Friday, January 28, 2011

செல் போன் நோய்கள் தருமா?


நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள்.

ஏழை, செல்வந்தன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் செல் போன் வைத்திருக்கிறார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.

இந்த நிலையில் செல் போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்னைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.

கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey)
செல் போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல் போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல் போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பல் வேறு நாடுகளில் இப்படி செல் போன் உபயோகப்படுத்தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்காவைச் சேர்ந்த செல் போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார்லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தனர். துவக்கத்தில் அந்த விஞ்ஞானியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினாலும் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் செல் போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர்த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு விஞ்ஞானியே வேறுபட்ட கருத்தை வெளியிட்டது ஒரு ஆணித்தரமான உண்மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் செல் போன் இன்றைய மனிதனின் அத்தியாவசியத் தேவையாகி விட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒதுக்கி விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் நம்மை பயமுறுத்துவதாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே செல் போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் –

1) செல் போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கியமல்லாத விஷயங்களையும் செல் போனில் பேசுவதைத் தவிர்க்கவும். குறைவான செலவு தான் ஆகிறது என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல் போனைப் பயன்படுத்துவதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பாடும்.

2) குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல் போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.

3) செல் போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல் போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல் போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

4) சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசுவது வலிமையாக கதிரியக்கம் வெளிப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.

5) மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல் போன்கள் அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அதனைத் தவிர்ப்பது நல்லது.

6) நம் உடல் செல் போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக் கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய செல் போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல் போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல் போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

7) காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல் போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது போல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல் போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

8) முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.

அளவான, குறைந்த, புத்திசாலித்தனமான பயன்பாட்டால் மட்டுமே நாம் செல் போன் மூலம் நோய்களை நீக்கிய உண்மையான பயனை அடைய முடியும் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர்களுக்கும் அறிவுறுத்துவோமாக!

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Monday, January 24, 2011

வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!


தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வதில்லை. காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள், நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அபிப்பிராயம் பலர் மனதிலும் இருப்பது தான். அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை. வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே அந்த அபிப்பிராயம் உறுதியாகத் தோன்றும் போது அது எதிர்கால ஆபத்திற்கு அஸ்திவாரம் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது. அது மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது.

1) கர்வம்

2) அலட்சியம்

3) எந்த அறிவுரையும் கேளாமை

முதலாவதாக, வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற கர்வத்தை ஏற்படுத்தலாம். கர்வத்தைப் போல வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் ஒரு குணாதிசயம் வேறொன்று இருக்க முடியாது. புராணங்களில் அரக்கர்கள் கடவுளிடம் வரம் பெற்று பெரும் சக்தி பெறுவார்கள். பெரும் சக்தி பெற்ற அவர்களது கர்வம் அவர்களை சும்மா இருக்க விடாது. பலரைத் துன்புறுத்த முனைவார்கள், எங்களை எதிர்க்க யாரிருக்கிறார்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். முடிவு அவர்கள் அழிவு தான் என்பதை நாம் புராணங்களில் படித்து இருக்கிறோம்.


புராணங்களில் மட்டுமல்லாமல் வரலாறிலும் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றவர்கள் பெற்ற ஆரம்ப வெற்றிகள் சாதாரணமானதல்ல. அது அவர்கள் மனதில் தாங்கள் யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்ற கர்வத்தை ஏற்படுத்தியது. கர்வம் ஒரு மனிதனை உள்ளதை உள்ளது போல் பார்க்க விடாது. அறிவுக் கண்ணை அது அழகாக மறைக்க வல்லது. நன்மைகளை செய்ய கர்வம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தான் செய்வதே சரி என்கிற எண்ணம் ஒருவரை எதையும் சீர்தூக்கிப் பார்க்க வைப்பதில்லை. அதன் விளைவு அவர்களை பெரும் வீழ்ச்சி காண வைக்கிறது.

உலக வரைபடத்தில் உகாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டை சிரமத்திற்கு இடையே தான் கண்டு பிடிக்க முடியும். அத்தனை சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த இடி அமீன் சென்ற நூற்றாண்டில் தன்னை கிட்டத்தட்ட கடவுளாகவே நினைத்துக் கொண்டு நடந்து கொண்ட விதத்தை வரலாற்றின் பார்வையாளர்கள் மறந்திருக்க முடியாது.

இன்றைய கால கட்டத்திலும் அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இதற்கு எத்தனையோ சான்றுகளைக் காண முடியும். சில இமாலய வெற்றி பெற்றவர்கள் தங்களை நிரந்தர தலைவர்களாக தாங்களாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது அல்லவா?

இரண்டாவதாக, வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம். இனி எனக்கு தோல்வியே கிடைக்க முடியாது என்று ஒருவன் நினைக்க ஆரம்பிக்கும் போது அவனுடைய முயற்சிகள் தரத்திலும் அளவிலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சிறு வயதில் நாம் படித்த முயல், ஆமைக் கதை இந்த உண்மையை மிக அழகாகச் சொல்வது நினைவிருக்கலாம். முயலை எக்காலத்திலும் ஆமை வெல்ல முடியாது என்று நாம் நினைத்தாலும் முயல் தூங்கி விடுமானால், ஆமை விடாமல் முயற்சி செய்து வருமானால் ஆமை வெற்றி பெறுவது நடக்கக் கூடியதே. பள்ளி, கல்லூரிகளில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்கி பிரகாசித்து நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்ட எத்தனையோ பேரை நான் அறிவேன். அதே போல் படிக்கையில் சாதாரணமான மதிப்பெண்களே பெற்று வந்த எத்தனையோ பேர் தங்கள் திறமைக் குறைவை உணர்ந்து உழைப்பால் அதை ஈடுகட்டி பின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். முன்னவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தோல்விக்குக் காரணம் வெற்றிகளால் அவர்கள் அடைந்திருந்த அலட்சியமே என்ற பதில் தான் கிடைத்தது.

இதை விடப் பெரிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெற்றிருக்கிறேன், இது என் திறமைக்கு முன் எம்மாத்திரம் என்ற எண்ணத்தோடு இறங்கி சிறிய விஷயங்களில் தோற்று மூக்குடைந்த மேதாவிகளை நாம் அனைவரும் பார்த்திருக்க முடியும்.

மூன்றாவதாக, வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு. ஒருவன் எத்தனை தான் புத்திசாலியானாலும் அவன் அறிந்திராதவையும் எத்தனையோ இருக்கக் கூடும். அந்த அறிந்திராத விஷயங்கள் அவனுடைய எதிர்கால வெற்றிக்கு முக்கியமானவையாக இருக்கக் கூடும். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள் அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.

எனவே அவர்கள் தங்களைச் சுற்று துதிபாடிகள் இருப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்பவர்களை அவர்கள் ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள். யாரானாலும் சரி மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறதா என்று கூட சிந்திக்க மறுக்கும் போது, புதியனவற்றை அறிந்து கொள்ளத் தவறும் போது தோற்கவே ஆரம்பிக்கிறார்கள்.

எனவே தோல்வி அடையும் சமயத்தை விட அதிகமாய் வெற்றி அடையும் சமயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் அடக்கமாய் இருங்கள். கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதீர்கள். அப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதும் அப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Wednesday, January 19, 2011

பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு




சில பேர் கவிதைகள் எழுதினால் அதில் ஒரு பொருளை அர்த்தம் செய்து கொள்வதே மிகவும் கஷ்டம். வார்த்தை ஜாலங்கள் இருக்குமே ஒழிய என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பட்டிமன்றமே நடத்த வேண்டி வரும். ஆனால் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த கவி காளமேகம் என்ற புலவர் ஒரே பாடலில் நேர் எதிரான இரு கருத்துகளைக் கூற வல்லவர்.

சோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்?” என்று ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச் சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காளமேகம் காத்தான் சத்திரம் சென்று சேர்ந்த சமயம் அகாலமானதால் அங்கு சமைத்திருந்த உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனாலும் இவருக்காக அவர்கள் சமைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவு தயாரிக்க நேரம் அதிகமானது. பசி தாங்காத காளமேகம் கோபத்தில் “நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் மாலையில் தான் அரிசியே வரும். அதை சுத்தம் செய்து உலையில் போடும் போது நள்ளிரவாகி விடும்.அதை வடித்து ஓர் அகப்பை சோறை இலையில் பரிமாறுவதற்குள் பொழுது விடிந்து விடும்” என்று பொருள்பட பழித்துப் பின் வரும் பாட்டைப் பாடினார்.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும்-குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

பின் அவருக்கு உணவு பரிமாறினார்கள். ருசியான உணவைத் திருப்தியாக அவர் உண்டு முடித்த பின் சத்திரத்து அதிகாரி அவரிடம் வந்து “உணவு சமைக்க குறைந்த பட்ச நேரமாவது ஆகும் அல்லவா? அதற்குப் போய் எங்கள் சத்திரத்தை இப்படிப் பழித்துப் பாடி விட்டீர்களே” என்று கூறி வருந்தினார். கவி காளமேகத்திற்கு மனம் நெகிழ்ந்தது.

ஆனால் சமயோசிதமாக தன் பாடலுக்கு வேறு விதமாக அவர் விளக்கம் அளித்தார். “ஐயா! என் பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் பாடிய பாடலின் பொருள் இது தான். “உலகமெங்கும் பஞ்சம் வந்தாலும் நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் அரிசி வரும். உலை ஏற்றிய உடனேயே ஊராரின் பசி அடங்கும். இலையில் பரிமாறிய அன்னத்தின் வெண்ணிறத்தைப் பார்க்கையில் வெள்ளி உதயமாவது போல் இருக்கும்” இப்போது சொல்லுங்கள். உங்கள் சத்திரத்தை நான் பழித்துப் பாடாமல் பாராட்டி அல்லவா பாடி இருக்கிறேன்”

சத்திரத்து அதிகாரி மகிழ்ந்து போனார் என்பதைச் சொல்லவா வேண்டும்.

இந்தப் பாடலைக் கோபத்தில் திட்டிப் பாடினாலும் தன் சாதுரியத்தால் அதன் பொருளை அப்படியே திருப்பிப் போட்டு விட்டார் காளமேகப் புலவர். ஆனால் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாட்டுவதிலும் அவர் வல்லவராக இருந்தார். அதற்கு இன்னொரு உதாரணம்-

அக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சென்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள். காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.

காளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.

சாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உயர்வாளர்-பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.

சிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் - மானேந்திய கையினர்
அஞ்சு அக்கரத்தர் – பஞ்சாட்சர சொரூபமானவர்
முன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாளர் – முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் – உலகமெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்

அந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

திருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.

சாரங்கபாணியர் – சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்
அஞ் சக்கரத்தார் – அழகிய சக்கரத்தை உடையவர்
முன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் – முன்னாளில் மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.
பாரெங்கும் ஏத்திடும் மையாகர் – உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்

அந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

அவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல் பொருள் கொண்டு வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.

இப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப் பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல. அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா? ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா?

என்.கணேசன்

நன்றி: ஈழ நேசன்

Friday, January 14, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 60





நினைவில் நிறுத்த சில உண்மைகள்


இது வரையில் ஆழ்மன சக்திகள் அடையத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் விளக்கமாகப் பார்த்தோம். ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.

ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார். பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.

இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு ‘ட்யூன்’ ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி ’ட்யூன்’ ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று போகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.

முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச் சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். “காலணா கொடுத்தால் படகுக் காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?”. அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.

இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."

மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். ஏனென்றால் அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.

இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.

மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான
பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.

இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.

ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்பு என்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.

ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது. மேலும்
ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.

பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.

உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப்போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

உங்களுடைய இந்தப் பயணம் மேலும் இனிதே தொடர வாழ்த்து கூறி விடைபெறுகிறேன்.

இது வரை என்னை ஒவ்வொரு வாரமும் பாராட்டி உற்சாகப்படுத்தி ஊக்குவித்த வாசக அன்பர்களுக்கும், வாய்ப்பும் ஆதரவும் தந்த விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, January 10, 2011

வாழ்க்கையின் கேள்விகளும் தயார் பதில்களும்



முல்லா நஸ்ருதீன் வசிக்கும் நகரத்திற்கு சக்கரவர்த்தி வருகிறார் என்று முன்கூட்டியே தகவல் வந்தது. நகர மக்களுக்கு சக்கரவர்த்தியிடம் பேசுவதில் பயம் கலந்த தயக்கம். அவர்களோ படிப்பறிவில்லாதவர்கள். அவர்கள் எல்லோரும் முல்லாவிடம் வந்து “நாங்களோ படிப்பறிவில்லாத தற்குறிகள். சக்கரவர்த்தியோ நம் நகரத்திற்கு முதல் முறையாக வருகிறார். எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அறிவெல்லாம் கிடையாது. அதனால் எங்கள் சார்பாக நீங்களே சக்கரவர்த்தியிடம் பேச வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள முல்லாவும் ஒத்துக் கொண்டார். ”கவலைப்படாதீர்கள். நான் பல அரசர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசியும் இருக்கிறேன். அரசவைக்கும் நான் போயிருக்கிறேன். அதனால் இது எனக்குப் பெரிய விஷயமில்லை” என்றார்.

ஆனால் சக்கரவர்த்தியின் ஆட்களுக்கோ படிப்பறிவில்லாத அந்த நகர மக்கள் ஏடாகூடமாக ஏதாவது சக்கரவர்த்தியிடம் பேசி விடுவார்களோ என்று பயம். எனவே சக்கரவர்த்தி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த நகரத்திற்கு வந்து மக்கள் சார்பாக யார் பேசப் போகிறார் என்று கேட்டார்கள். மக்கள் முல்லாவை சுட்டிக் காட்டினார்கள். ”அவர் தான் எங்கள் வழிகாட்டி. இறை சேவகர். தத்துவஞானி எல்லாமே. அவர் எங்கள் சார்பாக சக்கரவர்த்தியிடம் பேசுவார்” என்றனர்.

சக்கரவர்த்தியின் ஆட்கள் அவர்களுடைய அடைமொழிகளால் திருப்தி அடைந்து விடவில்லை. முல்லாவைத் தயார் செய்வது தங்கள் பொறுப்பு என்று கருதினார்கள். அவர்கள் முல்லாவிடம் ”நீங்கள் கவலைப்படாதீர்கள். சக்கரவர்த்தி கஷ்டமான கேள்விகள் எதுவும் கேட்க மாட்டார். எளிமையான கேள்விகள் தான் கேட்பார். நீங்கள் அதற்கு பதில் அளித்தால் போதும். முதலில் உங்கள் வயது எத்தனை என்று கேட்பார். உங்களுக்கு வயது எத்தனை?”

முல்லா சொன்னார். “எழுபது”

“அப்படியானால் முதல் கேள்விக்கு ‘எழுபது’ என்று சொல்லுங்கள் போதும். நீங்கள் அதற்கு அதிகமாக எதுவும் சொல்லக் கூடாது. அடுத்த கேள்வி “நீங்கள் இறை சேவகராக எத்தனை வருடங்களாக இருக்கிறீர்கள் என்று கேட்பார். நீங்கள் எத்தனை வருடங்களாக இறை சேவகராக இருக்கிறீர்கள்?”

“நாற்பது வருடங்கள்”

“சரி. நீங்கள் இரண்டாவது கேள்விக்கு “நாற்பது வருடங்கள் என்று சொல்லுங்கள் போதும். தாறுமாறாக ஏதேதோ சொல்லி சக்கரவர்த்தியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்” என்று சொல்லி வேறு சில கேள்விகளையும், அதற்கான பதில்களையும் சொல்லித் தந்தார்கள்.

இப்படி எல்லாம் சொல்லி முல்லா நஸ்ருதீனைத் தயார் செய்த ஆட்கள் சக்கரவர்த்தியிடமும் சென்று “அந்த நகர மக்கள் படிப்பறிவில்லாத முட்டாள்கள். அவர்கள் பேசத் தேர்ந்தெடுத்த ஆளும் அவர்களைப் போலவே முட்டாள் போலவே தெரிகிறான். எனவே நீங்கள் கஷ்டமான கேள்விகள் கேட்டு அந்த ஆளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள். நீங்கள் இந்த எளிமையான கேள்விகளையே கேளுங்கள்.” என்று சொல்லி முல்லாவிற்குச் சொல்லித் தந்த கேள்விகளை எழுதி சக்கரவர்த்தியிடமும் தந்தார்கள். சக்கரவர்த்தியும் படித்துப் பார்த்து ஒத்துக் கொண்டார்.

சக்கரவர்த்தி நகரத்திற்கு வந்த போது முல்லா மரியாதையுடன் முன்னால் வந்து நின்றார். சக்கரவர்த்திக்கு கேள்விகள் நினைவிருந்தாலும் கேள்விகளின் வரிசை மறந்து போய் விட்டது. அவர் முல்லாவிடம் “நீங்கள் எவ்வளவு வருடங்களாக இறை சேவகராக இருக்கிறீர்கள்” என்று கேட்டார்.

சக்கரவர்த்தியின் ஆட்கள் அருகிலேயே இருப்பதைப் பார்த்தபடியே”எழுபது” என்றார் முல்லா.

சக்கரவர்த்திக்கோ ஆச்சரியம். இந்த ஆளுக்கு வயதே எழுபது இருக்கும் போல இருக்கிறது. ஆனால் எழுபது வருடங்களாக இறை சேவகராக இருக்கிறேன் என்கிறாரே என்று நினைத்தவராக “அப்படியானால் உங்களுக்கு வயது எவ்வளவு?” என்று கேட்டார்.

முல்லா சொன்னார். “நாற்பது வருடங்கள்”

சக்கரவர்த்தி கேட்டார். “உங்களுக்கென்ன பைத்தியமா?”

முல்லா சொன்னார். “ஐயா நாம் இருவருமே பைத்தியங்கள் தான். நீங்கள் தவறான கேள்விகளைக் கேட்கிறீர்கள். நானோ சரியான பதில்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். உங்கள் ஆட்கள் நான் சரியாகச் சொல்கிறேனா என்று என்னைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன்?”

படிக்கையில் இது நகைச்சுவையாகத் தோன்றினாலும் நம் வாழ்விலும் இது போன்ற முட்டாள்தனங்களை நாமும் நிறைய செய்கிறோம்.

வாழ்க்கை என்ற பரிட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் முன் கூட்டியே பதில்களைத் தயார் செய்து கொண்டு காத்திருக்கையில் பல சமயங்களில் கேள்வித்தாளே மாறிப் போகிறது. கேள்விகள் மாறி விட்டனவே என்று கோபப்படுகிறோம். எத்தனை கஷ்டப்பட்டு கேள்விகளுக்கு பதில்களைத் தயார் செய்து வைத்திருந்தோம் என்று எண்ணி குமுறுகிறோம். தயார் செய்து வைத்திருந்த கேள்விகள் கேட்கப்படாமல் வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விட்டனவே என்று அங்கலாய்க்கிறோம்.

சிலபஸில் (syllabus) இல்லாத கேள்வி கேட்கப்படும் போது மாணவன் திடுக்கிடுவது போல தான் நாம் இருக்கிறோம். சில பிரச்னைகள் வரும் போது இது போன்ற பிரச்னைகள் எனக்கு வந்திருக்கக் கூடாதே என்று மலைத்துப் போய் விடுகிறோம்.

வாழ்க்கையில் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் தீர்வுகள் என்றும் புதிதாக வரும் பிரச்னைகளுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. சூழ்நிலைகளும், பிரச்னைகளின் தன்மைகளும் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதால் நாம் வாழ்வில் எதிர்கொள்கிற கேள்விகளும் மாறிய வண்ணம் தான் இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையையும், நிகழ்வையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல நடந்து கொள்வது தான் சரியாக இருக்க முடியும்.

அது போல அடுத்தவர்களுக்கு பயன்பட்ட தீர்வுகளும், நம் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளாக இருக்கும் என்று சொல்லி விட முடியாது. அதுவும் தயார் செய்து வைத்திருக்கும் பதில்களைப் போலத் தான். நாம் தயார் செய்ததற்குப் பதிலாக அடுத்தவர் தயார் செய்தது.

எனவே வாழ்க்கை என்ற பரிட்சையில் பெரும் வெற்றி பெற நிகழ்காலத்தில் முழுவதுமாக இருங்கள். என்ன கேள்வி கேட்கப்படுகிறது என்று தெரியாமலேயே பதிலைத் தயார் செய்து எழுதத் துடிக்காதீர்கள். அடுத்தவர் பதிலை ‘காப்பி’ அடிக்காதீர்கள். அவர்கள் எழுதுகின்ற பரிட்சையே வேறாகக் கூட இருக்கலாம். கேள்வியைப் புரிந்து கொண்டு, உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, சிந்தித்து தகுந்த பதில் எழுத ஆயத்தமாக இருங்கள். அப்போது மட்டுமே உங்களால் வாழ்க்கையில் உண்மையான வெற்றி பெற முடியும்.

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Wednesday, January 5, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 59


பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

(அடுத்த வாரம் பயணம் முடிப்போம்)

- என்.கணேசன்
நன்றி:விகடன்

Saturday, January 1, 2011

புரிந்து கொள்ள முயற்சியுங்கள்!





அடுத்தவரைப் புரிந்து கொள்ளாமலேயே விமரிசிப்பது பொதுவாக எல்லோருக்கும் கை வந்த கலை. ’அப்படி செய்திருக்க வேண்டும், இப்படி இருந்திருக்க வேண்டும், இப்படி சொல்லியிருக்கக் கூடாது, அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று வாயிற்கு வந்த படி கருத்துகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அடுத்தவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையாக ஒருவரைப் புரிந்து கொள்ள அவருடைய நிலைமையில் தன்னை இருத்திப் பார்க்க வேண்டும். நேர்மையாக அப்படி இருத்திப் பார்த்தால் மட்டுமே அந்தந்த நிலைமையின் சங்கடங்கள், சிக்கல்கள், சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்னைகளின் தன்மை எல்லாம் விளங்கும்.

பிரபல டைரக்டர் மிருணாள் சென்னின் பழைய திரைப்படமான “ஏக் தின் பிரதி தின்” (ஒரு நாள்-தினம் தினம்) ஒரு சாதாரண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கும் திரைப்படம்.

கல்கத்தா நகரத்தில் வேலைக்குச் சென்ற ஒரு பெண் இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் தான் அந்த வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவள் திரும்பி வராமல் கடிகாரம் நகர நகர குடும்பத்தினர் அனைவரும் கலவரம் அடைய ஆரம்பிக்கிறார்கள். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயப்படுகிறார்கள். இவர்களோடு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கொள்கிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பயமும், குழப்பமும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அண்ணன் சவக்கிடங்கு வரை கூட போய் பார்த்து விட்டு வருகிறான். பதட்டம் அதிகமாகி வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

கடைசியில் அந்தப் பெண் நள்ளிரவில் வீடு திரும்புகிறாள். அவளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணிடம் யாரும் ”என்ன ஆயிற்று, ஏன் தாமதமாக வந்தாய்?” என்று கேட்கவில்லை. அவளே கேட்கிறாள். “ஏன் நான் தாமதமாய் வந்தேன் என்று அறிந்து கொள்வதில் உங்களில் யாருக்குமே அக்கறையில்லையா?”

அந்த கேள்விக்கு அந்தத் திரைப்படத்தில் கடைசி வரை பதில் சொல்லப் படுவதேயில்லை. அந்தத் திரைப்படத்தில் அவள் வராவிட்டால் தங்கள் நிலை என்ன என்ற சுயநலம் கலந்த பயமும், ஆதங்கமும் குடும்பத்தினரிடம் காட்டப்படுகிறது. அவள் வந்து விட்டாள் என்றான பின் அனைவரும் பாதுகாப்பை உணர்கிறார்கள். அத்தோடு அந்த நிகழ்வு மறக்கப்பட்டு விடுகிறது. மறு நாள் காலை எழுந்து அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஏக் தின் பிரதி தின் - ஒரு நாள் தினம் தினம்..........

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் மனநிலையும், பாசாங்குகளும் மிக அழகாக இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுகின்றன.

இந்த திரைப்படத்தைக் காண்பவர்களை மிகவும் யோசிக்க வைத்த விஷயம் ஏன் அவள் தாமதமாக வந்தாள் என்பதை அறிந்து கொள்வதில் அந்தக் குடும்பத்தினர் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லாதது தான். அந்த திரைப்படத்தில் அந்தக் குடும்பத்தினர் சுயநலமிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டிருந்ததால் அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதாகத் தோன்றினாலும் இந்த பண்பு சுயநலமிகளாக அல்லாத குடும்பங்களில் கூட அதிகமாய் பார்க்க முடிகிறது.

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஒரு மனிதர் திடீர் என்று வித்தியாசமாக நடந்து கொண்டால் விமரிசனம் எழுகிற அளவுக்கு, ஏன் அப்படி நடந்து கொண்டார் என்ற காரணம் அறிய முற்படுகிற எண்ணம் பெரும்பாலும் எழுவதில்லை. யாருமே காரணம் இல்லாமல் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படை புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனோ அப்படி நடந்து கொள்கிறார் என்ற அலட்சியமோ, வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்கிறார் என்கிற அபிப்பிராயமோ பிரதானமாக மற்றவர் மனதில் எழுகிறதைத் தான் எல்லா இடங்களிலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

தங்களுடைய எதிர்பார்ப்பின் படியெல்லாம் ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனிதர்கள் அவர் அப்படி நடந்து கொள்ளா விட்டால் அதற்கு உண்மையில் சரியான காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்கிற ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டுக் கொள்ள பெரும்பாலும் தவறி விடுகிறார்கள். முதலில் சொன்னது போல அவருடைய நிலையில் தன்னை இருத்திப் பார்க்கும் சிரமத்தையும் யாரும் எடுத்துக் கொள்வது அபூர்வமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அந்த அலட்சியத்தாலேயே நியாயமற்ற விமரிசனங்கள் மடை திறந்த வெள்ளம் போல் கிளம்புகின்றன.

அதிகமாக விமரிசிப்பவர்கள் உருப்படியாக எதையும் செய்தவர்களாக இருப்பதில்லை. காலில்லாதவன் ஓட்டப்பந்தயத்தை விமரிசிப்பது போலத் தான் இவர்களுடைய விமரிசனங்கள் இருக்கின்றன. இவர்கள் இது வரை செய்யாத, இனியும் என்றுமே செய்யப் போகாத ஒரு செயலை, தெரிந்த விதத்தில் யாராவது கஷ்டப்பட்டு செய்து வந்தால் அதில் ஆயிரம் குறைகள் சொல்வார்கள்.

இது போன்ற ஆசாமிகளை ஒவ்வொரு குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமூகத்திலும் நாம் தாராளமாகப் பார்க்கலாம். இவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க முன் வர மாட்டார்கள். பொறுப்பில் இருப்பவர்களுக்கு உதவவும் முன் வர மாட்டார்கள் ஆனால் அது ஏன் ஆகவில்லை? இதை ஏன் செய்யவில்லை? என்ன தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்? போன்ற கேள்விகள் சரமாரியாக இவர்கள் வாயிலிருந்து வரும்.

இது போன்ற பொறுப்பற்ற நபர்களை அலட்சியம் செய்வது தான் யாரும் இவர்களுக்கு அளிக்கக் கூடிய சரியான பதில்.

ஆனால் இந்த அளவு மோசமாக இல்லாமல் இருந்தாலும் கூட நம்மில் பலரும் அறியாமையால் இந்த தவறைச் செய்கிறோம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் எத்தனையோ வீடுகளில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்யும் குடும்பத் தலைவிகளின் வேலைப் பளுவை வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலும் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். அலுவலகத்திற்குப் போய் செய்வது தான் உண்மையான வேலை, வீட்டு வேலை எல்லாம் பெரிய விஷயம் அல்ல என்று பொதுவான அபிப்பிராயம் பலரிடமும் நிலவுகிறது.

எனக்கு அப்படி ஒரு குடும்பத்தைத் தெரியும். வீட்டில் அனைவரும் வேலை, படிப்பு என்று வெளியே போய் விடுபவர்கள். அவர்கள் காலை வெளியே செல்லும் முன் சமையல் செய்து அவர்களுக்கு மதியத்திற்கு டிபன் பாக்சிலும் போட்டு அனுப்ப வேண்டும். சமையல் மட்டுமல்லாமல் துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வேலைகளும் அந்தக் குடும்பத் தலைவி தான் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் ஒரு துரும்பை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு எடுத்து வைப்பவர்கள் அல்ல. வேலை செய்தும், படித்தும் களைத்துப் போனவர்களாக தங்களை நினைத்துக் கொண்டவர்கள் எப்போதுமே அந்தத் தாயிற்கு ஓய்வே கிடையாது என்பதை என்றும் எண்ணிப் பார்த்ததில்லை.

வயதான காலத்தில் அந்தக் குடும்பத் தலைவி வேலைப் பளு அதிகமாகி ஏதாவது கத்தினால் அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு ஒத்தாசை செய்வதற்குப் பதிலாக “ஏன் சும்மா கத்திக் கொண்டே இருக்கிறாய். வீட்டுக்குள்ளே வருவதற்கே எனக்கு பிடிக்கவில்லை” என்று பிள்ளைகள் சொன்னதை பல முறை கேட்டிருக்கிறேன்.

ஒரு நாள் அந்தத் தாய் திடீரென்று இறந்து போனார். அதன் பிறகு அந்தக் குடும்பத்தினர் அந்த வேலைகளுக்கு வேலையாள் ஏற்பாடு செய்தனர். கை நிறைய சம்பளம் தந்தும் அந்தத் தாயின் வேலையில் பாதி வேலை கூட அந்த வேலைக்காரியிடம் அவர்களால் வாங்க முடியவில்லை. ஏதாவது திட்டினால் அவளும் வராமல் போய் விடப் போகிறாள் என்று பயந்து பாதி வேலைகளை இப்போது அவர்கள் தாங்களே செய்து வருகிறார்கள். இப்போது அனைவருக்குமே அந்தத் தாயின் அருமை புரிகிறது. அந்த தாய் இறக்கக் காரணமான உடல் உபாதை அவருக்கு ஏற்பட்ட பின் தான் அடிக்கடி கோபப்பட்டு கத்தியிருக்கிறார் என்பது பிறகு தான் அவர்களுக்குப் புரிந்தது. இதுவே அவர் இருக்கும் போது புரிந்திருந்தால், அந்தத் தாயிற்கு சில விதங்களிலாவது ஒத்தாசையாக இருந்திருந்தால், அந்தத் தாயிடம் வாயிற்கு வந்த படி பேசி காயப்படுத்தாமல் இருந்ததிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

ஒருவர் இருக்கும் போது அவர்களைப் புரிந்து கொள்ளும் சிரமத்தை நாம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அது போல யாரை விமரிசனம் செய்கிறோமோ அவர்கள் நிலை நமக்கும் வந்தால் ஒழிய அவர்களையும் நாம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். இப்படிக் காலம் தாழ்ந்து புரிந்து கொள்வதை விட முன்பே புரிந்து கொள்ள முடிவதில் தான் உண்மையான பக்குவம் இருக்கிறது.

அந்தப் பக்குவம் வராத வரை மிருணாள் சென்னின் ‘ஒரு நாள்-தினம் தினம்’ திரைப்படத்தில் காட்டப்பட்டது போல சொந்த சௌகரியங்களை மட்டுமே எண்ணிப்பார்க்கும் சுயநலமிகளாகவே இருந்து விடும் தவறை நாம் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்திருப்போமாக!

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்