Tuesday, September 27, 2011

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …


முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சிகள் அடித்துச் சொல்கின்றன.

முதலில் தனிப்பட்ட ஆராய்ச்சிகளையும், அதன் முடிவுகளையும் பார்ப்போம்.

பெர்க்ளியைச் சேர்ந்த மரியன் டயமண்ட் (Marian Diamond) என்ற 78 வயதான உயிரியல் பேராசிரியர் முதுமையிலும் மூளைத்திறன் சிறப்பாக செயல்பட ஐந்து முக்கியத் தேவைகளைச் சொல்கிறார். 1) சரியான உணவு 2) உடற்பயிற்சி 3) சவால்களை எதிர்கொள்தல் 4) புதுமைகளில் ஆர்வம் 5) அன்பு. இது அவரது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல. அவரே அதற்கான வாழும் உதாரணம். 78 வயதான பின்னும் பாடம் நடத்தும் அவரிடம் “நீங்கள் ஏன் ஓய்வு பெறவில்லை என்று கேட்ட போது “நான் ஏன் ஓய்வு பெற வேண்டும்?என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அவர். சென்ற வருடம் அவர் நடத்தும் மனித உடலியல் வகுப்பிற்கு 736 மாணவர்கள் படிக்க பதிவு செய்திருந்தார்கள்.

அமெரிக்க நரம்பியல் அகேடமி(American Academy of Neurology)யின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றன.

ஃப்ராங்க் லாலிஸ் (Frank Lawlis) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மனவியல் வல்லுனர் நன்றாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் உணவு உட்கொள்வதிலும் கவனமாக இருந்தால் மூளைத் திறன் குறையாமல் இருப்பார்கள் என்று தனது ஆராய்ச்சி ஒன்றின் முடிவாகச் சொல்லி இருக்கிறார்.

ஜார்ஜ் ரோச்செல்லெ (George Rozelle) என்ற அமெரிக்க நரம்பியல் சிகிச்சையாளர் (neurotherapist) நல்ல உறக்கம், சுறுசுறுப்பான தன்மை ஆகிய இரண்டும் இருக்கும் முதியவர்களின் மூளைத் திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.

கான்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரெண்டா ஹன்னா பேடி (Brenda Hanna-Pladdy) என்ற ஆராய்ச்சியாளர் வாழ்நாள் முழுவதும் இசையில் முழுமூச்சாக ஈடுபடும் மனிதர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார்.

ஆர்னால்டு ஸீபெல் (Arnold Scheibel), என்ற ஒரு மூளை ஆராய்ச்சிக் கழகத்தின் (UCLA’s Brain Research Institute) இயக்குனர் புதியனவற்றைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்களின் மூளை தன் திறனை இழக்காமல் இழக்காமல் பெருமளவு தக்க வைத்துக் கொள்கிறது என்று கூறுகிறார்.

இலினாய் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆர்ட் க்ரேமர் (Art Kramer) என்ற விஞ்ஞானியும், பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கிர்க் எரிக்சன்(Kirk Erickson) என்ற விஞ்ஞானியும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில் மனிதர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மூளையின் ஆற்றலைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். ஓயாத கவலை, மன அழுத்தம், அதிகமாகக் குடித்தல் ஆகியவை மூளையின் செயல்பாட்டுத் திறனைப் பெருமளவு குறைத்து விடுவதாகக் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சிகளும், இது போன்ற வேறு பல ஆராய்ச்சிகளும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாகத் தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைத் தொகுத்து சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உணவுப் பழக்கங்கள்:

உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.

2) உடற்பயிற்சி:

தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

3) புதிய முயற்சிகள்:

எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4) ஓய்வு:

சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

5) மூளைக்கு வேலை:

மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

6) படித்தல்:

புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.

7) நல்ல பழக்க வழக்கங்கள்:

புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.

8) மற்றவை:

அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.

மேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக!

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Thursday, September 22, 2011

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 8

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!

அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.

ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையை அவனுக்குத் தந்தார். வரைய சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை அவனுக்கு ஒதுக்கித் தந்தார் அந்த பாதிரியார். அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொந்திரவு மிக அதிகமாக இருந்தது. வரைய அந்த இடம் சாதகமாக இல்லை. அங்கு ஒரு சுண்டெலியின் அட்டகாசமோ அதிகமாக இருந்தது. அந்த மோசமான சூழ்நிலையிலும் அந்த சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியை ஒரு இறவாத கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான். அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துத் தந்தது அந்த மிக்கி மவுஸ்.

இன்னொரு உதாரணமாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலை போய், சேர்த்த செல்வமும் பெரிதாக எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக நின்றார் அவர். சிறிய வயதில் இருந்தே அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தை அவருடைய சிறு வயதிலேயே இறந்து விட அம்மா வேலைக்குப் போக வேண்டி வந்தது. எனவே சிறுவனாக இருக்கும் போதே அம்மா வேலைக்குப் போகும் போது மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் தாயிற்கு உதவும் வேலையும் இருந்தது.

அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார். பின் ஒரு சிறிய நகரத்தில் சிறிய ஓட்டல்கடையை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது. அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

அவருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்க அவர் தீர்மானித்தார். நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார். அவருடன் கூட்டு சேர்ந்து "Kentucky Fried Chicken" என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ். 1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல். 1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகத்தின் பிரபலஸ்தர்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.

சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.

வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள். ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள். சோதனைக்காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.

வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பாக வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது. கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த ஓட்டல் கடையை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.

உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு

என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.

விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் ஏற்றவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது. தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.

எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.

மேலும் படிப்போம் ....

-என்.கணேசன்

நன்றி: வல்லமை

Monday, September 19, 2011

உபதேசம் தவிர்ப்போம்....உதாரணமாக இருப்போம்!


கீதை காட்டும் பாதை 12

உபதேசம் தவிர்ப்போம்....உதாரணமாக இருப்போம்!

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

பாரதா பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல் பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.

கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது. அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.

ஞானி கூட அவனது இயல்பின் படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும் அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில் நிர்ப்பந்தப் படுத்துவதால் என்ன பயன்?

இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன் உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும், தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

எல்லோரும் அவரவர் இயல்பின் படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி, பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் எத்தனை உயரிய தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை அவரிடம் உபதேசிப்பது வீண் தான். அறிவுக்கெட்டும் போதே அதை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது என்பதை ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம் சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த வழியின் படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் அவன் வாழ்க்கை ஓட்டத்தை, அறிந்தவன் அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்கி விடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன் உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். எனவே கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே விளைவிக்கும்.

அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டு விடுவதா? அறிவுக்கு எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால் அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது? இந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் கூறுகிறார்- நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன் இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி புரிய வை என்கிறார்.

இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிக்கையாளர் இருவர் கண் முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய சிப்பாய்களை ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு குழு முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் கூட திருப்பி அந்த சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வீழ்கிறது. அடுத்த குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே அடிபட்டு வீழ்கிறது. அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!

இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும் எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வீக முறையில் போராடிய விதத்தை நேரில் கண்டிரா விட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.

வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த வீரர்கள் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள் வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும் முற்படாத அத்தனை போராட்ட வீரர்களும் மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில் சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல் அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.

எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது. இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும் பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.

அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம். என்னால் தானே இப்படி முடிந்தது என்கிற எண்ணம் வந்து விட்டால் பின் கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். நான்என்கிற அகங்காரத்தை மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி விடும். எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும் நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக நினைக்கின்றான்.

தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும் அதில் தன் செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே எல்லாம் இயற்கையின் இயக்கமே என்று பற்றில்லாமல் இருப்பான்.

எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன. எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம். எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப் பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் “எல்லாம் அவன் செயல்என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.

அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்: உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் “எனதுஎன்ற உணர்வின்றியும் மன வேதனையை உதறித் தள்ளி போர் செய்

செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். செய்கின்ற ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும் தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப் போன்றவன் ஆகிறான்.

இதே கருத்து குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. “யாராக இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்கையில் தனது நோக்கத்தை அல்லாவிடம் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அவ்விதம் செய்பவன் அல்லாவின் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டவனாகிறான்.” (குரான் 31.22)

எல்லா மதங்களிலும் இது போன்ற கருத்துகளை நாம் காண முடியும். இப்படி பற்றில்லாமலும், கர்வம் இல்லாமலும், இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்கின்ற உயர்ந்த செயல்களாலேயே மனிதகுல மேம்பாடு சாத்தியமாகும்.

பாதை நீளும்....

என்.கணேசன்

நன்றி: விகடன்

Wednesday, September 14, 2011

நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7

நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.

நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.

யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.

இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.

இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.

ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.

இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.

அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.

பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.

எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.

எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் சபாஷ் கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.

மேலும் படிப்போம்.....

-என்.கணேசன்

நன்றி: வல்லமை

Friday, September 9, 2011

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-10

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.

முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.

ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.

அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.

டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.

அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.

மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.

அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.

ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்

அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.

பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.

முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.

ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.

தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.

பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருந்ததுடன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்றும் தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.

ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

(தொடரும்)

- என்.கணேசன்

Monday, September 5, 2011

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 6

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.

விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்பதோ எவருக்கும் தேவையில்லாத விவரங்களாக இருக்கின்றன. ஒரு துறையில் ஒருவர் முத்திரை பதித்த பின் அந்த நபரின் மற்ற பலவீனங்கள் அந்தப் பலத்தையே தகர்த்து விடுவதாக இல்லாத வரையில் அலட்சியப் படுத்தத் தக்கவையாகவே இருந்து விடுகின்றன.

எனவே ஒருவனுக்குப் பல பலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவனை அழித்து விடலாம் என்பது போலவே, பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலம் அவனை சிறப்பாக உயர்த்தியும் விடலாம் என்பதும் உண்மை. ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல ஒரு அரசனுக்கே இது பொருந்தும் உண்மை என்பதை ஒரு வரலாற்று உதாரணம் மூலமாகவே விளக்கலாம்.

சத்ரபதி சிவாஜியின் பேரன் ஷாஹூஜி தன் ஏழாம் வயதிலிருந்து இருபத்தைந்தாம் வயது வரை முகலாயர்களின் பிடியில் இருந்தவர். சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியைக் கொன்ற முகலாயர்கள் அவர் மனைவியையும், மகன் ஷாஹூஜியையும் தங்கள் வசமே சிறைப்படுத்தி வைத்திருந்தனர். கிட்டத்தட்ட தன் விளையாட்டுப் பருவத்தையும், இளமைப்பருவத்தையும் எதிரிகளான முகலாயர்கள் வசத்தில் இருந்து தொலைத்து விட்ட ஷாஹூஜி பின் அவர்களால் விடுவிக்கப்பட்டு மராட்டிய மன்னராக ஆனார். அப்போதும் மராட்டிய மண்ணில் ஒரு பகுதி அவர் சித்தப்பா மனைவி தாராபாய் ஆட்சியில் இருந்தது. ஷாஹூஜியின் தாயையோ முகலாயர்கள் இன்னும் தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர். ஷாஹுஜி தங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அவருடைய தாயை அழித்து விடுவதாக பயமுறுத்தியும் வைத்திருந்தனர்.

இப்படி பல்வேறு சிக்கல்களில் ஆட்சியில் அமர்ந்த ஷாஹுஜி பெரிய போர்வீரர் அல்ல. முகலாயர் பிடியிலேயே இளமையைக் கழிக்க வேண்டி இருந்ததால் ஒரு இளவரசனாக வளராததால் போர்வீரனாக அவர் பயிற்சிகளால் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசருக்குத் தேவையான வீரமோ, போர்த்திறமையோ இல்லாத ஷாஹூஜியிற்கு ஒரே ஒரு திறமை இருந்தது. ஒரு மனிதரை எடை போடுவதில் அவர் வல்லவராக இருந்தார். எதிரிகளிடமே வளர்ந்ததால் எவனை எதில் நம்பலாம், எது வரை நம்பலாம், எதில் நம்பக்கூடாது என்கிறதெல்லாம் கணிக்கக் கூடிய திறமையை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். அந்த ஒரு திறமை அவருடைய மற்றெல்லா பலவீனங்களையும் ஒரு பொருட்டல்லாதவையாக ஆக்கி விட்டது.

நம்பிக்கைக்குப் பாத்திரமான திறமையான மனிதர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்த அவர் சிறிது சிறிதாக தன் அரசைப் பலப்படுத்தினார். மராட்டியத்திலேயே தனக்கு எதிராக ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த தாராபாயை அப்புறப்படுத்தி ஒரே மராட்டிய அரசாக்கித் தானே சக்கரவர்த்தியானார். முகலாயர் பிடியிலிருந்த தாயைத் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டார். திறமைசாலிகளை சமூகத்தின் எல்லா பாகங்களில் இருந்து கண்டறிந்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் முக்கிய இடம் கொடுத்து அதிகாரத்தையும் வழங்கி மாபெரும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். அவர் காலத்தில் தான் மராட்டிய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மிகப்பெரிய விஸ்தீரணத்தைக் கண்டது. அவர் காலத்தில் கல்வி, சட்டம், சமூகநிலை போன்ற எல்லாத் துறைகளும் பெரிய சீர்திருத்தம் கண்டன. திறமையானவர்கள் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றனர். அதே சமயத்தில் அவர்கள் சக்கரவர்த்திக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தனர்.

தன்னை விடப் பெரிய திறமைசாலிகளையும், பலசாலிகளையும் உதவியாக வைத்து அரசாண்டதுமல்லாமல் அவர்கள் தன்னிடம் மாறாத விசுவாசத்துடன் எப்போதும் இருக்கும்படி அவர்களைத் தன் இனிய குணத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் வைத்துக் கொண்டது தான் சத்ரபதி ஷாஹுவின் ஒரே பலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு மிகப்பெரிய பலத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்த முடியும் போது ஒரு வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது தானா கஷ்டம்? யோசியுங்கள்.

உங்கள் குறைகளும், பலவீனங்களும் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லாதவரை நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலவற்றில் நீங்கள் பூஜ்ஜியமாகக் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள பலரும் அவற்றில் பெரிய திறமையாளர்களாகக் கூட இருக்கலாம். யாராவது அதுபற்றிக் கேட்டால் சொல்ல தர்மசங்கடமாக இருக்கக் கூடும் என்றாலும் உங்கள் வாழ்க்கை அந்த ஒன்றிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை என்பதை உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் இயல்பிலேயே இல்லாத திறமை, எவ்வளவு முயன்றாலும் புளியங்கொம்பாக இருக்கின்ற திறமை என்றால் அது உங்களுக்கானதல்ல என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு விடுங்கள். அதற்காக நீண்ட காலம் போராடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.

உங்கள் உண்மையான திறமைகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எது உங்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும் இயல்பாகவும் வருகிறதோ எதைச் செய்யும் போது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்களோ அது உங்கள் உண்மையான பலம். அது ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒன்றை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒன்று உங்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.

விஸ்வநாதன் ஆனந்தை செஸ் அடையாளம் காட்டியது போல, சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் அடையாளம் காட்டியது போல, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் இசை அடையாளம் காட்டியது போல, சுஜாதாவை எழுத்து அடையாளம் காட்டியது போல, ராமானுஜத்தை கணிதம் அடையாளம் காட்டியது போல உங்களையும் ஒரு திறமை உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.

அப்படி உலகத்திற்கு அடையாளம் காட்டா விட்டாலும் கூட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்த ஒரு திறமை உங்களுக்கு வழி காட்டலாம். கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகத் திறமையான ஒரு ஆசிரியர் ப்ளஸ் டூ மாணவ மாணவியருக்கு சில மணி நேர டியூஷன் எடுப்பதன் மூலமாக வெற்றிகரமான ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியரை விட அதிகமாக சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமாகவும், கச்சிதமாகவும் தைக்கத் தெரிந்த ஒரு பெண்மணி பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுத்தே கைநிறைய சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதே போல எத்தனையோ தனித் திறமைகளால் வெற்றிகரமாக வாழும் மனிதர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியாது என்று உலகம் கேட்கப் போவதில்லை. அதைப் பற்றி அது கவலைப்படுவதுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும், எந்த அளவு தெரியும், அதில் கூடுதலான உங்கள் தனித்திறமை என்ன என்று தான் உலகம் பார்க்கிறது. அதை வைத்தே உலகம் உங்களை உபயோகப்படுத்துகிறது. எனவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் என்று எல்லாவற்றையும் ஓரளவு தெரிந்து கொள்வதை விட உங்கள் உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் பலம். அப்படி ஒரு பலம் உங்களுக்கு உறுதியாகக் கிடைத்து விட்டால் உலகிற்கு நீங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவீர்கள். அதற்கான விலையாக உங்களுக்கு வேண்டியதை இந்த உலகம் கண்டிப்பாக கொடுத்தே தீரும்.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

- நன்றி: வல்லமை

Thursday, September 1, 2011

போதிப்பவனே முன்மாதிரியாய்...!


கீதை காட்டும் பாதை 11

போதிப்பவனே முன்மாதிரியாய்...!


செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும், பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

“சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும் செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.

பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே இருக்கிறேன்

நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்

யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித் தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மை. இக்காலத்தில் எத்தனையோ சீரழிவுகளுக்கு நல்ல முன்மாதிரிகள் நமக்கிடையே மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப் பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும் அதன் படி வாழ்ந்து காட்டி மனதில் பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?

அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ, அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லா விட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம் பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை, சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன் தன் விஷயத்திலும் அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.

அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில் போர் புரியும் வீரன் யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில் குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின் வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ணீர் காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.

இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பதை வியாசரின் மகாபாரதம் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப் பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளை எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக் கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே இல்லை.

இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது. சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான் யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத் தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன் இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில் குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்கா விட்டால் தேரில் இருப்பவன் தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல் ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம் சொல்கிறது.

அதே போல தேரில் இருந்து போர் புரியும் வீரன் எந்தப் பக்கம் தேரைத் திருப்ப வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது. யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வீரன் சாரதி தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால் வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல வேண்டும்.

இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும் அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன் கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.

அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஸ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன் வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான விஷயமே.

தன் பக்தனின் சேவையை மெச்சிய விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன். தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர் பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை. என் பெற்றோரின் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறேன் இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலை முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்என்று கூறிய புண்டலீகன் விட்டலனும், ருக்மணியும் அழுக்கு நீரில் கால்கள் படாமல் நிற்க ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.

துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:

“என்ன பைத்தியக்கார அன்பிது

விட்டலனை நிறுத்தி வைத்ததே

என்ன முரட்டுத் துணிவிது

விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே

தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும் பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது. தனக்கும் அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?

இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும் வருகிறது. “என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை பளுவாக இல்லை

பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் சுமை எதிர்பார்ப்பாலும், விளைவின் மீது வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படும் சுமையே. கடமையை பலன் எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக எளிமையாகிறது.

இனி ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

பாதை நீளும்….

- என்.கணேசன்

- நன்றி: விகடன்