என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 17, 2013

பரம(ன்) ரகசியம் – 27




குருஜி மீண்டும் பேச முடிந்த போது அவர் குரல் மிகவும் தாழ்ந்திருந்தது. “அந்த சிடியை ஆரம்பத்தில் இருந்து போடுஎன்றார். கணபதி-சிவலிங்கம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் தவற விடக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

அந்த மனிதன் அவர் சொன்னபடியே செய்தான். குருஜி திரையில் ஓடிய காட்சிகளைக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்....

ணபதி இந்த சில நாட்களில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு நண்பனாகி விட்டிருந்தான். அதைப் பார்த்த முதல் கணத்தில் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பையும், பின் ஒரு ஈர்ப்பையும் சிவலிங்கத்திடம் உணர்ந்திருந்த அவன் பின் அதை நேசிக்க ஆரம்பித்திருந்தான். மிகவும் சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று குருஜி சொல்லி  இருந்ததால் ஏற்பட்டிருந்த ஒரு பயம் கலந்த பக்தி இங்கு வந்த பின் பயம் போய் அன்பு கலந்த பக்தியாக மாறி விட்டிருந்தது. அதனை நெருங்கும் போதெல்லாம், அதன் அருகில் இருக்கும் போதெல்லாம் ஒரு பேரமைதியையும், பேரன்பையும் அவன் உணர ஆரம்பித்தான்.

அந்த வேதபாடசாலையில் அவனிடம் அதிகம் யாரும் பேசவில்லை. சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் ஒரு 18 ஏக்கரில் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்தது மட்டுமல்ல வேதபாடசாலையில் படிக்கும் மாணவர்களும் சொல்லித் தரும் ஆசிரியர்களும் அந்தப்பகுதிக்கு வரத் தடை செய்யப் பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு ஏழெட்டு பேர் மட்டுமே வர அனுமதி இருந்தது. அவர்களும் கணபதியிடம் அதிகம் பேசவில்லை. வேளா வேளைக்கு அவனுக்கு நல்ல சுவையான உணவு கொண்டு வந்து தந்தனர். அவனுக்கு பூஜை சாமான்கள் ஏதாவது வேண்டி இருந்தால் வாங்கிக் கொண்டு வந்து தந்தனர். வேறெது தேவைப்பட்டாலும் கேட்கச் சொன்னார்கள். அவனுக்கு எதுவும் தேவைப்படவில்லை.

அந்த வேதபாடசாலையில் சுற்றிலும் நிறைய பூச்செடிகளும், துளசிச் செடிகளும், வில்வமரங்களும் இருந்தன. தினமும் அதிகாலையிலும் மாலையிலும் சென்று பூஜைக்காகத் தானே சென்று பூக்கள், துளசி, வில்வ இலைகள் எல்லாம் கணபதி பறித்துக் கொண்டு வருவான். அப்போது பல மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்படுவார்கள். அடிக்கடி பார்த்துப் பரிச்சயமானதால் அவர்கள் அவனைப் பார்த்து புன்னகைப்பதுண்டு. அதோடு சரி. அவர்களாக அவனிடம் பேச முற்படவில்லை. அவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள் என்றும் தனக்கு அதிகம் எதுவும் தெரியாது என்றும் அவனுக்கு அபிப்பிராயம் இருந்ததாலும் யாரிடமும் அதிகம் பேச வேண்டாம் என்று குருஜி முன்பே சொல்லி இருந்ததாலும் அவனுக்கும் அவர்களிடம் பேசத் தயக்கமாக இருந்தது. எனவே அவன் தனியனாகவே அங்கும் இருந்தான்.

சில சமயங்களில் பகலில் மரங்களின் நிழலில் அமர்ந்து கொண்டு வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களின் வேத கோஷத்தைக் கேட்கும் போது அவனுக்குப் புல்லரிக்கும். அர்த்தங்கள் புரியா விட்டாலும் அந்த இசையோடு கூடிய ஸ்பஷ்டமான உச்சரிப்புகள் அவனை ஏதோ ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வது போல் இருக்கும். மனம் மிக லேசாக அமைதியாக அமர்ந்திருந்து விட்டு வருவான். சிவலிங்கத்தை வணங்கி விட்டு அதன் முன் அதே அமைதியுடன் சிறிது நேரம் உட்கார்வான்.

அமைதி நெடு நேரம் நீடிக்காது. அவனுக்குப் பேச வேண்டும் என்று தோன்றி விடும். அவன் பூஜை செய்து கொண்டிருந்த பிள்ளையாரிடமும் கூட அவன் பூஜை செய்ததை விடப் பேசிய நேரம் அதிகம். இங்கும் அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. வெளியாட்கள் யாருமே அவனுக்குப் பேசக் கிடைக்காததால் அவன் போய்ச் சேர்ந்த இரண்டாவது நாளே பேச ஆரம்பித்து விட்டான். மனம் விட்டு அவன் பேசிய போது பிள்ளையாரைப் போலவே இந்த சிவலிங்கமும் கவனமாகக் கேட்பது போல உணர்ந்தான். ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றைப் பேசினான்....

“பிள்ளையாரோட அப்பனே நான் வாங்கற ஐநூறு ரூபாய்க்கு பொருத்தமா பூஜை செய்யறேனான்னு தெரியலை.. ஏதாவது குறையிருந்தால் மன்னிச்சிக்கோ. இங்கே படிக்கற பசங்க எல்லாம் எவ்வளவு அழகாய் வேதம் படிக்கிறாங்க. கேட்கறதுக்கே இனிமையாய் இருக்கு... அவங்கள்ள ஒருத்தர் வந்து உனக்குப் பூஜை செஞ்சா கூட என்னை விட நல்லாவே செய்வாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை... ஏதோ குருஜி என் மேல இரக்கப்பட்டு இந்த வேலையை எனக்குத் தந்திருக்கார்னு நினைக்கறேன். உன் பிள்ளையோட நண்பன் நான்... நானும் உன் பிள்ளை மாதிரி தான் பொறுத்துக்கோ....

அந்த சுப்புணி உன் பிள்ளைக்கு எப்படி பூஜை செய்யறானோ தெரியலை. அவன் என்னை விட மோசம். ஏனோ தானோன்னு செய்வான். வாங்கற எழுபது ரூபாய்ல இருக்கற அக்கறை பூஜைல இல்லை.. இங்கே வர்றதுக்கு முந்தின நாள் அவன் கிட்ட அரை மணி நேரமாவது பிள்ளையாருக்கு ஒழுங்கா பூஜை செய்டா, நான் வர்ற வரைக்கும் நல்லா பார்த்துக்கோடான்னு சொல்லி இருப்பேன். எகத்தாளமா என்னைப் பார்த்துட்டு சிரிக்கிறான் அவன். என்ன சொல்றது? பிறகு சொல்றான். “உலகத்துலயே கடவுளைப் பத்தியே கவலைப்படற ஒரே ஆளு நீ தான்”. எப்படி இருக்கு?.....

கடன் நிறைய இருக்கு கடவுளே. அதைத் தீர்க்க வேண்டி இருக்கு. கல்யாணமாகாத அக்கா ரெண்டு பேர் இருக்காங்க.... அம்மாவுக்கு சாகறதுக்குள்ளே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து தந்துடணும்னு ஆசை... கவலைப்படாதே அம்மா நான் இருக்கேன்னு தைரியம் சொல்லிப் பார்த்துட்டேன். அம்மா “நீயே குழந்தை மாதிரி.. உன்னைப் பார்த்துக்கறதுக்கே வேறொரு ஆள் வேணும்னு சொல்றா. என்னைப் பார்த்துக்க பிள்ளையார் இருக்கார்னு சொன்னேன். கேட்டுட்டு ஏனோ கண்கலங்கறா. எனக்காகவும் அம்மா நிறைய கவலைப்படறா. இங்கே வரக் கிளம்பினப்ப கூட அவளுக்குப் பயம் தான். “ஏண்டா பூஜை செய்ய ஐநூறு ரூபாய் தர்றதுங்கறது நிஜம் தானா... எதுவும் ஏமாத்திட மாட்டாங்களே...ன்னு கேட்கறா. நான் “ஏமாத்த எங்கிட்டே என்னம்மா இருக்குன்னு கேட்டேன். “எங்கயாவது ஆஸ்பத்திரில அட்மிட் செஞ்சுட்டு கிட்னி ஏதாவது எடுத்துடப் போறாங்கன்னு சொல்லி பயப்படறா...

சொல்லி விட்டு கலகலவென சிரித்தான் கணபதி. கண்களில் நீர் தளும்பும் வரை சிரித்து விட்டு சொன்னான். “ஏழைகளுக்கு தான் பயப்படவும், கவலைப்படவும் எத்தனை விஷயங்க இருக்கு கடவுளே...! அம்மா குருஜி சாதாரண ஆள் இல்லை.... அவர் நினைச்சா ஒருநாள்ல பல கோடி ரூபாய் அவர் காலடில கொட்ட எத்தனையோ பேர் இருக்காங்க.... இந்தக் கணபதி கிட்ட கிட்னி திருடற நிலைமை அவருக்கு இல்லை.... கடவுள் கண்ணைத் திறந்துட்டான்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு ஏம்மா பயப்படறேன்னு சொன்னேன். அப்படியும் அவளுக்கு பயம் முழுசா போகலை. “உன்னை வெள்ளந்தியாவே வளர்த்துட்டேண்டா. உனக்கு உலகம் இன்னும் சரியா தெரியலைன்னு சொல்லி வருத்தப்பட்டா. நான் சொன்னேன். “எனக்கு உலகம் சரியா தெரியாம இருக்கலாம். ஆனா கடவுளை நல்லா தெரியும்மா. அவர் கை விட மாட்டாரும்மான்னு சொல்லி சமாதானப்படுத்தினேன். சரி தானே கடவுளே...

தினமும் கடவுளிடம் பேச அவனுக்கு ஏதாவது விஷயம் இருந்தது. பூஜை செய்யும் நேரங்களில் சிரத்தையுடனும் பக்தியுடனும் பூஜை செய்தான். மற்ற நேரங்களில் ஸ்தோத்திரம் படித்தான். பேசினான். வெளியே அமர்ந்து வேத கோஷங்கள் கேட்டான். அங்கு வந்து போன ஆட்கள் எல்லாம் மிகவும் எட்ட நின்றே அந்த சிவலிங்கத்தைப் பயத்துடன் பார்ப்பதைக் கவனிக்க நேர்ந்த போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒருவனிடம் அவன் வாய் விட்டு சொல்லியே விட்டான். “பயப்படாதீங்க. சாமி கிட்ட போய் யாராவது பயப்படுவாங்களா? உங்க அம்மா அப்பா மாதிரி தான் சாமியும்

அந்த ஆள் கணபதியை ஒரு மாதிரி பார்த்தான். அதற்கப்புறம் அவன் வரவே இல்லை. அதன் பின் மற்றவர்களிடம் அவன் எதுவும் சொல்லப் போகவில்லை.

ஒரு நாள் மாலையில் பூக்கள் பறித்து விட்டு ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் கணபதி உட்கார்ந்தான். வெகு தூரத்தில் பாடசாலை மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.  சிறிது நேரத்தில் நான்கு அடிகள் தள்ளி இருந்த இன்னொரு சிமெண்ட் பெஞ்சில் யாரோ வந்து அமர்வது போலிருக்கத் திரும்பிப் பார்த்தான்.

வந்து உட்கார்ந்தவர் முதியவராகத் தெரிந்தால் இன்ன வயது தான் என்று ஊகிக்க முடியாத தோற்றத்தில் இருந்தார். காவி வேட்டி கட்டி இருந்தார். தோளில் ஒரு காவித் துண்டு இருந்தது. நீண்ட தாடி வைத்திருந்தார். அவன் இது வரை அவரை அங்கு பார்த்ததில்லை.

அவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார். அவரது கண்களின் தீட்சண்யம் அவனை ஒரு கணம் கண்களை மூடிக் கொள்ள வைத்தது. கண்கள் தீப்பிழம்பாய் ஜொலிப்பது போல் இருந்தது. அவன் மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்த போது அவர் சாதாரணமாகவே தெரிந்தார். அவர் கண்களில் ஒருவித கூர்மை இன்னமும் தெரிந்தாலும் அக்னி காணாமல் போயிருந்தது. கணபதி ஏதோ ஒரு பிரமை தான் அப்படிக் காண வைத்ததோ என்று சந்தேகப்பட்டான்.

அவன் அவரைப் பார்த்து சினேகத்துடன் புன்னகைத்தான். அவர் லேசாகத் தலை அசைத்தார். அப்போது தான் அவர் கையில் இருந்த ப்ளாஸ்டிக் பையில் நிறைந்திருந்த அந்த அபூர்வப் பூக்களைப் பார்த்தான். அவன் முதல் முதலில் அந்த சிவலிங்கத்தின் மீது பார்த்த பூக்கள் அவை. அவற்றை வட நாட்டுக்காரர் ஒருவர் கொண்டு வந்து தந்ததாக அவனை அழைத்து வந்தவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

கணபதி உற்சாகத்துடன் எழுந்து வந்து அவர் அருகில் அமர்ந்தான். “ஓ... நீங்க தானா அந்த வட நாட்டுக்காரர்என்று கேட்க அவர் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தார்.

அவன் புன்னகையுடன் சொன்னான். “இந்தப் பூக்களை வைத்து சொன்னேன். இந்த மாதிரி பூக்கள் இங்கே கிடைக்கிறதில்லை. நீங்க வடநாட்டில இருந்து வர்றீங்களோ? நீங்க உங்க சாமிக்கு கொண்டு வந்திருக்கீங்க போல இருக்கு. எங்க சிவனுக்கும் கொஞ்சம் தர்றீங்களா? பதிலுக்கு இந்தப் பூக்கள்ல கொஞ்சம் எடுத்துக்குங்க

அவர் முகத்தில் சிறிதாய் ஒரு புன்னகைக் கீற்று வந்து போனது. அவர் தலை அசைத்தார். அவன் ஒரு கை நிறைய அவர் பையிலிருந்து அந்தப் பூக்களை எடுத்து விட்டு இன்னொரு கை நிறைய தன்னிடமிருந்த பூக்கூடையில் இருந்த பூக்களை எடுத்து மாற்றிப் போட்டுக் கொண்டான். அவர் பையில் பூக்கள் சிறிது குறைந்திருப்பது போலத் தோன்றவே தன் பூக்கூடையில் இருந்து மறுபடி இரண்டு பூக்களை எடுத்து அவர் ப்ளாஸ்டிக் பையில் போட்டான். பின் திருப்தியுடன் நிமிர்ந்த போது அவர் அவனையே ஒரு சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.  

அவர் அவனைக் கேட்டார். “அந்த சிவலிங்கத்துக்குப் புதுசா பூஜை செய்ய வந்திருக்கிறது நீ தானா?

அவருக்கு அந்த சிவலிங்கத்தைப் பற்றியும் அதற்குப் பூஜை செய்ய அவன் வந்திருப்பது பற்றியும் தெரிந்திருந்ததால் அவர் குருஜியின் ஆளாக இருக்க வேண்டும் என்று கணபதி நினைத்துக் கொண்டான். ஆமாம்என்றான்.

பூஜை எல்லாம் சரியாய் செய்கிறாயா?

தெரியலை. எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு செய்யறேன்

பூஜை செய்யறதை விட அதிகமாய் பேச்சு சத்தம் தான் கேட்குது

கணபதிக்கு திகைப்பாய் இருந்தது. அவன் பேசிக் கொண்டிருக்கும் நேரமாய் பார்த்து அவர் அந்தப் பக்கம் வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அந்த அளவுக்கா சத்தமாய் பேசுகிறோம் என்று நினைத்த போது வெட்கம் பிடுங்கித் தின்றது.  

வெட்கம் மாறாமல் சொன்னான். “எனக்கு நான் பூஜை செய்யற பிள்ளையார் கிட்டப் பேசிப் பேசிப் பழக்கமாயிடுச்சு. அதான் அப்படி....

அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவனாகத் தொடர்ந்து சொன்னான். “எனக்கும் இங்கே படிக்கிற பசங்க மாதிரி ஸ்பஷ்டமாய் ஸ்தோத்திரங்கள் சொல்லணும்னு ரொம்ப ஆசை. ஆனா நான் அதிகம் படிச்சதில்லை... சம்ஸ்கிருத சுலோகங்களைத் தமிழ்ல எழுதிப் படிக்கலாம்னா உச்சரிப்பு கொஞ்சம் மாறினாலும் அர்த்தம் முழுசா மாறிடும்னு சொல்றாங்க. அதனால பயமாய் இருக்கு...

உச்சரிப்பை விட பாவனை முக்கியம். சொல்ற மனநிலை முக்கியம். அது சரியா இல்லாட்டி உச்சரிப்பு சரியாய் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை...

“அப்படித் தான் குருஜியும் சொன்னார்... நீங்க குருஜிக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா?

அந்தக் கேள்விக்கு அந்த முதியவர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தூரத்து வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். ம்ம்ம்.... உங்க குருஜியைத் தெரியும்... பல வருஷங்களுக்கு முன்னால் பழக்கம். அவ்வளவு தான்

அப்புறமா அவரைப் பார்க்கலையா?

இல்லை என்பது போல் அவர் தலையசைத்தார். கணபதிக்குப் புரிந்தது. குருஜியைப் பார்க்கப் பல முறை போய் காத்திருந்து அவரும் பலரைப் போல குருஜியைப் பார்க்க முடியாமல் போயிருக்க வேண்டும்.  எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்...

உனக்கு குருஜின்னா ரொம்பப் பிடிக்குமா?அவர் கேட்டார்.

பிடிக்கும். அவர் எங்கேயாவது ஃப்ரீயா பேசறார்னு தெரிஞ்சா நான் முதல் ஆளா போய் நிப்பேன்... அவர் பேசறது பெரிய பெரிய விஷயங்களாய் தான் இருக்கும். அதனால முக்கால் வாசி எனக்குப் புரியாது. ஆனாலும் கேட்டுகிட்டிருக்கப்ப மனசு லேசாயிடும். கடவுளே என்னோட மரமண்டையில இதுல கொஞ்சமாவது ஏறாதான்னு ஏக்கமாய் இருக்கும்...  ஒரு தடவை இசையும் இறைவனும்கிற தலைப்புல அவர் பேசினதுல கொஞ்சம் புரிஞ்சுது. கடவுளை நெருங்க எல்லாத்தையும் விட இசை வேகமாய் உதவும்னு சொன்னார். நானும் போய் பிள்ளையார் கிட்ட பாட்டாய் பாடினேன். அன்னைக்குக் கனவுல பிள்ளையார் வந்து “கணபதி, பாட்டு மட்டும் வேண்டாம்னு சொன்னார். அதுக்கு முன்னாடியும் பிள்ளையார் என் கனவுல வந்ததில்லை. அப்புறமும் என் கனவுல அவர் வந்ததில்லை.  அப்படின்னா என் பாட்டு எப்படி இருந்திருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கலாம்....

சொல்லி விட்டு கணபதி குலுங்கக் குலுங்க சிரித்தான். அவர் அவன் சிரிப்பதையே புன்முறுவலுடன் பார்த்தார்....

இருட்ட ஆரம்பித்தது. அதைக் கவனித்த கணபதி அவசரமாக எழுந்தான். “ஐயோ பூஜை செய்ய நேரமாயிடுச்சு. நான் கிளம்பறேன். நீங்களும் வர்றீங்களா?

“இல்லை நீ போப்பா. எனக்கும் போக நேரமாயிடுச்சு...

கிளம்பும் முன் கேட்டான். “நீங்க இங்கே அடிக்கடி வருவீங்களா?

“எப்பவாவது தான் வருவேன்....

அந்த சமயத்தில் அவன் பூக்கூடையில் இருந்து ஒரு பூ கீழே விழ அதை எடுத்தபடியே அவன் கேட்டான். “குருஜியைப் பார்த்தால் உங்களைப் பத்தி சொல்றேன். யாருன்னு சொல்லட்டும்...

பதில் எதுவும் அவரிடமிருந்து வரவில்லை. அவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் எதிரில் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அவர் எங்குமே தென்படவில்லை.

திகைப்புடன் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு கணபதி நகர்ந்தான்.

(தொடரும்)

-        -  என்.கணேசன்



Friday, January 11, 2013

புதிய நூல்: ஆழ்மனதின் அற்புத சக்திகள்



அன்பார்ந்த வாசகர்களுக்கு,


வணக்கம்.


ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடர் எழுதப்பட்ட காலத்திலும் சரி எழுதி முடித்து இரண்டாண்டுகள் முடிந்து விட்ட இக்காலத்திலும் சரி வாசகர்களிடம் பெற்ற வரவேற்பு மகத்தானது.

இந்தத் தொடரின் பிற்பகுதி அத்தியாயங்களை நான் ஆழ்மன நிலைக்குச் சென்றே எழுதி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அந்த நிலை அமையும் வரை எழுதாமல் அது வரும் வரை காத்திருந்திருக்கிறேன். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். முடிக்கையில் ஒரு ஆத்ம திருப்தியை உணர்ந்திருக்கிறேன்.


எழுதி முடித்து இரண்டாண்டுகள் கழிந்த பின்னும் பல வாசகர்கள் இதை அச்சு நூலாக வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்தார்கள். இணையப் பக்கங்களில் படிப்பதை விட ஒரு நூலாகப் படிக்கவும், தங்கள் இருப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பினார்கள். இந்தத் தொடர் ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டும் என்று விதி இருந்தால், அதற்கு உண்மையான தகுதி இது பெற்றிருந்தால், கண்டிப்பாக ஒரு நல்ல பதிப்பாளர் மூலம் நல்ல முறையில் வெளியிடப்படும் என்று விட்டிருந்தேன்.


எண்ணற்ற வாசகர்களின் எண்ணங்களின் வலிமையால் ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நல்ல தரத்தில் ஒரு அச்சு நூலாக இப்போது வெளியாகி உள்ளது. அந்த அன்பு வாசகர்களுக்கும், மனமுவந்து தானாகவே வெளியிட முன் வந்த ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பாளர் யாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


ஆழ்மன சக்தி தொடரில் முடிவில் சொல்லி இருந்தேன்-


”உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள்.”


இப்போதும் அதையே சொல்கிறேன். இந்த நூல் ஆழ்மன சக்தி, அதீத சக்திகள் குறித்து உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்காகவே எழுதப்பட்டது. அவர்களுக்கு அத்துறையில் ஆர்வத்தை அதிகரிக்கவும், அந்தப் பாதையில் பயணிக்கவும், அனுபவங்கள் பெறவும் இது தொடர்ந்து வழி காட்டக்கூடிய நூல். இந்த நூல் ஒரு முறை படித்து முடித்து வைத்து விடக்கூடிய நூல் அல்ல. திரும்பத் திரும்பப் படிக்கவும், சிந்திக்கவும் தகுந்த நூல். எனவே ஆழ்மனசக்திகள் குறித்து ஆர்வமுள்ள, அந்தத் தேடல் உள்ள, அனைவரும் இந்த நூலை வாங்கிப் பயனடையும் படியும், இந்த நூலுக்கும் உங்கள் நல்லாதரவை அளிக்கும்படியும், வாசகர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

உங்கள் 
என்.கணேசன்


(பதிப்பகத்தாரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 9600123146

முகவரி:

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
தொலைபேசி : 044 43054779 / 42077093
மின்னஞ்சல் : blackholemedia@gmail.com )


Thursday, January 10, 2013

பரம(ன்) ரகசியம் – 26




ந்த மனிதன் இரவு ஒன்பது ஆகும் வரை காத்திருக்க சிரமப்பட்டான். அவரைப் பார்த்துச் சொல்ல முக்கிய விஷயங்கள் அவனுக்கு இருந்தன.... குருஜியைப் பார்த்துப் பேச வரும் கூட்டம் ஒன்பது மணி வரைக்கும் கண்டிப்பாக இருக்கும். ஒரு நாளில் ஓரிரு ஆட்கள் முதல் ஐந்தாறு ஆட்கள் வரை மட்டும் தான் அவர் சந்திப்பார் என்றாலும் பதினைந்திலிருந்து நாற்பது ஆட்கள் வரை அவரை சந்திக்க எல்லா நாட்களும் காத்திருப்பது உண்டு. பல முறை வந்து சந்திக்க முடியாமல் போனது உண்டு என்றாலும் பலரும் நம்பிக்கை இழக்காமல் திரும்பத் திரும்ப வந்து காத்திருப்பது சகஜம்.

ஆனால் சந்திக்கின்ற மனிதர்களை குருஜி என்றுமே அலட்சியப் படுத்தியவர் அல்ல. ஒவ்வொருவரிடமும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஆத்ம நண்பர்கள் போல் அவர் பழகுவார். பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்பார். அவர்களுக்குத் தகுந்த பதில் சொல்வார். அதனால்அவரை சந்தித்துப் பேசி விட்டு வெளியே வருபவர்கள் முகத்தில் பரம திருப்தியை அவன் கண்டிருக்கிறான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்தது போல அவர்கள் சந்தோஷமாக வெளியே வருவார்கள்.  மறுபடி அவர்களை அவர் சந்திக்காமலே கூட இருந்து விடக் கூடும். ஆனால் அந்த ஒரு சந்திப்பே அவர்கள் மனதில் நீங்காத இடம் பெற்று விடும். அவர் எப்படி இதை சாதிக்கிறார் என்று அவனுக்கு எப்போதும் பிரமிப்பு உண்டு....

அவன் ஒன்பது மணிக்கு மேல் போன போது குருஜி கேட்டார். “என்ன விஷயம்

“ஜான்சன் போன் செஞ்சார். அடுத்த வாரம் அமெரிக்கால இருந்து இந்தியா வர்றாராம். அதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமான விஷயங்கள் பத்தி பேசணுமாம்....

தலையசைத்த குருஜி கேட்டார். “அந்த ஜோதிடர் தம்பி போன் வந்ததா?

“இல்லை குருஜி

“நீயே போன் செய். அந்த ஜோதிடர் எங்கே போனார்னு தெரிஞ்சுதான்னு கேள்

“தெரிஞ்சிருந்தா அந்த ஆள் கண்டிப்பா போன் செய்திருப்பான்.என்று சொன்னாலும் அவர் சொன்னதற்காக அவன் சரவணனுக்குப் போன் செய்து விட்டு ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

சரவணன் ஏமாற்றத்தோடு சொன்னான். “சார் அண்ணன் இன்னைக்கு சாயங்காலம் தான் வந்தார். ஆனா எத்தனை கேட்டும் எங்கே போனார்னு சரியா சொல்லலை. திடீர்னு கோயில் கோயிலா போகணும்னு தோணிச்சு அப்படியே போயிட்டேன்னு சொல்றார். நான் எந்த எந்தக் கோயிலுக்குன்னு கேட்டேன்... சிவன் கோயில் பெருமாள் கோயில்னு சொல்றாரே ஒழிய ஊரைச் சொல்ல மாட்டேன்கிறார். பொதுவா அவர் அப்படி எல்லாம் மறைக்கக் கூடிய ஆளில்லை. இந்த தடவை தான் இப்படி புதிரா நடந்துக்கறார்….”

வந்தவர் கிட்ட புதிதாய் ஏதாவது மாற்றம் தெரிஞ்சுச்சா...

“ரொம்பவே யோசிக்கிற மாதிரி இருந்துச்சு

“ஏதாவது கொண்டு வந்தாரா?

“நிறைய விபூதி குங்குமம் கொண்டு வந்தார் சார்

“ஏதாவது வித்தியாசமா பேசினாரா, சொன்னாரா?

“விபூதி கொடுக்கிறப்ப ‘கடவுள் கிட்ட நல்ல புத்தி கொடுக்கணும்னு வேண்டிக்கன்னு மட்டும் சொன்னார் சார்

“சரி ஏதாவது தகவல் கிடைச்சா உடனடியா தெரிவியுங்க சரவணன்என்று பேச்சை முடித்துக் கொண்ட அந்த மனிதன் சிரித்தபடி குருஜியிடம் கேட்டான். “நீங்க என்ன நினைக்கிறீங்க குருஜி

குருஜியும் புன்னகைத்தார். பின் சொன்னார். “அந்த ஜோதிடர் போனது இந்த சிவலிங்கம் தொடர்பாய் தான்கிறதுல எனக்கு சந்தேகமில்லை. இல்லாட்டி மறைக்க வேண்டிய அவசியமேயில்லை

அவர் கிட்ட இருந்து தகவலைக் கறக்க வேறெதாவது வழி பார்த்தால் என்ன?

பல பேர் கவனத்தைத் திருப்பாமல் அதை செய்ய முடியாது. அதனால கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம். சரி... ஜான்சனுக்குப் போன் செய்

அந்த மனிதன் ஜான்சனுக்குப் போன் செய்தான். ஜான்சனிடம் குருஜி மிக அழகான ஆங்கிலத்தில் பேசினார். “ஏதோ முக்கியமாய் பேசணும்னு சொன்னாயாம். சொல்லு ஜான்சன்

குருஜி நீங்க போய் சிவலிங்கத்தைப் பார்த்தீங்களா?” 

குருஜி புன்னகைத்தார். ஜான்சனிடம் சுற்றி வளைத்துப் பேசும் பழக்கம் என்றுமே இருந்ததில்லை. அதை ஜான்சன் கால விரயமாய் கருதுவார். உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ ஆராய்ச்சியாளரான அவர் நிறைய புத்தகங்கள் எழுதிக் குவித்திருக்கிறார். அத்தனை சாதிக்க அவருக்கு நேரம் இருந்ததற்குக் காரணம் அனாவசியமான விஷயங்களில் அவர் நேரம் செலவழித்ததில்லை என்பது தான் என்று குருஜி பல முறை நினைத்திருக்கிறார்.

குருஜி சொன்னார். “இன்னும் இல்லை ஜான்சன்

ஏன் குருஜி?

“இன்னும் சில தகவல்கள் தெரிய வேண்டி இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டே போகலாம் என்றிருக்கிறேன் ஜான்சன்

“உங்களுக்கு பயம் எதுவும் இல்லையே குருஜி

குருஜி வாய் விட்டுச் சிரித்தார். “என் வாழ்க்கையில் இது வரைக்கும் ஜாக்கிரதையாய் இருந்திருக்கிறேனே ஒழிய நான் எதற்கும் பயப்பட்டதில்லை ஜான்சன்

“குருஜி நான் எல்லாருடைய அபிப்பிராயங்களையும் விட உங்கள் அபிப்பிராயத்தை உயர்வாய் நினைக்கிறேன். நீங்கள் போய் உங்கள் கருத்தைச் சொன்னால் நான் அங்கே வந்த பிறகு என்ன செய்வதுன்னு தீர்மானிக்கிறது சுலபமாயிருக்கும்...

“புரியுது ஜான்சன். ரெண்டே நாள்ல போகிறேன்...

“நன்றி குருஜி... நான் கேள்விப்பட்ட இன்னொரு தகவல் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது குருஜி

என்ன தகவல்?

“ஈஸ்வர் அந்த பசுபதியோட தம்பி பேரன்ங்கிறதும், அவன் இப்ப இந்தியா வந்திருக்கிறான்கிறதும் தான்

அதனால என்ன?

“குருஜி உங்களுக்கு ஈஸ்வரைப் பற்றி தெரியுமா?

இல்லைஎன்றார் குருஜி. ஈஸ்வரைப் பற்றி அவர் இண்டர்நெட்டில் அனைத்து தகவல்களும் தேடிப் படித்திருக்கிறார் என்பதை ஜான்சனிடம் தெரிவிக்க அவர் முற்படவில்லை.  கூடுதலாக ஒருவனைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. “உனக்கு அவனைத் தெரியுமா ஜான்சன்?

தெரியும் குருஜி. அதனால தான் கவலைப்படறேன்
அவனைப்பத்தி சொல்லு ஜான்சன்

அவன் துறையில அவன் எமகாதகன் குருஜி. தனிப்பட்ட வாழ்க்கையில் நாணயமானவன்...ஒரு விஷயத்துல இறங்கிட்டா அதோட ஆழம் வரை போய் எல்லாத்தையும் தெரிஞ்சுக்காமல் விட மாட்டான்... நல்ல புத்திசாலி... பார்க்க அழகாய் இருப்பான்.... எல்லாத்துக்கும் மேல மகா அழுத்தமான ஆசாமி.. யாருமே அவனை சுலபமா மயக்கிடவோ, பாதை மாற்றி விடவோ முடியாது...

கடைசியாக சொன்ன அபிப்பிராயம் ஏதாவது நிகழ்ச்சியை வைத்து தான் ஜான்சனால் அறியப்பட்டது என்று தோன்றவே குருஜி கேட்டார். “அப்படி சொல்லக் காரணம்?

போன வருஷம் வியன்னால ஃபராய்டு நினைவு கருத்தரங்கம் ஒன்று மூன்று நாள் நடந்தது. அங்கே நானும் என் செகரட்டரி லிசாவும் போய் இருந்தோம். ஈஸ்வரும் வந்திருந்தான். லிசாவுக்கு தன் அழகு மேல நிறையவே கர்வம். தன் அழகுக்கு மயங்காதவங்க உலகத்துல யாருமே கிடையாதுங்கற நினைப்பு.....

ஜான்சன் சென்ற முறை இந்தியா வந்த போது அவளை அழைத்து வந்திருந்ததால் குருஜி அவளை நன்றாக அறிவார். அவள் பேரழகி என்பதில் சந்தேகமில்லை. அவள் அழகை வெளிப்படுத்துவதில் அவளுக்கு கூச்சமும் இருந்ததில்லை...

அவள் வியன்னால தான் ஈஸ்வரை முதல் முதலாய் பார்க்கிறாள். அவளுக்கு அவன் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. முடிஞ்ச வரைக்கும் அவனை மயக்க முயற்சி செய்தாள். அவன் அசைஞ்சே கொடுக்கலை.... அவள் எரிச்சலாய் போய் அவன் கிட்ட கேட்டே விட்டாள். “நீ என்ன ஹோமோசெக்சுவலான்னு. அவன் பதில் சொல்லாம சிரிச்சுகிட்டே போயிட்டான். மூணு நாளும் பகல்ல கருத்தரங்கத்துல பேசின அத்தனை பேர் பேச்சையும் கவனமா கேட்டு குறிப்பு எடுத்துகிட்டவன் ராத்திரி எல்லாம் அங்கே இருக்கிற நூலகத்துல இருந்த அபூர்வமான ஃப்ராய்டு, ஆட்லர் ரெண்டு பேரோட கையெழுத்துல இருந்த சில கட்டுரைகளை படிச்சுகிட்டு இருந்தான்னு கடைசில தான் கேள்விப்பட்டேன். அந்த கருத்தரங்கை ஒட்டி மூன்று நாளும் தினமும் 24 மணி நேரமும் அந்த நூலகத்தைத் திறந்து வச்சிருந்தாங்க. அதை முழுசா உபயோகப்படுத்திகிட்டது அவன் ஒருத்தன் தான்...

குருஜி கேட்டார். “சரி, நீ கவலைப்பட காரணம் என்ன அதைச் சொல்லு ஜான்சன்

இப்ப நான் ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கிற விஷயத்துல தான் அவனும் நிறைய ஆராய்ச்சி செய்யறான். அந்த சிவலிங்கத்துல அவனுக்கும் ஆர்வம் இருந்துச்சுன்னா அவன் சும்மா இருக்க மாட்டான். அவனை எதுவும் தடுக்க முடியாது..

“ஆனா சிவலிங்கம் நம்ம கிட்ட தானே இருக்கு ஜான்சன்... அவன் என்ன செய்ய முடியும்?

ஜான்சன் ஒருவித தயக்கத்துடன் சொன்னார். “எனக்கு என்னவோ அந்த பசுபதி ஈஸ்வர் கிட்ட சிவலிங்கம் பற்றி சொல்லச் சொன்னதும் அவனும் அதை வச்சு அங்கே வந்திருக்கறதும் ஒரு மாதிரியாவே இருக்கு குருஜி. இதெல்லாம் தற்செயலா நடக்கற விஷயங்களா எனக்கு படலை

இதைக் கேள்விப்பட்ட போது முதலில் இதே மனநிலையில் தான் குருஜி இருந்தார் என்ற போதும் அதில் இருந்து தற்போது மீண்டிருந்த அவர் ஜான்சனுக்கு தைரியம் சொன்னார். “கவலைப்பட எதுவுமே இல்லை ஜான்சன்... சிவலிங்கம் இப்பவும் நம்ம கைல தான் இருக்குங்கறதை மறக்க வேண்டாம்நமக்குத் தெரிஞ்ச அளவு அவனுக்கு சிவலிங்கம் பத்தி தெரியவும் தெரியாது. அவன் விரும்பினால் கூட நம்மகிட்ட சிவலிங்கம் இருக்கிறதை கண்டுபிடிக்கவோ நெருங்கவோ முடியாது.

ஜான்சன் குருஜி மீது ஆழமான நம்பிக்கை வைத்திருந்ததால் அவர் சொன்னதில் தைரியம் அடைந்தார். அந்தப் பையன் கணபதி கிட்ட எதுவும் பிரச்சினை இல்லையே...

குருஜி சிரித்துக் கொண்டே சொன்னார். “கணபதி சிவலிங்கத்து கிட்ட தொடர்ச்சியாய் பேசிகிட்டே இருக்கிறதாக கேள்விப்பட்டேன். அந்த சிவலிங்கத்தோட சக்தி கூட கணபதி வாயை அடைக்க முடியலை

ஒருத்தன் செத்துப் போயிட்டான். இன்னொருத்தன் ஓடிப் போயிட்டான். ஆனால் கணபதி சிவலிங்கத்தால எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறான்ங்கறதே பெரிய விஷயம் இல்லையா குருஜி

ம்ம்ம்

குருஜி அந்தக் கணபதியை பூஜை செய்யறதுக்கு மட்டுமில்லாமல் நம்ம ஆராய்ச்சிக்கும் உபயோகப்படுத்திகிட்டா என்ன?

அவனுக்குத் தெரியாமல் அவனை நாம் எப்படி வேணும்னாலும் உபயோகப்படுத்திக்கலாம். ஆனால் அவனுக்குத் தெரிஞ்ச பிறகு உபயோகப் படுத்திக்க முடியாது ஜான்சன். அது ஆபத்து...

“சரி அப்படின்னா நம்ம ஆராய்ச்சி சமயங்கள்ல அவனை என்ன செய்யறது குருஜி..

“அது ஒரு பெரிய விஷயம் இல்லை ஜான்சன். அதை நான் பார்த்துக்கறேன்..

சரி குருஜி. நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் சிவலிங்கத்தைப் பாருங்க. போயிட்டு வந்து உங்க கருத்தைச் சொல்லுங்க. நான் காத்துகிட்டு இருப்பேன்....

குருஜி போனை வைத்து விட்டு அந்த மனிதனிடம் சொன்னார். “அந்த ஈஸ்வர் ஜான்சனுக்கு ஒரு பிரச்சினையா தான் தெரியறான். அவன் இங்கே எத்தனை நாள் லீவுல வந்திருக்கான்னு தெரியுமா?

“ஒரு மாச லீவுன்னு கேள்விப்பட்டேன்

“நீ அவனைப் பத்தி என்ன நினைக்கிறே?

எதுவும் தன்னால முடியும்னு நினைக்கிறவன் அவன். அது மத்தவங்க விஷயத்துல எப்படியோ இவன் விஷயத்துல நிஜம்னு தான் தோணறது... இப்ப அவனை விட அதிகமா கவலைப்பட வேண்டிய விஷயம் வேற ஒன்னு இருக்கு குருஜி. நீங்க ஜான்சன் கிட்ட பேசி முடியற வரைக்கும் சொல்ல வேண்டாம்னு இருந்தேன்

குருஜி கேள்விக்குறியோடு அவனைப் பார்த்தார். “என்ன அது

அந்த மனிதன் ஒன்றுமே சொல்லாமல் ஒரு சிடியை எடுத்து குருஜி அறையில் இருந்த கம்ப்யூட்டரில் போட்டான்.  அது சிவலிங்கத்தைக் கண்காணிக்க அவர்கள் வைத்திருந்த ரகசிய கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட பதிவின் சிடி. அவன் ஆரம்பத்துக் காட்சிகளை விரைவுபடுத்தி விட்டு கடைசி காட்சி வந்ததும் நிறுத்தி அந்தக் காட்சியை தொடர விட்டான்.

“மன்னிச்சுக்கோ கொஞ்சம் நேரமாயிடுச்சுஎன்று கணபதி சிவலிங்கத்திடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் வெளியே போய் விட்டு வந்தது போல் தோன்றியது. அவன் கையில் ஒரு பூக்கூடை இருந்தது.

கணபதி பூக்கூடையை சிவலிங்கத்தின் முன் வைத்து விட்டு இதோ வந்துடறேன். கோவிச்சுக்காதேஎன்று சொல்லி விட்டுப் போனான்.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த குருஜியிடம் அந்த மனிதன் சொன்னான். அந்தப் பூக்கூடையைப் பாருங்க

பார்த்த குருஜி கண்கள் திகைப்பில் விரிந்தன. இமயமலைச்சாரல்களில் மட்டுமே அதிலும் திபெத் பகுதியில் தான் காணப்படுவதாகச் சொன்ன அபூர்வக் காட்டுப்பூக்கள் கணபதி வைத்து விட்டுப் போன பூக்கூடையில் நிறைந்து இருந்தன.

(தொடரும்)
-என்.கணேசன்

Thursday, January 3, 2013

பரம(ன்) ரகசியம் – 25




பேரனையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி அவனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டவுடன் கரிசனத்துடன் கேட்டாள். “என்னடா ஆச்சு?

ஈஸ்வர் தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். “ஒன்னுமில்லை”.  தனக்கேற்பட்ட உணர்வு நிதானமாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒன்று என்று நினைத்த அவன் அதை ஆனந்தவல்லிக்கு விளக்க முற்படவில்லை. ஒன்றுமே நடக்காதது போல் சகஜ நிலைக்கு மாறிய அவன் “சரி பாட்டி, சிவலிங்கத்தைப் பத்தி உங்களுக்கு என்ன எல்லாம் தெரியுமோ, அதையெல்லாம் சொல்லுங்கஎன்றான்.

ஆனந்தவல்லிக்கு அவன் பாட்டி என்றழைத்ததில் பரம திருப்தி. ஆனால் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் சொன்னாள். “உண்மையை சொன்னா அந்த சிவலிங்கத்தைப் பத்தி பேசக் கூட எனக்குப் பிடிக்கலை. அந்த போலீஸ் அதிகாரி வந்து கேட்டப்ப கூட நான் வேண்டா வெறுப்பா தான் சொன்னேன். இப்ப நீயும் அதையே கேட்கிறே

அந்தப் போலீஸ் அதிகாரி கிட்ட என்ன எல்லாம் சொன்னீங்களோ அதையே என் கிட்டயும் சொல்லுங்க

ஆனந்தவல்லி ஒருவித சலிப்புடன் எல்லாவற்றையும் சொன்னாள்.

எல்லா தகவல்களையும் ஒருவித பிரமிப்புடன் கேட்டுக் கொண்ட ஈஸ்வர் கேட்டான். “அந்த ரகசியக்குழு பத்தி வேறெதுவும் உங்க வீட்டுக்காரர் உங்க கிட்ட சொல்லலையா?

நான் தான் அவரை இது சம்பந்தமா பேசவே விடலையே? விட்டிருந்தா சொல்லி இருப்பாரோ என்னவோ?

ஈஸ்வர் ஆழமாக யோசித்தான். ஆனந்தவல்லி கேட்டாள். “என்னடா யோசிக்கிறே?

“அப்படி ஒரு ரகசிய குழு உண்மையிலேயே இருந்திருந்தா அது இப்ப என்ன பண்ணிகிட்டிருக்குன்னு யோசிக்கிறேன். இந்தக் கொலை நடக்கவும், சிவலிங்கம் திருட்டுப் போகவும் ஏன் அனுமதிச்சுதுன்னு யோசிக்கிறேன்

ஆனந்தவல்லி யோசிக்காமல் சொன்னாள். “அந்த ரகசிய குழுவே ஒரு கற்பனைன்னு நான் சொல்றேன். உன் பெரிய தாத்தா வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறவர். கொடுக்கிறப்ப அந்த சித்தர் சொல்லி இருப்பார். இவர் நம்பி இருப்பார்.

அந்த சித்தரை நீங்க பார்த்திருக்கீங்களா? அவரை உங்க ரெண்டாவது பிள்ளை சமீபத்தில் பார்த்தேன்னு சொல்றதை நீங்க நம்பறீங்களா?

ஆனந்தவல்லிக்கு அவன் பரமேஸ்வரனை இரண்டாவது பிள்ளை என்று சொன்னது பிடிக்கவில்லை. மறுபடியும் அவனை முறைத்தாள். அவள் எதற்கு முறைக்கிறாள் என்பதை உடனடியாகப் புரிந்து கொண்ட ஈஸ்வர் இறுகிய முகத்துடன் கேட்டான். “நான் இங்கே இருக்கவா? இல்லை ஏதாவது ஓட்டல்ல போய் தங்கிக்கவா?

அவளை பாட்டி என்று அழைத்தது போல பரமேஸ்வரனைத் தாத்தா என்று அழைக்க ஈஸ்வர் தயாரில்லை என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் புரிய ஆனந்தவல்லி பெருமூச்சு விட்டாள். வெளியே நின்றிருந்த மீனாட்சிக்கும் வருத்தமாய் இருந்தது. ‘அப்பா கொஞ்சமாவது இறங்கி வந்தால் ஒழிய இவன் மாற மாட்டான். அவரோ உயிரே போனாலும் இறங்கி வர மாட்டார். அண்ணா! உன் மகனையும் நம்ம அப்பாவையும் எப்படி தான் சேர்த்து வைக்கிறது நீயே சொல்லுஎன்று அண்ணனிடம் மானசீகமாய் கேட்டாள்.

ஆனந்தவல்லி சொன்னாள். “பரமேஸ்வரன் பார்த்தேன்னு சொன்னா பார்த்து தான் இருப்பான். அந்த சித்தர் இன்னும் உயிரோட தான் இருக்கணும். நான் அந்த ஆளை ஒரு தடவை கூட பார்த்தது கிடையாது. பார்க்கக் கிடைச்சா நாக்கை பிடுங்கற மாதிரி கேட்டிருப்பேன். “. அவனை சாக விட்டுட்டு நீ இன்னும் உயிரோட இருக்கியே ஏன்யா இப்ப உனக்கு திருப்தியான்னு.

மீனாட்சி உள்ளே நுழைந்தபடி சொன்னாள். “அப்படி எல்லாம் சித்தர்களை சொல்லக்கூடாது பாட்டி

ஆனந்தவல்லி பேத்தியிடம் எரிந்து விழுந்தாள். “சித்தராவது புத்தராவது. என் வயித்தெரிச்சலை யார் கொட்டிகிட்டாலும் அப்படி தான் கேட்பேன். நானே இன்னும் இருக்கறப்ப உங்க பெரியப்பாவுக்கு சாகிற வயசாடி

ஈஸ்வர் புன்னகையுடன் சொன்னான். “நீங்க இருக்கறதுக்கு அந்த சித்தர் என்ன பண்ணுவார் பாட்டி? பாவம்!

கடன்காரா, உனக்கும் நான் இருக்கிறது உறுத்துதாஎன்று ஆனந்தவல்லி அவன் காதைப் பிடித்துத் திருகினாள். ஏதாவது ஒரு சாக்கிலாவது அவனைத் தொட்டுப் பார்க்க ஆவலாக அவளுக்கு இருந்தது.

நாற்காலியை பின்னுக்கு தள்ளி அவள் கைக்கெட்டாத தூரத்தில் உட்கார்ந்து கொண்ட ஈஸ்வர் சிரித்துக் கொண்டே அருகே நின்றிருந்த மீனாட்சியிடம் ரகசியமாக சொன்னான். கிழவி நல்லா ஸ்ட்ராங்கா தான் இருக்கு“.

மீனாட்சி பாட்டியைப் பார்த்து புன்னகைக்க ஆனந்தவல்லி கேட்டாள். “என்னடி சொல்றான் அவன்?

நீங்க ரொம்ப தங்கமானவங்கன்னு சொன்னேன். அதை விடுங்க. நீங்க கடைசியா போய் உங்க மகனைப் பார்த்தீங்களே அவர் என்ன சொன்னார்?

அப்பவும் முதல்ல அவனை எங்கே நான் பேச விட்டேன். பெத்த தாயை பார்க்கணும்னு இப்ப தான் தோணிச்சாடான்னு ஆரம்பிச்சவ. நல்லா திட்டிட்டேன்.சொல்லும் போது அவள் குரல் கரகரத்தது.

“நீங்க திட்டினதுக்கு அவர் எதுவும் சொல்லலையா?

ஆனந்தவல்லி பெருமையுடன் சொன்னாள். “என் வீட்டுக்காரரும் சரி, என் குழந்தைகளும் சரி என்னை எதிர்த்துப் பேச மாட்டாங்க....சொல்லி விட்டு அவனைப் பார்த்து பொய்யான கடுமையுடன் சொன்னாள். “எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசற உன்னை மாதிரி கிடையாது....

பிரச்சினையே அது தான். ஒராளாவது கண்டிச்சிருந்தா கொஞ்சமாவது உங்களை அடக்கி வச்சிருந்திருக்கலாம்என்று ஈஸ்வர் புன்னகையுடன் சொல்ல ஆனந்தவல்லி செல்லமான கோபத்துடன் கொள்ளுப் பேரனைப் பார்த்தாள்.

மீனாட்சி ஆச்சரியத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள். இது நாள் வரை ஆனந்தவல்லியிடம் யாரும் இப்படி பேசியதும் இல்லை. பேச அவள் அனுமதித்ததும் இல்லை. ஏன் பரமேஸ்வரன் கூட அவளிடம் அப்படி உரிமை எடுத்துக் கொண்டு பேசியதாக அவளுக்கு நினைவில்லை....

ஈஸ்வர் சொன்னான். “சரி பாட்டி நம்ம கதையை அப்பறம் வச்சுக்குவோம். உங்க மகன் பேசறப்ப என்ன சொன்னார்?

ஆனந்தவல்லியின் முகம் மிகவும் மென்மையாகியது. “உடம்பை நல்லா பார்த்துக்க சொன்னான். என்னென்ன சாப்பிடணும்... எப்ப எப்ப சாப்பிடணும்னு பொறுமையா சொன்னான்...

“சிவலிங்கத்தைப் பத்தி எதாவது சொன்னாரா?

“சொல்லி இருந்தா, இப்ப உன் காதைப் பிடிச்ச மாதிரி அவன் காதையும் பிடிச்சிருப்பேன்

ஈஸ்வர் தன் காதைத் தடவிக் கொண்டே கேட்டான். “நீங்க எப்பவாவது அந்த சிவலிங்கம் ஜொலிக்கறதைப் பார்த்திருக்கீங்களா?

ஆனந்தவல்லி சொன்னாள். “ஜொலிக்கறதுக்கு அந்த சிவலிங்கம் தங்கமா, வைரமா? உங்கப்பன் தான் சின்னதுல எதையோ பார்த்துட்டு வந்து அது ஜொலிக்கிறதா சொன்னான். வேற யாரும் சொன்னதில்லை. கிறுக்குப் பய

கிறுக்குப் பயல் என்று தந்தையைச் சொன்னதற்கு ஈஸ்வர் ஆனந்தவல்லியை முறைத்தான்.

“என்னடா முறைக்கிறே. உனக்கு அப்பனாகிறதுக்கு முன்னாடியே அவன் எனக்குப் பேரன். ரொம்பத் தான் முறைக்கிறான்

பெருமூச்சு விட்ட ஈஸ்வர் கேட்டான். “சரி அந்த சிவலிங்கத்துல ஏதாவது வித்தியாசமா பார்த்திருக்கீங்களா?

“ஒரு வித்தியாசத்தையும் பார்த்ததில்லை...

“நீங்க சரியா பார்க்கலை போல இருக்கு

ஏழெட்டு தடவை தான் அதைப் பார்த்திருக்கேன்னாலும் சரியா தான் பார்த்திருக்கேன். என் வீட்டுக்காரர் வேற அதை போட்டோ எடுத்து ப்ரேம் போட்டு வச்சிருந்தார்....

“அந்த போட்டோ என்ன ஆச்சு?

“பரண்ல இருக்கு.  அவர் வெச்சிருந்த ஒரு டிரங்குப் பெட்டில இருக்கு.

“அவர் சிவலிங்கம் சம்பந்தமா வேற எதாவது வச்சிருந்தாரா?

“இல்லையே

“நீங்க எதையும் வீசிடலையே?


“அவர் பத்திரமா வச்சிருந்த அதை வீச எனக்கு மனசு வரலை. அதனால அவரோட மத்த சில பொருள்களோட அப்படியே வச்சிருக்கேன்....

ஈஸ்வருக்கு அந்தப் புகைப்படத்திலோ அவர் வைத்திருந்த மற்ற பொருள்களிலோ ஏதாவது முக்கிய தகவல் இருக்கலாம் என்று தோன்றியது. அவன்  திடீர் என்று எழுந்து நின்றான். “பாட்டி எனக்கு அவர் வச்சிருந்ததை எல்லாம் பார்க்கணும்...

இப்பவேவா?

“ஆமா

“பரண்ல தூசி நிறைய இருக்கும்டா.  நாளைக்கு வேலைக்காரங்களை விட்டு சுத்தம் செய்யச் சொல்றேன். அப்புறம் பாருடா

“பரவாயில்லை. இப்பவே பார்க்கறேன்

“சரி வாஎன்று ஆனந்தவல்லி எழுந்தாள். அவனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போவதில் அவளுக்கு சந்தோஷம் இருந்தது. அவள் முன்னே செல்ல ஈஸ்வர் பின் தொடர்ந்தான். அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி அவர்களைப் பின் தொடராமல் தனதறைக்குப் போனாள். அப்போது தான் வீட்டுக்குள் வந்திருந்த மகேஷ்  வழியில் அவளை இடைமறித்துக் கேட்டான்.

என்னம்மா உங்க பாட்டி அதிசயமா அவனை ரூமுக்குக் கூட்டிகிட்டு போறாங்க?

எங்க தாத்தா வச்சிருந்த பொருள்களை எல்லாம் அவனுக்குப் பார்க்கணுமாம்

எதுக்காக?

அதுல அந்த சிவலிங்கம் சம்பந்தமான தகவல் எதாவது இருக்கான்னு அவனுக்குப் பார்க்கணுமாம்...

“அப்படி என்ன இருந்தது அவர் கிட்டே?

“அந்த சிவலிங்கத்தோட போட்டோ ஒன்னு அவர் கிட்ட இருந்ததுன்னு பாட்டி சொன்னாங்க. அவன் வேறெதாவதும் இருக்கான்னு பார்க்கப் போறான். ஏன் கேட்கறே

“சும்மா தான்மகேஷ் சுரத்தில்லாமல் சொன்னான்.

ஆனந்தவல்லியின் அறை மிகப் பெரிதாக இருந்தது. அவள் அறையில் அவள் கணவர் படம் மிகப் பெரியதாக மாட்டப் பட்டிருந்தது. அவள் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது எடுக்கப்பட்ட படமும், திருமணமான புதிதில் அவளும் அவள் கணவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இருந்தன. அந்தப் படத்தில் அவர் அச்சாக அவனைப் போலவே இருந்தது ஈஸ்வருக்கு வியப்பாக இருந்தது.

“உட்கார்டாஎன்றாள் ஆனந்தவல்லி.

“இல்லை சாவகாசமாய் பிறகு உட்கார்றேன். முதல்ல பரண்ல பார்த்துடறேன்

“சரி போ. மேலே நீலக்கலர்ல இருக்கிற பெரிய டிரங்குப் பெட்டி தான் அவருதுஎன்று சொல்லி அவள் அறையின் ஓரத்தில் இருந்த தேக்கு மரப்படிகளைக் காண்பித்தாள். அவன் படியேறிச் செல்கையில் தன் கணவரின் புகைப்படத்தையும் அவனையும் மாறி மாறி அவள் பெருமையுடன் பார்த்தாள். மேலே சென்றவுடனேயே அவன் தும்மல் சத்தம் கேட்டது. “தூசி இருக்குன்னு சொன்னா கேட்டால் தானே. என்னை மாதிரியே பிடிவாதம் அவனுக்குஎன்று செல்லமாக அவனை மனதிற்குள் கடிந்து கொண்டாள்.

பரணில் தூசி படிந்த பழங்காலப் பொருள்கள் நிறைய இருந்தன. ஆனந்தவல்லி சொன்ன நீல நிற பெரிய டிரங்குப் பெட்டி ஒரு மூலையில் இருந்தது. ஈஸ்வர் இரண்டு முறை தும்மி விட்டு அந்த டிரங்குப் பெட்டியைத் திறக்க முயற்சித்தான். ஆரம்பத்தில் திறக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தான் திறக்க முடிந்தது.

உள்ளே ஒரு பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, பட்டு சட்டை, ஃப்ரேம் போடாமல் அட்டையில் ஒட்டிய ஒரு மிகப்பழைய கறுப்பு வெள்ளைப் புகைப்படம்,  ஒரு வலம்புரி சங்கு, ஒரு குடை,  ஒரு வெள்ளி வெற்றிலை பாக்கு டப்பா இவற்றோடு ஆனந்தவல்லி சொன்ன ஃப்ரேம் போட்ட சிவலிங்கம் புகைப்படம் இருந்தது. இரண்டு புகைப்படங்களைத் தவிர மற்றவை எல்லாம் கணவர் சாந்தலிங்கம் தினசரி உபயோகித்த பொருள்களை ஆனந்தவல்லி எடுத்து தேர்ந்தெடுத்து பத்திரப்படுத்தி வைத்தது போல இருந்தது.  ஃப்ரேம் போடாத கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை எடுத்து ஈஸ்வர் ஆராய்ந்தான். புகைப்படம் பழுதாகி இருந்தாலும் யாரோ ஒரு வயதானவர் கறுப்புக் கோட்டு போட்டுக் கொண்டிருந்தது போலத் தெரிந்தது. ஆனந்தவல்லி அல்லது சாந்தலிங்கத்தின் தகப்பனாராக இருக்கலாம் என்று தோன்றியது.

சிவலிங்கத்தின் புகைப்படத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அவன் ஆவலோடு பார்த்தான். எத்தனையோ ரகசியங்களைத் தன்னில் உள்ளடக்கி வைத்திருக்கிற அந்த சிவலிங்கத்தை நிறைய நேரம் பார்த்தான். எதிர்பார்க்காத நேரங்களில் எல்லாம் அந்தரத்தில் தெரிந்து அவனைத் திகைக்க வைத்த சிவலிங்கம் இப்போது எதிர்பார்ப்போடு பார்த்த போது அமைதியாக இருந்தது. அந்தப் புகைப்படத்தில் சிவலிங்கத்தின் தனித்தன்மை எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை... 

சாந்தலிங்கம் இதைப் புகைப்படமாக எடுத்து வைக்க ஏதாவது பிரத்தியேகக் காரணம் இருக்குமா என்று ஈஸ்வர் யோசித்தான். அவர் அதை சக்தி வாய்ந்த சிவலிங்கம் என்று நம்பியதால் அதைப் படம் எடுத்து வீட்டில் வைத்து இருக்கலாம்... அப்படியும் இல்லை என்றால்...?

சிவலிங்க புகைப்படக் கண்ணாடியில் தூசி இருந்தது. ஈஸ்வர் அந்த தூசியைத் துடைத்தான். கண்ணாடி அசைந்தது.  கண்ணாடி சரியாகப் பதிக்கப்படவில்லை போல இருக்கிறது என்று எண்ணியவனாய் மேலும் அதை அசைக்க ஒரு புறத்தில் கண்ணாடி ஃப்ரேமை விட்டு வெளியே வந்தது. கண்ணாடியைப் பத்திரமாக ஈஸ்வர் கழற்றி வைத்தான். கண்ணாடி வந்த கையோடு சிவலிங்கம் புகைப்படமும் வெளியே வந்தது. சிவலிங்கத்தின் புகைப்படத்தின் பின்புறம் இருந்து ஒரு காகித உறையும் அவன் மேல் விழ அவன் திகைப்புடன் அந்த காகித உறையை எடுத்துப் பார்த்தான். உறையின் மீது எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. அந்த உறையினுள்ளே ஏதோ ஒரு தாள் இருந்தது தெரிந்தது. உறை ஒட்டப்பட்டிருக்கவில்லை.

இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க அந்த உறையைப் பிரித்து உள்ளே இருந்த தாளை ஈஸ்வர் வெளியே எடுத்தான்....

(தொடரும்)
-          என்.கணேசன்