Thursday, November 29, 2012

பரம(ன்) ரகசியம் – 20



ந்த மனிதன் மூன்று முறை அழைப்பு மணியை அழுத்திய பிறகே அந்த நடுத்தர வயது பழந்தமிழ்மொழி ஆராய்ச்சி வல்லுனர் வந்து பதட்டத்துடன் கதவைத் திறந்தார். அவர் கதவைத் திறந்து அந்த மனிதன் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று சந்தேகத்துடன் பார்த்ததும் அல்லாமல் அந்த மனிதனைத் தன் வீட்டினுள்ளே விட்டு வெளியே எட்டி இருபக்கமும் பார்த்தார். யாரும் அந்த மனிதனைப் பின் தொடர்ந்து வந்திருக்கிற அறிகுறி இல்லை. தமிழ் ஆராய்ச்சியாளர் ஓரளவு பதட்டம் குறைந்தவராகக் கதவைத் தாளிட்டு விட்டு அந்த மனிதனைத் தன் தனியறைக்கு அழைத்துச் சென்றார். அந்த மனிதனை அமரச் சொல்லி விட்டு அவனையே அவர் எதிர்பார்ப்போடு பார்க்க அந்த மனிதன் ஒரு உறையில் வைத்திருந்த ரூ.25000/-ஐ அவரிடம் தந்தான். அந்த மனிதர் அதை வாங்கிக் கொண்டு ‘இதோ வந்துடறேன்என்று சொல்லி விட்டுப் போனார்.

அந்த மனிதன் அமைதியாகக் காத்திருந்தான். தான் தேடி வந்த விடைகள் இந்த மனிதரிடம் எந்த அளவு கிடைக்கும் என்று யோசித்தான். தேவையான தகவல்கள் எல்லாம் கிடைத்தால் தான் அடுத்த அடியை தைரியமாக எடுத்து வைக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. குருஜி அளவுக்கு அவனால் தைரியமாக இருக்க முடியாததற்குக் காரணம் அவனுடைய சகாவின் ஒருவித கிலி அவனையும் தொற்றிக் கொண்டது தான் என்றே சொல்லலாம். சிவலிங்கத்தை எடுத்து வந்த அன்று அந்தக் கொலைகாரன் இறந்த விதம், சிவலிங்கத்தை எடுத்தவன் பயந்தது, பின் ரகசியமாய் ஓடிப்போனது, அவர்களுக்குத் தெரியாமல் சிவலிங்கத்தின் மீதிருந்த அபூர்வ மலர்களின் அலங்காரம் என ஒவ்வொன்றும் அவனுடைய சகாவின் பயத்தை அதிகப்படுத்தி இருந்தது. இமயமலைச் சாரலின் பூக்களைக் கொண்டு சிவலிங்கத்தை அலங்கரித்துப் பூஜை செய்தது யார் என்ற கேள்வியும் எழுந்த போது அவன் கிலி உச்சத்தை எட்டியது என்றே சொல்லலாம்.

சகா வாய் விட்டே அவனிடம் சொன்னான். “இதுல நமக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இன்னும் இருக்குன்னு தான் எனக்குத் தோணுது... எல்லாம் தெரிஞ்சுகிட்ட பிறகே இதுல இறங்கி இருக்கலாம்....

“குருஜி இருக்கறப்ப நீ ஏன் கவலைப்படறே?

“இதுல குருஜிக்கும் முழுசா தெரியலை

“ஆனா அவருக்கு ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் என்ன செய்யணும்கிறது சரியாவே தெரியுது. அந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்ய கணபதியை எப்படி கண்டுபிடிச்சு ஏற்பாடு செய்தார் பார்த்தியா?

“ஆனா அவர் இது வரைக்கும் அந்த சிவலிங்கத்தைப் பார்க்கக் கூட வரலைங்கறதை மறந்துட வேண்டாம்

அது அவனுக்கும் நெருடலாகவே இருந்தது என்றாலும் அதை வெளியே காண்பித்து சகாவை மேலும் அதிகமாய் பயமுறுத்தி விட வேண்டாம் என நினைத்தவனாய் அமைதியாய் சொன்னான். “அதுக்கு வேற எதாவது காரணம் இருக்கும். இன்னும் சிவலிங்கம் நம்ம கைல தான் இருக்கு. நீ பயப்படற மாதிரி சிவலிங்கமோ, அதுக்கு வேண்டியவங்களோ நிஜமாவே சக்தி வாய்ஞ்சவங்களா இருந்தா நம்ம கிட்ட சிவலிங்கம் இப்ப இருந்திருக்காது என்பதை மறந்துடாதே

சகா ஓரளவு தைரியமடைந்தான். ஆனாலும் சிவலிங்கம் பத்தி முழுசா தெரிஞ்சுக்க வேண்டியதை தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். அந்த சிவலிங்கத்துக்கும் சோழர்கள் காலத்துக்கும் இருக்கிற தொடர்பு பத்தி இப்ப போலீஸ் காதுக்கும் விழுந்திருக்கு... கண்டிப்பா விசாரிக்க ஆரம்பிப்பாங்க...

அதை வச்சு அவங்களுக்கு பெரிசா எதுவும் கிடைச்சுட வாய்ப்பில்லை... திருப்பதில மொட்டையன் இருக்கான்னு தகவல் கிடைச்ச மாதிரி தான் அது... இப்ப அந்த ஓலைச்சுவடியும் நம்ம கைல இருக்கு. அதுல என்ன இருக்குன்னு முழுசா தெரிஞ்சுக்க நான் நாளை காலைலயே தஞ்சாவூர் போறேன். சிவலிங்கம் பத்தி மேலும் அதிகமா தெரிஞ்சுகிட்டு வர்றேன். கவலைப்படாதே

என்ன தான் தைரியம் சொன்னாலும் கூட அறுபது வருடங்கள் வாயை மூடிக் கொண்டிருந்த பசுபதியின் தாய் சோழர்கள் கால சம்பந்தத்தை இப்போது திடீர் என்று சொல்லித் தொலைத்தது அவனுக்கும் அதிருப்தியையே தந்தது. இன்னும் அந்தக் கிழவிக்கு என்ன எல்லாம் தெரியுமோ என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தது. தெரிந்ததை எல்லாம் கிழவி சொல்லி விடும் ரகம் அல்ல என்பது அவனுடைய கணிப்பாக இருந்தது. கிழவி நம்பா விட்டாலும் அந்தக் காலத்திலேயே கேள்விப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கும் சோழர் காலத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம் அவர்கள் கவனத்திற்கு வந்தது ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு தான்.

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பொது மக்களிடம் இருந்து தஞ்சை கோயில், ராஜராஜ சோழன் சம்பந்தப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் சேகரிக்க ஆரம்பித்தது. தென் மாவட்டங்களில் ஒருசிலரிடம் இருந்து நிறைய ஓலைச்சுவடிகள் கிடைத்தன. அரசாங்கத்தின் உதவியுடன் நடந்த இந்த சேகரிப்பில் கிடைத்த ஓலைச் சுவடிகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பண்டைய தமிழர் பண்பாடு, வரலாறு குறித்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிடைத்த ஒரு ஓலைச்சுவடி அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. சித்தர்கள் வழிபட்ட சக்தி வாய்ந்த ஒரு சிவலிங்கம் பற்றி அந்த ஓலைச்சுவடி சொல்லி இருந்தது. பசுபதி குடும்பத்தின் சிவலிங்கம் கதையை முன்பே கேள்விப்பட்டிருந்த அவனுக்கு அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட அதிக நேரம் ஆகவில்லை. அந்த ஓலைச்சுவடியில் கிடைத்த சில தகவல்கள் அவன் அறிந்ததை உறுதிப்படுத்தியது. ஆனால் அந்த ஓலைச்சுவடியில் உள்ள சில பகுதிகள் அவன் நண்பர் தஞ்சை ஆராய்ச்சியாளருக்கும் பிடிபடவில்லை. அடுத்ததாக அந்த ஓலைச்சுவடியை முழுவதும் புரிந்து கொள்ள டெல்லியில் உள்ள ஓலைச்சுவடிகள் ஆராய்ச்சி மையத்திற்குத் தான் அனுப்ப வேண்டி வரும் என்றும் அங்கு அனுப்பினால் அந்த விசேஷ ஓலைச்சுவடியை முக்கியமான வரலாற்று ஆவணமாக டெல்லி ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்றும் அவன் நண்பர் சொன்னார்.

அந்த ஓலைச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாக மாறுவதும், அதில் உள்ள தகவல்கள் வெளியே கசிவதும் விரும்பாத அவன் குருஜியிடம் ஆலோசனை கேட்ட போது அவர் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி டெல்லியில் உள்ள ஓலைச்சுவடி ஆராய்ச்சி மைய முக்கிய அதிகாரியும், தமிழ்மொழி ஆராய்ச்சி வல்லுனருமான ஒருவரைத் தொடர்பு கொண்டு அவரைத் தஞ்சாவூருக்கு வரவழைத்து அவர் கையில் அந்த ஓலைச்சுவடி கிடைக்க ஏற்பாடு செய்தார். வாடகைக்கு ஒரு வீடும் ஏற்படுத்திக் கொடுத்து ஆராய்ச்சிக்குத் தேவையான கருவிகளையும் தருவித்துக் கொடுத்து ஓலைச்சுவடியைப் படித்துப் பொருள் சொல்ல ஏற்பாடு செய்தார். அந்த ஆராய்ச்சி வல்லுனரிடம் இருந்து அந்தத் தகவல்கள் பெறத் தான் அவன் வந்திருக்கிறான்.....

அந்த ஆராய்ச்சி வல்லுனர் ஓலைச்சுவடியையும் அத்துடன் பல பக்கங்களில் எழுதிய விளக்கங்களையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். கொடுத்து விட்டு முதலில் தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டார். “இந்த ஓலைச்சுவடி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் ஆவணமாகத் தான் இன்னும் இருக்கிறது...

“இல்லை இதற்குப் பதிலாக இன்னொரு ஓலைச்சுவடியை வைத்து விட்டோம்... அதற்குத் தகுந்த மாதிரி அதன் குறிப்பையும் மாற்றி விட்டோம்.

தமிழாராய்ச்சி வல்லுனர் சற்று நிம்மதி அடைந்தது போலத் தெரிந்தது. இது மாதிரி ஓலைச்சுவடிகள் கிடைப்பது அபூர்வம். வைத்தியம், ஜோதிடம், இலக்கியம் சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இது போன்ற ஓலைச்சுவடி நான் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட 950 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த ஓலையை யார் எழுதி வைத்தார்கள், ஏன் எழுதி வைத்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.... ஆனாலும் எழுதி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து எழுதியது போலத் தான் இருக்கிறது.....

அந்த மனிதன் ஓலைச்சுவடியுடன் தந்த காகிதங்களில் என்ன எழுதி இருக்கிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்து விட்டு அவரிடம் கேட்டான். “இதில் என்ன இருந்ததுன்னு சுருக்கமாக நீங்கள் சொல்லுங்களேன்... அவர் வாயால் ஒரு முறை கேட்க அவன் ஆசைப்பட்டான். எழுதி உள்ளதை எத்தனை முறை வேண்டுமானாலும் பின் படித்துக் கொள்ளலாம். ஆராய்ந்து கண்டு பிடித்தவர் வாயால் உணர்வு பூர்வமாகக் கேட்கும் சந்தர்ப்பம் இன்னொரு முறை வாய்க்குமா?

அவர் சொன்னார். “ராஜராஜ சோழனின் பேரன், ராஜேந்திர சோழனின் மகன் முதலாம் ராஜாதி ராஜன். அவனுக்கு விஜய ராஜேந்திர சோழன் என்ற பெயரும் உண்டு. அவன் மிகச்சிறந்த வீரன். பாராக்கிரம சாலி. அவன் சோழ நாட்டை ஆண்ட காலத்தில் அவனும் அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழனும் ஒரு சமயம் காட்டு வழியில் பயணம் செய்த போது சில சித்தர்கள் கூடி ஒரு சிவலிங்கத்தை வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். சிறந்த சிவபக்தர்களான ராஜாதி ராஜ சோழனும் அவன் தம்பியும் பயணத்தை நிறுத்தி சிவலிங்கத்தைத் தாங்களும் வணங்கினார்கள். வணங்கி நிமிர்ந்த போது ஒரு கணம் சிவலிங்கம் ஜோதிமயமாக ஒளிர்ந்தது. பரவசப்பட்டுப் போன முதலாம் ராஜாதிராஜ சோழன் அந்த சிவலிங்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டான். தன் தாத்தா ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலிற்கு இணையாக ஒரு பிரம்மாண்டமான கோயிலைத் தன் காலத்தில் கட்ட நீண்ட காலமாக ஆசைப்படுவதாகவும் அதற்கான சிவலிங்கமாகவே அந்த சிவலிங்கத்தைத் தான் காண்பதாகவும் அந்த சித்தர்களிடம் தெரிவித்தான்...

சித்தர்கள் அந்த சிவலிங்கம் சாதாரணமானதல்ல என்றும் அதை பூஜிப்பதும் வணங்குவதும் எல்லோருக்கும் முடியக்கூடியதல்ல என்றும் சொல்ல மன்னன் அதை விளக்குமாறு கேட்டான். சித்தர்கள் விளக்கினார்கள். ஆனால் அந்த விளக்கங்கள் சூட்சும வார்த்தைகளால் இருக்கவே முதலாம் ராஜாதி ராஜ சோழனுக்கு அது தெளிவாக விளங்கவில்லை.. அவன் மீண்டும் தன் ஆசையை வெளிப்படுத்தி அந்த சிவலிங்கத்திற்கு தகுந்த இடத்தில் கோயில் கட்ட ஆசைப்படுவதாகவும், சித்தர்கள் எப்படிக் கூறுகிறார்களோ அப்படியே பூஜை முறைகளைப் பின்பற்ற சம்மதிப்பதாகவும் கூறினான். சாளுக்கியர்களிடம் போர் புரிய சில நாட்களில் செல்லப் போவதாகவும் வந்து கோயில் வேலைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறினான். முக்காலமும் அறிந்த அந்த சித்தர்களில் ஒருவர் மன்னரிடம் புன்னகையுடன் சொன்னார். “போர் முடிந்து நீ வந்தால் அது குறித்து யோசிக்கலாம்

மகிழ்ச்சியுடன் சித்தர்களை வணங்கி போரில் வெல்ல ஆசி வழங்குமாறு முதலாம் ராஜாதி ராஜ சோழன் கேட்க அவர்கள் சோழர் வெல்வர் என்று ஆசி வழங்கினர். மன்னன் மகிழ்ச்சியுடன் சென்றான். அவன் சாளுக்கியருடன் கொப்பம் என்ற இடத்தில் போரிட்டான். போரில் யானை மீது அமர்ந்து போரிட்ட அவன் எதிரிகளின் அம்பு பட்டு படுகாயமுற்று இறந்து போனான். ஆனால் அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் தொடர்ந்து போரை நடத்தி போரைச் சோழர்கள் வென்றார்கள்.

அடுத்ததாக அரியணை ஏறிய இரண்டாம் ராஜேந்திர சோழன் சித்தர்கள் அண்ணனிடம் “போர் முடிந்து நீ வந்தால் அது குறித்து யோசிக்கலாம்என்று சொன்னதையும், நீ வெல்வாய்என்று ஆசி வழங்காமல்சோழர் வெல்வர்என்று ஆசி வழங்கியதையும் யோசித்து நடப்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள் என்று முடிவுக்கு வந்தான். சித்தர்கள் என்ன சொல்லியும் கேட்காமல் அந்த ஒளிரும்சிவலிங்கத்தை அவன் அடைய விரும்பியது தான் அவனுக்கு எமனாய் வந்து விட்டது என்று நினைத்தான். மீண்டும் அந்த சித்தர்களையும் சிவலிங்கத்தையும் சந்திக்க இரண்டாம் ராஜேந்திரச் சோழன் விரும்பா விட்டாலும் அந்தக் காட்டு வழியில் இன்னும் சித்தர்கள் சிவலிங்கத்தைப் பூஜித்தபடி இருக்கிறார்களா என்றறிய ஒற்றர்களை அனுப்பினான். ஆனால் அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்ததற்கோ, சித்தர்கள் அங்கு பூஜை செய்ததற்கோ எந்த சுவடும் கூட இருக்கவில்லை

அவர் முடித்து விட்டு அவனையே கூர்ந்து பார்த்தார். முன்பு அரைகுறையாய் ஓலைச்சுவடியைப் படித்துச் சொன்ன நபர் இவ்வளவு தெளிவாய் அந்த சம்பவத்தைச் சொல்லவில்லை என்பதை அந்த மனிதன் நினைவு கூர்ந்தான். சிவலிங்கத்தின் தன்மை குறித்து சித்தர்கள் விளக்கினார்கள் என்பதைச் சொன்ன அவர் அதை விளக்காமல் விட்டதையும் அவன் கவனித்தான். முன்பு படித்த மனிதர் அந்தப் பகுதி சுத்தமாய் விளங்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டு இருந்தார்.

அந்த சிவலிங்கம் தன்மையை அந்த சித்தர்கள் எப்படி விளக்கினாங்கன்னு நீங்க சொல்லலியே

அதை அப்படியே மொழி பெயர்த்திருக்கிறேன். நீங்களே அதைப் படிச்சுக்கலாம். எனக்கும் வார்த்தைகள் தெளிவாய் கிடைச்சாலும் பொருள் தெளிவாய் விளங்கலை

யாருக்கு விளங்கா விட்டாலும் குருஜிக்குப் பொருள் தெளிவாய் விளங்கும் என்று நினைத்த அந்த மனிதன் ஓலைச்சுவடியையும், அந்தக் காகிதங்களையும் தன் சூட்கேஸில் பத்திரப்படுத்தி விட்டுக் கேட்டான். “அந்தப் போர், ராஜாதி ராஜ சோழன் இறந்தது எல்லாம் நிஜம் தானா

அதெல்லாம் உண்மை தான். அந்தப் போர் 1054 ஆம் ஆண்டு நடந்தது. யானை மேல் இறந்ததும் உண்மை தான். “யானை மேல் துஞ்சிய தேவர்என்ற பெயரை முதலாம் ராஜாதி ராஜ சோழனுக்கு வாங்கிக் கொடுத்தது. அவனுக்குப் பின் அவன் மகன்கள் யாரும் ஆட்சிக்கு வரவில்லை. தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் தான் ஆட்சிக்கு வந்தான். அதுவும் உண்மை தான்...தமிழாராய்ச்சி வல்லுனர் சொன்னார்.

சிறிது நேரம் மௌனமாய் இருந்து விட்டு அந்த மனிதன் கேட்டான். இந்த ஓலைச்சுவடி நிஜமாகவே 950 வருஷங்களுக்கு முந்தினதாக தான் இருக்குமா? பிற்காலத்துல எழுதப்பட்டதாக இருக்காதா?

அவர் சொன்னார். “நான் அந்த ஓலையின் காலத்தையும் ஆராய்ச்சி செய்து விட்டேன். இது அந்தக் காலத்தோடது தான்.

“இது மாதிரி ஓலைச்சுவடியைப் பார்த்ததில்லைன்னு சொன்னீங்களே ஏன்?

“இது மாதிரியான ஒரு தனி சம்பவத்தை இத்தனை விரிவாக அந்தக் காலத்தில் ஒரு ஓலைச்சுவடியில் யாரும் எழுதி வைத்து நான் பார்த்ததில்லை. இந்த சம்பவம் குறித்து அரைகுறையாகக் கூட வேறெங்கும் நான் கேள்விப்பட்டதில்லை....

சொல்லி விட்டு எதையோ அந்த தமிழ் வல்லுனர் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல அவனுக்குப் பட்டது. அந்த நேரத்தில் அவர் முகத்தில் லேசாக ஒரு இனம் புரியாத பயத்தையும் அவன் கவனித்தான்.

(தொடரும்)

-என்.கணேசன்

Monday, November 26, 2012

அம்மா உனக்கு நமஸ்காரம்!


திசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன்  துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார். “அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)  

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹிஎன்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப்  பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

ம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!

நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம்  நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன்.

எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே.

அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே.

தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? அம்மா உனக்கு நமஸ்காரம்.

-          என்.கணேசன்

  

Thursday, November 22, 2012

பரம(ன்) ரகசியம் - 19



ன்னை சுதாரித்துக் கொள்ள ஈஸ்வருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. இப்படி சிவலிங்கம் தெரிவது இது இரண்டாவது முறை.  இரண்டு முறையும் அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் தான் சிவலிங்கம் காட்சி தருகிறது... முதல் முறை அவன் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருக்கும் போது ஓவியமாகத் தெரிந்த சிவலிங்கம் இந்த முறை அவன் குடும்ப விஷயங்களில் ஆழ்ந்து இருக்கும் போது புகைப்படத்தில் தெரிந்து மறைகிறது... அறிவு பூர்வமாக அவனுக்குத் தகுந்த காரணம் எதுவும் புலப்படவில்லை....

அவன் இந்தியா வர முக்கியக் காரணம் சிவலிங்கம் முதல் முறை தெரிந்த விதம் தான் என்றாலும் கிளம்பிய பிறகு அவன் மனதில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது தாத்தா பரமேஸ்வரனே! அவன் அப்பா கடைசி வரை வெறுக்காத பரமேஸ்வரன்... அவன் அப்பாவைக் கடைசி வரை மன்னிக்காத பரமேஸ்வரன்... வந்து சேர்ந்த பிறகும் அத்தை, கொள்ளுப்பாட்டி, தாத்தா, அப்பா வாழ்ந்த வீடு என்று மனம் போனதே தவிர சிவலிங்கத்தைக் கிட்டத்தட்ட மறந்தே போனான் என்றே சொல்ல வேண்டும். சிவலிங்கம் நினைவுபடுத்துகிறதோ?....

மீனாட்சி மகனையும், கணவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். ஈஸ்வர், இது தான் மகேஷ்... இது தான் மாமா

ஹாய் ஈஸ்வர்என்று சொல்லி கஷ்டப்பட்டு புன்னகைத்து மகேஷ் கைகுலுக்கினான். விஸ்வநாதனும் எப்படிப்பா இருக்கேஎன்று பொய்யான மலர்ச்சியை முகத்தில் காட்டி கைகுலுக்கினார். உதட்டு வரையே வந்த புன்னகையை ஈஸ்வர் கவனிக்கத் தவறவில்லை. மனிதர்களை ஆழமாகப் பார்க்க முடிந்த அவனுக்கு எடை போட சிரமம் தரும் அளவுக்கு அவர்களிடம் நடிப்புத் திறமை தெரியவில்லை. அவர்களையும் அவனையும் மாறி மாறிப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்த போது அவனுக்குப் பாவமாக இருந்தது. அவர்களைப் புரிந்து கொண்டதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனும் அவர்களிடம் சுமுகமாகவே பேசினான். பேச்சு அமெரிக்காவைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும், அவனுடைய பயணத்தைப் பற்றியுமாக இருந்தது. ஆனந்தவல்லியுடன் ஏடாகூடமாகப் பேசி, பரமேஸ்வரனைப் பனிப்பார்வை பார்த்த ஈஸ்வர், மகேஷுடனும், விஸ்வநாதனுடனும் சுமுகமாகப் பழகியது மீனாட்சிக்கு பெரும் திருப்தியைத் தந்தது. 

அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்க்கையில் ஈஸ்வர் நினைத்தான். “இந்த சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம்

உண்மையில் அவனுக்கு பரமேஸ்வரன் மீதிருந்த கோபம் அவர்கள் மீது இருக்கவில்லை. விஸ்வநாதன் சங்கருடன் கல்லூரியில் படித்தவர் என்றாலும், மீனாட்சியைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் அவர் சங்கருடன் பேசியதை விரல் விட்டு எண்ணி விடலாம்... ஓருசில முறை ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். மகேஷோ அதையும் விடக் குறைவு. நல்ல முறையில் அன்புடன் பேசி இந்தப் பந்தத்தை வலுப்படுத்தி விட அவர்கள் விரும்பவில்லை என்பது இங்கு வருவதற்கு முன்பே ஈஸ்வருக்குப் புரிந்திருந்தது. காரணம் சொத்து என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. பரமேஸ்வரனின் சொத்தின் மீது துளியளவும் ஆசை இல்லாத ஈஸ்வருக்கு அதில் எந்த வருத்தமும் இருக்கவில்லை....

உடை மாற்றக் கூட விடாமல் ஆரம்பத்திலேயே அவனைப் பிடித்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு மகேஷும் விஸ்வநாதனும் நகர காபி கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு மீனாட்சியும் நகர்ந்தாள்.

ஈஸ்வரின் செல் போன் இசைத்தது. யார் என்று பார்த்தான். அம்மா!
“ஹலோ சொல்லும்மா

“சௌக்கியமா போய் சேர்ந்தியாடா?

“சேர்ந்துட்டேன். அத்தை ஏர்போர்ட் வந்திருந்தாங்க... உங்களை விசாரிச்சாங்க

“நேத்து போன் செஞ்சு பேசினாங்க. உனக்கு என்னெல்லாம் சாப்பிடப் பிடிக்கும்னு கேட்டுகிட்டாங்க... அப்புறம் மத்தவங்களை எல்லாம் பார்த்தியா. பேசினியா

பார்த்தேன். வந்து ஒரு மணி நேரம் தான் ஆயிருக்கு. நல்லா இன்னும் பேச நேரம் கிடைக்கலை....

ஈஸ்வர்...

அம்மா குரலை வைத்தே ஈஸ்வர் இனி அறிவுரை ஆரம்பமாகிறது என்பதைப் புரிந்து கொண்டான். “சொல்லும்மா...

யார் மனசும் புண்படற மாதிரி நடந்துக்காதடா. அப்பாவ மனசுல வச்சு அவங்க மேல உனக்கு கோபம் இருக்கலாம். உங்கப்பாவே அவங்க மேல கோபமா இருக்கலைன்னு மட்டும் மறந்துடாதே.....

நீ எனக்கு அட்வைஸ் பண்ணின மாதிரி இங்க இருக்கற கிழவி தன் மகனுக்கு அட்வைஸ் செஞ்சிருந்தா அந்த ஆள் திருந்தி இருக்கலாம்னு தோணுதும்மா....

கனகதுர்கா பெருமூச்சு விட்டாள்.

ஆனால் கொள்ளுப் பேரனின் அவச்சொல்லுக்கு ஆளான ஆனந்தவல்லி அதிசயமாக தன் மகனுக்கு அப்போது புத்தி சொல்லிக் கொண்டு தானிருந்தாள். காரணம் பேரன் சென்ற பிறகு பரமேஸ்வரன் கனத்த மௌனத்துடன் இருந்தது தான். ஏதேதோ பேசிப் பார்த்த ஆனந்தவல்லி மகனிடம் இருந்து ஒற்றைச் சொல் பதில்கள், தலையசைப்புகளில் சலித்து விட்டாள்.

தன் மகனைப் பற்றி அவனுடைய காதல் திருமணத்திற்குப் பின் என்றுமே யாரிடமுமே பரமேஸ்வரன் பேசியதில்லை. மற்றவர்கள் பேசினாலும்  அவர் அதற்குப் பதில் சொன்னதோ பேச்சை வளர்த்ததோ இல்லை. அது என்றுமே அவருடைய தனிப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. அதில் தாயைக் கூட அவர் சேர்த்தது இல்லை. இன்று பேரனின் வார்த்தைகளிலும் தோரணையிலும் நிறையவே பாதிக்கப்பட்டாலும் பரமேஸ்வரன் அதைப் பற்றியும் தாயிடம் பேச விரும்பவில்லை.  ஆனால் தன் பிரியமான மகன் முகத்தில் தெரிந்த வலி  ஆனந்தவல்லிக்கு சங்கடமாக இருந்தது. இது நாள் வரை மகன் தனிப்பட்டதாய் நினைத்த விஷயங்களில் தலையிடாதவள், அதே போல் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களிலும் அவரைத் தலையிட அனுமதிக்காதவள் மெல்ல மென்மையான குரலில் சொன்னாள்.

எனக்கு நீ இப்படி உட்கார்றது எனக்கு கஷ்டமாய் இருக்கு பரமேஸ்வரா.

ஆனந்தவல்லி மென்மையான குரலில் பேசுவது மிக அபூர்வம். பரமேஸ்வரன் தாயை ஆச்சரியத்தோடு பார்த்தார். ஈஸ்வர் அவர் மனதைக் கனக்க வைத்திருக்கிறான் என்றால் அவர் தாயின் மனதை லேசாக்கி இருக்கிறான் போல் தெரிந்தது. அவன் அவளுடைய கணவரின் தோற்றத்தில் இருக்கிறான் என்பதாலா?

ஆனந்தவல்லி அதே குரலில் தொடர்ந்தாள். “அவரை விதைச்சு துவரை முளைக்காது பரமேஸ்வரா. நம்ம குணம் தானே நம்ம குழந்தைகளுக்கும், பரம்பரைக்கும் வரும். உங்கண்ணன் பரம சாதுவா தெரிஞ்சா கூட அந்த சிவலிங்கத்தோட அவன் போகிறதை என்னால் தடுக்க முடியலை. என்னோட பிடிவாதத்தில் நாலு மடங்கா அவனோட பிடிவாதம் இருந்துச்சு. உன் பையனும் அப்படித்தான். ரொம்ப நல்லவன். பாசமானவன். ஆனா  அந்தப் பொண்ணை அவன் கல்யாணம் செஞ்சுக்கறதை உன்னால தடுக்க முடியல. அந்த ஒரு விஷயத்துல அவனும் உறுதியாவே இருந்துட்டான். நாம நிறைய விஷயங்கள்ல பிடிவாதமா இருக்கோம். அவங்க ஒண்ணு ரெண்டுல அப்படி இருந்துடறாங்க. அவங்க மேல நாம கோவிச்சுக்கறதுல அர்த்தம் இல்லைன்னு நான் இப்ப உணர்றேன். முதல்லயே உணர்ந்திருந்தா உங்கண்ணனை அப்பப்ப போய் பார்த்திருப்பேன்... கடைசி தடவை அவனை அத்தனை திட்டி இருக்க மாட்டேன்.... அவன் கடைசி தடவை கூப்பிட்டு அனுப்பி இருக்காட்டி இப்ப எனக்கு நினைச்சுப் பார்க்க அந்த நல்ல நினைவு கூட இருந்திருக்காதுன்னு நினைக்கறப்ப வயிறு என்னவோ பண்ணுது....சொல்லும் போது அவள் குரல் தழுதழுத்தது.

அண்ணனின் நினைவும், தாயின் நெகிழ்ச்சியும் அவர் மனதையும் லேசாக்கியது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லாமல் தாயையே பார்த்தார்.

ஆனந்தவல்லி தொடர்ந்தாள். “உன் பேரன் உன் மகள் சொன்ன மாதிரி கிட்டத்தட்ட நம்மள மாதிரியே கோபக்காரனா இருக்கான். என்ன பண்றது? இந்தக் கோபம் எல்லாம் எங்கே இருந்து வந்ததுன்னு கேட்டா நாம நம்மளையே தான் காரணம் சொல்லிக்க வேண்டியதாகுது...

அம்மாவின் இந்த ஞானோதயத்திற்கு மிக முக்கிய காரணம் அவன் தோற்றம் தான் என்பதில் பரமேஸ்வரனுக்கு சந்தேகமில்லை. அவன் அவளிடம் கூட ஏடாகூடமாய் பேசியதை அவர் தனதறைக் கதவருகே நின்று கேட்டிருந்தார். அவன் பேசியதை வேறு யாராவது பேசியிருந்தால் ஆனந்தவல்லி அங்கிருந்து கண நேரத்தில் காத தூரத்திற்குத் துரத்தி இருப்பாள். அவள் கோபத்திற்கு முன் அவள் கணவரோ, அவரோ, பசுபதியோ கூட நின்று தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை. தேவைப்படும் போது அவள் நாக்கும் பார்வையும் படுகூர்மையாகி விடும். அந்த விஷயத்தில் ஈஸ்வர் அவளுடைய சரிநிகர் கொள்ளுப் பேரன் தான்...

மகன் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்த ஆனந்தவல்லி ஏமாந்து போனாள். இத்தனை அழுத்தம் ஆகாது என்று மகன் மீது மனதிற்குள் கோபித்துக் கொண்டாள். இவனுக்கே இத்தனை அழுத்தம் இருக்கையில் இவன் பேரனுக்கு அத்தனை அழுத்தம் வந்திருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?....

குருஜிக்கு அந்த போன் கால் வந்த போது அவர் மறுநாள் சொற்பொழிவுக்கு விவேகானந்தரின் சிகாகோ பேச்சிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். “ஹலோ
“குருஜி நான் ஹரிபாபு பேசறேன். நீங்க சில பூக்களை ஆராய்ச்சிக்கு என் கிட்ட அனுப்பி இருந்தீங்களே...”

சொல்லுங்க ஹரிபாபு

“அந்தப் பூக்கள் எல்லாம் இமயமலைப் பகுதியில் இருக்கிற காட்டுப்பூக்கள் குருஜி. அதுலயும் திபெத் பகுதியில் தான் அதிகம் பார்க்க முடியற பூக்கள்..

அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடையாதது அவருக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அடுத்த கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகக் கேட்டார்.

ஹரிபாபு... அந்தப் பூக்கள் இந்தப்பக்கத்துல எங்கேயாவது கிடைக்குமா?

ஹரிபாபு நல்ல ஜோக் கேட்டது போல வாய் விட்டுச் சிரித்தார். அந்தக் காட்டுப் பூக்களை இங்கே யார் கொண்டு வருவாங்க குருஜி? கொண்டு வந்தாலும் யார் வாங்குவாங்க? இங்கத்து க்ளைமேட்ல நட்டாலும் அந்தப் பூக்கள் எல்லாம் இங்கே வளராது குருஜி. திபெத் பக்கத்துல இருந்து யாராவது இங்கே வந்தாங்களா குருஜி?

குருஜி வார்த்தைகளை அளந்து கவனமாகச் சொன்னார். “யாரோ எங்கேயோ வச்சுட்டு போன பூக்கள் என் கவனத்துக்கு வந்தது. நான் பார்த்த மாதிரி இல்லாத பூக்களானதால ஒரு ஆர்வத்துல உங்க கிட்ட அனுப்பி தகவல் கேட்டேன். அவ்வளவு தான். நன்றி ஹரிபாபு....


போனை வைத்த குருஜி நிறைய யோசித்தார். 

(தொடரும்)
-என்.கணேசன்

  

Thursday, November 15, 2012

பரம(ன்) ரகசியம் – 18



கார் வந்து நின்ற சத்தம் கேட்டு மூன்று பேர் தங்கள் தங்கள் அறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள். அவர்கள் பரமேஸ்வரன், விஸ்வநாதன் மற்றும் மகேஷ். மூவருக்கும் நேரடியாக ஈஸ்வரை முதலில் சென்று சந்திக்கத் தயக்கம் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அவன் நேரில் பார்க்க எப்படி இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ளும் பரபரப்பும் அவர்களிடம் இருந்தது.

காரிலிருந்து இறங்கிய ஈஸ்வரைப் பார்த்த பரமேஸ்வரன் திகைத்தே தான் போனார். என்ன தான் முன்பு போட்டோக்களில் பார்த்து அவருடைய தந்தையைப் போலவே இருக்கிறான் என்று தெரிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் உருவம் மேலும் நுணுக்கமாக அதை அறிவித்ததை அவர் உணர்ந்தார். காரிலிருந்து இறங்கிய மீனாட்சி சொன்னாள். “இது தான் நம்ம வீடு...

ஈஸ்வர் அந்த வீட்டைப் பார்த்தான். அரண்மனை போன்ற வீடு என்று அவனுடைய தந்தை வர்ணித்தது அதிகப்படி இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய தந்தை பிறந்து வளர்ந்த வீடு என்று எண்ணிய போது மனம் லேசானது. மீனாட்சியைப் பார்த்து அவன் புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரனுக்கு மகன் நினைவுக்கு வந்தது. அண்ணனும் தங்கையும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார்கள்...

விஸ்வநாதன் ஈஸ்வரை மிக உன்னிப்பாகப் பார்த்தார். இவன் கண்டிப்பாக அவருடைய மகனுக்கு இந்த வீட்டில் பெரிய போட்டியை ஏற்படுத்துவான் என்பது முதல் பார்வையிலேயே அவருக்குப் புரிந்தது. அதிருப்தி அவரை ஆட்கொண்டது.

மகேஷ் ஈஸ்வரைப் பொறாமையுடன் பார்த்தான். பிரயாணக் களைப்பில் கூட அவன் அழகாய் தெரிந்ததும், வீட்டின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பது போல பார்வையால் வீட்டை அளந்ததும் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மீனாட்சியுடன் ஈஸ்வர் மிக நெருங்கி விட்டது போலத் தெரிந்ததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மீனாட்சியைப் போலவே பரமேஸ்வரனும் ஈஸ்வருடன் மிக நெருக்கமாகி விட்டால் என்று நினைத்த போது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.

ஆனந்தவல்லி அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே ஹாலில் வந்து அமர்ந்திருந்தாள். அதிகாலையில் எழுந்து குளித்து கொள்ளுப் பேரனை முதலில் பார்த்துப் பேசுவது தானாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவளாக ஹாலில் அமர்ந்திருந்தவள் கார் வந்து நின்ற சத்தம் கேட்டவுடன் ஆவலுடன் வாசலைப் பார்த்தாள். வெளியே இருந்து பேரன் உள்ளே நுழைய ஆன தாமதம் அவளை இருப்பு கொள்ளாமல் தவிக்கச் செய்தது.

மருமகனுடன் உள்ளே நுழைந்த மீனாட்சி ஹாலில் பாட்டியைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டாள். ஆனந்தவல்லி ஹாலிற்கு வருவது மிக அபூர்வம். அதிகமாக அவள் அறையிலேயே இருப்பவள் சில சமயங்களில் பரமேஸ்வரன் அறைக்குச் செல்வதுண்டு. மற்றபடி தன் அறை வாசலில் நின்று கொண்டு மற்றவர்களை நோட்டமிடுவாளே தவிர ஹால் வரை அதிகம் வருவதில்லை.

பேத்தியின் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தைக் கவனிக்கும் மனநிலையில் ஆனந்தவல்லி இருக்கவில்லை. அவளுடைய கணவரின் அச்சில் அழகாக வந்து நின்ற ஈஸ்வரைப் பார்த்த போது அவள் ஒரு கணம் தன் இளமைக் காலத்திற்கே சென்று விட்டாள். அந்த அழகில் மயங்கி கட்டினால் இவனைத் தான் கட்டுவேன், இல்லா விட்டால் எனக்குக் கல்யாணமே வேண்டாம்என்று பிடிவாதம் பிடித்து திருமணம் செய்து கொண்டவள் அவள். ஜமீன்தாரான அவள் தந்தை அந்தஸ்தில் தங்களை விட சற்று குறைந்தவரான சாந்தலிங்கத்திற்கு அரைமனதோடு தான் மகளைக் கட்டிக் கொடுத்தார்....

“இது தான் உன்னோட கொள்ளுப்பாட்டிஎன்று மீனாட்சி ஈஸ்வரிடம் ஆனந்தவல்லியை அறிமுகப்படுத்தினாள்.

மனதில் என்ன தான் அவன் மீது தனிப்பாசம் பிறந்திருந்தாலும் தன் முகத்தில் அதை ஆனந்தவல்லி காட்டவில்லை. அவனைத் தன் வழக்கமான அலட்சியப் பார்வையே பார்த்தாள். ஆனந்தவல்லி பற்றி தந்தையிடம் நிறையவே கேட்டுத் தெரிந்து வைத்திருந்த ஈஸ்வருக்கு அவள் மேல் நல்ல அபிப்பிராயம் எதுவும் பெரிதாக இருக்கவில்லை. சங்கரும் மீனாட்சியும் தாயில்லாப் பிள்ளைகளாக இருந்த போதும் அவர்களை தாயின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்ள அவள் முன்வரவில்லை என்பது மட்டுமல்ல குழந்தைகள் என்றால் இருக்கும் இடம் தெரியாமல் இருக்க வேண்டும். வீட்டில் சத்தமிட்டு ஓடியாடி விளையாடுவதோ, பெரியவர்களைத் தொந்திரவு செய்வதோ கூடாது என்ற கொள்கையில் அவள் என்றும் இருப்பவள் என்று சங்கர் மகனிடம் சொல்லி இருந்தார். அதனால் அவனும் அவளை அலட்சியப் பார்வையே பார்த்தான்.

இதை எதிர்பார்த்திராத மீனாட்சி இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு ஈஸ்வரிடம் சொன்னாள். “உட்கார் ஈஸ்வர்

ஈஸ்வர் ஆனந்தவல்லிக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து சோம்பல் முறித்தான். அவனாக வணக்கம் தெரிவிப்பான், பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்த ஆனந்தவல்லி சிறிது பொறுத்துப் பார்த்தாள். அவன் பார்வையோ ஹாலில் மாட்டியிருந்த பெரிய பெரிய புகைப்படங்களில் தங்கியது. ஆனந்தவல்லி-சாந்தலிங்கம், பரமேஸ்வரன்-அவர் மனைவி விசாலாட்சி, மீனாட்சி-விஸ்வநாதன் ஜோடிப் புகைப்படங்களும், தனித்தனியாக பசுபதி, மகேஷ் புகைப்படங்களும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவன் தந்தையின் படம் அங்கிருக்கவில்லை. அதைக் கவனித்த பின் அவன் முகம் இறுகியது. அவன் பார்வை போன இடமும், அவன் சிந்தனை போன விதமும் புரிந்த போது மீனாட்சியின் மனம் சங்கடப்பட்டது. அவனை ஆனந்தவல்லியும் கவனிக்கவே செய்தாள்.  இவனை சமாளிப்பது கஷ்டம் தான் என்பது புரிய சிறிது யோசித்து விட்டு அனந்தவல்லி திடீரென்று கேட்டாள். ஏண்டா கல்யாணம் ஆயிடுச்சா?

பார்வையை அவள் மீது திருப்பியவன் அலட்சியமாகச் சொன்னான். “இல்லை

“ஏதாவது பொண்ணு பார்த்து வச்சிருக்கியாடா?

இந்தப் பாட்டிக்கு என்ன ஆயிற்று, இந்தக் கேள்விகளை பார்த்த முதல் நிமிடத்திலேயே கேட்கிறாள் என்று மீனாட்சி திகைத்தாலும் அவன் கவனத்தைத் திருப்புவதற்கு இது உதவும் என்று திருப்தி அடைந்தாள். பார்த்தவுடனே முதலில் கேட்கப்படும் இந்தக் கேள்விகள் ஈஸ்வரையும் ஆச்சரியப்படுத்தியது. அவள் குடும்ப கௌரவம், அந்தஸ்து போன்றவற்றில் எல்லாம் ஆழ்ந்த கருத்துக்கள் உடையவள் என்று கேள்விப்பட்டிருந்த ஈஸ்வர் அவளுக்கு அலட்டிக் கொள்ளாமல் பதில் தந்தான்.

இல்லை. இந்தியாவில் தான் ஒரு பெண்ணைப் பார்க்கணும்னு இருக்கேன். ஒரு சேரிப் பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்துகிட்டு இங்கேயே செட்டில் ஆயிடலாம்கிற எண்ணம் இருக்கு. கல்யாணம் செய்துட்டு நாலஞ்சு பெத்துகிட்டு இந்த வீடெல்லாம் இஷ்டத்துக்கு சுத்தி ஜாலியா விளையாட விடணும்னு நினைச்சுகிட்டிருக்கேன்....
மீனாட்சி சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். பாட்டியிடம் இந்த மாதிரி யாரும் பேசியது இல்லை. அவ்வளவு தைரியம் யாருக்கும் வந்ததும் இல்லை....

ஆனந்தவல்லி ஈஸ்வரை முறைத்துப் பார்த்தாள். அவன் அவளையே சலனமே இல்லாமல் பார்த்தான். அவள் பார்வையை நீண்ட நேரம் சந்திக்க முடிந்தவர்கள் யாரும் இருந்தது  இல்லை. ஆனால் விதிவிலக்காய் அவன் வந்திருக்கிறான்.

“நீ திமிர் பிடிச்சவன் தான்....ஆனந்தவல்லி சொன்னாள்.

“அங்கே எப்படி?அவன் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

ஆனந்தவல்லி தன்னையுமறியாமல் புன்னகைத்தாள். ஆரம்பத்திலேயே இடக்கு முடக்காக அவன் பேசினாலும் அவனை அவளுக்குப் பிடித்திருந்தது. கல்யாணம் ஆன புதிதில் அன்னியோன்னியமான ஒரு நேரத்தில் கணவனிடம் அவள் சொல்லி இருக்கிறாள். “நீங்க இந்த அளவு பொறுமையா சாதுவா இருக்கிறது எனக்கு அவ்வளவா புடிக்கலை... இதுக்கு பதிலா கொஞ்சம் திமிர், கோபம் இருந்தால் கூட தேவலை...

அவர் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறார். என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது. அதுக்கு நான் இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வரணும்

இந்தக் கணத்தில் அவளுக்கு அன்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.  ‘அவர் தான் இவனாய் ஜென்மம் எடுத்து வந்திருக்கிறாரோ?என்று தோன்றவே அவள் முகத்தில் இது வரை இல்லாத கனிவு பிறந்தது.

அவளது முகத்தில் கோபம் போய் லேசான புன்னகை அரும்பியதும், அதுவும் போய் கனிவு தோன்றியதும் மனோதத்துவ நிபுணனாகிய ஈஸ்வரையே குழப்பியது. ‘கிழவிக்கு காது சரியாகக் கேட்கவில்லையோ?

மீனாட்சியும் திகைப்புடன் பாட்டியைப் பார்த்தாள். பாட்டியின் இந்த அவதாரம் அவளுக்குப் புதிது. இதே போல் ஒரு அதிசயத்தை அவன் பரமேஸ்வரனிடமும் நிகழ்த்தி விட்டால் எல்லாமே சரியாகி விடும்....

மீனாட்சி ஈஸ்வரிடம் சொன்னாள். “சரி நிதானமாய் பாட்டி கிட்ட பேசு. உங்க தாத்தாவைப் பார்த்துட்டு வரலாம். வா

அவன் மறுபடி ஏடாகூடமாய் ஏதாவது சொன்னாலும் சொல்லலாம் என்று பாட்டிக்கும் பேத்திக்கும் தோன்றினாலும் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவன் தலையசைத்து விட்டு எழுந்து நின்றான். மீனாட்சிக்கு சந்தோஷமாக இருந்தது. எல்லாமே சுமுகமாகப் போலத் தான் தெரிகிறது... ஆனால் மனிதர்களை எடை போடுவதில் அவளை விடக் கெட்டிக்காரியான ஆனந்தவல்லி ஏமாந்து விடவில்லை. நேரடியாக எந்தவித மனவருத்தங்களும் இல்லாத அவளிடமே இப்படி நடந்து கொள்பவன் பரமேஸ்வரனிடம் அவ்வளவு சுலபமாக நல்ல விதமாக நடந்து கொள்வான் என்பதை அவள் நம்பி விடவில்லை.... அவளும் அவனுடன் பரமேஸ்வரன் அறைக்குக் கிளம்ப யத்தனித்தாள். யத்தனிக்கையில் அவளுக்குக் குழந்தைத் தனமான ஒரு ஆசை எழுந்தது. கொள்ளுப் பேரனைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
வேண்டுமென்றே எழ கஷ்டப்படுபவள் போல நடித்தாள். ஈஸ்வர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாலும் கைத்தாங்கலாய்ப் பிடிக்க முன் வரவில்லை.

“ஏண்டா பார்த்துட்டே மரம் மாதிரி நிக்கறே? கொஞ்சம் பிடியேன்என்று ஆனந்தவல்லி அவனிடம் உரிமையோடு அதட்டிக் கேட்டுக் கொண்டாள். வேறு வழியில்லாமல் ஈஸ்வர் அவள் எழ உதவி செய்ய ஆனந்தவல்லி எழுந்தவள் அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்... “..ம்... நடஎன்றாள்.

நிஜமாகவே கிழவிக்கு முடியவில்லை என்று நினைத்த ஈஸ்வருக்கு அவள் மீது சிறிது இரக்கம் பிறந்தது. மீனாட்சி பாட்டியைத் திகைப்புடன் பார்த்தபடி தந்தையின் அறை நோக்கி நடந்தாள். மகேஷ் குழந்தையாக இருந்த போது ஓரிரு முறை ஆனந்தவல்லி தொட்டுத் தூக்கி இருக்கலாம்... பின் எந்தக் காலத்திலும் அவனை அருகில் கூட அவள் நெருங்க விட்டதில்லை.... அவளுக்குத் தெரிந்து ஆனந்தவல்லி தன் மகன் பரமேஸ்வரன் ஒருவரிடம் மட்டும் தான் சிறிதாவது நெருக்கமாக இருப்பாள். மற்றவர்கள் எல்லாரும் அவளிடமிருந்து சில அடிகள் தள்ளியே தான் இருக்க வேண்டும். அவளுக்கு உதவுவதற்காகக் கூட அவளை ஆண்கள் யாரும் நெருங்குவதை அவள் தள்ளாத இந்த வயதிலும் சகித்ததில்லை.  இப்போதோ எல்லாம் தலை கீழாக நடக்கிறது....

பரமேஸ்வரன் தனதறையில் நாளிதழ் ஒன்றைப் படிப்பதாய் பாவனை செய்து கொண்டிருந்தார். முதலில் நுழைந்த மீனாட்சி மகிழ்ச்சி, பதட்டம் இரண்டும் கலந்த குரலில் அறிவித்தாள். “அப்பா ஈஸ்வர் வந்தாச்சு

ஆனந்தவல்லியுடன் வந்து நின்ற ஈஸ்வரைப் பார்த்த பரமேஸ்வரன் பேச்சிழந்து போனார். அவருடைய பெற்றோர் ஒரு சேர வந்தது போல் இருந்தது. இளமைக் கால தந்தை-இன்றைய தோற்றத்தில் தாய் சேர்ந்து வந்து நின்றது போல அவருக்குத் தோன்றியது. ஆனால் அவருடைய தந்தையின் தோற்றத்தில் இருந்த பேரன் பார்வையோ பாசப் பார்வையாக இல்லாமல் பனிப்பார்வையாக இருந்தது. அப்பாவின் ஸ்பெஷல்அப்பாவை அவன் அன்னியனாக நின்று ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.

ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்திருந்த போதும் பேரன் வெறுப்பைக் கடந்து வந்து விடவில்லை என்பதை அந்தப் பார்வையிலேயே படிக்க முடிந்த பரமேஸ்வரன் ஒரு பெரிய அழுத்தத்தை தன் இதயத்தில் உணர்ந்தார்.

ஆனந்தவல்லியிடம் கூடத் தானாகப் பேச்சை ஆரம்பிக்காத ஈஸ்வர் இங்கு பேச்சை ஆரம்பித்து விடப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட மீனாட்சி இருவருக்கும் இடையே பாலமாக இருக்க முயற்சித்து ஈஸ்வரிடம் சொன்னாள். “அப்பாவுக்கு உன்னைப் பார்த்தவுடனே அவங்கப்பா ஞாபகம் வந்திருச்சு போல இருக்கு

“நான் எங்கப்பா ஞாபகம் வரும்னு நினைச்சேன்....அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஈஸ்வர் கண்ணிமைக்காமல் சொன்னான்.

என்ன நாக்கு இந்தப் பையனுக்குஎன்று ஆனந்தவல்லி மனதினுள் வியக்க மீனாட்சி தந்தையைத் தர்மசங்கடத்துடன் பார்த்தாள். பரமேஸ்வரன் மிகுந்த சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவன் எதுவும் பேசவே இல்லை, தான் அதைக் கேட்கவே இல்லை என்பது போல் பேரனிடம் கேட்டார். பிரயாணம் எப்படி இருந்துச்சு?

உங்கம்மா எப்படி இருக்கா?ன்னு அவர் கேட்டிருந்தால் ஈஸ்வரின் இறுக்கம் குறைந்திருக்கும். சம்பிரதாயமாக அவர் பேச வேண்டுமே என்று கேட்ட கேள்விக்கு ஈஸ்வரும் சம்பிரதாயமாகவே பதில் சொன்னான். “சௌகரியமா இருந்துச்சு

அதற்குப் பிறகு பேச்சைத் தொடரும் மனநிலையில் இருவருமே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மீனாட்சி அவசரமாகச் சொன்னாள். “சரி சரி தாத்தாவும் பேரனும் அப்புறமா பேசிக்குங்க. நீ வா ஈஸ்வர் உன் ரூமைக் காமிக்கறேன்...

ஆனந்தவல்லி கொள்ளுப் பேரனைப் பிடித்திருந்த பிடியை விட்டாள். ஈஸ்வர் இருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அத்தையைத் தொடர்ந்தான்.

மீனாட்சி பரபரப்போடு அறையைக் காண்பித்தாள். “இது தான் உங்கப்பா ரூம்”.  அறையில் நூற்றுக் கணக்கில் பதக்கங்கள், கோப்பைகள், பல விதங்களில் அலமாரிகளில் வைக்கப் பட்டிருந்தன. இதெல்லாம் உங்கப்பா வாங்கினது...மீனாட்சி பெருமிதத்துடன் சொன்னாள். அப்பா அத்தனை பதக்கங்களும், கோப்பைகளும் வாங்கியது அவனுக்கு ஆச்சரியமில்லை. ஆனால் இத்தனை வருடங்கள் கழிந்த பின்னும் அதைப் பாதுகாத்து அவள் வைத்திருப்பது தான் அவனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அறையில் அவன் அப்பாவின் இளமைக் காலப் பெரிய போட்டோ ஒன்று சந்தனமாலையுடன் இருந்தது. அப்பாவுக்கு இந்த வீட்டில் இன்னும் இடம் இருக்கிறது. நினைவு வைத்துக் கொண்டாடும் ஒரு தங்கை இன்னும் இருக்கிறாள்... அவன் கண்கள் ஈரமாயின.

“ஒரே நிமிஷம் இரு.. நான் மகேஷை எழுப்பிட்டு கூட்டிகிட்டு வர்றேன்...என்று மீனாட்சி அவசரமாகச் சென்றாள். மருமகன் வந்த பிறகு கூட வரவேற்க மகனும், கணவரும் வராதது அவளுக்கு அநாகரிகமாகப் பட்டது. அவள் போன பிறகு அறையை சுற்றிப் பார்த்தான். இது அப்பா வாழ்ந்த அறை என்ற நினைவு அவன் மனதை லேசாக்கியது... அப்போது தான் அந்த அறையில் இருந்த இன்னொரு பெரிய போட்டோவைப் பார்த்தான். சங்கரின் கல்லூரி நாட்களில் எடுக்கப்பட்ட போட்டோ போலத் தோன்றியது. பரமேஸ்வரன் சங்கரையும், மீனாட்சியையும் இறுக்கி அணைத்தபடி நின்றிருந்தார். அவர் கண்களில் எல்லையில்லாத பெருமிதம்... மற்றவர் இருவர் கண்களிலும் எல்லையில்லாத சந்தோஷம்.... சாசுவத அடையாளமாகிப் போன ஒரு சந்தோஷத் தருணம்... நிறைய நேரம் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருந்து விட்டு அவன் மாலையுடன் இருந்த அப்பாவின் படத்தின் அருகே வந்தான். மிக நெருக்கமாக வந்து தந்தையிடம் சொன்னான். “நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்ப்பா... உங்க “ஸ்பெஷல் அப்பா”,  திமிரான பாட்டி, பாசமான தங்கை எல்லாரையும் பார்த்தேன்....

அவன் அப்பா சந்தோஷப்பட்டது போல இருந்தது. அவர் புன்னகையையே பார்த்துக் கொண்டு நின்றான் ஈஸ்வர். திடீரென்று அந்தப் போட்டோவில் அவன் அப்பா மறைந்து போனார். அந்தரத்தில் நின்றிருந்த ஒரு சிவலிங்கம் தத்ரூபமாகத் தெரிந்தது. திடுக்கிட்டுப் போன ஈஸ்வர் இரண்டடி பின் வாங்கினான். ஓரிரு வினாடிகள் கழித்து பழையபடி போட்டோவில் அப்பாவே தெரிய ஈஸ்வருக்கு வியர்த்தது....

(தொடரும்)
-          என்.கணேசன்

Monday, November 12, 2012

அட ஆமாயில்ல! – 7




ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பெருந்துயருக்குக் காரணமாய் இருக்கின்றது. 
                     -              காபெட்


கடமையும் இந்த நாளுமே நம்முடையவை. பயன்களும், எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
-          ஹாஸ்லிட்

ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும்.
-          டிரைடன்

ஒருவர் புன்னகை புரியும் விதத்தில் இருந்தே அவர் குணத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம். சிலர் புன்னகைப்பதே இல்லை. ஆனால் இளிக்க மட்டும் செய்வார்கள்.
-          போவீ

பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்போதும் உணர்ந்து இருப்பான்.
-          பிளினி

மருந்துக்களில் முதன்மையானவை ஓய்வும் உபவாசமும்.
-          ஃபிராங்க்ளின்

ஒன்றுக்கும் பிரயோசனமில்லை என்று தள்ளி விடும் படியானவராக உள்ள எவரையும் இது வரையில் நான் பார்த்ததில்லை. சரியான சமயம் வாய்த்தால் ஏதாவதொரு வகையில் எவரும் பயன்படக் கூடும்.
-          ஹென்றி ஃபோர்டு

வெறும் பேச்சும், பெரும் பேச்சும் பேசி செயல்படாமல் சோம்பிக் கிடப்பவர்கள் வழிகாட்டும் தலைவர்கள் என்ற மதிப்பினைப் பெறுகின்றனர் என்றால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற வழியில் நடப்பவர்கள் எத்தகைய லட்சியவாதிகளாகத் திகழ்வர் என்பதைக் கூறவும் வேண்டுமா?
-          மான்செஸ்டர் கார்டியன்

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல், தடுமாற்றம், கூட்டமாக வீண் அரட்டையடித்தல், முரட்டுப் பிடிவாதம், போலித் தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழு கெட்ட தன்மைகளும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்.
-          விதுர நீதி

ஒரு ஏழையான முட்டாளுக்கு நிறைய பணம் கிடைத்தால் அவன் பணக்கார முட்டாளாகத் தான் மாற முடியும்.
-          ஆபிரகாம் மில்லர்

தொகுப்பு : என்.கணேசன்

அனைவருக்கும் என் உளம்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

-என்.கணேசன்