"எல்லா காலங்களுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமாக வழி காட்டக்கூடிய ஒரு சுருக்கமான மந்திரமோ, வாக்கியமோ இருக்கிறதா?" என்று ஒரு சக்கரவர்த்தி தன் சபையில் இருந்த அறிஞர் பெருமக்களைக் கேட்டார்.
சர்வரோகங்களுக்கும் ஒரே நிவாரணி என்கிற மாதிரி அவர் கேட்டதற்கு அந்த அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி சிந்தித்தார்கள். பலரும் பலதைச் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாகத் தோன்றியது இன்னொன்றிற்கு அபத்தமாகத் தோன்றியது. எனவே அவற்றையெல்லாம் அவர்கள் ஒதுக்கி விட்டார்கள்.
கடைசியில் ஒரு முதிய அறிஞர் ஒன்று சொல்ல அவர்களுக்கு அதுவே சரியான வாசகமாகப் பட்டது. அதை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்தனர். "அரசே! நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இதில் உள்ளது. ஆனால் இதை நீங்கள் இப்போது படிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழ்நிலையில் தான் எடுத்துப் படிக்க வேண்டும்" என்றனர்.
சக்கரவர்த்தியும் அதை ஏற்றுக் கொண்டு அதை ஒரு வைர மோதிரத்தின் அடியில் வைத்துக் கொண்டு அதை விரலில் மாட்டிக் கொண்டார். சில காலம் கழித்து பக்கத்து நாட்டுடன் போர் மூள அந்தச் சக்கரவர்த்தி போரில் படு தோல்வி அடைந்தார். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தப்பியோட வேண்டியதாயிற்று. எதிரிப்படையினர் துரத்தி வர ஒரு காட்டுப் பாதையில் ஓடிய சக்கரவர்த்தி ஓரிடத்தில் அப்பாதை முடிந்து ஒரு பெரிய பள்ளத்தாக்கு தான் அதற்குப் பின் இருந்ததைக் கண்டார். மேலே போக வழியில்லை. பின் செல்லவும் வழியில்லை. தொலைவில் எதிரி வீரர்கள் வரும் காலடி ஓசை வேறு கேட்டது.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று கலங்கிய சக்கரவர்த்திக்கு அந்த அறிஞர்கள் தந்த வாசகம் பற்றிய நினைவு வர வைர மோதிரத்தினடியில் இருந்த அந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் எழுதியிருந்தது-"இதுவும் கடந்து போகும்". அதை மீண்டும் படித்தார். மனதில் பொறி தட்டியது.
சில நாட்களுக்கு முன் அவர் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். எல்லா செல்வமும், படைபலமும் அவரிடம் இருந்தன. அவை எல்லாம் இன்று அவரைக் கடந்து போய் விட்டன. இன்று தோல்வியும், தனிமையும் மட்டுமே இருக்கின்றன. இதுவும் ஒரு கட்டத்தில் போகுமல்லவா?.... சிந்திக்க சிந்திக்க சொல்லொணா அமைதி அவரை சூழ்ந்தது. லேசான மனதுடன் எதிரிகளை எதிர்நோக்கி நின்றார். ஆனால் எதிரி வீரர்கள் காட்டின் மற்றொரு பாதையைத் தேர்ந்தெடுத்து அவரைத் தேடுவது, குறைந்து வந்த அவர்கள் காலடியோசை மூலம் தெரிந்தது.
கடைசியில் தப்பித்து தன் நேச நாடுகளின் உதவி கொண்டு மீண்டும் படைகளைத் திரட்டி போரிட்டு எதிரிகளைத் தோற்கடித்து அவர் பெருவெற்றி பெற்றார். நாட்டு மக்களின் வாழ்த்தும், வெற்றி வாகை சூடிய பூரிப்பும் சேர்ந்த போது அவருக்கு மனதில் கர்வம் வந்தது. "அப்படி சுலபமாக நான் விட்டுக் கொடுத்து விடுவேனா? என்னை வெல்வது யாருக்கும் சாத்தியமா?". அந்த எண்ணம் வர வர சூரிய ஒளிபட்டு அவர் வைர மோதிரம் பளீரிட்டது. படிக்காமலேயே அந்த செய்தியை அது நினைவூட்டியது. "இதுவும் கடந்து போகும்". அந்தக் கணத்தில் அவர் கர்வம் நீங்கியது. அன்றிலிருந்து அவர் வாழ்க்கையில் அந்த வாக்கியம் தாரக மந்திரம் ஆகியது. அமைதி குறையாத அரசரென அவர் எல்லோராலும் பாராட்டு பெறும்படி ஆட்சியையும் வாழ்க்கையையும் நடத்தினார்.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.
தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள். நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.
-என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, February 27, 2009
Monday, February 23, 2009
வைக்கோல்போராய் இருக்காதீர்கள்!
வைக்கோல்போர் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? கொழுந்து விட்டு எரியும் அந்தப் பெரும்தீ அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமாய் தெரியும். தகதவென்று பிரம்மாண்டமாய் எரியும் அந்த செந்தழல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அணைந்து போயிருக்கும். பின் ஒளியும் இல்லை. வெப்பமும் இல்லை.
பலருடைய ஆர்வமும் அந்த வைக்கோல்போரைப் போல் தான். திடீரென்று தோன்றி ஜொலித்து பிரம்மாண்டமாய் தெரிந்து அவர்களை சாகசம் புரிய வைக்கும். அந்த சமயத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு இவர்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆளாக, வெற்றியாளராக வருவார் என்று தோன்றுமளவு அவர்களது உற்சாகமும் திறமையும் இருப்பதுண்டு. நானும் அப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பெரிதாக அவர்களிடம் எதிர்பார்திருக்கிறேன். ஆனால் சில காலம் கழித்து அவர்களைச் சந்தித்த போது அந்த சுவட்டைக் கூட என்னால் பார்க்க முடிந்ததில்லை.
அவர்களிடம் அதை நினைவுபடுத்திக் கேட்டால் "அதெல்லாம் ஒரு காலம்" என்பது போன்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் வேறொரு துறையில் இதே ஆர்வத்துடன் அவர்கள் எதையோ செய்து கொண்டிருப்பார்கள். இன்னொரு வைக்கோல்போர்.... எல்லாம் சொற்பகாலப் பிரகாசமே.
அது போன்ற நபர்கள் எல்லாம் சராசரிக்கும் மேற்பட்ட அறிவு கூர்மையுடையவர்களே. சில சமயங்களில் அசாதாரண திறமைசாலிகளே. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறை திடீரென்று சலித்துப் போவதே. கைதட்டல்களும், பாராட்டும் குறைய ஆரம்பிக்கும் போது அவர்கள் ஈடுபாடும், முயற்சியும் கூடக் குறைந்து போகிறது. அவர்களுக்கு அதில் சலிப்பேற்பட்டு விடுகிறது. ஒரு த்ரில் இருப்பதில்லை. ஆரம்பித்தில் இருந்த 'inspiration' பிறகு இருப்பதில்லை. மனம் இயல்பாகவே வேறொன்றை நாட ஆரம்பிக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான காரணம் சொல்லத் தெரிவதில்லை.
அவர்களை விடக் குறைந்த திறமை உள்ளவர்கள் சோபிக்கும் போது மட்டும் அவர்களுக்குக் கோபம் வருகிறது. 'இவனெல்லாம் இன்னைக்கு இதில பெரிய ஆள். எல்லாம் நேரம் தான்' என்று புலம்புவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் இவர்கள் ஒரு மிகப் பெரிய உண்மையை மறந்து விடுகிறார்கள். 'ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டுப் போனவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை'. இவர்களை விடத் தகுதி குறைவாக இருந்தாலும் பாதியில் விடைபெற்று விடாமல் தாக்குப் பிடித்திருக்கிறான் என்பதே அந்த சோபித்தவனுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.
கொலம்பஸ் தன்னுடைய உலகப் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி திரும்பிச் சென்றிருந்தால் அவர் பெயர் சரித்திரத்தில் நின்றிருக்குமா? இத்தனைக்கும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழியில் பல பிரச்சினைகள். கப்பலில் அவருடன் வந்த மாலுமிகளும் பாதியில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பித்த பயணத்தை ஒரு உறுதியுடன் அவர் முடித்ததால் தான் அவரை உலகம் நினைவில் வைத்துள்ளது.
Inspiration' தோன்றும் போது மட்டும் ஈடுபடுகிற போது நீங்கள் வைக்கோல்போர் போல் எரிகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். "Inspiration" என்பது ஒரு துவக்கம் மட்டுமே. அது ஒரு ஆரம்ப அக்னியே. ஆனால் அந்த அக்னியைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிற வேலையை உலகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஒருநாள் உலகம் உங்களைப் பாராட்டலாம். அன்று உண்மையில் உள்ளே உள்ள அக்னி பிரகாசமாய் ஜொலிக்கலாம். ஆனால் மறுநாள் உலகம் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பக் கூடும். இல்லையில் உங்களை அது விமரிசிக்கக் கூடச் செய்யலாம்.
அப்போதும் உள்ளே உள்ள அக்னியை அணையாமல் காத்துக் கொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ள துறையில் தாக்குப் பிடிக்க வேண்டும். மற்றவர்களது கருத்துக்களை விடவும் அதிகமாய் உங்கள் நம்பிக்கையும், உறுதியும் இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடிகிற போது தான் நீங்கள் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க முடியும்.
அதற்கு ஒரே ஒரு ராஜ மார்க்கம் தான் உள்ளது. உங்களுக்குத் திறமை உள்ளது என்று நம்பும் துறையில் சதா உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதில் அடுத்தவர்கள் கவனிக்கா விட்டாலும் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டே இருங்கள். அதில் சாதித்தவர்களைப் பார்த்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மனம், சொல், செயல் என்று தினமும் நம்பிக்கையுடன் ஈடுபடுகிற போது தான் உள்ளே உள்ள அக்னி அணையாமல் காக்கப் படுகிறது. உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
-என்.கணேசன்
நன்றி: யூத்·புல் விகடன்
Friday, February 20, 2009
ஆன்மீகவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை!
இன்று ஆன்மீகம் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தைப் பலரும் மறந்து விட்டதாகவே தோன்றுகிறது. ஆன்மீகம் என்ற பெயரில் அக்கிரமங்களும், கேலிக்கூத்துகளும் தினம் தினம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மேஜிக் வித்தை காண்பிப்பவர்கள் சக்தி வாய்ந்த சாமியார்களாக வணங்கப்படுகிறார்கள். நான் தான் கடவுள் என்று யார் யாரோ பிரகடனம் செய்து கொள்கிறார்கள். அவர்களை ஓடிச் சென்று வணங்க மக்கள் கூட்டம் தயாராகவே இருக்கிறது.
இந்த தேசம் உண்மையான ஆன்மீகத்தின் பிரசவ பூமி. எத்தனையோ மதங்கள் இங்கு ஜனித்திருக்கின்றன. எத்தனையோ உண்மையான மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆன்மீகத் தேடல்களுடன் இங்கு வந்த எத்தனையோ மேலைநாட்டார் கூட தங்கள் தேடல்களுக்கு இங்கு விடை கண்டு இந்த தேசத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த தேசத்தில் இன்று நடக்கும் கூத்துகள் மனம் நோகவே வைக்கின்றன.
தெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும், பொருளும், புகழும் வெறும் தூசியே. எல்லையில்லாத பரம்பொருளைக் கண்டவர்களை எல்லைகளை உடைய, அழிய முடிந்த இந்த விஷயங்கள் என்றுமே ஈர்ப்பதில்லை. (பொக்கிஷமே கிடைக்கப்பெற்றவன் கிளிஞ்சல்களையும் கூழாங்கற்களையும் சேகரிக்க முற்படுவானா?) இதுவே உண்மையான துறவிகள், மகான்களுடைய அளவுகோல். இந்த அளவுகோலுக்கு உயர முடியாதவர்கள் சாதாரணமானவர்களே.
ஆன்மீகவாதிகளே! இன்றைய பெரும்பாலான சாமியார்கள், கடவுள்களாக பிரகடனப்படுத்திக் கொள்பவர்களை எல்லாம் இந்த அளவுகோலால் அளந்து தெளியுங்கள். சென்று வணங்குபவர்களிடம் வசூல் செய்பவர்கள், விளம்பரம் தேடுபவர்கள் எல்லாம் இன்னும் பொருளாசையும், புகழாசையும் துறக்க முடியாதவர்கள் தானே? நம்மைப் போலவே பலவீனங்கள் உள்ளவர்களைப் பக்தியுடன் வணங்க என்ன இருக்கிறது?
இன்றைய சில சாமியார்கள் மேஜிக் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். மாயமாக என்னென்னவோ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தால் கைதட்டி வாழ்த்தலாம். இதை எத்தனையோ மேஜிக் நிபுணர்களும் கூட செய்கிறார்களே. அவர்களை எல்லாம் வணங்கி பக்தகோடிகளாக மாறுகிறீர்களா? இல்லையே. இதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள் பக்தர்களாக மாறுவது எதற்காக? அவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால் அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்ன, பக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக் கொடுத்தால் என்ன? உண்மையான ஆன்மீகத்திற்கு சித்து வித்தைகள் தேவையில்லை.
சிலர் மதநூல்களைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். அதை சரளமாக மேற்கோள் காட்டுவார்கள். அதுவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அவர்களையும் வணங்கி வழிபடுவதற்கு முன் அவர்கள் காட்டுகிற மேற்கோள்கள் படி வாழ்கிறார்களா என்று கவனியுங்கள். மனப்பாடம் செய்வதெல்லாம் பெரிய விஷயமல்ல. இன்றைய பள்ளிக் குழந்தைகள் கூட அதில் அதிசமர்த்தர்கள். கஷ்டமான பகுதி வாழ்ந்து காட்டுவது தான். நீங்கள் சாமியார்களாக வணங்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று முதலில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். பின் வணங்க முற்படுங்கள்.
உண்மையான ஆன்மீகம் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள். படிப்படியாக ஆசைகளை அறுத்தல், சுயநலமொழித்தல், அன்பே வடிவமாதல், விருப்பு வெறுப்பில்லாத சமநோக்குடன் இருத்தல், எளிமையாகவும் பணிவாகவும் இருத்தல் இவையெல்லாம் தான் உண்மையான ஆன்மீகத்தின் அடையாளங்கள். இவைகள் உள்ளனவா என்று தெரியாமல் ஒருவரை மகானாகவும், கடவுளாகவும் ஆக்கி விடாதீர்கள். ஆராய்ந்து தெளியாத நம்பிக்கை ஆபத்தானது. எனவே ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன் அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.
-என்.கணேசன்
இந்த தேசம் உண்மையான ஆன்மீகத்தின் பிரசவ பூமி. எத்தனையோ மதங்கள் இங்கு ஜனித்திருக்கின்றன. எத்தனையோ உண்மையான மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆன்மீகத் தேடல்களுடன் இங்கு வந்த எத்தனையோ மேலைநாட்டார் கூட தங்கள் தேடல்களுக்கு இங்கு விடை கண்டு இந்த தேசத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த தேசத்தில் இன்று நடக்கும் கூத்துகள் மனம் நோகவே வைக்கின்றன.
தெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும், பொருளும், புகழும் வெறும் தூசியே. எல்லையில்லாத பரம்பொருளைக் கண்டவர்களை எல்லைகளை உடைய, அழிய முடிந்த இந்த விஷயங்கள் என்றுமே ஈர்ப்பதில்லை. (பொக்கிஷமே கிடைக்கப்பெற்றவன் கிளிஞ்சல்களையும் கூழாங்கற்களையும் சேகரிக்க முற்படுவானா?) இதுவே உண்மையான துறவிகள், மகான்களுடைய அளவுகோல். இந்த அளவுகோலுக்கு உயர முடியாதவர்கள் சாதாரணமானவர்களே.
ஆன்மீகவாதிகளே! இன்றைய பெரும்பாலான சாமியார்கள், கடவுள்களாக பிரகடனப்படுத்திக் கொள்பவர்களை எல்லாம் இந்த அளவுகோலால் அளந்து தெளியுங்கள். சென்று வணங்குபவர்களிடம் வசூல் செய்பவர்கள், விளம்பரம் தேடுபவர்கள் எல்லாம் இன்னும் பொருளாசையும், புகழாசையும் துறக்க முடியாதவர்கள் தானே? நம்மைப் போலவே பலவீனங்கள் உள்ளவர்களைப் பக்தியுடன் வணங்க என்ன இருக்கிறது?
இன்றைய சில சாமியார்கள் மேஜிக் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். மாயமாக என்னென்னவோ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தால் கைதட்டி வாழ்த்தலாம். இதை எத்தனையோ மேஜிக் நிபுணர்களும் கூட செய்கிறார்களே. அவர்களை எல்லாம் வணங்கி பக்தகோடிகளாக மாறுகிறீர்களா? இல்லையே. இதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள் பக்தர்களாக மாறுவது எதற்காக? அவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால் அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்ன, பக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக் கொடுத்தால் என்ன? உண்மையான ஆன்மீகத்திற்கு சித்து வித்தைகள் தேவையில்லை.
சிலர் மதநூல்களைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். அதை சரளமாக மேற்கோள் காட்டுவார்கள். அதுவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அவர்களையும் வணங்கி வழிபடுவதற்கு முன் அவர்கள் காட்டுகிற மேற்கோள்கள் படி வாழ்கிறார்களா என்று கவனியுங்கள். மனப்பாடம் செய்வதெல்லாம் பெரிய விஷயமல்ல. இன்றைய பள்ளிக் குழந்தைகள் கூட அதில் அதிசமர்த்தர்கள். கஷ்டமான பகுதி வாழ்ந்து காட்டுவது தான். நீங்கள் சாமியார்களாக வணங்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று முதலில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். பின் வணங்க முற்படுங்கள்.
உண்மையான ஆன்மீகம் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள். படிப்படியாக ஆசைகளை அறுத்தல், சுயநலமொழித்தல், அன்பே வடிவமாதல், விருப்பு வெறுப்பில்லாத சமநோக்குடன் இருத்தல், எளிமையாகவும் பணிவாகவும் இருத்தல் இவையெல்லாம் தான் உண்மையான ஆன்மீகத்தின் அடையாளங்கள். இவைகள் உள்ளனவா என்று தெரியாமல் ஒருவரை மகானாகவும், கடவுளாகவும் ஆக்கி விடாதீர்கள். ஆராய்ந்து தெளியாத நம்பிக்கை ஆபத்தானது. எனவே ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன் அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.
-என்.கணேசன்
Tuesday, February 17, 2009
கண்களைத் திறந்து காதலிக்கவும்...!
காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஒரு அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல. மனங்க¨ளைக் கோர்த்து இணைவது காதல். ஆசைப்பார்வைகள் காதல் அல்ல. மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல். ஆனால் இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.
காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற ·பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஒரு இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால் உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான்.
திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது. இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.
முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியா விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை.
உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால் அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.
-என்.கணேசன்
நன்றி: யூத்·புல் விகடன்
Friday, February 13, 2009
எதற்கும் தயாராக இருங்கள்
'Positive Thinking' மற்றும் 'Positive Approach' பற்றி எல்லோரும் ஏராளமாக எழுதியும் சொல்லியும் ஆகி விட்டது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில் நல்லதே பெருகக் காண்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நல்லதையே எதிர்பார்த்திருந்து விட்டு நல்லது நடக்காமல் போகையில் ஏமாற்றத்தின் அளவும் அதிகமாகவே ஆகி விடுகிறது. எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது மனக்கசப்பு தான் அதிகம் மிஞ்சுகிறது. அப்படியானால் பாசிடிவ் அப்ரோச் என்கிற வழியே தவறா?
இல்லை. 'Positive Thinking/Approach' என்பது உண்மையில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நடப்பதை எல்லாம் நமக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அணுகுமுறையே. எது நடந்தாலும் தளர்ந்து விடாமல் சந்திக்கத் தயாராக இருப்பதே அதன் குறிக்கோள்.
எத்தனை தான் படித்தும், கேட்டும், சிலாகித்தாலும் தினசரி வாழ்க்கையினை சந்திக்கும் போது பல சமயங்களில் பெரும்பாலானோரது Positive Thinking/Approach எல்லாம் தகர்ந்து போய் விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. அதற்கு என்ன செய்வது?
தத்துவஞானியும், ரோமானியச் சக்கரவர்த்தியுமான மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய டைரியில் தான் இன்று நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் சந்திக்கக்கூடும் மன அமைதியை இழக்க வைக்கக்கூடிய சம்பவங்களில் சிக்கக்கூடும் என்பது போன்ற பிரச்சினையான சாத்தியக்கூறுகளை எழுதி வைத்து விட்டு, தினமும் காலை அதைப் படித்து விட்டுத் தான் தன் நாளைத் தொடங்குவாராம். ராஜ்ஜியம் பரிபாலனம் செய்யும் சக்கரவர்த்தி இயல்பாக சந்திக்கக் கூடிய அது போன்ற சாத்தியக்கூறுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்து, அவற்றை கையாள வேண்டிய வழிமுறைகளையும் யோசித்தும் வைத்திருந்த அவரது தயார் நிலை அவர் மன அமைதியை இழக்காமல் காத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.
பிரச்சினைகளும் சவால்களும் தான் பலரை நிலைகுலைய வைக்கின்றன என்றில்லை. பழகிப் போன ஒரு வாழ்க்கை முறை மாறத் துவங்கும் போதும் அந்த மாற்றத்தை பலர் சங்கடமாகவே நினைக்கின்றனர். உலகில் மாற்றம் ஒன்றே நிச்சயம் என்பது மாபெரும் உண்மை. அப்படி இருக்கையில் மாற்றம் நிகழும் போது தயார்நிலையில் இல்லாமல் இருப்பதும், மாற்றமே கூடாது என ஆசைப்படுவதும் அறிவீனம் அல்லவா?
எனவே எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்திருங்கள். மாறுதல் நிகழும் போது அதை உற்சாகமாக எதிர்கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமுள்ள மாற்றங்களும் நிகழ்வுகளும் மட்டுமே ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகம் உங்கள் விருப்பப்படி இயங்குவதில்லை. எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன. அவை நடக்கையில் சிணுங்குவதும் குமுறுவதும் வாழ்க்கை ஓட்டத்தை எளிதாக்குவதற்கு பதிலாக மேலும் மோசமாக்குகின்றன.
எனவே நல்லதே எண்ணுங்கள். நல்லதையே வாழ்க்கையில் பிரதானப்படுத்துங்கள். ஆனால் விதி உங்களை முன்னேற்றவும், பதப்படுத்தவும் எதிர்பாராத சிக்கல்களை உங்கள் வழியில் அனுப்பி வைக்கக்கூடும். அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருங்கள். வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வருவதை சந்தித்து மனதைப் பாழாக்கி, மூளையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக தெளிந்த மனத்துடன் மூளையைக் கூராக்கி இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுக் கொண்டால் எதனாலும், யாராலும் உங்கள் முன்னேற்றம் தடைப்படுவதில்லை.
- என்.கணேசன்
Monday, February 9, 2009
ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்
ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.
கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?"
"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன்.
"ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான்.
மற்றவர்கள் தருவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருவர் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. எதையும் ஏற்றுக் கொள்வதும், ஏற்க மறுப்பதும் நம் விருப்பப்படி இருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளாதது புத்தர் கூறியது போல நம்முடையதாகாது. ஆனால் பொதுவில் நம்மில் பெரும்பாலானோர் மற்றவர் தருவதை எல்லாம் ஏற்றுக் கொண்டு கோபமோ, வருத்தமோ பட்டு, புலம்பி, பதில் என்ற பெயரில் என்னென்னவோ சொல்லி வருந்தி, மற்றவர்களையும் வருத்தி செய்யும் அனர்த்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நம்மையும் அறியாமல் நாம் அடுத்தவர் கைப்பாவை ஆகி விடுகிறோம் என்பதை விலகி நின்று பார்த்தால் நம்மால் உணர முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
ஒருவர் கூறுவதில் உண்மை உள்ளதா என்று மட்டும் சிந்தித்து உண்மை இருந்தால் ஏற்றுக் கொண்டு நம்மை சரி செய்து கொள்வதே புத்திசாலித்தனம். உண்மையில்லாதவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து புத்தரைப் போல புன்னகை செய்து நகர்வதே தக்க பதில். இப்படிச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். இது இயல்பாக உங்களுக்கு முடியும் போது மற்றவர்கள் மதிப்பில் உயர்வீர்கள். தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பீர்கள். மன அமைதி அடைவீர்கள்.
- என்.கணேசன்
Wednesday, February 4, 2009
முடியாதது முயலாதது மட்டுமே
ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.
அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.
ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.
ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.
இளைஞர்களே, உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை.
- என்.கணேசன்