என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, December 10, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 76


கசியக்குகை பற்றி அறிந்து கொண்டு தான் அந்த இடத்தை விட்டுச் செல்வது என்று அக்‌ஷய் முடிவெடுத்துக் கிளம்பியதைப் பார்த்த மைத்ரேயன் அவனிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அக்‌ஷயே செல்வதற்கு முன் அவனிடம் கேட்டான். “நான் ஒரு குகையைப் பார்த்ததாய் சொன்னேனே அந்த இடத்திற்குப் போய் நானும் சோதிக்கப் போகிறேன். நீ வருகிறாயா?

மைத்ரேயன் வரவில்லை என்று தலையை மட்டும் அசைத்தான். அக்‌ஷய்க்கு மைத்ரேயன் அந்தக் குகை விஷயத்தில் புதிராக நடந்து கொள்வது போலத் தோன்றியது. ஆனாலும் அவனை வற்புறுத்தாமல் அக்‌ஷய் “சரி நீ இங்கேயே இரு. நான் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்என்று சொல்லி விட்டு நகர்ந்தான். அவனுடன் சேர்ந்து அந்த ஆடுகளும் அவன் பின்னால் சென்றன. அவை கூட களைப்பாறி அலுத்து விட்டதாகத் தோன்றியது.

ஆனால் அவனோடு சிறிது தூரம் வரை கூடவே சென்ற ஆடுகள் இரண்டும், அவன் அந்த இடத்தை நெருங்க ஆரம்பித்ததும் மெள்ள பின்வாங்க ஆரம்பித்தன. அக்‌ஷய்க்கு அது வினோதமாய் தோன்றியது. இரண்டு ஆடுகளையும் கூர்ந்து கவனித்தான். நீலக்கரடியைப் பார்த்து நடுங்கியதை விட அவை இரண்டு மடங்கு பயப்பட்டது போல அக்‌ஷய்க்குத் தோன்றியது. அவை தள்ளிப் போய் நின்று கொண்டு அவனைப் பார்த்தன.

அக்‌ஷய் முன்னேறினான். அவன் அடையாளம் குறித்து வைத்திருந்த பழுப்பு நிறப்பாறையும், வித்தியாசமாய் வளைந்த மரமும் இருக்கும் இடத்தை அவன் நெருங்கிய போது அவன் உள்ளுணர்வு ‘போதும். இனியும் அதிகமாய் நெருங்கி விடாதேஎன்று எச்சரித்தது. அவன் தன் கழுத்தின் பின்புறம் இருக்கும் நாக மச்சத்தில் ஒரு உஷ்ணத்தையும் லேசாக உணர்ந்தான்.

அந்த நாக மச்சத்தில் சமீப காலமாகத் தான், அதுவும் மைத்ரேயன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் தான், அவன் ஏதாவது உணர்கிறான். அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. பின்னால் திரும்பி மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் முன்பு அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றாலும் அவன் பார்வை அக்‌ஷய் மேலேயே இருந்தது.

அக்‌ஷய் மறுபடி அந்த குகை இருந்த இடத்தைப் பார்த்தான். பழுப்பு நிறப் பாறைக்கும், வித்தியாசமாய் வளைந்து சென்றிருந்த மரத்திற்கும் இடையே அவன் பார்த்த குகை இப்போதும் காணவில்லை. வெற்றிடம் தான் இப்போதும் தெரிந்தது. அது வெற்றிடம் தானா என்று தொட்டுப் பார்க்க அவனுக்கு ஆவலாக இருந்தது. ஆனால் அவன் உள்ளுணர்வின் வழிகாட்டுதலை என்றும் மீறிப் போகாதவன். ஆவலை அப்படியே விழுங்கிக் கொண்டு அந்த வெற்றிடத்தைக் கூர்ந்து பார்த்தான். ஏதோ ஒன்று அவனை அந்த வெற்றிடத்தை நோக்கி இழுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. விரைவாக அவனும் பின் வாங்கினான்.     

அவன் வேகமாகத் திரும்பிச் செல்ல, ஆடுகள் அவனை முந்திக் கொண்டு சென்று மைத்ரேயனை அடைந்தன. மைத்ரேயன் குட்டி ஆட்டைத் தடவிக் கொடுத்தான். அவன் அப்போதாவது ஏதாவது சொல்வானா என்று அக்‌ஷய் பார்த்தான். மைத்ரேயன் அவனைப் பார்க்கவே இல்லை. மகா அழுத்தக்காரன் என்று அக்‌ஷய் நினைத்துக் கொண்டான். அந்த குகை சமாச்சாரம் ஒரு புதிராகவே தங்கி விட்டது அவனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

மைத்ரேயனிடம் அவன் சொன்னான். “சரி எழுந்திரு. போகலாம்

உடனே மைத்ரேயன் எழுந்தான். மலையின் மேல்பகுதியை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்தது.


க்‌ஷய் அந்தக் குகை இருந்த இடத்தை நோக்கிச் சென்ற நேரத்தில் மாரா காரில் பயணித்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் அந்தக் குகையை நெருங்க ஆரம்பித்த போது அவன் அந்த வருகையை உள்ளுணர்வில் உணர்ந்தான். மைத்ரேயனின் பார்வையை எப்போது அவன் உணர்ந்தானோ அந்தக் கணத்தில் இருந்தே அவன் அந்த குகைக் கோயில் இடத்தின் அலைகளுக்கு தன் சக்திகளை இசைவுபடுத்தி இருந்தான். அதனால் சில மணி நேரங்களில் நடந்த வாங் சாவோ குழுவின் சோதனைகளையும் அவன் உணர்ந்திருந்தான். அவர்கள் அங்கிருந்து விலகிய பின் இனி யாரும் அங்கு வருவதற்கில்லை என்று நினைத்த போதும் உள் மனதில் மைத்ரேயன் ஒரு முறை வந்தாலும் வருவானோ என்ற எண்ணம் வந்து தங்கியது. அதனால் அந்த இடத்தின் அலைகளோடிருந்த தொடர்பை அவன் துண்டிக்காமல் அப்படியே வைத்திருந்தான். ஆனால் சற்றும் எதிர்பாராமல் வேறொரு மனிதனின் வருகையை மாரா உணர்ந்தான். வருவது மைத்ரேயனின் பாதுகாவலனாகத் தான் இருக்க வேண்டும்.

மாரா காரை சாலை ஓரமாக நிறுத்தினான். பின் கவனத்தைக் குவித்து தன் அலைகளுக்குள் வருபவனை இழுக்கப் பார்த்தான். அப்போது தான் அவனது பிரதான சக்தி எல்லைக்குள் காலை வைத்த அந்த ‘அமானுஷ்யன் உடனே பின் வாங்கி விட்டதால் விடுபட்டுப் போனான். விடுபடும் முன்னர் ஒரு நாகத்தின் சின்னத்தை மாரா பார்த்தான். பின் எந்த ஊடுருவலும் அந்தப் பகுதியில் இல்லை. ஐந்து நிமிடம் தாமதித்துப் பார்த்து விட்டு மாரா காரைக் கிளப்பிக் கொண்டு போனான்.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் அவன் கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பெரிய கலைப்பொருள் அங்காடி முன் நின்றது. அந்தக் கடையை மூட ஒரு வெண்தாடிக்கார முதியவர் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கிய மாராவைப் பார்த்தவுடன் சின்னதாய் ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தோன்றி மறைந்தது.

அவனை மலர்ந்த முகத்துடன் வரவேற்று விட்டு அவர் சொன்னார். “ஐந்து நிமிடம் தாமதமாகி இருந்தால் நான் வீட்டுக்குப் போயிருப்பேன்

மாரா புன்னகைத்தான். அவன் அதை அறிந்தே இருந்தான். அவரை வீட்டில் அவன் சந்திக்க விரும்பவில்லை. அவருடைய மனைவி முன் அவரிடம் மனம் விட்டு அவனால் பேச முடியாது. இன்னும் சீக்கிரமாகவே வந்திருந்தால் அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள் யாராவது இருந்திருப்பார்கள். அப்போதும் பேசும் சந்தர்ப்பம் இல்லை.  அதனால் தான் இந்த நேரம் பார்த்து அவன் வந்திருக்கிறான்.

கடை மூடப்பட்டுள்ளது என்ற பெயர்ப்பலகையை வெளியே தொங்கவிட்டு கண்ணாடிக் கதவைச் சாத்திய வெண்தாடி முதியவர் அவனைக் கடையின் உள்ளறைக்கு அழைத்துப் போய் அமர வைத்து தானும் அவன் எதிரில் அமர்ந்தார். அவர் அவர்கள் இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினர். அவருக்கு வயது 90க்கு மேல் இருக்கும் என்றாலும் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் அவர். ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். அவர்களது இயக்கத்தின் உள் வட்டத்தில் இருக்கும் அவரது அறிவு பல்முனை கூர்மை கொண்டது. அவரிடம் மாராவால் மனம் விட்டுப் பேச முடியும்....  

சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். பின் அவர் மெல்லக் கேட்டார். “மைத்ரேயன்?  

மாரா தலையசைத்தான். அவர் கேட்டார். “என்ன புதிய தகவல்?

“அவன் நம் குகைக்கோயில் மலையில் தான் இப்போது இருக்கிறான். அவனால் நம் குகைக்கோயிலைப் பார்க்க முடிந்திருக்கிறது

அவர் ஆச்சரியப்பட்டார். “உள்ளே வந்தானா?”  என்று ஆர்வத்துடன் கேட்டார்.

“இல்லை.......

“உனக்கு எப்படித் தெரியும்?

அவன் தன் முந்தைய இரவு அனுபவத்தைச் சொன்னான். பின் வாங் சாவொவின் வரவையும் சற்று முன் அமானுஷ்யன் வரவை உணர்ந்ததையும் தெரிவித்தான்.

அவருக்கு அவனுடைய சற்று முந்தைய அனுபவம் திகைப்பை ஏற்படுத்தியது. “மைத்ரேயன் நம் கோயிலைப் பார்க்க முடிந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவனுடைய பாதுகாவலன் எப்படி?

“பாதுகாவலன் பார்த்தானா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இன்று அந்த இடத்திற்கு வந்து பார்க்கும் அளவு ஆர்வத்தை ஏற்படுத்தியது மைத்ரேயனா, இல்லை வாங் சாவொ குழு முந்தைய நாள் தேடியதைப் பார்த்தா என்பது தெரியவில்லை. இதிலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் அவன் நெருங்கப் பார்த்தானே ஒழிய நெருங்கி விடவில்லை. பின் வாங்கி விட்டான்..... சற்று முன்பும் என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. அவன் என் சக்தி எல்லைக்குள் நுழையவில்லை. எல்லையில் கால் வைத்தவன் விலகும் முன் அவனுடைய நாக மச்ச சின்னத்தைத் தான் பார்த்தேன்......

இயக்கத்தின் உள் வட்ட ஆட்களுக்கு மைத்ரேயனின் தற்போதைய வரலாறு மட்டுமல்லாமல் அமானுஷ்யனின் பழைய வரலாறும் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்டிருந்ததால் அக்‌ஷயின் நாக மச்சமும் அவர்களிடம் பிரபலமாகி விட்டிருந்தது.

அமானுஷ்யனை மாராவின் சக்தி நாக அம்சமாகவே அவனுக்கு அடையாளம் காட்டி இருப்பது பற்றி அவரை யோசிக்க வைத்தது. அதே போல மைத்ரேயனின் கண்களை மட்டுமே மாரா உணர்ந்திருக்கிறான். அது எல்லாவற்றையும் பார்க்க முடிந்த மைத்ரேயனின் தன்மையை உணர்த்தி இருக்கிறதோ? அவர் மைத்ரேயனைப் பற்றிப் படித்ததை எல்லாம் மறுபடி ஒரு முறை நினைவுபடுத்திப் பார்த்து விட்டுத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

“மாரா. நம் குகைக்கோயிலைப் பார்க்க முடிந்ததைத் தவிர இது வரை மைத்ரேயன் எந்த சக்தியையும் வெளிப்படுத்தவில்லை. சொல்லப் போனால் அவனாக இது வரை எதையும் செய்ததில்லை. இப்போது நடக்கும் எதிலுமே கூட அவனுக்குப் பங்கில்லை. அவனைக் காப்பாற்ற முயற்சி எடுத்தது கூட ஆசானும், தலாய் லாமாவும் தான். சம்யே மடாலயத்தில் அவனைக் காப்பாற்றியது கூட அந்தப் பாதுகாவலன் தான்........

மாரா ஆழ்ந்த ஆலோசனையுடன் சொன்னான். “நான் பல முறை யோசித்திருக்கிறேன். கோங்காங் மண்டபத்தில் ஒருவேளை அந்தப் பாதுகாவலன் அதிவேகமாகச் செயல்பட்டு அவனைக் காப்பாற்றியிருக்கா விட்டால் அவன் என்ன செய்திருப்பான்? அப்போதாவது அவனாக எதாவது செய்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பானா, இல்லை செத்துத் தொலைந்திருப்பானா? எனக்கு இது வரை அதற்குப் பதில் கிடைக்கவில்லை....

அவர் யோசித்துப் பார்த்தார். அவருக்கும் பதில் கிடைக்கவில்லை. அவனுடன் அந்தப் பாதுகாவலன் இல்லாமல் இருந்திருந்தால் தான் நமக்கு பதில் கிடைத்திருக்கும். மொத்தத்தில் விதி அவனுக்கு அன்று அனுகூலமாக இருந்திருக்கிறது...என்று மட்டும் தான் அவரால் சொல்ல முடிந்தது.

சிறிது நேரம் மைத்ரேயனைப் பற்றி சிந்தித்து விட்டு அவர் அவனிடம் சொன்னார். “அவன் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள்படி அவன் இது வரை எதற்கும் சண்டை போட்டதில்லை. யாரையும் எதிர்த்ததில்லை....சொல்லி நிறுத்தி விட்டு அவனை அர்த்தத்துடன் பார்த்து விட்டுச் சொன்னார். “சண்டையே போடாதவனை ஜெயிப்பது கஷ்டம் மாரா...

மாரா புன்னகைத்தான். “அவன் வாழ்க்கையில் நாம் நுழைந்த பின்னும் அவனால் சண்டை போடாமல் இருக்க முடியுமா?

அவரும் புன்னகைத்தார்.


அவன் தொடர்ந்து சொன்னான். “நான் இங்கே வந்ததே, இப்போதே அந்த மலையில் அவனை சந்தித்து, நேரடியாகவே அவனை சோதித்துப் பார்த்து விடட்டுமா என்று உங்கள் ஆலோசனையைக் கேட்கத்தான்.


சொல்லும் போதே அவனிடம் மைத்ரேயனை நேரில் சந்தித்து அவனை ஒழித்துக்கட்டி விட்டு வரும் வேகம் தெரிந்தது. 

(தொடரும்)
என்.கணேசன்


Monday, December 7, 2015

உலகப் பழமொழிகள் – 10


91. தீய பழக்கம் முதலில் யாத்திரிகனாய் வந்து, விருந்தினனாய் தங்கி பின் முடிவில் அதுவே ஒருவனது எஜமானாகியும் விடுகிறது.


92. நல்லவன் சத்திரத்தில் தங்கினால் கெடுவதுமில்லை. தீயவன் ஆலயத்தில் தங்கினால் திருந்தி விடுவதுமில்லை.


93. நெருப்பிலிருந்து தப்பித்து வந்தவன் வெயிலில் வாடுவதில்லை.


94. காலிப் பாத்திரமே அதிகமான் ஓசையை உண்டாக்கும்.


95. சொற்களை எண்ணாதே; எடை போட்டுப் பார்.


96. கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.


97. கோபமுள்ளவர் சோகத்தைத் தேட வேண்டியதில்லை.


98. கழுதையை விருந்துக்கழைத்தால் அது விருந்தில் விறகு சுமக்கத் தான்.


99. கோபத்தால் போனது சிரித்தால் வராது.


100. கையினால் தட்டி விட வேண்டியதற்கு கத்தியை உருவுவது மடத்தனம்.


தொகுப்பு: என்.கணேசன்


Thursday, December 3, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 75


வாங் சாவொவின் ஆட்கள் போவதையே அக்‌ஷய் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் எழுப்பி விட்டு நெருப்புகள் இன்னும் சற்று தள்ளி எரிந்து கொண்டிருந்தன. அவர்களில் கடைசி ஆளும் பார்வையில் இருந்து மறைந்த பின் மைத்ரேயனுடன் அந்த பாறைக்குக் கீழேயே அமர்ந்து கொண்டான். அந்த ஆடுகள் அவர்களுக்கு முன்பே அங்கே இளைப்பாற ஆரம்பித்திருந்தன. நெருப்புகள் காலை வரை தொடர்ந்து எரியும் போல இருந்தது. அதனால் காலை வரை நீலக்கரடிகள் வரும் அபாயம் இல்லை. மைத்ரேயன் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். பாறையில் சாய்ந்து கொண்ட அக்‌ஷய்க்கும் களைப்பின் மிகுதி காரணமாக சீக்கிரமே உறக்கம் வந்து விட்டது.

எத்தனை நேரம் அவன் உறங்கி இருப்பானோ, அவனுக்கே தெரியவில்லை. ஒரு விசித்திர சத்தம் கேட்டு கண்விழித்த போது அவன் இதயம் துடிக்க மறந்தது. காரணம் சில அடிகள் தள்ளி ஒரு நீலக்கரடி நின்று கொண்டிருந்தது. அவனை எழுப்பியது அதன் உறுமல் தான். மைத்ரேயன் மெல்லிய புன்னகையுடன் அந்த நீலக்கரடியையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆடுகள் இரண்டும் பெரும் பயத்துடன் மைத்ரேயனுக்குப் பின்னால் ஒடுங்கி இருந்தன. அக்‌ஷய் எரிந்து கொண்டிருந்த நெருப்புகளை திரும்பிப் பார்த்தான். ஒரு ஓரமாய் எரிந்து கொண்டிருந்த ஒன்றைத் தவிர மற்றவை அணைய ஆரம்பித்திருந்தன. ஆனாலும் அவற்றின் அக்னித் துண்டங்கள் இப்போதும் கனன்று கொண்டு தான் இருந்தன. அக்‌ஷய் மெல்ல தன் தோள்பையில் இருந்து மெல்லிய கத்தியை வெளியே எடுத்தான். வேகமாக அதை எடுத்து நீலக்கரடியின் மீது அவன் வீச யத்தனித்த போது அதிசயமாய் மைத்ரேயனின் கை அவன் கையைப் பிடித்துத் தடுத்தது.

நீலக்கரடி எத்தனை அபாயமான விலங்கு என்பது இவனுக்குத் தெரியுமா என்று சந்தேகத்துடன் அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயனின் பார்வை அந்த நீலக்கரடி மீதிருந்து விலகாததும், அவன் புன்னகை மங்காததும், நீலக்கரடியுடன் அவன் மௌன மொழியில் ஏதோ பேசிக் கொண்டிருப்பது போலத் தோன்றியதும் அந்த நிலவொளியில் ஒரு அசாதாரணக் காட்சியாய் அவனுக்குத் தெரிந்தது.

அக்‌ஷய் மெல்ல முணுமுணுத்தான். “அது மிக அபாயமான விலங்கு...

மைத்ரேயன் நீலக்கரடி மேல் வைத்திருந்த பார்வையை விலக்காமல் சொன்னான். “அது ஒன்றும் செய்யாது.

“விஷப்பரிட்சை வேண்டாம் மைத்ரேயா

நீங்கள் பயப்படாதீர்கள்.... அதுவும் உங்களைப் பார்த்துத் தான் பயப்படுகிறது... நீங்கள் கத்தியை பைக்குள்ளேயே போட்டு கையை வெளியே எடுங்கள்....

அவன் புத்தனின் மறு அவதாரமாகவே இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் அவன் சொல்வதைக் கேட்க அக்‌ஷய்க்கு சிரமம் இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு கத்தியைப் பையிலேயே போட்டு விட்டுக் கையை வெளியே எடுத்தான். மைத்ரேயன் மனிதரிடம் பேசுவது போல நீலக்கரடியிடம் செல்லக் குழந்தையிடம் பேசும் தாயின் அன்பான குரலில் பேசினான்.

“நீ பயப்படாமல் வா. இவர் ஒன்றும் செய்ய மாட்டார்... நல்லவர்.

இரண்டடி முன் வைத்த நீலக்கரடி அக்‌ஷயைப் பார்த்தபடி அப்படியே நின்றது. அவனைப் போலவே அதுவும் சந்தேகப்பட்டது போலத் தெரிந்தது.

மைத்ரேயனே எழுந்து அதன் அருகில் போனான். அக்‌ஷய் இதயம் வேகம் எடுக்க ஆரம்பித்தது. மைத்ரேயன் அந்த நீலக்கரடியைத் தடவிக் கொடுத்தான். அவன் ஆடுகளிடம் நெருக்கமாய் இருந்தது போலவே நீலக்கரடியிடமும் நெருங்கிப் பழகியது இப்போதும் அக்‌ஷய்க்குத் திகைப்பாய் தான் இருந்தது. நீலக்கரடி மைத்ரேயனின் கைபட்டு மெல்லியதாய் சிலிர்த்தது.  அவன் அதன் காதுகளில் மிகத் தாழ்ந்த குரலில் ஏதோ பேசினான். நீலக்கரடியிடம் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அது அவனை நட்புடன் பார்த்தது. இரண்டே நிமிடங்களில் மைத்ரேயன் அதை அழைத்துக் கொண்டு வந்தான்.

அக்‌ஷய்க்கு எல்லாம் கனவில் நடப்பது போல் இருந்தது. அது வரை கிலியுடன் இருந்த ஆடுகளும் அமைதியடைய ஆரம்பித்தன. அக்‌ஷய் பிரமிப்புடன் பார்த்தான். ஆனால் நீலக்கரடி நெருங்கிய போது மனம் தானாக அலறியது. மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “இது ஒன்றும் செய்யாது. பயப்பட வேண்டாம்

ராட்சஸ நாய்கள் வளர்த்துபவர்கள் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைத் தைரியப்படுத்துவது போலத் தான் அவனும் பேசினான். அந்த நீலக்கரடியும் எஜமானுக்குக் கட்டுப்பட்டு நிற்கும் நாய் போலத் தான் அவன் அருகில் சாதுவாக நின்றது. கண்ணில் கண்டது கருத்திலும் பதிய சிறிது நேரம் அக்‌ஷய்க்குத் தேவைப்பட்டது. அவர்களுடன் நீலக்கரடியும் அமர்ந்து கொண்டது.   

மைத்ரேயன் அதைத் தடவியபடியே சொன்னான். “இது தைரியமானது. அந்த நெருப்புகளைத் தாண்டிக்கூட வந்து விட்டது பாருங்கள்

சிறிது நேரத்தில் மைத்ரேயனும் கண்ணயர்ந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த நீலக்கரடியும் கண்ணயர்ந்தது. அக்‌ஷய்க்கு உறக்கம் வரவில்லை. அந்தக் காட்சியையே அவன் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மெள்ள மெள்ள அவனையும் அமைதி சூழ ஆரம்பித்தது.

இரண்டு மணி நேரத்தில் விடியல் வந்தது. நீலக்கரடி மெல்ல கண் விழித்தது. அதை உணர்ந்தது போல மைத்ரேயனும் கண் விழித்தான். நீலக்கரடி மெல்ல எழுந்து மலை உச்சியைப் பார்த்தது.  

“போகிறாயா?என்று மைத்ரேயன் கேட்டான். அதன் லேசான உறுமலில் ஏதோ பதில் பெற்றவன் போல அவன் நட்புடன் வழியனுப்பினான். “சரி போ

நீலக்கரடி சில அடிகள் போய் பின் திரும்பி அவனை ஒரு முறை பார்த்து விட்டு வேகமாகப் போய் பார்வையில் இருந்து மறைந்தது.

நீலக்கரடி விஷயத்தில் இன்னமும் பிரமிப்பு விலகாத போதும் உடனடியாகச் சோதித்துப் பார்க்க வேண்டிய ஒன்றின் மீது அக்‌ஷயின் ஆர்வம் வந்து நிலைத்தது. அங்கிருந்து போவதற்கு முன் அந்த ரகசியக்குகை பற்றிய விவகாரத்தில் நேரடியாக உண்மையை அறிந்து கொள்ள அக்‌ஷய் விரும்பினான். உடனே எழுந்தான்.    


கனின் திடீர் மாற்றம் சஹானாவை ஆச்சரியப்படுத்தியது. என்ன தலை போகிற வேலையாக இருந்தாலும் ஒரு முறையாவது எதிர்வீட்டுக்குப் போகாமல் இருக்காத வருண் இரண்டு நாளாக அங்கு போகாமல் இருந்ததும், தன் அறையிலேயே அடைபட்டுக் கிடந்ததும், யாரிடமும் சரியாகப் பேசாமல் இருந்ததும் அவளுக்கு ஏதோ சரியில்லை என்பதைப் புரிய வைத்தது.

“என்னடா எதாவது ப்ரச்னையா?என்று அவனிடம் வாய் விட்டுக் கேட்டாள்.

“ஒன்றுமில்லைஎன்றவன் அவள் அடுத்த கேள்வி எதாவது கேட்டு விடுவாளோ என்று பயந்து அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

சஹானா மாமியாரிடம் கேட்டாள். “எதிர் வீட்டுப் பெண்ணிடம் ஏதாவது சண்டை போட்டு விட்டானா என்ன?

மரகதம் அப்படித்தான் போல் இருக்கிறதுஎன்று பட்டும் படாமலும் சொன்னாள். அவளுக்குத் தன் பேரன் சின்ன விஷயத்தை அனாவசியமாகப் பூதாகரமாக்குவது போலத் தோன்றியது. அப்பா என்று சொல்ல சங்கடமாக இருந்தால் மாமன் என்றோ, உறவுக்காரன் என்றோ கூடச் சொல்லி சமாளிப்பதை விட்டு விட்டு நிஜமாக சேகரே நேரில் வந்தது போல் வருண் ஏன் பதற்றமடைகிறான் என்பது புரியவில்லை.

ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் மூன்று நாட்கள் படுத்திருந்த மகனை மரகதம் நினைவுபடுத்திப் பார்த்தாள். அந்தக் கடைசி மூன்று நாட்களில் கூட அவனுக்கு அவளிடம் சொல்ல எதுவும் இருக்கவில்லை. அவன் அருகிலேயே கவலையோடு அமர்ந்திருந்த அவளிடம் அவன் கடைசியாக அவன் பேசியது கூட அன்பானதல்ல. “சும்மா என் பக்கத்திலேயே இப்படி சோகமாய் உட்கார்ந்து என் உயிரை எடுக்காதீர்கள், வீட்டுக்குத் தான் போங்களேன்

இப்போதும் அந்த வார்த்தைகள் மரகதத்தைக் குத்தின. அவன் சொன்னதில் இருந்து அவள் அவன் கண்ணில் படாமல் தள்ளியே ஒதுங்கி இருந்தாள். ஆனால் அவன் கடைசியாக சஹானாவிடம் பேசிய வார்த்தைகளோ மிகவும் கொடூரமானவை. நான் செத்த அடுத்த நாளே யார் கூடவாவது படுக்கப் போய் விடாதே. என் மகனை நன்றாக வளர்க்கப் பார்அவன் அதைச் சொன்ன போது மரகதம் சில அடிகள் தள்ளி மறைவில் தான் இருந்தாள். அவளுக்கே மனம் பதறியது. வயிறு எரிந்தது. குடும்பத்தினர் நல்லபடியாக நினைவுபடுத்திக் கொள்ள வாழ்க்கையின் கடைசி நாட்களையும் அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்தப் பாவம் தானோ என்னவோ மருத்துவமனை தீ விபத்துக்குள்ளாகி அவன் தீக்கிரையாகிப் போனான். கரிக்கட்டையாகிப் போன உடல் தான் அந்திமச் சடங்குகள் செய்ய அவர்களுக்குக் கிடைத்தது....

சாவதற்கு முன்னால் அவன் அக்கறை காட்டிய ஒரே நபர் வருண் தான். மகனை நன்றாக வளர்க்கப் பார் என்று மனைவியிடம் சொன்னானே! சஹானாவும் பாவம் நன்றாகவே வளர்த்தாள். அக்‌ஷய் வந்த பின் குடும்பம் சொர்க்கமாகவே மாறியது.... அக்‌ஷயை நினைக்கையில் மரகதத்தின் முகம் மென்மையாகியது. அவன் அவள் பெறாத மகன். பத்தரை மாற்றுத் தங்கம்.... வருணை அவன் சொந்த மகனை விட மேலாகத் தான் பார்க்கிறான். வருண் அவன் மேல் உயிராய் இருப்பது காரணமில்லாமல் அல்ல....



தீமையை ஏற்றுக் கொள்ள முடியாமலும், மன்னிக்க முடியாமலும் போவது அதன் பின் வருவதைப் பொறுத்தது. வருவது மிக மேன்மையான நன்மையாக இருக்குமானால் முன்பு இழந்தது என்னவெல்லாம் என்பதை ஆழமாகப் புரிய வைக்கும். அப்போது மன்னிப்பது பல சமயங்களில் முடியாமல் போய் விடுகிறது. அக்‌ஷய் அவர்கள் வாழ்க்கையில் வந்த பின் தான், அவனுடைய தூய்மையான அன்பைக் கண்ட பின் தான், அந்த வித்தியாசத்தில் முன்பு நடத்தப்பட்ட விதங்களின் கொடுமையை முழுமையாக அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. வருணால் மன்னிக்க முடியவில்லை. சஹானாவின் நிலையும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் பெற்றவளுக்கு மன்னிக்க முடிந்தது. 

மரகதத்தின் சிந்தனை மறுபடி நிகழ்காலத்திற்கு வந்தது. வருண் சொன்ன புகைப்படம் எப்படி வந்தனா கையில் கிடைத்திருக்கும் என்பது அவளுக்கு விளங்கவில்லை. அவளே கூட மகனின் புகைப்படம் எதையும் தன்னிடம் வைத்திருக்கவில்லை. வீட்டில் இருந்த சேகரின் ஒன்றிரண்டு புகைப்படங்களைக் கூட அக்‌ஷய் அப்பா என்றான பிறகு வருண் எரித்து விட்டதை அவளே கண்கூடாகப் பார்த்திருக்கிறாள். என்ன தான் மகன் நல்லவன் அல்ல என்ற போதும் வருண் அப்படிச் செய்தது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. வருண் அக்‌ஷயின் மகன் அல்ல என்று சாட்சி சொல்லும் சிறிய பழைய அடையாளங்கள் கூட வேண்டாம் என்று அவன் நினைத்தது பத்து வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்து விட்ட மாற்றம். அதனால் பழைய புகைப்படங்கள் எதுவும் அந்த வீட்டில் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் வந்தனா கையில் எப்படி பழைய புகைப்படம் கிடைத்திருக்க முடியும் என்று ஹாலில் அமர்ந்தபடி யோசித்தாள்.

அவள் மகன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதையும், அவன் அந்தக் கணத்தில் எதிர் வீட்டில் இருந்து கொண்டு பைனாகுலர் வழியாக அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், சொர்க்கமாக இருக்கும் அவர்களது குடும்பத்தில் வீச ஒரு புயல் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, November 30, 2015

பாபாவின் பல ரூபங்கள், பல சக்திகள்!


மகாசக்தி மனிதர்கள் 43


ஷிரடி பாபா அஷ்டமகா சக்திகள் பெற்றிருந்த மகான்.  அவர் பல தெய்வங்களின் வடிவில் பக்தர்கள் சிலருக்குக் காட்சி அளித்தார் என்பதை முன்பு பார்த்தோம். அவர் தெய்வங்களின் ரூபத்தில் மட்டுமல்லாமல் பல வித மனிதர்கள் ரூபத்திலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்திருந்தார்.

ஒரு முறை நாச்னே என்ற பக்தரின் அண்ணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நாச்னே தன் அண்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்து அவர் குணம் அடைய வேண்டும் என்று பாபாவை ஆழ்ந்த பக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை நடந்த அந்த மருத்துவமனையில் ஒரு உருவத்திலும், அவர்கள் வீட்டில் வேறு ஒரு சாது உருவத்திலும் காட்சி அளித்தார். அந்த உருவங்களில் வந்தது பாபா தான் என்பதை நாச்னே அறிந்திருக்கவில்லை. ஷிரடி வந்து பாபாவை நேரில் தரிசித்த போது மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே விவரித்தார். அடுத்ததாய் பாபா “உன் வீட்டுக்கு நான் வந்த போது நீ வெண்டைக்காய் கறி எனக்குத் தரவில்லைஎன்று சொன்னார்.

அப்போது தான் நாச்னேக்கு ஒரு நாள் ஒரு சாது தனக்கு ரொட்டி வேண்டும் என்று கேட்டதும், அந்த சாதுவுக்கு அவருடைய அண்ணி ரொட்டி அளித்ததும் நினைவுக்கு வந்தது. வீட்டில் வெண்டைக்காய் கறி இருந்த போதும் அது மிக மலிவான ஒரு உணவாக அங்கு அக்காலத்தில் கருதப்பட்டதால் ஒரு சாதுவுக்கு மலிவான உணவுப் பொருளை அளிப்பதா என்று நினைத்த அண்ணி அந்த வெண்டைக்காய் கறியைப் பரிமாறாமல் மற்ற சமையலைப் பரிமாறினார். சாப்பிட்டு விட்டு அந்த சாது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று அவர்களிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.    

இன்னொரு முறை பி.வி.தேவ் என்பவர் தன் வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு வருமாறு பாபாவை வேண்டி பாபாவின் சேவையில் இருந்த ஷாமா என்பவருக்குக் கடிதம் எழுதி இருந்தார். பாபாவும் வருவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் அந்த விருந்துக்கு பாபா செல்லவில்லை என்பதில் பி.வி.தேவுக்கு நிறைய வருத்தம். அவர் மறுபடி ஷாமாவுக்குக் கடிதம் எழுதி பாபா விருந்துக்கு வராமல் ஏமாற்றி விட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டார்.

அந்தக் கடிதத்தை ஷாமா பிரித்துப் படிக்கும் முன்னேயே பாபா சொன்னார். “இவன் ஏன் நான் அந்த விருந்துக்குப் போகவில்லை என்று வருத்தப்படுகிறான். நான் தான் இரண்டு பேருடன் போய் “பணத்துக்காக நான் இங்கு வரவில்லை. சாப்பாட்டுக்காகத் தான் வந்திருக்கிறேன்என்று சொன்னேனே. அவனுக்கு நினைவு இல்லையா

ஷாமா அதை பி.வி தேவுக்குத் தெரிவிக்கையில் தான் ஒரு துறவி இரண்டு சீடர்களுடன் விருந்துக்கு வந்ததையும், பாபா சொன்ன அதே வார்த்தைகளை அந்தத் துறவி சொன்னதையும் நினைவு கூர்ந்தார். அப்போது தான் அந்தத் துறவி வடிவில் பாபா வந்து போயிருப்பது பி.வி.தேவுக்குத் தெரிய வந்தது.

மனித ரூபங்களில் மட்டுமல்லாமல் விலங்கு ரூபங்களிலும் ரூபா பக்தர்களிடம் சென்றிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். ஹன்ஸ்ராஜ் என்ற பக்தர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் தயிர் சாப்பிட வேண்டாம் என்று பாபா கூறி இருந்தார். ஆனால் ஹன்ஸ்ராஜுக்கு தயிரைத் தவிர்ப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு முறை அவர் வீட்டுக்குத் தயிர் சாப்பிடப் பூனை ஒன்று போன போது அதை அவர் அடித்துத் துரத்தி விட்டார். பின்னர் அவர் பாபாவைப் பார்க்கச் சென்ற போது பாபா உடலில் காயம் இருந்தது. என்ன என்று கேட்ட போது நீ தயிர் சாப்பிடக்கூடாது என்பதற்காக பூனை வடிவில் வந்தேன்.  நீ என்னை அடித்துத் துரத்தி விட்டாய்என்று சொன்னவுடன் ஹன்ஸ்ராஜ் பதறி விட்டார். இது போல நடந்த நிகழ்ச்சிகள் ஏராளம்.

இனி பாபாவின் மற்ற அபூர்வ சக்திகள் சிலவற்றையும் பார்ப்போம்.

ஷிரடியில் நந்த்ராம் மார்வாடி என்பவர் வீட்டில் ஆரம்ப காலங்களில் பாபாவுக்கு பிச்சை இட்ட புண்ணியவான்களில் ஒருவர். ப்ளேக் நோய் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவரும் ப்ளேக் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டார். அவர் ஷிரடியை விட்டே ஓடிப்போய் எங்காவது இறந்து விட எண்ணிய போது பாபா அவரிடம் “நான் வாழும் வரை உங்களிடம் மரணம் நெருங்காது. நீங்கள் எங்கேயும் செல்ல வேண்டியதில்லைஎன்று சொன்னார். அது போலவே அந்த சமயத்தில் நந்த்ராம் மார்வாடி இறக்காமல் தப்பித்தது மட்டுமல்ல பாபா மறைந்த பிறகும் பல காலம் உயிர் வாழ்ந்தார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே நடந்த இன்னொரு சுவாரசியமான சம்பவம் பாபா முக்காலமும் அறிந்த யோகி என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறது. காகா தீக்‌ஷித் என்பவர் பாபாவின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இன்னொரு மகாபக்தர். ஆரம்ப காலங்களில் காகா தீக்‌ஷித் தன் குடும்ப விவகாரங்களுக்காகக் கவலைப்பட்ட போதெல்லாம் “நீ ஏன் கவலைப்படுகிறாய். உன் விவகாரங்களைச் சரிப்படுத்தும் முழுப் பொறுப்பும் என்னுடையதுஎன்று பாபா அவரிடம் சொல்வதுண்டு. காகா தீக்‌ஷித்தும் அதை முழுமையாக நம்பி ஷிரடியிலேயே தங்கி விட்டார்.

காகா தீக்‌ஷித்தின் மகன் மும்பையில் படித்துக் கொண்டிருந்தான். 1913 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு வந்த காய்ச்சல் என்ன மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை. அதனால் தீக்‌ஷித்தின் சகோதரர் தீக்‌ஷித்திற்கு உடனடியாக மும்பை வந்து மகனை நல்ல சிறப்பு மருத்துவரிடம் காட்டச் சொல்லிக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை காகா தீக்‌ஷித் பாபாவிடம் படித்துக் காட்டிய போது பாபா தீக்‌ஷித் மும்பை போவதற்குப் பதிலாக அவர் மகன் ஷிரடிக்கு வருவது உத்தமம் என்று கூறினார்.

பாபாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்கிற நிலையைக் கொண்டிருந்த காகா தீக்‌ஷித் அப்படியே தன் சகோதரருக்குக் கடிதம் எழுதினார். காகா தீக்‌ஷித்தின் சகோதரருக்கு அந்த மகனை ஷிரடிக்கு அனுப்புவதில் விருப்பம் இருக்கவில்லை. ஷிரடியில் படித்த டாக்டர்களும் இல்லை என்பதால் அரைமனதோடு தான் அவனை ஷிரடிக்கு அனுப்பினார். மும்பை போன்ற பெரிய நகர மருத்துவர்களாலேயே குணப்படுத்த முடியாத விசித்திரக் காய்ச்சல் ஷிரடி போனால் குணமாகும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவருடைய அவநம்பிக்கைக்கு எதிர்மாறாக காகா தீக்‌ஷித்தின் மகன் ஷிரடி வந்த பின் குணமாக ஆரம்பித்தான்.

காகா தீக்‌ஷித்தின் மகனுக்கு 2-11-1913 நடக்க உள்ளது என்றும் அவனை அதற்கு முன் மும்பை அனுப்பி வைக்கும்படியும் காகா தீக்‌ஷித்தின் சகோதரர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் கடிதம் அனுப்பினார். காகா தீக்‌ஷித் பாபாவுக்கு அதைப்படித்துக் காட்டினார். ஆனால் பாபா அந்தப் பையனை மும்பைக்கு அனுப்ப சம்மதிக்கவில்லை. இப்போது போக வேண்டாம் என்று சொல்லி விட்டார். பையனின் எதிர்காலமே இந்தத் தேர்வுக்குப் போகா விட்டால் பாதிக்கப்படும் என்று தோன்றிய போதும் காகா தீக்‌ஷித் பாபாவின் பேச்சை மீறி அவனை மும்பைக்கு அனுப்பவில்லை. தேர்வு நாள் அன்று ஒரு ப்ளேக் எலி தேர்வு நடக்கும் மையத்தில் செத்து விழுந்து கிடந்ததால் அந்தத் தேர்வு நடக்கவில்லை என்பதும் அந்தத் தேர்வு  6-11-1913 அன்று ஒத்திப் போடப்பட்டது என்பது தான் ஆச்சரியம். 6-11-1913 தேர்வுக்கு முன்பும் அந்தப் பையனை மும்பை செல்ல பாபா அனுமதிக்கவில்லை. அந்த முறையும் தேர்வு மையத்தில் இன்னொரு ப்ளேக் எலி செத்து விழுந்து கிடந்ததால் அந்த முறையும் தேர்வு நடக்காமல் 13-11-13 தேதிக்கு ஒத்துப் போடப்பட்டது. அந்த தேதிக்கு முன்னால் போக பாபா ஆணை இட்டார். அந்தப் பையன் மும்பைக்குச் சென்று அந்தத் தேர்வை எழுதி மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்.

காகா தீக்‌ஷித் போன்ற பரம பக்தர்கள் பாபா மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கைக்கும், அந்த நம்பிக்கை என்றுமே வீண் போகாது என்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல உதாரணம்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 12-6-2015


Thursday, November 26, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 74


க்‌ஷயின் சந்தேகப்பார்வையை மைத்ரேயன் பார்க்கவில்லை. அவன் அமைதியாக தூரத்தில் தெரிந்த பனிபடர்ந்த மலைமுகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் என்ன பார்க்கிறான், கீழே ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகள் எல்லாம் அது போன்றதொரு சூழ்நிலையில் இயல்பாக ஒருவன் மனதில் எழ வேண்டியவை. அவை எதுவும் மைத்ரேயன் மனதில் எழுந்ததாகத் தெரியவில்லை.

அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். சம்யே மடாலயத்தில் உன்னைத் தேடி வந்தவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்...

அந்தத் தகவல் மைத்ரேயனைத் திடுக்கிட வைக்கவில்லை. எங்கேயோ மழை பெய்கிறது என்று அக்‌ஷய் சொல்லி இருந்தால் எப்படிப் பார்த்திருப்பானோ அப்படித்தான் பார்த்தான்.

அக்‌ஷய் தொடர்ந்து சொன்னான். “ஆனால் இந்தத் தடவை உன்னைத் தேடுவது போல தெரியவில்லை. ஏதோ குகையைத் தேடுவது போல் இருக்கிறது.. நான் எனக்குத் தெரிந்ததாய் அப்போது சொன்னேனே அந்தக் குகையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது....

மைத்ரேயன் முகத்தில் சலனமேயில்லை.  ஒரு பெருமூச்சு விட்ட அக்‌ஷய் மறுபடி அந்த பைனாகுலர் மூலம் வாங் சாவொ கோஷ்டியைக் கவனிக்க ஆரம்பித்தான். அவர்கள் மும்முரமாக சந்தேகப்படும் இடங்களை எல்லாம் சோதித்துப் பார்த்திக் கொண்டிருந்தார்கள்.

அக்‌ஷய்க்கு ஒரு இடத்தை ஒரு முறை பார்த்தால், அதுவும் முக்கிய அனுபவம் ஏற்பட்ட இடமாக அது இருந்தால் அந்த இடத்தின் அமைப்பும், அதன் சூழ்நிலைகளும் அவன் மனதில் நன்றாகவே பதிந்து விடும். அந்த வகையில் அவன் குகையைப் பார்த்த இடம் வாங் சாவொ குழு சோதித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுமார் ஐநூறு அடிகள் மேலே இருந்தது. இப்போதும் அந்த இடத்தில் குகை எதுவும் தெரியா விட்டாலும் அந்த இடம் எது என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.

அவர்கள் அந்த இடத்தைச் சோதிக்கும் போது அவர்களுக்கு குகை அகப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள்ளே எழுந்தது. ஆனால் லேசாக இருட்டிக் கொண்டு வரவே என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் மலை மேல் இருந்து நீலக்கரடிகளின் வரவு நிகழ்ந்து விடுவோமா என்று பயந்தான். அவற்றுக்காக சில தற்காப்பு சாதனங்கள் முன்பே கொண்டு வந்திருந்தான் என்றாலும் வாங் சாவொவும் அவன் குழுவும் அந்த மலையில் இருக்கும் வரை, அவற்றை உபயோகப்படுத்துகிற சூழ்நிலை இல்லை. அக்‌ஷய் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

நல்ல வேளையாக வாங் சாவொவும் நீலக்கரடிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டி முன்பே தயாராக வந்திருந்தான். அதே போல் இரவு நேர சோதனைக்காகவும் தயாராகவே வந்திருந்தான். இருட்ட ஆரம்பித்தவுடன் தாங்கள் கொண்டு வந்திருந்த சில ஒளிவிளக்குகளை அவர்கள் பிரகாசிக்க விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஒரு பெரிய மூட்டையுடன் மேலே வர ஆரம்பித்தான். அக்‌ஷய் மைத்ரேயனைத் தொட்டு ஜாக்கிரதை என்று சைகை செய்ய மைத்ரேயன் அக்‌ஷயை ஓட்டி ஒளிந்து நின்று கொண்டான். ஆடுகள் அதையும் அவன் விளையாட்டாய் எண்ணி அவனை ஓட்டிக் கொண்டன.

அக்‌ஷயும் மைத்ரேயனும் இருக்கும் இடத்தையும் தாண்டி முன்னேறி சுமார் இருபது அடிகள் போன அந்த நபர் மூட்டையை அவிழ்த்து நன்றாக உலர்ந்த  மரக்கட்டைகளைக் கொட்டினான். அவற்றை நான்கு பிரிவுகளாய் பிரித்து சில அடிகள் இடைவெளியில் வைத்து அவற்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்தான். பெரும் நெருப்பு ஜுவாலைகள் எரிய ஆரம்பித்தன. நீலக்கரடிகள் நெருப்பு இருக்கும் இடங்களுக்கு அருகில் வருவதில்லை.... அக்‌ஷய் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

மறுபடி கீழே இறங்கிப் போய் அந்த ஆள் தன் சகாக்களுடன் சேர்ந்து கொள்ள சோதனைகள் தொடர்ந்தன. அக்‌ஷய் குகை பார்த்த இடத்திற்கு அவர்கள் வந்து சேர மேலும் ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது.  அவர்கள் நெருங்க நெருங்க அக்‌ஷய் ஆவல் அதிகரித்தது. என்ன ஆகும்? அவர்கள் குகையைக் கண்டுபிடிப்பார்களா, மாட்டார்களா?

ஒருவழியாக அந்த இடத்தை அவர்கள் நெருங்கினார்கள். அந்த இடத்திலும் குகை இருந்த சரியான பகுதி எது? அக்‌ஷய் தன் முந்தைய அனுபவத்தை மனத்திரையில் மறுபடி ஓட விட்டான். அந்தக்குகை தெரிந்த இடத்திற்கு வலதுபுறம் சற்றே பழுப்பேறிய ஒரு பாறை இருந்ததும் இடது புறம் வித்தியாசமாய் வளைந்து போய் இருந்த மரம் இருந்ததும் மனத்திரையில் தெரிந்தது. இப்போது ஆர்வத்துடன் அந்தப் பாறையையும், வித்தியாசமாய் வளைந்த மரத்தையும் பார்த்தான். அவை அப்படியே தான் இருந்தன. ஆனால் இடையே வெற்றிடம் தான் தெரிந்தது.

வாங் சாவொ தான் அந்த இடத்தைச் சோதித்தவன். பழுப்பேறிய பாறையைத் தட்டிப் பார்த்தான். அதன் இடுக்கில் ஏதாவது துளை உள்ளதா என்று விளக்கின் ஒளியில் பரிசோதித்தான். வித்தியாசமாய் வளைந்த மரத்தின் வேரைக் கூட கையிலிருந்த இருப்புக்கழியால் தட்டினான். ஆனால் வெற்றிடத்தைத் தட்டிப் பார்க்க என்ன இருக்கிறது.... அவன் நகர்ந்தான்.

மேலும் இரண்டு மணி நேரம் அந்த மலையில் அவர்கள் இருந்தார்கள். அக்‌ஷய் மறைந்திருந்த பகுதி வரை கிட்டத்தட்ட வந்து விட்டார்கள்.  அந்த நேரத்தில் வாங் சாவொ தன் மனதில் தோல்வியை ஒப்புக் கொண்டான். அவன் முன்பே சேகரித்த தகவல்களின் படியும், கீழே கிராமத்துக் கிழவர் சொன்ன தகவலின் படியும் அந்த ரகசியக்குகை இந்த இடத்திற்கு முன்பாகவே அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். இது வரை கிடைக்கவில்லை என்றால் இனி மேல் கிடைக்க வாய்ப்பில்லை.

வாங் சாவொ வறண்ட குரலில் சொன்னான். “போதும். போகலாம்

முதலில் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் உள்ளூர் போலீஸ்காரன் தான். அவன் தங்களில் ஓரிருவர் அல்லது அனைவரும் ஏதாவது விஷப்பாம்பு கடித்து சாகலாம் என்றும் அல்லது வேறெதாவது விபத்துக்குள்ளாகலாம் என்றும் எதிர்பார்த்திருந்தான். சைத்தான் மலை என்று சும்மாவா சொன்னார்கள். அதுவும் இவர்கள் சைத்தானின் குகைக் கோயிலையே தேடிப் போகிறார்கள் என்றால் சைத்தான் சும்மா இருக்குமா? இப்படியெல்லாம் பயந்து போனவன் ஓட்டமும் நடையுமாக அவர்களுக்கும் முன்பாக கீழிறங்க ஆரம்பித்தான்.      


வாங் சாவொவிடம் பேசி முடித்த பின் லீ க்யாங் அபூர்வமான களைப்பை உணர்ந்தான். அறிவுக்கும் எட்டாத சக்திகளிடம் எப்படி மோதுவது என்பது அவனுக்குப் புரியவில்லை. வாங் சாவொ போகாமல் வேறு ஆட்கள் அந்த மலைக்குப் போயிருந்தால் கூட, தேடிய விதம் சரியில்லை என்று அவன் எண்ணி இருப்பான்.  இப்போது அப்படி நினைக்கவும் வழியில்லை.  “மைத்ரேயனை மட்டுமல்ல மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுபவனையும் நான் கண்டுபிடித்து சிறைப்படுத்துவேன்என்று உளவுத்துறையின் முந்தைய தலைவரிடம் சூளுரைத்தது நினைவுக்கு வந்தது. இடம் மாற வழி இல்லாத அந்தக் குகைக்கோயிலையே கண்டுபிடிக்க முடியவில்லை, பின் எப்படி எங்கிருக்கிறான் என்றே தெரியாத, எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிந்த என் அவதாரத்தைக் கண்டுபிடிப்பாய் என்று சைத்தான் சிரிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. புத்தரின் அவதாரமும், சைத்தானின் அவதாரமும் ஒரே சமயத்தில் மறைவாய் இருப்பதும், மறைந்திருந்தே இயங்குவதும் பெரிய சவாலாகவே அவனுக்கு இருந்தன.

ஆனால் அவன் கடக்க முடியாத தடைகள் உலகத்தில் இல்லை. எதுவும் தெரியாதென்று அவன் இது வரை வெட்கப்பட்டதில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமாய் அவன் உணர்ந்ததை இது வரையில் எப்பாடு பட்டாவது அவன் தெரிந்து கொள்ளாமல் விட்டதில்லை. அது அவன் வாழ்வின் இறுதி மூச்சு உள்ள வரை நடக்கும். மனதில் உறுதியோடு அவன் நிமிர்ந்து உட்கார்ந்த போது அவன் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினான். “ஹலோ

“சார். ஆசான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்”.  இந்தியாவில் அவன் ஏற்பாடு செய்திருந்த ஆள் பரபரப்பாய் சொன்னான்.

லீ க்யாங் புன்னகைத்தான். சின்னதாய் அந்தச் செய்தி அப்போதைய மனநிலைக்கு ஆறுதல் தந்தது. “எங்கே இருக்கிறார்?

“கர்னாடகாவில் குடகு மலையில் இருக்கும் ஒரு புத்தமடாலயத்தில் இருக்கிறார்.

“நல்லது. அவர் உங்கள் பார்வையில் இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவரைச் சாதாரணமாக நினைத்து குறைவான ஆட்களை வைத்துக் கண்காணிக்காதே. தேவை என்று நினைப்பதற்கு இரண்டு மடங்கு ஆட்களை வைத்துக் கண்காணி. அவரை யார் சந்திக்கிறார்கள், யாரிடம் அவர் பேசுகிறார், என்ன பேசுகிறார், என்ன செய்கிறார், எங்கே போகிறார் என்கிற எல்லாத் தகவல்களும் நமக்கு வேண்டும். சொல்வது நினைவிருக்கட்டும். கிழவர் தானே என்று அலட்சியமாய் இருந்து விடாதே. அதிகமான ஆட்களை வைத்துக் கண்காணி

கட்டளையிட்டு விட்டு லீ க்யாங் யோசிக்க ஆரம்பித்தான். மைத்ரேயனுடன் அந்தப் பாதுகாவலன் திபெத்தைக் கடக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு அதிசயம் நடந்தாலும் பின் அவன் அந்தச் சிறுவனை ஆசானிடம் தான் ஒப்படைப்பான். அப்படி நடக்கும் பட்சத்தில் ஆசான் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால் மைத்ரேயனைப் பிடிப்பது கஷடமான காரியம் அல்ல...  


திர் வீட்டை சலிப்பில்லாமல் கண்காணித்துக் கொண்டிருந்த சேகரின் அலைபேசி பாடியது. சேகர் அலைபேசியில் தெரிந்த எண்ணைப் பார்த்தான். பரிச்சயம் இல்லாத எண். எச்சரிக்கையுடன் எடுத்துப் பேசினான். “ஹலோ

“எஸ். நான் தான் பேசுகிறேன்பெயர் தெரிவிக்கா விட்டாலும் குரல் பேசுவது யார் என்று சொன்னது.

சேகர் நட்புடன் சொன்னான். “சொல்லுங்கள்

“எங்கிருக்கிறாய்?

“கோயமுத்தூரில்

“வேலையாகவா...

“இல்லை. இது என் தனிப்பட்ட வேலை. என்ன விஷயம் சொல்லுங்கள்?

“கர்னாடகாவில் மைசூர் அருகே ஒரு வேலை இருக்கிறது. வருகிறாயா என்று கேட்கத்தான் போன் செய்தேன்.....

“என்ன வேலை....

“ஒரு திபெத்தியக்கிழவரைக் கண்காணிக்கும் வேலை... பணம் நிறைய கிடைக்கும்....


“எப்போது வரை வேலை இருக்கும்?

“தெரியவில்லை.... குறைந்த பட்சம் இருபது நாளாவது இருக்கும் என்று தலைவர் சொல்கிறார்

“இங்கே என் வேலை ஒரு வாரத்திற்குள் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்..... அதன் பிறகு வரவா?

“சரி. ஒரு வாரம் கழித்து நானே உன்னைக் கூப்பிடுகிறேன்

அலைபேசியைக் கீழே வைத்த போது சேகருக்கு எதிர் வீட்டுக்கும், கர்னாடகாவில் இருக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சத்தியமாய் தெரியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்