சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 19, 2009

விதியா? மதியா?



ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.


- என்.கணேசன்

11 comments:

  1. //மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.//
    இதில் எங்கே அவர் விதியை வென்றார்,

    விதியின் வழியில் சென்றார் வெற்றி பெற்றார் அவ்வளவே.
    மதியினால் கடின உழைப்பே வெற்றி பெற வகுக்கப் பட்ட விதி என்பதை உணர்ந்து மன உறுதியுடன் கடைப்பிடித்தார் வெற்றி பெற்றார்,

    விதியென்பது ஒரு வகுக்கப் பட்ட விதிமுறை, வழிமுறை எனலாம்,

    சரியான வழி முறையினை மதியினால் அறிந்து அதனை விதிமாறாது பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.



    //விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.//

    மதிநிறைந்தவன் என்பதே எமது அங்காரத்தை வளர்க்கும் ஒரு போதை உணர்வு,

    அதனால் உண்மையான விதியினை (வழி) அறியவேண்டும் என்ற எண்ணத்தையே போக்கி விடும்.

    விதியறியா மதியானது வீழ்ச்சிக்கே வழி கோளும்.

    ReplyDelete
  2. பிரமாதம் சார்.

    விதியை எவன் ஒருவன் மதிக்கிறானோ அவனே அதை மதியால் வெல்கிறான். பெரும்பாலும் விதியை நம்புவ்ர்கள் தெய்வத்திற்கு பயந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதனாலேயே அவர்களால் அதை வெல்லவும் முடிகிறது.

    ஆனால் இன்னும் சிலர் விதியின் மேல் பழியை போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.

    மொத்தத்தில் உங்களது கட்டுரை என் மதியை (அறிவை) தட்டி எழுப்பிவிட்டது.

    ReplyDelete
  3. சீட்டு உதாரணம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது அதன் படி நடக்க இறைவன் தான் மதியை தரவேண்டும் .

    ReplyDelete
  5. ///எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.///
    அப்பா, வியக்க வைக்கிறீர்கள். அனுபவ முதிர்ச்சியுள்ள வாக்கியம்.
    ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளத்தையும் தந்து உங்கள் பணி செழுமையுற ஆசிர்வதிக்கட்டும்.

    ReplyDelete
  6. ரொம்ப ஈஸி, இரண்டு கைகளையும் தரையில் பதித்து, கால்களை தூக்கி ரெண்டு கைகளால் நிற்க வேண்டியது தான். மதியால் விதியை வெல்ல முடியும்.

    ReplyDelete
  7. Excellent ., Presence of Words are Awesome !!!sir

    சில விஷியங்களை கூறவிழைகிறேன்...

    அதீத வைராக்கியம் கொண்டு சத்யம் ., தர்மம்.,., கருனை , இரக்கம் வழி நடந்தால் கட்டாயம் விதி மாறும் ..., ஆனால் அதனால் வரும் பல இழப்புக்கள் ., கஷ்டங்கள் மூலம் விதி தனது கணக்கை சரி செய்து கொள்கிறது..,

    இன்னோரு விதமாக நமக்கு அன்று ஒரு துன்பம் வரவேண்டும் நாம் அன்றைக்கு அழ வேண்டும் என்று விதி இருப்பின் நம் சக்திய நெறியால் அந்த கர்மாவை நாம் கனவில் கழிப்பதாக சென்று விடும்.., ஆனால் கனவும் பிற லோக வாழ்க்கை சம்பவங்களே எனும் உண்மை புரிபடும் போது தான் ......கர்மா பரிமாற்றம் தான் செய்யப்பட்டுள்ளது மாற்றப்படவில்லை.. என்பதுபுரிபடும்..

    ஆன்மீக இதழ் ஒன்றில் படித்த வரிகள் :- " மதி பிழையாது இருப்பின் விதிப் பிழை நடக்கும் " என்ற சித்தருடைய வாக்கியத்தில் தான் விதிக் கட்டுச் சுருள் நிறைந்திருப்பதை பானுமதி உணர்ந்தாலும் "தன் முயற்ச்சியைச் செய்வோம் " என்று மனம் தேறி பூஜையை நன்முறையில் முடித்தனள் .............(இப்படி கதை செல்ல )
    ---- கடைசியில் "மதியின் பிழையால் , விதி பிழை செய்யாது , விதி விதித்தபடியே நடந்தது !" ---

    இருந்தாலும் பல சமயங்களில் மஹான்கள் "இவனால் இத்துன்பத்தை தாழ முடியாது" எனும் போது.. அவர்களாகவே முன்வந்து நம் கர்மாவை எற்கிறார்கள் . இது எம் அனுபவ உண்மை ...,

    ஆனால் கடைசிவரை கர்மா காணாமல் போகாது.., யாரேனும் கரைத்து தான் போக்கச் செய்ய வேண்டும்..என்பதில் மட்டும் மாற்றமில்லை..

    ReplyDelete