என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, February 14, 2018

ஷாமனின் சடங்கில் இசை, மூலிகை, காளான், புகையிலை!

அமானுஷ்ய ஆன்மீகம் - 26

ரு ஷாமன் சாதாரண உணர்வு நிலையிலிருந்து கொண்டு மற்ற உலகங்களில் இருந்து தகவல்கள் அறிய முடிந்த நுட்பமான உணர்வு நிலைக்குச் செல்வதற்காகச் செய்யும் சடங்குகள் மிகச் சுவாரசியமானவை மட்டுமல்ல, பொருள் பொதிந்தவையும் கூட. சடங்கு நடத்தப்படும் இடத்தின் நான்கு பக்கங்களும் பூஜிக்கப்படுவது போலவே நிலம், நீர், நெருப்பு, ஆகாயம் என்ற நான்கு இயற்கை சக்திகளும் வணங்கப்படுகின்றன. நிலத்தைப் பிரதிபலிக்க கல்லும், நீரைப் பிரதிபலிக்க ஸ்படிகமும், நெருப்பைப் பிரதிபலிக்க ஊதுபத்தி அல்லது கொள்ளியும், ஆகாயத்தைப் பிரதிபலிக்க பறவையின் இறகும் சடங்கு நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. இந்த நான்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கத்தில் வைக்கப்பட்டு நான்கு பக்கங்களையும் பூஜித்து விட்டு நடுவில் ஷாமன் அமர்வது வழக்கம்.  எந்தத்திசைக்கு எதை வைப்பது என்பதில் உலகமெங்கும் ஒருமித்த கருத்துகள் இல்லை.  சடங்கு செய்வதன் முக்கிய நோக்கத்திற்குத் தகுந்தபடியும், சடங்கு நடக்கும் பகுதியின் வழக்கப்படியும் அது மாறக்கூடியதாக இருக்கிறது.


பின் ஷாமன் அந்தச் சடங்கின் இடத்தின் மத்தியில் உலகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரைபடத்தை மணலில் வரைகிறான். அது பெரும்பாலும் வண்ணப்பொடிகளைக் கொண்டு வரையப்படுகிறது, அல்லது வண்ண நூல்களால் உருவாக்கப்படுகிறது. தென்னமெரிக்கப் பகுதிகளில் கடவுளின் கண், இரண்டு அல்லது நான்கு குச்சிகளுடன் வண்ண நூல்களை இணைத்து வடிவமைக்கப்படுகிறது. நோயாளியைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் சில அமெரிக்கப் பழங்குடி மக்களின் ஷாமனிஸ சடங்கில் மணல் ஓவியம் அல்லது கடவுளின் கண் மத்தியில் நோயாளியே அமர வைக்கப்படுகிறார். அந்த மையப்பகுதி, நோய்கள் மற்றும் குறைபாடுகளை நீக்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சடங்கு முடியும் போது நோய் குணமாகி விட்டிருக்கும் அல்லது குணமாக ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் நிலவுகிறது.


சடங்கில் ஷாமன் அணியும் அணிகலன்கள், ஆடைகள் ஆகியவையும் முக்கியமானவை. ஷாமன் அணியும் தொப்பி மற்றும் ஆடைகள் பெரும்பாலும் விலங்குகளின் தோல்களினால் ஆனவையாக இருக்கின்றன. அந்த சடங்குகளுக்குத் தேவையான சக்தி படைத்த விலங்கினங்களுடைய தோலால் ஆனதாகவோ அல்லது அந்த ஷாமன் பெற்றிருக்கிற பிரத்தியேக சக்தியை பிரதிபலிக்கும் விலங்கினங்களின் தோலினால் ஆனதாகவோ அந்தத் தொப்பியும், ஆடையும் இருப்பது வழக்கம். சடங்கின் போது ஷாமனிடம் ஒரு நீண்ட பிரம்புத்தடி இருப்பதும் வழக்கம். சடங்கின் போது அழைக்காத சக்தியோ, விரும்பத்தகாத சக்தியோ வந்து விடுமானால் அந்த மந்திரத் தடியால் அந்த வேண்டாத சக்திகளை ஷாமனால் விரட்டி விட முடியும் என்று நம்புகிறார்கள். ஷாமனின் உணர்வுநிலையை சூட்சும நிலைக்கு மாற்ற மத்தளம் மற்றும் சில இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து கேட்கும் அந்த இசையை ஆடியபடியே கேட்டுக் கொண்டு களத்தில் சுற்றும் ஷாமன் உச்சக்கட்டத்தில் தன் உணர்வுநிலை மாறுகிறான். சில சமயங்களில் அந்த இசையோடு சில குறிப்பிட்ட நாடோடிப்பாடல்கள் பாடப்படுவதும் உண்டு.


இசையின் உதவியால் உணர்வுநிலை மாறுவதைப் போலவே சில மூலிகைகள், காளான்கள் மென்று தின்று ஷாமன்கள் உணர்வு நிலை மாறுவதும் அதிகமாக நடக்கின்றது. அந்த மூலிகைகள், காளான்களை ஒரு சாதாரண மனிதன் உட்கொண்டால் கஞ்சா பயன்படுத்தியது போல போதையின் வசம் சிக்கித் தள்ளாட நேரிடும். ஆனால் அதே மூலிகைகள், காளான்களை ஒரு உண்மையான ஷாமன் உட்கொள்கையில் உணர்வுநிலை மங்கி போதையில் சிக்குவதற்குப் பதிலாக உணர்வுநிலை கூர்மையாகி சூட்சுமம் பெற்று மாபெரும் உண்மைகளைக் கண்டு சொல்ல முடிகிறது

இங்கு ஒரு உண்மையை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு உண்மையான ஷாமன் போதையை ஊட்டும் சிலவகை மூலிகைகள் மற்றும்  காளான்கள், உட்கொள்வது சடங்குகளின் சமயங்களில் மட்டுமே. அவை உயர் உணர்வுநிலைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுவதால் அவை தெய்வீக மூலிகைகளாகவே ஷாமனிஸத்தில் கருதப்படுகின்றன. அவற்றை போதைக்காக மற்ற சமயங்களில் பயன்படுத்துவது அபசாரமாக பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு ஷாமன் பயன்படுத்துவானானால் சடங்கு சமயங்களில் கூர்மையான உள்ளுணர்வுக்குப் பதிலாக போதையும் தள்ளாட்டுமுமே மிஞ்சுமென்று நம்பப்படுகிறது. அதே போல வட அமெரிக்கா, தென்னமெரிக்கா பகுதிகளில் ஷாமன்கள் புகையிலையையும் கூட சடங்குகளில் பல சமயங்களில் பயன்படுத்துகின்றார்கள். தேவைப்படும் போது மிக அதிக அளவிலும் புகையிலை ஒரே சமயத்தில் உட்கொள்ளப்படுவதுண்டு. ஒரு மனிதனை ஒரேயடியாகப் படுக்க வைத்து விடும் அளவிலான அந்தப் புகையிலை ஷாமனை எந்தக் காரணத்தாலும் நிதானம் தவற வைத்து விடுவதில்லை. மாறாக அவன் உணர்வுகளை மேலும் கூர்மைப்படுத்துகின்றது என்பதே ஆச்சரியமான செய்தி.

ஷாமனிஸ சடங்குகள் நோய்களை குணமாக்கவும் நிகழ்த்தப்படுவதுண்டு என்று சொல்லியிருந்தோம். அது சாதாரண நோய்களை குணப்படுத்த நடத்தப்படுவதில்லை. ஏனென்றால் ஷாமன்கள் மூலிகைகள் பற்றி மிக நுணுக்கமாக அறிந்திருந்தார்கள். 25000 ஆண்டுகளுக்கும் முந்தைய காலத்திய பிரான்சின் லாஸ்காக்ஸ் (Lascaux, France) குகை ஓவியங்களில் நோய்கள் தீர்க்க மூலிகைகள் பயன்படுத்திய ஆதாரங்கள் மிகத்தெளிவாகவே கிடைத்து இருக்கின்றன. எனவே நோய்வாய்ப்பட்டவர்களை சடங்குகள் இல்லாமலேயே மூலிகைகள் தந்து குணமாக்க முயல்கிறார்கள். அதற்காக அவர்கள் ஷாமன் சடங்குகளை முதல்கட்டத்திலேயே பயன்படுத்துவதில்லை. வழக்கமான மூலிகைகளாலும் ஒரு நோயைக் குணமாக்க முடியாமல் போகும் போது தான் காரணம் உடல் ரீதியாக இல்லாமல் மனரீதியாகவும், ஆன்மரீதியாகவும் நடந்த வேறு தவறுகளின் விளைவுகள் ஆகவும் இருக்கலாம் என்று ஷாமனிஸம் முடிவுக்கு வருகிறது. அல்லது ஏதாவது ஆவிகள் அல்லது உயர்சக்திகளின் அதிருப்தி தான் அந்த நோய் என்ற கோணத்தில் அந்த நோயை ஷாமனிஸம் அணுகுகிறது.

அப்போது தான் ஷாமனின் சடங்கு நடத்தப்பட்டு உண்மை அறியப்படுகிறது. மனரீதியான, ஆன்மிகரீதியான தவறுகள் இருந்தால் அவை என்ன என்பதை உயர் சக்திகள் மூலம் ஷாமன் அறிகிறான். சில சமயங்களில் ஆவிகள், அல்லது உயர்சக்திகளின் அதிருப்தியாக இருந்தாலும் அவற்றிற்கான காரணங்களையும் அவற்றிடமே கேட்டு அறிகிறான். கண்டறியும் பரிகாரங்களையும், தீர்வுக்கான வழிகளையும் நோயாளியிடம் அல்லது நோயாளியின் குடும்பத்தாரிடம் சொல்கிறான்.  அத்துடன் அந்த ஆவிகள் வழக்கத்திற்கு மாறான வேறெதாவது மூலிகை பரிந்துரை செய்தால் அதையும் ஷாமன் அறிந்து சொல்கிறான். சொல்லப்பட்ட பரிகாரம் செய்து முடித்து அந்த மூலிகைகளை நோயாளி உட்கொண்டால் பூரணமாகக் குணமடைய முடிவது ஷாமனிஸம் பின்பற்றும் மக்களின் அனுபவமாக இருக்கிறது.   

சில சமயங்களில் சில மூலிகைகள் உட்கொள்ளப்படுவதற்குப் பதிலாக எரிக்கப்படுவதும் உண்டு. அவை மணம் மிக்கதாகவோ, எரியும் போது லேசாக மயக்கம் தருவதாகவோ இருப்பதுண்டு. அந்த மூலிகைப் புகை ஷாமனை மயக்க நிலைக்குக் கொண்டு போக உதவுவது போல் சில ஆவிகளை அங்கு கவர்ந்திழுக்கவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால் சில ஆவிகளுக்கு சில வகை மணங்கள் பிடித்தமானதாக இருப்பதாக ஷாமனிஸம் நம்புகிறது. எந்தெந்த ஆவிகளுக்கு எந்தெந்த வகை மணங்கள் பிடித்தமானவை என்பதை ஒரு திறமை வாய்ந்த ஷாமன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று ஷாமனிஸ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி மூலிகைகளை எரித்து வரும் புகையை சடங்குகளுக்குப் பயன்படுத்துவது திபெத் போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு கிட்டத்தட்ட முப்பது வகை மூலிகைகள் வரை ஷாமனிஸ சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறதென ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

தெற்கு மெக்சிகோ பகுதியின் அமெரிக்கப் பழங்குடி மக்கள் psilocybin mushrooms என்ற ஒரு வகை காளான்களை ஷாமனிஸ சடங்குகளில் மென்று தின்று ஒரு வகை போதை நிலையை அடைகிறார்கள் என்று 1950களில் ஒருமுறை அமெரிக்காவின் லைஃப் (Life) பத்திரிக்கை விலாவாரியாக எழுதப்போக ஷாமனிஸம் அக்காலக் கட்டத்தில் மிகப்பிரபலமானது. அந்த போதைக் காளானையும் பலர் தேடிப் போக அதுபற்றி பத்திரிக்கைகள் அக்காலத்தில் தொடர்ந்து பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டதால் ஷாமனிஸத்தோடு அந்தக் காளானும் மிகப் பிரபலமானது தான் வேடிக்கை.

அமானுஷ்யம் தொடரும்….

என்.கணேசன்       

நன்றி: தினத்தந்தி 01.09.2017


வூடு, அகோரி, ஷாமன் ஆகியவற்றை விளக்கும் “அமானுஷ்ய ஆன்மிகம்” நூல் பிப்ரவரி 2018ல் வெளியாகியுள்ளது. விலை ரூ.100/-







நூல் தங்கள் பகுதியில் எங்கே கிடைக்கும் என்றறிய தினத்தந்தி பதிப்பகத்தை 044-25303336, 044-25303000 எண்களிலோ, mgrthanthipub.dt.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஆர்டர் செய்ய- http://publication.dailythanthi.com/amanushya-anmiham

Monday, February 12, 2018

சத்ரபதி – 7


ந்தவன் தன்னை அயூப்கான் என்றும் அகமதுநகர் ராஜ்ஜியக் கோட்டை ஒன்றின் தலைவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான். பணிந்து வணங்கி நின்ற அயூப்கானை மொகபத்கான் சந்தேகத்தோடு பார்த்தான். அவன் சொன்ன கோட்டை மிகச் சிறிய, எந்த முக்கியத்துவமும் இல்லாத கோட்டைகளில் ஒன்று என்பதால் மொகபத்கான் அயூப்கானை அமரக்கூடச் சொல்லவில்லை.

“வந்த காரணம் என்ன அயூப்கான்?”

“பேரரசரின் ஊழியத்திற்கு வந்து விட எண்ணியிருக்கிறேன். என் வசம் இருக்கும் கோட்டையையும் ஒப்படைக்கிறேன். நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் தலைவரே”

”பேரரசருக்கு முத்துக்கள் வேண்டும் அயூப்கான். கிளிஞ்சல்கள் தேவையில்லை”

மொகபத்கான் கிளிஞ்சல் என்று வர்ணித்தது தன்னையா, அல்லது தன் கோட்டையையா என்று அயூப்கானுக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் மொகபத்கானை அவன் பார்க்க மொகபத்கான் தூரத்தில் பிரம்மாண்டமாய் தெரிந்த தௌலதாபாத் கோட்டையைக் காட்டினான். 

“இது போன்ற ஒரு கோட்டை உன் வசமிருந்து அதை நீ ஒப்படைத்தால் பேரரசருக்கு உன் மேல் நம்பிக்கை வரும். உன்னை உடனே ஏற்றுக் கொள்ளவும் தோன்றும்.  தானாக உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசாட்சியின் உதவாக்கரை கோட்டை ஒன்றை ஒப்படைக்க வந்திருப்பதை பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்று தோன்றவில்லை…..”

அயூப்கான் இதை எதிர்பார்க்கவில்லை. உதிர்ந்து கொண்டிருக்கும் அரசாட்சியில் தானும் உதிர்ந்து சருகாகிப் போக விரும்பாமல் தான் அவன் முகலாயர்கள் பக்கம் சேர வந்துள்ளான். ஆனால் உதவாக்கரை கோட்டை என்று சொல்லி மொகபத்கான் சுவாரசியம் காட்ட மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது. என்ன சொன்னால் இந்த படைத்தலைவன் ஏற்றுக் கொள்வான் என்று யோசித்தபடி அயூப்கான் நின்றான்.

மொகபத்கான் திடீரென்று சந்தேகத்தோடு சொன்னான். “நீ ஷாஹாஜி அனுப்பிய ஒற்றனாகக் கூட இருக்கலாம் என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறதே”

அயூப்கான் அரண்டு போனான். “ஐயோ தலைவரே. அபாண்டமாய் என் மீது பழி சுமத்தாதீர்கள். உங்கள் சந்தேகத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து உங்கள் சந்தேகத்தைப் போக்கி விடுகிறேன்”

உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மொகபத்கான் மூளையில் சிறு பொறி தட்டியது. முயற்சி செய்து பார்ப்பதில் நஷ்டமில்லை…..

“ஷாஹாஜியையோ, அவன் மனைவி மற்றும் குழந்தையையோ கைது செய்து எங்களிடம் ஒப்படைத்தால் பேரரசர் உன் மேல் பெருமதிப்பு கொள்வார். உயர்ந்த பதவி கொடுத்து எங்களுடன் சேர்த்துக் கொள்ளவும் செய்வார். இப்போது எங்களுக்கு வேண்டியிருப்பது ஷாஹாஜி தான். சில்லறைக் கோட்டைகள் அல்ல. போய் வா அயூப்கான்….” 

அயூப்கான் வெறும் கையோடு திரும்ப விரும்பவில்லை. யோசித்தான். ஷாஹாஜி அவன் கைப்பற்ற முடிந்த ஆள் அல்ல. அதற்கு முயன்றால் அவன் உயிர் தப்புவதும் கஷ்டம் தான். ஆனால் ஜீஜாபாயும் அவள் குழந்தையும் வேறு விஷயம். …. இந்த முயற்சி வெற்றி பெற்றால் முகலாயப் பேரரசில் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கலாம்….


றுநாள் இரவில் அயூப்கான் பைசாப்பூர் வந்து சேர்ந்தான். ஷாஹாஜியிடமிருந்து அவசரத்தகவல் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி ஜீஜாபாயைச் சந்திக்கும் அனுமதி பெற்றான். ஜீஜாபாய் அவனை முன்பே சில முறை பார்த்திருக்கிறாள். அகமதுநகர் கோட்டை ஒன்றின் தலைவன் அவன் என்பது தெரியும். எத்தனையோ முறை அவன் ஷாஹாஜியிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் கண்டிருக்கிறாள். ஆனால் ஷாஹாஜியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல அவன். அதனால் அவன் மூலம் தகவல் வந்திருப்பது அவளைச் சிறிது சந்தேகம் கொள்ள வைத்தது.

அவள் சந்தேகம் கொள்வாள் என்பதை முன்பே யூகித்து வைத்திருந்த அயூப்கான் அழகாய் ஒரு கதை பின்னிச் சொன்னான். “ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கிறது தாயே. அதனால் தான் தலைவர் ஷாஹாஜி தன் நண்பர்களையோ, நெருங்கிய வட்டத்து ஆட்களையோ அனுப்பினால் ஒற்றர்கள் மூலம் அறியப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தினால் தான் தந்திரமாக என்னை அனுப்பியிருக்கிறார்….

”சொல்லுங்கள். என்ன விஷயம்?”

“தௌலதாபாதில் முகாமிட்டிருக்கும் முகலாயப்பேரரசின் படைத்தலைவன் மொகபத்கான் உங்கள் கணவர் மீது கோபமாக இருக்கிறான் தாயே. அவரை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான். படைபலம் பெரிதாக இருந்தாலும் கூட உங்கள் கணவரின் மறைந்திருந்து தாக்கும் தன்மையால் அவமானப்பட்டிருக்கிறான் அந்த அற்பப் பதர். அவரை அடக்க அவன் உங்களையும் உங்கள் குழந்தையையும் சிறைப்பிடிக்க ரகசியத்திட்டமிட்டு இருப்பதாக உங்கள் கணவருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர்கள் நாளையே இங்கு வரலாம் போலத் தெரிகிறது. அதனால் ஷாஹாஜி இரவோடிரவாக உங்களையும், குழந்தையையும் பத்திரமாக ஓரிடத்துக்கு அழைத்து வரும் பொறுப்பை எனக்குத் தந்திருக்கிறார்….”

ஜீஜாபாய்க்குப் பாதி சந்தேகமும் பாதி நம்பிக்கையுமாக இருந்தது. மெல்லக் கேட்டாள். “என் கணவர் உங்களை எப்படிச் சந்தித்தார்?”

அயூப்கான் இதற்குப் பதிலை முன்கூட்டியே யோசித்து வைத்திருந்ததால் சிறிதும் தயங்காமல், குழறாமல், யோசிக்காமல் சொன்னான். “உண்மையில் அவரைச் சந்திக்கச் சென்றது நான் தான் தாயே. ஃபதேகான் முகலாயர்களிடம் எங்களை விற்று விட்டதில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. உங்கள் கணவருடன் சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றி நான் ஆலோசித்துக் கொண்டிருக்கையில் தான் உங்களையும் குழந்தையையும் சிறைப்பிடிக்கப் போகும் தகவல் ஒற்றர் மூலமாக அவருக்கு வந்து சேர்ந்தது. முதலில் அவருடைய ஆட்களையே அனுப்பத் தீர்மானித்திருந்தார். ஆனால் அவருடைய ஆட்கள் வெளியே அடையாளம் காணப்பட்டவுடனேயே எதிரிகள் கண்காணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். வேறு வேடம் போட்டுக் கிளம்பினாலும் முகலாய ஒற்றர்களின் பார்வைக்குத் தப்புவதில்லை என்பதால் என்னிடம் இந்த உதவியைக் கேட்டார். வேறு ஆட்களை அனுப்பினால் உங்களுக்கு நம்பி அவர்களுடன் செல்லச் சிரமமிருக்கும் என்றும், என்னைப் போல் ஒரு கோட்டைத்தலைவனே உங்களை அழைத்துப் போக வந்தால் நீங்கள் தைரியமாக வரலாம் என்று அவர் சொன்னார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இந்தச் சிக்கலில் சிக்க விருப்பமில்லை. ஆனால் அவர் முதன் முதலில் என்னிடம் கேட்ட உதவியை மறுப்பது என் வீரத்துக்கும் என் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்று உள்ளுணர்வு சொன்னது. அதனாலேயே வந்தேன்….”

சிவாஜி ஓடி வந்து தாயின் மடியில் அமர்ந்து கொண்டான். அயூப்கான் சொன்னதை எல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டே ஜீஜாபாய் யோசித்தாள். இந்தக் கோட்டைத்தலைவன் முகலாயர் பக்கம் போனதாய் இது வரை தகவல் வரவில்லை. ஏதோ ஒரு பக்கம் வந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்த இவன் ஷாஹாஜி பக்கம் வந்திருக்கிறான்…. வந்த இடத்தில் அவர் உதவி கேட்க மறுக்க முடியாமலேயே வந்தது போலத்தான் தெரிகிறது. முகலாயர் அவளையும் அவள் குழந்தையையும் சிறைப்பிடிக்க முயற்சி செய்யலாம் என்று அவள் சந்தேகப்பட்டது நடக்கப் போகிறது. ஒருவேளை இவனே ஏமாற்றுப் பேர்வழியாக இருந்தால் என்கிற சந்தேகம் கடைசியாக மெல்ல எட்டிப்பார்த்தாலும் ஒரு கோட்டைத்தலைவன் அந்த அளவு தரம் தாழ்வானா என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

”எப்படிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்கள்?”  ஜீஜாபாய் கேட்டாள்.

”என் தாய் சில மகான்களின் சமாதிகளைத் தரிசிக்க புனித யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அவர் போல நான் உங்களை அழைத்துப் போகிறேன். நம் பிராந்தியங்களில் பயணம் செய்ய முடிந்த திரைச்சீலையால் மூடிய சிறிய ரதம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன். ரதத்தில் நீங்கள் அமர்ந்து வாருங்கள். முன்னால் நான் குதிரையில் செல்கிறேன். நம்முடன் சில வீரர்கள் மட்டுமே குதிரையில் வருவார்கள். அதனால் சந்தேகம் ஏற்பட வழியில்லை…. இது ஷாஹாஜி போட்ட திட்டம்….”

திட்டம் அவளுடைய கணவனின் திட்டம் போல புத்திசாலித்தனமாகத் தான் இருந்தது. அவள் சிவாஜியைத் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தாள். “சரி சிறிது வெளியே காத்திருங்கள். நான் என் முக்கிய உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வருகிறேன்…..”

அயூப்கான் பணிவுடன் தலை தாழ்த்தி வெளியே சென்றுக் காத்திருந்தான். தனியறைக்குள் சென்று அவசரமாய் சில துணிமணிகளை ஒரு பட்டுப் பையில் போட்டுக் கொண்டவளின் அடிவயிற்றைக் காரணம் தெரியாத ஒரு பயம் புரட்டியது. போகிற வழியில் ஒரு வேளை பிடிபட்டால்….? சிறிது யோசித்து விட்டு மகனைச் சுவரோரமாக நிற்க வைத்து விட்டு அவன் காதில் இரகசியமாய்ச் சொன்னாள். “நான் முன்பே சொன்னபடி இது ஆபத்துக்காலம். நீ சத்யஜித் மாமாவுடன் வா. நான் முன்னால் தனியாகப் போகிறேன்….”

சிவாஜி அழுவான் அல்லது அடம்பிடிப்பான் என்று அவள் பயந்திருந்தாள். ஆனால் அவன் முகம் வாடிய போதும் அழவில்லை. மறுத்து எதுவும் பேசவில்லை. தாயை யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னான்.

“கடவுள் என்னுடன் வேண்டாம். உன்னுடனே வரட்டும்….” அவனும் தாழ்ந்த குரலில் சொன்னான்.

அவளுக்குப் புரியவில்லை. “ஏன்?”

“என்னுடன் சத்யஜித் மாமா இருக்கிறார். நீ தனியாகப் போக வேண்டாம். கடவுள் உன்னுடன் வரட்டும்…”

அப்போது தான் அவளுக்குச் சில நாட்கள் முன்பு அவனிடம் பேசிய பேச்சும் “உங்களுடன் கடவுள் இருப்பார்” என்று அவள் சொன்னதும் நினைவுக்கு வந்தது. தன்னுடன் கடவுள் வந்தால் அம்மா தனித்து விடப்படுவாள் என்று அவள் குழந்தை யோசிக்கிறான்…. கண்கள் ஈரமாக மகனை வாரியணைத்து முத்தமிட்ட ஜீஜாபாய் மகனிடம் சொன்னாள். “கடவுள் உன்னுடனும் இருக்கமுடியும். அதே நேரம் என்னுடனும் இருக்க முடியும் மகனே! உண்மையில் அவர் எல்லோருடனும் தான் இருக்கிறார். நாம் தான் அதை அறியத் தவறிவிடுகிறோம்… அதனால் தான் பலமிழந்தவர்களாகப் பரிதவிக்கிறோம்…..”

சிவாஜிக்கு தாய் சொன்னதில் ஒன்று தான் புரிந்தது. ’கடவுள் அம்மாவுடனும் இருக்க முடியும், அதே நேரத்தில் அவனுடனும் இருக்க முடியும்….. இருவரையும் அவர் காப்பார்…….’ அவன் புன்னகைத்தான். அவள் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டே சத்தமில்லாமல் ஓரமாக ஒளிந்து நிற்க சைகை காட்டி விட்டு ஒரு தலையணையைத் தோளில் போட்டு அதில் ஒரு பட்டுத்துணியைப் போர்த்திக் கொண்டு இன்னொரு கையில் துணிமணிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

எல்லாம் திட்டமிட்டபடி சரியாகவே நடந்தால் அவள் முன் போய்ச் சேர்வாள். பின்னால் மகன் வந்து சேர்வான். ஒருவேளை ஏதாவது ஆபத்து வந்தால் அவள் சிக்கினாலும் அவள் மகன் தப்பித்துக் கொள்வான்! அவளுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அவள் குழந்தை பாதுகாப்பாக இருந்தால் சரிதான்!

(தொடரும்)
என்.கணேசன் 

Thursday, February 8, 2018

இருவேறு உலகம் - 69

ராஜதுரையின் மரணம் செந்தில்நாதனின் விசாரணை வேலையைக் கேள்விக்குறியாக்கியது. முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருந்த சிறப்பு காவல்துறைப் பிரிவில் தான் இந்த க்ரிஷ் வழக்குக்காக அவர் நியமிக்கப் பட்டிருந்தார். நடந்ததை எல்லாம் அவர் விளக்கி ராஜதுரையிடம் தெரிவித்த போது அவர் சங்கரமணி மற்றும் மாணிக்கம் பற்றி கடுமையான வார்த்தைகள் சொல்லியிருக்கா விட்டாலும் தொடர்ந்து சந்தேகப்படும்படி தோன்றும் எல்லாவற்றையும் கண்காணித்து வரும்படி சொல்லி இருந்தார். புதிதாக இந்த வழக்கில் எதை அறிய நேர்ந்தாலும் உடனடியாக அவர் கவனத்திற்குக் கொண்டு வரும்படி சொல்லியிருந்தார். மாணிக்கம் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் அதைத் தொடர விடமாட்டார் என்பதை செந்தில்நாதன் அறிவார். வேலை இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அது நல்ல சௌகரியமான இடமாற்றமாக இருக்காது என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது. அந்த இடமாற்ற ஆணைக்காக அவர் காத்துக் கொண்டே இருந்தார்.

அவர் எதிர்பார்த்தபடி முதலமைச்சரின் உதவியாளர் அவருக்குப் போன் செய்து முதலமைச்சர் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் முதலமைச்சர் அலுவலகத்திற்குப் பதினோரு மணிக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தார். பதினோரு மணிக்குச் சென்ற செந்தில்நாதனுக்கு நீண்ட நேரம் மாணிக்கத்தைச் சந்திக்க முடியவில்லை. முதலமைச்சர் முக்கிய ஆலோசனை ஒன்றில் இருப்பதாகவும் காத்திருக்கும்படியும் உதவியாளர் சொன்னார். பதினொன்றரை மணிக்கு சங்கரமணி அதிகார மிடுக்குடன் அங்கே வந்தார். வெளியே அமர்ந்திருந்த செந்தில்நாதனைக் கவனிக்காத மாதிரியே நடித்து ஆனால் ஒன்றரைக் கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே போனார். இதெல்லாம் செந்தில்நாதன் தன் சர்வீஸில் எத்தனையோ முறை அனுபவப்பட்ட விஷயம் என்பதால் அவர் பெரிதாக பாதிக்கப்பட்டு விடவில்லை.

பன்னிரண்டரை மணிக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உள்ளே போன செந்தில்நாதன் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து விட்டு நின்றார். பக்கவாட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அதிகார தோரணையில் அமர்ந்திருந்த சங்கரமணியை அவரும் கண்டு கொள்ளவில்லை.

மாணிக்கம் இயல்பாக இருந்தார். செந்தில்நாதனை எதிரே உட்காரச் சைகை செய்த அவர் மரியாதை தொனியிலேயே பேசினார். ”அண்ணனுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு. அதனால தான் நாங்க க்ரிஷ் காணாம போனப்ப கண்டுபிடிக்க யாரையாவது திறமையான ஆளைப் போடணும்னு சொன்னப்ப அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார். நல்ல வேளையா க்ரிஷ் ஆபத்தில்லாம வந்துட்டதால இதுல உங்களுக்கு வேலையில்லாமப் போயிடுச்சு. அதனால உங்களை போலீஸ் பயிற்சித்துறைக்கு மாத்தியிருக்கேன். புதுசா வர்ற போலீஸ்காரங்களுக்கு உங்க மாதிரி ஒரு முன்மாதிரி பயிற்சி தர்றது சிறப்பா இருக்கும்னு நினைக்கிறேன்…..” முதலிலேயே உறையில் போட்டு வைத்திருந்த ஆணையை மாணிக்கம் நீட்டினார்.

அலங்கார வார்த்தைகளில் மகிழ்ச்சியடையும் மனநிலையில் இல்லாத செந்தில்நாதன், அதை வாங்கிக் கொண்டு, உதட்டளவில் “நன்றி சார்” என்று சொன்னார். இடமாற்ற ஆணையை நேரில் அழைத்துத் தர வேண்டிய அவசியமில்லை என்ற போதும் இந்த ஆள் ஏன் வரவழைத்து, ஒன்றரை மணி நேரம் காக்க வைத்துத் தருகிறார் என்பது செந்தில்நாதனுக்குப் புரியவில்லை…. புரியாததும் நல்லதே என்று நினைத்தார். அரசியல்வாதிகளைப் புரிந்து கொண்டால் பைத்தியம் பிடித்து விடும்.

சங்கரமணி எகத்தாளத் தொனியில் சொன்னார். “சொல்லித்தர்றதை ஒழுங்கா சொல்லிக் கொடு. நடுராத்திரில எவனோ வெள்ளைமுடிக்காரனப் பார்த்தான்னு சொன்னவுடன அதை நானுன்னு முடிவு பண்ணிட்டு அவசரமா என்னை விசாரிக்க வந்தியே அப்படியெல்லாம் போலீஸ்காரன் அவசரப்பட்டு தப்பா முடிவு செஞ்சுடக்கூடாதுங்கறதையும் சரியா சொல்லிக்கொடு”

மருமகன் முதலமைச்சர் ஆகி விட்ட கர்வத்தில், மருமகன் முன்னிலையில் ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினால் செந்தில்நாதன் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு தான் போவார் என்று சங்கரமணி தப்புக்கணக்கு போட்டு விட்டார். செந்தில்நாதன் குனிந்து போய் பழகாதவர். அவர் சங்கரமணியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னார். “அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் பார்த்தது உங்களைத்தான். எனக்கு அதில் சந்தேகமே இல்லை… சரியா தான் முடிவுக்கு வந்தேன்…..”

சங்கரமணி இதை எதிர்பார்க்கவில்லை. ’ஒன்றரை மணி நேரம் நாய் போல் காத்திருந்தும் இவனுக்குப் புத்தி வரலையே, டம்மி போஸ்ட்டுக்கு மாத்தினது மட்டும் போதாது. தூர எங்கயாவது தூக்கியடிச்சிருக்கணும்’ என்று கொதித்தார். அவர் முன்னாலேயே சிறிதும் தயக்கம் இல்லாமல் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செந்தில்நாதன் பேசியது மாணிக்கத்தையும் கோபப்படுத்தியது. ஆனால் மாமன் மேல் தான் கூடுதல் கோபம் வந்தது. ’தடி கொடுத்து அடி வாங்க வேண்டிய அவசியம் தான் இவருக்கு என்ன?’

சங்கரமணி எகத்தாளமாகவே சொன்னார். “நல்ல வேளை நீ கஷ்டப்பட்டு தப்பா கண்டுபிடிச்சதைக் கேட்க ஆளேயில்லை…..”

“ஏன் இல்லை. போய்ச் சொன்னா உதயும், கமலக்கண்ணனும் கேட்பாங்க” செந்தில்நாதன் அமைதியாகச் சொன்னார்.

மாணிக்கம் பேரபாயத்தை உணர்ந்தார். மாமனை “கொஞ்சம் பேசாம இருங்க மாமா” என்று அதட்டி விட்டு செந்தில்நாதனிடம் அவர் சொன்னார். “யார் மனசுலயும் தப்பான ஒரு எண்ணத்தை சீக்கிரம் போட்டுடலாம். ஆனா அதை அந்த மனசுல இருந்து எடுக்கறது ரொம்பவே கஷ்டம்,  செந்தில்நாதன். அது உங்களை மாதிரி பொறுப்பான அதிகாரிக்குத் தெரியாததல்ல. அவர் சொல்றதை பொருட்படுத்தாதீங்க. அன்னைக்கு ராத்திரி அவர் அந்த இடத்துக்குப் போகலை. அது எனக்கு நல்லாத் தெரியும். இதோட இதை விட்டுடுங்க… உங்க புதிய பொறுப்பிலும் முத்திரை பதிக்க என் வாழ்த்துக்கள்”

”நன்றி சார்” என்ற செந்தில்நாதன் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து விட்டு சங்கரமணியை அலட்சியப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.  சங்கரமணி கொதித்தபடி சொன்னார். “என்ன திமிர் பார்த்தியா அவனுக்கு?”

மாணிக்கம் சலிப்புடன் மாமனைக் கேட்டார். “மாமா இது தேவையா நமக்கு?”

சங்கரமணிக்கு மருமகன் தன்னை ஆதரிக்காதது வருத்தம் தந்தது. மாணிக்கம் சொன்னார். “மாமா நாம இக்கட்டான சூழ்நிலையில இருக்கோம். முதலமைச்சரா நான் ஆயிட்டாலும் ராஜதுரை மாதிரி சொந்தக் கால்ல என் நாற்காலி நிக்கல. நாம பணம் கொடுத்து வாங்கின ஆள்கள் எத்தனை நாள் அதோட திருப்திப்பட்டுட்டு உக்கார்ந்துக்குவாங்கன்னு தெரியல. அவனுக எப்பவுமே மதில் பூனைக தான். அடுத்ததா தேர்தல் வந்துதுன்னா மக்கள்லயும் எத்தனை பேரு நமக்கு ஓட்டுப் போடுவான், ஜெயிப்போமா, தோற்போமா எதுவும் தெரியல. இந்த நிலைமைல கமலக்கண்ணனையும், உதயும் பகைச்சுக்கறது புத்திசாலித்தனமில்ல. கமலக்கண்ணனையாவது சமாளிக்கலாம், அந்த உதய் பயல் இப்பவே கடுப்பா தான் இருக்கான். இந்த செந்தில்நாதன் எதாவது போய் போட்டுக் கொடுத்தா அப்பறம் நேரடியா மோத ஆரம்பிச்சுடுவான். கொஞ்சம் பொறுமையா இருங்க. நாம நம்மள ஸ்திரப்படுத்திட்டு அப்புறம் இவங்களை எல்லாம் கவனிச்சுக்கலாம்….”

சங்கரமணி பெருமூச்சு விட்டார். “நீ சொல்றதும் வாஸ்தவம் தான். ஆனா ஒன்னு இவனைப் பழி வாங்கலைன்னா இந்தக் கட்டை வேகாது சொல்லிட்டேன்….. எதுக்கும் இவன் மேல ஒரு கண்ணு எப்பவுமே வச்சிருக்கறது நல்லதுன்னு படுது”

மாணிக்கம் சொன்னார். “அதுக்கு நான் ஏற்பாடு முதல்லயே பண்ணிருக்கேன். இவர் போனையும், உதய் போனையும் கண்காணிப்புல வெக்கச் சொல்லிருக்கேன். ரெண்டு பேரும் போன்ல யார் கிட்ட என்ன பேசினாலும் நமக்குத் தெரியாம போகாது”

மருமகனின் முன் ஜாக்கிரதை திருப்தி  அளிக்க சங்கரமணி தன் அடுத்த கவலையைச் சொன்னார். “எனக்கு உன் மகன் முகத்தைப் பார்க்கச் சகிக்கல. எப்ப பார்த்தாலும் வாட்டமாவே இருக்கான்…..”

“அவனுக்கு நம்ம மாதிரி பல பிரச்னை இல்லை மாமா. அவனுக்கு ஒரே பிரச்ன க்ரிஷ் தான். க்ரிஷின் எதிரி ரொம்ப நாளைக்கு அவனை விட்டு வெக்க மாட்டான். க்ரிஷ் போயிட்டான்னா மணீஷோட பிரச்னை முடிஞ்சுதுன்னு அர்த்தம். அந்தப் பெண்ணை எப்படியும் சரிபண்ணிடலாம்…”


செந்தில்நாதன் தன் கீழ் வேலை செய்யும் போலீஸ்காரரின் செல்போனைக் கேட்டு வாங்கி உதயின் அடியாள் ஒருவனுக்குப் போன் செய்தார். அவர் முன்பு கைது செய்து வழக்கு பதிவு செய்த அடியாட்களில் அவன் முக்கியமானவன் என்பதால் அவன் செல்போன் எண் அவரிடம் இருந்தது.

“ஹலோ”

“முத்து. நான் செந்தில்நாதன் பேசறேன். உதய் கிட்ட போனைக் கொடு”

“சார் அண்ணன் தூங்கறார்”

“பரவாயில்லை எழுப்பு. இது முக்கியமான விஷயம்….”

“ஒரு நிமிஷம் சார்….”

இரண்டரை நிமிடம் கழித்து உதய் குரல் கேட்டது. “சொல்லுங்க சார். என்ன விஷயம்?”

“க்ரிஷ் வந்துட்டதால என்னை இந்தக் கேஸ்ல இருந்து எடுத்து ட்ரெய்னிங் காலேஜுக்கு மாத்திட்டாங்க. க்ரிஷுக்கு இருக்கற ஆபத்து முழுசும் நீங்கிடல. அன்னைக்கு உங்க எதிர்ல ப்ரேக் இல்லாம வந்த லாரி நம்பர்ப்ளேட் முதற்கொண்டு எல்லாம் போலி. அந்த டிரைவர் க்ளீனர் ரெண்டு பேரும் தலைமறைவாயிட்டாங்க. தெய்வாதீனமா தான் நீங்க எல்லாரும் தப்பிச்சிருக்கீங்க. குறி உங்க தம்பி தான்னு தெரியிது. ஆனாலும் எல்லாருமே எச்சரிக்கையா இருக்கறது நல்லது. நான் சொன்னது யாருக்கும் தெரிய வேண்டாம்….”

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, February 7, 2018

இறைவனை அடையும் வழிகள்!


கீதை காட்டும் பாதை 49

றைவனை அடைவது என்பது இறந்தவுடன் வைகுண்டம் போய் சேர்வதல்ல. வாழும் போதே இறைநிலையுடன் வாழ்வது. இறைவனுடன் ஐக்கியமாகி இறைத்துளியாகி வாழ்வது. இந்த நிலையில் சாதாரண மனிதர்களின் சங்கடங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லை. துக்கங்கள் இல்லை. அப்படியே இருப்பது போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றினாலும் உள்ளே துளியளவும் பாதிக்கப்பட்டு விடாமல் சச்சிதானந்த நிலையுடன் வாழ்க்கையை நகர்த்தும் நிலை.

இப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்:

அர்ஜுனா! யார் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பித்து, என்னையே குறிக்கோளாகக் கொண்டு வேறெந்த நினைவுமின்றி என்னைத் தியானம் செய்து உபாசிக்கிறார்களோ அப்படி என்னிடமே மனதை ஈடுபடுத்தியவர்களை ஜனனம், மரணம் என்ற பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்த்து விடுவேன்.

உன் மனதை என்னிடமே வைத்து விடு. உன் புத்தியை என்னிடமே செலுத்தி விடு. அதற்குப் பிறகு நீ என்னிடமே தங்கி விடுவாய். இதில் சந்தேகமில்லை.

மனம், புத்தி, இரண்டும் இறைமயமானால் செயலும் இறைத் தன்மையோடு தான் இருக்கும்.  வேறெந்த நினைவுகளும் உள்ளே நுழையாமல் இருந்தால், அவன் நினைவாகவே இருக்கவும் முடிந்தால் அது உச்சக்கட்ட ஆன்மீக நிலை. அந்த நிலையில் பிறக்கும் கர்மங்களில் தனிமனிதனின் மனக்கசடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய தனி லாப நஷ்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. கர்மங்களும் இறைவனைச் சார்ந்தவை. இறைவனே குறிக்கோள். இறைநிலையே குறிக்கோள் என்ற நிலையில் வாழ்பவனை இருள்சேர் இருவினையும் சேர வாய்ப்பில்லை. அதனால் பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து ஒருவன் விடுபடுகிறான். இறைவனிடமே, இறைநிலையிலேயே மரணம் வரையில் மட்டுமல்ல, மரணத்திற்கப்பாலும் தங்கி விடுவான். அதனால் இதில் சந்தேகம் தேவையில்லை என்கிறார் பகவான்.

ஆனால் மனதை அப்படி இறைவனிடமே நிலைநிறுத்துவது எல்லோருக்கும் முடிகிற காரியமா என்ன! ஒரு நிமிடம் தியானத்தில் அமர்ந்தால் ஓராயிரம் வேறு எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கிறதே என்ன செய்ய? அப்படியானால் இறைவனை அடையவே முடியாதா?

முடியும் என்கிற பகவான் இப்படிச் சொல்கிறார்:

அப்படி ஒரு வேளை உன் மனதை என்னிடமே நிலை நிறுத்த முடியா விடில் அப்யாச யோகம் என்ற பயிற்சி முறைகளினால் என்னை அடைய விரும்புவாயாக.

அத்தகைய அப்யாச யோகமும் செய்ய முடியவில்லை என்றால் எனக்காகக் கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவாயாக. எனக்காகக் கர்மங்களைச் செய்தாலும் சித்தியடையவாய்.

அதையும் செய்ய முடியா விட்டால் நான் சொல்லிய கர்மயோக முறையைப் பின்பற்றி மனதைக் கட்டுப்படுத்தி சகல கர்ம பலன்களையும் தியாகம் செய்.

அப்யாச யோகம் என்பது வழிபாட்டுப் பயிற்சிகளில் முழுமனதாக ஈடுபட்டு இறைநிலையை மனதில் இருத்திக் கொள்வது. திரும்பத்திரும்ப இறைவனின் திருநாமத்தை உச்சரித்தல், சேவித்தல், பூஜித்தல் போன்ற வழிபாட்டு முறைகளில் பக்தியுடன் ஈடுபடும் போது மனம் சுலபமாக இறைவனிடம் ஒட்டிக் கொள்ளும்.

அது முடியாவிட்டால் இறைவனின் பிரதிநிதியாக எல்லாக் கர்மங்களிலும் ஈடுபடச் சொல்கிறார்.  எதுவுமே நமக்காகச் செய்வதில்லை, எந்த லாப நஷ்டமுமே தனிப்பட்ட முறையில் நமக்கில்லை இறைவனுக்காக, அவன் பிரதிநிதியாக இயங்குகிறோம் என்றால் நான் என்பது மறைந்து போய் நம்மில் இறை குடிகொண்டு விடும்.

அதுவும் முடியவில்லை என்றால் எந்தப் பலனிலும் பற்று வைக்காமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் கர்ம யோக முறைப்படி நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்ய பகவான் உபதேசிக்கிறார். அப்படிச் செய்யும் போதும் இறைநிலையில் இருப்பவர்களாகி விடுவோம்.

ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருக்கும் இந்த வழிகளுக்கு இராமாயணத்தின் கதாபாத்திரங்களையே உதாரணமாகச் சொல்லலாம்.

இறைவனையே குறிக்கோளாக வைத்துக் கொண்டு, மனம், புத்தி எல்லாம் அவனிடமே வைத்து வாழும் நிலைக்கு இலக்குவன் ஒரு நல்ல உதாரணம். அவனுக்கென்று எதுவும் இல்லை. எல்லாம் இராமனே என்று வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இராமனைப் பின் தொடர்ந்து நிழலாக வாழ்ந்தவன் அவன்.

இறைவனுக்காக செயல் புரிபவன், இறைவனின் பிரதிநிதியாகச் செயல்புரிபவன் என்கிற நிலைக்கு பரதன் சிறந்த உதாரணம். இராமன் கட்டளைப்படி இராமனுக்காக ஆட்சி செய்து வாழ்ந்தவன் பரதன். இராமனின் பாதுகையை அரியணையில் வைத்து, இராமனின் பெயரில் ஆட்சி செய்தவன். அரசன் அவனல்ல, ஆட்சியும் அவனுடையதல்ல. எல்லாம் இராமனுக்காக என்று வாழ்ந்தவன் அவன்.

விருப்பு வெறுப்பு இல்லாமல், பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்து வாழும் நிலைக்கு ஜனகரை உதாரணம் சொல்லலாம். இங்கு இறைவன் கூடக் கணக்கில் இல்லை. விதிக்கப்பட்டிருக்கும் கடமையை, விருப்பு வெறுப்பின்றி சரியாக, சிறப்பாக, தர்மநெறிப்படி ஆட்சி செய்த ஜனகரும் இராமனைச் சாராமல் இருந்த போதிலும் இறைநிலை பெற்றவர் தான்.

பகவான் சொன்ன இந்த வழிகளை ஆராய்ந்தோமானால் அவை “நான், எனது” என்ற எண்ணம் மேலோங்காத நிலைகள் என்பது புரியும். நான், எனது, என்ற நிலைகள் இருக்கும் வரை தனிமனிதனே வெளிப்படுவான். அவை போய் விடும் போது தவறுகளுக்கோ, குறைபாடுகளுக்கோ வாய்ப்பில்லை. இறைவனை நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அந்தத் தூய நிலையில் இறைவன் குடி கொண்டிருப்பான், இறைநிலை கைகூடும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பாதை நீளும்…..

என்.கணேசன்

Monday, February 5, 2018

சத்ரபதி – 6


பைசாப்பூருக்கு வந்த மறுநாளே ஜீஜாபாய் சத்யஜித்திடம் சொன்னாள். ”சகோதரனே, உன்னிடம் ஒரு வேண்டுகோள்…..”

சத்யஜித் ஒரு கணம் திகைத்து விட்டுச் சொன்னான். “ஊழியனிடம் ஆணை தான் பிறப்பிக்க வேண்டும் தாயே! என்னை சகோதரன் நிலைக்கு உயர்த்தி என்னை நீங்கள் தர்மசங்கடப்படுத்துகிறீர்கள்”

“ஊழியம் கூலியோடு முடிந்து விடுகிறது சகோதரனே. ஆனால் உறவுகள் மரணம் வரைத் தொடர்கின்றன. உன்னிடம் நான் விடுக்கும் கோரிக்கை வெறும் ஒரு ஊழியனால் செய்து முடிக்க முடியாதது. எனக்கு இப்போது தாய் வீட்டின் ஆதரவும் இல்லை. இருந்திருந்தாலும் உதவ என் தந்தையும், சகோதரனும் உயிரோடு இல்லை. அதனால் தான் உன்னிடம் வேண்டி நிற்கிறேன். எனக்கு உதவுவாயா?”

ஜீஜாபாயைப் போன்ற ஒரு அரசகுடும்பத்து வீரப்பெண்மணி சகோதரனாக அவனை எண்ணிப் பேசியதில் மனமுருகிப் போன சத்யஜித் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னான். “தாயே நீங்கள் ஆணையிடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?”

“எதிரிகள் என்னையும் சிவாஜியையும் கைது செய்ய என்னேரமும் இந்த பைசாப்பூர் கோட்டையைக் கைப்பற்றலாம் என்று அஞ்சுகிறேன். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் நீ என் மகன் சிவாஜியோடு எப்படியாவது எதிரிகள் பார்வையிலிருந்து தப்பித்து விட வேண்டும். நிலைமை சரியாகிற வரை அவனை ரகசியமாய் வைத்திருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும்”

சத்யஜித் சொன்னான். “தாயே நீங்கள் அனாவசியமாக அஞ்சுகிறீர்கள். இது ஷிவ்னேரிக் கோட்டை அல்ல. நாம் இன்னொருவர் தயவிலும் இல்லை. பைசாப்பூர் தற்போது தங்கள் கணவரின் ஆதிக்கத்திற்கு வந்து விட்டது. அதனால் தான் அவர் ஷிவ்னேரியிலிருந்து இங்கே வந்து விடச் சொல்லி இருக்கிறார்….. ”

“தக்காணப்பீடபூமியில் எந்தக் கோட்டையும் எவர் வசமும் நீண்ட காலம் இருந்ததில்லை சகோதரனே! எதுவும் எப்போதும் கைமாறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த நேரத்தில் என் உயிருக்குயிரான மகனை நீ ரகசியமாய்க் கொண்டு போய் விட வேண்டும். செய்வாயா?”

“கண்டிப்பாகச் செய்கிறேன் தாயே. அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள்?”

“ஆபத்தும் துன்பமும் எனக்குப் புதிதல்ல சகோதரனே! நான் சமாளிப்பேன். என் குழந்தையை மட்டும் நீ காப்பாற்று போதும். முகலாயர்கள் கோட்டைகளைக் கைப்பற்றுவதில் வல்லவர்கள். ஆனால் மலையின் சூட்சுமங்களும், ரகசிய மறைவிடங்களும் அவர்கள்  அறியாதவை….….” ஜீஜாபாய் குறிப்பாய் உணர்த்தினாள்.

புரிந்து கொண்ட சத்யஜித் அவளுக்கு வாக்குக் கொடுத்தான்….


தெற்கின் நுழைவாயிலாக இருந்த அகமதுநகரை மிக முக்கியமான பகுதியாக முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் புரிந்து வைத்திருந்தார். ஒன்று வசப்பட்டால் மீதமுள்ள பகுதிகளும் வசப்படும் என்று கணக்குப் போட்ட அவர் அகமதுநகர் அரச வம்சத்தினரின் அத்தனை வாரிசுகளையும் கொன்று விடும்படி ஆணையிட்டார். அதில் அரசகுலத்துக் கர்ப்பிணிப் பெண்களையும் கூடக் கொன்று விடும்படி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரி அந்தப் பகுதியின் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை.

முழுவதுமாக அகமதுநகர் அரசை தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டு வர நினைத்த ஷாஜஹானுக்கு ஷாஹாஜி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில அகமதுநகரின் பகுதிகளைக் கைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஷாஹாஜியின் கை ஓங்குவதும் அவருடன் பீஜாப்பூர் சுல்தான் கை கோர்த்ததும் ஆபத்தாகத் தோன்றவே ஷாஜஹான் அகமதுநகரின் மிக முக்கியக் கோட்டையான தௌலதாபாத்தை முற்றுகையிட்டு வென்றிருந்த தளபதி மொகபத்கானிடம் ஷாஹாஜியையும் பீஜாப்பூர் சுல்தானையும் அடக்கச் சொன்னார்.


ப்போது கணவனே முகலாயர்களின் முக்கிய எதிரியாகி விட்ட தகவல் ஜீஜாபாயை வந்தடைந்தது. அவள் பயப்பட்ட நிலைமை வந்து விட்டது. . இனி எதுவும் நடக்கலாம்…..

ஒருநாள் மெல்ல சிவாஜியிடம் ஆரம்பித்தாள். “சிவாஜி, திடீரென்று நம் எதிரிகள் வந்தால் நீ என்ன செய்வாய்?” கேட்டது தான் கேட்டு விட்டாளேயொழிய அவனுக்குக் கேள்வி எந்த அளவு புரியும் என்று அவளுக்குத் தெரியவில்லை.


சிவாஜியிடம் விளையாட்டு வாள் இருந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டே தாயிடம் மழலையில் சொன்னான். “இதை எடுத்து எதிரியைக் குத்தி விடுவேன்”

ஜீஜாபாய் புன்னகைத்தாள். “அதெல்லாம் நீ வளர்ந்து பெரியவனானவுடன் செய்யலாம்….. அது வரை, நீ முழு பலசாலி ஆகும் வரை, பதுங்கி இருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…..”

“அது எப்படி?” மழலை மாறாமல் சிவாஜி கேட்டான்.

“நீ சத்யஜித் மாமாவுடன் போய் விடு. அவர் உன்னைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வார்.”

“அப்படியானால் நீ?”

“நான் இங்கேயே இருப்பேன்….. நான் உன்னுடன் வந்தால் என்னுடன் சேர்ந்து உன்னையும் கண்டுபிடித்து விடுவார்கள்….”

குழந்தை சிவாஜி முகம் வாடியது. “அப்படியானால் நீ என்னுடன் வர மாட்டாயா?”…… எனக்கு சாப்பிட எல்லாம் யார் தருவார்கள்?”

அவன் முன் அழுது அவனைப் பலவீனப்படுத்திவிடக்கூடாது என்று ஜீஜாபாய் பெரும்பாடு பட்டாள். “சாப்பிட சத்யஜித் மாமா தருவார். நீ சமர்த்தாக அவருடன் இருக்க வேண்டும்…. சரியா?”

சிவாஜி தலையாட்டினாலும் அவன் முகத்தில் குழப்பமும் கவலையும் தெரிந்தன. “என்னுடனும் சத்யஜித் மாமாவுடனும் யார் இருப்பார்கள்?”

ஜீஜாபாய் சொன்னாள். “கடவுள் இருப்பார்….”

“அப்படியானால் சரி” என்று சிவாஜி ஓரளவு நிம்மதியடைந்தான். தனியாகப் போய் ஜீஜாபாய் ரகசியமாய் அழுதாள்…..


மொகபத்கான் தக்காணப் பீடபூமிக்கு அனுப்பப்பட்டதை விரும்பவில்லை. தக்காணப்பீடபூமியின் தட்பவெப்பநிலை அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டெல்லியின் வசதி வாய்ந்த ஆடம்பரமான மாளிகைகளுக்கு எதிர்மாறாக இருந்தன தக்காணப்பீடபூமியின் எண்ணற்ற கோட்டைகள்.  வெளியேயும் வசதிக்குறைவு. உள்ளேயும் வசதிக்குறைவு. போர்ச் சூழ்நிலையோ முடிகிற மாதிரி தெரியவில்லை. முடிந்து தொலைந்தால் வெற்றிகரமாக டெல்லிக்குத் திரும்பலாம். சக்கரவர்த்தியிடம் சன்மானமாகப் பொன்னும் பொருளும் அல்லாமல் ஏதாவது நல்ல பதவியும் கூடக் கிடைக்கலாம். ஆனால் போர் முடிய விடாமல் ஷாஹாஜி போன்ஸ்லே தடையாக இருப்பது மட்டுமல்ல நள்ளிரவில் வந்து கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தி முகலாயப் பெரும்படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்து விட்டுப் போகும் வழக்கமும் ஷாஹாஜியிடம் இருந்தது.  உறக்கத்திலிருக்கும் முகலாயப்படை சுதாரிப்பதற்குள் காற்றாய் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் பறந்து போய் விடுவார்கள்.
                       
தௌலதாபாத் அருகே முகாமிட்டிருக்கையில் அப்படி இருமுறை தாக்குதலை நிகழ்த்தி விட்டு ஷாஹாஜி போயிருந்ததால் உறக்கம் கூடச் சரியாக வராமல் பல இரவுகளில் மொகபத்கான் விழித்திருந்தான். எல்லாமாகச் சேர்ந்து மொகபத்கானுக்கு ஷாஹாஜி மேல் கடுங்கோபத்தை உண்டாக்கியிருந்தது. “இந்த வகைத் தாக்குதல்களை ஷாஹாஜி  எங்கே கற்றான்…..” என்று அகமதுநகரப் படைத்தலைவன் ஒருவனிடம் ஒருநாள் மாலை மொகபத்கான் கேட்டான்.

”ஃபதேகானின் தந்தை மாலிக் ஆம்பரிடமிருந்து தான் ஷாஹாஜி இந்த கொரில்லா போர் முறையைக் கற்றுக் கொண்டான் தலைவரே. ஃபதேகான் தன் தந்தையின் திறமையிலும், குணத்திலும் பத்தில் ஒரு பங்கு வைத்திருந்தால் கூட அகமதுநகருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அந்த அளவு மாலிக் ஆம்பர் வீரரும் புத்திசாலியுமாவார்…. ஷாஹாஜி அவரின் நிழலாக இருந்து அத்தனையும் கற்றுக் கொண்டான்….. அவனுடன் இருக்கும் வீரர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறான்….”

மொகபத்கான் யோசித்து விட்டுக் கேட்டான். “அவன் மனைவியும் ஒரு குழந்தையும் ஷிவ்னேரிக் கோட்டையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே… இன்னும் அங்கே தான் இருக்கிறார்களா?”

“சில நாட்கள் முன்பு அவர்கள் பைசாப்பூர் கோட்டைக்கு வந்து விட்டதாகக் கேள்வி. பைசாப்பூர் இப்போது ஷாஹாஜியின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறது……”

மொகபத்கான் யோசித்தான். பைசாப்பூர் கோட்டை தௌலதாபாத், மஹூலிக் கோட்டைகள் அளவுக்கு வலிமையான கோட்டை அல்ல. அந்தக் கோட்டையைப் பிடிப்பதால் ஷாஹாஜியின் மனைவியையும், குழந்தையையும் சிறைப்பிடிக்கலாமேயொழிய வேறெந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவர்களைச் சிறைப்பிடிப்பதன் மூலம் ஷாஹாஜியை வழிக்குக் கொண்டு வர முடியும் என்றால் அது பெரிய பயன் தான். சீக்கிரமாகப் போரை முடித்துக் கொண்டு  டெல்லி போய்ச் சேரலாம். போதும் இந்த அகமது நகர அரசியலும், காட்டுத்தனமான கொரில்லாப் போர் முறையும், பஞ்சத்தில் இருக்கும் பிரதேசங்களும்…….

இந்த சிந்தனையில் மொகபத்கான் தங்கியிருந்த போது விதியே அனுப்பியது போல் அகமதுநகரின் ஒரு கோட்டைத் தலைவன் அவனைச் சந்திக்க வந்தான்….


(தொடரும்)
என்.கணேசன் 

Saturday, February 3, 2018

ஆழ்மனசக்திகள் எவை? யாருக்கு வாய்க்கும்?

ஆழ்மனசக்திகளின் வெளிப்பாடுகள் எவை? ஆழ்மனசக்திகள் யாருக்கு வாய்க்கும்? முக்கியமாக உங்களுக்கு வாய்க்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எளிமையான விளக்கங்கள், பதில்களை  இந்தக் காணொளியில் காணுங்கள்....






என்.கணேசன்

Thursday, February 1, 2018

இருவேறு உலகம் – 68



மாஸ்டர் ஹரித்வாரின் கங்கைக் கரையில் நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருந்தார். கங்கை என்றுமே அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியதே இல்லை. என்னேரமும் புதியதாய் தோன்றி, என்னேரமும் புத்துணர்ச்சியுடன் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கை, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சதா பாடம் நடத்துவது போல் அவருக்குத் தோன்றியது.  அழைத்துப் பாடம் நடத்தினாலே கவனிக்கத் தவறும் மனிதன் இந்த மௌனப் பாடத்தைக் கவனிப்பானா என்ன என்று நினைத்தபடி மாஸ்டர் புன்னகைத்தார்.

உடனே மின்னலாய் ஒரு உண்மை அவருக்குள் எழுந்து உறுத்தியது. ’அடுத்தவர்களைச் சொல்வானேன் நானே கூட ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தோடு பாடங்களைப் படிக்கிறேனா என்ன?’ என்று ஆத்மார்த்தமாய் அவர் கேட்டுக் கொண்டபோது இல்லையென்றே மனசாட்சி பதில் அளித்தது.  ’எதிர்மறையான ஒரு சக்தி ஊடுருவியிருக்கிறது, குருவைக் கொன்றிருக்கிறது, முழுமூச்சில் தன் வேலையில் இறங்கியிருக்கிறது. இத்தனையும் அறிந்த பின்னும் கூடுதலாக நான் எதுவும் படிக்கவில்லை, என் பழைய அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவில்லை, புதிய நிலைமைக்கு ஏற்றபடி புதியவனாய் களத்தில் இறங்கவில்லை. என் மனதையே ஒரு கணம் ஆக்கிரமிக்கப் பார்க்கும் துணிவு எதிரிக்கு இருந்திருக்கிறது. அந்த அளவு துணிச்சலை எதிரிக்கு என் அலட்சியத்தால் நானாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேனே. இத்தனை ஆன பின்னும் அதற்கு எதிராக எதுவுமே நான் செய்யவில்லையே’ நினைக்க நினைக்க அவருக்குத் தன் மீதே கோபம் வந்தது.

‘எல்லாரும் என் பழைய உயரத்தை வைத்து மதிக்கிறார்கள். அது பொதுவான மனிதர்களின் சுபாவம். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய உயர்ந்த மனிதன் தன் உயரத்தைத் தானே அல்லவா அடிக்கடி அளந்து பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் எல்லாம் தெரிந்தது தானே என்கிற அலட்சிய மனநிலையில் மந்தமாகி நான் என் உயரத்தைச் சிறிது இழந்திருக்கிறேன். இது எனக்குப் பெருமையல்ல. என்  குருவுக்கும் பெருமை அல்ல. நமஸ்காரம் கங்கையே. உன் கரையில் உட்கார்ந்திருந்த எனக்கு மௌனமாய் நீ ஒரு பாடம் நடத்தி என்னை யோசிக்க வைத்திருக்கிறாய். நன்றி… ஆத்மார்த்தமான நன்றி…..”

மாஸ்டர் மானசீகமாக கங்கையிடம் பேசியபடியே அப்படியே கங்கையில் இறங்கி கைகூப்பியபடி கங்கையில் மூழ்கினார். கங்கை அன்னை அவரை ஆரத் தழுவி ஆசிர்வாதம் செய்தது போல் தோன்றியது. பின் கரையேறியவர்  ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். கரையிலிருந்த ஆட்கள் எல்லாம் போன பின்னரும் சிலையாய் கரையில் அவர் அமர்ந்திருந்தார். நடுநிசி இரவில் மற்ற எல்லா சத்தங்களும் ஓய்ந்த பின்னரும் கங்கை ஓட்டத்தின் சலசலப்பு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது….


மாணிக்கம் முதலமைச்சராகப் பதவியேற்ற விழா ஆடம்பரமில்லாமல் எளிமையாக நடந்தது. பதவியேற்பு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட சங்கரமணி விரும்பினாலும் ராஜதுரையின் பிரிவால் வாடுவது போலக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த மாணிக்கம் அதைத் தவிர்த்தார். புதிய அமைச்சரவையில் கமலக்கண்ணனுக்குப் பழைய துறையே வழங்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் அனைவரும்  மாணிக்கத்தின் ஆட்களாய் இருந்தார்கள். இந்த ஏற்பாட்டில் கமலக்கண்ணன் பெரிதாகப் பாதிக்கப்படாவிட்டாலும் உதய் தங்களைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியின் முதல்படியாக அடையாளம் கண்டு கொண்டான். அதனால்  பதவியேற்பு விழாவுக்கு வந்த போது அவன் இறுக்கமாகவே இருந்தான். அதை மாணிக்கம் கவனித்தார். அவன் இன்றில்லா விட்டாலும் நாளை கண்டிப்பாக பிரச்னை தருவான் என்பது புரிந்தது. கவனமாக அவனைக் கையாள வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். மற்றபடி அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று பெரிதாகப் பாதிக்கப்படாமல் இருந்தார்.

ஆனால் மணீஷும் பெரிய சந்தோஷமில்லாமல் இருந்தது தான் அவரை மிகவும் பாதித்தது. தந்தை முதலமைச்சராகும் போது அவன் சந்தோஷத்தின் உச்சத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும். அவன் மகிழ்ச்சிக் குறைவுக்குக் காரணம் இப்போதும் க்ரிஷ் தான். பதவியேற்பு விழாவுக்கு மணீஷ் ஹரிணியையும் அவள் தாயையும் அழைத்திருந்தான். அவர்களும் வந்திருந்தார்கள். வந்த ஹரிணி  க்ரிஷ் அருகில் உட்கார்ந்ததும், அவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததும் தான் மணீஷை மிகவும் பாதித்திருக்கிறது என்பது மாணிக்கத்திற்குப் புகுந்தது. ‘மகனே இவளை விட எத்தனையோ அழகான, புத்திசாலியான பெண்கள் உனக்குக் கிடைப்பார்கள். இவளை பொருட்படுத்தாதே, மறந்து விடு’ என்றெல்லாம் சொல்லத் தோன்றியது. ஆனால் மணீஷ் அதைக் கேட்பான் என்று தோன்றவில்லை. எல்லாவற்றையும் விட மிக முக்கியம் என்று மனது ஒன்றை நம்பும் போது அதைத் தவறவிட்டு, பின் உலகமே கையில் கிடைத்தாலும் ஒருவனால் சந்தோஷப்பட முடிவதில்லை!

மகன் அப்படி வாட்டத்துடன் இருக்கையில் மாணிக்கத்திற்கும் சந்தோஷமாய் இருக்க முடியவில்லை. அங்கு அனைவரையும் விடச் சந்தோஷமாய் இருந்தது சங்கரமணி தான். அவர் தான் புது உற்சாகத்துடன் பலரையும் அதட்டிக் கொண்டும், வேலை வாங்கிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருந்தார். இனி எல்லாமே இங்கு நான் தான் என்பதை வார்த்தைகள் இல்லாமல் அறிவிக்க அவருக்கு அந்தப் பதவியேற்பு விழா தகுந்த இடமாகத் தெரிந்தது.

ஹரிணியின் தாய் கிரிஜாவுக்கு மணீஷைப் பிடித்த அளவு க்ரிஷைப் பிடித்தது இல்லை. காரணம் தன் மகள் க்ரிஷ் பின்னால் சுற்றும் அளவுக்கு அவன் அவளைக் கண்டு கொள்வது போல் அவளுக்குத் தோன்றியிருக்கவில்லை. அவன் அவர்கள் வீட்டுக்கு வருவதும் மிகவும் குறைவு. மணீஷ் அளவுக்கு ஹரிணியைப் பார்க்க அவன் வந்ததில்லை. இதெல்லாம் க்ரிஷ் மீது அபிமானக்குறைவை கிரிஜாவிடம் ஏற்படுத்தியிருந்தது. க்ரிஷின் குடும்பத்தினரோடு எந்த நெருங்கிய தொடர்புக்கும் அவளுக்குச் சந்தர்ப்பமும் வாய்த்ததில்லை.

ஆனால் இன்று பத்மாவதி அவளைப் பார்த்தவுடன் தானாக வலிய வந்து பேசினாள். கிரிஜாவுக்கும் எந்தப் பந்தாவும் இல்லாமல் யதார்த்தமாகப் பழகும் பத்மாவதியைப் பிடித்து விட்டது. ஹரிணி பத்மாவதியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததில் தவறில்லை என்று தோன்றியது. அந்த அளவு பத்மாவதி அதிமரியாதை கொடுத்து கிரிஜா மனதில் இடம் பிடித்து விட்டாள்.  சம்பந்தியம்மாள் என்பது முடிவாகி விட்டதால் கிரிஜாவிடம் அப்படி வலியப் போய் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட உதய் தன் மனநிலை மறந்து புன்னகைத்தான். விட்டால் அம்மா ஹரிணிக்கும், க்ரிஷுக்கும் இப்போதே திருமண தேதி முடிவு செய்து விடுவாள் என்று தோன்றியது. பத்மாவதி, கிரிஜா இருவரும்  பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மணீஷுக்கு அவர்கள் எல்லோரும் இப்போதே ஒரே குடும்பமாக ஆகி விட்டது போலத் தோன்றி அந்த எண்ணமே இதயத்தை அனலாகச் சுட்டது….

மாணிக்கம் மகன் பார்வை போன இடத்தையும், முகம் அடைந்த வாட்டத்தையும் கவனித்தார். பின் கஷ்டப்பட்டுத் தன் பார்வையை மகனிடமிருந்து விலக்கி வந்திருக்கிற சிறப்பு விருந்தினர்களைப் பார்க்க ஆரம்பித்தார். எல்லோரும் உயர்ந்த பதவிகளிலும், அதிகாரங்களிலும், செல்வநிலைகளிலும் இருப்பவர்கள். பெரும்பாலானோரை அவருக்குத் தெரியும் என்றாலும் சிலர் அவர் அறியாதவர்கள்…. இந்தக் கூட்டத்தில் மனோகரும் வந்திருக்க வேண்டும். அவன் சிறப்பு விருந்தினர் பாஸ் வாங்கிக் கொண்டு போயிருந்தான். ஏனோ வரவில்லை. ஒருவிதத்தில் அவன் வராததும் நன்றாகப் போயிற்று. அவன் வந்திருந்தால் பார்வைக்கு உறுத்தலாகவே இருந்திருப்பான்….. மாணிக்கம் சின்னதாய் ஒரு நிம்மதியை உணர்ந்தார். ஆனால் சிறப்பு விருந்தினர்களில் அவர் அறியாத ஒருசிலரில் ஒருவனாக மனோகரை இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதன் வந்திருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை…

மர்ம மனிதன் ஒரு தொழிலதிபர் போல் தோற்றமளித்தான். அவன் தன் அருகில் இருந்தவர்களுடன் பேசவில்லை. அவர்கள் அவனுடன் பேசுவதையும் ஊக்குவிக்கவில்லை. அவன் மற்றவர்களைப் போல மேடையைக் கவனிக்கவில்லை. அவனுடைய முழுப்பார்வையும் க்ரிஷ் மீதும், க்ரிஷ் சம்பந்தப்பட்ட மனிதர்கள் மீதும் தான் இருந்தது. தன் முழு வலிமையையும் பிரயோகிக்காமல் அவர்கள் கவனத்தைக் கவர்ந்து விடாமல் கூர்மையாக ஒவ்வொருவராகக் கவனித்து வந்த அவன் கடைசியில் ஒவ்வொருவரையாக விலக்கிக் கொண்டே வந்து முடிவில் பத்மாவதியையும், ஹரிணியையும்  தேர்ந்தெடுத்து கவனிக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்