய்தார். காயப்பட்ட மனதில் அண்ணனைப் பார்த்ததும் அமைதிப்படுத்தும் ஆறுதலை பரமேஸ்வரன் உணர்ந்தார். அண்ணனிடம் தெரிவிக்க அவருக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. முக்கியமாய் முதலில் ஈஸ்வரைப் பற்றி அண்ணனிடம் சொல்லத் தோன்றியது. “அண்ணா என் பேரன் ஈஸ்வர் பார்க்க அப்படியே நம் அப்பா மாதிரியே இருக்கான்... பார்க்க மட்டும் தான் அவர் மாதிரி, குணத்தில் அப்பா மாதிரி சாதுவாக எல்லாம் இல்லை.... ரொம்பவே நல்லவன் தான்.... பிடிச்சவங்க கிட்ட நம்ம அப்பா மாதிரியே மென்மையா நடந்துக்குவான்.... ஆனா கோபம் யார் மேலயாவது வந்துட்டா பேச்சு எல்லாம் நம்ம அம்மா மாதிரி கூர்மையாய் தயவு தாட்சணியம் இல்லாமல் இருக்கும்....

அம்மா பேச்சு பற்றி சொன்னதும் அண்ணன் புன்னகை மேலும் விரிந்ததாகப் பரமேஸ்வரனுக்குத் தோன்றியது. அவரும் புன்னகை செய்தார். திடீரென்று அண்ணனிடம் சிவலிங்கம் திருட்டுப் போன விவரம் பற்றிப் பேசவில்லை என்ற நினைவு வர அது பற்றிப் பேச அவர் வாயைத் திறந்தார். ஆனால் அதற்கு முன் பசுபதி தம்பியின் உடலைத் தொட்டார். அண்ணனின் கைகள் அவர் உடலைத் தொட்டவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல பரமேஸ்வரன் உணர்ந்தார். அவர் சொல்ல வந்த வார்த்தைகள் வாயிலேயே தங்கி விட்டன. பரமேஸ்வரன் நினைவிழந்தார்.

சியுவில் இருந்து வெளியே நர்ஸ் ஓடி வந்த போது தாத்தாவின் நிலைமை மோசமாகப் போய் விட்டது என்பது மகேஷிற்குப் புரிந்தது.

எழுந்து நின்று “என்ன ஆச்சு?என்று மகேஷ் நர்ஸைக் கேட்டான். ஆனால் அவனுக்குப் பதிலேதும் சொல்லாத அவள் ஓடிப்போய் டியூட்டி டாக்டரிடம் ஏதோ சொல்ல அவர் ஐசியூவிற்கு விரைந்து செல்ல நர்ஸ் பெரிய டாக்டருக்குப் போன் செய்து பேச ஆரம்பித்தாள். பேசி விட்டு அவளும் ஐசியூவிற்கு ஓட மகேஷ் அவளை வழி மறித்து கேட்டான். “என் தாத்தாவுக்கு என்ன ஆச்சு?

“சீஃப் டாக்டர் இப்ப வந்துடுவார். அது வரை எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டு நர்ஸ் ஐசியூவினுள் நுழைந்தாள்.

மகேஷ் ஈஸ்வரிடம் கேட்டான். “இப்ப உனக்கு திருப்தியா?”. வெறுப்புடன் கேட்ட போதும் அவன் குரல் தாழ்ந்தே இருந்தது.

“பொறுமையா இருஎன்று ஈஸ்வர் சொன்னான்.

அவர் தோள்ல வளர்ந்தவன் நான். என்னால் பொறுமையாய் இருக்க முடியாதுஎன்று குரலில் பெரும் துக்கத்தை வரவழைத்த மகேஷ் உடனடியாகத் தந்தைக்குப் போன் செய்தான்.

“அப்பா, தாத்தா நிலைமை சீரியஸ் போலத் தெரியுது. சீஃப் டாக்டர் வராமல் எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க. எதுக்கும் நீங்க அம்மாவையும், பாட்டியையும் இப்பவே கூட்டிகிட்டு வர்றது நல்லதுன்னு நினைக்கிறேன்

விஸ்வநாதன் அப்போது தான் வீடு போய் சேர்ந்திருந்தார். உடனே அவர்களை அழைத்து வருவதாக மகனிடம் சொன்ன அவர் மனைவியிடம் மகேஷ் சொன்னதைச் சொன்னார்.

மீனாட்சி அதிர்ந்து போனாள். அவள் காலின் கீழுள்ள நிலம் திடீரெனப் பிளந்து விட்டது போல உணர்ந்தாள். கண்கள் கடலாக அப்படியே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

விஸ்வநாதன் மனைவியை சிறிது நேரம் தேற்றி விட்டுச் சொன்னார். “நீயே இப்படி தளர்ந்துட்டா உன் பாட்டியை நாம் எப்படி சமாதானப்படுத்தறது? முதல்ல அவங்களைக் கூட்டிகிட்டு கிளம்பு. பெரிய டாக்டர் இனிமேல் தான் வரணுமாம். அவங்களால முடிஞ்சதை அவங்க செய்யாமல் இருக்க மாட்டாங்க. தைரியப்படுத்திக்கோ

மீனாட்சி தன்னை ஓரளவு சுதாரித்துக் கொண்டு மெல்ல பாட்டி அறைக்குப் போனாள். “மகேஷ் போன் செஞ்சான். நம்மளை எல்லாம் வரச் சொன்னான். ஒரு தடவை போயிட்டு வந்துடலாமா பாட்டி

ஆனந்தவல்லி பேத்தியையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். பின் மூத்த மகனின் புகைப்படத்தை சிறிது முறைத்துப் பார்த்து விட்டு எழுந்தாள். பேத்தி கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள ஆனந்தவல்லி இளைய மகனைப் பார்க்கக் கிளம்பினாள்.

காரில் போகும் போது மீனாட்சியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆனந்தவல்லி கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கிளம்பவில்லை.

அதைக் கவனித்த விஸ்வநாதன் ஆச்சரியப்பட்டார். மகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கிழவி தாங்க மாட்டாள், நிறைய நாள் இருக்க மாட்டாள் என்று மகேஷிடம் சொன்னதை மானசீகமாக விஸ்வநாதன் வாபஸ் வாங்கிக் கொண்டார்.

கிழவி இன்னும் பல பேரை அனுப்பாமல் சாக மாட்டாள் போல இருக்கிறதே!

(தொடரும்)

-          என்.கணேசன்