சிறிது சிந்திக்கலாமே!
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, September 18, 2024
Monday, September 16, 2024
யோகி 67
யோசிக்கையில் பிரம்மானந்தாவுக்குப் பல நிலைகளில் தொடர்பு இருப்பது
ஷ்ரவனுக்குப் புரிந்தது. வேறு எத்தனை வட்டத் தொடர்புகள் இருக்கின்றனவோ, அதற்கு
எத்தனை ரகசிய அலைபேசிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
பரசுராமனின் உக்கிர பூஜை மிக அருமையாய் வேலை செய்திருக்கிறது என்பது சுகுமாரனும் பாண்டியனும் பேசிக் கொண்டதிலிருந்து தெரிகிறது. வரும் காசர்கோடு மந்திரவாதியின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று யோசித்த போது ஷ்ரவனுக்கும் பரபரப்பாக இருந்தது.
நேற்று நள்ளிரவு மீண்டும் ஒரு முறை பிரம்மானந்தா பாண்டியனுடன்
பேசுகையில் நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது அவருக்குத் தெரிய
வந்தது. சுகுமாரனைப் போல் பிரச்சினைகளை விரிவுபடுத்திச் சொல்லிப்
புலம்பி அழாமல் நிலைமையைச் சுருக்கமாகவே பாண்டியன் சொன்னாலும், அந்தச்
சுருக்கமே பிரம்மானந்தாவை அதிர வைத்தது. பாண்டியன் கடுமையான
வயிற்று வலியில் கஷ்டப்படுவதையும் சாதாரணத் தகவலாகவே சொன்னார்.
பாண்டியன் சின்னச் சின்னப் பிரச்சினைகளையும், எதிர்மறையான
சூழல்களையும் என்றுமே பொருட்படுத்தாதவர். அதை ஒரு விஷயமாகவே
அவர் நினைக்க மாட்டார். அப்படிப்பட்டவர்
வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் அது சகிக்க முடிந்த வலியாக இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு
மனிதர் இருப்பதால் அவர் எதைப்பற்றியும் பெரியதாகக் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கிறாரோ, எந்த ஒரு
மனிதர் எல்லாப் பெரிய பிரச்சினைகளுக்கும் எளிதான ஒரு தீர்வை எப்போதும் கண்டுபிடித்து
விடுவாரோ, அந்த மனிதரே உண்மை நிலைமை பிடிபடாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்
என்றால், நிலைமை மிகவும் மோசமாய் தான் இருக்கிறது என்று அர்த்தம். அது புரிந்த
பின் பிரம்மானந்தாவுக்கு மதுரையில் இருப்பு கொள்ளவில்லை. அதனால்
அவர் மறுநாள் முன்பு உத்தேசித்திருந்ததை விட இரண்டு மணி நேர முந்தைய விமானத்திலேயே
கிளம்பி யோகாலயத்துக்கு வந்து சேர்ந்தார்.
சுகுமாரனுக்கும் மருத்துவமனையிலிருந்து
வீட்டுக்குச் செல்ல மனமில்லை. இந்தப் பிரச்சினை தீராமல் அங்கு போய் மனைவியுடன் ஆவியையும்
சமாளிப்பது அவருக்கு ஆகவே ஆகாத காரியம். பாண்டியனுக்குப்
போன் செய்த போது பிரம்மானந்தா சீக்கிரமாகவே வருவது தெரிந்து. எனவே பிரம்மானந்தா
யோகாலயம் வந்து சேரும் முன் சுகுமாரனும் அங்கே வந்திருந்தார்.
பாண்டியனின் தூக்கமில்லாமல் சிவந்த
கண்களையும், களைத்துக் கருத்த முகத்தையும் பார்த்த போது பிரம்மானந்தாவுக்குப்
பகீரென்றது. ‘ஒரு மனிதன் மூன்று நாட்களில் இப்படி மாறிவிட முடியுமா?’.
அதுவும், பாறை போல் திடமானவன் என்று அவர் எப்போதும் நம்பி வந்த மனிதன்
இப்படி மாறியிருந்தது அவரைத் திகைக்க வைத்தது.
ஆனால் சுகுமாரனைப் பார்த்த போதோ, பாண்டியனே
தேவலை என்று பிரம்மானந்தாவுக்குத் தோன்றியது. முன்பெல்லாம்
கர்வமும், கம்பீரமும் சேர்ந்து நாகரிகக் கனவானாக வலம் வந்து கொண்டிருந்த
டாக்டர் சுகுமாரன், எங்கிருந்தோ போரிலிருந்து தப்பி வந்த அகதி போல் இப்போது பரிதாபமாகத்
தெரிந்தார்.
சுகுமாரனுக்கு, பிரம்மானந்தாவைப்
பார்த்தவுடனேயே, பாதி நம்பிக்கை வந்து விட்டது. அவர் பிரம்மானந்தாவுக்கு
இணையான அறிவாளியைப் பார்த்ததில்லை. எதைப் பற்றிக் கேட்டாலும்
சிறிதும் யோசிக்காமல் விஞ்ஞானம் கலந்து விரிவாய் பதில் சொல்ல முடிந்த அவரிடம் தங்கள்
பிரச்சினைகளுக்கான அனைத்து பதில்களும் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் நம்பினார். ஆவிகளை
ஓட்டக்கூடிய ஒரு மந்திரவாதியையும் பிரம்மானந்தா வரச் சொல்லியிருக்கிறார் என்பதால் பிரம்மானந்தாவும், அந்த மந்திரவாதியும் சேர்ந்து
எல்லாவற்றையும் இன்றே சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்து, சுகுமாரனின் கண்களில் நீர் பெருகியது.
காரிலிருந்து இறங்கிய பிரம்மானந்தாவை நோக்கி ஓடிய சுகுமாரனுக்குத்
தன் துக்ககரமான அனுபவங்களை அங்கேயே சொல்லி அழத் தோன்றியது. அவர் வாயைத் திறந்த போது
பாண்டியனின் இரும்புக் கை அவர் தோளைப் பிடித்து அமுக்கியது. “இங்கே வேண்டாம்” என்று பாண்டியன் மெல்லச் சொன்னார்.
உடனே சுகுமாரன் மௌனமானார்.
பாண்டியனின் கூர்மையான பார்வை சுற்றும்
முற்றும் அலசியது. சந்தேகப்படும்படியான ஆட்கள் யாரும் அவர் பார்வைக்குச் சிக்கவில்லை. தூரத்தில்
வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரனும், அவனைத் தாண்டி சென்று
கொண்டிருந்த துறவிகளும், பிரம்மானந்தா வருவதற்கு முன்பே அந்த இடத்தில் இருந்தவர்கள்
தான். ஆனாலும் அவரால் திருப்தி அடைய முடியவில்லை. ’இங்கிருக்கும்
கருப்பு ஆடு மறைந்திருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். அந்தக்
கருப்பு ஆடு அதிரடியாய் செயல்படாமல் அமைதி காத்தாலும், அது கண்காணித்துக்
கொண்டிருக்கலாம்’ என்று அவருடைய உள்ளுணர்வு சொன்னது. இப்போது
நடக்கும் அனர்த்தங்களின் பின்னணியில் அந்தக் கருப்பு ஆடு இருக்க வாய்ப்பில்லை. நடப்பதை
எல்லாம் கருப்பு ஆடுக்குத் தெரிவதிலும் அவருக்கு விருப்பமில்லை.
பாண்டியன் சந்தேகப்பட்ட கருப்பு ஆடு
அவர் சந்தேகப்பட்டபடியே மறைந்திருந்து ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்துக் கொண்டு தான்
இருந்தது. என்ன நடக்கிறது என்பது அதற்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும், அவர்கள்
எதிர்பார்த்திராத ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டது, அல்லது
நடந்து கொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. செவென்
ஸ்டார்ஸ் மருத்துவமனை டாக்டர் இரண்டு நாட்களுக்கு முன்னால் அதிகாலையில் யோகாலயத்துக்கு
வந்து பாண்டியனைச் சந்தித்தது, அவரோடு சென்ற பாண்டியன் அடுத்த நாள் இரவு முழுவதும் அபூர்வமாய்
வெளியே தங்கியது, மதியம் வந்து சேர வேண்டிய பிரம்மானந்தா காலையிலேயே இன்று
வந்து சேர்ந்தது, அந்த டாக்டர் இப்போதும் பரிதாபத் தோற்றத்தில் வந்து சேர்ந்திருப்பது
எல்லாமே அவர்களுக்கு ஒரு புதிய பிரச்சினை வந்து சேர்ந்திருப்பதையே அடையாளம் காட்டின. சைத்ராவின்
கொலைக்குப் பின் கூட அசராமல் இருந்தவர்கள் இப்போது பதற்றம் அடைய ஆரம்பித்திருப்பது, புதிய பிரச்சினையை
அவர்களால் திறம்பட கையாள முடியவில்லை என்பதையே சுட்டிக்காட்டியது.
சைத்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டதைக்
கேள்விப்பட்ட பின் முழுவதுமாக இழந்திருந்த நம்பிக்கை இப்போது மறுபடியும் மெல்லத் துளிர்
விட்டது. ஆனாலும் முழு நம்பிக்கை ஏற்பட்டு விடவில்லை. காரணம்
இவர்கள் எந்த வலையிலும் இது வரை சிக்காத திமிங்கலங்கள். எந்த வலையிலிருந்தும் கிழித்துக்
கொண்டு வெளியே வர வல்லமை படைத்த இந்தத் திமிலங்களுக்கு ஏதோ சிக்கல் என்றால் அது இறைவனே
ஏற்படுத்தியதாய் இருக்க வேண்டும். அந்தச் சிக்கல் மேலும் பெரிதாகி
விட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கத் தோன்றியது.
சீக்கிரத்தில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, கொல்லப்படாமல் இருந்தால்,
இந்த நரகத்திலிருந்து தப்பிக்க, சிறிய வாய்ப்பு
இப்போது பிறந்திருப்பதாய் அந்தக் கருப்பு ஆட்டின் மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்றும்
உருவானது. ஆனால் பாண்டியன் அங்குமிங்கும் கூர்ந்து பார்ப்பதைக்
கவனித்து அந்தக் கருப்பு ஆடு எச்சரிக்கையுடன் ஜன்னலிலிருந்து மெல்லப் பின்வாங்கியது.
எத்தனை தான் மறைவிலிருந்து
பார்த்தாலும், பாண்டியனின் எக்ஸ் ரே கண்களில் சிறிது பட்டு விட்டாலும், அது பேராபத்தின்
ஆரம்பமாகி விடும்... இன்னொரு தவறு செய்தால், பின் பிழைக்க
வழியில்லை...
(தொடரும்)
என்.கணேசன்
Thursday, September 12, 2024
சாணக்கியன் 126
மகத சேனாதிபதி பத்ரசால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான். உலகின் கண்களுக்கு அவன் வலிமையும் செல்வச் செழிப்பும் கொண்ட மகத தேசத்தின் சேனாதிபதி. போர்க்களத்தில் அவன் சிங்கம். அவனது உறவினர்களில் அவனைப் பார்த்து பொறாமைப் படுவோர் பலர். ஆனால் அவன் துயரம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
ஜீவசித்தி சின்ஹரனிடம்
சொன்னது போல் தனநந்தனைப் பொருத்த வரையில் செல்வம் ஒருவழிப் பாதையில் மட்டுமே
பயணிக்கக்கூடியது. அவன் வரி விதிக்காதது காற்று, நீர், நெருப்பு
போன்றவற்றிற்கு மட்டும் தான். வரி வசூலிலும் கடுமையே காட்டுபவன் அவன். குடிமக்களின்
கஷ்டநஷ்டங்களை அவன் பொருட்படுத்தியதில்லை. அவனுக்குக்
கப்பம் செலுத்துபவர்களிடம் அவன் கறாராக இருக்கக்கூடியவன். அப்படியெல்லாம்
அவனிடம் போய்ச் சேர்ந்து கொள்ளும் செல்வம் அவனிடமே சிறைப்பட்டுத் தங்கி விடும். பின் அது
வெளியே வரமுடிவது மிக அபூர்வமே. அவனிடம் எத்தனை செல்வம் கொட்டிக் கிடந்தாலும் அதை
மற்றவர்களுக்கு தரவேண்டி வரும் போது அவன் மகாகஞ்சன்.
ஆரம்ப காலங்களில் மிக மிகக் குறைந்த
ஊதியம் தான் அவன் அனைவருக்கும் தந்து கொண்டிருந்தான். ராக்ஷசர் வந்த
பிறகு தான் ஓரளவு கௌரவமான ஊதியம் கிடைத்து வருகிறது. ஆனால் அதுவும்
கூட அவனுடைய கஜானா இருப்பைக் கணக்கிட்டுப் பார்த்தால் சுண்டைக்காய் தான். கிட்டத்தட்ட
மற்ற எல்லோருமே முன்பை விடப் பரவாயில்லை என்ற மனநிலையில் நிம்மதி அடைந்தாலும் வகிக்கும்
பதவிக்கு ஏற்ப உயர்ந்த வாழ்க்கையை அனுபவிக்கத் துடித்த பத்ரசாலுக்கு அது போதுமானதாக
இருக்கவில்லை.
பல முக்கிய நிர்வாக விஷயங்களை தனநந்தனும், ராக்ஷசருமே
முடிவு செய்வார்கள் என்ற போதும் சிலவற்றை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யும்
வழக்கம் இருந்தது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர ராஜகுருவும்
அவனும் கூட உறுப்பினர்களாக இருந்தார்கள். அதில் இந்த ஊதிய
விஷயத்தைப் பேச அவன் கடந்த ஒரு வருடமாக ஆசைப்படுகிறான். ஆனால் அந்த
ஆசை மற்றவர்களிடம் துரதிர்ஷ்டவசமாக இருக்கவில்லை. அவனிடம்
கலகலப்பாகப் பழகும் அமைச்சர் வரருசியிடம் அவன் ஒரு முறை ”இது விஷயமாகப்
பேசினால் என்ன” என்று கேட்ட போது அவர் “மலைக் கல்லில்
கிணறு தோண்ட முயற்சி செய்யக்கூடாது” என்று சொல்லி விட்டார். தனநந்தனிடம்
அதிக ஊதியம் கேட்பது அதற்கிணையானது தானாம். ராக்ஷசர் மனம்
வைத்தால் இதற்கு உதவ முடியும் என்று அவன் நினைத்தான். ஆனால் ராக்ஷசரிடம்
பேசுவது தனநந்தனிடம் பேசுவதை விட சங்கடமானது. சிரிப்பில்லாத
அந்த முகத்தைப் பார்த்துப் பேசும் போது நீதிபதியிடம் குற்றவாளி பேசும் பாவனையை அவர்
ஏற்படுத்தி விடுவார். மறுத்துப்
பேசினாலும் தனநந்தனே தேவலை.
பத்ரசாலின் வருமானம் வீட்டுச் செலவுகளுக்கும், மதுவுக்கும், அவனுடைய
பிரிய தாசிக்கும் தரவே சரியாகி விடுகின்றது. வேலைகள்
இல்லாத போது அசையாமல் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க மனிதன் கல் அல்லவே. அவன் சூதாட்டத்தில்
ஆர்வத்துடன் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். சில சமயங்களில்
அவன் அதில் நன்றாக சம்பாதிக்கவும் செய்தான். ஆனால் சம்பாதித்ததை
வெளியே கொண்டு போய் சேமிக்கவோ, சுபிட்சமாக இருக்கவோ சூது அனுமதிப்பதில்லை. அதனால்
இன்னும் பலமடங்கு சம்பாதிக்க ஆசைப்பட்டு அந்தச் செல்வத்தை மறுபடியும் அதிலேயே போட்டு
பத்ரசால் நிறைய இழந்திருக்கிறான். ஆனால் இப்போதெல்லாம் அந்தச் சூதாட்டச் சூட்சுமங்கள் அவனுக்கு
நன்றாகவே பிடிபட்டு வருவதால் அவற்றைப் பயன்படுத்தி இழந்ததை எல்லாம் மீட்டெடுக்கத் துடிக்கிறான். ஆனால் இப்போதெல்லாம்
பணயம் வைக்க அவனிடம் பணமிருப்பதில்லை.
முன்பெல்லாம் சேனாதிபதி என்ற மரியாதையுடன்
சூதாட்ட விடுதியின் உரிமையாளர் அவனுக்குக் கடன் தந்து உதவி வந்தார். அந்த மரியாதை
காலப் போக்கில் நீர்த்துப் போய் விட்டது. மூன்று நாட்களுக்கு
முன் நிர்த்தாட்சண்யமாய் பழைய கடன் தீர்க்காமல் இனி வர வேண்டாம் என்று சொல்லி அவனை
அவமானப்படுத்தி விட்டார். கடைசியில் தன் முத்துமாலையை அவருக்குக் கொடுத்து அவரைச் சமாளிக்க
வேண்டி வந்தது. இப்போது நினைத்தாலும் அவனுக்கு அது அவமானமாக இருந்தது. மகத சேனாதிபதி
சந்திக்க வேண்டிய நிலைமையா அது?
ஆனால் எந்த அவமானமும் கூட சூதாட்டத்தை
நிறுத்துமளவு வலிமையாக இருப்பதில்லை என்பதால் தான் அவன் இந்த இரவு நேரத்திலும் சூதாட்ட
விடுதியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இன்று அதிர்ஷ்டகரமான
நாளாக இருக்கும் என்று அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. போகும்
போது எல்லா நாட்களிலும் இப்படித் தானே தோன்றுகின்றது என்று உள்மனதில் இருந்து ஒரு குரல்
எழுந்த போது அதை அவன் அலட்சியப்படுத்தினான். மற்ற நாட்கள்
போல் இன்று இருக்கப் போவதில்லை. இன்றைய தினம் அவன் அதிர்ஷ்டம் அவனுக்குக் கைகொடுத்து உதவப்போகிறது. நினைக்க
நினைக்க உற்சாகம் அவனுக்குள் பெருக்கெடுத்தது.
அந்த உற்சாகத்தோடு அவன் சூதாட்ட விடுதியை
அடைந்து உள்ளே போன போது அங்கே ஒரு சுவாரசியமான ஆட்டம் நடந்து கொண்டிருப்பதையும் ஒரு
புதிய மனிதன் வந்து அதில் இணைந்திருப்பதையும் அவன் பார்த்தான். அந்தப்
புதிய மனிதன் வெற்றியடைந்து கொண்டிருந்தான். நாலைந்து
பேர் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தபடி அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது
ஆரவாரத்தைப் பார்த்து விடுதியாளரும் அங்கு வந்து ஆட்டம் போகும் விதத்தை ரசித்துப் பார்த்தபடி
நிற்கவே பத்ரசால் அவரிடம் மெல்லக் கேட்டான். “யாரிந்த
புதிய ஆள்?”
விடுதியாளர் சற்று பின்னுக்கு வந்து
மெல்லிய குரலில் பத்ரசாலிடம் சொன்னார். “சிந்து பிரதேசத்திலிருந்து
வந்திருக்கும் புதிய வணிகர்”
சின்ஹரன் விளையாடிக் கொண்டிருந்தாலும்
பத்ரசால் கேட்டதையும், விடுதியாளர் பதில் சொன்னதையும் ஓரக் கண்களால் கவனித்தான். அவனைச்
சுற்றி நின்று ஆரவாரம் செய்து உற்சாகமூட்டும் ஆட்களில் ஒருவன் ஒற்றன் என்பதையும் சின்ஹரன்
முன்பே கவனித்திருந்தான். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் தன் விளையாட்டிலேயே முழுக்
கவனம் வைத்திருப்பது போலவே நடித்தான். ஒற்றனுக்கு அவன்
மீது சந்தேகம் வருமானால் அவனைத் தொடர்ந்து வர ஆரம்பிப்பான். அது நல்லதல்ல. விரைவாகவே
ஒற்றன் சந்தேகம் தெளிந்து அவனை விட்டு வேறு வேலையைப் பார்க்க ஆரம்பிப்பது நல்லது.
பத்ரசால் அந்தப் புதிய வணிகனைக் கூர்ந்து
பார்த்தான். வணிகன் செல்வச் செழிப்பானவனாகவே தெரிந்தான். அவன் அணிந்திருந்த
ஆபரணங்களும் அவன் பணயம் வைத்திருந்த தொகையும் ஒரு சாதாரண வணிகனின் சக்திக்கு எட்டியவை
அல்ல. விளையாட்டின் முடிவில் சின்ஹரன் பெருந்தொகையைப் பெற்றிருந்தான். ஒரு வணிகனுக்கே
உரிய கவனத்துடன் அவன் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டதை ஒற்றனும் பத்ரசாலும் கவனித்தார்கள்.
சின்ஹரனுடன் விளையாடியவர்களும், வேடிக்கை
பார்த்தவர்களும் அடுத்த விளையாட்டிலும் கலந்து கொள்ளும்படி அவனை ஊக்குவித்தார்கள். சின்ஹரன்
சிறு புன்னகையுடன் சொன்னான். “நான் இவ்விளையாட்டுக்குப் புதியவன். எப்போதும்
ஆரம்பத்தில் விளையாடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் கண்டிப்பாக இருக்கும் என்று அனுபவம் மிக்க
என் நண்பர்கள் சொல்லி இருந்தார்கள். ஆனால் இந்த அதிர்ஷ்டம்
அடுத்த விளையாட்டுக்கு நிச்சயம் இருக்க வழியில்லை. இன்று இவ்வளவு
போதும். நான் சில நாட்கள் இங்கே தான் இருப்பேன். அதனால்
நாளையும் கண்டிப்பாக ஆட வருவேன். இனி இன்றைக்கு நீங்கள் ஆடுவதை வேடிக்கை பார்க்க விரும்புகிறேன்.”
சின்ஹரனுடன் விளையாடிய ஒரு இளைஞன் சிரிப்பும், சோகமுமாகக்
கலந்த முகபாவனையுடன் சொன்னான். “இந்தத் தெளிவு ஆரம்ப நாளிலிருந்தே எனக்கு இருக்கவில்லை. அதனால்
தான் நான் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறேனோ?”
அவர்களோடு விளையாடிய இன்னொருவன் இடிச்சிரிப்பு
சிரித்தான். “சரியாகச் சொன்னாய் நண்பா. அவர் எத்தனை
விவரமாக வென்றதைப் பத்திரப்படுத்திக் கொண்டார் பார்த்தாயா? மகாலட்சுமி
பத்திரப்படுத்திக் கொள்பவனிடம் தான் குடியிருப்பாள். உன்னிடமும், என்னிடம்
இருக்க விரும்ப மாட்டாள்”
சின்ஹரன் நட்பு கலந்த புன்முறுவலுடன்
சொன்னான். “அதெல்லாம் இல்லை நண்பர்களே. தினமும்
ஒரு ஆட்டத்துக்கு மேல் ஆடுவதில்லை என்று என் மனைவிக்கு வாக்குக் கொடுத்து வந்திருக்கிறேன். தோற்றாலும்
வென்றாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் ஆடப் போகிறேன். நாளையும்
வரத்தான் போகிறேன். இன்று வென்றது நாளைக்கு என் கையை விட்டுப் போகும். உங்களில்
யாராவது ஒருவர் வென்று எடுத்துக் கொள்ளத் தான் போகிறீர்கள்.”
சொல்லி விட்டு விலகி உட்கார்ந்த அவனை
அவர்கள் வித்தியாச மரியாதையோடு பார்த்தார்கள். அவன் விலகிய
இடத்திற்கு பத்ரசால் நகர்ந்தான். அடுத்த
ஆட்டம் ஆரம்பமானது. அருகருகே உட்கார்ந்திருந்தாலும் பத்ரசாலிடம் ஒற்றனோ பத்ரசாலோ
சந்தேகப்படும்படியான ஆர்வத்தை சின்ஹரன் காட்டவில்லை. ஆட்களை
விட அவன் ஆட்டத்திலேயே அதிக கவனம் காட்டினான்.
அந்த ஆட்டத்தில் பத்ரசாலும் வெற்றி
அடைய ஆரம்பித்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் சொன்னான். “வணிகரின்
அதிர்ஷ்டம் சேனாதிபதியை ஒட்டிக் கொண்டது போலிருக்கிறதே? இட ராசியா, இல்லை அவர்
அருகிலிருக்கும் ராசியா?”
பத்ரசால் சின்ஹரனை திரும்பிப் பார்த்து
மகிழ்ச்சியுடன் புன்னகைக்க சின்ஹரனும் புன்னகைத்தான். மறுபடி
அவன் கவனம், ஒற்றன் அங்கிருந்து நகர்கிற வரை, ஆட்டத்திலேயே
தங்கியது.
(தொடரும்)
என்.கணேசன்
Monday, September 9, 2024
யோகி 66
தேவானந்தகிரி யோகி பிரம்மானந்தாவின் அழைப்பில் புளங்காகிதம்
அடைந்திருந்தார். சாதாரணமான யாரும் நேரடியாக பிரம்மானந்தாவிடம் தொடர்பு கொண்டுவிட
முடியாது. அப்படிப்பட்ட யோகி பிரம்மானந்தா அவரை மதித்து அழைத்துப் பேசியது
மிகப்பெரிய அங்கீகாரமாக தேவானந்தகிரிக்குத் தோன்றியது. தேவானந்தகிரிக்கு
அவருடைய தொழிலில் தேசிய அளவில் கௌரவமும்,
அங்கீகாரமும் உயர்வாகவே இருக்கிறது என்றாலும் இந்தியா கடந்து அந்த அளவில்
இல்லை. அது அவருக்கு ஒரு பெருங்குறையாகவே இப்போதும் இருக்கிறது.
அதனால் யோகி பிரம்மானந்தாவைப் போல் உலகப்புகழ் பெற்றவருடன் தொடர்பில்
இருப்பது அடுத்த உயர்நிலைக்கு அவரை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, பிரம்மானந்தாவிடம் பேசிய போது அவருக்கு ஏற்பட்டது.
பிரம்மானந்தா நெடுங்காலம் தொடர்பில்
இருக்கும் நண்பர் போல் பேசினார். அவருடைய நண்பர்கள் சிலருக்கு தேவானந்தகிரியின் உதவி மிக அவசரமாகத்
தேவைப்படுகிறது என்றும், அதனால் தேவானந்தகிரி உடனடியாக சென்னைக்குக் கிளம்பி வந்தால்
அது பேருதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
சாதாரணமாக தேவானந்தகிரி மற்றவர்களுடைய
இடங்களுக்குச் சென்று பிரஷ்னங்கள் பார்ப்பதில்லை, தாந்திரீக பூஜைகள்
செய்வதில்லை. எனவே அவற்றுக்காக அவரிருக்கும் இடத்திற்கு வருபவர்கள்
அதிகமிருந்தார்கள். அவர்களிலும் ஒரு மாதமாவது முன்கூட்டியே முன்பதிவு
செய்து காத்திருப்பவர்கள் அதிகம் இருந்தார்கள். அதனால் பிரம்மானந்தா
உடனடியாக சென்னை வர வேண்டுகோள் விடுத்தவுடன் அவர் தயங்கினார். அவர் தயக்கத்தைக் கவனித்த பிரம்மானந்தா, விமானச் செலவுடன்
அவர் கேட்கும் தொகையைத் தருவதாக, உடனே வாக்களித்தார்.
தேவானந்தகிரி பொதுவாக இது போன்ற விஷயங்களை, தன்னுடைய
இருப்பிடத்திலேயே செய்ய ரூபாய் 25000 முதல் 50000 வரை வசூலிப்பது வழக்கம். தேவானந்தகிரி வெளியிடத்திற்கு
உடனே சென்று செய்ய, தயக்கத்துடன் இரண்டு லட்சம் கேட்ட போது,
பிரம்மானந்தா உடனே சம்மதித்தார். அதற்கு மேல் தேவானந்தகிரி
யோசிக்காமல் உடனே ஒத்துக் கொண்டார்.
அவர் நாளை சென்னை செல்ல, உடனே விமான டிக்கெட்டையும் பிரம்மானந்தாவின்
உதவியாளன் அனுப்பி வைத்தான்.
அந்தப் புளங்காகித்ததுடன் தேவானந்தகிரி மறுநாள் செல்வதற்காக
ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்த போது கிடைத்த ஒரு சகுனத் தகவல், நாளைய வேலையில் அவருக்கே
கூடுதல் தற்காப்பு தேவையிருக்கும் என்பதைத் தெரிவித்தது. அவர்
திகைத்தார். இப்படி எச்சரிக்கை வருவது மிக அபூர்வம். இந்த எச்சரிக்கையை அலட்சியம்
செய்வது ஆபத்தானது. தேவையில்லாமல் புலி வாலைப் பிடித்து விட்டோமோ என்று அவருக்குத்
தோன்ற ஆரம்பித்தது.
ஆனால் வாக்குத் தந்தாகி விட்டது என்பதால்
இனி மறுக்க வழியில்லை. மேலும் இதில் அவர் பெறும் வெற்றி புதிய கதவுகளைத் திறக்கும். புதிய மேல்நிலைத்
தொடர்புகள் கிடைக்கும். இப்படியெல்லாம் யோசித்து விட்டு தேவானந்தகிரி தனது தற்காப்புக்கு வேண்டிய
மந்திரஜபங்களைச் செய்து விட்டு உறங்கச் சென்ற போது இரவு மணி இரண்டாகி விட்டிருந்தது. காலை பத்தரை மணிக்கு விமானம்…
சுகுமாரன் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் தான் அன்றைய இரவைக்
கழிக்கும் முடிவுக்கு வந்திருந்தார். தெருத் தெருவாக
அலைய அவருக்கு மனமில்லை. யோகாலயத்திற்குப் போகலாம் என்றாலோ அங்கும் ஆவி போயிருப்பது
தெரிந்தது. அங்கே ஆவி போயிருப்பது ஓநாய் வடிவத்திலாம். ஓநாய்க்கு மண்டை ஓடு தேவலை என்று பாண்டியன் சொன்னது நினைவுக்கு
வந்தது. ஆனால் அவருக்கு இரண்டும் நடுக்கத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. அதனால்
தான் தன் மருத்துவமனையிலேயே அன்றைய இரவைக் கழிப்பது என்று தீர்மானித்தார். டாமி அவரது
கட்டிலுக்குக் கீழே படுத்திருக்கிறான்.
சிறிது நேரத்தில் உறக்கம் அவரையும் ஆட்கொண்டது. ஆனால் ஆழமான உறக்கத்திற்கு
அவர் சென்ற போது காதில் ரீங்காரம் கேட்க ஆரம்பித்தது. வயிற்றை
ஏதோ கவ்வியது போன்ற உணர்வு வந்தது. ஒரு மண்டை ஓடு அந்தரத்தில் தெரிய ஆரம்பித்தது.
ஏ.சி. அறையிலும் சுகுமாரனுக்கு வியர்த்தது. இதயம் படபடக்க அவர் விழித்துக் கொண்டார். இங்கேயுமா என்று
அழாத குறையாய் நினைத்தபடி கட்டிலுக்கு அடியில் எட்டிப் பார்த்தார். அவருடைய டாமி நிம்மதியாகத் தான் உறங்கிக் கொண்டு இருந்தான். அப்படியானால் அவருக்குத் தெரிந்த மண்டை ஓடு அவனுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது,,,
இல்லை, உறங்கி விட்டதால் பார்க்கவில்லையா?
ஒன்றும் புரியவில்லை. குழப்பமாய் இருந்தது.
உறக்கமில்லாததால் அவர் கண்களில் எரிச்சலை உணர்ந்தார். என்ன கொடுமையிது என்று எண்ணுகையில்
கண்கள் கலங்கின. உடனே கைபேசியை எடுத்து பாண்டியனை அழைத்தார்.
சுகுமாரனுடைய அழைப்பு வந்த போது பாண்டியனும்
விழித்துக் கொண்டு தான் இருந்தார். அவரும் உறங்க முயற்சித்த
போது அவர் வயிற்றில் அமர்ந்து கொண்டு ஓநாய் அவரையே பார்ப்பது போல் தெரிந்தது. ஓநாயின்
நெருப்பு உமிழும் கண்களைப் பார்த்து, பதறியபடி கண் விழித்துப்
பார்த்தால், உண்மையில் அப்படியெதுவும் இருக்கவில்லை. ஆனாலும்
வயிற்றில் பயங்கரமான வலியை அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில்
தான் சுகுமாரனின் அழைப்பு வந்தது.
சுகுமாரன் அழாத குறையாகத் தன் அனுபவத்தைச்
சொன்னார். பாண்டியன் பதிலுக்குத் தன் அனுபவத்தையும் சொல்ல விரும்பவில்லை. பரஸ்பரம்
புலம்பி அழுது எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை…
பாண்டியன் சொன்னார். “பயப்படாதீங்க. யோகிஜி
கிட்ட பேசிட்டேன். அவர் நாளைக்கு மதியம் வர்றார். ஆவி ஓட்டற
ஒரு பிரபல மந்திரவாதியையும் இங்கே வரச்சொல்லியாச்சு. அந்த ஆளும்
நாளைக்கு சாயங்காலத்துக்குள்ளே வர்றார். திருப்தியா?”
படாத பாடு பட்டாலும், பிரச்சினை
நாளையோடு ஒரு முடிவுக்கு வந்து விடும் என்பது போல பாண்டியன் நம்பிக்கையுடன் பேசியவுடன், சுகுமாரன்
நன்றியுணர்வால் கண்கலங்கினார். ’மனிதர் சில சமயங்களில் எகத்தாளம் பேசினாலும், செய்ய வேண்டிய
வேலையைக் கச்சிதமாகச் செய்து விடுகிறார்.’ என்று அவருக்கு
பாண்டியன் மீது தனி மரியாதை பிறந்தது.
“ரொம்ப சந்தோஷம். இங்கேயும்
மண்டை ஓடு வந்துடுச்சு. இந்த ராத்திரில இனி எங்கே போறதுன்னு தெரியலை..”
“டாக்டர். மனுஷன்
பிரச்சனைக்காக ஓட ஆரம்பிச்சா அதுக்கு ஒரு முடிவே இருக்காது. இந்த ஒரு
ராத்திரி இந்தப் பிரச்சனையோட இருக்கற இடத்துலயே இருக்க முடியுமான்னு பார்ப்போம்…”
சுகுமாரனுக்கு பாண்டியனின் தைரியத்தைப்
பாராட்டத் தோன்றினாலும் இந்த ஒரு ராத்திரியைத் தாண்டுவதே சுலபமில்லை போலிருந்தது. ”இன்னைக்கு
ராத்திரியும் தூங்க முடியாதுன்னு நினைக்கறேன். எனக்கு
பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு. அந்த மந்திரவாதியை
இப்பவே வரவழைக்க முடியாதா?”
“அந்த ஆள்
பக்கத்துல இருந்தால் உடனடியாய் வரவழைச்சுடலாம். ஆனா அவர்
கேரளால காசர்கோட்டில் இருக்கிறவர். அவர் விமானம் கிடைச்சு
வர வேண்டாமா?”
புலம்பிய சுகுமாரனுக்கு மறுபடியும்
ஆறுதலும், தைரியமும் சொல்லி விட்டு, பாண்டியன்
களைப்புடன் கைபேசியைக் கீழே வைத்தார்.
ஒவ்வொரு நாளும் தீவிரமாகிக் கொண்டே
போகிற இந்த ஆவி அமானுஷ்ய அனுபவங்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவுக்குப்
பொருந்தாத விஷயங்களாக இவை இருந்தன. ஆனால் எதையும் கற்பனை
என்றோ பிரமை என்றோ ஒதுக்க முடியாதபடி நிஜ அனுபவங்களாகவும் இருப்பது தான் அவரைக் குழப்பியது. மெல்ல ஜன்னல்
வழியாகப் பார்த்தார். இப்போதும் ஓநாய் அங்கே தான் நின்றிருந்தது. காமிரா
பதிவில் தெரியாத ஓநாய், இப்போது அவர் கண்களுக்கு மட்டும் தெளிவாய்த் தெரிவதெப்படி? அது ஏன் இப்போது அங்கேயே இருக்கிறது? கண்மூடினால்
மட்டும் ஏன் உடம்பின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது? யார் செய்யும்
வேலை இது?...
நீண்ட நேரம் யோசித்தும் பாண்டியனுக்குப்
பதில்கள் கிடைக்கவில்லை. அவரை அறியாமல் அவர் கண்கள் மூடின. உறக்கம்
வந்தது. கனவில் ஓநாயும் வந்தது. பாண்டியன்
முன்பு போல பதறக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அந்த ஓநாயைக்
கூர்ந்து கவனித்தார். அதன் நெருப்பு உமிழும் கண்கள் அவரை முன்பளவுக்குப் பாதிக்கவில்லை. பயத்தை
நேராகச் சந்திக்க ஆரம்பித்தால் பயத்தின் பிடி தளர ஆரம்பிக்கிறது என்பது அவர் அனுபவத்தில்
கற்ற பாடம்.
திடீரென்று இடையே ஒரு திரை விழுந்தது
போல் ஓநாய் உட்பட எதுவும் தெரியவில்லை.
வயிற்றில் மட்டும் கடும் வலியை அவர் உணர்ந்தார். திரை விலகியது. ஓநாய் அவர்
வயிற்றிலிருந்து அவர் குடலைக் கடித்து வெளியே எடுப்பது தெரிந்தது. பாண்டியன்
பீதியடைந்து அந்த ஓநாயைத் தள்ளி விட்டு எழுந்து உட்கார முயன்றார். அவர் கைகளுக்கு
ஓநாய் அகப்படவில்லை. கண்விழித்துப் பார்க்கையில் அவர் அமர்ந்து கொண்டு தான் இருந்தார். ஓநாயைக்
காணோம். வயிற்றைத் தடவிப் பார்த்தார். வயிறு கிழியவில்லை. ஆனாலும்
வயிற்றுக்குள் இருக்கும்
எரிச்சல் அதிகமாகியது. வயிற்றினுள்ளே கூடுதலாக பாதிப்பு உருவாகியிருக்கிறது என்பது புரிந்தது.
அவர் இதயத்தின் தீவிர படபடப்பு குறைய
நீண்ட நேரமாகியது. அதன் பின் அவரால் தூங்க முடியவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்


















