Tuesday, May 27, 2008

கடுகை மலையாக்காதீர்கள்!



உள்ளதை உள்ளபடி பார்ப்பது மிக நல்ல குணம். ஆனால் இதை மிக அபூர்வமாகவே நாம் சமூகத்தில் காண முடிகிறது.

சிறிய காய்ச்சல் வந்தால் தனக்குத் தெரிந்த ஓரிருவர் சமீபத்தில் டைபாய்டில் படுத்தது நினைவுக்கு வர, முதல் நாள் அது டைபாய்டாக இருக்குமோ என்று சந்தேகித்து, இரண்டாம் நாள் அது டைபாய்டு தான் என்று நம்பி, மூன்றாம் நாள் படுத்த படுக்கையாகி அவதிப்படும் ஆட்கள் பலர் உண்டு.

ஆகாதவர்கள் யதார்த்தமாய் சொன்ன சொல்லிற்கு எல்லாம் உள்ளர்த்தம் உள்ளதாய் நம்பி, என்னவாக இருக்கும் என்று கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டு, பல அர்த்தங்கள் கண்டுபிடித்து 'பில்டப்' செய்து, பிரம்மாண்டமாக்கி தனக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டதாக நம்பி மனம் கொதிக்கும் நபர்கள் பலர் உண்டு.

தனது ஒவ்வொரு வெற்றியிலும் பக்கத்து வீட்டுக்காரன் பொறாமை கொள்வதாக நம்பி, அவனைக் கூர்ந்து பார்த்து அவன் பேச்சுக்கும், முகபாவனைகளுக்கும் பொறாமைக்கான சுவடுகளைக் கண்டுபிடித்து மனம் குமுறும் ஏராளமானவர்களை நான் தினமும் பார்க்கிறேன். (அதற்குப் பிறகு சின்னக் காய்ச்சல் வந்தால் கூட அவன் வயிற்றெரிச்சலும் பொறாமையும் தான் காரணம். இனி அவனை சந்திக்க வேண்டுமென்றால் மந்திரித்துக் கட்டிய தாயத்துடன் தான்).

இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

இந்தக் கடுகை மலையாக்கும் வித்தைக்கு அடிப்படை கற்பனையே.

கற்பனை மனிதனுக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம். அதை நல்ல முறையில் பயன்படுத்துகையில் கதையாக, கவிதையாக, கட்டுரையாக, நல்லிசையாக, ஓவியமாக, புதிய கண்டுபிடிப்பாக வெளிப்படுகின்றது. பலரும் ரசித்து, பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இந்த வகைப்பட்ட கற்பனையின் விளைவுகள் காலத்தை மிஞ்சி அமரத்துவம் பெறுகின்றன.

ஆனால் சந்தேகம், பயம், பொறாமை, கோபம் முதலியவற்றோடு அந்த கற்பனைத் திறனை சேர்க்கும் போது தான் கடுகு மலையாகிறது. அர்த்தம் அனர்த்தமாகிறது. உறவுகள் விரிசல் அடைகின்றன. மாறுபட்ட கருத்து பகைமையாகிறது. இந்த வகைக் கற்பனை சொல்லொணா துயரங்களுக்கு காரணமாகின்றது.

எனவே உங்களுக்கு உள்ளும் வெளியும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால் கடுகை மலையாக்காதீர்கள். உள்ளதை உள்ளபடியே பாருங்கள். அப்படிப் பார்க்கையிலும் குறைகளையும், பிரச்சினைகளையும் நாம் பார்க்கக்கூடும். ஆனால் நாமாக பெரிதாக்காத வரை அவற்றை ஏற்றுக் கொள்வதும் சமாளிப்பதும் இன்றல்லா விட்டாலும் நாளையாவது சுலபமாகும்.

-என்.கணேசன்

Wednesday, May 21, 2008

படித்ததில் பிடித்தது - WISHING


உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. நீங்கள் இன்று விதைக்கும் விதைகள் பலமடங்கு பெருகி பலனளிக்கப் போகிறது. ஆனால் நீங்கள் என்ன விதைக்கப் போகிறீர்கள்? உங்கள் சந்ததியருக்கு என்ன விட்டுச் செல்லப் போகிறீர்கள்?

இந்தக் கவிதையில் மிக அழகாக ஆசைப்படுவதை ஆக்கும் சக்தி உங்களிடம் இருப்பதாக கவிஞர் சொல்கிறார். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நன்மைகளை விதைக்க ஆரம்பித்தால் இந்த பூமி சொர்க்கமாகி விடும் என்கிறார். படித்து வாழ்க்கையிலும் சில மாறுதல்களைக் கொண்டு வர முயல்வோமே!

என்.கணேசன்


WISHING

Do you wish the world were better?
Let me tell you what to do:
Set a watch upon your actions,
Keep them always straight and true;
Rid your mind of selfish motives;
Let your thoughts be clean and high.
You can make a little Eden
Of the sphere you occupy.

Do you wish the world were wiser?
Well, suppose you make a start,
By accumulating wisdom
In the scrapbook of your heart:
Do not waste one page on folly;
Live to learn, and learn to live.
If you want to give men knowledge
You must get it, ere you give.

Do you wish the world were happy?
Then remember day by day
Just to scatter seeds of kindness
As you pass along the way;
For the pleasures of the many
May be ofttimes traced to one,
As the hand that plants an acorn
Shelters armies from the sun.

- Ella Wheeler Wilcox

Wednesday, May 14, 2008

விமரிசனங்களால் வீழ்ந்து விடாதீர்கள்!


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இது தானடா.

வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவர் கேட்டால் நடிப்பென மறுக்கும்.

இது ஒரு பழைய தமிழ்ப் படப் பாடலின் வைர வரிகள். இப்படி மற்றவர்களை ஆராய்வதையே தங்கள் வாழ்வின் இலக்காக வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி ஆராய்ந்து மற்றவர்களின் குறைகளையோ, பலவீனத்தையோ கண்டு பிடித்து விட்டால் அதை மகிழ்ச்சியோடு பலரிடமும் சொல்லி திருப்தியடைகிறார்கள். அதே நேரத்தில் அதே மற்றவர்களின் நிறைகளையோ, பலங்களையோ கண்டாலும் காணாதது போல இவர்களால் இருந்து விட முடிகிறது.

தங்களை விட உயரத்தில் உள்ளவர்களைக் கண்டு வயிறெரிவதும் அந்த உயர்வு ஒன்றும் பெரிய விஷயம் இல்லையென்று குறைத்துச் சொல்வதும் இவர்களது இயல்பு. "நான் மட்டும் மனசு வச்சிருந்தா இவங்களை விட நாலு மடங்கு மேல இருந்திருப்பேன்". அதே நேரத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப் பார்த்தாலோ ஏளனமே செய்வார்கள். தங்கள் உயர்ந்த நிலைக்குக் காரணம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான் என்றும் தாழ்ந்தவர்கள் முன்னேறாததற்குக் காரணம் இந்த இரண்டும் இல்லாதது தான் என்பதும் இவர்கள் கருத்துக் கணிப்பாக இருக்கும். "எதுவுமே சுலபமா கிடைச்சுடுங்களா? நான் எல்லாம் இந்த நிலைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன், எத்தனை பிரச்சினைகளைச் சந்திச்சுருக்கேன்கிறது எனக்கும் கடவுளுக்கும் தான் தெரியும்".

இப்படி அடுத்தவனையே கவனித்து விமரிசனம் செய்து கொண்டிருப்பவர்கள் சாதனையாளர்களாக இருப்பதில்லை என்பது மிகப் பெரிய உண்மை. சாதனையாளர்கள் தங்களுக்குள் ஒரு திறமையைக் கண்டு, அதை மெருகேற்றி, கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்கிறார்கள். இப்படி அவர்களுடைய கவனமெல்லாம் உள்முகமாக இருப்பதால் அடுத்தவரை ஆராய அவர்களுக்கு நேரமோ, ஆர்வமோ இருப்பதில்லை. மாறாக மற்றவர்களை விமரிசித்தே வாழ்பவர்களுக்கு கவனமெல்லாம் அடுத்தவர் மேலேயே இருப்பதால் தங்கள் திறமையை வளர்த்தவோ சாதிக்கவோ முடிவதில்லை.

இவ்வாறாக விமரிசனத்தையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் நல்லதைச் செய்யவோ, நல்லதை மெச்சவோ முடியாத பலவீனர்கள். குற்றம் மட்டுமே கண்டு பிடித்து வாழும் வீணர்கள். இப்படிப் பட்டவர்கள் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்வதே முட்டாள்தனம்.

அடுத்தவர்களையே கவனித்து தங்கள் வாழ்க்கையைக் கோட்டை விட்டுக் கொண்டு இருக்கும் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். ஆனால் அவர்கள் விமரிசனத்தை சீரியசாக எடுத்து மனம் வருந்தும் நபர்களாக நாம் இருந்து விட்டால் அவர்களை விட பரிதாபத்துக்குரியவர்களாக நாம் மாறி விடுவோம். இந்த இரண்டாம் வகையினராய் நாம் இருக்க வேண்டாமே. நமது காலத்தையும், மன அமைதியையும் வீணாக்க வேண்டாமே.

வாழ்க்கைப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று கொண்டு ஓடுபவர்களைப் பார்த்து விமரிசித்து நிற்கும் அவர்கள் பேச்சை காதில் வாங்கி நம் ஓட்டத்தை சிறிதே நிறுத்தினாலும் நாம் பந்தயத்தில் பின் தங்கி விடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே விமரிசகர்களையோ, விமரிசனங்களையோ பொருட்படுத்தாதீர்கள். நமது வாழ்க்கைப் பந்தயத்தின் ஓட்டத்தையோ, சாதனையையோ மட்டுப்படுத்த அவர்களை அனுமதித்து விடாதீர்கள்.

- என்.கணேசன்

Wednesday, May 7, 2008

அடி மேல் அடி விழும் போது....

துரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல முனைத் தாக்குதல் வரும் போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாத போது மனிதன் உடைந்து போவது இயல்பே. இந்த சந்தர்ப்பங்களில் 'குடி' போன்ற தற்காலிக மறதிக்கான வழிகளை சிலர் நாடி அதை நியாய்ப்படுத்துவதும் உண்டு. ஒருசிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தத் தீர்வு காண முனைவதும் உண்டு.

அப்படி தற்கொலை முடித்தவர் தான் பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேலை நாட்டுக்காரர். 32 வயதில் திவாலாகி வாழ்வில் எல்லா நம்பிக்கையும் இழந்து, ஒரு டிசம்பர் இரவில் கொட்டும் பனியில், லேக் மிச்சிகன் என்ற பரந்த நீர்நிலையில் குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி வந்தார். அந்த தண்ணீரில் குதிக்கும் முற்பட்டவர் அதில் பிரதிபலித்த நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்த்தார். அந்த அழகு அவர் மனதை அசைக்க அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார்.

கொட்டும் பனி, மின்னும் நட்சத்திரம், பரந்த வானம் எல்லாம் கண்டபோது பிரபஞ்சத்தின் எல்லையில்லாத அமைதியான பேரழகில் ஒரு கணம் அவர் மனம் லயித்தது. அந்த நேரத்தில் பிரபஞ்சம் அவருக்கு ஒரு செய்தியைச் சொன்னதாக அவர் உணர்ந்தார். "உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை. நீ உன்னுடையவன் அல்ல. என்னுடையவன்."

தன்னைப் பிரபஞ்சத்தின் அங்கமாக உணர்ந்த அந்தக் கணம் அவர் வாழ்வின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். வயது முதிர்ந்து அவர் இறந்த போது அவருக்கு கணித மேதை, பொறியாளர், கவிஞர், கட்டிடக்கலை நிபுணர் என்ற பல அடைமொழிகளும், 170 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர் என்ற புகழும் இருந்தது.

32 வயதில் அனைத்து வழிகளும் மூடப்பட்டதாய் நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முற்பட்ட மனிதர் அன்று இறந்திருப்பாரானால் இன்று அவரை யாரும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க சாத்தியமில்லை.

வாழ்க்கையில் பின் வாங்குபவர்கள் என்றுமே வாழ்ந்த சுவடில்லாமல் போய் விடுகிறார்கள். எனவே என்றுமே பின்வாங்காதீர்கள். அடி மேல் அடி விழும் போது, எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றும் போது, இனி என்ன இருக்கிறது என்ற விரக்தி வரும் போது பக்மினிஸ்டர் ·புல்லருக்குப் பிரபஞ்சம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.


ஒரு ஆங்கிலக் கவி அழகாய் சொன்னார்.

When you get into a tight place and everything goes against you,
until it seems as though you cannot hang on a minute longer,
never give up then, for that is just the place and time that the tide will turn.

- Harriet Stowe

(ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது, எல்லாமே உனக்கு எதிராக மாறும் போது, இனி ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று தோன்றும் அந்த முக்கிய தருணத்தில் கண்டிப்பாக தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கி விடாதே. ஏனென்றால் அந்த இடத்தில் அந்தத் தருணத்தில் தான் அலை உன் பக்கமாக திரும்பப் போகிறது)

எல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்து தான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி நொந்து இருக்கும் பலவீனமான நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அவையும் பலவீனமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும் சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு மனதை அமைதியாக்குங்கள். பக்மினிஸ்டர் ·புல்லருக்குக் கூட இயற்கையின் அழகில் தன்னை மறந்து லயித்த அந்த நேரத்தில் தான் பிரபஞ்சம் பேசியது.

அப்படி இயற்கையின் அழகிலோ, மேலே குறிப்பிட்டது போல நல்ல தன்னம்பிக்கை தரும் வரிகளைக் கொண்ட நூல்களிலோ, இனிமையான இசையிலோ ஈடுபட்டு மனதை அமைதியாக்கி கவனியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கும் சலிக்காமல் அந்த செய்தியைச் சொல்லும் - "நீங்கள் சாமானியர்கள் அல்ல. எல்லையற்ற பிரபஞ்சத்தின் வீரியமான ஒரு அங்கம்"

எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் நீங்கள் என்றால் உங்களுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்.? எல்லைகள் நமது சிற்றறிவால் நாமாக ஏற்படுத்திக் கொள்வதே அல்லவா? நூறு வழிகள் உங்களுக்கு அடைந்திருக்கலாம். ஆனால் கோடானு கோடி வழிகளை பிரபஞ்சம் ஏற்படுத்தி இருக்கும் போது வெறும் நூறில் அனைத்துமே முடிந்து விட்டதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இன்னும் பல கோடி வழிகள் உங்களுக்காக பிரபஞ்சத்தால் வகுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சோர்வை உதறி விட்டு உற்சாகத்தோடு நிமிருங்கள். புதிய வழிகளை ஆராயுங்கள். வெற்றி அலை உங்கள் பக்கம் திரும்பத்தான் போகிறது.

-என்.கணேசன்

Thursday, May 1, 2008

படித்ததில் பிடித்தது - CHANGE



மாறுதல் இல்லாத வாழ்க்கை தேக்கமடைகிறது. தேக்கமடையும் வாழ்க்கை பாரமாகிறது. தேக்கத்தால் அழுந்தப்படும் மனிதன் உள்ளுக்குள் சாக ஆரம்பிக்கிறான். ஆகவே மாறுதல் வாழும் மனிதனுக்கு மிகவும் தேவை. 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்று எவன் ஒவ்வொரு நாளையும் புதிய உற்சாகத்தோடும், புதிய கண்ணோட்டத்துடன் ஆரம்பிக்கிறானோ அவன் மகிழ்ச்சியிலும், சாதனையிலும் மற்றவர்களை விட முந்தி நிற்கிறான்.

சரி மாறத்தயார், ஏன் மாற வேண்டும், எப்படி மாற வேண்டும், உண்மையான மாறுதல் எப்படி நிகழும், அதன் பயன்கள் என்ன என்று கேட்பவர்களுக்கு இரத்தினச் சுருக்கமாக கிறிஸ்டியன் லார்சன் பதில் சொல்கிறார்.
அவர் மாறுதலைப் பற்றிக் கூறும் இந்த பொன்னான வார்த்தைகளை நீங்களும் படித்து ரசியுங்கள். நல்ல மாறுதல்களுக்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

CHANGE


The greatest remedy in the world is change; and change implies the passing from the old to the new. It is also the only path that leads from the lesser to the greater, from the dream to the reality, from the wish to the heart's desire fulfilled.

It is change that brings us everything we want. It is the opposite of change that holds us back from that which we want. But change is not always external. Real change, or rather the cause of all change, is always internal.

It is the change in the within that first produces the change in the without. To go from place to place is not a change unless it produces a change of mind a renewal of mind.

It is the change of mind that is the change desired. It is the renewal of mind that produces better health, more happiness, greater power, the increase of life, and the consequent increase of all that is good in life. And the constant renewal of mind -- the daily change of mind -- is possible regardless of times, circumstances or places.

He who can change his mind every day and think the new about everything every day, will always be well; he will always have happiness; he will always be free; his life will always be interesting; he will constantly move forward into the larger, the richer and the better; and whatever is needed for his welfare today, of that he shall surely have abundance.

- Christian Larson