என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 13, 2015

சீடரை காந்தமாய் இழுத்த குரு!

மகாசக்தி மனிதர்கள்-30 

 பாபாஜியின் ஆணைப்படி கீதை, பைபிள் என்ற இரண்டு புனித நூல்களின் சாராம்சங்களின் ஒருமைத் தன்மையையும், தனித்தன்மைகளையும் விளக்கி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி 1894 ஆம் ஆண்டு “கைவல்ய தரிசனம்” (The Holy Science) என்ற நூலை எழுதி முடித்தார். அதன் பின் அவர் வாழ்க்கை துறவு வாழ்க்கையாக இருந்தது. தனது செராம்பூர் வீட்டை ஆசிரமமாக மாற்றி பல சீடர்கள் இலவசமாகத் தங்கி ஆன்மிகக் கல்வி கற்றுச் செல்ல வழி வகுத்தார். அது போல பூரியிலும் ஒரு ஆசிரமத்தை அவர் அமைத்தார். அந்த ஆசிரமத்தில் எல்லோரும் ஒரே விதமாக பார்க்கப்பட்டனர். பணக்காரர்கள், ஏழைகள், அறிவாளிகள், அறியாதவர்கள் என்ற பாகுபாடு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் இருக்கவில்லை. அங்கு படிக்கும் சீடர்களுக்கு மட்டுமல்லாமல், உணவு உண்ணும் நேரத்தில் வரும் பார்வையாளர்களுக்கும் உணவு இலவசமாக தரப்பட்டது.

ஆசிரமம் அமைத்து வசூல் மன்னர்களாக மாறி ஆன்மிகப் போர்வையில் பணம், புகழ் மட்டுமே குறியாக இருக்கும் பலரை இன்று நம்மால் காண முடிகிறது. அதோடு ஒப்பிடுகையில் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி  தன்னுடைய சொத்தையே இப்படி தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தியது அவரது தன்னலமில்லாத உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது அல்லவா?  

அவர் ஒரு கண்டிப்பான குருவாக இருந்ததால் அரை மனதாகப் படிப்பவர்களும், ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களும் அதிக காலம் அவருடைய ஆசிரமங்களில் தங்க முடியவில்லை. ஆனால் உண்மையான ஆர்வமும், தேடலும் உள்ளவர்கள் அங்கு தங்கி ஆன்மிக அறிவு மட்டுமல்லாமல் குருவின் நேரடிக் கண்காணிப்பில் நல்ல அனுபவ அறிவையும் பெற்றார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் பரமஹம்ச யோகானந்தர், சுவாமி சத்யானந்த கிரி,  பாபானந்த கிரி, சுவாமி ஹரிஹரானந்த கிரி ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களில் பரமஹம்ச யோகானந்தர் தன் ‘யோகியின் சுயசரிதைநூலில் குருவுடனான தன் அனுபவங்களையும், சுவாமி சத்யானந்த கிரி சுவாமி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி மகராஜ் வாழ்க்கை வரலாறுநூலில் குருவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்கள்.

இனி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியுடன் அவருடைய சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட சில சுவாரசியமான நேரடி அனுபவங்களைப் பார்ப்போம்.

பரமஹம்ச யோகானந்தர் தன் ஆன்மிகத் தேடலின் ஆரம்பத்தில் பல இடங்களுக்குச் சென்றவர். கடைசியில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து ஆன்மிக மார்க்கத்திலேயே நிலைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்து வாரணாசியில் இருந்த ஒரு ஆசிரமத்திற்குத் தன் நண்பனுடன் சென்றார். அங்கு ஆசிரமத்தலைவர் நல்லவராகவும் யோகானந்தர் மீது அன்பு கொண்டவராகவும் இருந்த போதிலும் ஆசிரமத்தில் இருந்த மற்றவர்களுக்கும் யோகானந்தருக்கும் ஒத்துப் போகவில்லை. அவர்கள் கேலியும் கிண்டலும் செய்த வண்ணம் இருந்தனர்.

ஒரு நாள் ஆசிரம வேலையாக யோகானந்தரும் இன்னொரு இளம் சீடரும் வாரணாசி கடைத்தெருவுக்குச் சென்றனர். அவர்கள் செல்கின்ற வழியில் ஒரு இடைப்பட்ட குறுகிய தெருவின் கோடியில் ஸ்ரீயுக்தேஷ்வர் நின்று கொண்டிருந்தார். ஏதோ ஒன்று காந்தமாய் யோகானந்தரை அவரிடம் ஈர்த்தது. போகின்ற வேலையை விட்டு விட்டு முன்பின் பார்த்தறியாத ஒரு நபரிடம் போவது சரியல்ல என்று நினைத்த யோகானந்தர் நேராக நடக்க ஆரம்பித்தார். ஆனால் சிறிது தூரம் போன பிறகு அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. கால்கள் கனக்க ஆரம்பித்தன. திரும்பி அந்த குறுகிய தெரு பக்கம் நடக்க ஆரம்பிக்க கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இதென்ன விசித்திரமாக இருக்கிறதே என்று நினைத்த யோகானந்தர் மறுபடி எதிர்பக்கம் நடக்க ஆரம்பிக்க கால்கள் பழையபடி கனக்க ஆரம்பித்தன.

யோகானந்தர் தன் கூட நடக்காமல் முன்னோக்கிப் போவதும் பின்னோக்கிப் போவதுமாக இருப்பதைப் பார்த்ததும் கூட வந்த ஆசிரமத்து சீடனுக்குச் சிரிப்பு தாங்கவில்லை.  “உனக்கு என்ன ஆயிற்று? கிறுக்கு பிடித்து விட்டதா?என்று கேட்டு வயிறு குலுங்க சிரித்தான். பதில் ஏதும் சொல்லாமல் யோகானந்தர் அந்த குறுகிய தெருவை நோக்கி வேகமாக நடந்தார். கால்கள் இப்போது ஒத்துழைத்தன.

குறுகிய தெருவின் மறுகோடியில் இப்போதும் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அமைதியாக நின்றிருந்தார். ஓடிச்சென்று யோகானந்தர் “குருதேவரேஎன்று அவர் காலில் விழுந்தார். முதல் முறை சந்தித்துக் கொள்பவர்கள் போல் அவர்களுடைய நிலை இருக்கவில்லை. பல ஜென்மங்களாகத் தொடர்கின்ற குரு சிஷ்யன் உறவின் உணர்வாக அது இருந்தது.

சிறிது உரையாடி விட்டு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “இன்னும் நான்கு வாரங்கள் கழித்து விட்டு என் ஆசிரமத்திற்கு வந்து சேர். எப்படியும் நீ இப்போதிருக்கும் ஆசிரமத்தில் நீ சந்தோஷமாக இல்லை

யோகானந்தர் தற்போதைய ஆசிரமத்தில் தனக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து அவரிடம் சொல்லவில்லை என்ற போதும் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்திருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அது ஒரு பெரிய விஷயம் என்பது போல காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய அப்போதைய வாழ்க்கை மட்டுமல்லாமல் முழு வாழ்க்கையையுமே குரு அறிவார் என்கிற உணர்வு யோகானந்தருக்கு வந்தது. அப்படி இருந்தும் கர்வம் கொள்ளாத அடக்கம் அவரை வியக்க வைத்தது.

குருதேவரின் ஞான திருஷ்டி தன்னிடம் இல்லாததால் யோகானந்தர் அவரிடம் கேட்டார். “கண்டிப்பாக வருகிறேன் குருதேவரே. உங்கள் பெயரையும் ஆசிரம விலாசத்தையும் தயவு செய்து தெரிவியுங்கள்

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பெயரையும் செராம்பூர் ஆசிரம விலாசத்தையும் சொல்லி யோகானந்தரை அனுப்பி வைத்தார். அவர் வாரணாசியில் இருந்த அவருடைய தாயுடன் சில நாட்கள் தங்கி இருக்க வந்த இடத்தில் பிற்கால பிரதான சீடர் யோகானந்தரைச் சந்திக்க நேர்ந்தது விதியின் முன்னேற்பாடாக இருப்பதாகவே தோன்றுகிறது. 

யோகானந்தர் தன் பழைய ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆனால் நாளுக்கு நாள் அந்த ஆசிரமத்தில் இருந்த மற்றவர்களுடனான உறவு மோசமாக ஆரம்பித்தது. கடைசியில் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் செராம்பூர் ஆசிரமத்திற்கு சொன்னபடி நான்கு வாரங்கள் கழித்து போய் சேர்ந்த யோகானந்தரை நிரந்தரமாக ஆசிரமத்தில் இருத்திக் கொள்ள ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சம்மதிக்கவில்லை. பட்டப்படிப்பு படித்து முடித்தே வந்தால் போதும் என்று சொல்லி விட்டார். கல்லூரிப் படிப்பு என்பதே வேம்பாக யோகானந்தருக்குக் கசந்தது என்றாலும் தன் குருதேவரின் கட்டளையை மீறவில்லை. ஆனால் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து தங்க அனுமதி கேட்டார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அதற்கு அனுமதி தந்தார்.

செராம்பூர் ஆசிரமத்தில் இருந்த நாட்களில் யோகானந்தர் குருவின் நிழலாகவே இருந்தார். இரவு உறங்குவது கூட குரு அருகில் தான். செராம்பூர் ஆசிரமத்தில் கொசுக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தது. கொசுக்கள் பெரியதாக இருந்ததோடு அவர்கள் படுக்க ஆரம்பித்தவுடன் படை எடுத்து வந்தன. யோகானந்தர் வீட்டில் கொசுவலைக்குள் படுத்து பழக்கப்பட்டவர். தலையிலிருந்து கால்கள் வரை கொசுக்களால் கடிக்கப்பட்ட யோகானந்தர் ஒருநாள் குருதேவரிடம் கொசுவலை வாங்கினால் உறங்க வசதியாக இருக்கும் என்று சொன்னார். அனுமதி தந்த குருதேவர் தனக்கும் ஒரு கொசுவலை சேர்த்து வாங்கச் சொன்னார். ‘நீ மட்டும் கொசுவலை போட்டுக் கொண்டால் அத்தனை கொசுக்களும் என்னிடம் வந்து விடும்என்றார். அப்படியே இரண்டு கொசுவலைகள் யோகானந்தர் வாங்கினார்.

ஒவ்வொரு இரவும் கொசுவலை விரிக்க குருதேவர் உத்தரவிட்டால் தான் யோகானந்தர் கொசுவலை விரிப்பார். இரண்டு நாட்கள் அப்படியே நடந்தது. மூன்றாவது நாள் குருதேவர் ஒன்றும் சொல்லாமல் உறங்கப் போய் விட யோகானந்தருக்கு உறக்கம் வரவில்லை. மெல்ல புரண்டு பார்த்தர்ர். கனைத்துப் பார்த்தார். குருதேவர் எழுகிற மாதிரி தெரியவில்லை. குருதேவர் பிணம் போல் படுத்துக் கிடந்தது யோகானந்தருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. உடலைத் தொட்டுப்பார்த்தார். உடல் சில்லிட்டிருந்தது. மூக்கில் கை வைத்துப் பார்த்தார். மூச்சு விடுகிற மாதிரி தெரியவில்லை. பயந்து போன யோகானந்தர் மற்றவர்களை எழுப்பி உதவிக்கு அழைக்கலாம் என்று எழுந்த போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார்.

யோகானந்தருக்கு அப்போது தான் அவர் யோகநித்திரையில் இருந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி நீ ஏன் இன்னும் உறங்கவில்லைஎன்று கேட்ட போது வெட்கத்துடன் யோகானந்தர் கொசுக்களைக் காரணம் காட்டினார்.

“நீ ஏன் கொசுக்களின் நினைவாகவே இருக்கிறாய். கவனத்தை அதிலிருந்து திருப்பு. உறங்குஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.  அதன்பின் பேராச்சரியமாக அந்த இரவில் ஒரு கொசு கூட அவரை அண்டவில்லை. அப்போது தான் குருதேவரின் சக்தியின் வலிமையும், அவர் விளையாட்டாகத் தான் அவருக்கும் சேர்த்து கொசுவலை வாங்கச் சொல்லி இருக்கிறார் என்பதும் யோகானந்தருக்கு விளங்கியது.

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 11.03.2015
  

Thursday, July 9, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 53


 டுத்த அரை மணி நேரத்தில் மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் ஒவ்வொருவராக வாங் சாவொ முன் வந்து நின்றார்கள். புத்த பிக்குவை வெளியே நிற்க வைத்து விட்டு ரகசியமாக அவர்களைத் தனித்தனியாக விசாரித்த போது கண்சிமிட்டி மனிதன் கழுத்து திருகி விழுந்த போது கூட இருந்த ஆள் அவர்களில் ஒருவரும் அல்ல என்பது தெரிந்தது. அவர்களை வாங் சாவொ அனுப்பி விட்டான். அப்படியானால் நான்காவது ஆள் தான் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆள் என்பது வாங் சாவொவுக்கு ஊர்ஜிதமாகியது. அடுத்தவனை அனுப்புங்கள் என்று வாங் சாவொ  வெளியே இருந்த புத்த பிக்குவிடம் சத்தமாகச் சொன்னான்.

புத்தபிக்கு உள்ளே வந்து தயக்கத்துடன் சொன்னார். அவன் வரவில்லை

வாங் சாவொவின் முகம் இறுகியது. “ஏன்?என்று கேட்டான்.

அவனை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்களாம்

“என்ன ஆயிற்று?

“அவனை பாம்பு கடித்து விட்டதாம்

வாங் சாவொவுக்கு திகைப்பும் கோபமும் ஏக காலத்தில் வந்தன. எழுந்து நின்றான். “பா..ம்பு.... கடித்து விட்டதா? எப்போது

“சிறிது நேரத்துக்கு முன்பு தான்....

“எந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்?

“சேடாங் நகரின் அரசு மருத்துவமனையில் தான்.” 

வாங் சாவொவுக்கு சந்தேகம் வலுத்தது. ‘பாம்பு கடித்திருப்பது உண்மை தானா இல்லை கட்டுக்கதையா? உண்மையாக இருந்தால் இவனையாவது மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களா, இல்லை இவனும் மாயமாய் மறைந்திருப்பானா?

வாங் சாவொ தன் அலைபேசியை எடுத்தான். “சேடாங் நகர அரசு மருத்துவமனையில் பாம்பு கடிபட்டவனை இன்று காலை சேர்த்திருக்கிறார்களா என்று கேட்டுச் சொல்.என்று ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு சொன்னான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் “ஆம் சேர்த்திருக்கிறார்கள்என்று பதில் வந்தது.

“மருத்துவமனையில் நம் ஆட்களை நிறுத்து. அந்த ஆளைக் கண்காணிக்க ஏற்பாடு செய். அவனை நான் சந்தித்துப் பேசியாக வேண்டும்.

பேசியவன் தயக்கத்துடன் சொன்னான். “... ஆனால் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் முன்பே அவன் இறந்து விட்டிருக்கிறான்.

வாங் சாவொ திகைத்தான். அவனை ஒருவித கையாலாகாத கோபம் ஆட்கொண்டது. சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு கண்டிப்பான குரலில் சொன்னான். “பரவாயில்லை. நான் பிணத்தைப் பார்க்க வேண்டும். அந்த மருத்துவர்களிடமும் பேச வேண்டும். உடனே வருகிறேன் என்று சொல்

வாங் சாவொ உடனே கிளம்பினான். போகின்ற அவனையே புத்தபிக்கு யோசனையோடு பார்த்து நின்றார். மருத்துவமனைக்குப் போகும் இவன் அப்படியே போய் விடுவானா, இல்லை திரும்பவும் இங்கே வருவானா?


சேடாங் நகர அரசு மருத்துவமனைக்குப் போன வாங் சாவொ இறந்து போயிருந்த சுற்றுலா வழிகாட்டியின் பிணத்தை ஆராய்ந்தான். பிணம் கருநீல நிறமாகி விட்டிருந்தது. காலில் பாம்பு கடித்த காயம் இருந்தது. வாங் சாவொ மருத்துவரிடம் கேட்டான். இது உண்மையாகவே பாம்பு கடித்த காயம் தானா. இதில் தில்லு முல்லு நடந்திருக்க வாய்ப்பில்லையே

“இல்லை பாம்பு கடித்த காயம் தான். ஆனால்....

“என்ன?

“இந்த வகை விஷப்பாம்புகள் இந்தப் பகுதியில் அபூர்வம் தான். நான் கடந்த ஐந்து வருடங்களில் இந்தப் பாம்பு தீண்டி இறந்தவர்களை இந்தப் பகுதியில் பார்த்ததில்லை. இந்தப் பகுதியில் இருக்கும் பாம்புகள் இந்த அளவு விஷத்தன்மை கொண்டவையும் அல்ல. அந்தப் பாம்புகள் கடித்தால் இந்தப் பகுதி மக்களே பச்சிலைகள் போட்டு குணப்படுத்திக் கொள்கிற அளவு தான் விஷத்தன்மை இருக்கும்.....

வாங் சாவொ அங்கிருந்த அந்த சுற்றுலா வழிகாட்டியின் மகனிடம் விசாரித்தான். காலையில் ஏதோ வேலையாக வெளியே போன தந்தை நீண்ட நேரமாய் வரவில்லை என்பதால் தேடிப் போனதாகவும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அவன் பாம்பு கடிபட்டு விஷமேறி மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்து அவனைத் தூக்கிக் கொண்டு சேடாங் வந்ததாகவும் சொன்னான். ஆனால் வழியிலேயே தந்தை இறந்து விட்டார் என்பதைச் சொல்லும் போது அவன் கண்கள் நிறைந்தன.

வாங் சாவொ அந்த மகனின் துக்கத்தில் பங்கு கொள்ளும் மனநிலையில் இல்லை. அந்த சுற்றுலா வழிகாட்டி இடையில் நினைவு திரும்பி ஏதாவது தெரிவித்தானா என்று கேட்டான்.

மகன் சொன்னான். “வீட்டருகே மயங்கி விழுந்திருந்த அவரை நான் தூக்கிய போது அரை மயக்க நிலையில் இருந்தபடியே  அடர்த்தியாக மரங்கள் நிறைந்திருந்த பகுதியை நோக்கிக் கை மட்டும் காண்பித்தார். அவரைத் தீண்டிய பாம்பு அந்தப் பக்கம் போயிருப்பதைக் காட்டி இருக்கலாம்.... அப்புறம் அவர் நினைவு திரும்பவே இல்லை.

வாங் சாவொவுக்கு சந்தேகம் இன்னும் தீரவில்லை. மனதினுள் சொல்லிக் கொண்டான். “அவனைத் தீர்த்துக்கட்டிய ஆள் போன பக்கம் இது என்றும் காட்டி இருக்கலாம்....வாய் விட்டுக் கேட்டான். “உன் அப்பா காட்டிய பக்கம் போய்ப் பார்த்தாயா?

“இல்லை.... அந்தப் பாம்பைப் பார்ப்பதை விட முக்கியம் அப்பாவைக் காப்பாற்றுவது அல்லவா?

வாங் சாவொவுக்கு அந்தப் பதில் ஏனோ எரிச்சலைத் தந்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு கேட்டான். “உன் அப்பா இரண்டு நாள் முன்பு சம்யே மடாலயத்தின் கோங்காங் மண்டபத்தில் கழுத்து திருகி விழுந்தவனைப் பற்றி உங்களிடம் சொல்லி இருக்கிறாரா?

ஆமாம். அங்கு துஷ்ட சக்திகள் மறுபடியும் பலம் பெற்று வருவதைத் தான் அது காட்டுகிறது என்று சொன்னார்....

“அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று விவரித்தாரா?

“கோங்காங் மண்டபத்தில் இருந்த துஷ்ட சக்தி தேவதைகள் பற்றி அப்பா விளக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஆள் உள்ளே வந்தாராம். வந்தவர் திடீரென்று என்று மயங்கி விழப்போனதாகவும், அங்கிருந்த புத்த பிக்கு ஒருவர் கீழே விழுந்து விடாதபடி அவனைத்  தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் சொன்னார்.

புத்தபிக்கு அந்த ஆளைப் பிடித்துக் கொண்டது இப்போது நூறு சதம் உண்மை என்று வாங் சாவொவிற்கு ஊர்ஜிதம் ஆனது. “அந்த புத்த பிக்கு பற்றி உன் அப்பா ஏதாவது சொல்லி இருக்கிறாரா? யார் அவர், பார்க்க எப்படி இருப்பார் என்றெல்லாம்...

“இல்லை

“அந்த புத்த பிக்குவுடன் ஒரு சிறுவன் இருந்தான் என்கிற மாதிரி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?

“இல்லையே

அப்போது வாங் சாவொவின் அலைபேசி அடித்தது. சேடாங் வரும் வழியிலேயே தன் ஆள் ஒருவனுக்குப் போன் செய்து சம்யே மடாலயத்தில் குறித்துக் கொண்டிருந்த கண்சிமிட்டி மனிதனின் விலாசத்தைத் தந்து அவனைப் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தான். இப்போது அந்த ஆள் தான் போன் செய்கிறான். சற்று தள்ளி வந்து ஆர்வத்துடன் வாங் சாவொ பேசினான். “சொல். என்ன தகவல்?

“அந்த விலாசம் போலியானது. அந்தப் பெயரில் அந்த விலாசத்தில் யாருமில்லை.

வாங் சாவொ திகைத்தான். என்ன தான் நடக்கிறது? புத்த பிக்கு மற்ற விதங்களில் சந்தேகத்தைக் கிளப்பிய போதும் அந்த விலாசத்தை மடாலயக் குறிப்பேடுகளில் இருந்து எடுத்துத் தந்த போது யதார்த்தமாகத் தான் அதைச் செய்தார். வாங் சாவொவே அந்தக் குறிப்பேட்டில் இருந்த விலாசத்தைத் தன் கண்ணால் பார்த்திருந்தான். அதில் வரிசையாக மற்ற ஊழியர்களின் விலாசங்களும் கூட இருந்தன.

மைத்ரேயன், பாதுகாவலன் என்ற இரண்டு பேரைக் கண்டுபிடிக்கும் வேலையில் வேறென்னென்னவோ வந்து இப்படிப் புகுந்து கொண்டு குழப்பும் என்று அவன் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. தலை சுற்றுவது போல இருந்தது.

லீ க்யாங்குக்கு வாங் சாவொ போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னான். சொல்லும் போது இதை எல்லாம் கட்டுப்படுத்த தன்னால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் வாங் சாவொவுக்கு பலமாக இருந்தது.  கடைசியில் சொன்னான். “அந்தக் கண்சிமிட்டி மனிதன் அப்படி ஆன போது அங்கிருந்த பிக்கு மைத்ரேயனின் பாதுகாவலன் தானா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. சம்யே போன்ற பிரசித்தி பெற்ற புத்த மடாலயத்திற்கு எத்தனையோ புத்த பிக்குகள் தினசரி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக அந்த புத்த பிக்கு இருக்கவும் கூடும். அந்த நேரத்தில் மைத்ரேயன் வயதை ஒத்த ஒரு சிறுவன் அங்கு இருந்தான் என்பதை, புத்த பிக்கு இருந்தார் என்று சொன்னவர்கள் உட்பட, யாருமே சொல்லவில்லை...

லீ க்யாங்க் அமைதியாகச் சொன்னான். “அந்தப் பையனின் தனித்தன்மையே எந்த இடத்திலும் யாரும் கவனிக்காதபடி இருப்பது தான்... இத்தனை காலம் நம் கவனத்திற்கே அவன் வராமல் இருந்தவனாயிற்றே!

வாங் சாவொ ஆவலுடன் கேட்டான். “அப்படியானால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அங்கே மைத்ரேயன் இருந்திருக்கக்கூடுமா? அந்த கண்சிமிட்டி மனிதனைப் பிடித்த புத்தபிக்கு மைத்ரேயனின் பாதுகாவலனாக இருந்திருப்பானா?

லீ க்யாங் சொன்னான். “முழுத் தகவல்களும் கிடைக்காமல் எந்த முடிவுக்கும் வருவது சரியல்ல. ஆனால் நீ சொன்னபடி அந்தக் கண்சிமிட்டி மனிதன் காணாமல் போனதும், அந்த சுற்றுலா வழிகாட்டி பாம்பு கடித்து செத்ததும் தற்செயல் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. இதில் நிறைய மர்மம் இருக்கிறது. மைத்ரேயன் சம்பந்தப்பட்டதாகவும் இது இருக்குமானால் இன்னும் நம் உளவுத்துறை கவனத்துக்கு வராத முக்கியமான ரகசியங்கள் இருக்கின்றன என்று அர்த்தம். இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. எல்லா விதங்களிலும் விசாரி. ஆனால் மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் தான் இப்போதைய முதல் குறி. அதை மறந்து விடாதே

வாங் சாவொவிடம் பேசி முடித்த பின் லீ க்யாங் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். வாங் சாவொ சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் அந்தக் கண்சிமிட்டி மனிதன் பொய் விலாசம் கொடுத்து சம்யே மடாலயத்தில் தற்காலிக வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். காரணம் இல்லாமல் யாரும் திருட்டுத்தனமாக மடாலய வேலைக்குச் சேர மாட்டார்கள். அவன் கழுத்து திருகி பாதிக்கப்பட்ட விதமும், வாங் சாவொவிடம் கண்சிமிட்டி எதோ சொல்ல வந்ததும், பின் ஒரேயடியாகக் காணாமல் போன விதமும் சந்தேகப்பட வைக்கின்றன. அவனைப் பற்றி விசாரிக்கப் போன இடத்தில் தான் அவனைப் பிடித்துக் கொண்ட புத்த பிக்கு மைத்ரேயனின் பாதுகாவலனாக இருக்கலாமோ என்று சந்தேகம் வாங் சாவொவிற்கு வந்திருக்கிறது. அது பற்றி உறுதியாகச் சொல்ல முடிந்த ஒரே ஆள் அந்த சுற்றுலா வழிகாட்டி என்று எண்ணி அவனைத் தேடிய போது தான் அவன் பாம்பு கடிபட்டு செத்திருக்கிறான். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதான கோர்வையாகவே தெரிகிறது....

அந்த கண்சிமிட்டி மனிதனையும், மைத்ரேயனையும் தான் சம்பந்தப்படுத்தி யோசிக்க முடியவில்லை. என்ன சம்பந்தம் இருக்க முடியும்?... சரி எதற்கு அவன் கோங்காங் மண்டபத்தில் அந்த சமயத்தில் போனான். ஏதாவது வேலை இருந்து போயிருப்பானா, இல்லை ........ மைத்ரேயனும் அந்த பாதுகாவலனும் அங்கு வந்திருப்பதைப் பார்த்து விட்டுப் போயிருப்பானா? ஏதாவது சம்பந்தம் இருந்து அப்படி அவன் போயிருந்தால்....?

லீ க்யாங் தன் சிந்தனையிலேயே ஒரு கணம் சிலையானான். அவன் மனம் அங்கேயே அசையாமல் நின்றது.  சம்பந்தம் என்ன என்று ஊகிக்க முடியா விட்டாலும், சம்பந்தம் இருக்குமானால் நடந்திருந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் இடையே ஒரு பிசிறில்லாத தொடர்பு இருக்கவே செய்கிறது....

(தொடரும்)

என்.கணேசன் 

Monday, July 6, 2015

இருந்தும் இல்லாமலும் இறைவன்!


கீதை காட்டும் பாதை 36

"பொறாமை இல்லாதவனான உனக்கு இந்த இரகசிய வித்யையை உபதேசிக்கிறேன், இதை அறிந்து இந்த அசுபமான சம்சாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையின் ஒன்பதாம் அத்தியாயமான ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

பகவத்கீதையின் நடுநாயகமாக அமைந்து இருக்கும் இந்த ஒன்பதாம் அத்தியாய யோகத்தை ராஜ வித்யை என்றும், மிகப் புனிதமானது என்றும், அழிவற்றது என்றும், கடைப்பிடிப்பதற்கு மிகவும் எளிதானது என்றும் மேன்மைப்படுத்தியும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பொறாமை இல்லாத உனக்கு இந்த உபதேசம் என்று அவர் கூறுவதன் சூட்சுமம், பொறாமை இல்லாதவர்களே இந்த உபதேசம் பெறத் தகுதியானவர்கள் என்பதே என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

அடுத்தவர்களைப் பார்த்து வயிறெரியாமல் இருப்பதே பொறாமையற்ற நிலை என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் நம் நீதி நூல்கள் அதற்கு மேலும் சில தகுதிகளைச் சொல்கின்றன. உதாரணத்திற்கு பண்புள்ளவர்களின் நற்பண்புகளை மறுக்காமல் ஏற்பது, கொஞ்சம் குணம் இருந்தாலும் அதைக் கொண்டாடுவது, பிறரிடம் குற்றங்குறைகள் கண்டாலும் அவற்றைப் பேசி மகிழாமல் இருப்பது இவையே பொறாமை அற்ற நிலையின் லட்சணங்கள் என்று அத்ரிஸ்மிருதி என்ற சம்ஸ்கிருத நீதிநூல் கூறுகிறது.

மற்றவர்களின் நற்பண்புகளை ஒத்துக் கொள்ள மனம் வராமல் இருப்பது பொறாமையின் முழு வெளிப்பாடே. பொறாமை இல்லாதவன் மட்டுமே அடுத்தவனிடம் இருக்கும் நல்லதைக் காண மறுக்க மாட்டான். அத்ரிஸ்மிருதி இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறது. கொஞ்சம் நல்லதிருந்தாலும் அதைக் காண்பது மட்டுமல்லாமல் கொண்டாடவும் முடிய வேண்டும் என்கிறது. எந்த நல்லதும் லேசில் வந்து விடாது. அதைத் தன் இயல்பாக வைத்திருக்க ஒருவன் நிறையவே முயற்சித்திருக்க வேண்டும். அதை மனதில் இருத்திக் கொண்டால் கொஞ்சம் இருக்கும் நல்லதையும் மனதாரப் பாராட்ட முடியும். அது பொறாமை அற்ற நிலையின் சற்று மேல் நிலை. சரி நல்லது கொஞ்சம் இருந்தாலும் மோசமானதும் நிறையவே இருக்கிறது, அதையாவது சொல்லலாமா என்றால் அதைப் பற்றிப் பேசி மகிழ்கிற சில்லறைத்தனம் இல்லாமல் இருப்பதும் முக்கியம் என்கிறது அத்ரிஸ்மிருதி. இப்படிப்பட்ட விசாலமான, கண்ணியமான, உயர்ந்த மனதிருப்பது ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பெற உண்மையான தகுதி  என்றாகிறது.

எனவே மேலும் படிக்கப் போகும் முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொண்டு உண்மையாகவே பொறாமை அற்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ள உறுதி கொள்வோமாக!

அசுபமான சம்சாரம் என்று ஏன் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கின்றார் என்றால் இந்த சம்சார பந்தம் ஒன்றன் பின் ஒன்றாக துக்கங்களை உருவாக்கிய வண்ணமே இருக்கிறது. சம்சார சாகரம் என்று சொல்லப்படும் இந்தப் பிறவிப் பெருங்கடலில் ஓயாத துக்க அலைகள் உருவாகிக் கொண்டே இருந்து வருத்தப்படக் காரணங்கள் இருந்து கொண்டே இருப்பதால் இதை அசுபம் என்று சொல்வது சரியே அல்லவா?    

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்கிறார்:

இந்த தர்மத்தின் விஷயத்தில் சிரத்தை காட்டாதவர்கள் என்னை அடைய முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

சிரத்தை என்பதென்ன? ஆதி சங்கரர் சொல்கிறார். “புனித நூல்கள் என்ன சொல்கின்றன என்பதன் உண்மைப் பொருளைக் கூர்மதியால் உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் சிரத்தை”.  புனித நூல்களைப் படிப்பது சுலபம் தான். கஷ்டமான பகுதி அவை சொல்வது இன்னது தான் என்பதைச் சரியாக உணர்தல். அதுவும் கூர்மதி இருந்தால் சாத்தியமே. மிக மிகக் கஷ்டமான பகுதி உணர்ந்தபடி வாழ முடிதல். இந்தக் கடைசி விஷயத்தில் தான் அநேகமாக அத்தனை பேரும் கோட்டை விடுகிறோம்.  

ஸ்ரீகிருஷ்ணர் இந்த சிரத்தையை தான் காட்ட வேண்டும் என்கிறார். கீதை உட்பட எந்தப் புனித நூலையும் மனனம் செய்வதிலோ, அதை வியாக்கியானம் செய்வதிலோ, ஒருவன் தன் பாண்டித்தியத்தை வெளிப்படுத்தலாமே ஒழிய, பிறவித் துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அந்த சிரத்தை என்பது உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள முடிந்த ஒன்றல்ல. பல பிறவிகளின் பெருமுயற்சிக்குப் பின்னரே வரக்கூடிய ஒன்று. அது ஒன்றே ஒருவன் கடைத்தேறும் வழி.

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து தன்னை விவரிக்கிறார்.

உருவமற்ற பரமாதமாவான நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன். சகல ஜீவகோடிகளும் என்னுள்ளே அடங்கியுள்ளன. ஆனால் நான் அவற்றில் அடங்கி இருக்கவில்லை.

அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள் இருப்பவை அல்ல. என்னுடைய ஈஸ்வரத் தன்மை கொண்ட யோகசக்தியைப் பார். அனைத்து உயிரினங்களையும் தாங்குகிறவனும், உண்டாக்குகின்றவனாகவும் இருந்த போதிலும் என்னுடைய ஆத்மா உண்மையில் உயிரினங்களில் நிலைபெற்று இருப்பதில்லை.

எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எப்படி ஆகாயத்தில் இருக்கிறதோ அப்படியே எல்லா உயிரினங்களும் என்னிடம் உள்ளன என்பதை அறிந்து கொள்.

பரந்தாமனின் இந்த சுலோகங்கள் வெறுமனே படிக்கையில் ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருப்பதாய்த் தோன்றலாம். பல பேருண்மைகள் எப்போதும் அப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாய்த் தோன்றக்கூடியவையே. ஆனால் ஒரு கோணத்தில் இருந்து பார்க்கப்படும் போது உண்மையாய் தோன்றுகின்ற ஒன்று இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கப்படும் போது அதற்கு எதிர்மாறாகத் தோன்றலாம். அதனால் ஒவ்வொரு சுலோகமும் ஒவ்வொரு கோணத்தில் அணுகப்பட்டது என்று எடுத்துக் கொண்டு பார்க்கலாம்.

சகல ஜீவன்களும் என்னுள்ளே அடங்கி இருக்கின்றன ஆனால் நான் அவற்றில் அடங்கி இல்லை என்று சொல்வதற்கு உதாரணமாய் கடல் அலைகளுக்கும், கடலுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லலாம். கடலால் உருவாக்கப்படும் அலைகள் கடலில் அடங்கி இருக்கின்றன. ஆனால் அலைகளுக்குள்ளே தான் கடல் அடங்கி இருக்கிறது என்று சொல்ல முடியாதல்லவா? இறைவனும் அப்படித் தான். எத்தனையோ ஜீவகோடிகளை உருவாக்கினாலும் அந்த ஜீவகோடிகளுக்குள் இறைவனை அடக்கி விட முடியாது.

அடுத்ததாக அண்டசராசரங்கள் என்னுள்ளே இருப்பவை அல்ல என்கிற உவமானம். கனவு காணும் ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவன் எத்தனையோ கனவு காண்கிறான். அவனில்லை என்றால் கனவின் நிகழ்வுகளும் இல்லை, பொருள்களும் இல்லை. ஆனாலும் கூட கனவில் காணும் பொருள்களும், மனிதர்களும், இடங்களும் அவனுக்குள்ளே இருக்கின்றன என்று சொல்ல முடியாதல்லவா? அத்தனைக்கும் ஆதாரம் அவன் தான் என்றாலும் அவன் அதற்குள் இல்லை, அவையும் அவனுக்குள் இல்லை.

அடுத்த உவமானம் ஆகாயம்-காற்று. இங்கே ஆகாயம் என்பது வெற்றிடத்தைக் (Space) குறிக்கிறது. ஆகாயத்தைப் போலவே இறைவன் உருவமற்றவர், செயல்புரியாதவர், எதிலும் ஒட்டாதவர். வாயுவோ ஆகாயத்திலேயே உருவாகி பரவி எங்கும் சஞ்சரிக்கும் இயல்புடையது. ஆகாயத்திலேயே நிலைபெற்றிருப்பது. வாயுவுக்கு ஆதாரம் ஆகாயமே. ஆனாலும் ஆகாயம் வாயுவிற்கு அப்பாற்பட்டதே. எல்லா உயிரினங்களும் இறைவனின் சங்கல்பத்தாலேயே உருவாகி அவனிடமே நிலைத்து நின்ற போதும் இறைவன் ஒட்டாதவனும், அப்பாற்பட்டவனுமே ஆவான்.

மொத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கின்ற ஈஸ்வரத் தன்மை கொண்ட யோக சக்தி என்பதை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். எல்லாவற்றையும், உண்டாக்கி, எல்லாவற்றிலும் நிறைந்து, எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவராக இருந்தாலும், ஒன்றிலும் ஒட்டாமல் விலகி இருக்கும் இறைவனின் அற்புத சக்தியே ஈஸ்வர யோக சக்தி!

பாதை நீளும்....
என்.கணேசன்     



Thursday, July 2, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 52



திபெத்தில் இருந்து பழைய வேடத்தில் விமானம் வழியாகத் தப்பிப்பது முடியாத காரியம் என்று உறுதியான பிறகு அக்‌ஷய் மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தான். வேறு வேடங்களில் போகலாமா என்று முதலில் யோசித்தான். தனியனாக இருந்தால் கண்டிப்பாக அவன் சீன உளவுத்துறை அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவி விட்டுப் போக முடியும். இளைஞன் முதல் முதியவர் வரை எத்தனையோ வேடங்களை அவனால் தத்ரூபமாகப் போட முடியும். போலி பாஸ்போர்ட் கூடப் பெரிய பிரச்னை இல்லை. உண்மையான பிரச்னை மைத்ரேயன். மைத்ரேயனுக்கு என்ன வேடம் போட்டாலும் அவனைப் பெரியவனாக்கி விட முடியாது. சீன உளவுத் துறை ஆட்கள் அவன் வயதும் உயரமும் இருக்கும் சிறுவர்களை முழுமையாகப் பரிசோதிக்காமல் விடமாட்டார்கள். அந்தச் சிறுவர்கள் கூடச் செல்கின்றவர்களும் அந்தப் பரிசோதனையில் இருந்து தப்பிக்க முடியாது. அக்‌ஷய் திபெத்தில் புத்த பிக்கு உடையில் நுழைந்ததைக் கண்டுபிடித்தவர்கள் இனி உஷாராகவே இருப்பார்கள்.....

அவன் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்ததை புத்தபிக்கு கவலையுடன் பார்த்தார். இரவின் குளிர் அதிகரித்திருந்த போதிலும் அறையில் மூட்டி இருந்த தீக்கனல்களின் வெப்பம் ஓரளவு அதைத் தணித்திருந்தது. மைத்ரேயன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் லேசாகப் புரண்டு படுத்த போது உடனடியாக அக்‌ஷய் திரும்பி அவனை ஒரு முறை பார்த்து விட்டுத் தன் சிந்தனையைத் தொடர்ந்தான். பிக்குவுக்கு அவன் அந்த ஆழ்ந்த சிந்தனையிலும் கவனத்தின் ஒரு பகுதியை மைத்ரேயன் மீது வைத்திருப்பது ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அக்‌ஷயை விடத் தகுதி வாய்ந்த இன்னொரு பாதுகாவலர் மைத்ரேயனுக்குக் கிடைக்க முடியாது என்று நினைத்துக் கொண்டார்.    

அக்‌ஷய் ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து அவர் அருகே வந்து எதிரில் அமர்ந்தான். புத்த பிக்கு ஆவலோடு கேட்டார். “இனி என்ன செய்வது என்று முடிவு செய்து விட்டீர்களா அன்பரே

அக்‌ஷய் தலையசைத்தான். “இந்த வேடத்தில் இனி தொடர முடியாது. நாங்கள் இருவரும் இனி வேறு வேடத்தில் தான் வெளியேற வேண்டும். அதற்கு உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படும் பிக்குவே

“என் உயிரைத் தரச் சொன்னாலும் சிறிதும் யோசிக்க மாட்டேன் அன்பரே. என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். ஆனால் நீங்கள் இந்த சூழ்நிலையில் வெளியேறிப் போகத்தான் வேண்டுமா? அவர்கள் இங்கே வந்து தேடி நீங்கள் இல்லை என்று போய் விட்டார்கள். அதனால் இங்கே திரும்ப வந்து தேட மாட்டார்கள். அதனால் இங்கேயே சில நாட்கள் தங்குவது உங்கள் இருவருக்கும் பாதுகாப்பல்லவா?

அக்‌ஷய் பொறுமையாகச் சொன்னான். “திபெத்தில் இருந்து வெளியேறும் வரை எங்கள் இருவருக்கும் ஆபத்து இருந்து கொண்டே தான் இருக்கும். அது மட்டுமல்ல நாளுக்கு நாள் ஆபத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் எங்களை மற்ற இடங்களில் தேடி நாங்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மீண்டும் இங்கே கண்டிப்பாக வருவார்கள். அதனால் நாங்கள் நாளை இரவு போயே ஆக வேண்டும்.....

புத்தபிக்குவின் முகம் வாடியது. “சரி... நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அன்பரே. எதைக் கேட்பதானாலும் தயக்கம் வேண்டாம்....

அக்‌ஷய் சொன்னான்.



வாங் சாவொ  அதே நேரத்தில் அந்த  கண்சிமிட்டி மனிதனைத் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தான். அந்த மனிதன் சொல்ல வந்ததற்கும் மைத்ரேயனுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொண்டால் பின் அவனை வாங் சாவொ ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். அது வரை அவன் முக்கியமானவன் தான்.

வாங் சாவொ சம்யே மடாலயத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற எல்லா மருத்துவ மனைகளுக்கும் போன் செய்து கழுத்து திருகிய மனிதன் ஒருவன் அனுமதிக்கப்பட்டுள்ளானா என்று கேட்டுக் கொண்டிருந்தான். எல்லா மருத்துவ மனைகளில் இருந்தும் ஒரே பதில் வந்தது. ‘இல்லை’.  கடைசி மருத்துவமனையில் இருந்தும் அந்தப் பதில் வந்தது அவனைத் திகைக்க வைத்தது. ஆம்புலன்ஸில் பின் அவனை எங்கே கொண்டு போனார்கள்?

திபெத்தில் சில லாமாக்கள் மருத்துவம் பார்ப்பதில் வல்லவர்கள். நவீன மருத்துவம் முடியாத பல நோய்களை அவர்கள் குணப்படுத்துகிறார்கள் என்று சிலர் நம்புவதுண்டு. அது போல இவனையும் யாராவது மருத்துவ லாமாக்களிடம் கொண்டு போயிருக்கக்கூடுமோ என்று சந்தேகப்பட்டவன் அந்த லாமாக்கள் இருப்பிடத்திற்கு ஆட்கள் அனுப்பி விசாரித்தான். அங்கேயும் இல்லை என்ற பதில் வரவே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டு அது வலுக்க ஆரம்பித்தது. உடனடியாக அவன் மறுநாள் அதிகாலையில் மறுபடி சம்யே மடாலயம் புறப்பட்டான்.

பார்வையாளர்கள் நேரம் துவங்கும் முன்பே போய்ச் சேர்ந்த அவனை ஓடோடி சென்று புத்தபிக்கு வரவேற்று அலுவலக அறையில் உட்கார வைத்தார். அவன் தனதறைக்கு வந்து விடுவானோ என்ற பயம் அவரை ஆட்கொண்டிருந்தது. அவர் அறையில் இன்னமும் மைத்ரேயரும் அக்‌ஷயும் இருக்கிறார்கள்....

அலுவல் அறையில் அமர்ந்த வாங் சாவொ தன் வழக்கமான விசாரணைப் பார்வையை அவர் மீது படர விட்டு சிறிது நேரம் கேள்விகள் எதுவும் கேட்காமல் இருந்தான். அவருக்குத் திகிலாக இருந்தாலும் கஷ்டப்பட்டு இயல்பான முகபாவனையைக் காட்டினார்.

திடீரென்று வாங் சாவொ தடாலடியாக மிகவும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவரிடம் கேட்டான். நீங்கள் கண்சிமிட்டி பாஷையைக் கற்றுக் கொண்டது எப்போது?

புத்தபிக்குக்கு பகீரென்றது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு சொன்னார். “அப்படி ஒரு பாஷையை நான் அறியேன் ஐயா

“பின் எப்படி நேற்று ஒருவன் என்னைப் பார்த்து கண் சிமிட்டி ஏதோ சொல்ல முற்பட்டதை நீங்கள் புரிந்து கொண்டது போல் பேசினீர்கள்?

அதைப் புரிந்து கொள்வதில் கஷ்டம் இல்லை ஐயா

வாங் சாவொ கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான். “எப்படிச் சொல்கிறீர்கள்?

நீங்கள் வருவதற்கு முன் என்னையும் மற்றவர்களையும் பார்த்து அவன் அப்படியே தான் கண்சிமிட்டினான். அவன் படும் கஷ்டத்தைப் பார்த்து அவன் சொல்ல வந்தது அதுவாகத் தான் இருக்கும் என்று புரிந்து கொண்டேன் ஐயா

“பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து அப்படிச் சொல்ல அவன் பைத்தியமா?
“எனக்கு அந்த சந்தேகமும் இருக்கிறது ஐயா. கழுத்து திருகியதால் ஏதோ நரம்பு பிசகி பைத்தியமும் பிடித்திருக்கலாம்... இல்லா விட்டால் அவன் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பார்த்து அப்படிக் கண்சிமிட்டி இருக்க மாட்டான்..... புத்தபிக்குவுக்கு பேச்சு சரளமாக வந்தது. எல்லாம் மைத்ரேயரின் அருள்.

வாங் சாவொ சிறிது நேரம் அவரையே சந்தேகத்தோடு பார்த்தான்.  அப்படியும் இருக்குமோ? பின் திடீரென்று கேட்டான். “அவனை எந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறீர்கள்?

“தெரியவில்லை ஐயாபிக்கு உண்மையாகவே சொன்னார்.

“தெரியவில்லையா?வாங் சாவொ குரல் கடுத்தது.

“அவன் உறவினர் இருவர் வந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னார்கள். ஆனால் எந்த மருத்துவமனைக்கு என்று அவர்கள் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை”  

“அவன் உறவினர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?

“இல்லை ஐயா. அவர்களை அப்போது தான் நானும் பார்க்கிறேன்....

அவனை யாரும் எந்த மருத்துவமனையிலும் சேர்க்கவில்லை. அவன் மாயமாய் மறைந்து விட்டான்.....என்று வாங் சாவொ அவரைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

புத்தபிக்கு திகைத்துப் போனார். மகிழ்ச்சி பிறகு தான் ரகசியமாய் மனதில் மலர்ந்தது.  புத்தபிக்கு சந்தேகத்துடன் கேட்டார். “பின் எங்கே கூட்டிக் கொண்டு போனார்கள்?

வாங் சாவொ கடுமையாகச் சொன்னான். “இங்கே நான் மட்டும் தான் கேள்வி கேட்பேன். என்னிடமே கேள்விகள் கேட்பது எனக்குப் பிடிக்காது

புத்தபிக்கு தலையசைத்தார். வாங் சாவொ அவரிடம் கடுமை மாறாத தொனியில் கேட்டான். “தற்காலிகமாகச் சேர்ந்தவர்களானாலும் அவர்களின் விலாசம் வாங்கிக் கொள்ளும் வழக்கம் இந்த மடாலயத்தில் இருக்கிறதா இல்லையா?

“இருக்கிறது ஐயாஎன்ற புத்தபிக்கு பவ்யமாக அதைத் தேடி எடுத்துக் காண்பித்தார். அதைக் குறித்துக் கொண்ட வாங் சாவொ அவன் அப்படி கழுத்து திருகி விழுந்த போது பக்கத்தில் யாரெல்லாம் இருந்தார்கள்

“பல சுற்றுலாப் பயணிகள் இருந்தார்கள் ஐயா..... எங்கள் மடாலயத்து ஆட்கள் யாரும் பக்கத்தில் இருக்கவில்லை....

“எவ்வளவு வசதியாகப் போய் விட்டது...என்று கடுமையும் ஏளனமுமாக வாங் சாவொ சொன்னதற்கு புத்த பிக்கு ஒன்றுமே சொல்லவில்லை.

“எனக்கு உங்கள் மடாலயத்து ஆள்களை விசாரிக்க வேண்டும்என்றான் வாங் சாவொ.



வசரமாய் பேச வேண்டும்என்ற குறுந்தகவல் மாராவின் அலைபேசியில் வந்த போது அவன் பல கோடி டாலர்கள் மதிப்புள்ள பன்னாட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் இருந்தான். குறுந்தகவலைப் பார்த்தவுடன் உடன் இருந்தவர்களை ஐந்து நிமிடங்கள் பொறுக்கச் சொல்லி விட்டுத் தன் தனியறைக்குச் சென்று, தகவல் அனுப்பியவனிடம் பேசினான். “என்ன விஷயம்

“வாங் சாவொ நம் ஆளை இங்கேயுள்ள மருத்துவமனைகளில் தேடிக் கிடைக்காததால் இப்போது சம்யே மடாலயம் வந்திருக்கிறான்.  இங்கு எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருக்கிறான்..... சம்பவம் நடந்த போது யார் இருந்தார்கள், என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான்.......

எது நடந்து விடுமோ என்று மாரா பயந்தானோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. அவன் ஆளின் ஒரு முட்டாள்தனம் வேறு பல பிரச்னைகளை உருவாக்க ஆரம்பித்து விட்டது. மாரா அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.


வாங் சாவொ அங்கிருந்தவர்களை விசாரித்து அந்த கண்சிமிட்டி மனிதனுக்கு கோங்காங் மண்டபத்தில் என்ன ஆயிற்று என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான். அவர்களில் யாருமே அந்த நேரத்தில் கோங்காங் மண்டபத்தில் இருந்திருக்கவில்லை என்றாலும் என்ன நடந்தது என்பதைக் கேள்விப்பட்டிருப்பார்கள் அல்லவா?.  அதை அனைவரிடமும் கேட்டான். அந்த மனிதன் திடீரென்று கழுத்து திருகி விழுந்தான் என்றும் யாரோ பிடித்துக் கொண்டதாகப் பார்த்தவர்கள் சொன்னதாகவும் பலர் சொன்னார்கள். அவனைப் பிடித்துக் கொண்ட ஆள் ஒரு புத்த பிக்கு என்று கேள்விப்பட்டதாகச் சிலர் சொன்னார்கள். வாங் சாவொ மூளையில் ஒரு பொறி தட்டியது.

அக்‌ஷயின் புத்தபிக்கு வேடப் புகைப்படத்தைக் காட்டி, பிடித்துக் கொண்ட புத்த பிக்கு இந்த ஆளாக இருக்குமா என்று கேட்க ஆரம்பித்தான். சிலர் அந்த புத்த பிக்குவை இந்த மடாலயத்தில் அன்று பார்த்ததை நினைவு கூர்ந்தார்கள். ஆனால் கோங்காங் மண்டபத்தில் அந்த சமயத்தில் அங்கே அந்த பிக்கு இருந்தாரா, அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டது அந்த பிக்கு தானா என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அந்த நேரத்தில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளுடன் வழிகாட்டி யாராவது இருந்தானா என்று வாங் சாவொ கேட்டான். சுற்றுலாப்பயணிகளைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிப்பது முடியாத காரியம். ஆனால் சுற்றுலா வழிகாட்டி அங்கேயே இருக்கக் கூடியவன். அவனை விசாரித்தால் உண்மை விளங்கும்.

அந்த நேரத்தில் சுற்றுலா வழிகாட்டியும் இருந்ததாகப் பதில் வந்தது. ஆனால் எந்த சுற்றுலா வழிகாட்டி என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

“இங்கு மொத்தம் எத்தனை சுற்றுலா வழிகாட்டி இருக்கிறார்கள்.?என்று வாங் சாவொ கேட்டான்.

“நான்கு பேர்என்ற பதில் வந்தது. அந்த நான்கு பேரையும் உடனடியாக
 அழைத்து வர வாங் சாவொ கட்டளை இட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்

Monday, June 29, 2015

கீதையையும் பைபிளையும் இணைத்த யோகி!


மகாசக்தி மனிதர்கள்-29

பிரியாநாத் கராரின் வாழ்க்கை மனைவியின் மரணத்திற்குப் பின்னால் மாறிப் போனது. ஆன்மிகத்திலும், வேதாந்த தத்துவங்களிலும் உண்மையாகவே நாட்டம் இருந்த அவருக்கு ஒரு குருவின் வழிகாட்டல் அந்தக் கணத்தில் அதிகமாகத் தேவைப்பட்டது. .அந்த சமயத்தில் கோஸ்வாமி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வாரணாசியில் ஒரு யோகியிடம் ஏதோ உபதேசம் பெற்று திரும்பி வந்தார். அவர் தினமும் தன் அறையின் உள்ளே கதவை மூடிக் கொண்டு ஒரு ஆன்மிகப் பயிற்சியைச் செய்து வந்தார். பிரியாநாத் கரார் அவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்த போது அவர் ‘வாரணாசியில் இருக்கும் ஒரு யோகியிடம் கற்று வந்த பயிற்சியைத் தினம் செய்து வருகிறேன்என்று மட்டும் பதில் அளித்தார். ஆனால் யார் அந்த யோகி என்பதையோ, என்ன பயிற்சி என்பதையோ சொல்ல அந்த கோஸ்வாமி மறுத்து விட்டார். அக்காலத்தில் சில தீட்சை பெற்றவர்கள் தங்கள் குருவைப் பற்றியோ, அவரிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் பற்றியோ மிக நெருங்கியவர்களிடம் கூடச் சொல்ல மாட்டார்கள். அப்படித் தெரிவித்தால் அந்த வித்தைகளின் பலிதம் குறைந்து விடும் என்கிற அச்சம் தான் அதற்குக் காரணம்.

திடீரென பிரியாநாத் கராரின் மனம் அந்த வாரணாசியில் இருக்கும் யோகியைக் காணத் துடித்தது.  அதற்கான சரியான காரணம் அவருக்கே விளங்கவில்லை. பெரும்பாலான ஆன்மிக முடிவுகளுக்கு அறிவு ரீதியான பதில் கிடைப்பதில்லை அல்லவா? பிரியாநாத் கரார், பெயரோ விலாசமோ கூடத் தெரியாத தன் குருவைத் தேடி வாரணாசிக்குக் கிளம்பினார். ரயிலில் வாரணாசியை வந்தடைந்த அவருக்கு அங்கு ஒரு குருவைத் தேடுவது என்பது திருப்பதியில் மொட்டையைத் தேடுவது போலத் தான். பல விதமான துறவிகள், குருக்கள் வாரணாசியில் ஆயிரக் கணக்கில் இருந்தார்கள்.

தன் மனதில் இருந்த குருவைப் பலரிடமும் விசாரித்து கிடைத்த பதில்களில் இருந்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு கடைசியில் ஒரு யோகியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டில் ஒரு அறையில் அந்த யோகி யோகாசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் சில சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கே பேரமைதி நிலவியது. அந்த அமைதியில் அவர்கள் ஆழ்ந்து போயிருந்தார்கள். அந்தக் காட்சி பிரியாநாத் கராரின் அந்தராத்மாவை அசைத்தது. இந்த அமைதியைத் தேடி அல்லவா அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்! அவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் அந்த சீடர்கள் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். அந்த யோகி மட்டும் தனித்திருந்தார். பிரியாநாத் கரார் எழுந்து அவர் காலடியில் வணங்கினார். “பல ஜென்மங்களாக நீங்களே எனக்கு குருவாய் இருந்திருக்கிறீர்கள் என்று உணர்கிறேன்என்ற வார்த்தைகள் அவர் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தன.

அந்த யோகி பெருங்கருணையுடன் புன்னகைத்தார். கங்கையில் குளித்து விட்டு வா சீடனே. உனக்கு தீட்சை அளிக்கிறேன்என்று கனிவுடன் சொன்னார். பிரியாநாத் கரார் அவர் சொன்னபடியே கங்கையில் குளித்து விட்டு வந்தார். அவருக்கு கிரியா யோகா பயிற்சிக்கான தீட்சை அந்த யோகியால் தரப்பட்டது. அந்த யோகி வேறு யாருமல்ல, மகா அவதார் பாபாஜியின் நேரடிச் சீடரான ஷ்யாம்சரண் லாஹிரி மஹாசாயா தான். (இவருக்காக தான் தங்கத்தால் ஆன மாளிகையை இமயமலையில் மகா அவதார் பாபாஜி உருவாக்கினார் என்பதை மகாசக்தி மனிதர்கள் 13, 14 அத்தியாயங்களில் படித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்).

1884 ஆம் ஆண்டு அவரது சீடரான பிரியாநாத் கரார் தான் பிற்காலத்தில் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி என்ற பெயரில் பிரபல யோகியானவர்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உடனடியாக துறவியாகி விடவில்லை. கிரியா யோகா தீட்சை துறவுக்கானதும் அல்ல. சில ஆன்மிகப் பயிற்சிகளை குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து செய்ய குருவிடம் இருந்து கற்றுக் கொண்டு திரும்பவும் வீட்டுக்கே வந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி மேலோட்டமாக அந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறவராக இருக்கவில்லை. எதிலும் ஆழம் வரை செல்லும் அவர் தூய்மையும் உறுதியும் கொண்ட மனதுடன் யோக மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டார். அவ்வப்போது வாரணாசிக்குப் போய் குருவிடம் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டும் தன்னை மெருகு படுத்திக் கொண்டும் இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோக மார்க்கத்தில் விரைவாகவே நல்ல முன்னேற்றம் அடைய ஆரம்பித்தார். அது பலரை அவரைப் பின்பற்ற வைத்தது.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருக்கும் மிட்னாப்பூரில் அவருக்கு நிறைய சீடர்கள் உருவாகி இருந்தார்கள். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அப்போதும் கூடத் தன் ஆன்மிகத் தாகத்தைத் தீர்க்கும்படியாக எங்காவது மகான்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அங்கு போய் பலனடைந்து வரும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்தச் சீடர்களும் போவார்கள். அப்படிப் போகும் போது ஒரு நதியை அவர்கள் படகில் அடிக்கடி கடக்க வேண்டி இருக்கும்.

அப்படி ஒரு முறை சென்று படகில் அவர்கள் மிட்னாப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது படகில் திடீரென்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தியான சமாதியில் லயிக்க ஆரம்பித்தார். திடீரென்று படகை பனியும் சூழ்ந்து கொள்ள படகை ஓட்டி வந்த அவருடைய சீடர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இந்த உலகில் இருப்பதாகத் தெரியவில்லை. படகை பனிமூட்டம் சூழ்ந்து கொண்டதால் போகிற வழியும் தெரியவில்லை.

ஒரு சீடர் பீதியுடன் “மிட்னாப்பூர் எங்கிருக்கிறது?என்று கேட்டார்.
தியான சமாதி நிலையிலேயே இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எதோ ஒரு உலகில் இருந்து பதில் அளிப்பவர் போலச் சொன்னார். “மிட்னாப்பூர்... இந்த உலகில் இல்லை....

சிறிது நேரத்தில் அவர் பழைய நிலைக்கு வந்தார். பனியும் விலகியது. ஆனால் அந்த சமாதி நிலையில் அவர் எந்த உலகத்தில் இருந்தார், என்ன உணர்ந்தார் என்பதை தன் சீடர்களிடம் விவரிக்கவில்லை. சிறு வயதில் இருந்தே அது போன்ற சக்திகளை பிரபலப்படுத்திக் கொள்கிறவர்கள் மீது அவருக்கு சந்தேகம் அதிகம் இருந்ததாலோ என்னவோ தன் சக்திகளைப் பற்றியும் அவர் அதிகம் யாரிடமும் விவரிப்பதில் நாட்டம் கொள்ளவில்லை.

மாறாக அவருடைய உபதேசம் எல்லாம் வேதாந்த தத்துவங்களை எளிமையாக்கி மக்களிடம் பரப்பும் விதமாகவே இருந்தது. அவருடைய குருவான லாஹிரி மஹாசாயா அவரிடம் பகவத் கீதைக்கு எளிமையாகத் தெளிவுரை எழுதச் சொல்ல, அவர் அப்படியே செய்தார். 

1894 ஆம் ஆண்டு அலகாபாத்தில் கும்பமேளாவுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த யாரோ அவரை “சுவாமிஜி, சுவாமிஜிஎன்று அழைப்பது கேட்டது. அப்போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி துறவியாகி இருக்கவில்லை என்பதால் வியப்புடன் திரும்பிப் பார்த்தார். தெய்வீகக் களையுடன் நின்று கொண்டிருந்த அந்த சாதுவுக்கு லாஹிரி மஹாசாயாவின் சாயல் இருந்தது.  நான் துறவியல்லஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தெரிவித்தார்.

அதற்கு அந்த சாது “இன்றில்லா விட்டாலும் நாளை ஆவீர்கள். அதனால் தான் அப்படி அழைத்தேன்என்று சொன்னார். உற்றுப் பார்த்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்கு அந்த சாது வேறு யாருமல்ல மகா அவதார் பாபாஜி தான் என்பது புலனாகியது. பரவசத்தில் என்ன செய்வதென்று அறியாமல் திக்குமுக்காடிப் போன ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பேரானந்தத்துடன் வணங்கினார்.

அப்போது பாபாஜி அவரிடம் பைபிளையும் கீதையையும் இணைத்து இந்த மதங்களில் உள்ள ஒருமைத் தன்மையை உலகத்திற்குப் புரியும்படி ஒரு நூலாக எழுதச் சொன்னார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கிறிஸ்துவ மிஷினரி கல்லூரியில் படிக்கையில் பைபிளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது நினைவிருக்கலாம். அடிப்படையில் எல்லா மதங்களுக்கும் மத்தியில் இருந்த ஒருமைத் தன்மையை விளக்கும் பொறுப்பை பாபாஜி அவருக்கு அளித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் இருப்பிடத்திற்கு வந்தருளும்படி பாபாஜியை வேண்டிக் கொண்டார். பாபாஜி மறுத்தார். தன் குருவின் குருவுக்கு எதுவுமே தராமல் விடைபெற மனதில்லாத ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அவரை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து பல பொருள்களை எடுத்துக் கொண்டு திரும்பி அதே இடத்திற்கு வந்த போது பாபாஜி அங்கிருக்கவில்லை. அங்கு விசாரித்த போது யாருமே அவர் சொல்கிற அடையாளங்கள் இருக்கிற சாதுவைத் தாங்கள் பார்க்கவே இல்லை என்றார்கள். பாபாஜி இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும் தனக்கு மட்டுமே காட்சி அளித்திருந்த பாபாஜிக்கு அவர் சொன்ன நூலை எழுதி வெளியிடுவதே உண்மையான சமர்ப்பணம் என்பதை பாபாஜி மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாக ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி உணர்ந்தார்.

(தொடரும்)   

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி: 04-03-2015