சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 30, 2016

உலக ஞானிகளையும் ஈர்த்த மகான்!

மகாசக்தி மனிதர்கள்-59

ந்தியா ஈன்றெடுத்த மகான்கள் ஏராளம். அவர்களால் உலக மக்கள் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டு, சாமானியர்கள் மட்டுமல்லாமல் அரசர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்களையும், அவர்கள் மட்டுமல்லாமல், உலக ஞானிகளையும் தன்னிடத்தே ஈர்த்த தனிச்சிறப்பு ரமண மகரிஷிக்கு உண்டு.

1879 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் சுந்தரம் ஐயர், அழகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த வேங்கடரமணன் எல்லாவற்றையும் துறந்து துறவியானது தன் பதினாறாம் வயதில். மதுரையில் வசிக்கும் அவரது சித்தப்பா வீட்டில் அவர் தங்கி இருந்த போது திடீரென்று ஒருவித மரண அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயமாக அவரை ஆட்கொண்ட அந்த அனுபவத்தில், அந்த அனுபவத்தை அலசும் வேறொன்று அவருக்குள் விழித்துக் கொண்டது. இறந்து முடிவது எது என்று அது கேள்வி கேட்டது. இறப்பது உடலே அல்லவா என்றும் உடலோடு சேர்ந்து இறக்காத ஆன்மா நிரந்தரமானதல்லவா என்ற ஞானம் எழுந்தது. நான் என்று உடலோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு பார்க்காமல், என்றும் அழிவில்லாத ஆன்மாவே நான் என்ற தெளிவு அறிவுபூர்வமாக மட்டும் எழாமல் உணர்வு பூர்வமாகவும் அவருக்கு விளங்கியது. அதற்கு மேல் அந்த உடலோடு சம்பந்தப்பட்ட உறவுகளில் சேர்ந்திருக்க அவருக்கு முடியவில்லை. எல்லாம் துறந்து ரயில் ஏறி திருவண்ணாமலை வந்து சேர்ந்தவர் அதன் பிறகு அங்கேயே வாழ்ந்தார். (பிற்காலத்தில் அவர் குடும்பத்தினரும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.)

பிராம்மண சுவாமி என்று மற்றவர்களால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட அவர் அங்கு பாதாள லிங்கம், விருப்பாக்‌ஷி குகை, கந்தாஸ்ரமம் முதலான இடங்களில் தங்கி ஆழமான தியான நிலையில் லயித்து வாழ்ந்தார். அவருடைய ஆன்மிக சக்தி சிறிது சிறிதாக அங்குள்ள மக்களை ஈர்க்க ஆரம்பித்தது. பின் வெளியூர்களில் இருந்தும் அவரை நாடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். கடைசியாக அவர் திருவண்ணாமலை அடிவாரத்தில் வந்து தங்க அங்கு ஒரு ஆசிரமம் உருவானது. காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சம்ஸ்கிருத பண்டிதர் ஒருவர் அவரை ரமண மகரிஷி என்றழைக்க ஆரம்பிக்க பின் அந்தப் பெயரே நிலைத்தது.

அதிகம் பேசாமல், அடுத்தவரைக் கவர யுக்திகள் எதையும் கையாளாமல், ஆன்ம ஞானத்தைத் தவிர வேறெதையும் முக்கியம் என்று நினைக்காமல் தன் தனிஉலகில் வாழ்ந்த அந்த மகானைச் சுற்றி ஒரு உலகம் உருவாக ஆரம்பித்தது. உண்மையான ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் காந்தமாக பல மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் அவரால் ஈர்க்கப்பட்டார்கள். எந்த மகாசக்தியையும் உடையவராகத் தன்னை எப்போதுமே காட்டிக் கொள்ளாத அவருடைய மகாசக்தியைப் பலர் பல விதங்களில் உணர ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட சில அனுபவங்களைப் பார்ப்போம்.

ரமண மகரிஷிக்கு எதையுமே யாருமே வாய்விட்டுச் சொல்ல வேண்டி இருந்ததில்லை. சொல்லாமலே அறியும் சக்தியை அவர் பெற்றிருந்தார். குலுமணி நாராயண சாஸ்திரி என்ற பண்டிதர் வால்மீகியின் ராமாயணத்தை சம்ஸ்கிருத மொழியில் உரைநடை வடிவில் படைத்திருந்தார். அதை ரமண மகரிஷிக்குப் படித்துக் காட்டும் ஆவல் அவருக்கு இருந்தது. அதற்காக திருவண்ணாமலை கிளம்பிய அவர் ரமணருக்கு சமர்ப்பிக்க சில வாழைப்பழங்களையும் வாங்கிக் கொண்டு போனார். போகிற வழியில் சின்ன விநாயகர் கோயில் ஒன்றைப் பார்த்த அவருக்கு ஒரு வாழைப்பழம் விநாயகருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படித் தோன்றிய போதும் கோயிலுக்குள் நுழையாத அவர் ரமண மகரிஷியைச் சந்திக்க விரைந்தார்.

ரமணரைக் கண்டு வணங்கி அந்த வாழைப்பழங்களைக் காணிக்கையாக வைத்தார். அதை ஆசிரமத்து ஊழியர் எடுத்து உள்ளே கொண்டு போக முயன்ற போது ரமணர் சொன்னார். “பொறு. விநாயகருக்குத் தர நினைத்திருந்த வாழைப்பழத்தை அவர் எடுத்துக் கொள்ளட்டும்”. நாராயண சாஸ்திரி வியந்தபடி ஒரு வாழைப்பழத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டார்.

அவர் வியப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே ரமணமகரிஷி அவரிடம் சொன்னார். “நீங்கள் ராமாயணத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கலாமே!” நாராயண சாஸ்திரியின் வியப்பு பிரமிப்பாக நீண்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒரு முறை பிஜி தீவில் குடிபெயர்ந்திருந்த சில ஹிந்திக்காரர்கள் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் “உங்கள் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் வந்திருக்கின்றன. ஆனால் ஹிந்தியில் வரவில்லையே” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

ரமண மகரிஷி சொன்னார். “கொஞ்சம் பொறுங்கள். ஹிந்தியில் என் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்”

உடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவர்களுக்குத் தெரிந்து ஹிந்தியில் ரமணரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் ரமணர் சொன்னபடியே சில நிமிடங்களில் வெங்கடேஸ்வர சர்மா என்பவர் ரமணரின் சரிதத்தை ஹிந்தியில் எழுதியிருந்து அதைச் சமர்ப்பிக்க நேரடியாக அங்கு வந்து சேர்ந்தார்.

மற்றவர்கள் எண்ணங்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வையும், அவர்களது கேள்விகளுக்குப் பதிலையும் தானாகவே ரமண மகரிஷி தருவது பலரது அனுபவமாக இருந்திருக்கிறது.

வருடா வருடம் ஆசிரம பக்தர்கள் அவரது பிறந்த நாளில் அன்ன தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். கோபாலப் பிள்ளை என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணரின் தீவிர பக்தர். அவர் தானும் பணம் போட்டு மற்ற பக்தர்களையும் தொடர்பு கொண்டு பணம் வசூல் செய்து அந்த அன்னதானத்திற்கு அரிசி வாங்கித் தருவது வழக்கம். அவர் தொலை தூரத்திற்கு மாற்றலாகிப் போய் விடவே அந்த ஒரு வருடம் அன்னதானம் எப்படிச் செய்வது என்ற கவலை ஆசிரம பக்தர்களுக்கு ஏற்பட்டது.

ஒருவர் ரமணரிடம் சென்று “சென்ற வருடம் பத்து மூட்டை அரிசியில் அன்ன தானம் செய்தோம். இந்த முறை ஒரு மூட்டை அரிசி கூட தேறாது போல இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதைக் கேட்டுக் கொண்ட மகரிஷி எதுவும் சொல்லவில்லை. அன்றைய தினம் நள்ளிரவில் ஆசிரமக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்த போது இரண்டு வண்டிகளில் அரிசி மூட்டைகள் வந்திருந்தன. ஆசிரமத்து ஆட்கள் அது வரை பார்த்திராத ஒரு புதிய நபர் தன் பெயரைக் கூடத் தெரிவிக்காமல் இந்த அரிசியைத் தானமாகத் தருவதாக முன்பே மனதில் வேண்டிக் கொண்டிருந்ததாகவும் அதை இப்போது நிறைவேற்றுவதாகவும் கூறி அரிசியைத் தந்து விட்டுச் சென்றார். இது போல பல முறை ஆசிரமத்தின் அத்தியாவசியத் தேவைகள் குறைபடும் போதெல்லாம் ஆச்சரியகரமாக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவ ஞானி இந்தியாவில் உண்மையான யோகி ஒருவரைக் காணும் பொருட்டு நம் நாட்டுக்கு வந்தவர். பல விதமான ஆட்களைப் பார்த்து விட்டுக் கடைசியாக ரமணரைக் கண்டார். அவரைக் காணும் முன் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனதில் பட்டியல் இட்டுக் கொண்டு வந்தவர் ரமணர் முன் அமர்ந்தார். ரமணர் அவரைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ரமணரின் சக்தி வாய்ந்த ஆன்மீக அலைகள் தன்னை ஆக்கிரமிப்பதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். அவரது கேள்விகள் ஒவ்வொன்றாக மனதிலிருந்து விடுபட்டன. பின் பேரமைதி அவரைச் சூழ ஆரம்பித்தது. அவர் அந்தக் கணமே ரமண மகரிஷியே தான் தேடி வந்த உண்மையான யோகி என உணர்ந்தார்.

ரமண மகரிஷி திருவண்ணாமலையை விட்டு வேறெங்கும் செல்லா விட்டாலும் கூட வெளியூர் அல்லது வெளிநாட்டிலும் கூட அவரைக் கண்டு பேசிய அனுபவங்கள் நிறைய உண்டு.

ராபர்ட் ஆடம்ஸ் (Robert Adams) என்ற அமெரிக்கர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர். இளமையிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் இருந்த அவர் ஏழு வயதாக இருக்கும் போது அடிக்கடி வெள்ளைத் தலைமுடியும், வெள்ளைத் தாடியும் கொண்ட ஒரு நபர் அவருக்குப் புரியாத ஒரு மொழியில் அவரிடம் உரையாடுவது போல் காட்சிகள் கண்டார். அதை அவர் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் தங்கள் மகனின் கற்பனைக் கதையாக நினைத்துக் கொண்டார்கள். சில வருடங்கள் கழித்து ராபர்ட் ஆடம்ஸ் ஆன்மிக புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கையில் புத்தகத்தில் அச்சிட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்த போது அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. அது அவர் அடிக்கடி முன்பு காட்சியில் பார்த்த உருவம் தான். அப்படி ஒரு மனிதர் உண்மையாகவே இருக்கிறார் என்பதும் அவர் இந்தியாவைச் சேர்ந்த ரமண மகரிஷி என்பதும் அப்போது தான் அவருக்குத் தெரிந்தது.

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி- தினத்தந்தி-02-10-2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

சென்னை தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 தேதி வரை நடக்கும் புத்தகத்திருவிழாவில் மகாசக்தி மனிதர்கள் தினத்தந்தி பதிப்பக கடை எண் 554லிலும், என் மற்ற நூல்கள் ப்ளாக்ஹோல் மீடியா கடை எண் 316லும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.  

Thursday, May 26, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 100



மைத்ரேயன் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்தில் காவல் இருந்தவர்களில் ஒருவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

“அங்கே நிலவரம் எப்படி இருக்கிறது?

“இங்கே ஒரு ப்ரச்னையும் இல்லை. ஏன் சார்?

“சந்தேகப்படுகிற மாதிரி யாராவது சமீப காலத்தில்...?

“இல்லை சார்

“நகரத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறதாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்திருக்கிறது. இரண்டு இடங்களில் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்திருக்கிறோம். இன்னும் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. தேடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது.....

சிறிது நேரத்தில் மூவரில் இருவர் அங்கிருந்து போய் விட்டார்கள். ஒருவன் மட்டும் மைத்ரேயனின் காவலுக்கு இருந்தான். ஆறரை மணி ஆன போது இருட்ட ஆரம்பித்தது. சிறுவர்கள் விளையாடி முடித்து விட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்தார்கள். மைத்ரேயனும், கௌதமும் தோள் மேல் தோளில் கைபோட்டு முன்னே செல்ல உளவுத்துறை ஆள் பின்னால் செல்ல ஆரம்பித்தான்.
சத்தமில்லாமல் நீல நிற மாருதி ஆல்டோ கார் ஒன்று வர சிறுவர்கள் சாலையின் ஓரத்திற்கு நகர்ந்தார்கள். உளவுத்துறை ஆள் திரும்பிப் பார்த்தான். கார் நின்றது. டிரைவர் சீட்டருகே அமர்ந்திருந்த கண்ணியமாய் தெரிந்த ஒரு இளம் பெண் தலையை நீட்டிக் கேட்டாள். “இந்த விலாசம் எங்கே இருக்கிறது, சொல்ல முடியுமா?

மைத்ரேயனையும், கௌதமையும் சற்று நிற்க சைகை செய்து விட்டு உளவுத்துறை ஆள் காரை நெருங்கினான். சில சிறுவர்கள் போய்க் கொண்டே இருந்தார்கள். மைத்ரேயனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நண்பர்களுக்காக நின்றார்கள். சீட்டை நீட்டிய பெண் சிறிதும் எதிர்பாராத விதமாய் மின்னல் வேகத்தில் இன்னொரு கையில் இருந்த கைக்குட்டையால் அவன் மூக்கை மூட அவன் திகைப்புடனேயே மயக்கம் ஆகி கீழே சரிந்தான். அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் தேவும், இன்னொருவனும் பின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினார்கள். இருவர் கைகளிலும் மயக்கமருந்து தடவிய கைக்குட்டைகள் இருந்தன. தேவ் மைத்ரேயனையும், மற்றவன் கௌதமையும் அப்படியே மயக்கம் அடையச் செய்து காரில் தூக்கிப் போட்டுக் கொண்டார்கள். எல்லாமே ஒரு நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது.

மைத்ரேயனுக்கு முன்னால் காத்து நின்றிருந்த சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நின்றனர். என்ன நடக்கிறது என்பது அவர்கள் மூளைக்குள் எட்டுவதற்கு முன்னால் கார் மிக வேகமாய் அங்கிருந்து பறந்தது....

மூன்று நிமிடங்கள் பயணித்த பின் நீலநிற ஆல்டோ கார் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு தெருவில் சற்று இருட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த சிவப்பு நிற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை அடைந்தது. நீல நிற ஆல்டோ காரில் இருந்து சிவப்பு நிற ஸ்கார்ப்பியோ காருக்கு அனைவரும் மாறினர். அங்கிருந்து ஸ்கார்பியோ கார் வேகமாகப் பறந்தது.

கால் மணி நேரம் கழித்து தான் அக்‌ஷய்க்குத் தகவல் கிடைத்தது. வாழ்க்கையில் முதல்முறையாக அக்‌ஷய் பேரதிர்ச்சியை உணர்ந்தான். ஆனால் அந்தப் பேரதிர்ச்சியும் அவன் செயல்படுவதை நிறுத்தி விடவில்லை. அமைதியாக அலைபேசியை எடுத்தான். சிலரிடம் அவன் அலைபேசியில் அமைதியாகப் பேசியதைப் பார்த்து விட்டு அவனுடன் பயணித்த உளவுத்துறை ஆள் அசந்து போனான். “இவனால் எப்படி இவ்வளவு அமைதியாகப் பேச முடிகிறது.....

அக்‌ஷய் சொல்லி போலீசாரிடமிருந்து தகவல் எல்லா இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்த போது சிவப்பு ஸ்கார்பியோ கார் கோயமுத்தூர் தாண்டி வாளையார் சோதனைச்சாவடியை அடைந்திருந்தது. சோதனைச்சாவடி ஆள் தனியார் வாகனங்களை சந்தேகம் வந்தால் ஒழிய சோதித்துப் பார்ப்பதில்லை. அவன் அந்தக் கார் கடந்து செல்லும் முன் மெல்ல எட்டிப் பார்த்தான். வயதான தம்பதியர் இருவர் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவனுக்கு அவர்கள் காலடியில் மயங்கிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்கள் தெரிய வழியே இல்லை.

பிரதமர் இன்னும் கோவையை விட்டுப் போகவில்லை. அவர் இப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பாதுகாப்புக்காக போலீஸார் குவிந்திருந்தார்கள். அடுத்ததாக வெடிகுண்டு தேடும் முயற்சியில் கூடுதல் படை நகரின் பலபகுதிகளில் தேடிக் கொண்டிருந்தது. அது போக எஞ்சிய மிகக்குறைவான ஆட்களையே மைத்ரேயனைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்த நிர்வாகத்தால் முடிந்தது.   
எல்லா இடங்களுக்கும் கடத்தப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களுடன் தகவல் போய்ச் சேர்ந்தது. கோவையில் அனைத்து இடங்களிலும் ஓரளவு கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் சிவப்பு ஸ்கார்பியோ கார் கோவையைத் தாண்டி கேரளாவில் நீண்ட தூரம் போய் இருந்தது. வாளையார் சோதனைச்சாவடியில் உள்ள ஆள் தனக்குத் தகவல் கிடைத்த பின் தீவிர சோதனையை ஆரம்பித்தான். அவனிடம் ஒரு அதிகாரி இதற்கு முன் அப்படி இரு சிறுவர்களோடு எந்த வாகனமும் கடக்கவில்லை அல்லவா என்று கேட்ட போது சிறிதும் சந்தேகமில்லாமல் கடக்கவில்லைஎன்று உறுதியளித்தான்.


ருணுக்கு நினைவு திரும்பிய போது முன்பின் தெரியாத இடத்தில் ஒரு படுக்கையில் படுத்துக் கிடந்தான். தலை மிக பாரமாக இருந்தது. அவன் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். அவன் அருகில் சேகர் அமர்ந்திருந்ததைப் பார்த்த போது அதிர்ச்சியாகவும், ஆத்திரமாகவும் இருந்தது.  

சேகர் வஞ்சகமாகப் புன்னகை செய்தான்.  “உன் அப்பா...டாஎன்றான்.

“என் அப்பா என் வீட்டில் இருக்கிறார்என்றான் வருண். “நீ ஏன் என்னைத் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்கிறாய். நீ என்ன செய்தாலும் நான் உன்னை அப்பாவாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். உன்னுடன் வரவும் மாட்டேன்....

நான் உன்னை என்னோடு வர இப்போது கூப்பிடவில்லையே!””” என்று அலட்சியமாய் சேகர் சொன்னான்.

“பின் ஏன் என்னைக் கடத்தினாய்?வருண் சலிப்போடு கேட்டான்.

“உன் அந்த அப்பன் என்னவோ பெரிய ஆள் என்று பெருமையாய் அன்றைக்குச் சொன்னாயே. அவன் அப்படி பெரிய ஆள் தானா என்று சோதித்துப் பார்த்தேன்... கையாலாகாத ஆள் போல இருக்கிறானேசேகர் வெறுப்பைக் கக்கினான்.

முட்டாளே. அவர் பற்றி உனக்குத் தெரியாது.....

“அதான் தெரிந்து போய் விட்டதே. உன்னைக் கடத்தினேன். அவனால் தடுக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. உன்னை அவன் தேடிக் கொண்டிருந்த போது உன் தம்பியும் அந்த திபெத் பையனும் கூடக் கடத்தப்பட்டு விட்டார்கள்.  அதையும் உன் அந்த அப்பனால் தடுக்கவோ, கண்டுபிடிக்க முடியவில்லை....இகழ்ச்சியாக சேகர் சொன்னான்.

வருண் நிலைகுலைந்து போனான். அவன் தம்பியும், மைத்ரேயனும் கூட கடத்தப்பட்டு விட்டார்களா? அவன் அப்பா அவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அந்தக் காரியம் நடந்து விட்டதா? அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு மைத்ரேயனைக் கூட்டிக் கொண்டு வந்தது வீணாகி விட்டதா?    அப்பா பாதுகாப்பார் என்று நம்பிய மனிதர்கள் முன் அப்பா தலைகுனிந்து நிற்க வேண்டுமா? இப்படி எல்லாம் நடக்க இந்தப் பாவிக்குப் பிறந்த நான் காரணமாகி விட்டேனா?

வருண் சுய பச்சாதாபத்தில் இருந்த போது சேகரின் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினான். பரிச்சயம் இல்லாத ஒரு குரல் சொன்னது. “அவனை அதிக நேரம் இனி வைத்துக் கொள்ள வேண்டாம். முடிந்த அளவு சீக்கிரமாய் அனுப்பி நீயும் ஊரை விட்டுப் போய்விடு

அந்தச் செய்தியுடன் பேச்சு முடிந்து போனது. பேசியது யார் என்ன என்று தெரியாவிட்டாலும் அது தேவ் தரப்பு ஆள் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது.

வருண் சேகரிடம் கேட்டான். “எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?

“என்ன?

“என்னைக் கொன்றுவிடு வெறுப்புடன் வருண் சொன்னான்.

அந்த வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன். சாக உதவி வேண்டுமானால் செய்கிறேன்.என்று சொன்ன சேகர் தன் சட்டைப்பையில் இருந்து சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து மகன் சட்டைப் பையில் திணித்தான். “இந்தப் பணத்தை வைத்து எலி விஷத்திலிருந்து சயனைடு வரை எது வேண்டுமானாலும்  வாங்கி சாப்பிட்டு நீ சாகலாம்”  என்று சொல்லி விட்டு சேகர் மயக்கமருந்து கைக்குட்டையால் மறுபடி வருணை மயக்கமடையச் செய்தான்.

வருண் மறுபடி விழித்த போது ஒரு தெருவோரமாக விழுந்து கிடந்தான். நன்றாக இருட்டி இருந்தது.  வருண் எழுந்து நடந்தான். அவன் வீட்டுக்கு ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் தான் அது. அவன் சட்டைப் பையில் சேகர் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது. வருண் மனம் ரணமாகி இருந்தது. அவனால் அவன் அப்பாவுக்கு எத்தனை பிரச்னை? இப்போது அப்பாவின் சொந்த மகனும் கூட மைத்ரேயனுடன் சேர்ந்து கடத்தப்பட்டு விட்டான். அவன் மீது அன்பு மழை பொழிந்த அப்பாவுக்கு எவ்வளவு பெரிய சோகத்தையும், அவமானத்தையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.... இந்த நீச்ச மனிதனுக்கு மகனாய் பிறந்ததால் தான் நேசிப்பவருக்கும் எந்த நன்மையும் செய்ய முடிவதில்லையோ…..

சற்று தூரத்தில் ஒரு மருந்துக் கடை தெரிந்தது. எலிவிஷம் முதல் சயனைடு வரை வாங்கி சாப்பிட்டு சாகலாம் என்று சேகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. மருந்துக்கடைக்குப் போய் அவன் எலி விஷம் வாங்கினான். சிறிது தூரம் போய் ஒரு கடையில் குளிர்பானம் வாங்கினான். குளிர்பானத்தோடு சேர்ந்து  எலிவிஷத்தை விழுங்கினான்.

கடைசியாய் ஒரே ஒரு ஆசை அவன் மனதில் இருந்தது. அவன் அப்பா மடியில் சாக வேண்டும்..... இனியொரு ஜென்மம் இருக்குமானால் அவருக்கே மகனாய் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சாக வேண்டும். உயிர்பிரியும் நேரத்தில் செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாகப் பலிக்குமாம்...

அவன் அலைபேசியை எடுத்து அக்‌ஷயை அழைத்தான். அக்‌ஷயின் குரல் எச்சரிக்கையுடனும், கவலையுடனும் ஒலித்தது. “ஹலோ... வருண்?

“அப்பா... என்னை விட்டு விட்டார்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

“இப்போது தான் வீட்டுக்கு வந்தேன் வருண்....

“அங்கேயே இருங்கள்ப்பா..... நான் வந்து விடுகிறேன்....


இணைப்பைத் துண்டித்த வருண், எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை நிறுத்தி அதில் ஏறினான்.

(தொடரும்)
என்.கணேசன்      

Thursday, May 19, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 99

சான் பைலகுப்பே மடாலயத்திற்கு அன்று காலை வந்திருந்த மூன்று வாகனங்களையும் ஆர்வத்துடன் பார்த்தார். இரண்டு பஸ்கள். ஒரு டெம்போ ட்ராவலர். பஸ்கள் தமிழ்நாட்டையும், கேரளாவையும் சேர்ந்தவை. டெம்போ ட்ராவலர் கர்நாடகா. பயணிகள் கிட்டத்தட்ட நூறு பேராவது இருப்பார்கள். இந்த சந்தடியில் இன்று தப்பித்து விட வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். ஆனால் கண்காணித்துக் கொண்டிருந்த ஒற்றர்களும் அதை ஊகித்தது போல் இருந்தது. அவர்களில் ஒருவன் அங்கே கலைப் பொருள்கள் விற்கும் கடையில் வேலைக்கே சேர்ந்து விட்டிருந்தான். மற்ற இருவரில் ஒருவன் இளநீர் விற்பவனாகவும், இன்னொருவன் பிச்சைக்காரனாகவும் வேடத்தில் இருந்தார்கள். மூன்று பேரும் கண்கொத்திப் பாம்பாக அந்த வண்டிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மற்ற சந்தர்ப்பமாக இருந்தால் அவர் துணிந்து தப்பிக்க முயற்சி எடுத்திருப்பார். ஆனால் மைத்ரேயரை அவர் மூலமாக யாரும் அடைந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. 

பகல் ஒரு மணிக்கு முன் சுற்றுலாப்பயணிகள் கிளம்பினார்கள். கும்பலாக அவர்கள் வெளியே போய் பஸ்களில் ஏறியதில் ஒற்றர்கள் சந்தேகம் கொண்டது போல் இருந்தது. ஏனென்றால் மூன்று வாகனங்களும் போன பிறகு அந்த மூன்று ஒற்றர்களையும் காணோம். அந்த மூன்றில் ஒன்றில் ஆசான் ஏறிப்போயிருக்கலாம் என்று அவர்கள் எண்ணி விட்டார்களோ என்னவோ? மெல்ல ஆசான் வெளியே வந்து பார்த்தார். சிறிது தூரம் காலார நடந்து பார்த்தார். யாரும் பின்னால் இல்லை. அவருக்கு இது போதிசத்துவரின் அருளாகவே தோன்றியது. பைலகுப்பே மடாலய பிக்குகளிடம் விடைபெற்றுக் கொண்டு அவர் மைத்ரேயரைச் சந்திக்கக் கிளம்பி விட்டார்.

ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏமாந்து போய் விட்டதாக ஆசான் நம்பும்படி செய்து விட்டு கிளம்பிப் போய்விடும்படி முன்பே லீ க்யாங் ஒற்றர்களிடம் உத்தரவிட்டிருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மைத்ரேயனையே கண்டுபிடித்து விட்ட பிறகு ஆசானைக் கண்காணிப்பது அர்த்தமற்றது என்றாலும் அந்தக் கண்காணிப்பைக் கைவிட்டு விட்டால் ஆசான், அக்‌ஷய் இருவருக்கும் சந்தேகம் பிறக்கலாம் என்பதால் பழையபடியே கண்காணிப்பைத் தொடர்ந்து தக்க சமயத்தில் போய்விட லீ க்யாங் சொன்னபடியே ஒற்றர்கள் போய் விட்டிருந்தார்கள். இது தெரியாத ஆசான் மைத்ரேயனை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தையும் அறியாமல் சந்தோஷமாக கோயமுத்தூர் நோக்கிப் பயணமானார்.


ன்று மதியம் இரண்டரை மணிக்கு ஒரு அனாமதேய அழைப்பு போலீசாருக்கு வந்தது. கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளும்படியும் அழைத்தவன் சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தான். போலீஸார் சுறுசுறுப்பானார்கள். அந்த அழைப்பு ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்த போலீசாருக்கு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த இடத்தில் இருந்து அழைத்தவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


சிறிது நேரத்தில் ஒரு பூங்காவில் விழுந்து கிடந்த ஒரு டிபன்பாக்ஸில் இருந்து மின்கம்பி நீட்டிக் கொண்டிருப்பதாகவும், சந்தேகமாய் இருக்கிறதென்றும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். உடனே வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே விரைந்தார்கள். அது உண்மையாகவே வெடிகுண்டு தான் என்பதைக் கண்டுபிடித்து அங்கேயே அதை அவர்கள் செயலிழக்க வைத்தார்கள். சுமார் மூன்றரை மணிக்கு ஒரு கோயிலுக்கு வெளியே கிடந்த பூக்கூடையில் சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் ஏதோ ஒரு உருண்டையான பொருள் இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்றவர்கள் அதுவும் ஒரு வெடிகுண்டு என்பதைக் கண்டுபிடித்து அதையும் செயல் இழக்க வைத்தார்கள்.



ணி மூன்றே முக்காலுக்கு வருண் வீட்டை விட்டு டியூஷனுக்கு பைக்கில் கிளம்பினான். டியூஷன் படிக்கும் இடத்தை அவன் அடைந்த போது வெள்ளை நிற இன்னோவா காரில் இருந்து இறங்கி ஒருவர் ஒரு சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ விலாசம் தேடுகிறார் என்று நினைத்த வருண் பைக்கை நிறுத்தி ”என்ன விலாசம் தேடுகிறீர்கள்” என்று கேட்டான்.

அந்த ஆள் அந்தச் சீட்டை நீட்டிக் கொண்டே அவனை நெருங்கினார். அருகில் வந்தவுடன் அந்தச் சீட்டை வாங்கி வருண் பார்த்தான். அது பக்கத்து தெருவில் உள்ள ஒரு கடையின் பெயர். “இது பக்கத்துத் தெருவில் தான் இருக்கிறது சார்” என்று புன்னகையுடன் கைகாட்டிய வருணுக்கு நன்றி சொல்லி விட்டு அவர் திரும்பினார். வருண் தலையை ஆட்டி விட்டுத் திரும்பி பைக்கை நிறுத்துகையில் பின்னால் இருந்து மயக்கமருந்து தடவிய கைக்குட்டையுடன் ஒரு கை அவன் முகத்தை அடைந்தது. அடுத்த கணம் வருண் சுயநினைவை இழந்தான்.

அவனை அப்படியே அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு அந்த ஆளும், சேகரும் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினார்கள். அந்த வெள்ளை நிற இன்னோவா கார் அந்தத் தெருக்கோடியை அடைந்த போது வருணின் நண்பன் தன் மோட்டார் சைக்கிளில் அந்தத் தெருவில் திரும்பினான். அந்த இன்னோவா காரைப் பார்த்துக் கொண்டே வந்த அவனுக்கு காரினுள்ளே தன் நண்பனைப் போன்ற தோற்றம் உள்ள ஒருவனைப் பார்த்தது போல் தோன்றியது. கார் வேகமாக அவனைக் கடந்து விட்டது. டியூஷன் ஆசிரியர் வீட்டை அவன் அடைந்த போது வருணின் பைக் நின்று கொண்டிருந்தது. அப்போதும் அவனுக்கு அதில் அசாதாரணமான எதையும் நினைக்கத் தோன்றவில்லை. தன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த அவன் உள்ளே வருண் இல்லாமல் போன போது தான் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டான். உடனே வருணின் வீட்டுக்குப் போன் செய்தான்....



க்‌ஷய்க்கு கேள்விப்பட்டதை ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கடத்துவது எப்போதும் நடப்பது தான். ஆனால் கொடுக்கப் பெரிதாக எதுவுமே இல்லாத அவன் மகனை யாராவது கடத்துவார்களா? என்ன தான் நடக்கிறது.

கணவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த சஹானா திகைப்புடன் “என்னங்க” என்று கேட்டாள். அவன் சொன்னதும் அவளாலும் நம்ப முடியவில்லை. “ஆள் மாறிக் கடத்தி விட்டார்களா என்ன! ” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

யார் கடத்தியிருப்பார்கள் என்று முதலில் யூகிக்க முடிந்தது மரகதத்திற்குத் தான். அவள் மகனைத் தவிர வேறு யாரும் இந்த ஈனச்செயலைச் செய்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாய் சேகரின் வரவைப் பற்றியும், அவன் வருணைச் சந்தித்துப் பேசியது பற்றியும் அவர்களிடம் சொன்னாள்.

சஹானா வாயடைத்துப் போனாள். அக்‌ஷய் அதிர்ச்சியுடன் கேட்டான். “இதை ஏன் நீங்கள் முதலிலேயே எங்களிடம் சொல்லவில்லை....”

“வருண் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான். எதிர் வீட்டிலிருந்து அவன் போய் விட்டதால் முடிந்து போன ஒன்றைச் சொல்லி ஏன் வீட்டு நிம்மதியைக் கெடுக்க வேண்டும் என்று நினைத்தான்.....” என்றவள் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் விரிவாக அப்படியே சொன்னாள்.

வருண் பயத்துடன் ”அப்பா அநியாயத்துக்கு நல்லவர். இந்த ஆள் அவரிடம் அழுது புலம்பி தன் பழைய நடவடிக்கைக்கு ஏதாவது கதை சொல்லி என் மகனை என்னோடு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டால் மனம் இளகி என்னிடம் “என்ன இருந்தாலும் அவர் உனக்கு அப்பா. பாவம் அவருக்கு யாருமில்லை. நீ அவர் கூடப்போ..... எங்களைப் பார்க்கத் தோன்றும் போது வந்து பார்த்து விட்டுப் போ” என்கிற மாதிரி சொல்லவும் செய்யலாம்...” என்று சொன்னதாக மரகதம் தெரிவித்த போது அக்‌ஷயின் கண்கள் கலங்கின. “வருண் என் மகன்.... அவனை நான் எவன் கூடவும் அனுப்ப மாட்டேன்.....” என்று குரல் உடைந்து சொன்னான்.

மரகதம் சொன்னாள். “எனக்கும் தெரியும். ஆனால் அவன் ரொம்பவே பயந்து போயிருந்தான். “அந்த ஆள் கூடப் போகிறதை விட நான் செத்துப் போவது நல்லது பாட்டி. நான் என் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பாட்டி.....”ன்னு சொன்னான்...”

அக்‌ஷய்க்குத் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சஹானா அதிர்ச்சி தாளாமல் சிலை போல அமர்ந்திருந்தாள்.

துக்கப்படும் நேரம் இதுவல்ல என்று உடனடியாக சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்ட அக்‌ஷய் “பெரியம்மா நீங்கள் இவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். பேச வையுங்கள்....” என்று மரகதத்திடம் சொல்லி விட்டு வெளியே விரைந்தான்.

மைத்ரேயனும், கௌதமும் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு மைதானத்தில் உளவுத்துறை ஆட்கள் மூவர் இருந்தார்கள். அதனால் அவர்களுக்காக பயப்பட வேண்டியதில்லை. இந்த கடத்தலையே சேகர் செய்யாமல் வேறு யாராவது செய்திருந்தால் மைத்ரேயனை மையம் வைத்து கூட செய்யப்பட்டதாக இருக்குமோ என்ற கோணத்தையும் யோசிக்க வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்ட அக்‌ஷய் அந்த வீதியிலும் பக்கத்து வீதியிலும் இருந்த மற்ற நான்கு உளவுத்துறை ஆட்களை அழைத்து வருண் கடத்தப்பட்டதைத் தெரிவித்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் தேவுக்குச் செய்தி போய் சேர்ந்தது. “அக்‌ஷயும் நான்கு உளவுத்துறை ஆட்களும் இப்போது வருணைத் தேடும் வேலையில் நாலா பக்கமும் போயிருக்கிறார்கள். இப்போது தெருவில் போகும் எல்லா வெள்ளை நிற இன்னோவா கார்களையும் போலீசார் சோதனை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....”

“இப்போது மைதானத்தில் எத்தனை பேர் காவலுக்கு இருக்கிறார்கள்.”

“மூன்று பேர்”

தேவ் புன்னகைத்தான்.



ரண்டு வெடிகுண்டுகளுக்கு மேல் வெடிகுண்டுகளைக் கைப்பற்ற முடியாத கவலையில் காவல் துறை இருந்த போது ஏதோ ஒரு குப்பை மேட்டுப் பகுதியில் ஒரு வெடிகுண்டு வெடித்த செய்தி கிடைத்தது. பிரதமரின் போக்குவரத்து வழியில் முன்பே காவல்துறை சோதனைகள் செய்து விட்டிருந்ததும், தற்போதும் பலத்த காவல் இருப்பதும், அந்த தடங்களில் எந்த வெடிகுண்டும் வெடிக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை தந்த போதும் அவர் நகரில் இருக்கையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது காவல்துறையின் கையாலாகாத்தனம் என்று ஊடகங்கள் பேசத் தொடங்கின. சென்னையில் இருந்து முதல்வரும் இனி எந்த வெடிகுண்டும் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கண்டிப்பான உத்தரவு போட்டார்.

வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் உளவுத்துறை ஆட்களை இந்தப் பணியில் ஈடுபடுத்த இரு துறைகளும் சேர்ந்து முடிவெடுத்தன.

“மைத்ரேயனுக்கு ஆபத்து என்கிற வகையில் இது வரை ஏதாவது தகவல் அல்லது ஆதாரம் கிடைத்திருக்கிறதா?” என்று ஒரு அதிகாரி கேட்க “இல்லை” என்ற பதில் வந்தது.

“அப்படியானால் அந்தக் கண்காணிப்பு ஆட்களிலும் சிலரை இந்த வேலைக்குத் திருப்பலாம்” என்ற உத்தரவு பிறந்தது.

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, May 18, 2016

மகாசக்தி மனிதர்கள் நூல் விமர்சனம்!

ன்று (18-05-2016) தினத்தந்தியில் என் மகாசக்தி மனிதர்கள் நூலின் விமர்சனம் வந்துள்ளது.


ன்மிகம் என்னும் கடலில் அதன் ஆழம் வரை சென்று முத்து எடுத்த அரிதான மனிதர்களையே ‘மகாசக்தி மனிதர்கள்’ என்று போற்றுகிறோம். 

அத்தகைய மனிதர்களைப் பற்றி தினத்தந்தி வெள்ளி மலரில் என்.கணேசன் எழுதிய தொடர் இப்போது நூலாக வெளி வந்துள்ளது. 

இந்த நூலில் ஆதிசங்கரர், த்ரைலைங்க சுவாமிகள், மகாஅவதார் பாபாஜி, யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, ஷீரடி சாய்பாபா போன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கூறுகிறார்.

மேலும், நினைக்கும் மணத்தையும், பொருளையும் வரவழைத்த விசுத் தானந்தர், விஷத்தை உண்ணும் யோகி நரசிங்க சுவாமி, கண்களைக் கட்டிக் கொண்டு கரும்பலகையில் எழுதுவதைப் படித்துக் காட்டும் குடா பக்ஸ், அமெரிக்காவில் மழையை வரவழைத்த சுவாமி லக்ஷ்மண்ஜு ரைனா, உணவில்லாமல், நீரில்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிரஹலாத் ஞானி, இதயம் நின்றும் இறக்காத சுவாமி ராமா, அந்தரத்தில் மிதக்கும் தமிழ்நாட்டு யோகி சுப்பையா புலவர், மண்ணில் 40 நாட்கள் புதைந்து உயிரோடு வெளிவந்த யோகி ஹரிதாஸ், வெறும் கைகளால் புலிகளை அடக்கிய சோஹம் சுவாமி, மற்றவர்களின் எண்ணங்களையும் அறிய முடிந்த ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, இறந்த மூன்று நாட்களில் உயிர்தெழுந்த ஷீரடி சாய்பாபா என்று மகான்கள் வாழ்வில் நடந்த ஏராளமான செய்திகளை ஒரு நாவலைப்போல சுவாரசியத்துடன் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. 

நன்றி: தினத்தந்தி 18.05.2016

Monday, May 16, 2016

பிபிசி கவனத்தை ஈர்த்த யோகி!

மகாசக்தி மனிதர்கள் 58

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஆந்திராவில் பிறந்து வளர்ந்த ரமானந்தனுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்த்து. ஆனால் இமயமலையும், அதன் சக்தி வாய்ந்த யோகிகளும் அவர் மனதை நிறையவே ஈர்க்க அவர் குடும்பத்தை விட்டு இமயமலைக்குப் பயணமானார். மகன் மனதை மாற்ற முடியாத அவருடைய தந்தையாருக்குத் தன் பிள்ளை அங்கே போய் கஷ்டப்படுவானோ என்று கவலை அதிகம் இருந்தது. செல்வந்தரான அவர் நிறைய சொத்துக்கு அதிபதியாக இருந்தார். அதனால் எங்கிருந்தாலும் விலாசம் தெரிவிக்கும்படியும் செலவுக்குப் பணம் அனுப்புவதாகவும் அவர் மகனிடம் சொல்லி அனுப்பினார்.

இமயமலையில் பல சாதுக்களையும், யோகிகளையும் கண்டு அவர்களில் சிலரிடம் சில காலம் தங்கிக் கற்ற ரமானந்தன் கடைசியில் கங்கை உற்பத்தியாகும் கங்கோத்ரியில் இருந்து சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள உத்திரகாசியில் ஒரு குகையில் நிரந்தரமாகத் தங்கி தியானங்களில் லயிக்க ஆரம்பித்தார். சில நாட்களுக்கு ஒரு முறை நகருக்கு வந்து, அவர் அளித்திருந்த விலாசத்திற்கு தந்தை அனுப்பி வைத்திருக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதில் சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டு மறுபடி குகைக்குச் சென்று விடும் வழக்கத்தை சில காலம் ரமானந்தன் பிற்பற்றினார்.

ஒரு துறவி ரமானந்தனின் இந்த வழக்கத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த இளைஞனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  ஒரு நாள் ரமானந்தனை அழைத்து அவர் சொன்னார். எல்லாவற்றையும் விட்டு விட்டு இமயம் வந்த உனக்கு உன் தந்தையின் பணத்தை விட முடியவில்லையா? எத்தனை காலம் தான் உன் தந்தை உனக்குப் பணம் அனுப்புவார்? அதன் பின் என்ன செய்வாய்?

அந்தக் கேள்வி ரமானந்தனை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. தந்தை, மனைவி, குழந்தை குடும்பம் அத்தனையும் விட்டு விட்டு வந்தாலும் தந்தையின் பணத்தை விடாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பது நியாயமா? இந்தத் துறவி கேட்டது போல இது எத்தனை காலம் நடக்கும்? இமயத்தில் எத்தனையோ சாதுக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் அனுப்புகிறார்கள்? அவர்களால் வாழ முடிவதில்லையா?

அன்றிலிருந்து தந்தையின் பணம் பெற்றுக் கொள்வதை ரமானந்தன் நிறுத்திக் கொண்டார். மகனுக்கு அனுப்பிய பணம் திரும்பி வந்தவுடன் அவர் வேறு இடத்திற்குப் போயிருக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் வேறு விலாசம் தெரிவிக்கப்படவில்லை, ரமானந்தனிடம் இருந்து பின் எந்தத் தகவலும் இல்லை என்றான போது ரமானந்தன் இறந்தே போய் விட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணி விட்டார்கள்.

ரமானந்தன் தியானத்தில் தீவிரமடைந்தார். அவர் வசிக்கும் குகைக்கு கரடிகளும், பாம்புகளும் வரும் என்றாலும் அவை தியானத்தில் இருந்த அவருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. ரமானந்தனின் தியானம் ஆழப்பட்டது. அது போன்ற ஒரு தியான நேரத்தில் தன்னால் உயிரோடு மண்ணில் புதைந்திருக்க முடிவது போல ஒரு காட்சி தோன்றி மறைந்தது.

ரமானந்தனுக்கு அதை முயன்று பார்க்கும் ஆசை ஏற்பட்டது. அது நிகழ்ந்தது 1948 ஆம் ஆண்டு. மற்றவர்கள் உதவியுடன் அந்த ஆண்டின் இறுதியில் 24 மணி நேரம் மண்ணில் புதைந்திருந்து ரமானந்தன் சாதனை செய்தார்.  1951 ஆம் ஆண்டில் 28 நாட்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருக்க அவரால் முடிந்தது. இந்த மகாசக்தியைப் பெற்ற பிறகு ரமானந்தன், ரமானந்த யோகி என்ற பெயராலேயே மற்றவர்களால் அழைக்கப்பட்டார்.

இது போன்ற சாதனைகளால் அவர் பெயர் பிரபலமாகவே விஞ்ஞானிகள் கவனம் அவர் பக்கம் திரும்பியது. 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி புது டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (All India Institute of Medical Sciences, New Delhi) அவரை வைத்து உயர் மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள்.  இந்தப் பரிசோதனை அவரை மண்ணில் புதைய வைத்து நடக்கவில்லை. மாறாக அவர் அது போல் மண்ணில் புதைந்து இருக்கும் போது மூச்சு நிறுத்தப்பட்டு செய்யும் இதயத்துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு நிறுத்தங்களை வெளியில் இருக்கும் போதே செய்து காட்டும் பரிசோதனைகளாக இருந்தன. ECG  போன்ற இதயத் துடிப்பு ஆராய்ச்சிக் கருவிகளை வைத்து இரு சிறப்பு மருத்துவர்கள் (Drs. Wenger and Bagehi) பரிசோதித்த போது ரமானந்த யோகி இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு குறைத்துக் கொண்டே வந்து சில வினாடிகள் நிறுத்தியும் காட்டினார். அதே பரிசோதனையின் தொடர்ச்சியாக புதுடெல்லியின் இர்வின் ஆஸ்பத்திரியில் ஒரு ரேடியாலஜி சிறப்பு மருத்துவர் (Dr. N. G. Gadekar) முன்னிலையிலும் நவீன உபகரணங்கள் கண்காணிப்பில் ரமானந்த யோகி இதை நிகழ்த்திக் காட்டினார்.

இந்த அறிவியல் அங்கீகாரம் மற்ற விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. சர்வதேச மூளை ஆராய்ச்சி நிறுவனத்தின் ( International Brain Research Organization) உறுப்பினரும் இந்தியாவைச் சேர்ந்தவருமான ஆனந்த் என்பவர் அதே நிறுவனத்தைச் சேர்ந்த சினா என்பவருடன் சேர்ந்து ரமானந்த யோகியை ஆராய்ச்சி செய்தார். 1961 ஆம் ஆண்டில் அவர் காற்று புகாத கண்ணாடி மற்றும் உலோகப் பெட்டிகளில் ரமானந்த யோகியை அடைத்து வைத்து இரண்டு ஆராய்ச்சிகள் நடத்தினார்.

அவர் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச ஆக்சிஜன் ஒரு மணிக்கு 19.5 லிட்டர் ஆகும். முதல் பரிசோதனை எட்டு மணி நேரம் நடந்தது. இதில் சராசரியாக மணிக்கு 12.2 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே அவர் பயன்படுத்தினார். இரண்டாவது பரிசோதனை பத்து மணி நேரம் நடந்தது. இதில் அவர் சராசரியாக மணிக்கு 13.3 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தினார். இரண்டு பரிசோதனைகளிலும் ஆரம்பத்தில் இருந்து ஆக்சிஜன் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார். அதற்கேற்றாற் போல கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

குறைந்தபட்ச ஆக்சிஜன் உட்கொள்வது குறையும் பட்சத்தில் ஒரு மனிதன் உயிர் வாழ்வதே கஷ்டம் என்பது ஒரு பக்கம் இருக்க ஆக்சிஜன் குறையக் குறைய மூளை, இதயம் முதலான முக்கிய உறுப்புகளில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளும் மிக அதிகம். அப்படி இருக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆக்சிஜன் மட்டுமே உபயோகித்தும் எந்தப் பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லாமல் ரமானந்த யோகி இயல்பாக இருந்தது விஞ்ஞானிகளை வியக்க வைத்தது.    

இந்த ஆராய்ச்சியும் இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளும் பிபிசி தொலைக்காட்சியின் கவனத்தைக் கவர்ந்தது.  அந்தத் தொலைக்காட்சி ஆராய்ச்சியாளர் ஆனந்த் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் முன்னிலையில் மற்ற நிபுணர்கள் மேற்பார்வையில் இன்னொரு முறை அந்த ஆராய்ச்சியை நடத்த வேண்டிக் கொண்டார்கள். அவர் சம்மதிக்கவே 1970 ஆம் ஆண்டு ரமானந்த யோகியை காற்று புக முடியாத ஒரு பெட்டியில் வைத்து ஆறு மணி நேர ஆராய்ச்சி நடந்தது.  அதிநவீன உபகரணங்களைக் கொண்டு நடந்த இந்த ஆராய்ச்சியின் முடிவில் அவரை பிபிசி குழு பேட்டி கண்டது.

அந்த ஆராய்ச்சியின் போது அவர் என்ன செய்கிறார், எந்த விதமான அனுபவங்களை உணர்கிறார் என்று கேட்ட போது ரமானந்த யோகி சொன்னார். “இரு புருவங்களுக்கு மத்தியில் கவனத்தை நிறுத்துவேன். சில முறை மூச்சு விட்ட பின் ஒரே இருட்டாகி விடும். எப்போதாவது ஒன்றிரண்டு ஒளிப் பிழம்புகள் நகர்வது போல் தெரியும்......”. 

தியானம், துறவு வாழ்க்கை என்று வாழ்ந்த ரமானந்த யோகி தன் பிற்காலத்தில் மறுபடி இல்வாழ்க்கைக்குத் திரும்பினார் என்பது வித்தியாசமான தகவல். அவர் இறந்தே போய் விட்டார் என்று நினைத்திருந்த குடும்பத்தினருக்கு அவர் திரும்பி வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அப்படித் திரும்பிய பிறகு அவர் ஒரு மகனுக்கும் தந்தையானார். அவருடைய மகளும், மகனும் கூட யோகா பயின்றார்கள். துறவு வாழ்க்கை சலித்து இல்வாழ்க்கையில் ஈர்ப்பு ஏற்படும் போது, உலகத்தின் பார்வைக்காக துறவு வேடம் பூண்டு, ரகசியமாய் கள்ளத்தனமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் மறுபடி தன் முந்தைய வாழ்க்கைக்கே வெளிப்படையாகத் திரும்பிய அந்த நேர்மையில் ரமானந்த யோகி வித்தியாசமானவரே அல்லவா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 25.09.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

Thursday, May 12, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 98


”சம்யே மடாலயம் போயிருந்தேன். நாம் நியமித்திருந்த ஒற்றர்கள் இருவரும் அங்கில்லை. அங்கு மட்டுமல்ல, அவர்கள் வீடுகளிலும் இல்லை. எங்கே போயிருக்கிறார்கள் என்பது அவர்கள் வீட்டிலும் யாருக்கும் தெரியவில்லை. ஒற்றர்கள் என்பதால் ஏதோ வேலையாய் எங்காவது போயிருக்கலாம் என்று வீட்டவர்கள் நினைக்கிறார்கள்....” வாங் சாவொ அலைபேசி மூலம் சொன்ன போது லீ க்யாங் திகைக்கக்கூட இல்லை. அந்த ஒற்றர்கள் பார்க்கக் கிடைத்திருந்தால் தான் ஆச்சரியம்.... 

சீன உளவுத்துறையையே ஊடுருவ முடிந்த மாராவுக்கு இரண்டு கடைநிலை தற்காலிக ஊழியம் செய்யும் ஒற்றர்களை விலைக்கு வாங்க முடியாமல் போகுமா? அதனால் தான் சம்யே மடாலயத்துக்கு அவன் தைரியமாகப் போயிருக்கிறான்.

“சம்யே மடாலயத்து பிக்குகள் என்ன சொல்கிறார்கள்?”

“அவர்கள் மிகவும் பயந்து போயிருக்கிறார்கள். மாராவைப் பற்றிக் கேட்டேன். அவனை யாரும் பார்த்ததாகச் சொல்ல மாட்டேன்கிறார்கள். அதிகாலையில் பார்த்த போது கோங்காங் மண்டபத்தில் அரைகுறையாய் கருகிய ஒரு காவி உடை இருந்ததாகவும், அவர்கள் மடாலயத்து புத்தபிக்குகளில் இருவர் காணாமல் போயிருந்த்தாகவும் சொல்கிறார்கள்....”

“அந்தக் காவியுடை மைத்ரேயனுடையது என்று ஆசானிடம் அந்த தலைமை பிக்கு பேசிய பேச்சில் இருந்து தெரிகிறது. இப்போது உன்னிடம் அந்த ஆள் அதற்கு என்ன சொல்கிறார்?”

”அந்த காவி உடை மைத்ரேயர் சிலைக்குக் கட்டி வைத்திருந்த புனித ஆடை என்று அவர் மழுப்புகிறார்.....”

லீ க்யாங் புத்த பிக்குகள் சமாளிக்கும் விதத்தை ரசித்தான். ஆனால் அந்த ரசனை வாங் சாவொவுக்கு இருக்கவில்லை. மாறாக அவன் கோபப்பட்டான். “அது மைத்ரேயன் அந்த மடாலயத்தில் இருந்து அவன் உடுத்தி இருந்த உடையாகத் தான் இருக்க வேண்டும்..... நான் போய் விசாரித்த போது அவன் வந்ததையே அந்த பிக்கு ஒரேயடியாக மறுத்தது தான் தாங்க முடியவில்லை....”

லீ க்யாங் மெல்லச் சொன்னான். “நீ அவர் சொன்னவுடன் திரும்பி வந்து விடவில்லை. உன் ஆட்களை விட்டு மடாலயம் முழுவதும் தீவிரமாகத் தேடியிருக்கிறாய். அப்போதும் மைத்ரேயன் கிடைக்கவில்லையே....”

வாங் சாவொ ஒத்துக் கொண்டான். “அது தான் ஆச்சரியமாக இருக்கிறது....”

“பரவாயில்லை விடு. மைத்ரேயன் தான் நம் கையில் சிக்கப் போகிறானே....” லீ க்யாங் சமாதானப்படுத்தினான்.


சொந்த மகனையே கடத்த ஒத்துக் கொண்ட முதல் தகப்பனாக இருப்பதில் சேகருக்கு எந்த விதக் கூச்சமும் இல்லை. அப்படி மகனைக் கடத்தி தன் வலிமையையும், அவனுடைய வளர்ப்பு அப்பனின் கையாலாகத்தனத்தையும் அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிற ஆவலே அவனிடம் மேலோங்கி நின்றது. அதற்கு இந்த ஆள் ஐந்து லட்சம் வேறு தருகிறேன் என்கிறான். கரும்பு தின்னக் கூலியும் கொடுக்கும் அந்த ஆளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தேவ் சேகர் எடுத்திருந்த வீடியோக்களையும் மிக உன்னிப்பாகப் பார்த்தான். பின் அவனிடம் அந்தச் சிறுவனின் தினசரி நடவடிக்கைகள் பற்றிக் கேட்டான். சேகர் சொன்னான். காலை ஒன்பதரை மணி முதல் மதியம் ஒன்றரை மணி வரையிலும், மாலை நான்கு முதல் ஏழு மணி வரையிலும் அருகில் இருக்கும் மைதானத்தில் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவான் என்கிற தகவலை மனதில் குறித்துக் கொண்டான். இது தினமும் நடக்கிறது என்பதால் தன் திட்டத்தை நிறைவேற்ற மைதானமே சிறந்த இடம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டான்.

“அக்‌ஷய் மைதானத்துக்கு அவர்களுடன் போவானா?”

“ஆரம்ப நாள் போனான். இப்போதெல்லாம் போவதில்லை. ஆனால் காவலுக்கு இருக்கும் ஆட்களில் மூன்று பேர் கூடவே போகிறார்கள். அவர்கள் விளையாடி விட்டு வரும் வரை கூடவே இருக்கிறார்கள்....”

“உன்னால் உன் மகனை மாலை நான்கு மணிக்கு மேல் ஆறு மணிக்குள் கடத்த முடியுமா?”

“முடியும். அவன் மாலை நான்கு மணிக்கு டியூஷனுக்குப் போகிறான். ஆறு மணிக்கு டியூஷன் முடிகிறது. போகும் போதோ, வரும் போதோ அவனைக் கடத்த முடியும்”

தேவ் ஆயிர ரூபாய் கட்டொன்றை சேகரிடம் தந்தான். “இது அட்வான்ஸ். டியூஷனுக்கு அவன் போகும் போதே கடத்தி விடு. வேலையை முடித்தவுடன் மீதி தருகிறேன். ஆனால் வேலை கச்சிதமாய் முடிய வேண்டும். கடத்தியவுடன் எனக்குப் போன் செய்து தகவலைச் சொல்ல வேண்டும்....”

மிக சந்தோஷமாகப் பணத்தை வாங்கிக் கொண்ட சேகர் கேட்டான். “என்றைக்குச் செய்ய வேண்டும்?”

”நாளை.... இன்றே தயாராகிக் கொள். கவனமாக இரு.....”

சேகரை அனுப்பி விட்டு தேவ் கதவைச் சாத்திக் கொண்டு ஒரு காகித உறையில் இருந்து சில தாள்களை எடுத்தான். நாளை கோயமுத்தூர் வரவிருக்கும் இந்தியப் பிரதமர் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான தகவல்கள் அந்தத் தாள்களில் இருந்தன. தொலைக்காட்சியிலும் செய்திகளைப் பார்த்தான். கிடைத்திருந்த தகவல்களில் எந்த மாற்றமும் இல்லை. சாலைப் போக்குவரத்தில் செய்திருக்கும் மாற்றங்களை உயர் போலீஸ் அதிகாரி விவரித்தார். பிரதமரின் பாதுகாப்புக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மிகவும் கவனமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட தேவ் அலைபேசியில் ஒரு ஆளை அழைத்தான்.

அரை மணி நேரத்தில் வந்த ஆள் இரண்டு காகித உறைகள் தந்தான். முதலாம் உறையில் மைத்ரேயன், கௌதம் இருவரும் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து ஆடும் அந்த விளையாட்டு மைதானத்தின் வரைபடம் இருந்தது. தேவ் அந்த வரைபடத்தை ஆராய்ந்தான். மூன்று பக்கமும் சுவர், ஒரு பக்கம் பெரிய இரும்புக்கதவு. அந்த இரும்புக் கதவுக்கு எதிர்ப்புறம் தெருவைத் தாண்டி இரண்டு பெரிய பங்களாக்கள் இருந்தன.

அந்த ஆள் சொன்னான். “ஒரு பங்களாவில் மூன்று நாளைக்கு ஆள் இல்லை சார். வெளியூர் போயிருக்கிறார்கள். இரவு மட்டும் காவலுக்கு ஆள் வருவான். இன்னொரு பங்களாவில் வயதான தம்பதி மட்டும் இருக்கிறார்கள். அதிகம் வெளியே வர மாட்டார்கள்...... “

தேவ் கேட்டான். “விளையாட இந்தப் பையன்கள் மட்டும் வருவார்களா? இல்லை வேறு எதாவது பையன்களும் வருவார்களா?”

“இவர்களை விடப் பெரிய பையன்கள் குழு ஒன்று இருக்கிறது சார். சுமார் பத்து பையன்கள் இருப்பார்கள். அவர்களும் விளையாட வருவார்கள்.....”

“நாளை அந்தப் பையன்கள் வராமல் பார்த்துக் கொள். எதாவது புது சினிமாவுக்கு இலவசமாய் டிக்கெட் வாங்கிக் கொடு.....”

அந்த ஆள் தலையசைத்தான்.

இரண்டாம் உறையில் இருந்து இன்னொரு வரைபடத்தை தேவ் எடுத்தான். வருண் டியூஷன் போகும் இடத்தின் வரைபடம். அது ஒரு தெருக்கோடியில் இருந்தது. பக்கத்தில் சிறிது காலியிடம். அதற்கும் முன்னால் ஒரு பெரிய தொழிற்சாலை..... ஆள்நடமாட்டம் அதிகமாக தொழிற்சாலையின் வேலை மாற்ற நேரங்களில் மட்டுமே அந்த சாலையில் இருக்கும். மற்ற நேரங்களில் ஆள் நடமாட்டமே இருக்காது.

தேவிடம் அந்த ஆள் சொன்னான். “சேகர் அந்தப் பையனைக் கடத்துவதில் பெரிய பிரச்னை இருக்காது. டியூஷனுக்கு வரும் ஒன்றிரண்டு பையன்கள் தான் கூட இருக்கலாம்.....”

“ஒருவேளை அவன் சொதப்பி விட்டால் அந்தப் பையனை நீங்கள் கடத்திக் கொண்டு போகத் தயாராக இருக்கிறீர்கள் அல்லவா?”

அவன் தலையசைத்தான். அவனுக்குப் பணத்தைத் தந்து அனுப்பி விட்ட தேவ் அடுத்ததாக வெடிகுண்டு தயாரிக்கும் ஒருவனிடம் அலைபேசியில் பேசினான். ”தயார் தானே?’

“தயார் தான் சார்.... ஆனால் பிரதமர் வருவதால் போலீஸ் சோதனை எல்லா தெருக்களிலும் பலமாய் இருக்கிறது.....”

“அது பிரச்னை இல்லை. எங்கள் ஆள்கள் நாளை காலை வந்து மீதி பணம் தந்து வாங்கிக் கொள்வார்கள்.....”

அன்று இரவு வரை தேவ் நான்கு ஆட்களைத் தனித்தனியாக தனதறையில் சந்தித்தான். ஒவ்வொருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் அவன் அறையில் தங்கவில்லை. ஒருவர் போய் வேறொருவர் வரவும் அதே இடைவெளி இருந்தது. வேறு இருவரிடம் அலைபேசியில் பேசினான்.

ஒவ்வொருவரும் அவன் திட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் இருந்தார்கள். அவர்கள் யாருக்கும் அடுத்தவர்கள் பங்கு என்ன, முழுமையான திட்டம் என்ன என்பது தெரியாது. அனைத்தும் அறிந்த, அவர்களை இயக்கும் தலைவனான தேவ் அன்றிரவு திருப்தியாக உறங்கினான்.


ன்றிரவு அக்‌ஷயும் திருப்தியாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தான், அந்தக் கனவு வரும் வரை. அந்தக் கனவிலும் அவன் உறங்கிக் கொண்டு தான் இருந்தான் மைத்ரேயன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் வரை. கனவிலும் கூட”தாளிட்டு விட்டு தானே உறங்க வந்தோம், இவன் எப்படி உள்ளே வருகிறான்” என்று அக்‌ஷய் ஆச்சரியப்பட்டான்.

மைத்ரேயன் திடீரென்று ஒளிமயமாய் தோன்றினான். அவனுக்குள் ஏதோ பிரம்மாண்ட விளக்கு ஒளிர ஆரம்பித்தது போல் இருந்தது. அக்‌ஷய் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மைத்ரேயன் அவனை நெருங்கினான். அகஷயின் கழுத்துக்கும் கீழ் முதுகுப் பகுதியில் உள்ள நாக மச்சத்தைத் தொட்டான். அந்த இடம் அக்னியால் தொட்டது போல எரிந்தது. அவன் முதுகுத்தண்டில் ஏதோ ஊர்ந்தது. நிஜமாகவே நாகம் போல இருந்தது. அந்த நாகம் விரிந்து சிலிர்த்தது. உடல் முழுவதும் மின்சாரம் தீண்டியது போல் அவன் உணர்ந்தான்.

மைத்ரேயன் அவனை ஒரு கணம் அமைதியாக, அன்பாகப் பார்த்தான். அவனிடம் இருந்து ஒரு ஒளிப்பிரவாகம் அக்‌ஷயை அடைந்தது. பின் மைத்ரேயன் திரும்பிப் போய் விட்டான். அக்‌ஷய் கண்விழித்த போது தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தான். தன் நாகமச்சத்தை அக்‌ஷய் தொட்டுப் பார்த்தான். இன்னும் அங்கே தனிச்சூடு இருந்தது. அருகில் படுத்திருந்த சஹானாவைப் பார்த்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

எழுந்து கதவருகே வந்து பார்த்தான். கதவு தாளிடப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. அவனும், சஹானாவும் என்றுமே கதவைத் தாளிடாமல் உறங்குவது இல்லை. பின் எப்படி?....

அக்‌ஷய்க்குக் குழப்பமாக இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு மூன்று. யோசித்தபடி வெளியே வந்தவன் பிள்ளைகள் அறை ஜன்னலில் எட்டிப் பார்த்தான். மூவரும் உறக்கத்தில் இருந்தார்கள். மைத்ரேயன் உறக்கத்தை அவன் நம்பவில்லை.....

தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பவும் தன் அறைக்கு வந்த அக்‌ஷய்க்கு உறக்கம் வரவில்லை. நடந்தது கனவென்று அவனால் ஒதுக்கி விட முடியவில்லை. புத்த கயாவிலும் இப்படித்தான் புரியாத ஏதோ நிகழ்வு கனவு போல நடந்தது. இன்று இப்படியொரு புதிரான கனவு.... என்ன தான் நடக்கிறது?.....

(தொடரும்)

என்.கணேசன்

Monday, May 9, 2016

உலகப் பழமொழிகள் – 12


111. நீ என் முகத்தைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் படைத்தவனுக்கு; நீ என் உடையைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் தைத்தவனுக்கு; நீ என் செயலைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் எனக்குத் தான்.

112. ரோமாபுரியை ஒரு நாளில் கட்டவில்லை.

113. அசையாத மணி அடிப்பதேயில்லை.

114. வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல.

115. எதிரிகள் ஓடி விட்டால் எல்லோரும் வீரர்களே.

116. இதயம் சிறியது தான். ஆனால் பெரிய பொருள்களாலும் அதை நிரப்ப முடிவதில்லை.

117. உணர்ச்சி மனிதனை ஆட்சி செய்கையில் அறிவு வெளியே போய் விடுகிறது.

118. ஓடக்கூட பயந்து போய் நின்ற சிலரும் வீரராகப் பாராட்டப்படுவதுண்டு.

119. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கிக் கொள்பவன் இருமுறை வெற்றி பெற்றவனாகிறான்.

120. பயந்தாங்கொள்ளி தான் எச்சரிக்கையாய் இருப்பதாகவும், கஞ்சன் தான் சிக்கனமாய் இருப்பதாகவும் சொல்வான்.

தொகுப்பு: என்.கணேசன்


Friday, May 6, 2016

தினத்தந்தி வெளியீட்டில் என் நூல் ''மகாசக்தி மனிதர்கள்"




தினத்தந்தி என் ‘மகாசக்தி மனிதர்கள்’ நூலை இன்று வெளியிட்டிருக்கிறது. அபூர்வ சக்திகள் படைத்த மகான்கள் மற்றும் வித்தியாச மனிதர்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் அரிய வண்ணப் படங்களுடன் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. தினத்தந்தியிலும், என் வலைப்பூவிலும் இந்தத் தொடரைப் படித்தவர்களுக்குக் கூட இந்த நூலில் சேர்த்திருக்கும் சம்பந்தப்பட்ட பல வண்ணப் புகைப்படங்கள்  சுவை கூட்டும் புதிய அனுபவமாக இருக்கும்.

அபூர்வ சக்திகள் மற்றும் ஆன்மிக சித்தர்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தவறாமல் வாங்கிப் படியுங்கள்.

272 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/-

அன்புடன்
என்.கணேசன். 


புத்தகங்கள் கிடைக்குமிடம்
சென்னை 72999 90399
கோவை 98417 49153
திருப்பூர் 72990 39433
கடலூர் 98417 42955
மதுரை 98416 99313
திண்டுக்கல் 98416 99314
ஈரோடு 98416 97441
சேலம் 98416 97407
வேலூர் 98418 20933
திருச்சி 98417 41955
தஞ்சாவூர் 98412 66391 
திருநெல்வேலி 98417 49255
நாகர்கோயில் 98416 97408
புதுச்சேரி 98417 49267 
பெங்களூர் 99801 21771
மும்பை 98923 35628

மொத்த தேவைக்கு அணுகவும் : 72999 90399 

தினத்தந்தி நூல்கள் பிரிவை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரி
mgrthanthipub@dt.co.in

Thursday, May 5, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 97



மாராவுக்கு அந்தக் காவியுடை மூலமாக மைத்ரேயனின் அலைகளில் லயிக்க  இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. மைத்ரேயன் அந்த ஆடையைக் களைந்து சில நாட்கள் ஆகிவிட்டிருந்தபடியால் அவன் அலைகளின் சுவடுகள் மிக நுட்பமாகத்தான் அந்த ஆடையில் இருந்தன. ஆனால் மாரா அடைந்திருந்த சக்திகளுக்கு மைத்ரேயனின் அலைகள் அகப்படாமல் போகவில்லை. அந்த அலைகளில் லயித்து மாரா மைத்ரேயனை அந்த அலைகள் வழியாகவே நெருங்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மைத்ரேயன் அவன் மனக்கண்ணில் தெரிந்தான். சிறிது சிறிதாக கவனத்தைக் குவித்து மைத்ரேயனின் இருப்பிடத்தையும் தன் அசாதாரண சக்தியால் மனத்திரைக்குக் கொண்டு வந்தான்.

மைத்ரேயன் ஒரு கட்டிலில் தியானத்தில் அமர்ந்திருந்தான். அவன் அருகே வேறொரு சிறுவன் உறங்கிக் கொண்டிருந்தான். சற்று தள்ளி இன்னொரு கட்டிலில் ஒரு இளைஞன் உறங்கிக் கொண்டிருந்தான்.

“மைத்ரேயா என்னைப் பார்” என்று மாரா மானசீகமாகக் கட்டளை பிறப்பித்தான். மைத்ரேயன் மூடியிருந்த கண்களைத் திடீர் என்று திறந்தான். மாராவின் கண்களும் மைத்ரேயன் கண்களும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. மைத்ரேயன் கண்களில் சலனம் இல்லை. அதிர்ச்சி இல்லாவிட்டாலும் குறைந்த பட்சமாய் ஆச்சரியமாவது ஏற்பட்டிருக்க வேண்டும் என்றாலும் அது கூட இல்லாமல் போனதை மாராவால் நம்ப முடியவில்லை. மைத்ரேயனின் கண்களில் பேரமைதி மட்டுமே தெரிந்தது.

மாராவின் கண்கள் அக்னி ஜூவாலைகளாக ஜொலிக்க ஆரம்பித்தன. கூர்மையாக அவை மைத்ரேயனை ஊடுருவின. மாரா பெரும் சக்தியைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டான். அவன் தன்னை மிக லேசாக்கிக் கொள்ள ஆரம்பித்தான். அவன் உடல் தானாக தரையில் இருந்து அரையடி உயர்ந்தது. அவன் பின்னால் நின்று கொண்டிருந்த அவனுடைய ஆட்கள் பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள். சற்று தொலைவில் நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பிக்கு தலைசுற்றி அப்படியே சுவரில் சாய்ந்து சறுக்கியபடி தரையில் சரிந்தார்.

ஆனால் மைத்ரேயன் கவனம் மாராவின் கண்களில் மட்டுமே நிலைத்தது. அவன் மாரா உட்கார்ந்திருந்த தரையில் இருந்து அரையடி உயர்ந்ததைப் பார்த்தானா, மாரா சம்யே மடாலயத்தில் இருப்பதை அறிந்தானா என்பதெல்லாம் தெரியவில்லை. மாராவைப் பார்த்தும் என்ன உணர்ந்தான் என்பதும் தெரியவில்லை. ஆனால் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

மாரா மைத்ரேயனை ஊடுருவி அவனை அறிய முயன்றான். என்ன விதமான மன அலைகளில் அவன் இருக்கிறான் என்பதை உணர முடிந்தால் அந்த இழைகளைப் பிடித்துக் கொண்டு அவை தொடர்புடைய அனைத்தையும் அவனால் உணர்ந்து விட முடியும். ஆனால் மைத்ரேயனுக்குள் மாரா வெற்றிடத்தையே பார்த்தான். எதுவும் இல்லாத சூனியம்..... மாரா திகைத்தான். மைத்ரேயன் அமைதியாக மறுபடி கண்களை மூடிக் கொண்டு தியானத்தைத் தொடர்ந்தான்.

இப்போதும் கூட மைத்ரேயனின் வெளிப்புறத்தை மாராவால் பார்க்க முடிந்த போதும் அவன் அறிய நினைத்த முக்கியமான உட்புறத்தின் கதவு சாத்தப்பட்டிருந்தது. இப்போது அந்த சூனியமும் காணக் கிடைக்கவில்லை....

மாரா தீப்பந்தங்களாக மின்னிய அவன் பார்வையால் கோபத்துடன் கையிலிருந்த காவியுடையைப் பார்க்க அந்தக் காவியுடை பற்றி எரிய ஆரம்பித்தது. மாரா எரியும் உடையை வீசி எறிந்தான். மைத்ரேயனுடன் இருந்த அலைத்தொடர்பு அறுந்து போனது. மறுபடி தரைக்கு வந்தான்.

மறு நாள் காலை பிக்குகள் வந்து பார்த்த போது கோங்காங் மண்டபத்தில் அரைகுறையாய் கருகிப் போயிருந்த ஒரு காவியைத் தவிர வேறெந்த வித்தியாசமும் வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை. மாராவும், மாறுவேடத்தில் இருந்த அவனுடைய இரு ஆட்களும் மடாலயத்திலிருந்து அதிகாலைக்குள் வெளியேறி இருந்தார்கள்.....



சானுக்கு சம்யே மடாலயத்தின் தலைமை பிக்குவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. “மன்னிக்க வேண்டுகிறேன் ஆசானே. அவசியமாக இருந்தால் மட்டும் அழைக்க உத்தரவிட்டிருந்தீர்கள். அவசியம் மட்டுமல்ல. ஆபத்தும் வந்திருக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் தான் இப்போது தங்களை அழைத்திருக்கிறேன்.....”

அலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று அறிந்து விட்டிருந்த ஆசான் யோசித்து விட்டுக் கேட்டார். “ஆபத்து எந்த ரூபத்தில்?”

“மாரா ரூபத்தில்”

பேசப்படுவது மைத்ரேயன் அல்ல மாரா என்று அறிந்தவுடன் ஆசான் சொன்னார். “சுருக்கமாகச் சொல்”. மாரா பற்றி லீ க்யாங்கும் அறியட்டும் என்று அவருக்குத் தோன்றியது. உன்னைத் தூக்கிச் சாப்பிடுகிறவனும் இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவிக்கத் தோன்றியது.

”நேற்றிரவு மாரா வந்திருந்தான். கோங்காங் மணடபத்தில் ஏதோ ரகசிய வழிபாடு நடத்தினான். மைத்ரேயரின் காவி உடையை அக்னியால் கருக வைத்திருக்கிறான். இப்போது போய் விட்டான் என்றாலும் நாங்கள் தியானத்தில் லயிக்க முடியாத அளவு தீய சக்திகள் இந்த மடாலயம் முழுவதும் நிரம்பி இருக்கின்றன....”

“தியானம் செய்ய முடியா விட்டாலும் பிரார்த்தனை செய்ய முடியுமல்லவா. அதைச் செய்யுங்கள்.” என்ற ஆசான் இணைப்பைத் துண்டித்து விட்டார்.



லீ க்யாங் அடுத்த அரை மணி நேரத்தில் வாங் சாவொவிற்குப் போன் செய்தான். “நேற்று சம்யே மடாலயத்திற்கு மாரா நேராகவே போயிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. நாம் அங்கே நிறுத்தி இருந்த ஒற்றர்களிடம் விசாரித்து விட்டு எனக்கு உடனே தகவல் அனுப்பு.....”



சானுக்கு பைலகுப்பே மடாலயத்தில் இருப்பு கொள்ளவில்லை. சம்யேவில் மாரா பகிரங்கமாக பிரவேசித்தது அவன் கை ஓங்கி வருவதைத் தான் காட்டுகிறது. முன்னொரு காலத்தில் துஷ்டசக்திகளை அடக்கி காவல் சக்திகளாய் மாற்றி விட்டிருந்த பத்மசாம்பவாவின் வெற்றி இன்று முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதையும், அதோடு மைத்ரேயரின் காவி எரிப்பையும் அவரால் சகிக்க முடியவில்லை. மைத்ரேயருக்கு ஏதோ வகையில் ஆபத்து நெருங்குவதை அவர் உள்மனம் உணர்ந்தது. இந்த நேரத்தில் மைத்ரேயர் அருகில் இருக்க வேண்டும் என்று அவர் மனம் விரும்பியது. லீ க்யாங் ஏற்பாடு செய்திருக்கும் உளவாளிகளை ஏமாற்றி விட்டு எப்படிச் செல்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.



சேகர் தேவை மறுபடி சந்தித்த போதும் தேவ் கருப்புக் கண்ணாடியுடனும், கோட்டு சூட்டுடனும் தான் இருந்தான். தான் எடுத்திருந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் சேகர் தேவிடம் தந்தான். தேவ் முதலில் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தான். எல்லாவற்றிலும் மைத்ரேயன் இருந்தான். சேகர் அந்தப் புகைப்படங்களில் கூட இருக்கும் மற்றவர்களை தேவுக்கு அறிமுகப்படுத்தினான். ”இது கௌதம் அந்த வீட்டின் சின்னப் பையன்........ இது வருண், என் மகன்..... இது அக்‌ஷய்.... இது சஹானா... இது அந்த வீட்டுப் பாட்டி.....”

பெரும்பாலான புகைப்படங்கள் வீட்டின் முதல் மாடி ஹாலில் எடுக்கப்பட்டதாகவே இருந்தன. சில புகைப்படங்கள் வீட்டு வாசலிலும், சில படங்கள் மற்ற ஜன்னல்கள் அருகில் அவர்கள் நின்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்டவையாக இருந்தன. சேகர் தன் வீட்டு மாடிப் பகுதியில் இருந்து எடுக்க முடிந்தவை.... தேவ் தலையசைத்தான். அவன் மைத்ரேயனை விட அக்‌ஷயை நிறைய ஆராய்ந்தான்.

அதைக் கவனித்த சேகர் ஏளனமாகச் சொன்னான். “இவன் என்னேரமும் மனைவி, குழந்தைகள் கூடவே தான் இருப்பான். சமயத்தில் மனைவிக்கு சமையலுக்கு உதவுவதையும் பார்த்திருக்கிறேன். பெண்டாட்டி தாசன்.... இவனுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை..... நீங்கள் அந்த திபெத் பையன் விஷயத்தில் நடவடிக்கை எடுத்த பிறகு எனக்கும் இவனிடம் கொஞ்சம் வேலை இருக்கிறது.....” அவன் கடைசி வார்த்தைகளைச் சொன்ன போது வெறுப்பும் ஆத்திரமும் வெளிப்பட்டது.

தேவ் மெல்ல கேட்டான். “என்ன செய்வதாக உத்தேசம்?”

“அவன் தன் வாழ்நாளில் மறக்க முடியாதபடி ஏதாவது செய்ய வேண்டும். என் மனைவியும் மகனும் என் சக்தியை உணர வேண்டும்” சேகர் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

மனிதனின் முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லையா என் தேவ் வியந்தான். அமானுஷ்யன் பாதுகாப்பில் அந்த திபெத்தியச் சிறுவன் இருக்கிறான் என்று தெரிந்தவுடனேயே தொகையை இரட்டிப்பாக்கி கேட்க, லீ க்யாங்கும் ஒத்துக் கொண்டிருக்கிறான். ஒன்றரைக் கோடி கிடைத்தாலும் தப்பித்தவறி கூட அமானுஷ்யன் நெருங்க முடிந்த அளவு தூரத்தில் இருக்கும் உத்தேசம் தேவுக்கு இல்லை. அப்படிப்பட்ட ஒருவன் மறக்க முடியாதபடி ஏதாவது செய்ய வேண்டும் என்று இவன் ஆசைப்படுகிறான். அதீத வெறுப்பும் அதீத அன்பைப் போலவே முழுமையாக ஒருவனை சிந்திக்க விடுவதில்லை.

சேகரின் வெறுப்பைப் பற்றி யோசிக்கையில் தேவுக்கு மூளையில் ஒரு பொறி தட்டியது. மெல்ல சேகரிடம் கேட்டான். “நீ நினைப்பது போல் செய்ய உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். அப்படிச் செய்தால் உன் விருப்பமும் நிறைவேறும். அதுமட்டுமல்லாமல் உனக்கு நான் ஐந்து லட்ச ரூபாயும் தருகிறேன். செய்வாயா?”

சேகருக்கு அதிர்ஷ்டம் இப்படி மறுபடி மறுபடி தன் கதவைத் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்கெனவே ஐந்து லட்சம் கிடைத்திருக்கிறது. இதுவும் சேர்ந்தால் பத்து லட்சம். ஆனாலும் மகிழ்ச்சியை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் கேட்டான். “அவர்கள் கொடுப்பதாகச் சொல்லி இருப்பதில் நீங்கள் சொல்லும் ஐந்து லட்சம் சேராதே?”

“அது தனி. இது தனி. இது நான் கொடுப்பது”

சேகருக்குத் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. “சொல்லுங்கள். என்ன செய்ய வேண்டும்.....?”

“நான் சொல்கிற நாளில் நீ ஒரே ஒரு நாளுக்கு உன் மகனைக் கடத்திக் கொண்டு போய் எங்காவது ஒளித்து வைத்துக் கொள்கிறாயா?”

சேகர் உடனே சம்மதித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்



Monday, May 2, 2016

எதையும் வேண்டாத யோகி!


மகாசக்தி மனிதர்கள்-57


சிவன் நினைவு நீங்காத சிந்தை பெரும் ஞானிகளுக்கே வாய்க்கும். இறைவன் நிறைந்திருக்கும் மனம் பொன், பொருள், சொத்து, புகழ் தேடி அலையாது. அப்படி ஓடும் உள்ளத்தில் இறைவன் இருக்க மாட்டான். இந்தப் பேருண்மைக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சரியான உதாரணமாகத் திகழ்ந்தார். அவர் பொன், பொருள், பூமி, புகழ் ஆகியவற்றை என்றுமே ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. அதனாலேயே அவர் யோகசக்திகள் பவித்திரமாகவும், சக்தி வாய்ந்தவையாகவும், மெய்ஞானத்திற்காக ஏங்கும் நல்லோரைக் காந்தமென ஈர்ப்பதாகவும் இருந்தன.

அப்படி அவர் ஈர்த்த ஒரு ஆன்மிக ஆர்வலர் சிக்கல் தலத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார். நீண்ட நாட்களாக ஒரு நல்ல ஞானியைப் பின்பற்றி மெய்ஞான மார்க்கத்தில் செல்ல வேண்டும் என்று அவர் எண்ணி வந்தார். ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருந்த யாரோ இருவரில் ஒருவர் மற்றவரிடம் சொல்லிக் கொண்டு சென்றது அவர் காதில் விழுந்தது. ”நாம் திருவாரூர் சென்று தட்சிணாமூர்த்தி சுவாமிகளை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தால் நற்கதி அடையலாம்”

மிக ஆழமான தேடலில் உள்ள ஒரு மனிதனுக்கு பதில் எங்கிருந்தும் கிடைக்கலாம். அப்படிக் கிடைக்கின்ற பதில் உண்மையானதென்று அவன் உள்மனம் உடனடியாக அடையாளம் காட்டி விடும். அப்படியே பழனியப்ப செட்டியாரும் உணர்ந்து உடனடியாகத் துறவறம் பூண்டு திருவாரூருக்குப் பயணமாகி விட்டார். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளை அடைந்து அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவருடனேயே தங்கி விட்டார். சுவாமிகளின் பக்தர்கள் அவரை பழனியப்ப சுவாமிகள் என்று அழைத்தனர்.

அக்காலகட்டத்திலேயே ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு திருவாரூரிலும் சுற்று வட்டாரத்திலும் நிறைய பக்தர்கள் உருவாகி இருந்தார்கள். அவர்களில் பலர் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சுவாமிகளுக்கு சமாதி ஆலயம் எழுப்ப விரும்பினார்கள். தங்கள் விருப்பத்தை பழனியப்ப சுவாமிகளிடம் சொல்லி “நாங்கள் பொருள் தருகிறோம். நீங்கள் முன்னின்று முறைப்படி சமாதி ஆலயம் கட்ட உதவ வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்கள். இப்படி முன்பே ஆலயம் அமைத்து கர்ப்பக்கிரகத்திற்குள் சமாதி வைக்க குகையும், சுரங்கவழியும் ஏற்படுத்தி வைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததால் பழனியப்ப சுவாமிகளும் ஒத்துக் கொண்டார். சுவாமிகளின் திருவுளக்குறிப்பு அறிந்து அந்த ஆலயப்பணிகளைத் தொடங்கலாம் என்று பழனியப்ப சுவாமிகள் சொல்ல அவர்கள் சம்மதித்தனர்.

உடனே அனைவரும் சோமநாத சுவாமி ஆலயத்தில் தியானத்தில் வீற்றிருந்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளைச் சென்று வணங்கி நின்றனர். அவர் தியானம் முடிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார். அவர்கள் பின் தொடர்ந்தனர். அவர் ஓரிடத்தில் சிறிது நேரம் நின்று விட்டுப் பின் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். சுவாமிகள் சிறிது நேரம் நின்ற இடமே சரியான இடம் என்று அனைவரும் பேசித் தீர்மானித்தனர். அந்த இடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள பழனியப்ப சுவாமிகள் அங்கிருந்த மண்ணை குவித்து வைக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு பொற்காசும் அங்கு கிடைக்கவே அவர்களுக்கு அது ஒரு ஐசுவரியமான இடமாய் பட்டது. ஆலயம் அமைக்கும் பணி ஆரம்பித்ததும் செல்வந்தர்கள் அல்லாத பொதுமக்களும் தாமாகவே முன்வந்து பணம், செங்கல், கருங்கல். சுண்ணாம்பு எனத் தங்களால் முடிந்ததைக் கொண்டு வந்து தர ஆரம்பித்தனர். பழனியப்ப சுவாமிகளின் மேற்பார்வையில் ஆலயம் உருவாகியது. காசியிலிருந்து சரபோஜி மன்னர் தருவித்துக் கொடுத்த பாண லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தி முடித்தனர். அன்றிலிருந்து அந்தக் கோயிலில் நித்திய பூஜைகள் நடக்க ஆரம்பித்தன.

ஆனால் இதில் எல்லாம் சம்பந்தப்படாதவர் போலவே ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருந்து வந்தார். அந்தக் கோயிலில் எதிர்காலத்தில் பூஜைகள் குறைவில்லாமல் நடந்து வர வடபாதி மங்கலம் முதலியார் என்பவர் பத்து வேலி நிலம் சுவாமிகள் பேரில் தான சாசனம் எழுதி அதை சுவாமிகள் காலடியில் வைத்து பேரன்புடன் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அந்த சாசனத்தை எடுத்த சுவாமிகள் ”அப்பா! நீ நமக்குக் கொடுத்தாய். நாம் உனக்குக் கொடுக்கிறோம். நீ வைத்துக் கொள். குறைவு வராது” என்று அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

தஞ்சை சரபோஜி மன்னரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்டவர். அவர் திருவாவூர் தேர் நாளன்று திருவாரூருக்கு விஜயம் செய்தார். சுவாமிகளுக்கான சமாதி ஆலயம் பற்றியும் அங்கு நடக்கும் பூஜைகள் பற்றியும் அறிந்திருந்த அவர் தன் சமஸ்தான அதிகாரியை அழைத்து “இன்று மாலை தட்சிணாமூர்த்தி சுவாமிகளைத் தரிசிக்க எண்ணி இருக்கிறேன். அந்த சமயம் அருகில் உள்ள கிராமங்களில் ஒன்றை சுவாமிகளுக்கு நான் தானமாக அளிக்க உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் சுவாமிகளின் சீடர்களிடம் தெரிவித்து, ஒரு கிராமத்தை தானம் தரத் தேர்ந்தெடுத்து வையுங்கள்” என்று கூறினார்.

சமஸ்தான அதிகாரி தானம் செய்யத் தகுந்த கிராமங்களின் பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு தாசில்தாரை அழைத்து அந்த சீட்டைத் தந்து சொன்னார். ”இன்று மன்னர் சுவாமிகளைத் தரிசிக்கச் செல்கிறார். இந்த சீட்டில் உள்ள கிராமங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மன்னர் வரும் சமயம் தானமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று சுவாமிகளின் சீடர்களிடம் தெரிவித்து வாருங்கள்.”

தாசில்தார் அந்தச் சீட்டுடன் சென்று பழனியப்ப சுவாமிகளைச் சந்தித்து சமஸ்தான அதிகாரி சொன்னதைச் சொன்னார். அந்தச் சீட்டை வாங்கிக் கொண்டு பழனியப்ப சுவாமிகள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளைத் தேடிச் சென்றார். கட்டிலில் படுத்திருந்த சுவாமிகள் “சகல உலகமும் நம்மிடத்தில் ஆகாயத்தில் நீல பீதாதி போல் ஏகதேசத் தோற்றமாயிருக்க, ஒருவன் சிறிது நிலம் கொடுக்கிறானாம். அதை ஒருவன் பெற்றுக் கொள்கிறானாம். இவனன்றோ கானல் நீரைப் பருகி களை தீரக் கருதினான்” என்று சொல்லவே பழனியப்ப சுவாமிகள் அந்தச் சீட்டை வீசி எறிந்து விட்டு பேசாமல் இருந்து விட்டார்.

சரபோஜி மன்னர் மாலையில் சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். பால், பழம் ஆகியவற்றை சுவாமிகள் முன்வைத்து அவர் காலுக்குத் தங்கச் செருப்பிட்டு, யானைத்தந்தத்தால் ஆன யோக தண்டத்தை அவருக்குச் சமர்ப்பித்து, பட்டுப் பீதாம்பரத்தால் அவரைப் போர்த்தி, பாதங்களில் பொற்காசுகள் வைத்து அவரை வணங்கி விட்டு சுவாமிகள் கையால் திருநீறு வேண்டி கைநீட்டி நின்றார். சுவாமிகள் இது எதுவும் தனக்கல்ல என்கிற பாவனையில் இருந்தாரே ஒழிய மன்னரைக் கண்டு கொள்ளவில்லை. பழனியப்ப சுவாமிகள் திருநீற்றுப் பேழையை சுவாமிகளிடம் நீட்டி ”சுவாமி! மன்னருக்கு விபூதிப்பிரசாதம் வழங்கி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

சுவாமிகள் அதில் இருந்து விபூதியை எடுத்து மன்னரிடம் வீச அது மன்னர் கையில் விழுந்தது. அதைப்பூசிக் கொண்ட மன்னர் கிராம தானம் கேட்பார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். அனைவரும் மௌனமாக இருக்கவே, மன்னர் வாய் விட்டே கேட்டார். “என்னால் உங்களுக்கு என்ன ஆக வேண்டும் என்று கட்டளையிடுங்கள்.”

சுவாமிகள் எண்ணம் புரிந்த பழனியப்ப சுவாமிகள் நாசுக்காக “மன்னர் தரும்படியாக எங்களுக்கு இங்கு எந்தக் குறையும் இல்லை” என்று சொன்னார்.

ஏமாற்றம் அடைந்த மன்னர் தன் திருப்திக்காக சுவாமிகளின் பாதங்களை 108 பொன் மொகராக்களால் அர்ச்சித்து மேலும் சில மொகராக்களை காணிக்கையாகச் செலுத்தி விட்டுக் கிளம்பினார்.


கொடுக்கிறேன் என்றதும் வாங்கிக் குவித்துக் கொள்ளும் ஆட்களை அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு சுவாமிகளின் நடத்தை விசித்திரமாகத் தெரியலாம். பத்து வேலி நிலமானாலும் சரி, ஒரு கிராமமே ஆனாலும் சரி வாங்கி வைத்துக் கொள்கிற மனோபாவமோ, அதற்கான அவசியமோ அந்த யோகியிடத்தில் இருக்கவில்லை.

1835 ஆம் ஆண்டு ஒரு நாள் கோயிலின் மகா மண்டபத்தில் வீற்றிருந்த சுவாமிகள் ”முடிந்தது. முடிந்தது. முற்றிலும் முடிந்தது” என்று கூறி விட்டு யோக நிஷ்டையில் மூழ்கினார். அவருடைய நிழலாகவே இருந்து வந்த பழனியப்ப சுவாமிகளுக்கு அந்த வார்த்தைகள் மூலம் சுவாமிகளின் அந்திம காலம் நெருங்கி விட்டது என்பது புரிந்து விட்டது. அவர் சுவாமிகளின் பக்த கோடிகளுக்கு செய்தி அனுப்ப, பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திருவாரூர் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அந்த ஆண்டு ஆவணி மாதம் பன்னிரண்டாம் நாள் சுவாமிகள் சிவனடி சேர்ந்தார். அவருடைய திருமேனிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து, கோயிலில் முன்பே தயார்ப்படுத்தி வைத்திருந்த சமாதிக்குகையில் எழுந்தருளச் செய்தனர்.


ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் திருவாரூர் மாடப்புரத்தில் அமைந்திருக்கும் அவருடைய சமாதி ஆலயத்தில் நடைபெறும் குருபூஜைக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். அங்கு சென்றவர்கள் மன அமைதியையும், அவர் பேரருளையும் உணர்ந்து திரும்புகிறார்கள். அவர் பிறந்த கீழாலத்தூரிலும், சென்னையில் வண்ணாரப்பேட்டையிலும் கூட அவரது ஆலயங்கள் உள்ளன. காலத்தை வென்ற யோகியின் அருளுக்கு முடிவோ, எல்லையோ இல்லை அல்லவா?


(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 18.9.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)