என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, October 20, 2015

உலகப் பழமொழிகள் – 9


81. கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே. உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது.

82. கவனமில்லாத காவல் கவனமுள்ள பகைவனை அழைக்கும்.

83. போக்கிரி முத்தமிட்டால் உன் பற்கள் சரியாக உள்ளனவா என்று எண்ணிப்பார்.

84. தன் குறைகளைக் கவனிப்பவனுக்குப் பிறர் குறைகளைக் கவனிக்க நேரம் இருக்காது.

85. மரியாதை காட்டினால் பூனைக்கும் மகிழ்ச்சி தான்.

86. வெளியே வர வழி தெரிந்து கொண்டு உள்ளே நுழை.

87. அரசன் பிரபுவை உண்டாக்கலாம். ஆனால் கனவானைக் கடவுளே உண்டாக்க வேண்டும்.

88. நூல்கள் மனதோடும், நண்பர்கள் இதயத்தோடும், இறைவன் ஆன்மாவோடும், மற்றவர்கள் செவியுடனும் பேசுகிறார்கள்.

89. குதிரையைக் கண்டதும் பிரயாணி நொண்டியாகி விடுகிறான்.

90. மற்றெல்லாப் பொருள்களும் அதிக மென்மை அடைந்தால் ஒடிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் அதிக வலிமை அடைந்தால் ஒடிந்து விடுகிறான்.

தொகுப்பு: என். கணேசன்

Monday, October 19, 2015

தினமணியில் “நீ நான் தாமிரபரணி” விமர்சனம்!










25 ஆண்டுகள் கழித்து, அவர் ஒரு துணிச்சல் மிகுந்த பெரிய பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்கிறார். மாயமான நாவலாசிரியரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை தனது பத்திரிகையில் பணிபுரியும் துடிப்பான நிருபரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் எங்கு சென்றாலும் அந்த நிருபருக்குத் தோல்வியே மிஞ்சுகிறது. அவருக்கு முன்னதாகவே அவரது எதிரிகள் முந்திக் கொள்கின்றனர். இறுதியாக அந்தப் பிரபலமான நாவலிலேயே அதற்கான ரகசியமும் மறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார் அந்த நிருபர்.



Thursday, October 15, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 67



வன் அழுகையினூடே உதவி கேட்டதும் ஜானகிக்கு மறுக்க முடியவில்லை. ஆனால் அவனுக்குத் தன்னால் எப்படி உதவி செய்ய முடியும் என்பது அவளுக்கு விளங்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?என்று கேட்டாள்.

அவன் சொன்னான். “வருண் உங்கள் குடும்பத்தோடு நெருக்கமாய் இருக்கிறான். உங்கள் மகளிடம் நல்ல நண்பனாகவே பழகுகிறான் என்பதையும் கவனித்திருக்கிறேன். அதனால் அவனுடைய அப்பா உயிரோடு இருப்பது அவனுக்குத் தெரியுமா, உண்மையான தந்தையைப் பற்றி அவன் மனதில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன என்பதை உங்கள் மகள் நாசுக்காகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.......

ஜானகி உடனடியாக எதுவும் சொல்லாமல் யோசித்தாள். அடுத்தவர் வீட்டு விவகாரங்களில் அதிகமாய் மூக்கை நுழைக்கக் கூடாது என்று உறுதியாக இருப்பவள் வந்தனா. அவளிடம் இதைச் சொன்னால் என்ன சொல்வாளோ? மேலும் இது போன்ற விஷயங்களை ஒருவர் நேரடியாகவே கையாள்வது தானே முறை!

அவன் சொன்னான். “அவர்கள் என்னை விட்டுப் போன போது என் மகனுக்கு ஐந்து வயது தான் இருக்கும்.  அவனிடம் சஹானா என்ன சொல்லி வைத்திருக்கிறாள் என்பது தெரியவில்லை. நான் தான் அவர்களைக் கைவிட்டு விட்டேன் என்று சொல்லி இருக்கிறாளா, இல்லை நான் செத்தே விட்டேன் என்று கூடச் சொல்லி இருக்கிறாளா என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனையோ சொல்லி இருக்கலாம். நான் மகா மோசமானவன் என்றெல்லாம் கூடச் சொல்லி இருக்கலாம். அவனுக்கு என்னைப் பற்றிய நினைவுகள் அந்த வயதில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தெளிவாக ஒரு அபிப்பிராயத்தை அவன் எட்டி இருக்கவும் வாய்ப்பில்லை. அந்த வயதில் அம்மா சொல்வது அத்தனையும் நிஜம் என்று அவன் நம்பி இருந்தால் அதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன்...

இதை அவன் இரண்டாம் முறையாகச் சொல்கிறான் என்பதை ஜானகி கவனித்தாள். அவனைப் பார்க்கவே அவளுக்குப் பாவமாக இருந்தது. தன்னைப் பற்றித் தவறாக மகன் நினைக்க வாய்ப்பிருக்கிறது, அவன் அப்படி நினைத்தால் அது தவறல்ல என்று நினைப்பது ஒரு பாசம் நிறைந்த, புரிதல் உள்ள தந்தையின் உயர்ந்த மனமாக அவளுக்குத் தோன்றியது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணினாள். சொந்த மகனிடம் பேசக்கூட இந்த ஆள் தயங்க வேண்டி இருக்கிறதே... பாவம்!

அவன் தொடர்ந்தான். “திடீரென்று நான் நேரடியாக அவனைச் சந்தித்துப் பேசினால் அந்த அதிர்ச்சியை அவன் எப்படித் தாங்குவான் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் அப்பா இருக்கிறேன், இத்தனை காலமாய் அவனைத் தேடிக் கொண்டே இருந்திருக்கிறேன், உயிருக்கு உயிராக நேசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாம் அவன் தெரிந்து கொண்டபின், இந்த உண்மையை அவன் ஓரளவு ஜீரணித்த பிறகு நான் அவனிடம் பேசினால் பிறகு எந்த முடிவையும் எடுப்பது அவனுக்குச் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்....

அவள் யோசித்தாள். ஏதோ சொல்ல முற்பட்டவள் அதற்கும் முன் அவன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது முக்கியம் என்று நினைத்தவளாய் “உங்கள் பெயரை நீங்கள் சொல்லவில்லையேஎன்றாள்.

“சேகர்என்று அவன் தன் சொந்தப் பெயரையே சொன்னான்.

சேகர் நீங்களே சொல்லுங்கள், வந்தனா எப்படி வருணிடம் இந்தப் பேச்சை ஆரம்பிக்க முடியும்? எத்தனை நெருங்கிய நட்பாக இருந்தாலும் இது திடீரென்று எடுத்துப் பேச முடிகிற விஷயம் இல்லையே....?ஜானகி இழுத்தாள்.

அவன் அவள் பார்த்து விட்டுக் கீழே வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டிச் சொன்னான். “இந்தப் புகைப்படம் கிடைத்தது. உங்களுடன் இருக்கிற ஆள் யார் என்று உங்கள் மகள் வருணிடம் கேட்கலாம் அல்லவா...?.  

யோசித்து விட்டு அவள் சம்மதித்தாள். இது யதார்த்தமாக யாரும் கேட்க முடிந்த கேள்வி தானே!



மாரா திபெத்தின் இந்திய மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளின் வரைபடங்களில் ஆழ்ந்து போயிருந்தான். அமானுஷ்யன் தன்னைப் பின் தொடர்ந்து வரும் ஆட்களின் கண்களில் எப்படி மண்ணைத் தூவி இருப்பான் என்பதைக் கணிக்க முடிந்த அவனுக்கு அவன் இப்போது எங்கிருப்பான்? என்ன செய்து கொண்டிருப்பான், அவன் திட்டம் என்ன என்பதை எல்லாம் சிறிதும் யூகிக்க முடியவில்லை.

லாஸாவிலிருந்து விமானம் வழியாக அமானுஷ்யன் தப்பிச் செல்ல வழியே இல்லை. லீ க்யாங் எடுத்துக் கொண்டு இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த அளவில் இருந்தன.  அமானுஷ்யன் தனியாகவாவது ஏதேனும் சாகசம் புரியலாம். ஆனால் மைத்ரேயன் என்ற சிறுவனையும் கூட அழைத்துப் போவது நடக்காத காரியமே.

இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையே சாலைகளே கிடையாது என்பதால் சாலைப் போக்குவரத்தும் இல்லை. மற்றபடி மூன்று முக்கிய கணவாய்கள் இந்தியாவையும் திபெத்தையும் இணைக்கின்றன. இந்த மூன்று கணவாய்களும் 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப்பின் பல ஆண்டுகள் மூடப்பட்டே இருந்தன.

ஷிப்கி கணவாய் இந்தியாவின் ஹிமாசலப்பிரதேச மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 1994 ஆம் ஆண்டு தான் திறந்து விடப்பட்டது. இருபக்க சிறு வணிகர்களும் பிரத்தியேக அனுமதி பெற்று தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதுவும் ஒவ்வொரு வருடமும் அனுமதிக்கப்பட்ட காலங்களில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். அதனால் அந்த எல்லையில் வாழும் மனிதர்களைத் தவிர வேறு யாரும் அந்தக் கணவாய் அருகில் கூட வர முடியாது.

லிபுலேக் கணவாய் இந்தியாவின் உத்தரகண்ட் மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 1992 ஆம் ஆண்டு தான் திறந்து விடப்பட்டது.  இந்த வழியாகப் பயணிக்க சீனாவின் சிறப்பு அனுமதி வேண்டும். கைலாச மலைக்கு யாத்திரை போகும் யாத்திரீகர்கள் சில சமயங்களில் அனுமதிக்கப்படுவதுண்டு.

நாதுலா கணவாய் இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையில் திபெத்தை இணைக்கிறது. இந்தக் கணவாய் 2006ல் தான் திறந்து விடப்பட்டது. இங்கும் இரு தரப்பு சிறு வர்த்தகர்களும் கோடை காலத்தில் மட்டும் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதுவும் சில குறிப்பிட்ட நாள்களில் தான் வர்த்தகம் செய்து கொள்ள அனுமதி உண்டு.

இந்த மூன்று கணவாய்களிலும் பொதுவாகவே சீனாவின் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும். லிபுலேக் கணவாய் வழியாக பிரத்தியேக அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. மற்ற இரண்டு கணவாய்களில் அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருக்கும் எல்லை வாழ் வர்த்தகர்களே எல்லா சமயங்களிலும் போய் வர முடியாது. குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட நாட்கள் என்று அங்கும் கடுமையான கட்டுப்பாடு இருக்கிறது.

இந்தக் காரணங்களினால் பொதுவாகவே இந்தியா திபெத் இடையே தரைவழிப் போக்குவரத்து நேபாளம் வழியாகவே நடக்கிறது. லாஸாவில் இருந்து நேபாளம் வரை செல்லும் 830 கிலோமீட்டர் நெடுஞ்சாலை சீன-நேபாள நட்பு நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகிறது. சீன தேசிய நெடுஞ்சாலை எண் 318 குறிக்கப்பட்ட அந்த நெடுஞ்சாலை மூலமாகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்கள் வாகனங்களுடன் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நெடுஞ்சாலை நேபாள எல்லையைக் கடந்து நேபாளத் தலைநகர் காத்மண்டு வரை நீள்கிறது. அந்த எல்லையில் பொதுவாகவே சோதனைகள் தீவிரமாக இருக்கும். ஆட்களையும் பொருட்களையும் தீவிர சோதனைகள் செய்யாமல் நகர அனுமதிப்பதில்லை. சோதனைகள் போடும் போது வரைபடங்களோ, தலாய் லாமா புகைப்படமோ கிடைத்தால் அவற்றைக்கூட எடுத்து வைத்துக் கொண்டே திபெத்தைக் கடக்க அனுமதிப்பார்கள். சாதாரண காலங்களிலேயே அப்படி என்றால் மைத்ரேயனைத் தேடும் இந்த சமயங்களில் சோதனையின் தீவிரம் எந்த அளவில் இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

இருக்கும் இந்த வழிகளில் அந்தக் கணவாய்கள் வழியாகவோ, நட்பு நெடுஞ்சாலை வழியாகவோ திபெத்திய எல்லையைக் கடப்பது கிட்டத்தட்ட முடியாத காரியமே. அப்படி இருக்கையில் அமானுஷ்யனால் மட்டும் இது முடியுமா என்று மாரா யோசித்தான். முடியாது என்றே தோன்றியது.

மற்ற வழிகளில் தப்பிக்க இயற்கை வழிவகுத்திருக்கவில்லை. பனிக்காலம் வேறு நெருங்குகிறது. இமயமலையின் பனி மிகவும் அபாயகரமானது. பார்க்க மிக அழகாக ரம்யமாகக் காட்சி அளித்தாலும் பனிப்புயல், பனிப்பாறைச் சரிவுகள், நிலச்சரிவுகள் என்று திடீர் அபாயங்களை இமயமலை தனக்குள் ஒளித்தே வைத்திருக்கிறது.

இப்படி இருக்கையில் அமானுஷ்யனும், மைத்ரேயனும் எப்படித் தப்பிக்கப் போகிறார்கள் என்று மாரா யோசித்தான். அமானுஷ்யன் திட்டம் அவனுக்குப் பிடிபடவில்லை.


தே சிந்தனையில் தான் லீ க்யாங்கும் இருந்தான். திபெத்தின் எல்லா எல்லைகளிலும் பாதுகாவலைப் பலப்படுத்தி இருந்தான். கூடுதலான திறமையான ஆள்களை இந்திய எல்லைக் கணவாய்களிலும், சீன-நேபாள நட்பு நெடுஞ்சாலையின் நேபாள எல்லையிலும் நிறுத்தி இருந்தான். சம்யே மடாலயப் பகுதியில் இருந்து தலைமறைவான மைத்ரேயனும் பாதுகாவலனும் திபெத்தில் மற்ற இடங்களில் இது வரை சிக்கவில்லை. அவன் உள்ளுணர்வு அவர்கள் கண்டிப்பாக விரைவிலேயே திபெத்திய எல்லையைக் கடக்க முயல்வார்கள் என்று தெரிவித்தது. அவர்கள் இருவரையும் எல்லையில் கையும் களவுமாய் பிடிக்க  லீ க்யாங் ஆவலோடு காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, October 12, 2015

இறந்த மூன்று நாளில் உயிர்த்தெழுந்த பாபா!

மகாசக்தி மனிதர்கள் - 39 


பொதுவாக மக்கள் விரும்பும் இந்த உலக சவுகரியங்களையும், செல்வத்தையும், படாடோபத்தையும் ஷிரடி சாய்பாபா கடைசி வரை விரும்பவில்லை. துறவிகளும் சாதுக்களும் தங்கள் வாழ்க்கையில் பகட்டும், படாடோபமும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அவர் கூறுவார். துவாரகமயி என்று இந்துப் பெயரால் அழைக்கப்பட்டு அவர் கடைசி வரை வாழ்ந்த மசூதியில் ஆரம்ப நாட்களில் ஒரு நாற்காலியில் கூட அவர் அமர்ந்ததில்லை, கட்டிலில் கூட அவர் படுத்ததில்லை. சாக்குத்துணியில் மட்டுமே அமர்ந்தும் படுத்தும் வசித்த அந்த மகானை அப்படியே தொடர அவரது பக்தர்கள் அனுமதிக்கவில்லை.


கடவுளாகவே அவரை நினைக்க ஆரம்பித்து விட்ட அவரது பக்தர்கள் அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்கள், தலையில் கிரீடம் வைத்தார்கள். தங்களுக்குப் பிடித்தபடியெல்லாம் தங்கள் பாபாவைப் பார்க்க ஆசைப்பட்ட பக்தர்களின் செய்கைகள் அவரைப் போன்ற ஒரு சன்னியாசிக்குப் பெரும் தொந்தரவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் தன் மீது திணிக்கப்பட்ட படாடோபத்தை எல்லாம் அவர் தன் பக்தர்களுக்காக சகித்துக் கொண்டார்.


இந்த நேரத்தில் இதற்குச் சில வருடங்கள் முந்தைய அவர் அனுபவங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது பாபாவின் உயர்விற்கு நல்ல எடுத்துக்காட்டை அளிக்கும். ஷிரடியில் ஒரு பைத்தியக்கார பக்கிரி என்று அவர் நம்பப்பட்ட காலத்தில் சில சிறுவர்கள் அவர் மீது கற்கள் வீசி அலைக்கழித்தது உண்டு.  அந்தச் சிறுவர்களிடம் கூட அவர் கடுமையாக நடந்து கொண்டது இல்லை. பெரியவர்கள் பலர் அவரை எள்ளி நகையாடியதுண்டு. அவர்கள் மீதும் அவர் சினம் கொண்டதில்லை. அனைவர் மீதும் அன்பு செலுத்தி நல்லதே செய்து வந்தார்.


இப்படி பைத்தியக்காரராக இழிவுபடுத்தப்பட்ட போதும் சரி, பிற்காலத்தில் கடவுளாகக் கொண்டாடப்பட்ட போதும் சரி அன்பையும் அருளையும் மட்டுமே காட்ட முடிந்த ஷிரடி பாபாவின் குணாதிசயம் கம்பன் இராமனை வர்ணிப்பதைத் தான் நமக்கு நினைவுபடுத்துகிறது.


அசோக வனத்தில் சீதை இராமனைப் பற்றி எண்ணி உருகுவதாகப் பாடப்படும் பாடல்களில் மிக அழகான பாடல் ஒன்று உண்டு.

"மெய்த்திருப்பதம் மேவென்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்"

அரச பதவியை ஏற்றுக் கொள் என்று முந்தைய தினம் சொன்ன போதும் சரி, இந்த நாட்டையே துறந்து நீ காட்டுக்குப் போ என்ற போதும் சரி சித்திரத்தில் வரைந்த செந்தாமரையின் மலர்ச்சி இராமனின் முகத்தில் இருந்த்தை சீதை நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடல் அது. அதாவது சாதாரண செந்தாமரையில் மலர்ச்சி இருக்கும், வாட்டமும் இருக்கும். ஆனால் சித்திரத்தில் வரைந்த செந்தாமரையில் மட்டுமே மாறாத மலர்ச்சி இருக்கும் என்பதை அழகான உவமையுடன் கம்பர் கூறுவார்.


பக்தர்கள் அவருக்காக ஒரு வெள்ளிப் பல்லக்கும், வெள்ளிக் குதிரைகளும் கூட செய்து அதை துவாரகமயிக்குள் கொண்டு வர முற்பட்ட போது மட்டும் ஷிரடி சாய்பாபா அதை அனுமதிக்கவில்லை. அதனால் அந்த வெள்ளிப் பல்லக்கும், குதிரைகளும் துவாரகமயியின் வெளிப்புறத்திலேயே வைக்கப்பட்டன. சில நாட்கள் கழித்து யாரோ அந்த வெள்ளிக் குதிரைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

அதை மிகுந்த வருத்தத்துடன் பக்தர்கள் அவரிடம் தெரிவித்த போது சிறிதும் வருத்தமோ, அதிர்ச்சியோ காட்டாமல் “திருடர்கள் ஏன் அந்தப் பல்லக்கைத் திருடிக் கொண்டு போகவில்லை” என்று விளையாட்டாக பாபா கேட்டார். இது போன்ற விலை உயர்ந்த படாடோபப் பொருள்களுக்கு பாபாவின் மனதில் எந்த அளவு முக்கியத்துவம் இருந்தது என்பதைக் காட்டுகிறது அல்லவா?


அதே போல உணவின் சுவையிலும் ஷிரடி பாபா பெரிய அக்கறை காட்டவில்லை. ஆரம்ப காலங்களில் வீடுகளில் மிஞ்சியதைத் தான் ஷிரடி மக்கள் அவருக்கு உண்ணக் கொடுத்தார்கள். அவரை மகானாகவும், கடவுளாகவும் எண்ண ஆரம்பித்த பிறகு அப்படிப் பழைய உணவை அவருக்கு அளிக்கவில்லை என்றாலும் எல்லா நேரங்களிலும் அந்த உணவு சுவையாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? சிலர் தங்களுக்குச் சமைத்து சாப்பிடும் உணவே ருசியில்லாமல் இருப்பதுண்டு. அதையே பாபாவுக்கும் கொண்டு வந்து தருவதில் அவர்கள் மீது குற்றம் காண முடியாது. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் எந்த முக சுளிப்பும் இல்லாமல் உண்பது பாபாவின் வழக்கமாக இருந்தது.


கர்மவினைகளின் பலனை அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது என்று சான்றோர் சொல்வதுண்டு. தன் பக்தர்களின் கர்மவினைகளின் பலன்களைத் தான் ஏற்றுக் கொண்டு பக்தர்களை ஷிரடி பாபா காத்த நிகழ்ச்சிகள் அவர் காலத்து ஆட்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரு முறை துவாரகமயியில் எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் ஷிரடி பாபா திடீரென்று கையை விட்டு சுட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் பதறிப் போய் காரணம் கேட்ட போது தன் பக்தனான கொல்லன் ஒருவனுடைய குழந்தை அவன் வீட்டில் நெருப்பில் விழுந்து விட்டதாகவும் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அந்த நெருப்பின் சூட்டைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் பாபா சொன்னார். பாபாவின் காயத்தைப் பார்த்து வருந்திய பக்தர்களிடம்  “என்னுடைய காயத்தை இறைவன் குணப்படுத்தி விடுவார்” என்று சொல்லி விட்டார். பின்பு விசாரித்த போது வேறொரு ஊரில் அவரது பக்தன் கொல்லன் ஒருவனது பட்டறையில் அவன் குழந்தை தீயில் விழுந்து  விட்டதாகவும், அது பெரிய காயமின்றி தப்பித்து விட்டதாகவும் தெரிய வந்தது. இப்படி தன் பக்தர்களின் நலனையே பெரிதாக நினைத்து தன் நலனை அதிகம் பொருட்படுத்தாமல் பாபா வாழ்ந்தார்.

1886 ஆம் ஆண்டு ஒரு நாள் தன் சீடனான மல்சபதி (Mahlsapathy) என்பவரை அழைத்து “நான் அல்லாவிடம் போகிறேன். மூன்று நாட்கள் இந்த உடம்பைப் பத்திரமாகக் காத்து வா. நான் திரும்ப வந்தால் இந்த உடலைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன். ஒருவேளை அப்படி வராவிட்டால் மூன்று நாள் கழித்து இந்தப் பிணத்தை அந்த வேப்ப மரத்தின் அருகே புதைத்து விடு” என்று சொல்லி வேப்ப மரத்தைக் காண்பித்த ஷிரடி பாபா மறு கணம் அப்படியே மல்சபதியின் மீது சாய்ந்தார். பாபாவின் மூச்சு நின்று போனது. உடல் சில்லிட்டுப் போனது. உடலின் நிறமும் மாறிப் போனது. ஷிரடி பாபா இறந்து விட்டார் என்ற செய்தி பரவ ஆரம்பித்தது.

ஷிரடி பாபாவின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்திருந்த மல்சபதி அவரைப் புதைக்கச் சம்மதிக்கவில்லை. அரசு அதிகாரிகளும், போலீஸாரும் வந்தும் கூட அவர் மூன்று நாட்கள் கழித்தும் பாபா இந்த உடலுக்குத் திரும்பா விட்டால் தான் புதைக்க சம்மதிப்பேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அவர்களுக்கோ இறந்தவர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெறுவார் என்று நம்பக் கஷ்டமாக இருந்தது. ஷிரடி பாபாவின் சக்திகளைப் பற்றி அவர்கள் முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் எந்த சக்தியும் மரணத்திற்குப் பின் மீண்டும் ஒருவரை உயிர்பெற விடாது என்று பகுத்தறிவு அவர்களுக்குச் சொன்னது. ஆனால் மல்சபதியும் மற்ற பக்தர்களும் பாபா கூறியபடி மூன்று நாட்கள் காத்திருப்பதில் உறுதியாய் இருந்தார்கள்.

ஷிரடி பாபாவின் உடல் துவாரக மயியில் மல்சபதி மேற்பார்வையில் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் இறுதியில் பாபாவின் உயிரற்ற உடலில் திடீரென்று கை விரல் ஒன்று அசைந்தது. அருகே இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் விழித்தன. ஷிரடி பாபா எழுந்து உட்கார்ந்தார்.

பரமஹம்ச யோகானந்தரின் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் அப்படி இறந்த சில நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்து யோகானந்தரிடம் சில மணி நேரங்கள் உரையாடிக் கொண்டிருந்தார் என்பதை முன்பு பார்த்திருக்கிறோம். ஆனால் உயிர்த்தெழுந்த ஷிரடி பாபா அதன் பிறகு 32 ஆண்டுகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார் என்பது தான் பேராச்சரியம்!

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 15-05-2015

Thursday, October 8, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 66


க்‌ஷய் எப்படித் தப்பித்திருக்க வேண்டும் என்று மாரா அனுமானித்தது கிட்டத்தட்ட சரியாகவே இருந்தது.

சம்யே மடாலயத்தில் இருந்து கிளம்பிய போது அக்‌ஷய் மடாலயத்தின் உள்ளே இருந்த எதிரிகள் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று எண்ணினானே ஒழிய வெளியே ஜீப்பில் எதிரிகள் காத்துக் கொண்டு இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த எதிரிகள் லீ க்யாங்கின் ஆட்களா அல்லது இன்னொரு கோஷ்டி ஆட்களா என்று ஆரம்பத்தில் புரியா விட்டாலும் பின் யோசித்த போது லீ க்யாங்கின் ஆட்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது புரிந்தது. லீ க்யாங்கின் ஆட்களாக இருந்தால் போன் செய்து லாரியைச் சுற்றி வளைக்க அதிக நேரம் ஆகியிருக்காது. அப்படி நடக்காததால் பின் தொடர்வது இன்னொரு கோஷ்டி ஆட்கள் என்பது தெரிந்தது.

பின்னால் ஜீப்பை ஓட்டியவன் ஓட்டும் திறமையில் அசகாய சூரனாக இருந்ததால் ஜீப்பை விட்டு அவர்களால் அதிக தூரம் போய் விட முடியவில்லை.  அதனால் அக்‌ஷயின் திட்டப்படி அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்க முடியவில்லை. அவர்கள் திட்டப்படி பிரதான சாலையிலிருந்து ஒரு இடத்தில் குறுக்கே செல்லும் ஒரு சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் போய் இறங்க வேண்டி இருந்தது. அந்தத் திருப்பம் வருவதற்கு சிறிது நேரம் முன்பே லாரி டிரைவர் பின்னால் இருந்த சின்னத் துளை வழியாகக் கேட்டான். “என்ன செய்வது?

அக்‌ஷய் சொன்னான். “இப்போதைக்கு  நேராகப் போய்க் கொண்டே இருங்கள்

லாரி டிரைவர் அவன் சொன்னபடி அந்தத் திருப்பத்தில் திரும்பாமல் நேராகவே போக ஆரம்பித்தான். இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு திரும்பி வர ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என்று அக்‌ஷய் கேட்ட போது லாரி டிரைவர் சொன்னான். “அது ஒன்றும் பிரச்னை இல்லைஆனால் பின்னால் ஒரு சைத்தான் வருகிறானே அவன் பார்வையில் படாமல் எப்படித் திரும்பி வருவீர்கள்?

பலர் வண்டியை நிறுத்தக்கூடிய ஒரு பொது இடத்தில் நாம் அந்த சைத்தான் கண்ணில் ஓரிரு நிமிடங்கள் படாமல் இருப்பது பெரிய விஷயமல்ல.....என்ற  அக்‌ஷய் தன் திட்டத்தைச் சொன்னான்.  லாரி டிரைவர் உடனடியாகப் போன் செய்து தன் நண்பன் ஒருவனிடம் பேசினான். அதன்பின் அக்‌ஷயின் ஆலோசனைப்படியே அந்தத் திட்டம் மிகவும் கச்சிதமாக நடந்தேறியது.

மிக யதார்த்தமாக வெந்நீர் கொண்டு வரப்போவது போல் போன ஆள் திரும்பி வந்த நேரத்தில் அவர்கள் லாரி டிரைவர் வண்டியைக் கிளப்பி சற்று குறுக்காக நிறுத்த அந்த மறைவில் அந்த ஆள் இரு லாரிகளின் பின் கதவுகளின் தாழ்ப்பாள்களையும் திறந்து விட்டான். அதனால் அந்த லாரியில் இருந்து இந்த லாரிக்கு மைத்ரேயனுடன் வருவது அக்‌ஷய்க்குச் சுலபமாக இருந்தது. இரு லாரிகளின் பின் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் போட்டு விட்டு அந்த ஆள் வேகமாக டிரைவர் அருகில் வந்து அமர்ந்து கொள்ள இரண்டு லாரிகளும் கிளம்பின.....

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். இப்போது நன்றாக விடிந்து விட்டிருந்ததால் கதவிடுக்கில் புகுந்த வெளிச்சத்தில் அவனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் அக்‌ஷயையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான். நேற்று இரவு அந்த லாரியில் மைத்ரேயன் நன்றாக உறங்கி விட்டிருந்தான். உணவகத்தின் முன்னால் லாரியை நிறுத்திய போது அக்‌ஷய் அவனை எழுப்பிய பிறகு தான் அவன் கண் விழித்தான். அவன் இந்த லாரிக்குள் வந்த கணம் முதல் அசையாமல் அமைதியாகவே அமர்ந்திருக்கிறான். அவன் காலில் தர்மசக்கரத்தைப் பார்த்த கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை அக்‌ஷயின் பிரமிப்பு அகலவில்லை. அவனுடைய மகன் கௌதம் ஐந்து நிமிடம் கூட ஒரே இடத்தில் சேர்ந்தாற்போல் உட்கார்ந்திருக்க மாட்டான்....

“உங்கள் மகன் பெயர் என்ன?மைத்ரேயன் திடீரென்று கேட்டான்.

அக்‌ஷய்க்குத் தூக்கிவாரிப்போட்டது. தன் மகனை அவன் நினைக்க நினைக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயன் இந்தக் கேள்வியைக் கேட்டது அவன் எண்ணங்களைப் படித்து விட்டுத் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்களுக்கு எப்படி என் மகன் பற்றித் தெரியும்?என்று கேட்டான்.

“என்ன திடீர் மரியாதை?மைத்ரேயன் கேட்டவுடன் அக்‌ஷய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மைத்ரேயன் காலில் தர்மச்சக்கரம் இருந்ததும், அது பொன்னிறத்தில் சுழல்வது போல் தெரிந்ததும், அவனை இனியும் மரியாதைக் குறைவாய் ஒருமையில் அழைக்க விடாமல் அக்‌ஷயைத் தடுத்தன.

“எனக்கு நீங்கள் என்னை முன்பு போலவே ஒருமையில் அழைப்பது தான் பிடித்திருக்கிறதுசொல்லியபடி அக்‌ஷய் மீது மைத்ரேயன் உரிமையுடன் சாய்ந்து கொண்டான். சில நேரங்களில் புத்தரின் அவதாரம் போல் தெரிந்தாலும், சில நேரங்களில் அவன் மகன் கௌதம் போல சுவாதீனத்துடன் நடந்து கொள்கிற மைத்ரேயனின் முகத்தை அக்‌ஷய் கூர்ந்து பார்த்தான். இப்போது அந்த முகத்தில் மந்த பாவனை இல்லை, மந்தகாசம் தெரிந்தது. சின்னதாய் ஒரு கெஞ்சலும் தெரியவே அவனை ஒருமையிலேயே அழைப்பது என்று அக்‌ஷய் முடிவு செய்தான். இறைவனையே ஒருமையில் அல்லவா நாம் உரிமையுடன் அழைக்கிறோம்!என்று அவன் நினைத்துக் கொண்டான்.

“சரி.... உனக்கு எப்படி என் மகனைப் பற்றித் தெரியும்?என்று அக்‌ஷய் கேட்டான். கண்டிப்பாக உங்கள் மனதில் அவனைப் பற்றி நினைத்தீர்கள், அதைத் தெரிந்து தான் கேட்டேன் என்று இவன் சொல்ல மாட்டான் என்பது தெரியும். என்றாலும் என்ன தான் சொல்கிறான் பார்ப்போமே என்று தான் அவன் கேட்டான்.

“நீங்கள் தானே என் அம்மாவிடம் என் வயதில் உங்களுக்கு ஒரு மகன் இருப்பதாய் அன்றைக்குச் சொன்னீர்கள்என்று மைத்ரேயன் சொல்ல அக்‌ஷயால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் லாரி நின்றது.


ஜானகி வாயடைத்துப் போகும் சந்தர்ப்பம் அவள் வாழ்வில் இது வரை வந்ததே இல்லை. முதல் தடவையாக வாயடைத்துப் போன அவள் அவன் கண்களில் பெருகிய கண்ணீர் விடாமல் வழிந்து கொண்டிருந்ததை மிகுந்த பச்சாதாபத்துடன் பார்த்தாள். லேசாய் ஜண்டு பாம் வாசனை வந்தது. பாவம் ஜலதோஷமோ, தலைவலியோ கூட அவனைப் படுத்துகிறது போல் இருக்கிறது என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

“இது... இது.... எப்போது நடந்தது?என்று அவள் மெல்லக் கேட்டாள்.

பன்னிரண்டு பதிமூன்று வருஷங்களுக்கு முன்....என்று சொன்னவன் அந்தப் பழைய நாட்களின் நினைவே தன்னைக் கொல்வது போலக் காட்டிக் கொண்டான். பொய் பித்தலாட்டம் அனாயாசமாக வந்த அளவுக்கு அவனுக்கு நடிப்பு வரவில்லை. அதனால் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். பின் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவது போல அவள் முகத்தை நேரடியாகப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துப் பேசினான்.

அப்போதே செத்து விடலாம் என்று நினைத்தேன்..... சில முறை முயற்சியும் செய்தேன்.... எமனுக்கு என் மேல் கருணை இருக்கவில்லை..... அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிழைக்க வைத்து விட்டார்கள். என் அப்பா போல் நான் மதித்த என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். “நீ உனக்காக இல்லா விட்டாலும் உன் மகனுக்காகவாவது வாழ வேண்டும்.... உன் மனைவிக்கு இன்னொரு கணவன் கிடைப்பான். ஆனால் உன் மகனுக்கு இன்னொரு தகப்பன் கிடைக்க மாட்டான்... அதை மறக்காதே.... அவர்களைத் தேடிக் கண்டுபிடி.  உன் மகனையாவது மீட்டுக்கொள்”.  அவர் சொன்னதும் எனக்கு உண்மையாகப்பட்டது. அந்த நாளில் இருந்து என் குடும்பத்தை, இல்லை என் மகனை நான் தேடி அலைந்து கொண்டே இருக்கிறேன். சில நாட்கள் முன் கோயமுத்தூர் வந்த போது தான் ஒரு தெருவில் தற்செயலாக என் மனைவியைப் பார்த்தேன்.... அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து வந்து அவர்கள் வீட்டைக் கண்டுபிடித்தேன்....

ஜானகிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ‘பாவம் இந்த ஆளுக்கு என் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட முடியவில்லை. கூனிக்குறுகிப் போய் எங்கேயோ பார்த்துப் பேசுகிறார்’.  அந்த எண்ணத்துடனேயே சேர்ந்து இன்னொரு சந்தேகம் எழ, அவள் கேட்டாள். “அப்படியானால் நீங்கள் சினிமா கதாசிரியர் இல்லையா?

அவன் ஜாக்கிரதையாகச் சொன்னான். “நான் சினிமா கதாசிரியன் தான். நான் பல நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதியதாகச் சொன்னதும் உண்மை தான். எனக்குப் பொய் பேச வராது.... ஆனால் இந்த வீட்டில் குடி வந்தது மட்டும் சினிமா கதை வசனம் எழுத அல்ல. அது நான் ஊட்டிக்குப் போய் எழுதத் தான் தீர்மானித்திருந்தேன். போகும் வழியில் கோயமுத்தூரில் சஹானாவைப் பார்த்து விட்டுத் தான் இங்கேயே தங்கி விட்டேன்.......

“இனி என்ன செய்வதாக உத்தேசம்... ஜானகி கேட்டாள்.

“எனக்கு என் மகனைப் பார்த்துப் பேசி அவனை அழைத்துக் கொண்டு போக வேண்டும்..... அவள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்..... அவளுக்கு வருண் இல்லா விட்டாலும் இன்னொரு மகன் இருக்கிறான்.... எனக்கு.... எனக்கு...அவன் வாயடைத்தது போல், அதற்கு மேல் பேச வராதது போல் நிறுத்திக் கொண்டான்.

“வருண் வேறொரு ஆளைத் தான் அப்பா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். அவன் அந்த ஆளைப் பற்றிப் பெருமையாகப் பேசாத நாளே இல்லை. அந்த அளவு பாசம் வைத்திருக்கிறான்.....”  ஜானகிக்கு அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அவள் என்னைப் பற்றி என்னவெல்லாம் மோசமாகச் சொல்லி அவனை மூளைச்சலவை செய்திருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை..... அவளைப் பற்றி அவன் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக என்னைப் பற்றி கண்டபடியெல்லாம் சொல்லி இருக்கலாம்.... அதனால் அவனைத் தவறு சொல்ல முடியாது.....

பின் எப்படி அவனை உங்களோடு அழைத்துப் போவீர்கள்?

அவன் கண்களுக்கு மறுபடியும் ஜண்டு பாம் தடவிக் கொண்டு கண்ணீர் விட்டான். எனக்கு அது தான் புரியவில்லை. எதற்கும் முதலில் அவனைச் சந்தித்து மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.... அதற்கு நீங்கள்... நீங்கள் உதவி செய்வீர்களா?

(தொடரும்)
என்.கணேசன் 

                       

Monday, October 5, 2015

வணங்கும் வடிவில் தெரியும் பாபா!


மகாசக்தி மனிதர்கள் 38


 ண்ணெயை வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லிய வணிகர்கள் பாபா வெறும் நீரால் மண்விளக்குகளை எரிய வைத்த அதிசயத்தைப் பார்த்து விட்டுத் தங்களைப் பொறுத்தருளும்படி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவுடன் ஷிரடி சாய்பாபா அவர்களைக் கோபித்துக் கொள்ளவோ, கடுமையாகக் கண்டிக்கவோ இல்லை.

அவர்களுக்கு அன்பாகவே அறிவுரை வழங்கினார். எண்ணெய் வைத்துக் கொண்டே பொய் சொன்னதும் அல்லாமல் அவரும், அவரிடம் வருபவர்களும் இருட்டில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று கண்டு களிக்க வந்தது தவறு என்பதைப் புரிய வைத்த அவர் ஒரு அழகான உதாரணத்தையும் சொன்னார். “அனைவருக்கும் அன்னை இறைவன் தான். இறைவனின் குழந்தைகள் கஷ்டப்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டு அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு ரசிப்பது மிகப்பெரிய குற்றம். ஒரு தாயின் குழந்தைக்கு தீங்கிழைத்து விட்டு அந்தத் தாயின் கருணைக்கு யாராவது பாத்திரமாக முடியுமா? இனி எப்போதும் இந்தத் தவறைச் செய்யாதீர்கள்

பாபாவின் இந்த உதாரணம் எக்காலத்திலும் எவரும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பேருண்மை. இதனை மனதில் நிறுத்தியவர்களால் அடுத்தவர்க்குத் தீங்கிழைக்க எண்ணவும் மனம் உடன்படாதல்லவா?

பாபாவின் அறிவுரையால் அந்த வணிகர்களும் மனம் திருந்தி திரும்பினார்கள்.  அந்த நிகழ்ச்சி ஷிரடியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பைத்தியக்காரர் என்று பரிகசிக்கப்பட்ட பாபாவுக்கு வைத்தியம் தெரிந்திருப்பது மட்டுமல்ல நீரில் விளக்கை எரிய வைக்கிற அளவு அவர் பெரிய மகான் என்கிற செய்தி காட்டுத்தீயாக அங்கும் சுற்றுப்பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.


அவரை நாடிப் பலரும் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். அவர் தன்னை நாடி வந்த அனைவரையும் சமமாகவே நடத்தினார். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என்ற பாகுபாடோ ஏழை, பணக்காரர், பணம் தருபவர், தராதவர் என்ற பாகுபாடோ அவரிடம் இருக்கவில்லை.


அன்பு, ஒழுக்கம், மன அமைதி, இரக்கம், உதவும் குணம், பக்தி, திருப்தி ஆகியவற்றிற்கு அதிக முக்கியம் தந்தவராக இருந்த ஷிரடி சாய்பாபா எந்த மதத்தின் கோட்பாட்டுக்கும் முழுமையாக அடங்காதவராக இருந்தார்.


“எல்லோருக்கும் இறைவன் ஒருவனே” “அல்லாவே இறைவன்என்ற வாசகங்களை அடிக்கடி சொல்கிற வழக்கம் சாய்பாபாவிற்கு இருந்தது.  அவர் அப்படி சொல்வதும், அவர் பாழடைந்த மசூதியில் வசிப்பதும் அவரை ஒரு முஸ்லீம் என்று சிலரை நினைக்க வைத்தது. ஆனால் அவர் தான் வசிக்கும் மசூதிக்கு துவாரகமயி என்று பெயர் வைத்ததும், அங்கு வருபவர்கள் இந்து முறைப்படி பூஜைகள் நடத்த அவர் அனுமதித்ததும் அவரை இந்து மதத்திற்கு சாதகமானவராக சிலரை நினைக்க வைத்தது.  இதனால் இரு மதங்களையும் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் அவரிடம் அதிருப்தி கொண்டவராகவே இருந்தார்கள்.

  
அவருடைய ஆன்மிக சக்தியால் பெருமளவு ஈர்க்கப்பட்ட சிலர் அங்கே அவரையே தெய்வமாக நினைத்து வணங்கவும் ஆரம்பித்தார்கள். அவர் நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்தும், அவர் கால்களில் மலர்களை வைத்தும் சிலர் வழிபட்ட போது ஆரம்பத்தில் ஷிரடி சாய்பாபா அவர்களைத் தடுத்துப் பார்த்தார். உங்கள் வீடுகளுக்கும், கோயில்களுக்கும் சென்று உங்கள் இறைவனை இப்படி பூஜியுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதாய் இல்லை. நீங்களே எங்கள் நடமாடும் இறைவன்என்று சொல்லி அவரையே பூஜித்தனர்.

அப்படி அவரை ஆரம்பத்தில் பூஜிக்க ஆரம்பித்தவர்களில் ராமகிருஷ்ண ஆயி என்ற இளம் விதவைப் பெண்மணி முக்கியமானவர். அவர் அங்கு வருபவர்களை பாபாவை தெய்வமாக வணங்க ஊக்கப்படுத்தினார். பாபாவிடம் வந்தவர்கள் வாழ்வில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் ஏற்பட ஆரம்பிக்கவே அவருடைய பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக ஆரம்பித்தது.
                                                 

பக்தர்களிடம் பணம் வசூலிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே பாபாவிற்கு விருப்பம் இருக்கவில்லை. எத்தனையோ பேரின் நோய் தீர்த்த போதும் கூட அவர் அவர்களிடமிருந்து எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இருந்தார் என்பதை முன்பே குறிப்பிட்டும் இருந்தோம். ஆனால் தன்னுடைய பக்தர்கள் தனக்கு எதையும் செய்யத் தயாராக இருந்தார்களே ஒழிய ஏழை எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராக இல்லாத மனநிலையில் இருப்பதை பாபா உணர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எத்தனை போதித்தும் அது பணக்கார பக்தர்களின் மனதில் ஆழமாகப் பதியவில்லை என்று அவர் கண்டு கொண்டதால் அது போன்ற பக்தர்களிடம் அவர் அவர்களுடைய நிதிநிலைமைக்கு ஏற்ப பணம் வசூல் செய்து ஏழை எளிய மக்களின் தேவைக்கு ஏற்ப தானே நேரடியாக உதவிகள் செய்ய ஆரம்பித்தார். ஏழை எளியவர்களின் உணவு உடைக்கும், மருத்துவத்திற்கும், அவர்களது தீர்த்த யாத்திரைக்கும் கூட பாபா வாங்கிய பணம் உதவியாக இருந்தது. பெரும்பாலும் அன்றன்று வசூலான பணம் அன்றன்றே பட்டுவாடாவும் ஆகியது.

அக்காலத்திலேயே தினசரி பெரும் தொகை வசூல் ஆன போதும் பாபா தனக்கென்றும், தன் சவுகரியங்களுக்கென்றும் எந்தப் பணத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. அவர் 1918ல் தன் பூதவுடலை நீத்த போது அவர் கையிருப்பில் பதினாறு ரூபாய் மட்டுமே இருந்தது. அவர் பெயரில் எந்த சொத்தும் இருக்கவில்லை.

இந்து இஸ்லாம் மதங்களைத் தீவிரமாக எழுத்து பிசகாது பின்பற்றுபவர்கள் பாபாவிடம் கொண்டிருந்த அதிருப்தி மட்டும் அவ்வளவு சீக்கிரம் மாறவில்லை. ஆனால் அவர்களும் கூட அவரை காலப்போக்கில் போற்ற ஆரம்பித்தார்கள். சில விசேஷ நாட்களில் பகல் நேரங்களில் பஜனைகளும், பூஜைகளும், வேத பாராயணங்களும் நடக்க இரவு நேரங்களில் குரான் ஓதுவதும், இஸ்லாம் வழி வழிபாடுகளும் நடந்தன. இரு மதத்தினரும் ஒருங்கிணைந்து போகும் ஒரு புனித இடமாக துவாரகமயி மாற ஆரம்பித்தது.

எல்லாக் கடவுளும் ஒருவரே என்ற சித்தாந்தம் போதனையில் மட்டுமல்லாமல் தன் உருவத்திலேயே பாபா பக்தர்களுக்குப் புரிய வைத்த விசேஷ நிகழ்ச்சிகளும் ஷிரடியில் சகஜமாயின.  

தென்னமெரிக்காவில் டாக்டராக இருக்கும் ஒரு உயர்வகுப்பு இந்தியர் இராமரைத் தவிர வேறு யாரையும் வணங்காதவர். ஒரு முறை அவருடைய நண்பரின் வற்புறுத்தலால் ஷிரடி வந்த போதும் அவர் பாபாவை வணங்க முன் வரவில்லை. அவர் நண்பர் மட்டும் துவாரகமயிக்குள் நுழைந்து வணங்க, அவர் வெளியேவே நின்று கொண்டார். ஒரு மசூதிக்குள் செல்லவோ, அங்கிருப்பவரை வணங்கவோ அவருக்கு சம்மதம் இருக்கவில்லை. அப்படிப்பட்டவர் திடீரென்று உள்ளே நுழைந்து பக்திப் பரவசத்துடன் பாபாவின் கால்களில் விழுந்தார். “நீல மேக சியாமனான ராமனின் வடிவாகவே இவர் என் கண்களுக்குத் தெரிந்தார்என்று பரவசத்துடனேயே மற்றவர்களிடம் அவர் தெரிவிக்கவும் செய்தார்.

அதே போல போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த எம். எஸ். நிமோன்கர் (M.S. Nimonkar) தன் இஷ்ட தெய்வமான அனுமார் வடிவையும், இன்னொருவர் தன் இஷ்ட தெய்வமான தத்தாத்ரேயரையும், இன்னொரு இளம் பெண்மணி தன் இஷ்ட தெய்வமான கணபதியையும் பாபாவின் உருவில் பார்த்து பிரமித்தனர்.

ஒரு டெபுடி கலெக்டர் மும்பை கோயிலில் லக்‌ஷ்மி நாராயணரை வழிபட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று அந்த விக்கிரக உருவம் மறைந்து பாபாவின் உருவம் தெரிந்திருக்கிறது. அவர் அதற்கு முன் பாபாவைப் பார்த்ததில்லை என்பதால் வேறெதோ உருவம் தெரிகிறதே இது வழிபாட்டில் மனம் ஒருமைப்பட்டு நிற்காததன் காரணமே என்று தன்னையே கடிந்து கொண்டார். சில நாட்கள் கழித்து அவர் ஷிரடி வந்து பாபாவைக் கண்ட போது தான் அன்று பார்த்த உருவம் கற்பனை உருவம் அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார்.

இப்படி பாபாவின் உருவத்தில் பல தெய்வங்களும், அந்த  தெய்வங்களின் உருவத்தில் பாபாவும் பக்தர்களுக்குப் பல முறை காட்சி அளித்திருப்பதால் தான் பாபாவின் உருவப்படங்களிலேயே இந்து தெய்வங்களைச் சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்திருக்கும் என்று தோன்றுகிறது.

(தொடரும்) 

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – 8.5.2015




Thursday, October 1, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 65


த்திரம் தன் சகாவின் கண்களை மறைத்து அவன் எடுத்த முடிவு அவன் உயிருக்கே உலை வைத்தது ஒடிசல் இளைஞனுக்கு நினைவுக்கு வந்தது. அதே முடிவைத் தானும் தேடிக் கொள்ள விரும்பாமல் மாராவிற்குப் போன் செய்து அவன் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள விரும்பினான். துப்பாக்கியை லாரி டிரைவரைக் குறி பார்த்து வைத்துக் கொண்டு சொன்னான். “என் மேலதிகாரியிடம் கேட்டு விட்டுத் தான் நான் எதையும் முடிவு செய்ய முடியும்

லாரி டிரைவர் முகத்தில் படர்ந்த அச்சத்தை ரசித்தபடியே சற்றுப் பின் நகர்ந்த ஒடிசல் இளைஞன் மாராவுக்குப் போன் செய்து கொண்டே துப்பாக்கியை ஜீப் டிரைவரிடம் தந்தான். “அவர்கள் கொஞ்சம் அசைந்தால் கூட சுட்டு விடு

ஜீப் டிரைவர் துப்பாக்கியை வாங்கிக் கொள்ள, ஒடிசல் இளைஞன் சற்றுத் தள்ளிப் போய் அவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு மாராவுக்குப் போன் செய்து தாழ்ந்த குரலில் நடந்ததைத் தெரிவித்தான்.   

பின் ஆதங்கத்துடன் சொன்னான். “... அவன் மின்னல் வேகத்தில் லாரிக்குள் போனதை நானே பார்த்தேன். உளவுத்துறை ஆட்கள் எங்களை விசாரிக்கும் போது லாரி என் பார்வையில் சுமார் ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருக்காது. அந்த சமயத்தில் மைத்ரேயனோடு அந்தப் பாதுகாவலன் இறங்கி இருக்கிறானா இல்லை, அந்த உணவகம் இருக்கும் இடத்தில் நாங்கள் கிளம்புகையில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் என் பார்வை அந்த லாரியிலிருந்து விலகி இருந்திருக்கும் சமயத்தில் இறங்கி இருக்கிறானா என்று தெரியவில்லை...

மாரா அமைதியாகச் சொன்னான். “அந்த உணவகத்தில் நீங்கள் கிளம்புகையில் தான் அவன் லாரியிலிருந்து இறங்கி இருக்க வேண்டும்

ஒடிசல் இளைஞன் திகைத்தான். மாரா சொன்னான். “நீங்கள் வந்த பாதையில் போக ஒரு லாரி கிளம்பி இருந்ததே அதில் தான் அவர்கள் தப்பித்துப் போயிருக்க வேண்டும். பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தானே அவன் தான் நேராகப் போய் லாரியின் பின் கதவைத் திறந்து விட்டிருப்பான். அந்த நேரத்தில் மைத்ரேயன் இருந்த லாரியைக் கிளப்பி நீ அதைப் பார்க்காதபடி லாரிக்காரன் மறைத்திருக்கிறான். இந்த லாரியின் பின்னால் இருந்து இறங்கி இருவரும் அந்த லாரியின் பின்புறம் ஏறிய பிறகு இரண்டு லாரிகளின் பின் கதவுகளையும் தாள் போட்டு விட்டு பாட்டிலோடு போய் தன் லாரியில் அந்த ஆள் ஏறி இருக்கிறான். இதெல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்திருக்கும். அப்போது அவசரத்தில் அந்தக் கதவை அந்த ஆள் முழுவதுமாய் தாளிட்டிருக்க மாட்டான்... அது சிறிது தூரம் போன பின் தானாய் கழன்று போயிருக்கிறது...

ஒடிசல் இளைஞனுக்கு ஆத்திரமாய் வந்தது. அப்படியானால் அந்தப் பக்கம் போன லாரிக்காரனும் இவன் ஆள் தானா? இப்படி ஏமாற்றி முட்டாளாக்கியவன், சாமான்களை இறக்கி வைத்து விட்டு “திருப்தி தானேஎன்கிற மாதிரி என்னைப் பார்த்தானே பாவி!

“அவனைப் பிடித்து வைத்து மிரட்டினால் எல்லா உண்மையையும் கக்கி விடுவான். அப்படிக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்லட்டுமா

மாரா அமைதியாகவே சொன்னான். “இது வரை நாம் லீ க்யாங்கின் கவனத்தைக் கவர்ந்தது போதும். இனி எதுவும் செய்ய வேண்டாம். நீ அவனை மிரட்டிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்து உளவுத்துறைக்குத் தகவல் சொன்னால் கூட நமக்குப் பிரச்னை தான். அதனால் சத்தமில்லாமல் அங்கிருந்து வந்து விடு.....

ஒடிசல் இளைஞனுக்கு லாரிக்காரனின் அதிர்ஷ்டம் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அதை அடக்கிக் கொண்டு அவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “ஏன் வந்த வழியே அந்தப் பாதுகாவலன் திரும்பப் போகிறான்...

“அந்த சாலையிலிருந்து எத்தனையோ சாலைகள் பிரிந்து செல்கின்றன. அப்படி ஒரு சாலையில் அவன் எத்தனையோ தூரம் போயிருப்பான்.... அதை விடு..... நீ அவனும் மைத்ரேயனும் எந்த உடைகளில் இருந்தார்கள் என்பதைப் பார்த்தாயா? கண்டிப்பாக அவர்கள் புத்தமத உடையில் இருந்திருக்க வாய்ப்பில்லை

“மைத்ரேயனை அவன் பிடித்துக் கொண்டு தான் தாவி இருக்க வேண்டும்..... மின்னல் வேகத்தில் சம்யே மடாலய வாசலில் இருந்து லாரிக்குள் அவன் பாய்ந்தான். ஒரு அசைவு மட்டும் தான் எனக்குத் தெரிந்தது. ஆளையோ அவன் உடையையோ பார்க்க முடியவில்லை.....

மாராவுக்கு அந்த அமானுஷ்யன் மேல் ஒரு தனி மரியாதை தோன்றியது. “யாரும் பார்த்து சந்தேகப்படுவதற்கு முன் நீ அங்கிருந்து கிளம்பி விடு.... என்று சொல்லி விட்டு மாரா பேச்சை முடித்துக் கொண்டான்.

ஒடிசல் இளைஞன் வேகமாகச் சென்று ஜீப் டிரைவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கி மறைத்துக் கொண்டான். லாரி டிரைவரிடம் சொன்னான். “இப்போதைக்கு நீ போகலாம். எப்போது வேண்டுமானாலும் வந்து மறுபடி விசாரணை செய்வோம்.... அப்போது பார்க்கலாம்.....

ஜீப் டிரைவர் அப்போதே தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்க வாயைத் திறந்தான். ஒடிசல் இளைஞனின் முகத்தில் தெரிந்த கடுமை அப்படியே அவன் வாயை மூடியது.

லாரிக்குள் காலிப் பெட்டிகளை லாரி டிரைவரும் அவன் உதவியாளனும் திரும்ப வைக்க ஆரம்பிக்கையிலேயே ஜீப்பில் இவர்கள் இருவரும் வேகமாகக் கிளம்பி விட்டார்கள்.


க்‌ஷயின் எதிர்வீட்டு மாடியில் குடிவந்திருக்கும் ஆசாமி தன் திட்டத்தைச் செயல்படுத்த தகுந்த நேரம் நிகழ்காலம் தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். அவன் இது வரை நேரில் பார்க்காத எதிர் வீட்டுக் குடும்பத் தலைவன் மீது அந்தக் குடும்பமே பெருமதிப்பும், பேரன்பும் வைத்திருந்ததை அந்த வீட்டில் இருந்து கீழ் வீட்டுக்கு வந்து போனவர்கள் பேசிய பேச்சில் இருந்து அவனால் யூகிக்க முடிந்தது. இந்த சில நாட்களில் சஹானா ஒரு முறை கீழ் வீட்டுக்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் இருந்து போனாள். அவள் தன் கணவனைப் பற்றிப் பேசிய போதெல்லாம் பேச்சில் ஒரு பெருமிதம் கொப்பளித்தது. ஒவ்வொரு நாளும் காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் வந்து தன் காதலியிடம் அதிக நேரமும், அவள் பெற்றோரிடம் சிறிது நேரமும் அளவளாவி விட்டுப் போகும் வருண் எல்லோரையும் விட அதிகமாய் அவன் அப்பாவைப் பற்றி சலிப்பில்லாமல் பேசினான். அந்தப் பேச்சுகளில் இருந்து பார்த்தால் பழகுகிற மனிதர்கள் அனைவரிடமும் சீக்கிரமாக நல்ல பெயரையும் அன்பையும் சம்பாதிக்க முடிந்தவன் என்றே தோன்றியது. அப்படி இருக்கையில் வெளியூர் சென்றிருந்த அந்த மனிதன் வந்தால் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் அதிகமாகும் என்பது புரிந்தது. அந்த ஆள் பயணத்தில் மர்மம் இருந்தது. அவன் திரும்பி வரும் நாள் பற்றியும் நிச்சயமாக வீட்டாரால் சொல்ல முடியவில்லை. பரவாயில்லை, அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அவன் வருவதற்குள் எதிர் வீட்டுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

கீழ் வீட்டு ஜானகி மூலம் அவன் நடத்த தீர்மானித்திருந்தத் திட்டத்தில் வருணின் காதலி  வந்தனாவின் பங்கு தான் மிக முக்கியமானது. ஆனால் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்துப் பேச அவன் விரும்பவில்லை. அந்தப் பெண் புத்திசாலியாகத் தெரிந்தாள். அதே போல் அவள் தந்தையையும் அவன் சந்தித்துப் பேச அவன் விரும்பவில்லை. காரணம் அவனிடம் பேசி விட்டுப் போன ஜானகி அன்று தன் கணவரிடம் அவனைப் பற்றிப் பேசியதை அவன் கேட்டிருந்தான்.

“நம்ம மேல் வீட்டு சினிமா கதாசிரியரிடம் நான் இன்று போய் பேசி விட்டு வந்தேன். ஆள் நல்லவராய் தான் தெரிகிறார். கூச்ச சுபாவக்காரர். அவ்வளவு தான். பேச ஆரம்பித்தால் நன்றாகத் தான் பேசுகிறார்

கேட்டு விட்டு ‘எங்கே நீ என்னைப் பேச விட்டாய். இடைவெளியே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தது நீ தானே?என்று மனதில் அவன் அங்கலாய்த்தான்.   

மனைவி சொன்னதைக் கேட்டு விட்டு மாதவன் “ம்... என்ன கதை எழுதுகிறாராம்? என்று கேட்டார்.

“எல்லாம் கலந்த கலவையாம்.... இது வரை நாடகங்களுக்குத் தான் கதை வசனம் எழுதி இருக்கிறாராம்?

“எந்தெந்த நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதி இருக்கிறாராம்?

அதை ஜானகி கேட்டிருக்கவில்லை. “அதைக் கேட்கவில்லை.....என்றாள்.

ஒருவேளை அவரைச் சந்தித்து பேச நேர்ந்தால் அது போன்ற கேள்விகளை அவர் கண்டிப்பாகக் கேட்பார். சந்தேகப்படாதது போல் பொய் சொல்ல வேண்டும். அது கஷ்டம் தான். அதுவுமல்லாமல் அந்த அம்மாளைப் போல் தானே பேசிக் கொண்டிருக்க மாட்டார். கேள்வி-பதில் ரீதியாகத் தான் சம்பாஷணை இருக்கும். அதுவும் கஷ்டம். அதனால் அந்த ஆளிடம் பேச அவன் பிரியப்படவில்லை.  அதனால் திட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போட அந்த அம்மாள் தனியாகக் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தான்.

அப்படிக் காத்திருக்கும் சமயங்களில் கையில் பைனாகுலர் பெரும்பாலும் இருந்தது. எதிர் வீட்டைக் கண்காணித்துக் கொண்டே இருந்த அவனுக்கு எதிர் வீட்டு பழக்க வழக்கங்களும், தினசரி வாழ்க்கை போகும் விதமும் அத்துபடியாகி இருந்தது.  மாமியாரும் மருமகளும் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கையிலும், வருணும், கௌதமும் பாசத்தோடு பேசி சண்டையிட்டு மறுபடி அதிக நெருக்கத்துடன் பழகுவதைப் பார்க்கையிலும் வயிற்றெரிச்சலாக இருந்தது.

ஜானகி தனியாக இருக்கையில் போய்ப் பேசலாமா என்று சில சமயங்களில் தோன்றிய போதும் பேசிக் கொண்டிருக்கையில் யாராவது இடையில் வருவதை அவன் விரும்பவில்லை. அவளாக மறுபடியும் மாடிக்கு வரவில்லை. ஒரு நாள் மதியம் அவள் அப்படித் தனியாக அமர்ந்திருக்கையில் அவளை வரவழைக்க அவன் நாற்காலியை எடுத்துக் கீழே தடாலெனப் போட்டான். துணிமணிகள் நிறைந்த ஒரு சூட்கேஸைத் திறந்து துணிமணிகளைச் சிதற விட்டான். அவனிடம் இருந்த ஒரு பழைய புகைப்படத்தையும் வாசலருகே போட்டான். அவசரமாக ஜண்டு பாமைத் தன் இரு கைவிரல்களிலும் தடவி எடுத்துக் கொண்டான்.

ஜானகி அவன் எதிர்பார்த்தது போல் பதறிப் போய் மேலே வந்தாள். அவள் வரும் போது கீழே விழுந்தவன் கஷ்டப்பட்டு எழுவது போல அவன் எழுந்து கொண்டிருந்தான். “என்ன சத்தம்.... விழுந்து விட்டீர்களா?என்று ஜானகி கவலையுடன் கேட்டாள்.

மேலே வைத்திருந்த சூட்கேஸை எடுக்கப் போனேன். நாற்காலி வழுக்கி விழுந்து விட்டேன்.....என்று சொன்னவன் துணிமணிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தான். அவள் அக்கறையுடன் கேட்டாள். “அடி பலமாய் படவில்லையே?”

“இல்லை....

அவள பார்வையில் அவன் வாசலருகே போட்டிருந்த புகைப்படம் பட்டது. குனிந்து அவள் அதை எடுத்தவள் திகைத்துப் போனாள். அதில் வருணும், சஹானாவும், அந்த சினிமா கதாசிரியனும் இருந்தார்கள். அவள் வருணின் சின்ன வயதுப் புகைப்படத்தை எதிர் வீட்டு ஆல்பத்தில் பார்த்திருந்தாள்....

“இது.... இது.... வருண், சஹானா தானே

அவன் பதறிப்போவது போல நடித்து அவளைப் பார்த்தான். 

அவள் திகைப்புடன் கேட்டாள். “நீங்கள் அவர்களுக்கு உறவா?

அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு சொன்னான். “வருண்... வருண்.... என் மகன்....

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.... “அப்படியானால் அவன் அப்பா என்று சொல்வது யாரை?

அவன் பதில் சொல்லாமல் தலையைக் கவிழ்த்தான். இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டபடி விரல்களில் தடவி எடுத்திருந்த ஜண்டு பாமை கண்ணிமைகளில் பூசிக்கொண்டான். அடுத்த கணம் அவன் கண்களிலிருந்து நீர் வெள்ளமாகப் பொங்கி வழிய ஆரம்பித்தது.

ஜானகி ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவன் அழுகையினூடே சொன்னான். “சஹானாவின் முதல் கணவன் நான் தான்..... வருண் என் மகன்..... சந்தோஷமாகத் தான் வாழ்ந்தோம்.... இல்லை, அப்படித் தான் நான் நம்பி ஏமாந்தேன்..... ஒரு நாள்... ஒரு நாள்..... என் குழந்தையோடு அவள் தலைமறைவாகி விட்டாள்..... உங்களோடு வாழப்பிடிக்கவில்லை. தேட வேண்டாம் என்று வெறும் ஒரு வரிக்கடிதம் மட்டும் நான் வீட்டுக்கு வரும் போது இருந்தது. பிறகு அக்கம் பக்கம் விசாரிக்கையில் தான் நான் இல்லாத நேரங்களில் வேறொருவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்த விஷயம் எனக்குத் தெரிந்தது......

பெருமதிப்பில் ஜானகி மனதில் இருந்த சஹானா அந்தக் கணத்தில் அதள பாதாளத்திற்குச் சரிய ஆரம்பித்தாள்.

(தொடரும்)

என். கணேசன்