Tuesday, January 29, 2008

படித்ததில் பிடித்தது - The Power of an idea

நம் வாழ்க்கையை சில idea முற்றிலுமாக மாற்றி நம்மை இது வரை எண்ணிப் பார்த்திராத உயரங்களுக்கு கொண்டு செல்லாம், வாழ்க்கையை ஒரு அழகான பலிக்கும் கனவாக ஆக்கலாம். அல்லது idea (I don't even attempt) நான் முயலக் கூட இல்லை - என்ற சோகமான பிரகடனமாகக் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதி அல்ல, நாமாகத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளே என்று சொல்லும் இந்தப் பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கை நாம் வெளிப்படுத்தும் இனிமையான சங்கீதமாக இருக்கலாம், இல்லையேல் சங்கீதம் நம் உள்ளிருக்க அதை வெளிக் கொணராமலேயே நாம் இறந்தும் போகலாம். முயலாமலேயே இருப்பது தான் மிகப் பெரிய குற்றம் என்று அழகாகச் சொல்லும் இந்த வாசகங்களை நீங்களும் படித்துப் பாருங்களேன்.

The Power of an Idea

Anyone (yep, you too) can take an idea, build some momentum, overcome a few challenges, deal with the obligatory crap that life dishes out and create something amazing and at the same time re-invent themselves.

Read this and remember it:

"Who we are, how we are and what our life becomes, is not pre-determined; it's a choice."

Fate, schmate.
Destiny, schmestiny.
Both the refuge of the weak.

For some people, an idea is the beginning of something amazing; a life-changing, paradigm-shifting wild ride of fun, learning, adapting, skill development and personal growth. A catalyst for positive change; for the life and the reality we really desire.

And for others the word 'idea' is an acronym for I Don't Even Attempt.

For many, that's exactly what it is.
Their ideas stay just that; thoughts, possibilities, concepts, theories.
Often great ideas.

Pity they do nothing with them.
Plenty of potential.
No action.

In theory, they are creative and brilliant.
But practically, they're paralysed.
In their head, they're amazing.
Out here in the world, not so much.

Call it analysis paralysis.
Fear.
Laziness.
Apathy.
Procrastination.
Stupidity perhaps..
We do nothing with our great ideas for a bunch of reasons but ultimately it's a waste of our potential and sadly sometimes, a waste of a life.

We are the kings (and queens) of... 'almost' and 'soon' and 'now-is-not-the-right-time'.
We tell ourselves it's about timing.
It's not a timing thing; it's a you and me thing.
You know that.

When we deny our creativity and our potential, a little bit of us dies; emotionally, psychologically, creatively.

And when we do it for long enough, we build a prison for ourselves.
Living somewhere we don't want to (I'm not talking about a house or a location here).

But then again, we don't really live.. we exist.
We 'get by'.
We go through the motions.
We're champions at simulating productivity while simultaneously doing nothing.
We're experts at wasting great ideas.
At 'nearly' doing stuff.
Dying a little bit each day.

Rather than taking our life by the scruff of the neck and shaking the crap out of it... we meekly hope that somehow we will succeed.
Fall on our feet perhaps.
Get lucky.
We consistently do nothing with our ideas.
Daily we waste time and talent.
We slowly and methodically kill our creative selves by consistently doing nothing with our ideas.

We start to lose hope.
We become pessimistic and cynical.
What an unnecessary and unfulfilling way to live a life.
We constantly think about our life, our relationships, our body, our finances, our spiritual selves, our career. We have great ideas and create amazing scenarios and outcomes in our head... but sadly, it ends there.

So......
We're here on this big blue ball for eighty years or so, I figure we may as well take that mind, that potential and those ideas of ours out for a spin and see what we can do.
There's an idea!
Take them out of the garage (take action on those ideas), get 'em out on the freeway (create some momentum) and see what they can do (turn your idea into a thing).

Yes, it's scary... you'll cope.
Yes, you might look silly or scrape your knees every now and then... so?
Yes, it might be uncomfortable or even painful at times... welcome to life.
No, not every body will be happy for you or support you... big deal.
And yes sometimes in 'that moment' you'll doubt, regret and stress...
But the rewards over the long-term are amazing.

Personally I'd rather die trying than 'survive' an existence I hate.

As I've said before... sadly, some of us will die with our music still in us.

- Craig Harper

Thursday, January 24, 2008

ஆகாது-முடியாது-நடக்காது



நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் ·புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் "இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.

திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். "ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்"

இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும் negative மனிதர்கள் இவர்கள்.

பல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.

எல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்பதுண்டு. "இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்...."

தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.

எனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக விலகி இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.

கடைசியாக ஒரு வார்த்தை- இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்.

-என்.கணேசன்

Saturday, January 19, 2008

படித்ததில் பிடித்தது - The sin of omission



வாழ்க்கையில் வேதனையைத் தருவது எது என்ற கேள்விக்கு நாம் செய்யாமல் விட்ட சில செயல்கள் என்ற விடை தரும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இதில் எத்தனையோ தவறுகள் நாமும் தினசரி செய்கிறோம். அதற்குக் காரணமாக ஆங்கிலத்தில் "பிசி" என்ற வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 'பிசி' என்று நாம் மூச்சு விடாமலா இருக்கிறோம். அதைப் போல் இந்த சில விஷயங்களும் மிக முக்கியமல்லவா? இதற்கெல்லாம் நமக்கு நேரம் கூட அதிகம் தேவை இல்லையே? படித்துப் பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்களேன்!

The sin of omission

It isn't the thing you do, dear,
It's the thing you leave undone
That gives you a bit of heart ache
At setting of the sun.
The tender word forgotten
The letter you did not write,
The flowers you did not send, dear
Are your haunting ghosts at night.
The stone you might have lifted
Out of a brother's way;
The bit of heartsome counsel
You were hurried too much to say;
The loving touch of the hand, dear,
The gentle, winning tone
Which you had no time nor thought for
With troubles enough of your own.

-Margaret E.Sangster

Tuesday, January 15, 2008

சிறைவாசம்


அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.

"கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.

"இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் "யாரிது" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.

"கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

அவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.

"அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்."

"அவர் பேர் என்ன சம்பந்தி"

"மாணிக்கம்"

சொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.

மாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

சதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். "எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்"

சதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.

"எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்?"

கடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.

தீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

மனைவியிடம் போய் சொன்னார்.

"நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு"

அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.

மாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். "நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா? நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்"

"அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே"

"அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்"

"உங்க பெயர்?"

"தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.

"சரி லைனிலேயே இருங்கள்"

டெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.

"எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா?...."

தீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.

மாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.

மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.

கிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

"வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க"

முதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ?

"உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்" என்று பொதுவாகச் சொன்னார்.

"இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்"

"என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா?" அவர் ஏளனமாகக் கேட்டார்.

சற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். "ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ...."

வெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.

"நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.

"இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

மாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.

தாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.

"சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்."

முதல் முறையாக மாணிக்கம் வாயைத் திறந்தான். "என்னைப் போலீசில் சரணடையச் சொல்றிங்களா?" அந்த ஆள் முன்னால் இருப்பதை விடப் போலீஸ் தேவலை என்று தோன்றியது. அவர் முன்னிலையில் அவனையும் அறியாமல் புதியவனாக மாறிக் கொண்டிருந்தான்.

"அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?"

"என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க"

"இனியாவது பிரயோஜனப்படு"

அந்த வார்த்தையை சொன்னது அவரானாலும், அதை தன் அந்தராத்மாவில் இருந்து கேட்பது போல் மாணிக்கம் உணர்ந்தான். அவர் அவனை யோசிக்க வைத்து விட்டு அடுத்த கணம் அந்த ஜனக்கூட்டத்தில் மறைந்து போனார்.

மாணிக்கம் தீனதயாளனிடம் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னான். "அவர் யாரு என்னன்னு எனக்குத் தெரியலை. அப்புறமா நான் அவரைப் பார்க்கவுமில்லை. எங்க ஆளுக சிலரைப் போலீஸ் கைது செஞ்சாங்க. கைதானவங்களே முழுப் பொறுப்பு ஏத்துகிட்டதாலே நான் தப்பிச்சுட்டேன். ஆனா மனசாட்சியிலிருந்து தப்ப முடியலை. அவர் கடைசியா சொன்ன 'இனியாவது பிரயோஜனப்படு'ங்கற வார்த்தை எனக்கு வேத மந்திரமாச்சு..."

அவன் பேசிக்கொண்டே போனான். புதிய வாழ்க்கை ஆரம்பித்த விதத்தைச் சொன்னான். சின்னதாகத் தொடங்கிய வியாபாரம் பெருகிப் பெருகி இன்றைய நிலைக்கு வந்த கதையைச் சொன்னான். இலாபத்தில் இருபது சதம் தொழிலாளிகளுக்கும், மீதி அத்தனையும் தர்ம காரியங்களுக்கும் போகிற விதத்தை விவரித்தான். தீனதயாளன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

"நான் நிறையவே தப்பு செஞ்சிருக்கேன். அதுக்கு கடவுளோட கோர்ட்டில் எனக்கு என்ன தண்டனை இருக்கும்னு தெரியலை டி.எஸ்.பி சார். ஆனா ஒவ்வொரு ராத்திரியும் அந்த ரயில் கவிழ்ப்பு கனவில் வருது. அவர் சொன்ன படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் திசை மாறி அவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்களோங்கற வேதனையோட பிறகு நிறைய நேரம் முழிச்சுட்டு இருப்பேன். அந்த உறுத்தல் ஓரு தினசரி தண்டனை சார். என்னைப் பொருத்த வரை இப்போதைய வாழ்க்கை ஒரு சிறை வாசம் தான். எனக்கு நானே விதிச்சுகிட்ட சிறைவாசம். அப்படித்தான் வாழ்றேன்..." என்ற மாணிக்கம் எழுந்து போய் இன்னொரு அறையையும் திறந்து காண்பித்தான்.

உள்ளே ஒரு பழைய பாய், அலுமினிய டம்ளர், அலுமினியத் தட்டு என்று எல்லாமே சிறையில் கைதிகளுக்கு வழங்கும் பொருட்கள் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. அவன் யாரையும் அங்கு அனுமதிக்காத காரணம் மெள்ள தீனதயாளனுக்கு விளங்கியது.

"சார், நீங்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாய் இருந்தவர், நல்லவர்னு நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். எனக்கும் தெரியும். அதனால உங்களைக் கேட்கிறேன். எனக்கு இப்ப நீங்க தான் நீதிபதி. எனக்கு இன்னும் செஞ்சதெல்லாம் உறுத்துது. எத்தனை தர்மம் செஞ்சாலும் என்னோட பாவத்தோட கனம் குறையவே மாட்டேங்குது. இன்னும் என்ன செஞ்சு என் பாவத்தைக் கழுவணும். நீங்க சொல்லுங்க. என்ன சொன்னாலும் கேட்கறேன்" கைகளைக் கூப்பி கண்கள் கலங்கக் கேட்டான்.

அவர் கண்களும் கலங்கின. "உன்னால் எட்டாயிரம் தொழிலாளர் குடும்பம் பிழைக்குது. உன் தர்மத்தால் ஆயிரக்கணக்கானவங்க பலன் அடையறாங்க. இன்னும் ஏன் மாணிக்கம் உனக்கு இப்படித் தோணுது. நடந்து முடிந்ததை மாத்தற சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இல்லை. நீ எப்படியிருந்தேங்கிறதை விட நீ இப்ப எப்படியிருக்கிறாய்ங்கிறது தான் முக்கியம். தப்பு எத்தனையோ பேர் செய்யறாங்க. ஆனா உன்னை மாதிரி யாரும் பிராயச்சித்தம் செய்யறதை நான் பார்க்கலை. அந்த விதத்தில் எத்தனையோ பேருக்கு ஒரு பாடம் மாதிரி தான் நீ வாழ்ந்துட்டிருக்கே மாணிக்கம். இனியும் உன்னை அனாவசியமாகத் தண்டிச்சுக்காதே. நேரமாச்சு. நான் வரட்டுமா?"

தீனதயாளன் இரு கைகளையும் கூப்பி தலை வணங்கி விட்டு வெளியே வந்தார். அவர் இவ்வளவு மதித்து ஒரு மனிதனுக்குத் தலை வணங்குவது இதுவே முதல் முறை.

- என்.கணேசன்.

Friday, January 11, 2008

நீங்கள் ஒரு காந்தம்!



உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-
மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-
உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்.

- என்.கணேசன்

Monday, January 7, 2008

படித்ததில் பிடித்தது - பாதச்சுவடுகள்

கஷ்ட காலங்களில் கடவுள் நம் வாழ்க்கையில் இருந்து முழுவதும் விலகி காணாமலேயே போய் விடுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. அதுவும் தொடர்ந்து கஷ்டங்கள் வரும் போது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் யாருக்கும் வரலாம். அப்படி ஒரு சந்தேகம் வந்ததைப் பற்றிய கவிதை இது. முதன் முதலில் ஆங்கிலத்தில் படித்த போது மனதை வெகுவாகக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் எழுதியது யார் என்று தெரியவில்லை. Anonymous என்று போட்டிருந்தது. அதை தமிழில் வெ.அனந்தநாராயணன் என்பவர் மொழிபெயர்த்ததை நீங்களும் படியுங்களேன்.

பாதச்சுவடுகள்

அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில்
வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன்.
எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன.
ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது.
எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல்
மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.
ஓ! இதென்ன?
எனது பாதச் சுவடுகளின் அருகில்
யாருடையவை இம்மற்றொரு ஜோடிசுவடுகள்?
உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!
புல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை!
என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா
உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.
ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்?
அதுவும் என் வாழ்க்கையின் மிகவும்
சோதனையான காலங்களின் போது....
எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை.
தேவா, இவ்வளவு தான் உன் கருணையா?
உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது
கை விட்டு விட்டாயே என்னை
கூக்குரலிட்டேன் நான்.
அசரிரீயாக பதில் கேட்டது-
அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்
உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை.
நடக்கவியலாத உன்னை நான்
சுமந்து வந்த சுவடுகள்!.

Tuesday, January 1, 2008

உண்மையான செல்வம்!


ரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு இருந்த ஒரு யூதர் தன் அனுபவங்களைப் பின்பு கூறுகையில் சொன்னார். "எங்களது கேம்பில் குறுகிய அறைகளில் நிறைய ஆட்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தினமும் ஒவ்வொரு அறையில் இருந்தும் துப்பாக்கி முனையில் பல கைதிகள் வெளியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்படுவார்கள். மறுபடியும் புதிய கைதிகள் பலர் உள்ளே அடைக்கப்படுவார்கள். அடுத்து யார் மரணத்திற்கு எப்போது அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறியாமல் பயந்து பயந்து இருப்போம்."

"அப்படி அங்கு அடைபட்டு இருந்த காலத்தில் கடவுளிடம் அடிக்கடி பிரார்த்திப்பேன். 'கடவுளே நான் இங்கிருந்து உயிரோடு தப்பித்துச் சென்று என் குடும்பத்தோடு சேர்ந்து விட அருள் புரி. அது மட்டும் போதும். எனக்கு வேறொன்றும் வேண்டாம்'."

"அப்படி ஒரு முறை பிரார்த்திக்கையில் ஒரு உண்மை எனக்கு உறைத்தது. இவர்களிடம் பிடிபடுவதற்கு முன்பு நான் அப்படித் தானே குடும்பத்துடன் சுதந்திரமாக இருந்தேன். கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தந்திருந்தாரே. ஆனால் அந்த சமயங்களில் அதை பாக்கியமாக நான் நினைத்தது இல்லையே. இழந்தால் ஒழிய எதன் அருமையையும் மனிதன் உணர்வதில்லை என்பதற்கு என் நிலையே ஒரு உதாரணம்...."

ஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலையில் அவர் உணர்ந்த நிதரிசனமான உண்மையை நம்மால் நம் தினசரி வாழ்க்கையிலும் உணர முடிந்தால் அதை விடப் பெரிய பாக்கியம் வேறு இல்லை.

கடவுள் எத்தனையோ நல்லவற்றை நம் வாழ்வில் தந்து அருளி உள்ளார். ஆனால் நாம் திருப்தியாக இருக்கிறோமா? இல்லாதவற்றின் பட்டியலை வைத்து நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம். கடவுள் அந்தப் பட்டியல் அம்சங்களையும் நிறைவேற்றி விட்டால் அப்போதாவது சந்தோஷப்பட்டு விடுகிறோமா என்றால் அதுவும் இல்லை. நம்மிடம் அடுத்த பட்டியல் தயாராகி விடுகிறது.

உண்மையான செல்வம் திருப்தியே. அது இருந்து விட்டால் வாழ்க்கையின் நிறைவு குறைவதில்லை. அது இல்லா விட்டால் உலகில் உள்ள அனைத்து செல்வங்களைக் கொண்டு வந்து நம்மிடம் கொட்டினாலும் நாம் நிறைவு அடையப் போவதில்லை. ஓட்டைக் குடத்தில் எத்தனை தண்ணீர் ஊற்றினாலும் அது எப்படி நிறைந்திருப்பதில்லையோ அதே போல் தான்.

இதற்கு அருமையான இரு உதாரணங்களைச் சொல்லலாம்.

நெப்போலியன் தான் வாழ்ந்த காலத்தில் அடையாத செல்வம் இல்லை. பெறாத புகழ் இல்லை. வாழ்வின் கடைசி நாட்களில் சிறைப்பட்டிருந்தாலும் அவன் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி அதிர்ஷ்ட தேவதை அவனை பலவிதங்களில் அனுக்கிரகித்து இருந்தது. ஆனால் அவன் தன் கடைசி நாட்களில் செயிண்ட் ஹெலெனா தீவில் சொன்னது இது தான். "நான் என் வாழ்க்கையில் ஆறு சந்தோஷமான நாட்களைக் கண்டதில்லை."

ஹெலென் கெல்லர் என்ற பெண்மணி குருடு, செவிடு, ஊமை. தன் பெருமுயற்சியால் ஊமைத் தன்மையை அவர் வெற்றி கொண்டாலும் மற்ற இரண்டு பெரிய குறைபாடுகள், அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தன. ஆனால் அவர் சொன்னார். "நான் என் வாழ்க்கையை மிகவும் அழகானதாகக் காண்கிறேன்"

சக்கரவர்த்தியான நெப்போலியன் தன் வாழ்க்கையில் ஆறு சந்தோஷமான நாட்களைக் காணாததும், ஐம்புலன்களில் மூன்றைப் பறிகொடுத்து வாழ்ந்த ஹெலென் கெல்லர் தன் வாழ்க்கையை மிக அழகானதாய்க் கண்டதும் சிந்தனையைத் தூண்டும் செய்திகள். உண்மை என்னவென்றால் நாடுகளைத் தனதாக்கி சரித்திரம் படைத்த சக்கரவர்த்திக்கு 'திருப்தி' என்னும் செல்வத்தை அடையத் தெரியவில்லை. எத்தனையோ இழப்புகள் இருந்தாலும் ஹெலென் கெல்லர் திருப்தி என்னும் செல்வத்தை இழக்கவில்லை. இது தான் இரு நபர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்.

புத்தாண்டை ஆரம்பிக்கும் இந்த வேளையில் 'இல்லை' என்ற பட்டியலை வீசி எறிந்து விட்டு தங்கள் வாழ்க்கையில் 'இருக்கிறது' என்று நன்றியுடன் நினைக்கத் தக்கவற்றின் பட்டியலை தயாரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லாமல் எத்தனை பேர் இதற்கென தவமிருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இருப்பதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். திருப்தி என்ற செல்வத்தை இழக்காமல் வாழப் பழகுங்கள்.

உள்ளதை வைத்துத் திருப்தி அடைய முடிந்தால் மேற்கொண்டு கிடைப்பதெல்லாம் கூடுதல் லாபம் தானே!

- என்.கணேசன்