என் நூல்களில் இருந்து சில சிந்தனைச் சிதறல்கள்...
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, December 13, 2023
Monday, December 11, 2023
யோகி 27
எப்போதும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் பழக்கம் இருந்த
ஷ்ரவன் மறுநாள் காலையும் அதே நேரத்தில் எழுந்து விட்டான். ஸ்ரீகாந்த்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறிது நேரம் காலார நடந்து வரலாமென்று நினைத்து ஷ்ரவன் வெளியே வந்த போது அடுத்த அறையிலிருந்த இளம் பெண் ஒருத்தியும்
அதே நோக்கத்துடன் வெளியே வந்தாள். இருவரும் காலை வணக்கம் சொல்லிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். அவள் யோகா
வகுப்பு பற்றியும், நேற்று செய்து பார்த்த தியானப்பயிற்சி அனுபவம் பற்றியும்
ஏதோ சொல்லிக் கொண்டு வர அதைக் கேட்டுக் கொண்டே ஷ்ரவன் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து
கவனித்துக் கொண்டே வந்தான்.
யோகாலயாவில் சிறிய சிறிய அழகான தோட்டங்கள்
நிறைய இருந்தன. ரசித்துக் கொண்டே இருவரும் நடந்தார்கள். அவர்களைப்
போலவே யோகா பயிற்சிக்கு வந்திருந்த வேறு இரண்டு முதியவர்களும் சிறிது தொலைவில் நடந்து
சென்று கொண்டிருந்தார்கள். வலது புறம் ஒரு துறவி தரையில் ஒரு துணி விரிப்பில் அமர்ந்தபடி
தியானம் செய்து கொண்டிருந்தார். முன்னால் சென்று கொண்டிருந்த முதியவர்கள் அடுத்த ஒரு பெரிய ’கேட்’டை நெருங்கி
அங்கிருந்த காவலாளியிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.
அவர்கள் பேசுவது என்ன என்பது காதில்
விழா விட்டாலும் அந்த இரண்டாம் ’கேட்’டைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதியில்லை என்று காவலாளி சொல்லியிருக்க
வேண்டும் என்று ஷ்ரவன் ஊகித்தான். அவனுடன்
நடந்து வந்து கொண்டிருந்த இளம் பெண் சொன்னாள். “யோகி பிரம்மானந்தாவும், மற்ற துறவிகளும்
அது தாண்டி தான் வசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.”
ஷ்ரவன் மெல்லத் தலையசைத்தபடி சொன்னான். “அப்படித்
தான் தோணுது. நேத்தே க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும் சொன்னாங்களே”
அந்த ‘கேட்’ தாண்டி
உள்புறம் ஏழெட்டு துறவிகள் அவர்களைப் போலவே நடந்து கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. உள்ளேயும்
நிறைய சிறிய, அழகான தோட்டங்கள் இருந்தன. அங்கே சில
துறவிகள் சில இடங்களில் தியானம் செய்தபடி அமர்ந்து இருப்பதும் தெரிந்தது. அந்தத்
துறவிகளில் இரண்டு வெளிநாட்டுத் துறவிகளும் இருந்தார்கள். அவர்களைப்
பார்க்கையில் சட்டத்துக்குப் புறம்பாக சில வெளிநாட்டினர் அங்கே தங்கி இருப்பதாகச் சிலர்
புகார் சொல்வது ஷ்ரவனின் நினைவுக்கு வந்தது. அது உண்மையாக
இருக்கும் பட்சத்தில், பாதுகாப்பான ஒரு கோட்டைக்குள் அவர்கள் இருப்பது போன்ற நிலை
தான் என்பதில் சந்தேகமில்லை.
முன்னால் சென்ற இரண்டு முதியவர்களும்
திரும்பி வர ஆரம்பித்தார்கள். ஷ்ரவனுக்கும், அந்த இளம் பெண்ணுக்கும்
காலை வணக்கம் தெரிவித்தபடி கடந்தார்கள். இவர்களும் பதில்
வணக்கம் சொல்லி விட்டு கேட் வரை சென்று விட்டுத் திரும்பி வருகையில் தான் ஷ்ரவனுக்கு
ஒரு வித்தியாசம் உறைத்தது.
துறவிகள் அனைவரும் இரண்டாம் கேட் தாண்டி
உள்ளே வசிப்பவர்களாக இருக்கையில், பலர் அங்கேயே நடப்பதும், தியானம்
செய்வதுமாக இருக்கையில் ஏன் ஒரு துறவி மட்டும் வெளியேயுள்ள இந்தப் பகுதிக்கு வந்து
தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்? இப்பகுதியில் தியானம்
செய்து கொண்டிருக்கும் துறவியை அவன் ஓரக் கண்ணால் கூர்ந்து பார்த்தான். அந்தத்
துறவி தியானத்தில் இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இப்பகுதியில் என்ன நடக்கிறது
என்று கண்காணிக்க அமர்ந்திருப்பவர் போல் தெரிந்தார். அவர் அமர்ந்திருந்த வெட்டவெளிப்
பகுதி காமிராக்கள் இல்லாத பகுதி.
காமிராவுக்குப் பதிலாக இவர் அமர்ந்திருக்கிறார் என்பது புரிந்தது.
மிக எச்சரிக்கையாக இவர்கள் இருப்பது, யார் மூலமாவது
ஆபத்து வந்து விடலாம் என்பதற்காகவா, அல்லது இவர்கள்
வேறெதையோ ரகசியமாய்ப் பாதுகாக்கிறார்களா?
அன்றைய வகுப்புகளும் முந்தைய நாள் வகுப்புகளைப் போலவே நல்ல
முறையிலேயே நடந்தன. கற்றுக் கொடுக்க வந்த துறவிகள் கால் மணிக்கு ஒரு முறை யோகி
பிரம்மானந்தா பெயரை ஏதாவது ஒரு வழியில் வலுக்கட்டாயமாய் வரவழைத்து, பயபக்தியுடன்
மறக்காமல் குறிப்பிட்டதைத் தவிர குறை சொல்ல ஷ்ரவனுக்கு ஒன்றும் இருக்கவில்லை. ஆரம்பத்தில்
ஓரிரு முறை இந்த யோகப் பயிற்சிகளை உருவாக்கியதே யோகி பிரம்மானந்தா தான் என்பது போலச்
சொன்னதை ஸ்ரீகாந்த் அவ்வப்போதே மறுத்துச் சொல்லியதால், பின் அந்த
வகை அதிகபட்சக் கருத்துகளை அந்தத் துறவிகள் தவிர்த்தாலும் ஒரு அவதார புருஷரைச் சொல்வது
போல் அந்தப் பெயரை அவர்களால் சொல்லாமல் இருக்கவில்லை. பின் ஸ்ரீகாந்தே
சலித்துப் போய் அதற்கு விமர்சனம் செய்வதைக் கைவிட்டான்.
ஸ்ரீகாந்த் யாருடன் பேசினாலும் யோகாலயத்து
ஆட்கள், பேச்சைக் கேட்கும் தூரத்தில் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருப்பது
தொடர்ந்தது. ஸ்ரீகாந்த் வெளிப்படையாகத் தன்னுடைய எதிர்க்கருத்துகளைச்
சொன்னதால் அவனை ஒரு பிரச்சினைக்குரிய ஆளாகவும், கண்காணிக்கப்பட
வேண்டிய ஆளாகவும் யோகாலயத்தினர் முடிவு செய்து விட்டது ஷ்ரவனுக்கு சிறுபிள்ளைத்தனமாகத்
தோன்றியது. யோகா, தியானம் போன்ற உயர்ந்த விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் இடத்தில், சாதாரண
எதிர்மறைக் கருத்துகளையே சகிக்க முடியாதது பெரிய முரண்பாடான விஷயம். இங்கு வந்த
பின் சைத்ரா எதையாவது எதிர்க்கத் துணிந்திருப்பாளோ? இயல்பாகவே
நியாய உணர்வு மிக்க அவள் அப்படி எதிர்த்தது தான் அவள் உயிரிழக்கக் காரணமாகி விட்டதோ?
யோகாலயத்தில் ஒட்டு மொத்தமாக எத்தனை
துறவிகள் வசிக்கிறார்கள் என்ற துல்லியமான தகவல் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஆயிரம்
வரை இருக்கலாம் என்பது தான் குமரேசனின் கருத்தாக இருந்தது. யோகாலய
இணைய தளத்தில் கூட அந்தத் தகவல் இருக்கவில்லை. சரியாகச்
சொல்வதானால் அந்த இணைய தளத்தில் பிரம்மானந்தாவின் தெய்வீகத் தன்மை, பெருமைகள், பிரதாபங்கள்
தவிர வேறு எதுவும் அதிகமில்லை.
முக்கியமான எல்லாமே தெளிவில்லாத மூடுமந்திரமாகவே
இருக்கையில், ஏகப்பட்ட தவறுகள் நடக்க சாத்தியமிருக்கிறது. அதைப் பயன்படுத்திக்
கொள்ளவே யோகாலயம் முக்கியமானவற்றை தெளிவில்லாத மூடுமந்திரமாக வைத்திருக்கிறது என்று
தோன்றியது.
நகரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில்
அன்று காலையிலேயே கூட்டம் அதிகமிருந்தது. ரிசப்ஷனிலும், பணம் கட்டும்
இடத்திலும் ஆட்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். வெளி நோயாளிகளும், அவர்களுடன்
வந்தவர்களும் உட்காருமிடம் நிரம்பி வழிந்தது. அமர்ந்திருப்பவர்
யாராவது எழுந்து போனால் அந்த இடத்தில் அமர்ந்து கொள்ள நிறைய பேர் நின்றபடிக் காத்திருந்தார்கள்.
காலை 11.02க்கு அங்கு
நுழைந்த நடுத்தர வயது மனிதர் முகத்தில் உணர்ச்சிகளே இல்லாமல் அந்த மருத்துவமனையின்
வரவேற்பறையில் இருந்த கூட்டத்தைப் பார்வையிட்டார். பின் அவரைக்
கடந்து சென்ற ஒரு நர்சை அழைத்து “யார் ஆஸ்பத்திரி இன்சார்ஜ்?” என்று கேட்டார்.
அந்த மருத்துவமனைக்கு வந்து அவர் இந்தக்
கேள்வியைக் கேட்டது அவள் முகத்தில் திகைப்பை வரவழைத்தது. அவள் அவரைக்
கேள்விக்குறியுடன் பார்க்க அவர் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினார். அவள் வாங்கிப் பார்த்தாள். “முரளிதரன், மத்திய
அரசு சிறப்புத் தணிக்கை அதிகாரி” என்றிருந்ததைப் படித்து விட்டு இடதுபுறக் கடைசி அறையைக் காண்பித்து
விட்டு நகர்ந்தாள்.
முரளிதரன் இடதுபுறக் கடைசி அறைக்குள்
நுழைந்த போது அங்கு கோட்டும் சூட்டுமாய் அமர்ந்திருந்தவர் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். வாசலில்
நின்று அனுமதி வாங்காமல் முரளிதரன் அறைக்குள் அலட்சியமாக வந்து அமர்ந்ததை அவர் ரசிக்கவில்லை. போனில் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி
விட்டு அவர் முரளிதரனை எரிச்சலான முகபாவனையுடன் ‘என்ன?’ என்பது
போலப் பார்த்தார்.
முரளிதரன் அமைதியாகத் தன்னுடைய விசிட்டிங்
கார்டை நீட்டினார். விசிட்டிங் கார்டைப் பார்த்த பிறகு மருத்துவமனை பொறுப்பாளர்
முகம் மரியாதைக்கு மாறியது. போனில் “நான் பிறகு பேசுகிறேன்” என்று சொல்லிக்
கீழே வைத்து விட்டு அவர் மிகுந்த மரியாதையுடன் சொன்னார். “சொல்லுங்கள்
சார்.”
முரளிதரன் அமைதியாகச் சொன்னார். “கோவிட்ல
இறந்த ஆட்கள் பத்தின ரிப்போர்ட்ஸ் எல்லாம் சரிதானான்னு செக் பண்ணச் சொல்லி என்னை அனுப்பியிருக்காங்க. நீங்க ரிக்கார்ட்ஸ்
எல்லாம் சரியாய் வெச்சிட்டிருக்கீங்க அல்லவா?”
அந்த மனிதர் முகம் சிறிது களையிழந்தது. ஆனாலும்
விரைவாகச் சமாளித்துக் கொண்டவராய் அவர் சொன்னார். “எங்க ரிக்கார்ட்ஸ்
எல்லாம் பர்ஃபெக்டாய் இருக்கு சார்...”
“நல்லது. அப்படின்னா
பிரச்சனையே இல்ல. அந்த ரெக்கார்ட்ஸ நான் செக் பண்ண ஏற்பாடு செய்ங்க. அவங்க அட்மிட்
ஆனதிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன வரைக்குமான எல்லா ரிப்போர்ட்ஸும் இருக்கட்டும்...”
(தொடரும்)
என்.கணேசன்
Thursday, December 7, 2023
சாணக்கியன் 86
சாணக்கியருடன் ரகசியமாக சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு ஆம்பி குமாரன் வாழ்க்கை அமைதி நிலைக்குத் திரும்பியது. அவன் தூதன் மூலம் அனுப்பிய செய்திக்கு யூடெமஸிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. சாணக்கியர் சொன்னது போல யூடெமஸ் புரட்சிக்காரர்கள் பறித்துக் கொண்ட பகுதியை மீட்க அவனே படையுடன் வர வேண்டுமென்று ஆம்பி குமாரன் சொல்லி விட்டதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் ஆம்பி குமாரன் நிம்மதியாக உறங்க முடிந்தது. வாழ்க்கை எத்தனையோ படிப்பினைகளை அவனுக்குத் தந்திருந்ததால் அமைதிக்கு மேல் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனநிலைக்கு ஆம்பி குமாரன் வந்து சேர்ந்திருந்தான். காலம் வேகமாக உருண்டோடியது.
ஒரு நாள் அலெக்ஸாண்டரின் மரணச் செய்தி
வந்து சேர்ந்தது. பாபிலோனில் இருக்கையில் ஏதோ விஷக்காய்ச்சல் வந்து அலெக்ஸாண்டர்
பன்னிரண்டு நாள் உடல்நலமில்லாமல் படுத்திருந்தான் என்றும் சிகிச்சை எதுவும் பலன் அளிக்காமல்
அவன் இறந்து போனான் என்றும் கேள்விப்பட்ட போது ஆம்பி குமாரனால் அந்தச் செய்தியை நம்ப
முடியவில்லை. யவனர்கள் அலெக்ஸாண்டரைத் தெய்வாம்சம் பொருந்தியவனாகவும், கடவுளின்
அவதாரமாகவும் நம்பியிருந்தார்கள். சிலர் அவன் போர்க்கடவுளின் புத்திரன் என்றார்கள். அதற்கேற்ற
மாதிரி அலெக்ஸாண்டரின் வெற்றிகளும் அமைந்து இருந்தன. அப்படிப்
பட்டவன் இளம் வயதில் இப்படி மரணமடைந்தான் என்பதை ஜீரணிக்க யவனர்களுக்கு மட்டுமல்லாமல்
ஆம்பி குமாரனுக்கும் கூடக் கஷ்டமாக இருந்தது.
ஆம்பி குமாரன் உண்மையாகவே ஒருவித சோகத்தை
உணர்ந்தான். அலெக்ஸாண்டர் அவனை வாயார நண்பா என்றழைத்ததும், எல்லா விதங்களிலும்
அவன் மேலான நிலையில் இருந்த போதும் ஆம்பி குமாரனை எப்போதும் மரியாதைக்
குறைவாக நடத்தாததும் ஆம்பி குமாரனுக்கு நினைவுக்கு வந்தன. எத்தனையோ சமயங்களில் எதிர்பார்ப்பது போல நடக்கா விட்டாலும் கூட அவமானப்படுத்துகிற
மாதிரி அலெக்ஸாண்டர் அவனிடம் நடந்து கொண்டதில்லை. யோசித்துப்
பார்த்தால் பிலிப் கூட சில சமயங்களில் கர்வம் காட்டியிருக்கிறான். ஆனால் அலெக்ஸாண்டர்
கர்வம் காட்டியதில்லை. கடைசியில் ஆம்பி குமாரனை சத்ரப் ஆக நியமித்து கௌரவப்படுத்தியும்
இருக்கிறான். இந்த எண்ணங்களால் சோகத்தை உணர்ந்த ஆம்பி குமாரன் க்ளைக்டஸை
அழைத்து யவனர்கள் வழக்கப்படி அலெக்ஸாண்டர் நினைவாக என்ன சடங்குகள், வழிபாடுகள், பூஜைகள்
செய்ய வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையுமில்லாமல் செய்ய உத்தரவிட்டான்.
க்ளைக்டஸும் யவன வீரர்களும் பெரும்
துக்கத்தை உணர்ந்தார்கள். யவன முறைப்படி நடந்த வழிபாடுகளில் தாங்க முடியாத துக்கத்தோடு
அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்தத் துக்கம் அவர்களையும், ஆம்பி குமாரனையும்
தாண்டி வெளியே எங்கும் பரவவில்லை. மாறாக சிலரிடம் அலட்சியமும், பலரிடம்
மகிழ்ச்சியும் தெரிந்தன. மக்கள் புரட்சி சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால்
அலெக்ஸாண்டரின் மரணச் செய்தியைக் கேட்டதும் விழா போல் கொண்டாடினார்கள்.
அலெக்ஸாண்டர் மரணமடைந்த செய்தியைக்
கேட்டு ஒரு நாள் முழுவதும் துக்கம் தாளாமல் அழுத க்ளைக்டஸ் மக்களின் கொண்டாட்டத்தைத்
தாங்க முடியாமல் கோபத்தோடு ஆம்பி குமாரனிடம் வந்தான். “சத்ரப். சக்கரவர்த்தியின்
மரணத்தைக் கொண்டாடும் மக்களை உடனடியாகத் தண்டிக்க வேண்டும்.”
ஆம்பி குமாரன் அவனைப் போல் கோபமும்
அடையவில்லை. பதற்றமும் அடையவில்லை. அமைதியாக
அவன் சொன்னான். “க்ளைக்டஸ். மக்கள் இந்தச் செய்தியை
இன்று கொண்டாடுகிறார்கள். நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால் இன்றோடு அந்தக் கொண்டாட்டம்
முடிந்து விடும். மக்கள் நாளை இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் நாம்
அவர்களைத் தண்டித்தாலோ, கண்டித்தாலோ அது பல நாள் புரட்சியாக வெடிக்கும் வாய்ப்பிருக்கிறது. அது சிறு
நெருப்பை ஊதிப் பெரிதாக்கி விடுவது போல் ஆகி விடும். அதனால்
இதை அலட்சியப்படுத்துவது தான் நல்லது”
க்ளைக்டஸ் திகைத்தான். அலெக்ஸாண்டர்
பெயர் சொல்லி ஆளும் மண்ணில் அவன் மரணம் கொண்டாடப்படுவது அவனுக்குச் சரியாகத் தோன்றவில்லை. அதை அனுமதிப்பதும்
சரியெனத் தோன்றவில்லை. ஆனால் உணர்ச்சிவசப்படாமல்
யோசித்துப் பார்த்தால் ஆம்பி குமாரன் சொல்வதிலும் தவறேதும் தெரியவில்லை. அவன் சொல்வது
முற்றிலும் உண்மையே.
அவன் அறிந்த வரையில் ஆம்பி குமாரன்
இப்படி அறிவுபூர்வமாக யோசிப்பவனோ, பேசுபவனோ அல்ல. அவனிடம் சமீப காலமாகத்
தெரியும் மாற்றங்களில் பக்குவமும், முதிர்ச்சியும்
தெரிகிறது. அதனாலேயோ என்னவோ ஆம்பி குமாரன் க்ளைக்டஸுக்குப் புதிராகவும், அன்னியமாகவும்
தெரிந்தான். அலெக்ஸாண்டர் மரணத்தில் ஆம்பி குமாரனும் சோகம் அடைந்ததைக்
கவனித்திருக்கா விட்டால் க்ளைக்டஸ் ஆம்பி குமாரனும் எதிரிகளுடன் இணைந்து விட்டதாகச்
சந்தேகப்பட்டிருப்பான். அவன் சோகம் அடைந்ததைக் கவனித்திருந்ததால்
ஆம்பி குமாரனின் போக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. யோசித்துப் பார்க்கையில் பிலிப்புக்கு
நேர்ந்த கதி தனக்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை உணர்வோடு ஆம்பி குமாரன் செயல்படுவது
போல் தோன்றியது.
புரட்சிக்கு
முக்கிய காரணம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷ்ணுகுப்தர் இங்கே தட்சசீலத்தில் சில
நாட்கள் தைரியமாக வந்திருந்து விட்டுப் போயிருக்கிறார். அவரைச் சிறைப்படுத்தும் முயற்சி
கூட இங்கு நடக்கவில்லை.
அவர்
தட்ச சீலத்திற்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு க்ளைக்டஸ் ஆம்பி குமாரனிடம் தெரிவித்தான்.
ஆம்பி குமாரன் ஏற்கெனவே ரகசியமாய் போய் அவரைச் சந்தித்து வந்திருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
அப்படி அவன் தெரிவித்த போதும் அவன் எதிர்பார்த்தபடி சீறி நடவடிக்கை எடுக்கத் துணியாமல்
ஆம்பி குமாரன் சொன்னான். “க்ளைக்டஸ். அந்த ஆள் வேண்டுமென்று தான் இங்கே வந்திருப்பதாக
எனக்குத் தோன்றுகிறது. அவரை நாம் சிறைப்படுத்துவோம், அதற்குப் பதிலடி தரும் வகையில்
இங்கேயும் புரட்சி வெடிக்கச் செய்யலாம் என்று புரட்சியாளர்கள் காத்திருக்கிறார்கள்
என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது…”
அப்போதும்
க்ளைக்டஸ் மனத்தாங்கலுடன் கேட்டான். “இப்படி நாம் பயந்து பயந்து பதுங்கினால் அது நமக்கு
பலவீனம் அல்லவா?”
“உண்மை
தான். அதற்காகத் தான் யூடெமஸை ஒரு கூடுதல் படையுடன் கிளம்பி வரச் சொன்னேன். சேர்ந்து
புரட்சிக்காரர்களை ஒடுக்குவோம், இழந்த பகுதிகளை மீட்போம் என்றும் சொன்னேன். சிந்துப்
பிரதேசத்தைத் தாண்டி வர யூடெமஸுக்கும் மனமில்லை. நான் என்ன செய்வது? அவசரப்பட்டு
முட்டாள்தனமாக எதாவது செய்து விட்டால் பின் நிதானமாக நிறைய காலம் நாம் வருத்தப்படும்படி
ஆகி விடும். அதனால் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.”
க்ளைக்டஸ்
கேட்டான். “நாம் எதுவும் செய்யாமலேயே கூட அவர்கள் புரட்சி செய்யலாம். அப்போதும் நாம்
சும்மா பார்த்துக் கொண்டிருப்போமா?”
ஆம்பி
குமாரன் உறுதியாகச் சொன்னான். “அப்படி நடந்தால் கண்டிப்பாக முழு உறுதியுடன் புரட்சியை
முறியடிப்போம். அதில் சின்னச் சந்தேகமும் வேண்டாம். அப்படி நடக்கும் பட்சத்தில் புரட்சிக்காரர்களுக்கு
மக்களின் ஆதரவும், நமக்கு மக்களின் எதிர்ப்பும் முழுவீச்சில் இருக்காது. மக்கள் கோபத்தோடு
முழுவீச்சில் சேர்ந்து கொள்ளாத வரை எந்தப்
புரட்சியையும் ஒடுக்குவது நமக்கு எளிது தான்”
அப்போதும்
சரி, இப்போதும் சரி மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்று ஆம்பி குமாரன் எச்சரிக்கையாக இருக்கிறான் என்று தான்
க்ளைக்டஸ் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலைமைகளை எல்லாம் பார்க்கையில் க்ளைக்டஸ்
மனம் வேதனை அடைந்தது. அலெக்ஸாண்டர் உயிரோடிருந்தால் அவன் என்றாவது ஒரு நாள் வரலாம்
என்ற பயமாவது பலருக்கு இருந்தது. இப்போது அலெக்ஸாண்டரும் இறந்து விட்ட பின் புரட்சியாளர்களைக்
கட்டுப்படுத்துவது கஷ்டம் தான் என்பது புரிகிறது. யூடெமஸ் சிந்துப் பிரதேசத்தைத்
தாண்டி வர மாட்டான். அவன் வராமல் ஆம்பி குமாரன் பிலிப்பைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்கவும்
முற்பட மாட்டான். இழந்த பகுதிகளை மீட்கும் ஆர்வமும், தைரியமும் இருவருக்குமில்லை...
இனி
யவனர்கள் இங்கு நிம்மதியாக இருப்பது கஷ்டம் என்று க்ளைக்டஸுக்குத் தோன்றியது.
புரட்சிக்காரர்களிடம் தாக்குப் பிடிக்க
முடியாமல் ஓடி வந்த யவன வீரர்களில் பாதி பேர் தாயகத்திற்குக் கிளம்பிப் போய் விட்டார்கள்.
மீதமுள்ளவர்கள் காந்தாரம், கேகயம் பகுதிகளின் படைகளுடன் இணைந்து விட்டார்கள்.
அலெக்ஸாண்டர்
உயிரைப் பணயம் வைத்து வென்ற பகுதிகள் சில பறி போவதையும், சில பலவீனமாக இருப்பதையும்,
யவன வீரர்கள் உயிருக்குப் பயந்து பாதுகாப்பான இடம் தேடிப் போகும் நிலை இருப்பதையும்
பார்க்கும் போது களைக்டஸுக்கு வேதனையாக இருந்தது. அலெக்ஸாண்டருக்கு அடுத்தபடியாக சக்தி
வாய்ந்தவனாக இருக்கும் செல்யூகஸுக்கு பாரதத்தில்
இருக்கும் நிலைமையை விரிவாக எழுதித் தெரிவிக்க அவன் முடிவு செய்தான். செல்யூகஸ் அலெக்ஸாண்டருக்கு
இணையானவன் அல்ல என்ற போதிலும் தைரியசாலி, புத்திசாலி. ஏதாவது செய்வான்!
(தொடரும்)
என்.கணேசன்
Monday, December 4, 2023
யோகி 26
அதற்குப் பின் அந்தத் துறவி பிரம்மானந்தாவை மேற்கோள் காட்டிய போதெல்லாம் லேசான பதற்றத்துடன் ஸ்ரீகாந்தைப் பார்ப்பதை ஷ்ரவன் புன்னகையுடன் கவனித்தான். ஆனால் ஸ்ரீகாந்த் முன்பு போல இடைமறித்து எதுவும் சொல்லா விட்டாலும் அவர்களுக்கு குறிப்புகள் எடுத்துக் கொள்ளக் கொடுத்திருந்த சிறிய நோட்டுப் புத்தகத்தில் அந்த மேற்கோள்களை முதலில் யார் சொன்னது என்று ஷ்ரவனுக்கு எழுதிக் காண்பித்தான். ’ரமணர், விவேகானந்தர், ஓஷோ, நீட்ஷே’
மற்றபடி மாலை வரை வகுப்புகள் இயல்பாகப்
போயின. இடைவேளைகளில் டீ, காபிக்குப்
பதிலாக சுக்குக் காபியும், க்ரீன் டீயும் இருந்தன. மதிய வேளைச்
சாப்பாடு எளிமையாகவும், ருசியாகவும் இருந்தது. ஷ்ரவன்
டைனிங் ஹாலிலும் கண்காணிப்பு காமிராக்கள் இருப்பதைப் பார்த்தான். இப்போதெல்லாம்
எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் இருப்பது சகஜம் என்றாலும் சைத்ராவின் மரணத்தைத்
துப்பு துலக்க வந்திருப்பதால் ஷ்ரவனுக்கு அந்த சாதாரண விஷயம் கூட சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மாலையில் யோகா சம்பந்தமாக பிரம்மானந்தா
பேசிய ஒரு வீடியோவைப் போட்டுக் காண்பித்தார்கள். அதில் பிரம்மானந்தா
சிறப்பாகவே பேசியிருந்தார். ஸ்ரீகாந்த் அந்த வகுப்பை நடத்திய துறவியுடம் கேட்டான். “இந்த ஒரு
வார வகுப்பில் எங்களுக்கு எதையாவது கற்றுத் தர பிரம்மானந்தா வருவாரா?”
’அமெரிக்க
ஜனாதிபதி என் வீட்டுக்கு டீ சாப்பிட வருவாரா/’ என்று ஸ்ரீகாந்த்
கேட்டது போல் அந்தத் துறவி அவனைப் பார்த்தார். பிறகு அவர்
மெல்லச் சொன்னார். “யோகி பிரம்மானந்தா வகுப்புகள் நடத்த வருவதில்லை. ஆனால் யோகி
பிரம்மானந்தா அவர்களின் பிரதம சிஷ்யையான சுவாமினி கல்பனானந்தா கடைசி நாள் கடைசி வகுப்புக்கு
வந்து வழிநடத்துவார்கள்.”
அந்தத் துறவி, ஸ்ரீகாந்த்
யோகி என்ற அடைமொழி இல்லாமல் பிரம்மானந்தா என்று வெறுமனே அழைத்ததையும் ரசிக்கவில்லை
என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். அவர் ’யோகி பிரம்மானந்தா’ என்று சொல்கையில்
யோகிக்கு அழுத்தம் தந்து ஸ்ரீகாந்தைப் பார்த்த விதம், ’இப்படி
அழைப்பது தான் மரியாதை’ என்று கற்றுத் தருவது போல் இருந்தது. ஆனால் அதை
ஸ்ரீகாந்த் கவனித்தது போல் தெரியவில்லை. ஷ்ரவன் மிகவும்
சிரமப்பட்டு தான் சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
அவனுக்கு இது வரை பிரம்மானந்தாவின்
பிரதம சிஷ்யை சுவாமினி கல்பனானந்தா பற்றி எங்கேயும் கேள்விப்பட்டதாகவோ, படித்ததாகவோ
நினைவில்லை. அதனால் முதல் முறையாகக் கேள்விப்படும் இந்த நபர் ஆராயப்பட
வேண்டிய நபர் என்று அவனுக்குத் தோன்றியது. பிரம்மானந்தாவைச்
சந்திக்க முடியா விட்டாலும் சுவாமினி கல்பனானந்தாவை இவ்வார இறுதி வகுப்பில் சந்திக்கப்
போகிறோம் என்பது ஆர்வம் மிகுந்த எதிர்பார்ப்பை அவன் மனதில் ஏற்படுத்தியது.
அன்று மாலை கடைசியாக எளிமையான தியானம்
ஒன்றைச் சொல்லித் தந்து தங்கியிருக்கும் அறையில் பயிற்சி செய்து பார்க்கச் சொல்லியனுப்பினார்கள். ஆனால் அறைக்கு
வந்த பின் அந்தத் தியானப் பயிற்சி செய்யும் மனநிலையில் ஸ்ரீகாந்த் இருக்கவில்லை. அன்றைய
வகுப்பில் சொல்லித் தந்தவை பற்றி அவன் விரிவாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தது ஷ்ரவனுக்கு
வேடிக்கையாக இருந்தது. அவன் பெங்களூரில்
கற்றுக் கொண்ட யோகா வகுப்புப் பயிற்சிகளைத் தான் இவர்கள் அப்படியே காப்பியடித்துச்
சொல்கிறார்கள் என்றும் பயிற்சிகளின்
பெயர்களை மட்டும் நவீனமாக மாற்றியிருக்கிறார்கள் என்றும் சொன்னான்.
ஸ்ரீகாந்த் சொன்னது பத்மநாப நம்பூதிரி
உருவாக்கிய யோகா வகுப்புப் பயிற்சிகளை என்பது உடனடியாக ஷ்ரவனுக்குப் புரிந்தாலும் அவன்
அதை ஸ்ரீகாந்திடம் சொல்லவில்லை.
ஷ்ரவன் புன்னகைத்தபடி சொன்னான். “நீங்க யோகி
என்ற அடைமொழியைப் பயன்படுத்தாம பிரம்மானந்தான்னு சொன்னது அந்த துறவிக்குப் பிடிக்கலை
போல இருந்துச்சு. கவனிச்சீங்களா?”
ஸ்ரீகாந்த் ஆச்சரியப்பட்டான். “அப்படியா? நான் கவனிக்கலை. அந்த ஆளை
யோகின்னு நான் சொல்லாமல் இருந்ததுல இவங்களுக்கு என்ன பிரச்சினை?”
ஷ்ரவன் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க
கடுமையாக முயற்சி செய்து வென்றான். ஸ்ரீகாந்த் சொன்னான். “இதுவே பிடிக்கலைன்னா
அந்த ப்ரொஃபசர் சிவசங்கரன் பேசினதை எல்லாம் முழுசாக் கேட்டா இவங்க என்ன சொல்வாங்களோ
தெரியலையே”
“அது யார்
ப்ரொஃபசர் சிவசங்கரன்?”
“சென்னையில
தான் இருக்கார் அவர். தத்துவத்துல பேராசிரியர். ரெண்டு
அருமையான புஸ்தகங்கள் எழுதியிருக்கார். எல்லா தத்துவங்களையும்
கரைச்சுக் குடிச்சவர் அந்த ஆள். பிரம்மானந்தா
பழைய ப்ரேம் ஆனந்தா இருந்த காலத்துல அடிக்கடி அவர் வீட்டுக்குப் போய்ப் பேசிட்டிருப்பாராம். அப்போ
சிவசங்கரன் பேசினதை எல்லாம் ஞாபகம் வெச்சிருந்து இப்ப அப்படியே சொல்றாருன்னு அந்த ஆள்
புகார் சொல்றார். “அப்படியே சொல்லட்டும். தப்பில்லே. ஆனால் சொன்னது இன்னாருன்னு ஒப்புக்கணும் இல்லயா. அது
தானே நியாயம். திருட்டுப்பய சொந்தக் கருத்து மாதிரி சொல்லிட்டு
பெருமையா பாக்கறான் பார்”னு சொல்லி பிரம்மானந்தா அப்படிப் பேசின
ஒரு யூட்யூப் வீடியோவையும் போட்டுக் காமிச்சார்.”
ஷ்ரவன் ஆர்வத்துடன் பேராசிரியர் சிவசங்கரன் எங்கு வசிப்பவர்
என்று கேட்க ஸ்ரீகாந்த் அவரது சென்னை விலாசத்தை வீட்டு அடையாளத்தோடு சொன்னான். வேளச்சேரியிலிருக்கும் அந்த
வீட்டு விலாசத்தை ஷ்ரவன் மனதில் குறித்துக் கொண்டான். “அவரை நீங்க
எப்படி எப்போ சந்தீச்சீங்க?”
“அவரோட புஸ்தகம் ஒன்னை போன மாசம் தான் படிச்சு முடிச்சேன். சென்னைக்கு போன மாசம் ஒரு பிசினஸ் விஷயமா வந்தப்ப தான் போன்ல அட்ரஸ் கேட்டு
நேர்ல போய் சந்திச்சேன். மனுஷன் ஜீனியஸ். எந்த தத்துவ ஞானி பேரை நாம சொன்னாலும் அந்தத் தத்துவ ஞானி சொன்னதை எல்லாம்
மளமளன்னு சொல்ல ஆரம்பிச்சுடறார். வயசானவர். வயசு 70க்கு மேல இருக்கும். அவர்கிட்ட
பேசிகிட்டிருந்தப்ப தான் நான் பிரம்மானந்தா பத்திக் கேட்டேன். மனுஷன் பிரம்மானந்தாவை கிழி கிழின்னு கிழிச்சுட்டார். இப்ப எல்லாம் நேர்ல பார்க்கக்
கிடைச்சாலும் இந்த ஆள் சிவசங்கரனைத் தெரிஞ்ச மாதிரி கூடக் காமிச்சுக்கறதில்லையாம்.”
ஷ்ரவன் புன்னகைத்தான்.
’இதெல்லாம் தெரிந்தும் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே பல இடங்களில் கற்றுக் கொண்ட
யோகாவைக் கற்றுக் கொள்ள இங்கேயும் வந்திருப்பது விமர்சனம் செய்யத் தானோ? வேடிக்கை மனிதன்!’
ஸ்ரீகாந்த் திடீரென்று நினைவுக்கு வந்தவனாய் சிரித்துக் கொண்டே சொன்னான். “பிரம்மானந்தா போன ஜென்மத்துல
பதஞ்சலியோட பிரதான சீடனாம். இங்கே இருக்கற ஆளுக வரைமுறையே இல்லாம
புளுகறாங்க. நான் சொல்லலாம்னு இருந்தேன். ”நான் முற்பிறவியில் பதஞ்சலி முனிவராக அவதரித்தவன். எனக்கு
என் முன் ஜென்மத்து பிரதான சீடனை உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அழைத்து வாருங்கள் பிள்ளைகளே”. நான் அப்படி சொல்லியிருந்தால்
வேடிக்கையாய் இருந்திருக்குமில்லையா?”
ஷ்ரவனும் சிரித்தான்.
அப்படிச் சொல்லியிருந்தால் அவர்கள் இவனைத் தனியாக அழைத்துச் சென்று நையப்
புடைத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று அவன் எண்ணிக் கொண்டான். இங்கே புளுகுவதற்கு அவர்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. இங்கே வருபவர்களுக்கு அதற்கு அனுமதி இல்லை…
அன்று இரவிலும் உறங்குவதற்கு முன் ஸ்ரீகாந்த் நீண்ட நேரம் தனது
பல இடங்களின் அனுபவங்களைப் பற்றி ஷ்ரவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். திடீரென்று யாரோ அவர்கள்
அறை ஜன்னலருகே நின்று ஒட்டுக் கேட்பது ஷ்ரவனுக்குத் தெரிந்தது. ஒட்டுக் கேட்கும் நபரின் பாதி முகம் ஒரு கண நேரம் தான் அவனுக்குத்
தெரிந்தது என்பதாலும் வெளி வராந்தாவில் வெளிச்சம் அதிகம் இல்லாத காரணத்தாலும் அந்த
நபரைப்பற்றி ஷ்ரவனால் அதிகம் அறிய முடியவில்லை. நல்ல
வேளையாக யோகாலயம் பற்றியோ, பிரம்மானந்தா பற்றியோ பேசாமல் அந்த
நேரத்தில் ஸ்ரீகாந்த் தனது ரிஷிகேஷ் யோகா வகுப்பு அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஷ்ரவன் ஒட்டுக் கேட்கும் நபர் பற்றி
தான் அறிந்ததை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சில நிமிடங்களில்
அந்த நபர் போய் விட்டது தெரிந்தது. நடந்தது எதுவும்
தெரியாமல் ஸ்ரீகாந்த் தொடர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டேயிருந்தான்.
இப்போது ஒட்டுக் கேட்டுச் சென்றது போல
மாலையில் அவர்கள் பேச்சை யாரும் ஒட்டுக் கேட்கவில்லை என்பது ஷ்ரவனுக்கு உறுதியாகத்
தெரியும். அப்படி யாராவது ஒட்டுக் கேட்டிருந்தால் அக்கணத்திலேயே அவன்
அதை உணர்ந்திருப்பான். இந்த விஷயத்தில் அவனுடைய உணர்வுகள் கூர்மையானவை. அதனால்
ஒட்டுக் கேட்க ஆணை இங்கிருப்பவர்களுக்கு மாலைக்குப் பிறகு தான் கிடைத்திருக்க வேண்டும்....
(தொடரும்)
என்.கணேசன்













