Tuesday, September 28, 2010

சில அனுமதிகள் ஆபத்தானவை

பழந்தமிழகத்தில் அரசர்கள் தங்கள் வள்ளல் தன்மைக்குப் புகழ் பெற்றவர்களாக இருந்தார்கள். வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம் காட்டி பொருள் உதவி பெற்று வாழ்க்கையை நடத்திச் செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அப்படி வறுமையில் வாடிய ஒரு புலவர் வள்ளலான ஒரு மன்னரை நாடிச் சென்றார்.

அரசவையில் மன்னரை வணங்கிய புலவர் பாடல்கள் பாட அனுமதி கேட்டார். மன்னரும் மனமகிழ்ந்து ”என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டார்.

புலவர் சாதுரியமாக மன்னருக்கு எதிரே இருந்த ஒரு சதுரங்கப் பலகையைக் காட்டி சொன்னார். “பாராளும் வேந்தரே. வள்ளல் பெருமகனே. இந்த சதுரங்கப் பலகையில் முதல் கட்டத்தில் ஒரு அரிசியை மட்டுமே வைத்து விட்டு பின்னர் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் முந்தைய கட்டத்தில் உள்ளதற்கு இரு மடங்காக அரிசிகளைப் பெருக்கிக் கொண்டே போய் கடைசியில் வருமளவு அரிசிமணிகளைத் தந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்”

அரசருக்கு ஆச்சரியம். பொற்காசுகள் கேட்கும் உலகில் அரிசிமணிகளை இவர் கேட்கிறாரே, அதுவும் மூட்டைகளாகக் கேட்காமல் எண்ணிக்கையில் கேட்கிறாரே என்று வியந்தவராக மன்னர் கேட்டார். “புலவரே சரியாக யோசித்துத் தான் கேட்கிறீர்களா? எண்ணிக்கையில் அரிசிமணிகள் போதுமா?”

புலவர் பணிவுடன் சொன்னார். “எனக்கு நான் கேட்டபடி அரிசிமணிகள் கொடுத்தால் அதுவே தாராளமாகப் போதும் அரசர் பெருமானே”

அரசர் வேடிக்கையாகச் சிரித்தபடி “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அரண்மனை சேவகர்களை புலவர் சொன்னபடியே அரிசிமணிகளை எண்ணி வைக்கச் சொன்னார்.

சேவகர்கள் அரிசிமணிகளை வைக்க ஆரம்பித்தார்கள். முதல் கட்டத்தில் ஒரு அரிசிமணி, இரண்டாம் கட்டத்தில் இரண்டு அரிசிமணி, மூன்றாம் கட்டத்தில் நான்கு அரிசிமணி, நான்காம் கட்டத்தில் எட்டு அரிசிமணி என வைத்துக் கொண்டு வந்தனர். இருபதாவது கட்டத்திற்கு வரும் போது சேவகர்கள் 5,24,288 அரிசிமணிகள் வைக்க வேண்டி வந்தது.

64 கட்டங்கள் கொண்ட சதுரங்கப் பலகையில் பாதி அளவிலான 32ஆம் கட்டத்திற்கு வருகையில் 214,74,83,648 அரிசிமணிகள் வைக்க வேண்டி வந்தது. பாதியிலேயே 214 கோடிக்கும் மேல் அரிசிமணிகள் தேவைப்பட்டதைக் கண்ட பிறகு தான் அரசருக்கு நிலைமையின் பூதாகரம் புரிய ஆரம்பித்தது. 64வது கட்டத்தை எட்டும் போது கோடிக்கணக்கான கோடிகள் அரிசிமணிகள் தேவைப்படும் என்பது புரிந்த அவர் தன் நாட்டையே அந்த புலவருக்கு பணயம் வைக்க வேண்டியதாய் போயிற்று.

இந்த நிலைமை வெறும் ஒரு அரிசிமணியளவில் ஆரம்பித்தது தான்.

சில ஆரம்பங்கள் பார்வைக்கு இது போல ஆபத்தில்லாத, பிரச்னையில்லாத தோற்றத்தில் தெரியலாம். ஆனால் போகப் போக அவை சிறிது சிறிதாக விசுவரூபம் எடுக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். சில தீய பழக்கங்கள், சில தீய நட்புகள், சில வழிபிறழல்கள் எல்லாம் இந்த ரகத்தைச் சார்ந்தவையே.

போதை, சூது போன்ற பழக்கங்கள் ஒரு விளையாட்டாய் ஆரம்பிப்பவையே இதில் பெரிதாக என்ன ஆகி விடப் போகிறது என்று ஆரம்பத்தில் தோன்றக் கூடியவையே. ஆனால் ஆரம்பித்த பின் அந்தப் பழக்கங்களின் கரங்கள் இறுக ஆரம்பித்த பின் தான் விளையாட்டு விபரீதமாகிப் போன விதம் புரியும். எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையையும், தங்களைச் சேர்ந்தவர்களின் நிம்மதியையும் கெடுத்து சீரழிந்து போனதை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

சில தீய நட்புகளும் அப்படித்தான். நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல சூழ்நிலையில் வளர்ந்தும், கூடாத நட்பால் நல்ல குணங்களைப் படிப்படியாக இழந்து தீயவற்றை படிப்படியாக வளர்த்து பாழாகிப் போன இளைஞர்களும் சமூகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

போக வேண்டிய பாதையில் சென்று செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்க அதை விட்டு விட்டு தேவையில்லாத வேறொரு பாதையில் மாறுதலுக்காக சிறிது தூரம் சென்று வரலாம் என்று எண்ணி அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து அதிலேயே அலைந்து திரிந்து அடையாளம் இழந்து போன ஆட்கள் ஏராளம் உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அதை உணரும் போது திரும்பி வர இயலாத தூரம் சென்றிருக்கும் வேதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

இப்படியெல்லாம் நடக்க முதல் காரணம் நாம் ஆரம்பத்தில் அவற்றிற்குத் தருகிற அனுமதியே. என்ன ஆகி விடப் போகிறது, இதென்ன பெரிய விஷயமா என்று அலட்சியமாக எண்ணி, முழுக்கட்டுப்பாடும் நம்மிடம் இருக்கிறது என்று முட்டாள்தனமாக நம்பி, நம் வாழ்க்கையில் சிலவற்றை நாம் நுழைய அனுமதித்து விட்டால் பின் அதற்கு நாம் பெரிய விலை தர வேண்டி வந்து விடுகிறது.


எதையும் முளையிலேயே கிள்ளி விடுவது சுலபம். ஆனால் அது மரமாக வளர்ந்து விட்டால் அதை வெட்ட கோடாலி தேவைப்படுகிறது. அதை வெட்டி எடுக்க வேறு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அப்படியும் வேரோடு எடுத்து விட முடியாமல் போய் விடுவதுண்டு. நம் கையால் சுலபமாகக் கிள்ளி எறிவதைச் செய்யாமல் வளர்த்து ஆளாக்கி அதை அழிக்கப் படாத பாடு படுவது முட்டாள்தனமே அல்லவா?

எனவே ஆரம்ப தோற்றத்தை வைத்து சிலவற்றைக் குறைவாக எடைபோட்டு உங்கள் வாழ்க்கையில் நுழைய அனுமதித்து விடாதீர்கள். சிந்தித்து செயல்படுங்கள். பின் வருந்திப் பயனில்லை.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, September 24, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-47




உடலை விட்டு வெளியேறும் ஆத்மா


மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.

நாம் அடுத்த பயிற்சிக்குச் செல்லும் முன் இதை எல்லாம் மனதில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கொள்வது நல்லது. அடுத்த பயிற்சிக்குச் செல்வோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....


(தொடரும்)

- என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, September 20, 2010

கடவுள் செவிமடுக்கும் பிரார்த்தனைகள்




லியோ டால்ஸ்டாய் என்றாலே ரஷிய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளான ‘போரும் சமாதானமும்’ மற்றும் ‘அன்னா கரீனா’வும் நினைவுக்கு வரலாம். ஆனால் அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளும் கூட மிகச்சிறந்தவையும், பொருள் பொதிந்தவையும் ஆகும். உதாரணத்திற்கு அவருடைய ’மூன்று ஞானிகள்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம்.

ஒரு பிஷப் பாதிரியார் பல யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு கடல்கடந்து இருக்கும் ஒரு புனிதத்தலத்திற்குக் கப்பலில் செல்கிறார். கப்பலில் செல்கையில் அந்தப் புனிதத்தலத்திற்குப் போகும் வழியில் உள்ள ஒரு தீவில் மூன்று மகத்தான ஞானிகள் இருப்பதாக சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டார். மனித குலத்தின் மேம்பாட்டுக்காக அந்த ஞானிகள் சதா சர்வகாலம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சொல்லவே பிஷப்பிற்கு அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. கப்பல் கேப்டனிடம் அவர் அந்தத் தீவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அந்தத் தீவின் கரை வரை கப்பல் செல்ல முடியாதென்றும், தீவருகே சென்று ஒரு படகில் தான் அங்கு செல்ல முடியும் என்றும் கூறிய கேப்டன் அவரை மனம் மாற்றப் பார்க்கிறார். ஆனால் பிஷப் தன் விருப்பத்தில் உறுதியாய் இருக்கவே கேப்டன் ஒத்துக் கொள்கிறார்.

அந்தத் தீவிற்கு சற்று தொலைவில் கப்பல் நிற்க படகு மூலம் அந்தத் தீவிற்கு ஆவலுடன் பிஷப் பயணிக்கிறார். ஆனால் தீவில் மூன்று ஞானிகளைக் காண்பதற்குப் பதிலாக அவர் கண்டது கந்தலாடைகள் அணிந்த வயதான மூன்று கிழவர்களைத் தான். பிஷப்பின் உடைகளைப் பார்த்து அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள பாதிரியார் என்பதைப் புரிந்து கொண்ட கிழவர்கள் அவரை பயபக்தியோடு வரவேற்று உபசரிக்கின்றனர்.

அவர்களிடம் சிறிது நேரம் பேசியவுடனேயே அவர்கள் மூவருக்கும், கல்வியறிவோ, பைபிள் பற்றிய ஞானமோ இல்லை என்பது பிஷப்பிற்குத் தெரிந்து விட்டது. இந்த படிப்பறிவில்லாத கிழவர்களைப் போய் ஞானிகள் என்று சொல்லித் தன் ஆவலை வீணாகத் தூண்டி விட்டார்களே என்று எண்ணிய பிஷப் அவர்களிடம் நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டார்.

“நாங்களும் மூவர். நீங்களும் மூவர். எங்கள் மீது கருணை காட்டுங்கள்” என்று சொல்லி பிரார்த்தனை செய்கிறோம்” என்று மூன்று கிழவர்களும் பணிவுடன் சொன்னார்கள்.

அவர்கள் நீங்கள் மூவர் என்று சொன்னது கர்த்தர், பிதா, பரிசுத்த ஆவியைச் சேர்த்துத் தான்.

பிஷப் திகைப்படைந்தார். “இது என்ன பிரார்த்தனை. இப்படியுமா பிரார்த்தனை செய்வார்கள்” என்று அவருக்கு தோன்றியது.

இவ்வளவு தூரம் வந்து இவர்களின் அறியாமையை அறிந்த பின் அவர்களுக்கு எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று சொல்லித் தருவது தன் கடமை என்று உணர்ந்த பிஷப் அவர்களுக்கு முறைப்படியாக பிரார்த்தனை செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார். அவர் அவர்களது அறிவுக்கேற்ப எளிய பிரார்த்தனையை தான் கற்றுத் தந்தார் என்றாலும் அதைக் கற்கவே அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இத்தனை வருடங்கள் ஒரு வரி பிரார்த்தனை செய்து வந்த அவர்களுக்கு சில வரிகள் கொண்ட புதிய பிரார்த்தனை சிரமமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?

எப்படியோ அவர்களுக்கு முறைப்படி கற்றுத் தந்த பிஷப் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு படகு மூலம் கப்பலுக்குத் திரும்பினார். அவர் கப்பலை நெருங்கிய சமயத்தில் அந்த மூவரும் அவர் படகை நோக்கி ஓடோடி வந்தார்கள். “ஐயா எங்களை மன்னியுங்கள். எங்களுக்கு மீண்டும் தாங்கள் சொல்லித் தந்த பிரார்த்தனை மறந்து விட்டது. இனியொரு முறை சொல்லித் தருவீர்களா?”

தரையில் ஓடி வருவது போல கடலில் சர்வ சாதாரணமாக ஓடி வந்த அவர்களைப் பார்த்த பிஷப் பிரமித்தார். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி சொன்னார். ”நீங்கள் இது வரை செய்து வந்த பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள் பெரியோர்களே. உங்களுக்கு வேறெந்த பிரார்த்தனையும், போதனையும் தேவையில்லை. முடிந்தால் தயவு செய்து எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்”

பிஷப்பே பழைய பிரார்த்தனையை தொடர்ந்து செய்தால் போதும் என்று அனுமதி அளித்து விட்ட திருப்தியில் அந்த மூவரும் அவரை வணங்கி விட்டு நிம்மதியாகத் தங்கள் தீவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் சென்ற திசையில் ஒரு பொன்னிற ஒளியை அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் கண்டார்கள்.

எந்த வழிபாட்டையும், பிரார்த்தனையையும் புனித நூல்களில் சொல்லப்பட்ட விதங்களை பின்பற்றியோ, முன்னோர் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை பின்பற்றியோ, முறையான சடங்குகள் என்று நாம் நம்பி வருவதை பின்பற்றியோ செய்தால் தான் அது இறைவனை எட்டும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். பெரும்பாலான மதத்தலைவர்களும் அப்படியே தான் மக்களை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் பிரார்த்தனைகளின் மகத்துவம் சடங்கு, சம்பிரதாய வழிகளில் பின்பற்றப்படுவதில் இல்லை. அது ஆத்மார்த்தமாகவும், நம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்யப்படுவதிலேயே தான் இருக்கின்றது. எல்லா மதங்களிலும் இந்த செய்தி பிரதானமாகச் சொல்லப்படுகின்றது.

நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம் சம்பிரதாயத்தைப் பின்பற்றியது அல்ல. ஆண்டாள் வழிபட்ட விதமும் அப்படியே. சபரியின் பக்தியும் அப்படியே. இறைவன் செவிமடுத்து வந்த பிரார்த்தனைகள் பெரும் பண்டிதர்களுடைய பிரார்த்தனைகளாக இருந்ததில்லை. நீண்ட சொல்லாடல்கள் நிறைந்ததாக இருந்ததில்லை. மாறாக அவை தூய்மையான, எளிமையான நெஞ்சங்கள் பெரும் பக்தியோடு செய்யப்பட்ட மனமுருகிச் செய்த பிரார்த்தனைகளாக இருந்திருக்கின்றன.

தருமி என்ற தரித்திரப் புலவனும், கண்ணப்பன் என்ற வேடுவனும், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவியும் பிரார்த்தனையால் இறைவனைத் தங்களிடமே வரவழைத்த கதைகள் நாம் அறிவோம். டால்ஸ்டாய் சொன்ன அந்தக் கதையிலும் தேவாலயங்களில் முறைப்படி நீண்ட நேரம், நீண்ட காலம் முறைப்படி பிரார்த்தனை செய்தும் ஒரு பாதிரியார் அடையாத நிலையை ஒரு வேடிக்கையான வாசகத்தைப் பிரார்த்தனையாகச் சொல்லி வந்த மூன்று கள்ளங்கபடமற்ற கிழவர்கள் அடைந்ததைப் பார்த்தோம்.

எனவே உங்கள் பிரார்த்தனைகள் எளிமையாக இருக்கட்டும். அவை உண்மையாக இருக்கட்டும். அவை நியாயமானவையாக இருக்கட்டும். அவை இதயத்தின் ஆழத்தில் இருந்து வருபவையாக இருக்கட்டும். நீண்ட பிரார்த்தனைகளிலும், சடங்கு, சம்பிரதாயங்களிலும் அதிகமாய் கவனம் செலுத்தாமல் மனத்தூய்மையுடனும், பக்தியுடனும் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனைகள் என்றுமே வீண் போகாது.

-என்.கணேசன்.
நன்றி: ஈழநேசன்

Wednesday, September 15, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-46



மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்-
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்
-
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் –
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் –
பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் –
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் –
சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்-
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் –

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் –
அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, September 10, 2010

பாசமிகு அண்ணன் கும்பகர்ணன்





இராமாயணத்தில் கும்பகர்ணன் நிலை மிக தர்மசங்கடமானது. அவனுடைய பாசத்திற்குரிய இரண்டு சகோதரர்களும் எதிரெதிர் அணியில் இருக்கின்றனர். அண்ணன் மீது அவனுக்கிருந்த அன்பை இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். அவன் தம்பி மேல் வைத்திருந்த பாசமும் சற்றும் குறைந்ததல்ல.

ஒரு வீட்டில் கடைக்குட்டி மீது அனைவருக்கும் பாசம் அதிகம் இருப்பது சகஜம். அதுவும் அந்தத் தம்பி மிக நல்லவனாகவும், குணவானாகவும் இருந்தால் அந்தத் தம்பி மீது இருக்கும் பாசம் மேலும் அதிகப்படும். அதனால் தம்பி மீது கும்பகர்ணனுக்கு அளவு கடந்த பாசம் இருந்ததில் வியப்பில்லை. ஆறு மாதம் உறக்கத்திலும் ஆறு மாதம் விழிப்பிலும் இருக்கும் கும்பகர்ணன் உறங்கப் போகும் போது விபீடணன் இலங்கையில் இருந்தான். ஆனால் கும்பகர்ணன் விழிக்கையிலோ விபீடணன் எதிரணிக்குப் போய் விட்டிருந்தான்.

அவன் மறுபடி விபீடணனைச் சந்தித்தது போர்க்களத்தில் தான். அந்த போர்க்களத்தில் அண்ணனும் தம்பியும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அண்ணனைப் பார்த்தவுடன் விபீடணன் விரைந்து வருகிறான். அந்தக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

விபீடணன் எதிரணியிலிருந்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பகர்ணன் அவன் இராமனை விட்டு இந்த அணிக்குச் சேரவே வருகிறான் என்று தவறாக நினைத்து விடுகிறான். இந்த அணிக்குத் தோல்வி நிச்சயம் என்பதை முன்பே அறிந்தவன் அவன். அதை அவன் இராவணனிடம் சூசகமாகத் தெரிவித்துக் கூட இருந்தான். அதனால், விபீஷணன் இங்கு வந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்திருந்ததால், அவன் மனம் வருந்தியது.

தன்னை வந்து வணங்கிய தம்பியிடம் கும்பகர்ணன் சொல்கிறான். “ (நம் குடும்பத்தில்) நீ ஒருவனாவது தப்பிப் பிழைத்தாய் என்று நான் எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தேன். நான் நினைத்தது தவறு என்னும்படி புத்தி கெட்டவர் போல் நீ அங்கிருந்து தனியாகப் பிரிந்து வந்தது ஏன்”. சொல்லும் போது துக்கமிகுதியால் அவன் கண்களில் மழையாக நீர் வடிகிறது.

முந்தி வந்து இறைஞ்சினானை
மோந்து உயிர் மூழ்கப் புல்லி
உய்ந்தனை ஒருவன் போனாய்
என் மனம் உவக்கின்றேன் என்
சிந்தனை முழுதும் சிந்தித்
தெளிவிலார் போல மீள்
வந்தது என் தனியே? என்றான்
மழையின் நீர் வழங்கும் கண்ணான்.


விபீடணன் வந்தது வேறு காரணத்திற்காக. தன் அண்ணன் கும்பகர்ணன் மிக நல்லவன் என்பதால் அவனை தன்னைப் போலவே தர்மம் இருக்கும் இடமாகிய இராமனிடம் வந்து சேரச் சொல்லி விபீடணன் மன்றாடுகிறான். கும்பகர்ணன் அது முடியாது என்று சொல்லி அதற்கான காரணங்களையும் அழகாகச் சொல்கிறான்.

“நீரில் வரைந்த கோலம் போன்ற குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி, என்னை இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்த போர்க்கோலத்தில் அனுப்பி வைத்த நம் அண்ணனுக்காக உயிரைத் தராமல் நான் அந்தப்பக்கம் போக மாட்டேன் எனவே என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இராமனிடம் போய் சேர்ந்து கொள்” என்கின்றான்.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்;
தார்க்கோல மேனி மைந்த! என துயர் தவிர்த்து ஆயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதினி ஏகி.


மேலும் சொல்கிறான். ”முட்டாள்தனமாக அண்ணன் (இராவணனை இங்கு இறைவன் என்கிறான்) ஒரு தீமையைச் செய்தால், முடிந்தால் அவனை அப்போதே திருத்தப் பார்க்கலாம். அது முடியாமல் போனால் அவனை எதிர்ப்பதில் அர்த்தம் இல்லை. போரில் ஈடுபட்டு அவனுக்கு முன்னால் இறப்பதே அவன் உப்பைத் தின்று வளர்ந்தவனுக்குப் பொருத்தமானது)

கருத்திலா இறைவன் தீமை
கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றே
திருத்தலாம்; தீராது ஆயின்
பொருத்துறு பொருள் உண்டாமோ!
பொருதொழிற்(கு) உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்(கு) உரியது அம்மா



எதிரில் இருந்த இராமனின் சேனையைப் பார்த்தபடி கும்பகர்ணன் மேலும் சொல்கிறான். “அந்தப்பக்கம் கடவுளான வில்லேந்திய இராமன் நிற்கின்றான். அவன் தம்பி இலக்குவன் நிற்கின்றான். மற்றும் பலரும் நிற்கின்றார்கள். எங்களைக் கொல்லப் போகிற விதியும் அவர்கள் பக்கமே நிற்கின்றது. தோல்வியே எங்கள் பக்கம் நிற்கின்றது”


ஏற்றிய வில்லோன், யார்க்கும்
இறையவன், இராமன் நின்றான்;
மாற்றரும் தம்பி நின்றான்;
மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்றது;
தோற்றல் எம்பக்கல் ஐய!
வெவ்வலி தொலைய வந்தாய்

அதைக்கேட்டு மீளாத சோகத்தில் ஆழ்கிறான் விபீடணன். அண்ணன் மேல் உள்ள பாசத்தில் அவன் துக்கப்படுவதைப் பார்த்து கும்பகர்ணன் எல்லா தத்துவங்களையும் அறிந்த விபீடணனைத் தேற்றுகிறான். “நடக்க இருப்பது நடந்தே தீரும். அழியும் காலம் வந்தால் அழிவதும் நிச்சயம். என்ன தான் செய்தாலும் இறப்பது உறுதியே. இதை உன்னை விட அறிந்தவர்கள் யாரிருக்கிறார்கள்? என்னை நினைத்து வருந்தாமல் போ”. கடைசியில் என்றும் உள்ளாய் என்று தம்பியிடம் ‘நாங்கள் இறந்தாலும் நீ இருப்பாய்” என்ற நிம்மதியில் சொல்லும் அழகையும் பாசத்தையும் பாருங்கள்.

ஆகுவது ஆகும் காலத்து
அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று
போற்றினும் போதல் திண்ணம்;
சே(கு) அறத் தெளிந்தோர் நின்னில்
யார் உளர்? வருத்தம் செய்யா(து)
ஏகுதி; எம்மை நோக்கி
இரங்கலை; என்றும் உள்ளாய்!

செஞ்சோற்றுக் கடனுக்காக உயிரை விடத் தீர்மானித்த கும்பகர்ணன் அதே போல் விபீடணன் செய்யத் தவறியது தவறு என்பது போல் நினைக்கவில்லை. “தர்மாத்மாவான நீ நாளை உலகத்திற்கு தலைவனாகப் போகிறவன். நீ செய்தது உன்னைப் பொருத்த வரை சரியே. அதே போல் இங்கு நின்று போரிட்டு உயிரை விடுதலே எனக்குப் பெருமை” என்று தம்பியிடம் சொல்கிறான்.

தலைவன் நீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதே; ஆல்
புலைஉறு மரணம் எய்தல் எனக்கிது புகழதே ஆல்.


இனி என்ன சொன்னாலும் அண்ணன் கும்பகர்ணன் மனம் மாறப் போவதில்லை என்பதை உணர்ந்து களத்தில் விபீடணன் கும்பகர்ணனை வணங்கிப் பிரியும் காட்சி கல்லையும் கரைக்கும். கம்பன் சொல்கிறான். “அண்ணனை வணங்கிய விபீடணன் கண்கள், முகம், மனம், பேசும் சக்தி எல்லாம் வாடி உயிரோடு இருக்கையிலேயே சவம் போல் ஆனான். இனி மேலும் பேசிப் பிணங்கி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்தவனாய் குணங்களால் உயர்ந்தவனான விபீடணன் எழுந்து திரும்பிப் போனான். அப்போது இரு சேனையின் கரங்களும் அந்தக் காட்சியில் மனமுருகி கூப்பின”

வணங்கினான் வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை செய்து இன்னும்
பிணங்கினால் ஆவதில்லை பெயர்வது என்று எழுந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனைக் கடலெல்லாம் கரங்கள் கூப்ப.


தொடர்ந்து நடந்த போரில் வீழ்ந்த போதும் இராமனிடத்தில் தம்பிக்காக வேண்டுவது கல்லையும் கரைக்கும். இராமனிடம் சொல்கிறான். “நீதியால் வந்த பெரும் தர்ம நெறி தவிர என் தம்பி எங்கள் அரக்கர் குலத்திற்கான எந்த சிறு நெறியும் அறியாதவன். அவன் எல்லாம் நீயே என்று உன்னிடம் வந்திருக்கிறான். அவனுக்கு உன்னிடம் நான் அடைக்கலம் வேண்டுகிறேன்”

நீதியால் வந்த(து) ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்(கு) அடைக்கலம் யான் வேண்டினேன்


மேலும் இராமனிடம் மனமுருகக் கும்பகர்ணன் கேட்கிறான். “என் அண்ணன் இராவணன் விபீடணனைத் தம்பி என நினைத்து மன்னிக்க மாட்டான். அந்தப் பெருந்தன்மை அவனுக்கு இல்லை. இவன் அகப்பட்டால் அவன் இவனைக் கண்டிப்பாகக் கொன்று விடுவான். தயவு காட்ட மாட்டான். எனவே உன்னையும், உன் தம்பி இலக்குவனையும், அனுமனையும் என் தம்பி என்றும் பிரியாதவனாய் இருக்கும்படி எனக்கு வரம் கொடு”

தம்பியென நினைந்(து) இரங்கி
தவிரான் அத்தக(வு) இல்லான்;
தம்பி இவன் தனைக் காணின்
கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத் தான் உன்னைத் தான்
அனுமனைத் தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியான் ஆக
அருளுதி! யான் வேண்டினேன்.


யுத்த காண்டத்தில் இக்காட்சிகள் கம்பன் வர்ணனையால் உயிர் வடிவம் பெற்று நம்மைக் கண்கலங்க வைக்கக் கூடியவை. நன்றாக யோசித்துப் பார்த்தால் கும்பகர்ணன் என்ற அந்த மிக உயர்ந்த மனிதன் இரு வேறு அணிகளில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் ஒரு இணையற்ற சகோதரனாய் வாழ்ந்து மடிந்தான் என்பதே கால காலத்திற்கும் அவன் பெருமையை பறைசாற்றும் என்பதில் சந்தேகம் உண்டோ?

- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்

Monday, September 6, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-45





மரணத்திற்குப் பின் என்ன?

ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியை க் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன. ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?

மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக்குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.

பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......

”....அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......”

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
நன்றி: விகடன்

Thursday, September 2, 2010

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?





இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். மேலும் மன்னர்களாக உயர்பவர்களும் சரித்திரம் படைக்கும் மன்னர்களாக இருப்பார்களா இல்லை சரித்திரம் பழிக்கும் மன்னர்களாக இருப்பார்களா என்பதும் ஊகத்திற்குட்பட்ட விஷயமே. எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய வரலாறு படைக்கும் மன்னர்களாவது சாத்தியமா என்பது தான் நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதிலை ஒரு கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். எல்லாம் அறிந்த ஒரு முனிவர் ஒரு ஊரிற்கு வந்தார். பலரும் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலங்களை அறிந்து வந்தனர். ஒரு குறும்புக்கார இளைஞன் அந்த முனிவரால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்கத் திட்டமிட்டான். தன் உள்ளங்கையில் நடுவே ஒரு பட்டாம்பூச்சியை வைத்து இரு கைகளாலும் மூடியபடி அந்த முனிவரிடம் சென்றான்.

“முனிவரே. என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிருள்ளதா? உயிரற்றதா?” என்று முனிவரிடம் அவன் கேட்டான்.

அவர் அது உயிருள்ளது என்றால் கைகளால் அழுத்தி நசுக்கி அந்தப் பட்டாம்பூச்சியைக் கொன்று விட்டு ’பாருங்கள். உயிரில்லையே’ என்று சொல்ல நினைத்தான். அவர் அது உயிரற்றது என்று சொன்னால் அந்தப் பட்டாம்பூச்சியை ஒன்றும் செய்யாமல் கைகளைத் திறந்து பறக்க விட்டு “உயிருடன் இருக்கிறது பாருங்கள்” என்று சொல்ல நினைத்தான். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அந்த முனிவரால் சொல்ல முடியாத தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது தான் அவன் குறிக்கோள்.

அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த முனிவர் புன்னகையுடன் சொன்னார். “அது உயிருடன் இருப்பதும், இறப்பதும் உன் விருப்பத்தைப் பொருத்தது”

அது போல இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாவதும், மண்ணாங்கட்டிகளாவதும் அவர்களுடைய எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் பொருத்தது.

பதினாறு வயதில் அரபு வியாபாரிகளிடம் வேலைக்குச் சென்ற திருபாய் அம்பானி என்ற இளைஞன் மனதில் பெரியதொரு கனவிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் மன உறுதியும் இருந்தது. அதை நனவாக்க என்ன விலையும் தரவும் அந்த இளைஞன் தயாராக இருந்தான். அந்த இளைஞன் இந்திய வணிகத்துறையில் முடிசூடா மன்னனாக மாறியதை சரித்திரம் இன்று சொல்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற குஜராத்தி இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. ஒடிசலான உடல்பலமற்ற அந்த இளைஞன் வக்கீல் படிப்பு படித்த போதும் பெரிய வக்கீல் ஆகும் திறமை ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனதில் இருந்த அந்த அசைக்க முடியாத உறுதி இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சரித்திரம் படைத்தது. எத்தனையோ இளைஞர்கள் காந்தியடிகளால் கவரப்பட்டு விடுதலை வேட்கையுடன் சுதந்திரத்திற்காகப் போராட்டத்தில் குதித்தார்கள். ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ நடந்த ஒரே மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் உலக சரித்திரத்தில் பதிவாகியது.

சிறுவனாக இருந்த போது முதல் முறையாக திசை காட்டும் கருவி (காம்பஸ்) ஒன்றைப் பார்த்து அதிசயித்தான் ஐன்ஸ்டீன் என்ற அந்த சிறுவன். எப்படி திசையை மாற்றினாலும் அதிலிருந்த முள் வடக்கு நோக்கியே நகர்ந்ததைக் கண்டு, அப்படி அதை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் அறியத் துடித்தான். அவனுடைய அந்த ஆவல் விஞ்ஞானத் துறை நோக்கி அவனைப் பயணம் செய்ய வைத்தது. இளமை முழுவதும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அந்த அறிவியல் தாகம் சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக பின்னாளில் அவனை மாற்றியது. அது வரை இருந்த பல விஞ்ஞானக் கோட்பாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு புதிய சரித்திரம் படைத்தார் ஐன்ஸ்டீன்.

இப்படி வியாபாரமாகட்டும், ஆட்சியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், வேறெந்த துறையுமாகட்டும் இளைஞர்கள் இளமைக் காலத்தில் தங்கள் மனதில் விதைத்த கனவுகள், சிந்தித்த சிந்தனைகள், உழைத்த உழைப்புகள் எல்லாம் சேர்ந்து தான் பெருத்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.

இளமைக்காலம் விதைக்கும் காலம். கவிஞர் கண்ணதாசன் இளமைக்காலத்தை “கற்பூரப் பருவம்” என்பார். அந்தப் பருவத்தில் எதுவும் சீக்கிரம் இளம் மனங்களில் பற்றிக் கொள்ளுமாம். அந்தக் காலத்தில் இளைஞர்கள் தங்கள் இதயங்களில் எதை விதைக்கிறார்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், எதை அடையப் பாடுபடுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால் அதைப் பொறுத்தே அவர்கள் எதிர்காலத்தில் மாறுகிறார்கள்.

இளைஞர் சக்தி உலகில் பிரம்மாண்டமான சக்தி. அந்த சக்தி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறதா, அழிவை நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றதா, பயன்படுத்தாமலேயே புதைந்து போகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் முன்மாதிரிகளுக்கும், அவர்கள் மனதில் பதியும் நிகழ்வுகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இராமேசுவரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 16-8-1947 தேதிய தமிழ் நாளேட்டில் நாட்டு மக்களுக்கு பண்டித நேரு விடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை பதிவானதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தார். அந்தச் செய்திக்கு அருகிலேயே இன்னொரு செய்தியும் இருந்தது. நவகாளியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக மகாத்மா காந்தி வெறும் காலுடன் நடந்து போய்க் கொண்டிருந்த படத்துடன் விவரித்திருந்த அந்த செய்தி அப்துல் கலாமை மிகவும் நெகிழ வைத்து விட்டது. தேசத்தந்தை என்ற நிலையில் செங்கோட்டையில் முதன்முதலில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டிய மனிதர் அதை விட்டு விட்டு பொது சேவையில் தன்னை அந்தக் கணத்தில் ஈடுபடுத்திக் கொண்டது பள்ளி மாணவர் அப்துல் கலாம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்ததாக அவரே ஒரு புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். தன்னலமில்லா ஒரு விஞ்ஞானியாகவும், தலைவராகவும் பின்னாளில் அவர் உருவானதற்கான விதை என்று கூட அதைச் சொல்லலாம்.

“ரோமானியப் பேரரசின் ஏற்றமும், வீழ்ச்சியும்” என்ற நூலில் உலக நாகரிகத்தின் சிகரத்திற்கே சென்ற ரோமாபுரி மக்கள் உயர்ந்த விதத்தையும், வீழ்ச்சி அடைந்த விதத்தையும் வரலாற்றாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் கூறும் போது முக்கியமான காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் மதுவிலும், ஆடம்பரங்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார்ந்த சிந்தனைகளையும், உழைப்பையும் கைவிட்டதைக் குறிப்பிடுகிறார். விதையாக இருந்தவை எவை, விளைச்சலாக நேர்ந்தது என்ன என்பது சிந்திக்க வேண்டிய செய்தி. எனவே இந்த இளைஞர் சக்தி இன்று எந்த நிலையில் இருக்கிறது. எப்படி பயன்படுத்தப் படுகிறது, பதப்படுத்தப்படுகிறது என்பதில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் மனித குலம் மேம்பட பயன்படுத்தப்பட்ட கல்வி இன்று அந்த ஆரம்ப நோக்கத்திலிருந்து நிறையவே விலகி விட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கும் விஷயம். இன்று கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனமாக மட்டுமே மாறி விட்டது. ஏராளமான தகவல்களை மாணவர்களுக்குள்ளே திணிக்கிறதே ஒழிய அவர்களுடைய பண்புகளை வளர்ப்பதில் அலட்சியமே காட்டுகிறது. ஒரு காலத்தில் நல்ல விஷயங்களைச் சொல்ல நீதிப்பாடம் (Moral Science) என்று ஒரு பாடவகுப்பு இருந்தது. அதில் நீதிக்கதைகள், சான்றோர் பற்றிய செய்திகள், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறெல்லாம் மாணவர்களுக்கு சொல்லித் தருவார்கள். இன்று அது போன்ற பாடவகுப்புகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்த அறிவும் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றால் எது நன்மை, எது தீமை என்ற சிந்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அழிவே விளையும் என்பதற்கு இக்காலத்தில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அணுவைப் பிளந்து பெரும் சக்தியைக் கண்டு பிடிக்க விஞ்ஞானிகளால் முடிந்தது. ஆனால் அதை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்துவதை விட அதிகமாக அழிவுக்காக அல்லவா உலகம் அதிகம் பயன்படுத்துகிறது. அணுகுண்டாக விழுந்து அந்த அறிவு எத்தனை கோடி உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

இளம் வயதிலேயே எத்தனை இளைஞர்களை மதம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளை சிலர் உருவாக்கி அழிவை அரங்கேற்றுகிறார்கள். அந்த இளைஞர்களில் பலர் மிக நன்றாகப் படித்தவர்கள் என்பதை செய்தித்தாளில் படிக்கிற போது நம் மனம் பதைக்கிறது. மனிதத்தன்மையைக் கூட அவர்கள் கற்ற கல்வியால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லையே!

கவிஞர் கண்ணதாசன் குறள் வடிவில் ஒரு முறை நகைச்சுவையாக எழுதினார்.

கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே
தற்கால நாகரி கம்!

ஆனால் நம் முன்னோர் கல்வியை தகவல்களைச் சேர்க்கும் சாதனமாக நினைத்ததில்லை. சம்ஸ்கிருதத்தில் “தத் த்வித்யம் ஜன்மா” என்ற வாக்கியம் உண்டு. இதற்கு ’கல்வி இரண்டாம் பிறப்பு போன்றது’ என்று பொருள். படிப்பது இன்னொரு முறை பிறப்பது போல், புதுப்பிறவி பெறுவது போல் மேன்மையானது என்று நம் முன்னோர் நினைத்தார்கள். கல்வி கற்றவனை மேம்படுத்தி மற்றவனையும் மேம்படுத்தப் பயன்பட வேண்டும். அப்படிக் கல்வி கற்ற இளைஞர்களே வரலாறு படைக்கும் நாளைய மன்னர்களாகப் பரிணமிக்க முடியும்.

அப்படி இல்லாமல் வெறும் பட்டப்படிப்பு சான்றிதழுக்காகவும், வேலைக்காகவும் கற்கும் கல்வியை வைத்து நம் நாட்டில் இத்தனை பேர் கல்வி பெற்று விட்டார்கள் என்று புள்ளி விவரம் சொல்வது பேதைமை. கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்?

இக்காலக் கல்விமுறை பெரிதும் ஒருவரைப் பண்படுத்தப் பயன்படுவதில்லை என்ற போதும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. இக்காலக் கல்வியின் உதவியில்லா விட்டாலும் சிந்திக்க முடிந்த, நன்மை தீமை என்று பகுத்தறியக் கூடிய நல்ல இளைஞர்கள் இன்றும் கணிசமான அளவில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகள் இருந்தால், வழி நடத்தக் கூடிய பண்பாளர்கள் இருந்தால் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக கண்டிப்பாக மலர்வார்கள்.

நல்ல முன்மாதிரி என்று சொல்லும் போது நமக்கு அப்துல் கலாம் நினைவு தான் வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று மாணவர்களை சந்திக்கும் வழக்கம் உள்ள அவர் இளைய சமுதாயத்தில் பெரும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அவருக்கு இளைய சமுதாயத்தின் நாடித் துடிப்பை உணர முடிகிறது. அவர் அனுபவம் இன்றைய இளைஞர்கள் நாளைய நல்ல மன்னர்களாக மாறுவது சாத்தியமே என்று சொல்கிறது.

ஆனால் இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை அப்துல் கலாம் போன்றவர்களுக்கு ஒதுக்கி விட்டு மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் வேர்களை மறந்து அலைகிறார்கள். எந்திரம் போல வாழ்கிறார்கள். தீவிரவாதம் போன்ற அழிவுப் பாதையில் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்மால் முடிந்த வரை நல்ல முன்மாதிரிகளாக இருக்க முயற்சிக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் நாணயமான, பொறுப்புணர்வுள்ள மனிதர்களாக நாம் நடந்து கொண்டாலே போதும். நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்து வாழ்ந்தால் அது நல்ல சிந்தனை அலைகளை நம்மை சுற்றி ஆரம்பித்து வைக்கும். அந்த அலைகளால் உங்கள் வீட்டிலோ, நீங்கள் இருக்கும் பகுதியிலோ ஒரு இளைஞர் ஈர்க்கப்பட்டு நல்ல விதத்தில் மாறினாலும் அது பெரும் வெற்றியே. நம்மில் ஒவ்வொரு மனிதராலும் இப்படி நல்ல அலைகளை அனுப்ப முடிந்தால், இளைய சமுதாயத்திடம் நல்ல விதைகளை விதைக்க முடிந்தால் அதன் அறுவடையாக இன்றைய இளைஞர்களை நாளைய வரலாற்றை மேன்மையான முறையில் எழுதும் மன்னர்களாக நாம் காண முடிவது நூறு சதவீதம் சாத்தியமே!

-என்.கணேசன்
நன்றி: ஈகரை

(ஈகரை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை)